வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் (01) - என்னதான் சுகமோ நெஞ்சிலே

GG writers

Moderator
என்னதான் சுகமோ நெஞ்சிலே...❤️

அத்தியாயம் - 01


அன்று!


மணி ஒன்றை நெருங்கி கொண்டிருக்க வியர்க்க விறுவிறுக்க வேக வேகமாக எட்டி நடையை போட்டுக் கொண்டு இருந்தாள் அவள்.

"யாழி... ஏய் யாழி நில்லுடி... நானும் உன்னோடு வரேன்..‌. என்னையவுட்டுட்டு போவாத" என்று கீச் கீச்சென்று கத்தி கொண்டே தன் தோழியை பிடிக்க வந்தாள் மீனா.

"போடி நான்லாம் நிக்க மாட்டேன்..‌‌. கிளாஸ்க்கு நேரமாச்சு... பெல்லு வேற அடிக்க போறாங்க... கொஞ்ச லேட்டா போனாலும் அந்த கணக்கு வாத்தி கிளாஸ்க்கு வெளியே முட்டி போட வைச்சிடுவான்" என்று நிற்காது பதில் அளித்தபடியே நடந்த யாழ்மொழி அப்போது ஏழாம் வகுப்பை படித்துக் கொண்டு இருந்தாள்‌.

"இங்காரு உனக்கொரு விஷயம் தெரியுமா... உன் பெரியம்மா பொண்ணு சந்தனா இருக்கா இல்ல அவளுக்கு தினேஷூ லவ் லெட்டர் கொடுத்தான்டி" என்று மீனா சொன்னதும் படக்கென்று நின்றவள் தன் முட்டை கண்களை விரித்தாள்.

"யாரு அந்த ஊலமூக்கு தினேஷா... ஏன்டி அவனுக்கு லவ்வு செய்ய வேற ஆளே கிடைக்கலயா... போயும் போயும் அந்த திமிர்புடிச்ச கழுதைக்கு லவ் லெட்டர் கொடுத்து இருக்கான்"

"ம்க்கும் அது பெரிய விஷயம் இல்லடி... அதை அவ போய் உன் மாமன் பையன்கிட்ட சொல்லி இருப்பா போல... அந்த அண்ணேன் சாப்பாட்டு மணியல வந்து தினேஷை மிரட்டினாருடி... பாவம் தெரியுமா தினேஷூ ரொம்ப பயந்துட்டான்" என்று நேற்று நடந்த சம்பவத்திற்கு இன்று உச்சு கொட்டினாள் மீனா.

"நான் நினைச்சேன்டி... அந்த நெட்டைக்கொக்குக்கு வேற வேலையே இல்ல... எப்பப்பாரு அந்த சந்து பொந்துக்கு எடுபுடி வேலை செய்யவே என் பெரியம்மா அவனை வளர்த்துவுட்டு இருக்கு போல... தடிமாடு... தடிமாடு... இந்த சந்தனாவும் அவன் பின்னாடியே மாமா... மாமான்னு திரிவா" என்று புலம்பி கொண்டு இருக்கும் போதே, 'கிளிங்... கிளிங்...' என்று சைக்கிள் மணியை அடித்தபடி இவர்கள் பின்னே வந்தான் அந்த நெட்டைக்கொக்கு.

'அய்யயோ நாம பேசுறதை கேட்டு இருப்பானோ' என்று நினைத்த வேளையிலேயே சைக்கிள் பின் அமர்ந்திருந்த சந்தனா யாழியை தள்ளிவிட சரியாக அங்கிருந்த சேற்றில் விழுந்து வாரினாள் யாழ்மொழி...

அவள் சேற்றில் விழுந்ததை கண்டு கலகலவென்று சிரித்தவள் "யாழி..‌ நீ ஒரு முட்டை கோழி" என்று அவளுக்கு பளிப்பு காட்டிட, சேற்றில் இருந்து எழுந்த யாழியோ கால்களை உதறிக்கொண்டு அவளை முறைத்திட, அதனை சிறிதும் சட்டை செய்யாது கெத்தாக அவளை பார்த்தவாறே தன் மாமன் சைக்களில்‌ பறந்து விட்டாள் சந்தனா.

இவர்களின் உபயத்தால் அன்று மதியம் கால் வலிக்க வகுப்புக்கு வெளியே முட்டி போட்டு கொண்டு இருந்தாள் யாழ் மொழி. அதனை பக்கத்து வகுப்பில் இருந்து எட்டி எட்டி பார்த்து சிரித்து கொண்டு இருந்த சந்தனாவை கண்டதும், இவளின் கோபம் பன்மடங்காக... 'அடியேய் சந்து... உனக்கு நோன்டுறன்டி பெரிய பொந்து' என்று மனதிற்குள்ளே கருவியவள், நெட்டைக்கொக்கையும் சேர்த்தே பழி வாங்கிட... இவளின் உபயத்தால் அடுத்த நாள் இருவரும் காய்ச்சலில் சுருண்டு இருந்தனர்‌.



••••••••••••••



இன்று!


படுக்கையில் இருந்து எழுந்தவனுக்கு இன்னும் கண்கள் திகுதிகுவென எரிவது போல் இருக்க… மேனியும் லேசாக சுட்டது. காரணம் நேற்று இரவு மழையில் நனைந்ததின் விளைவு. காய்ச்சலை பெரிதுபடுத்தாது குளித்து வந்தவன்… வேட்டி சட்டையை அணிந்து கொண்டு நெற்றியில் கோடாக தீருநீற்றை பூசியபடி வெளிவந்தான் செழியன்.

“எழும்பிட்டியா கண்ணு… செத்த இரு சோறு பொங்கிட்டேன்… கோழி அடிச்சு வைச்சு இருக்கேன்… அதோட சூடா மொளுவு(மிளகு) ரசமும் இருக்கு… தொண்டைக்கு கொஞ்சம் எதமா இருக்கும்” என்றபடி வியர்க்க விறுவிறுக்க அடுப்பங்கரையில் நின்று சமைத்துக் கொண்டிருந்தார் செண்பகவள்ளி.

“ஏன் கண்ணு உனக்கு தான் மழைன்னா ஆவாதுன்னு தெரியும்மில்ல… பொறவு எதுக்குய்யா அதுல நனைஞ்சா… இப்போ பாரு மேலுக்கு முடியாம நீதானே ராத்திரி பூரா அவதிபட்டுட்டுக் கிடந்த”

“ம்க்கும் மழை ஊத்துதுன்னு வூட்டுல கெடந்தா சோலியா யாரு பார்க்கிறது… நீ சோத்த பறிமாறு” என்றவன் தளர்ந்த நடையோடு உணவு எடுத்து பரிமாறுபவரையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

முகத்தில் இருக்கும் சுருக்கங்களும், தலையில் தெரிந்த நரைமுடியும்... 'அம்மைக்கு மூப்பு கூடிருச்சோ’ என்று நினைக்க தான் தோன்றியது.

“ஏலே சோத்தை போடச் சொல்லிட்டு என்ன கனா காணுட்டு கிடக்க...சோத்தை திண்ணாம என் முகத்தை அளந்துட்டு இருந்தது காணும்… சூடா சோத்த திண்ணாதானே மேலுக்கு கேக்கும்” என்றவர் ஏதோ சொல்ல தயங்க,

"என்னம்மோவ் ஏதோ ரோசனையா இருக்காப்புல தெரியுது"

“அது ஒன்னுமில்ல கண்ணு உனக்கு இப்ப எதுவும் சோலி கிடக்கா என்ன… இல்ல உன்ர மாமா வூட்டுக்கு வரச்சொன்னாக… என்னா ஏதுன்னு கேட்டுபுட்டு கொஞ்சம் கறியை உன் அக்காக்கிட்ட கொண்டு போய் கொடுத்துரு ராசா… அப்படியே உன் அயித்தை எதுப் பேசுனாலும் பொறுத்துக்க கண்ணு… போன மொற ஏதோ இடக்கா பேசிப்புட்டியாம்‌ நீ… என்கிட்டே பஞ்சாயத்துக்கு வாராக ” என்றிட நங்கென்று தட்டை கீழே வைத்தவன்,

“அப்படி உன்கிட்ட வந்தா… நீயி உன்ர மருமவன்கிட்ட அந்த பஞ்சாயத்தை இழுத்துன்னு போ… இந்த கருமத்துக்கு தான் அந்த வூட்டு வாசலை மிதிக்கிறதில்ல…. எல்லாம் அக்காக பார்க்க வேண்டி கிடக்கு…”

“சேரி கண்ணு… இந்தா இதுல கறி தனியா வைச்சிருக்கேன்… அப்புறம் நம்ம சந்துக்குட்டிக்கு புடிக்குமேன்னு ஈரலை தனியா வதக்கியே வைச்சிருக்கேன்…” என்று பையை கொடுத்திட, 'சந்தனா’ என்ற பெயர் அவனிடம் என்ன மாயாஜாலம் செய்ததோ அதுவரை கோவத்தில் சிவந்திருந்த வதனம் அப்படியே மென்மையை‌ தத்தெடுத்துக் கொண்டது.

வேகமாக தன் கறுப்பு புல்லட்டை கிளப்பியவன் அதனை அந்த பெரிய வீட்டின் முன்பு நிறுத்தினான். தோற்றம் மட்டும் அந்த கால வீடு போல் தோன்றினாலும்… அவ்வாறு‌ இல்லாது இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு அனைத்தையும் மாற்றியிருந்தனர்.

வண்டி நின்றதோ இல்லையோ, 'மாமா’ என்றபடி அவனிடம் வந்து தொத்திக் கொண்டாள் சந்தனா. நீள் கூந்தலும்… காதில் ஆடும் தொங்கட்டானும்… கூர் நாசியும் அவளின் அழகை மேலும் எடுத்தியம்யது‌.

"மாமா... மாமா... புதுப்படம் ஒன்னு வந்திருக்கு என்னைய கூட்டின்னு போ மாமா" என்று நச்சரித்தபடி வந்தவளை அவனின் அதட்டல் அமைதிபடுத்தியது.

“ப்ச்ச் ஏன் புள்ள எம்புட்டு தரம் சொல்றது இப்படி மூச்சுவாங்க ஓடிவராதுன்னு…ஒருக்கா சொன்னா உனக்கு விளங்காது இல்ல” என்றவன், அவளின் சுருங்கிய முகத்தை கண்டு,

"படத்துக்கு தானே போவோம்... போவோம்... மொத என் சட்டையை வுடு" என்றபடி உள் நுழைந்தவனை வரவேற்றது சின்னகண்ணுவின் வெங்கல குரல்.

“கோட்டிக் கழுத… கோட்டி கழுத… எம்புட்டு புத்தி சொன்னாலும் வெளங்காது இந்த சிறுக்கிக்கு… கண்டவன் தோளை புடிச்சு தொங்குறதே பொலப்பா போச்சு… கூறுகட்ட சிறுக்கி… இதுல அவனோடு சேர்ந்து படத்துக்கு வேற போறாளாம்... கூறுகெட்டவ” என்று வெற்றிலையோடு சேர்த்து சந்தனாவை மென்றவரை இருவரும் கண்டு கொள்ளாது இருந்திட, அதில் இன்னும் பொறுமி தள்ளினார் சின்னகண்ணு.

"எக்கா... எக்கா..." என்றவனின் அழைப்பிற்கு வெளி வந்தாள் குணலட்சுமி. இவனின் மூத்த தமக்கை.

"இன்னும் சோறு பொங்கல தானே… அம்மே கறி கொஞ்சம் கொடுத்துவுட்டிருக்கு… சந்தனாவுக்கு ஈரலை செஞ்சிருக்கு... புள்ளைக்கு தட்டுல போட்டு கொடு” என்றபடி அதனை கொடுத்தான் செழியன்.

“பொழுது விடிஞ்சு எம்புட்டு நேரமாகுது‌.‌‌.. இன்னும் சோத்தை பொங்காதிருந்தா வூடு ரெண்டு ஆகியிருக்காது… அதெல்லாம் காலையிலே ஆச்சு…” என்றபடி அந்த கறியை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க சென்றவர்... அவனை வாவென்று அழைக்கவில்லை... அவனும் உள்நுழையவில்லை.

குளிர்சாதன பெட்டியில் கறியை வைத்து கொண்டு இருந்தவரை தடுத்தது சின்னகண்ணுவின் குரல்‌.

"ஏட்டி உன் பொறந்த வூட்டுல இருந்து கொண்டு வந்து தான் இங்க பொங்குனமாக்கும்... ஏன் ஒரு கிலோ கறி எடுத்துகொடுக்க கூட என் மவென் வக்கத்து போய் இருக்கானா... கூறுகெட்டவ... உன் தம்பியே அஞ்சுக்கும் பத்துக்கும் நம்ம கையை பாத்து நிக்கான்... இதுல அவன் கொண்டு வந்து என் வூடு நிறையமாக்கும்..." என்றவரை கண்டு இறுகி நின்றவன்...

"என்ன செய்றது அயித்தே... நாங்க அஞ்சுக்கும் பத்துக்கும் கைகாட்டி வேலை செய்றதாங்காட்டியும் நீங்க கோபுரத்துல கொடி கட்டி நிக்கீக..."

"இந்தாருடா என்ன வாயி ரொம்ப நீளுது... என் மவென் மட்டும் இல்லைன்னா இந்நேரத்துக்கு நீயும்... உன் ஆத்தாவும் உசுரோடு இருந்திருக்க மாட்டீக... அந்த நன்றி கொஞ்சமாச்சும் இருக்கோனும்..."

"அந்த நன்றிக்காக மட்டும் தான் எல்லாம் பொறுத்து போறது... நாங்க உமக்கு கடன்பட்டவக தான் அதுக்காக காலத்துக்கும் அடிமையா இருக்கனும்னு அவசியம் இல்ல அயித்தே"

மீண்டும் ஏதோ பேச வாயெடுத்தவரின் குரல் அப்படியே அடங்கி போனது அவரின் மூத்த மகன் பாண்டித்துரை‌ உள் வருவதை கண்டு‌.

"என்ன செழியா நீயும்... அம்மையும்... ஏதோ பேசிட்டு இருந்த மாதிரியிருக்கு" என்றபடி தாழ்வாரத்தில் இருந்த பெரிய ஊஞ்சலில் அமர்ந்தார்.

"அது ஒன்னுமில்லிங்க மாமோவ்... சந்தனா படத்துக்கு கூட்டுட்டு போன்னு சொன்னா... அதுக்கு அயித்தை இன்னைக்கு வேணா நாளைக்கு கூட்டுட்டு போன்னு சொன்னாக... அதுதென்... என்ன நாஞ்சொல்றது சரிதானுங்க அயித்தை" என்றவனுக்கு மழுப்பலாக தலையை ஆட்டியவர்...

'கோட்டிக்காரன் என்னவே சரின்னு சொல்ல வைச்சுப்புட்டானே' என்று மனதுக்குள் வெம்பியபடி இருந்தார். ஏனெனில் தான் பேசியதை மகனிடம் அப்படியே சொல்லிவிட முடியாது.

"ஏனுங்க மாமோவ் வரச் சொல்லி இருந்தீங்கன்னு அம்மை சொல்லுச்சு"

"ம்ம்... ஆமா செழியா கொஞ்சம் சென்னை பட்டணம் வரை போகுற சோலி கிடக்கு..."

"பைசல் ஏதும் வசூலிக்குனுங்களா"

"அதெல்லாம் இல்ல செழியா... உங்க சின்ன அக்கா வூட்டுக்கு போயிட்டு திருவிழாக்கு அழைச்சிபுட்டு வந்திடு... எனக்கு வேற சோலி கிடக்கு" என்றவருக்கு மறுக்க முடியாது நின்றவன் மனதில் தன் சின்ன மாமானை சிறிதும் காண பிரியமில்லை. இருந்தும் ஒப்புக் கொண்டவன் மனதில் பிடித்தமின்மை மட்டுமே.

அவனுக்கு மட்டுமல்லாது அதை கேட்ட சந்தனா மனதிலும் அதே பிடித்தமின்மையே... ஆனால் அது ஒருவளை நினைத்து... ஏதோ சிந்தனையோடு வெளி வந்தவனை கலைத்தது சந்தனாவின் குரல்.

மூச்சு வாங்க அவன் முன் நின்றவள், "ஏன் மாமா அப்போ இந்த மொறை திருவிழாக்கு அந்த யாழ்மொழியும் இங்கன வருவாளோ" என்று கேட்டவளின் முகம் சுருங்கியிருக்க... அவளின் பெயர்‌ கேட்டதும் சட்டென்று அவன் முகம் புன்னகையில் மிளிர்ந்திருந்தது.

இங்கு இருவரின் சிந்தனையில் தான் நிறைந்திருக்கோம் என்று அறியாது தன்னை மணக்க போகிறவனின் முன் புன்னகையோடு அமர்ந்திருந்தாள் யாழ்மொழி.


தொடரும்...❤️

*************

ஹாய் நட்பூக்களே...

கதை எப்படி போகுதுன்னு சொன்னிங்கன்னா அடுத்த அத்தியாயம் எழுத உத்வேகமாக இருக்கும்...

நன்றி!
-gg_97
 
Last edited:
அடுத்த அத்தியாயம் வாசிக்க⬇️

 
Top