GG writers
Moderator
என்னதான் சுகமோ நெஞ்சிலே...
அத்தியாயம் - 03
செழியனின் கரம் சந்தோஷ் முகத்தை பதம் பார்த்தும் அதிர்ந்த முகத்தோடு நின்றதெல்லாம் ஒரு கணம் தான். அடுத்த நொடியே இவனின் கரமும் அவனை அறைந்திட... இருவரின் கைகளும் மற்றவரின் சட்டையை பற்றிக் கொண்டிருந்தது.
இதனை கண்டு வேகமாக அவர்களை பிரித்து விட்டான் செழியனின் கல்லூரி தோழனும்... தூரத்து உறவுமான வேலன்.
"யோவ் மாப்பிள்ளை... கொஞ்சம் பொறுய்யா" என்றவன் அவனின் செவ்வரி ஓடியிருந்த விழிகளை கண்டு... எதிரில் இருப்பவனிடம் சமாதானம் உரைக்க முயன்றான்.
"கொஞ்சம் மன்னிச்சுக்குங்க சார்... ஏதோ ஒரு நினைப்புல தெரியாம கை வைச்சுபுட்டான்..." என்றவனின் கெஞ்சலில் கொஞ்சம் சமாதானம் அடைந்தாலும்... அதை முழுதாய் ஏற்றுக் கொள்ளாது திமிறினான் சந்தோஷ்.
"என்ன மன்னிப்பு கேட்டா முடிஞ்சுதா... என் மேல தான் தப்பு... அது தான் ஆட்டோவை இடிச்சதும் சாரி கேட்டு ஹெல்ப் பண்ண வந்தேன் தானே... அப்புறம் எதுக்கு அவரு மேல கை வைக்குறாரு... போலீஸ்க்கு போவோமா" என்று செழியனை முறைத்து கொண்டு கேட்டிட...
ஆனால் அவனின் நினைவெல்லாம் இங்கில்லாது எங்கோ அலைபாய்ந்து கொண்டிருந்தது.
போலீஸ் என்றதும் ஆட்டோக்காரர் கொஞ்சம் பயந்துவிட்டார். இவரின் பக்கம் தவறில்லை என்றாலும்... அங்கும் இங்கும் அலையமுடியாது என்று வேலனோடு இவரும் சமாதனம் பேச ஒருவழியாக அமைதியானன் சந்தோஷ்... இருப்பினும் செல்லும் முன் 'சரியான காட்டானா இருப்பான் போல' என்று முனுமுனுத்தபடி நகர்ந்திட, நண்பணை உலுக்கினான் வேலன்.
"யோவ் மாப்பு... என்னய்யா பகல்லே கணா காணுட்டு இருக்கிய்யா" என்றிட நினைவு கலைந்தான் செழியன். அப்போதுதான் தான் வந்த ஆட்டோ திரும்பி சென்று கொண்டிருப்பதை கண்டு,
"அண்ணே... அண்ணே... இன்னும் கொஞ்சம் தூரம் போகனும் அண்ணே" என்று கூப்பாடு போட்டிட...
"யோவ் மாப்பு போதும் நிறுத்துய்யா... இந்நேரம் அவன் இந்த முக்கை தாண்டிட்டு போய் இருப்பான்... நீ செஞ்ச வேலைக்கு அவன் போகாம இருந்தா தான் ஆச்சரியம்... அப்படி என்னலே கோவம் மொத்துட்டு வருது... தெரியாதவன் மேல கையை வைக்குறது... அம்புட்டு ரோசமிருந்தா உன் மாமன்காரன் கிட்ட மறுத்து பேசியிருக்கனும்... அதை வுட்டுப்போட்டு" என்றவன் அவன் இறுகிய முகம் கண்டவன்...
"என்னாச்சு மாப்பு" என்றிட,
"ப்ச்ச்... ஒண்ணுமில்ல மாப்பிள்ளை... ஐயா நியபகம் வந்திடுச்சு" என்றதும் வேலனும் வாயை முடிக் கொண்டான்... ஏனெனில் அவனுக்கு தான் செழியனின் குடும்ப விடயம் தெரியுமே. இருவரும் அமைதியாகவே அடுத்த தெருவில் இருக்கும் வீட்டிற்கு நடந்ததே சென்றனர். செழியனுக்கும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அந்த அவகாசம் தேவைப்பட்டது.
இவர்கள் அந்த வீட்டின் முன் நிற்கவும்... சரியாக ஊமைத்துரையின் காரும் உள்ளே நுழைந்தது. காரில் இருந்து இறங்கியவர் தன் வீட்டு வாசலில் நிற்கும் இருவரையும் கண்டும் காணாது உள்நுழைய செழியனால் பல்லை மட்டுமே கடிக்க முடிந்தது.
"என்ன மாப்பிள்ளை உன் சின்ன மாமன் மரியாதை எல்லாம் பலமா கொடுக்கிறாரு..."
"ப்ச்ச்... மூடிட்டு வாடா என் வென்று" என்று அவர் மீது இருந்த கடுப்பை இவனிடம் இறக்கி வைத்துவிட்டு
உள் நுழைந்தவனை வரவேற்றார் அவனின் சின்ன அக்கா ரேவதி.
"வாடா செழியா... நீ வருவேன்னு அக்கா சொல்லுச்சு... என்னடா வேலா நீயும் கூட வந்திருக்க... என்ன உன் கூட்டாளிக்கு தோதா" என்று வரவேற்றபடி இருவரையும் உபசரித்தார்.
அங்கு நடு ஹாலில் சோபாவில் கால் போட்டு அமர்ந்தபடி இருந்த ஊமைத்துரை அப்போதும் வாவென்று அழைக்காது தெனவட்டாக இருக்க செழியனுக்கு கோபம் பன்மடங்காகியது. இந்த கருமத்திற்காக தானே அவன் இங்கு வருவதில்லை. இருந்தும் சின்ன அக்காவிற்காக பார்த்தவன்,
"என்ன மாமோய் சௌக்கியங்களா... அப்புறம் யாழு புள்ள எப்படியிருக்கா..." என்று எதை கேட்டால் அவரின் பிபி எகிறுமோ அதையே கேட்டிட... அவன் நினைத்தபடியே தான் மகளின் பெயர் அவன் வாயில் வந்ததும் மனிதர் கொஞ்சம் டென்சன் தான் ஆகிவிட்டார் போலும்!
'ஏன்டா... இப்படி' என்றபடி பார்த்தா அக்காவை கண்டு கொள்ளாது...
"அப்புறம் மாமோய்... இந்த மொறை திருவிழாக்கு கண்டிப்பா வந்திடனும்... எப்பவும் போல இந்த மொறையும் யாழியை கூட்டி வரமா தட்டி கழிகாதீங்க... ஏன்னா வீட்டுல ஏதோ நல்ல விஷயம் பேசப் போறாகளாம்... அதனால யாழியும் அவசியம் வந்தாகனும்" என்றிட... இது ஏற்கனவே தன் தாய் அழைப்பேசியில் அழைத்து சொன்ன விடயம் தான் என்றாலும்... மீண்டும் மீண்டும் தன் மகளின் பெயரை அவன் சொல்வது பிடிக்காது... மனைவியிடம் பாய்ந்தார் அவர்.
"ஏய் ரேவதி... உன் தம்பியை வந்த விஷயத்தை மட்டும் பேச சொல்லு... அதை விட்டுட்டு கண்டதையும் பேச வேண்டாம்" என்று மனைவியை அதட்டியவருக்கு அவனிடம் நேரடியாக பேசக்கூட விருப்பமில்லை.
"நானும் அதைத்தானக்கா சொன்னேன்... எனக்கென்ன மரியாதை இல்லாத வூட்டு வாசப்படியை மிதிக்கனும்னு தலையெழுத்தா என்ன... அவுக அண்ணன் சொல்லச் சொன்னாக நானும் சொல்லிப்புட்டேன்..." என்று இவனும் முறுக்கி கொள்ள... இருவருக்கும் நடுவில் கையை பிசைந்தபடி நின்ற ரேவதி... அப்போது தான் படியிலிருந்து இறங்கும் மகளை கண்டார்.
"அப்பா இங்க என்ன சத்தம்" என்றபடி வந்த யாழ்மொழியின் முகம் சோர்வாய் இருந்தது.
உறக்கம் தெளியாத விழிகளில் மை கலைந்திருக்க... தொளதொளவென டீசர்ட்டும்... பேன்ட்டும் அணிந்தபடி தந்தையின் அருகில் அமர்ந்தவளையே தான் அளவெடுத்து கொண்டிருந்தது செழியனின் விழிகள்!
'குட்டச்சி வளர்ந்துட்டா போல... அப்போ பார்க்க மொழுக் மொழுக்குன்னு இருப்பா... இப்போ என்ன காஞ்ச மீனு மாதிரி இருக்கா... ஒருவேளை சோத்தை போட கூட அவங்க அப்பனுக்கு முடியலையோ' என்று அவளின் மாடல் டையட்டை அறியாது யோசித்து கொண்டு இருந்தவனை கலைத்தது அவன் அக்காவின் குரல்.
"யாழி... இது யாருன்னு தெரியுதா... நம்ம செழியன்டி... உன் மாமன்... அதான் என் தம்பி" என்றிட... பல வருடங்கள் கழித்து அவனை பார்த்தவள் முட்டை கண்ணை விரித்திட... அவளின் இதழ்களோ... 'நெட்டைக்கொக்கு' என்று மெதுவாக முனுமுனுத்திட... அதை புரிந்தவன் பல்லை கடித்தபடி அவளை உறுத்து விழித்தான்.
இருவருக்குள்ளும் நடக்கும் உட்பூசல் அறியாது அவர்களின் பார்வை பரிமாற்றத்தில் ஊமைதுரைக்கு தான் நெஞ்சம் பதறியது...
"அம்மாடி யாழ்மொழி... ஆமா இன்னைக்கு சந்தோஷை மீட் பண்ணியே உனக்கு பிடிச்சிருக்காடா" என்று கேட்டிட 'யாரந்த சந்தோஷ்' என்ற செழியனின் பார்வை தன் அக்காவை காண...
"அதுவந்து செழியா... சந்தோஷ் யாழிக்கு பார்த்திருக்க மாப்பிள்ளை... உன் மாமவுடைய பார்டனர் பையன்..."
"ஓ... அப்போ உன் மவளுக்கு சொந்தம் யாருமில்லாமலே பேசி முடிச்சுட்ட... சம்பந்தம் மட்டும் தான் முடிஞ்சதா... இல்ல தேதி குறிச்சாச்சா"
"டேய்... டேய்... பொறுடா... ரெண்டு குடும்பத்துக்கும் புடிச்சிருக்கு... சரி பொண்ணு பையனும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசி புடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம்னு தான்... என்னதான் பட்டணதுக்கு வந்துட்டாலும் உறவுகாரக இல்லாம எப்படிடா நாங்க பேசுவோம்..." என்ற ரேவதிக்கு தன் கணவர் ஏன் தம்பியை வைத்து இந்த விஷயத்தை மகளிடம் கேட்டார் என்பது தான் பிடிபடவில்லை.
ஆனால் புரிய வேண்டியவனுக்கு சரியாக புரிந்தது... 'யோவ் மாமோய்... எங்க உன் மவளை நான் கொத்திட்டு போயிடுவேன்னு இந்த விஷயத்தை இப்போ போட்டு உடைச்சியாக்கும்...' என்று நினைத்தவனுக்கு தன் பார்வை யாழி மீது படிவது அவருக்கு பிடிக்கவில்லை என்று தெளிவாக புரிந்தது...
தன்னை பார்த்து கொண்டிருக்கும் மாமனை கண்டவன், "நீங்க ஒன்னுத்துக்கும் வெசனபட்டுகாதீக மாமா... யாழிக்கு விருப்பம் இருந்தா அவ கல்யாணம் என் பொறுப்பு" என்றவனின் பேச்சில்...
'என்ன இவன் இப்படி பேசுறான்... அப்போ நாமதான் தேவையில்லாம பயந்துட்டோமோ' என்று மண்டை குழம்பியபடி தலையாட்டி கொண்டிருப்பவரை கண்டு நக்கலாக சிரித்தவன்...
"என்ன மொழி உனக்கு பிடிச்சு இருக்கு தானே" என்று புருவம் தூக்கி வினவியனின் குறுஞ்சிரிப்பில் அவனையே அதிர்ந்து பார்த்தபடி நின்றிருந்தாள் யாழ்மொழி!
"என்ன... என்ன பிடிச்சிருக்கா" என்று மகளுக்கு மேலாக பதற்றமாக வந்தது தந்தையின் குரல்.
"ப்ச்... அட என்ன மாமோய்... அது தான் யாரையோ ஒருத்தனை பார்த்திட்டு வந்தாலே... நீங்க கூட புடிச்சு இருக்கான்னு கேட்டீங்க இல்ல... அதை தான் நானும் கேட்டன்... நீங்க என்ன நினைச்சீக... என்னை புடிச்சு இருக்கான்னு கேட்டேன்னு நினைச்சுபுட்டீகளா" என்று கேள்வியோடு நிறுத்திட...
"ச்சே... அப்படியெல்லாம் இல்லையே" என்று படபடப்போடு மறுத்த ஊமைதுரைக்கு வியர்த்து ஊற்றியது... எங்கே தானே அந்த ஆசையை மகளுக்கு விளைவித்து விடுவோமோ என்று பயம் அகமெல்லாம் பரவியது.
அதுவரை அவனின் 'மொழி' என்றழைப்பில் மூச்சை இழுத்து பிடித்திருந்தவளுக்கு அப்போது தான் சுவாசம் சீரானது!
"என்ன மொழி பதிலே காணோம்... புடிச்சிருக்கா இல்லையா" என்று விடாது கேட்டவனுக்கு...
"அப்பாக்கு புடிச்சா எனக்கு புடிச்ச மாதிரி தான்" என்றவள்... "அப்பா எனக்கு கொஞ்சம் தலைவலிக்கிற மாதிரி இருக்கு நான் மேல போறேன்" என்று அங்கிருந்து நழுவிட... போகும் அவளை கண்டவன் மனதில் என்ன இருந்ததை அவன் மட்டுமே அறிவான்.
மற்றவருக்கு எப்படியோ ஆனால் மகளின் பதிலில் தந்தையவன் உச்சி குளிர்ந்து போனான். அதில் 'என் மக என்னுடைய பேச்சை தான் கேட்பா' என்ற கர்வம் மிளிர... மிடுக்கோடு செழியனை கண்டார் ஊமைத்துரை...
"அப்புறம் மாமோய்... மத்தது எல்லாம் ஊருல பேசிக்கலாம்..." என்றவன் பேச்சில் என்ன இருந்தது என்றறியாது தலையாட்டிவிட்டு அறைக்குள் சென்று விட்டார் ஊமைத்துரை.
"சரிக்கா... அப்போ நாங்க புறப்படுறோம்... இப்போ கிளம்புன தான் ஊருக்கு சீக்கிரம் போய் சேர முடியும்"
"என்னடா ஒருவாய் சோத்தை கூட திங்காம போற... அப்படியென்ன அவசரம்" என்ற ரேவதிக்கு...
"அட விடுக்கா... இப்போ சாப்பிட முடியலன்னா என்ன... சீக்கிரம் விருந்து சாப்பாடே சாப்பிடுறன்" என்றவன் பதிலில் மறை பொருள் ஒளிந்திருந்தோ!
அதை எதுவும் அறியாத ரேவதி தலையாட்டி விடைக்கொடுத்திட... ஆண்கள் இருவரும் அங்கிருந்து அப்போதே ஆட்டோவில் கிளம்பி ரயில் நிலையத்தை அடைந்தனர்.
அதுவரை எதுவும் பேசாது தன் நண்பணின் மோன நிலையை கண்டவனுக்கு விடயம் பிடிபட்டாலும் எதுவும் அறியாதது போலே பேச்சை தொடங்கினான்.
"என்ன மாப்பிள்ளை... உன் சின்ன மாமன் வீட்டுல ஒரு படமே ஓட்டிட்டு வந்திருக்க... என்ன சங்கதி" என்று கேட்ட வேலனுக்கு ஒன்னுமில்லை என்று தலையாட்டினாலும்... அதை மற்றவன் நம்ப தயாராயில்லை!
"எப்படியும் முத்தின கத்திரிக்காய் சந்தைக்கு வந்துதானே ஆகனும்... அப்போ பார்த்துக்கிறேன் டா" என்று முனுமுனுத்தவனுக்கு...
"பார்த்துக்கோ... பார்த்துக்கோ" என்றபடி உல்லாசமாக விசல் அடித்தபடி ரயில் இருக்கையில் அமர்ந்து காதில் ஹேட்செட்டோடு அமர்ந்தவனின் செவியில் இளையராஜவின் இசை சுகமாய் பாய்ந்தோடியது!
"என்னதான் சுகமோ நெஞ்சிலே…
இதுதான் வளரும் அன்பிலே
ராகங்கள் நீ பாடி வா…
பண்பாடும் மோகங்கள் நீ
காணவா…
எந்நாளும் காதல் உறவே…
என்னதான் சுகமோ நெஞ்சிலே
தொடரும்...
*********
ஹாய் மக்களே!
இனி தான் கதை சூடு பிடிக்கும்... அப்புறம் யாருக்கு யாரு எப்படி முறைன்னு அடுத்த யூடியில் வந்திடும்...
கதை எப்படி போகுதுன்னு சொல்லுங்க பிரெண்ட்ஸ்
நன்றி!
- gg_97