GG writers
Moderator
என்னதான் சுகமோ நெஞ்சிலே...
அத்தியாயம் - 04
அன்று!
"ஏட்டி யாழி... ஆமா இந்த காதல பத்தி என்ன நினைக்குற" என்ற மீனாவின் கேள்விக்கு...
"ம்க்கும் அதை பத்தி என்ன நினைக்க... இந்த காதலும் கழுதையும் ஒண்ணுடி... கழுதை முதுகுல பொதி சுமக்கும்... காதல்னா நெஞ்சில சுமக்கனும்... நமக்குல்லாம் ரெண்டும் ஒத்து வராதுடி..." என்றபடி மாங்கா மரத்தின் மீது அமர்ந்தபடி மாங்காயை கடித்துக் கொண்டு இருந்த யாழ்மொழி அப்போது ஒன்பதாவது வகுப்பு படித்துக் கொண்டு இருந்தாள்...
"நீ சொல்றதும் சரிதான்... இருந்தாலும் ஆமா உன் அம்மா ஏன்டி எப்போ பார்த்தாலும் உன்னை வஞ்சிக்கிட்டே இருக்கு"
"ப்ச் அதுக்கு வேற வேலையில்லடி... எப்போ பாரு நீ பொட்டை புள்ள இப்படி பண்ணாத... அப்படி பண்ணாதன்னு... அதுவும் வயசுக்கு வந்துதிலிருந்து நொச் ரொம்ப அதிகம்டி... எங்க அப்பா தான் காப்பாத்தி வுடுறாரு..."
"எங்க வூட்டுலேயும் அதேதான்டி... இந்த அம்மாங்களே இப்படிதான்டி" என்றபடி மீனாவும் மாங்காயை ஒரு கடி கடிக்க சரியாக அவளின் கண்ணில் விழுந்தது செழியனும்...ஒரு பெண்ணும் பேசிக் கொண்டு இருப்பது!
"ஏட்டி யாழி... அது உன் மாமன் தானே..." என்று தூரத்தில் யாரோ ஒருவளிடம் பேசிக்கொண்டு இருப்பவனை கண்டு...
"ஏய் ஆமான்டி அவன் தான்... ஆமா அந்த அக்கா யாருன்னு தெரியலையே... ஹான்... நியபகம் வந்திடுச்சு... ரெண்டு மூனு தடவை பஸ் நிக்குற இடத்துல பேசி பார்த்திருக்கேன்... அய்யோ அந்த அக்கா எதுக்குடி அழுதுட்டு போகுதுன்னு தெரியலையே... உனக்கு எதாச்சும் தோணுதாடி மீனா"
"எனக்கு மட்டும் எப்புடி தெரியும்டி... ஒருவேளை அந்த அக்கா லவ்வை சொல்லி... இவங்க மறுத்துட்டாகளோ"
"ஏய் ஆமன்டி... அப்படி கூட இருக்குமோ..." என்ற யாழ்மொழியின் குரலில் அத்தனை உற்சாகம்.
"ஏய் மீனா வாடி... அவன் பின்னாடியே போவோம்... எனக்கு என்ன நடக்குதுன்னு தெரிஞ்சே ஆகனும்..." என்று தோழியை இழுத்துக் கொண்டு சென்றவள்... அவன் பின்னேயே தொடர...
சில நிமிடங்களிலே தன் பின்னால் யாரோ வருகிறார்கள் என்ற உந்துதலில் நின்றவன்... சட்டென்று மரத்தின் பின் மறைந்திருக்கும் யாழியின் முடியை பிடித்து இழுத்திட...
"அம்மாஆஆஆ" என்ற அலறலோடு இவன் முன் வந்து விழுந்திட... 'அடியாத்தி நான் இல்ல எப்போய்' என்றபடி மீனா ஓடிவிட... கண்கள் சுருங்க அவளை பார்த்திருந்தான் செழியன்.
கலைந்திருந்த ரெட்டை ஜடை.. அழுக்காகியிருந்த பள்ளி சீருடை... என அனைத்தும் அவள் பள்ளியில் இருந்து இன்னும் வீட்டிற்கு செல்லவில்லை என்பதை தெளிவுபடுத்த...
"என்ன இன்னும் வூட்டுக்கு போகலையா... பள்ளிக்கூடம் முடிஞ்சா போகுறதில்லையா" என்று அதட்டியவனை கண்டு முறைத்து பார்த்தவள்...
"வூட்டுக்கு போயிட்டு தான் வந்தேன்... அம்மா தான் மாங்காய் பறிச்சுன்னு வரச்சொல்லு..."
"சரி மாங்காயி பறிக்க வந்தவ... என் பின்னாடி என்னத்தக்கு வர"
"அதுவந்து... அதுவந்து..."
"ப்ச்... சொல் போறியா இல்லியா" என்று ஜடையை இன்னும் இழுத்து பிடிக்க...
"ஸ்ஸ்... அம்மாஆஆ... இங்க பாருங்க இதே மாதிரி செஞ்சிட்டிருந்தா நான் ஆச்சிக்கிட்ட போய் சொல்லிடுவேன்... நீங்க ஒரு அக்காவை அழ வைச்சு அனுப்பினதை"
"எனக்கு தெரியாதுன்னு நினைச்சிங்களா... நீங்க அந்த அக்கா லவ்வு சொல்லதை வேண்மான்னு சொல்லவும் தானே அழுதுட்டு போனாங்க"
"ஓ... அப்புறம்" என்றவன் குரலில் சுவாரஸ்யம் கூடியிருந்தது.
"நீங்க அந்த சந்து பொந்துக்காக தானே அவுகளை வேணாம்னு சொன்னீங்க... எனக்கு தெரிஞ்சு இந்த அக்காவே உங்களுக்கு பொருத்தமா இருப்பாக" என்று அதிமேதவியாக பேசியவளின் தலையிலே குட்டியவன்...
"இந்த மாதிரி அறிவா உன்னால தான் யோசிக்க முடியும் குட்டச்சி..."
"ப்ச்ச் என்ன குட்டச்சின்னு சொல்லாதீங்க... அப்புறம் நானும் நெட்டைக்கொக்குன்னு உங்களை சொல்லுவன்..." என்றவளை கண்டு தலையிலே அடித்து கொண்டவன்...
"இங்காரு உனக்கு யாரு சொன்னது நான் சந்தனாவை கண்ணாலம் செய்ய போறேன்னு..."
"ம்ம் பெரியம்மா தான் ஆச்சிக்கிட்ட பேசிட்டு இருந்தாங்க... நான் கேட்டேன்" என்று தான் ஓட்டு கேட்டதை கூறிட... ஏனோ அவளை சீண்டும் ஆவல் தோன்றியது...
"இல்லயே நான் உன்னை தான் கண்ணாலம் பண்ணலாம்னு இருக்கேன்... அதுதான் அந்த பொண்ணுக்கு நோ சொல்லிட்டேன்" என்றிட... அவன் கையை தட்டி விட்டவள்...
"ம்ஹூம்... நான் மாட்டேன்..."
"ஏன் உங்க அப்பனுக்கு பிடிக்காதோ" என்றவனுக்கு இதற்கு முன்னதாக நடந்த நிகழ்வு தானாக நினைவிற்கு வந்தது...
அவளோ, "ம்ஹூம்... நான் மாட்டேன்... மாட்டேன்" என்று பூம்பூம் மாடு போன்று தலையாட்டியவளை கண்டு இவனுக்கு சிரிப்பு தான் வந்தது கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து கொண்டு இருக்கும் அந்த இளம் வாலிபனுக்கு!
கண்களில் குறும்பு மின்ன தன்னை மருண்டு பார்பவளை மேலும் பயமேற்றும் பொருட்டு...
"இங்கபாரு நீ என்ன தான் கண்ணாலம் கட்டிகனும்... புரிஞ்சதா" என்று மிரட்டியவனை கண்டு பயந்து முழித்தவள் பின் விட்டால் போதுமென்று ஓடியேவிட... முழித்து நின்றவன் அவளின் ஓட்டத்தில் வெடித்து சிரித்தான்.
••••••••••••••••
இன்று!
'இங்கபாரு நீ என்ன தான் கண்ணாலம் கட்டிகனும்... புரிஞ்சதா' என்றவனின் மிரட்டல் அவளின் அகத்தை விட்டு அகலாது இருக்க...
பட்டென்று கண் விழித்தவளுக்கு இன்னும் கூட அந்த நினைவின் தாக்கத்தில் இருந்து வெளிவர இயலவில்லை. இதோடு செழியன் சென்னை வந்து சென்று இரண்டு வாரம் ஆகிவிட்டது... ஆனால் அவ்வபோது இந்நினைவு மனக்கண்ணில் மின்னி மறைந்து கொண்டிருந்தது.
நெற்றியில் பூத்த வியர்வையை துடைத்துவிட்டு தன்னுடைய ஷாட்டிற்கு ரெடியாக சென்றாள் யாழ்மொழி. ஏற்கனவே ஒரு சீன் எடுத்திருக்க மீதமிருக்கும் காட்சியை எடுக்க வேண்டி இருந்தது... அந்த ஓய்வில் தான் அவள் மறக்க வேண்டும் என்று நினைத்து விடயம் கண் முன் தோன்றி மறைந்திருந்தது!
அதுவொரு பிரபலமான நகைகடை. அந்த கடையின் நகைகடை விளம்பரத்திற்காக தற்போது தயாராகி இருந்தாள். அழகிய இளஞ்சிவப்பு மென்பட்டு... தங்க சரிகை அணிந்ந புடவையும் அதற்கேற்ற நகைகளும் அவளின் எழிலை மேலும் எடுத்துக் கூட்ட... அதோடு பேசும்போது அவளின் கிள்ளை மொழிக்கு போட்டி போடும் ஜிமிக்கியும் அவளை பேரழகி ஆக்க... அவளின் பாவனைகளை அனைத்தையும் ஓரமாக நின்றபடி ரசித்துக் கொண்டிருந்தான் சந்தோஷ்.
தன்னை ஒருவன் ரசித்து கொண்டு இருப்பதை அறியாது தன் வேலையை முடித்து விட்டு லுஸ் சர்ட் அண்ட் கார்கோ பேண்டில் வெளிவந்தவளை எதிர்கொண்டான் சந்தோஷ். நிச்சியமாய் அவனை இங்கு எதிர்பார்க்கவில்லை என்று அவளின் விரிந்த கண்கள் சொல்ல... அதில் தானும் விழுந்து எழுந்தவன்...
"ஹாய் யாழி... ஒன் கப் காபி சாப்பிடலாமா" என்றவனுக்கு மறுக்க இயலாது தலையாட்டியவள் அவனோடு சேர்ந்து நடந்தாள்.
"என்ன இங்க எதிர்பார்க்கல தானே... பர்ஸ்ட் உன் வீட்டுக்கு தான் போனேன்... உங்க அப்பா தான் சொன்னாரு நீ ஷூட் விஷயமா நகை கடைக்கு போய் இருக்கன்னு..." என்றபடி தன் பாக்கெட்டில் இருந்து நகைபொட்டியை எடுத்து நீட்டிட,
"என்ன சந்தோஷ் இது..."
"திறந்து பாரு யாழி... அப்போ தானே தெரியும்" என்றிட, அதனை பிரித்தவள் முன் அழகாய் ஜொலித்து கொண்டிருந்த வெள்ளை கல் பதித்த வைர மோதிரம்...
"எதுக்கு இது சந்தோஷ்... பிளிஸ் இதெல்லாம் வேணாம்..." என்றதும் முகத்தை சுருக்கி கொண்டான் அவன்.
"சீக்கரமே நம்ம ரெண்டு பேருக்கும் என்கேஜ்மண்ட் பண்ணலாம்னு உங்க அப்பா தான் சொன்னாரு" என்றதும் முகத்தை சுருக்கும் முறை அவளுதானது. ஏனெனில் இதைப் பற்றி அவர் ஒன்றுமே சொல்லவில்லையே. இத்தனைக்கும் சொல்லி இருந்தால் தான் மறுக்க போவதில்லை... இருந்தும் ஏன்... காரணம் பிடிபடவில்லை...
"யாழ்மொழி... யாழ்மொழி... நான் பேசுறதை கேட்குதா" என்றவனின் பேச்சில்...
"ஹான்... கேட்குது சந்தோஷ்" என்று நினைவில் இருந்து திரும்பியவள் இன்னும் அவன் மோதிரத்தை நீட்டியபடி இருப்பதை கண்டு...
"தப்பா எடுத்துக்காதீங்க சந்தோஷ்... இதெல்லாம் மேரேஜ் அப்புறம் பார்த்துக்கலாமே... பிளிஸ்..." என்றிட...
"ஏன் யாழ்மொழி என்னை உங்களுக்கு பிடிக்கலயா" என்று கவலையாக ஒலித்தது அவன் குரல்...
"ச்சே... ச்சே அப்படியெல்லாம் இல்ல... உங்களை எனக்கு பிடிச்சு இருக்கு" என்றவளின் குரல் 'மொழி' என்று அதட்டிய குரலை கேட்டு சட்டென்று நின்று பின் குரல் வந்த திசையை நோக்கி அவள் பார்வை வேகமாக சென்றது.
•••••••••••••
சாலையின் ஓரத்தில் மெதுவாக வண்டியை இயக்கி கொண்டி இருந்தான் செழியான். அவனின் பின் இருக்கையில் யோசனையோடு அமர்ந்து இருந்தாள் சந்தனா. இருவரும் படத்திற்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
சென்னை சென்று வந்ததில் இருந்தே செழியன் முகத்தில் அவ்வபோது தோன்றியிருக்கும் புன்னகையும் அவனின் மலர்ந்த முகமும் இவளுக்கு புதிதாய் தோன்றினாலும் அதை புறந்தள்ளிவிட்டு அவனிடம் தன் பேச்சை ஆரம்பித்தாள் சந்தனா.
"ஏன் மாமா சென்னைக்கு போனியே அந்த யாழ்மொழியை பார்த்தியா"
"பார்த்தியாவா... ஆளே அடையாளம் மாறிட்டா புள்ள... இங்கிருக்கும் போது எப்படி பொசு பொசுன்னு இருந்தா... அங்க போய் காஞ்ச மீனு மாதிரி ஆகியிருக்கு புள்ள... இருந்தாலும் அதுவும் அவளுக்கு தனி அழகை கொடுக்குது தான்" என்றவன் கண்ணாடியை பார்த்து புன்னகைத்து கொள்ள...
"ஏன் மாமா எப்பவும் நான் தான் அழகுன்னு சொல்லுவ... இப்போ என்ன அவளை சொல்ற" என்று கேட்டவளின் குரலில் லேசாக பொறாமை இருந்ததோ!
"இங்க பாரு சந்து... நீ ஆர்ப்பரிக்கும் அருவி மாதிரி அழகுன்னா... அவ அமைதியா இருக்கிற கடல் மாதிரி அழகு" என்றவன்... 'அதுதான் மொத்தமா என்னை சுருட்டிக்க பார்க்குற' என்று வாயுக்குள்ளே முனுமுனுத்து கொண்டவன் ஒரு கரத்தால் தன் சிகையை கோதிக் கொண்டான்...
"ஓஓ... சரி இப்போ சொல்லு மாமா... உனக்கு என்னை புடிக்குமா... இல்ல அவளை புடிக்குமா" என்றவளுக்கு விடை தெரிந்தே ஆகவேண்டிய நிலை. அவனும் நொடியும் தாமதம் இல்லாது...
"உன்னை தான் பிடிக்கும் புள்ள" என்றவன் மனதில் பிடித்தமும் நேசமும் வேறுவேறு என்ற நினைப்பிருக்க.... அதை அறியாதவளோ அவனின் பதிலில் ரெக்கையின்றி வானில் பறந்திட... அவளின் கரம் அவன் தோளை மெல்ல பற்றிக் கொண்டது!
•••••••••••••
"ஏங்க இப்போ அவசரமா இந்த எங்கேஜ்மெண்ட் வைச்சே ஆகனுமா... இன்னும் யாழி நமக்கு எந்த பதிலும் சொல்லல" என்ற ரேவதியை முறைத்து பார்த்தார் ஊமைத்துரை.
"ப்ச்... உங்ககிட்ட தானே பேசிட்டு இருக்கேன் அமைதியா இருந்தா என்ன அர்த்தம்"
"ம்ம் உன் கேள்விகளுக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லன்னு அர்த்தம்..."
"இப்படி சொன்னா எப்படிங்க... அவ விருப்பம் முக்கியம் இல்லையா..."
"என் பொண்ணு என் பேச்சை மீற மாட்டா அந்த நம்பிக்கை எனக்கிருக்கு..."
"அப்புறம் எதுக்கு இவ்ளோ சீக்கிரம் முடிவு செய்றீங்க" என்றவரை ஆழ்ந்து பார்த்தவர்...
"என்ன செய்றது அவ உடம்புல ஓடுற ரத்தம் அந்த மாதிரி... தீடிர்ன்னு அப்பனை எதிர்த்து எவனோ ஒருத்தனுக்கு கழுத்தை நீட்டிட்டா அதுதான்..."
" எங்க ஐயா பேச்சை மீறி உங்களை கை புடிச்சேன்னு குத்தி காட்டுறீங்களா"
"குத்தி காட்டுல... உண்மையா சொல்றேன்" என்றவர் அவ்வளவு தான் பேச்சு என்பது போல் சென்றுவிட... எப்போதும் போல் கணவரின் உதாசீனத்தில் மனம் நொந்தவருக்கு தானாக அவரின் வாழ்க்கை கண் முன் விரிந்தது...
தொடரும்...
***********
ஹாய் நட்பூக்களே...
கதையை பற்றிய தங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும்...
நன்றி
- gg_97
Last edited: