GG writers
Moderator
என்னதான் சுகமோ நெஞ்சிலே...
அத்தியாயம் - 05
அந்தியூர்!(கற்பனை)... வேலூர் அருகில் அமைந்திருக்கும் சிறு கிராமம். நவநாகரீக வசதி இல்லாத காலம் அது. தென்னங்கீற்றால் வேயப்பட்டு... ஓலைகளால் ஆன வீடு. நள்ளிரவு நேரம் அவ்வீட்டின் வெளியே இங்கு அங்கும் நடைப்பயின்று கொண்டிருந்தார் அய்யாசாமி... மனமெல்லாம் திக் திக்கென்று அடித்து கொண்டு இருந்தது...
இரண்டு பெண் பிள்ளையை கண்டவருக்கு ஆண் மகவு வேண்டும் என்று அத்தனை ஆசை... ஆனால் அதன் பின் ஏனோ செண்பகவள்ளிக்கு கரு தங்காமலே போன்றது... சரி அவ்வளவு தான் என்று நினைத்திருந்த வேளையில் பல வருடங்கள் கழித்து செண்பகவள்ளி கருத்தரித்து இருந்தார்...
'எம்மா மாரியாத்தா... எப்படியாவது என் வம்சத்தை தலைக்க வைக்க... ஒரு ஆம்பள புள்ள கொடு எஞ்சாமி' என்று மனம் கூப்பாடு போட்டு கொண்டிருக்க... அவரின் அருகே முகமெல்லாம் பயத்தோடு தன் தாயின் அலறலை கேட்டவாரு நின்றிருந்தாள் ரேவதி. எப்படியும் அப்போது அவளுக்கு பதினெட்டு வயதிருக்கும்...
அவள் பதற்றத்தில் நகத்தை கடித்து துப்பிக் கொண்டிருக்க... 'அம்மாஆஆஆஆஆ' என்ற அலறலோடு ஆண் மகவை ஈன்றிருந்தார் செண்பகவள்ளி.
"எய்யா சாமி நீ கூம்பிட்டது வீண்போகலையா... உனக்கு மவென் தான் பொறந்திருக்கான்..." என்றபடி மருத்தவச்சி அவரிடம் சிசுவை நீட்ட... அதை கையில் ஏந்திக் கொண்டவருக்கு அத்தனை பேரானந்தம்.
"இந்தாரு புள்ள இங்க பாரு உனக்கு தம்பி பொறந்திருக்கான்..." என்றபடி மகனை தன் மகள் ரேவதியிடம் காட்ட... பொக்கை வாயை திறந்து சிரித்து கொண்டவனை பார்த்து இவளின் முகமெல்லாம் புன்னகை பூத்தது!
உள்ளே தன் அம்மைக்கு ஒத்தாசையாக உதவி கரம் நீட்டியிருந்தாள் குணசெல்வி. அப்போதைய அவளின் வயது இருபது இருக்கலாம். முகத்தில் அத்தனை சாந்தம் வீற்றிருந்தது.
"ஏன் புள்ள... நம்ம மவனக்கு என்ன பேரு வைக்கலாம்... இதை பாரு கை விரல் எல்லாம் எம்புட்டு வளர்த்தியா இருக்கு... கண்டிப்பா பாரு இவன் என்ன மாதிரி உசரமா வருவான்... நம்ம வம்சத்தை செழிக்க வைச்ச இவனுக்கு செழியன்னு பேரு வைப்போமா..." என்று மகனின் மீது கொள்ளை பாசத்தை வைத்தவராய் கேட்க... அவர் துணைவியின் முகமும் சரியென்பதாய் தலையசைக்க... அதன் பின் ஊரையே கறி விருந்துக்கு அழைத்து மகனுக்கு பெயர் வைத்தார் அய்யாசாமி.
வந்த உறவினர்கள் அனைவரும் கறி விருந்தோடு இவர்கள் குடும்பத்தையும் சேர்த்தே மென்றனர்.
"என்ன செண்பகம்... எப்படியோ வம்சத்தை தலைக்க வைக்க ஒரு ஆம்பிள புள்ளையை பெத்துட்ட... இருந்தாலும் பொட்டை புள்ளைக கண்ணாலத்துக்கு நிக்கும் போது நீயி மவனை பெத்தெடுத்துன்னு இருக்கிறது நல்லாவா இருக்கு... பொண்ணு கட்டுறவுக கூட என்ன நினைப்பாக"
"அதுக்கென்ன செய்றது அம்மாச்சி... ஏன் இதெல்லாம் நம்ம கிராமத்துல புதுசா என்ன... நீயே கூட உன் மவளுக்கு கண்ணாலம் கட்டி கொடுக்கும் போது உன் சின்ன மக ஒன்னாவது தான படிச்சின்னு இருந்தா... பெரியவ ரொம்ப பொறுப்பானவ அவளுக்கு சம்பந்தம் தகையாமயா போயிடும்..." என்ற செண்பகவள்ளியின் பேச்சை அந்த பக்கம் சென்ற ரேவதியும் கேட்க நேரிட்டது... காதில் கேட்டாலும் அப்போது கருத்தில் பதியவில்லை.
சுற்றார் அனைவரும் வாழ்த்தி சென்ற பின் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது அய்யாசாமி குடும்பம்...
வயதை கடந்த பின் குழந்தையை ஈன்றதாலோ என்னவோ செண்பகவள்ளிக்கு மகனை கவனிக்க இயலாது போக... அவனின் பொறுப்பு அனைத்தும் குணசெல்வியிடமே வந்தது! அதனால் என்னவோ அவன் மீது அத்தனை பாசம் அவருக்கு!
இவ்வாறு நாட்கள் சென்று கொண்டிருக்க... குணலட்சுமிக்கு ஏனோ எந்த சம்பந்தமும் தகையவில்லை...
"ஏஞ்சாமி இம்புட்டு நாளாவது நம்ம பெரியவளுக்கு இன்னும் எந்த வரனும் தகையமாட்டேங்குதே..." என்று கேட்ட செண்பகவள்ளியின் குரலில் சோகம் வழிந்தோடியது.
"நீ கவலைப்படாத புள்ள... என் புள்ளைக்கு நல்ல வரன் வரனும்னு தான் எல்லாம் தட்டி போயிட்டு கிடக்கோ என்னவோ... நான் நம்மூரு பூசாரகிட்ட சொல்லி வைச்சிருக்கேன்... கண்டிப்பா சீக்கிரம் நல்ல சேதி வரும்" என்றிட ஓரளவு சமாதனம் அடைந்தது அந்த தாயுள்ளம்!
ரேவதியின் நேரமோ கோவிலில் கேட்ட சம்பாஷனைகளும்... இன்று பெற்றோரின் சம்பாஷனைகளும் சேர்ந்து செழியன் பிறந்ததால் தான் வரன் தட்டி கழிக்கிறதோ என்ற எண்ணம் துளிர்விட ஆரம்பித்திருநத்து.
இருபது வயது குணலட்சுமி.. இருபத்தி நான்கு வயதை எட்டியும் எந்த வரனும் தகைந்து வரமால் இருக்க பெற்றோர் மறுகி தான் போயினர். ஆனால் அவளோ தம்பியை வளர்ப்பதில் தன் நேரத்தை அழகாக செலவிட்டு கொண்டிருந்தாள்.
சில நாட்களிலே அவர்களின் மறுகலுக்கு அவசியமே இல்லாது பூசாரி வழியாக சம்பந்தம் வந்து சேர்ந்தது பாண்டித்துரை சம்பந்தம்.
பார்க்க பெரிய இடம் பின் ஏன் தங்கள் வீட்டுக்கு பெண் கேட்டு வந்திருக்கிறார்கள் என்று பெற்றவர்கள் புரியாதிருக்க... அப்போது தான் பூசாரி சொன்னார் பாண்டித்துரையின் ஜாதகத்திற்கு எந்த வரனும் சரிவராது இருக்க... அவருக்கு சரிவந்த ஒரே வரன் குணலட்சுமியுடையது. இருந்தும் இது சரி வருமா என்று யோசனையில் இருந்தவர்களை பெரியவளின் வயது சம்மதத்தை கொடுத்திருந்தது.
அதன்பின் வேக வேகமாக இருவருக்கும் கோவிலில் திருமணம் நடைப்பெற்று... மாப்பிள்ளை வீட்டில் விருந்து வைத்திருந்தனர்... அந்த பெரிய வீட்டின் பின்புறத்தில் காதலில் கசிந்துருகி கொண்டிருந்தது இரண்டு உள்ளங்கள்...
"எனக்கு பயமா இருக்குங்க... அக்கா கண்ணாலம் முடிஞ்சது... அடுத்து எனக்கு தான் பார்ப்பாங்க... சீக்கிரம் எங்க வீட்டுல வந்து பேசிடுங்க" என்ற குரல் ரேவதியுடையது...
"நீ கவலைபடாத ரேவதி அடுத்த நம்ம கல்யாணம் தான்... சீக்கிரம் என் அம்மைக்கிட்ட பேசிடுறேன்..." என்ற ஊமைத்துரைக்கு எப்படி இதை தாயிடம் சொல்வதென்று கவலை...
ஏனெனில் நிச்சயமாக சின்னக்கண்ணு ரேவதியை கரம் பிடிக்க விடமாட்டார்... வேறு வழியே இல்லாது தான் குணலட்சுமியை பெண்ணெடுத்தது. என்ன செய்வதென்று அவர் யோசித்து கொண்டிருக்க... இருவரும் ஓட்டி உறவாடுவதை ஊரார் பார்த்துவிட்டு அய்யாசாமியிடம் சொல்லிவிட்டனர்... எங்கிருந்து வந்தார் என்று தெரியவில்லை... தன் மகளை அவனிடம் இருந்து பிடித்திழுக்கும் முயற்சியில் ஊமைத்துரையை கீழ் தள்ளியிருந்தார்.
"ஏம்ப்பா அய்யாசாமி என்ன இருந்தாலும் பேசி தீர்த்து இருக்கனும்போவ்... அதை விட்டுபோட்டு மருமவன் முறையில் இருக்கிறவனை கீழ தள்ளி வுடுறதா..."
"ஏம்ப்பா யாருக்கா இருந்தாலும் நம்முட்டு புள்ளையா தொட்டா கோவம் வரத்தானே செய்யும்... இதுல அய்யாச்சாமி செஞ்சதுல என்ன தப்புங்கிறான்" என்று பல்வேறு குரல்கள் எழுந்திட... இதையெல்லாம் கேட்டபடி முகம் கன்றலோடு எழுந்த ஊமைத்துரை அய்யாசாமியை அடிக்க பாய்ந்திட... நொடியில் விசேஷ வீடு களோபரமானது...
"ரேவதி... உனக்கு நான் முக்கியமா இல்ல உங்க ஐயா முக்கியமா... நான் தான் வேணும்னா இப்போவே என்கூட வந்திடு" என்று சத்தம் போட்டவரை கண்டு உண்மையில் நடுங்கி தான் போனாள் ரேவதி...
"என்ன மீறி என் புள்ள உன்னோடு வரமாட்டா டா" என்று அய்யாசாமியும் கத்த... பெற்றவருக்கும்... காதலித்தவனுக்கும்... இடையில் சிக்கி தவித்தவர்... எந்த முடிவும் எடுக்காதிருக்க... அதற்குள்ளே பாண்டித்துரை வந்து தம்பியை சமாதனபடுத்தி கொண்டு இருக்க... மற்றொரு புறம் செண்பகவள்ளியும் தன் கணவனை சமாதனபடுத்தி கொண்டிருந்தார்.
"இந்தாருங்க அவசரபட்டு வார்த்தையை வுட்டுபுடாதீங்க... பெரியவ வாழ்க்கையும் பார்க்கனும் இல்ல... சின்னவளுக்கு அவரை தான் புடிச்சு இருக்குன்னா அங்கயே கொடுத்திடலாம்ங்க... ரெண்டும் ஒன்னுத்துக்கு ஒன்னு ஒத்தாசையா இருக்கும் இல்ல..." என்று கணவரை கரைக்க முயன்றுக் கொண்டிருந்தார்.
ஓரளவு இரு பக்கமும் அமைதியாகியிருந்தது. ஆனால் விடயம் அறிந்த சின்னக்கண்ணு தான் ஆடி தீர்த்து விட்டார். எப்படியோ அவரையும் சம்மதித்து அடுத்த முகூர்த்தத்திலே இவர்களின் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இதோ திருமணமும் முடிந்து விட்டிருந்தது.
ஆனால் இரு வீட்டாருக்குமே மனம் நிம்மாதியாயில்லை... சடங்குகள் அனைத்தும் ஒன்றன் ஒன்றாக நடந்துக் கொண்டிருக்க... மாப்பிள்ளையும் பொண்ணும்... பெண் வீட்டிற்கு செல்ல வேண்டும்... ஆனால் எவ்வளவு வற்புறுத்தியும் ஊமைத்துரை அங்கு செல்லமுடியாதென்று மறுத்து சென்றுவிட... என்ன செய்வதென்று புரியாது நின்றாருந்த ரேவதியிடம் வந்தார் அய்யாசாமி.
"ஏன் கண்ணு... இந்த அப்பன் ஒன்னுத்துக்கும் உதவாதவன்... இவன் போய் நம்மையே நல்ல இடத்துல கட்டி கொடுத்திடுவான்னு நினைச்சு தான் ஒருத்தனை காதலிச்சியா புள்ள... எது எப்படியோ இனி இந்த அப்பன் உறவு உனக்கு நிலைக்குமோ நிலைக்காதோ... ஆனா நீ புருஷன் குட்டியோடு நல்லா இருக்கனும் கண்ணு" என்று அவள் தலையில் கை வைத்து வணங்கி திரும்பி நடந்தவரின் கரங்களில் வீற்றிருந்த செழியனுக்கு ஒன்றும் புரியவில்லை...
தந்தை ஏன் அழுகிறார்.... அக்கா ஏன் அழுகிறார் என்று புரியாது மலங்க மலங்க விழித்தவன் மனதில் ஊமைத்துரை மிக மோசமாக பதிந்து போனார்...
அவர்களின் சோதனை காலம் அதோடு முடியாது... அடுத்த நாளே தூக்கத்தில் உயிரை விட்டிருந்தார் அய்யாசாமி... காரணம் நெஞ்சு வலி... இதற்கு முன்னே வலி அவ்வபோது இருந்து கொண்டு இருந்தது... அவர் தான் அது நெஞ்செரிச்சலாக இருக்கும் என்று விட்டுவிட்டிருந்தார். அது இப்போது அவரின் உயரையே காவு வாங்கியிருந்தது.
தொடரும்...
*********
ஹாய் மக்களே...
இன்னும் fb ஒரு எபிசோட் வரும் போல இருக்கு... அதை நாளைக்கு போடுறேன்..
கதையை படிக்கிறவங்க கமெண்ட் பண்ணுங்க டியர்ஸ்...
நன்றி!
- gg_97