GG writers
Moderator
என்னதான் சுகமோ நெஞ்சிலே...
அத்தியாயம் - 06
"அய்யோ எஞ்சாமி எங்களை வுட்டு போயிட்டிங்களே... இனி நானும் எம் மவனும் என்ன செய்யுவோம்..." என்ற செண்பகவள்ளியின் கதறல் அவ்வீட்டையே உலுக்கி எடுக்க... அவருக்கு எந்த ஆறுதலும் சொல்ல இயலாது அனைவரும் மறுகி நின்றனர்...
"எல்லாம் என்னால தான் எப்போவ்... நான் மட்டும் யாரையும் காதலிக்காம இருந்திருந்தா இந்நேரத்துக்கு நீ நல்லா இருந்திருப்பயோ.. எல்லாம் என்னால தான்... என்னால தான்..." என்று தந்தையின் பாதம் அருகே அமர்ந்தபடி தலையில் அடித்து கொண்டு அழுது கரைந்தார் ரேவதி...
"இந்தா புள்ள இப்போ எதுக்கு உன்னால தான்னு அழுது கரையுற... போற உசுர யாரு தடுத்தாலும் நிக்காதுடி" என்று தங்கையை ஆற்றிய குணசெல்விக்கும் தந்தையின் இறப்பு பெரியது தான்... ஆனால் அதற்காக தங்கை வாழ்க்கை வீணாக கூடாதே என்று நினைத்தது அவ்வுள்ளம்...
நேற்றிரவு தனக்கு கதை கூறி தூங்க வைத்த தந்தை இன்று இல்லை என்பதை நாலு வயது பாலகனால் ஏற்று கொள்ள முடியாது போக... அழுது அழுது குணசெல்வியின் மடியிலே உறங்கியிருந்தான் செழியன்...
வீட்டின் மூத்த மருமகன் என்ற முறையில் அனைத்தையும் பாண்டித்துரை எடுத்து செய்ய... அப்போதும் ஊமைத்துரை அமைதியாகவே நின்றிருந்தார்... மனைவியின் சொல் மட்டும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது...
ஈமச்சடங்கு அனைத்தும் முடிந்து சில நாட்கள் உருண்டோடிட... அடுத்த பூதமாக கடன்காரர்கள் வீட்டைச் சூழ்ந்திருந்தனர்... அன்றாட வாழ்விற்கு பிரச்சினை இல்லை என்றாலும் மகள்களின் திருமணத்திற்கு பல இடங்களில் கடன் வாங்கி இருந்தார் அய்யாசாமி...
அதிலும் இரண்டாம் மகளுக்கும் உடனே திருமணம் செய்யும் நிலை ஏற்பட்டதால் அதிக வட்டிக்கு கடன் வாங்கி இருந்தார்... அவை அனைத்தும் அவர்களின் கழுத்தை நெறித்தது...
விவரம் அறியா செண்பகவள்ளிக்கு என்ன செய்வதென்று தெரியாது... இறுதியில் பாண்டித்துரையிடம் தான் போய் நின்றார்...
"மருமவனே கடன்காரங்க வூட்டை நிறைக்கரங்க என்ன செய்றதுன்னு தெரியல சாமி... நீங்கதான் எதாவது வழிச் சொல்லனும்... இல்லைன்னா நானும் எம்மவனும் அவரு போய் சேர்ந்த இடத்துக்கு தான் போவனும்" என்று செழியனை கையில் பிடித்தபடி மன்றாடியவரை கண்டு இரு மகள்களின் மனமும் புழுவாய் துடித்தது... மாமியாரை மீறி தாயை ஆற்றுபடுத்த சென்ற மருமகள்களை அதட்டியது சின்னக்கன்னுவின் குரல்!
"இந்தாருங்கடி உன் ஆத்தா பாசத்துல எவ்ளோ வேணும்னாலும் உருகிக்கோங்க... ஆனா என் மவன் பத்து பைசா தரமாட்டான்டி... ஒன்னுமில்லாத வூட்டுல பொண்ணு எடுத்துதே தப்புன்னு நினைச்சிட்டிருந்தா நீங்கென்னனா குடும்பமா டேரா போடலாம்னு நினைக்குறீங்களா... மரியாதையா இந்த பக்கம் வந்திடுங்க... இல்லைன்னா உங்க ஆத்தாக்கூடவே பத்தி விட்டுறுவன்" என்று குரல் உசத்திட...
"ஏன் அயித்தை உங்களுக்கே இது நியாயமா படுதுங்களா... இருக்கிற நிலத்தை வித்து பாதி கடனை அடைச்சுபுட்டாக... இப்போ மீதி இருக்கிறதுக்கு தான் உறுதி கொடுக்க சொல்றாங்க... அதைக் கூட அவுகள ஏன் செய்யவுடமா செய்றீங்க" என்று சீரிய குரல் ரேவதியுடையது...
"ஏன்டா சின்னவனே கண்ணாலம் ஆகி கொஞ்ச நாளு கூட ஆகல... இதுல உன் பொஞ்சாதி என்னைய குரல் உசத்தி பேசுற... நீயென்ன அமைதியா இருக்க... அவ என்னைய கொன்னே போட்டாலும் இப்படி தான் சிலையா இருப்பியோ... ஐயோ ஆத்தா இரண்டு ஆம்பிளை புள்ளைகளை பெத்து என்னத்த கண்டோம்... ரெண்டும் என்னை எவளோ வாயில மெல்லவுடுதுங்களே" என்று அரற்றியபடி. அழுதிட... சப்பென்று ரேவதியின் கன்னத்தில் தன் கைத்தடத்தை பதித்திருந்தார் ஊமைத்துரை...
அதிர்ந்து விழித்த காதல் மனைவியின் முகம் மனதில் காயத்தை ஏற்படுத்திய போதும் அவரின் குரல் மனைவியை கோவமாக அதட்டியது...
"ஏய் இந்தாரு இப்போ நீ உள்ளார வரதுன்னா வா... இல்ல உன் ஆத்தா கூடவே போயிடு" என்று விறுவிறுவென்று உள்சென்றிட... அழுகையோடு தன் கணவன் செல்லும் வழியை வெறித்திருந்தார் ரேவதி...
"உள்ள போ ரேவதி..." என்று அதட்டிய செண்பகவள்ளிக்கு தன் மகள் வாழ்வு நிலைக்க வேண்டுமே என்ற கவலை பெரிதாய் இருந்தது...
"ஆனா அம்மா..."
"ப்ச் ரேவதி நீ உள்ள போ... சின்னவக ரொம்ப கோவமா இருக்காருன்னு நினைக்குறேன்... கொஞ்சம் எகிறாமா பதுவுசா பேசு... அம்மையை நான் அப்படியே வுட்டுட மாட்டேன்... அவருக்கிட்ட நான் பொறுமையா எடுத்து சொல்றேன்" என்று தங்கையை அனுப்பிய குணசெல்வி... உதட்டு பிதுக்கி அழுகும் செழியனை தன் தோளுக்கு மாற்றியவள் அவன் அழுகையை ஆற்றுபடுத்திவிட்டு
"இங்க பாரு செழியா... நீ அழக்கூடாது கண்ணு... நீ தான அம்மையை பார்த்துக்கனும் நீயே அழுவலாமா ராசா... கண்ணை தொடை... நல்லா பெரிய படிப்பா படிச்சு அம்மையை நல்லா பார்த்துக்கனும் இல்ல" என்றவர்...
"அம்மா நீ கவலைப்படாத... என் மாமியாரு இல்லாத போது அவருக்கிட்ட நான் பக்குவமா பேசுறேன்" என்று தாயையும் சமதானபடுத்தி அனுப்பிய குணலட்சுமி சொல்லியபடி தன் கணவனிடம் பேசவும் செய்தாள்...
அதன் விளைவு அவர்களின் வீட்டுபத்திரம் பாண்டித்துரை கைக்கு இடம் மாறிட... அதை வைத்து மற்ற கடன்களுக்கு பணத்தை அளித்திருந்தார் அவர்... செழியன் வளர்ந்து படித்து முடித்து வேலைக்கு சென்ற வீட்டு பத்திரத்தை மீட்டுக் கொள்ளட்டும் என்பது கணக்கு...
நாட்கள் அதன் போக்கில் உருண்டோடி கொண்டிருக்க... அக்கா தங்கை இருவரும் ஒருவர் பின் ஒருவராக கருத்தறித்து பெண் மகவுகளை ஈன்றிருந்தனர்...
அதன்பின் இரு குடும்பத்தாரும் போவதும் வருவதுமாக இருந்தாலும் செழியன் வீட்டினர் அவ்வளவு சலுகையை மகள் வீடுகளில் எதிர்பார்பதில்லை...
தன் இரு அக்கா மகள் மீது கொள்ளை பாசம் வைத்திருந்த ஐந்து வயது செழியனுக்கு... அவர் சின்ன மாமனை கண்டால் பயம்...
யாழ்மொழியையும்... சந்தனாவையும் காண அக்கா வீடு சென்றாலே அவரின் சிடுசிடுப்பான பேச்சும்... முறைப்பும் பயத்தை கிளப்ப அங்கு அவன் செல்லவே மாட்டான்... ஆனால் சந்தனாவை காண எந்த தடையும் அவனுக்கு இல்லை... ஏனெனில் குணலட்சுமி தினமும் மகளை வந்து தாயிடம் காட்டிவிட்டு செல்வார்... ஆனால் ரேவதி மாதத்திற்கு ஒரு முறை வந்தாலே அரிது!
செண்பகவள்ளி எவ்வளவு வற்புறுத்தியும் அவள் கேட்பதாய் இல்லை... முதலில் அவருமே தினமும் வந்து கொண்டு தான் இருந்தார்.... ஆனால் அங்கு சென்று வந்தாலே கணவனின் குத்தல் பேச்சுகளும்... நக்கல் பேச்சுகளும் அவரை காயப்படுத்திட...தாய் வீட்டிற்கு செல்லவலே துணிவு இல்லை....
பெரியவர்கள் தான் தங்களுக்குள் முறுக்கி கொள்கிறார்கள் என்றால் சிறியவர்களும் அப்படியே... எப்போதும் சந்தனாவோடே சுற்றும் செழியன் தன்னோடு விளையாட வரமாட்டானா என்று ஏங்காத நாளில்லை... ஆனால் அதற்கு அவள் தந்தையும் விட்டதில்லை... சந்தனாவும் விட்டதில்லை...
சந்தனாவுக்கோ யாழ்மொழி செழியனை விளையட அழைத்தாலே எங்கே தன் பொம்மையை மற்றவர்கள் பறித்து கொள்வார்களோ என்று நினைப்பு... அதில் அழுது ஆர்ப்பாட்டம் செய்து இருவரையும் ஒன்றாக விடமாட்டாள்...
செழியனுக்கும் எப்போதாவது பார்க்கும் யாழ்மொழியை விட தன்னையே சுற்றும் சந்தனாவிடம் கொஞ்சம் அதிகம் பாசம் தான்... நாளடைவில் யாழ்மொழியும் அவனோடு சேர விரும்பவில்லை...
"எய்யா சாமி நாம அவுகளுக்கு கடன்பட்டவகய்யா... அவுகளுக்கு நன்றியோடு இருக்கனும்" என்று செழியன் வளர வளர அவன் மனதில் உறுப்போட்டு கொண்டே இருந்தார் செண்பகவள்ளி..
அதன் விளைவு தன் அக்காமார் வீட்டில் எத்தனை எத்தனை உரிமையோடு நுழைந்திருந்தனோ அத்தனையும் நாளடைவில் குறைந்து கொண்டே வந்தது...
கல்லூரியில் பி.காம் முடித்துவிட்டு வெளியில் வேலை பார்த்து கொண்டிருந்தவனை உடனடியாக வர செய்தது பாண்டித்துரையின் சுகவீனம்...
அதன் பின் வெளியில் வேலைக்கு முடக்கு போட்டுவிட்டு மாமனுக்கு உதவியாய் அவரின் தோட்டங்களை மேற்பார்வையிட்டு வருகிறான்...
அதுமட்டுமல்லாது இங்கிருந்து பல ஊர்களுக்கு ஏற்றுமதி செய்யபடும் பொருள்களின் பைசா வசூல் செய்வதும்... கணக்கு பார்ப்பதுமென இவன் வேலைகளில் பிஸி தான்... அதற்கும் சம்பளமென பாண்டித்துரை இவனுக்கு கொடுக்க தவறவில்லை...
உறவுகளிடம் அத்தனை உரிமையாய் பேசினாலும் வேறெந்த எந்த சலுகையும் எதிர்பார்க்க மாட்டான்...
ரேவதிக்கு தான் தன் தம்பியை காண காண நெஞ்சமெல்லாம் வலிக்கும்... எதற்காக இந்த கூலி பொலப்பு... எல்லாம் என் ஒருத்தியால் மட்டுமே...
நான் மட்டும் காதலில் விழாமல் இருந்திருந்தால்... தந்தை அவசர கடன் வாங்கி இருக்க மாட்டார்... நெஞ்சு வலியில் இறக்காமல் இருந்திருப்பார் என்று அவர் மனம் கதறியது... தான் நினைப்பது தவறு என்று தெரிந்தும் அந்த நினைப்பில் இருந்து அவரால் வெளிவர இயலவில்லை...
•••••••••••••
மெத்தையில் அமர்ந்தபடி தன் வாழ்க்கை பக்கத்தை புரட்டி கொண்டிருந்தவருக்கு கண்களில் இருந்து கண்ணீர் கோடாய் இறங்கியது... மயக்கம் வருவது போல் தோன்ற தலையை உலுக்கி கொண்டவருக்கு என்ன முயன்றும் முடியாது போக... அப்படியே கீழ் விழ இருந்தவரை தாங்கியது ஊமைத்துரையின் கரங்கள்...
"என்னம்மா செய்யுது... ரேவதி... ரேவதி... நான் பேசுறது கேட்குதாம்மா" என்றபடி அவரின் கன்னத்தை தட்டியவர் பெருங்குரலேடுத்து மகளை அழைத்தார்...
"யாழி... யாழி... கொஞ்சம் சீக்கிரம் இங்க வா" என்ற பதட்ட குரலில் திடுக்கிட்டவள் பின் தன் பெற்றோர் அறைக்கு வேகமாக விரைந்தாள்...
"அப்பா... என்னாச்சு பா... அய்யோ அம்மா... என்னம்மா செய்யுது..." என்று படபடத்திட...
"கப்போர்ட்ல மாத்திரை இருக்கு பாரு அதை எடு" என்ற தந்தை குரலுக்கு வேகமாக அதனை எடுத்தவள் மேஜை மீதிருந்த தண்ணீரையும் தந்தையிடம் கொடுத்திட... தன் மனைவிக்கு அதனை புகட்டினார் ஊமைத்துரை...
சில நிமிடங்கள் மயக்கத்தில் இருந்து மெல்ல தெளிந்தார்... அதுவரை படபடப்போடு இருந்த ஊமைத்துரையின் முகம் கடுகடுவென்று மாறியது...
"உனக்கெல்லாம் ஒரு தடவை சொன்னா புரியாதா... என்ன உங்க அப்பனை நினைச்சுட்டே போய் சேரலாம்னு இருந்தியா..." என்றதும் இன்னும் அழுகை பெருகியது ரேவதிக்கு...
"ப்ச் வாயை மூடுடி... இப்போ எதுக்கு நீ அழுற... உன்னை கட்டின பாவத்துக்கு நான் தான் அழனும்... இந்த வயசுலே பிபியை இழுத்து வைச்சுட்டு இருக்க... சரி அதுக்கு மருந்து வாங்கி கொடுத்தா அதை ஒழுங்கா போடுறீயா... தெண்டத்துக்கு நான் பணத்தை கரைக்கனுமா... எல்லாம் என் தலையெழுத்து... உன்னால இப்போ மீட்டிங் வேற லேட்டாகிடுச்சு" என்று சிடுசிடுத்துவிட்டு வேக நடையில் வெளியேறினார் ஊமைத்துரை...
"அம்மா... அப்பா ஏன் மா இப்படி உனக்கிட்ட சிடுசிடுன்னு இருக்காரு..." என்ற யாழியின் குரலில் அத்தனை ஆதங்கம்...
"ப்ச்... அதை விடுடி... எல்லாம் எனக்கு பழகிடுச்சு... ஆமா அந்த பையனை பார்த்து பேசுனையே உனக்கு பிடிச்சு இருக்கா..."
"பிடிச்சு இருக்கான்னு தெரியல... பட் குறை சொல்ல எதுவும் இல்ல... எப்பவும் அப்பா சாய்ஸ் தப்பா போகாது" என்றவளின் பேச்சில் பெருமூச்சினை விட்டார் ரேவதி...
"நல்லவேளை இந்த லவ்வு... கிவ்வுன்னு எதையும் பண்ணி தொலைக்கல... அதுவரைக்கும் நீ தப்பிச்ச" என்றதும் படபடப்பாய் தன் தாயை காண...
"ஏய் என்னடி எதுக்கு இப்புடி முழிக்கிற... யாரையாச்சும் லவ் பண்றீயா என்ன" என்று உலுக்கியவருக்கு இல்லை என்பதாக தலையாட்டியவள் வேகமாக தோட்டத்திற்கு சென்று விட...
அவள் செவியிலோ... "நான் உங்களை காதலிக்குறேன்னு நினைக்குறேன்... உங்களுக்கு என்னை புடிச்சு இருக்கா" என்ற வார்த்தைகளே ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டிருந்தது...
தொடரும்...
********
ஹாய் மக்களே...
கதை எப்படி போகுது... ஓரளவுக்கு நல்லா இருக்கா... இப்படி தான் எழுத வருது... கொஞ்சம் கமெண்ட் பண்ணுங்கின்னா நல்லா இருக்கும்...
நன்றி!
-gg_97