GG writers
Moderator
என்னதான் சுகமோ நெஞ்சிலே...
அத்தியாயம் - 07
அன்று!அத்தியாயம் - 07
சில்லென்று காற்று முகத்தில் வீச... அதனை சுகமாய் ரசித்தபடி தன் தோழி மீனாவோடு திருவிழா கடைகளை சுற்றி பார்த்து கொண்டிருந்தாள் யாழ்மொழி...
"ஹேய் மீனா அங்க பாருடி... அந்த பையன் பார்க்கவே செமயா இருக்கான் இல்ல" என்ற யாழ்மொழியின் குரலில் அத்தனை துள்ளல்.. பின்னே இருக்காதா என்ன... குழந்தை பருவத்தில் இருந்து குமரி பருவத்திற்கு காலடி எடுத்து வைக்கும் பூரிப்பில் பேச்சு உற்சாகமாக வந்தது...
"அடியேய் என்னடி... இப்படியெல்லாம் பேச மாட்டியே நீ... என்ன விஷயம்" என்ற மீனாவும் அவள் கூறிய திசையில் இருந்தவனை கண்டாள்.
"பின்ன இன்னும் கொஞ்ச நாளுல காலேஜ் சேர போறோம்... இதை கூட பேசலனா எப்படி" என்று மிதப்பாக கேட்டவள்...
"சரி சரி கேட்டதுக்கு பதில் சொல்லு... அந்த பையன் செமயா இருக்கான் இல்ல..."
"த்துது ஏன்டி யாழி உன் டேஸ்ட் இப்படி போகுது... பார்க்கவே தயிர் சாதம் மாதிரி இருக்கான்... அங்க பாரு நம்ம ஆளை" என்ற திசையில் நோக்கியவளின் கண்கள் தெறித்து விழுந்தது...
"அடியேய் இத்தனை நாளு அண்ணன் நொண்ணன்னு சொல்லுவ இப்போ என்ன நம்ம ஆளு... ஆனாலும் உனக்கு கை காட்ட வேற யாருமே கிடைக்கலயாடி... போயும் போயும் அந்த நெட்டைகொக்கு தான் கிடைச்சுதா" என்றவளின் குரலில் ஏகப்பட்ட சலிப்பு...
"அடிப்போடி உனக்கு பிடிக்கலன்னு அப்படிங்குறதால அவரு அழகு இல்லன்னு ஆகிடுமா... அழகை ரசிச்சு பார்க்கனும்டி" என்றிட... அப்படியென்ன தான் அவன் அழகாய் இருக்கிறான் என்பதாக அவளின் பார்வை அவனை வட்டமிட்டது...
அதிக நிறம் இல்லையென்றாலும் மாநிறத்தை கொண்டிருந்தான்... அலை அலையான கேசம்... அதனை அவன் கோதும் போது முன் நெற்றியின் விழும் முடிகள்... மீண்டும் அதனை கலைத்துவிடும் அவன் விரல்கள்... அதோடு சிரிக்கும் உதடுகளோடு சேர்ந்து சிரிக்கும் கண்கள் என படு அமர்களமாய் தெரிந்தான் செழியன்...
"ம்ம் நீ சொல்ற மாதிரி பேரழகன் இல்லைனாலும்... கொஞ்சும் அழகன் தான்டி..." என்றவளின் பார்வை இன்னும் அவன் மீதே நிலைத்திருக்க... சட்டென்று இவளின் புறம் புருவத்தை உயர்த்தி என்னவென்று வினவியவனின் புருவ நெளிப்பில் இவள் அதிர்ந்து தான் போனாள்...
'அடியாத்தி' என்று அதிர்ந்தவள் தன் தோழியின் கரம் பிடித்து வேறு புறம் சென்றிட... அவளின் செய்கையில் அவனின் சிரிப்பு மேலும் விரிந்தது...
"ஏலேய்... என்ன நீ பாட்டுக்கு தனியா சிரிச்சிட்டு இருக்க" என்றபடி அவனின் தோளில் ஒரு அடியை போட்டான் வேலன்...
"ஒன்னுமில்ல டா... சும்மா தான்" என்றவன் பார்வை அவள் சென்ற திசை நோக்கியே இருந்தது...
"அடேய் பொய் சொல்லாதடா நானும் எல்லாம் பார்த்திட்டு தானே இருந்தேன்... அந்த புள்ள உன்னையே வைச்ச கண்ணு எடுக்காம பார்க்கிறதும்... அதுக்கு நீயும் புருவத்தை தூக்கி கேட்குறதும்... அட... அட..."
"ப்ச் டேய் அதுதான் ஒன்னுமில்லன்னு சொல்றேன் இல்ல... என் மாமனுக்கு என்னைய புடிக்காது... அதுனால ந்த புள்ளைக்கும் என்னயை புடிக்காது... சும்மா அக்கா மவன்னு வம்பு இழுக்குறன்... வேற எதுவுமில்ல" என்றபடி நண்பணோடு பேசிக் கொண்டு இருக்க... இதை எதுவும் அறியாது இவர்களின் பார்வை பறிமாற்றத்தை பார்த்து கொண்டிருந்த சந்தனாவிற்கு தான் மனம் புதைந்தது...
மீனாவோடு திருவிழாவை சுற்றி பார்த்து கொண்டிருந்த யாழ்மொழியை வழிமறித்தாள் சந்தனா.
"ஏய் உனக்கு தான் என் மாமனை புடிக்காது இல்ல... அப்புறம் எதுக்குடி அவரை அப்படி பார்த்திட்டு இருந்த என்ன என் மாமனை காதலிக்குறியா" என்று கேட்டவளை 'அட லூசே' என்பதாய் பார்த்தவள் விளக்கம் கொடுக்கும் முன்பே பொறிந்தாள் சந்தனா.
"இங்க பாரு அந்த மாதிரி உன் மனசுல எதாச்சும் கனவு கோட்டை கட்டியிருந்த அதை இடிச்சு தரமட்டம் ஆகிடு... இல்லைன்னா அவ்ளோ தான்" என்று மிரட்டியவளை திமிராய் பார்த்தவளின் பேச்சும் திமிராய் வந்தது.
"இல்லைன்னா என்னடி செய்வ... நான் அப்படி தான் அவரை பார்ப்பேன்... ஏன் உனக்கு மட்டும் தான் உரிமை இருக்கா நானும் அவங்க அக்கா பொண்ணு தான்... எனக்கும் உரிமை இருக்கு... வேணும்னா என் உரிமை என்னன்னு காட்டடும்மா" என்றவள் சந்தனா என்னவென்று யோசிக்கும் முன்னே செழியனின் முன்பு நின்றிருந்தாள்...
என்னதான் வீரப்பாக வந்து விட்டாலும் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாது முளித்து நிற்க... இதில் சந்தனாவின் பார்வை வேறு இவள் புறம் இருக்க... 'ஐயோ இவ வேற... இப்போ இந்த நெட்டைக்கொக்கு வேற என்னன்னு கேட்பானே என்ன சொல்றது' என்றபடி மனதை பொய்யாக்காது...
"என்ன வேணும் யாழ்மொழி..." என்ற வார்த்தை வந்து விழுந்தது செழியனிடமிருந்து...
"அதுவந்து... அதுவந்து... நான்... நான்..." என்று திக்கியவள் சந்தனா இங்கு வருவதை கண்டதும்... வேகமாக " நான் உங்களை காதலிக்குறேன்னு நினைக்கிறேன்... உங்களுக்கு என்னை பிடிச்சு இருக்கா" என்றவள் அவன் பதிலை எதிர்பாராது அங்கிருந்து வேகமாக ஓடிவிட... அதில் அவள் ஜிமிக்கியும் அறுந்து கீழ் விழுந்திருந்தது...
அவளின் வார்த்தைகளை இவர்களை நெருங்கியிருந்த சந்தனாவின் செவியிலும் அச்சு பிசகாமல் வந்து விழுந்து பெரும் புயலை கிளப்பியிருந்தது...
அவள் நேசம் உரைத்ததில் அதிர்ந்து நின்ற செழியன் அவள் எங்கேவென்று தேட வேக வேகமாக அவன் பார்வையில் இருந்து மறைந்திட முயன்றவளை 'மொழி' என்று சத்தமாக அழைத்தவன்... அவள் பதறயிபடி வேகமாக நடந்திட... அதில் தன்னியல்பாக சிரித்திட... அவள் கூறிய வார்த்தைகள் மட்டும் அவன் செவியில் இருந்து விடாது ஒலிக்க... கீழ் விழுந்த ஜிமிக்கியை தன் சட்டை பாக்கெட்டில் எடுத்த வைத்தவன் நெஞ்சம் படபடப்போடு சுகமாய் துடித்தது...
••••••••••••••
இன்று!
படபடவென்று வீசிய தென்றல் காற்று கூட குளுமையை தராது இருக்க... காதோரம் ஆடும் ஜிமிக்கியை சரிசெய்தவளுக்கு தான் அவ்வாறு பேசியது தவறோ என்று ஆயிரம் முறை யோசித்துவிட்டாள்... விளையாட்டு வினையாகிவிடுமோ என்று நெஞ்சம் படபடத்து கொண்டு தான் இருந்தது...
அதுவும் அன்று வந்த செழியனின் பார்வையும் பேச்சும் அவளுக்கு பயத்தை கொடுத்திருந்தது... அவனை பிடிக்காதா என்று கேட்டால்... பிடிக்கும்... ஆனால் அது தன் அன்னையின் தம்பியாக மட்டுமே... வேறெந்த எண்ணமும் அவளுக்கு இல்லை...
'அச்சோ தப்பு பண்ணிட்ட யாழி... அடுத்த முறை செழியன் மாமாவை பார்த்தா கண்டிப்பா அன்னைக்கு பேசுனது வினையாட்டுக்குன்னு சொல்லிடனும்' என்று நினைத்தவளுக்கு அப்போது தான் மனம் லேசாகி இருந்தது...
ஆனால் அவள் யோசிக்க தவறிய ஒன்று... காப்பி ஷாப்பில் சந்தோஷிடம் உன்னை எனக்கு பிடிக்கும் என்றவள் எதற்கு மொழி என்று அதட்டிய சத்தத்தில் பயந்தாள் என்பதை தான்...
அன்று ஏதோ ஒரு குழந்தையை அதனுடைய தாய் மொழியென்று அதட்டி இருக்க... இவளுக்கு தன்னை தான் அழைக்கிறார்களோ என்ற உணர்வு... அவன் தானோ என்று படபடத்தவள் பின் ஆசுவாசமடைய... ஆனால் அவனின் மொழி என்ற வார்த்தை அவள் நெஞ்சில் எவ்வளவு ஊடுருவிக் இருக்கிறது என்பதை அவளே இன்னும் அறியாது போனது தான் விந்தையோ!
இவள் இவ்வாறு எண்ணியிருக்க... இவன் எண்ணத்தின் நாயகனோ அன்று அவள் தொலைத்த ஜிமிக்கியை கையில் வைத்தபடி அதனை ஆட்டிக் கொண்டு இருந்தவன் முகத்தில் புன்னகை...
அவனுக்கும் தெரியும் அவள் கூறியது விளையாட்டு தான் என்று... ஆனால் அவள் பேசும் போது படபடத்த உதடுகள்... அலைபாய்ந்த விழிகள் என மொத்தமும் அவனை சுருட்டிக் கொண்டிருக்க... துளி துளியாய் சேகரித்த நேசத்தை நெஞ்சில் சுகமாய் சுமந்து கொண்டு இருக்கிறான்...
'மொழி...என்னுடைய மொழி... இந்த செழியனுடைய மொழி... உன்னை என்கிட்ட கொண்டு வர எந்த எல்லைக்கும் போவேன்...' என்றவன் மனம் உறுதி கொண்டிருந்தது.
•••••••••••••
எப்போதும் போல் முற்றத்தில் அமர்ந்திருந்த சின்னக்கன்னு வெற்றிலையை அதக்கியபடி இருக்க... அங்கிருக்கும் ஊஞ்சலில் யோசனையோடு அமர்ந்து இருந்தார் பாண்டித்துரை...
"ஏன்ப்பா பெரியவனே என்ன ரோசனை எல்லாம் பலமா இருக்கு... ஆமா இந்த சின்னவன் எப்போ வரானாம்... எதாச்சும் தாக்கல் சொன்னானா..." என்று வெற்றிலையை அதக்கியபடி தன் மூத்த மகன் பாண்டித்துரையிடம் கேட்டார் சின்னக்கண்ணு....
"நேத்து தான் போன் போட்டான்... நாளைக்கு வரானாம்... அப்புறம் அம்மா... அவன் பொண்ணுக்கு ஏதோ நல்ல சம்பந்தம் வந்து இருக்கு போல... சீக்கிரம் முடிக்கலாம்னு யோசிக்கிறான்..."
"என்னப்பா சொல்லுற இதை பத்தி ஒத்தை வார்த்தை எங்கிட்ட சொல்லலையே... மாப்பிள்ளைகாரனும் பட்டனத்துகாரனா... ஏன் நம்ம உறவுல ஒருத்தனும் உன் தம்பிக்கு புடிக்கலையோ எவனோ ஒருத்தனை பார்த்து வைச்சிருக்கான்... என்ன அவன் பொண்டாட்டி சொன்னாலாக்கும் பட்டனத்து மாப்பிளையை பார்ப்போம்னு... அந்த சிறுக்கி சொன்னாலும் சொல்லி இருப்பா" என்று குரல் உயர்த்திட...
"அதெல்லாம் ஒன்னும் இல்ல... அவன் கூட வேலை செய்றவன் பையன்... இங்க வந்ததும் உன்கிட்ட சொல்லாம்னு இருக்கான்... நான் தான் முன்கூட்டியே சொல்லி வைச்சேன்..."
"என்ன வேலையோ போப்பா... நம்ம வூட்டுல உட்கார்ந்து ராசா கணக்கா எல்லாரையும் வேலை வாங்காம இவன் என்னன்ன எதோ நிலம் வைக்கிற பிரோக்கரு மாதிரி வேலையை பார்த்திட்டு இருக்கான்..."
"அம்மா எத்தனை முறை சொல்றது அது பிரோக்கர் வேலை இல்ல... அவன் நடத்துறது ஏஜென்சி... இவன் கிட்ட நிலத்தை வித்து கொடுக்க வருவாங்க.. இவனுக்கு கீழ வேலை செய்றவங்க அதை நல்ல விலைக்கு மத்தவங்களுக்கு வித்து கொடுப்பான்... இவன் மேற்பார்வை பார்ப்பான் அம்புட்டு தான்..."
"என்ன இருந்தாலும் நம்ம தோப்பை பார்க்கிற மாதிரி வருமா... சரி அதைவுடு... நம்ம சந்தனாவை விட அவன் பொண்ணு ரெண்டு மாசம் சின்னவ தானே... அவளுக்கே மாப்பிள்ளை முடிக்குறான்னும் போது நம்ம புள்ளைக்கும் பார்த்தா என்ன" என்றதும் அங்கே சோப்பாவில் அமர்ந்திருந்த சந்தனாவின் முகம் பிரகாசித்தது...
'ஆஹா கிளவி இப்போ தான் கரேக்டா பேசி இருக்க... நம்ம மேட்டரை இப்பவே போட்டு உடைச்சிடுவோம்மா... இல்ல வேணா முதல்ல அம்மாக்கிட்ட பேசுவோம்... இப்ப சொன்னா இந்த கெழவி ஆட்டத்தை கலைச்சு விட்டாலும் விடும்' என்று அவள் யோசித்து கொண்டிருக்க...
"ம்ம் நானும் அந்த ரோசனையில தான் இருந்தேன்... இவளுக்கு பொருத்தமா ஒருத்தனை மனசுக்கு தோனுது.... மேற்கொண்டு விசாரிச்சு பார்ப்போம்" என்று அடுப்பங்கரையில் வேலை பார்த்து கொண்டிருக்கும் தன் மனைவியை பார்த்தபடி கூறியவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இவை அனைத்தையும் காதில் வாங்கினாலும் எதிலும் தலையிடாது தன் வேலையை செய்து கொண்டிருந்தார் குணலட்சுமி.
"ஏம்மா அங்க எவ்ளோ பெரிய மேட்டர் போயிட்டு இருக்கு... நீ என்ன அடுப்பங்கரையே கதின்னு இருக்க" என்றபடி அங்கிருந்து கேரட் ஒன்றை எடுத்து கடித்தாள் சந்தனா.
"வேற என்னடி பண்றது... நான் எதாச்சும் பேசுனா மட்டும் உன் ஆச்சி காதை கொடுத்து கேட்ருமா... இல்லை உன் அப்பா தான் கேட்ருவாரா... எல்லாம் அந்த நாலு செவுத்துக்குள்ள மட்டும் தான் என் சொல்லு அம்பலமேரும்... அதுனால வீணா பேசி எதுக்கு வாங்கி கட்டனும்... எப்படியும் ராத்திரி இதை பத்தி உன் அப்பா கேட்பாரு அப்போ பேசிக்குறேன்" என்றிட...
"அச்சோ செம அறிவுமா உனக்கு... எங்க இந்த ரேவதி சித்திக்கு தான் இது தெரியாமா எப்பா பாரு இந்த ஆச்சி வாயில அரைப்பட்டுன்னு இருக்கும்" என்று சலித்தவள் தன் விடயத்தையும் பேச முயன்றாள்...
"அம்மா எனக்கு செழியன் மாமாவை புடிச்சு இருக்கு" என்றவளின் பேச்சை கேட்டவர் அதிர்ந்து அவளை பார்க்க... அவர் மேற்கொண்டு பேசும் முன்னே செழியனின் வரவால் தடைப்பட்டது...
"என்ன சந்தனா யாரை புடிச்சு இருக்குன்னு சொல்ற... யாரா இருந்தாலும் சொல்லு உனக்கு அவனையே கண்ணாலம் பேசி முடிச்சிடலாம்" என்றதும் அவள் கண்கள் பிரகாசிக்க...
"உன்னை தான் மாமா புடிச்சு இருக்கு" என்றபடி அவன் கரத்தை பற்றிக் கொள்ள...
"எனக்கும் தான் என் சந்து குட்டியை புடிக்கும்... உன் கண்ணால விஷயம் பேச தான் மாமா கூப்பிட்டு இருப்பாக... நான் பார்த்துக்குறேன் வுடு" என்று சென்றுவிட... அவனின் பேச்சில் சந்தனாவும் துள்ளி கொண்டு அவள் அறைக்கு சென்றாள்...
வெவ்வேறு திசையில் செல்லும் இருவரையும் யோசனையோடு பார்த்திருந்த குணசெல்வியின் மனமோ... ' சீக்கிரம் செழியன் கிட்ட இதைப்பத்தி பேசனும்' என்று நினைக்க அவர் மகளோ கனவுலகில் மிதந்து கொண்டு இருந்தாள்...
'இனி எல்லாம் என் மாமா பார்த்துக்கும்' என்று நினைத்தவள் அறியவில்லை... அவளுக்கான மாப்பிள்ளையை தேர்வு செய்ய போகிறவனே அவன் தான் என்று!
தொடரும்....
***********
ஹாய் நட்பூக்களே
இனி mostly present-ல தான் கதை போகும்... கதையை படிக்கிறவங்க கமெண்ட் பண்ணுங்க டியர்ஸ்...
நன்றி
- gg_97