வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இதயத்தில் தைத்தாய் இதமான முள்ளை..(13)

GG writers

Moderator
அத்தியாயம் 13

"எதுக்கு நீங்க அந்த பொண்ணை கடத்திட்டு போனீங்க தம்பி" என்று பஞ்சாயத்தில் ஊர் பெரியவர் ஒருவர் கேட்டிட அவனோ இந்துமதியை பார்த்து விட்டு , "எனக்கு இந்துமதியை ரொம்ப பிடித்து இருந்தது. என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி அவள் கிட்ட பலமுறை கேட்டேன் முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டாள். அதனால் தான் அவளை கடத்திட்டு போனேன். அவள் ஒரு நாள் முழுக்க என் கூடவே இருந்தால் என்றால் கண்டிப்பாக என் அப்பாவே அவளை எனக்கு கல்யாணம் பண்ணி வைத்து விடுவார் என்று நம்பி தான் அவளை கடத்திட்டு போனேன். இப்போ உங்க எல்லோருக்கும் முன்னாடி அவளை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று கூறிவிட்டு இந்துவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன் மனைவியாக ஆக்கிக் கொண்டான் வெற்றிமாறன்.


இந்துமதியோ ஏற்கெனவே அவன் சொல்லிக் கொண்டு இருந்த பொய்யில் அதிர்ந்து போய் நிற்க அவளது கழுத்தில் அவன் தாலி கட்டிட அவளுக்கு உலகமே தலைகீழாக மாறிவிட்டது போல் இருந்தது.

திடீரென அவன் தாலி கட்டிட அங்கே இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். "என்ன காரியம் பண்ணிட்ட மாறா" என்று இராஜராஜன் கத்திட, "நான் அவளை கல்யாணம் பண்ணிக்கனும் என்ற முடிவோடு தான் அப்பா பஞ்சாயத்துக்கே வந்தேன்" என்றான் வெற்றிமாறன்.

அவனது கன்னத்தில் பளார் என்று அறைந்தார் ராமச்சந்திரன். "என்னடா நினைச்சுட்டு இருக்க நீ மட்டும் முடிவு பண்ணினால் போதுமா என் பொண்ணுக்கு என்று ஒரு மனசு இருக்குடா எவ்வளவு தைரியம் இருந்தால் என் பொண்ணு கழுத்துல கட்டாயத் தாலி கட்டுவ என்ன நீங்க என்ன பண்ணினாலும் எதிர்த்து கேட்க மாட்டோம் என்று தைரியமா" என்ற ராமச்சந்திரன் கோபமாக அவனை மேலும் அடிக்க பாய்ந்திட அப்பா என்று அவரைத் தடுத்தான் மகேந்திரவர்மன்.


"விடு மகேந்திரா என் மகளோட வாழ்க்கையை அழித்த இந்த படுபாவியை கொல்லாமல் விடவே மாட்டேன்" என்று கத்தினார் இராமச்சந்திரன்.

"அப்பா பொறுமையா இருங்க பேசிக்கலாம்" என்று அவன் எவ்வளவோ கூறிட, "என்ன பேசப் போற மகேந்திரா" என்ற ராமச்சந்திரன், "ஏன்டா பொறுக்கி ஊருக்கு முன்னாடி என் பொண்ணு கழுத்தில் கட்டாயத் தாலி கட்டுவ அதை நாங்கள் ஏத்துக்கனுமா செத்தாலும் ஏத்துக்க மாட்டேன்" என்று கூறிவிட்டு "இந்து அந்த கயிற்றை கழட்டி அவன் முகத்தில் வீசி எறி" என்றார் ராமச்சந்திரன்.

இந்துமதியோ நடந்த எதையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் மயங்கி விழுந்தாள். "இந்து" என்று பதறிய மகேந்திரவர்மன் தன் தங்கையை தாங்கிப் பிடிக்க வைதேகியோ அழுது கொண்டே மகளின் கன்னத்தில் தட்டிக் கொண்டு இருந்தார்.

"இந்து எழுந்திரும்மா" என்று அவளது கன்னத்தில் தட்டினார். மகேந்திரவர்மன் தங்கையின் முகத்தில் தண்ணீர் தெளிக்க அவள் மெல்ல கண் விழித்தாள்.

இராஜராஜனோ மகனை அடி வெளுக்க ஆரம்பித்தார். "அப்பா" என்று அவரை எழில் வேந்தன் தடுக்க வந்திட அவனுக்கும் சில அடிகள் பரிசாக கிடைத்தது. கண் விழித்த இந்துமதியோ தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள். அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஊர் முன்னால் அவன் கட்டிய இந்த தாலியை ஏற்பதா, கழட்டி எறிவதா என்று குழம்பிப் போனாள்.

அவளை விட அதிர்ச்சி சம்யுக்தாவிற்கு தான். ஏற்கனவே தன் இளைய அண்ணன் இந்துமதியை கடத்தியதாலே தன் திருமணத்தில் சிக்கல் வருமோ என்று அஞ்சினாள். மூத்த அண்ணன் செய்த காரியத்தால் நிச்சயமாக தன் திருமணம் நின்று விடும் என்று நொந்து கொண்டாள். முன்னே என்றால் அவளுக்கு வலிக்காது ஆனால் அவள் மனம் முழுவதும் அவன் நிறைந்திருக்க இப்போது தன் திருமணம் நின்று விட்டால் அவளால் நிச்சயமாக அவன் இல்லாத வாழ்க்கையை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவனை பழிவாங்கும் எண்ணம் எல்லாம் இப்போது இல்லை மனம் முழுவதும் அவனது மனைவியாக வாழப் போகும் வாழ்க்கையை நினைத்து கனவு கண்டிருந்தவளால் அந்த கனவு கானல் நீராக மறையப் போகிறது என்று நினைத்தாலே உயிரே போய்விடும் போல இருந்தது.

"என்ன இராஜராஜன் உங்க மகனை அடிக்கிறது போல டிராமா பண்ணிட்டு இருக்கீங்களா? உங்க ஆசை என்ன உங்க மகளை என் மகன் கல்யாணம் பண்ணிக்க கூடாது. அதற்காக தானே இத்தனை டிராமா. உங்க பொண்ணை எங்க வீட்டுக்கு அனுப்பக் கூடாது என்பதற்காக என் பொண்ணோட வாழ்க்கையையே அழிச்சுட்டீங்களே நல்லா இருங்க . உங்கள் பொண்ணு என் வீட்டுக்கு மருமகளாக வர வேண்டாம். நடந்த நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொள்ளலாம். என் பொண்ணு வாழ்க்கையை அழித்த உங்கள் குடும்ப சம்பந்தம் எப்பவுமே எங்களுக்கு வேண்டாம்" என்று கூறினார் ராமச்சந்திரன்.

"என்னங்க என்ன பேசுறீங்க" என்ற வைதேகியை முறைத்தவர் , "இதுவரை நீ கேட்ட எதையும் நான் மறுத்ததே இல்லை வைதேகி. முதல் முறையாக மறுக்கிறேன் உன் அண்ணன் பொண்ணு நம்ம வீட்டுக்கு மருமகளாக வர வேண்டாம். நம்ம பொண்ணையும் நான் உன் அண்ணன் வீட்டுக்கு அனுப்பி வைக்க மாட்டேன்" என்ற இராமச்சந்திரன் இந்துமதியின் கழுத்தில் கிடந்த தாலியை அறுத்திட முடிவு செய்து அதை தொட "அப்பா உங்க மகனோட கல்யாணம் பற்றி நீங்க எடுத்த முடிவில் நான் தலையிட மாட்டேன் ஆனால் நடந்து முடிந்த என் கல்யாணம் பற்றிய முடிவை நான் தான் எடுக்கனும்.

சரியோ தப்போ என்னோட கல்யாணம் முடிந்து விட்டது. அதை நான் முழு மனதாக ஏற்றுக் கொள்கிறேன் என் தாலியை தயவு செய்து பறித்து விடாதீங்க" என்று கூறினாள் இந்துமதி.

"இந்து என்ன பேசுற ஊருக்கு முன்னாடி உன் கழுத்தில் மஞ்சள் கயிற்றை கட்டி விட்டால் அது கல்யாணம் ஆகி விடுமா இந்து" என்று கேட்ட தந்தையிடம், "அப்பா தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் என்னால இந்த தாலியை கழற்றி கொடுத்துட்டு வர முடியாது. இதை கழட்டனும் அப்படின்னா ஒன்று இதை கட்டினவன் சாகனும் ,இல்லை நான் சாகனும்" என்று கூறிவிட்டு அவள் வெற்றி மாறனின் அருகில் சென்று நின்று விட்டாள்.

"இந்து" என்று மகேந்திரவர்மன் ஏதோ சொல்ல வர , "அண்ணா இதுவரை நான் கேட்ட எதையும் நீ செய்யாமல் இருந்ததே இல்லை இப்போதும் அப்படித்தான் என்னை என் கணவரோட போக அனுமதி கொடு" என்றாள் இந்துமதி.

"இந்து" என்று அவன் ஏதோ சொல்ல வர, "விடு மகேந்திரா உன் தங்கச்சி சின்ன பொண்ணு இல்லை பெரிய மனுஷி ஆகிட்டாள். நம்ம சொல்லுற நல்லது எதுவும் அவளுக்கு புரியாது. இப்போ சொல்கிறேன் நல்லா கேளு இந்துமதி அவன் கட்டிய தாலியை கழட்டி எறிந்து விட்டு என் கூட நீ வரவில்லை என்றால் இனிமேல் உன் வாழ்க்கையில் அப்பா என்று எப்பவுமே என் முன்னால் நீ வரக் கூடாது" என்றார்.

"அப்பா ப்ளீஸ் என்னை மன்னித்து விடுங்க என்னால சத்தியமா இந்த தாலியை கழற்றி எறிய முடியாது" என்று அவளும் கூறி விட்டாள்.


"அந்த பொண்ணே இந்த கல்யாணத்தை ஏற்றுக் கொண்டு விட்டது இனி நாம என்ன செய்ய முடியும்" என்று பஞ்சாயத்தில் கூறிட நடைபிணமாக இராமச்சந்திரன் மகன், மனைவியுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

"அப்பா" என்று அவன் ஏதோ சொல்ல வர, "என்னப்பா நீயும் உன் தங்கச்சி மாதிரி என்னை அசிங்கப் படுத்த போறீயா அந்த பொண்ணு சம்யுக்தாவை கல்யாணம் பண்ணி அழைத்துக் கொண்டு வந்து" என்ற ராமச்சந்திரனிடம் , "அப்பா நீங்க இந்துவை புரிந்து கொள்ள முயற்சி பண்ணுங்க. அவள் ரொம்ப சென்சிடிவ்" என்ற மகேந்திரவர்மன், "நீங்கள் என்னை நம்பலாம். என் கல்யாணம் சம்யுக்தா கூட தான் நடக்கும் ஆனால் அது உங்க சம்மதத்தோட தான் நடக்கும். உங்க சம்மதம் கிடைக்கும் வரை கட்டாயம் நான் காத்துட்டு இருப்பேன் ஆனால் இந்துவை நீங்கள் புரிந்து கொள்ள முயற்சி பண்ணுங்க" என்று சொல்லி விட்டு அவன் சென்று விட்டான்.

வைதேகிக்கு அழுகையாக வந்தது. தன் மகளின் திருமணம் பற்றி எத்தனையோ கனவுகளை சுமந்து கொண்டு இருந்தார் வைதேகி. ஆனால் அவளது கல்யாணம் இப்படி ஒரு சூழ்நிலையில் நடக்கும் என்று அவர் கனவிலும் நினைக்க வில்லை. நொந்து விட்டார்.


"என்ன மாறா இதெல்லாம் இப்படி ஊரைக் கூட்டி உன் அப்பாவை அசிங்கப் படுத்தினது மட்டும் இல்லாமல் உன் தங்கச்சி கல்யாணத்தையும் கெடுத்து விட்டியேடா" என்று மகனை அடிக்க ஆரம்பித்தார் வானதி.

இந்துமதி கற்சிலை போல நின்றிருந்தாள். "வானதி அவங்களை உள்ளே அழைத்து கொண்டு போ" என்று இராஜராஜன் கூறிட, "என்னங்க பேசுறீங்க" என்று வானதி ஏதோ சொல்ல வர, "நல்லதோ , கெட்டதோ எல்லாமே நடந்து முடிந்து விட்டது அவங்களை உள்ளே அழைத்து கொண்டு போ" என்று கூறிவிட்டு அவர் வீட்டிற்குள் சென்று விட வானதி கோபமாக மகனை முறைத்து விட்டு சென்றிட வெற்றிமாறன் மனைவி அவளின் கையை பிடித்து வீட்டிற்குள் அழைத்து வந்தான்.


"என்னடீ பண்ணீட்டு இருக்க" என்றவனிடம் , "பிறந்த நாளை இறந்த நாளாக மாற்ற போகிறேன்" என்று அரளிக்காயை அரைத்துக் கொண்டு இருந்தாள் சம்யுக்தா. "பைத்தியமாடீ நீ" என்ற மகேந்திரவர்மனிடம், "ஆமாம் டா பைத்தியம் தான். எதுக்கு டா என் வாழ்க்கையில் வந்த சும்மா சும்மா முத்தம் கொடுத்து கட்டிப் பிடித்து கல்யாணம் பண்ணிக்க போறேன்னு ஆசையை வளர்த்து விட்டுட்டு இன்னைக்கு உன் அப்பா பஞ்சாயத்தில் நிச்சயதார்த்தம் முறிஞ்சு போச்சுன்னு சொன்ன பொழுது வாயை மூடிக்கொண்டு நிற்கிற அப்போ என்னை காதலிச்சது எல்லாம் பொய்யா" என்றாள் சம்யுக்தா.

"ஏய் சண்டி ராணி என்னைக்குமே நீ மட்டும் தான் என் பொண்டாட்டி, மகாராணி எல்லாமே சும்மா பைத்தியம் மாதிரி பேசிட்டு இருக்காதே. நினைத்தேன் பஞ்சாயத்தில் நீ கண்ணை கசக்கி விட்டு ஓடும் போதே இப்படி எதுனாலும் கிறுக்குத்தனம் பண்ணுவன்னு" என்றவன், "ஏற்கனவே இந்துவுக்கு நடந்த விஷயத்தை நினைத்து நொந்து போய் இருக்கிற என் அப்பாவை ஊருக்கு முன்னாடி நானும் அசிங்கப் படுத்தனும் என்று நினைக்கிறியா அவரு கோபத்தில் இருக்கிறார் அதனால் தான் நான் அமைதியாக இருந்தேன்.

நீ என்னை கொஞ்சம் கூட நம்பவே மாட்டியா டீ இவ்வளவு பிரச்சனைக்கும் மூலக் காரணமே நீ தான். இப்போ சாகப் போறேன்னு இன்னும் கிறுக்குத்தனம் பண்ணீட்டு இருக்க" என்று பற்களைக் கடித்தான் மகேந்திரவர்மன்.

.... தொடரும்...























 
மகி சொன்ன மாதிரி எல்லா பிரச்சனைக்கும் மூல காரணமே இந்த சண்டிராணி தான், அதையெல்லாம் மறந்துவிட்டு இப்ப இவ சாகறேன்னு சொல்லிட்டு இருக்கா
 
Top