GG writers
Moderator
காதல் – 1
கதிரவனின் வெம்மையை விட அந்த மகளிர் நீதிமன்ற வாயிலில் நின்றிருந்த சாத்விகாவின் உடலும் உணர்வும் தகித்துக்கொண்டிருந்தது. இன்னும் அரைமணிநேரம் காத்திருக்க வேண்டும் என்று அவள் தந்தை கூறியதை தலையசைத்து அவள் காதில் வாங்கியதாக உணர்த்தினாள்.
ஒவ்வொருமுறை இங்கு வரும்போதும் அவளையறியாமல் மறக்க நினைப்பது எல்லாம் வரிசையாக அவள் நினைவிற்கு வந்து அவளை பலவீனமாக்கிறது. மூன்று மாதத்திற்கு முன் நடந்திருந்தாலும் அவளிடம் அந்த தாக்கம் இன்னும் குறையவில்லை.
ஆண்களை கண்டால் அனிச்சையாக படபடக்கும் மனதை இப்போது வரை அவளால் கட்டுக்கொள் கொண்டு வர முடியவில்லை. காற்றில் பறந்த துப்பட்டாவை இறுக்கிப் பிடித்தவளின் மனம் மூன்று மாதத்திற்கு முன் பயணித்தது.
புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனத்தின் வாயிலில் நின்றிருந்த வண்டியை நோக்கி நடந்தாள் சாத்விகா. கல்லூரி படிப்பை முடித்ததும் வேலைக்கு சேர்ந்துவிட்டாள். கிட்டதட்ட இரண்டு வருடங்களாக அங்கே பணிப்புரிகிறாள்.
அவளது கலகல பேச்சுக்கு அங்கொரு ரசிகப்பட்டாளமே இருக்கிறது. அவளது டீம் ஆட்கள் மட்டுமல்ல அவளது தளத்தில் இருக்கும் அனைவருமே அவளது நட்புப் பட்டியலில் இணைத்து இருக்கிறார்கள். அன்று வேலையை சீக்கிரம் முடித்துவிட நேரத்திற்கே அலுவலகத்தில் இருந்து வெளியேறினாள்.
அவள் வண்டியை எடுத்த சமயம் , “ஹே சாத்வி நில்லு டி “ என்று கத்தியப்படி வந்தாள் பிரியா.
“என்ன பிரி? எதுக்கு இப்படி ஓடி வர?”
“மெதுவா வந்தா நீ கிளம்பிருவியே அதான் ஓடி வந்தேன். இன்னைக்கு என் மேரேஜ் ட்ரீட் மறந்து போய்டியா?” என்று முறைத்தாள்.
“அச்சோ சுத்தமா ஞாபகமே இல்லை டி. சாரி”
“அதான் எனக்கு தெரியுமே ஒழுங்கா ஏழு மணிக்கு வி.ஃபைவ் ஹோட்டல் வந்திரு”
“ஓகே டி வந்திறேன். டிரஸ் கோட் என்ன?”
“ப்ளாக் கலர் டி. சரி மறக்காம வந்திரு” என்று அவள் வண்டியை நோக்கி ஓடினாள் பிரியா.
வண்டியை உயிர்ப்பித்தவள் வழியில் வீட்டிற்கு சில பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றாள்.
“அம்மா பாலும் மாவும் வாங்கிட்டு வந்துட்டேன்” என்று கத்தியப்படியே பையை சமையல்கட்டில் வைத்து சுத்தம் செய்ய அவள் அறைக்கு சென்றாள்.
அவள் வருவதற்குள் அவள் அன்னை துளசி அவளுக்கு பிடித்த கடலைமாவு போண்டாவை போட அதன் வாசனை பிடித்தப்படி சமையலறைக்குள் வந்தாள் சாத்விகா.
“இன்னைக்கு என்ன ஸ்பெஷல் போண்டா செஞ்சிருக்கிங்க?” என்று கேட்டப்படி சுட்டு வைத்திருந்த போண்டாவை பிய்த்து வாயில் போட்டாள்.
“அதெல்லாம் எதுவுமில்ல சாத்வி. நேத்து அப்பா கூட கடைக்கு போகும்போது டீக்கடையில போட்டிருந்த போண்டாவை பார்த்து கேட்டியாமே. காலையில கிளம்பும் போதே சொல்லிட்டு போனாரு. உனக்கு செஞ்சுக்கொடுக்க சொல்லி” என்று தட்டில் அவளுக்கு வைத்து கொடுத்தவர், நன்றாக இஞ்சி தட்டி போட்டு அவளுக்கு தேநீர் தயாரிக்க ஆரம்பித்தார்.
பொறுமையாக அவள் ரசித்து ருசித்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போதே இருவருக்கும் டீயுடன் வந்தார் துளசி.
“அப்பா எப்ப வருவாரும்மா?”
“இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆகும் போல டா. அவர் மேனேஜர் ஒரு வாரம் லீவ்ல போயிருக்காராம். அதனால அவரோட வேலையெல்லாம் அப்பாவை செய்ய சொல்லிருக்காராம் ஜி.எம்.”
“வேலை மட்டும் மாடு மாதிரி வாங்குவாங்க சம்பளம் ப்ரொமோஷன் எல்லாம் எவனுக்காச்சு கொடுக்க வேண்டியது. இந்த அப்பாவும் அவங்களை எதிர்த்து எதையும் கேட்காம அமைதியா இருக்காரு” என்று கடிந்துக் கொண்டவளுக்கு தெரியும் இப்படி எல்லாம் தங்கள் உயர் அதிகாரிகளிடம் பேச முடியாதென்று.
அவ்வபோது இப்படி பேசி அவள் மனத்தாங்கலை போக்கிக் கொள்வாள் சாத்விகா.
“சரி விடு டா. நைட் என்ன செய்ய?” என்று சாப்பிட்ட பாத்திரத்தை எடுத்தப்படி கேட்டார்.
“அம்மா நான் இன்னைக்கு வெளியே போறேன். பிரியா ட்ரீட் தரானு சொல்லிருந்தேன்ல”
“அட ஆமா. போய்ட்டு எப்போ வருவ? அப்பா வேற லேட்டா வருவாரு?” என்றார் கவலையாக .
“அம்மா எதுக்கு இவ்வளவு யோசிக்கிறிங்க? நானே போய்ட்டு வந்திடுவேன்” என்று கண் சிமிட்டி சிரித்தவளுக்கு தெரியாது, இனி இப்படி அவள் மனதார சிரிக்க முடியாதென்று.
அவளை கண் வைக்காமல் பார்த்த துளசி, “நானே கண்ணு வைச்சிட்டேன். இந்த கன்னக்குழியில தான் உங்க அப்பா உன்னை முதல் முதல பார்க்கும் போது விழுந்தாரு. இப்போ வர முதல் நாள் உன்னை எப்படி பார்த்துக்கிட்டரோ அப்படி தான் பார்த்துக்கிறார்.” என்று சொன்னவருக்கு இந்த விசயத்தில் சற்றுப் பொறாமை வராமல் இல்லை.
அதில் மேலும் அவள் சிரிப்பு விரிந்து,”இன்னைக்கு அப்பாவை வரும் போது பெரிய பூசணிக்காய் வாங்கிட்டு வர சொல்லி எங்க ரெண்டுபேரையும் சுத்தி போடணும்.” என்று சிரிக்காமல் சொல்லியவள்,
“நான் போய் ரெடி ஆகுறேன்” என்று சிட்டாக பறந்துவிட்டாள்.
அவள் சென்ற பிறகு தான் துளசிக்கு அவள் சொன்னது புரிந்தது, “ஏய் வாண்டு உனக்கு எவ்வளவு கொழுப்பு?” என்று செல்லமாக கடித்தவர் வீட்டு வேலையை பார்க்க சென்றுவிட்டார்.
அறைக்குள் வந்தவளுக்கு எந்த உடை அணிவது என்று பெரும் குழப்பமாக இருந்தது. கருப்பு தான் உடுத்தவேண்டும் என்றாலும் அவளுக்கு சற்று யோசனையாக இருந்தது. கடைசியில் வெள்ளை கல் பதித்த கருப்பு நிற புடவையை அவள் மேல் வைக்க, அது அவ்வளவு அழகாக அவளை காட்டியது.
நொடிக்கூட யோசிக்காமல் அதை உடுத்தியவள், மிதமாக மேக்கப் செய்து கண்ணுக்கு அடர்த்தியாக மைத் தீட்டி இளஞ்சிவப்பு நிற உதட்டு சாயத்தை பட்டும்படாமல் ஒத்தி, தலையை லூசாக விட்டு கைப்பையுடன் வெளியே வந்தாள்.
அவளை பார்த்த துளசி,”அழகா இருக்க சாத்வி” என்று கையால் திருஷ்டி சுத்தினார்.
“காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சாம். நான் அவ்வளவு அழகெல்லாம் இல்லைம்மா” என்று அவரிடம் கூறி வண்டியை எடுத்துக் கொண்டு சொல்லப்பட்ட ஹோட்டலுக்கு விரைந்தாள்.
சடாரென்று ஒரு வண்டி அவள் முன் நிற்க அவள் கையைப் பிடித்த அவள் தந்தை, “பாப்பா பார்த்தும்மா” என்று அவளை தள்ளி நிறுத்தினார்.
சற்றென்று நிகழ்விற்கு வந்தவளால் எதையும் கிரகிக்கும் நிதானம் இல்லை. அவளை பார்த்திருந்த பாரிவேந்தனுக்கு எதையும் பேசி அவளை கலங்கவிட மனமில்லாததால் தள்ளி நின்று அவளை வலியுடன் பார்த்தார். ஆண்களை போல இரும்பாக நிற்க முடியவில்லை அந்த மத்திய வயது பெற்றவளால். விசும்பியவளை திரும்பிப் பார்த்த சாத்விகா, “இப்படி இருக்கேனு அழுகிறியாம்மா இல்லை இன்னும் உயிரோட இருக்கேனு அழுகிறியா?” என்றவளை விக்கித்து பார்த்தார் துளசி.
“என்ன பேசிட்டு இருக்க சாத்வி?” என்று பாரிவேந்தன் அதட்ட,
“என்னை ஏன் இப்படி பரிதாபமா பார்க்கிறிங்க? நான் நல்லா தான இருக்கேன். இன்னும் ரெண்டு ஹியரிங் தான் கேஸ் முடிஞ்சிடும். எனக்கு தேவையானது கிடைச்சிடும்” என்றாள் அழுத்தமாக,
“நீ ஏன் டா இப்படி மாறிட்ட? இது நீயே இல்லை” என்று அவள் தலையை கோதினார் பாரிவேந்தன்.
“கொஞ்ச நாளில சரி ஆகிடுவேன்ப்பா” என்று அவள் கூறும்போது அடித்த காற்றில், தலையில் அவள் போட்டிருந்த துப்பட்டா விலகியது . அவள் முகத்தை பார்த்து துளசி வாய் விட்டு அழுக ஆரம்பித்துவிட்டார்.
ஒருபக்க முகம் முழுவதும் பற்தடங்கள் வெறிநாய் கடித்துக் குதறியது போல் உதட்டில் தையல் போடப் பட்டிருந்தது. என்னத்தான் தைரியமாக இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் பெற்றவளின் கதறலில் கண்கலங்க தான் செய்தது.
மறுப்பக்கம் திரும்பி முகத்தை நன்றாக மூடியவள், “நீயும் நானும் எதுக்கும்மா அழுகனும். நம்ப என்ன தப்பு செஞ்சோம். எதுக்கு இந்த கதறல். இதுக்கு தான் உன்னை தாத்தா வீட்டுக்கு போக சொன்னேன்” என்று அவரை கடிந்துகொள்ள கூட அவளால் முடியவில்லை.
எந்த பெற்றோர்களுக்கு தான் வலிக்காது இப்படி ஒரு நிலையில் தங்களது மகளை பார்த்தால். அதற்காக காலம் முழுவதும் அழுதுக்கொண்டே இருக்க முடியுமா என்ன? பாதிக்கப்பட்டவளே அதில் இருந்து மீண்டு வர துடிக்கும் போது துணையாக நிற்க வேண்டியவர்கள் ஏன் அவளை இன்னும் பலவீனமாக மாற்றுக்கிறார்கள் .
ஆழ்ந்து மூச்சை விட்டவள், “எல்லா எவிடென்ஸ்சும் நமக்கு எதிரா இருந்தாலும். நான் உயிரோட தான் இருக்கேன்” என்றவள் நிமிர்ந்த நடையுடன் நீதிமன்றத்திற்குள் நுழைந்தாள்.
அரும்பியதும் கருகிய மலராக தான் அவளை நினைத்து கதறினார் துளசி. நடந்ததை எதுவும் மாற்ற முடியாது இனி நடக்க போவதற்கு சாத்விகாவிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மனைவியை சமாதானம் செய்து அழைத்து சென்றார் பாரிவேந்தன்.
மகளிர் நீதிமன்றமாக இருந்தாலும் நிலுவையில் உள்ள வழக்குகளையும் புதிய வழக்குகளையும் விசாரித்து தீர்ப்பு கொடுக்க வேண்டிய பொறுப்பில் இருந்தனர் நீதிபதிகள். எனவே வழக்கு எண் படி முன்பே நேரத்தை பிரித்து, அந்தந்த அறைக்கு அனுப்பவே அங்கே ஒரு நபரை நியமித்துள்ளனர்.
“வழக்கு என் 679/4 சாத்விகா ....” என்று அவர் அழைக்கவும் முன் சென்று நின்றாள் சாத்விகா. அவளோடு உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி இல்லாததால் திரும்பி பெற்றவர்களை பார்த்து தலையசைத்து உள்ளே சென்றாள்.
ஒவ்வொரு முறையும் தைரியமாக செல்லும் தங்கள் மகள் திரும்பி வரும் போது நடைபிணமாக அல்லவா வருகிறாள். இந்தமுறையாவது அவளை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று ப்ராத்தனை செய்தனர். ஆரம்பத்தில் கத்தி கதறியவர்கள் தான் இவர்களும், முதல் நாள் அவர்கள் கத்தியதை கேட்டவர்கள் கூட நாளடைவில் அவர்களை ஒதுக்க ஆரம்பித்தார்கள். நியாயத்தை யாசித்தவர்களுக்கு கிடைத்தது என்னவோ பரிதாபமும் பழியும் தான்.
அதே சமயம் அந்த நீதிமன்றமே பரபரப்பாக ஆனது. நேற்று இரவு போக்சோ சட்டத்தின் கீழ் கைதான குருஜி திவ்யநந்தனை கடும் பாதுக்காப்பிற்கு நடுவே அழைத்து வந்தனர். பத்திரிகையாளர்கள் செய்தியாளர்கள் ஆதரவாளர்கள் ஒரு புறம் நிற்க, அவரை எதிர்த்து பொதுமக்கள் குழந்தை நலத்துரையினர் குழந்தையின் உறவினர்கள் மற்றொரு புறம் அந்த குழந்தைக்கு நேர்ந்த துயரத்திற்கு நீதி வேண்டி நின்றனர்.
பலத்த பாதுகாப்பிற்கு நடுவே சென்ற குருஜி.திவ்யநந்தன் நடையை குறைத்து, “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், எனினும் தர்மமே வெல்லும்!!!” என்று தன்னை கடவுளாக நினைத்து அவன் பேச, பல்லை கடித்து அவன் முன்னே நின்றான் அந்த மாவட்டத்தின் ஏ.எஸ்.பி வெற்றிமாறன்.
எதிரே நிற்பவனின் ஆள்பலம் பணபலம் அதிகாரம் எதையும் கருத்தில் கொள்ளாமல் சட்டையை பிடித்து, “பண்றதெல்லாம் 420 வேலை சாமி பேரை சொல்லி எஸ்கேப் ஆக நினைக்கிறியா? என்ன ஒரு தைரியம் இருந்தா மைனர் பொண்ணை ரேப் பண்ணதும் இல்லாம கிருஷ்ணர் மாதிரி உபதேசம் பண்ணுவ” என்று அவன் முகத்தில் ஒன்று வைத்து தர தரவென்று அழைத்து சென்றவனின் வாய் சரளமாக கெட்டவார்த்தையை உச்சரித்தது.
இது போல் தங்கள் மகளுக்கு நியாயம் வாங்கி தர ஒரு நேர்மையான அதிகாரி இல்லையே என்று அதை பார்த்திருந்த துளசிக்கும் பாரிவேந்தனுக்கும் மனதில் ஓடாமல் இல்லை. இது எதுவும் தெரியாமல் நாயை இழுத்து செல்வது போல சாமியார் போர்வையில் ஒளிந்திருந்த ஓநாயை இழுத்துச்சென்றான் வெற்றிமாறன்.