வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இரட்சகனா? ராட்சஷனா? 2

ஞானசேகர் மற்றும் வள்ளியின் ஒற்றை புதல்வி தயனிதா... இவர்கள் திருமணம் காதல் திருமணம் என்பதால் வள்ளியின் வீட்டிலிருந்து எதிர்ப்பு தெரிவித்திருக்க... தன் வீட்டை விட்டு ஓடி வந்து ஞானசேகரை கை பிடித்திருந்தார் வள்ளி....

திருமணத்திற்கு பின்பும் வள்ளியின் மேல் சிறிதும் காதல் குறையாமல் வாழ்ந்து வந்தார் ஞானசேகர்..பரம்பரை பணக்கார குடும்பமான இவர்களது குடும்பத்தில் ஒட்டுமொத்த சொத்தும் ஞானசேகர் பெயரில் இருந்தது..

தன் தங்கைகளான கற்பகம் மற்றும் கார்த்திகா இருவரையும் நல்ல இடத்தில் திருமணம் முடித்துக் கொடுத்தார் ஞானசேகர்.. புகுந்த வீட்டில் வசதி வாய்ப்பு குறைவு என்பதால் தன் கணவர் சுந்தரத்துடன் பிறந்த வீட்டிலேயே தஞ்சம் புகுந்தார் கற்பகம்.. அவரது ஒற்றை புதல்வன் ஆன தீட்சிதன் வீட்டில் அனைவருக்கும் செல்லமாகி போனான்... அவர்கள் வீட்டின் மூத்த குழந்தையும் அவனே...

புகுந்த வீட்டில் தன் கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த கார்த்திகா அருள்மொழி பிறந்து ஒரு வருடத்தில் அவர் கணவர் இறந்து விட.. அதற்குப்பின் புகுந்த வீட்டில் நடத்தப்பட்ட கொடுமைகளால் பிறந்து வீட்டிற்கே வந்துவிட்டார் தன் மகனுடன்...

தங்கைகள் இருவருக்கும் திருமணம் முடித்து வைத்து குழந்தைகள் பிறந்த பின் தான் தன் காதலியான வள்ளியை கரம்பிடித்து இருந்தார் ஞானசேகர்.. தயனிதா பிறந்த உடனேயே ஜன்னி வந்து வள்ளி இறந்து விட.. அவள் பிறந்த பின்பு தான் தன் மனைவி இறந்து விட்டாள் என்பதால் அவள் மீது சிறிதளவு கூட பாசம் காட்டாமல் பிறந்த குழந்தையை கைகளில் ஏந்தாமல் அவளை தள்ளி வைத்திருந்தார் ஞானசேகர்...

மனைவி பிரிவில் வாடியவர் நோய் வந்து இறந்து விட..அவர்களின் பிசினஸ் மற்றும் குடும்பத்தின் ஒட்டுமொத்த சொத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் சுந்தரம்.. அவருக்குப் பின் அவர் மகன் தீட்சிதன் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்க.. ஆனால் அந்த ஒட்டுமொத்த சொத்துக்கும் அதிபதியோ தயனிதா தான் என்பது சுந்தரம் மற்றும் கற்பகம் இருவரும் மட்டுமே அறிந்த ஒரு உண்மையாகும்.. இதனால் தான் அவளை அந்த வீட்டை விட்டு துரத்தியே ஆக வேண்டும் என்று இருவரும் ஒரே முடிவில் உறுதியாக இருக்கின்றனர்...

சிறு வயதில் இருந்தே அந்த வீட்டில் அவளுக்கான உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட.. வேலைக்காரியை போலவே நடத்தப்பட்டாள் தயனிதா.. பெண்களுக்கு கல்வி முக்கியம் என்பதால் அவளின் கல்லூரி படிப்பு முடிக்கும் வரை குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி அவளுக்கு உறுதுணையாக இருந்தவன் அருள்மொழி மட்டுமே...

சிறுவயதிலிருந்தே செல்லமாக வளர்க்கப்பட்டு வந்த தீட்சிதன் எப்போதும் எளிதில் கோபப்படும் குணம் கொண்டவனாக இருக்க... அவனை நெருங்கவே பயப்படுவாள் தயனிதா.. சிரித்த முகமாக இருக்கும் அருள் மொழியை மட்டும் "அருள் மாமா" என்று குட்டி போட்ட புனையாக அவன் பின்னே சுற்றி கொண்டே இருப்பாள்..

அருள் மொழியிடம் மட்டுமே நெருக்கம் காட்டும் தன் மாமன் மகளை வெறுத்தாலும் உள்ளுக்குள் அவளுக்கான காதல் வளர்ந்து கொண்டு தான் இருந்தது தீட்சிதனக்கு..அருள்மொழி கல்லூரி படிப்பை முடித்து டெல்லியில் ஒரு நல்ல வேலையில் இருக்க.. வெளிநாட்டில் படித்து வந்த தீட்சிதன் தன் குடும்ப தொழில் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்..

சிறு வயதிலிருந்தே தயனிதா அருள்மொழி இடம் நெருக்கம் காட்டும் போதெல்லாம் சிறிது சிறிதாக தண்டனை கொடுத்துக் கொண்டிருந்த தீட்சிதன் இன்றும் அதே மாதிரி அவன் ஸ்டைலில் அவளுக்காக தண்டனையை கொடுத்திருந்தான்...



அருள்மொழி தயனிதாவிற்கு உணவு ஊட்டி கொண்டிருப்பதை பார்த்த தீட்சிதனக்கு இவர்கள் இருவரையும் தன் கையால் இப்போதே கொன்று போட்டால் என்ன என்று தான் தோன்றியது..

"தயனி என்ன சொல்றா" என்று கேட்டவரே அவள் அறைக்குள் நுழைந்தான் தீட்சிதன்.. "எல்லாம் வழக்கம் போல தான் அண்ணா.. பயத்தில சாப்பாடு வேண்டாம்னு ஒரே அடம்.. அப்புறம் நான் ஊட்டி விட்டேன்.. அப்புறம் தான் சாப்பிடறா.. இதுவரைக்கும் மேடம் அவங்க கையால சாப்பிட்டதை விட.. நான் ஊட்டி விட்டு சாப்பிட்டது தான் ரொம்ப அதிகம்" என்று அருள்மொழி கூற..

"போங்க மாமா" என்று செல்லமாய் சிணுங்கினாள் தயனிதா.. "கருமம் இதையெல்லாம் பாக்கணும்னு என் தலையெழுத்து" என்று மனதில் எண்ணி அந்த அறையில் இருந்து வெளியேறினான் தீட்சிதன்...

"சரி நீ படுத்து தூங்கு தயனி.. எதையும் நினைச்சி பயந்துட்டு இருக்காத.. எதாவதுனா எனக்கு கால் பண்ணு" என்று அவளிடம் கூறிவிட்டு தன் கையில் இருந்த பிளேட்டோடு கிச்சனுக்குள் நுழைந்தான் அருள்மொழி...

"ஏங்க.. நம்ம புள்ளையும் என் தங்கச்சி புள்ளையும் ரொம்ப தான் தயனிதாவுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்காங்க.. இப்படியே போச்சுன்னா அப்புறம் இவங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர மயக்கி அவ கல்யாணம் பண்ணிடுவா.. அதனால சீக்கிரமா ஒரு குடிகாரனையோ இல்ல ஒரு கிழவனையோ புடிச்சி இரண்டாம் தரமா அவளுக்கு கட்டி வச்சிடலாம்.. என் கண்ணு முன்னாடி அவ நல்லா வாழ்றதை நான் பார்க்கவே கூடாது.. இந்த மாதிரி எவன் கிட்டயாவது மாட்டி அவ வாழ்க்கை சிக்கி சின்னா பின்னமானா தான் என் மனசு நிம்மதியா இருக்கும்" என்று தன் கணவரிடம் வன்மத்துடன் கூறிக் கொண்டிருந்தார் கற்பகம்..

இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த அருள்மொழிக்கோ மனம் பதை பதைத்தது.. இவர்கள் மனதில் நினைத்ததை நிச்சயம் செய்வார்கள் என்று நன்கு அறிந்தவன் யாரிடமும் மாட்டி தன் மாமன் மகள் கஷ்டப்படுவதை விட அவனே தயனிதாவை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று முன் வந்தான்..

அப்போதே தன் பெரியம்மாவிடம் சென்றவன் "பெரியம்மா இந்த மாதிரி எல்லாம் கல்யாணம் பண்ணி கொடுத்து அவளை நீங்க கஷ்டப்படுத்த வேண்டாம்.. உங்க எல்லாருக்கும் சம்மதம்னா நானே தயனியை கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்றான் அருள்..

"இங்க பாரு அருளு.. எங்களுக்கு ஒன்னும் அவளுக்கு கல்யாணம் பண்ணி.. நல்லபடியா வாழ வைக்கணும்னு விருப்பம் இல்லை.. உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா அவ கண்டிப்பா நல்லா சந்தோஷமா தான் வாழ்வா.. அதை பார்த்துட்டு என்னால நிம்மதியா இருக்க முடியாது.. சப்போஸ் நீ அவளை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு உறுதியா இருந்தின்னா நீ அவள உன் கூடவே டெல்லிக்கு கூட்டிட்டு போய்டு" என்றார் கற்பகம்..

"தயனி என் கூட இருந்தா சந்தோஷமா இருப்பானா.. அவளை டெல்லி மட்டும் இல்லை.. உலகத்துல வேற எங்க வேணாலும் கூட்டிட்டு போறதுக்கு நான் ரெடியா இருக்கேன்" என்றான் அருள்..

இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தீட்சிதன் இப்போது இந்த விஷயத்தில் தலையிட்டு பிரச்சனையை பெரிது பண்ண விருப்பம் இல்லாதவன்.. நடப்பது நடக்கட்டும்.. இது எதுவரையில் தான் செல்கிறது என்று பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டான் அவன்..

அடுத்த நாள் காலை கண் விழித்த தயனிதா குளித்து முடித்து அவள் அறையில் இருந்து வெளியே வந்தவள்..வழக்கம்போல் வாசல் தெளித்து கோலம் போடுவதில் ஆரம்பித்து.. அனைவருக்கும் காபி போட்டு கொடுப்பதில் இருந்து காலை டிபன் வரை அனைத்தையும் செய்து முடித்து இருந்தாள்..

அப்போது அவளை தன் அருகில் வருமாறு அழைத்தார் கார்த்திகா.. அருகில் வந்தவள் "சொல்லுங்க அத்தை" என்று கூற... "உனக்கும், அருளுக்கும் கல்யாணம் பண்ணலாம்னு வீட்ல எல்லாரும் பேசி முடிவு பண்ணி இருக்கோம்... உனக்கு அருளை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு சம்மதமா" என்று அவர் கேட்க..

இதுவரை அருள்மொழியை தன் மாமன் என்பதையும் தாண்டி.. ஒரு நல்ல நண்பனாக நினைத்துக் கொண்டிருந்தவள்.. இப்போது வீட்டில் அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவு என்பதால் சிரித்த முகத்துடன் "உங்க எல்லாரோட விருப்பம் தான் என்னுடைய விருப்பமும் அத்தை" என்று கூறிவிட்டு அங்கிருந்து சமையல் அறைக்குள் சென்று விட்டாள் தயனி...

அவள் சிரித்த முகத்துடன் சம்மதம் சொல்வதைப் பார்த்த தீட்சிதனுக்கு அவளின் மேல் கோபம் தான் அதிகமானது... அவளை வீட்டில் வைத்து பார்க்க விரும்பாத அவளின் பெரிய அத்தை அவர்களுக்கான திருமணம் தேதியை அடுத்த முகூர்த்தத்திலேயே குறித்து இருந்தார்..

தேதி குறிக்கப்பட்டு இதோ அதோ என்று திருமண நாளும் வந்துவிட்டது... வீட்டு பக்கத்திலேயே இருந்த ஒரு திருமண மண்டபத்தில் சொந்த பந்தங்கள் அனைவரும் கூடியிருக்க மாப்பிள்ளையாய் மணமேடையில் கம்பீரமாய் அமர்ந்திருந்தான் அருள்மொழி.. அப்பொழுது கூரைபட்டுடன் கை நிறைய கண்ணாடி வளையல் சத்தமும், கால்களில் கொலுசு சத்தமும் கேட்கும் படி மணமேடையில் குனிந்த தலையுடன் நடந்து வந்து கொண்டிருந்தாள் தயனிதா.. அவளை இப்படி பார்க்கும் பொழுது கோபத்தின் உச்சத்தில் இருந்தான் தீட்சிதன்.. ஆனால் இன்றைய அவனின் கோபத்திற்கு... நாளை அவர்கள் இருவரும் இழக்க போவதே அதிகம்..
 
Top