வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இருள் பூவின்‌ ஒளிச்சுடரே! - 14

GG writers

Moderator
அத்தியாயம் -14

எடோனிஸ் வீட்டின் ஹால் புயலுக்கு முன்னே வரும் பேரமைதியை தத்தெடுத்து இருக்க, ஒவ்வொருவரின் மனதிலும் பல விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தது. அன்றைய ஒரு நாளில் பல திருப்பங்கள் நடைப்பெற்றிருக்க, இப்போது அவர்கள் கேட்ட உண்மையை ஒருவராலும் ஜீரணிக்க முடியவில்லை.

அதுவும் அகஸ்டஸின் அண்ணனான சிரிலால் சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பதினாறு வருடத்திற்கு முன் நடந்த நிகழ்வுகள் எல்லாம் சிறிது சிறிதாக அவன் ஞாபகத்திற்கு வர, இத்தனை வருடங்கள் தங்களை ஏமாற்றிய அகியை கண்டு கொல்லும் அளவுக்கு ஆத்திரம் வந்தது சிரிலுக்கு‌.

"அகி அந்த பொண்ணு பேரு லைராவா..!"

அழுத்தமான குரலில் சிரில் கேட்டும் அகி வாயை திறக்கவில்லை. அகிக்கு தெரியும் வெகு நாட்கள் இந்த உண்மையை அவனால் மறைக்க முடியாதென. இப்போது லைரா உண்மையை சொன்னதும் ஒருவகையில் நல்லதுதான், இனி என்ன வந்தாலும் அதை பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டான் அகஸ்டஸ்.

"உன் அண்ணன் கேக்குறதுக்கு பதில் சொல்லு அகி!"

அவன் தந்தை எடோனிஸும் சிரிலுக்கு ஆதரவாக பேச, அகிக்கு புரிந்துவிட்டது இனி அவன் அவர்கள் இருவருக்கும் எதிராகத்தான் செயல்பட்டாக வேண்டும் என. எனவே மனதை திடப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தான் அகி.

"ஆமா அவ பேரு லைராதான். நீங்க நினைக்கிற தோரா வம்சத்தை சேர்ந்த அதே லைராதான். ரெண்டு வயசு பச்ச குழந்தைனு கூட பாக்காம கொல்ல என்ன அனுப்பி வைச்சீங்கல அதே லைராதான்"

நெஞ்சை நிமிர்த்தி நின்ற அகி, இதை சொல்வதில் எனக்கு எந்த பயமும் இல்லை என சொல்லாமல் சொல்லி நின்றான். அகியின் பேச்சில் அதிர்ந்து போயினர் அவன் தந்தையும் தமையனும்.

"அப்போ நீ எங்களை பதினாறு வருஷமா ஏமாத்திட்டு இருந்திருக்க அப்படிதானே அகி"

என்று கேட்ட சிரிலுக்கு தன் தம்பியின் துரோகம் நெஞ்சில் வலியை உண்டுபண்ணியது. அகிக்கு சிரிலின் எண்ணம் புரிந்தே இருந்தாலும், இப்போது அவனால் லைராவின் பக்கம் மட்டுமே நிற்க முடிந்தது.

"அகி நீ என்ன செய்றனு தெரிஞ்சுதான் செய்யிறியா.. அந்த பொண்ணு உயிரோட இருக்கிறது நமக்கு மட்டும் ஆபத்து இல்ல இந்த உலகத்துக்கே அது பெரிய ஆபத்து.. இப்பவும் ஒன்னும் கெட்டு போகல, நீ ஒழுங்கா எங்க பக்கம் வந்திரு.. அவளை நான் கொன்னு இதோட அந்த பிரச்சினையை முடிக்கிறேன்"

சீறிக்கொண்டு சிரில் லைராவின் புறம் வந்த நேரம், அவன் வந்த வேகத்தில் தூக்கி சுவற்றில் அடிக்கப்பட்டான். சிரில் லைராவை நெருங்கும் முன் அவனை தூக்கி அடித்திருந்தான் அகஸ்டஸ்.

"பதினாறு வருஷத்துக்கு முன்ன உங்களுக்கு தெரியாம நிறைய விஷயம் நடந்திருக்கு. ஆனா அதையெல்லாம் இப்ப சொன்னா கேக்குற நிலமைல நீங்க யாரும் இல்ல. அதனால லைரான்ற பேரை மட்டும் வச்சு உங்க இஷ்டத்துக்கு நீங்க ஒரு முடிவுக்கு வராதீங்க. இப்பவும் சொல்றேன் இந்த அகி எப்பவும் கெட்டவங்க பக்கம் நிக்கமாட்டான், அதையும் மறந்துடாதீங்க. சிரில் உனக்கு மட்டும் இல்ல எல்லாருக்கும் சேர்த்து சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க. இவ லைரா, என்னோட காதலி.. இவ மேல ஒரு சின்ன கீரல்கூட விழ நான் விடவேமாட்டேன்.. அதையும் மீறி அவளை நீங்க நெருங்கனும்னா, அது நான் செத்தாதான் நடக்கும்"

எல்லாரையும் பார்த்து எச்சரித்த இந்த அகஸ்டஸ் எல்லோருக்கும் புதியவனாய் தெரிந்தான். லைராவை தன் கைகளுக்குள் அணைவாய் பாதுகாப்பாக பிடித்து நின்றிருந்தவன்,

"டேடி லைராவ பத்தி தப்பான விஷயத்தை நீங்க எல்லாம் சரின்னு நம்பிட்டு இருக்கீங்க. அது தப்புன்னு உங்க எல்லாருக்கும் புரிய வச்சு அவளை உங்க மருமகளா இதே வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன். அதுவரை நானும் இங்க இருக்கமாட்டேன்"

என பேசி கொண்டிருந்த அகி அடுத்த நொடி அந்த இடத்தில் இருந்து மறைந்திருந்தான். ஆம் அங்கிருந்தவர்கள் அசந்த நேரம் இடப்பெயரும் மந்திரத்தை போட்டு அங்கிருந்து சென்றுவிட்டான் அகி.

கொஞ்ச நேரத்திற்குள் நடந்த இந்த நிகழ்வுகள் எல்லாம் அங்கிருந்தவர்களுக்கு புரியவே சில நிமிடங்கள் பிடிக்க, அவர்கள் அதிர்வில் இருந்து தெளிந்து வரும்முன் அங்கிருந்து மறைந்திருந்தான் அகஸ்டஸ்.

---------------------------------

எடோனிஸ் வீட்டிலிருந்து லைராவை கிளப்பிய அகி வந்து சேர்ந்த இடம், அவன் நண்பன் ஐநரின் வீடுதான். அகிக்கு வேம்பையர் நண்பன் இருப்பது அவன் வீட்டில் யாருக்கும் தெரியாது. அது அகிக்கு சாதகமாய் போய்விட, அங்கிருப்பதுதான் அவர்களுக்கு இப்போது பாதுகாப்பு என லைராவை இங்கே அழைத்து வந்துவிட்டான் அகஸ்டஸ்.

"லைரா உனக்கு எதுவும் ஆகலைல, நீ ஓகேதானே"

அருகே அமர்ந்திருந்த தன் காதலியிடம் கவலையுடன் கேட்டான் அகி. அங்கே நடந்த நிகழ்வுகள் கண்டிப்பாக அவளை பாதித்திருக்கும் என அவனுக்கு நன்றாகவே புரிந்திருந்தது. அதனால் அவளை ஆறுதல்படுத்த தன் நெஞ்சோடு மெல்ல அணைத்துக் கொண்டான்.

"அதெல்லாம் எனக்கு ஒன்னும் ஆகலை அகி, அதோட நான் யாருன்னு தெரிஞ்சா இதுதான் நடக்கும்னு எனக்குதான்‌ முன்னையே தெரியுமே. ஆனா நீங்க எனக்காக உங்க கூட இருந்த எல்லாரையும் எதிர்த்து என்னோட வந்துட்டீங்க, அதை நினைச்சா தான் எனக்கு கஷ்டமா இருக்கு "

அகஸ்டஸ் நெஞ்சில் இருந்து தலையை மட்டும் உயர்த்தி சொன்ன லைராவின் கண்களில் கண்ணீர் கோர்த்திருந்தது. அவன் மேல் சாய்ந்து தன் கேள்விக்கு பதில் கிடைக்குமா என ஏக்கமாக பார்த்த லைராவை பார்க்க, பூனைக்குட்டியைப் போல் இருக்க அவள் நெற்றியில் தன் இதழை ஒற்றி எடுத்தான்.

மேலும் லைராவின் கலங்கிய கண்களில் இருந்து சிந்திய நீர் துளியை தன் கட்டை விரலால் துடைத்த அகி, அவள் கண்ணங்களை தன் கைகளில் ஏந்திக் கொண்டான்.

"இந்த அழகு பொண்ணுக்காக என்கூட இருக்கவங்கனு இல்ல இந்த உலகத்தையே எதிர்த்து நிப்பேன்னு உன்கிட்ட நான் ஏற்கனவே சொன்னேன்ல.. அதை நான் சும்மா சொல்லலை லைரா, அவ்வளவும் என் மனசுல இருந்து வந்த வார்த்தைங்க. நான் அப்ப சொன்னதைதான் இப்பவும் சொல்றேன், எனக்கு உன்னை தாண்டிதான் மத்த எதுவும். அதனால என்ன நினைச்சு கவலைப்படாத சரியா"

அகியின் வார்த்தைகளை அந்த நேரத்தில் கேட்க, மனதிற்கு அவ்வளவு நிம்மதியை தந்தது லைராவுக்கு. மனம் நிறைந்த மகிழ்வுடன் மேலும் அவனுடன் ஒன்றினாள் அந்த சிறு பெண்.

"ஓகே ஓகே ரொமான்ஸ் பண்ணுனது எல்லாம் போதும், இந்தாங்க முதல்ல இந்த தண்ணீய குடிங்க"

இருவரின் மோன நிலையை கலைப்பதற்கு என்றே வந்து சேர்ந்தான் ஐநர். அவன் குரல் கேட்டதும் சட்டென அகியின் மேலிருந்து லைரா நகர, ஐநரை முறைத்து வைத்தான் அவன் நண்பன். அகியின் கண்களில் தீப்பொறி பறப்பதை சுவாரஸ்யமாய் பார்த்த ஐநர்,

"அப்புறம் மச்சா வீட்டை விட்டு ஓடி வந்தீட்டீங்க, இனி என்ன பண்ண போறீங்க. உங்க அப்பாட்ட இருந்து இப்படியே ஒளிஞ்சு ‌மறஞ்சு வாழ போறீங்களா என்ன?"

ஐநருக்கு அகியின்‌ வாழ்வில் நடந்த அனைத்தும் தெரியும், அதோடு இன்று நடந்ததையும் அவன் வந்தவுடன் ஐநரிடம் சொல்லியிருந்தான். அதை வைத்தே ஐநர் அடுத்து என்ன செய்ய போகிறீர்கள் என அகியிடம் கேட்டு வைத்தான்.

"தெரியல டா! யோசிக்கனும். ஆனா இப்போதைக்கு உன் வீட்ல தான் தங்க போறோம். ஆனா எதாவது பண்ணியே ஆகனும்டா, ஏனா என் டேடி சும்மா இருந்தாலும் இனி சிரில் சும்மா இருக்க மாட்டான். எதையும் யோசிக்காம பண்றவன், லைராவ கொல்ல கண்டிப்பா தேட ஆரம்பிப்பான். ஆனா அவன் எங்களை கண்டுப்பிடிக்கிற நேரம் அவன் எங்களை நெருங்குனாலும் எதுவும் செய்ய முடியாதபடி ஒரு சூழ்நிலைல நாங்க இருந்தே ஆகனும்.."

என்னதான் வீட்டில் அப்படி பேசி வந்திருந்தாலும் மனதிற்குள் சிரிலை நினைத்து கொஞ்சம் பயம் இருந்ததுதான் அகிக்கு. அவனுக்கு கோபம் வந்தால் எதையும் யோசிக்க மாட்டான், எதையும் செய்த பின்னரே வருத்தும் ரகம் சிரில். அதனால் லைராவை காப்பாற்ற எதையாவது சீக்கிரம் செய்ய வேண்டும் என மனதில் உறுதி எடுத்தான் அகி. அகி பேசியபின் சில நிமிடங்கள் அங்கே அமைதியே நிலவியது.

"அகி! லைரா டையர்டா இருக்காங்க பாரு. எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம், முதல்ல அவங்கல ரெஸ்ட் எடுக்க சொல்லு. நீயும் போய் ரெஸ்ட் எடு"

யோசனையில் புருவத்தை சுருக்கி அமர்ந்திருந்த அகியிடம் ஐநர் ஓய்வெடுக்க சொல்ல, அன்றைய நாளின் காலையில் இருந்து சண்டையிட்டது வீட்டில் நடந்தது என பல நிகழ்வுகளில் சோர்ந்திருந்த அகிக்கும்‌ ஐநர் சொல்வது சரியாகப்பட லைராவை அழைத்து கொண்டு ஓய்வெடுக்க சென்றான். ஆனால் இனி எது வந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்ற மன உறுதி மட்டும் அகியிடம் அதிகரித்திருந்தது.

சூரியதேவன் தன் செங்கதிர்களை பரப்பி பூமியை ஒளிர்விடும் பணியை செவ்வனே செய்ய துவங்க, ஜன்னலின் ஊடே வந்த சூரிய ஒளி முகத்தில் பட்டதில் தூக்கத்தில் இருந்து எழுந்து அறையை விட்டு வெளியே வந்தாள் லைரா.

'என் வாழ்க்கை இப்படி போராட்டத்துலையே முடிஞ்சு போயிருமா.. ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது'

சோஃபாவில் அமர்ந்து அவள் வாழ்க்கையில் அவளுக்கு நடந்த விஷயங்களை லைரா யோசித்துக் கொண்டிருந்த நேரம்,

"குட் மார்னிங் கைஸ்"

ஐநரின் குரல் வாசல் புறம் கேட்க "குட் மார்னிங்" என்று அகியின் குரல் அருகில் கேட்டது. அதன்பின்னரே அவள் அருகில் அகஸ்டஸ் அமர்ந்திருப்பதை கவனித்தாள் லைரா. அகி லைராவைதான் பார்த்திருந்தான். அவள் மனதில் என்னவோ சஞ்சலம் ஓடுவது புரிந்தாலும், அவளிடம் அவன் ஒன்றும் கேட்டுக் கொள்ளவில்லை.

அதுவும் இல்லாமல் அகி முதல் நாள் இரவு தூங்காமல், அடுத்து என்ன செய்வது என யோசித்து ஒரு முடிவை எடுத்து விட்டான்.

"அகி லைரா என்ன இப்படி அமைதியா உக்காந்து இருக்கீங்க. கமான் கைஸ் சில்! எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு முடிவு கண்டிப்பா இருக்கும். மெதுவா யோசிச்சு செய்யுங்க, இப்ப பிரேக் பாஸ்ட் சாப்பிட வாங்க"

இன்னும் சிந்தனையிலே இருந்த இருவரையும் ஐநர் சாப்பிட அழைக்க, லைரா எனக்கு வேண்டாம் என்றாள்

"ப்ச் லைரா வா சாப்பிடலாம், நமக்கு புராப்லம் வரதுலா புதுசா என்ன. சாப்பிட்டு வயிறு புல் ஆனாதான் மூளை வேலை செய்யும் வா" என்றான் அகி.

அப்போதும் தயங்கியபடி லைரா அமர்ந்திருக்க, "லைரா ஒழுங்கா சாப்பிட வா, சாப்பிட்டு நாம ஒரு இடத்துக்கு கிளம்பப்போறோம். நாம போகப்போற இடம் நமக்கு பாதுகாப்பானதுன்னு நானும் நம்புறேன். நாம ரொம்ப நேரம் இங்க இருக்கிறது சேப் இல்ல. முடிஞ்ச அளவு இந்த இடத்தைவிட்டு சீக்கிரம் கிளம்பியே ஆகனும், அதனால வா"

அகி சொல்லி நிறுத்தியதும் "அகி அதுக்குள்ள என்ன பண்றதுன்னு பிளான் பண்ணிட்டியா" ஆச்சரியமாய் கேட்டான் ஐநர்.

அதற்கு ஆமென அகி தலையசைக்க, "நிஜமாவா சொல்றீங்க" இப்போது கண்ணில் நம்பிக்கையை தேக்கி வைத்து கேட்டாள் லைரா‌.

"என்ன லைரா என்மேல நம்பிக்கை இல்லையா, உன்ன காப்பாத்த நான் எந்த எல்லைக்கும் போவேன்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது. என் உயிர் இந்த உடம்புல இருக்கவரை உனக்கு எதுவும் ஆகாது. அதனால இப்ப போய் சாப்பிடு, நாம கிளம்பனும்"

அகியின் வார்த்தைகளில் தெரிந்த உறுதி லைராவின் மனதிற்கு சொல்லொன்னா ஆறுதலை தர, அகி சொன்னதைக் போல் சாப்பிட சென்றாள்.

"அப்படி எங்க போகப்போறோம் அகி"

லைரா விதவிதமாய் கேட்டும் அவளுக்கு பதில் சொல்லாது "போனா உனக்கே தெரியும். இப்ப கேக்காத" என்றுவிட்டான் அகஸ்டஸ்.

இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையே இவர்கள் போகப்போகும் இ
டம் இவர்களுக்கு பாதுகாப்பை தருமா இல்லை, இன்னும் பெரிய சிக்கலில் மாட்டி விடுமா பார்க்கலாம்!

-தொடரும்
 
Top