GG writers
Moderator
அத்தியாயம் - 16
"மாம்!"
"மாம்.. என்கிட்ட பேசமாட்டீங்களா.. நீங்க பேசலனா பரவாயில்லை, நான் சொல்லப் போறதை கேட்டா கூட போதும்.. லைராவ நான் பாத்துட்டேன்.. அவ ரொம்ப பெரிய பொண்ணா வளந்துட்டா மாம்.. அவளுக்கு எதுவும் ஆகிருமோன்னு நீங்க பயப்பட வேண்டாம்.. நான் சின்ன வயசுல செய்ய தவறுனத இப்ப கண்டிப்பா நிறைவேத்துவேன்.. அதுல என் உயிரே போனாலும் சரி.."
நோவாவின் பேச்சை கேட்டும் அமைதியாகவே இருந்தார் அவன் தாய் கேத்தரின். அவர் எதுவும் பேசமாட்டார் என தெரிந்து ஒரு பெருமூச்சு விட்ட நோவா
'இப்பக்கூட எதுவும் பேச மாட்டீங்களா மாம்.. இந்த ஜென்மத்தில அம்மா பாசம்ன்ற ஒன்னு என் வாழ்க்கைல இல்லப்போல'
விரக்தியாய் நினைத்துக் கொண்ட நோவா "நான் கெளம்புறேன் மாம்.. நீங்க உங்க உடம்ப பாத்துக்கோங்க.." என்றுவிட்டு கிளம்பினான்.
நோவா வாசலை பார்த்து திரும்பிய நேரம் அவனை பார்த்த கேத்தரினின் கண்களில் அவ்வளவு சோகம். அவன் போகும் திசையை பார்த்தவரின் கண்கள் தானாகவே தண்ணீரை சிந்த, அதை துடைக்காமல் கூட அவன் சென்ற தடத்தை வெறித்திருந்தார்.
---------------------------------
குண்டூசி விழுந்தால் கூட டிங்கென சத்தம் கேட்கும் அளவு அந்த அறை பேரமைதியை தத்தெடுத்து இருந்தது. அந்த அறையின் ஒருபுறத்தில் எடோனிஸ் அவர் ஆட்களுடன் அமர்ந்திருக்க, மற்றொரு புறத்தில் அகஸ்டஸ் லைரா ஐநர் ஜான் தாத்தா என இவர்கள் நால்வரும் அமர்ந்திருந்தனர்.
"மிஸ்டர்.ஆண்ட்ரோனிக்கஸ் இவ்ளோ தூரம் வந்துட்டு அமைதியா இருந்தா என்ன அர்த்தம், பேசுங்க.. அதுக்காக தானே வந்திருக்கீங்க"
வெகுநேரம் இருதரப்பும் பேசாது அமைதியாகவே இருக்க, இது சரிவராது என தானே முன்வந்து பேச்சை ஆரம்பித்தார் ஜான். அதன்பின்னரே தான் அமைதியாய் இருப்பது சரியல்ல என உணர்ந்த எடோனிஸ் வாயை திறந்தார்.
"அகி நீ நிறைய வேலை பண்ணிட்டு வந்துட்ட, அதுக்கெல்லாம் இப்பவாவது விளக்கம் தரப்போறியா இல்ல அமைதியாவே இருக்கலாம்னு நினைக்கிறியா.. எங்களை சுத்தி என்னதான் நடக்குது.. நீ எதுக்கு இதையெல்லாம் செய்யுற.. அதுக்கு எதாவது காரணம் இருக்கா.. இந்த மாதிரி பல கேள்வி எங்க மண்டைக்குள்ள ஓடுது. இப்பவாவது உன் வாய் திறந்து இங்க என்ன நடக்குதுன்னு சொல்லு"
எடோனிஸ் பேசியதை கேட்டு மெல்ல தன் அண்ணன் சிரிலை அகி பார்த்து வைக்க, அவன் எண்ணத்தை புரிந்தது போல் "என்ன மீறி சிரில் எதுவும் பண்ண மாட்டான். நீ பேசு.. நீ பேசினாதான் இங்க பல குழப்பம் தீரும்" என்றார் அவன் தந்தை.
அதற்கு சரியென தலையசைத்த அகியும் எங்கிருந்து இதை ஆரம்பிப்பது என அவன் நினைவுகளை ஒருங்கிணைத்து வார்த்தைகளில் கோர்வையாக்கினான்.
"டேடி மொதல்ல நம்ம வீட்ல நான் அப்படி நடந்துகிட்டதுக்கு சாரி கேட்டுக்கிறேன். ஆனா அப்போ எனக்கு வேற வழியும் தெரியலை.. அந்தநேரம் சிரில் நிதானமாவே இல்ல, அவன் தப்பா எதுவும் செய்யறதுக்கு முன்ன அங்க இருந்து கிளம்புனா போதும்னு தோனுச்சு அதான் கிளம்பிட்டேன். நான் ஏன் இப்படி நடந்துக்கிட்டேன்னு தெரியனும்னா முதல்ல பதினாறு வருஷத்துக்கு முன்ன தோரா அரண்மனைல என்ன நடந்துச்சுன்னு உங்களுக்கு தெரியனும்"
அகி மேலும் தொடர்ந்தான்..
"அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு எனக்கு இப்பவும் நல்லாவே ஞாபகம் இருக்கு டேடி. நீங்க மத்த பரம்பரை தலைவர்கள் எல்லாரும் தீவிரமா என்னவோ பேசிட்டு இருந்தீங்க, முடிவுல எதுக்காக என்ன செலக்ட் பண்ணி அங்க அனுப்பிவிட்டீங்கனு எனக்கு இப்பவும் புரியல. ஆனா நீங்க எல்லாருமே சொன்ன ஒரு வார்த்தை அங்க லைரான்னு ஒரு பொண்ணு இருப்பா அவளை கொண்ணுட்டு வான்றதுதான்.
என்ன ஏதுன்னு புரியாம நானும் நீங்க சொன்னதை செய்யத்தான் போனேன் டேடி. சிரில் வெளியவே நின்னுட்டான், நான் மட்டும் தான் அந்த அரண்மனைக்குள்ள போனேன். பல நாடுகளை சேர்ந்த நிறைய விட்ச் விசார்ட்ஸ் இருந்தாங்க, ஆனா யாருமே என்ன கண்டுக்கல. அப்பவே எனக்கு அங்க என்னவோ சரியில்லைன்னு தோனுச்சு.. ஆனா நான் நீங்க சொன்ன மாதிரி அந்த பொண்ண தேடி உள்ளே போனேன்..."
அகஸ்டஸ் அந்த பிரம்மாண்டமான தோராவின் அரண்மனையை சுற்றி பார்த்தபடி அந்த பெண்ணை தேட ஆரம்பித்தான். கீழ் தளத்திலே முன்னால் இருந்த இரண்டு வெற்று அறைகளை அவன் தாண்டியபோது நல்ல லாவண்டர் மலரின் நறுமணம் அவன் நாசியை நிறைத்தது. அந்த வாசத்தை நுகர்ந்த படி சென்ற அகி மூன்றாவது அறையை அடைந்தான். அங்குதான் லைராவை முதன்முதலில் அவன் பார்த்ததும்.
"அந்த லாவண்டர் வாசம் ஒரு சின்ன குழந்தைட்ட இருந்து வந்துச்சு டேடி. அந்த பொண்ணுதான் லைரான்னு எனக்கு தெரியவந்துச்சு. ஆனா நீங்க எல்லாம் என்கிட்ட சொல்லி அனுப்பி விட்டதுக்கும் அந்த பொண்ணுக்கும் கொஞ்சம் கூட சம்மந்தமே இல்ல.
டேடி அங்க இருந்தது ரெண்டு வயசு குழந்தை டேடி, பொம்மைய வச்சு விளையாடிட்டு இருந்தா. நான் எதுக்கு வந்திருக்கேன்னு தெரியாம என்ன பாத்து அவ்ளோ அழகா சிரிச்சா.. அந்த குழந்தைகிட்ட, அந்த சிரிப்புல எனக்கு எந்த கெட்டதும் தெரியலை. என்னால அந்த குழந்தைய நீங்க சொன்ன மாதிரி கொல்லவும் முடியலை. லைராவ என்னால அங்கையே விட்டுட்டும் வரமுடியலை. அப்பதான் ஒரு முடிவெடுத்தேன், அவளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடலாம்னு. நீங்களே லைராவ பார்த்தா எதுவும் செய்யமாட்டீங்கனு எனக்கு தோனுச்சு, நான் அவளை அப்படியே தூக்கிட்டு வரும்போதுதான், லைராவோட அம்மா கேத்தரின் வந்தாங்க"
பொக்கிஷம்போல் லைராவை கையில் ஏந்தி சென்ற அகியின் முன் கேத்தரின் வந்து நின்றார்.
"நீ வந்ததுல இருந்து இங்க என்ன நடந்தது நீ என்ன செஞ்சன்னு நானும் பாத்தேன். அவளை கொல்ல தானே நீ வந்த, இப்ப என்ன அவளை கையோட தூக்கிட்டு போற?"
என்று கேட்டு நின்ற நபரை விநோதமாக பார்த்து வைத்த அகி, "அதை எதுக்கு நான் உங்ககிட்ட சொல்லனும். வழிய விடுங்க நான் போகனும்" என்றபடி முன்னே நகர்ந்தான்.
"ஏனா நான் கேத்தரின் லைராவோட அம்மா"
கேத்தரின் அடுத்து சொன்ன வார்த்தைகளில் அப்படியே நின்றுவிட்டான் அகி. அவரை திரும்பி சந்தேகமாய் பார்த்தவன்
"நீங்கதான் இந்த பாப்பாவோட அம்மான்னா எதுக்கு கொல்லாம போறேன்னு கேக்குறீங்க" சந்தேகத்துடன் கேட்டாலும் நியாயமாய்தான் கேட்டு வைத்தான் அகி.
அதற்கு எதுவும் சொல்லாமல் விரக்தி சிரிப்பை மட்டும் உதிர்த்த கேத்தரின் "நான் சொன்னாலும் புரிஞ்சிக்குற வயசு உனக்கு இல்ல.." என அவர் பேசும் போதே வெளியே சலசலவென எதுவோ சத்தம் கேட்க, பரபரப்பானார் கேத்தரின்.
"இங்க பாரு தம்பி இங்க என்ன நடக்குதுன்னு விளக்கமா சொல்ல இப்போ எனக்கு நேரம் இல்ல, அதனால நான் சொல்றதை நல்லா கவனமா கேட்டுக்கோ. என் பொண்ணு லைரா இங்க இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் இந்த தோரா வம்சத்தால ஆபத்து, நான் என்னோட அப்பா இருக்க இடத்துக்கு உங்கள அனுப்பறேன். என் பொண்ண பத்திரமா அந்த இடத்தில மட்டும் விட்டிரு தம்பி"
கேத்தரின் அதோடு அவள் கையில் இருந்த டைரியை அகஸ்டஸின் கையில் வைத்து அதையும் அவள் தந்தை ஜானிடம் சேர்ப்பிக்க சொல்லி, இருவரையும் ஜான் இருக்கும் இடத்திற்கு அனுப்பிவிட்டாள். அகி என்ன நடக்கிறது என யோசிக்கும் முன்னரே அவன் ஜானின் முன்னால் போய்விட, அகி ஜானிடம் அவனுக்கு புரிந்த அளவில் அங்கு என்ன நடந்தது என சொல்லி முடித்தான். அதன்பின் அந்த இடத்தில் இருந்து கிளம்பி சிரில் இருக்குமிடத்திற்கு வர, அங்கு தோரா அரண்மனை தீயின் பிடியில் சிக்கி இருந்தது.
"இவ்ளோ நேரம் என்ன செஞ்ச அகி.. போன வேலை முடிஞ்சிதா?"
பதற்றத்துடன் கேட்ட சிரிலிடம் உண்மையை மறைத்து ஆம் என தலையை அகி ஆட்டவும், இருவரும் அங்கிருந்து கிளம்பி தங்கள் வீட்டை அடைந்தனர்.
ஒரு ஏழு வயது சிறுவனை நம்பி தன் பேத்தியை மகள் அனுப்பி இருக்கிறாள் என்றால் அவளின் நிலை என்னவோ என ஜான் பயந்தாலும் லைராவை காப்பது மட்டுமே அப்போது சரியாய் தோன்றியது அவருக்கு. எனவே அகி அங்கிருந்து கிளம்பிய மறு நிமிடமே அவர் தான் இருக்கும் இடத்தை மாற்றிவிட்டார்.
"உங்ககிட்ட உண்மைய சொல்ல பயமா இருந்துச்சு டேடி, அதான் நான் ரொம்ப வருஷமா சொல்லலை. ஆனா அதுக்கப்புறம் லைராவ பத்தி அடிக்கடி கனவு வர ஆரம்பிச்சது. அவளுக்கு எதுவும் ஆகியிருக்குமோன்னு பலநாள் தூக்கம் வராம நான் தவிச்சிருக்கேன் டேடி. அதனால கொஞ்ச வருஷம் கழிச்சு லைராவை பாக்க ஜான் தாத்தா இருந்த பழைய இடத்துக்கு போனேன். ஆனா அவங்க அங்க இல்ல, எப்பவோ இடத்தை காலி பண்ணிட்டதா பக்கத்துல இருந்தவங்க சொன்னாங்க. அதேசமயம் இத்தனை வருஷமா அவளை தேடுறதையும் நான் நிறுத்தல.
அவ மேல நான் வச்ச அன்பு எப்போ எப்படி லவ்வா மாறுச்சுன்னு எனக்கு தெரியலை. ஆனா இங்க என் மனசுல ஆழமா அவ வந்து உக்காந்துட்டா. அப்படி இருக்கும் போதுதான் அவ நம்ம காலேஜ்ல.. என் கிளாஸ்லையே வந்து சேந்தா. அவளை மறுபடியும் பதினாறு வருஷம் கழிச்சு பாத்தேன் டேடி.. அவளை பாத்த உடனே அவதான் என் லைப்னு நான் முடிவு பண்ணிட்டேன்.. இப்ப மறுபடியும் அவளை இழக்க நான் தயாரா இல்ல டேடி"
அகி தன் பக்கம் நடந்தவற்றை எல்லாம் சொல்லி அவன் மனதை தெளிவாய் விளக்க, அவன் மனதிற்குள் இவ்வளவு ஆண்டுகள் இருந்த சொல்லாத ரகசியம் எல்லாம் ஆச்சரியத்தை தந்தது அவன் தந்தைக்கும் அண்ணனுக்கும்.
"அகி லைரா மேல இருந்து வர நறுமணத்தை உன்னால உணர முடியுதா?"
அகஸ்டஸ் பேசி முடிக்கும் முன்னரே பரபரப்பாக கேட்டார் ஜான் தாத்தா. அதற்கு அவரை குழப்பமாக பார்த்தாலும் அகி ஆமென தலையசைக்க, "லைரா குட்டி உனக்கு அகஸ்டஸ் மேல இருந்து எப்பவும் எதாவது நறுமணம் வரதை உணர முடிஞ்சிருக்கா" அடுத்து லைராவை பார்த்து ஆர்வமாய் கேட்டார்.
தானும் ஜானை குழப்பமாய் பார்த்த லைரா "ஆமா தாத்தா அவர்மேல எப்பவும் ஒரு சாண்டல் வுட் வாசம் வரும், ஏன் இப்பக்கூட வருது" என்றாள்.
இருவரையும் நம்ப முடியாத ஆச்சரியத்துடன் பார்த்திருந்த ஜான் தாத்தா "அந்த ஆண்டவன் ஏன் உங்கள சேர்த்து வச்சார்னு இப்ப எனக்கு புரியுது" என்றார் பரவசத்துடன்.
அவரின் பரவசத்தை மற்றவர்கள் குழப்பமாக பார்க்க, அகி லைரா இருவரின் கண்ணத்தையும் அன்பாக தடவிக்கொடுத்தார் ஜான்.
"இணை"
அவரின் வாயோ மெல்ல அந்த வார்த்தைகளை முணுமுணுத்தது...
-தொடரும்