வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இருள் பூவின் ஒளிச்சுடரே! - 5

GG writers

Moderator
அத்தியாயம் - 5

ஒரு வாரம் இன்டர் காலேஜ் பெஸ்ட் நல்லபடியாய் நடைபெற்று முடிந்திருக்க, அநேக போட்டிகளில் வெற்றி பெற்று ஓவரால் சேம்பியன்சிப்பை அடித்து வந்திருந்தது அகஸ்டஸ் குழு. அடுத்த நாள் ஆடிட்டோடியத்தில் வைத்து மாணவர்களுக்கு பரிசை கொடுத்து அவர்களை மகிழ்வித்தது கல்லூரி நிர்வாகம்.

அகஸ்டஸுக்கு இப்போதுதான் நிம்மதி பெருமூச்சு வந்தது. ஏனெனில் இப்போது எந்தவொரு தொந்தரவும் இன்றி தன் மனம் கவர்ந்தவளை பார்க்க முடியுமே என்றுதான்.

அதே ஆர்வத்துடன் தன் வகுப்பிற்கு சென்று பாடத்தை எடுத்தவன், எப்போதும் போல் பார்வையால் சாயாவை விழுங்கும் வேலையையும் ஆரம்பித்தான். அவன் பார்வையை கண்டு தற்போது சாயாவுக்கு மீண்டும் குழப்பமானது.

ஏனென்றால் நேற்று இரவுதான் அகஸ்டஸின் பார்வை எல்லோரையும் பார்ப்பது போலவே தன்னையும் பார்க்கிறது. அவள்தான் அதை தவறாக நினைத்துக் கொண்டாள் என்று இறுதியாக மனதிற்குள் ஒரு முடிவை எடுத்து, இனி ஒழுங்காக படிக்கும் வேலையை மட்டும் பார்க்க வேண்டும் என உறுதியான முடிவை எடுத்திருந்தாள்.

ஆனால் இன்று அவனின் பார்வை மீண்டும் அவள் மேல் விழுந்ததில், அவள் எடுத்திருந்த முடிவு எல்லாம் முட்டுச்சந்தில் போய் முட்டிக்கொண்டது.

'பின்னாடி என்ன நடக்குதோ நடக்கட்டும். ஆனா இப்ப அவர் பாக்குற பார்வை எனக்கு சந்தோஷத்த தருது. இது எவ்ளோ தூரம் போகுதோ போகட்டும்' என்ற முடிவுக்கு வந்து அவன் பார்வையை ரசிக்க தொடங்கும் ரசிகையாய் மாறிப்போனாள்.

வகுப்பு முடிந்து போகிற போக்கில் அகி "சாயா லஞ்ச் பிரேக்ல ஸ்டாப் ரூம் வந்திருங்கமா, கொஞ்சம் பேசணும்" கள்ள சிரிப்போடு அலட்டாமல் சொல்லி சென்றதில், சாயாவின் மனம்தான் ஆயிரம் குதிரையின் வேகத்தை தத்தெடுத்தது.

'என்னவா இருக்கும். ஒருவேளை லவ்வ சொல்ல வர சொல்றாரோ. ஐயோ ஹார்ட் வேற இப்பனு பாத்து இப்படி அடிச்சிக்கிது'

"ஹே சாயா அகஸ்டஸ் சார் உன்கிட்ட பிரப்போல் பண்ண வர சொல்றாரு போலடி" அவள் மனதிற்குள் சாயா பேசியதை கேட்டதைப்போல் பக்கத்தில் இருந்த அவள் தோழி பீரித்தா சொன்னதில் கண்களை விரித்து வைத்தாள் சாயா.

இவர்கள் அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள் என பார்க்கும் பார்வைகள் எல்லாம் பக்கத்திலே அமர்ந்திருக்கும் பீரித்தாவுக்கு தெரியாமல்தான் போகுமா. ஊரே பார்க்கும்படி தான் அவன் ஜொல்லை ஊத்துகிறானே, அதை வைத்துதான் அவள் சாயாவிடம் சொன்னது.

"ஹே என்னடி இப்படிலாம் பேசுற... சார் போய்.. அதுவும் என்ன... என்கிட்ட புரபோஸ் பண்ண போறாரா. எதாவது உளறாதடி, யாராவது கேட்டா தப்பா நினைச்சுக்க போறாங்க"

ஏதும் அறியா பச்சை பிள்ளை போல் ஒரு ஆக்டிங்கை போட்டு சாயா நிறுத்த, அவளை மேலிருந்து கீழாக பார்த்த பீரித்தா

"இல்ல நான் தெரியாமதான் கேக்குறேன், சார் உன்ன பாத்து ஜொல்லு ஊத்துறது உனக்கு தெரியாது அப்படிதானே" நக்கலாய் கேட்டவள்

"ஆத்தாடி ஆத்தா என்னாமா நடிக்கிற, எனக்கே காது குத்த பாக்குறல நீ. நீ நடத்து ஆத்தா நடத்து" என்றாள் கடுப்பாக.

பீரித்தா சொன்ன விதத்தில் சிரித்துவிட்ட சாயா எப்போதடா மதிய உணவு வேலை வருமென காத்திருக்களானாள். பெல் அடித்ததுதான் தாமதம் என்று வேகவேமாய் சாப்பாட்டை வயிற்றிற்குள் அனுப்பிவிட்டு ஸ்டாப் ரூமுக்கு ஓட்டம் எடுத்தாள்.

அங்கே இவளுக்கு சற்றும் சளைக்காமல் தானும் உணவை விழுங்கியிருந்த அகி, சாயாவுக்காய் ஆவலாய் வாசலை பார்த்திருந்தான்.

"சார்"

சாயாவின் குரல் தேனாக காதில் விழ அவ்வளவு மகிழ்வுடன் நிமிர்ந்து பார்த்தான் அகி. இன்று எப்படியாவது தன் காதலை அவளிடம் சொல்லிவிட வேண்டுமென முடிவெடுத்திருந்த அகஸ்டஸ், யாருக்கும் சந்தேகம் வராமலிருக்க ஒரு புக்கை கையில் எடுத்துக் கொண்டு அவளை ஸ்டாப் ரூமை விட்டு வெளியே அழைத்து வந்தான். நினைப்பது எல்லாம் நடந்துவிட்டால் வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம். இவன் காதல் சொல்லும் படலமும் நடக்குமா பார்க்கலாம்.

"சார் லஞ்ச் டைம்ல வந்து உங்கள மீட் பண்ண சொன்னீங்களே, என்ன விஷயம் சார்"

படபடவென இதயம் தாளம் போட ஒருவித எதிர்ப்பார்ப்புடன் அகஸ்டஸை பார்த்திருந்தாள் சாயா. என்னதான் சாயாவை வர சொல்லியிருந்தாலும் அகிக்கு தன் மனதை எப்படி அவளிடம் சொல்வது, அதுவும் இங்கு அவன் ஆசிரியர் அவள் மாணவி. அப்படி இருக்க இங்கு வைத்து தன் காதலை சொன்னால் சரியாக இருக்குமா என்று வேறு இருந்தது.

அவன் தன்னை அழைத்து வந்துவிட்டு அமைதியாய் நிற்பதில் குழம்பிய சாயா "சார்" என அழைத்து அமைதியை கலைத்தாள்.

"ம்ம் சாயா நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அதான் வர சொன்னேன்"

தயங்கியபடி அகி ஆரம்பிக்கவும் "சொ..சொல்லுங்க சார்" உதட்டை கடித்தபடி தான் எதிர்ப்பார்த்த பதில் வருமென நம்பி சாயாவும் காத்திருக்க, "சாயா அது... அது நான்"

"குட் ஆப்டர்நூன் சார்"

அகஸ்டஸ் பேச ஆரம்பித்தப்போது சரியாக இடையில் நான்சிங்கில் ஒரு குரல் வர, அகஸ்டஸ் மனதில் இருந்த மொத்த காதல் உணர்வும் கடுப்பு உணர்வாக மாறியது. காதிலிருந்து புகை வராத குறைதான், மற்றபடி ரெடிமேட் அடுப்பாக நின்றிருந்தான்.

'யாருடா அது இந்த நேரத்துல நந்தி மாதிரி'

கோபத்தில் திரும்பி பார்த்த அகிக்கு அவன் முன் நின்றிருந்த நபரை கண்டு கோபம் கூட பட முடியவில்லை. காரணம் அவன் முன் நின்றது அவன் தங்கை நடாஷா ஆகிற்றே. ஆசை தங்கையிடம் கோபத்தை காட்ட முடியுமா நம் அகஸ்டஸால். எனவே இருந்த கோபம் எல்லாம் புஸ்ஸென காற்றில் பறக்கவிட்டான்.

"அண்... ஆன் சார் இவங்க யாரு"

கண்ணில் குறும்பு மின்ன கேட்ட தங்கையை செல்லமாய் முறைத்த அண்ணன் "ஏய் வாலு அதான் வரலைல. அண்ணான்னே கூப்பிடு" என தலையை கலைத்துவிட்டான்.

அதற்கு அழகாய் சிரித்து தலையை ஒருபுறமாய் சாய்த்த நடாஷா "ஓகே ண்ணா, ஆனா இவங்க யாருன்னு நீங்க இன்னும் சொல்லையே"

விளையாட்டாய் கேட்ட தங்கையிடம் இவன் என் காதலி என்றா சொல்லமுடியும், என் மாணவி என்றுமட்டும் சொல்லி சமாளித்து வைத்தான். இவர்களை குழப்பமாக பார்த்த சாயாவை இப்போது அகி பார்த்து மனதிற்குள் சிரித்து கொண்டான். இவர்களை பார்த்த அந்த தூய்மையான கண்களில் இப்போதும் வீழ்ந்து தான் போனான் அவன்.

"சாயா இவ நடாஷா, என் தங்கச்சி. என்னோட சித்தப்பா பொண்ணு. இங்கதான் தேர்ட் இயர் ஆர்க்கி படிக்கிறா. ஆன் அப்புறம் நீ கேட்ட புக் இதுதான் இந்தாமா. போ கிளாஸ்க்கு டைம் ஆச்சுபாரு"

தன் மௌன நிலையிலிருந்து மீண்டிருந்த அகஸ்டஸ் நேக்காக சாயாவை கழட்டிவிட, ஒன்றும் புரியவில்லை என்றாலும் மண்டையை ஆட்டிவிட்டு வகுப்பிற்கு சென்றாள் அவளும்.

அதேநேரம் இருவிழிகள் இவர்கள் மூவரும் பேசுவதை இவ்வளவு நேரம் கண் எடுக்காமல் பார்த்திருந்தது. அதுவும் அந்த விழிக்கு சொந்தமான நபர் சாயாவின் சாயலை கண்டு அதிர்ந்து போனார்.

'இது எப்படி சாத்தியமாகும்' குழம்பிய அவர் மனம் 'இதை கண்டிப்பா அவங்ககிட்ட சொல்லியே ஆகனும்' என முடிவெடுத்து மற்ற யாரும் அறியா வண்ணம் "டிரான்ஸ்பெரோ' என்க அந்த கல்லூரியாலிருந்து மாயமானார்.

-----------------------

அந்த அடர்ந்த காட்டின் மத்தியில் வீற்றிருந்தது அந்த பிரம்மாண்ட மாளிகை. வானுயர வளர்ந்த மரங்கள் எல்லாம் சூழ்ந்திருக்க, பயங்கர இருள் அந்த மாளிகையை இன்னும் பயங்கரமாய் காட்டியது. அந்த மாளிகையின் முன்னே தான் நின்றிருந்தார் கல்லூரியில் இருந்து கிளம்பிய அந்த நபரும்.

அந்த நபர் நேராக உள்ளே செல்ல யாரும் அவரை தடுக்கவில்லை. சிறிது தூரம் சென்ற நபர் நல்ல விஸ்தாரமான ஒரு அறையின் கதவை திறக்க, அங்கே நடுவில் மட்டும் ஒரு சிம்மாசனம் வீற்றிருந்தது.

அதில் கிட்டத்தட்ட எழுபது வயது மதிப்பு தக்க நபர் ஒருவர் அமர்ந்து புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்தார். நேராக சென்ற இந்த நபர் அவரின் முன் மண்டியிட்டு

"தோராவுக்கு என் வணக்கம்" என்றார்.

"சொல்லு வில்லியம் நீ போன காரியம் என்ன ஆச்சு. நான் சொன்ன வேலைய முடிச்சிட்டியா"

புத்தகத்தின் பக்கங்களை திருப்பிக்கொண்டு தோரா கேட்க, அவர் முன்னால் எழுந்து நின்ற வில்லியம்

"அதுக்கான சரியான சூழ்நிலை அமையல தோரா. ஆனா அதவிட முக்கியமான ஒரு விஷயத்தை நான் அங்க பாத்தேன். என் மனைவி கேத்ரின் சாயல்ல, இன்னும் சரியா சொல்லனும்னா அச்சு அசலா கேத்ரினை உரிச்சு வச்ச மாதிரி ஒரு பொண்ணை நான் அங்க பாத்தேன். அவளோட வயசு கூட தோராயமா பதினெட்டு இருக்கும்னு தோணுது தோரா"

வில்லியமே அதிர்ச்சி விலகாமல் கூறிக் கொண்டிருக்க, அவரை நிமிர்ந்து பார்த்த தோராவின் முகத்திலும் அவ்வளவு அதிர்ச்சி.

"இது எப்படி சாத்தியம் வில்லியம், அந்த குழந்தைதான் செத்திருச்சே அப்புறம் எப்படி. கேத்ரினோட உடன்பிறந்தவங்கனு யாராவது இருக்கப்போறாங்க, அவங்க வாரிசாகூட இருக்கலாம். எதுக்கும் நீ கேத்ரின்ட்ட கேட்டு பாரு வில்லியம்" தோரா தான் நினைத்ததை கூறினார்.

"சரி தோரா நான் உடனே போய் கேத்ரின்ட்ட கேக்குறேன்"

தோராவிடம் பேசி முடித்த வில்லியம் நேராக சென்றது அவர் அறை நோக்கியே. இரண்டாவது மாடியில் இருந்த அவர் அறையில் சோக சித்திரமாய் அமர்ந்து வெறுமையை நோக்கும் கேத்ரினை பார்த்த வில்லியமின் முகம் இறுகியது. கேத்ரினின் ஜீவனில்லா கண்களை கண்ட வில்லியமுக்கு எதையும் கேட்க மனம் வரவில்லை.

இரண்டு நிமிடங்களுக்கு மேல் அந்த இடத்தில் நிற்க பிடிக்காமல் வேகமாய் வெளியேறிவிட்டார் வில்லியம். வெளியே வந்து தனிமையை தேடிய வில்லியமின் மனதிற்குள் பல எண்ணங்கள். அதில் அன்று தன் சொந்த ரத்தத்தையே பலி கொடுத்த நினைவு வர அதை குறித்து எந்தவொரு கவலையும் அவர் மனதை அரிக்கவில்லை.

மாறாக அந்த பெண் யாராக இருக்கும் என்ற கேள்வியே அவர் மனதில் மேலோங்கி நின்றது. அவர் யோசனையில் இருக்கும் போது, ஒரு கரம் அவர் தோளில் விழ அந்த கரத்துக்கு சொந்தக்காரனோ "என்ன ஆச்சு டேடி நான் வந்ததுகூட தெரியாம அப்படி என்ன யோசனை" என்றான்.

அவனை கண்டதும் பளிச்சென்று புன்னகை சிந்திய வில்லியம் "நோவா நீ கலிபோர்னியால இருந்து எப்போ வந்த, நீ போன காரியம் என்ன ஆச்சு" என்றார்.

"நான் காலைல வந்தேன் டேடி, ஆனா போன காரியம் எதுவும் நடக்கலை. அவ்ளோ வேலை பாத்தும், ஒரு சின்ன குளூ கூட கிடைக்கல" உச்ச கோபத்தில் நோவா கத்த

"நோவா இந்த கோபம் உனக்கு தேவையில்லாதது. ஏன்னா நீதான் அடுத்த தோரா ஆகப்போற, அதுக்காக நான் என்ன விலை கொடுத்திருக்கேன்னு நீ மறக்கக்கூடாது. அதுக்கு தகுந்த மாதிரி நீ நடந்துக்கனும் புரியுதா"

ஆரம்பத்தில் அவன் தோளை தட்டி ஆசுவாசப்படுத்திய வில்லியமின் கைகள், இப்போது அழுத்தமாக மாற வலியில் நோவா புருவத்தை சுருக்கினான். அதை கண்டு மெல்ல தன்னை நிலைநிறுத்திய வில்லியம்

"சரி அதை விடு, உனக்கு நான் வேறொரு வேலை வச்சிருக்கேன். நாளைல இருந்து நீ அந்த வேலைய பாரு" இப்போது சாந்தமாக பேசி நோவாவிடம் அவன் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டார்.

அவர் சொல்லதை எல்லாம் கேட்ட நோவாவுக்கு 'எதுக்கு இதை செய்யனும்' என்ற குழப்பம்தான், ஆனால் எப்போதும் தந்தை சொன்னதை மட்டும் செய்து பழகிய நோவாவுக்கு ஆமென தலையசைப்பதை தவிர வேறு எதுவும் தெரியவில்லை.

வில்லியம் சொன்னதை செய்ய கிளம்பிய நோவா அவன் அன்னை கேத்ரினின் அறை அருகே வர, அவன் கண்களில் தானாக உள்ளே சென்று மீண்டது. அவன் மனமோ சொல்ல முடியா ஏக்கத்துடன் அந்த அறையை பார்க்க, மெல்ல திரும்பி அவன் தந்தை இருக்கும் பக்கம் ஒருமுறை பார்த்தான். பின் ஒரு பெருமூச்சுடன் அந்த அறையை கடந்து சென்றுவிட்டான்.

-தொடரும்
 
Last edited:
Top