வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இருள் பூவின் ஒளிச்சுடரே! - 7

GG writers

Moderator
அத்தியாயம் - 7

இருளின் போர்வையில் பொன்மாலை நேரம் கூட அந்த அடர்ந்த வனத்தில் கொஞ்சம் அச்சுறுத்தலை தர, எந்த வழியில் போவது என தெரியாமல் தூரத்தில் தெரிந்த மாளிகையை வெறித்து பார்த்தான் அகஸ்டஸ்.

எப்போது மாணவர்கள் சாயாவை காணவில்லை என்றனரோ அதன்பின் பேருந்தில் இருப்பு கொள்ளவில்லை அவனுக்கு. எப்படி அதுவும் இந்த காட்டுக்குள் இவ்வளவு மாணவர்கள் இருக்கும் போது சாயா மட்டும் காணாமல் போவாள் என மண்டை வெடித்தது அகஸ்டஸுக்கு‌.

அதோடு இனி மாணவர்கள் இங்கு இருப்பது ஆபத்து என்று உணர்ந்து, அவர்களை பேருந்து ஓட்டினரின் பொறுப்பில் ஒப்படைத்து 'இனி வண்டி சென்னைல போய்தான் நிக்கனும், இடைல நிக்கவே கூடாது. நான் சாயாவ பத்திரமா கூட்டிட்டு வரேன்' கண்டிப்பாய்‌ சொல்லி அனுப்பிவிட்டான்.

மாணவர்கள் எவ்வளவு தடுத்தும் கேட்காது அகஸ்டஸ் அங்கேயே இறங்கி கொண்டு சாயாவை தேட கிளம்பிவிட்டான்.

பேருந்து நின்ற இடத்தில் இருந்து அந்த மாளிகை இருக்கும் இடம் வரை சுற்றி சுற்றி தேடிப்பார்த்து விட்டான். ஆனால் சாயாவை கண்ணில் காணவில்லை, அகிக்கு அவள் கிடைக்காத ஒவ்வொரு நிமிடமும் மனதிற்குள் பூகம்பமே வெடித்துக் கொண்டிருந்தது.

கிட்டதட்ட ஐந்து நிமிடத்திற்கு மேல் அகி அந்த பாதையில் நடந்து வர அவர்கள் பார்த்து சென்றிருந்த பிரம்மாண்ட மாளிகை அவன் பார்வையில் வந்து விழுந்தது.

'ஒரு வேள சாயா இந்த மாளிகைய சுத்தி பாக்க உள்ள போயிருப்பாளோ. அப்படிதான் இருக்கும் இந்த இடத்தில அவ வேற என்ன பண்ண போறா. சரியான ஆர்வ கோளாறு, என் கைல சிக்குடி அப்போ பாத்துக்கிறேன்"

அப்படிதான் நடந்திருக்கும் என அவன் மனம் அடித்து சொல்ல, அந்த மாளிகைக்குள் அவளை தேடிப் பார்க்க சென்றான் அகஸ்டஸ்.

"நான்ஃசிகார்"

அகஸ்டஸ் அந்த வார்த்தையை உச்சரித்து சாயாவை கண்டுபிடிக்க மந்திரத்தை போட்டு பார்க்க, அவன் அனுப்பிய மந்திரம் எந்த பலனும் தராது அவனை சோதித்து பார்த்தது.

"என்னோட மேஜிக் ரிப்பெல் ஆகுது, அப்போ இந்த இடத்தில வேற சில விசார்டும் இருக்காங்க"

தன் மந்திரம் எச்சரிக்கை விடுப்பதை போல் திரும்பி வந்ததில் இதை அகி உணர, திடீரென்று அவன் மனம் பயத்தை தத்தெடுத்தது.

"ஐயோ அப்ப சாயா உள்ள போய் யார்கிட்ட மாட்டுனான்னு தெரியலையே, அதோட இங்க எந்த பரம்பரைய சேர்ந்தவங்க இருக்காங்கனும் தெரியலையே" பதறிப்போன அகஸ்டஸ் இனிமேல் ஒரு நிமிடம் கூட தாமதிக்க கூடாது என மாளிகைக்குள் முன்னேற முடிவெடுத்தான்.

இங்கே இருப்பவர்கள் எந்த பரம்பரையை சேர்ந்த மந்திரவாதிகள் என தெரியாத போது பத்திரமாக செல்ல வேண்டும் என்பதற்காக "அக்கல்சர்" என்று மறையும் மந்திரத்தை உச்சரித்து தன்னை சுற்றி பாதுகாப்பு வளையத்தை போட்டு உள்ளே நுழைந்தான் அகி.

அந்த மாளிகையின் பெரிய ஹாலில் யாரும் இல்லை, ஆனால் முணுமுணுவென பேச்சு குரல் மட்டும் எங்கிருந்தோ வந்தது. அவன் கீழே இருந்த அறைகளில் தேடி பார்க்க சத்தம் வந்ததற்கு மாறாக அங்கே ஆள் நடமாட்டம் சுத்தமாக இல்லை, அதேப்போல் சாயாவும் அங்கில்லை.

'எங்கடி போன! ஐயோ இந்த காட்டுமிராண்டி கூட்டத்துட்ட மாட்டுனா இவனுங்க என்ன பண்ணுவானுங்கனே சொல்ல முடியாது. என் கைல சிக்குவல்ல அப்ப இருக்குடி, உன்ன பாத்துக்கிறேன்'

சாயாவை மனதிற்குள் திட்டினாலும் அதில் அகிக்கு நிறைந்திருந்தது எல்லாம் கண்மண் தெரியாத பாசமே. அவன் இப்படி திட்டவும் காரணம் இருந்தது. ஏனெனில் அந்த மாளிகையின் உள்ளே நுழைந்தவுடன் அகிக்கு தெரிந்துபோனது இது எந்த பரம்பரையின் இடமென.

ஆம் அந்த மாளிகை சுவர்களில் எல்லாம் பெயர் பிறந்த இறந்த தேதியை முதற்கொண்டு அனைத்தையும் குறிப்பிட்டு பல நபர்களின் புகைப்படங்கள் மாட்டப்பட்டிருக்க, அதை பார்த்த அகிக்கு இது தோராவின் பரம்பரை மாளிகை என புரிய நேரம் எடுக்கவில்லை. அது தெரிந்தபின் இன்னும் அவன் மனதில் அவன் காதலியின் நிலை குறித்து பயம் கூடி போக, தன் தேடும் வேகத்தை அதிகரித்தான்.

மந்திரத்தை பயண்படுத்தி மற்றவரின் கவனத்தை ஈர்க்காது, தானே ஒவ்வொரு இடமாய் சென்று தேடினான். கீழே தேடி முடித்து மேல் தளத்திற்கு செல்லும் படிக்கட்டை தேடி கண்டுபிடித்து மெல்ல மேலே அகி ஏறி பார்க்க, அந்த தளத்தின் முடிவில் ஒரு அறை தெரிந்தது‌. அதுவும் அந்த அறையின் கதவு மந்திரத்தால் மூடப்பட்டிருந்தது. ஆனால் உள்ளே இருந்து பேச்சு குரல்கள் தெளிவாக கேட்க

'இந்த ரூம்ல இருந்துதான் பேச்சு சத்தம் வருது. வெளியே ஸ்பெல் போட்டு கதவை பூட்டி இருக்காங்க' யோசித்த அகஸ்டஸுக்கு சாயா இவர்களிடம் எதுவும் மாட்டி கொண்டாளோ என்ற எண்ணம் தோன்ற தன் காதலியை எண்ணி பதற்றத்தில் வேர்த்து போனான் அந்த காதலன்.

உள்ளே எத்தனை நபர்கள் இருக்கிறார்கள் தன்னால் உள்ளே சென்றால் அவர்களை சமாளிக்க முடியுமா என சிறிதும் யோசிக்காது, சாயாவை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் அந்த அறைக்குள் சென்று பார்க்க முடிவெடுத்த அகஸ்டஸ் 'யார் வந்தாலும் பாத்துக்கலாம்' என்று முன்னேறினான்.

அகஸ்டஸ் அறைக்கதவின் முன் இருந்த மந்திர வளையத்தை உடைக்க எதிர் மந்திரம் போட போகும் நேரம் அவன் வாயை ஒரு கை பொத்தியது.

அந்த கையின் அசாத்திய மென்மை, அதோடு அவன் பின்னிருந்து வந்த அடர் லாவேண்டர் மலரின் நறுமணம்.. வந்தது யார் என பின்னால் பார்க்காமலே அவனுக்கு உணர்த்த, தன் காதலி கிடைத்த மகிழ்வில் அப்படியே பின்னால் திரும்பி அவளே எதிர்பாரா வண்ணம் காற்று கூட புக முடியாத அளவு இறுக்கி அணைத்துக் கொண்டான் அகி.

அவன் இதயம் துடித்த வேகத்தை வைத்து சாயாவுக்கு புரிந்தது, தன்னை காணாது அவன் எவ்வளவு பதறி இருக்கிறான் என.

சாயா கிடைத்த மகிழ்ச்சியில் அவன் மந்திர வளையத்தில் இருந்தும் எப்படி சாயா அவனை கண்டுக் கொண்டாள் என யோசிக்க மறந்தான் அகஸ்டஸ். மௌனமே சில நேரம் நீடித்திருக்க, நேரம் செல்ல செல்ல அகியின் அணைப்பு கூடியது.

"ச..சார் எ..எ..என்ன பண்றீங்க"

தன் உணர்வுக்கு வந்த சாயா, அகியின் அணைப்பிலிருந்து மெல்ல பின்னால் நகர்ந்தபடி கேட்டாள். சாயா கேட்டதற்கு எதுவும் பதில் தராத அகி, அவளை ஆனமட்டும் முறைத்து வைத்தான்.

"எதுக்கு சார் இப்படி முறைக்குறீங்க"

தன்னை குற்றம் சொல்லும் பார்வை பார்த்த அகியிடம் பயத்துடன் சாய் கேட்க வைக்க, அவளின் கேள்வியில் அவளை மேலும் முறைத்தான்.

"நீ மட்டும் தனியா இங்க இந்த இடத்தில என்னடி பண்ற. அங்க உன் பிரண்ட்ஸ் எல்லாம் உன்ன காணோம்னு பயந்துட்டு இருக்காங்க‌. முதல்ல யாரை கேட்டு இந்த மாளிகைக்குள்ள நீ வந்த. இந்த இடத்தில உனக்கு எதாவது நடந்திருந்தா நான் என்னடி பண்ணியிருப்பேன்"

இருந்த பயம் எல்லாம் கோபமாய் மாற மரியாதை எல்லாம் காற்றில் பறக்க சாயாவை பிடிபிடியென பிடித்துக் கொண்டான் அகி.

"அது வந்து சார்... நான் தெரியாம... அது சுத்தி பாக்கலாம்னு" சாயா திணறி வைக்க

"என்ன தெரியாம, இல்ல என்ன தெரியாம... இந்த நடு காட்டுக்குள்ளதான் மேடம் சுத்தி பாப்பீங்களா. என் கோவத்தை அதிகப்படுத்தாத சொல்லிட்டேன்" வறுத்தெடுத்தான் புரபஸர்.

"சாரி.. சாரி சார்... ரொம்ப சாரி. இனி இப்படி பண்ணவே மாட்டேன்"

"ஓஹோ உனக்கு திரும்ப இப்படி பண்ணனும்னு எண்ணம் வேற வருதோ"

அகஸ்டஸ் எகிறிக்கொண்டு வரவும் சாயா அமைதியாகிவிட, "சரி கிளம்பு போலாம். இனி ஒரு நிமிஷம் கூட இந்த இடத்துல நிக்க கூடாது" என அவசரப்படுத்தினான்.

சாயாவும் சரி என அவன் பின்னே கிளம்பிய நேரம் இவர்கள் முன் இருந்த அறைக்குள் இருந்து ஆட்கள் வரும் காலடி சத்தம் கேட்டது. கொஞ்சம் நேரம் செல்ல செல்ல அந்த காலடி சத்தம் இவர்களின் புறம் நெருங்குவதை உணர்ந்த அகி சாயாவை வேகமாக இழுத்துக் கொண்டு எதிர் புறம் இருந்த அறைக்குள் நுழைந்தான்.

"என்னாச்சு சார்"

அகஸ்டஸின் வேகத்தில் குழம்பிப் போய் சாயா கேட்க, "ஷ்ஷ் கொஞ்ச நேரம் அமைதியா இரு" என அவளை அடக்கிய அகி மெல்ல கதவை திறந்து அந்த வழியே பார்த்தான்.

வெளியே ஒரு பத்து மந்திரவாதிகள் கொண்ட குழு அந்த அறையிலிருந்து வெளியே வந்திருந்தது. அந்த கூட்டத்தில் இருந்த மந்திரவாதிகள் எதையோ தீவிரமாக பேச, அவர்களுக்கு நடுவே இருந்த ஒருவன் தன் பார்வையாலே அவர்களை அடக்கினான்.

'அந்த நெட்டையனோட முகம் எங்கையோ பாத்த மாதிரி இருக்கே. எங்க பாத்திருக்கோம்'

அகியின் மூளை அவன் நினைவு அடுக்குகளில் அந்த ஆளின் முகத்தை தேடி ஒப்பிட்டு பார்க்க சுத்தமாய் நினைவில் வரவில்லை.

அதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம், இப்போது அங்கு என்னதான் நடக்கிறது என கவனிக்க ஆரம்பித்தான். இவனின் தந்தை சொல்லியதைப் போல் சோல் ஆஃப் ஹார்ட்டை திருட நடக்கும் சதியில் இவர்களின் பங்கும் இருக்குமோ என அவன் மனது சந்தேகத்தை கிளப்ப, உன்னிப்பாகக் கவனித்தான்.

ஆனால் அவர்கள் பேசுவது இவன் காதில் விழவில்லை, அங்கே பேசியவர்களும் அப்படியே கீழே இறங்கி சென்றுவிட பெருமூச்சு விட்ட அகி அவன் இங்கு வந்ததில் இருந்து நடந்தவற்றை எல்லாம் யோசித்தான்.

எதை எதையோ யோசித்தவனின் மூளை கடைசியாக சாயாவிடம் வந்து நிற்க,

"எனக்கு ஒரு சந்தேகம் சாயா.. நீ இந்த மாளிகைய சுத்தி பாக்க வந்தது எல்லாம் சரிதான். இவ்வளவு நேரம் இங்க என்னடி செஞ்சிட்டு இருந்த? நான் வந்து எவ்ளோ நேரம் உன்ன தேடுனேன்.. அப்பலாம் நீ என் கண்ல படலையே. ஆனா அதுவும் அந்த கதவுக்கிட்ட போறப்ப சரியா எப்படி நீ என்கிட்ட வந்த?"

வரிசையாய் அகி கேள்வி கேட்க சாயாவுக்கு பயத்தில் வியர்த்து போனது.

"சரி இதையெல்லாம் கூட விடு. நான் அங்க நின்னது உன் கண்ணுக்கு தெரிஞ்சுதா?"

"எப்படி நீ என்ன பாத்த?" மனதை அறித்த கேள்வியை முன் வைத்தான் அகி.

அகஸ்டஸின் குற்றம் சாட்டும் பார்வையை தாங்கிய சாயா "அது வந்து சார்" என்று இழுத்து பேசாமல் தயங்கி நின்றாள். அவள் கண்களில் ஒரு தயக்கம், அதோடு ஒரு குற்றவுணர்வும் தெரிந்தது. ஆனால் வாயை மட்டும் திறந்தால் முத்து உதிர்ந்துவிடும் என்பதைப்போல் அழுத்தமாய் நின்றிருந்தாள் சாயா.

அவள் நின்றதை பார்த்து எதையும் சொல்லமாட்டாள் என புரிந்து கொண்ட அகி, திடீரென எதோ ஒரு மந்திரத்தை உச்சரித்தபடி அவன் கையை உயர்த்திய நேரம் அவன் கை அந்தரத்தில் அப்படியே கட்டப்பட்டது.

மந்திரத்தை பாதியில் நிறுத்திய அகி உதட்டை சுழித்தபடி சாயாவை பார்த்து "அப்ப நீயும் ஒரு விசார்டுதான் இல்ல" என்க, அகி தன் மீது மந்திரத்தை பிரயோகிக்க போகிறான் என அனிச்சையாக தானும் மந்திரத்தை பயன்படுத்தியிருந்த சாயா அதிர்ந்தாள். அவளை வெளிக்கொண்டு வரத்தானே அவனும் மந்திரம் போடுவதைப்போல் நடித்ததும்.

"ஏன் சாயா என்கிட்ட சொல்ல மாட்டியா, நானும் விசார்டு பரம்பரைய சேர்ந்தவன்தான். அதுவும் ஆண்ட்ரோனிக்கஸ் பரம்பரை தலைவரோட மகன் அகஸ்டஸ். நீ என்கிட்ட உன்ன பத்தி சொல்றதால உனக்கு எந்தவித பிரச்சினையும் வராது. அப்படி வந்தாலும் நான் உன்னை பாத்துப்பேன்"

அவன் கையிலிருந்த கட்டை விலக்கிவிட்டு தலையை கவிழ்ந்தபடி நின்றிருந்த சாயாவின் முகத்தை நிமிர்த்திய அகி, அவளுடைய கையை ஆறுதலாக பிடித்தபடி பேசினான்.

அகியின் பேச்சை கேட்டு அவனை புரியாத பார்வை பார்த்து வைத்த சாயாவை கண்டு சிரித்த அகஸ்டஸ்,

"அண்ட் நீ விசார்டுனு உன்ன நான் முதன்முதலா பாத்தபோதே எனக்கு தெரியும். அதோட உன் பேரு சாயா இல்லைனு கூட எனக்கு நல்லா தெரியும்" என சொல்லி அவளை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கினான் அகி.

'ஆனால் எப்படி' என சாயாவின் மனம் ஒருபுறம் படபடப்புடன் யோசிக்க, வெளியில் மௌனமாய் அதே கேள்வியை கண்களில் தாங்கி நின்றிருந்தாள் சாயா என்ற பெயரின் பின்னே மறைந்திருந்த அவள்.

-தொடரும்
 
Top