வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

உன் நிழலும் நிஜமும் நானடி - கதை திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் 7

ருத்ரனும் ஸ்டீவ்வும் தங்களுக்குள் மயூரனை பற்றி விவாதித்துக் கொண்டிருக்க, அவர்கள் அறையை கடந்துச் சென்ற மயூரனின் செவிகளில் அவர்களின் உரையாடல் விழுந்தது, அதுவும் தன் பெயர் அதில் அடிப்படவும் அவ்வறைகுள் நுழைந்தான் மயூரன். அவனின் வரவை எதிர்பார்க்காதவர்கள் சற்றென்று அமைதியாகிவிட, மயூரனோ அவர்கள் இருவரையும் பார்த்து "என்னை பத்தி அப்படி என்னடா டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தீங்க?" எனக் கேள்வி கேட்டான்.

ருத்ரனோ, "பெருசா எல்லாம் ஒன்னும் இல்ல அண்ணா... நீங்க இந்த தடவை அந்த சூரஜ் கம்பெனியை பத்தி நேரடியா ரிப்போர்ட் பண்ணது பத்தி தான் பேசிட்டு இருந்தோம்" என பதில் அளித்தான்.

மயூரனோ, "அவன் பண்ண வேலைக்கு ரிப்போர்ட் பண்ணாம வேற என்னடா பண்ண சொல்றீங்க?" என அவர்களிடம் பதில் கேள்வி கேட்டான்.

ருத்ரன் பதிலளிக்கும் முன்னால் முந்திக் கொண்ட ஸ்டீவ், "அது இல்ல ப்ரோ, எப்பவும் இந்த மாதிரி இஷ்யூஸ் வந்தா ருத்ரன் என்கிட்ட சொல்லுவான், நான் யாரு, எப்படி, எங்கிருந்து ரிப்போர்ட் பண்ணாங்கன்னு டிராக் பண்ண முடியாத படி ரிப்போர்ட் பண்ணுவேன், அதுபோல் நீங்களும் என்கிட்ட சொல்லியிருந்தீங்கன்னா நான் ரிப்போர்ட் பண்ணி இருப்பேன் இல்லையா" என தான் சொல்ல வந்ததை முழுமையாக சொல்லாமல் நிறுத்தினான்.

மயூரனோ "இதுல என்னடா இருக்கு… நான் ஒரு டாக்டர், நானே நேரடியா ரிப்போர்ட் பண்ணதால தான். உடனடியா அவன் கம்பனிக்கு சீல் வெச்சாங்க. நமக்கு தேவை அவன் கம்பெனி மருந்துகளை தயாரிக்குறதை நிறுத்தணும். சாரி அவன் தயாரிக்குறது மருந்துகளே இல்ல விஷம். ஏற்கனவே இருக்குற நோய்களுக்கே மருந்து கண்டுபிடிக்க முடியாம இருக்கு, இதுல இவன் குணப்படுத்தும்ன்னு மக்கள் நம்பி சாப்பிடுற மருந்தில், அந்த நோய் குணமாகாம இருக்கவும், அதை அதிகரிக்கவும் வழிவகை செய்றான்.

இந்த மாதிரி ஆட்களை எல்லாம் உயிரோடவே விட கூடாது, இவன மாதிரி ஆட்கள் பண்ற தப்பு எத்தனை பேரோட வாழ்க்கையை பாதிக்குது தெரியுமா? அப்படி என்ன பணம் சம்பாதிக்க வேண்டி இருக்கு?" என தன் மனக்குமுறலை ஆத்திரமாகவும், ஆற்றாமையாகவும் வெளியிட்டான்.

ஸ்டீவ்வோ, 'உங்க ஸ்பீச் எல்லாம் நல்லா தான் இருக்கு, ஏற்கனவே அந்த சூரஜ் ஒரு பண பைத்தியம் பிடிச்ச குரங்கு, நீங்க பண்ண வேலையினால் அவன் இப்ப கள்ளு குடிச்ச மாதிரி வெறி பிடிச்சு சுத்திக்கிட்டு இருக்கான்' என மனதில் புலம்பியவன்.

மயூரனின் இந்திய பயணத்தினை தடுக்க நினைத்து, அதை பற்றி அவனிடம் பேச முயல, அதற்குள் ருத்ரனோ, தன் நண்பனின் எண்ணம் அறிந்தவனாக அவன் கை பற்ற, என்னவென பார்த்தவனை விழிகளினால் வேண்டாம் என தடுத்தவன்.

"நீ எப்ப இந்தியா போற?" என மயூரனிடம் வினவ, அவனோ "இன்னும் ரெண்டு வாரம் இருக்கு… ஏன் கேட்குற ருத்ரா வேற எதாவது இஷ்யூஸ், இல்ல நான் பார்க்க வேண்டிய வேலை இருக்கா?" என வினவினான்.

"அப்படி எதுவும் இல்லை" என்றான் ருத்ரன்.

ஸ்டீவ், 'நீங்க பார்த்த வரை போதும்…' என மனதிற்குள் கூறி கொண்டவன், இவன் ஏன் நம்மளை பேச விடாமல் தடுக்குறான் என ருத்ரனின் செயலுக்கு விளக்கவுரை யோசித்துக் கொண்டிருந்தவன், சகோதரர்களின் உரையாடலில் கவனம் வைக்காமல் தன்னுள் மூழ்கியிருந்தான்.

தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தவர்கள், வெகு நேரமாக ஸ்டீவ் அமைதியாக இருப்பதை கண்ட மயூரன், "இவன் ஏன் டா இப்படி இருக்கான்?" என ஸ்டீவ்வினை சுட்டிக் காட்டி கேட்க, ருத்ரனோ தன் தோள்களை குலுக்கி "யாருக்கு தெரியும்?" என்றான்.

மயூரனோ ஸ்டீவ்வின் பின் தலையில் தட்டி, அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவாறு "என்னடா எந்த ஃபிகர் கூட டூயட் பாடிக்கிட்டு இருக்க?" என்றான் சிரித்தபடி, ருத்ரனும் தன் உடன்பிறந்தவனுக்கு ஹை ஃபை கொடுத்தவாறு புன்னகையுடன் மயூரனின் அருகில் அமர…

ஸ்டீவ்வோ மயூரன் தட்டியதில் கலைந்த தன் கேசத்தினை சரி செய்தவாறு "வளருற பிள்ளையா தலையில் அடிக்காதீங்க ப்ரோ" என்றான்.(டேய் ஸ்டீவ் இதுக்கும் மேல நீ வளரணுமா… அவனுங்களே ஆறடிக்கு மேல, நீ அவனுங்களை விட ஒண்ணு, இரெண்டு இன்ச் உசரம் அதிகமா தான் இருப்ப… சொல்றதுல ஒரு நியாய தர்மம் வேண்டாம் … ராஸ்கல்)

உதடுகளில் உறையும் மென்னகையுடன் அமர்ந்திருக்கும் இரு சகோதரர்களையும் பார்த்தவன்… ஒரு பெரும் மூச்சினை விட்டவாறு "எங்க அம்மாவும் அப்பாவும் தப்பு பண்ணிட்டாங்க டா…" என அவன் சொல்லி முடிக்கவில்லை.

ருத்ரனோ "ஆமாம் டா, உன்னை போய் பிள்ளையா பெத்திருக்காங்களே…" என சிரியாமல் சொல்ல… அவன் சொன்னதை கேட்டு மயூரனால் தன் சிரிப்பினை கட்டுப்படுத்த முடியவில்லை வாய்விட்டு சிரித்தான்.

அவர்கள் தன்னை கேலி செய்வதை கண்டு அவர்களை முறைத்தவன் "என்னைய பையனா பெத்ததுக்கு பதில் பொண்ணா பெத்திருந்தா உங்க ரெண்டு பேரில் யாரையாவது லவ் பண்ணி செட்டில் ஆகி இருப்பேன்" என வருத்தத்துடன் சொல்ல…

அவன் சொன்னதை கேட்ட இருவரும், "எங்களுக்கு அவ்வளவு மட்டமான டேஸ்ட் இல்ல…" என ஒன்றாக சொல்லி சிரித்தனர்.

"ஏன் சிரிக்க மாட்டீங்க… ஒருத்தர் கண்ண பார்த்தே எல்லா பொண்ணுங்களும் மயங்குது… பொண்ணுங்கன்னு இல்லை அன்னைக்கு உங்க பேஷண்ட் கூட வந்தவன்… உங்க கண்ண பார்த்ததும்… டாக்டர் யூவர் ஐஸ் ஆர் கில்லிங் மீ- னு சொல்றார்… இதுவரை இப்படி பொண்ணுங்களை பார்த்து பசங்க சொல்லித்தான் நான் கேள்விப்பட்டிருக்கேன், ஒருசில பசங்க கண்ண பார்த்ததும் பொண்ணுங்க சொல்லியும் பார்த்திருக்கேன்… ஆனால் என் லைஃப்ல முதல் முறை ஒரு பையனை பார்த்து ஒரு பையன் சொன்னதை கேட்டு அப்படியே நான் ஷாக் ஆயிட்டேன்… (வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)." என வளைந்து நெளிந்து சொல்லியவன் மீது மயூரன் குஷனை விட்டெறிய அதனை லாவகமாக பிடித்தவன், மயூரனை கண்டு விஷமமாக சிரித்தவன் "அவன் என்கிட்ட வந்து என்ன கேட்டான் தெரியுமா ருத்ரா ப்ரோ வந்து ஸ்டிரைட்அ இல்ல" என மேலும் ஏதோ சொல்ல வந்தவனின் வாயினை எழுந்து வந்த மயூரன் மூட, அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள போராடியவனின் காதில் "இதுக்கு மேல ஒரு வார்த்தை சொன்ன உன்னை என்ன பண்ணுவேன்னே தெரியதுடா…" என மயூரன் மிரட்ட...

"விடுங்க ப்ரோ, நான் எதுவும் சொல்லலை, நீங்கதான் அப்படின்னா, இவனை என்ன சொல்ல, அன்னைக்கு பப்ல நான் தனியா போறவங்க வரவங்களை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன்… அன்னைக்கு எந்த சாமிக்கு என் மேல கருணை பிறந்ததோ தெரியலை, ஒரு அழகான பொண்ணு என்கிட்ட வந்து ஹாய் டுயூட்(dude), யூ நீட் கம்பெனி… அப்படின்னு கேட்க, நானும் எஸ்னனு சொல்றதுக்குள்ள அவ்வளவு நேரம் அங்கே ஆடிக்கிட்டு இருந்தவன் எப்ப, எப்படி என் பக்கத்தில் வந்தான்னு தெரியலை ப்ரோ, வந்தவன் என் பக்கத்தில் ஒரு பொண்ணு இருக்கிறதை பார்த்து, கண்டும் காணாம போகாம, ஹாய்னு சொல்ல அவ்வளவு தான் ப்ரோ சோலி முடிஞ்சுது, அதுவரை என்னை பார்த்து பேசிக்கிட்டு இந்தவ, இவனை பார்த்ததும் ஹாய் ஹான்ட்சம்ன்னு பேச ஆரம்பிச்சவ பேசுறா பேசுறா பேசிக்கிட்டே இருக்கா, இவனும் அவ சொல்றதுக்கு எல்லாம் ஈ- ன்னு இளிச்சிக்கிட்டு இருக்கான்…

இவன் இளிக்க இளிக்க இவன் வல கன்னம் குழி விழ, அதை எதோ உலக அதிசயம் போல் பர்த்தவ, யூவர் ஸ்மைல் இஸ் மெஸ்மெர்ரைசிங்(mesmerising) அண்ட் திஸ் டிம்பிள் இஸ் சோ நைஸ்ன்னு தொட்டு பார்க்குறா... அதுக்கு இவன் இன்னும் கொஞ்சம் இளிக்க, அப்புறம் அவ ஏன் என் பக்கம் திரும்புறா… இப்படிபட்ட உங்களோட இருந்தா நான் எங்கிருந்து நிஜத்தில் ஒரு பெண்ணோட டூயட் பாடுறது, கனவில் தான் டூயட் பாட முடியும், அதுவும் கஷ்டம் தான்" என அலுத்து சலித்துக் கொண்டான்.

இப்படி அலுத்துக் கொள்பவனுக்கு மது, மாது என்றால் கொஞ்சம் தூரம் தான்… இவன் தொழிலுக்கு விழிப்புணர்வு அவசியம் என்பதால் மதுவை கையில் ஏந்துபவன் அதனை உட்கொண்டது இல்லை… மாது, அவர்களுடன் கடலை போடுவான், ஆடுவான், பாடுவான் அவ்வளவு தான், அதற்கு மேல் இவன் பெண்களை நெருங்கியது இல்லை, அவர்கள் இவனை நெருங்கினால் அங்கிருந்து நழுவி விடுவான். ஸ்டீவ்விடம் உள்ள ஒரே கெட்ட பழக்கம் புகைப்பது, அதுவும் அவன் அதிகம் பதட்டப்பட்டால் மட்டுமே.

ஸ்டீவ் சொல்லியவற்றை கேட்ட மயூரன், ஏன் டா என்பது போல் கேள்வியாக நோக்க, அதற்கு ருத்ரனோ சும்மா என வாய் அசைத்து, கண் சிமிட்ட இளையவனின் செய்கையில் மயூரனின் உதடுகள் புன்னகைக்க, "உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட வெட்கமாவே இல்லையாடா சின்ன பிள்ளைங்க மாதிரி ஒருத்தனை பத்தி ஒருத்தன் குறை சொல்லிக்கிட்டு, இன்னும் கொஞ்ச நேரம் உங்க கூட
இருந்தேன் அடுத்து நான் செய்ய வேண்டிய வேலையை மறந்துடுவேன், நான் கிளம்புறேன்" என கூறி ஓரடி எடுத்து வைக்க, உடனே ஸ்டீவ், "எங்க போறீங்க ப்ரோ? வாங்க போகலாம்" என அவனுக்கு முன் செல்ல முயல, ஸ்டீவ்வின் கரம் பற்றிய மயூரன், அவனை சுற்றி யாரையோ தேடுவது போல் தன் பார்வையினை அலையவிட்டான்.

"என்ன ப்ரோ?" என அவன் பார்வையினை தொடர்ந்த படி ஸ்டீவ் கேட்க, "இல்லடா இவ்வளவு நேரம் ஒருத்தன் எங்க கூட இருந்தா அவனுக்கு எந்த பொண்ணும் செட் ஆகாதுன்னு புலம்பிக்கிட்டு இருந்தவன், இப்ப நான் வேலை இருக்குன்னு சொன்னதும் எங்க என்னன்னு கூட கேட்காம, என் கூட வரேன்னு சொல்றான். அதான் கொஞ்ச நேரம் முன்ன என்கிட்ட புலம்பின அந்த மானஸ்தனை தேடுறேன்" என சிரித்தவாறு சொல்ல… ஸ்டீவ்வோ, கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் "அவனை எல்லாம் தேடாதீங்க கிடைக்க மாட்டான்" என சொல்லியவன், "எங்க ப்ரோ போகணும்…?" என கேட்டவனின் பின் தலையில் தட்டிய மயூரன், "என் ரூமுக்கு பேக் பண்ண போறேன் வரியா?" என கேட்க,

"ரூமுக்கு தானா…?" என்றவன், மயூரனின் பேக் பண்ண போறேன் என சொன்னதை கேட்டதும் ப்ரோ "நான்…" என எதோ சொல்ல முயல, அவனை முந்திக் கொண்ட ருத்ரனோ, "மையூ அண்ணா நீ போய் பேக் பண்ற வேலைய பாரு, இவனை விட்டா இன்னைக்கு பூரா வெட்டி கதை பேசிக்கிட்டு இருப்பான்" என சொல்ல மயூரனும் புன்னகைத்த படி தன் அறை நோக்கிச் சென்று விட்டான்.

ஸ்டீவ்வோ, ருத்ரனை முறைத்த படி, "ஏன் டா ப்ரோ கிட்ட நான் சொல்லவந்ததை சொல்லவிடாம தடுத்த?" என வினவினான்.

ருத்திரனோ, "நீ என்ன சொன்னாலும் அவன் இந்தியா போறதை உன்னால தடுத்து நிறுத்த முடியும்னு நீ நினைக்கிறியா? அவன் ஏன் இந்தியா போறான்னு உனக்கு தெரியாதா?" என கேட்க, "தெரியும்." என்றான் உள்ளேச் சென்றுவிட்ட குரலில் ஸ்டீவ்.

ஆம், மயூரன் வருடா வருடம் இந்தியா செல்ல வலுவான காரணம் உண்டு, அவன் தமிழ்நாட்டிற்கு வர முக்கிய காரணம் அவன் பாட்டி சக்தி விலாசினியின் தமக்கை சக்தி சௌத்ரி மதுரையில் இருப்பதே. தன் மகன் சக்தி சண்முகம் மருமகள் முத்தழகு மற்றும் பேத்தி அழகு மீனாளுடன் வசித்து வந்தார். உறவு முறையில் அத்தான் என்றாலும் மயூரனுக்கு மீனாள் குட்டி தங்கை போன்றவள், தன் வினி டார்லிங்குடன் வருடம் தவறாமல் மதுரை வந்துச் செல்வான்… மற்றவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப வந்துச் செல்வார்கள், ஆனால் மயூரனின் வருகை மட்டும் தவறியதில்லை.

எல்லாம் நன்றாக தான் சென்றுக் கொண்டிருந்தது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யார் கண்பட்டதோ
அழகு மீனாளின் மரணம் அனைவரையும் புரட்டி போட்டிருந்தது. அதுவும் நோய் வந்தோ, விதி முடிந்தோ பெண்ணவள் இறக்கவில்லை, தற்கொலை செய்துக் கொண்டாள். அவள் மரணம் தற்கொலை என அறிந்தவர்கள் மயூரன், ருத்ரன், ஸ்டீவ் மட்டுமே.

சுற்றுலாவில் வேடிக்கை பார்க்கச் சென்றவள், தவறி விழுந்ததாக மற்றவர்கள் நினைக்க… நடந்ததோ வேறு…

கல்லூரி இறுதி ஆண்டு ஆதலால் அனைவரும் உல்லாச பயணமாக மலைகளின் இளவரசியாக திகழும் கொடைக்கானலுக்குச் சென்றனர். அதில் அழகு மீனாளும் அடக்கம்.

மயூரன் பெரும்பாலும் பிஸியாக இருப்பதால், அவனுக்கு எப்பொழுதும் தான் பகிர நினைக்கும் விரும்பும் செய்தியினை குரல் பதிவாக அனுப்புவது மீனாளின் வழக்கம், தன் ஓய்வு நேரத்தில் அதனை காண்பவன், அவளுக்கு அழைத்து பேசுவான்.

அவ்வாறே மிகவும் மகிழ்ச்சியாக, குரலில் உற்சாகம் துள்ள தான் சுற்றுலா செல்ல போவதை குரல் பதிவாக மயூரனுக்கு அனுப்பினாள் மீனாள்.

பதிலுக்கு மயூரன் "ஹாய் மினி பியூட்டி, மதுரையில இருந்துகிட்டு கொடைக்கானலை பார்த்ததே இல்லாத மாதிரி அவ்வளவு எக்ஸைட் ஆகுற… போன தடவை நான் வந்தப்போ எல்லாரும் கொடைக்கானல் போய்ட்டு வந்தோம் தானே…" என்றான்.

அதற்கு மீனாள், "அது வேறு இது வேறு, பேமிலியா போறதுக்கும் பிரெண்ட்ஸ் கூட போறதுக்கும் வித்தியாசம் இருக்கு தானே..?" என்றாள்.

மயூரனோ, "எனிவேஸ் பார்த்து பாத்திரமா போய்ட்டு வா" என அவளுக்கு அறிவுரை கூறியவன், "என்ஜாய் த டிரிப்" என பெண்ணவளுக்கு வாழ்த்தும் தெரிவித்தான்.

ஆனால் அவர்கள் இருவருக்கும் தெரியாது இன்னும் ஒரு சில நாளில் உள்ளம் நொந்து, கண்ணீர் தளும்ப இளையவள் அனுப்பும் மரண வாக்குமூலம் கேட்டு இவன் ஆயிரம் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து இரத்தக் கண்ணீர் வடிப்பான் என்று.
 
Status
Not open for further replies.
Top