மெஹந்தியால் சிவந்திருந்த உள்ளங்கைகளை தன் முகத்திற்கு நேராக நீட்டி, அதில் பதிந்திருந்த ராதை மற்றும் கிருஷ்ணனை அவள் இணை சேர்த்து ரசிக்க, அவளின் முகம் காட்டிய வர்ணஜாலங்களை, மின்னல் ஒளியுடன் புகைப்படக் கருவி அழகாக உள்வாங்கியது.
இளம் சிகப்பு வண்ண லெகங்கா உடையில், மையிட்ட கண்களை மலர்த்தி, பளபளத்த கீழ் உதட்டில் பற்களைப் பதித்து மோகனப் புன்னகை சிந்தினாள் அமிழ்தா.
"அடடா புகைப்படத்திற்கே அத்தனை அழகையும் நீ கொட்டித் தீர்த்து விட்டால், நாளை இரவு டாக்டர் மாப்பிள்ளை திண்டாடித்தான் போவார் களவாடப்பட்ட உன் அழகில்" என்று தோழியர் கூட்டத்திலிருந்து ஒரு குரல் எழுந்தது.
"ஏய்! அமிழ்தா நீ அழுத்தக்காரி என்று எங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் சட்டென்று ஒரு திருமணம். அதுவும் காதல் திருமணம். எப்படி?" என்றவளை வம்புக்கு இழுத்தது தோழியர் கூட்டம்.
'காதல் திருமணம் தான்... ஆனால் தன் மனதில் காதல் இருக்கிறதா?' என்றவளின் மனம் கேட்ட கேள்விக்கு, அவளது தலை மறுப்பாக அசைந்தது.
" நீ இல்லை என்று மறுத்தால் நாங்கள் நம்பி விடுவோமா? இதோ இந்த கண்ணாடியில் உன் முகத்தை பார்! உன்னை காதலிக்காமல் இருக்க முடியுமா?" என்று கேலி பேசினர் தோழியர்.
அவர்கள் சுட்டிக்காட்டிய ஆள் உயரக் கண்ணாடி முன் வந்து நின்றாள் அமிழ்தா.
ஆளை அசர அடிக்கும் வனப்பை சுமந்த முகத்தில், வலது புருவப் பாதையில் பயணம் செய்த அவளது சுட்டு விரல், முடிக் கற்றைக்குள் மறைந்திருந்த அந்த ஒற்றைத் தழும்பை மெதுவாய் வருடியது.
'அவன் எங்கே இருப்பான்? என் நினைவுகள் அவனுக்கு இருக்குமா? எனக்கு மட்டும் அவன் முகம் மறக்காமல் இருக்கிறதே?' மனதின் உள்ளே ஆழப் பதிந்த கேள்வியில் திகைத்தாள்.
நெற்றியில் வியர்வை அரும்பத் திரும்பியவளை, "என்ன உள்ளே ஒளிந்திருக்கும் காதல் வெளியே வந்து விட்டதா?..." என்று கைதட்டி கிண்டல் அடித்தனர்.
செயற்கை புன்னகையை சிந்தியபடி நிலைமையை சமாளித்தாள். "போதும் பொண்ணுங்களா. என் மருமகளை விட்டு விடுங்கள்" என்ற அபிராமி, அமிழ்தாவின் கரங்களைப் பற்றி, அறைக்கு வெளியே அழைத்து வந்தார்.
மேடையில் ஆண்மையின் இலக்கணமாக நின்று கொண்டிருந்த டாக்டர் நந்தன், நேரெதிரில், தூரத்தில் தன் தேவதையின் வரவை விழி அகற்றாமல் பார்த்தான்.
அமுதன் மற்றும் நிறைமதி தங்கள் மகளின் அலங்காரத்தைக் கண்டு ரசித்தனர். ஆதிரன் தன் தங்கையை பார்த்து பிரமாதம் என்பது போல் சைகை செய்ய, அவன் மனைவி தளிர்மதி அவனுடன் சேர்ந்து குதூகலித்தாள்.
அனைத்தும் சரியாக இருந்தாலும் ஏதோ ஒரு உள்ளுணர்வில் அவளது இதயம் படபடவென அடித்துக் கொண்டே இருந்தது. தன்னையே பார்க்கும் நந்தனைப் பார்க்காமல், அனைத்து திசைகளிலும் தனது பார்வையை சுழல விட்டாள்.
எதுவும் வித்தியாசமாகப் படாததால் நிம்மதிப் பெருமூச்சுடன் நின்றவளின் அருகில், தங்க நிற மயில் பல்லக்கு வந்து இறங்கியது.
ஆச்சரியத்தில் விழி விரித்த, தங்கள் வீட்டுத் தேவதையை பல்லக்கில் ஏறி அமரும்படி அவள் குடும்பமே தாங்கியது.
வெண்பாதங்களில் அணிந்திருந்த சலங்கையின் முத்துக்கள் சிணுங்க, நாணம் ததும்பும் முகத்துடன் பல்லக்கின் இருக்கையில் ஏறி அமர்ந்தாள்.
பல்லக்கின் பின்பக்கத்தில் ஒருபுறம் அவளின் அப்பா அமுதன் கை சேர்க்க, மறுபுறம் அண்ணன் ஆதிரன் கை சேர்த்தான் பல்லக்கில் பவனி வரப்போகும் தங்கள் பாசத்துக்கு சொந்தக்காரியை சுமக்க.
அபிராமி கண்களைக் காட்ட அவளுடைய கணவன் அன்பானந்தம் பல்லக்கின் முன்புறத்தில் இடதுபுறம் மாமனாய், உரிமையாய் கை சேர்த்தார்.
பல்லக்கின் வலது புறம் மட்டும் காலியாய் இருக்க, மேடையில் இருந்து நந்தன், "நான் வந்து உன்னை சுமக்கட்டுமா?" என்று இதழ் அசைத்து சைகை செய்தான் அமிழ்தாவிடம்.
சுற்றி இருந்த கூட்டம் அனைத்தும், "ஓ" என்று ஒலி எழுப்பி கரகோஷம் செய்தது.
முகம் பூத்த மென்நகையுடன் தலை சரித்து, வெட்கத்தை அள்ளி பூசிக் கொண்டாள் அமிழ்தா.
தான் தூக்கி வளர்த்த செல்ல பேத்தியை தாங்குவதற்காக முன்னே வந்தார் அவளின் தாத்தா சச்சிதானந்தம்.
பல்லக்கை தூக்கிய நால்வரும் ஆனந்தமாய் முன்னே அடியெடுத்து வைக்க, அவர்கள் வீட்டு இளவரசி கம்பீரமாய் பல்லக்கில் பவனி வந்தாள்.
"கற்பூர கன்னிகையே வாராய்…
நீ வந்த இடம் வளமாக…
சென்ற இடம் வனமாக… சோ்ந்த இடம் சுகமாக வாழப்போற…"
என்று பாட்டுப் பாடி ஆடியபடியே, இரு மருங்கிலும் அவளின் தோழியர் கூட்டம் அரங்கத்தையே அதிர வைத்தனர்.
இத்தனை நாள் பொத்தி வைத்த காதல் எல்லாம் கட்டவிழ்ந்து சிரிக்க, தேக்கி வைத்த காதலை எல்லாம் சொல்ல ஒற்றை மோதிரத்தோடு காத்திருந்தான் மேடையில் நந்தன்.
தன்னவளை தன்னிடம் விரைந்து வந்து சேர்க்காமல் வம்பு செய்யும் தன் குடும்பத்தார் மீது செல்லக் கோபம் வந்தது நந்தனுக்கு. 'அவள் நாளை இந்த நேரம் என் மனைவியாய் மாறி இருக்கும்போது, என்னை மீறித்தான் நீங்கள் அவளை நெருங்க முடியும்' என்று மனதோடு உரைத்தான் நந்தன்.
வெள்ளியை உருக்கி வைத்த லாம்போர்கினி அவென்டாடர் கார், சென்னையின் கடற்கரை சாலையை கடந்து, அந்த கல்யாண மண்டபத்தை நெருங்கி வந்து கொண்டிருந்தது.
காருக்குள் பேரமைதி நிலவியது, அதனை ஓட்டுபவனின் மன நிலைக்கு எதிராக. 'கூடாது! அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்க கூடாது!' பற்றிக் கொண்ட கோப நெருப்பு அவன் உடலெங்கும் தகித்தது.
சற்றே நிமிர்ந்து கார் கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தான். அடர்ந்த புருவங்களுக்கு கீழ் இடுங்கிய கண்கள், கோபத்தை சிறு புள்ளியேனும் கூட பிரதிபலிக்கவில்லை.
தன் உணர்வுகளை வெளிப்படுத்தாமல், அடக்கியாளும் கலையை அழகாக கற்றிருந்தான். தன்னை மெச்சிக்கொண்டவனின் இதழ்களில் வெற்றிப் புன்னகை.
சுமந்திருந்த பல்லக்கை மேடைக்கு அருகே கொண்டு வந்து, கீழே இறக்குவதற்குள் சச்சிதானந்தம் தாத்தா, வயது மூப்பின் காரணமாக தன் புறம் சிறிது சரிய விட்டார் பல்லக்கை.
பல்லக்கில் அமர்ந்திருந்தவளோ நிலை குலைந்து, ஒருபுறமாய் சரிந்தவள், கீழே விழும் முன் குதித்து விடலாம் என்று குதித்தவள் தரையில் வீழ்வதற்குள், இரு வலிய கரங்களின், இறுகிய அணைப்பிற்குள் இருந்தாள்.
சரிந்த பல்லக்கில் போடப்பட்டிருந்த ரோஜா இதழ்கள் சரமாரியாக கைச்சிறையில் இருந்தவள் மீதும், சிறை எடுத்தவன் மீதும் கொட்டியது.
தன் முகத்தை மறைத்த பூக்களை ஒதுக்க, தன்னை சுமந்திருந்தவனின் மார்பில் முகத்தை தேய்த்தாள். கற்பாறையில் பூ உரச, அந்தோ பரிதாபம் சேதாரம் பூவுக்குத்தான்.
மெல்ல விழி மலர்த்திப் பார்த்தவள், அதிர்ந்து சிலையானாள். "மாமா?" என்று சத்தமின்றி அவள் இதழ்கள் அசைய, அணிந்திருந்த சட்டை மீறி தினவெடுத்து நின்ற தன் தோள்களை அசால்டாக குலுக்கி பூக்களை உதிரச் செய்து விட்டு, பூவையை சுமந்து சென்றான்.
மந்திரத்துக்கு கட்டுப்பட்டவள் போல், அவன் கைகளில் சுகமாக தவழ்ந்தபடி அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு வந்தாள் அமிழ்தா.
"இவனா?" என்று ஆதிரன் பற்களை நர நரவென கடித்தபடி, "பல்லக்கை கீழே இறக்குங்கள்!" என்று அனைவருக்கும் உத்தரவிட்டான்.
" இவன் எதற்கு இங்கு வந்தான்? " என்று மற்ற குடும்ப உறுப்பினர்கள் ஆத்திரத்தோடும், பயத்தோடும் எண்ணினர்.
நந்தன் மேடையை விட்டு கீழே இறங்குவதற்குள், அவளை சுமந்து கொண்டே மேடையில் ஏறி, நந்தன் அருகில் இறக்கி விட்டான்.
மண்டபத்தில் இருந்த மற்றவர்களுக்கு பல்லக்கில் இருந்து கீழே விழ இருந்த அமிழ்தாவை காப்பாற்றி மேடையில் இறக்கி விட்டது போலவே இருந்தது.
"என்ன? எப்பொழுதும் தொலைத்து விட்டு முழிப்பது தானே உன் வழக்கம்" என்று நந்தனின் காதில் சொல்லிவிட்டு, அமிழ்தாவை ஆழமாக ஓர் அழுத்தப் பார்வை பார்த்து விட்டு சென்றான்.
அவனின் அதிரடியைக் கண்டு, கோபம் கொண்ட ஆதிரனை, அமுதன் தோளில் தட்டி சமாதானம் செய்தார்.
" ஆதி விடுப்பா. நம்ம அமிழ்தா கீழே விழாமல் காப்பாற்றி மேடையில் தானே கொண்டு விட்டான். அதுவும் தாத்தா செய்த தவறினால் தானே? அதனால் மன்னித்துவிடு, மறந்துவிடு" என்றார் கட்டளையாக.
கல்யாண வீட்டில் வீண் பிரச்சனைகள் வேண்டாம் என்று கைமுஷ்டியை இறுக்கி தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டான் ஆதிரன்.
சச்சிதானந்தமோ, " நான் ஒழுங்காக தானே நடந்து வந்தேன் எப்படி என் பிடி தவறியது? கால் இடறியது போல் இருந்ததே... " என்று யோசித்தவரை, அவரின் மனைவி பத்மாவதி விலாவில் இடித்து, "இப்படி பகல் கனவு கண்டு தான் பேத்தியை கீழே விழ வைக்க பார்த்தீர்கள். முதலில் வந்தவனை கவனியுங்கள். எத்தனை வருடம் கழித்து கூப்பிடாமல் வந்திருக்கிறான்" என்றார்.
வந்தவன் முதல் வரிசையில் நடு இருக்கையில் கம்பீரமாக கால் மீது கால் போட்டு அமர்ந்தான். அவனை வரவேற்கவோ? நலம் விசாரிக்கவோ? அருகில் செல்லவே பயந்தனர்.
தன் ஆளுமையான தோற்றத்தில் அனைவரையும் அடக்கி ஆண்டு கொண்டிருந்தான் அவன். ருத்ரதீரன்.
ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த குழு நடனத்திற்காக அமிழ்தாவின் தோழியர் பட்டாளம் மேடை ஏறியது.
ஆட்டமும், பாட்டமும் நந்தனோடு சேர்த்து அனைவரையும் இலகுவாக்கியது.
அடுத்து வரும் பாட்டிற்கு அமிழ்தா மட்டுமே நடனம் ஆட வேண்டும் என்பதால், தோழியர் கூட்டம் நந்தனை மேடையிலிருந்து கீழே இறக்கி மேடைக்கு நேராக நிற்க வைத்து, அவனைச் சுற்றி கரங்கள் கோர்த்து, காவல் கொண்டது அமிழ்தாவை நெருங்க விடாதபடி.
சுற்றிலும் விளக்குகள் எல்லாம் மங்கலாக்கப்பட, அமிழ்தாவை மட்டுமே வண்ண ஒளி நிறைத்தது.
"மலையூறு நாட்டாம மனச காட்டு பூட்டாம
உன்னை போல யாரும் இல்ல மாமா!
சிரிப்புடனே வந்தேங்க...
நெருப்பு போல பார்த்தீங்க...
ஹவ் லாங் டூ ஐ வெயிட்டிங்
பார் யூ மாமா..."
முகத்தில் ஆயிரம் பாவனைகளோடு, உடல் லாவகத்தோடு நந்தனை பார்த்து ஆட வேண்டிய நடனத்தை, அவன் பின்னால் அமர்ந்திருந்த ருத்ரதீரனை பார்த்து ஆடினாள்.
அவளின் கண்களுக்கு மூளை, நந்தனை பார்க்கும்படி கட்டளையிட்டுக் கொண்டே இருக்க, அனிச்சை செயல் போல் அவளின் முழு கவனமும் ருத்ரதீரனையே சூழ்ந்திருந்தது.
தன்னை நெருங்க நினைத்தவர்களை எல்லாம் கண் பார்வையிலே எட்டி நிறுத்தி இருந்தான் ருத்ரதீரன்.
பாடல் முடிந்ததும் குடும்பத்தினர் அனைவரும் நிச்சயதார்த்த மேடையை நிறைத்தனர்.
ஆசையோடு அமிழ்தாவிற்கு தான் வாங்கிய மோதிரத்தை அவள் விரலில் மாட்டுவதற்கு கையைப் பிடித்த நந்தன், அவள் விரலில் ஏற்கனவே ஒரு மோதிரம் இருப்பதைக் கண்டு முழித்தான்.
விரலில் அணிந்திருந்த புதிய மோதிரத்தை ஆச்சரியத்துடன் பார்த்த அமிழ்தா, ' இது எப்போது, எப்படி வந்தது?' என்று யோசித்தாள்.
" அதை கழட்டிவிடு அமிழ்தா!" என்ற பல்வேறு குரல்களின் கட்டளைக்கேற்ப மோதிரத்தை கழற்ற முயன்று தோற்றுப் போனாள்.
பெரும் முயற்சியுடன் மோதிரத்தை உருவிக் கொண்டிருந்தவள், தன்னை துளைத்தெடுக்கும் பார்வை வீச்சில், மெல்ல நிமிர்ந்து பார்க்க, 'கழட்டி விட முடியுமா?' என்ற ருத்ரதீரனின் விழிக் கேள்வியில், தன் முயற்சியை கைவிட்டு விட்டு உடல் விறைக்க நின்றாள் அமிழ்தா.
கர்வம் ஆளும்...
ஆளும் கர்வம் மிளிர கருத்துக்களை என்னோடு பகிரலாமே...
"மகிழ்ச்சிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் - காதலின் அடிசேரா தார்"
அமிழ்தாவின் அன்னை நிறைமதி அவளருகில் வந்து, "பாப்பா, அம்மாவிடம் கையை காட்டு. சோப்பு நீரில் கையை விட்டால், எளிதில் கழட்டி விடலாம்" என்று ஒரு கப்பில் சோப்பு நுரை ததும்பும் நீரோடு வந்தார்.
"பாப்பா நிச்சயதார்த்த மேடையில் என்ன இது. மாப்பிள்ளை என்ன நினைப்பார். வீம்பு பிடிக்காமல் கையைக் காட்டு" சற்று காட்டமாகவே உத்தரவிட்டார் நிறைமதி.
அமிழ்தா கையை முதுகுக்கு பின்னால் சென்று மறைக்கவே, அவள் கையை பிடிக்கச் சென்ற நிறைமதியை தடுத்து நிறுத்தினான் நந்தன்.
"அத்தை! அம்முக்கு வலிக்குதுனா விட்டுடுங்கள். வலது கையில் இல்லை என்றால் என்ன? இடது கையில் மோதிரம் போட்டு விடுகிறேன்" என்று அனைவரையும் தடுத்துவிட்டு அவளது இடக்கை விரலில், நிச்சய மோதிரத்தை மாட்டினான் நந்தன்.
மோதிரம் கழட்டப்படவில்லை என்ற நிம்மதியுடன் மெல்ல ஓரக் கண்களால் அவனைப் பார்த்தாள் அமிழ்தா.
நடுநாயகமாக வீற்றிருந்த தீரனோ, தன் சுண்டு விரலை பற்களுக்கிடையே கடித்துக் கொண்டு ரம்மியமாக கண்ணடித்தான். நிச்சயம் முடிந்ததோ, தன்னைச் சுற்றி அனைவரும் கிண்டல் செய்ததோ, எதுவும் கருத்தில் படவில்லை அமிழ்தாவிற்கு.
அவளுடைய எண்ணத்தை எல்லாம் விழுங்கிக் கொண்டிருந்தான் அசுரனாய் தீரன். அவளை முழுதாய் விழுங்கும் நொடிக்காய் காத்திருந்தான்.
தயங்கியபடியே அவன் அருகில் வந்தனர் சச்சிதானந்தம், பத்மாவதி தம்பதியர்.
ராஜ தோரணையில் அவன் அமர்ந்திருக்க, "தம்பி நாச்சியார் நல்லா இருக்காங்களா?" என்றார் பத்மாவதி.
"அடேயப்பா எவ்வளவு சீக்கிரம் கேட்டு விட்டீர்கள். தவறை சரியாய் செய்து தலை நிமிர்ந்து வாழ்கிறவர்கள் எல்லாம் நன்றாக இருக்கும் போது, தவறே செய்யாத நான் இன்னும் நன்றாக இருப்பேன் " என்று கூறிக் கொண்டே தன் முழு உருவத்திற்கும் நிமிர்ந்து நின்றவன், ஜோடியாய் நின்ற மணமக்களை நோக்கி அடியெடுத்து வைத்தான்.
தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் கையை விட்டு பரிசுப் பொருளை எடுத்தவன், நந்தனை கேலியாய் பார்த்துக் கொண்டே, அமிழ்தாவின் கைகளில் பரிசினைக் கொடுத்தான்.
தீரனின் கேலியை பொறுக்க முடியாத நந்தன், அமிழ்தாவின் தோளில் கையை போட்டு, அவனின் முன் அவளிடம் தன் உரிமையை நிலைநாட்ட முயன்றான்.
நந்தனினின் அணைப்பில் நெளிய ஆரம்பித்தாள் அமிழ்தா.
கையில் அணிந்திருந்த தன் கைக்கடிகாரத்தை லாவகமாக திருப்பிப் பார்த்த தீரன், "உனக்கான நேரம் முடியப்போகிறது. இனி எல்லாம் எனக்கான நேரம் தான்" என்று இறுகிய முகத்தில் பளீர் புன்னகையை ஒளிரச் செய்து, நந்தனின் கையில் ஒரு காகிதத்தை மடித்துக் கொடுத்துவிட்டு, மேடையில் இருந்து கீழ் இறங்கினான் ருத்ரதீரன்.
மீண்டும் தன்னிடத்தில் வந்து அமர்ந்தவன் கைக்கடிகாரத்தையே மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தான்.
கையில் இருந்த கசங்கிய கடிதத்தை விரித்துப் படித்த நந்தன் அதிர்ச்சியில் உயிர் உறைய நின்றான்.
எதிரே அமர்ந்திருந்தவனை கொலை வெறியோடு பார்த்தான் நந்தன். நந்தனின் பார்வையை துச்சமெனத் தள்ளிய தீரன், " மை டைம் ஸ்டார்ட்ஸ் நவ் ( எனக்கான நேரம் தொடங்குகிறது ) என்று உதட்டசைத்தான்.
வலது கையை உயர்த்திய தீரன், ஒன்று இரண்டு என்று விரல்களால் சைகை செய்ய ஆரம்பித்தான்.
ஐந்து விரல்களை எண்ணி முடித்ததும் அவன் கை அலைபேசியை எடுக்க, "நோ...." என்று அலறிய நந்தன், சபையினர் முன்பு, " எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டமில்லை. இந்தக் கல்யாணத்தை உடனடியாக நிறுத்துங்கள்!" என்று சபை அதிரக் கத்தினான்.
மேளச் சத்தம் நின்று, கல்யாண மண்டபமே அமைதியானது. இதழ் ஓரம் துடித்த தீரனின் முகத்தில் வெற்றிப் புன்னகை குடியேறியது.
அபிராமி ஆத்திரத்தில் மகனின் சட்டையை பிடித்திருந்தார். அன்பானந்தம், "அபி அவனின் சட்டையை விடு! நந்தா என்னப்பா ஆச்சு. கல்யாண வீட்டில் கலாட்டா செய்யலாம் தான். இது போன்ற கலாட்டாக்கள் விபரீதத்தில் முடியும்.
நீ ஆசைப்பட்ட காதல் கல்யாணம் தானே! நீயே நிறுத்தச் சொன்னால் எப்படி? " என்று தன்மையாகவே மகனுக்கு எடுத்துரைத்தார்.
"நான்தான் இந்த கல்யாணம் நடக்காது என்று சொல்லிவிட்டேனே. நான் என்ன குழந்தையா? நீங்கள் எல்லோரும் அறிவுரை சொல்வதற்கு. எல்லாம் தெரிந்து தான் சொல்கிறேன். எனக்கு இந்த திருமணம் வேண்டாம். அவ்வளவுதான்" என்றான் தன் சிவந்த முகத்தை வேறு பக்கம் திருப்பியபடி.
நந்தனின் பதிலைக் கேட்டதும் ஆதிரனுக்கு கோபம் எல்லை கடந்தது. ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்தபடி நிற்கும் தன் தங்கையைப் பார்த்தும், தன் நிலை கெட்டு, நந்தனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.
ஆண் மகனின் தன்மானம் சீண்டப்பட்டதும், பதிலுக்கு ஆதிரனின் சட்டையைப் பிடித்த நந்தன், "அம்முவை.... ம்... உன் தங்கச்சியை கல்யாணம் செய்ய முடியாது. காரணமும் சொல்ல முடியாது. என்னடா செய்வ?" என்றான் பதிலுக்கு எகிறிக் கொண்டு.
இருவரையும் விலக்குவதற்குள் பெரியவர்களுக்கு திண்டாட்டமாய் போனது.
நடுவினில் நுழைந்த நிறைமதி, "நந்தா! இவ்வளவு தூரம் வந்த பிறகு, நாளை திருமணம் என்ற நிலையில் என் மகளை வேண்டாம் என்று சொன்னால், என் மகளின் நிலை என்ன? நீ யாருக்கு காரணம் சொன்னாலும், சொல்லவில்லை என்றாலும் என் மகளுக்கு நீ சொல்லித்தான் தீர வேண்டும்" என்றார் கோபக் குரலில்.
தன் முன்னே தங்கச் சிலை போல், ஒன்றும் புரியாமல் நிற்கும் அமிழ்தாவைப் பார்த்தவன், சட்டென்று தன் முகத்தை திருப்பிக் கொண்டான்.
"எனக்கு... எனக்கு... அமிழ்தாவைப் பிடிக்கவில்லை. என்னை யாரும் கட்டாயப்படுத்த வேண்டாம் " என்று கூறிவிட்டு, மாலையை அறுத்தெறிந்து மேடையில் வீசிவிட்டு விறு விறுவென மேடையை விட்டு கீழே இறங்கினான்.
தீரனைக் கடக்கும் போது, உயிர் காதலை உதிரத்தோடு பிரித்து எறிந்தவனை, கோபமும் வலியும் கலந்த பார்வை பார்த்தான்.
அமைதியாய் இருந்த மண்டபம் சிறிது நேரத்தில் சலசலக்க ஆரம்பித்தது. அனைவரின் பார்வையும் அமிழ்தாவையே ஆராய்ச்சியாய் பார்த்தது.
நந்தனின் செயலால் கூனிக் குறுகி நின்ற அவனது பெற்றோர், அபிராமி மற்றும் அன்பானந்தம் பதில் தர முடியாத கையறு நிலையில் நின்றிருந்தனர். அவர்களின் பக்கம் எந்த நியாயமும் இல்லையே.
பத்மாவதி தன் இளைய மருமகள் அபிராமியிடம், "அபிராமி இனி என் பேத்தியின் நிலை என்ன? காதல், கனவு என்று ஏதேதோ கதைபேசி எங்களிடம் சம்மதம் கேட்டீர்களே!" என்று கேள்வி கேட்க, அவரது இளைய மகன் அன்பானந்தம், "அம்மா எங்களுக்கும் நந்தனின் இந்த முடிவு அதிர்ச்சியாக இருக்கிறது. என் தங்கை நிறைமதியின் மகள், எங்கள் வீட்டிற்கு மருமகளாய் வருவதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நந்தன் அமிழ்தா மீது உயிராய் இருந்தான்.
ஆனால் திடீரென்று ஏன் இப்படி செய்தான் என்று எங்களுக்கும் தெரியவில்லையே!" என்று மறுகினார் அன்பானந்தம்.
நிச்சயதார்த்தத்திற்காக, சச்சிதானந்தத்தின் மூத்த மகன், சிவானந்தம் தன் மனைவி ரேணுகாவுடன் உள்ளே நுழைந்தார்.
சிவானந்தம் உள்ளே நுழைந்ததும், தீரனின் உடல் இரும்பைப் போல் இறுகியது.
தளிர்மதி, "அப்பா..." என்று சிவானந்தத்தின் அருகில் ஓடி வந்து நடந்ததை சுருக்கமாக விளக்கினாள்.
மண்டபத்தை சுற்றிப் பார்வையிட்ட சிவானந்தத்தின் விழிகள் ருத்ரதீரனை பார்த்ததும் நிலை குத்தி நின்றது.
கணவனைத் தொடர்ந்து, தீரனை பார்த்த ரேணுகா, அவளை அறியாமல் அவனை நோக்கி எட்டு வைக்க, அவளின் கையை இறுக்கப்பற்றிக் கொண்டார் சிவானந்தம்.
இதனைக் கண்ட தீரனின் இதழ்கள், ஏளனப் புன்னகையை சிந்தியது.
தன் மூத்த மகனைக் கண்டதும், திடீரென்று தோன்றிய யோசனையுடன் பத்மாவதி, சச்சிதானந்தத்தின் காதில் மெதுவாக யோசனை சொன்னார்.
சரி என்பது போல் தலையசைத்த சச்சிதானந்தம், சபையினரைப் பார்த்து, " அனைவருக்கும் வணக்கம். நிச்சயம் என் பேரன் பேத்தியின் திருமணம் நடக்கும். யாரும் கலைந்து செல்ல வேண்டாம்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
"அது எப்படி தாத்தா நடக்கும்? இனி நந்தனே வந்து என் தங்கையை கேட்டாலும், நாங்கள் திருமணம் செய்து தர மாட்டோம்" என்று சினத்துடன் உரைத்தான் ஆதிரன்.
" ஆதிரா பொறுமையாக இரு. இது என் பேத்தியின் வாழ்வு" என்று அவனை அடக்கியவர், அமுதன், நிறைமதியை பார்த்து, "உங்கள் மகள், என் பேத்தி அமிழ்தாவை, என் மூத்த பேரன் ருத்ரதீரனுக்கு கட்டித் தர முடியுமா?" என்றார்.
தன்னைச் சுற்றி நடக்கும் ஆட்டத்தை மெதுவாகவே கண்டு களித்தான் தீரன்.
அனைவரின் முகமும் அதிர்ச்சியை அப்பட்டமாய் காட்டியது. ஆதிரனோ, " உலகத்தில் அவன் ஒருவன் தான் மீதம் இருக்கும் ஆண்மகனா? அப்படியே அவன் மட்டுமே இருந்தாலும் என் தங்கையை அவனுக்கு கட்டித் தர மாட்டேன் " என்று கத்தினான்.
"ஓ... அவன் தங்கையை நீ கட்டிக் கொள்ளலாம். உன் தங்கையை அவன் கட்டிக் கொள்ளக் கூடாதோ?" பாசத்தில் வெடித்தார் ரேணுகா.
மேலும் ஏதோ பேச வந்த ஆதிரனை தளிர்மதி தன் கரத்திற்குள் அடக்கினாள்.
சிவானந்தம் தன் மகன் ருத்ரதீரனை பார்க்க, அவன் முக பாவத்தில் எந்த உணர்வுகளையும் படிக்க முடியாமல் திணறினார்.
" உங்கள் விருப்பத்தையே பேசிக் கொண்டிருக்கிறீர்களே, கல்யாணம் செய்து கொள்ளப் போகும் இருவரிடமும் கேட்கவில்லையே!" என்று கூட்டத்திலிருந்து குரல் வர, சச்சிதானந்தம் தன் பேரன் ருத்ரதீரன் அருகில் சென்றார்.
" எனக்கு நாச்சியார் வளர்ப்பில் முழு நம்பிக்கை இருக்கு. அந்த நம்பிக்கையில் தான் உன்னை கேட்காமலேயே இப்படி ஒரு முடிவை எடுத்தேன். உனக்கு சம்மதம் தானே? " என்றார் குரல் நடுங்க.
இருக்கையில் அமர்ந்திருந்தவன் தன் வலது கை கொண்டு, வலது தொடையில் தட்டிக் கொண்டே, "சம்பந்தப்பட்டவளை என்னிடம் கேட்கச் சொல்லுங்கள்" என்றான் அதிகாரமாக.
அவனின் திமிர் பேச்சில், அனைவரின் உள்ளத்திலும் கோபம் எழுந்தது. தன் முன்னே தன் குடும்பம் தன்னால் சுக்குநூறாக உடையப் போகும் தருணத்தை அறிந்த அமிழ்தா, அடுத்த நொடி மேடையில் இருந்து இறங்கி அவன் முன் வந்து நின்றாள்.
அவளுக்காக பேச முன் வருபவர்களை தன் கையால் சைகை செய்து தடுத்தான் தீரன்.
"ம்..." பேசு என்பது போல் சைகை செய்தான்.
"நான்... என்னை..."
"ம்... நீ..."
அனைவர் முன்பும் அவனிடம் பேசத் தயங்கியவள், தன் தைரியத்தை எல்லாம் ஒன்று திரட்டி, "என்னை... நீ... நீங்கள்... க்கும்... திருமணம் செய்து கொள்கிறீர்களா?" ஒரு வழியாக கேட்டே முடித்து விட்டாள்.
"கேட்கல... இன்னும் சத்தமா..." என்று ஒரு பெண்ணின் உணர்வுகளை மதியாது கூறியவன், அனைவர் கண்களுக்கும் ராட்சசனாகவே தெரிந்தான்.
தலையை குனிந்து, கண்களில் நீர் திரள, அவமானத்தில் சிவந்த முகத்தை மறைத்துக் கொண்டு, "என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா? " என்றாள் சத்தமாக.
" எல்லாம் சரிதான். ஆனால் ஏதோ ஒன்று குறைகிறதே... " என்றான் தன் இரு விரல்களினால் நாடியைத் தேய்த்தபடி.
அவளருகில் வந்து அவளின் கையைப் பற்றிய அமுதன், "பாப்பா வாடா நம் வீட்டிற்கு போகலாம். இப்படி ஒரு திருமணம் உனக்கு வேண்டாம். காலம் முழுவதும் உனக்கு திருமணமே ஆகவில்லை என்றாலும் உன் அப்பா நான் இருக்கிறேன். இப்படி ஒரு கேவலமானவன், பெண்ணின் உணர்வுகளை மதிக்க தெரியாதவன் உனக்கு வேண்டாம்" என்றார் தீரனை கோபமாக பார்த்துக் கொண்டு.
" உன் அண்ணன் நான் இருக்கிறேன். உனக்கு உறுதியாக நல்ல வாழ்வை நான் அமைத்துத் தருவேன். இந்த அகம்பாவம் பிடித்தவன், திமிர் பிடித்தவன் நமக்கு வேண்டாம் " என்றான் ஆதிரன்.
மெல்ல தன் தலையை நிமிர்த்திப் பார்த்தாள். தீரனின் தீப்பார்வையில் கட்டுண்டவள், அவன் பார்வையின் அர்த்தத்தை படித்தாள்.
தன் தந்தையின் கைகளில் இருந்து தன் கரத்தை விடுவித்தபடி, "மாமா என்னை கல்யாணம் கட்டிக்கோ மாமா!" என்றாள் விடுகதையின் விடையை அறிந்த ஆனந்தத்தில் கண்ணீருடன்.
"எண்ணித் துணிக காதல் துணிந்தபின் - எண்ணுவம் என்பது இழுக்கு"
தன்னருகில் நின்றவளை மேலிருந்து கீழாக உற்று நோக்கினான் தீரன். அவள் கண்களின் வழியே ஊடுருவி அவளின் எண்ணங்களை படித்தான்.
அங்கே, அவளின் திருமணம் நின்ற அதிர்ச்சியோ, நந்தனின் காதலை இழந்த வலியோ எதுவும் தென்படவில்லை. அவனைக் கண்ட அதிர்ச்சியே அப்பட்டமாய் அவள் கண்களில் நிறைந்திருந்தது.
அவளின், "மாமா" என்ற அழைப்பு, அவன் உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த தனலில் மீண்டும் தீ மூட்டியது.
தன் எதிரே நின்ற அனைத்து உறவுகளையும் தன் காலடியில் விழச் செய்த ஆணவம் தந்த குளிர்ச்சாரலில் அவனின் சிரம் கர்வமாய் நிமிர்ந்தது.
பற்றிக் கொண்டிருந்த அவள் கையை லாவகமாய் ஒரு சுற்று சுற்றி தள்ளி நிற்கச் செய்தவனின் விழிக்கணைகள் அவள் இடது கை மோதிரத்தை உரசியது.
உடனே மோதிரத்தை கழட்டியவள், உள்ளங்கையில் பிசுபிசுத்த வியர்வை துளிகளுடன், மோதிரத்தை வைத்து மூடியவள், 'நீ சொன்னதை செய்து முடித்து விட்டேன்' என்பது போல் அவனை பார்த்தாள்.
அவளின் முன் தன் கைகளை நீட்ட, சற்றும் தயங்காமல் தன் கையில் இருந்த மோதிரத்தை அவன் உள்ளங்கையில் வைத்தாள்.
அந்த மோதிரத்தை பார்த்து, " என் உரிமைகளை எப்பொழுதும் விட்டுக் கொடுப்பேன் என்று நீயும் நினைத்தாயோ? ச்சூ... ச்சூ..." என்று பரிதாபப்பட்டவனின் விரல் இடுக்கில் அந்த கனத்த மோதிரமும் நசுங்கி தன் உருவத்தை இழந்தது.
கண்மூடி விரல் கொண்டு நெற்றியைத் தட்டியவன், "அம்ம்... மூ..." என்று ராகமாக இழுத்தான்.
அபிராமி மற்றும் அன்பானந்தம் அருகில் சென்று, "சாரி அத்தை..." என்று கண்கள் கலங்க கை நடுங்க மோதிரத்தை அபிராமியின் கையில் ஒப்படைத்தாள்.
"எங்களுக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான்..." என்று அமிர்தாவை கட்டிக்கொண்டு அழுதார் அபிராமி.
தன் மகனின் செயலால், தன் மனைவி உடைந்து அழுவதை பார்க்கப் பொறுக்காமல் அன்பானந்தம், அபிராமியை அழைத்துக்கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறினார்.
சச்சிதானந்தம், பத்மாவதி தம்பதியர் இளைய மகனை தடுக்க முடியாமல் தவித்து நின்றனர். தங்கள் பேரன் நந்தனின் மேல் கோபம் இருந்தாலும், மகனும் மருமகளும் மனம் உடைந்து போகும் காட்சியை பார்க்க அவர்களால் முடியவில்லை.
தன் மனைவி தளிர்மதி பிடித்திருந்த தன் கைகளை உதறிக் கொண்டு, தங்கையின் முன்னால் வந்தான் ஆதிரன்.
" நீ ரொம்ப அவசரப்படுற அமிழ்தா!" என்றான் இறுகிய குரலில் தீரனை பார்த்து.
"அண்ணா ப்ளீஸ்..."
" உன் அண்ணன் சொல்வது சரிதான் அமிழ்தா. யாருக்கும் பயப்படாதே! உன்னுடைய எந்த முடிவுக்கும் நாங்கள் என்றும் துணையாக நிற்போம்! குடும்ப கௌரவம் முக்கியம்தான். அதற்காக உன் சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம்" என்றார் அவளின் தந்தை அமுதன்.
தன் முகத்தை பார்க்கவும் முடியாமல் ஓடிய நந்தன், கலங்கிய கண்களுடன் வெளியேறிய அன்பானந்தம், அபிராமி, கண்களில் இரஞ்சலுடன் நிற்கும் தன் தாத்தா, பாட்டி, ஒதுங்கி ஒட்டாமல் நிற்கும் பெரிய மாமா சிவானந்தம் மற்றும் அவரின் மனைவி ரேணுகா, கோபத்துடன் நிற்கும் அண்ணன் ஆதிரன்,
பரிதவித்து நிற்கும் தன் அம்மா நிறைமதி, பாசமாய் காவல் நிற்கும் தந்தை அமுதன், தன் அண்ணன் தீரனின் திமிர் பேச்சால், கணவன் ஆதிரனை பார்த்து, கையை பிசைந்து கொண்டு நிற்கும் தளிர்மதி என்று அனைவரையும் மனதில் நிறுத்தி கண்களை இறுக மூடித் திறந்தவள், "என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை" என்றாள்.
தீரனின் ஒற்றைப் புருவம் உயர்ந்து அவளின் உறுதியை மெச்சியது.
களேபரங்கள் அடங்கி கல்யாண வீடு களை கட்டத் தொடங்கியது. மணமக்களின் பெயர் பலகைகள் மாற்றப்பட்டன. புகைப்படக் கருவியில் பதிவாகிய நந்தனின் உருவங்கள் அழிக்கப்பட்டன. மணமகளின் அறைக்கு சீர்தட்டுக்கள் வந்து நிறைந்தன தீரனின் அதிரடியால்.
எங்கு சென்றாலும் அனைவரின் பார்வையும் தன்னையே தொடர்வதாய் உணர்ந்த அமிழ்தா, தன்னைச் சுற்றி பார்வையை சுழல விட்டாள்.
மணமேடைக்கு அருகில் குழந்தைகள் ஒன்று கூடி விளையாடிக் கொண்டிருக்க, அனைவரையும் தவிர்த்து விட்டு அவர்களோடு வந்தமர்ந்தாள்.
அந்தக் கூட்டத்திலே பெரிதாய் இருந்த ஒரு பெண் குழந்தை, அமிழ்தாவை பார்த்து, "உங்களை மூடி வைத்து விட்டார்களா? நீங்க பிரிட்ஜ்குள்ள கூட போயி உட்கார்ந்து இருக்கலாம் " என்றது. "ஏன்?" புரியாமல் விழித்தாள் அமிழ்தா.
" நீ கெட்டுப் போய் விட்டாயாம். அதனால் தான் முதலில் அந்த மாமா கோபித்துக் கொண்டு மண்டபத்தை விட்டு வெளியே போய்விட்டார் என்று என் அம்மா அதோ அந்த அத்தையிடம் சொன்னார்கள்" என்று விளக்கிக் கூறியது அந்தக் குழந்தை.
அதிர்ந்து போனவள் அருகில் வந்த மற்றொரு குழந்தை, அவள் கன்னத்தை முகர்ந்து பார்த்து, " கெட்டுப்போன வாடையெல்லாம் வரவில்லையே. நீ நல்லா வாசனையாய் இருக்கிற அக்கா" என்று பாராட்டியது.
அதற்குள் மற்றொரு விளையாட்டில் அந்த குழந்தைகள் தீவிரமாகி விட, ஒருவித அமைதியுடன் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் வந்து கதவை மூடி, ஆசுவாசமாக அந்தக் கதவின் மேலேயே சரிந்து, தன் முன்னே இருந்த ஆள் உயரக் கண்ணாடியைப் பார்த்தாள்.
' நந்தன் உன்னை வேண்டாம் என்று அவமானப்படுத்தி விட்டானே! அவன் மீது உனக்கு கோபமா?' என்று கேள்வி கேட்ட கண்ணாடி பிம்பத்திற்கு, "இல்லை... காரணம் தெரியாமலேயே தண்டனை தந்தது மட்டும் தான் வலிக்கிறது.
என் பெண்மை கேலிப் பொருளாய் சித்தரிக்கப்படுவது வேதனையை தருகிறது. எனக்கு நந்தனின் மேல் காதலும் இல்லை, கனவும் இல்லை. திருமணத்திற்கு முன்பே உரைத்தது நல்லது தான்" என்று உறுதியாய் மொழிந்தது அமிழ்தாவின் இதழ்கள்.
' உனக்கு தீரனை பிடித்திருக்கிறதா? உன் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி, ஏன் கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னாய்?' மனதின் பிம்பம் கேள்வி கேட்டது.
"பிடித்தமா? பார்த்தாலே பயம் நெருப்பு மாதிரி பற்றிக் கொள்கிறது.
நான் திருமணத்திற்கு சம்மதம் சொல்லவில்லை என்றால் என் கூட்டுக் குடும்பம் முழுதாய் சிதறி உடைந்திருக்குமே. என் திருமணத்தால் உருவாகிய பிரச்சனை, என் திருமணத்தால் முடியட்டுமே" என்றாள்.
"ஏய்! பைத்தியமே! பெரிய தியாகியா நீ! மொத்த குடும்பமும் வெறுக்கும் ஒருவனை, ஏன் அவன் பெற்றோர்களே ஒதுக்கி வைத்த ஒருவனை, அகம்பாவம், கர்வத்தின் மொத்த உருவமாய் இருப்பவனை எப்படி நொடிப்பொழுதில் ஏற்றுக் கொண்டாய்?' பிம்பம் கோபமாய் கேட்டது.
"அது... அது... " என்று திணறியவளைப் பார்த்து ஏளனமாய் சிரித்தபடி பிம்பமும் கலைந்தது.
"ஏன்? ஏன்?" என்று மனம் அழுத்திய கேள்விக்கு விடை தெரியாமல், பால்கனியில் வந்து நின்றாள். அறைக்குள் மூச்சு முட்டியதைப் போல் உணர்ந்தவள், வெளியில் இயற்கை காற்று தழுவியதும், கண்களை மூடி அந்த இதத்தை அனுபவிக்க முயன்றாள்.
திடீரென்று அவள் மூளை, "கண்களைத் திறக்காதே!" என்று கட்டளையிட, பட்டென்று கண்களைத் திறந்தவள், தன் எதிரே தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்று கொண்டிருக்கும் ருத்ரதீரனைப் பார்த்து அதிர்ந்தாள்.
இரண்டு அறைகளையும் இணைக்கும் பால்கனியில் வந்து நின்ற தன் முட்டாள் தனத்தை நினைத்து நொந்தாள்.
அவளை அறியாமலேயே அவள் கால்கள் பின்னால் நகர்ந்தன. நிதானமான நடையுடன் அவள் முன்னே வந்தான்.
தன் பின்னால் சுவர் இடிக்க, பயத்தில் பால்கனியின் கைப்பிடி சுவற்றை ஒரு கையால் இறுக்கமாக பற்றிக் கொண்டு, அவனைப் பார்க்க இயலாமல் தலை குனிந்தாள்.
"ஓ... நாளை திருமணம் செய்து கொள்ள போகும் என்னை பார்க்க முடியவில்லை... ரைட்..." என்றவனின் பேச்சுக்கு எந்த எதிர்வினையும் இல்லை அமிழ்தாவிடம்.
பால்கனி சுவற்றில் இருந்த அவள் கை மீது தன் கையை தீரன் வைக்க, விருட்டென தன் கையை இழுத்துக் கொண்டாள் அமிழ்தா.
தேகம் நடுங்க நின்றிருந்தவளின் நாடியைப் பற்றி மெல்ல நிமிர்த்தினான். அலைபாய்ந்த அவளின் விழிகள் பயத்தில் அவனைப் பார்க்கத் தடுமாறியது.
அவள் விழிகளில் பயத்தைக் கண்டதும் உள்ளே கனன்ற நெருப்பு வெளியேறத் துவங்கியது.
" இதுவே அவனாய் இருந்தால், கட்டி அணைத்திருப்பாயா? கூடவே இலவச இணைப்பாய் முத்தம்... " என்றவன் முடிப்பதற்குள், தன் பெண்மை சீண்டப்பட்ட கோபத்தில், அனிச்சை செயல் போல், கையை உயர்த்தி இருந்தாள் அவனை அடிப்பதற்கு.
சட்டென்று அவள் தோள்களில் இரு கைகளையும் பதித்து, பால்கனி கைப்பிடிச் சுவற்றில் அவள் முதுகைச் சாய்த்தான். மென் பாதங்களின் தளிர் விரல்கள் தரையில் பட்டும் படாமல் ஊன்றி இருக்க, பயத்தில் அவள் பாத கொலுசுகள் கூட ஊமையாய் மாறி இருக்க, அவளின் தலையோ அந்தரத்தில் மிதந்து ஆகாயத்தை பார்த்தது.
அவள் மீது முழுவதுமாய் சரிந்தவன், அவள் முகத்தைப் பார்த்து, " என் உலகத்தை ஆள்பவன் நான் தான். அதில் என் சொல் தான் வேதம். என் உலகம் ஒரு வழிப்பாதை. அதில் நுழைந்து விட்டால் நீ திரும்பவே முடியாது.
ம்... இப்பொழுது சொல். உன் மனதில் நந்தன் இருக்கிறானா?" ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தமாய் வந்தது தீரனிடமிருந்து.
கசந்த புன்னகையுடன், மறுப்பாய் தலையசைத்தாள்.
அப்படியே அவளை அள்ளி எடுத்தவன், காற்றில் கலைந்திருந்த அவள் முடிக்கற்றைகளை காதோரம் ஒதுக்கி, "ம்... என்னை பார்த்து பயந்து கொண்டே நகர்ந்தால், நான் என்ன நினைப்பது?
எனக்கு என் கௌரவம் ரொம்ப முக்கியம். உன் குடும்பத்திற்காக நீ என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதித்திருந்தாலும் உன் உள்ளம் முழுவதும் நானே நிரம்பி இருக்க வேண்டும்" என்றான் தோரணையாக.
அப்படியே சிலையாக நின்றவளின் முன் சொடுக்கிட்டு, " நான் ஏன் உன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தேன் தெரியுமா? " என்றான்.
"ஏன்?" அவளின் உதடுகள் பிரியாமல் வார்த்தைகள் மட்டும் வெளியே வந்தது.
" என்னை ஒதுக்கி வைத்த குடும்பத்தின் ஆணிவேரே தன் நிலை விட்டு இறங்கி வந்து கேட்டதால் மட்டுமே என் மனதில் இருந்த காதலையும் தூக்கிப்போட்டு விட்டு உன்னை கட்டிக் கொள்ள சம்மதித்தேன். திருமணத்திற்கு தயாராக இரு." என்றவன் அதிர்ந்து நின்றவளை கண்டுகொள்ளாமல் தன்னறைக்கு திரும்பினான்.
தீரனின் காதல் என்ற ஒரு வார்த்தையிலேயே நிலைகுலைந்தவள், தவியாய் தவித்தாள். நந்தனின் விலகல் தராத வலியை யார் மீதோ கொண்ட தீரனின் காதல் தந்தது.
அதற்குள் அவளின் அறைக்கதவு வேகமாக தட்டப்பட விரைந்து சென்று கதவை திறந்தாள்.
தன் மகளை மேலிருந்து கீழாக ஆராய்ச்சி பார்வை பார்த்தார் நிறைமதி. "எல்லோரும் ஏதேதோ தப்புத் தப்பாய் பேசுகிறார்கள் தங்கம். நீயும் வேறு கதவை பூட்டிக் கொண்டாயா? அப்பப்பா...இந்தத் திருமணம் முடியும் வரை எனக்கு படபடப்பாகத்தான் இருக்கும்.
தீரனும் என் அண்ணன் மகன்தானே. என்ன கொஞ்சம் கோபக்காரன். கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும். உங்கள் திருமணம் முடிந்ததும் குலசாமி கோயிலில் பொங்கல் வைக்க வேண்டும். ஒரே திருஷ்டி" என்றவர் அறை விளக்குகளை அணைத்து விட்டு மகளோடு உறங்கினார்.
தீரனின் காதல் மனதில் நெருஞ்சிமுள்ளாய் குத்த தூக்கம் தொலைவில் போனது அமிழ்தாவிற்கு.
அழகான விடியல் இருளை கிழித்துக்கொண்டு புலர்ந்தது. நேற்று போல் அல்லாமல் அமைதியாகவே அவளை அலங்கரித்தது தோழியர் கூட்டம். ருத்ரதீரன் அனுப்பிய அரக்கு வண்ணப்பட்டில் சந்தன சிலை போல், மணமேடையில் பதுமையாய் வந்தமர்ந்தாள்.
மகிழ்ச்சி இல்லாமல் குழப்பத்தை சுமந்திருந்த அவளின் முகம் அவனின் கோபத்தை அதிகரிக்க, "ஏன்? சிரிக்க கஷ்டமாக இருக்கிறதா? இந்த திருமணம் வேண்டாம் என்றால், 'வேண்டாம்' என்று சொல்லிவிட்டு எழுந்து போ... என்னுடன் கஷ்டப்பட்டு நீ வாழ வேண்டாம்" என்று மந்திரம் உச்சரிப்பது போல் வார்த்தைகளில் நெருப்பை அள்ளிக் கொட்டினான் தீரன்.
" சரியான சாகசக்காரி தான் நீ! நிமிடத்தில் ஆயிரம் வித்தைகளை செய்து காட்டுகிறாய். ம்... " என்றான் மெதுவாக ஆனால் அழுத்தமாக.
சுற்றி இருந்த உறவினர் கூட்டம், அவர்கள் இருவரும் இயல்பு போல் பேசுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டது. அனைவரும் அட்சதை தூவி ஆசீர்வாதம் செய்ய, அமிழ்தாவின் கழுத்தில் மங்கல நாணை பூட்டினான் ருத்ரதீரன்.
சிறிதும் குற்ற உணர்ச்சி இன்றி வேறொரு பெண்ணை மனதில் சுமந்து விட்டு தன்னை திருமணம் செய்த தீரனை பார்க்க முடியாமல் தலை குனிந்து இருந்த அமிழ்தாவின் நாடியைப் பற்றி நிமிர்த்தி நெற்றியில் மங்கலக் குங்குமம் இட்டான்.
' தான் கலங்கினால் மொத்த குடும்பமும் கலங்கும் ' என்று நினைத்த அடுத்த நொடி, தன் பயத்தை எல்லாம் ஒதுக்கி விட்டு, உடலில் தோன்றிய நிமிர்வுடன், அவனருகே நெருங்கி வந்து அவன் கரத்தோடு தன் கரத்தை பிணைத்துக் கொண்டாள் உதட்டில் உறைந்த புன்னகையுடன்.
தீரனின் உதடுகளோ, "சபாஷ்..." என்று முணுமுணுத்தது.
கர்வம் ஆளும்...
ஆளும் கர்வம் மிளிர தங்கள் கருத்துக்களை என்னோடு பகிரலாமே...
"காதல் இல்லா உயிர் வாழ்க்கை - பட்டமரம் தளிர்தல் போன்று"
வாசலில் தீரனைப் போலவே கம்பீரமாக நின்றது அவனின் லாம்போர்கினி கார்.
காரில் ஏறச் சென்றவனிடம் தன் வயதையும் மறந்து ஓட்டமும் நடையுமாக வந்த சச்சிதானந்தம், "தீரா! திருமணம் முடிந்து, நம் வீட்டிற்கு தான் முதலில் வரவேண்டும்' என்றார்.
"நம் வீடா?" என்றவனின் புருவங்கள் இடுங்கியது.
" என்னப்பா இப்படி கேக்குற? பல வருடங்கள் பார்க்காமல் போனால் சொந்தம் பந்தம் இல்லை என்று ஆகிவிடுமா?" என்றார் சச்சிதானந்தம்.
"ம்.... வாவ்... பிரமாதமான கேள்வி. பல வருடங்கள் பார்க்காமல், இல்லை இல்லை, பார்க்க விரும்பாமல் போனால் உறவும் இல்லை என்று ஆகிவிடுமா?" அழுத்தத்தோடு கூடிய அந்த வார்த்தைகளில் அனல் தெறித்தது.
பதில் சொல்ல வார்த்தைகள் இன்றி தவித்தார் சச்சிதானந்தம்.
"நாம் போகலாம்... நாம் மட்டும்... போகலாம்..." என்று அமிழ்தாவிற்கு உத்தரவிட்டான் தீரன்.
தவிப்புடன் நிற்கும் தன் தாத்தா, பாட்டி, கலக்கத்துடன் நிற்கும் பெற்றோர்கள், கோபத்துடன் நிற்கும் அண்ணன், வேடிக்கை பார்க்கும் மாமன், அத்தை என அனைவரையும் கேள்வியாய் நோக்கினாள் அமிழ்தா.
பத்மாவதியோ தன் பேத்தியின் களங்கத்தை துடைத்து காப்பாற்றுவதாக நினைத்து, மிரளும் மானை புலியுடன் ஜோடி சேர்த்த தன் புத்திசாலித்தனத்தை நினைத்து நொந்தார். தங்கள் கைக்குள் இருக்கும் பேத்தியை வைத்து, கைத்தவறவிட்ட பேரனை தக்க வைத்துக் கொள்ளலாம் என்றவரின் திட்டம் தூள் தூளானது.
ஓட்டுனர் இருக்கையில் ஏறி அமர்ந்து காரின் ஹாரனை ஒலிக்கச் செய்தான் தீரன்.
தளிர்மதி அமிழ்தாவிடம், "நீ கிளம்பு அமிழ்தா. எல்லாம் சரியாகிவிடும். அவன் நிலையில் இருந்து சற்று யோசித்துப் பார்!" என்றாள் தன்மையாக.
" என் நிலையில் இருந்து யாருமே யோசிக்க மாட்டீர்களா? " என்றாள் அமிழ்தா கோவமாக.
மெல்ல அவள் காதில், "கட்டிக்கோ மாமா, ஒட்டிக்கோ மாமான்னு நீதானே சொன்ன. இப்ப நாங்க யோசிக்கணுமா? நீ ஒரு கேடி பில்லா. கில்லாடி ரங்கா என்று எனக்கு நன்றாகத் தெரியும்" என்றாள்.
"நான்... " என்று இழுத்த அமிழ்தாவிடம், "உன் அண்ணனை நான் நன்றாக கவனித்துக் கொள்வது போல், என் அண்ணனை நீ நன்றாக கவனித்துக் கொள். டீல்!" என்று காதில் கிசுகிசுத்தாள்.
காரின் ஹாரன் இடைவிடாது ஒலிக்க, சுற்றி நின்ற அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு காரில் வந்து அமர்ந்தாள்.
இடையில் எங்கும் நிற்காமல் கார் அசுர வேகத்தில் சென்றது. முந்தைய இரவு, குழப்பத்தில், தீரனின் வார்த்தைகள் தந்த அதிர்வில் உறக்கத்தை தொலைத்தவள், பேச்சற்ற பயணத்தில் மெல்ல கண்ணயர்ந்தாள்.
மெல்ல அவளின் கைவிரல்களை தன் கைவிரல்களோடு பிணைத்துக் கொண்டான். "ஹே... ஏஞ்சல்... அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டு விடுவேனா? அந்தக் குடும்பத்தின் ஒட்டுமொத்த சந்தோஷம் இப்பொழுது என் கையில்.
உன் ஒருத்தியின் வலி, அந்த ஒட்டுமொத்த குடும்பத்திலும் பிரதிபலிக்குமே. அந்த வலியை அந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொருவர் கண்களிலும் நான் பார்க்க வேண்டும்" பழிவெறியில் அவன் கண்கள் பளபளத்தது.
தன்னுடைய இரையைக் கவர்ந்து வெற்றிகரமாக வேட்டையாடிய அந்த புலி, தன் வெற்றியை பறைசாற்ற நினைத்தது.
தன் செல்போனை வலது கையில் உயர்த்திப்பிடித்து, தயார் நிலையில் வைத்துக் கொண்டு, இடது கையால் அவளை உலுக்கினான். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவள் அடித்து பிடித்து எழுந்தாள்.
"அமிழ்தா! சீக்கிரம் ஒரு முத்தம் தா!" என்றான் பரபரப்பான குரலில் வேகமாக.
திடீரென்று முழித்தவளின் மூளைக்கு அவன் கட்டளை சென்றடைய, உதட்டை குவித்து அவன் கன்னம் வரை நெருங்கி விட்டாள்.
சரியாக அதே நேரம் அவன் செல்போன், "கிளிக்..." என்ற சத்தத்துடன், அவள் முத்தமிடுவது போல் காட்சியை பதிவாக்கியது தத்ரூபமாக.
அப்பொழுதுதான் தான் என்ன செய்யவிருந்தோம் என்பதை உணர்ந்தவள், முகம் சிவந்து, ஒற்றைக் கண்ணை மூடி, தளிர்நாக்கை உதட்டோரம் கடித்து நெற்றிச்சுருக்கத்துடன் தீரனை ஏறிட்டாள்.
"நேற்று ஒருவனுடன் நிச்சயதார்த்தம். இன்று ஒருவனுடன் திருமணம். நாளை...?" என்றான் அவளை ஓர் அர்த்தப் பார்வை பார்த்துக் கொண்டு.
அமிழ்தாவிற்கு அடி மனதில் இருந்து வலி எழுந்தது. கண்களை இறுக்கி மூடினாள். 'யாருடைய வலிக்கு, யாருடைய வலி மருந்து? நேற்று ஒரு பொண்ணுடன் காதல். இன்று என்னுடன் திருமணம். உந்தன் கேள்விக்கு நிச்சயம் பாடம் சொல்லித் தருவேன்' மூடிய இமைக்குள் கருவிழிகள் நர்த்தனமாட, நிதானமாக கண்களைத் திறந்தாள்.
பக்கவாட்டில் திரும்பி அவனை நன்றாக பார்த்தாள். 'அவனின் கோபப் பசிக்கு தன் வலியை தீனியாக போடுவதா? என் பயம்தான் அவனின் ஆயுதம் என்றால், அதையே என் பலமாக மாற்றுவேன்.
உன்னால் என்னை வலிக்க வைக்க முடியும் என்றால், அந்த வலியை மீறி என்னால் வாழ்க்கையை ரசிக்க முடியும். நேற்று வரை உன்னை ஆயிரம் பேர் சொந்தம் கொண்டாடினாலும், இன்று நான் தானே உரிமைக்காரி. விட்டுக்கொடுக்காதே! போராடு!' என்று தனக்குத்தானே திடமூட்டிக் கொண்டாள்.
"முடிந்துபோன நம் இறந்த காலத்தைப் பற்றி எனக்கு கவலை இல்லை. முடிவை நோக்கி இழுத்துச் செல்லும் நிகழ்காலமும் தேவையில்லை. நம் முடிவை மாற்றி எழுதும் எதிர்காலத்தில் நிறைய நம்பிக்கை எனக்கு இருக்கிறது " என்றாள்.
"அப்படி என்ன முடிவு?" என்றான் நக்கல் குரலில்.
"ஐயோ...." என்று கத்தினாள்.
அவளின் கத்தலில் என்னவோ ஏதோ என்று வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான்.
"என்ன?" என்றான் எரிச்சல் கலந்த குரலில்.
" உங்க செல்போனை ஒரு நிமிஷம் தாங்க" என்றாள் பரபரப்புடன்.
அவளின் செயலில் அர்த்தம் புரியாமல் அவளை புருவம் இடுங்க பார்த்தான்.
தன் தலையில் தட்டிக் கொண்டு, அவன் சட்டை பையில் இருந்து உரிமையாக போனை எடுத்தாள்.
கடவுச்சொல் கேட்க, 'இப்பொழுது என்ன செய்வாய்?' என்பது போல் மிதப்பாகப் பார்த்தான்.
அவளோ அசால்டாக, அவன் வலது கையைப் பிடித்து, ஒவ்வொரு விரலையும் சென்சாரில் வைத்து வெற்றிகரமாக அன்லாக் செய்தாள்.
அவளின் செயலில் எரிச்சல் அடைந்த தீரன் தன் கையை வெடுக்கென பிடுங்கிக் கொண்டான்.
"அட... ரொம்பத்தான்! பயப்படாதீங்க உங்க கற்புக்கு நான் உத்தரவாதம்" என்றவள் விறுவிறுவென செல்போனில் தன் விரல் நுனிகள் நர்த்தனமாட எண்களை டைப் செய்து, காதில் பொருத்தியபடி விரல் நகங்களை பதட்டத்தில் கடித்து துப்பினாள்.
அந்தப் பக்கத்தில், "ஹலோ" என்றதும், "ஹே! மதியம்மா... ஏதோ பதட்டத்தில் நாங்கள் தான் கவனிக்கவில்லை என்றால், நீங்கள் எப்படி கவனிக்காமல் இருக்கலாம்?" எடுத்ததும் ஏக குரலில் சண்டையிட ஆரம்பித்தாள்.
பேசுவது தன் மகள் என்றதும் நிறைமதி பதட்டமான குரலில், "என்னடி? மாப்பிள்ளை ஏதும் சத்தம் போடுகிறாரா?" என்றார்.
"ம்...க்கும்..." என்று தீரனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, "அவரே ஒரு அப்... அப்பாவி. அவருக்கும் சேர்த்து நான் தான் சண்டை போட வேண்டி இருக்கிறது" என்றாள்.
" அடிப்பாவி! மாப்பிள்ளை கோபமாக உன்னை அழைத்துச் சென்றார் என்று நாங்கள் எல்லாம் இங்கே பதைப்பதைத்து இருந்தால், உன் நாக்கு இப்படி வக்கனையாக கேட்கிறதே..."
"ஹலோ... எல்லாவற்றையும் பார்சல் செய்து, உங்கள் தவப்புதல்வனிடம் என் மாமியார் வீட்டில் கொடுத்து விடுங்கள். இது என் கட்டளை. என் கட்டளையே சாசனம்" என்று போனை கட் செய்தாள்.
தான் இயல்பாக பேசினால் தன் தாய் சற்றே நிம்மதி அடைவார். போகும் இடத்தில் தனித்து நிற்க வேண்டிய யோசனையுடன் தன் அண்ணனை துணைக்கு அழைத்தாள் அமிழ்தா.
நீட்டிய செல்போனை வாங்காமல் தீயாய் உறுத்து விழித்த தீரனைப் பார்த்து, "அட போங்கப்பா ! தாலி கட்டியதும் தரதரவென இழுத்து வந்து விட்டீர்கள். நேற்று நடந்த களேபரத்தில் இரவும் உணவு உண்ணவில்லை. காலையிலும் உண்ணவில்லை. நமக்கெல்லாம் சோறு முக்கியம் மாமா குட்டி" என்றவள் அவனுடைய போனை பட்டும் படாமல் வைத்து விட்டு, ஜன்னலோரம் வேடிக்கை பார்ப்பது போல் திரும்பி அமர்ந்து கொண்டாள்.
அவளது மனமோ, 'சூப்பர் அமிழ்தா! செமையா சமாளிக்கிற' என்று பாராட்டியது.
ஜன்னலோரம் திரும்பி இருந்தவளின் முகத்தைப் பற்றி தன்னை பார்க்கச் செய்தான்.
"ஹேய்... உன்னை விரும்பியவனிடமிருந்து பிரித்திருக்கிறேன். உன் குடும்பத்தில் இருந்து உன்னை பிரித்திருக்கிறேன். நேற்றெல்லாம் கலங்கிய கண்களோடு இருந்துவிட்டு, இப்பொழுது என்னருகில் எதுவும் நடவாது போல் வருகிறாயே, இதில் உன் உண்மையான முகம் எது? அவ்வளவு அவசரமாக மனதில் இருந்த ஒருவனை தூக்கி எறிந்து விட்டாயே" என்றான் அழுத்தமாக.
அவன் கைகளை தட்டி விட்டு, கார் இருக்கையில் சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டு, "என்னை விரும்பியவரிடம் இருந்து, நான் விரும்பியவரிடமிருந்து இல்லை. முதல் பந்து வீச்சிலேயே நீங்க அவுட்டு மாமா. என் குடும்பம் இல்லை. நம் குடும்பம். இரண்டாவது பந்து வீச்சிலும் நீங்கள் அவுட்டு மாமா" என்று கலகலவென நகைக்க ஆரம்பித்தாள்.
அவளின் அழுகையை எதிர்பார்த்தவன் அவளின் ஆனந்த சிரிப்பில் ஆத்திரம் கொண்டு குரல்வளையை இறுக்கப் பிடித்தான். அவனின் வலுவான கைப்பிடியில் இருந்தாலும், அது தந்த அழுத்தத்தில் கண்களில் நீர் கட்டினாலும், அசராது அவனைப் பார்த்து,
"குறைகுடம் தானே கூத்தாடும். நேற்று வரை எனது மனம் வெற்று குடமாய் தான் இருந்தது, இன்றோ நிறைகுடமாய் என் மனம் முழுவதும் நீங்கள் நிறைந்து இருக்கிறீர்கள். நான் இப்பொழுது மிஸஸ் ருத்ரதீரன்" என்றாள் அவனுக்கு சளைக்காத அழுத்தமான குரலில்.
"ம்... மிஸஸ் ருத்ரதீரன்" என்று தன் கைகளை அவளிடமிருந்து விலக்கிக் கொண்டு, "இத்தனை நாள் என்னை நினைத்துக் கூட பார்க்காமல், ஒரே நாளில் மனம் முழுவதும் நிரப்பிக் கொண்டாயோ?" ஏளனம் நிரம்பி வழிந்தது அவன் குரலில்.
அவளின் கை மெதுவாக முடிக்கற்றைக்குள் ஒளிந்திருந்த தழும்பினை வருடியது.
" நீங்கள் கூடத்தான் தாத்தா சொன்ன சொல்லுக்காக திருமணம் முடிக்க ஒத்துக் கொண்டீர்கள். நீங்கள் செய்தால் சரி. நான் செய்தால் தப்பா? சொல்லுங்க மாமா குட்டி" என்றாள்.
பல்லைக் கடித்துக் கொண்டு முகத்தை திருப்பியவனைக் கண்டு உள்ளே பயம் வந்தாலும், 'ஊருக்கே உருட்டு சொல்லித்தரும் எங்க கிட்டேவா' என்று மனமும் குதூகலிக்கத்தான் செய்தது.
கோயம்புத்தூரின் மறு கோடியில் இருந்த, "நாச்சியார்" பவனத்திற்குள் கார் நுழைந்தது. காரிலிருந்து இறங்கியவன் விறுவிறுவென வீட்டிற்குள் நுழையப் போக, அவனின் வேகத்திற்கு ஈடாக ஓடினாள் அமிழ்தா.
வரவேற்கவோ, வாழ்த்து சொல்லவோ யாரும் இல்லை. வேலையாட்கள் தத்தம் வேலைகளைப் பார்க்க, கீழ்த்தளத்தில் இருந்த ஒரு அறைக்குள் நுழைந்தான் தீரன்.
பின்னால் அமிழ்தா வருகிறாளா? என்றவன் திரும்பிப் பார்க்க, அவன் மார்பினில் முட்டி மோதி நின்றாள் பாவை.
ஏதேதோ கலங்கலான நினைவுகள் கண் முன்னே தோன்ற, தன் தலையை உலுக்கி சமன் செய்தவன், அவளின் கைகளை இறுக்கப்பற்றி, கட்டிலில் ஓய்ந்து படுத்திருந்த ஒரு வயதான பெண்மணியின் முன் நிற்கச் செய்தான்.
"அம்மாச்சி... " என்றான் மென் குரலில்.
மெல்ல கண் விழித்துப் பார்த்தவர், மணக்கோலத்தில் தீரனுடன் நின்ற அமிழ்தாவைக் கண்டதும், முதலில் கண்களைச் சுருக்கியவர் பின், மிச்சம் மீதி இருந்த தன் பற்களைக் காட்டி சிரித்தார்.
" நன்றாக சிரியுங்கள் அம்மாச்சி! சச்சிதானந்தம் குடும்பத்தின் மொத்த சிரிப்பையும் தாலி கட்டி இழுத்து வந்து விட்டேன்" என்றான் கண்கள் சிவக்க.
அமிழ்தாவை நோக்கி நடுங்கும் கையை நீட்டி, "பாவம்... வேண்டாம்.." என்றார் குரல் உடைய.
"ம்.. பாவம்... அதை நமக்கு யார் பார்த்தார்கள்? இனி மொத்த குடும்பமும் நம் வீட்டு வாசலில் நிற்கும் நியாயம் கேட்க" என்றான் அதீத கோபத்தில்.
அவனருகில் வந்த அமிழ்தா, "சீக்கிரம் காலில் விழுங்கள்" என்றதும் திகைத்து நின்றவனைப் பார்த்து, "அட என் காலில் இல்லை மாமா குட்டி. பாட்டி காலில்" என்றவன் கையைப் பிடித்து நாச்சியாரின் முன் மண்டியிட வைத்தாள்.
அவன் தன் பற்களை நரநரவென கடிக்கும் சப்தத்தை கேட்டும் கேட்காதது போல் எழுந்தாள்.
வாசலில் தன் அண்ணன் ஆதிரனின் கார் சத்தத்தை கேட்டதும் அவளிடம் தோன்றிய பரபரப்பை கண்டு கொண்டவன், தன் கண்களாலேயே பாட்டியிடம் விடை பெற்றான்.
அமிழ்தாவின் கையை பற்றி வரவேற்பறைக்கு வந்தவன், சோபாவின் இருமருங்கிலும் தன் நீண்ட கைகளை வசதியாய் விரித்து, கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.
அவன் எதிரில் நின்றிருந்த ஆதிரன் தன் தங்கையின் முகத்தை ஆராய்ந்தான். அவள் முகத்தில் நிலவிய அமைதி அவன் மனதிலும் குடியேறியது.
"அப்புறம் ஆதிரன்..." என்று பேச்சை துவங்கினான் தீரன்.
"சும்மா. அமிழ்தாவை..." என்று இழுத்தவன் பின் திடமாக நிமிர்ந்து நின்று, "என் தங்கையை பார்க்க வந்தேன்" என்றான்.
" அதுதான் பார்த்தாச்சுல்ல, அப்புறம் கிளம்ப வேண்டியதுதானே. என்ன இருந்தாலும் கல்யாணம் நின்னதும் கூட்டத்திலேயே வசதியா இருக்கிற ஒருவன் தலையில் கட்டி விட்ட உங்க புத்திசாலித்தனத்தை பாராட்டியே தீரனும். பணம் இருக்கிறவனிடம் தங்கையை அனுப்புபவனின் பெயர் அண்ணனா? மாமனா?"
"தீரா! வார்த்தை.... உன் விளையாட்டிற்கு என் தங்கை ஒன்றும் பொம்மை இல்லை"
"அண்ணா... நான் சமாளிச்சுக்குவேன்" என்று திடமான குரலில் பேசியவளை அற்பமாய் பார்த்தவன், " இனி ஒரு நிமிடம் கூட நீ இங்கே இருக்கக் கூடாது கிளம்பு" என்றான் ஆதிரன் அடக்க முடியாத ஆத்திரத்துடன்.
தீரனிடமும் நெருங்க முடியாமல், ஆதிரனிடமும் செல்ல முடியாமல் கரை நடுவே செல்லும் நதி போலானாள் அமிழ்தா.
கர்வம் ஆளும்...
ஆளும் கர்வம் மிளிர தங்கள் கருத்துக்களை என்னோடு பகிரலாமே...
கண்ணாடியின் முன் அமர்ந்து, அணிந்திருந்த நகைகளை ஒவ்வொன்றாக கழட்டி வைத்தாள் அமிழ்தா.
கை வளையல்களை கழட்டும்போது கன்றிச் சிவந்திருந்த தனது வலக்கை மணிக்கட்டை மெதுவாகத் தடவினாள். அதில் தன் உடன் பிறந்தவனின் பாசத்தைக் கண்டு பெருமையில் அவள் நெஞ்சம் விம்மியது.
தீரனின் மட்டமான பேச்சினால் கோபம் கொண்ட ஆதிரன், தன் பாசத்திற்குரிய தங்கள் வீட்டு திருமகளை அவன் வசம் ஒப்படைக்க முடியாமல் துடித்தான்.
"உனக்கு என்ன தலையெழுத்து குட்டிமா? பெரியவர்கள் பேச்சை தட்டாமல் கேட்டு, இப்பொழுது நீ படும் பாடு போதும். கையில் கிடைத்த வைரத்தின் அருமை அறியாமல் தூக்கி வீசும் ஒரு முட்டாளுக்கு எந்த காலத்திலும் உன் அருமை தெரியப்போவதில்லை.
உன்னை இவனிடம் தவிக்க விட்டு விட்டு, என்னால் ஒரு காலத்திலும் நிம்மதியாய் இருக்க முடியாது.
சற்றுமுன் அவன் பேசிய பேச்சை எண்ணிப்பார். எவ்வளவு கொச்சையாக பேசுகிறான். உறவின் அருமை தெரியாத ஒரு மூடனுடன் உன் வாழ்வை தொடங்க வேண்டாம். என் பேச்சைக் கேள். வா! அமிழ்தா.
உன் முடிவால் மொத்த குடும்பமே உனக்கு எதிராக திரும்பினாலும் அண்ணன் என்றும் உன் பக்கம் தான். நம் வீட்டிற்கு கிளம்பி வா!" என்றவன் அவள் வலக்கையை இறுக்கமாய் பற்றினான்.
தன் அண்ணனின் கைகள் தந்த அழுத்தத்தில் அவன் கோபத்தின் அளவை புரிந்து கொண்டாள். அவனை சமாதானப்படுத்தும் நோக்கத்துடன், ஆதிரனின் கை மேல் தன் கையை வைத்து அழுத்தி, " நிச்சயம் நம் வீட்டிற்கு வருவேன் அண்ணா" என்றாள்.
அவளின் பதிலில் உடல் விறைக்க நின்றான் தீரன்.
ஆதிரன், தீரனை பார்த்து இளக்காரமாக சிரித்துவிட்டு, "வா அமிழ்தா, கிளம்பலாம்" என்றான்.
ருத்ரதீரனின் முகத்தை பார்த்துவிட்டு, மனமெங்கும் ஜில்லென்று பரவிய குளிரை அடக்கி விட்டு, "நம் வீட்டிற்கு நான் அவருடன் வருகிறேன் அண்ணா" என்றாள்.
" இந்த அண்ணன் உனக்கு நல்லதை தான் சொல்லுவேன். ம்... கிளம்பு" என்று தன் பிடியில் உறுதியாக நின்றான் ஆதிரன்.
" நந்தன் தன் விருப்பத்தை கூறியதும், நீங்கள் அனைவரும் சேர்ந்து நந்தனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் கூறிய போது, நான் என்ன சொன்னேன்? " என்றாள்.
நந்தனின் பெயர் வந்ததும், லேசாக கருக்கத் தொடங்கிய தன் முகத்தை சமன் செய்துவிட்டு, "வேண்டாம் என்றாய்" என்றான்.
"அப்பொழுது நீ என்ன சமாதானம் சொன்னாய் அண்ணா?"
தீரனின் முன்பு அவமானமாக இருந்தாலும், சமாளித்துக் கொண்டு, "உறவு முறையைத் தாண்டி நந்தன் என் நண்பன். அவனை திருமணம் செய்து கொண்டால் உன் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றேன்" என்றான் எங்கோ பார்த்தபடி.
" அன்று உனக்கு சரியாகப்பட்டது இன்று தவறாகிப் போனது" என்றவள் தீரனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, "இன்று தவறாக சித்தரிக்கப்படும் ஒன்று, நாளை உனக்கு சரியாகத் தோணலாம்" என்றாள் தெளிவான குரலில்.
"ம்... தொடர்ந்ததை முடித்துவிடு " என்றான்.
"அதனால்... அதனால் நான் உன்னுடன் வரவில்லை அண்ணா" என்றாள்.
கைத்தட்டி இருவரையும் தன்வசம் திருப்பிய தீரன், "வாசல் அந்தப் பக்கம்" என்றான் ஆதிரனை பார்த்து.
தங்கையை இறுக்கமாக பிடித்திருந்த ஆதிரனின் கைப்பிடி மெல்ல தளர்ந்தது. முகம் சுமந்த வலியுடன் யாரையும் பார்க்க பிடிக்காமல் விறுவிறுவென வெளியேறினான்.
அவன் வெளியேறியதும், அவளருகில் நெருங்கி வந்தான் தீரன். முழு அலங்காரத்துடன் இருப்பவளை மேலிருந்து கீழாக சலனமற்ற பார்வை பார்த்தான். அவளை நோக்கி அவன் கரம் நீண்டதும், முதுகை சற்று பின்னால் வளைக்க ஆரம்பித்தாள்.
தன் மற்றொரு கையை அவளின் முதுகுக்கு பின்னால் கொடுத்து அவளை நிமிரச் செய்தவன், தன் கைபிடிக்குள் அவளை நிலை நிறுத்தினான்.
அவனது கரம் அவளது காது மடலில் ஊசலாடிய ஜிமிக்கியை தொட்டு ஆட்டியது. மெல்ல குனிந்து அவளது காதில், " உன் அண்ணனுக்கு நீ தந்த பதிலுக்கான பரிசினை, என்னிடம் பெற்றுக் கொள்ளலாம் இரவில் மொத்தமாக" என்றான் கிசுகிசுப்பாக.
'அமிழ்தா! நீ இப்பொழுது கெத்தாக பார்க்க வேண்டும். பயம் துளியும் கண்களில் தெரியக்கூடாது. உன் அண்ணனை விரட்டியவனை, நீ மிரட்ட வேண்டும்' தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.
முகத்தை குதூகலமாக வைத்துக்கொண்டு, "பரிசா? சூப்பர் மாமா குட்டி! ஐஸ்கிரீம்ல பிளாக் கரன்ட் பிளேவர் வாங்கிக்கோங்க. ரெட் வெல்வெட் கேக் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதையும் சேர்த்து வாங்கிக்கோங்க. நெய் குச்சி மிட்டாய் கொஞ்சம் தேடிப் பார்த்து வாங்கிட்டு வாங்க..." என்று அடுக்கியவளை முறைத்துப் பார்த்தான் தீரன்.
" சரி சரி எனக்கு வாங்கும் போது உங்களுக்கும் சேர்த்து வாங்கிக்கோங்க. என்னுடைய பங்கை நிச்சயமா உங்களுக்கு தர மாட்டேன். இதெல்லாம் போக நீங்க சர்ப்ரைஸா வேறு வாங்கிக் கொடுத்தாலும் பெரிய மனதோடு அட்ஜஸ்ட் செஞ்சுகிறேன். அது உங்களுக்காக மட்டும் தான் மாமா குட்டி" என்றாள் கண் இமைகளை படபடவென அடித்தபடி.
தன் கைகளில் சிக்கிக் கொண்ட அந்தப் பட்டாம்பூச்சியை ஆழ்ந்து பார்த்தான். தன் சுட்டு விரலினால் மெல்ல அவள் இமையை மூடினான். மலர்ந்திருந்த அவளின் மற்றொரு இமையும் இதமாய் மூடிக்கொண்டது. ஆனால் அவள் இதயமோ முரசை விட அதிகமாய் அதிர்ந்தது.
" இன்று உன் வாழ்வில் மறக்க முடியாத திருமண நாள். நேற்று வரை இந்தக் கண்கள் எத்தனை கனவுகள் கண்டிருக்கும். உன் அத்தனை கனவுகளும் இருள்படிய உன்னை கரம் பிடித்தேனே, ச்ச்சு... சிறைப்பிடித்தேனே, உன் உறவுகளை எல்லாம் விலக்கி வைத்தேனே, கொஞ்சம் கூட வலிக்கவில்லையா? " என்றான் அவள் விழிகளில் தெரியபோகும் வலிகளை எதிர்பார்த்து.
தன்னெதிரே நின்றவளுக்கு கீழ்தளத்தில் ஓர் அறையினை சுட்டிக்காட்டி விரல் அசைத்து, அது அவளுக்கான இடம் என்பதை உணர்த்திவிட்டு நகர்ந்தான்.
அவன் சற்று நகர்ந்ததும் தன் அண்ணன் பாசமாய் கொண்டு வந்து வைத்த, பார்சலை எடுப்பதற்காக முன்னே நகர்ந்தாள்.
முன்னால் சென்றவனோ பின்னே நகர்ந்து வந்து, அந்தப் பார்சலை எடுத்து குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு, "எனது கௌரவம் என்றும் எனக்கு முக்கியம்" என்று கூறிவிட்டு விறுவிறுவென வெளியேறினான்.
தன் பாசம் குப்பைத் தொட்டியில் சரண் புகுந்ததை எண்ணி, மனம் கனக்க தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்தாள்.
"சென்றதினி மீளாது,மூடரே!நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து,
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்; தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா"
பாரதியின் வரிகள் அவளின் நினைவில் ஆட, நடந்ததை நினைத்து கவலை கொள்ளாமல், புதிய வாழ்க்கை, புதிய உலகத்தை ஒரு கை பார்க்க, தன்னை தயார்படுத்திக் கொண்டாள்.
தீரனிடம் மாற்றம் வேண்டும் என்றால், அந்த மாற்றம் தன்னிடம் இருந்து தொடங்கட்டும் என்று தீர்க்கமாய் எண்ணியவளின் மனதில் தீரனின் காதல் நிழலாடியது.
பழிக்குப் பழி வாங்குவது போல், அவன் காதலுக்கு ஈடாக தன் காதலை களம் இறக்கத் தயாரானாள்.
'காதலா? நானா இப்படி நினைத்தேன்? அடப்பாவி மாமா குட்டி! ஒரே நாளில் என் உலகத்தை இப்படி தலைகீழாக மாற்றி விட்டாயே!" என்று தன்னையே ஆச்சரியமாக நினைத்தவளின் கை தானாக கழுத்தில் தொங்கிய தாலிச் சரடை வருட ஆரம்பித்தது.
'காதலிக்க வேண்டும். எப்படி? எங்கே? காதலைத் தொடங்குவது? "ஐ லவ் யூ" என்று சொன்னால் காதல் வந்து விடுமா? நிச்சயம் காதலை யாசகமாய் பெறக் கூடாது. ஒருவேளை தீரனின் காதல் எனக்கு கிடைக்காமலேயே போனால்....'
சட்டென்று உடல் பாரமாய் தோன்ற, தன்னை உறுத்திய நகைகளை கழட்டி வைக்க ஆரம்பித்தாள் கண்ணாடியை பார்த்தவாறே...
சச்சிதானந்தத்தின் வீடு அமைதியாய் இருந்தது. அனைவரின் முகமும் களை இழந்து ஆழ்ந்த யோசனையை தத்தெடுத்து இருந்தது.
குடும்பத்தினரின் குற்றம் சாட்டும் பார்வையை தாங்க முடியாமல், அன்பானந்தமும், அபிராமியும் தலை குனிந்து அமர்ந்திருந்தனர் நந்தனின் திடீர் முடிவால்.
" இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி அமைதியாக இருக்கிறீங்க? இன்னாருக்கு இன்னார் என்று இறைவன் போட்ட முடிச்சு. அதை நானோ, நீங்களோ மாற்ற முடியாது.
நம்முடைய அமிழ்தாவை தீரனுக்கு திருமணம் செய்ததால், அவனுக்கு நாம் நியாயம் செய்து விட்டோம்" என்றார் பத்மாவதி சத்தமாக.
" யார் செய்த தவறுக்கு யார் தண்டனை அனுபவிப்பது? " என்று சிவானந்தத்தை தீவிரமாக முறைத்தான் ஆதிரன்.
சச்சிதானந்தத்தை பார்த்து, "அப்பா! என்றோ என் கை மீறிப் போன விஷயத்தை, நீங்கள் கைகோர்த்து விட்டு, என்னை குற்றம் சாட்டுவது சரியல்ல " என்றார் சிவானந்தம்.
பதில் பேச வந்த தன் மகன் ஆதிரனை தடுத்து விட்டு அமுதன், "மாமா, இந்த வீட்டுக்கு பெரியவர் நீங்கள். உங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு என் மகள் இன்று எங்களை விட்டு பிரிந்து நிற்கிறாள். அருமை பெருமையாக வளர்த்த மகளை இப்படி ஒரே நாளில் பிரித்து சென்று விடுவான் என்று நினைக்கவில்லை.
உங்கள் அனைவருக்காகவும் பார்த்த என் மகளுக்காக நீங்கள் அனைவரும் தீரனிடம் இறங்கி வரத்தான் வேண்டும்" என்றார் சச்சிதானந்தத்திடம்.
" நான் பெற்ற மகனே ஆனாலும் அவனிடம் என்னால் தழைந்து போக முடியாது. எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்த விஷயத்தில் இன்று என்னை மட்டும் குற்றம் சாட்டுவது முறையாகாது " என்றார் சிவானந்தம்.
"நம் மகனிடம் நாமே.." என்று ஆரம்பித்த ரேணுகாவை, " வாயை மூடு ரேணு! எத்தனை கேவலமான வார்த்தைகள், குற்றச்சாட்டுகள். அதையும் மீறி அவனை உன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடிகிறதோ " என்று மனைவியை அடக்கினார் சிவானந்தம்.
"அப்பா நம் அமிழ்தாவிற்காக..." என்ற தளிர்மதியை, "தளிர், அவள் நினைத்திருந்தால் , தீரனுடனான திருமணம் வேண்டாம் என்று முடிவு எடுத்து இருக்கலாமே. இனி அவள் முடிவு! அவள் வாழ்க்கை!" என்றார் சிவானந்தம்.
"ஓ... அப்படியா?" என்று இழுத்த ஆதிரன், " என் தங்கையின் வாழ்க்கை அங்கே கேள்விக்குறியாய் இருக்கும்போது, அவனுடைய தங்கை, உங்கள் மகள், என் மனைவி தளிர்மதியின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடலாமா மாமா? " என்று கோபத்துடன் சிவானந்தத்தை பார்த்து கேட்டான் ஆதிரன்.
"மாப்பிள்ளை..." என்று அதிர்ந்த ரேணுகாவைப் பார்த்து, "இப்படித்தான் அத்தை, எனக்கும் இருக்கிறது மாமா பேசும்போது. உங்கள் மகன் தீரனின் லீலைகளை எல்லாம் நித்தம் ஒரு பத்திரிக்கையில் கிசுகிசுவாக எழுதிக் கொண்டுதானே இருக்கிறார்கள். உலகம் முழுவதும் ஆடைகளை ஏற்றுமதி செய்யும், 'மதுரா கார்மெண்ட்ஸ்' உரிமையாளர் ருத்ரதீரனின் உலக காதலிகள் என்ற தலைப்புச் செய்திகளுடன். ஏன் நானே, என் கண்களால்..." என்றான் கோபத்தை அடக்க முடியாமல்.
"ஆதி, எதையும் தீர விசாரிக்காமல் வார்த்தைகளை விடாதே. அவன் தொழிலில் நுழைந்த இந்தக் குறுகிய காலத்திற்குள் அசைக்க முடியாத அபார வளர்ச்சி அடைந்துள்ளான். உலகம் ஆயிரம் பேசட்டும். அது உண்மையா? பொய்யா? என்று தெரியாமல் பேசாதே. கண்கள் பார்ப்பது மட்டும் என்றும் உண்மையாகாது. நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக, மறுபேச்சு இல்லாமல் என் பேத்தியை கட்டிக் கொள்ள சம்மதித்த அவனை நீ பேசாதே!
அவன் மட்டும் அனைவர் முன்பும் மறுத்திருந்தால் நமது குடும்ப மானம் என்னவாயிருக்கும்? நம் அமிழ்தாவின் நிலையை எண்ணிப் பார்க்க முடியுமா? தீரனின் முடிவு நானே எதிர்ப்பாராதது. இருந்தாலும் தீரன் விஷயத்தில் கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்க வேண்டும்" என்றார் சச்சிதானந்தம்.
" அப்பா என் மகள் அமிழ்தா... " என்று கலக்கம் சூழ்ந்த கண்களுடன் பேசிய நிறைமதிக்கு, 'நான் பார்த்துக் கொள்கிறேன்' என்பது போல் கண்களை மூடித் திறந்தார் சச்சிதானந்தம்.
புயலடித்து ஓய்ந்தார் போல், அமைதியுடன் அனைவரும் அமர்ந்திருக்க, கலைந்த தலை, கசங்கிய உடை, சிவந்த கண்களுடன் புயலைப் போல் உள்ளே நுழைந்தான் நந்தன்.
கர்வம் ஆளும்...
ஆளும் கர்வம் மிளிர , கருத்துக்களை என்னோடு பகிரலாமே...
"புறத்துறுப்பு என்பயன் தரும் அகத்தில் - காதல் இல்லா விடில்"
உள்ளே நுழைந்த நந்தன் வரவேற்பறையில் இருந்த சோபாவில் சட்டென அமர்ந்து இரு கைகளாலும் தலையினைத் தாங்கி குனிந்திருந்தான்.
அவன் அருகில் அவசர நடையுடன் வந்த அபிராமி அவன் தலையை தூக்கி, பளாரென்று ஓர் அறை அறைந்தார்.
கண்களில் ஈரம் தழும்ப, உலகில் உள்ள சோகத்தை எல்லாம் தத்தெடுத்து, விரக்தியுடன் சிரித்தான் நந்தன்.
அவன் சிரிப்பில் ஆத்திரம் மிக, இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி தன் கை வலிக்க அறைந்தார் அபிராமி.
" நீ விரும்பிய பெண்ணை இப்படி நிராதரவாக விட எப்படிடா உனக்கு மனசு வந்தது? ஒன்னும் தெரியாத அந்த சின்னப் பெண்ணை, உன் ஆசைக்காக, அனைவரும் சேர்ந்து இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து, ஊர் கூடி நின்ற சபையில் நம்ப வைத்து கழுத்தறுத்த நம்பிக்கை துரோகியடா நீ!
உன்னால் தானடா! உன் ஒருவனால் தானடா, இன்று அமிழ்தா யாருமற்ற அனாதை போல் திக்கற்று தனித்து இருக்கிறாள்.
இப்படி அவளை வேண்டாம் என்று சொல்வதற்காகவா, அனைத்து திருமண ஏற்பாடுகளையும் முன் நின்று செய்தாய்?
உன்னை பெற்று வளர்த்த ஒவ்வொரு நொடியிலும் பெருமை கொண்டேனே! நான் வளர்த்த வளர்ப்பை எல்லாம், உன் மீது நான் கொண்ட நம்பிக்கையை எல்லாம், என் மகன் என்று நான் கொண்ட கர்வத்தை எல்லாம் நெருப்பில் பொசுக்கி விட்டாயே!
பாருடா உன் அப்பாவை! தலை நிமிர்ந்து நடந்த மனிதனை ஒரு புழுவைப் போல் சுருட்டி ஒடுங்க வைத்து விட்டாயே!
பெண் பாவம் உன்னை சும்மா விடாது நந்தா! உன்னை மட்டுமல்ல நந்தா, உன்னை பெற்ற எங்களையும் அந்த பாவம் சும்மா விடாது" என்று மகனை ஆத்திரம் தீர அடித்து மனதில் உள்ள குமுறல்களை கொட்டித் தீர்த்தார் அபிராமி.
ஒரு வார்த்தை கூட பதில் பேசாமல், தன் தாயையே உற்று நோக்கினான் நந்தன்.
' என் மீது அவ்வளவு தானா நம்பிக்கை? ' என்று அந்தப் பார்வை தன் தாயை குற்றம் சாட்டியது.
" என்ன பார்வை? அப்படி என்னடா உன் செயலுக்கு கதை சொல்லப் போகிறாய்? உன்னால் நாங்கள் பட்ட அவமானம் போதாதா? நாங்கள் உயிரோடு இருக்கிறோமா? இல்லை செத்து விட்டோமா என்று பார்க்க வந்தாயா? " என்றார் அபிராமி கோபமான குரலில்.
சோபாவில் இருந்து எழுந்து நின்ற நந்தன், ஆழ்ந்த பெருமூச்சு எடுத்து தன்னை சமன் செய்து கொண்டு நிமிர்ந்தான். சுற்றி நின்ற அனைவரையும் ஒரு பார்வை பார்த்தான். அவன் தேடலின் விடை கிடைக்காது போகவே, அவன் புருவங்கள் சுருங்கியது.
" அம்மா, அம்மு எங்க? " என்றான் ஒன்றும் நடவாதது போல்.
" ஏன் நீ திருமணம் செய்யவில்லை என்றால், நீ அவளை வேண்டாம் என்று சொன்னால் அவளுக்கு திருமணம் நடக்காது என்று நினைத்து விட்டாயா? அவள் திருமணம் முடிந்து அவளுடைய கணவன் வீட்டில் இருக்கிறாள்" என்றார் இளக்காரமாக.
"வாட்? அம்முக்கு திருமணம் முடிந்து விட்டதா? நான் திருமணம் நின்றிருக்கும் என்று மட்டும் தானே நினைத்தேன். என்மீது கோபமாக இருப்பீர்கள். விளக்கிக் கூறினால் புரிந்து கொள்வீர்கள் என்று நினைத்தேனே!
யாருடன் அவளுக்கு திருமணத்தை நடத்தி முடித்து வைத்தீர்கள்?" அவனின் கேள்வியில் அவனை அனைவரும் துச்சமாக பார்த்தனர்.
அனைவரின் பார்வையில் இருந்த ஏளனத்தை புறம் தள்ளிவிட்டு, "தீரனா?" என்றான் குரல் நடுங்க.
அனைவரின் அமைதியும், அமர்த்தலான உடல் மொழியும் அவன் கேள்விக்கான விடையை சொல்லியது.
உடனே விறுவிறுவென அமுதன் மற்றும் நிறைமதியிடம் சென்றவன், "அத்தை அம்முவை நீங்கள் ஏன் தீரனுக்கு மணமுடித்து கொடுத்தீர்கள். என் தேவதையை ஒரு அரக்கனின் கைகளில் ஒப்படைத்து விட்டீர்களே! ஆ.... " என்று அலறினான்.
அதுவரை அவனின் செயல்களை அமைதியாக அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்த ஆதிரன், அவனை நெருங்கி அவன் சட்டையை கொத்தாகப் பற்றினான்.
" உன்னை நான் உறவாய் பார்த்ததை விட நட்பாய் பார்த்தது தானே அதிகம். என் தங்கை இந்த திருமணம் வேண்டாம் என்று கூறியும், உன் ஆசைக்காக, நீ சொன்ன காதல் என்ற கதைக்காக, நான் அவளிடம் எனக்காக இந்த திருமணத்திற்கு சம்மதிக்கச் சொல்லி கேட்டேனே, என்னையும் என் தங்கையையும் நீ என்ன நிலையில் நிறுத்தி இருக்கிறாய் நந்தா!
வேண்டாம் போய்விடு! இனி உன் நாடகத்தை பார்ப்பதற்கு இங்கு யாரும் தயாராக இல்லை. தெரிந்தே என் தங்கையின் வாழ்வு ஒரு இரக்கம் இல்லாதவனுக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது. அங்கே என் தங்கையின் வாழ்வு, நூலில் மாட்டிய பொம்மை போல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. நீ எத்தனை சமாதானம் சொன்னாலும் என் மனம் அதனை ஏற்காது.
நம்மிடையே இனி உறவும் இல்லை. நட்பும் இல்லை" என்றவன் சட்டையை உதறிவிட்டு நகர்ந்தான்.
நந்தனுக்கோ தன்னைச் சுற்றி இருக்கும் காட்சிகள் அனைத்தும் மறைந்து, அவன் நினைவில் தீரனும், மகிழ்தாவும் மட்டுமே நிறைந்தனர்.
வெறி பிடித்தது போல் ஆதிரனை கீழே தள்ளி அவன் மேல் அமர்ந்த நந்தன், "என் அம்மு தீரனை திருமணம் செய்து கொள்ள சம்மதம் சொன்னாளா? நீங்கள் கட்டாயப்படுத்தினீர்களா? நிஜமாவே திருமணம் முடிந்து விட்டதா? எல்லோரும் என்னோடு விளையாடுகிறீர்களா? ப்ளீஸ் சொல்லுடா" என்றான் படபடப்புடன்.
"ஆமாம் டா! கூடவே இருந்து முதுகில் குத்திய உன்னை விட, அந்த ஒழுக்கம் கெட்ட தீரன் எவ்வளவோ மேல். உன் அம்முவாக இருந்தவள், அவனை கட்டிக் கொள்வேன் என்று கூறி இந்த குடும்ப மானத்திற்காக தன் தலையில் தானே மண்ணை அள்ளி கொட்டிக் கொண்டாள்.
இனி அம்மு என்று செல்லம் கொண்டாடுவதை நிறுத்து. நீ கை கழுவி விட்டுச் சென்றது, உன் கை நழுவி எப்பொழுதோ சென்று விட்டது. அவளை இனி உரிமை கொண்டாடப் போவது நீயல்ல. அந்த தீரன் மட்டுமே!" என்றான் அவன் காயத்தை குறி பார்த்து அடித்து.
"முடியாது... எனக்கு என் அம்மு வேண்டும். யார் தடுத்தாலும் என் காதலை மீட்டெடுப்பேன்" என்று கத்தியவனை தன் மீது இருந்து கீழே தள்ளி எழுந்தான் ஆதிரன்.
" என் பேரன் பேத்தியின் திருமணம் இன்று நடந்து முடிந்து விட்டது. அந்தப் பேரன் நீயாக இல்லாமல் போனது உன் துரதிர்ஷ்டம். மீண்டும் உன்னால் என் பேத்தியின் வாழ்வில் பிரச்சனை வந்தால் நான் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன். அமிழ்தாவின் பெயரைக் கூட இனி நீ உச்சரிக்கக் கூடாது. நீ தந்த காயம் மிகவும் பெரிது. இந்த வீட்டில் எப்பொழுதும் போல் நீ உரிமை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் எங்களிடம் அல்ல... " என்றார் சச்சிதானந்தம் உரத்த குரலில்.
"பாட்டி..." என்று பத்மாவதி இடம் சென்றவனை தன் முகத்தை திருப்பி தடுத்தார்.
அமைதியாக நின்ற தன் தந்தை அன்பானந்தத்திடம் சென்றவன், "அப்பா... ப்ளீஸ்..." என்றவன் கெஞ்சத் தொடங்கியதும் மறுப்பாக தன் தலையை அசைத்து அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார்.
அவனுடைய பெரியப்பா சிவானந்தம் தன் தோள்களைக் குலுக்கி கைகளை விரித்து உடல் மொழியில் பதில் தந்தார் நந்தனுக்கு.
மொத்த குடும்பமும் தன்னை ஒதுக்கி வைத்த ஆத்திரத்தில், " என்னுடைய விளக்கங்களை நான் யாருக்கும் கூறப்போவதில்லை " என்று கூறிவிட்டு, யார் முகத்தையும் பார்க்காமல் தன் அறைக்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டான்.
கோபம்... கோபம்... கோபம்... மட்டுமே கொழுந்து விட்டு எரிந்தது அவன் மனமெங்கும். உறவை வைத்து, தன் உயிரை பிரித்து விட்டானே அந்த தீரன்.
ஆத்திரத்தில் அறையில் இருந்த பொருட்களை எல்லாம் தூக்கி வீசினான். கண்ணாடியில் அவன் உருவமே அவனை கேலி செய்வது போல் இருக்க, வலது கையின் ஐவிரல்களை மடக்கி, முழு விசையோடு, முகக் கண்ணாடியில் கரத்தை இறக்கினான்.
சிதறிய கண்ணாடித் துண்டுகளில் தன் முகம் பல கோணங்களில் பிரதிபலிக்க, பெருங்குரலெடுத்து நகைக்க ஆரம்பித்தான்.
"தீரா... உன் விளையாட்டுக்கு என் காதல்தான் முதல் பலியா? எனக்கு வலிக்க வைத்தாய். ஆமாம் ரொம்ப வலிக்குது. இதே போல் உனக்கும் வலிக்க வைப்பேன்.
அம்மு... உன்னை அவனிடம் இருந்து எப்படி காப்பாற்றப் போகிறேன்..." என்றவனின் சிரிப்புச் சத்தம் தேய்ந்து, அழுகையின் விளிம்பைத் தொட்டது.
நந்தனின் அறையில் கேட்ட சத்தத்தில், அவன் அறை நோக்கி நகரத் துடித்த தன் கால்களை, அசைக்காமல் வேராய் தரையில் வேரூன்றி நின்றார் அபிராமி.
நந்தனின் செயலுக்கு விளக்கம் கேட்கப்படாமலேயே குற்றம் சுமத்தப்பட்டது. மனித வாழ்வில் கொடுமையானது, பாசமாய் இருக்கும் உறவுகள் எல்லாம் பாரமாய் மாறி தூரமாய் போவது .
உடலில் பாரமாய் அழுத்திய நகைகளை எல்லாம் கழட்டி வைத்ததும், சற்று லேசாக உணர்ந்தாள் அமிழ்தா.
மாற்று உடை இல்லாத காரணத்தினால், முகத்தை மட்டும் கழுவி விட்டு, கட்டிலில் அமர்ந்தாள். அன்றைய நாளின் இடைவிடாத எண்ணங்களின் சுழற்சியிலும், பசி மயக்கத்திலும் சிறிது சிறிதாக மெத்தையில் சரிந்தவள் மொத்தமாக தன்னை சுருட்டிக் கொண்டு கண்ணயர்ந்தாள்.
மாலை மயங்கிய பின், இரவு தயங்கித் தயங்கி வந்தது. கையில் பார்சல்களோடு வீட்டிற்குள் நுழைந்த தீரன், அமிழ்தாவின் அறையை லேசாகத் தட்டினான். உள்ளிருந்து சத்தம் வராது போகவே கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.
கையில் சுமந்திருந்த பொருட்களை கீழே வைத்துவிட்டு, கட்டிலில் ஆழ்ந்த துயில் கொள்ளும் அந்த செம்பவளப்பாவையை நிதானமாக ரசித்தான். கழுவித் துடைத்த முகத்தில் சிறு பொட்டினைத் தவிர வேறு எந்த அலங்காரமும் இல்லை.
' அமிழ்தா உன்னுடையவள்! உனக்கு மட்டும் உரிமையானவள்! அவளை ஆட்கொண்டு விடு தீரா! அவளை உன் கட்டுப்பாட்டிற்குள் வைத்தால்தான் அந்த ஒட்டு மொத்த குடும்பத்தையும் ஆட்டி வைக்க முடியும்" தன் கைப்பொருள் எந்த நேரத்தில் கைநழுவி போய்விடுமோ என்ற பயத்தில், அவனது உள் மனம் அவனுக்கு கட்டளையிட்டது.
அணிந்திருந்த ஓவர் கோட்டை கழட்டி தூர எறிந்தான். உள் சட்டையின் பட்டன்களை நிதானமின்றி ஒவ்வொன்றாக கழட்டிக்கொண்டே, மெத்தையில் அவள் அருகே விரைந்து, சரிந்து படுத்தான்.
அவள் தலையணையில் தன் தலையினை வேகமாகச் சாய்த்தான். அவள் புறம் நூலளவு இடைவெளியில் திரும்பி, தன் நீண்ட கையை அவள் மீது அணைவாய் சேர்க்கப் போகும் நேரம், அவளிடம் இருந்து மெல்லிய குரலில் முணுமுணுப்பாய் சத்தம் கேட்டது.
" மை டியர் எமதர்மராஜா, இந்த வீட்டில் என் மாமா சொல்லாமல், நானாக சாப்பாடு கேட்டால் என் மாமா குட்டிக்கு எவ்வளவு அசிங்கம்? கட்டுன பொண்டாட்டிக்கு சோறு போடவில்லை என்று இந்த உலகம் அவரை கேலி பேசுமே!
என் மாமா குட்டிக்காக, அவருடைய கௌரவத்திற்காக சாப்பிடாமலேயே செத்துப் போய் விடலாம் என்று முடிவு செய்து விட்டேன். கடைசி கடைசியா குழைவான நெய் மிதக்கும் பொங்கலும், வடையும் சாப்பிட்டால் எப்படி இருக்கும்? ம்... ஓகே எமா டேக் மீ டேக் மீ " என்று பிதற்றினாள் அமிழ்தா.
பொங்கி வந்த அவனின் உணர்வுகள் எல்லாம் அடங்கியே போனது.
"இம்சை... ஒரு நாள் சாப்பிடலைன்னா உலகமே அழிந்து விடுவது மாதிரி பேசுறா..." என்றவன் சட்டை பட்டன்களை போட்டுவிட்டு வெளியே சென்று, சிறிது நேரத்தில் கையில் உணவுத் தட்டுடன் வந்தான்.
அவள் தோள்களைத் தட்டி எழுப்ப, "பிளடி ஆனியன்..." அவன் கையில் பலமாய் அடித்து தட்டி விட்டாள்.
"ஏய்!" என்று கத்தியவனின் குரலில், தன் காதினை ஒரு விரலால் குடைந்து விட்டு, "எ பி சி டி... உங்க அப்பன் தாடி " என்று கூறிவிட்டு சுகமாய் தூக்கத்தை தொடர்ந்தாள்.
வேறு வழி இல்லாமல் அவளை நிமிர்த்தி கட்டிலில் சாய்ந்து உட்கார வைத்து, உணவுத் தட்டில் இருந்த வெண்பொங்கலையும் வடையையும் ஊட்டி விட்டான். கண்கள் சொருக அரை மயக்கத்திலேயே, உணவை உண்டு விட்டு மீண்டும் சுருண்டு கொண்டாள்.
உணவுப் பருக்கைகள் ஒட்டி இருந்த தன் கைகளை உற்றுப் பார்த்தவன் தன்னுள் வந்த மாற்றத்தை நினைத்து அதிர்ந்தான். 'இன்று ஒரு நாள் மட்டும் தானே. விட்டுப் பிடிக்கலாம் தீரா. இவள் போய் சேர்ந்து விட்டால் பிறகு யாரை வைத்து அந்தக் குடும்பத்தை பழிவாங்குவது? நீ செய்தது சரிதான்! மீனைப் பிடிக்க வேண்டும் என்றால் புழுவை இரையாய் போடத்தான் வேண்டும்' என்று அவன் மனம் அவனுக்கு சாதகமாய் பேசியது.
தன் சிந்தனையை தனக்குத்தானே தெளிய வைத்துக் கொண்டவன் நிம்மதி அடைந்தான்.
அவன் வெளியேறியதும், அரைக் கண்களாய் திறந்து இருந்த அமிழ்தா, தன் கண்களை அகல விரித்தாள். கட்டிலில் இருந்து வேகமாக எழுந்து வந்து அறைக் கதவை தாழிட்டாள்.
" அட என் மக்கு மாமா குட்டியே! பெண்ணின் உணர்வுகள் எப்பொழுதும் விழிப்போடு இருக்கும். காட்டெருமை மாதிரி மெத்தையில் அதுவும் பக்கத்தில் விழுந்தால், எங்களுக்கு கண்டுபிடிக்க தெரியாதாக்கும்? உங்க ரூட்டில் போய்க்கொண்டே, உங்களுக்கு கேட் போடுவேன். நம்ம திறமை அப்படி.
உங்களோடு தான் என் வாழ்வு என்று முடிவான பிறகு, அதுவும் என் குடும்பத்திற்காக நான் எடுத்த முடிவில் என் குடும்பத்தையே பழிவாங்க வைப்பேனா?
என்னுடைய பசியைக் கூட தாங்க முடியாமல், ஊட்டி விடும் நீங்களா என்னை பழி வாங்கப் போகிறீர்கள்? விருப்பு ஒரு வகைக் காதல். அது எல்லோருக்கும் வாய்த்து விடும். வெறுப்பு ஒரு வகைக் காதல். அது வெகு அபூர்வம். அதுதான் நமக்கு வாய்த்தது. ஜமாச்சிடலாம் மாமோய்..." என்றவள் நிம்மதியாக கண்ணுறங்கினாள்.
"காதல் மேன்மை தருவதால் காதல் -உயிரினும் ஓம்பப் படும்"
காலையில் கண்விழித்ததும், அமிழ்தாவிற்கு சுற்றி இருந்த சுற்றுப்புறம் உரைத்தது. பிரச்சனைகளோடு உழன்று அதற்குத் தீர்வு காணாமல், அதனில் இருந்து விலகி நின்று பார்த்தால் எளிதான தீர்வு கிடைக்கும் என்று எண்ணினாள்.
உதட்டில் பூத்த புன்முறுவலுடன் கட்டிலில் இருந்து கீழே இறங்கியவளின் காலை தீரன் வாங்கி வைத்திருந்த பார்சல்கள் இடறியது.
குனிந்து அதை எடுத்துப் பார்த்தவளின் விழிகள் ஆச்சரியத்தில் மின்னியது. தனக்குப் பிடித்த வண்ணங்களில் ஆடைகள் அதில் இருந்ததைக் கண்டு, உள்ளுக்குள் ஏதோ ஒரு இதம் பரவியது.
குளித்து முடித்து அவன் வாங்கித் தந்த ஆடைகளில் ஒன்றை அணிந்து விட்டு வெளியே வந்தவளுக்கு, அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் முழித்தாள்.
சூடாக ஒரு காபி சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றிய அமிழ்தாவிற்கு சமையல் அறைக்குள் செல்லவே தயக்கமாக இருந்தது. யாரிடம் கேட்பது என்ற குழப்பமும் மிகுந்தது. ஆங்காங்கே வேலையாட்கள் தத்தம் வேலையை செய்து கொண்டிருந்தாலும், முறையான அறிமுகம் இல்லாமல் அவர்களை நெருங்க யோசனையாய் இருந்தது.
கணவனே ஆனாலும், முகத்திற்கு நேராக உணவு கேட்க அவளின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. வரவேற்பறையின் சோபாவில் யோசனையாக அமர்ந்திருக்கும் அமிழ்தாவை பார்த்தபடியே படி இறங்கினான் தீரன்.
உணவு மேசையில் அமர்ந்து, பணியாளர்களுக்கு கண்களால் கட்டளையிட்டு உணவை உண்ண ஆரம்பித்தான் தீரன்.
அவனது கட்டளைக்கிணங்க நாச்சியார் அறைக்கும் உணவு எடுத்துச் செல்லப்பட்டது.
"பைரவா! " உரத்த குரலில் கத்தினான் தீரன்.
உடம்பு முழுவதும் கருப்பாய், அச்சம் தரும் உயரத்தில், முழு நீள நாக்கும் வெளியில் தொங்கிட, கூர்மையான பற்களை காட்டிக் கொண்டு, அவன் முன் மண்டியிட்டு நிமிர்ந்து அமர்ந்தது பைரவன்.
தீரனின் கண் அசைவிற்கேற்ப பைரவனுக்குரிய உணவு தட்டில் நிரப்பப்பட்டது. தீரன் கை சொடுக்கிய அடுத்த நொடி அந்தத் தட்டில் இருந்த உணவை உண்ண ஆரம்பித்து, முடித்துவிட்டு நிமிர்ந்தது பைரவன்.
அமிழ்தாவின் நிலை நன்றாக புரிந்து இருந்தும் அவளாக இறங்கி தன்னிடம் கெஞ்ச வேண்டும் என்று எதிர்பார்த்தான்.
அமிழ்தாவின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக கரை கடக்க ஆரம்பித்தது.
'ஓ ஹோ... வீட்டில் இருக்கும் நாய் வரை சாப்பாடு போட்டு விட்டு, என்னை பட்டினி போடலாம் என்று எண்ணமா? யாரு கிட்ட மவனே? இப்ப பாரு மாமா குட்டி' என்று மனதிற்குள் சபதம் எடுத்தவள்,
வீட்டில் இருக்கும் வேலைக்காரர்கள் அனைவரையும் ஒருசேர அழைத்தாள். "எல்லோரும் என் முன்னே உட்காருங்கள்! " என்று கட்டளை இட்டாள்.
'யாராவது ஒருத்தர் அவளுடைய பேச்சை கேட்கட்டும், அடுத்த நொடி அவர்களை வேலையை விட்டு தூக்குவது தான் என் முதல் வேலை. என் உத்தரவு இல்லாமல், யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள் என்று தெரியாமல், இந்த அரை லூசு அவர்களிடம் அதிகாரம் பண்ணி அவமானப்படப் போகிறது. அவள் எதுவரை செல்கிறாள் என்று பார்ப்போம்' என்று அனைவரையும் அவள் முன் உட்காரும்படி கண்களால் அனுமதி தந்தான்.
வீட்டில் இருக்கும் பத்திற்கும் மேற்பட்ட வேலை ஆட்கள் அவள் முன் அமர, " செவிக்கு உணவு இல்லாத போது தான், சிறிது வயிற்றுக்கு உணவிட வேண்டும். எனவே என் செவிக்கும் உங்கள் செவிக்கும் அற்புதமான உணவை பரிசாகத் தரப்போகிறேன். அதாவது பாடப்போகிறேன்... " என்றாள் அறிவிப்பாக.
தங்கள் முதலாளியின் மனைவி, தங்களுக்காக பாட்டு பாடப் போகிறார் என்ற ஆனந்தத்தில் கைகளைத் தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
' மறை கழண்ட கேசு!' என்று மனதிற்குள் நக்கல் செய்தான் தீரன்.
"நீ அம்மு அம்மு சொல்லயிலே பொண்டாட்டியா பூரிக்கிறேன்
சாமி! என் சாமி!
நா சாமி சாமி சொல்ல
நீ என் புருஷனான ஃபீலிங்ஙு தான் சாமி என் சாமி..." என்று கட்டைக் குரலில் அமிழ்தா பாட, இனிய கானத்தை எதிர்பார்த்த வேலைக்காரர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் பார்த்து சிரிப்பை அடக்க முயன்றனர்.
நின்று கொண்டிருந்த பைரவன் கூட வெறி பிடித்த மாதிரி வீட்டை விட்டு வெளியே ஓடி தோட்டத்திற்குள் சரண் புகுந்தது.
தன் மானம் காற்றில் பறப்பதைக் கண்டவன், அவள் கையை பின்புறமாய் மடக்கி தரதரவென இழுத்துக் கொண்டு தூண் மறைவில் நிற்கச் செய்தான்.
அவளோ, " சாமி... சாமி... சாமி... " பலவிதக் குரல்களில் ஏற்ற இறக்கமாய் பாடிக் கொண்டே இருந்தாள்.
" என்ன? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே..." பட்டாம்பூச்சியின் சிறகைப் போல் இமைகளை படபடவென அடித்து தலையை ஒய்யாரமாய் சரித்து பேசினாள்.
" எதுக்கு இங்க பாடுற? "
" அட போங்க மாமா குட்டி. நம்ம வீட்டில் பாடாமல், அடுத்த வீட்டிலா பாட முடியும்?
நம்ம வீட்டு டவுசரை நம்ம வீட்டு கொடியில் தான் காய போட வேண்டும். அடுத்த வீட்டு கொடியில் போட்டால் சண்டைக்கு வருவார்கள்" என்று சிரிக்காமல் பேசினாள்.
"ஷிட்...." என்று கை விரல்களை மடக்கி தொடையில் குத்தி ஆத்திரத்தை அடக்க முற்பட்டான்.
அடுத்த நொடி அவன் முன்னே தரையில் அமர்ந்து விட்டாள்.
" ஏய் முட்டாள்! என்ன செய்கிறாய்?"
" நீங்கள் தான் சிட் என்றீர்கள். அதான் தரையில் உட்கார்ந்து விட்டேன். நான் எல்லாம் சொன்ன பேச்சைக் கேட்கும் நல்ல பிள்ளை " என்றாள் கைகளை கட்டி பவ்யமான குரலில்.
அவள் தரும் எதிர் வினைகளில் தலையே வலித்தது தீரனுக்கு.
வீட்டு வேலைக்காரர்களின் முழுக் கவனமும் தங்கள் மேல் இருப்பதைக் கண்ட தீரன், கை சொடுக்கி, பின் கை அசைத்து அவர்களை போகச் சொன்னான்.
தரையில் அமர்ந்தபடியே அமிழ்தா, "நோ... என் இசை ரசிகர்களை போக சொல்லக்கூடாது. வயிற்றுக்கு உணவு நிரம்பும் வரை, செவிக்கு இசையை நிறைத்துக் கொண்டே இருப்பேன். சாமி... சாமி...ஐயா சாமி...." என்று ஆரம்பித்தவளின் கையை இழுத்து உணவு மேசையில் அமரச் செய்து, மூன்று வேளையும் ஒழுங்காக சாப்பிடு. இனி பாட்டு பாடுற... இல்லை இல்லை நீ கத்துற சத்தம் இங்கு கேட்கவே கூடாது. நான்சென்ஸ்.... " என்றான் எரிச்சலாக.
" நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். ஓகே மாமா குட்டி. இன்று முதல் இந்தக் குயில் உங்களுக்காக தன் குரலை தியாகம் செய்கிறது" என்றாள் சோகமான குரலில்.
அவள் தன் தேவைக்காக தன்னிடம் கெஞ்ச வேண்டும் என்று அவன் நினைக்க, அவளோ அவளுடைய செயல்களால் அவனை மிஞ்சிக் கொண்டிருந்தாள்.
அவன் வெளியேறிச் செல்லும் நேரம், "மாமா குட்டி! எனக்கு உணவை நானே பரிமாறி சாப்பிடத் தெரியாதே! சின்ன வயசிலிருந்து எங்கள் மாதாஜி அப்படி பழக்கி விட்டு விட்டார்கள்... உங்களுக்கு விருப்பமில்லை என்றால் விட்டுவிடுங்கள், நான் பாட்டு பாடி கொண்டு சமாளித்து விடுவேன்" என்றாள் முகத்தை குழைவாக வைத்துக்கொண்டு.
அவன் பதில் பேசாமல் எரிச்சலுடன் நின்ற தோற்றத்தைப் பார்த்து, "சா..." என்று அவள் பாட ஆரம்பிப்பதற்குள், அவன் கண்ணசைவில் பணியாளர்கள் அவளுக்கு உணவை பரிமாற ஆரம்பித்தனர்.
"அது...! இதுக்கே இவ்வளவு எரிச்சல் பட்டா எப்படி? இன்னும் பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்குதே! யாருகிட்ட மவனே!" என்றவளின் மெல்லிதழ்கள் அசைந்தது.
அலுவலகத்திற்கு காரில் செல்லும் போது, போக்குவரத்து நெரிசலில் சிக்னலுக்காக கார் நின்றதும், கார் ஜன்னலை தட்டினார் ஒரு வயதான மூதாட்டி.
" சாமி! தர்மம் போடுங்க சாமி!" என்றவர் சொன்னதும் சிந்தைக்குள் தன் மனைவியின் மதிமுகம் மின்னியது.
வலுக்கட்டாயமாக தன் நினைவை திருப்பி விட்டு, அவருக்கு பணத்தை கொடுத்து விட்டுச் சென்றான்.
அலைபேசியில் தொடர்பு கொண்ட, அவன் அலுவலக மேனேஜர், " சார் இன்னைக்கு நமக்கு பணம் செட்டில் பண்றேன்னு சொன்ன வேணுகோபால், குடும்பத்தோடு குலசாமி கும்பிட போயிருக்காராம்" என்ற தகவலை கூறி விட்டு வைத்து விட்டார்.
விதவித ரிங்க்டோனில் "சாமி" பாட்டு, அவன் காதுகளுக்கு மட்டும் கேட்டது. கண்களை மூடித் திறந்து, தலையை குலுக்கிவிட்டு முன்னேறினான்.
" குட் மார்னிங் சார்... " என்று அனைவரும் சொன்ன காலை வணக்கங்கள் எல்லாம், " குட் மார்னிங் சாமி" என்பது போலவே அவனுக்கு கேட்டது.
அமிழ்தா தன் நினைவுகளால் அவனை சுற்றி வளைக்க ஆரம்பித்தாள்.
உணவு மேசையில் உணவை வெளுத்து கட்டிவிட்டு, பொழுது போகாமல் சுற்றிச் சுற்றி வந்தவள், மெதுவாக நாச்சியின் அறைக்குள் நுழைந்தாள்.
கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தவர் அருகில் அமர்ந்து, அவர் விழிக்கும் வரை காத்திருந்தாள். அந்த அறை சுத்தமாக இருந்தாலும், ஏதோ ஒரு குறை இருப்பது போல் அவளுக்கு தோன்றியது.
அறையில் பூட்டியிருந்த ஜன்னலை திறந்து விட்டாள். தோட்டத்திலிருந்து காற்று இதமாய் அறைக்குள் நுழைந்தது வெளிச்சத்துடன்.
நாச்சியை பார்த்துக் கொள்வதற்காக தனியாக அமர்த்தப்பட்டிருந்த வேலைக்கார பெண்ணோ, " மேடம்! சத்தம் கேட்டால் வயதானவர்களுக்கு தூங்குவதற்கு சிரமமாக இருக்கும். அதனால் நாங்கள் எப்பொழுதும் அந்த ஜன்னலை திறப்பதில்லை" என்றாள்.
"ஓ... அப்படி என்றால் ஜன்னலுக்கு பதில் செங்கல் வைத்து சிமெண்ட் பூசி அடைத்து இருக்க வேண்டியதுதானே? ஒளியும், காற்றும் மருந்து செய்ய வேண்டிய பாதி வேலையை செய்யும்" என்றாள்.
அதுவரை விளையாட்டுக் குரலில் பேசிக்கொண்டிருந்தவள் நாற்காலியில் தோரணையாக அமர்ந்து, " மிஸஸ் தீரனின் வார்த்தைக்கு, மறுபேச்சும் உண்டா? ம்... " என்றவளின் அதிகாரக் குரலில் அந்தப் பெண்ணின் தலை மறுப்பாக அசைந்தது.
வாசலின் பக்கம் கையை சுட்டிக் காட்ட தலை அசைத்துக் கொண்டே அறையை விட்டு வெளியேறினாள் அந்தப் பெண்.
"பாட்டி..." என்றவள் அழைத்த குரலுக்கு கண் இமைகளை அசைத்து மெல்ல விழித்துப் பார்த்தார் நாச்சியார்.
ஜன்னலில் பின்னிருந்து வந்த ஒளியில், மலர்ந்த முகத்துடன் தன் அருகே அமர்ந்திருந்த அமிழ்தாவை கண்டதும் அவரின் காய்ந்து வறண்ட உதடுகள் புன்னகையை சிந்தியது.
" சாப்பிட்டீர்களா பாட்டி? " என்றாள் பாசத்துடன்.
தன் பேரனை அடுத்து தன்னை உரிமையாய் கேட்கும் அந்தக் குரலில் மயங்கித்தான் போனார்.
"ராசாத்தி...." என்றார் காற்றாய் போன குரலில்.
"போங்க பாட்டிஜி! இப்படி கட்டிலிலே படுத்து கொண்டு இருந்தால், இந்த வீட்டில் நான் யார் கூட பேசுவது? எங்க ஸ்கூலில் பனிஷ்மென்ட் கொடுப்பதற்கு தான் இப்படி டார்க்ரூமில் போட்டு அடைத்து வைப்போம் என்று மிரட்டுவார்கள். உங்க பேரன் உங்களை கவனித்துக் கொள்ளவில்லை பாட்டிஜி. உங்களுக்கு பனிஷ்மென்ட் கொடுத்து அடைத்து வைத்திருக்கிறார்.
சீக்கிரம் படுக்கையை விட்டு எழுந்து வாருங்கள். நாம் இருவரும் கூட்டணி வைத்து உங்கள் பேரனை தோற்கடித்து விடலாம் " என்று பேசிக்கொண்டே போனவளின் பேச்சில், ஒளி மங்கிய கண்களில் தோன்றிய பளபளப்புடன் ரசித்துக்கொண்டே இருந்தார் நாச்சியார்.
மருந்துகளின் பக்க விளைவால் சற்று நேரத்தில் கண் அயர்ந்தார்.
வீட்டிற்குள்ளும், அறைக்குள்ளும் உலாவிக் கொண்டே இருந்தவள், மாலை வந்ததும் தோட்டத்திற்குள் நுழைந்தாள்.
பைரவனை உணவுப் பொருட்கள் காட்டி, எத்தனையோ விளையாட்டுக்கள் காட்டி தன் பக்கம் இழுக்க முயன்றும், முழு தோல்வியே கிட்டியது அவளுக்கு.
'மாமாவின் வளர்ப்பு எல்லாம் மாமா மாதிரியே இருக்கு.... உனக்கு இருக்கு..." என்று பைரவனை மனதிற்குள் திட்டிக்கொண்டே நடந்தவள் தன் எதிரே இருந்த மரத்தை நிமிர்ந்து மேல்நோக்கி பார்த்தாள்.
எங்கிருந்தோ பறந்து வந்த நூல் அறுந்த பட்டம் ஒன்று, மரக்கிளையில் சிக்கித் தொங்குவதை பார்த்தவளுக்கு அதனை எடுக்கும் ஆர்வம் வந்துவிட்டது.
ஆதி புத்தி கை கொடுக்க, அணிந்திருந்த சுடிதாரின் பேண்டை மடித்துவிட்டு மரத்தில் ஏற ஆரம்பித்தாள். கிளைகளில் லாவகமாய் தவழ்ந்து சென்று பட்டத்தினை கைப்பற்றியவளுக்கு கீழே இறங்கும் மார்க்கம் புரிபடவில்லை. கிளையும் மரமும் வசதியாக இருக்கவே கிளையில் கால்நீட்டி அமர்ந்து மரத்தில் முதுகை சாய்த்து, வீசிய இதமான காற்றில் கண் அயர்ந்தாள்.
பல அடுக்குமாடி மதுரா கார்மெண்ட்ஸின் கார் நிறுத்தத்தில் தன் காரை முரட்டுத்தனமாக நிறுத்திவிட்டு, வரவேற்பு பெண்ணிடம், "நந்தன்" என்றான் நந்தன்.
" சார் அப்பாயின்மென்ட் இருக்கா? "
" நந்தன்! நந்தன்! நந்தன்! " வார்த்தைக்கு வார்த்தை குரலில் அழுத்தம் கூடிக் கொண்டே சென்றது.
தீரனுக்கு அழைப்பு எடுத்து, நந்தன் வந்திருப்பதை சுருக்கமாக அறிவித்தாள். அவளுக்கு உத்தரவு வந்ததும், " நீங்கள் சாரை மீட் பண்ணலாம் " என்றாள் இன்முகமாக.
கதவைத் தட்டும் நாகரிகம் கூட பார்க்காமல், காற்றை கிழித்துக்கொண்டு தீரனின் அலுவலக அறைக்குள் நுழைந்தான் நந்தன்.
அவன் அலுவலகத்தின் உள்ளே நுழைந்தது முதல் தன் அறைக்கு வரும் வரை அவனது அத்தனை முக உணர்வுகளையும் தன் முன்னே இருந்த கணினித்திரையில் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான் தீரன்.
அறைக்குள் நுழைந்த வேகத்தில் தீரனின் மேஜைக்கு எதிரில் இருந்த நாற்காலியை எட்டி உதைத்தான்.
"ப்பா... என்ன கோபம்! என்ன கோபம்! உன் வீட்டில் உனக்கு செம வரவேற்பு கிடைத்திருக்குமே! திருமணம் எனக்கு. வரவேற்பு உனக்கா? ஹா... ஹா..." என்று நகைக்க ஆரம்பித்தான் தீரன்.
"ஏய்! தீரா! என் மீது என்ன பிழை கண்டாய்?" வார்த்தைகளில் அனல் வீசியது நந்தனுக்கு.
"இம்... பிழை... ஆமாம் பிழை தான். திருத்தம் செய்ய முடியாத பிழை. பெற்றோர் சேர்த்து வைத்த சொத்துக்கள் எல்லாம் பிள்ளைக்கு தான் என்பது போல் பெற்றோர்கள் சேர்த்து வைத்த பாவமும் பிள்ளைக்கு தானே... அது உனக்குத்தானே நந்தா!" என்றான் இரு கைகளையும் அவனை நோக்கி விரித்து.
" பைத்தியக்காரி பெற்ற பிள்ளை பைத்தியமாக தானே இருக்கும்!" என்றான் ஏளனமாய் நந்தன்.
அடுத்த நொடி மேஜை மேல் வைத்திருந்த கண்ணாடிக் கல் நந்தனை நோக்கி பறந்து வந்தது.