வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

எனை ஆளும் கர்வமே! - கதை திரி

Status
Not open for further replies.
எனை ஆளும் கர்வமே!

அத்தியாயம் - 8

"சாதலெனும் துன்பம் இனிதாகும்
காதல் - இருந்தும் இல்லா நிலை"


தன்னை நோக்கி வந்த கண்ணாடிக் கல்லில் இருந்து லாவகமாக நகர்ந்து கொண்டான் நந்தன்.

தரையில் விழுந்த கண்ணாடிக் கல் சுக்கு நூறாக உடைந்து தன் உருவத்தை முற்றிலும் இழந்தது.

ஆத்திரத்தில் தீரன், "வார்த்தை! நம் வார்த்தைகளுக்கு நாம்தான் பொறுப்பு நந்தா! இன்னொரு முறை என் தாயை பழித்து நீ சொன்னால், பேசுவதற்கு உன் வாய் இருக்கும். ஆனால் உன் உயிர் இருக்காது" என்றான்.

"ஹே... ஊர் கூறும் போது அமைதியாக இருந்து விட்டு, நான் கூறும்போது கொதித்து வருகிறாயா? வேடிக்கைதான். ஏன் உன்னை பெற்ற தகப்பனே அப்படி கூறியதாகத்தான் எனக்கு ஞாபகம்.

உன் கோபத்தை எல்லாம் உன்னை பெற்றவரிடம் போய் காட்டு. என் வாழ்க்கையில் ஏன் நுழைந்தாய்? என் அம்முவை..." என்றவனை நிறுத்தச் சொல்லிவிட்டு, சப்தமிட்டு சிரிக்க ஆரம்பித்தான்.

"உன் அம்முவா? திருக்குறளில் ஒரு அதிகாரம் இருக்கிறது. பிறன்மனை நோக்காமை. அதில் இருக்கும் பத்து குறளையும் நன்றாகப் படி.

ஆகாயத்தில் இருக்கும் நிலவை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம், ரசிக்கலாம். ஆனால் அந்த நிலவு படைக்கப்பட்டது பூமியை சுற்றிவரத்தான்.

உன்னால், 'அம்மு ' என்றழைக்கப்பட்ட அமிழ்தா, மிஸஸ் அமிழ்தா ருத்ரதீரனாகி நாளும் கடந்து விட்டது. நீ தேடுவது என்றும் உனக்கு கிடைக்காது. தன் கைப்பொருளைத் தவற விடுபவன் நல்ல ஆண்மகனே அல்ல. நான் நல்ல ஆண்மகன். அப்படி என்றால் நீ?" என்று நிறுத்திவிட்டு இளக்காரமாய் பார்த்தான் தீரன்.


முகம் கருக்க நின்ற நந்தன், "என்னை ஏமாற்றி, பல உயிர்களை பிணைக் கைதியாய் வைத்து, என்னை மிரட்டி, எனக்கு சொந்தமான காதலை தட்டிப் பறித்து விட்டு ஆண்மகன் என்று நெஞ்சம் நிமிர்த்தி சொல்கிறாயே உனக்கு வெட்கமாக இல்லையா? இறுதியாக எச்சரிக்கிறேன்! என் அம்முவை என்னிடம் திருப்பிக் கொடுத்து விடு" என்றான்.

"ஹோ... நான் மிரட்டினால் நீ ஏன் பயப்பட வேண்டும்? ஆம்பள சிங்கம் மாதிரி என்னை எதிர்த்து போராட வேண்டியதுதானே. நான் உன் காதலை தட்டிப் பறித்தால், நீ ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? உன் காதல் உண்மை என்றால் அது உன் கைகளில் தானே சரணடைய வேண்டும். இப்படி என் அலுவலகத்தில், என் முன்னால் காதலை யாசகம் கேட்டு நிற்கிறாயே. ஐயோ பாவம்.

எங்கள் திருமணத்திற்கு நான் சம்மதம் கேட்கும் போது, அமிழ்தா தன் சம்மதத்தை சொன்ன பிறகு தான் கரம் பிடித்தேன் அவளை.

உன் காதல் உன்னிடம் மட்டும்தான் போல..." என்று முடித்தான் கிண்டலாக.

" போதும் உன் பரிகாசம்! ஆமாம் அம்முவை நான் மட்டும்தான் விரும்பினேன். குடும்பத்தினர் அனைவரின் சம்மதம் பெற்று, அவள் எனக்கு சொந்தமாகும் கடைசி வேளையில் இப்படி தட்டிப் பறித்து விட்டாயே!

இந்த திருமணத்தை நிறுத்தி, எங்களை அவமானப்படுத்துவது மட்டும்தான் உன் நோக்கம் என்று நினைத்தேன். ஆனால் நீ.... நீ அமிழ்தாவை திருமணம் முடிப்பாய் என்று நான் நினைக்கவில்லையே. ஏன் இப்படி ஒரு துரோகம்? " என்றான் நந்தன்.

" துரோகம்! உங்கள் குடும்பம் செய்யாததா? " என்றான் பழி வெறியில் பளபளத்த கண்களுடன்.

" நீ செய்த காரியத்தை நினைத்துப் பார்த்தாயா? எத்தனை உயிர்களை உன் பழி வெறிக்கு பகடைக்காயாய் உருட்டினாய்?" கோபத்துடன் அந்த நாளை நினைவூட்டினான் நந்தன்.

"ம்..." என்று யோசிப்பது போல் பாவனை செய்தான் தீரன்.

நந்தனின் திருமண நிச்சயதார்த்தத்தில், மேடை ஏறிய தீரன் கசங்கிய தாளை நந்தனின் உள்ளங்கை வசம் ஒப்படைத்த நொடிக்கு இருவரின் எண்ணங்களும் பயணம் செய்தது.

"ஹலோ நந்தா!
உனது மருத்துவமனையில் இருக்கும் மொத்த ஆக்சிஜன் சப்ளையும் இப்பொழுது எனது கட்டுப்பாட்டில். ஒரு நொடி நான் நிறுத்தினாலும், சிகிச்சை பெறும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மரணிப்பார்கள்.

உன் மருத்துவமனை முழுதும் நாளை மாலை வரை, என் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். அங்கு பணிபுரியும் பலரில் என் ஆட்களும் அடக்கம்.

இப்பொழுது நீ செய்ய வேண்டியது ரொம்ப சிம்பிள். இந்த திருமணம் வேண்டாம் என்று நிறுத்திவிட்டு இந்த திருமண மண்டபத்தை விட்டு நீ வெளியேறி நாளை மாலை வரை உன் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும். உன் சிறு எதிர்ப்பும் பல உயிர்களை காவு வாங்கிவிடும்.
மரணங்களா? மணமேடையா?
உனது விருப்பமே! எனது விருப்பம்!
1...2...3...4... முற்றும்.

கடிதத்தை படித்து முடித்ததும் தீரன் விரல்விட்டு எண்ண ஆரம்பித்ததும், தான் திருமணத்தை நிறுத்திய அந்த நொடி, மனக்கண்களில் வந்து போக முகம் கசங்கியது நந்தனுக்கு.

"ஓ.... அதில் நான் தெளிவாக எழுதி இருந்தேனே, உன் விருப்பம் தான் என் விருப்பம் என்று" என்று தன் தோள்களை குலுக்கிச் சிரித்தான் தீரன்.

தன்னை சமன் செய்து கொண்ட நந்தன், "ஓகே... உனக்கும் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் தானே பிரச்சனை. இடையில் எதற்கு நீ அம்முவை... சரி அமிழ்தாவை நிறுத்தினாய்?

அவள் ஒன்றும் அறியாத சிறு பெண். தேவதைப் பெண்ணை உன்னைப் போன்ற ஒரு அரக்கனிடம் ஒப்படைத்து விட்டார்களே!

சரி என்னை பழிவாங்கியது பழி வாங்கியதாகவே இருக்கட்டும். அமிழ்தா எந்த நிலையில் இருந்தாலும் அவளை நான் ஏற்றுக் கொள்கிறேன். அவளை என்னிடம் தந்து விடு தீரா " என்று கடைசியில் தன் காதலுக்காக, நின்ற நிலை இறங்கி கெஞ்ச ஆரம்பித்தான் நந்தன்.

" எப்படி திருப்பிக் கொடுக்க வேண்டும் நந்தா? உன் காதலியாகவா? என் மனைவியாகவா?

இந்த இரண்டில் ஒன்று நடக்க வேண்டும் என்றாலும் நான் உயிரைத் துறக்க வேண்டும். டாக்டரே எனக்கு இப்போதைக்கு சாக விருப்பம் இல்லை. என் பொண்டாட்டியோட குறைந்தபட்சம் ஒரு நான்கு பிள்ளைகள் பெற்று, ஆயக்கலைகள் அறுபத்து நான்கையும் கற்று வாழ நினைக்கிறேன்.


அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்படும் நீங்கள் வேண்டுமானால் பேப்பரில் விளம்பரம் கொடுத்துப் பாருங்கள் டாக்டரே. எவனாவது ஒரு கேனையன் தன் பொண்டாட்டியை விட்டுத் தருவான்.

டாக்டரே பந்தியும் எனக்குத்தான். பலகாரமும் எனக்குத்தான்" என்றவனின் வார்த்தைகளில் நிமிர்ந்து நின்ற உண்மைகள் சுட பேச்சற்று தலை குனிந்தான் நந்தன்.

"தீரா! அமிழ்தாவிடம் உண்மையை உடைத்துச் சொன்னால் உன் நிலை என்ன?" ஆங்காரமாய் கத்த ஆரம்பித்தான் நந்தன்.

"ஹேய்... எதற்கு இப்படி கத்துகிறாய்? உன்னிடம் விளக்கங்கள் கேட்பதற்கு உன் குடும்பமே தயாராக இல்லை. அப்படி விளக்கங்களைச் சொன்னாலும், உன்னை நம்புவதற்கு யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அப்படி அவர்கள் உன்னை நம்பினாலும் எனக்கு கவலை இல்லை.

பொருள் கைக்கு வந்து சேர்ந்த பிறகு, பொருளைச் சுமந்து வந்த காகிதத்தை எல்லாம் நான் தூரத் தூக்கி வீசி விடுவேன்.

அமிழ்தா? ம்... அமிழ்தாவிடம் உண்மையைச் சொல்வாயா? ஊரில் இருப்பவன் கழுத்தில் எல்லாம் கத்தி வைக்க தெரிந்த எனக்கு, சொந்த பொண்டாட்டி கழுத்தில் கத்தி வைக்கத் தெரியாதா நந்தா?" என்றான் தீரன்.

"ஏய்....." என்று கத்தினான் நந்தன்.

" வலிக்குதா நந்தா! வலிக்கும். நிச்சயம் வலிக்கும். வலிக்கத்தான் வேண்டும்" என்றான் தீரன்.

"அமிழ்தாவை... ம்... அவள் கலங்கினால் மொத்த குடும்பமும் கலங்கி நிற்கும். கவலை இல்லாத அந்த பட்டாம்பூச்சியின் சிறகை பிடுங்கி எறிந்து விடாதே.

ஆனால் தீரா என்றோ ஒருநாள் அவளுக்கு உண்மை தெரியும்போது அவள் உன்னை தூக்கி எறியும்போது அவளைத் தாங்குவதற்கு இந்த நந்தன் இருப்பான். காதலனாக இல்லை என்றாலும் ஒரு நல்ல நண்பனாக" என்றவன் தீரனின் பதிலை எதிர்பாராமல் அவன் அலுவலக அறையை விட்டு வெளியேறினான்.


" வருவீர்கள்! ஒவ்வொருவராக என் வாசல் தேடி வருவீர்கள்! செய்தது பாவம் என்று தெரியாமலேயே வாழ்ந்து வரும் உங்கள் மேல், அந்தப் பாவத்தின் சுமையை இறக்குவேன்" என வலது கையின் ஒற்றை விரலை மேல் தூக்கி அசைத்தபடியே உரைத்தான்.

ஏனோ நந்தனை சீண்டியதால் உண்டான உற்சாகத்துடன் வீட்டிற்குத் திரும்பினான் தீரன்.


வீட்டிற்குள் நுழையும் போதே அசாத்திய சூழ்நிலை அவனை வரவேற்றது. வேலையாட்கள் கைகளை பிசைந்தபடி நிற்க, "ம்... என்ன?" என்றவன் ஒற்றை வார்த்தையில் அனைவரின் உயிரும் உறைந்தது.

அந்த வீட்டின் தலைமைப் பணியாள் அவன் எதிரே வந்து, "சார், சாயங்காலத்தில் இருந்து மேடமை காணவில்லை. வீடு தோட்டம் என அனைத்து இடத்திலும் தேடி விட்டோம்.

வெளி வாசலில் காவல் இருக்கும் காவலாளி மேடம் வெளியே செல்லவில்லை என்று அடித்துக் கூறுகிறான்.

வாசலை விட்டு அவர்கள் வெளியேறவும் இல்லை. வீட்டிற்குள்ளும் அவர்களை காணவில்லை. உங்களிடம் சொல்லி விடலாம் என்று நினைக்கும் போது நீங்களே வந்து விட்டீர்கள் " என்று பேசிவிட்டு தலை குனிந்து நின்றார்.

"வாட்?" என்று யோசனையுடன் தன் நாடியை தேய்த்தவன், சிசிடிவி ஃபுட்டேஜ்களை ஆராய்ந்தான்.

தோட்டத்திற்கு சென்றவள், மீண்டும் வீட்டிற்குள் திரும்பாததை குறித்துக் கொண்டு, தோட்டத்தின் பக்கம் வந்தான். தான் பார்த்துக் கொள்வதாக கூறி அனைவரையும் கலைந்து போகச் சொன்னான்.

அந்தப் பெரிய தோட்டத்தை இரண்டு முறை வலம் வந்தும், அவள் இருக்கும் இடம் புரிபடவில்லை அவனுக்கு.

தன்னை மீறி எதுவும் நடக்காது என்ற தைரியம் இருந்தாலும், உள்ளே சிறு படபடப்பு தோன்ற ஆரம்பித்தது தீரனுக்கு.

"பைரவா...." என்று உரத்த குரலில் தீரன் ஆணையிட்டதும், வாலையாட்டிக் கொண்டு அவன் முன் வந்து நின்றது பைரவன்.

"சர்ச்...." என்றவன் கட்டளை இட்டதும், தோட்டத்தை ஒருமுறை வலம் வந்த பைரவன், தலையை மேல் நோக்கி, மரத்தைப் பார்த்து குலைக்க ஆரம்பித்தது.

அந்திவானச் சூரியனின் பொன்மஞ்சள் கதிர்கள் முகத்தில் பட்டு எதிரொளிக்க, செம்பவளப்பாவை போல் துயில் கொள்பவளைப் பார்த்து, நிம்மதி நெஞ்சில் படற, இரு கைவிரல்களையும் பேண்ட் பாக்கெட்டிற்குள் விட்டு, "ஊப்ஸ்..." என்று உள்ளிருந்த உஷ்ணக் காற்றை சத்தத்துடன் வெளியேற்றினான்.

சத்தத்துடன் தொடர்ந்து கைத்தட்டினான். அவளின் தூக்கமோ சிறிதளவு கூட கலையவில்லை. "ஏய்!...." என்று கத்தினான். கும்பகர்ணனின் தங்கை போல் துயில் கொண்டிருந்தாள் பாவை.

அருகில் இருந்த சிறு கல்லை எடுத்து, அவளின் கை மீது குறி பார்த்து பேசினான். தன்மீது பட்ட அந்த சிறு கல்லை வேர்க்கடலை என நினைத்து தூக்கத்தில் வாய்க்குள் போட்டாள்.

அதன் சுவை மண்ணாய் இருக்க, புருவச் சுழிப்புடன், "தூ..." என்று துப்பினாள். அது சரியாக தீரனின் தலை மேல் வந்து விழ, பக்கத்தில் சற்று பெரிய கல்லை எடுத்து அவள் பாதங்களை பார்த்து எறிந்தான்.

கால்களில் சுள்ளென்று கல் பட்டதும், " என் காலை அடித்தவன் கால்வாயில் போவான்... பொட்டேட்டோக்கு பொறந்தவன் " என்று கால்களை தடவிக் கொண்டே மெல்ல கண்விழித்தவளின் பார்வை வட்டத்திற்குள் தீரன் தெரிய, "ஐயோ..." என்று பதறி, தடுமாறி, மேலிருந்து கீழாக மரத்திலிருந்து விழுந்தவளை தன் கைகளில் தாங்கி இருந்தான் ருத்ரதீரன்.

தீரனின் முகத்தை பார்க்க பயந்து கொண்டு தன்னிரு கைகளாலும் முகத்தை இறுக்க மூடி இருந்தாள். அவள் வாய்க்குள் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருக்க, அதனை அறியும் நோக்கத்தில், மெல்ல தன் முகத்தை ஒரு பக்கமாய், முகத்தை மூடியிருந்த அவள் கைவிரல்களின் மேல் சாய்த்தான்.
அவன் முகம் கொண்ட தாடியும் மீசை முட்களும், அவளின் மெல்லிய சருமத்தை உரசி புண்ணாக்க, குறுகுறுப்போடு தந்த வலியில் தன் கைகளை விலக்கிக் கொண்டாள்.

அவள் கண்கள் மூடியிருந்தபடி, அவளின் உதடுகள் உச்சரித்த வார்த்தைகள் இப்பொழுது தெளிவாய் கேட்டது தீரனுக்கு.

"இது சாயங்காலமா... மடிசாயும் காலமா..

முல்ல பூசூடு. மெல்ல பாய் போடு.
அட வாடகாத்து சூடு ஏத்துது.

பொத்திவச்ச மல்லிகை மொட்டு
பூத்துருச்சு வெக்கத்தவிட்டு
பேசி பேசி ராசியானதே...
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே...

ரெம்ப நாளனதே...."

பாடலை பாடல் போல் அல்லாமல் வரிகளாய் ஒப்பித்துக் கொண்டிருந்தாள்.

அவளின் இசைஞானத்தை பரிபூரணமாய் அறிந்து கொண்டவன், அதற்கு மேல் தன்னால் தாங்க முடியாது என்று, கையில் சுமந்திருந்தவளை தொப்பென்று புல்வெளியில் கீழே போட்டான்.


இடுப்பை இருக்கைகளாலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டவள், "ஐயோ... அம்மா..." என்று கத்திக் கூப்பாடு போட்டாள்.

"ஏய்.... வாயை மூடு" என்று அதட்டிப் பார்த்தான் தீரன்.

"ஹம்மா.... ஹம்மா.... ஒரு சிட்டுவேஷன் சாங் பாடுனது குத்தமாய்யா? கூப்பிடுங்க சாலமன் பாப்பையாவை. இதற்கு ஒரு தீர்வு நான் கேட்டே ஆக வேண்டும்.

சினிமால பாடுனா கிளிக் ஆகுது. நான் பாடுனா எனக்கு சுளுக்கு ஆகுது. உயிரே போகுது... உயிரே போகுது...." என்று உரத்த குரலில் கத்த ஆரம்பித்தாள்.

" பாட்டுப் பாடின. உன்னை கொன்னே போட்டு விடுவேன்" கோபத்தில் அவனும் கத்த ஆரம்பித்தான்.

"பாட்டு.... பாடக் கூடாதா? அப்படித்தான்யா பாடுவேன். அப்படித்தான் பாடுவேன். ஐயோ இசைஞானம் இல்லாத ஒரு ஞான சூனிய வீட்டிற்குள் வந்து வாக்கப்பட்டு வந்து விட்டேனே... கடவுளே உனக்கு கண் இல்லையா?" அவன் சப்தத்திற்கு மேல் சத்தமிட்டு கத்தினாள்.

" அடச்சை. இப்போ உனக்கு என்னதான் வேணும்? சொல்லித் தொலை " என்றான் வேண்டா வெறுப்பாக.

"ஹான்.. என்னை நீங்கள் தானே தரையில் போட்டீர்கள்! அதனால் நீங்கள் தான் என்னை தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் சென்று விட வேண்டும்" என்று டீல் பேசினாள் அமிழ்தா.

"முடியாது..." என்றான் உடனடி மறுப்பாக.


'மவனே யாருகிட்ட? இப்ப பாரு என்னோட அடுத்த கட்ட ஆட்டத்தை... "

" ஐயோ யாராவது வாங்களேன்... " என்றவள் கத்த வீட்டு வேலையாட்களின் தலை சற்று எட்டிப் பார்த்தது.

" புதுசா கல்யாணமான பொண்டாட்டின்னு பார்க்காம இப்படி இடுப்பை உடைக்கிறாரே..." என்று பெருங்குரலெடுத்து அவள் கத்த, வாயை மூடிக்கொண்டு வேலையாட்கள் சிரித்தனர்.

"லூசு... அரை மெண்டல்... என் மானத்தை வாங்காதே!" என்றவன் குனிந்து அவளை தன் கைகளில் ஏந்திக் கொண்டான்.

'எதே... நான் லூசா? இப்ப பாருடா மவனே' என்று மனதிற்குள் நினைத்தவள், வரவேற்பறையில் அனைவரையும் கடக்கும் இடம் வந்ததும், தன் இரு கைகளாலும் அவனுக்கு குறுகுறுப்பு மூட்டினாள் யாரும் அறியாதவாறு தன் கைகளை துப்பட்டாவால் மறைத்துக் கொண்டு.

உணர்வுகள் மரத்துப் போனவனின் உடலில் சிலிர்ப்பு ஓட, அவன் கால்கள் அசையாமல் நிலத்தில் நின்றது.


கர்வம் ஆளும்...

 
Last edited:
எனை ஆளும் கர்வமே!

அத்தியாயம் - 9

"முகநக மலர்வது காதலன்று நெஞ்சத்து - அகநக மலர்வது காதல்"


அவளைப் பற்றியிருந்த கைகளில் தீரன் அழுத்தத்தை கூட்ட, அமிழ்தாவின் கைகள் தன் இயக்கத்தை நிறுத்தியது.

"மா... மா.... கு.... ட்... டி.." வார்த்தைகள் தந்தி அடித்தது அமிழ்தாவிற்கு.

"என்ன! என்னை சீண்டிப் பார்த்த உன் வார்த்தைகள் எல்லாம் வாலை சுருட்டுகிறது போல. என் வீட்டிலும், என்னிடத்திலும், உன் நிலை என்ன என்பதை மறந்து விட்டாய். கொஞ்சம் ஞாபகப்படுத்தவா?"

" ஐயோ... ஞாபகப்படுத்துவதற்கு நான் என்ன அம்னீசியா பேசன்ட்டா? அது எல்லாம் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.... "

"என்ன?"

அவன் கை வளைவில் இருந்து கொண்டே, தன் கையினை சுடிதார்க்குள் வளைத்து நெளித்து விட்டு, முகம் சுருக்கியவனின் முன் அவன் கட்டிய திருமாங்கல்யத்தை எடுத்துக்காட்டி, " நீங்கள் என் கண.... வர், புரு..... சர், ஆத்துக்கா....ரர்" என்று வார்த்தைகளில் கார் ஓட்டி கண்களில் ஒத்திக்கொண்டாள் பயபக்தியாக.

"ஓஹோ..." என்றவனின் குரலில் இருந்த பேதமை பேதைக்கு புரியவில்லை.

அழுத்தமான காலடிகளுடன் தன் அறைக்கு மாடி ஏறினான் அவளை சுமந்து கொண்டே...

" மாமா குட்டி நான் வேணா சிட்டுவேஷன் சாங் பாடவா? " என்றவள் கேட்டதும், பதிலுக்கு அவன் முறைத்ததும், "சரி... சரி... முறை மாமன் என்பதால் முறைத்துக் கொண்டே இருக்காதீர்கள். வாழ்க்கையில் நான் செய்த எத்தனையோ தியாகத்தில் இதையும் ஒன்றாக எடுத்துக் கொள்கிறேன்" என்றாள் பணிவான குரலில்.



அவன் அறையில் இருந்த படுக்கைக்கு அருகே வந்ததும், "ஸ்டாப்... ஸ்டாப்... ஸ்டாப்... நீங்கள் அப்பொழுது போல் கீழே பொத்தென்று என்று போட்டு விடாதீர்கள். நான் ஒன் டூ த்ரீ சொல்கிறேன் மெதுவாக இறக்கி விடுங்கள்" என்று அவனிடம் கூறிவிட்டு ஒன், டூ என்று எண்ணுவதற்குள் படுக்கையில் தூக்கி வீசி எறியப்பட்டாள்.

அறையின் விளக்குகள் அசுர வேகத்தில் அணைக்கப்பட்டன. தன்மேல் படர்ந்தவனின் மேல் சட்டை காணாமல் போயிருப்பதை உணர்ந்தவளின் உள்ளம் வறண்டது. அவனிடமிருந்து இப்படி ஒரு தாக்குதலை கண நேரத்தில் எதிர்பாக்காத கன்னியும் கலங்கினாள்.

அவளுள் பதுங்கி இருந்த பயம் வெளிவரத் தொடங்கியது. அவளின் உயிர், தொண்டைக் குழியில் ஏறி இறங்கியது. தன் எதிர்ப்புகளையும் பலமாக தெரிவித்தாள்.

அவளுடைய அனைத்து எதிர்ப்புகளையும் மீறி, அவன் கைகள் அத்துமீறத் தொடங்குவதை உணர்ந்தவள், "இது அநியாயம்..." என்றாள் உள்ளடங்கியக் குரலில்.

" எனக்கு யார் நியாயம் பார்த்தார்கள். உனக்கு நான் நியாயம் பார்ப்பதற்கு?" என்றான் ஏளனமாக.

" அனைவருக்காகவும் திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடிந்த என்னால், யாருக்காகவும் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. நிச்சயமாக முடியாது."


" நீ ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் எனக்கு ஒரு கவலையும் இல்லை. எப்படி இருந்தாலும் ஒரு திருமணத்தின் முடிவு இதுதானே. அதனால் என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை"

"தீரன் எனக்குப் பிடிக்கவில்லை... "

"ஹான்... எனக்கு ரொம்ப பிடிக்குதே..."

"இல்லை... இல்லை... நம் வாழ்வு இப்படி ஆரம்பிக்கக் கூடாது" அவளின் குரல் பதறியது.

" ஆமாம்... ஆமாம்... இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும்" அவளைப் போலவே குரலை ஏற்ற இறக்கத்தோடு மாற்றிப் பேசினான்.

' அமிழ்தா பதறாதே! நம்முடைய பயம்தான் நம்மை எதிர்ப்பவர்களுக்கு பலம். அவனிடம் கெஞ்சினால் மிஞ்சத்தான் செய்வான். அவனைச் சீண்டினால் மட்டுமே திசை திருப்ப முடியும். அவனின் தன்மானத்தைச் சீண்டு' உள்ளிருந்து அவள் மனம் அவளுக்கு ஆணையிட்டது.

குழைந்த உடலில் நிமிர்வைக் கொண்டு, தன் உடல் பாரத்தை எல்லாம் ஒன்று திரட்டி தன்னிலிருந்து அவனைப் பிரித்து பக்கவாட்டில் தள்ளி விட்டாள்.

அவன் அவளை மீண்டும் அடைவதற்குள் அவள் இருந்த இடம் காலியாக இருந்தது. தன் கைகள் உணர்ந்த வெறுமையின் கோபத்தில் அறையின் விளக்குகளை ஒளிரச் செய்தவன் ருத்ர மூர்த்தியாய் நின்றான்.

அவளோ அவன் அறையில் இருந்த கப்போர்டைத் திறந்து, அடுக்கி வைக்கப்பட்டிருந்த அவன் ஆடைகளை அள்ளி, தரையில் வீசிக்கொண்டிருந்தாள் ஒவ்வொன்றாக பிரித்துப் பார்த்தபடி.

"ஏய்!" என்றவன் அவளை நெருங்குவதற்குள், "ஹலோ என்ன ஒரு புடவை, சுடிதார் கூட உங்கள் கப்போர்ட்டில் இல்லை" என்றாள் கன்னத்தில் ஒரு விரலை தட்டி, யோசிக்கும் பாவனையில்.

"ஹான்..." என்று புரியாது மிரட்டல் பார்வை பார்த்தவனிடம், " இல்லை... பெண்ணை பலாத்காரம் செய்யும் யாரையும் நான் ஆண் என்ற அகராதியில் வைப்பதில்லை.

அதனால் உங்களிடம் பெண்கள் அணியும் உடை எதுவும் இருக்கிறதா என்று பார்த்தேன். இல்லை போலும். பரவாயில்லை என்னிடம் இருப்பவற்றில் இரண்டு தருகிறேன். நீங்கள் செய்யப் போகும் பலாத்காரத்திற்கு பரிசாக" என்றாள் ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி தலையை சாய்த்தபடி.


ஒரே தாவலில் அவள் பின் முடியை கொத்தாகப் பிடித்து, "திமிர்... நீ வளர்ந்த இடத்தின் ஒட்டுமொத்த திமிர்... வார்த்தையின் வீரியம் தெரியாமல் பேசுகிறாய். உன் வார்த்தைகளுக்கு பரிசாக என்னிடம் வலிகளை பெற்றுக் கொள்ளப் போகிறாய்" என்றான்.

" உங்கள் ஆண்மையை கேவலப்படுத்தும் போது உங்களுக்கு வரும் அதே கோபம் தானே, என் பெண்மையைக் கேவலப்படுத்தும் போது எனக்கும் வரும்.
நான் சொன்னதை தப்பு என்று ஒருபோதும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை.

வேறு யாரிடமும் இப்படி நடக்காமல் என்னிடம் நீங்கள் அத்து மீற, என் கழுத்தில் தொங்கும் இந்தத் திருமாங்கல்யம் தரும் உரிமை தான் காரணம் என்றால்... " என்று நிறுத்தி திருமாங்கல்யத்தை அவன் முகத்தருகே கொண்டு சென்றவள், "நான் மதிப்பு தரும் வரை தான் இது திருமாங்கல்யம், இல்லையென்றால் வெறும் கயிறு தான்... மதிப்பு கொடுத்தால் மதிப்பு கிடைக்கும்" என்றாள் உறுதியான குரலில்.

அவள் அவ்வளவு உரைத்தும், அவன் பிடித்தளராது நிற்கவே, "கற்பழிப்பவன் கணவனாக இல்லாமல் கண்டவனாக இருக்கட்டும்" என்று ஒவ்வொரு வார்த்தைகளையும் அழுத்தமாக உச்சரித்து கழுத்தில் இருந்த திருமாங்கல்யத்தை கழட்ட முயன்றாள்.

"ச்சை..." என்று வெறுப்புடன் மொழிந்து விட்டு, அறையின் வெளியே அவளை பிடித்து தள்ளினான் ஆங்காரத்துடன்.


கலங்கத் துடித்தாலும், கண்ணீரை உள் இழுத்துக் கொண்டு, " மவனே யாரு கிட்ட? அமிழ்தா கிரேட் எஸ்கேப்... டோய்...." என்று அழுகையும் சிரிப்பும் கலந்த குரலில் சொல்லிக் கொண்டாள்.

அவளுக்கு தன் குடும்பத்தை, அன்னையை பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் பெருகியது. தன் அண்ணனிடம் ஜம்பமாக தீரனை கூட்டிக்கொண்டு வருவேன் என்று சொல்லியாயிற்று. அதற்கு இன்னும் எத்தனை நாள் ஊசி முனையில் தவம் நிற்க வேண்டுமோ? என்றவளின் ஏக்கம் பெருமூச்சாய் வெளிப்பட்டது.

மறுநாள் தீரன் அலுவலகம் சென்ற பிறகு தன் அறையில் இருந்து வெளியே வந்தவள், நாச்சியாரின் அறைக்குள் நுழைந்தாள்.

"பாட்டி... இன்றைக்கு நான் உங்களை விடுவதாக இல்லை. இப்படி அழுத்தமாக கொண்டை போட்டுக் கொண்டு படுத்தால் தலைவலிக்கும். நான் உங்களுக்கு இறக்கமான போனிடைல் போட போகிறேன்" என்று கூறி குழந்தை தன்னிடம் இருக்கும் பார்பி டாலுக்கு விதவிதமாக அலங்காரம் செய்து மகிழ்வதைப் போல் நாச்சியாரின் தோற்றத்தில் பொலிவை ஏற்படுத்தினாள்.

வீட்டு வேலைக்காரர்களின் உதவியுடன் நாச்சியாரை வீல்சேரில் அமர வைத்து மாலை வேளையில், தோட்டத்தில் உலாவ கூட்டிச் சென்றாள். நாச்சியாருக்கு உடல் அயர்வாக இருந்தாலும், குதூகலம் அளிக்கும் அவளின் பேச்சு சுவாரசியத்தில் விருப்பத்துடன் அவளோடு பேச்சில் கலந்து கொண்டார்.

" அப்படியே நான் கண்களை திறந்து பார்த்தேனா... எல்லோரும் ஓடிவிட்டார்கள்.... அவ்வளவுதான்! ஹா... ஹா... " என்று தன் கல்லூரி குறும்பை நகைத்துக் கொண்டே கூறி நாச்சியாரை பார்க்க, அவரோ தலை கவிழ்ந்து இருந்தார்.

"பாட்டி!" என்று மெதுவாக அழைத்தும் அவர் தலை நிமிரவே இல்லை.

"பாட்டி... பாட்டி... " என்று சத்தமாக அழைத்து, அவரைத் தொட்டு உலுக்கினாள்.

அவரிடம் இருந்து எந்த எதிர்வினையும் வராது போகவே, பயத்துடன் வீட்டிலிருந்த வேலைக்காரர்களை அழைத்து, அவரை படுக்கையில் படுக்க வைத்து, கை கால்களை சூடு பறக்கத் தேய்த்தாள்.


நாச்சியாரை பார்த்துக் கொள்வதற்காக பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த பெண்ணோ, "இதெல்லாம் உங்களுக்கு தேவையா? உங்கள் விளையாட்டு இப்படி வினையாய் முடிந்து விட்டது. எனக்குத் தெரியாதப்பா... நான் எவ்வளவு தடுத்தும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னீர்கள் தானே? இதோ நான் தீரன் சாருக்கு போன் செய்யப் போகிறேன்" என்று கூறிவிட்டு தன் அலைபேசியில் தீரனுக்கு அழைப்பு எடுத்தாள்.

அமிழ்தாவோ சற்று முன் வரை தன்னுடன் சிரித்து மகிழ்ந்த அந்த உருவம், உணர்வற்றுக்கிடப்பதை பார்த்ததும் வெடவெடத்துப் போனாள். தரையில் அமர்ந்து அவர் கைகளை தேய்த்துக் கொண்டே, "பாட்டி... பாட்டி..." என்று கண்ணீர் மல்க அழைத்துக் கொண்டிருந்தாள்.

சற்று நேரத்தில் மருத்துவர் குழுவுடன் தன் வேக நடையில் விரைந்து வந்து வந்தான் தீரன்.


தரையில் அமர்ந்திருந்த அமிழ்தாவின் கையைப் பற்றி இழுத்து, என்ன? ஏது? என்ற எந்த விசாரணையும் இன்றி ஓங்கி கன்னத்தில் அறைந்தான்.

அனைவரும் பார்க்க தரையில் சுருண்டு விழுந்தவள், தன் தலையை நிமிர்த்திப் பார்க்கவே இல்லை. அவளின் குற்ற உணர்வு அவளை நிமிரச் செய்யவில்லை.

"பாட்டிமா..." என்று அழைத்தவன், அவரின் கன்னங்களைப் பற்றி தன்னை பார்க்கச் செய்ய முயன்றான்.

மருத்துவக் குழு அவனை விலக்கிவிட்டு , தங்கள் சிகிச்சையை தொடங்கியது. தீரனின் கண் பார்வை முழுவதும் தன் பாட்டியையே பார்த்தபடி இருந்தது.

திருப்தியான முகத்துடன் அவனைப் பார்த்த தலைமை மருத்துவர், "பரவாயில்லை தீரன்! உங்கள் பாட்டிக்கு நல்ல முன்னேற்றம். நாங்கள் பார்த்த பரிசோதனைகள் இதுவரை தராத நல்ல முடிவையே தருகின்றன. கூடிய சீக்கிரத்தில் உங்கள் பாட்டி எழுந்து நடந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. கொள்ளு பேரனுடன் ஆட வந்து விடுவார் போல.

வெகு நாட்கள் படுக்கையில் இருந்து விட்டு, தொடர்ந்து அமர்ந்ததால் ஏற்பட்ட அசதி மயக்கமே தவிர, வேறொன்றும் இல்லை.

இன்னும் சிறிது நேரத்தில் அவர் எழுந்து விடுவார். இந்த முயற்சியை முயன்று செய்தவருக்கு எனது வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்து விடுங்கள் " என்று கூறிவிட்டு தன் குழுவுடன் வெளியேறினார்.

நாச்சியாரை பார்த்துக் கொள்ளும் பணிப்பெண்ணோ தலை கவிழ்ந்து நின்றாள்.

தீரன் மெதுவாக தன் கண்களை சுழட்டிப் பார்த்தான். அந்த அறையில் அமிழ்தாவை காணவில்லை.

அடக்கி வைத்திருந்த மூச்சை இழுத்து விட்டபடி தன்னை ஆசுவாசப்படுத்த முயன்றான்.


அப்பொழுது நாச்சியார் கண்விழிக்கவே, "பாட்டி! " என்று பதட்டத்துடன் அருகில் வந்தான்.

அவரை தூக்கிவிடச் சென்ற அவன் கைகளை தட்டிவிட்டு தானே கைகளை கட்டிலில் ஊற்றி சற்று நிமிர்வாக அமர்ந்தார்.

"தீரா, எங்க உன் பொண்டாட்டி?" என்றவரின் தோற்றத்தை அப்பொழுதுதான் கண்டான்.

தன் பாட்டியின் முக வடிவு என்றும் இல்லாத எழில் கோலம் கொண்டிருந்தது. "வாவ்.... சூப்பரா இருக்கீங்க பாட்டிம்மா" என்றான்.

"எல்லாம் என் பேத்தியின் கவனிப்பு தான். அவளை நீ நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் தீரா எனக்காக. உன் கோபத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்துக்கொள் அவளிடம் உன் கோபத்தை காட்டினால், என் கோபத்தை நானும் உன்னிடம் காட்ட வேண்டி வரும் " என்று அதிகமாய் பேசியதால் மூச்சிரைத்த நாச்சியாரை பார்த்து தீரன், "ஈசி... பாட்டிமா..." என்றான் ஆனந்தமாய் அவரின் மாற்றங்களை பார்த்து மகிழ்ந்து.

" அட போடா... என்னை இப்படி ஒரு நாளாவது தோட்டத்தில் அமர வைத்து பேச வேண்டும் என்று உனக்குத் தோன்றியிருக்கிறதா? இல்லை உனக்கு நேரம் தான் இருந்திருக்கிறதா?" என்றவரின் செல்லக் கோபத்தில் மனம் நிறைந்தது தீரனுக்கு.


அப்பொழுதுதான் மாற்றம் தந்தவள் பற்றிய யோசனை மீண்டும் வர, அவளைத் தேடி பார்வையால் அலசினான்.

அவளை அடித்த கைகளில் எரிச்சல் படர, ஐவிரல்களையும் உள்ளங்கைக்குள் மடக்கி தன் தொடையில் குத்திக்கொண்டு நின்றான்.

தன் பாட்டியின் முன் தன் அகங்காரத்தை விட்டுக் கொடுக்காமல், " காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதை போலத்தான் உங்க பேத்தி கதை. சிறிது நேரம் ஓய்வெடுங்கள்" என்று கூறி அவரை படுக்க வைத்து விட்டு வெளியில் வந்தான் தீரன்.

அவன் தேவி வீட்டில் மாயமாய் மறைந்திருக்க, அவனும் பைரவனும் விடாது தேட, தோல்வியே கிட்டியது அவர்களுக்கு.

"அமிழ்தா..." என்று வானைப் பார்த்து யோசித்தவனின் மூளை பளீரென்று ஒளிர்ந்தது.

முழு நிலவின் பால் ஒளியில் நனைந்தபடி, மொட்டை மாடி சுவற்றில் கை ஊன்றி வானை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அமிழ்தா.


"தேங்க்ஸ்..." என்றவனின் குரல் கேட்டதும், "கேட்கல..." என்றாள் அமிழ்தா தன் முகத்தை திருப்பாமலேயே.


உதட்டோரம் சிரிக்கத் துடித்தாலும், அதன் துடிப்பை அடக்கிய தீரன், "தேங்க்ஸ்..." என்றான் சத்தமாக.

மீண்டும், "கேட்கல..." என்றாள்.

"தேங்க்ஸ்..." என்ற தீரனின் குரல் இந்த முறை அமிழ்தாவின் காதில் மெல்ல கேட்டது.

'எல்லோர் முன்னாடியும் அடிச்சுட்டு, யாருமில்லாத இடத்துல வந்து தேங்க்ஸ் சொல்றியா? மவனே யாரு கிட்ட?' என்று ஆத்திரத்துடன் திரும்பியவளின் கை தீரனின் கன்னத்தை முத்தமிட்டது.


கர்வம் ஆளும்...
 
Last edited:
எனை ஆளும் கர்வமே!

அத்தியாயம் - 10

"ஊடலில் தோன்றும் சிறுதுன்பம்
காதலர் - வாடினும் இன்பம் தரும்"


சிலை போல் அசையாது நின்றவனின் தோற்றம் மனதில் குளிரை பரப்பினாலும், "அது ஒன்னும் இல்ல மாமா குட்டி! உங்க கன்னத்துல ஒரு கொசு உக்காந்து இருந்துச்சு. அது உங்கள பேட் டச் பண்ணுச்சு. அதுக்கு தான் பனிஷ்மென்ட் கொடுத்தேன். உங்கள அடிச்சிட்டேன்னு தப்பா நினைச்சுட்டீங்களா?" என்று உருட்டி முடித்தாள்.

தன் எதிரே நின்றவளை முரட்டுத்தனமாக இழுத்தான்.

'ஐயோ! கடவுளே! என்னை காப்பாற்ற யாருமே இல்லையா... அடிக்கும்போது இருந்த தைரியம், அடி வாங்கும் போது இல்லையே...' என்று மனதிற்குள் புலம்பியவளை, தன் நெஞ்சில் சாய்த்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

அவனுடைய இதயத்தின் தாள ஓசையில், இவளது இதயத்தில் தாள ஓசை தப்பியது.

தன்னிலிருந்து அவளை பிரித்து எதிரே நிற்கச் செய்து, அவளின் முகத்தை பார்த்தான். கண்களை உருட்டிக்கொண்டு தைரியமாக தன்னை காட்டிக்கொள்ள முயலும் அவளின் முயற்சியை ரசித்துக் கொண்டே, "அமிழ்தா!" என்றான் மென்மையாக.

' என்னடா இது! எருமை ஏரோப்ளேன் ஒட்டுது?' என்று மனதிற்குள் கவுண்டர் கொடுத்துக் கொண்டே, "ம்..." என்று அவனுக்கு பதில் தந்தாள்.


தீரன் தன் விரல்களால் அவள் முகவடிவை அளந்தான்.

' அடியே லூசு! நீ ஒரு கையில் அறைந்த அறைக்கு, அவன் இரு கைகளையும் சேர்த்து உன் முகத்தை நசுக்கப் போகிறான்' என்று நினைத்தவள், தன் கண்களையும், உள்ளங்கைகளையும் இறுக்க மூடிக்கொண்டு அவனின் தண்டனையை எதிர் நோக்கத் தயாரானாள்.

' தேங்க்ஸ்' என்ற சத்தத்துடன், அவன் கன்னத்தில் தந்த முத்த சத்தமும் சேர்ந்து கொள்ள, "ஹான்..." என்று அதிர்ந்து கண்களைத் திறந்தவளிடம், "என் பாட்டியை நான் இப்படி பார்த்து பல வருடமாகிவிட்டது" என்றவன் தன் கலங்கிய கண்களை அவளுக்கு காட்டப்பிடிக்காமல் சற்று நகர்ந்து வேறு புறம் திரும்பி நின்று கொண்டான்.

" இந்த நிமிடம் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன். உனக்கு ஏதாவது வேண்டுமென்றால் கேள்!" என்றான்.

"மெடிக்கல் மிராக்கிள்..." என்று மெல்ல முணுமுணுத்துக் கொண்டே, "எனக்கு எங்க அம்மாவ பாக்கணும் போல இருக்கு" என்றாள் ஒரு வேகத்துடன்.

இளகி நின்றவனின் முகம், இருளில் இறுகத் தொடங்கியது. ஆனாலும் ஒரு விதமான மரத்த குரலில், "சரி போ!" என்றான்.

"அது... அது...." என்று இழுத்தாள்.

அவளை நோக்கி திரும்பி நடந்து வந்தவன், "எது?" என்றான்.

"அது... ஆதிஅண்ணா கிட்ட உங்க கூட வருவேன்னு சவால் விட்டு சொல்லிவிட்டேன். அமிழ்தா தோற்றால் பரவாயில்லை. மிஸஸ் தீரன் தோற்றுப் போகலாமா? என்று யோசிக்கிறேன்"

"அதனால்..."

" உங்களுக்காகத் தான். உங்க கௌரவத்துக்காகத் தான். நீங்க... நானு... ம்க்கும்... என்னோடு நீங்களும் வரவேண்டும் " வேகமாக சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டாள்.

"ம்... என்னுடைய கௌரவம்! அப்படி என்றால் சரிதான்" என்றான் ஒரு ராகமாக.

குறை கண் போட்டு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவள், "நிஜமா?" என்றவளின் முகம் வர்ண ஜாலங்களை வாரி இறைத்தது.

பதில் பேசாத அவனின் அமைதியான தோற்றமே அவனின் சம்மதத்தை கூற,
"இப்போவே போலாமா?" என்றாள் அடங்காத ஆசையுடன்.

"சரி வா... இரவு உணவை முடித்துவிட்டு செல்லலாம். இல்லையென்றால் உனது பாட்டை என்னால் கேட்க முடியாது" என்றான்.

"நோ... நோ... உங்களின் சம்மதம் வந்த பிறகு ஒரு நொடியைக் கூட வீணாக்க நான் விரும்பவில்லை. ப்ளீஸ் மாமா குட்டி! இப்பொழுது கிளம்பினாலே நேரம் ஆகிவிடும். உணவு உண்டு விட்டு கிளம்பினால் நடுநிசி ஆகிவிடும்" என்று கூறிக்கொண்டே அவனை முந்திக் கொண்டு படி இறங்கினாள் அவனது காரை நோக்கி.

அர்த்தம் பொதிந்த பார்வையுடன் அவளை பின்தொடர்ந்தான் தீரன்.

இங்கு வந்ததிலிருந்து அமிழ்தா அவர்கள் வீட்டினர் யாருடனும் பேசவில்லை. அலைபேசி இருந்தால் தானே தொடர்பு கொள்வதற்கு? அதனால் அவர்களைக் காணப் போகும் அவளின் ஆவல் எல்லை கடந்து கொண்டிருந்தது.

தீரன் அவனுடைய லாம்போர்கினி அவென்டாடர் காரின் ஓட்டுனர் இருக்கையில் ஏறி அமர்ந்தான். மின்னல் வேகத்துடன் அவன் அருகே அமர்ந்தாள் அமிழ்தா.

தன்னருகே அமர்ந்தவளின் முகத்தை தன் புறம் திருப்பி ஒருமுறை திருப்தியாக பார்த்துவிட்டு சன்னச் சிரிப்புடன் காரை எடுத்தான் அதிவேகமாக.

"இன்னும்... இன்னும்... வேகமாக..." என்று சிறுபிள்ளை போல் ஒவ்வொரு வாகனத்தை முந்தும் போதும் கைத்தட்டி அவனை உற்சாகப்படுத்தினாள்.

அவளின் வீடு இருக்கும் வளைவை நெருங்கியதும், "இதோ... இதோ..." என்று ஆனந்த கூச்சலிட்டாள்.

இரவு நேரமாக இருந்தாலும், அமிழ்தாவின் வீடு விளக்கொளியிலும் நிலவொளியிலும் ஜொலித்தது.

தீரனின் கார் நின்றதும், முயல் குட்டி போல் துள்ளி வீட்டிற்குள் நுழைய நினைத்தவள், அதி விரைவாக காரினுள் அமர்ந்திருந்த தீரனின் அருகே வந்து, "ப்ளீஸ்... மாமா பையா!" என்றாள்.

அவனின் கைவிரல்கள் நிதானமாக காரின் ஸ்டியரிங் வீலில் தாளம் இட்டுக் கொண்டிருந்தது.

" அப்போ! என்னோடு வருவேன் என்று சொன்னதெல்லாம் பொய்யா கோபால்? சொல்லுங்க, கோபால்! சொல்லுங்க" என்று வலது உள்ளங்கையை திருப்பி நெற்றியில் வைத்துக் கொண்டு சோக வசனத்தை சரோஜாதேவி போல் தத்ரூபமாக நடித்துக் கொண்டிருந்தாள்.


கார் இருக்கையின் பின்னே தலையை சாய்த்து கண்களை மூடிக்கொண்டு, "நான் உன்னுடன் உன் வீட்டிற்குள் வருகிறேன் என்று வாக்கு தரவில்லையே. என் பாட்டியும் சந்தோஷமும் முக்கியம். இந்த வீட்டின் கவலையும் எனக்கு முக்கியம்" என்றான்.

சுரீரென்று மனமெங்கும் வலித்தது அமிழ்தாவிற்கு. அவளின் உற்சாகம் அனைத்தும் வடிந்தே போனது. காரை சுற்றி வந்து தன் பக்கத்து கதவை திறந்து, " நாம் கிளம்பலாம்" என்றாள் சுதி இறங்கிய குரலில்.

"வாவ்... இவ்வளவு நேரம் சந்தோஷத்தை சுமந்த உன் முகம், சோகமாக இருப்பதைப் பார்க்க அவ்வளவு ஆனந்தமாய் இருக்கிறது எனக்கு. இதே மகிழ்ச்சியில் உனக்கு ஒரு வாக்கை அளிக்கிறேன்.

உன்னுடன் உன் வீட்டிற்குள் நான் வருகிறேன். ஆனால் நீ ஒரு வார்த்தை அங்கிருக்கும் யாரிடமும் பேசக்கூடாது. சைகை செய்யக்கூடாது. சிரிக்கக் கூடாது. நான் அனுமதி தரும் வரை என்னை விட்டு விலகக் கூடாது. இதில் ஒன்றை நீ மீறினாலும் உன்னை இங்கேயே விட்டுவிட்டு நான் கிளம்பி விடுவேன். ஆனால் நீ எவ்வளவு வேண்டுமானாலும் அழுது கொள்ளலாம். உனக்கு சம்மதமா?" என்றான்.

'அம்மாடி... இது மாமா குட்டி கிடையாது. அவதார் குட்டி. கிராபிக்ஸ் மூளை டிசைன் டிசைனா யோசிக்கிறது. சரி என்று சொல்லிப் பார்ப்போம்' என்று நினைத்தவள், 'ஓகே" என்றாள்.

இரவு உணவிற்காக அனைவரும் உணவு மேசையில் அமர்ந்திருக்க, வாசலில் அமிழ்தாவுடன் தீரன் வந்து நின்றான்.

ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டே பேசிக் கொண்டிருந்தனர். பத்மாவதி, " சப்பாத்தி பன்னீர் குருமா என்றால், நம்ம அம்முக்கு ரொம்ப பிடிக்கும்." என்றார்.

"ஆமாம்... நான் இரண்டு சாப்பிடுவதற்குள் அவள் ஐந்து சாப்பிட்டு விட்டு முடித்து விடுவாள். அவள் என் தங்கச்சி அல்ல. கடோத்கஜி" என்று ஆதிரன் சொன்னதும் அவன் மனைவி தளிர்மதி, அவன் தலையில் ஒரு கொட்டு கொட்டினாள்.

" கட்டி கொடுத்த பிள்ளையை போய் பார்க்காமல், தட்டில் விழும் சாப்பாடு பற்றி மட்டும் பேசுங்கள்" என்றாள் வெடுக்கென்று.

"எவ்வளவு ஆசையாக அவளை பார்க்கச் சென்றேன். ஆனால்.... அவள் இந்த அண்ணனை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு நேற்று முளைத்த அந்த காளான் தான் பெரிது என்கிறாள்" என்றான் சற்று கோபமான குரலில்.

" ஆதி!.... " என்று அவனை அடக்கினார் அவனின் தந்தை அமுதன்.

" என் பேரன் தீரன் அவளை நன்றாக பார்த்துக் கொள்வான். யாரும் கவலைப்பட வேண்டாம் " என்று பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தார் சச்சிதானந்தம்.

தன்னையே சுற்றிச் சுற்றி வரும் தனது மகள் அமிழ்தாவை தேடியது நிறைமதியின் தாய் மனது.

அவர்களுக்கு பதில் சொல்ல நினைத்த ரேணுகா, தன் கணவன் சிவானந்தத்தின் ஒரே பார்வை வீச்சில், அவருக்கு அமைதியாக உணவை பரிமாறினார்.

நந்தனோ அவனுடைய அறையில் அடைந்து கிடக்க, அவனைப் பெற்றெடுத்த காரணத்தினால் மட்டுமே அன்பானந்தமும் அபிராமியும் தலை குனிந்தபடியே உணவு எடுத்துக் கொண்டனர். ஆனாலும் அவர்களின் மனதிற்குள் அமிழ்தாவின் நினைவுகள் எழுந்து, தங்கள் ஆசைகள் நிராசையான சோகத்தை அவர்களின் கண்களில் பிரதிபலித்தனர்.

கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தன் குடும்பம் இருந்தும், வாய்விட்டு கத்தி கூப்பிட முடியாத தன் இயலாமையில் கண்கள் கலங்க ஆரம்பித்தது அமிழ்தாவிற்கு.

நேரம் செல்லச் செல்ல, தன் சொந்த வீட்டு வாசலில், இப்படி உயிர் இல்லாத சிலை போல் நிற்பது உயிர் வரை வலித்தது அவளுக்கு.

அவளின் தவிப்பை ரசித்த தீரனும், தன் கைக்கடிகாரத்தை சுட்டிக்காட்டி, கிளம்பலாமா? என்பது போல் கையினை அசைத்தான்.

நீர் தழும்பிய கண்களுடன் இரு கரம் கூப்பி அவனைப் பார்த்து கெஞ்சினாள் பார்வையால்.

"இன்னும் முழுதாக ஒரு நிமிடம் ஒரே ஒரு நிமிடம் மட்டுமே... உனக்காக நான் பரிசளிக்கும் கடைசி ஒரு நிமிடம்"

' ரூல்ஸ் மீறக்கூடாது அவ்வளவு தானே!. மவனே யாரு கிட்ட!' என்று தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள், தீரனின் கைகளை இறுக்கப்பற்றிக் கொண்டு தடதடவென முன்னே ஓடினாள் வரவேற்பறைக்கு.

எதிர்பாராத இழுவிசையில் அவளுடன் நகர்ந்தவனும் வரவேற்பறையில் வந்து நின்றான்.

தடதடவென ஓடிய சத்தத்தில் ஒட்டுமொத்த குடும்பமும் அமிழ்தாவையும் தீரனையும் கண்டு பிரமித்தது.

"வாப்பா..." என்று தீரனை நெருங்க முயன்ற அவனின் தாத்தா பாட்டியை தன் கை அசைவில் தடுத்து நிறுத்தினான். அமிழ்தாவின் மேல் கடலளவு கோபம் பொங்கினாலும், நடக்கப் போகும் காட்சியை ரசித்துப் பார்க்க தன்னை தயார் செய்து கொண்டான்.

"மாப்பிள்ளை..." என்ற அமுதனுக்கு அவனின் முறைப்பே பரிசாய் கிடைத்தது.

"குட்டி..." என்று அமிழ்தாவை நோக்கி ஓடி வந்தான் ஆதிரன்.

தீரனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, "நீ நடக்காததை எல்லாம் நடத்திக் காட்டும் தேவதைப் பெண்ணடா!" என்று அமிழ்தாவை கொண்டாடினான் ஆதிரன்.

அவளைச் சுற்றி ஒட்டுமொத்த குடும்பமும் வந்து நின்றதும், மெல்ல தன் தலையை நிமிர்த்தி பார்த்தாள்.

வருடக் கணக்கில் பிரிந்திருந்தவர்கள் போல் அவர்களைப் பார்த்ததும் ஆனந்தம் ஊற்றெடுத்தது. அவர்களிடம் பேசி மகிழ முடியாத தன் நிலையை எண்ணி வருந்தினாள். அவர்களைப் பார்க்காமல் இருப்பதற்கு இது எவ்வளவோ மேல் என்று தன் மனதை திடப்படுத்திக் கொண்டாள்.

ஆனால் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் பேச்சு இல்லாமல் உறைந்தது அவளின் கன்னத்தில் தீரனின் கைத்தடத்தை பார்த்து.

பெற்ற வயிறு பற்றி எறிய அவளின் முன் வந்த நிறைமதி, " என்னடி யார் உன்னை இப்படி அடித்தது? " என்று அவளைப் பற்றி உலுக்கினார்.

வரவேற்பறையில் இருந்த பெரிய கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தாள். 'மாமா சாமி, ராமர் அணிலுக்கு போட்ட மூன்று கோடு போல் இப்படி போட்டு வைத்திருக்கிறீர்களே! அதுக்குத்தான் காரில் என் முகத்தைப் பார்த்து ஒரு மார்க்கமாக சிரித்தீர்களா? மாமா குட்டி, என் பெர்ஃபார்மன்ஸ் பார்த்து இப்பொழுது நீங்கள் மிரளப் போகிறீர்கள்!' என்று நினைத்தவள் பேசாமடந்தை போல் கண் கூட சிமிட்டாமல் நின்றாள்.

தளிர்மதி வந்து எத்தனையோ விதத்தில் கேள்வி கேட்டும் அமிழ்தாவிடமிருந்து பதில் வரவில்லை.

பத்மாவதியோ, அமிழ்தாவின் கன்னங்களைத் தடவி, " பூப்போல வளர்த்த பிள்ளையை இப்படி அடிக்க உனக்கு எப்படி மனம் வந்தது தீரா? இனி எங்கள் பேத்தியை எப்படி உன்னை நம்பி அனுப்புவது?
நாச்சியாரின் வளர்ப்பை இப்படி பொய்த்துப் போக வைத்து விட்டாயே!

தாயி... உனக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைய காரணமாக இருந்த இந்தப் பாட்டியை மன்னித்துவிடு!" என்று கலங்கினார்.

" அப்பா இப்பொழுதும் அமைதியாக தான் இருக்கப் போகிறீர்களா? நீங்கள் பெற்ற மகள் நிற்கும் கோலத்தை பார்த்தும் உங்களுக்கு நிலைமையின் தீவிரம் புரியவில்லையா? " என்று தன் தந்தை அமுதனிடம் கொதித்துக் கொண்டிருந்தான் ஆதிரன்.

ஒட்டுமொத்த குடும்பமும் கோபத்தின் உச்சநிலையில் வந்து நின்றது. தீரனின் உள்ளமோ மகிழ்ச்சியின் உச்சத்தை அடைந்தது.

அதுவரை வாய் திறக்காத சிவானந்தம், " அமிழ்தா உனக்கு பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து பெற்றுக் கொள் அதற்கான முழு உரிமையும் உனக்கு உண்டு " என்று தீர்ப்பளித்தார்.

தன் தந்தையை பார்த்து பெருங்குரலெடுத்து சிரித்து கைதட்டி நகைத்தவன், "ஓ... யாரு மனைவிக்கு யார் விவாகரத்து வாங்கித் தருவது? அதை உங்கள் மனைவியோடு இல்லை... இல்லை... உங்கள் மனைவிகளோடு நிறுத்திக் கொள்ளுங்கள் " என்றான் ஏளனமாக.

ரேணுகா ஏதோ சொல்ல வருவதற்குள் அவளை தடுத்து நிறுத்தினார் சிவானந்தம் தன் முகம் கருக்க.

"குட்டி, ஏன்டா பேச மாட்ற? உன் சொந்தங்கள் இத்தனை பேர் இருக்கும்போது நீ அவனுக்கு பயப்படத் தேவையில்லை. உன் மனதில் என்ன இருக்கிறது என்று நீ சொன்னால் தானே தெரியும்" என்று தங்கையிடம் கெஞ்சினான் ஆதிரன்.

அமிழ்தாவோ கண்ணை கூட உருட்டாமல் பாவம் போல் நின்றாள்.

" அடியே! உன்னை பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். ஏன்டி இப்படி மலை முழுங்கி மகாதேவி மாதிரி நிக்கிற? நீ ஏதாவது சொன்னால் தான் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். இல்லையென்றால் பற்றி எரியும்" என்ற தளிர்மதியையும் கண்டுகொள்ளாமல் அசையாமல் அமைதியாக நின்றாள்.


"அடேய்... என் தங்கையை என்னடா செய்த? வந்ததிலிருந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கன்னத்திலும் அடித்து காயப்படுத்தி இருக்கிறாய். இனியும் உன்னை சும்மா விட மாட்டேன்" என்ற ஆதிரனை சமாதானப்படுத்த பிரம்மாயுத்தம் செய்து கொண்டிருந்தாள் தளிர்மதி.


தனக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீண்டும் ஒரு முறை நினைவு கூர்ந்தாள் அமிழ்தா.

'பேசக்கூடாது. சிரிக்க கூடாது. சைகை செய்யக்கூடாது. தீரனை விட்டு விலகக் கூடாது... ம்.... ரைட்டு. மவனே யாரு கிட்ட?' என்றவள் தன்னருகே இருந்த சுவற்றின் பக்கம் திரும்பினாள். தன் கண்களில் இட்ட கண்மையினால், 'போன்' என்று எழுதினாள். 'எழுதிக் காட்டக் கூடாது என்று சொல்லவில்லை தானே...' என்று மனதிற்குள் தனக்குத்தானே வெற்றிக் குறி காட்டிக் கொண்டாள்.


அவளது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தத்தம் போனை கொடுக்க அசையாது நின்றாள். தளர்மதி விரைந்து சென்று அமிழ்தாவின் அலைபேசியை எடுத்து அவள் கையில் ஒப்படைத்தாள்.

யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் அவர்களது அலைபேசிக்கு தனித்தனியாக குறுஞ்செய்தி அனுப்பினாள். ஒவ்வொருவரும் தங்களுக்கு வந்த குறுஞ்செய்தியை பார்த்துவிட்டு, வெட்கம் கலந்த சிரிப்புடன் விலகிச் சென்றனர்.

கர்வம் ஆளும்...
 
Last edited:
எனை ஆளும் கர்வமே!

அத்தியாயம் - 11

"ஊடலில் தோற்றவர் வென்றார் காதலின் - இலக்கணமாய் அறியப் படும்"


அமிழ்தாவை ஆட்டுவித்து தன் அதிரடி ஆட்டத்தை தொடங்கிய தீரனுக்கு, பதிலடியாய் மலர்ந்த முகத்துடன் அனைவரும் விலகிச் செல்ல, காரணம் புரியாமல் அவனுடைய மொத்த கோபமும் அமிழ்தாவின் மேல் திரும்பியது.

நிறைமதியும், தளிர்மதியும் வட்டத்தட்டில் ஆலம் கரைத்து, நடுவில் கற்பூரம் வைத்து அவர்களுக்கு திருஷ்டி எடுக்க, கோபத்தில் தீரன் அதனை தட்டிவிடும் நேரம் சரியாக தட்டை இறுக்கி பிடித்துக் கொண்டாள் அமிழ்தா.

மித மிஞ்சிய கோபத்தில் யாரையும் பார்க்காமல் தன் காரில் ஏறி அமர்ந்து கொண்டான் தீரன்.

"டாட்டா... பை... பை..." என பலவிதமான ஸ்மைலிகளை செல்போனில் குடும்பத்தாருக்கு பறக்க விட்டுக் கொண்டே தீரனை நோக்கி வேகட்டுகளை எடுத்து வைத்தாள் அமிழ்தா.

அமிழ்தா அனுப்பிய குறுஞ்செய்தியால் சீக்கிரம் எல்லாம் சரியாகிவிடும் என்று நிம்மதி வந்தது ஒவ்வொருவருக்கும். அமிழ்தா உடன் தீரன் வந்தது எட்டாவது அதிசயமாகவே இருந்தது அந்த குடும்பத்திற்கு.

புரியாமல் முழித்த பத்மாவதியின் காதில் நிறைமதி ரகசியம் பேச, "அப்படியா சங்கதி! தாத்தா மாதிரி தானே பேரனும் இருப்பான்" என்று கூறி தன் முகத்தை கரங்களுக்குள் புதைத்து சிரித்துக்கொண்டார்.

"ஏய்! இங்கே என்ன ரகசியம் நடக்குது? அவன் வந்தான். அவனோடு அவளும் வந்தாள். நின்றார்கள். நீங்கள் சிரித்தீர்கள். அவர்கள் சென்றார்கள். எனக்கு ஒன்னும் புரியவில்லையே" என்று சச்சிதானந்தம் அதட்ட, அவருடைய காதில் பத்மாவதி கிசு கிசுத்தார்.

"ஓஹோ..." என்று சச்சிதானந்தத்தின் உதடுகளும் சிரித்தது.

அன்பானந்தமும் அபிராமியும் கூட மலர்ந்து சிரித்தனர் சிறு பெண்ணின் குறும்பில்.

" பார்த்தியா தளிர்! அவன் தோற்றத்திற்கும் நடவடிக்கைக்கும் கொஞ்சமாவது சம்பந்தம் இருக்கிறதா? பாவம் என் குட்டிமா" என்றான் ஆதிரன் தன் மனைவியிடம்.

தளிர்மதி ஆதிரனிடம், "பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்..." என்று நகைத்தாள்.

அவளின் முதுகில் செல்லமாக ஒரு தட்டு தட்டி விட்டு, " அமிழ்தாவை நினைத்து நான் கொண்ட கவலை பாதி குறைந்தது. எப்படியோ தீரன் இயல்பாக என் தங்கையுடன் பொருந்திக் கொண்டால் சரிதான். ஆனால் அவனைப் பற்றிய நிறைய தெளிவுகள் எனக்கு இன்னும் தேவைப்படுகின்றன தளிர்" என்றான்.

தீரன் தன் காரின் ஹாரனை இடைவிடாது ஒலிக்க, அமிழ்தா ஓடி வந்து காரின் கதவை திறந்தாள்.

காரின் வித்தியாசமான ஹாரன் ஒலியில் தன் அறையின் பால்கனியிலிருந்து எட்டிப் பார்த்த நந்தனுக்கு அமிழ்தாவின் உருவம் தென்பட்டதும், "அம்மு.." என்று கத்தினான்.

அவனின் குரல் கேட்டதும் தீரன் மேல் நோக்கிப் பார்த்தான். அமிழ்தாவோ எந்தவித எதிர்வினையும் இல்லாமல் அமைதியாக நின்றாள்.

நந்தனை கோபப்படுத்தி பார்ப்பதற்காக, காரில் இருந்து இறங்கிய தீரன், அமிழ்தாவை காரின் கதவில் சாய்த்து, அவளின் இருபுறமும் தன் கைகளை ஊன்றி, அவளின் முகத்தருகே தன் முகத்தை வைத்தான்.

"என்னங்க மேடம்! என் கட்டளைகளை மீறாமல், கவனமாய் தவிர்த்து விட்டு, எழுதி எழுதி தூது விடுகிறீர்களோ? அப்படி என்ன எழுதி அனுப்பி இருந்த?" என்றான்.

அமிழ்தா அமைதியாய் நின்றதும், கோபத்துடன் அவள் கையிலிருந்த அலைபேசியை பறிக்க முயன்றான். அவளோ தன் உடலை வளைத்து நெளித்து, கைகளை அசைத்து ஆட்டி போனை தராமல் அவனுக்கு போக்கு காட்டினாள்.

மேலிருந்து பார்த்த நந்தனுக்கு, அவன் வெறித்தனத்துடன் அவளை முத்தமிடுவது போல் தெரிந்தது. தன் அம்முவிடம் அன்று நடந்ததற்கு விளக்கம் கூறலாம் என்று நினைத்தவனின் நினைவுகள் அப்படியே அமிழ்ந்து போனது.

இப்பொழுது தான் அம்முவின் முன் நின்றால், தீரனின் கோபம் இன்னும் அதிகமாகும், அது அம்முவிற்கு பாதிப்பாகும் என்று நினைத்தவன் தன் அறையிலேயே நின்று கொண்டான் தன்னுடைய இயலாமையில்.

என்றேனும் ஒரு நாள் அம்முவை தனித்து பார்க்கும் போது அன்று நடந்த நிகழ்வுகளை எடுத்துக் கூற வேண்டும் என்று மனம் மறுகியது அவனுக்கு. திட்டமிட்டு காய் நகர்த்தும் தீரன் அதற்கான சந்தர்ப்பத்திற்கு இடம் தருவானா? என்றும் யோசித்தான்.

'மண்ணில் புதைந்த விதை முளை விடுவது எவ்வளவு உறுதியோ அதேபோல் மறைந்த உண்மை ஒருநாள் வெளிப்படும் என்பதும் உறுதி' என்றவன் உள்ளம் அவனுக்கு ஆறுதல் சொன்னது.

அந்தக் காலம் கடந்த உண்மையால் தன் காதல் இனி கை கூடுமா? என்ற விரக்தியில் உதட்டோரம் சோகப் புன்னகை இழையோடியது நந்தனுக்கு.

அடுத்த கணமே சோகம் கோபமாய் உருமாறியது. தன்னை அமிழ்தாவிடம் இருந்து மட்டுமில்லாமல் மொத்த குடும்பத்திடமிருந்தும் பிரித்து வைத்திருக்கும் தீரனின் முகத்திரையை கிழிக்கும் அந்த நாளுக்காக காத்திருந்தான் மனதில் ஏற்றிய பழிவெறியுடன்.

அவன் கண்ணுக்குள்ளே, தீரனின் முரட்டுபிடிக்குள் வளைந்து நெளிந்து குழைந்த அமிழ்தாவின் தோற்றம் வந்து போனது. அவர்களின் முத்தம் இல்லா முத்தத்தில் இவன் சித்தம் கலங்கி மொத்தமும் தொலைந்து தொண்டையில் அழுத்திய அந்த வலியை விழுங்க, பிரிட்ஜில் இருந்து தண்ணீரை எடுத்து உடலில் சிந்தச் சிதற குடித்தான்.


ஒருவழியாக அவள் கையில் இருந்த செல்போனை பறித்து, தன் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு, "ஷ்...." என்று அவளிடம் இருந்து திரும்பியவன் பார்த்தது, வாய் பிளந்தபடி வாசலில் அவர்ளை வழி அனுப்ப காத்திருந்த மொத்த குடும்பத்தையும் தான்.

தீரனின் முதுகுக்கு பின்னால் ஒளிந்து கொண்ட அமிழ்தா, தன்னை முற்றிலும் மறைத்துக் கொண்டாள்.

பத்மாவதி பாட்டி தன் சேலை தலைப்பை எடுத்து முதுகு வழியாக போர்த்திக் கொண்டு, அசடு வழிய நின்றார்.

நிறைமதி சேலையின் தலைப்பை வாயில் பொத்திக் கொண்டு கண்களால் சிரித்தார்.

சச்சிதானந்தம் தன் மீசையை முறுக்கிக் கொண்டு, 'என் இனமடா...' என்பது போல் பேரனைப் பார்த்தார்.

ஆதிரன் தீரனை ஆராய்ச்சி பார்வை பார்த்தான். தளிர்மதி ஆதிரன் பின்னால் ஒளிந்து கொண்டு அமிழ்தாவின் செய்கைகளை குறைக்கண் போட்டு பார்த்துக் கொண்டிருந்தாள்.


தீரனின் பின்னால் நின்ற அமிழ்தா, 'ஹே மாமா குட்டி! இப்போ நாம கிளம்பவில்லை என்றால், நிலைமை நம் கைமீறிப் போய்விடும். உங்கள் மானமும் பறந்து போய்விடும். உங்களுக்கு ஓகே என்றால் எனக்கும் டபுள் ஓகே!" என்று மெதுவான குரலில் பேசினாள்.

அவளைக் கொன்று போடும் வெறி வந்தாலும், அடுத்த நகர்வை யோசிக்க முடியாமல் அமிழ்தாவை காருக்குள் தள்ளி போட்டுவிட்டு காரை அசுர வேகத்தில் எடுத்துச் சென்றான்.

பத்மாவதி பாட்டியோ, " ஆனாலும் என் பேரனுக்கு கொஞ்சம் வேகம் ஜாஸ்தி தான்!" என்று சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே மொத்த குடும்பத்தையும் வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.

ஆள் அரவமற்ற சாலையில் தன் காரை நிறுத்தினான். பாக்கெட்டுக்குள் இருந்து அமிழ்தாவின் செல்போனை எடுத்தான்.


தன்னுடைய குட்டு உடையப் போகிறது என்று தெரிந்து கொண்ட அமிழ்தா தன் தலையை கார் சீட்டில் சரித்து உடம்பைக் குறுக்கி , வலது கையினைக் கொண்டு கண்களை மறைத்து, தூங்குவது போல் பாவனை செய்ய ஆரம்பித்தாள்.

" என் கன்னத்தில் இருக்கும் கைத்தடத்தைப் பற்றி நானே கவலைப்படாத போது நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? சைலன்ட்டா இருக்கிற புருஷன்கள் ஒரு ரகம். வைலண்ட்டா இருக்கிற புருஷன்கள் ஒரு ரகம். இதில் என் வீட்டுக்காரர் தனி ரகம்.

என் புருஷன் முத்தம் கொடுக்கும் போது கொஞ்சம் என் கன்னத்தை அழுத்திப் பிடித்து விட்டார். இது ஒரு குத்தமாயா உங்க ஊர்ல? கை தடம் பத்தி ஆருடம் பாக்குறீங்க? ஸ்டுப்பிட் ராஸ்கல்ஸ்.

என் புருஷன் நல்லா இருக்கணும்னு மௌன விரதம் இருக்கேன். அதைக் கெடுப்பதற்கு என்றே எல்லோரும் என்னிடம் பேசுகிறீர்கள்.

உங்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டதும், நேரம் காலம் பார்க்காமல் அழைத்து வந்த என் புருஷை எல்லோரும் குற்றவாளி மாதிரி பாக்குறீங்க.

இந்த அமிழ்தா பொல்லாதவ! ஜாக்கிரதை! அப்புறம் உங்க எல்லார் கூடவும் நான் டூ..... ஊ..." என்று அந்தச் செய்தி முடிந்திருந்தது.

படித்து முடித்ததும் தீரனின் முகம் கோபத்தில் சிவந்து இருந்தது. அமிழ்தா விரல் இடுக்கின் வழியே தீரனின் முக உணர்வுகளை ஆராய்ந்தாள்.

'சோலி முடிஞ்சுச்சு... அமிழ்தாவிற்கு அரோகரா... அரோகரா... ' தனக்குத்தானே கோஷம் போட்டுக் கொண்டாள் மனதிற்குள்.

"என்ன இது?"

விரல்களைப் பிரித்து மெல்ல எட்டிப் பார்த்தவள், "போன்... செல்போன்..." என்றாள் மெதுவாக.

" நான் அடித்ததை நீ ஏன் சொல்லவில்லை?" என்றான் உறுமலுடன்.

"நீங்க அடித்ததை சொன்னால், நான் அடித்ததையும் சொல்ல வேண்டி வருமே... எல்லாம் உங்களுக்காகத் தான்...


புருஷனை கைநீட்டி அடித்த வீரப் பெண் அமிழ்தா என்று வரலாறு பேசுவது பெருமையாக இருந்தாலும், பொண்டாட்டியிடம் அடி வாங்கிய புருஷன் என்று அதே வரலாறு உங்களை தப்பாக பேசுமே என்று தான்... மறுபடியும் சொல்றேன் எல்லாம் உங்களுக்காகத்தான் " என்றாள் போலி அழுகுரலில்.

"உன்னை...." என்றான் அவளை முறைத்துப் பார்த்தவாறு.

"என்னை " என்றாள் அவனை இளித்துப் பார்த்தவாறு.

" நான் எடுத்த ஆயுதம் என்னையவே கூர் பார்க்கிறது. அந்தக் குடும்பம் முழுவதும் இன்று சிரித்ததே. என்னை பார்த்து சிரித்ததே. அது தப்புதானே அமிழ்தா?"

" நீங்க சரின்னு சொன்னா சரி. தப்புன்னு சொன்னா தப்புதான் மாமா குட்டி"

"ஓ... நீ இன்னும் சாப்பிடவில்லையா அமிழ்தா?"

"நீங்க கூட தான் சாப்பிடல.."

"ம்... காரின் பின் இருக்கையில் பார்சல் இருக்கிறது எடு "

"இதோ... " சாப்பாடு என்றதும் முந்திக் கொண்டு காரின் கதவைத் திறந்து இறங்கினாள்.

அவள் இறங்கி அடுத்த நிமிடம் கார் பறந்து சென்றது அவளை அங்கேயே விட்டுவிட்டு.

"ஹோ..." தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சோர்ந்தாள்.

சுற்றிலும் தன் பார்வையை படரவிட்டாள். வானத்தில் நிலவைத் தவிர துணைக்கு வேறு யாரும் இல்லை அந்த ஆள் அரவமற்ற சாலையில்.

சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தும் எண்ணம் அவளுக்கு இல்லை. நடுநிசி நெருங்கும் வேளையில் அந்த எண்ணம் அவளுக்கு உகந்ததாக இல்லை.

அலைபேசியும் காரில் இருந்ததால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத கையறு நிலையில் இருந்தாள்.

உடல் சோர்ந்தாலும், மனம் சோர்ந்து போய் விடாமல் சாலையை விட்டு சற்று உள்ளடங்கிய பெரிய மரத்தின் அருகில் குவிக்கப்பட்டு இருந்த கற்களின் மேல் அமர்ந்தாள்.

"ஒன்று, இரண்டு.." என்று எண்ணிக் கொண்டே சிறு கற்களை தூர வீசி எறிந்து கொண்டிருந்தாள்.

பத்து என்று எண்ணியதும், தன்னுடைய பத்தாவது வயதில் நடந்த நிகழ்வு அவள் நினைவில் எழுந்தது.

"ஹே அம்மு"

"என்ன நண்டு மாமா?" என்றாள் அமிழ்தா.

"லூசு. என்னை நண்டு என்று சொல்லக்கூடாது. நந்து மாமா என்று கூப்பிடு" என்றான் நந்தன்

"ஏன் நண்டு மாமா?"

" நீ பெரியவளாகியதும், என்னை தானே கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். அதனால் இப்பொழுது இருந்தே ஒழுங்காக மரியாதையுடன் பேசி பழகு!"

"கல்யாணமா?"

"ஆமாம். உனக்கு மஞ்சள் கயிறை கட்டி விட்டால், நான் உன் கணவன். அதுக்கு பேரு தான் கல்யாணம்" என்றான் அவளுக்கு புரியும் வகையில்.

"ஓ.... புரிஞ்சிடுச்சு. இந்த அமிழ்தாவுக்கு புரிஞ்சிடுச்சு. சூப்பரு" என்று மகிழ்ந்தாள்.

அன்று வரலட்சுமி பூஜைக்காக சுமங்கலி பெண்களுக்கு கொடுப்பதற்காக தட்டில் தாம்பூலம் அடுக்கிக் கொண்டிருந்தார் பத்மாவதி. அவர் சொல்லும் பொருட்களை ஓடி ஓடி எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள் அமிழ்தா.

மஞ்சள் கயிற்றை கண்டதும் அமிழ்தா, " பாட்டி இதை வைத்து தான் கல்யாணம் செய்வார்களா? " என்றாள்.

வேலை மும்மரத்தில் இருந்த பத்மாவதி பாட்டியும், "ஆம்" என்ற ஒரு சொல்லோடு முடித்துக் கொண்டு அடுத்த வேலையை பார்க்கச் சென்றார்.

கிரிக்கெட் விளையாடிவிட்டு அடிபட்டு வந்த நந்தன், உடல் அசதியில், காய்ச்சலின் வேகத்தில், மாடிக்கு ஏற முடியாமல் வரவேற்பறையில் இருந்த சோபாவில் படுத்து தூங்கினான்.

தன் முயல் பாதங்களால் மெல்ல அடியெடுத்து வைத்து வந்த அமிழ்தா, உள்ளங்கையில் தான் மறைத்து வைத்த பொருளை ஒருமுறை திறந்து பார்த்து திருப்தி அடைந்தாள்.


வரவேற்பறையில் படுத்திருந்த நந்தனின் அருகில் வந்து, மெல்ல தன் உள்ளங்கையைத் திறந்து, மறைத்து வைத்திருந்த மஞ்சள் கயிற்றை பிரித்து எடுத்து,

" ஹே நண்டு! இப்பொழுது இதை உன் கழுத்தில் நான் கட்டி விட்டால் நான் தான் உன் கணவன். இனிமேல் நீ நான் சொன்ன பேச்சை தான் கேட்க வேண்டும்" என்று சிரித்துக் கொண்டே அவன் கழுத்தில் கட்ட வரும் நேரம், "ஏய்! பேபி" என்ற தீரனின் குரலில் அதிர்ந்து நின்றாள்.

"என்ன பேபி? என்ன பண்ணுற? இது என்ன விளையாட்டு?" என்றான் தீரன்.


இடுப்பில் தன் கைகளை வைத்துக்கொண்டு, தன் குண்டுக் கண்களை உருட்டி உருட்டி, "ம்... கல்யாணம் பண்ண போறேன். பேபின்னு பேய் மாதிரி கத்துற " என்று தீரனை விரட்டினாள் அமிழ்தா.

தீரனும் சிரித்துக்கொண்டே, " ஏன் இந்த மாமாவை கல்யாணம் கட்டிக்க மாட்டியா? " என்றான் சிரிப்புடன்.

தன் தலையை ஆட்டிக்கொண்டே, நந்தனை காட்டி "இது என் நண்டு மாமா. என் இஷ்டம். நீ போ.." என்றாள்.

"அப்போ நான் யார்?" என்றான் செல்லம் கொஞ்சம் குரலில்.

" ஓ எனக்குத் தெரியுமே. உனக்கு தெரியாதா? உங்க அம்மா மாதிரியே நீயும் ஒரு லூசு " என்று சிரித்தாள்.


எந்த ஒரு வார்த்தை அவனை கோபத்தின் உச்சிக்கு கொண்டு செல்லுமோ, அதே வார்த்தையை அமிழ்தா சொன்னதும், அவன் அவளைப் பிடித்து தள்ளியதில், அவள் கையில் இருந்த மஞ்சள் கயிறு ஒரு திசையில் விழ, அமிழ்தாவின் தலை மேஜை முனையில் பட்டு ரத்தம் முகத்தில் வழிய மிரண்டு போய் தீரனை பார்த்தாள்.

"ஓ... நீயும் என்னை கோபப்படுத்தி பார்க்கிற பேபி " என்றவன் அவள் அருகில் வந்தான்.

" இப்ப சொல்லு நான் யாரு? "

"மா... மா.... மாமா"

" யாரு யாருக்குடி மாமா? " சினம் மிகுதியில் சிவந்த கண்கள் நெருங்கி வர, "மாமா... ச்சீ... அம்மா...." என்று கத்தினாள்.

அவள் கத்தியதில் மொத்த குடும்பமும் வந்து நின்று ரத்தம் ஒழுக நின்ற அமிழ்தாவை பார்த்து அரண்டது.

நிறைமதி, "ஐயோ! என்னடி இவ்வளவு ரத்தம்? என்ன ஆச்சு?" என்று பதறினார்.

அமுதன், "டேய்! என்னடாமா?" என்றார்.

அமிழ்தா தீரனை நோக்கி கையை காட்டிவிட்டு, நந்தனை நோக்கி கையை காட்டுவதற்குள் மயங்கிச் சரிந்தாள்.

அவள் மயங்கியதும் பதறிக் கொண்டு அவளை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். தரையில் ரத்தம் சொட்டியபடி அமிழ்தாவை தூக்கிக் கொண்டு அமுதன் சென்றதும், பலரும் அவரோடு இணைந்து கொண்டனர்.

அமுதன் தோளில் சுமந்ததும், அரைகுறை விழிப்புடன் விழித்தவளின் கண்களில் கம்பீரமாய் நிமிர்ந்து நின்ற தீரன் விழ, "மாமா உன்னையே கட்டிக்கிறேன்..." என்றாள் சத்தம் வராமல்.

அதை தீரன் கவனிக்காமல் போனது விதியின் செயலே.


யாருடைய கேள்விக்கும் பதில் சொல்லாமல் கையைக் கட்டிக் கொண்டு நின்ற தீரனின் நிமிர்வு திமிராக கருதப்பட்டது.

அவள் கையைக் காட்டியதால் சிவானந்தம், தீரனின் கைகளைப் பிடித்து தரதரவென வீட்டின் வெளியே தள்ளி, "ஒரு பைத்தியம் போனால் இன்னொரு பைத்தியம் வருகிறது. வெளியே போடா!" என்றார் தான் தீரனின் தந்தை என்பதையும் மறந்து. அவரின் வார்த்தைகள் பதின் பருவ இறுதியில் இருந்த தீரனின் மனதை கூர்வாளாய் கிழித்து ரணமாக்கியது.


கர்வம் ஆளும்...

 
எனை ஆளும் கர்வமே!

அத்தியாயம் - 12

"இன்பத்தை அள்ளித் தரும் காதலுக்கு -
துன்பமோ இலவச இணைப்பு"


தன் நினைவுகளில் பதிந்த அந்த காட்சி மேலெழுந்து வந்ததும் அமிழ்தாவின் மனம் கலங்கியது. அதன் தாக்கத்திற்கு பிறகு அந்த வீட்டிற்கு தீரன் வந்த நினைவே இல்லை அவளுக்கு.

தீரனின் காயத்திற்கு மருந்திட வேண்டும் ஆனால் தனக்கும் அவனால் காயம் ஏற்படாமல் பார்க்க வேண்டும். அமிழ்தாவின் நியாயத் தராசு விசாரணை இன்றி தீரன் பக்கம் சாய்ந்து நின்றாலும், என்ன நடந்து இருக்கும்? என்றே அலைபாய்ந்தது.

புரியாத வயதில், அறியாமல் மனதில் ஏறிய வார்த்தைகளின் தாக்கங்கள் இன்று தன்னை தாக்குவதை உணர்ந்தவள் நிலவின் ஒளியில், தன் முழங்கால்களின் மேல் தலையைச் சரித்து சிலை போல் அமர்ந்து விட்டாள்.

காரை அதிவேகத்தில் ஒட்டிக் கொண்டிருந்த தீரனின் மனம் கேள்விகளால் அவனை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது.

'பாவம் ஓரிடம். பழி ஓரிடமா? தான் வதைபடும் காரணம் கூட அறியாத ஒரு பெண்ணை பகடைக் காயாய் உருட்டி விளையாடுகிறாயா?

உந்தன் முன் அந்தக் குடும்பம் தலைகுனிய வேண்டும் என்று நீ நினைக்க, தன் செயல்களால் உன்னை ஒரு வார்த்தை கூட சொல்ல விடாத அந்த சிறு பெண்ணை உன் செயல்களால் சிதைக்கிறாயே தீரா! இது உனக்குத் தகுமா?' அவன் மனதின் ஓரம் மறைந்திருந்த ஈரம் கேள்வி கேட்டது.

' காற்றாற்றின் வேகத்தோடு பயணம் செய்யும்போது, உயிர் மூச்சுக்கு துடித்துதான் ஆக வேண்டும் தீரா! உன் பாட்டியின் உடல்நிலையில் முன்னேற்றம் வந்ததால் சற்று இளகி விட்டாய். வேண்டாம் தீரா நீ கடந்து வந்த பாதையை சற்று யோசித்துப் பார்.

உன் வலிக்கு அனைவரும் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். அவள் உனக்கு மனைவியாய் வாய்த்தது ஒரு வாய்ப்பு. நழுவ விடாதே!' மனமெங்கும் பரவி இருந்த மிருகம் அவனை உசுப்பி விட்டது.

'மாமா குட்டி! காப்பாத்துங்க மாமா குட்டி!' சில்வண்டின் ரீங்காரம் காதுக்குள் குடைந்தது.

கால்கள் அவனை அறியாமல் பிரேக்கை மிதித்தது. மிருகத்திற்குள்ளும் சற்றே ஈரம் சுரந்தது. அவனுடைய கார் வளைந்து வந்த பாதையிலேயே மீண்டும் சென்றது.

காரின் முகப்பு விளக்கின் வெளிச்சத்தில், சாலையின் இருமருங்கிலும் தேடிக்கொண்டே வந்தான் அவள் தேவதையை.

அவன், அவளை இறக்கி விட்ட இடத்தில் காரை நிறுத்தி, சுற்று முற்றும் தேடினான். அவளை காணாமல் நெற்றியின் ஓரத்தில் வியர்வைத் துளிகள் அரும்ப ஆரம்பித்தது தீரனுக்கு.

பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் பற்றிய செய்திகளை செய்தித்தாள்களில் படித்த ஞாபகம் எல்லாம் வலம் வந்தது அவனுடைய அகக் கண்களுக்கு. தன்னுடைய கோபத்தின் விளைவால் அவளுக்கு ஏதாவது ஏற்பட்டிருந்தால்? நினைக்க நினைக்க நெஞ்சத்தின் உள்ளே கிலி பரவியது அவனுக்கு.

முதன்முறையாக தன் கோபத்தை நினைத்து தன்னை தானே பழித்துக் கொண்டான்.

கால்கள் தடுமாற மெல்ல மரத்தில் சாய்ந்தான். உண்மையில் அவளுக்கு ஏதாவது நடந்திருந்தால் நான் சந்தோஷம் தானே பட்டிருக்க வேண்டும். ஏன் எனக்கு இத்தனை படபடப்பும், பதை பதைப்பும் ஏற்படுகிறது?

தன்னைத் திறந்து ஆராய்ச்சி செய்திருந்தால் விடையும் கிடைத்திருக்கும் அவனுக்கு.

தன்னுடைய நொடி நேர கோபம் இடியாய் இறங்கியதை நினைத்து, கைமுஷ்டியை மடக்கிக் கொண்டு மரத்தில் இடைவிடாது குத்திக் கொண்டான்.

" தூங்கும்போது எவன்டா டொங்கு டொங்குனு தலைமாட்டில் வந்து கதவைத் தட்டுகிறது?" என்று கொட்டாவி விட்டுக் கொண்டே அரைக் கண்ணில் திறந்து, நிமிர்ந்து பார்த்தாள் அமிழ்தா.

அவளைக் கண்டதும் ஒரு நிம்மதி பெருமூச்சு தீரனுக்கு. ஆனால் முகத்திலோ எந்த ஒரு பாவத்தையும் காட்டாது, அவளைப் பார்த்தான்.

"ஓய்... மாமா குட்டி?" என்று தாயைக் கண்ட கன்று போல் துள்ளி குதித்து அவன் அருகில் வந்தாள்.

"ஹேய்! இந்த விளையாட்டு ரொம்ப நல்லா இருக்கு. ஆனால் இந்த விளையாட்டில் நான் தான் ஜெயிச்சேன். நீங்கள் என்னை ஏமாற்றி இங்கே விட்டுவிட்ட பிறகும் நான் அழவே இல்லை. இந்த இடத்தை விட்டு ஒரு அடி கூட நகரவில்லை. முக்கியமாக நான் பயப்படவே இல்லை. அப்போ நான் தானே ஜெயிச்சேன். சொல்லுங்க மாமா குட்டி!" என்று ராகமாய் இழுத்தாள்.

"சரி வா..." பற்களின் இடையில் வார்த்தைகளை கடித்துத் துப்பினான் தீரன்.

"அட இங்கே வந்து உட்காருங்க மாமா குட்டி" என்று அவன் கைகளைப் பிடித்து கற்குவியலில் அமர வைத்து, அவன் அருகில், அவனுக்கு சற்று மேலே அவளும் அமர்ந்தாள்.

"என்ன இது? முட்டாள்!" என்றவன் அதட்டவே, " அட சும்மா ஒரு நிமிஷம் வாய மூடிட்டு உட்காருப்பா" என்றவள் அவனுடைய கண்களை பொத்திக் கொண்டாள்.

குளிரும் வெட்ட வெளியில், தளிர்க்கரங்களின் கதகதப்புத் தந்த இதத்தில் தீரனின் கண்கள் சுகமாய் மூடிக்கொண்டது.

தீரனின் இமை முடிகள் அவளின் கைரேகைக்குள் புதைந்து கொண்டது. மெல்ல அவனை தன் மேல் சாய்த்துக் கொண்டாள். அவன் தோள் வளைவில் தன் நாடியை குற்றிக் கொண்டாள்.

தீரனின் தலை மெல்ல சரிந்து அவள் கன்னத்தோடு ஒட்டிக்கொண்டது. "ஹே... மாமா குட்டி மெதுவாக கண்களைத் திறந்து பாருங்க. அந்த வானத்தைப் பாருங்க!" கிசுகிசுப்பாய் அவளின் குரல் அவன் செவியில் விழ, தீரனின் பிடரி முடிகள் சிலிர்த்து எழுந்து நின்றது.

அவளின் மந்திரக் குரலுக்கு கட்டுப்பட்டவன் மெல்ல கண்களைத் திறக்க, வானிலிருந்து எரி நட்சத்திரம் விழ, "உங்களுக்கு பிடிச்சத உடனே நெனச்சுக்கோங்க மாமா குட்டி" என்று படபடத்தாள்.

மெல்ல தன் தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்தான். அவளோ ஆனந்தத்தில் கைகளை வானத்தை நோக்கி சுட்டிக் காட்டியபடி உதட்டிற்குள் எதையோ முணுமுணுத்தாள்.

" மேடம் அப்படி என்ன வேண்டுனீங்க?" என்றான் இலகுவான குரலில்.

"நோ... வேண்டிக்கிட்டதை வெளியே சொன்னா பலிக்காது. அதனால நான் சொல்ல மாட்டேன்" என்றாள் வெடுக்கென தலையை திருப்பிக் கொண்டு.

" ரைட்டு இப்போ கிளம்புவோமா? " என்றவன் கைகளில் இருந்த தூசியை தட்டிக்கொண்டு எழ முயன்றான்.

" அது எப்படி? எனக்கு ரொம்ப பசிக்குது. நாம ரெண்டு பேரும் சாப்பிட்டு விட்டு எழுந்து செல்லலாம்" என்றாள்.

" சாப்பாடு என்ன வானத்திலிருந்து ஏரி நட்சத்திரம் கொண்டு வருமா? " என்றான் கிண்டலாக.

"நோ..."

"பிறகு எப்படி?"

" என் மாமா குட்டியின் உள்ளங்கை கொண்டு வரும் " என்றாள் கண்களைச் சிமிட்டி.

" ஸ்டுப்பிட்... "

" ஆவுனா பிட் படம் காட்டிருங்க மாமா குட்டி" என்று மெதுவாக உதட்டசைத்தாள்.

"வாட்?"

" புட்டு என்றால் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றேன் " என்று இளித்துக் காட்டினாள் பற்களை அனைத்தும்.

" போதும் உன் விளையாட்டு. வா வீட்டிற்கு கிளம்பலாம்" என்றான் எரிச்சல் கலந்த குரலில்.

"ஹலோ!" என்று அவனை அதட்டியவள், அவன் வலது உள்ளங்கையை பிரித்து தன் மடியில் வைத்துக் கொண்டாள்.

அவனின் புறங்கை உணர்ந்த மென்மையை, அவனின் உள்ளங்கை உணரத் துடித்தது.

அவனின் மாற்றங்கள் எதையும் கண்டுகொள்ளாத அமிழ்தா, அவன் விரல்கள் ஒவ்வொன்றையும் பிரித்து, "இது சோறு, இது குழம்பு, இது ரசம், இது மோர், இது அப்பளம்" என்று வர்ணித்து, அவனின் உள்ளங்கையை பிசைந்தாள்.

அவன் நெஞ்சமும் பிசைய ஆரம்பித்தது.

காற்றில் கவளத்தை உருட்டி, " இது, எனக்கே எனக்காக சாப்பிடாமல் இருந்த என் மாமா குட்டிக்கு" என்று தளிர் விரல்கள் கொண்டு, அவன் உதடுகளை பிரித்து வாயில் ஊட்டினாள்.

கைகள் தட்டி விட நினைக்க, அவன் தொண்டைக் குழியோ அந்தக் காற்றை விழுங்கியது.

" எல்லாத்தையும் நீங்களே சாப்பிட்டால் எப்படி? எனக்கும் ஊட்டி விடுங்கள்" என்று அந்த சிட்டுக்குருவி தன் வாயைப் பிளந்தது.

தீரனின் கரங்கள் அப்படியே நிற்க, "ப்ளீஸ்..." என்று அவள் கெஞ்சியும் எந்த எதிர்வினையும் இல்லாது இருந்தான்.

" ருத்ர தீரா!" என்றவள் அவன் அன்னை அழைப்பது போல் அதட்ட, தீரனின் கைகள் தானாக மேலெழுந்து அமிழ்தாவிற்கு காற்றை ஊட்டியது. கண்ணோரம் கசியத் துடித்த ஈரத்தை தலையை சிலுப்பி கலைத்தான்.

காற்றை உண்டு உயிரின் தாகம் தணித்தது அந்த இணைகள்.

" அப்பாடா! பசி போயே போச்சு! போயிந்தே! இஸ்கான்!" என்று கலகலவென நகைத்தாள்.

தீரனின் முகம் உறைந்தே இருக்க அதனை மாற்றும் பொருட்டு, அவன் கைகளைப் பற்றி, உள்ளங்கையை தேய்த்து, கழுவி ஊற்றுவது போல் பாவனை செய்தாள்.

அவன் முகத்தை மீண்டும் பார்க்க, அதில் எந்த மாற்றமும் இல்லாது இருக்க, 'இப்ப பாரு மாமே... மவனே யாருகிட்ட?' என்று நினைத்தவள், "நண்டு ஊருது... நரி ஊருது... கிச்சு... கிச்சு..." என்று தன் விரல்களால் அவன் கைகளில் நடந்து, அவன் தோள் வளைவில் குறுகுறுப்பு மூட்ட, தன்நிலை தடுமாறியவன் அவளை உதறிவிட்டு காரை நோக்கி நடந்தான் வீராப்பாக.

"ஐயையோ திரும்பவும் விட்டுவிட்டு போய்விடுவானோ? அவன் மனசு மாறாம காப்பாத்து மாரியாத்தா!" என்று முணுமுணுத்துக் கொண்டே அவன் பின்னால் ஓடினாள்.

சிறுவயதில் அவளோடு விளையாடிய விளையாட்டுக்கள் எல்லாம் நினைவுக்கு வர மனம் சுமந்த ரணத்தின் கணம் குறைந்தது தீரனுக்கு.

கார் போன பாதையில் ஆங்காங்கே தள்ளுவண்டிக் கடைகளில் உணவுகள் விற்க, நாவில் நீர் சுரந்தது அமிழ்தாவிற்கு.

" மாமா குட்டி! உங்களுக்கு நிறைய ஊட்டி விட்டதால்தான் உங்களுக்கு பசிக்கவில்லை. நீங்க எனக்கு கொஞ்சமாக தந்ததால் எனக்கு மீண்டும் பசிக்கிறது " என்றாள் அவனை ஓரக் கண்களால் பார்த்தபடி.


சாலையில் கவனமாக இருந்தவன் அவள் பேச்சை கண்டுகொள்ளவில்லை.

"சரி! ஒரு பாட்ட பாடுவோம்..." என்றவள் சொல்லி முடிப்பதற்குள் கார் ஒரு உணவுக் கடை வாசலில் நின்றது.

'அது!... மவனே யாரு கிட்ட?' என்று கெத்து காட்டியவள் காரில் இருந்து இறங்கி ஓடினாள் உணவகத்திற்குள்.

கிட்டத்தட்ட கடை மூடப்படும் நேரம் ஆகியதால், உணவு சப்ளை இல்லை என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட, மலர்ந்திருந்த அமிழ்தாவின் முகம் வாடியது.

"இட்ஸ் ஓகே..." என்றவள் மேஜையில் இருந்த நீரை பருகுவதற்காக கையை நீட்ட, அவளைத் தடுத்தான்.

அவன் நோட்டுக்களை தாராளமாய் நீட்ட, சூடான தோசை பரிமாறப்பட்டது. ஆர்வமாய் அவள் தோசையை வாயில் வைப்பதற்காக கையை நீட்டிய போது, மீண்டும் தடுத்தான் தீரன்.

'ஷ்... என்னப்பா உன் பிரச்சனை? " அசதியாய் வந்தது அமிழ்தாவின் குரல்.

அவளின் கைகளைப் பிடித்து தன் வாயின் அருகில் கொண்டு சென்றான். அவள் அதிர்ந்து அவனைப் பார்த்து, "என்ன மாமா குட்டி? " என்றாள்.

" அப்பொழுது சொன்னியே அதேபோல் ருத்ர தீரா! என்று சொல்லி ஊட்டு" என்று கட்டளையிட்டான்.

" ஆக மொத்தம் இந்த தோசை எனக்கு இல்லை. எனக்கு இல்லை. பகவானே.." என்று புலம்பிய படி, "ருத்ர தீரா!" என்று கோபமாக அழைத்துக் கொண்டு அவன் வாயில் ஊட்டினாள்.

"நைஸ்..." என்று எதையோ நினைத்து சிலாகித்து நகர்ந்தான் தீரன்.

" அப்பாடா! இப்பொழுது நான் சாப்பிடலாமா? நீங்களும் ஆர்டர் செய்து சாப்பிடுங்கள்" என்றவள் தன் உணவில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.

மொத்தக் கடையும் அவளை வேடிக்கை பார்க்க அதனை எல்லாம் தூசு போல் தட்டி விட்டு சாம்பார் சட்னியோடு சண்டையிட்டுக் கொண்டு தோசையை உண்டு கொண்டிருந்தாள் அவள்.

"ஏய்!" என்று அடிக் குரலில் அவளை அதட்டினான் தீரன்.

"ம்.... ஊட்டி எல்லாம் விட முடியாது. எனக்கு பசிக்குது" என்றாள் வேகமாக.

" மானத்தை வாங்காமல் மெதுவாக சாப்பிடு" என்றான்.

" ஐயா சாமி! நான் தோசையை தவிர வேறு எதையும் வாங்கவில்லை" என்று வாயில் உணவோடு கூறியவளுக்கு, உணவு சிக்கிக் கொள்ள, விக்கித் தவித்தாள்.

கூடியிருந்த சர்வர் கூட்டத்திலிருந்து தண்ணீர் குவளை நீட்டப்பட, எதனையும் வாங்காமல் அவனையே பார்த்தாள்.

"ஏக்... ஏக்..." என்று விக்கல் சத்தம் அதிகரிக்க, முறைத்துக் கொண்டே அவளுக்கு தண்ணீர் குவளையை நீட்டினான்.


விக்கல் சத்தத்துடன் மறுபக்கம் திரும்பிக் கொண்டாள்.

" தொல்லை... " என்று சத்தமாக சொல்லிக்கொண்டே அவள் வாயில் தண்ணீர் குவளையைச் சரித்தான்.

அவள் தண்ணீர் குடித்ததும் நகரச் சென்றவனின் இடக் கையை இறுக்கிப்பிடித்து, தன் உச்சந்தலையில் தட்டுமாறு சைகை செய்தாள்.

அவன் தட்டிய பாசத் தட்டில், பூமியில் அரை அடி புதைந்தது போல் உணர்வு வந்தது அமிழ்தாவிற்கு.

தன் வாழ்வில் காதலும் இல்லாமல், கடமையும் இல்லாமல் நகரும் நொடிகளை, அது தரும் வலிகளை கடக்க முயன்றாள் பெருமூச்சுடன்.

பின் மௌனமாகவே இருவரும் வீடு வந்து சேர்ந்தனர் எந்த வித வாதங்களும் இன்றி.

காலையில் எழுந்ததும் அமிழ்தாவிற்கு கழுத்தில் வலி பயங்கரமாக இருந்தது. இரவு உடையுடன் எழுந்தவள் கழுத்தை தேய்த்துக் கொண்டே தோட்டத்தில் உலா வர ஆரம்பித்தாள்.

பூக்களின் குளுமையில், ஈரப் புல்வெளியில் உடலைச் சரித்து வானை நோக்கி படுத்துக்கொண்டாள்.

இனிமையில் படுத்தவள் அசதியில் கண்ணயர்ந்தாள். திடீரென்று கழுத்துப் பகுதியில் உணர்ந்த ஈரத்தில், மெதுவான அழுத்தத்தில், "ம்... அப்படித்தான் மசாஜ் செய்ய வேண்டும். ஹா... கூசுது மெதுவா" என்று கண்களைத் திறக்காமலேயே பேசிக்கொண்டிருந்தாள் எதிரில் நிற்பது யார் என்று தெரியாமல்.

கர்வம் நீளும்...



 
எனை ஆளும் கர்வமே!

அத்தியாயம் - 13

"காதலில் தனித்து இருந்தால் தன்னுயிரை - தானே கொல்லும் உயிர்"

"வாவ்..." என்று மெதுவாக கண்களைத் திறந்தவள், வீல் என்று அலறிக்கொண்டு உருண்டாள் புல்வெளியில். அவளை துரத்திக் கொண்டே ஓடினான் பைரவன்.

முகத்தை கைகளால் மறைத்த படி குப்புறப் படுத்துக் கொண்டு நாயுடன் பேரம் பேச ஆரம்பித்தாள்.

"ப்ளீஸ் பைரவா! பைசேமியா! என்னை விட்டுப் போய்விடு!" என்று கத்தினாள்.

பைரவனோ தன் முன்னங்காலைத் தூக்கி அவளை திருப்பப் பார்த்தது.

"நோ... உனக்கு கடைசி எச்சரிக்கை தருகிறேன். ஓடிப் போ..."

பைரவனோ அசையாமல் அவள் அருகில் அமர்ந்து கொண்டது.

"ஏய் ரவா! நல்லா கேட்டுக்கோ. கன்னிப் பெண் சாபம் விட்டால் உடனே பலித்து விடும். நீ காலம் முழுவதும் ஜோடி இல்லாமல் அலைவாய் என்று சாபம் தந்து விடுவேன். ப்ளடி ரவா உப்புமா!" என்று விடாமல் வசனம் பேசினாள்.

அமிழ்தாவின் பேச்சுவார்த்தையை மாடியில் இருந்த பால்கனியின் கைப்பிடியில் அமர்ந்தவாரே காபியை ருசித்துக் கொண்டே ரசித்துக் கொண்டிருந்தான் தீரன்.

அவன் மெல்லிய குரலில் விசில் அடித்ததும் பைரவன் அவளை விட்டு ஓடி சென்றது.

பைரவன் விலகிய சத்தத்தில் மெல்ல புரண்டுபடுத்தவள், முகத்தை மறைத்த விரல் இடுக்கின் வழியே சுற்றுப்புறத்தை ஆராய்ந்தாள்.

பின் நிம்மதி பெருமூச்சுடன் கைகளை ஆசுவாசமாக புல் தரையில் ஊன்றி, உடலை பின்னோக்கி வளைத்து, "மவனே யாரு கிட்ட? இந்த அமிழ்தாவின் சாபத்தை கேட்டதும் தெறித்து ஓடி விட்டது பிளடி ரவா உப்புமா. உங்க ஓனரு ஒரு சேமியா உப்புமா" என்று கலாய்த்து விட்டு வீட்டிற்குள் சென்றாள்.

வரவேற்பறையில் நாச்சியார் அமர வைக்கப்பட்டிருந்தும், அவரைக் கண்டும் காணாதது போல் கடந்து செல்ல முயன்றாள்.

" கண்ணம்மா... பாப்பா... செல்லம்மா.." என நாச்சியார் பல பெயர்கள் இட்டு அழைத்தும் திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டிருந்தாள்.

" அடியே என் பேரனுக்கு வாய்த்த சிலுப்பி, சில்லு கருப்பட்டி நில்லுடி.." என்று நாச்சியார் சொன்னதும் விறுவிறுவென அவரை நோக்கி நடந்து வந்து, " அம்மா சாமி! என் கூட பேசுவீங்க. அப்புறம் பேச்சு மூச்சு இல்லாம இருப்பீங்க. அதுக்காக உங்க அருமை பேரன் கிட்ட வாங்கின அடி அவ்வளவு சீக்கிரம் எனக்கு மறக்காது.

அதே மாதிரி நான் உங்க பேரனுக்கு தந்த... " என்று ஆரம்பித்தவள் தீரனின் வரவில் மெல்ல வார்த்தைகளை வாய்க்குள் விழுங்கினாள்.

" அப்படி என்ன தந்த? " என்றார் நாச்சியார்.

நாச்சியாருக்கு எதிராக இருந்த சோபாவில் கால் மடக்கி அமர்ந்து கொண்டு, தீரனை பக்கவாட்டில் பார்த்துக்கொண்டே, "அவசரத்தில் கொடுத்தேனா... ஐயோ... பகவானே! நேக்கு வெக்க வெக்கமாக வருதே...ஹா... ஹா..." என்று சப்தமாக சிரிக்க ஆரம்பித்தாள்.

"ராசாத்தி நீ இப்படி சிரிச்சுக்கிட்டே இருக்கணும். எவ்வளவு வருடம் கழித்து இப்படி காது நிறைய சிரிப்புச் சத்தத்தை கேட்கிறேன்" என்று நெஞ்சில் கை வைத்து ஆழ்ந்த மூச்செடுத்தார் நாச்சியார்.

" அப்புறம் மேடம் செம ஹாப்பி மூடு போல... " என்றவன் அமிழ்தாவின் தோள்களில் கையினை படர விட்டு சோபாவில் அவள் அருகில் அமர்ந்தான்.

"ஆமாம்..." பதிலும் ராகமாய் வந்தது.

தீரனின் கண் அசைவில் அமிழ்தாவின் பொருட்கள் எல்லாம் தீரனின் அறைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு கொண்டிருந்தது.

அவன் கைப்பிடிக்குள் வளைந்து நெளிந்து கொண்டிருந்தவள், அதிர்ச்சியுடன் அவனை திரும்பிப் பார்த்தாள் கண்களில் மிரட்சியுடன்.

"அம்மாச்சி!" என்றான் மென்மையாக.

" என்னையா ராசா? "

" உங்களின் ஆசிர்வாதத்தோடு என் வாழ்வை தொடங்க வேண்டும் என்று இருந்தேன். எங்களை ஆசீர்வாதம் செய்யுங்கள்" என்றான் அதிர்வில்லாமல்.

" இதுவரை நடந்ததை எல்லாம் மறந்துவிட்டு இனி உன் வாழ்வில் நடக்கப் போவதை மட்டும் எண்ணி சந்தோஷமாக வாழ வேண்டும். இந்தப் பொழுது விடிந்தது போல் உன் வாழ்க்கையும் விடியட்டும் ராசா" என்றார் பேரனின் மனதில் உள்ளதை அறியாமல்.

'நோ... எனக்கு மஞ்சள் தடவி, மசாலா தடவுவதெல்லாம் எண்ணெய் சட்டிக்குள் போட்டு வறுக்கத்தானே! முடியாது... முடியாது...' திறந்த இமை மூடாமல் மனதுக்குள் சத்தமிட்டு கொண்டிருந்தாள் அமிழ்தா.

அவளின் தோள் வளைவை அணைத்துக் கொண்டே பாட்டியின் பாதங்களில் சரணடைந்தான்.

" சீக்கிரம் எனக்கு கொள்ளுப்பேரனை பார்க்கும் பாக்கியத்தை தாருங்கள் " என்றார் கண்ணீர் மல்க.

'மை காட்! தள்ளிக்கிட்டு போற கள்ளப் பேரனை கண்டிக்காமல், கொள்ளுப்பேரன் வேண்டும் என்று கேட்கிறார்களே! சமாளி அமிழ்தா! சீக்கிரம்!'

" அதெல்லாம் நடக்காது" என்றாள் அவசரமாக.

அவளை தன்னோடு எழுப்பிய தீரனின் கை தந்த அழுத்தத்தில் தோள்பட்டையே கழண்டு விடும் போலிருந்தது அமிழ்தாவிற்கு.

" நீங்கள் எழுந்து நடக்காமல் எதுவும் நடக்காது... " என்றாள் சமாளிப்பாக அவன் தந்த வலியை பொறுத்துக் கொண்டே.

" நடக்கும். எல்லாம் நடக்கும். முதலில் நடக்க வேண்டியது நல்ல நேரத்தில் நடக்கட்டும்" என்றார் நாச்சியார் சிரித்துக்கொண்டே.

தன் பாட்டியின் மலர்ந்த முகத்தை பார்த்துக்கொண்டே அமிழ்தாவை தன்னறைக்கு அழைத்துச் சென்றான்.

" தோட்டத்துல பார்க்கும்போது அவ்வளவு பிரஷ்ஷா இருந்த. அதனாலதான் ஜூஸ் போட்டுடலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்" என்றான் அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டு.

அமிழ்தா மனதிற்குள் ஒன்று, இரண்டு, மூன்று என்று பத்து வரை விரல்கள் விட்டு எண்ணினாள்.

அடுத்த நொடி, " ஸ்டாப் இட் தீரா!" என்றாள்.

"ஏன்?" என்றான் அவளை மேலும் தன்னோடு புதைத்துக் கொண்டு.

" பைரவனுக்கும் உங்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை" என்றாள் சுள் என்று .

"ஏய்!" என்றவள் கையினை அவளின் முதுகுக்கு பின்னால் வளைத்து நெறித்தான்.

கையில் தோன்றிய வலி மூளையில் சென்று பளீரென்று வெட்டினாலும், "ஐந்தறிவு ஜீவன் கூட அறிவில்லாமல் செய்கிறது. அதனையே ஆறறிவு ஜீவன் செய்யும் போது தான் உண்மையிலேயே அருவருப்பாக இருக்கிறது" என்றாள் முகத்தினை சுழித்துக் கொண்டு.

" புருஷன் அணைத்தால் அருவருப்பாக இருக்கிறதா? அப்போ யார் அணைத்தால் உனக்கு குளுகுளுவென்று இருக்கும்? " என்றான் மடக்கிய அவள் கைகளை அசைத்துக் கொண்டு.

"ஷ்... ஆ... என்னை அழ வைத்து, அதன் மூலம் மொத்த குடும்பத்தையும் அழ வைக்கும் உங்கள் திட்டம் என்றுமே நிறைவேறாது.
நான் சிரிப்பேன். சிரிப்பேன். சிரித்துக் கொண்டே தான் இருப்பேன்" என்று வலியை மீறி நகைத்துக் காட்டினாள் கலங்கிய கண்களுடன்.

அவளின் சிரிப்பு தந்த கோபத்தில் அவளை உதறித் தள்ளினான்.

வலி தந்த கையினை நீவிக்கொண்டே, " என் குடும்பத்தின் சந்தோஷத்திற்காகத்தான் நந்து மாமாவை கல்யாணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்டேன். அதே குடும்பத்தின் நிம்மதிக்காகத்தான் உங்களை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தேன். என் முடிவில் நான் என்றும் தெளிவாய் இருக்கிறேன்.

நம் வாழ்வைத் தொடங்கலாம். உங்கள் மோதலுக்காக இல்லை. நம் காதலுக்காக" என்று தன் மனதில் உள்ளதை கொட்டித் தீர்த்தாள்.

"ம்... காதல்..." என்று ஏளனமாக சொன்னவன் சிரிக்கத் தொடங்கினான்.

"ஹலோ! மிஸ்டர்! காதல்தான். அதற்கு எதற்கு இப்படி ஒரு சிரிப்பு?" என்றவனோடு மல்லுக்கட்ட தொடங்கினாள்.

" நீ என்னுடைய காதலா?" வியப்பாய் கேட்டான்.

" நான் தானே உங்கள் மனைவி. அப்போ நான் தான் உங்கள் காதல்" என்றாள் தன் கைகளை உதறிக் கொண்டு அழுத்தமாக.

"ஓஹோ... மேடம்! உங்க ரூட்டு ஓகேவா இருந்தாலும் அதுல ஒரு சின்ன கேட்.
நீ என் மனைவியாவதற்கு முன்பே, என்னுடைய மொத்த காதலும், என்னுடைய மனம் கவர்ந்தவளால் கொள்ளையடிக்கப்பட்டு விட்டது. இப்பொழுது என் காதல் கஜானா காலி"

"பொய்! நீங்கள் பொய் தான் சொல்கிறீர்கள். அப்படி காதலித்திருந்தால், உங்கள் காதலி தானே உங்கள் மனைவியாய் இருக்க வேண்டும். நான் எப்படி?" என்று கண்களை உருட்டினாள்.

" கண்ணா! ரெண்டு லட்டு தின்ன ஆசையா?" என்று கண்ணடித்தான் தீரன்.

"அப்போ... உங்க காதல் நான் இல்லையா?"

" அதற்கு வாய்ப்பே இல்லை"

தன்னை ஏய்ப்பதற்காக தீரன் சொல்லி இருப்பான் என்று மனக்கோட்டை கட்டியிருந்தவள், அவனின் உறுதியான குரலில் உடையத் தொடங்கினாள்.

"அது... யார்?" என்றாள் உள்ளடங்கிய குரலில்.

சரியாக அதே நேரம் அவனின் அலைபேசி ஒலிக்க, அதில் ஒளிர்ந்த பெயரை பார்த்தவன்
சிரித்துக்கொண்டே, அலைபேசியின் ஒளித்திரையை அவளிடம் காட்டினான்.

"மை லவ் காலிங்..." என்ற எழுத்துக்களை சுமந்திருக்க, அமர்த்தலாய் ஸ்பீக்கர் மோடில் அழைப்பை ஏற்றான்.

"ருத்! காலையில் எழுந்ததும் போன் செய்ய மாட்டியா? உன் போனிற்காக கனடாவின் கடும் குளிரில் நாங்கள் காத்திருக்க வேண்டுமா?" என்றது அழகிய குரல் ஒன்று.

"ஆஹான்... இன்றைக்கு ஏன் பனிக்கட்டியில் இருந்து தீப்பொறி பறக்கிறது?"

" அப்பப்பா உன் ஏஞ்சலை என்னால் சமாளிக்க முடியவில்லை. நீயே சமாளித்துக் கொள்!" என்றவுடன் அழைப்பு வீடியோ அழைப்பாக மாறியது.

வீடியோ திரையில், ஒரு சிறு பெண் குழந்தை தோன்றியதும், "ஹாய்! ஏஞ்சல்" என்றான் தீரன்.

தன்னைச் சுற்றி நடப்பதை நம்ப இயலாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அமிழ்தா.

வீடியோ காலில் அந்த குழந்தை தீரனை பார்த்து, "ஹாய் டாடி!" என்றதும், வேரற்ற மரம் போல் மயங்கிச் சரிந்தாள் அமிழ்தா.

மெல்ல இமைகள் தட்டி கண் திறக்க முயன்றாள் அமிழ்தா. தீரனின் அறையில், மிதமான ஏசி குளிரில், மெத்தையில் படுத்திருப்பதை உணர்ந்தவள், எழுந்து அமர்ந்தாள் நிதானமாக.

அறையில் காற்றே இல்லாதது போல் மூச்சடைத்தது அவளுக்கு. திரைச்சீலைகளை விலக்கி, ஜன்னலைத் திறந்து, தவிப்புடன் அவசரமாக சுவாசித்தாள்.

வீட்டின் பின்புறம் இருந்த ஒற்றை வீட்டின் ஜன்னல், இவள் ஜன்னல் கதவைத் திறந்ததும் மூடிக்கொண்டது.

நடப்பவை அனைத்தும் புரியாத புதிராய் இருக்க தலை வலித்தது அமிழ்தாவிற்கு.

கைப்பிடி என்று நினைத்து கத்தியின் கூர்முனையைப் பிடித்தது போல் இருந்தது அவளின் நொடி நேர திருமண முடிவு.

கொதித்த மனதை அடக்கத் தெரியாமல் அறையில் இருந்து வெளியேறி வீட்டின் பின்புறம் வந்தாள் அந்த ஒற்றை வீட்டை நோக்கி.

கதவில் கனமான பூட்டு தொங்க, சற்று முன் அடைத்த ஜன்னலின் நினைவில், அவளின் முகம் யோசனையை தத்தெடுத்தது.

அந்த ஜன்னலின் அருகே வந்து, கைகளை வைத்து ஜன்னலை உள்ளே தள்ளினாள். உள்ளிருந்து பூட்டிக் கொண்ட ஜன்னல் திறக்காமல் முரண்டு பிடித்தது.

அவளின் நினைவில் தீரன் ஒரு பெண்ணை பலவந்தமாய் அந்த அறைக்குள் அடைத்து வைத்திருப்பது போல் கற்பனை எழுந்தது.

'ஹேய் அமிழ்தா! உன் கற்பனை எல்லை கோட்டை கடக்கிறது. உன் தீரன் மாமாவா இப்படி செய்வார்?' என்று ஒரு மனம் கேள்வி கேட்டது.

' ஏன் அவர் கண்களாலேயே உருட்டி, எனக்கு விபூதி அடித்து, என் வாயாலேயே அவரை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொல்ல வைத்து, இப்படி வீட்டில் அடைத்து வைத்திருக்கவில்லையா? இது தவிர கனடாவில் வேறு ஒரு குடும்பம். டாடியாம் டாடி சரியான ஊறுகாய் ஜாடி' என்றவளின் மற்றொரு மனம் தீரனை பரிகாசம் செய்தது.


தன்னைப் போல் இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்று எண்ணியவள் அந்த ஜன்னலை பலமாகத் தட்டினாள்.

எந்த ஒரு எதிர்வினையும் உள்ளிருந்து வராததால் கதவின் பூட்டை உடைப்பதற்கு பெரிய கல்லைத் தேடி எடுத்து, பூட்டை அடித்து உடைக்க ஆரம்பித்தாள்.

பலமான பூட்டு சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. மனக்குழப்பமும் உடல் அசதியும் சேர, மடிந்து அமர்ந்தாள் தரையில்.

பூட்டை உடைக்க வெகு நேரம் போராடியதால் கன்றிச் சிவந்த தன் உள்ளங்கையை விரித்துப் பார்த்தாள்.

'நம் அமிழ்தாவின் திருமண ரேகை எவ்வளவு ஆழமாக இருக்கிறது. அவளின் மனதிற்கு ஏற்றவனோடு அவளின் வாழ்வு சிறப்பாக அமையும்" என்றவளின் பத்மாவதி பாட்டி சொன்னது நினைவிற்கு வந்தது.

முகத்தில் தோன்றிய விரக்தி புன்னகையோடு, " ஆமாம் பாட்டி என் திருமண ரேகை ஆழமாகத்தான் இருக்கிறது. அதற்குள் என்னை முழுவதுமாய் புதைத்து சமாதியாக்கிவிட்டது. ஐயோ அம்மா என்னால் மூச்சு விட முடியவில்லையே!

வேறு ஒரு பெண்ணின் காதலனாக, அவள் குழந்தைக்கு தகப்பனாக என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லையே!

காதல் இல்லாத வாழ்வையே களங்கம் என்று நினைக்கும் எனக்கு, கல்யாண வாழ்வே களங்கமாகிவிட்டதே!

இந்த வீட்டிற்குள் என்னென்ன ரகசியங்கள் புதைந்து இருக்கிறதோ, அம்மம்மா புதைக்குழி போல் என்னை இழுக்கிறதே. முடியாது. இனியும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. ருத்ர தீரனின் முகமூடி இன்றே ️கிழிக்கப்படட்டும் " என்று வெறி கொண்டவள் போல் கத்தியவள், கையில் இருந்த கல்லால் மீண்டும் பூட்டை ஓங்கி, ஓங்கி விடாது அடித்துக் கொண்டிருந்தாள்.


பூட்டு உடைக்கப்படும் சத்தத்தில், வேலைக்காரர்கள் வந்து வேண்டாம் என்று தடுக்கப் பார்க்க, எதனையும் சட்டை செய்யாமல் தன் முயற்சியில் முன்னேறிக் கொண்டிருந்தாள்.

அவளின் விடா முயற்சியில் இறுதியாக பூட்டு தன் வாயைத் திறந்தது.. பரபரப்புடன் அந்த வீட்டிற்குள் காலை வைத்தாள்.

அந்த ஜன்னல் இருந்த அறையை தேடிக் கண்டுபிடித்து உள்ளே நுழைந்து, அந்த இருள் நிறைந்த அறையின் மின்விளக்குகளை ஒளிரச் செய்தவள் அதிர்ந்து நின்றாள்.


கர்வம் ஆளும்...

 
Last edited:
எனை ஆளும் கர்வமே!

அத்தியாயம் - 14

" நனவு தரும் இன்பத்தை மிஞ்சும் -
காதல் தரும் கனவு"



தன் கண்ணை நம்பாமல் கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தாள். அறையின் மூலையில் சேலை அணிந்த ஒரு பெண் உருவம் முழங்காலில் தன் தலையை கவிழ்த்துக்கொண்டு அமர்ந்திருந்தது.

முக வடிவை பார்க்க முடியாமல் விரிக்கப்பட்டு இருந்த முடிக்கற்றைகளால் முகம் முழுவதும் மறைக்கப்பட்டிருந்தது.

" ஹலோ யார் நீங்க? " என்றாள் சத்தமாக.

எந்த ஒரு பதிலும் இல்லாமல் அமைதியாக இருந்தது அந்த அறை.

அவள் கதவைத் திறந்ததும் பைரவன் அந்த வீட்டு வாசலில் நின்று கொண்டு இடைவிடாது குரைக்க ஆரம்பித்தது.

எங்கே நாய் உள்ளே வந்து விடுமோ என்ற பயத்தில் வேகமாக சென்று வெளிக் கதவை உட்புறமாக பூட்டிக் கொண்டாள்.

அவள் மீண்டும் அந்த அறைக்குள் நுழைவதற்குள், வாசல் கதவு பலமாக தட்டப்பட்டது. நெஞ்சம் அதிர தன் கைகளை மார்பின் மீது வைத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் கண்கள் மூடி ஒரு நிமிடம் நின்றாள்.

ஆனால் வாசல் கதவு தட்டப்படும் சத்தமோ இடி முழங்குவது போல் அதிர ஆரம்பித்தது.

" ஏய் அமிழ்தா கதவைத் திற!" என்ற தீரனின் சத்தத்தில் அவளின் ரத்தம் உறைந்தது.

தன் உள்ளங்கைகளை இறுக்க மூடி நின்று கொண்டு கதவைத் திறக்காமல், "முடியாது" என்று பதிலுக்கு கத்தினாள்.

" ப்ளீஸ் அமிழ்தா கதவைத் திற" என்ற தீரனின் குரல் இப்போது இறங்கி ஒலித்தது.

" முடியவே முடியாது. நான் உங்களை எவ்வளவு நல்லவர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். திருமணம் என்ற பெயரில் என்னையும் இந்த வீட்டில் அடைத்து வைத்து, அதே வீட்டில் பலவந்தமாக வேறு ஒரு பெண்ணையும் அடைத்து வைத்திருக்கிறீர்களே! ச்சீ... நீங்கள் எல்லாம் மனுஷனே இல்லை" என்றாள் குரல் உயர்த்தி.

" அடி முட்டாள்! உன் உளரலை நிறுத்து! கர்ஜித்தான் தீரன்.

" ஓஹோ னானா... உங்கள் வண்டவாளங்களை கண்டுபிடித்ததற்கு எனக்கு முட்டாள் பட்டமா? விடமாட்டேன். உங்களின் சுயரூபத்தை வெளிப்படுத்தியே தீருவேன்.
இந்தப் பெண்ணை நீங்கள் எப்படி எல்லாம் துன்புறுத்தினர்களோ, அதை நான் ஏன் உங்களிடம் கேட்க வேண்டும்? இதோ அந்தப் பெண்ணிடமே சென்று கேட்கிறேன் உங்கள் லீலைகளை" என்றவள் உள்ளறையை நோக்கித் திரும்பினாள்.

" வேண்டாம் என்னை கோபப்படுத்தி பார்க்காதே அது உனக்கு நல்லதல்ல. கதவைத் திற!" ஆணையிட்டான் அதிர்ந்த குரலில்.

மனக்குழப்பத்திலிருந்த அமிழ்தாவின் செவிகளில் அந்த வார்த்தைகளின் வீரியம் விழவே இல்லை.

" இத்தனை நாள் இந்த வீட்டில் உங்களை எப்படி நான் கவனிக்காமல் போனேன்? இனி நீங்கள் பயப்படாதீர்கள். இந்த அமிழ்தா உங்களுக்கு துணை நிற்பாள்.

இனி இந்த தீரனின் கொடுமைகள் உங்களுக்கு இருக்காது.
இந்த தீரன் உங்களுக்கு என்ன என்ன ஆசை வார்த்தைகள் காட்டினார்? இவருடைய வலையில் நீங்கள் எப்படி விழுந்தீர்கள்? " என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே அந்தப் பெண்ணை நெருங்கினாள் அமிழ்தா.

"ஆ..." என்றவனின் அதிர்ந்த சத்தத்துடன் வெளிக்கதவு உடையும் ஓசையும் கேட்டது.

அவன் அறைக்குள் நுழைந்த போது, அந்தப் பெண்ணின் முன் மண்டியிட்டு அமர்ந்து இருந்தாள் அமிழ்தா.

அடிப்பதற்காக கையை உயர்த்திய தீரனின் கை அமிழ்தாவை நெருங்கும் முன், அந்தப் பெண் அமிழ்தாவை கட்டி அணைத்துக் கொண்டாள்.

அவளை அடிக்க முடியாத ஆத்திரத்தில், "ஆ என்று அலறி தரையில் மண்டியிட்டு இரு கைகளாலும் தரையினை மாறி மாறி குத்தி தன் ஆத்திரத்தை தணிக்க முற்பட்டான் தீரன்.

ஒன்றும் புரியாமல் இருவரையும் மாறி மாறி பார்த்தாள் அமிழ்தா.

"அம்மா... அம்மா... என்ன வார்த்தை சொல்லிவிட்டாள் நம் உறவைப் பற்றி. அவளைப் போய் உங்கள் கை அணைப்பிற்குள் வைத்து இருக்கிறீர்களே!! அவளை என்னிடம் விடுங்கள் கொன்று புதைத்து விடுகிறேன்" என்றான்.

அந்தப் பெண்ணின் தலை நிமிரவே இல்லை. அவளின் கையோ ஆதுரமாய் அமிழ்தாவை பற்றி இருந்தது.

தீரனின் வார்த்தைகளில் அதிர்ந்து போன அமிழ்தாவின் மனம் குற்ற உணர்வால் குறுகுறுக்க ஆரம்பித்தது. மெல்ல தலையை நிமர்த்தி கைகள் நடுங்க அவரின் முகத்தை மூடி இருந்த முடிக்கற்றைகளை விலக்கிப் பார்த்தாள்.

"அத்தம்மா..." என்றாள் சிறு வயது ஞாபகத்தில்.

" அத்தம்மாவா? இது எப்போது? உங்கள் குடும்பம் அவரை எப்போதும் பைத்தியம் என்று தானே அழைக்கும்" என்று ஏளனக் குரலில் கூறியவன்,

"அம்மா! உங்களைப் பழித்துக் கூறியவர்களை எல்லாம் அணைத்துக் கொள்கிறீர்களே? என்னை மட்டும் ஏன் அம்மா தள்ளி வைக்கிறீர்கள்? அம்மா ப்ளீஸ்..." என்ற தீரன் அவரின் பக்கம் நெருங்க, அமிழ்தாவை இறுக்கமாக கட்டிக்கொண்டார் தீரனைப் பார்க்காமல்.

ஆத்திரம், கோபம் எல்லாம் எல்லை கடக்க சிவந்த முகத்துடன் எழுந்து நிமிர்ந்து நின்றான்.

" அம்மா நான் எதை செய்தால் உங்களின் அன்பு எனக்கு கிடைக்கும்?

எந்த வீட்டிலிருந்து உங்களைப் பைத்தியம் என்று கூறி வெளியே தள்ளினர்களோ, அதே வீட்டில் அவர்களின் ஆசைப் பெண்ணை நான் பைத்தியமாக்கவா?" என்றான் குரூரப் புன்னகையுடன்.

அவனுடைய கேள்விக்கு எந்த ஒரு எதிர்வினையும் இல்லாமல் அமர்ந்திருந்தார் அவனின் தாய்.

" வனவாசம் போல் இந்த இருட்டு அறையில் அடைந்து கொண்டு அப்படி நீங்கள் சாதித்தது தான் என்ன?

இதோ இப்பொழுது இவள் கூறினாளே, அந்த வார்த்தைகளின் தாக்கம் என் உயிரை உருவி எடுக்கிறதே. தாயில்லா பிள்ளை தானே அனாதை. என் தாய் நீங்கள் இருந்தும் நான் அனாதையாக தவிக்கிறேனே! என் மீது உங்களுக்கு இரக்கமே வராதா? அப்படி நான் செய்த தவறு தான் என்ன?" கோபமாக ஆரம்பித்த தீரன் கடைசியில் குழந்தையாக அன்னையின் அன்பிற்கு ஏங்கி நின்ற காட்சியைக் கண்டதும் தீரனின் மேல் இரக்கம் சுரந்தது அவளுக்கு.

ஆனாலும் டாடி என்ற அந்த மழலையின் குரல் நினைவிற்கு வந்ததும், உதட்டை சுழித்து, முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.

தன் தாயை நோக்கி தீரன் நகர்ந்து வர, சுவற்றுக்குள் தன்னை ஒடுக்கிக் கொள்ள முயன்றார் அவர்.

தீரனின் காலடிகள் அப்படியே நின்றது. தீரனை முறைத்துக் கொண்டே, "அத்தம்மா..." என்ற அமிழ்தாவின் மடிக்குள் கவிழ்ந்து, தன் முகத்தை மறைத்துக் கொண்டார்.

கர்வம் மேலோங்க, " ஹலோ மிஸ்டர்! அத்தம்மாவிற்கு உங்களை பார்க்க பிடிக்கவில்லை. நீங்க போகலாம். தேவையில்லாமல் கதவை எல்லாம் உடைத்து ஹீரோயிசம் எல்லாம் இனி செய்ய வேண்டாம். டாடியாம் டாடி, ஜோடி வெச்சிருக்கும் கேடி. உங்க ஆட்டத்துக்கு வைக்கப்போறேன் வெடி.

அவர்கள் யார் என்று தெரியாமல் பேசிவிட்டேன். அவர்களைப் பற்றி அறிமுகப்படுத்தாதது கூட உங்கள் தவறுதான். அதைக் கூட நான் பெரிய மனது பண்ணி தன் மன்னித்து விடுகிறேன்.

என் மீது கை வைத்தீர்கள் என்றால்... " என்று இழுத்தவள் அவனை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டு பெருவிரலினால் தன் அத்தம்மாவை நோக்கி கை காட்டினாள் கெத்தாக.

அந்தப் பெண்மணி பாவம் போல் அமிழ்தாவின் கரத்தை பற்றி இருந்தார்.

"ஊப்..." என்று பெருமூச்சு விட்டவன், 'இவளிடம் ஏதோ மேஜிக் இருக்கிறது. பாட்டி, அம்மா என பார்த்த நொடியில் அனைவரையும் வசீகரித்து விடுகிறாள். என்னை கூட லேசாக...' என்று இதழ் கடையோரம் சிரிப்பை கசிய விட்டான்.

தன் அன்னையின் மாற்றம், அவர் மேல் கொண்ட மனக்கசப்பை கூட பின்னுக்கு தள்ளிவிட்டது.

இனி எல்லாம் மாறும் என்ற சிறு நம்பிக்கை அவனிடையே துளிர் விட ஆரம்பித்தது. தன் அன்னையும் பூரணமாய் குணமடைய வேண்டும், அவர்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய குடும்பத்தையும் பழிவாங்க வேண்டும். இந்த இரண்டிற்கும் காரணமாய் அமிழ்தா இருந்தால் அதுவும் அவனுக்கு ஆனந்தமே.

"ஓகே... உன்னிடம் பேச வேண்டும் வா" என்று அமிழ்தாவை அழைத்தான்.

" அத்தம்மா... " என்று இழுத்தாள்.

" அவர்களைப் பார்த்துக் கொள்வதற்கு தனியாக ஆட்கள் வருவார்கள். இத்தனை வருடம் தனிமையில் இருந்தவர்களுக்கு சில மணி நேரங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை நீ வா... " என்றான் அதிகாரமாக.

தன் அத்தம்மாவை பரிதாபமாக பார்த்துக் கொண்டே எழுந்து தீரன் பின் சென்றாள்.

தங்கள் அறைக்குள் வந்ததும் கதவை அடித்து சாத்தினான் சத்தமாக.

ஒரு நொடி கண்களில் மிரட்சி தோன்றினாலும் அடுத்த நொடி அதனை சமாளித்துக் கொண்டு, " நான் முதலில் ஒன்றை சொல்லி விடுகிறேன். என்னை அடிக்க கூடாது. திட்டக்கூடாது. ஓகே வா அங்கிள் ஜி!" என்றாள்.

"வாட்? அங்கிளா?"


"எஸ். குட்டி போட்ட உங்களை இன்னும் நான் மாமா குட்டி என்று எப்படி சொல்லுவேன்? அதனால் நீங்கள் அங்கிள் தான்" என்றாள் மிதப்பாக கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டு.

" என் பொண்ணு ரொம்ப அழகு தெரியுமா? " என்றான்.

"ஹான்..." வார்த்தை வராமல் முழித்தாள்.

" அதுவும் அந்தக் கண்ணு இருக்கே அது அவ்வளவு அழகு!" என்று அவள் கண்களை பார்த்துக் கொண்டே வர்ணித்தான் சாத்திய கதவின் மேல் ஒற்றை காலை ஊன்றி, சாய்ந்து கொண்டு.

"ம்... போதும். அழகாம் அழகு வெவ்வே வெவ்வே" என்றாள்.

" நீ ஒத்துக்கொள்ள விட்டாலும் என் மகள் அழகுதான். அது சரி. என் வாழ்க்கையில் உனக்கு நிலையான இடம் இல்லை என்று தெரிந்ததும் உனக்கு வருத்தமாக இல்லையா? " என்றான் அவளை ஆழமாக பார்த்துக் கொண்டு.

அமர்ந்திருந்த கட்டிலில் கால் மீது கால் போட்டுக்கொண்டு இருபுறமும் கைகளை ஊன்றி அவனைப் பார்த்து, "நான் சாப்பிடும் சாக்லேட்டில் கூட யாராவது கடித்து விட்டுத் தந்தால், அதனை குப்பைத் தொட்டியில் வீசி விட்டுச் சென்று விடுவேன்" என்றாள் உள்ளம் கொண்ட உறுதியுடன்.

" சாக்லேட் ஓகே. இந்த சாக்லேட் பாய்?" என்றான் ஒற்றைக் கண்ணடித்து.

"பச்... பச்..." என்ற சத்தத்துடன் வலது கையில் ஐவிரல்களையும் அசைத்து, வேண்டாம் என்பது போல் தலையசைத்தாள்.

"அப்போ... உங்க குடும்ப மானம் கப்பல் ஏறுமே" என்றான் தோள்களை இருபுறமும் குலுக்கி.

"அது... அது... என் பிரச்சனை" என்றாள் படபடப்பாக.

கதவில் இருந்து ஒரு அடி முன் நகர்ந்து வந்து, இரு கைகளின் புஜங்களை முறுக்கி காட்டி, "நிச்சயமாக இந்த மாமா குட்டி உனக்கு வேண்டாமா டார்லிங்?" என்று உதடு மடித்து கண்ணடித்து சிரித்தான்.

மனமெல்லாம் கசந்து வழிந்தது அவளுக்கு. அத்துணை நெருக்கடிகளுக்கு நடுவிலும் ஆசையாகத் தானே கரம் பிடித்தாள் தன் மாமனை. தன் வாழ்வு என்றோ ஒரு நாள் மலரும் என்று நினைக்க, அந்த வாழ்வே தனக்கில்லை என்ற நிலை வந்ததும் உயிர் வரை வலித்தது அவளுக்கு. அந்த வலியை விழுங்கிக் கொண்டே சிரமப்பட்டு சிரித்துக் கொண்டு வேண்டாம் என்று தலை அசைத்தாள்.

" சரி உனக்கு நான் வேண்டாம். ஆனால் எனக்கு நீ வேண்டுமே" என்று வில்லத்தனமாக சிரித்தான்.

" பெத்த தாயை இந்த நிலையில் வைத்துக் கொண்டு நீங்கள் பேசும் பேச்சா இது? முன்னுக்குப் பின் உங்கள் செயல்கள் எல்லாம் முரணாகவே இருக்கிறது. எனக்கு தலையே வெடித்து விடும் போலிருக்கிறது. அத்தம்மாவிற்கு ஏன் இப்படி ஆனது?" என்றாள் தன் விளையாட்டுத்தனத்தை ஒதுக்கி வைத்து.

பார்வையில் சிறு தயக்கமும் இன்றி, அவளை விழுங்கிக் கொண்டே அவளை நெருங்கி வர, அவனின் நெருக்கத்தில் கட்டிலில் பின்னே சரிந்தாள் அமிழ்தா.

அவளின் இருபுறமும் தன் கைகளை ஊன்றி, " ஏன் உன் குடும்பத்தில் ஒருவரும் இந்த கதையை உனக்குச் சொன்னதில்லையா? " என்றான்.

"இல்லை..." வாய்க்குள்ளேயே முனங்கினாள்.

நெருக்கத்தில் அவனின் கூர்விழியும், கூர் நாசியும் அவளைக் குத்திக் கிழிக்க, இமை தட்டாமல் அவனையே பார்த்தாள்.

இன்னும் இன்னும் அவளை அவன் நெருங்க, அவனின் கூர் நாசி அவளின் நாசியோடு முட்டி மோத, இருவரின் சூடான உயிர்க் காற்றுகள் கலந்து உறவாடின.

' அமிழ்தா இந்த குட்டி போட்ட டைனோசர் உன்னை முழுங்க பார்க்கிறது அலர்ட்...' என்ற மனதின் குரலில் தலையை உலுக்கி, அவன் நெஞ்சில் கரம் பதித்து தள்ளி விட்டாள்.

" ப்ளீஸ் அத்தம்மாவை பற்றி சொல்லுங்களேன்" என்றாள் மூச்சிரைக்க.

வெகு நாள் மனதை அழுத்திய அழுத்தத்தின் மேல், அமிழ்தா தந்த அழுத்தத்தால், அவன் உறுதியில் சிறு கீறல் விழுந்தது.

" உன்னிடம் சொல்வதால் மட்டும் என்ன நடந்து விடப் போகிறது? "

" நீங்கள் உங்களுடைய கோணத்தில் இருந்து இந்த பிரச்சனையை பார்ப்பதால் தான் தீர்வு கிடைக்காமல் தவிக்கிறீர்கள். ஒருவேளை வேறு கோணத்தில் பார்த்தால் அத்தம்மாவின் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கலாம் இல்லையா? " என்றாள் ஒரு வேகத்துடன்.

உண்மையை ஒத்துக் கொள்ள மனம் இல்லாமல் அவளை விட்டு விலகி, ஜன்னலின் கம்பிகளை இறுக்கப் பற்றிக் கொண்டான் மௌனமாக.

அவன் பின்னே வந்து நின்றவள், அவன் மௌனத்தை எப்படி கலைப்பது என்று தெரியாமல், அவன் முதுகில் தட்டலாம் என்று கையை உயர்த்த, சட்டென அவன் திரும்பிய வேகத்தில் அவளின் கை அவன் நெஞ்சில் மோத, அவளின் கைமீது தன் இரு கைகளை வைத்து அழுத்திக் கொண்டான்.

அவன் உள்ளே தாண்டவம் ஆடும் உணர்ச்சிகளின் போராட்டத்தை அவன் இதயத்துடிப்பு எடுத்துக்காட்டியது.

அவன் கரங்களுக்குள் சிறைபட்டிருந்த தன் கரத்தால் மெல்ல தட்டிக் கொடுத்தாள் அவன் மார்பை.

இதமான சுகத்தில் கண்மூடியவன் மெல்ல இறுக்கம் தளர்ந்து, "என் அம்மாவின் பெயர் மதுரவல்லி" என்றான் இமையோரம் துளிர்த்த கண்ணீர் துளியுடன்.

கர்வம் ஆளும்...

 
எனை ஆளும் கர்வமே!

அத்தியாயம் - 15

"காதல் சொன்ன கணம் உடம்போடு - உயிர் நிலை பெறும் "

சேதுபதி, அழகு நாச்சியார் தம்பதியருக்கு திருமணம் முடிந்து வருடங்கள் பல கடந்த பிறகும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது.

பல புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று தங்கள் வேண்டுதலை இறைவன் பாதத்தில் சமர்ப்பித்து வந்தார்கள். மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் உள்ள மதுரவல்லி தாயார் சன்னதியில் வந்து வேண்டும்போது, நாச்சியார் மயங்கி, அவர் பிள்ளை உண்டாகி இருப்பது தெரியவர, ஆனந்தத்தில் மகிழ்ந்தனர் இருவரும்.

பிள்ளை பேற்றின் போது பெண் மகவு பிறக்க, தங்கள் வாழ்வில் மதுரம் போல் இனிக்க வந்த மழலைக்கு, மதுரவல்லி தாயார் நினைவாக, "மதுரவல்லி" என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

மதுரவல்லியை கையில் வாங்கும் போது தங்களை விட நிறம் குறைவாக இருந்தாலும், மனம் நிறைந்து தங்கள் வாழ்க்கைக்கு வரமாய் வந்த மகளை அணைத்துக் கொண்டனர் சேதுபதியும், நாச்சியாரும்.

" ஏன்டி நாச்சி, ஆஸ்பத்திரில பிள்ளைய மாத்தி எடுத்துட்டு வந்துட்டியா? உன் கையில் குழந்தையை பார்க்கும் போது நிறம் அவ்வளவு மட்டுப்பட்டு தெரிகிறது. உன் நிறத்திற்கும் உன் மகள் நிறத்திற்கும் சம்பந்தமே இல்லையே" என்று ஊரார் புறம் பேச ஆரம்பித்தனர்.

" கர்ப்பகிரகத்தில் இருக்கும் எங்கள் குலசாமிதான் எங்கள் மகள். அவளைப் பழித்துப் பேசினால் உங்கள் நாக்கு அழுகிப் போய்விடும் ஜாக்கிரதை!" என்ற நாச்சியின் வார்த்தைகளில் அவள் முன் அவர்களின் வாய் அடங்கியிருந்தாலும், புறம் பேசுபவர்கள் புறம் பேசிக் கொண்டேதான் இருந்தார்கள்.

மதுரவல்லி அவர்களின் மகளே இல்லை என்று கேலி செய்து சிரித்தனர். பணம் இருந்தால் எதனையும் மூடி மறைக்கலாம் என்று அவர்களின் செல்வ வசதியைப் பார்த்து பொறாமையுடன் பேசினர்.

மதுரவல்லி வளர வளர அவர்களின் ஊர் வம்பும் வளர்ந்து கொண்டே வந்தது. சேதுபதியும், நாச்சியாரும் தூசு போல் அதனை தட்டி விட்டு எளிதாக கடந்து செல்ல பழகிக் கொண்டனர்.

ஆனால் அந்த விஷம் மதுரவல்லியின் மனதில் விதையாய் விழ ஆரம்பித்தது. பள்ளிப் பருவத்தில் அவளை பள்ளிக்கு அழைத்து வரும் சேதுபதியைப் பார்த்து உன் அப்பாவா? உணவு கொடுக்க வரும் நாச்சியாரை பார்த்து உன் அம்மாவா? என்று உடன் பயிலும் மாணவ மாணவிகள் கேட்கும் போது, "ஆமாம்..." என்று முதலில் தயக்கம் இன்றி சொன்னவளின் குரல் நாளடைவில், பலரின் கேள்வியில் நலிந்து கொண்டே வந்தது. அவளை அறியாமல் அவளின் வாழ்க்கை ஒரு இருண்ட உலகத்திற்குள் நுழைய ஆரம்பித்தது.

ஒரு நாள் நாச்சியாரின் கையைப் பிடித்துக் கொண்டு, " அம்மா நான் ஏன் உங்களைப் போலவும் அப்பா போலவும் இருக்கவில்லை? நான் உங்கள் மகள் இல்லையா? " என்று தயக்கத்துடன் கேட்டாள் மதுரவல்லி.

மகளின் தலையை ஆதுரமாய் தடவி, அவள் கன்னத்தில் தன்னிரு கைகளையும் பதித்து, "மதுரா! நாம் சுவாசிக்கும் காற்றுக்கும் நிறம் இல்லை. நம்முடைய உயிர் காக்கும் நீருக்கும் நிறம் இல்லை.

வண்ணங்கள் வாழ்க்கை இல்லை. நம் எண்ணங்கள் தான் வாழ்க்கை. நம்முடைய வாழ்க்கையில் நிறம் ஒரு அடையாளமே தவிர. நிறம் மட்டுமே அடையாளம் கிடையாது.

மரபியல் ரீதியாக ஆயிரம் காரணங்கள் இதற்கு இருந்தாலும், முதலில் நீ யார் என்று தெரிந்து கொள்! எங்களுக்கு எங்கள் குலசாமி தந்த பரிசு நீ! உயிர்ப்பில்லா வாழ்க்கைக்கு கிடைத்த உயிர் நீ! நீ இல்லை என்றால் நாங்கள் இல்லை.

ஒரு பெற்றோராக, நாங்கள் உன்னை வெளி உலகத்திற்கு அனுப்பியதும், நீ சந்திப்பவைகள் எல்லாம் எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது.

ஆனால் எந்த சூழ்நிலையிலும், யாரையும் எதிர்க்க நீ ஏந்த வேண்டிய ஆயுதம் உன் தன்னம்பிக்கை மட்டும் தான். உன் தன்னம்பிக்கை உன்னிடம் இருக்கும் வரை யாராலும் உன்னை அசைக்க முடியாது.

சொல்லுடாமா! இப்பொழுது நீ பிரச்சனையாக நினைப்பது எது?" என்றார் அவளை ஆழ்ந்து நோக்கியபடி.

பதில் பேசாமல் கண்கள் கலங்க தலை குனிந்தாள் மதுரவல்லி

"ம்ஹூம். நீ தலை நிமிர்ந்தால்தான் உன் வாழ்க்கையும் நிமிரும். உன் மௌனத்தை உடைத்து எறிந்து பதில் பேசு" என்றார் நாச்சியார்.

'அது... நம் வீட்டில் நான் மட்டும் தானே கருப்பு" என்று தட்டுத் தடுமாறி உரைத்தாள் மதுரவல்லி சுய பச்சாதாப உணர்ச்சியுடன்.

" சிறு குழந்தைகள், ஏன் சில பெரியவர்கள் கூட இருட்டில் நுழைய பயப்படுவார்கள் உனக்கு தெரியுமா? " என்றார் நாச்சியார்.

"ம்..." தலையசைத்து ஆமாம் என்றாள் மதுரவல்லி.

" அவர்கள் ஏன் இருளுக்கு பயப்படுகிறார்கள் என்று உனக்குத் தெரியுமா? "

"ம்ஹூம்..."

" இருள் என்பது கருப்பு நிறத்தின் ஆழமான வடிவம்.

ஒளிரும் பல வண்ணங்களை விட, ஒளி இல்லாத கருப்பு நிறம் மிகவும் மர்மமான நிறமாகும், இது பல இரகசியத்தைக் உள்ளடக்கியது. மற்றவர்களின் கண்களில் இருந்து நம் பலவீனங்களை, உணர்ச்சிகளை மறைக்கிறது.

அனைத்து நிறத்தையும் உறிஞ்சி, உள்ளடக்கிய சக்தியை பிரதிபலிக்கும்.

கருப்பு நிறம் வெளிப்புற அழுத்தத்திலிருந்தும் நம்மை காப்பாற்றும். நமக்கு பாதுகாப்பும் தரும். இதுவே நம்முடைய தன்னம்பிக்கையையும் சுதந்திரத்தையும் அதிகரிக்க உதவுகிறது.

வேறு எந்த நிறத்திற்கும் இல்லாத இத்தனை தகுதிகள் உடையதுதான் இந்த கருப்பு நிறம். இதன் மூலம் உன் ஆளுமைத் திறனை வளர்த்து யாரும் எளிதில் அணுக முடியாத அளவு நீ உயர வேண்டும்.
இப்படிப்பட்ட ஆழ்ந்த, அமைதியான, அழுத்தமான உன் நிறத்தையா நீ வெறுக்கிறாய்?" என்றார் நாச்சியார்.

கண்களை அகல விரித்த மதுரவல்லி, "ஓ... கருப்பு நிறத்திற்கு இவ்வளவு ஆற்றலா அம்மா? நீங்கள் சொல்வதைக் கேட்கும் போது, என் உடைந்த உள்ளம் உறுதியாய் எழுந்து நிற்கிறது.

இனி எந்தன் நிறத்திற்கு தகுந்தார் போல், என் உணர்வுகளையும் யாரும் அறிய விடமாட்டேன். என் எண்ணம். என் வாழ்க்கை" என்று மகிழ்ந்து சிரித்தாள் மதுரவல்லி.


தன் அன்னையின் போதனையில், தன் நிறம் தான் தனக்கு ஆளுமை, பாதுகாப்பு, தைரியம் என்று நேர்மறையாய் சிந்தித்து செயல்பட ஆரம்பித்தாள் மதுரவல்லி.

அதன் பின் அவளை எவ்வளவு கேலி செய்தாலும், முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் கடந்து விடுவாள். அவளின் மாற்றத்தில், அவளின் நிறத்தை பற்றிய பேச்சுக்கள் படிப்படியாக குறைய ஆரம்பித்தன. ஓடுபவனைத் தானே விதி துரத்தும். எதிர்த்து நிற்பவனிடம் மண்டியிட்டுத் தானே நிற்கும்.

கொத்தித் தின்னும் வல்லூறுகளிடமிருந்து அந்தத் தாய் பறவை தன் சேய்பறவையை காத்தது.

கருப்பு நிறத்தின் ஆளுமையில் மயங்கிய மதுரவல்லிக்கு மற்ற வண்ணங்களின் மேல் பிடித்தம் இல்லாமல் போனது.

எத்தனை நிறங்கள் இருந்தாலும் அவளின் முதல் தேர்வு கருமை நிறமாக இருந்தது.

சிறு வயதில் மனதில் பதிந்த வார்த்தைகள் விருட்சமாய் வேரூன்ற, அவளின் எண்ணங்களில் மீண்டும் அடுத்த அடி எப்படி எடுத்து வைப்பது என்று தெரியாமல் சற்றே கலங்கினார் நாச்சியார்.

சேதுபதியோ, " அழகி! காற்றுக்கு திசைகள் கிடையாது. நம் மதுராவின் எண்ணங்கள் இப்படித்தான் செல்ல வேண்டும் என்று நம்மால் வரையறுக்க முடியாது.

நீ திசை திருப்பிய அவளின் எண்ணங்கள் இப்பொழுது மாற்றுப்பாதையில் செல்கின்றன. மீண்டும் பாதையை மாற்ற அதிரடி முயற்சி செய்யாதே. அது ஆபத்தாய் முடியும்.

காட்டு வெள்ளத்தோடு எதிர்நீச்சல் போடுவதை விட அதன் போக்கிலே நீந்தித்தான் கரை சேர முடியும்" என்று தன் மனைவிக்கு ஆறுதல் சொன்னவர், மகளின் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டி, " மதுரா கார்மெண்ட்ஸ்" என்ற ஆடை நிறுவனத்தை நிறுவி, மகளின் எண்ணங்களை அவள் அறியாமலேயே தூண்டி, ஆடைகளின் வண்ணங்களாய் நிரப்பினார்.

ஒருமுறை மதுரா கார்மெண்ட்ஸின் உற்பத்தி பொருட்களை வாங்குவதற்காக பயணம் வந்த இடத்தில் தனது சிறுவயது நண்பர் சச்சிதானந்தத்தை சந்தித்தார் சேதுபதி.

இருவரும் தங்கள் குடும்பங்களை பற்றி பேசும்போது, சச்சிதானந்தம் தனது மூத்த மகன் சிவானந்ததிற்கு வரன் தேடுவதாகச் சொன்னார்.

சேதுபதி, தனது மகள் மதுரவல்லியை பற்றி லேசாக கோடிட்டுக் காட்டினார்.

"இதுவெல்லாம் ஒரு பிரச்சனையா? நீ சரி என்று சொன்னால், எனது மகன் சிவாவிற்கு, உனது மகள் மதுராவை திருமணம் செய்து முடித்து நண்பர்களாகிய நாம் சம்மந்திகளாக மாறலாம். உனக்கு வசதி எப்படி?" என்று தன் முடிவை அதிரடியாய் வெளிப்படுத்தினார் சச்சிதானந்தம்.

சேதுபதியின் மகிழ்ச்சியோ வார்த்தைகளால் வடிக்க முடியாத அளவிற்கு பொங்கி பெருகிக் கொண்டிருந்தது. சந்தோஷத்தில் அடைத்துப்போன தன் குரலை சரி செய்து கொண்டு, " நீ உன் மகன் சிவாவிடம் சம்மதம் கேட்க வேண்டாமா?" என்றார் சற்றே தயக்கமாக.

" எனது மகன் தன்னுடைய திருமணத்தின் முடிவை என் வசம் ஒப்படைத்துள்ளான். என் மேல் அவனுக்கு அளவு கடந்த நம்பிக்கை.
பாரம்பரியமிக்க நம் இரு குடும்பமும் இந்தத் திருமணம் மூலம் இணைந்தால், வரும் தலைமுறைகளின் வாழ்வும் சிறக்கும்.

என் மகன் எந்த ஒரு முடிவெடுத்தாலும் அதிலிருந்து பின் வாங்க மாட்டான். நீ சொல்லும் சில்லறைக் காரணங்கள் எல்லாம் எனக்கு தேவையற்றது. அதனால் உறுதியாகச் சொல்கிறேன் உன் மகள் தான் என் வீட்டின் மூத்த மருமகள்" என்று வாக்கு தந்தார் சச்சிதானந்தம்.

இரு வீட்டினருக்கும் இது முதல் திருமணம் என்பதால் முதற்கட்ட வேலைகள் எல்லாம் பரபரப்பாக நடந்தது.

பெண் பார்க்கும் வைபவத்தின் போது, எவ்வித அரிதாரமும் இல்லாமல் ஆளுமையும் கம்பீரமுமாய் அமர்ந்திருந்த மதுரவல்லியை பார்த்ததும் தன் தந்தையை பார்த்தார் சிவானந்தம்.

மலர்ந்த தன் தந்தையின் முகத்தைக் கண்டதும், அளவான புன்னகையுடன் சரி என்று சொன்னார் சிவானந்தம்.

தன் மகனின் நிறத்திற்கும், மதுரவல்லிக்கும் பொருத்தம் இல்லையே என்று நினைத்த பத்மாவதி தன் கணவரிடம், "பொண்ணு அழகு தான் இருந்தாலும் நம்ம சிவாவுக்கு... " என்று இழுத்தவரின் வார்த்தைகள் சச்சிதானந்தத்தின் பார்வையில் அடங்கிப் போனது.

சொந்த பந்தங்களுக்கு இடையே எழுந்த சிறு சிறு சலசலப்பில், பத்மாவதியின் மனதில் சிறு நெருடல் எழுந்தது.

சச்சிதானந்தத்தின் வீட்டு கடைக்குட்டி நிறைமதி, அனைவரின் முக மாறுதல்களையும் பார்த்துக் கொண்டு மெல்ல தன் வருங்கால அண்ணி மதுரவல்லியிடம் வந்து, " அண்ணி நீங்க மேக்கப் போட்டா இன்னும் சூப்பரா அழகாயிடுவீங்க. நான் உங்களுக்கு போட்டு விடட்டுமா" என்று நிலைமையை சகஜமாக்க முயன்றாள்.

" எனது நிறம். எனது தனித்தன்மை. அதனை எப்பொழுதும் மாற்றிக் கொள்ள நான் விரும்பவில்லை" என்று ஒரே வார்த்தையில் மதுரா முடித்து விட மனம் சுணங்கியது நிறைமதிக்கு.

மதுரவல்லியை கவலை கொள்ளச் செய்த அவளது நிறம், அவளால் ஏற்படுத்தப்பட்ட மன உறுதியில் அவள் மனதில் கர்வமாய் எழுந்து நின்றது.

திருமணத்திற்கு முதல் நாள் நிச்சயதார்த்தம் என அனைத்து நிகழ்வுகளுக்கும் தேதி குறிக்கப்பட்டு அவர்களின் திருமணம் உறுதி செய்யப்பட்டது.

திருமண நாள் நெருங்க, நெருங்க, சேதுபதியின் வீட்டில் ஊருக்கே விருந்து வைக்கப்பட்டது தினந்தோறும்.

சேதுபதி மற்றும் நாச்சியாரின் சொந்தங்கள் எல்லாம் அவர்கள் வீட்டில் ஒரு வாரத்திற்கு முன்னரே கூடினர்.

அழகு நாச்சியாரின் தங்கை அன்பு நாச்சியாரின் மகள் ரேணுகாவும் தன் தமக்கையின் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்னரே வந்தார்.

அன்பு நாச்சியாரின் கணவர் வேணுகோபால் குடித்து குடித்தே தன் சொத்துக்கள் அனைத்தையும் இழந்துவிட, அன்புவின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் நேரடியாக செய்து வந்தார் அழகி.


பெயரில் அன்பு இருந்தாலும் அன்பு நாச்சியாரின் மனதில் என்றும் வன்மமே குடியிருந்தது. தன் உடன் பிறந்தவள் தன்னை விட உயரத்தில் இருக்க, அவள் கையை எதிர்பார்த்து வாழும் தன் அவல நிலையை, தன் மகள் ரேணுகாவிற்கு திரித்துக் கூறியிருந்தார்.

வேணுகோபால் வாங்கிய அதிக கடன் தொகைக்காக ஏலம் விடப்பட்டிருந்த அவர் சொத்துக்களை சேதுபதி வாங்கி இருந்தார்.

அன்பு நாச்சியார் தன் மகள் ரேணுகாவிடம், "தங்கள் சொத்துக்களை எல்லாம் அபகரித்து விட்டு இப்பொழுது ஏதோ பிச்சை போடுவது போல் நாடகம் ஆடுகிறார்கள்" என்று அழகு நாச்சியாரை பற்றி அவதூறாகப் பேசினார்.

தங்கள் குடும்பம் தரம் இறங்கக் காரணம் அழகு நாச்சியாரின் குடும்பம் தான் என்ற முடிவிற்கு வந்தார் ரேணுகா.

அழகு நாச்சியாரின் குடும்பத்தை அழிக்க நேரம் காலம் பார்த்துக் கொண்டிருந்தார் ரேணுகா.

நிச்சயதார்த்த விழாவில், அசர அடிக்கும் அழகில் மணமகனாய் சிவானந்தம் வருகை புரிய, உள்ளமும் உடலும் பற்றி எரிய ஆரம்பித்தது ரேணுகாவிற்கு.

'கரிக்கட்டைக்கு சந்தனக் கட்டை ஜோடியா? எங்கள் குடும்பத்திற்கு அழிவு! உங்கள் குடும்பத்திற்கு ஆனந்தமா?

நேரடியாக எதிர்த்தால் காரியம் நடக்காது. சிரித்துக் கொண்டே சீரழிக்கிறேன் உங்கள் குடும்பத்தை!" என்று தன் மனதில் தோன்றிய வன்மத்தை வெளியேற்ற ஆரம்பித்தாள் ரேணுகா.

நிச்சயப்பட்டை கைகளில் வாங்கிக் கொண்ட மதுரவல்லி,மணமகள் அறைக்குள் நுழைந்ததும் தானும் நுழைந்து கதவை சாத்தினாள் ரேணுகா.

"ஹே, ரேணு! இங்க என்ன பண்ற? எனக்கு உதவி செய்யவா வந்த? நான் சமாளித்துக் கொள்வேன்" என்றாள் மதுரா இயல்பாக.

" அதனால் என்ன என் அக்காவிற்கு நான் செய்யாமல் வேறு யார் செய்வா? " என்று கூறிக் கொண்டே நிச்சயப்பட்டை கட்டுவதற்கு உதவி செய்ய ஆரம்பித்தாள்.

புடவையை மடிப்பு எடுத்து கட்டி முடித்ததும் ஆள் உயர நிலைக் கண்ணாடியின் முன் அமர வைத்தாள் மதுரவல்லியை.

" நீ எவ்வளவு அழகு!" என்று கண்ணாடியில் மதுரவல்லியை பார்த்துக் கொண்டே ரேணுகா கூறியதும் மென்மையாக சிரித்தாள் மதுரவல்லி.

பச்சை நிறப்பட்டில் பாந்தமாக இருந்தாள் மதுரவல்லி.

" நிச்சயப் பட்டின் நிறம் உன்னுடைய தேர்வா அக்கா? " என்றாள் ரேணுகா.

"இல்லையே! நான் தேர்வு செய்திருந்தால் எப்பொழுதும் எனக்கு பிடித்த கருமை நிறத்தை தான் தேர்வு செய்திருப்பேன். இது உன்னுடைய அத்தானின் தேர்வு " என்றாள் மதுரவல்லி நாணத்துடன்.

"அக்கா... அக்கா...."

"சொல்லு ரேணு!"

"நீ இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய். அங்கே அத்தானோ உம்முனு இருக்கிறார். அவருக்கு இந்த திருமணத்தில் விருப்பம் தானே? " படம் எடுத்த நாகப் பாம்பு தன் விஷத்தை கக்க ஆரம்பித்தது.


கர்வம் ஆளும்...

 
Last edited:
Status
Not open for further replies.
Top