"காதலின் பிரிவு தரும் துயர்விடக் - கொடியது நீண்ட தனிமை"
"ஓஹோ... உன் சந்தேகத்தை சரி பார்த்து விடலாமா?" என்றாள் மதுரவல்லி கண்ணாடியைப் பார்த்து தன் உடையை சரி செய்தவாரே.
" அது எப்படி முடியும்? " என்றாள் ரேணுகா.
தன் கைப்பையில் இருந்து பேப்பரும் பேனாவும் எடுத்து, நிதானமாக வார்த்தைகளை மனதில் கோர்த்து, பின் காகிதத்தை மடித்து ரேணுகாவிடம் தந்தாள் மதுரவல்லி.
" ரேணு இதனை உன் அத்தானிடம் கொண்டு போய் கொடு. அதன் பின் நீ கேட்ட கேள்விக்கு விடை தெரியும் " என்றாள் மதுரா.
"ஹான்..." என்று திருத்திருத்தாள் ரேணுகா.
" நீ கடிதத்தை கையில் கொடுத்ததும் உன் அத்தானே என்னைத் தேடி வருவார் " என்றாள் மதுரா.
' பெரிய மகாராணி இவளுக்கு நான் தூது போக வேண்டுமா? காக்காவை தேடி கொக்கு வருமா?' மனதிற்குள் ஆதங்கப்பட்டு விட்டு வெளியில் சிரித்த முகத்துடன் கடிதத்தைக் கொண்டு வந்து சிவாவிடம் சேர்த்தாள் ரேணு.
ரேணுகாவிடமிருந்து கடிதத்தை பெற்றுக் கொண்டதும் யோசனையுடன் புருவங்கள் சுருங்கியது சிவானந்தத்திற்கு.
" எங்க அக்கா மதுரவல்லி உங்களிடம் கொடுக்கச் சொன்னாள். நான் கொடுக்க மாட்டேன் என்று தான் சொன்னேன். அவள் தான் வம்பு செய்து என்னை உங்களிடம் தள்ளி விட்டாள். என்னை தப்பாக எண்ணாதீர்கள் அத்தான்!" என்றாள் ரேணு.
சிவா கடிதத்தை பிரித்ததும், அது வெற்றுத்தாளாய் இருக்க. தன் தாடையைத் தடவி யோசித்த சிவா, பின் நிமிர்ந்து எழுந்து, மணமகள் அறையை நோக்கி அடி எடுத்து வைத்தார்.
சுற்றி இருந்த உறவுக் கூட்டம் அனைத்தும் ஆச்சரியப்பட, ரேணுகாவின் விழிகள் தெறித்துப் பார்க்க, குழப்பத்தில் இருந்த பத்மாவதியின் முகம் தெளிந்து சிரிக்க, "அண்ணா..." என்று நிறைமதி ஆர்ப்பரிக்க மணமகள் அறையை நெருங்கினார் சிவா.
அறைக் கதவை லேசாக தட்டியதும்,
" உள்ளே வரலாம் என்ற கம்பீரமான மதுரவல்லியின் குரலில் கவரப்பட்டு உதட்டில் சிறு புன்னகையுடன் அறைக்குள் நுழைந்தார்.
நிலைக் கண்ணாடியின் அருகில் கைகளைக் கட்டிக் கொண்டு மதுரவல்லி நின்றபடி எதிரே இருந்த இருக்கையில் அமரும்படி சைகை செய்தாள்.
இருக்கையில் அமர்ந்த சிவாவிற்கு எதிரே இருந்த கண்ணாடியில் தன் உருவமும், அருகில் மதுரவல்லியின் உருவமும் நிற்க கண்கள் அவரை மீறி அளவெடுக்க ஆரம்பித்தது.
அந்த நேர் கொண்ட பார்வையும், கம்பீரம் பேசும் உடல் மொழியும் பிரமிக்க வைத்தது சிவாவை. ஒரு நிமிடத்தில் தான் அவளுடைய ஆளுமைக்கு பொருத்தமாக இல்லையோ என்று யோசிக்க ஆரம்பித்தார்.
வண்ணங்களை குழைத்து, சேர்த்து, கலைத்து வரையும் ஓவியம் ஒரு அழகு என்றால், தேவையற்றதை வெட்டி ஒதுக்கி செதுக்கி நிற்கும் சிலையோ பேரழகு.
சிற்பம் போல் நின்ற மதுரவல்லியை, அன்று பார்க்கும் போது தந்தைக்காக சரி என்று மட்டுமே எண்ணிய சிவா, தன்னை நேராய் பார்த்து உள்ளுக்குள் உள்வாங்கும் மதுரவல்லியிடம் சரணடைந்தார்.
மனதில் தோன்றிய மகிழ்வுடன், "ம்க்கும்..." என்று தொண்டையை செறுமினார்.
" நான் தந்த கடிதத்திற்கு பதில் சொல்லவில்லையே?" என்றாள் மதுரவல்லி.
" உன்னை பார்க்க வரச் செய்வதற்காகத் தானே வெற்றுக் கடிதம். பின் அதற்கு பதில் கேட்டால்? " என்றார் சிவா.
" இந்தத் திருமணத்தில் உங்களுக்கு சம்மதமா? என்று நேரடியாகவே வந்து கேட்டிருப்பேன். நிச்சயம் இந்தக் கேள்வியை அனைவர் முன்பும் நான் கேட்டிருந்தால், என்னை திமிர் பிடித்தவளாக அடங்காதவளாகவே அடையாளப்படுத்தி இருக்கும்.
பெண்களுக்குரிய இலக்கணத்தை நான் மீறி விட்டதாக என் மீது முத்திரை குத்தப்பட்டிருக்கும். ஆனால் உங்கள் முகம் வாடி இருந்ததாக நான் கேள்விப்பட்டதும், இனியும் தாமதித்தால் இருவரின் வாழ்க்கையும் அர்த்தமற்றதாக மாறிவிடுமே என்றுதான் உங்களை பேச அழைத்தேன். உங்களுக்கு இதில் வருத்தம் இருந்தாலும், நம் இருவருக்கும் திருத்தம் செய்ய ஒரு வாய்ப்பு தானே" என்றாள் மதுரா சிவாவை நேராகப் பார்த்து.
" வருத்தம் தான் எனக்கு... " என்றார் சிவா குரலை தணித்து.
"ஓ..." என்றாள் மதுரா முகத்தில் எந்த மாறுதலும் இன்றி.
" உன்னுடைய அதிரடி பேச்சை பெண் பார்க்கும் நாளன்றே கேட்காமல் போய் விட்டேனே என்ற வருத்தம் தான் எனக்கு " என்றார் சிவா மெலிதாக சிரித்து.
" அதுதான் இனி காலம் முழுவதும் கேட்கப் போகிறீர்களே " என்றாள் மதுரா.
" உன் பெற்றோர்கள் சரியாகத்தான் உனக்கு பெயர் வைத்திருக்கிறார்கள். மதுரமாய் பேசும் உனக்கு மதுரவல்லி என்று "
செதுக்கிய சிற்பம் ஒன்று இதழ் திறந்து சிரிப்பது போல் சிரித்தாள் மதுரவல்லி.
" நான் அறைக்குள் நுழைந்து அதிக நேரம் கடந்துவிட்டது. இதில் உன் சிரிப்பு சத்தமும் கலந்துவிட்டதால் நம் திருமணம் களை கட்டப் போகிறது. நிச்சய மேடைக்கு செல்லலாமா? " என்று இருக்கையில் அமர்ந்தபடியே தன் வலக்கையை நீட்டினார் சிவா.
கண்ணாடியின் அருகில் இருந்த மதுரவல்லி கண்ணாடியில் தெரிந்த சிவாவின் கரத்தின் மீது தன் கரத்தை சேர்த்தார், கண்ணாடிக்குள் விழுந்த சிவாவின் பிம்பத்தை பார்த்தவாறு.
இப்பொழுது நகைப்பது சிவாவின் முறையாயிற்று.
இருவரின் நகை ஒலியையும், கதவின் வெளியில் இருந்து கேட்ட ரேணுகாவிற்கு பற்றிக் கொண்டு வந்தது. உம்முன்னு இருந்த சிவாவை ஜம்மென்று ஆக்கிவிட்டதில் எரிச்சல் உணர்வு வந்தது.
சிவாவின் கரத்தைப் பற்றிக் கொண்டு மேடை ஏறிய மதுரவல்லியின் முகம் அவ்வளவு ரசனைக்குரியதாக இருந்தது.
" கருப்பு கருப்புன்னு ஊரே தூற்றினாலும், நாச்சியார் தன் பிள்ளையை எப்படி வளர்த்திருக்கிறா? அம்மாடி! கருப்புதான் ஆனாலும் நல்ல களையாக இருக்கிறாள். மாப்பிள்ளையின் பால் நிறத்திற்கு இவளும் தேன் போல ஜொலிக்கிறா" என்ற உறவுகளின் குரல் பின்னிருந்து கேட்டதும் பத்மாவதியின் உள்ளமும் குளிர்ந்தது.
"ஏலே! நம்ம வீட்டுல எல்லாம் உர மூட்டையை அடுக்கி வைத்திருப்போம். சச்சிதானந்தத்தின் வீட்டில் பண மூட்டையை அடுக்கி வைத்திருப்பார்கள்! அவ்வளவு பணம்! அந்த வீட்டுக்கு நம்ம மதுரவல்லி மூத்த மருமகளா போகப் போறா. அந்தப் பிள்ளையை கரிக் கட்டைன்னு சொன்ன வாயெல்லாம் இனி அதிர்ஷ்ட தேவதையின்னு சொல்லப் போகுது" என்று பேசியவர்களின் பின்னால் இருந்த ரேணுகாவிற்கு, பணம் என்றதும் பேய் பிடித்து ஆட்ட ஆரம்பித்தது.
மதுரவல்லியை இரவோடு இரவாக கொலை செய்து விட்டு, அந்த இடத்தில் தான் சென்று அமர்ந்து கொள்ளலாமா என்ற வெறியே பிறந்தது.
ஜாடையாக மதுரவல்லியின் நிறத்தை சுட்டிக்காட்டி மட்டம் தட்டி பேசிய இடத்தில் எல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் கடந்து சென்ற மதுராவின் புன்னகையை அழித்துவிடும் ஆவேசம் வந்தது ரேணுகாவிற்கு.
திருமணம் முடிந்து இரவில் நாச்சியாரின் வீட்டில் மதுரவல்லியை அலங்காரம் செய்து, கூடியிருந்தவர்கள் ஆயிரம் அறிவுரைகள் சொன்னார்கள்.
'கணவனோடு வாழப்போகும் ஒரு பெண்ணுக்கு இத்தனை அறிவுரைகள் சொல்லும் உலகம், மனைவியோடு வாழப்போகும் ஒரு ஆணுக்கு இத்தனை அறிவுரைகள் சொல்லுமா?' மனம் சுமந்த கேள்வியுடன் சிவா இருந்த மாடி அறையை நோக்கி நகர்ந்தாள் மதுரா.
மாடியில் இருக்கும் கடைசி அறைக்கு செல்லும் பாதையில், இருளில் ஒரு பெண்ணின் விசும்பல் குரல் கேட்கவே மதுராவின் நடை தடைப்பட்டது.
சத்தம் வந்த அறையின் கதவை திறந்து எட்டிப் பார்த்தாள் மதுரா. தரையில் அமர்ந்து அழுது கொண்டிருந்த ரேணுகாவை பார்த்ததும் திடுக்கிட்டாள்.
"ஏய்! ரேணு ஏன் அழுகிறாய்?"
"பச்... ஒன்றுமில்லை " என்று கூறிவிட்டு கண்களை வேகமாக துடைத்துக் கொண்டாள் ரேணு.
" இப்பொழுது உண்மையை கூறப்போகிறாயா இல்லை, கீழே இருக்கும் அனைவரையும் மேலே வரச் சொல்லட்டுமா? " என்று மிரட்டினாள் மதுரா.
"அக்கா... என் அழுகையே உனக்காகத்தான் " என்று தேம்பித் தேம்பி அழுதாள்.
" நீ அழுகும் நிலைக்கு எனக்கு என்ன வந்தது? என் வாழ்வின் நகர்வுகள் என்றும் என் விருப்பமே!" என்றாள் மதுரா.
" புரியாமல் பேசாதே அக்கா. பெரியம்மா உன்னை நன்றாக வளர்த்தார்கள். உன் நிறத்தை பற்றி யாரையும் பேச விடாமல் தடுத்தார்கள்.
ஆனால் இந்த கல்யாண வீட்டில் எல்லோரும் என்ன பேசுகிறார்கள் தெரியுமா? உன் கண்களைத் திறந்து நன்றாக சுற்றிப் பார்த்து இருந்தால் தெரிந்திருக்குமாம் . நம் உறவு முறைகளிலேயே நீ மட்டும் தான் கருப்பாம். அத்தானுக்கு உன்னை விட நான் தான் பொருத்தமாக இருப்பேனாம்.
அந்தப் பேச்சில், என் மனது எவ்வளவு காயப்பட்டு இருக்கிறது என்று உனக்கு புரியுமா?" என்று கோபமாக கேட்டாள் ரேணு.
" புரிந்து கொள்ள வேண்டிய என் கணவர் புரிந்து கொண்டார். மற்றவர்களைப் பற்றி எனக்கு கவலை இல்லை "
" உலகம் உன்னை பற்றி என்ன பேசுகிறது என்று தெரியாமல், உனக்கென ஒரு உலகத்தை உருவாக்கிக் கொள்ளும் நீ ஒரு பைத்தியம் அக்கா"
" நீ சொல்ல வந்ததை மட்டும் சொல் ரேணு "
" அது வந்து உன் புகுந்த வீட்டில் உன் மாமியார், நாத்தனார், உன் புகுந்த வீட்டு சொந்த பந்தங்கள் என்று யாருக்கும் உன்னை பிடிக்கவில்லை. அத்தானின் வாழ்வை நாசம் செய்து விட்டார்கள் என்று, சச்சு மாமாவை திட்டிக் கொண்டிருந்தார்கள்.
உன் முன்னே சிரித்து பேசும் அனைவரும் உன் பின்னே உன்னை பழித்து பேசுகிறார்கள். என் அக்காவை பற்றி பேசாதீர்கள் என்று அனைவரையும் கேள்வி கேட்க புறப்படுவதற்குள் என் அம்மா, நீயே உன் அக்காவின் வாழ்க்கையை நாசமாக்கி விடாதே என்று என்னை அடித்து விட்டார்கள். உனக்காக அடி வாங்கிக் கொண்டு இந்த இருளில் அந்த தெய்வத்திடம் உனக்காக வேண்டிக் கொண்டிருக்கிறேன் " என்று தன் நாடகத்தை சிறப்பாக அடங்கேற்றினாள் ரேணு.
" நீ சிறு பெண். இதற்கெல்லாம் கவலைப்படாதே. என் மன உறுதியை யாராலும் தகர்க்க முடியாது. உன் சிவா அத்தான் என்னை நன்றாக பார்த்துக் கொள்வார். நீ கீழே போ! உன்னைத் தேடுவார்கள்" என்று கூறி விட்டு நகர்ந்தாள் மதுரா.
" அடி மேல் அடி விழ உன் உறுதியும் ஒரு நாள் தூள் தூளாய் உடையும். அந்த நாளில் என் வெற்றிக்காய் காத்திருப்பேன்" வன்மம் தலை தூக்க மதுராவை பார்த்துக் கொண்டே கீழிறங்கினாள் ரேணுகா.
இரவின் தனிமையில் இருவரும் பேசிக் கொள்ளும் போது, " நம் திருமணத்தில் உங்கள் வீட்டில் அனைவருக்கும் விருப்பமா? " என்று தன் முதற் கேள்வியை முன் வைத்தாள் மதுரா.
" நீ என்ன பைத்தியமா? வீட்டில் அனைவரும் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம் இது. அவர்களின் விருப்பம் இல்லாமலா நடந்திருக்கும்? "
" நான் உங்களுக்கு பொருத்தம் இல்லை என்று அவர்கள் நினைப்பதாக... "
" முதலில் உன்னை பார்க்கும் போது, என் தந்தையின் விருப்பத்திற்காகவே சம்மதித்தேன். உன்னிடம் பேசிய பிறகே எனக்கு தெளிவானது. எனக்கு பிடித்த உன் ஆளுமை கம்பீரம் விரைவில் என் குடும்பத்திற்கும் பிடித்துப் போகும். குறைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அனைவருக்கும் உடனே வந்து விடுவதில்லை மது" என்றார் சிவா.
குறை என்றதும் மதுரவல்லியின் கம்பீரம் முதன் முறையாக அடி வாங்கியது. அவளின் நிமிர்ந்த தலை யோசனையுடன் தலைகுனிந்தது.
"என்ன வெட்கமா?"
மனதைப் புரட்டிய வார்த்தைகள் தந்த கோபத்துடன் வார்த்தைகளை அவள் வீசுவதற்குள், அறையின் விளக்குகள் அணைக்கப்பட்டு அவளும் அணைக்கப்பட்டாள் அவசரமாக.
தன் வாழ்வின் தொடக்கமே கசப்பாக அமைய, மீண்டும் இருள் உலகிற்குள் தனித்து இழுத்து செல்லப்பட்டாள் மதுரா.
குளியலறைக்குள் இருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டவள், " உன் நிறம். உன் அடையாளம். நீ நீயாக இரு மதுரவல்லி!" என்று தனக்குத்தானே பேச ஆரம்பித்தாள்.
கருப்புப் பட்டியில் வெள்ளி ஜரிகைகள் நெய்த புடவையை ஆசையுடன் எடுத்து கட்டிக்கொண்டு கண்ணாடியில் தன்னை சரி பார்த்தாள்.
அவளை பின்னிருந்து அணைத்தபடி, " இந்த நிறம் உனக்கு எடுப்பாக இல்லை. நீல நிறத்தை தேர்வு செய். வானத்தைப் பார்க்கும்போது நமக்கு வாழ வேண்டும் என்ற நம்பிக்கை தோன்றும். அது அந்த நீல நிறம் தரும் நம்பிக்கை. அதனால் நீல நிறம் உனக்கு பொருத்தமாக இருக்கும்" என்று அவள் கன்னத்தை தட்டி விட்டு குளியலறைக்குள் புகுந்தார் சிவா.
உயர்த்திப் பேசுவதைப் போல் மட்டும் தட்டும் வார்த்தைகள். மனம் வலித்தது மதுரவல்லிக்கு. தாயின் சிறகுகளுக்குள் ஒளிந்து கொள்ள இடம் தேடி தவித்தது அந்த சேய்பறவை.
தன் வாழ்வை மெதுவாக சரி செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன், முதன் முறையாக தன் விருப்பத்தை தொலைத்து, அணிந்திருந்த கருப்பு புடவையை தூர குப்பைத் தொட்டியில் வீசினாள். சிவா சொன்ன நீல நிற புடவையை அணிந்து கொண்டாள்.
அழகிய சிற்பத்தின் மேல், போலி வர்ணம் பூசப்பட்டது. அந்த வர்ணங்கள் அந்தச் சிலையின் கர்வத்தை மறைத்தது.கரைக்க ஆரம்பித்தது.
புகுந்த வீட்டில் அனைவரும் இயல்பாக இருப்பது போல் இருந்தாலும், தன்னைப் பிடிக்காமல் சம்மதம் சொன்னவர்கள் என்ற மன உறுத்தலில் அவர்களோடு இயல்பாக பேச முடியாமல் தவித்தாள் மதுரா.
நாட்களின் போக்கில், ருத்ர தீரனை பெற்றெடுத்தாள் மதுரவல்லி. அரை மயக்கத்தில் கண்கள் விழிக்காமல் படுக்கையில் படுத்திருக்க, குழந்தையை தன் கையில் வாங்கிய பத்மாவதி, "என் பேரன் அப்படியே என் மகனைப் போல இருக்கிறான்" என்று குதூகளித்தார்.
"ஆமாம் அம்மா! குட்டி பையன் என் அண்ணனைப் போலவே இருக்கிறான் " என்றாள் நிறைமதி.
இயல்பான அவர்களின் பேச்சு, மதுரவல்லியின் இதயத்தை ஈட்டியால் குத்திக் கிழித்தது. "ஒருவேளை குழந்தை தன்னிறத்தைக் கொண்டு பிறந்து இருந்தால் ஒதுக்கி வைத்திருப்பார்களோ?" என்ற அச்சம் அவள் மனதில் எழுந்தது. அன்று முதல் அவர்களின் இயல்பான பேச்சுக்கள் எல்லாம் தவறான கோணத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது மதுரவல்லியால்.
அவர்களின் முதலாம் ஆண்டு திருமண நாளில், இரண்டு மாத கைக் குழந்தையாய் தீரன் இருக்க, அவர்களின் திருமண நாள் கொண்டாட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் சச்சிதானந்தம் குடும்பத்தினர்.
அன்பு நாச்சியாருடன், ரேணுகாவும் முதல்முறையாக சச்சிதானந்தத்தின் வீட்டிற்குள் நுழைய அவர்கள் வீட்டின் செல்வச் செழுமையில் வாயடைத்து நின்றனர்.
தீரனை கையில் வைத்துக்கொண்டு மதுரவல்லி நிற்க அவள் அருகில், சிவா நின்றிருந்தார்.
புகைப்படம் எடுப்பதற்கு முன் சிவாவின் காதருகில் வந்த ரேணுகா, " அத்தான்! அக்கா உங்கள் பையனை வைத்திருப்பது பிளாக் அண்ட் ஒயிட் படம் போலிருக்கிறது. ஒரு கலர் படத்திற்குள் ஒரு பிளாக் அண்ட் வொயிட் படமா? என்று அதோ அந்தக் கூட்டம் கேலி பேசுகிறது. அக்காவிடம் சொன்னால் ஏதோ என் நான் பழி சொல்வதாக நினைப்பாள். சொல்வதை சொல்லி விட்டேன் பிறகு உங்கள் பிரியம்" என்று சாத்தான் வேதம் ஓதிவிட்டு நகர்ந்தது.
சிரித்துக்கொண்டே சிவா, தீரனை தன் கையில் வாங்கிக் கொண்டார். கையின் வெறுமை மனதிலும் பிரதிபலிக்க, ஒளி இழந்து நின்றாள் மதுரா.
புகைப்படத்திற்கு அக்காவின் சேலையை சரி செய்வது போல் அந்தப் பக்கம் வந்தவள், அவள் காதில், " நானும் என் மகனும் ஒரே கலர் என்று அத்தான் குழந்தையை வாங்கிக் கொண்டாரோ? உன்னை தனியாக நிற்க வைத்து விட்டாரே! நீ சரியான ஏமாளி அக்கா. நான் வேண்டுமானால் உங்கள் இருவர் இடையே நிற்க வா?" என்று கேலி பேசிவிட்டு நகர்ந்தாள் ரேணுகா.
தன்னுடைய அங்கீகாரம் பறிக்கப்படும் சுயபச்சாதாபம் தந்த கோபத்தில், சிவாவின் கையில் இருந்து தீரனை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்தாள் மதுரா.
அனைவரும் அதிர்ச்சியாய் பார்க்க ரேணுகா மட்டும் ஆனந்தமாய் பார்த்தாள்.
"கண்ணிமை மூடிய போதும் கண்ணுக்குள் - இருந்து உறுத்தும் காதல்"
கூட்டத்தினர் சலசலக்க, "குழந்தைக்கு வேறு உடை அணிவித்து வருகிறோம்" என்று சமாளித்துவிட்டு சிவா தங்கள் அறையை நோக்கி நகர்ந்தார்.
தங்கள் அறைக்குள் நுழைந்ததும் கதவை பூட்டிவிட்டு, " மதுரவல்லி! அனைவரும் இருக்கும் சபையில் ஏன் இப்படி நடந்து கொண்டாய்?" என்றார் கோபத்துடன்.
தன் குழந்தையை தோளில் போட்டு இறுக்க அணைத்துக் கொண்டு, எதுவும் பேசாமல் முறைத்தபடி நின்றிருந்தாள் மதுரா.
" உன்னுடைய அநாகரிகமான செயலுக்கு நீ விளக்கம் தராவிட்டால் பல அனர்த்தங்களை சந்திக்க வேண்டி வரும்" குரல் உயர்ந்தது சிவாவிற்கு.
" அநாகரிகம்! உங்கள் அகராதியில் எது அநாகரிகம்? மதுரவல்லியாய், என்னை குறி பார்த்து தாக்கும் வார்த்தை ஆயுதங்களை எல்லாம் எளிதாக கடந்து வந்து விடுவேன்.
ஆனால் ஒரு தாயாக... என்னையும் எனது மகனையும் பிரிக்கும் செயல்களை, வார்த்தைகளை எல்லாம் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. அது உங்களுக்கு அநாகரிகமாக இருந்தால், அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை" ஆவேசமாக வந்தது மதுராவின் குரல்.
" உன் குழந்தையை யாராவது உன்னிடம் இருந்து பிரிப்பார்களா? ஏன் இப்படி பைத்தியம் போலவே யோசிக்கிறாய்? " எரிச்சல் மிகுந்தது சிவாவிற்கு.
" சபாஷ்! தனக்காக நியாயம் கேட்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைக்கும் பட்டம் தான். புகைப்படத்திற்கு என் குழந்தையை நான் சுமந்து இருக்கக் கூடாதா? பத்து மாதம் கருவறையில் சுமந்த எனக்கு அந்த உரிமை இல்லையா? என்னிடமிருந்து குழந்தையை ஏன் பறித்தீர்கள்? "
" குழந்தை தாயிடம் தான் இருக்க வேண்டும் இல்லையே. தந்தையிடமும் இருக்கலாமே!"
" நான் சுமந்திருக்கும் போது என்னிடம் இருந்து குழந்தையை வாங்கும் அவசரம் அந்த நொடியில் ஏன் வந்தது? "
"ஊப்... உன் கையில் இருக்கும் போது அவனின் நிறம் பளிச்சென்று தெரிந்தது. குழந்தைக்கு கண் பட்டுவிடக்கூடாது என்று தான் என் கையில் மாற்றிக் கொண்டேன். இது ஒரு குத்தமா?"
" இதோ உங்கள் மனதில் மறைந்திருந்த மாசுக்கள் எல்லாம் வெளியேறி வருகின்றன. இப்பொழுது உங்கள் பிரச்சனை என்ன? உங்கள் மகனின் அன்னை கருப்பாக இருப்பதா? இல்லை உங்கள் மனைவி கருப்பாக இருப்பதா?" கூர் தீட்டி வந்தது அவளின் வார்த்தைகள்.
" நிறத்தை விட நிலை மாறும் உன் குணமே இப்பொழுது என் பிரச்சனை? "
"ஓஹோ! நீங்கள் எல்லோரும் சரி. நான் மட்டும் தவறு. அப்படித்தானே?"
" புரிந்து கொண்டால் சரிதான் "
மனதில் தோன்றிய சக்தி எல்லாம் வடிய, " தீரா! இந்த அம்மா கருப்பாக இருந்தாலும் உனக்கு பிடிக்கும் தானே? சொல் தீரா!" என்று தன் கைகளில் இருந்த குழந்தையை உலுக்கினாள்.
பசியினாலும், களைப்பினாலும், புதிய சூழ்நிலையினாலும் வீறிட்டு அழ ஆரம்பித்தான் தீரன்.
" பைத்தியமே! பச்ச குழந்தையை என்ன செய்கிறாய்? கொடு" என்று மதுராவிடமிருந்து வலுக்கட்டாயமாக குழந்தையை பறித்துக் கொண்டார் சிவா.
"ஏய்! என் குழந்தையை என்னிடம் திருப்பிக் கொடுத்து விடு" தாய் புலியாய் சீற ஆரம்பித்தாள் மதுரா.
" மதுரா! உன்னிடம் வாக்குவாதம் செய்ய எனக்கு நேரமில்லை. கீழே உறவினர்கள் அனைவரும் கூடி இருக்கிறார்கள். குழந்தைக்கு உடை மாற்ற வேண்டும் என்று கூறிவிட்டு வந்துள்ளேன்.
எங்களோடு நீ வந்தாலும் சரி. இல்லை இந்த அறையில் அடைந்து கிடந்தாலும் சரி. அது உன் விருப்பம். உன் உளறல்களை கேட்க எனக்கு இப்பொழுது நேரம் இல்லை" என்று கூறிய சிவா குழந்தையை படுக்கையில் கடத்தி விட்டு வேறு உடை ஒன்றை அலமாரியில் இருந்து எடுத்தார்.
அவர் திரும்பிய நேரம், பிள்ளையை தன் கைகளில் அள்ளிக் கொண்டு கதவைத் திறந்து வெளியேற முயற்சி செய்தார் மதுரவல்லி.
கதவைத் திறக்கும் சத்தத்தை தொடர்ந்து, அவர் பின்னே, "மதுரவல்லி..." என்று கத்திக்கொண்டு சிவா வந்ததும், சிவாவை பார்த்துக் கொண்டே படி இறங்க முயற்சி செய்த மதுரவல்லி நிலை தடுமாறினாள்.
மாடிப்படி கைப்பிடிச்சுவற்றின் ஒரு பக்கத்தில் இவளும், மறுபக்கத்தில் அவளின் ஒற்றைக் கைப்பிடியில் தொங்கிக் கொண்டிருந்தான் தீரன்.
"ஐயோ! குழந்தை! தீரா! மதுரா! " என்று கூக்குரல்கள் எழுந்த படி இருந்தன.
நிலைமையை உணர்ந்த சிவா தாவிச்சென்று, குழந்தையை தன் கைகளில் ஏந்திக் கொண்டு, கண்மண் தெரியாத கோபத்தில் மதுரவல்லியை ஓங்கி அறைந்தார்.
படிகளில் உருண்டபடி மயங்கிச் சரிந்தாள் மதுரா.
பயத்தில் அழுத தீரனை அணைத்துக் கொண்டு சுற்றி நின்று ஆறுதல் தந்தனர் சச்சிதானந்தத்தின் குடும்பத்தினர் அனைவரும்.
மயங்கி விழுந்த மதுராவின் அருகில் சேதுபதி, அழகு நாச்சியார், அன்பு நாச்சியார், ரேணுகா அமர்ந்திருந்து அவள் விழிப்பதற்காக காத்திருந்தனர்.
" திடீரென்று அண்ணி இப்படி செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை அண்ணா. நான் எவ்வளவு பயந்து விட்டேன் தெரியுமா? அந்த நிமிடம் என் உயிரே நின்று விட்டது" என்று பதறினாள் நிறைமதி.
" சிவா! மதுரா எங்களிடம் சரியாக பேசாவிட்டாலும் உன்னிடம் நன்றாக நடந்து கொள்கிறாள் என்று தான் இதுவரை உங்கள் விஷயத்தில் நான் தலையிட்டது இல்லை. ஆனால் இன்று என் பேரனின் உயிர் அந்தரத்தில் ஊசலாடியதும் பதட்டத்தில் மயக்கமே வரும் போல் இருந்தது.
சொல்லு சிவா உங்கள் இருவருக்கும் ஏதேனும் பிரச்சனையா? அப்படி இருந்தால் எங்களிடம் சொல்லிவிடு பெரியவர்கள் நாங்கள் இருக்கிறோம். உங்கள் பிரச்சனைகளை சரி செய்து தருகிறோம். இப்படி அனைவரையும் உயிரோடு மரிக்க வைக்கும் நிகழ்வுகள் இனி இந்த வீட்டில் நடக்கக்கூடாது" என்றார் பத்மாவதி
"அம்மா... பிரச்சனையே அவள் தான். குழந்தை பிறந்த பிறகு சிறு சிறு மாற்றங்கள். அதை நான் ஒரு பொருட்டாக நினைத்ததே இல்லை. இன்று நடந்து கொண்டது அவள் மனநிலையின் உச்சம்" என்றார் கடுப்புடன் சிவா.
"சிவா! ஒரு பெண்ணின் மீது பழி சுமத்துவது மாபாதகம். எதையும் யோசித்துப் பேசு. உன் பேச்சில் ஒரு பெண்ணின் வாழ்க்கையே அடங்கி உள்ளது.
நம் வீட்டிற்கு வாழ வந்த பெண்ணை, அனைவர் முன்பும் நீ குறை கூறுவது எனக்குப் பிடிக்கவில்லை. அவளைக் குற்றவாளி போல் ஒவ்வொருவரும் விசாரிப்பதும் எனக்கு பிடிக்கவில்லை.
இன்று நடந்த நிகழ்வு எதைச்சையாக நடந்ததாக கூட இருக்கலாம். தீர விசாரிக்காமல் சிவாவின் பக்கத்தை மட்டும் கேட்டுக் கொண்டு தீர்ப்பளிக்க முடியாது.
என் மருமகள் மதுரவல்லி எழுந்து வரட்டும்" என்று அனைவரின் பேச்சுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் சச்சிதானந்தம்.
பசியால் தீரன் அழுகவே, அவனுக்கு புட்டிப் பால் கொடுத்து வயிற்றை நிரப்பி படுக்க வைத்தார் பத்மாவதி.
மெல்ல கண்களைத் திறந்து மயக்கத்தில் இருந்து விழித்தாள் மதுரா.
திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தவள், "என் குழந்தை, என் குழந்தை" என்று பதறினாள்.
" குழந்தை தூங்குகிறான் நீ சற்று அமைதியாக இரு மதுரா " என்று அழகு நாச்சியார் எவ்வளவு சமாதானப்படுத்தியும் குழந்தையை பார்ப்பதற்காக திமிறிக் கொண்டு எழுந்தாள்.
அவளை கட்டுப்படுத்த முடியாமல் திகைத்தனர் அனைவரும். குழந்தையைச் சுற்றி அனைவரும் இருந்தாலும் யாரையும் கண்டு கொள்ளாது, அனைவரையும் துச்சமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, என் குழந்தை என் உரிமை என்பது போல் தீரனை தன் மடிமீது போட்டு அவனுக்கு பசியாற்ற தயாரானாள்.
"வேண்டாம்மா. இப்பொழுதுதான் அவன் பால் குடித்தான்" என்று பத்மாவதி கூற, தன் குழந்தையை தன்னிடம் இருந்து பிரிப்பதாகவே எண்ணி, அவரின் பேச்சை அலட்சியம் செய்து தன் மகனுக்கு அமுதூட்ட ஆரம்பித்தாள்.
வயிறு முட்ட பால் குடித்திருந்த குழந்தை மேலும் பால் புகட்ட, மூச்சு முட்டி மூக்கிலும் வாயிலும், ஊட்டிய பாலை வெளியேற்றிக் கொண்டே மூச்சுக்கு திணற ஆரம்பித்தது.
தன் மடியில் இருந்த குழந்தை உயிர் காற்றுக்கு திண்டாடுவதைக் கண்டதும் மதுரவல்லிக்கு பயம் ஊற்றாய் சுரக்க ஆரம்பித்தது.
குழந்தையின் நலனில் அவளின் கர்வம் கரை ஒதுங்கி சென்றுவிட, விழிகள் சுமந்த அச்சத்துடன் அனைவரையும் சுற்றிப் பார்த்தாள் இயலாமையுடன்.
" பைத்தியக்காரி! பிள்ளையின் உயிரை காவு வாங்க கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறாயே. சிவா சீக்கிரம் வண்டியை எடு பிள்ளையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் " என்று பத்மாவதி குழந்தையை மதுராவிடம் இருந்து வாங்கி தன் தோளில் போட்டுக் கொண்டு ஓட, நிறைமதியும் தன் தாயின் பின்னே ஓடினாள் மதுரவல்லியை வெறுப்பாய் பார்த்துக் கொண்டு. சிவானந்தத்தின் தம்பி அன்பானந்தம் தன் அண்ணியை குழப்பத்துடன் பார்த்துவிட்டு, காரை எடுக்கச் சென்றார்.
விருந்து நடந்த இடம் மயான அமைதியுடன் இருக்க, திக்பிரம்மை பிடித்தது போல் உணர்வின்றி எழுந்த மதுரவல்லி தன் அன்னை அழகு நாச்சியாரின் கையை பற்றி கொண்டு, "அம்மா! என் குழந்தையை நானே கொல்ல பார்த்தேனே! எல்லோரும் சொல்வது போல் நான் பைத்தியமா அம்மா?" என்று மரத்த குரலில் கேட்க, "ஐயோ!" என்று கூப்பாடு போட்டு தலையில் அடித்து அழ ஆரம்பித்தார் அழகு நாச்சியார்.
"அக்கா! நீ எதற்கும் கவலைப்படாதே. நம்ம பிள்ளைக்கு கேரளா, ஏர்வாடி போய் வைத்தியம் பார்த்து சரி செய்து விடலாம்" என்று அழகு நாச்சியாரை கட்டிக் கொண்டு மேலும் நெருப்பை வார்த்தார் அன்பு நாச்சியார்.
அழுது தவிக்கும் தன் மனைவியையும், அசையாமல் நிற்கும் தன் மகளையும் பார்த்து மனம் ஒடிந்து நாற்காலியில் சாய்ந்தார் சேதுபதி.
சேதுபதியின் கரத்தை பற்றி கொண்டு அருகில் அமர்ந்த சச்சிதானந்தம், " எல்லாம் கண் திருஷ்டி தான் சேது. குடும்பத்தோடு சென்று குலதெய்வம் கோவிலில் வழிபட்டால் எல்லாம் சரியாய் போய்விடும். நீ கவலைப்படாதே!" என்று ஆறுதல் அளித்தார்.
மரப்பாச்சி பொம்மை போல் நின்றிருந்த மதுரவல்லியின் கைகளை மெதுவாக பற்றி தனியே அழைத்து வந்த ரேணுகா, "அக்கா, இங்கு நடப்பதற்கு எல்லாம் காரணம் உன் மகனின் ஜாதகம் தான். நீ அவன் அருகில் இருந்தால் அவன் உயிருக்கு ஆபத்தாம். நீ விலகி இருந்தால் அவனுக்கு ஆயுள் கெட்டியாம். நீ அவனை நெருங்க நெருங்க அவன் உயிருக்கு ஆபத்து. உன் குழந்தைக்கு உன்னாலே ஆபத்து என்றால் உன்னால் தாங்கிக் கொள்ள முடியுமா?" என்றாள் ரேணுகா சோகமாக.
தன் குழந்தைக்கு தன்னால் ஆபத்து என்றதும் பதட்டத்தில் இருந்த அந்த தாய் உள்ளம் மேலும் படபடத்தது.
" இதற்கே இப்படி அதிர்ச்சி அடைகிறாயே! உனக்கு இரண்டாவது குழந்தை பிறந்தால் அந்த குழந்தை மூலம் அத்தானுக்கும் மிகப்பெரிய கண்டம் இருக்கிறதாம். இன்று நடந்த அடுத்தடுத்த சம்பவங்கள் அதற்கு சாட்சி.
இதை உன்னிடம் எப்படி சொல்வது என்று பெரியம்மா தவியாய் தவித்துக் கொண்டிருப்பதாக என் அம்மா சொன்னார்கள். நீ நன்றாக வாழ்ந்ததே இந்த ஒரு வருடம்தான். நீ இதையே காலம் முழுவதும் நினைத்து உன் சந்தோஷத்தை தேக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பெற்ற குழந்தையையும் கட்டிய கணவரையும் நெருங்க விடாமல் நீ வாழ வேண்டும்.
நான் சொல்வதில் உனக்கு நம்பிக்கை இல்லை என்றால், நீ வேண்டுமானால் பெரியம்மாவிடமே கேட்டுக் கொள். ஜாதக பலனை வெளியில் சொன்னால் குழந்தையின் ஆயுள் மேலும் குறையுமாம் என் அம்மா சொன்னார்கள். எதற்கும் யோசித்துப் பேசு அக்கா " என்று தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டாள் ரேணுகா.
அழகு நாச்சியாரிடம் வேகமாக ஓடிச் சென்ற ரேணுகா, "பெரியம்மா அக்கா மனநிலை மாறுவதற்காக, இது எல்லாம் ஜாதக தோஷம் தான் என்று சொல்லி இருக்கிறேன். நீங்களும் அதையே சொல்லி சமாளியுங்கள்" என்றாள் முன்னெச்சரிக்கையாக.
ரேணுகாவின் கன்னத்தை தடவி, "சரி தங்கம்! உன் அக்காவிற்காக எப்படி எல்லாம் யோசிக்கிறாய்" என்று பெருமூச்சு விட்ட அழகு நாச்சியார் மதுராவிடம் சென்றார்.
மகளை தன் மார்பில் சாய்த்துக் கொண்டு தலையினை ஆதுரமாய் தடவிக் கொடுத்தார். " அம்மா ரேணு சொன்ன ஜாதகம் எல்லாம் உண்மையா? " உதடுகள் துடிக்க உள்ளம் நடுங்க கேட்டாள் மதுரா. மேலும் அதைப்பற்றி விரிவாக கேட்டால் குழந்தைக்கு வினையாக வந்துவிடுமோ என்ற ஒரு தாயின் பயத்தில் மெதுவாக மேலோட்டமாகவே கேட்டாள்.
"ஆமாம்டா..." என்ற அழகு நாச்சியார் அடுத்த வார்த்தை பேசுவதற்குள் கீழே இருந்த விருந்தினர் அறைக்குள் சென்று விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு இருளுக்குள் தன்னை தொலைக்க ஆரம்பித்தாள் மதுரா.
அவசர சிகிச்சை பிரிவில் குழந்தையை வைத்து சில மணி நேரங்களில் தீரனின் உயிரை காப்பாற்றித் தந்தனர் மருத்துவர்கள்.
அதிகாலை விடிந்ததும் அனைவரும் களைப்புடன் குழந்தையுடன் வீடு திரும்பினர்.
கலங்கிய கண்களுடன் அழகு நாச்சியார் பத்மாவதியிடம் வர, "முதல் குழந்தை தானே. அனுபவம் இல்லாததால் குழந்தையை கைப்பிடியில் இருந்து தவற விட்டு, குழந்தையின் வயிறு நிறைந்ததை உணராமல் பசியாற்றி இருக்கிறாள். கவலைப்படாதே நாச்சியார். நான் பார்த்துக் கொள்கிறேன் " என்று பத்மாவதி கூறியதும் அவரின் கைகளைப் பற்றிக் கொண்டு அழ ஆரம்பித்தார் அழகு நாச்சியார்.
அறைக்குள் இருந்த மதுரவல்லி வெளியில் வரவே இல்லை. மனதின் குற்ற உணர்வில் தங்களை தவிர்க்கிறாள் என்று நினைத்துக் கொண்டனர் குடும்பத்தினர்.
" பெரியம்மா நீங்கள் அனைவரும் ஊருக்கு கிளம்புங்கள். நான் அக்காவையும் தீரனையும் பார்த்துக் கொள்கிறேன் " என்றாள் நயவஞ்சகத்துடன் ரேணுகா.
எப்பொழுதும் அழுத்தமாயிருக்கும் தன் அண்ணி மதுரவல்லியை விட கலகலப்பாய் இருக்கும் ரேணுகாவை பிடித்துப் போனது நிறைமதிக்கு.
" அம்மா ரேணு அண்ணி என்னுடனே தங்கி கொள்ளட்டுமே " என்று நிறைமதியும் கேட்க, யாருக்கும் மறுக்கும் எண்ணம் வரவில்லை.
அழகு நாச்சியார் ஊருக்கு கிளம்பும்போது, எவ்வளவோ வற்புறுத்தியும் கதவை திறக்க மறுத்து விட்டாள் மதுரா.
" பெரியம்மா அக்காவை நான் பார்த்துக் கொள்கிறேன் " என்ற ரேணு, கதவின் அருகில் நின்று மெதுவான குரலில், "அக்கா! நீதானே உன் குழந்தையை நெருங்கக் கூடாது. உன் சார்பில் உன் குழந்தையை உன் கண் முன்னே நான் வளர்க்கிறேன். உனக்காக இந்த தியாகம் கூட செய்ய மாட்டேனா?" என்று கேட்க, கதவைத் திறந்து ரேணுவை உள்ளே அனுமதித்தாள் மதுரா.
யார் முகத்தையும் பார்க்காமல் ரேணு கொடுக்கும் உணவை மட்டுமே உண்ண ஆரம்பித்தாள் மதுரா.
மதுராவின் அறைக்குள் தீரனை கொண்டு வந்த ரேணு, மதுராவை அம்மா அம்மா என்று அடையாளம் காட்ட, அவனை கையில் ஏந்த முடியாமல் தவியாய் தவித்தாள் மதுரா. தான் தன் மகனை தூக்கினால், மீண்டும் அவன் உயிருக்கு ஆபத்து வருமோ? என்று அந்த தாய் உள்ளம் அஞ்சியது.
அந்தத் தாயின் தவிப்பை ரசித்துக் கொண்டே தீரனை கொஞ்சி மகிழ்ந்தாள் ரேணு.
கணவன் மற்றும் குழந்தையை தவிர்த்த மதுரவல்லி அனைவருக்கும் மனநிலை சரியில்லாதவளாகவே காட்சியளித்தாள்.
சில வாரங்கள் கடந்த நிலையில் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்த சிவா, அனைவரும் தூங்கிய பிறகு மதுராவின் அறைவாசலில் வந்து நின்று, "மது..." என்று மென்மையாக அழைத்தார்.
" ப்ளீஸ் மதுரா கதவை திற!" என்று சற்று சத்தமாக கூறி கதவைத் தட்டினார்.
" ஏன் திறக்க வேண்டும் நீங்கள் ஆண்மகன் என்று மீண்டும் நிரூபிப்பதற்கு ஒரு பெண் உடல் வேண்டுமோ?" என்று சிவானந்தத்தை தன் வாழ்க்கையில் இருந்து முற்றிலும் தவிர்த்தார் மதுரா.
"ச்சீ..." என்று அருவருப்புடன் முகத்தை சுளித்துக்கொண்டு வெளியேறினார் சிவானந்தம்.
ஒளிந்து நின்று இவர்களின் உரையாடல்களைக் கேட்ட ரேணுகாவின் உள்ளம் ஆனந்த தாண்டவம் ஆடியது.
அழகு நாச்சியார் மற்றும் சேதுபதி வரவேற்பறையில் உள்ள நாற்காலியில் அமர்ந்திருக்க, அவர்களைச் சுற்றி சச்சிதானந்தத்தின் மொத்த குடும்பமும் நின்று கொண்டிருந்தது.
தீரனை தோளில் போட்டு தட்டிக் கொடுத்துக் கொண்டே நடப்பவைகளை கண்டு கொண்டிருந்தாள் ரேணுகா.
"சேது, ஒரு மாதம் நாங்களும் பொறுத்திருந்து பார்த்தோம். மதுரா எங்கள் குரலைக் கேட்டாலே கதவை மூடிக்கொண்டு திறக்க மறுக்கிறாள். உடன் பேச மறுக்கிறாள்.ஒரே வீட்டில் இருந்து கொண்டே நாங்கள் அவளைப் பார்த்தே ஒரு மாதம் ஆயிற்று.
இதோ எனது மகன் சிவாவையும் உங்கள் முன் நிறுத்தி உள்ளேன். நீங்கள் தான் மதுரவல்லியை சமாதானம் செய்து இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும்" என்று சச்சிதானந்தம் வீட்டின் மூத்தவராக பேச்சை தொடங்கினார்.
"அன்று நடந்ததற்கு நாங்கள் தான் மதுராவின் மீது கோபம் கொள்ள வேண்டும். ஆனால் அவள் எங்கள் மீது கோபத்தோடு இருக்கிறாளே? சரி செய்ய முடியாத பிரச்சனை என்று ஏதாவது இருக்கிறதா?
பெற்ற பிள்ளையை கூட பார்க்காமல் ஒரு தாய் இருப்பாளா? இதுவரை உங்கள் மகளை நாங்கள் ஒரு குறை சொல்லி இருப்போமா?" என்று பத்மாவதியும் தன் கருத்தை கூட்டத்தில் பதிவு செய்தார்.
அருமை பெருமையாய், வரமாய் பெற்ற மகளின் வாழ்க்கை ஊசல் ஆடுவதை உணர்ந்து கொண்ட பெற்றோர்கள், மதுராவின் அறைக் கதவை தட்டினார்கள்.
" எல்லோரும் என்னென்னவோ சொல்கிறார்களே! இந்த அப்பாவிற்கு ஒன்றும் புரியவில்லை கண்ணம்மா. இவர்கள் கேள்விக்கான பதில் எங்களிடம் கிடையாதே. அது உன்னிடம் தானே உள்ளது. வாடா! இந்த அப்பா இருக்கிறேன்" என்ற சேதுபதியின் குரலுக்கு எவ்வித எதிர்வினையும் இல்லை.
" மதுரவல்லி! உன் மனதில் உள்ளதை தைரியமாகச் சொல். நான் என் மகளை கோழையாக வளர்க்கவில்லை. இருளின் பின் உன் உணர்வுகளை மறைத்து வைப்பதால் யாருக்கு என்ன பலன்? இருளின் பெருமையை போதித்த நானே உனக்கு அதன் மறுபக்கத்தையும் சொல்கிறேன். அதே இருள்தான் தனிமை, மனச்சோர்வு, சோகத்தையும் போதிக்கிறது. வேண்டாம் மதுரா அதனை உடைத்து வா!" என்ற அழகுநாச்சியாரின் குரலுக்கு, அந்தக் கற்சிலை தன் மூச்சை உள்ளிழுத்து மேலும் இறுக்கிக் கொண்டது.
" இப்படி வீம்பு பிடித்தால் நாங்கள் என்ன செய்வது நாச்சியார்? " மதுரவல்லியின் மன அழுத்தம் அவளின் திமிராகவே பேசப்பட்டது.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த நாச்சியார், "மதுரா, எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பரவாயில்லை. இந்த அம்மாவையும் வேண்டாம் என்று ஒதுக்கி விடமாட்டாய் தானே? என்ற நாச்சியாரின் குரலுக்கு கதவு திறக்கப்பட்டது.
தனிமையில் வாடி வதங்கி நின்ற தன் மகளை ஆதுரமாய் அணைத்துக் கொண்டே, " ஏன் அனைவரையும் தவிர்க்கிறாய் மதுரா? " என்றார் நாச்சியார்.
அவரின் தீண்டலுக்கும், கேள்விக்கும் எந்த எதிர்வினையும் இல்லாமல், கண்களை இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்தாள் மதுரா.
மகளின் மனதை திறக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்தார் நாச்சியார். அந்தக் காலம் கடந்த முயற்சியில் பிடிவாதமாக தன் மனதை பூட்டிக் கொண்டாள் மதுரவல்லி.
செய்வதறியாது அறையை விட்டு நாச்சியார் வெளியே செல்லும்போது, அவரின் சேலை முனையை தன் கையோடு இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் மதுரா.
சிறுவயதில் உறவுகள் அவளை கேலி செய்த போது, அவள் செய்த அதே செய்கையை மீண்டும் செய்வதைக் கண்டு உள்ளம் அதிர்ந்தார் நாச்சியார். தன் மகளின் பாதுகாப்பற்ற உணர்வை புரிந்து கொண்டார்.
நாச்சியார் தன் மகளின் உள்ளங்கையை தன் கையோடு பிணைத்துக் கொண்டு, அறையை விட்டு வெளியேறினார்.
குற்றம் சாட்டும் சிவானந்தத்தின் பார்வையை எதிர்கொண்டதும் தாயின் பின் தன்னை ஒளித்து மறைத்துக் கொண்டாள் மதுரவல்லி. அவளின் கம்பீரத்திலும் ஆளுமையிலும் மயங்கிய சிவாவிற்கு இந்த பயந்த உருவம் கொண்ட மதுரவல்லியை சுத்தமாக பிடிக்காமல் போனது.
அவர்களுக்கு முன் தான் தனி அடையாளமாக காட்டப்படுவது போல் ஒரு உணர்வில் அனைவரையும் பார்ப்பதை தவிர்த்தாள் மதுரா.
'உன்னால் உன் உயிர் போன்றவர்களுக்கே ஆபத்து என்றால் நீ கெட்டவளாகத் தானே இருக்க வேண்டும்' என்றவளின் மனதில் குரல் அவளை அனைவர் முன்பும் குற்றவாளியாய் மாற்றியது.
'இதோ அனைவரும் உன்னைத் தானே குற்றம் சாட்டிக் கொண்டு நிற்கிறார்கள். அவர்கள் என்ன உன்னை ஒதுக்குவது? நீ அவர்களை ஒதுக்கி விடு... ' என்றவளின் மனம் தந்த கட்டளையில் அனைவரையும் புறக்கணித்துவிட்டு நாச்சியாரோடு தன் தாய் வீட்டில் சரணடைந்தாள்.
நாச்சியார் தன் பேரனையும் கையில் சுமந்து கொண்டு, "விரைவில் வருகிறோம்!" என்று அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினார்.
பிரச்சனைக்கான தீர்வை சில காலம் ஒத்திப் போடலாம் என்று சச்சிதானந்தம் குடும்பமும் முடிவு செய்தது.
அங்கு நடந்தவைகளை தன் வீட்டில் அபிநயத்துடன், தன் தாய் அன்பு நாச்சியாருக்கு நடித்துக் காட்டினாள் ரேணுகா. " அரை பைத்தியம் முழு பைத்தியமாகவே மாறிவிட்டது" என்று சிரித்து மகிழ்ந்தனர் ஈவு இரக்கமில்லா அந்த அரக்கிகள்.
நாட்கள் அதன் போக்கில் நகர, பேரனை கண்ணும் கருத்துமாக வளர்த்தார் நாச்சியார். மதுரா தன்னிடம் பேசவில்லை என்றாலும் அதிக நேரம் அவளோடு பேசினார். அவளைப் பேச வைக்க முயற்சி செய்தார். தீரனைக் கண்டாலே அச்சத்துடன் பின்னடையும் மகளைக் கண்டு மறுகினார்.
அவர் எவ்வளவு முயற்சி செய்தும், மதுரவல்லியின் தவிப்பிலிருந்து அவளை வெளிக்கொணர முடியவில்லை. மதுரா அறையில் அடைந்து கிடக்காமல் அமைதியாக நடமாடுவதே போதும் என்றாகிப் போனது அவருக்கு.
அனைவரும் உறங்கிய பின் இருள் தந்த தைரியம், பாதுகாப்பில் முற்றத்தில் கொடியில் காயப் போட்டிருந்த தன் மகனின் ஆடைகளை முகர்ந்து பார்த்து, அந்த பிள்ளையின் பால் மணத்தை, தன் காற்றுப் பையில் நிரப்பிக் கொண்டாள் அந்தப் பேதை தாய். அனைவரும் உறங்கிய பின் அவளின் உலகம் விடிந்தது.
ஒருநாள் சச்சிதானந்தமும் பத்மாவதியும் நாச்சியார் வீட்டிற்கு வந்தனர். அவர்களின் மகள் நிறைமதிக்கும், மகன் அன்பானந்தத்திற்கும் திருமணம் நிச்சயிருப்பதாகவும், அதனால் தங்கள் மருமகளையும்,பேரனையும் அழைத்து வர வேண்டும் என்று கூறி அழைப்பிதழ்களை கொடுத்து விட்டுச் சென்றனர்.
அமுதன் நிறைமதி திருமணம், அன்பானந்தம் அபிராமி திருமணம் இனிதே முடிந்தது. பெரிய போராட்டத்திற்குப் பிறகு மதுரவல்லியை தன்னோடு அழைத்து வந்தார் நாச்சியார். திருமண வீட்டில் தன் தாயை விட்டு எங்கும் நகரவில்லை மதுரவல்லி. சாவி கொடுத்த பொம்மை போல் தன் அன்னையுடனே இருந்தாள்.
நாச்சியாரின் கையில் இருந்த தன் மகனை சிவா வாங்கியதும், அவரின் முரட்டு கைக்குள் வீறிட்டு அழ ஆரம்பித்தான் தீரன்.
'என்ன சிவா? அது உன் பிள்ளை தானே? அடுத்தவரிடம் இருப்பது போல் இப்படி அழுகிறான். உன் பொண்டாட்டிக்கும் நீ வேண்டாம். உன் பிள்ளைக்கும் நீ வேண்டாமா?" என்று நக்கல் பேசியது உறவுக் கூட்டம்.
மனதில் விழுந்த சிறு விரிசல் பிளவாய் மாற, தன் கையில் இருந்த மகனை நாச்சியாரிடம் ஒப்படைத்து விட்டு விறுவிறுவென வெளியேறினார் சிவா.
உறவுக் கூட்டம் மதுரவல்லியை சுட்டிக்காட்டி ஜாடை பேச, அனைவருக்கும் தன் மகள் காட்சிப்பொருளாக இருப்பதைக் கண்டு மனம் நொந்த நாச்சியார் விரைவில் தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்.
தன் திருமண வாழ்க்கையின் தோல்வி தந்த விரக்தியில் குடியை நாடினார் சிவானந்தம். முழு போதையில் ஒரு நாள் வீட்டிற்குள் வர, சச்சிதானந்தம் கண்டிக்க பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.
"ஓ... நான் செய்வது தவறா? அப்போ நீங்கள் என் வாழ்க்கையை அழித்தது சரியா? என் மானம், மரியாதை, தொழில் எல்லாம் போய்விட்டது. உங்களை நம்பி என் வாழ்க்கையை ஒப்படைத்ததற்கு எனக்கு மிகவும் சிறப்பு செய்து விட்டீர்கள். ஒரு பைத்தியத்தை என் தலையில் கட்டி விட்டீர்கள்" என்று நடு சபையில் சிவா கேள்வி கேட்க பதில் சொல்ல முடியாமல் தவித்தார் சச்சிதானந்தம்.
" நீங்கள் எப்படி பதில் பேசாமல் இருந்தால் எப்படி? என் மகனுக்கு நீங்கள் நியாயம் செய்தே ஆக வேண்டும் " என்று ஒரு தாயாய் தன் மகனுக்கு துணை நின்றார் பத்மாவதி.
" சரி சம்பந்தப்பட்டவளை வைத்துக் கொண்டு இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவை எடுக்கிறேன்" என்று முற்றுப்புள்ளி வைத்தார் சச்சிதானந்தம்.
சச்சிதானந்தம் மற்றும் சேதுபதியின் உறவுகளால் நிறைந்திருந்து, பல வாக்குவாதங்களுக்குப் பிறகு அமைதியாக இருந்தது அந்த வீடு.
" கடைசியாகக் கேட்கிறேன் மதுரா. உனக்கு உனக்கு சிவாவோடு வாழ விருப்பமா? இல்லையா?" அமைதியை கிழித்துக்கொண்டு கணீரென்று வந்தது சச்சிதானந்தத்தின் குரல்.
கலங்கிய கண்களுடன் நாச்சியார், மதுராவின் கைகளை இறுக்கிப்பிடித்து தைரியம் கொடுத்த போதும், மறுப்பாக அவள் தலை அசைந்தது.
சிவாவின் உதடுகள் ஏளனப் புன்னகையை சிந்தியது.
"அப்போ! நாங்க எங்க அண்ணனுக்கு வேற திருமணம் செய்வோம். நீங்கள் பிரச்சனை செய்யக்கூடாது" என்று நிறைமதி அண்ணன் பாசத்தில் கேட்க, சரி என்று தலையசைத்தாள் மதுரா.
" அப்பா முறைப்படி விவாகரத்து வாங்கி விடலாம்" என்று அன்பானந்தம் தன் அண்ணனுக்காக பரிந்து பேசினார்.
கூட்டத்தினர் முன் எழுந்து நின்ற சேதுபதி அனைவரையும் பார்த்து கைகூப்பி வணங்கி, " என் பொண்ணை நீதிமன்ற வாசலில் இழுத்து அசிங்கப்படுத்த வேண்டாம். நாங்கள் அமைதியாகவே விலகிச் செல்கிறோம். எந்த பிரச்சனையும் செய்ய மாட்டோம் என்று எழுதித் தருகிறோம்" என்று கண்ணீருடன் கேட்டுக்கொண்டார்.
"நாச்சியார், இந்த முடிவில் எங்கள் பக்கம் எந்த தவறும் இல்லை. அதை நீ நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். என்னதான் உறவை முறித்துக் கொண்டாலும், ருத்ர தீரன் தான் எங்கள் வம்சத்தின் மூத்த பேரன். தாயிடமிருந்து பிள்ளையைப் பிரிக்கும் பாவச் செயலை நாங்கள் செய்ய மாட்டோம்.
ஆனால் கண்டிப்பாக வாரம் ஒரு முறை எங்கள் பேரனை எங்கள் வீட்டிற்கு அனுப்ப வேண்டும். இது ஒன்று மட்டுமே எங்கள் பக்கம் இருந்து நாங்கள் வைக்கும் கோரிக்கை " என்றார் பத்மாவதி.
கட்டிப்போட்டு அடிக்கும் கூட்டத்தில், சரி என்று சொல்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை நாச்சியாருக்கு. எவ்வளவு சீக்கிரம் தங்கள் மகளை இங்கிருந்து கூட்டிச் செல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கூட்டிச் செல்ல வேண்டும் என்ற வெறி மட்டுமே அவருக்குள் இருந்தது.
வீட்டிற்குள் நுழைந்த பிறகு மகளின் வாழ்க்கைத் தந்த தோல்வியில் தளர்ந்து சாய்ந்து நாற்காலியில் படுத்த சேதுபதி பின் எழவே இல்லை.
தந்தையின் காலடியில் வந்து கண்ணீருடன் அவர் பாதத்தை தொட மதுரா முயலும் போது, "வாயைத் திறந்து எதுவும் பேசாமல், உன் வாழ்க்கையையும் அழித்துவிட்டு, என் வாழ்க்கையையும் அழித்து விட்டாயே!" என்ற தன் தாயின் வார்த்தையில் சுக்குநூறாய் உடைந்து போன மதுரவல்லி, அன்று முதல் பின்புறம் இருந்த ஒற்றை வீட்டில் அடைக்கலம் புகுந்து கொண்டாள் நிரந்தரமான இருளில்.
வாரம் ஒரு முறை தீரனை யார் சச்சிதானந்தத்தின் வீட்டிற்கு கூட்டிச் செல்வது என்ற தயக்கம் வந்தபோது,ரேணுகா அந்தப் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாக முன் வந்தாள். அந்த வீட்டில் ஒருவளாகவே வலம் வர ஆரம்பித்தாள்.
தீரன், ஆதிரன், நந்தன் மூவரும் விளையாடும்போது ஆதிரனும் நந்தனும் இணை சேர்ந்து கொண்டு, தீரனை ஒதுக்கவே, பெரியவனான தீரன் இருவரையும் எளிதாக தாக்கினான்.
தாயைப் போலவே பிள்ளையும் இருப்பான் என்று தப்பாக அடையாளம் காட்டப்பட, ஆதிரன் மற்றும் நந்தனின் மனதில் தீரன் ஒதுக்கி வைக்கப்பட்டான்.
ஆதிரனுக்கும் நந்தனுக்கும் அவர்கள் அன்னைமார்கள் உணவு ஊட்ட அதனைப் பார்த்துக் கொண்டு வந்த தீரன், தன் அன்னை இருந்த அறையைத் தட்டி, " அம்மா பசிக்குதுமா. சாப்பாடு ஊட்டி விடுங்க அம்மா" என்று கத்தினான்.
தன் அன்னையிடமிருந்து பதில் இல்லாமல் போகவே சாப்பிடாமல் அழுது கொண்டே படுத்து விட்டான் தீரன்.
இரவில், இருளில், தன் எதிரே தீரன் இருப்பது போல் கற்பனை செய்து கொண்டு மதுரவல்லி, "சாப்பிடு " என்று கூற எதிரில் இருந்த கற்பனை உருவம் மறுப்பாக தலை அசைத்தது போல் உணர்ந்தாள்.
" ருத்ர தீரா! சாப்பிடு" என்று அதிகாரக் குரலில் தலையை கோதிக் கொண்டே ஊட்டி விட்டார் அந்த கற்பனை உருவத்திற்கு.
ஜன்னலின் ஓரம் வழியே இதனைக் கண்ட தீரனின் உள்ளம் குளிர்ந்தது. பகலில் அவன் கேட்கும் தாய்ப்பாசம் இருளில் கிடைக்காமல் கிடைத்தது. அந்த இருளில் இருந்து தன் அன்னையை காக்க அன்று முதல் போராடினான்.
சிவாவிற்கு மறுமணம் பேசும்போது அனைவரின் தேர்வாக ரேணுகாவே இருந்தாள். அனைவரும் சேர்ந்து சிவாவின் சம்மதத்தை கேட்க, "அப்பா உங்கள் முடிவை ஏற்கிறேன். ஏனென்றால் என் முதல் திருமணம் தந்த உங்கள் குற்ற உணர்விலிருந்து நீங்கள் விலகிக் கொள்ள இது ஒரு வாய்ப்பாய் இருக்கட்டும். ஆனால் இனி என் குடும்பம். என் முடிவு. என் வட்டத்திற்குள் யாரையும் வர நான் இனி அனுமதிக்க போவதில்லை. என் பழைய வாழ்க்கையையும் நான் திருப்பி பார்க்க விரும்பவில்லை. தீரன் உங்களுக்கு மட்டும் பேரனாய் இருக்கட்டும்" என்று தன் முடிவை அதிரடியாக அறிவித்தார் சிவா.
சிவானந்தத்தின் மனதில் இருந்து மதுரவல்லியையும் தீரனையும் சாமர்த்தியமாக அகற்றிவிட்டு, அவரை கரம் பிடித்தாள் ரேணுகா. அவள் பற்ற வைத்தது சிறு நெருப்பு தான், ஆனால் அந்த பச்சை வயலோ பற்றி எரிந்து தரிசாய் போனது.
சச்சிதானந்தத்தின் வீட்டில் அனைவரின் திருமண புகைப்படங்களும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். மதுரவல்லியின் புகைப்படத்தை அகற்றினால் தன் மீது சந்தேகம் வரும் என்று ஆத்திரத்துடன் அமைதியாக இருந்தாள் ரேணுகா.
அனைவரின் முன்னிலையில் பெரியம்மா, அத்தம்மா என்று அடையாளம் காட்டப்படும் மதுரவல்லியின் புகைப்படம், யாரும் இல்லா சமயங்களில் பைத்தியக்காரியாக ரேணுகாவால் அடையாளம் காட்டப்பட்டது.
பிள்ளைகள் ஓரளவு வளர்ந்து விவரம் தெரியும் பருவத்தில் மதுராவை பற்றிக் கேட்கும் போது மனநிலை சரியில்லாதவளாகவே அடையாளம் காட்டப்பட்டாள் வீட்டினர் அனைவராலும்.
கண்ணில் காணாத மதுரவல்லி அனைவர் கருத்தில் இருந்தும் மறைந்தாள் எளிதாக.
இறுக்கி மூடிய தன் கைகளை தொடையில் தட்டிக் கொண்டு, " என் அம்மாச்சி கூறிய காட்சிகளை தவிர்த்து மற்ற பக்கங்கள் எனக்கு இருளாகவே இருக்கிறது. என் அம்மா மௌனமாக இருப்பதால்தான் பல முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமல் இருக்கின்றன. என் அம்மா மட்டும் உண்மையை சொல்லட்டும். உங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தின் முடிவும் என் கையில் தான்!" கண்கள் சிவக்க தீரன் அமிழ்தாவிடம் கூற பதிலின்றி பரிதவித்தாள் அவள்.
" நீயும் பேசிப் பார்த்துவிட்டு உங்கள் குடும்பத்தை போல் என் அம்மாவை பைத்தியம் என்று சொல்லப் போகிறாயா?" ஏளனமாய் வந்தது தீரனின் குரல்.
" நகராமல் அடம்பிடிக்கும் தேர் கூட ஊர் கூடி வடம் பிடித்தால் நகர்ந்து விடும். முதலில் அத்தம்மாவை பேச வைத்து விடலாம். அவர்களின் பிரச்சனைக்கு காரணம் தெரிந்தாலே, அனைத்தையும் சரி செய்து விடலாம்"
" ஈடு செய்ய முடியா இழப்புகள் எத்தனையோ உள்ளது. பிரச்சனைக்கு காரணம் உன் குடும்பம் தான் என்று தெரிந்தால் என்ன செய்வாய்? "
"அது... அது... உங்கள் முடிவில் உங்களுக்கு துணையாய் இருப்பேன்"
" அதாவது உன் குடும்பத்திற்கு எதிராக? "
" ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழித்தவர்களுக்கு எதிராக "
" பரவாயில்லையே... சச்சிதானந்தத்தின் குடும்பத்தில் இன்னும் நேர்மை இருக்கிறதே" என்று போலியாக ஆச்சரியப்பட்டான் தீரன்.
" ஹலோ அங்கிள் ஜி! உங்கள் கணக்கு வேறு. அத்தம்மா கணக்கு வேறு. அத்தம்மா கணக்கை சரி செய்து விட்டு, உங்கள் கணக்கை கூட்டிப் பெருக்கி... "
" குப்பை அள்ளப் போகிறாயா? "
"ம்... அள்ளிய குப்பையை உங்கள் தலையில் கொட்டப் போகிறேன். நான் மட்டும் தனியாக இல்லை. இப்படி ஒரு பிள்ளையைப் பெற்றதற்காக அத்தம்மாவையும் துணைக்கு சேர்த்துக் கொண்டு"
" என் அம்மா அந்த அறையை விட்டு வெளியே வருவார்களா? என்னை பார்ப்பார்களா?" கண்கள் பளபளக்க கேட்டான் தீரன்.
"காதல் உணர்ந்து வாழாதான் வாழ்க்கை - இல்லாமல் போய் விடும்"
" அதில் என்ன சந்தேகம் அங்கிள் ஜி! உங்களைப் பார்க்க மட்டும் என்ன? மடியில் போட்டு கொஞ்சித் தாலாட்டவும் செய்வார்கள். செய்ய வைத்து விடலாம். நீங்கள் பழி வாங்கும் லிஸ்டில் நானும் இருக்கும் போது, இதை நான் செய்வேன் என்று எப்படி என்னை நம்புகிறீர்கள்? " புருவத்தை உயர்த்தி கேள்வி கேட்டாள் அமிழ்தா.
"ஆஹான்... பாவம் செய்த குடும்பத்திற்கு பரிகாரம் செய்ய ஒரு வழி. ம்... சச்சிதானந்தத்தின் குடும்பத்தை நம்பக்கூடாது என்கிறாய்? அதுவும் சரிதான். அப்படி நீ நடத்தி காட்டினால், உனக்கு என்ன வேண்டும்?"
" விடுதலை... உங்களிடமிருந்து முற்றிலும் விடுதலை. கிடைக்குமா?"
கண்களில் ஓரம் சற்று சுருங்கினாலும், நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு, "டீல் ஓகே. காரணம்...."
" அடுத்தவங்க ஆர்டர் பண்ண தோசை எனக்கு வேண்டாம். சோ மாஸ்டர், தோசை கேன்சல். புரியுதா அங்கிள் ஜி? " ஒரு மார்க்கமாக குரலை வளைத்து பேசினாள்.
"ஹா... ஹா... பட்டினி போட்டு, பசித்துப் புசித்தால் அவ்வளவு ருசி தெரியுமா?" என்றான் அவளை ஒரு மார்க்கமாக பார்த்தபடி.
"ஹேய்... ஹேய்... ஸ்டாப்... ஸ்டாப்.. இந்த ரூட்டு விடுற வேலை எல்லாம் உங்க லவ்வு, ஏஞ்சலோட நிறுத்திக்கோங்க. நான் உங்களை எப்படி நினைத்திருந்தேன். உங்களைப் பார்த்த நொடி அனைத்தையும் மறந்து... ம்... நீங்கள் ஏன் தீரா நல்லவராக இருக்கவில்லை" சுதி இறங்கியது அமிழ்தாவின் குரலில்.
" நீயும் நந்தனை தானே மாமன் என்று சுற்றிக்கொண்டு திரிந்தாய். அவனைத் தானே கட்டிக் கொள்ள சம்மதித்தாய். ஏன் இந்த தீரன் உனக்கு மாமனாய் தெரியவில்லை?"
" பேச்சை மாற்றாதீர்கள் தீரா! உங்க லவ்வு பெத்த குழந்தையோடு நீங்கள் சந்தோஷமாக இருந்து கொண்டு, என்னை எதற்காக திருமணம் செய்து கொண்டீர்கள்? அது மட்டுமா? என்னை சுவாகா பண்ணி ஏப்பம் விட பார்த்தீர்கள். அது இந்த அமிழ்தா கிட்ட நடக்குமா? நடக்காது" என்றவனை சவால் பார்வை பார்த்தாள்.
" நடத்திதான் பார்க்கலாமே..."
" வாய்ப்பே இல்ல ராசா "
வருடக்கணக்காக மனதில் அழுத்திய பாரத்தை இறக்கி வைத்த சந்தோஷத்தில் மனம் லேசாக, தலையசைத்து அவளை தன்னருகே வரும்படி சைகை செய்தான்.
"என்ன? மன்னிப்பு கேட்டால் எல்லாம் மனசு இறங்க மாட்டாள் இந்த அமிழ்தா!. சரி சரி என் கையை காலாய் நினைத்து மன்னிப்பு கேட்டு பிழைத்துக் கொள்ளுங்கள் " என்று தன் முகத்தை திருப்பிக் கொண்டு, அவன் பக்கம் தன் வலது கையை நீட்டினாள் அமிழ்தா.
நீட்டிய அவள் கையைப் பற்றி இழுத்து தன் நெஞ்சோடு சாய்த்துக் கொண்டான். ஒற்றைக் கண்ணை மூடிக்கொண்டு, மெல்ல தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவனோ அவளையே ஆழ்ந்து நோக்கினான்.
"என்ன?" என்பது போல் அவள் தலை அசைக்க, அவளின் கன்னம் அவன் மார்போடு உராய, இரு விரல் இடுக்கில் அவள் முகத்தைப் பற்றிக் கொண்டு, அவள் உதட்டில் முத்தத்தை பதித்தான் அழுத்தமாக.
அவனை உதறித் தள்ளி, "ச்சீ... இது தப்பு!" என்று கத்தினாள்.
" அடடா என் அத்தை மகள் ரத்தினத்திற்கு முத்தத்தை தப்பாக கொடுத்து விட்டேனா? அதனால் என்ன? இப்பொழுது சரியாகத் தந்து விடுவோம்" என்றவன் மீண்டும் அவளை இறுக்க அணைத்து முத்த யுத்தத்தை தொடர்ந்தான்.
சுவாசத்திற்கு தவித்தவளை தன்னில் இருந்து பிரித்து, " என்ன இப்ப சரியா? " என்றான் புன்னகையுடன்.
" ஐயோ கடவுளே உனக்கு கண் இல்லையா? எனக்கு முதல் முத்தத்தை கல்யாணம் ஆன ஒரு காண்டாமிருகம் கொடுத்து விட்டதே!" என்று குளியலறைக்குள் புகுந்து கொண்டு பரபரவென தன் உதட்டை தேய்த்து கழுவினாள்.
சிரித்துக் கொண்டே தன் படுக்கையில் படுத்து நிம்மதியாக கண் மூடினான் தீரன்.
வெகு நேரம் கழித்து குளியலறை கதவைத் திறந்து தலையை நீட்டி எட்டிப் பார்த்தாள் அமிழ்தா. கட்டிலில் ஒரு பக்கம் தீரன் உறங்கிக் கொண்டிருப்பது தெரிய மெல்ல குளியலறையை விட்டு வெளியே வந்தாள்.
அடிமேல் அடி எடுத்து வைத்து வந்தவள் மேஜை மீது இருந்த அந்தப் பொருளைக் கண்டதும் நிம்மதிப் பெருமூச்சுடன் கையில் எடுத்து அணிந்து கொண்டாள்.
படுக்கையின் மறுஓரத்தில் வந்து படுத்தாள். அவள் தன்னருகே படுத்ததும் தீரனின் கைகள் நீண்டு அவளை அணைத்து, மீண்டும் முத்தமிடுவதற்கு குனியும் போது முட்டிக்கொண்டான் அவள் அணிந்திருந்த அவனுடைய தலைக்கவசத்தில்.
' மவனே யாரு கிட்ட?' என்று அவனை வென்ற வெற்றிக் களிப்பில் தலைக்கவசத்துடனே உறங்க ஆரம்பித்தாள் அமிழ்தா.
அதிகாலையில் உறக்கம் கலைந்த தீரன், தன்னருகில் அமிழ்தாவை தேடினான். அவள் இருந்த இடத்தில் தலைக்கவசம் மட்டுமே வீற்றிருந்தது. அதனைக் கண்டதும் மென்மையாக தன் கீழ் உதட்டை தடவி ரசித்தான். அந்தத் தலை கவசத்தின் மீது சிறு கொட்டும் வைத்தான் செல்லமாக.
காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக மதுரவல்லியின் அறைக்குள் நுழைந்தாள் அமிழ்தா.
" குட் மார்னிங் அத்தம்மா"
பதில் இல்லாமல் சுவற்றுப் பக்கம் திரும்பி அமர்ந்திருந்தார் மதுரா.
அவரருகில் வந்து அவர் தோளைத் தொட உடல் இறுகியது மதுரவல்லிக்கு.
" நான் அனைவருக்கும் செல்லப் பெண்ணாக இருந்து என்ன பிரயோஜனம் அத்தம்மா? கணவனுக்கு பிடிக்காத, கணவனின் ஆதரவு, பரிவு, அன்பு முக்கியமாக காதல் இல்லாத எந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையும் நரகம்தான். உங்கள் மகன் தீரனுக்கு என்னை சுத்தமாக பிடிக்கவில்லை. எனக்கு பிடிக்கிறதா? என்று கேட்டால் அதற்கும் பதில் தெரியவில்லை.
பெண்ணாய் பிறந்தால் அவளின் உணர்வுகள் எளிதாக நிராகரிக்கப்படுமா? அதுவும் கணவனால் நிராகரிக்கப்படும் போது ஏற்படும் வலி... உங்களுக்குத் தெரியுமா அத்தம்மா?
முதலில் மிதமாக உணர்ந்த எனது மனச்சோர்வுகள் இப்பொழுது என்னை அழுத்தமாக ஆழப் புதைக்கின்றன. மிகவும் சோகமாக உணர்கிறேன். தூக்கம் என்னை விட்டு தூரம் சென்று விட்டது.
பசி இல்லாத மரத்த உணர்வுடன் உணர்ச்சியை தொலைத்து நிற்கிறேன். என் மனது அமைதியை இழந்து விட்டது. எதிலும் நாட்டம் இல்லாமல் இருக்கிறேன். எனக்கு வாழ பிடிக்கவே இல்லை. எனக்கும் உங்களைப் போல இந்த இருள் பிடித்திருக்கிறது அத்தம்மா. உங்கள் இருளை நானும் பகிர்ந்து கொள்ளட்டுமா? " என்று கேட்டதும் சுவற்றுப் பக்கம் இருந்து மதுரா மெல்லத் திரும்பினார் அதிர்வுடன்.
அவர் முதுகில் சாய்ந்து அமர்ந்திருந்த அமிழ்தா நிலை தடுமாறி அவர் மடியில் சரிந்தாள்.
அவர் மடியில் படுத்தவாரே அவர் முகத்தைப் பார்த்தாள் அமிழ்தா.
"வாவ்... வாட் அ கிளாசிக்கல் பியூட்டி! நீங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறீர்கள்!" என்று மதுராவின் முக வடிவை தன் விரல்களால் அளந்தாள்.
அத்தம்மா என்னுடன் கல்லூரியில் படித்த ஷீலா, அவளுடைய மாமியார் ரொம்ப அழகு என்று பெருமை பீற்றிக் கொள்வாள். நாம் இருவரும் சேர்ந்து போனால் அவளின் முகம் எப்படி இருக்கும்?" என்று தன்னோடு சேர்த்து மதுராவையும் கற்பனை செய்ய வைத்தாள்.
அவர் மடியில் வாகாக படுத்துக்கொண்டு, நடுங்கும் அவர் கரங்களை தன் கரங்களுக்குள் பிடித்துக் கொண்டு கதைகள் பேச ஆரம்பித்தாள்.
தீரனின் மனைவி என்ற ஒரே காரணத்தினாலேயே அவளை விலக்க முடியாமல் தவித்தார் மதுரா.
தீரனின் மேற்பார்வையில் அவர்களுக்கு சாப்பாடு அனுப்பப்பட்டது. சாப்பாட்டை பார்த்ததும் நாவில் நீர் சுரந்தது அமிழ்தாவிற்கு.
மனதை கட்டுப்படுத்திக் கொண்டு சாப்பாட்டுத் தட்டை தள்ளி வைத்தாள்.
" காலையில் வந்ததிலிருந்து நான் எவ்வளவு வார்த்தைகள் பேசி விட்டேன் பதிலுக்கு நீங்கள் ஒரு வார்த்தை கூட பேச கூடாதா அத்தம்மா? இருட்டுக்குள்ளேயே இருந்து உங்கள் மனதும் கல்லாய் மாறி போய் விட்டதா? சரி போகப் போற என் உசுரு பசியிலேயே போகட்டும் " என்று வயிற்றை பிடித்துக் கொண்டு சுருண்டு படுத்துக்கொண்டாள் ஒரு ஓரமாக.
அவளை நெருங்கிய மதுரவல்லியின் உதடுகள் நடுங்கியது. பல வருடங்களாகத் தொடர்ந்த மௌனத்திலிருந்து அவரால் எளிதில் வெளிவர முடியவில்லை. வார்த்தைகள் தர முடியாத பரிவை தன் கரங்களில் தந்து, மெதுவாக அவள் தலையை கோதி விட்டார்.
" நீங்கள் என்னுடன் பேசாமல் நான் சாப்பிட மாட்டேன்" முணுமுணுத்தது அந்தப் பூனைக்குட்டி.
நடுங்கும் கரத்துடன் சாப்பாட்டு தட்டை தன் கையில் ஏந்தி அமிழ்தாவின் வாய் அருகே கொண்டு வந்ததும், " நான் ஒரு வாய் சாப்பிட்டால் நீங்களும் ஒரு வாய் சாப்பிட வேண்டும். டீல். இல்லையென்றால் எனக்கு சாப்பாடே வேண்டாம்" என்று அமிழ்தா முறுக்கிக் கொள்ள, பல வருடங்கள் கடந்து கண்ட பிள்ளைக் குறும்பில் உதட்டின் வெடிப்புகள் நகர்ந்தன மதுராவிற்கு.
தலையசைத்துக் கொண்டே அவளுக்கு உணவை ஊட்டி விட, சமத்தாக எழுந்து அமர்ந்து கொண்ட அமிழ்தா மதுராவிற்கும் உணவை ஊட்டி விட்டாள்.
தன்னறையில் இருந்தபடியே இந்த காட்சிகளை வெப் கேமராவின் மூலம் பார்த்துக் கொண்டிருந்த தீரனின் கண்கள் ஆனந்தக் கண்ணீரை சிந்த ஆரம்பித்தது.
தொடர்ந்து இரண்டு வாரம், அமிழ்தா மட்டுமே பேசிக் கொண்டிருக்க, மதுரவல்லியின் தனிமை நிரம்ப ஆரம்பித்தது.
அமிழ்தாவின் பேச்சை தலைகுனிந்தே கேட்டுக் கொண்டிருந்த மதுரா, இப்பொழுதெல்லாம் தலை நிமிர்ந்து அவளின் கண்களை பார்க்க ஆரம்பித்தார்.
இருள் சூழ்ந்த அவரின் அறை வெண்ணிற ஒளியால் ஒளிர மெல்ல மெல்ல அவர் வாழ்வும் ஒளிர்ந்தது. அறையில் பாடல்களை இசைக்க விட்டு நடனம் ஆடிக் காட்டினாள்.
வார்த்தைகளில் பாராட்டு இல்லாவிட்டாலும் மதுராவின் கண்களில் ஒரு மெச்சுதல் பார்வை இருந்தது.
அவரின் உடைகளைத் திருத்தி புத்துணர்வு ஊட்டினாள். கதைகள் பேசிக்கொண்டே மதுராவிற்கு தலைவாரி பின்னலிட்டாள். அவளின் பெரும் முயற்சியின் பலனாக தோற்றத்தில் முற்றிலும் பொலிவைக் கொண்டு வந்தாள்.
ஒரு மாதம் கடந்த நிலையிலும், அமிழ்தாவினால் அவரை அந்த அறையை விட்டு வெளியிலும் வரச் செய்ய முடியவில்லை. அவரை பேச வைக்கவும் முடியவில்லை.
ஆனாலும் மனம் தளராமல் புதுப்புது யோசனைகளை கூகுள் ஆண்டவரிடம் கேட்டு செயல்படுத்திக் கொண்டிருந்தாள்.
செல்லப் பிராணிகளோடு பழகுவதன் மூலம் மனச்சோர்வு குறையும் என்று கேள்விப்பட்டு பைரவனை தங்களுடன் நிறுத்திக் கொண்டாள். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது.
மூச்சுப் பயிற்சி, தியானம், யோகா செய்ய வைக்க கடும் முயற்சி செய்தாள். கெஞ்சி, கொஞ்சி, மிரட்டி தன் காரியத்தை சாதித்தாள் அமிழ்தா.
ஒரு நாள் தீரன் அலுவலகத்திற்கு கிளம்பிய பிறகு, தோட்டத்தில் அமிழ்தா உலாவிக் கொண்டிருந்தாள். வானத்தில் பறவைகள் பறந்து கொண்டிருக்க அதனைப் பார்த்துக் கொண்டே நடந்து வந்தவளை நோக்கி ஏதோ விழ, உள்ளங்கையை நீட்டி விரித்துப் பிடித்தாள்.
தாய்க்கோழியிடம் இருந்து கவர்ந்து வரப்பட்ட ஒரு கோழிக்குஞ்சு, ரத்தக்கீறல்களுடன் கண்கள் சொருகி அவள் கையில் விழுந்தது.
தான் பார்த்த கொடூரமான காட்சியில், அதிர்ந்து போன அமிழ்தா, "வீல்...." என்று கத்தி மயங்கிச் சரிந்தாள்.
பைரவன் அமிழ்தாவை முகர்ந்து பார்த்துவிட்டு, மதுராவின் அறைக்குள் சென்று குரைத்து அவரை வெளியே அழைத்தது.
அமிழ்தாவின் சத்தமும், பைரவனின் குரைப்பும், மதுரவல்லியின் எல்லையை கடக்க வைத்தது. அந்த இருள் வீட்டில் இருந்து வெளியே வந்து, சத்தம் வந்த திசையில் மயங்கி கிடந்த அமிழ்தாவை கையில் தாங்கிக் கொண்டார் மதுரா.
கன்னத்தில் தட்டியும், முகத்தில் நீர் தெளித்தும் கண்களைத் திறக்காமல் இருந்தாள். "ஏன்டி இந்தப் பாவப்பட்ட பிறவி கிட்ட வந்த? பெற்ற பிள்ளையை கையில் தூக்கிக் கொஞ்ச முடியாத இந்த பாவி கிட்ட வந்து நீயும் பரலோகம் போகவா?
பேசு பேசு என்று என்னை நாய் குட்டி போல் சுற்றி வந்தாயே! நான் இத்தனை பேச்சு பேசுகிறேன் உன்னால் கேட்க முடியாதா? எழுந்திடு அம்மு! என்னை நெருங்கினாலே எல்லோருக்கும் நான் எமன் ஆகிவிடுகிறேனே. என்னை விடாது அழுத்தும் பாரத்தோடு இந்த குற்ற உணர்வும் சேர்ந்து கொண்டால், இனி நான் செத்தே விடுவேன் " என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே கண்களில் கண்ணீருடன் அவர் வாயை அடைத்தாள் அமிழ்தா.
"அந்த கோழிக்குஞ்சு...." என்று மிரட்சியாக அந்தப் பக்கம் கையை காட்டினாள்.
" மிருகங்களும், பறவைகளும் இரைக்காக வேட்டையாடுகின்றன. ஆனால் மனிதர்கள் எதற்காக வேட்டையாடப்படுகிறோம் என்று தெரியாமலேயே வேட்டையாடப்படுகின்றோம்" என்று அவளை தன் தோளில் சாய்த்து தட்டிக் கொடுத்தார்.
மனது சிறிது மட்டுப்பட்டதும், "சரியாகச் சொன்னீர்கள் அத்தம்மா. என்னை தீரன் வேட்டையாடும் காரணமும் தெரியவில்லை? என் குடும்பத்தினர் வேட்டையாடப்படும் காரணமும் புரிப்படவில்லை " என்றாள் வார்த்தையில் கொக்கியிட்டு.
" உனக்கும் தீரனுக்கும் என்ன பிரச்சனை? "
" உங்களுக்கும் தீரனுக்கும் என்ன பிரச்சனை அத்தம்மா? "
"அது! என் பிறவியின் சாபம்!"
" ம்க்கும்... அதேபோல் தான் என் திருமணம் இந்த பிறவியில் நான் வாங்கிய சாபம். ஒரு குடும்பம் உங்களுக்கு செய்த பாவத்தின் கணக்கு " என்றாள் பட்டென்று.
புரியாமல் முழித்த மதுரவல்லியிடம், " நான் யார் தெரியுமா? " என்றாள் தயக்கத்துடன்.
மறுப்பாக தலையசைத்த மதுராவிடம், " சச்சிதானந்தத்தின் மகள் நிறைமதியின் மகள் அமிழ்தா. இப்பொழுது புரியுதா அத்தம்மா நான் உங்கள் முன்னே நிற்கும் காரணம் " என்றாள் கண்கள் கலங்க.
உடல் உள்ளம் நடுங்க, தரையில் அமர்ந்தார் மதுரா.
" அத்தம்மா இதுவரை பெற்ற தாயிடம் கூட நீங்கள் நடந்தது எதையும் சொல்லவில்லை. ப்ளீஸ் அத்தம்மா நீங்கள் உங்கள் இருள் பக்கத்தை சொன்னால் தான் என் வாழ்க்கைக்கான ஒளியை நான் தேட முடியும்"
மௌனமாகவே அமர்ந்திருந்தார் மதுரா. " நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம் அத்தம்மா. உங்கள் இருளோடு என் வாழ்வும் கரைந்து மறையட்டும்" என்று உறுதியான குரலில் கூறிவிட்டு அவரை கடக்க முற்படும்போது அவளின் கரத்தை பிடித்துக் கொண்டார் மதுரா.
" என் வார்த்தையில் தான் உன் வாழ்க்கை இருக்கிறது என்றால் நன்றாக கேட்டுக்கொள் இந்த பாவியின் கதையை" என்று தன் வாழ்க்கையில் தான் அனைவருக்கும் மறைத்த பக்கங்களை புரட்டிக் காட்டினார் மதுரவல்லி.
ஒரு பெண்ணின் மனவலிமையை அழித்து ஆனந்தம் கண்ட ஒரு அரக்கியை அடையாளம் கண்டு கொண்டாள் அமிழ்தா. அதற்கு தன் குடும்பம் முழுவதும் உறுதுணையாய் நின்றதைக் கேட்டதும் பற்றி எரிந்தது அவளுக்கு.
நிறத்தை வைத்து விளையாடிய ஒருத்தியின் திறமையான கயமைக்கு, ஒரு தாயும் சேயும் பலியாகி நிற்பதா?
" அத்தம்மா உங்களுக்கு நடந்ததற்கு எல்லாம் காரணம் யார் என்று தெரிகிறதா? " என்றாள் கோபத்துடன்.
"வானோக்கி வாழும் பயிர் போல்- காதல் தேடும் உயிர்"
"பாட்டி..." என்ற அமிழ்தாவின் அதிர்ந்த குரலில் தூக்கத்திலிருந்த நாச்சியார் பட்டென்று கண்களைத் திறந்தார்.
தன் கண் முன்னே தெரிந்த மகளின் உருவத்தை நம்ப முடியாமல் கண்களை கசக்கிக் கொண்டு பார்த்தார்.
"மதுரவ...ல்லி..." தசை சுருங்கிய முகத்தில் கண்களை அகல விரித்தார்.
குங்குமம் நிறைந்து மங்களம் பொங்கும் தன் தாயின் முகம் வெறுமையாய் இருக்க, அதற்குத்தான் தான் காரணம் என்று சுட்டிக்காட்டிய வார்த்தைகளின் வலியில் கண்கள் நனைய ஆரம்பித்தது மதுராவிற்கு.
மதுரவல்லியின் விம்பும் சத்தத்தில் அவரை திரும்பிப் பார்த்த அமிழ்தா, " இல்லை அத்தம்மா! நீங்கள் அழக்கூடாது. உங்களை அழ வைத்தவர்களை ஆள வேண்டும். உங்களை பலவீனமாக்கும் அனைத்து விஷயங்களை தூக்கி எறியுங்கள். உங்கள் கண்ணீரையும் சேர்த்து" என்றாள்.
அமிழ்தாவின் வார்த்தைகள் தந்த வலிமையில், உள்வாங்கும் கடல் போல் மதுராவின் கண்ணீரும் உள்ளே இழுத்துக் கொள்ளப்பட்டது.
மகள் தன் பேச்சுக்கு பதில் அளிப்பதைக் கண்டதும் கட்டிலில் இருந்து தடுமாற்றத்துடன் எழுந்து மகள் அருகில் வந்தார் நாச்சியார்.
"என்னடாமா! எனக்குத் தெரியுமா? அது என்ன காரணம்?" என்றார் நடுங்கும் கரத்தால் தன் மகளின் கன்னத்தை தடவி.
"சூப்பர் பாட்டி! எத்தனை வருடம் கழித்து இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்? இந்தக் கேள்விக்கான விடையை நீங்கள் அப்பொழுதே கேட்டறிந்திருந்தால், ஒரு தாயும் மகனும் பிரிந்திருக்கும் அவல நிலை வந்திருக்காதே! ஒரு குடும்பம் நிலை தடுமாறி இருக்காதே!" என்றாள் அமிழ்தா ஆதங்கத்துடன்.
" நானா... என் மகள் வாழ்வு அழியக் காரணம் நானா?" பதைப்பதைத்தார் நாச்சியார்.
" அதில் என்ன சந்தேகம். நீங்களும் தான்" பகிரங்கமாக குற்றம் சாட்டினாள்.
" நானா... நானா..." என்று நிலை குலைந்து தடுமாறினார் நாச்சியார்.
தாயின் பரிதவிப்பைக் கண்ட மதுரா அவரை தாங்கி பிடித்துக் கொண்டு, "அம்மா! இதில் உங்கள் தவறு என்ன? இறைவன் என் தலையில் எழுதிய எழுத்து தான் அனைத்திற்கும் காரணம். என் ஜாதகம் மட்டும் சரியாக இருந்திருந்தால் நான் ஏன் என் மகனை விலகப் போகிறேன். என் கணவரை பிரியப் போகிறேன் " என்றார்.
" உன் ஜாதகமா? உனக்குத்தான் ஜாதகமே இல்லையே. நீ எங்கள் குலசாமியம்மா. யாராவது கடவுளுக்கு ஜாதகம் எழுதுவார்களா?" என்றார் நாச்சியார்.
"அப்போ... அப்போ..." என்று தலையை பிடித்துக் கொண்டு யோசித்தார் மதுரா.
" அடேயப்பா என் மாமியார் எத்தனை வருடம் கழித்து யோசிக்கிறார்? ம்ம... நன்றாக யோசிங்கள் அத்தம்மா "
"அம்மா, என் ஜாதகப்படி நான் தீரன் அருகில் இருந்தால் தீரனுக்கு ஆபத்து என்றும், இரண்டாவது குழந்தை பெற்றுக் கொண்டால் அவருக்கு ஆபத்து என்றும் நீங்கள் தானே ரேணுவிடம் சொன்னீர்கள்" என்றார் மதுரா குரல் நடுங்க.
"நானா? விழாவில் நடந்த பிரச்சனைகளுக்காக நீ குற்ற உணர்வில் தவிப்பதாகவும், எல்லாம் ஜாதகப் பலன் தான் என்று தற்காலிகமாக கூறி சமாளிக்கும்படி ரேணுகா என்னிடம் சொன்னாள். எனக்கும் உன்னை உடனடியாக தேற்றுவதற்கு அந்தக் காரணம் சரியாகப் பட்டது. நீ ஏதோ தவறாக புரிந்து கொண்டு உள்ளாய் மதுரா " என்றார் நாச்சியார்.
அந்தரத்தில் கயிற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒருவனின் பிடிமானம் அறுத்து எறியப்பட, அவன் நிலைத்தடுமாறி தரையை நோக்கி வரும் வேகத்திற்கு ஈடாக, தன் வாழ்வு சரிந்த அந்த நொடியில் இருந்து, இந்த நொடிக்கு வீழ்ந்தார் மதுரவல்லி.
மூச்சிரைக்க நின்றவரின் தோற்றம் பயத்தை கொடுக்க, " அத்தம்மா! ரிலாக்ஸ்... உண்மை தோற்கக் கூடாது. பொய்மை ஜெயிக்கக் கூடாது.
உங்கள் மனதை தேற்றிக் கொள்வதற்காகவாவது உங்களுக்கு ஜாதகம் என்று ஒரு காரணம் இருந்தது. ஒன்றுமே அறியாத தீரனுக்கு... உங்கள் மகனுக்கு நீங்கள் நியாயம் செய்ய வேண்டாமா? உங்கள் மகன் வாய்விட்டு கேட்ட பாசத்தை எல்லாம் இருளோடு புதைத்தீர்களே, அதை மீட்டு எடுக்க வேண்டாமா?
அந்தப் பாவப்பட்ட தீரனுக்கு நீங்கள் வேண்டும் அத்தம்மா" என்று அவரின் முதுகை நீவி அவரை ஆற்றுப்படுத்த முயற்சி செய்தாள்.
மகன் என்னும் மந்திரச் சொல் வேலை செய்ய, அதிர்ச்சி, இயலாமை, ஆதங்கம் கலந்த பார்வை பார்த்தார் மதுரவல்லி.
" என் நிறத்தால் தான் எல்லோரும் என்னை வெறுத்து ஒதுக்குகிறார்கள். என்னை யாருக்கும் பிடிக்கவில்லை. என்னால் என் கணவர் மற்றும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்று எனக்கு மந்திரம் போல் உபதேசித்துக் கொண்டே இருந்தாளே ரேணுகா அதெல்லாம் பொய்யா? " என்றார் மதுரா நடுங்கும் குரலில்.
"பொய்யா? சுத்தமான அக்மார்க் பொய்! நீங்கள் பொய்மைக்கு உயிர் கொடுத்து ஊமையான பிறகு, உங்களோடு சேர்ந்து உங்கள் உண்மையும் இருட்டு அறைக்குள்ளேயே முடங்கி விட்டது. அது எல்லோருக்குமே மிகவும் வசதியாகிப் போய்விட்டது" என்றாள் கசப்புடன் அமிழ்தா.
" துரோகம் செய்துவிட்டு, அந்த குற்ற உணர்வு சிறிதும் இன்றி, தான் துரோகம் செய்தவர்களோடே சுற்றிக் கொண்டிருப்பார்களே அவர்கள் தான் ஆகச் சிறந்த துரோகிகள்"
உண்மைக்கும், பொய்மைக்கும் இடையே மதுராவின் மனது பயணம் செய்து களைத்தது. தான் ஏமாற்றப்பட்டு, வஞ்சிக்கப்பட்ட காட்சிகள் எல்லாம் நினைவில் வலம் வர, அவரின் இழப்புக்கள் எல்லாம் அவரின் மனதை அழுத்த, கண்கள் சொருகி மயங்கி கீழே விழ இருந்த கடைசி நொடியில், அவரைத் தாங்கினாள் அமிழ்தா.
" இனியும் மயக்கம் வேண்டாம். உங்களின் விழிப்பு தான் வேண்டும் அத்தம்மா" என்றவள் தோள்களைப் பிடித்து உலுக்கிய உலுக்கில் இமைத்தட்டி விழித்தார் மதுரவல்லி.
" உங்களை ஏமாற்றியவர்களுக்கு இல்லாத மன அழுத்தம் உங்களுக்கு எதற்கு?" என்றவள் மதுரவல்லியின் கைகளை இருபுறமும் நீட்டினாள்.
" உங்கள் சிறகுகள் வெட்டப்படவில்லை. மறைக்கப்பட்டுவிட்டது. பூட்டிய உங்கள் இருண்ட வானமும் திறக்கப்பட்டு விட்டது. எங்களுக்கு அந்த கர்வமும், ஆளுமையும் மிக்க மதுரவல்லி தான் வேண்டும். என் தீர... ம்ஹூம் உங்கள் மகனுக்கு தாய்மையை அள்ளி அள்ளித் தரும் அன்னையாய் நீங்கள் வேண்டும். உங்கள் அம்மாவிற்கு பாசத்தை கொட்டி தீர்க்கும் மகளாய் நீங்கள் வேண்டும். நீங்கள் இழந்த வாழ்க்கைக்கு காரணமானவர்களை பதில் சொல்ல வைக்க வேண்டும்" என்ற அமிழ்தாவின் நம்பிக்கையில் தன் கைகளை இருபுறமும் அசைத்துப் பார்த்தார்.
கைகளிடையே சிக்கிக் கொண்ட காற்று விலகுவது போல் நெஞ்சை அடைத்த பாரமும் விலகுவதைப் போல் உணர்ந்தார். வாழும் எண்ணத்தை அவருள் விதைத்தாள் அமிழ்தா.
கைவிட்டுச் சென்ற புதையல் கிடைத்த மகிழ்ச்சியில் நாச்சியார் மகளை அணைத்துக் கொண்டு, உச்சி முகர்ந்தார்.
மதுரவல்லிக்கு நிறம் பற்றிய பேதம் இன்னும் இருக்கிறதா? என்று தயக்கத்துடன் யோசித்த அமிழ்தா, ஒரு பெரிய வட்டத்தட்டில் பலவகை வண்ணப் பொடிகளை எடுத்துக்கொண்டு மதுராவின் முன் நீட்டினாள்.
புரியாமல் யோசித்த மதுராவிடம், "இந்த வண்ணங்களில் எந்த வண்ணத்தை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்? " என்றாள் அவர் மனதை ஆராயும் நோக்குடன்.
மகளின் கை நடுங்கியபடி வண்ணப்பொடிகளை வலம் வருவதைக் கண்ட நாச்சியாருக்கு சிறுவயது மதுரவல்லி ஞாபக அடுக்கில் வலம் வர, மனதில் பயம் மூள ஆரம்பித்தது..
"வண்ணங்களில் என்ன இருக்கிறது? எண்ணங்களில் தான் வாழ்க்கை இருக்கிறது" என்ற மதுரவல்லி வண்ணங்களை அள்ளி அமிழ்தாவின் மீது பூசினாள்.
"ஹூரே! செம செம அத்தம்மா. இது போதும் எனக்கு" என்றவள் வண்ணங்களை அள்ளி மதுரவல்லியின் மீது பூசினாள்.
பார்த்துக் கொண்டிருந்த நாச்சியார் ஆனந்தத்தில் வண்ணங்களை அள்ளி பூசிக் கொண்டார் தன்மீது.
மூவரின் முகத்தைப் பார்த்து மூவரும் சிரித்துக்கொண்டனர்.
அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குள் நுழைந்த தீரனின் செவிகளில் சிரிப்புச் சத்தம் கேட்க, தன் நடையின் வேகத்தை கூட்டினான்.
தீரனின் காலடிச் சத்தத்தை கேட்ட அமிழ்தா, அறைக்குள் தீரன் நுழைந்ததும் கையில் இருந்த வண்ணப் பொடிகளின் கலவையை அவன் மீது தூவினாள்.
"ஹேய்!" என்று கண்களை மூடித் திறந்தவனின் முன், " அங்கிள் ஜி! இதோ உங்கள் மாதாஜி!" என்று மதுரவல்லியை அவன் முன் நிறுத்தினாள்.
பேச்சிழந்து நின்றவனைப் பார்த்து, "ருத்ரா!" என்று மதுரவல்லி அழைக்க, நின்ற இடத்தில் அசையாது நின்றான்.
அவனருகில் வந்த மதுரவல்லி அவன் கைகளைப் பிடித்து, தீராப் பசியுடன் அவன் முகத்தை பார்த்து, கொண்டு, "ஏன் என் பக்கத்தில் வரவில்லை ருத்ரா?" என்றார் ஏக்கத்துடன்.
" எப்பொழுதும் போல் காற்றில் கரைந்து விடுவீர்களோ என்று எண்ணினேன்" என்றவன் கண்களில் நீருடன், மெல்ல தன் அன்னையை தொட்டு மகிழ்ந்தான் ஆனந்தமாய்.
" இந்தப் பைத்தியக்காரியை அம்மா என்று கூப்பிட மாட்டாயா ருத்ரா? " என்றார் மதுரா வருத்தமாக.
அந்த ஆறடி உருவம் தன் அன்னை முன் மண்டியிட்டது. "அம்மா..." என்றவர் கால்களைப் பிடித்து கதறி அழுதான் தீரன்.
பாசத்தில், பதட்டத்தில் நெகழ்ச்சியில் அவனை கட்டிக் கொண்டார் மதுரா. "அம்மா... அம்மா..." என்றவனின் கணக்கில் அடங்கா அழைப்புகள் அந்த அறையை ஆக்கிரமித்தது.
அந்தக் காட்சியை தன் கண்களில் நிறைத்துக் கொண்டு அமிழ்தா தீரனின் வீட்டை விட்டு வெளியேறினாள் மகிழ்ச்சியில் திளைத்த சோகத்துடன்.
சற்று நேரத்தில் தீரனுக்கு உண்மை தெரியும் போது, 'உன் குடும்பம் தான் காரணம் என்று தெரிந்து விட்டதே, இப்பொழுது என்ன செய்யப் போகிறாய்?' என்றவன் தன்னை பார்க்கும் பார்வையை பார்க்க இயலாது, தான் உணர்ந்த உண்மை சுட, நியாயத்தின் பாதையில் பயணம் செய்ய ஆரம்பித்தாள்.
"ஏய்! அம்மு... அம்மு..." என்ற குரலுக்கு செவி சாய்க்காமல், உடல் முழுவதும் சுமந்த வண்ணங்களுடன் நடைபாதையில் நடந்தவளின் முன் தன் இரு சக்கர வாகனத்தை நிறுத்தினான் நந்தன்.
"ஹேய்! இது என்ன கோலம் அம்மு? பைத்தியம் போலவே இருக்கிறாய்..." என்றவனின் பேச்சில் பைத்தியம் என்ற வார்த்தையை மட்டும் மனதில் அழுந்த பதித்துக்கொண்டாள்.
" காதல் பண்றேன். கல்யாணம் பண்ணப் போறேன். இப்படி எல்லாம் கம்பி கட்டிட்டு, கல்யாண மண்டபத்தில் பிடிக்கவில்லை என்று அம்போனு விட்டுட்டு ஓடிட்டு, அம்முன்னு சொன்ன, நல்லா கும்மு கும்முன்னு கும்மிடுவேன். கும்பி பாகம் செய்து விடுவேன் போய்விடு" என்று விரல் நீட்டி எச்சரித்தவளின் முன் கைகட்டி ரசித்து சிரித்தான் நந்தன்.
" என் அத்தை மகள் அருக்காணி எனக்காக காத்திருப்பாள் என்று நம்பி இருந்தேனே, ஆனால் அவளோ, ரெடிமேட் மாப்பிள்ளையோடு சேர்ந்து எனக்கு ஆப்பு அல்லவா வைத்து விட்டாள்" என்றான்.
"நண்டு மாமா. அது ஆப்பு இல்லை. உனக்காக தீரன் தந்த அல்வா. செம டேஸ்ட் போல!" என்றாள் தன் புருவங்களை ஏற்றி இறக்கி.
"ஓ... தீரன் மாமா செய்தால் சரியாகத்தான் இருக்கும்" என்றாள் பெருமூச்சுடன்.
" அம்மு உன்னிடம் இப்படி ஒரு மாற்றத்தை நான் எதிர்பார்க்கவில்லை. என்னே உன் பதிபக்தி!
என் மருத்துவமனையில் உயிர்களை எல்லாம் பிணைக் கைதிகளாய் பிடித்துக் கொண்டு என்னை மிரட்டியது சரியோ? என் காதலைக் கொன்றது சரியோ? நம் திருமணத்தை நிறுத்தி நம் குடும்பத்தை அவமானப்படுத்தியது சரியோ? உன்னை வைத்து பழி பழிவாங்கத் துடிக்கிறானே அது மிகவும் சரியோ? என் குடும்பத்திடம் இருந்து என்னை பிரித்து விட்டானே அது சரியா?" என்றான் ஆதங்கத்துடன் நந்தன்.
நடுவீதி என்றும் பாராமல், "ஆமாம்... தீரன் செய்தது எல்லாம் சரிதான்... சரிதான்... ஏன்? என்னை, உன்னை கொலை செய்தால் கூட சரிதான்" என்று கத்தினாள்.
அதிர்ந்த நந்தன், உடல் நடுங்கியபடி நின்று கொண்டிருந்த அமிழ்தாவின் கரத்தைப் பற்றி சாலையில் ஓரத்தில் இருந்த மரநிழலில் போடப்பட்டிருந்த கல் இருக்கையில் அமர வைத்தான்.
"ஹே..." என்று நந்தன் ஆரம்பிப்பதற்குள், "நிறுத்து!" என்பது போல் தன் கையை நீட்டி அவனைத் தடுத்தாள்.
"தீரனின் காரணம் என் அத்தம்மா, உன் பெரியம்மா, தீரனின் அம்மா மதுரவல்லி தான்" என்றாள் கண்களை எங்கோ வெறித்த படி.
"ஏய்! ஒரு பைத்தியத்திற்காக யாராவது பழி வாங்குவார்களா?" என்று நந்தன் முடிப்பதற்குள் அமிழ்தாவின் கரம் அவன் கன்னத்தில் இறங்கியது.
" நீ அவர்களைப் பார்த்து இருக்கிறாயா? " என்றாள்.
இரு கன்னங்களையும் பிடித்துக்கொண்டு மிரட்சியாக இல்லை என்று தலை அசைத்தான்.
" அவர்களை உனக்குப் பைத்தியம் என்று அடையாளம் காட்டியது யார்?" என்றாள் கண்களில் அனல் வீச.
தன் கன்னங்களை தடவிக் கொண்டே, " ரேணு அம்மா!" என்றான் தயக்கத்துடன்.
" மதுரவல்லி அத்தம்மா, பைத்தியம் இல்லை. பைத்தியமாக அடையாளம் காட்டப்பட்டார்கள் ரேணுகாவினால். ஏகபோகமாக நம் குடும்பம் தந்த ஆதரவினால்..." என்று மதுராவுக்கு எதிரான அநீதியை அடையாளம் காட்டினாள்.
"அம்மு... மதுரவல்லி பெரியம்மா ரொம்ப பாவம் இல்ல..." என்றான் காற்றாய் போன குரலில்.
" ஆமாம். நிச்சயம் நாம் அந்த பாவத்திற்கு பரிகாரம் செய்ய வேண்டும் " என்றாள்.
" உனக்கு நான் உறுதுணையாய் இருப்பேன் அம்மு. ஆனால் தீரனுடனான உன் வாழ்க்கை? "
"பச்... தீரனின் காயம் பெரியது நந்தன். ஏற்கனவே தீரனுக்கு.... சரி அதை விடு. நமது அடுத்த கட்ட நகர்வை திட்டமிடுவோமா?" என்று தனது யோசனைகளை முன் வைத்தாள்.
"முடியாது. உன்னை சிக்கலில் மாட்டி விட முடியாது. ஏற்கனவே உன் வாழ்க்கை அந்தரத்தில் நிற்கிறது. இதில் மேலும் உனக்கு துயரமா?" என்றான் அவள் யோசனைகளை மறுத்துக் கூறி.
" டேய் நண்டு மாமா! அவர்களின் வலியோடு ஒப்பிடும்போது இதுவெல்லாம் தூசு. என் பக்கம் நிற்க முடியுமா? முடியாதா? " என்றாள் தன் வலக்கையை நீட்டி.
அவளின் உள்ளங்கை மீது தனது உள்ளங்கையை சேர்த்தான் ஆதரவாக.
சச்சிதானந்தத்தின் வீட்டில் அனைவரும் இருக்கும் நேரம் பார்த்து உள்ளே நுழைந்தாள் அமிழ்தா.
"வாடா, வாம்மா, மாப்பிள்ளை வரலையா? நீ தனியாகவா வந்தாய்?" என்ற பல கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், அமைதியாய், வரவேற்பறையில் இருந்த சோபாவில் கால்களை மடித்துக் கொண்டு அமர்ந்தாள்.
அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க, கண்கள் சொருகி தலையைச் சாய்த்து மயங்கிச் சரிந்தாள் அமிழ்தா.
மொத்த குடும்பமும் அவளைச் சூழ்ந்து அவளை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருக்க, யாருடைய முறைப்பையும் பொருட்படுத்தாது, நந்தன் அவர்கள் அருகே வந்து, வழிவிடுங்கள் என்று அனைவரையும் விலக்கிவிட்டு அவளை சோதித்தான்.
"ஐ திங்க் ஷி இஸ் ப்ரெக்னன்ட்..." என்றான் அனைவரையும் ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டு.
மகிழ்ச்சியில் அந்த குடும்பம் ஆரவாரித்தது. கண்களை மெதுவாக இமை தட்டி திறந்தவளுக்கு, திருஷ்டி கழித்துக் கொண்டாடினார் பத்மாவதி.
"தங்கமே, அம்மாவுக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா? மாப்பிள்ளையிடம் சொன்னாயா?" என்றார் நிறைமதி.
கண்ணீருடன் மறுப்பாக தலையசைத்தாள்.
"ஏன்டா?" என்று வாஞ்சையாக நிறைமதி கேட்க, " இது அவர் குழந்தை இல்லையே" என்றாள் தலையை குனிந்து கொண்டே.
" மண்ணை முட்டிமோதும் விதை போல் - நெஞ்சைத் துளைக்கும் காதல்"
"ஏய்! என்ன உளறல் இது?" அதட்டினார் நிறைமதி.
தன் தாயின் கரத்தை தட்டி விட்டு, பதில் ஏதும் பேசாமல், தலை குனிந்தபடியே தன்னறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள் அமிழ்தா.
சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தன் குடும்பத்தைப் பார்த்து, " நீங்கள் எந்த பெண்ணிற்கு செய்த பாவமோ, நம்ம அமிழ்தாவின் தலையில் வந்து விடிந்து இருக்கு" என்று பொதுவாகச் சொல்லி அனைவர் மனதிலும் கல் எரிந்து விட்டுச் சென்றான் நந்தன்.
நிறைமதியின் முகம் பேயறைந்தது போல் மாறியது, " அம்மா, நந்தன் சொல்வதைப் பார்த்தீர்களா? ஒருவேளை நாம் பாவம் செய்து விட்டோமோ? " என்று பரிதவிப்பாய் பத்மாவதியிடம் புலம்பினாள் நிறைமதி.
"ம்... என் காலத்திற்குள் இன்னும் நான் எத்தனை பார்க்க வேண்டுமோ? அவனுக்கு என்ன உளறிக் கொண்டே இருப்பான். பயப்படாதே நிறை. நாம் அமிழ்தாவிடம் பேசிப் பார்க்கலாம். சின்ன பிள்ளை... ஏதாவது பதட்டத்தில் பேசி இருக்கலாம். நீ அவளிடம் போய் தன்மையாகப் பேசு" என்றார்.
" எவ்வளவு பெரிய வார்த்தையை பேசி விட்டு, அவள் அறைக்குள் அடைந்து விட்டாள். நான் தவிக்கும் தவிப்பை யாரிடம் சொல்வேன்" என்று புலம்பியபடி அமிழ்தாவின் அறைக் கதவை தட்டினார் நிறைமதி.
அவளிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே, "ஐயோ! என் பொண்ணு கதவை திறக்கவில்லையே. அவள் எதுவும் செய்து கொள்வாளோ என்று எனக்கு பயமாக இருக்கிறது. ஓடி வாருங்கள்" என்று கத்தினார் நிறைமதி.
ஆதிரன் விரைந்து சென்று அமிழ்தாவின் அறைக் கதவை தட்டி, "அமிழ்தா! வெளியே வா! என்ன பிரச்சினையாக இருந்தாலும் அண்ணன் பார்த்துக் கொள்கிறேன்" என்றான்.
"பாப்பா, எந்த ஒரு பிரச்சனைக்கும் மௌனம் தீர்வாக முடியாது. இப்படி அறைக்குள் அடைந்து கிடந்து நீ என்ன சாதிக்கப் போகிறாய். வெளியே வா" என்றார் அமுதன்.
"அமிழ்... அமிழ்..." என்று பரிதவித்தாள் தளர்மதி.
சச்சிதானந்தமும், பத்மாவதியும் அறை வாசலில் வந்து, " உன் மேல் எந்த தப்பும் இருக்காது தங்கம். நாங்கள் உன்னை முழுவதுமாக நம்புகிறோம். நீ தவறே செய்திருந்தாலும், உன் பக்கம் தான் நாங்கள் நிற்போம்" என்றனர்.
நடப்பவைகளை கண்டும் காணாமல் நின்று கொண்டிருந்தார் சிவானந்தம். ரேணுகா அவர் பின்னே நின்று கொண்டு, கைகளை பிசைந்து கொண்டே கண்களில் காட்சிகளை அளவெடுத்துக் கொண்டிருந்தாள்.
நிறைமதி கெஞ்சி, கொஞ்சி இறுதியாக அமிழ்தாவின் அறைக் கதவில் சாய்ந்து அமர்ந்து விட்டார் கண்களில் நீருடன்.
" அப்பா! நான் தீரனிடம் சென்று விசாரிக்க போகிறேன். அவன் விரும்பித்தானே என் தங்கையை திருமணம் முடித்தான். என் தங்கையை ஒரு நாளும் தவறாக நினைக்க கூட முடியாது. அப்படிப்பட்டவளின் மேல் இப்படி ஒரு பழியா? என் தங்கையின் மனதைக் குழப்பி அவன் தான் விரட்டி இருக்க வேண்டும்" என்று கோபமாக வீட்டை விட்டு வெளியேறினான் ஆதிரன்.
சாலையில் சென்று கொண்டிருந்த ஆதியின் காரை வழிமறித்தான் நந்தன். மிகுந்திருந்த சினத்தோடு, நந்தன் மேல் இருந்த கோபமும் சேர்ந்து கொள்ள காரை நிறுத்தாமல் சென்றவனின் காருக்கு முன் வந்து நின்றான் நந்தன்.
சட்டென்ற பிரேக்குடன் காரை நிறுத்தினான் ஆதி. நந்தன் அமைதியாக காருக்குள் ஏறினான். முகத்தை திருப்பியபடி அமர்ந்திருந்த ஆதிரனைப் பார்த்து, "நடந்தவைகளுக்கு, நடப்பவைகளுக்கு, நடக்கப் போறவைகளுக்கு எல்லாம் நியாயமான காரணம் இருக்கிறது ஆதி" என்றான்.
" அப்படி என்னடா காரணம் இருக்க முடியும்? நீ என் தங்கையை வேண்டாம் என்றதற்கு. தீரன் என் தங்கையை திருமணம் முடித்ததற்கு. அவள் வாழ்வு இப்பொழுது ஊசலாடிக் கொண்டிருப்பதற்கு"
" ஒரே ஒரு காரணம் தான்"
"என்ன?"
" தீரனின் அம்மா. மதுரவல்லி"
" அவர்களுக்கு என்ன? அவர்கள் ஒரு பை... " என்று ஆரம்பித்த ஆதியின் உதடுகள் வருத்தத்துடன் தலையசைத்த நந்தனைப் பார்த்து அசையாமல் நின்றது.
நடந்தவைகளை எல்லாம் சுருக்கமாக நந்தன் சொல்ல, ஆச்சரியமும், அதிர்ச்சியும் மிகுந்திருந்தது ஆதியின் முகத்தில்.
"இப்பொழுது நாம் என்ன செய்வது?" என்றான் ஆதி.
அமிழ்தா சொல்லச் சொன்னதாக சொல்லி சில யோசனைகளை ஆதிக்கு நந்தன் சொல்ல, "டேய்... தளிர்மதி பாவம் டா " என்றான் தொண்டைக்குள் எச்சிலை விழுங்கிக் கொண்டு.
"ஓ... உன் பொண்டாட்டி மட்டும் தான் பாவம். அப்போ உன் தங்கை பாவம் இல்லையா? மதுரா பெரியம்மா பாவம் இல்லையா? உன் பொண்டாட்டியோட அம்மா அந்த வில்லிக்கு நாம் பாடம் புகட்ட வேண்டாமா?" என்றான் கோபத்துடன் நந்தன்.
"சரிடா. அதோடு சேர்த்து ஒரு சாரிடா மச்சி" என்றான் ஆதி.
"ம்... என் அம்மா, அப்பா என்னை நம்பாதது கூட எனக்கு பெரிய கவலை இல்லடா. உறவைத்தாண்டி என் நண்பன், நீ நம்பவில்லையே..." என்றான் உணர்வற்ற குரலில்.
"அமிழ்தாவின் வாழ்க்கையோடு நீ விளையாடிய கோபம் தான் " என்றான் ஆதி.
" அப்போ தன் அம்மாவோட வாழ்க்கையில் விளையாடிய நம் மீது தீரனுக்கு கோபம் இருக்காதா ஆதி? "
பேச்சிழந்த நிலையில் அமைதியாக நின்ற ஆதியின் மீது தன் கையை வைத்து, " தீரனிடம் அம்முவின் நிலை என்னவென்றே தெரியவில்லை ஆதி.
நம் வீட்டில் உண்மையை நிரூபித்து, பெரியம்மாவிற்கு நியாயம் செய்த பிறகு தான் தீரனிடம் அம்முவிற்காக பேச முடியும்.
சிறுவயதில் அவன் என்னிடம் இருந்து பொருட்களை எல்லாம் தட்டிப் பறிக்கும் போது அது பொறாமை என்றே நினைத்த எனக்கு இன்று தான் அது அவன் தேடிய உரிமை என்றே புரிந்தது" என்றான் நந்தன் வருத்தத்துடன்.
" மதுரா அத்தை பாவம்தான் நந்தா. ஆனால் தீரன் விஷயம் எப்பொழுதும் என் மனதில் நெருடிக் கொண்டே இருக்கிறது. தீரனை பற்றி நான் பார்த்த, கேட்ட விஷயங்கள் எதுவும் எனக்கு உவப்பானதாக இல்லை" என்றான் ஆதி யோசனையுடன்.
"விடு மச்சி. உண்மை தெரியும் முன், நான் கூட முதலில் தீரனை மோசமாகத்தான் நினைத்தேன். நாம் இருவரும் இருக்கும்போது அம்முவின் வாழ்க்கையை அப்படி விட்டு விடுவோமா? ஒரு கை பார்த்து விடலாம் நண்பா " என்றான் நந்தன் ஆறுதலாக.
" தளிர்மதியிடம் உண்மையைக் கூறி, திட்டத்தை செயல்படுத்தலாமா?" என்றான் ஆதி.
"அடேய்! உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அம்முவே அனைவரிடமும் கூறியிருப்பாளே. நடப்பவைகள் எல்லாம் தத்ரூபமாக, நம்பும்படியாக அமைய வேண்டும் என்பதால்தான் யாரிடமும் கூற வேண்டாம் என்று கூறியிருக்கிறாள்.
அதையும் மீறி நான் உண்மையை சொன்னால், முட்டையை மந்திரித்து என்னை ரத்தம் கக்கி சாக வைத்துவிடுவேன் என்று மிரட்டி இருக்கிறாள் உன் அன்புத் தங்கச்சி.
மரியாதையாக அந்த சூனியக்காரி சொன்னதை மட்டும் செய் " என்றான் நந்தன்.
" உனக்கு அம்முவை இழந்ததில் வருத்தம்... " என்று இழுத்தான் ஆதி.
" ஆத்தாடி! உன் தங்கச்சி என் கன்னத்தில் விட்டா பாரு ஒரு அறை. மீ கிரேட் எஸ்கேப். பாவம் தான் தீரன். எத்தனை அறை வாங்கினானோ? இனி எத்தனை அறை வாங்கப் போறானோ? கடவுள் என்னை காப்பாத்திட்டான் குமாரு" என்று சிரிப்புடனே அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் நந்தன்.
" கடைசியில் உண்மை தெரிந்த பிறகு தளிர்மதியிடம் நான் எத்தனை அறை வாங்கப் போகிறேனோ?" என்று அவனுடன் இணைந்து சிரித்தான் ஆதி.
காரில் இருவரும் இணைந்து வீட்டிற்கு செல்லும்போது, "காரை நிறுத்து ஆதி" என்று கத்தினான் நந்தன்.
தன்னைப் பார்த்து முறைத்த நண்பனுக்கு, " ப்பா அறையில் அடைந்து கிடக்கும், உன் தங்கச்சி, அந்த சந்திரமுகி பேய்க்கு, சாப்பாடு வாங்கிச் செல்ல வேண்டும் என்பது எனக்கு இடப்பட்ட கட்டளை.
பின்புறம் பைப் ஏறி பால்கனியில் சென்று கொடுக்க வேண்டும். ஒரு டாக்டரை, ஸ்பைடர் மேனாக மாற்றிய பெருமை உன் தங்கச்சிக்கு தான்" என்று கூறிவிட்டு உணவை வாங்கி வந்தான்.
வீட்டிற்கு வந்ததும், நந்தன் பின்புறம் செல்ல ஆதி வீட்டிற்குள் நுழைந்தான்.
"தளிர்..." என்றவன் சத்தத்தில் அனைவரும் வரவேற்ப்பறைக்கு வந்தனர்.
"அத்தை தீரன் உங்கள் மகன் தானே" என்றான் ஆதி ரேணுகாவிடம்.
" நான் என் வயிற்றில் பத்து மாதம் சுமந்து பெறாவிட்டாலும், தீரன் தான் என் மூத்த மகன்" என்றாள் அன்பொழுக ரேணுகா.
" அப்படி என்றால் அமிழ்தாவை உங்கள் மகனுடன் சேர்த்து வையுங்கள்"
" நான் தீரனிடம் பேசுவது உங்கள் மாமாவிற்கு பிடிக்காதே. அவர் வார்த்தையை மீறி இதுவரை நான் எந்த செயலும் செய்தது கிடையாது"
சிவானந்தம் பெருமையாக ரேணுகாவை பார்த்தார்.
"ஓ... என் தங்கை வாழ வழி இல்லாமல் நிற்கும் போது, அவன் தங்கை மட்டும் நன்றாக வாழ வேண்டுமா? என் தங்கையின் வாழ்க்கைக்கு ஒரு விடை கிடைக்கும் வரை, தளிர்மதி உங்களுடனே இருக்கட்டும்" என்றான் ஆதி.
"ஆங்... அது எப்படி? தீரன் செய்த தவறுக்கு என் மகள் எப்படி பொறுப்பாக முடியும்?" சீறினாள் ரேணுகா.
" தீரன் உங்கள் மகன் என்று நீங்கள் தானே சொன்னீர்கள் "
" மகனா? மகன் மாதிரி " என்றாள் ரேணுகா குழைந்து.
" சிவா மாமாவாவது, உங்கள் புருஷனா? இல்லை புருஷன் மாதிரியா? " என்று நக்கல் அடித்தான் ஆதி.
"ஏய்! வார்த்தையை பார்த்து பேசு. மாப்பிள்ளை என்ற மரியாதை கெட்டுவிடும். என் புருஷனைப் பற்றி பேசுவதற்கு நீ யார்?" புதையலைத் தீண்ட வருவோரை எதிர்க்கும் சர்ப்பமாய் சீறினாள் ரேணுகா.
"வரே வாவ். என் அத்தை அம்மாவிற்கு இவ்வளவு கோபம் கூட வருமா? சரி. உங்கள் மகள் மீது இருக்கும் குறையை எடுத்துக் கூறினால் ஒத்துக் கொள்வீர்களா?" என்றான் ஏளனமான குரலில்.
" என் மகள் மீது அப்படி என்ன குறை கூற முடியும்? இந்த வீட்டின் சொத்தில் மூன்றில் இரண்டு பங்கு என் மகளுக்கு தானே" மிதப்பாக பணத்தை சுட்டிக்காட்டி மிரட்டினாள் ரேணுகா.
"இரண்டு பங்கா? அது என்ன கணக்கு?" என்றார் பத்மாவதி புரியாமல்.
" நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள். என் கணவர் தீரனை ஒதுக்கி வைத்ததால், என் கணவர் பங்கும் நிறைமதி பங்கும் என் மகளுக்கு தானே. இதை யார் மறுக்க முடியும்?" திமிராய் வெளிவந்தது ரேணுகாவின் உருவம்.
" சொத்து வந்தால் உங்கள் மகள் மீது இருக்கும் குறை மறைந்து விடுமா? " என்றான் ஆதி விடாப்பிடியாக.
" அப்படி என்ன குறை? " எரிச்சலாய் வந்தது ரேணுகாவின் குரல்.
குடும்பத்தினர் முன் வந்து தளிர்மதி இரு கரம் கூப்பி வணங்கினாள். தன் கணவன் ஆதிரனை பார்த்து எதுவும் சொல்ல வேண்டாம் என்பது போல் தலையசைத்து கண்ணீர் வடித்தாள்.
அதிர்ந்து போனான் ஆதிரன். ஒரு பொறுப்பான மனைவியாய் நடந்து கொள்ளவில்லை என்று ஒரு அழுத்தம் இல்லாத குற்றச்சாட்டை அனைவரின் முன்பும் வைக்க அவர்கள் நினைத்திருக்க, தாங்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியத்தை உடைக்க இருப்பதாய் நினைத்து தன் மனைவி கலங்குவதை எண்ணித் தவித்தான்.
தன் மனைவி அனைவரும் முன்பும் கண்ணீர் விடுவதைக் கண்டு கணவனாய் ஒரு ஆண்மகனாய் வெட்கினான் ஆதிரன். "அப்படி இல்லை" என்று அவளை சமாதானப்படுத்த முடியாத தன் கையறு நிலையில் துடி துடித்தான்.
சிவா மற்றும் ரேணுகாவின் அருகில் வந்து அவர்களின் காலில் விழுந்த தளிர்மதி, பார்வையால் அவர்களிடம் எதுவும் பேச வேண்டாம் என்று கோரிக்கை வைத்து அவர்களோடு அவர்களின் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
" இந்த வீட்டில் பெரியோர்களான எங்களுக்கு மரியாதையே கிடையாதா? " என்றார் சிவானந்தம்.
" நியாயம் செய்தவர்களுக்கு நியாயம் கிடைக்கும். அநியாயம் செய்தவர்களுக்கு அநியாயம் தான் பரிசாக கிடைக்கும் " என்று பூடகமாக கூறிவிட்டு, தன் பெற்றோரிடம், 'எல்லாம் சரியாகும், நான் பார்த்துக் கொள்கிறேன் ' என்று கண்களால் சமாதானம் செய்து ஆதிரனும் அவன் அறைக்குள் நுழைந்தான்.
பத்மாவதி பூஜையறையில் இருந்த தெய்வங்களின் பாதங்களில் சரணடைந்தார்.
மூடிய அறைக்குள் ரேணுகா தன் மகளை ஓங்கி அறைந்தாள். "ரேணுகா... " என்ற சிவானந்தத்தின் அதட்டலையும் பொறுப்பெடுத்தாது, "என்ன காரியம் செய்து வச்சிருக்க? நீயும் பேசாமல், எங்களையும் பேச விடாமல் அப்படி என்ன குறை உனக்கு? உனக்காக, உன் வாழ்க்கைக்காக நான் பட்ட பாடு என்ன என்று எனக்கு மட்டும்தான் தெரியும்" என்று கொதித்தாள் ரேணுகா.
அமைதியே உருவான ரேணுகாவின் புது அவதாரத்தில் சற்றே குழம்பி நின்றார் சிவானந்தம்.
"அப்பா நீங்கள் சிறிது நேரம் வெளியில் நிற்க முடியுமா?" என்று கெஞ்சினாள் தளிர்மதி.
தான் அணிந்திருந்த சேலையை ஒரு நிமிடம் கீழிருந்து மேலாக தன் அன்னையிடம் உயர்த்திக் காட்டி மறைத்தாள் தளிர்மதி.
தீயில் வெந்து கரிக்கட்டை போல் இருந்த, இரு தொடைகளில் தெரிந்த தழும்புகள் பார்ப்பதற்கு குரூரமாக இருந்தது.
" ஐயோ கடவுளே இது என்ன? " என்று அலறினாள் ரேணுகா.
"திருமணம் முடிந்த முதல் கார்த்திகை தீபத்தின் போது, சேலையில் தீ பற்றி தீக்காயம் ஏற்பட்டது. ஆதி மாமா தான், வீட்டில் யாருக்கும் தெரியாமல் என்னை பார்த்துக் கொண்டார்கள்.
நீங்களே அருவருப்பாகத்தானே பார்த்தீர்கள். ஒவ்வொரு முறையும் நான் இதைப் பற்றி குற்ற உணர்வில் பேசும்போது, மாமா இதை ஒரு குறையாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால் இன்று அனைவர் முழுவதும் இந்தக் குறையை என் மாமா எடுத்துக் கூறினால் என்னால் தாங்க முடியாது அம்மா.
வெளியில் தெரியும் நிறத்திற்கு மதிப்பு கொடுக்கும் உலகம் தானே இது!" என்று விரக்தியாக தளிர்மதி பேச, மானசீகமாக மதுரவல்லியிடம் மாறி மாறி கன்னங்களில் அறை வாங்கினாள் ரேணுகா.
ஆனால் அந்த திருந்தாத ஜென்மம், "அந்த அமிழ்தா இங்கு வந்து உட்கார்ந்திருப்பதால் தானே இந்த பிரச்சனை. அவளை இந்த வீட்டை விட்டு எப்படி வெளியேற்றுகிறேன் என்று மட்டும் பார். என் மகளுக்கு இல்லாத இடம் வேறு யாருக்கும் கிடையாது" என்று வன்மம் கொண்டது.
"ச்சே... அவளே வாழ வழி இல்லாமல் இங்கு வந்திருக்கிறாள். அவளுக்கு நான் ஆறுதலாக இருக்க வேண்டும். அவள் வாழ்வை அழித்துவிட்டு நான் எப்படி வாழ முடியும்?
என்னுடைய கவலை எல்லாம் என் ஆதி மாமாவின் திடீர் மாற்றம் தான். நீங்கள் என்னை குழப்ப வேண்டாம் அம்மா. என் மாமாவிடம் நானே பேசிக் கொள்வேன் " என்றாள் தளிர்மதி.
அறையில் இரண்டு கள்ள பீஸ்களும் சேர்ந்து லெக்பீஸ்களை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார்கள்.
" அம்மு அடுத்த பிளான் என்ன? " வாய்க்கொள்ளாமல் உணவை அடைத்துக் கொண்டே நந்தன் கேட்டான்.
" இந்நேரம் அந்த அங்கிள் ஜி, தன்னுடைய அடுத்த கட்ட காயை நகர்த்த ஆரம்பித்து இருக்கும். கண்டிப்பாக அந்த ரேணுகாவிற்கு பெரிய ஆப்பாகத்தான் இருக்கும். இன்றைக்கு இந்த குழப்பம் போதும்.
நீ போய் என் அண்ணன் கூட இரு. அந்த தேவதாஸ் இந்த நேரம் பார்வதியை பிரிந்து புலம்பிக் கொண்டிருக்கும். ஆதிக்கும் தளிருக்கும் என்ன பிரச்சனை என்று தெரியலையே.
தளிர் கலங்கிச் சென்றதை நான் மேலிருந்து பார்த்தேன். நான் அவனை சீனி வெடியை கொளுத்தி போடச் சொன்னால் அவன் அணுகுண்டை கொளுத்தி போட்டு இருக்கிறான். தளிரும் கெட்டிக்காரி தான். தன் வாழ்க்கையை விட்டு விடமாட்டாள். என் அண்ணனும் அவளை விட்டு விட மாட்டான். அவர்களாக பேசி சரி செய்து கொள்ளட்டும்.
தன் மகளுக்கு என்றதும் அந்த ரேணுகாவின் கண்களில் ஏற்பட்ட தவிப்பை நான் பார்த்தேன் நண்டு.
தளிரிடம் இப்பொழுது நாம் உண்மையை சொன்னால் காரியம் கெட்டுவிடும். உப்பைத் தின்னவர்கள் குடும்பம் தண்ணீர் குடித்து தானே ஆகவேண்டும். விட்டது தொல்லை என்று தீரனும் நினைத்து விட்டார் பார்த்தியா?" என்றாள் கண்களில் வலியுடன் அமிழ்தா.
மறுநாள் காலையில் அமைதியாகவே இருந்தது சச்சிதானந்தத்தின் வீடு.
"சார் போஸ்ட்..." பதிவுத் தபாலுடன் உள்ளே நுழைந்தார் போஸ்ட்மேன்.
"ரேணுகா யாருங்க? உங்களுக்குப் போஸ்ட் "
இரவு முழுவதும் மகளை நினைத்து தூங்காமல், கண்களில் எரிச்சலுடன், போஸ்டை வாங்கிப் படித்தவள், கண்களை கசக்கி கொண்டே மீண்டும் மீண்டும் படித்தாள்.
திருமதி மதுரவல்லி சிவானந்தத்தின், கணவர் மிஸ்டர் சிவானந்தத்தை முறைப்படி விவாகரத்து வாங்காமல், சட்டத்திற்கு புறம்பாக திருமணம் முடித்ததால் ரேணுகாவின் மேல் வழக்குத் தொடர்ந்திருப்பதாக மதுரவல்லியின் முத்தான கையெழுத்துடன் வழக்கின் சாராம்சத்தை சொன்னது பதிவுத் தபால்.
ஒருபுறம் அமிழ்தாவின் ஆட்டம், மறுபுறம் ருத்ர தீரனின் ஆட்டம் அரங்கேறியது.
"காதல் நாடி காதலாகி வாழ்பவன்- வாழ்க்கைக்கு காதலே துணை"
ரேணுகா அதிர்ந்து நின்றது ஒரு நிமிடமே. 'அவள் பைத்தியக்காரி என்பதற்கு மொத்த குடும்பமும் சாட்சி. உறவே வேண்டாம் என்று அவள் தந்தை எழுதிக் கொடுத்த காகிதம் செல்லாதாகிக் போய்விடுமா? தராசுத் தட்டில் என்றும் என் பக்கமே அனைவரும் நிற்பதால், என்னை யாராலும் அசைக்க முடியாது.
இத்தனை வருடம் சமாளிக்கத் தெரிந்தவளுக்கு, இனி சமாளிக்கத் தெரியாதா?' என்று இகழ்ச்சியாய் புன்னகை செய்தபடியே, கைகளில் இருந்த பதிவுத் தபாலை அலட்சியம் செய்தாள்.
சிவானந்தம் என்றும் தன் பக்கம் இருப்பதால், தன் மகளின் வாழ்வை முதலில் சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு மேலோங்கியது.
நிறைமதியிடம் வந்தவள், " என்ன நிறை? வந்த நாளிலிருந்து உன் மகள் அந்த அறைக்குள்ளே அடைந்து கிடக்கிறாள். குழந்தை முறையற்று வந்திருந்தால், தீரனுக்கு தெரியாமல் கலைத்து விடலாமே" என்றாள்.
"அண்ணி!" என்று அதிர்ந்தாள் நிறைமதி.
" யாருக்கும் தெரியாமல், சரி செய்து விட்டு தீரனிடம் அனுப்பி விடலாமே... "
" நாங்களே வேதனையில் இருக்கிறோம். என் பெண்ணைப் பற்றி தவறாகப் பேசி என் பாவத்தை வாங்கிக் கொள்ளாதீர்கள்" கடுமையாக எச்சரித்தாள் நிறைமதி.
" பாவமா? உன் பெண்ணோட வாழ்க்கையை நீ பார்ப்பது போல், என் பெண்ணோட வாழ்க்கையை நான் பார்க்க வேண்டுமே. அறைக்குள்ளே அடைந்து கிடப்பதால் பைத்தியம் பிடித்திருக்கும். முதலில் நன்றாக வைத்தியத்தை பார்" என்று சூடாக பதில் தந்தாள் ரேணுகா.
" அறைக்குள் அடைந்து கிடந்தால் பைத்தியமா? " என்றவரின் மூளையில் மின்னல்கள் பளிச் பளிச்சென்று வெட்ட, "நீங்க .... நீ... இப்படித்தான் எங்கள் மதுரா அண்ணியையும் பைத்தியமாக சித்தரித்தாயா?" என்றார் நடுங்கும் குரலில்.
ஒரு நொடி உள்ளே திடுக்கிட்டாலும் அதனைப் புறந்தள்ளிவிட்டு, " நான் ஆயிரம் சொல்லுவேன். அதை நீங்கள் நம்பினால் நானா பொறுப்பாக முடியும்? " அசட்டையாக பதில் தந்தாள் ரேணுகா.
"ச்சீ... செய்வதையெல்லாம் செய்துவிட்டு எவ்வளவு தெனாவட்டாக பேசுகிறாய். உன் வண்டவாளத்தை இன்று தண்டவாளம் ஏற்றுகிறேன்" என்று கூறிவிட்டு, "சிவா அண்ணா... சிவா அண்ணா..." வீடு அதிரக் கத்தினாள் நிறைமதி.
சுட்டுவிரலை காதில் விட்டு குடைந்து கொண்டு தைரியமாக நின்றாள் ரேணுகா.
"ம்... என்ன?" அளவாய் வந்தது சிவானந்தத்தின் வார்த்தைகள்.
"என் மகளை உன் பொண்டாட்டி பைத்தியம் என்கிறாள். இந்தக் கொடுமையை நீ என்னவென்று கேட்க வேண்டும் அண்ணா" என்றார் நிறைமதி கோபத்துடன்.
சிவா தன் மனைவியின் பக்கம் திரும்பியதும் முகத்தை பாவம் போல் வைத்துக் கொண்ட ரேணுகா, " தளர்மதியின் வாழ்க்கையை சரி செய்வதற்காக, அமிழ்தாவிடம் பேசச் சொன்னேன். என் மகளின் வாழ்க்கைக்காக நான் கையேந்தி நிற்பதால் இப்படிப்பட்ட அவச் சொற்களை நான் கேட்கிறேன்" நீலிக் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள் ரேணுகா.
"அண்ணா! நம்பாதே! உன்னையையும் மதுரவல்லி அண்ணியையும் பிரித்தது கூட இந்த சதிகாரியாகத் தான் இருக்கும்" என்றாள் ஆக்ரோஷமாக.
" உங்களிடம் என்றாவது மதுரா அக்காவை பற்றி தவறாக சொல்லி இருக்கிறேனா? " கண்களில் நீர் மின்ன கேட்டாள் ரேணுகா.
இல்லை என்பது போல் சிவானந்தத்தின் தலை அசைந்தது.
"ஓ... அப்படி என்றால் மதுரா அண்ணியைப் பற்றி என்றாவது உன்னிடம் உயர்வாக பேசி இருக்கிறாளா?" என்றாள் வேகமாக நிறைமதி.
குழப்பத்துடன், மீண்டும் இல்லை என்பது போல் சிவானந்தத்தின் தலை அசைந்தது.
சிவானந்தத்தின் காலடியில் விழுந்த ரேணுகா, " நானா உங்களிடம் என்னை திருமணம் செய்து கொள்ள கேட்டேன்? நீங்கள் அனைவரும் கேட்டதால்தானே மதுரா அக்காவின் இடத்திற்கு நான் வந்தேன். மறந்து விட்டீர்களா? " என்றாள் பாவப்பட்ட குரலில் ரேணுகா.
"நிறைமதி, ரேணுகாவை பற்றி இப்படி அவதூறாக பேசாதே " குரல் உயர்த்தினார் சிவா.
"ஏன்? சொல்லக்கூடாது? நியாயத்தை சீர்தூக்கிப் பார்க்கச் சொல்ல யார் வேண்டுமானாலும் குரல் கொடுக்கலாம்" என்றார் அமுதன்.
"என்ன பிரச்சனை?" என்று வந்தனர் சச்சிதானந்தம் மற்றும் பத்மாவதி தம்பதியினர்.
கணவன் தனக்கு துணை இருக்கும் தைரியத்தில் ரேணுகாவின் தலை நிமிர்ந்து நின்றது.
" அம்மா! நாம் மதுரா அண்ணிக்கு பெரிய துரோகம் செய்துவிட்டோம்" என்று தாயிடம் சென்று கதறி அழுதார் நிறைமதி.
மதுரவல்லியை பற்றிய அனைவரின் பார்வைக் கோணங்கள் மாற்றப்பட்டன.
" நீங்கள்தானே மதுரவல்லி அக்கா, பைத்தியம். பைத்தியத்தின் மகன் தீரனுடன் உன் குழந்தையை பார்த்து பழக விடு என்று சொன்னீர்கள் " என்றார் அபிராமி.
"ஏய்! உன்னிடம் வந்து நான் சொன்னேனா?" எகிறினாள் ரேணுகா.
" என் மனைவி என்றும் பொய் சொல்ல மாட்டாள்" என்று அபிராமிக்கு ஆதரவாக வந்து நின்றார் அன்பானந்தம்.
நந்தனும், ஆதிரனும் தோளில் கை போட்டுக் கொண்டு இறங்கி வந்து, "எங்களுக்கு தீரனை பைத்தியக்காரியின் மகனாய் அடையாளம் காட்டியது நீங்கள் தானே" என்றனர்.
" தான் கருப்பாக பிறந்ததை எண்ணி, பெற்ற பிள்ளையை தூக்க அசிங்கப்பட்டு, அறைக்குள் அடைந்து கிடந்த அவளை பைத்தியம் என்று சொல்ல மாட்டார்களா? " ஆத்திரத்தில் வெடித்தாள் ரேணுகா.
அனைவரின் குற்றம் சாட்டும் பார்வைகள் தன் மீது படிவதை உணர்ந்து அவசரமாக, "அன்று இரவில் நீங்கள் வாழ அழைத்தும், அக்கா தானே உங்களோடு வாழ மறுத்து விட்டார். நான் அவளின் வாழ்க்கையை பறித்து விட்டது போல் அனைவரும் பேசுகிறார்கள் பார்த்தீர்களா?" என்று தன் ஆதரவிற்காக சிவானந்தத்தை அழைத்தார் ரேணுகா.
" எங்கள் இருவருக்கும் மட்டும் தெரிந்த உண்மை உனக்கு எப்படி தெரியும்? " என்ற சிவானந்தத்தின் குரலில் நெருப்பை மிதித்தது போல் திடுக்கிட்டாள் ரேணுகா.
" யாரிடமும் எந்த வார்த்தையும் பேசாத மதுரவல்லி உன்னிடம் மட்டும் எப்படி பேசினாள்? " அம்பாய் துளைத்தது பத்மாவதியின் கேள்வி.
" நிறத்தை வைத்து மதுராவை மட்டம் தட்ட முடியாது. அவள் நிறமே அவளுக்கு ஆளுமை. நீ திட்டமிட்டு தான் இந்த வீட்டிற்குள் நுழைந்தாயா? தீரனை இந்த வீட்டை விட்டு வெளியேற்றியதும் உன் சதித்திட்டமா?" அதிரடியாய் வந்தது சச்சிதானந்தத்தின் கேள்வி.
" நீங்கள் யார் என்னை நம்பவில்லை என்றாலும் எனக்கு கவலை இல்லை. நீங்கள் என்னை நம்புகிறீர்கள் தானே" என்றாள் சிவாவை பார்த்து உருக்கமாக.
மதுரவல்லியின் நிறத்தை ரேணுகா அடிக்கோடிட்டுக் காட்டிய காட்சிகள் எல்லாம் நினைவில் ஒளிர்ந்து யோசனையுடன் நின்றார் சிவானந்தம்.
" என் மீது தான் தவறு என்பதற்கு உங்களிடம் என்ன சாட்சி இருக்கிறது? " தன் வலுவான வாதத்தை முன் வைத்தாள் ரேணுகா.
"மதுரவல்லியின் மருமகள், நான் இருக்கிறேன்..." என்று மாடிப்படியிலிருந்து இறங்கி வந்தாள் அமிழ்தா.
'அந்தப் பைத்தியம் நிச்சயம் யாரிடமும் வாயைத் திறந்திருக்காது. அவள் வாயை நான் பூட்டிய பூட்டு அப்படி. உனக்கு என்ன தெரிந்திருக்கப் போகிறது?' என்று மிதப்பாகப் பார்த்தாள் ரேணுகா.
" அச்சச்சோ! சாதகமாய் இருந்த ஜாதகம் இப்பொழுது பாதகமாய் மாறிவிட்டதே!" போலியாக ஆச்சரியப்பட்டாள் அமிழ்தா.
உயிர் உறைய அதிர்ந்து நின்றாள் ரேணுகா.
" சிறு தீப்பொறியில் காட்டை எரித்த உங்கள் வித்தையை, உங்களுக்கே பயன்படுத்தி விட்டேன் பார்த்தீர்களா!" கைகளைக் கட்டிக் கொண்டு நாவின் நுனியால் கன்னக்கதுப்பை நிரடினாள்.
"மதுரா உன்னிடம் என்ன சொன்னாள்?" குரலில் பிசிர் தட்டியது ரேணுகாவிற்கு.
நடந்தவைகளை விளக்கிக் கூறினாள் அமிழ்தா.
" நிமிர்ந்து நிற்பவர்கள் எல்லாம் பலம் பொருந்தியவர்கள் என்றோ, வளைந்து கொடுப்பவர்கள் எல்லாம் பலம் குறைந்தவர்கள் என்று நினைத்து விடாதீர்கள் மாமா.
வளைந்து கொடுத்துக் கொண்டே இருக்கும் வில் ஒரு நாள், எழுந்து நிற்கும்போது, அதன் அம்பில் நம்மால் தப்பிக்க முடியாது.
மனைவியாய் மதிக்கவில்லை என்றாலும் குறைந்தபட்சம் ஒரு சக மனுஷியாய் கூட மதித்து நீங்கள் அவர்களிடம் பேசவில்லையே.
அந்த இடத்தில்தான் இதோ இந்தப் பொய்மை ஜெயித்தது" என்று ரேணுகாவை சுட்டிக்காட்டினாள்.
"உங்களுக்காகவும், தான் பெற்ற மகனுக்காகவும் தன் வாழ்க்கையை இழக்கத் துணிந்த என் அத்தம்மாவின் தைரியத்தின், கம்பீரத்தின் முன் நீங்கள் அனைவரும் தூசு.
இந்த வீட்டில்தான் ஒரு உயிர் இறக்காமல் இறந்தது. இந்த உணர்வற்ற வீட்டிலிருந்து, உயிர் இல்லாமல் வெளியேற்றப்பட்டது.
போலி நாடகங்கள், புலம்பிய நாட்கள், புரியாத புதிர்கள் என கசியும் வலியோடு, தன் நினைவுகளையும் பிரித்து எடுத்துக் கொண்டு இருளில் அடைந்து கொண்டது.
பெண்மை போற்றும் தாய்மையையும் விட்டுக் கொடுத்தது.
உங்களுக்காகவே வாழ்க்கையை விட்டுக் கொடுத்த அந்த ஜீவனுக்காக, ஒரு நொடி கூட அவர்கள் பக்கம் நின்று, யோசிக்கக்கூட செய்யாத நீங்கள் எப்படி அவருக்கு கணவராக இருக்க முடியும்? இதோ இந்த காட்டேரிக்கு தான் கணவனாக இருக்க முடியும்" என்றாள் குற்றம் சாட்டும் குரலில்.
சிவானந்தத்தின் உச்சந்தலையில் சுத்தியலால் அடித்தது போல் இருந்தது அவளின் ஒவ்வொரு வார்த்தைகளும்.
இத்தனை வருடம் தான் மதுராவை ஒதுக்கி வைத்ததாக அவர் நினைத்திருக்க, தான் ஒதுக்கப்பட்ட, ஏமாற்றப்பட்ட நயவஞ்சக் கதையை கேட்டதும், தன் மேல் எழுந்த கோபம் கலந்த அருவருப்புடன் ரேணுகாவை பார்த்தார்.
சிவானந்தத்தின் அருகில் ஓடிய ரேணுகா அவர் கையைப் பிடித்து உலுக்கினார். " இது எனக்கு எதிராக நடக்கும் திட்டமிட்ட சதி!" என்று கெஞ்ச அவர் கையில் இருந்த தபால் கீழே விழுந்தது.
" மதுரவல்லி " என்ற கையெழுத்தைக் கண்டதும் குனிந்து சிவா அந்த தபாலை எடுத்துப் படிக்க உடல் இறுக நின்றாள் ரேணுகா.
தபாலை படித்து முடித்ததும் ரேணுகாவின் கையை தன் மேல் இருந்து தட்டி விட்டார் சிவானந்தம்.
செய்வதறியாது திகைத்து நின்ற மகனின் தோற்றத்தைக் கண்டதும் அருகில் வந்த சச்சிதானந்தம், தபாலைப் படித்ததும் உள்ளம் சோர்ந்தார்.
தன்னறைக்குள் சென்று சில காகிதங்களை எடுத்து வந்தவர், "என்னால் முடிந்தது" என்று கூறி, மதுராவின் அப்பா சேதுபதி எழுதிக் கொடுத்த காகிதங்களை கிழித்து தூர எறிந்தார்.
பதறி அடித்துக் கொண்டு ரேணுகா அருகில் வருவதற்குள் எல்லா காகிதங்களும் தூள் தூளாகி காற்றில் மிதந்தது.
" ஐயோ என் வாழ்க்கையையும், என் மகளின் வாழ்க்கையையும் சிதைத்து சின்னா பின்னம் ஆக்குகிறீர்களே. நீங்கள் எல்லோரும் நல்லாவே இருக்க மாட்டீர்கள் " சாபம் விட்டாள் ரேணுகா.
"உங்களுக்கு மகளாய் பிறந்த ஒரு குறையைத் தவிர தளிர்மதிக்கு வேறு குறை எதுவும் இல்லை" என்றான் ஆதிரன்.
அறை வாசலில் இருந்து இதனைக் கேட்டுக் கொண்டிருந்த தளிர்மதி ஓடி வந்து, "மாமா" என்று அணைத்துக் கொண்டாள் ஆதிரனை.
' என்னை நீ எப்படி அப்படி நினைக்கலாம் ' என்று கண்களால் ஆதிரன் கோபப்பட,
'என்னை மன்னித்துவிடு' என்று கண்களால் தளர்மதி கேட்க, ஆதரவாய் அணைத்துக் கொண்டான் தன் இணையை.
" நான் தவறு செய்து விட்டேன். நான் தவறு செய்து விட்டேன்" என்று வாய்க்குள் முணுமுணுத்த சிவானந்தத்தின் கை கால்கள் வெட்டி இழுக்க, நிதானம் இன்றி தரையில் விழுந்தார்.
அவர் அருகில் செல்ல வந்த ரேணுகாவை மொத்த குடும்பமும் ஒதுக்கியது. சிவானந்தத்தை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஒரு கால், ஒரு கை மற்றும் ஒரு பக்க முகவாதத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார் சிவானந்தம்.
தாயின் சுய ரூபத்தில் அதிர்ந்து போன தளர்மதி அவரை ஒதுக்கி வைத்தாள்.
அன்றிலிருந்து ரேணுகாவோடு யாரும் பேசவில்லை. தனிமையில், குழப்பத்தில் தனக்குத்தானே இறுகிக் கொள்ள ஆரம்பித்தாள் ரேணுகா.
சிவானந்தத்தின் அலுவலகத்திற்குச் சென்றாள். அவரின் மனைவி என்ற உரிமையை நிலை நாட்ட தனியாகப் போராடினாள்.
மதுரவல்லியின் சார்பில் தீரன் தொடர்ந்த வழக்கில், ரேணுகா சச்சிதானந்தத்தின் திருமணம் செல்லாது என்று அறிவித்து, சட்டப்படி சிவானந்தத்தின் மனைவி மதுரவல்லி தான் என்று அறிவித்தது நீதிமன்றம்.
வழக்கின் தோல்வி, அனைவரின் ஒதுக்கம், சிவானந்தத்தின் அருகில் கூட செல்ல முடியாத நிலை, தளிர் மதியின் வெறுப்பு என அனைத்தும் சேர்ந்து அவர் மன அழுத்தத்தை தூண்டி விட்டது.
அலுவலகத்தில் சிவாவின் சுழல் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்த ரேணுகா, தலையைக் கவிழ்ந்து மேஜை மீது படுத்திருந்தாள்.
திடீரென்று காதில் கேட்ட கைத்தட்டல் ஒலியில் திடுக்கிட்டு முழித்தவள், எதிரே நின்றவர்களைப் பார்த்து அதிர்ந்து நிற்க, சுழல் நாற்காலியோ, சுழன்று பின்னால் சுவற்றில் முட்டி மோதி நின்றது.
ரேணுகாவின் கண்கள் விடாமல் பார்த்தது, தீரனின் அருகில் நின்ற மதுரவல்லியைத்தான்.
"ரேணு, நல்லா இருக்கியா?" என்றார் மதுரா ஆளுமையும் கம்பீரமும் மிக்க குரலில்.
பதில் பேச முடியாமல் நின்ற ரேணுகாவின் அருகில், புடவைத் தலைப்பை விரலிடுக்கில் பிடித்துக் கொண்டு, நிதானமாக அதே சமயம் அழுத்தமான காலடிகளுடன் வந்து நின்றார் மதுரா.
" அச்சச்சோ அவர்கள் எப்படி நல்லா இருப்பார்கள் அம்மா? ஒரு ஊரில் ஒரு நரி, நாய் வேஷம் போட்டு நடித்ததாம். பல நாட்கள் தன் குணத்தை மறைத்த நரி, ஒரு நாள் ஊளையிட்டு மாட்டிக்கொண்டதாம். ஊ... ஊ... " என்று நகைத்தான் தீரன்.
"ஏய்! என் பேச்சை நம்பி வாழ்க்கையை விட்டுக் கொடுத்துவிட்டுப் போனது உன் தாயின் தவறு. குடுமி இருக்கிறவ அள்ளி முடியத்தான் செய்வா.
ஒரு வார்த்தை தான், அந்த வார்த்தைக்கே புருஷனை விட்டுக் கொடுத்துட்டா. என் முன்னே தாயும் மகனுமாக வந்து நின்றாலும், இத்தனை வருடம் நீங்கள் பிரிந்து வாழ்ந்தது இல்லை என்று ஆகிவிடுமா?
என் திருமணத்தை செல்லாததாக மாற்றி விட்டால் நான் சிவாவோடு வாழ்ந்த வாழ்வு இல்லை என்று ஆகிவிடுமா? ஆயிரம் முறை சொல்வேன் உன் அம்மா அப்பொழுதும் பைத்தியக்காரி தான். இப்பொழுதும் பைத்தியக்காரி தான்" ஆத்திரத்தில் வார்த்தைகளை அள்ளிக் கொட்டினாள் ரேணுகா
"ஹே..." என்று ரேணுகாவை தாக்குவதற்கு முன் வந்த தீரனை தடுத்து விட்டு, " ஓ புருஷனை பறித்து விடுவேன் என்ற பயமா? அடடா எனக்கு பிச்சைக்காரியின் தட்டில் பிச்சை போட்ட காசை திருப்பி எடுத்துக்கொள்ளும் பழக்கம் இல்லையே" என்றார் மதுரா.
" யாரைப் பார்த்து? " என்ற ரேணுகாவின் முன் வந்த தீரன், சுழல் நாற்காலியை தன் அன்னை அமர்வதற்கு வாகாய் திருப்பி, மதுராவை அமர வைத்தான்.
தன் அன்னையின் அருகில் அவரின் மெய்க்காப்பாளன் போல் கால்களை அகட்டி, கைகளை பின்னே கட்டிக்கொண்டு நிமிர்ந்து நின்றான் தீரன்.
" என்னுடைய அலுவலகம், என்னுடைய நாற்காலி நீ எப்படி அமரலாம்?" என்று கொதித்தாள் ரேணுகா.
"சட்டப்படி சிவானந்தத்தின் மனைவி மதுரவல்லிக்குத் தான் அவரின் சொத்துக்கள் அனைத்தும். படிக்கத் தெரியும் என்றால் இந்த நகலைப் படியுங்கள்" என்றான் தீரன்.
"துரோகம்..." என்று கத்தினாள் ரேணுகா.
" நம்பிக்கையை விதையாக்கி துரோகத்தை முளைக்க வைத்து யார்?" என்ற மதுராவின் கேள்வியில் முகம் கருத்தது ரேணுகாவிற்கு.
"அசையாமல் இங்கேயே நின்றால் எப்படி? பாதை அந்தப் பக்கம் என்று கை காட்டினான்" தீரன்.
மதுரவல்லியின் மாற்றத்தில் நிலை தடுமாறி, வேறு வழி இல்லாத சூழ்நிலையில் அலுவலகத்தை விட்டு வெளியேறினாள் ரேணுகா.
" ருத்ரா! என் வாழ்க்கையை சரி செய்தது போதும். உன் வாழ்க்கையை எப்பொழுது சரி செய்யப் போகிறாய்? என் மருமகளை எப்பொழுது என்னிடம் அழைத்து வர போகிறாய்? உன்னை வளர்க்க முடியாத ஏக்கத்தை எல்லாம் உன் பிள்ளைகளை சுமந்து தீர்த்துக் கொள்வேன்.
என் அவப்பழியை நீக்கி விட்டாய். என் வாழ்வின் தவப் பயனை பெற்றுக் கொடுத்து விடு ருத்ரா!" என்றார் மதுரா.
" உங்களுக்கு ஆதரவாக நான் ஒரு ஆயுதம் எடுப்பதற்குள், பத்து ஆயுதம் ஏந்தி சச்சிதானந்தம் குடும்பத்தை சூரசம்ஹாரம் செய்து விட்டாள் உங்கள் மருமகள்.
இப்பொழுது நான் தலையை விட்டால், என்னையும் வதம் செய்து விடுவாள். பார்த்து பதமாகத் தான் நடந்து கொள்ள வேண்டும் உங்கள் அருமை மருமகளிடம். என் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் வேறு இருக்கின்றன" என்று பயந்தது போல் நடித்தான் தீரன்.
" அவ்வளவு அருமையான புத்திசாலியான பெண். உன்னிடம் எப்படி மாட்டிக் கொண்டாள்? " என்றார் கேள்வியாக.
"அம்மா... என் வாழ்க்கை ஏற்கனவே பிரேக் டான்ஸ் ஆடுகிறது. இதில் நீங்கள் இப்படி உங்கள் மருமகளுக்கு கொடி பிடித்தால், டப்பாங்குத்தே ஆடிவிடும்.
பழிவாங்குவதற்காக பகடைக்காயாய் அவளை நான் தேர்வு செய்தாலும், என் அன்னையை எனக்காக மீட்டெடுத்து கொடுத்தாள். அதற்காகவே அவளிடம் சரணடையலாம் ஆயுள் முழுவதும்" என்று கண்களை மூடி தன்னவளை ரசித்துச் சொன்னான் தீரன்.
மதுரவல்லியால் அலுவலகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ரேணுகா, உள்ளம் கொண்ட அதிர்ச்சியுடன் சாலையில் இலக்கின்றி நடக்க ஆரம்பித்தாள்.
எப்பொழுதும் அவளுடன் இருந்து அறிவுரை கூறும் அவளுடைய அன்னை அன்பு நாச்சியார், செய்த பாவத்தை எல்லாம் கரைக்க காசி யாத்திரைக்கு சென்றிருந்ததால், மனதை பகிர்ந்து கொள்ள யாரும் இல்லாமல் தவித்தாள்.
தூரத்தில் கோவில் மணியோசை கேட்டதும், கால்கள் ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைக்க ஆரம்பித்தன.
" அப்பப்பா பிரசாதம் எவ்வளவு அருமை. செம டேஸ்ட். மகளுக்கான வேண்டுதலில் எத்தனை வகை பதார்த்தங்கள் " என்ற கூட்டத்தினரின் குரலில் கண்களை விழித்துப் பார்த்த ரேணுகா அவர்களின் பேச்சில் மரத்துப்போன பசியை உணர்ந்ததும், பிரசாதம் வாங்கும் வரிசையில் நின்றாள் ஒருமுறை தன்னைச் சுற்றி பார்த்துக்கொண்டு.
பிரசாதம் வாங்குவதற்காக தன் இரு கைகளை விரித்து தட்டினை வாங்கும் போது, சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த நாச்சியாரின், "நீயா?" என்ற குரலில் விலுக்கென தலை நிமிர்ந்தாள்.
உடனே தன் கைகளை பின்னே கொண்டு சென்று, "உங்களிடம் பிச்சை எடுத்து உண்பதற்கு பதில் செத்துப் போகலாம்" என்றாள்.
"ஓ... குடித்து குடித்து உன் தகப்பன் சொத்தை அழித்த பிறகு என்னிடம் வாங்கித் தின்று பிழைத்தீர்களே, அப்பொழுதெல்லாம் இந்த எண்ணம் தோன்றவில்லையா?"
"என் தகப்பனின் சொத்தை அபகரித்து விட்டு இந்தக் கட்டுக்கதை வேறா? என் அம்மா எல்லாவற்றையும் சொல்லித்தான் என்னை வளர்த்தார்கள்"
" நல்ல சிரிப்புதான். ஆனால் எனக்கு சிரிப்பு வரவில்லை. ஊருக்குள் சென்று விசாரித்துப் பார். உன் தகப்பனின் லட்சணம் உனக்குத் தெரியவரும். நிற்கதியாய் நின்ற உங்கள் குடும்பத்திற்கு உதவியது தான் என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய பிழை. வார்த்தைகளை மாற்றி உன் இஷ்டத்திற்கு கோர்த்து, என் மகளின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கினாயே. தாயைப் போல தானே பிள்ளையும் இருக்கும். எக்கேடும் கெட்டு ஒழியுங்கள். தயவு செய்து என் கண்முன்னே வந்து விடாதீர்கள்" என்று வெறுப்புடன் மொழிந்தார் நாச்சியார்.
" மேடம்! உங்கள் அம்மா எங்களுடைய டிராவல்ஸில் தான் யாத்திரை வந்தார்கள். கங்கையில் மூழ்கி எழும் போது அவர்களை மட்டும் காணவில்லை. போலீசார் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். தங்களுக்கு தகவலை தெரிவித்து விட்டேன்" விஷயத்தை சொன்னதும் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
தன்னைச் சுற்றி இருந்த உறவுகள் அனைத்தும் இல்லாமல் போக ரேணுகாவின் உள்ளம் சுருண்டது.
ஆனால் குறையவே குறையாத வன்மத்துடன் சச்சிதானந்தத்தின் வீட்டிற்குள் நுழைந்தாள். வேலைக்காரர்கள் முதற்கொண்டு அவளை புறக்கணித்தனர்.
உண்பதற்கு உணவு மேசையில் அமர்ந்தவளிடம், " உணவு தீர்ந்து விட்டது" என்றனர் அசட்டையாக.
யாரும் எதிர்பாராத நேரத்தில் சிவானந்தத்தின் அறைக்குள் புகுந்து கொண்டாள். ரேணுகாவை பார்த்ததும் தன் கோணிய முகத்தை திருப்பிக் கொண்டு அவளிடம் பேச மறுத்தார் சிவா.
'ஹேய்! உங்களோடு வாழ, நான் செய்த தந்திரங்கள் எல்லாம் தெரிந்த பிறகு என்னை பிடிக்கவில்லையோ? உங்களுக்காகத் தானே இத்தனை போராட்டம்? நீங்களே என்னை வெறுக்கலாமா? " தன்மையாகக் கேட்டாள் ரேணுகா.
"போ.... போ..." குழறலாய் வந்தது சிவாவின் குரல்.
உறவுகளை இழந்து, மதுராவிடம் தோற்று, தாயையும் இழந்த நிலையில் மன அழுத்தத்தின் உச்சத்தில் இருந்தாள் ரேணுகா.
"போ... போ... என்று என்னை நீ சொல்கிறாயா? முதலில் நீ போ!" என்று அருகில் இருந்த தலையணையில் அவர் முகத்தை நசுக்கி கொல்லப் பார்த்தாள் ரேணுகா.
சிவாவிற்கு மாத்திரைகளை கொடுப்பதற்காக அறைக்குள் நுழைந்த தளிர்மதி தான் கண்ட காட்சியின் பயத்தில் கத்தினாள்.
தளிர்மதியின் சத்தத்தில் ஓடி வந்த குடும்பத்தினர் நிலைமையைப் புரிந்து கொண்டு, ரேணுகா மீது வழக்கு பதிந்து காவல்துறை வசம் ஒப்படைத்தனர்.
காவல்துறையினரின் வாகனத்தில் சென்று கொண்டிருந்த ரேணுகா, தான் எதைத் தேடுகிறோம் என்று தெரியாமல் சாலையின் இருமருங்கிலும் எதையோ தேடிக் கொண்டே வந்தாள்.
பெரிய துணிக்கடையிலிருந்து கைநிறைய பார்சல்களை அடுக்கி, சிரித்துக்கொண்டே வந்த தீரனை, மதுரவல்லி செல்லமாய் கடிந்த படி வெளியே வந்த காட்சியைக் கண்டதும், 'அவர்களின் சந்தோஷத்தை அழித்துவிடு!' என்ற ரேணுகாவின் மனம் தந்த கட்டளையில், சிக்னலில் நின்ற காவல்துறை வாகனத்தில் இருந்து குதித்து வெளியே வந்தவள், அவர்களை தாக்குவதற்கு ஏதேனும் கிடைக்கிறதா என்று சுற்றிலும் பார்த்தபடி அவர்களை நெருங்கினாள்.
கெமிஸ்ட்ரி ஆய்வகத்திற்கு வேதிப்பொருட்களை எடுத்துச் சென்ற வண்டியிலிருந்து கைக்கு கிடைத்த பாட்டில்களை அள்ளிக்கொண்டாள்.
"ஏய்! மதுரா" என்று உரக்க கத்திக் கொண்டு, காவல்துறையினர் பின் தொடர்வதையும் கண்டு கொள்ளாமல் ஓடி அவர்களை நெருங்கினாள்.
மதுரவல்லி தீரனைக் காப்பாற்றும் பொருட்டு அவன் முன் வந்து நின்றார். கையில் இருந்த பொருட்களை எல்லாம் கீழே போட்டுவிட்டு நொடிக்கும் குறைவான நேரத்தில் தன்னைச் சுற்றி ஆராய்ந்தான்.
சிக்னலில் முன்னே வருவதற்காக வந்த இருசக்கர வாகனம் ஒன்றின் பின்னால் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் கேனை தீரன் ரேணுகாவின் பக்கம் தள்ளிவிட்டான். அவள் மேல் திடீரென தண்ணீர் கேன் இடித்ததில், அவள் கையில் இருந்த பாட்டில்கள் தவறி கீழே விழுந்து அவள் கண்களில் தெறிக்க, நெருப்பு பட்டது போல் கண்களை பொத்திக் கொண்டு அலறித் துடித்தாள்.
தனக்கு கிடைத்த ஆயுள் தண்டனையின் காரணமாக, சிறைக் கம்பிகளுக்குப் பின் படுத்திருந்த ரேணுகா, விழித்திருந்தாலும் அவளைச் சுற்றி இருளே சூழ்ந்திருந்தது. வேதிப்பொருட்கள் கலவையாக கண்களில் பட்டுத்தெறித்ததால் தன் பார்வையை முற்றிலும் இழந்திருந்தாள்.
இருளை பரிசாகக் கொடுத்தவளுக்கு அந்த இருளே தண்டனையாகக் கிடைத்தது. வாழ்க்கையை கெடுத்தவளின் வாழ்க்கையும் பறிபோனது. தாய்மையோடு விளையாடியவளுக்கு, தாய் என்ற ஸ்தானமும் பறிபோனது.
வீட்டினரை ஒதுக்கி வைத்த சிவானந்தத்திற்கு, வாழ்நாள் முழுவதும் அந்த வீட்டினரின் ஆதரவு தேவைப்பட்டது.
ரேணுகா புயல் ஓய்ந்தபின் சச்சிதானந்தத்தின் வீட்டில் அமைதி நிறைந்தது. ஆனால் அந்த வீட்டின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியோ உறைந்து போய் இருந்தது.
அமிழ்தாவை நெருங்க முடியாமல் அனைவரும் தவித்தனர். குழந்தையைப் பற்றியோ, தீரனை பற்றியோ பேசினால் கண்ணில் வலியுடன் விலகிச் செல்பவளை அணுக முடியாமல், வழி தெரியாமல் குழம்பி நின்றனர்.
தெளிவில்லாத தவறை தங்கள் பக்கம் வைத்துக் கொண்டு தீரனிடம் எப்படி முறையிட முடியும் என்று யோசித்தனர்.
அமிழ்தா நந்தனிடம் இயல்பாகப் பழகுவதைக் கண்டு, நந்தன் மேல் கொண்ட கோபத்தை மறந்து, இயல்பு போல் அனைவரும் அவனுடன் பேச ஆரம்பித்தனர்.
"ஏய் அம்மு! அதுதான் எல்லாம் சுபமாய் முடிந்துவிட்டதே. இனியும் எதற்கு இந்த கட்டுக்கதை? நாம் உண்மையை சொல்லிவிடலாம் அம்மு" என்றான் நந்தன்.
" நான் உண்மையைக் கூறிய அடுத்த நொடி, என்னை தீரனின் கையில் ஒப்படைத்து விடும் நம்முடைய குடும்பம்"
" அதுதானே நிதர்சனம்"
"ப்ளீஸ் நண்டு. என்னை கட்டாயப்படுத்தாதே. நீ எல்லோரிடமும் உண்மையைச் சொன்னால் நான் இந்த வீட்டை விட்டு எங்கேயாவது சென்று விடுவேன்"
"சரி. இன்னும் எத்தனை நாள் இந்த பொய்யை நீ சுமக்க முடியும். இது நீண்டு கொண்டு சென்றால், பத்து மாதம் கழித்து உன் வயிற்றை கிழித்து தலையணையைத் தான் பெற்றெடுக்கப் போகிறாய்"
"ஹேய்.... நண்டு மாமா. சூப்பர் ஐடியா"
"அம்மு, உனக்கும் தீரனுக்கும் என்ன பிரச்சனை?" தன் கேலியை எல்லாம் விட்டுவிட்டு அழுத்தமாகக் கேட்டான் நந்தன்.
அதே நேரத்தில் தீரனின் அலுவலகத்தில் ஆதிரனும் இதே கேள்வியைக் கேட்டான். "உனக்கும், அமிழ்தாவிற்கும் என்ன பிரச்சனை தீரா?"
பதில் சொல்லாமல் சிரித்தான் தீரன்.
" உன் கம்பெனியின் ஆடை விளம்பரம் என்ற பெயரில் ஒவ்வொரு நாடுகளிலும், ஒவ்வொரு அழகிகளோடு அட்டைப்படமாய், செய்தியாய், விளம்பரமாய் வருவாயே? அதுதான் காரணமா?" தீவிரமாய் கேட்டான் ஆதி.
" உனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற பொறாமையா ஆதி? " சிரித்துக் கொண்டே கேட்டான் தீரன்.
"அடேய்..." என்று தன் கையோடு கொண்டு வந்திருந்த பத்திரிகைகளால் அவன் தோளில் அடித்து, " நானே உன்னை நிறைய மாடல்களோடு பார்த்திருக்கிறேன் தீரா " என்றான் ஆதி உள்ளடங்கிய குரலில்.
"எங்கே?"
" நட்சத்திர ஹோட்டல்களில்... " என்றான் ஆதி மேலே பார்த்துக் கொண்டு.
" மாடலிங் டீல் பேசுவதற்கு ஸ்டார் ஹோட்டலுக்கு போகாமல், கோவிலுக்கா செல்வார்கள்?"
"நான்... உன்னை.... சாரி..." என்று திக்கினான் ஆதி.
"ரைட்... இனி அமிழ்தா பற்றிய கவலை உனக்கு வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்." என்று தீரன் எழுந்திருக்கும் போது, "பிரச்சனை நீ மட்டும் இல்லை தீரா! அமிழ்தாவும் தான்" என்று அமிழ்தா சொன்ன கருவுற்ற கதையை மெதுவாகச் சொன்னான், தீரனின் முக மாறுதல்களை ஆராய்ந்து கொண்டு.
" என் மனைவியைப் பற்றி இனி நீ ஒரு வார்த்தை தவறாகப் பேசினாலும் இங்கு நடக்கும் அனர்த்தங்களுக்கு நான் பொறுப்பல்ல. நீ கேள்விப்பட்டது முற்றிலும் பொய்" என்றான் வார்த்தைகளில் அழுத்தம் கூட்டி.
" சரக்கு அடிக்கிறது ஒருவன். போதை ஏறுவது வேறு ஒருவனுக்கா? ஆள விடுங்கடா சாமி!" இனி தன் தங்கையின் வாழ்வை தீரன் பார்த்துக் கொள்வான் என்ற நிம்மதியுடன் விடை பெற்றுக் கிளம்பினான் ஆதி.
"அம்மாடியோவ்... ரெண்டு கிஸ் தானே அடிச்சேன். அதுக்கே ரெட்டை பிள்ளை பெற்று விடுவாள் போலவே. உன் அத்தம்மாவிற்காக தியாகி பட்டம் எல்லாம் வாங்கத் துணிந்து விட்டாயே பேபி. உன் மாமா குட்டி கம்மிங்டா..." என்றான் தீரன் உதடு மடித்துக் கடித்து.
"ஏய்! அம்மு. நீ இப்படி சோகமாய் இருப்பது எனக்கு பிடிக்கவில்லை. ஜாலியா ஐஸ்கிரீம் சாப்பிட போகலாம் வா " என்றவளை வற்புறுத்தி அழைத்துச் சென்றான் நந்தன்.
தன் முன்னே இருந்த ஐஸ்கிரீம் கிண்ணத்தை கரண்டியால் அளந்து கொண்டிருந்தாள் அமிழ்தா.
"நீ தீரனை லவ் பண்றியா அம்மு?" பட்டென்று கேட்டான் நந்தன்.
கரண்டியைப் பிடித்த கை அசையாமல் நின்றது. பின் தன்னை சமாளித்துக் கொண்டு, " லவ்வா? சேச்சே.... இந்த அமிழ்தாவாவது, லவ் செய்வதாவது? அதெல்லாம் வேஸ்ட் ஆப் டைம் " என்று பக்கவாட்டில் திரும்பியவளின் இமைகள் அசையாது நின்றது.
சற்று தள்ளி இருந்த மேஜையில் ஒரு புறம் தீரன் அமர்ந்திருக்க, மறுபுறம் அவன் லவ்வும், ஏஞ்சலும் அமர்ந்திருந்ததைக் கண்டதும், மிளகாய் பூசிய தக்காளியைப் போல் சிவந்த முகத்துடன் விருவிருவென நடந்து தீரனின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
"ஹலோ! ஐ ஆம் மிஸஸ் தீரன்" என்றாள் தீரனின் கையை தன் கையோடு சேர்த்து கோர்த்துக் கொண்டு.
தீரன் அவளிடமிருந்து தன் கையை விலக்கப் பார்க்க, அவன் தோளில் சரிந்து கொண்டு, அவன் காதில் மெதுவாக, " அங்கிள் ஜி! கையை எடுத்து விட்டால், உங்கள் குடும்பத்தின் முன் உங்களுக்கு முத்தம் தந்து விடுவேன் ஜாக்கிரதை! மானம் முக்கியம் கோபால் " என்று மிரட்டினாள்.
"ஹலோ! நான் ஜெனிலா. என் பொண்ணு ஏஞ்சலின். நான் ஒரு மாடல்"
" அங்கிள் ஜி! அவங்க ஓல்ட் மாடல். நான் நியூ மாடலா? " என்று காதில் கிசுகிசுத்தாள்.
" டாடி என்னை தூக்குங்கள்" என்று ஏஞ்சலின் தீரன் பக்கம் பார்த்து கத்தினாள்.
"நோ... அங்கிள் ஜி! உங்களை நான் விடமாட்டேன்" மேலும் அவனோடு நெருங்கி அமர்ந்து கொண்டாள்.
அமிழ்தாவை தாண்டி திடீரென்று நீண்ட கரங்கள் ஏஞ்சலை தூக்கியது.
"இது யாரு?" தீரனின் கைகளை சுரண்டினாள் அமிழ்தா.
" என்னுடைய கணவர் ஆண்ட்ரூஸ்" என்று அறிமுகப்படுத்தினாள் ஜெனிலா.
"அப்போ... ருத் பேபி... டாடி... கனடா...." வார்த்தைகளை கோர்க்க முடியாமல் திணறினாள் அமிழ்தா.
" கிட்டத்தட்ட ஒரு மாதம் எடுத்த ஒரு விளம்பர படத்தில் எனக்கு மகளாக நடித்ததால் ஏஞ்சலின் என்னையும் டாடி என்றே அழைப்பாள். வீடியோ காலில் பேசாவிட்டால் கோபித்துக் கொள்வாள்" என்றவன் தந்த விளக்கத்தில் விழிகள் தெறித்து விடுவது போல் முழித்தாள் அமிழ்தா.
இளித்துக் கொண்டே தீரனின் கைகளை மெதுவாக விடுவித்தாள். தீரன் அவள் கன்னங்களைப் பற்றி தீப்பற்றும் அளவுக்கு தன் உதட்டால் உரசினான்.
" நான் கையை விலக்கினால் நீ முத்தம் தருவதாகச் சொன்னாய். இப்பொழுது நீ கையை விலக்கியதால் நான் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். எப்படி? " என்றவன் உதட்டை தடவ, தன் கன்னங்களை தாங்கிக் கொண்டு கலவரமாய் அவனைப் பார்த்தாள்.
ஆண்ட்ரூஸ் குடும்பம் கிளம்பியதும், அமிழ்தாவை தன்னுடன் அழைத்துக் கொண்டு நந்தனிடம் வந்தான்.
"ப்ரோ... என் பொண்டாட்டியை எங்கள் வீட்டிற்கு கூட்டிச் செல்கிறேன். அதை உங்கள் வீட்டில் சொல்லி விடுங்கள். அத்தோடு அமிழ்தா சொன்ன பொய்யையும் உடைத்து விடுங்கள்" என்று நந்தனின் பதிலை எதிர்பாராமல் அமிழ்தாவை தன் கையணைப்பில் வைத்துக் கொண்டு சென்றான்.
அமிழ்தாவின் வாழ்க்கை சீரானதில் நிம்மதிப் பெருமூச்சு விட்டான் நந்தன்.
தீரனின் வீட்டிற்குள் நுழையும் போது மதுரவல்லி இருவருக்கும் ஆரத்தி எடுத்தார்.
" அப்பாடா! இப்பதான் வீடு நிறைந்து இருக்கு" என்று ஆனந்தப் பட்டார் நாச்சியார்.
பைரவனோ, அமிழ்தாவைப் பார்த்து குரைத்துக் கொண்டு அவள் காலைச் சுற்றி வந்து தன் வரவேற்பை பறைசாற்றியது.
தயக்கத்துடனே உள்ளே நுழைந்த அமிழ்தா, தன் அத்தம்மா சமைத்து வைத்திருந்த உணவுப் பொருள்களைப் பார்த்ததும், அனைத்தையும் மறந்து விட்டு உணவு மேஜையில் இருந்த உணவுப் பதார்த்தங்களை ஒரு கை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
மதுராவின் மடியில் படுத்துக்கொண்டு, கதைகள் பேசியபடியே, தன் வீடு வந்து சேர்ந்த நிம்மதியில் கண்ணயர்ந்தாள்.
"தீரா! குட்டிமா அசதியில் அப்படியே படுத்து விட்டாள். அவளின் உறக்கம் கலையாமல், அறைக்கு தூக்கிச் செல் " என்று மதுரா சொன்னதும், ஆனந்தமாய் பூவையவளை தன் கைகளில் சுகமாய் சுமந்து சென்றான்.
முகத்தில் முடிக்கற்றைகள் புரள, தலையை லேசாக அசைத்து முகத்தைச் சுருக்கினாள். அவன் உதட்டை குவித்து மூச்சை காற்றாய் மாற்றி அவள் முகத்தில் மோத வைத்ததும் ,அதில் சிலிர்த்தவள் தீரனின் மார்போடு ஒன்றினாள்.
படுக்கையில் அவளை கிடத்திவிட்டு, இமை தட்டாமல் அவளைப் பார்த்து ரசித்தான். சிறு வயதில் அவளைப் பார்த்து துளிர்த்த ஆசை, வளர்ந்ததும் காதலாய் மாற, சொல்லாத காதலை செல்லமாய் வளர்த்தான் தன் மனதிற்குள்ளேயே.
அவளின் திருமண அறிவிப்பு, தன் அன்னையின் நிலை, அந்தக் குடும்பத்தின் மேல் கொண்ட கோபம் என எல்லாம் சேர்ந்து தான் கரம் பிடித்தவளை வேறு பிம்பமாய் காட்டியது அவனுக்கு.
அவள் மேல் கொண்ட அந்த மாய பிம்பங்கள் எல்லாம் உடைந்து விழ, அவன் மனதிற்குள் இருந்த சொல்லாத காதல் மீண்டும் பூ பூக்க ஆரம்பித்தது.
அவள் கரத்தை, தன் கரத்திற்குள் புதைத்துக் கொண்டவன் அதன் மென்மையில் மயங்கி தன் கன்னத்தை அவள் உள்ளங்கையில் தேய்த்தான்.
"ஐயோ! அம்மா! முள்ளம்பன்றி கடிச்சு வச்சிருச்சு. காப்பாத்துங்க!" என்று கத்தி உருண்டு கொண்டே கண்விழித்தவள், தீரனின் விழிகளில் தெரிந்த மாற்றத்தைக் கண்டு திடுக்கிட்டு, "காப்பா... ஆத்துங்க!" என்றாள் மெதுவாக.
'ஹேய்... பொண்டாட்டி ஐ லவ் யூ " என்றான் கண்ணடித்து.
படுக்கையில் இரு கைகளையும் ஊன்றி மெல்ல அவனருகே தவழ்ந்து வந்தாள். அவள் கொடுக்கப் போகும் முத்தத்திற்காக கண்மூடி காத்து நின்றவனின் மீசையை பிடித்து இழுத்தாள்.
" ராட்சசி!" என்று அலறித் துடித்தான் தீரன்.
"உண்மைதான் போல..." என்று அமைதியாக தன்னிடத்தில் மீண்டும் வந்து அமர்ந்து கொண்டாள்.
"என்ன?" என்றான் மீசை நுனியை திருக்கிக் கொண்டே.
" நான் கனவு காண்கிறேனோ என்று நினைத்தேன் " சுட்டு விரலை நாடியில் தட்டி யோசித்தாள்.
சட்டென்று அவளருகில் வந்து, கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான். "இது கனவில்லை ஏஞ்சல். நான் உன் தீரன் தான் " என்றான்.
"அங்கிள் ஜி!' என்று கத்தி, அவன் முத்தமிட்ட கன்னத்தை பரபரவென தேய்த்துக் கொண்டாள்.
"அடிங்க... இன்னும் என்ன அங்கிள்? மாமனோடு மிங்கிள் ஆக வா" உதடு குவித்து காற்றில் முத்தமிட்டான்.
'ஆத்தி! சந்திரமுகி பரதநாட்டியம் ஆடும் என்று பார்த்தால் இப்படி ரெக்கார்டு டான்ஸ் ஆடுகிறது. அமிழ் எஸ்கேப் ஆகிவிடு' என்று மனது தந்த அறிவுரையில், "நான் அத்தம்மா உடன் படுத்துக் கொள்கிறேன். நீங்க இங்க சமத்தா படுத்துக்கோங்க" என்று படுக்கையை விட்டு கீழ இறங்க முயன்றவள் தீரனின் முழு அணைப்பில் திமிறிக் கொண்டிருந்தாள்.
" அமிழ்தா என் கண்களைப் பார்!" அதட்டினான் தீரன்.
அலைபாய்ந்த அவளின் கண்கள் அவனைப் பார்த்தும் நிலை இல்லாமல் தவித்தது.
" என்னிடம் என்ன சொல்ல வேண்டும்? " என்றான்.
தான் இருக்கும் நிலை மறந்து அவனைப் பார்த்து, விழிகளில் வலிகள் ததும்பிட, " ஒரு பெண்மைக்கு நியாயம் வழங்கிட, இன்னொரு பெண்மைக்கு அநியாயம் செய்தால் சமன் ஆகுமா?" என்றாள்.