வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

எனை ஆளும் கர்வமே! - கதை திரி

Status
Not open for further replies.
எனை ஆளும் கர்வமே!

அத்தியாயம் - 24

(இறுதி அத்தியாயம்)


"உனக்கு நான் செய்த அநியாயங்களை நீ பட்டியலிட்டுக் கொண்டே வா. நான் அதற்கு பரிகாரம் செய்து கொண்டே வருகிறேன்" என்றவன் அமிழ்தாவின் கண்களின் தெரிந்த வலியை, தன் உதடுகளால் அப்புறப்படுத்தும் வேலையில் இறங்கினான்.

அவன் தடம் பதிக்கும் பாதையில் எல்லாம், தடுமாறும் தன் உள்ளத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, தன் உள்ளங்கைகளால் அவன் உதடுகளைச் சிறை எடுத்தவள், "ஒருவேளை, அத்தம்மா சரியாகவில்லை என்றால், உங்களிடத்தில் என் நிலை என்ன தீரா? " என்றாள் அவனை நேர் கொண்டு பார்த்து.

அமிழ்தாவின் ஒற்றைக் கேள்வியில் இருந்த உண்மை சுட, அவளை விட்டு விலகி எழுந்தான்.

"ஏன்? மதுரவல்லிக்கு இருக்கும் உணர்வுகள் போல், அமிழ்தாவிற்கும் இருக்கக் கூடாதா? உங்கள் அன்னைக்கு ஒரு நீதி? எனக்கு ஒரு நீதியா?

உங்கள் அன்னையின் நீதிக்காக, அனைவரின் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்டிருந்தால் உங்களைப் பெருமையாக நினைத்திருப்பேன்.

நீ என் அன்னைக்காக, என்னுடன் நிற்பாயா? என்று கேட்டிருந்தால், அந்த உண்மையில் என் உயிரை சாசனம் எழுதிக் கொடுத்திருப்பேன்.

ஆதியும் புரியாமல், அந்தமும் தெரியாமல் இருளில் என்னை தவிக்க வைத்து விட்டீர்களே.

நந்தனை நான் விரும்பவில்லை. ஒரு வேளை விரும்பி இருந்தால், என்னுடைய ஏமாற்றத்திற்கு உங்களால் விலை கொடுத்திருக்க முடியுமா?

காரணத்தை அறிய விடாமல் திருமணத்தை நிறுத்தி, திருமண மண்டபத்தில் ஊரார் முன் மண்டியிட வைத்தீர்கள். உறவுகளிடம் இருந்து விலக்கி வைத்தீர்கள். பட்டினி போட்டீர்கள். நிராதரவாக சாலையில் நிறுத்தினீர்கள். என் சுதந்திரத்தை பறித்தீர்கள். இந்த உடலை வெல்லப் பார்த்தீர்கள்.

இதையெல்லாம் என்னால் கடந்து வர முடிந்தது. ஆனால்..." என்றவளின் உணர்வுகள் தொண்டை குழிக்குள் சிக்கிச் சதிராட, வார்த்தைகள் விக்கிக் கொண்டு நிற்க, உடலெங்கும் பாரம் அழுத்த, கட்டிலில் அமர்ந்தபடியே முழங்காலிற்குள் தலையைக் கவிழ்த்தி தன்னை நிலைப்படுத்த முயன்றாள்.

சிறகுகளைப் பிடித்து துன்புறுத்தினாலும், பிடியை தளர்த்திய அடுத்த நொடி, வானத்தை எல்லையாய் கொண்டு சிறகடித்து பறக்கும் பட்டாம்பூச்சி போல், எத்தகைய துன்பத்தை விளைவித்தாலும், தூசு போல் தட்டி விட்டு செல்லும் அந்தக் குழந்தை மனம் குமுறிக் கொண்டிருப்பதை கண்டவன், அவள் அருகில் வந்து மெல்ல அவள் தோள்களைத் தொட்டான்.

அவன் கைகளை தட்டி விட்டு, அவன் எதிரே வந்து நின்றாள்.

" அத்தம்மாவின் மன அழுத்தம் எதனால் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்றாள் நிதானமாக.

தீரன் வாயைத் திறப்பதற்குள், "கணவன், மகன் என்ற உறவுகள் இருந்தும், உரிமைகளை விட்டுக் கொடுத்ததால்...

நீங்கள் உங்கள் காதலை தியாகம் செய்து என்னை கரம் பிடித்தேன் என்றீர்கள். உங்களுக்கென வேறு குடும்பம் இருப்பது போல் சித்தரித்தீர்களே, என் மனம் என்ன பாடுபட்டது என்று உங்களுக்குத் தெரியுமா?


வெளியில் சிரித்து மறைத்துக் கொண்டிருந்தாலும், உள்ளுக்குள் அந்த கற்பனை உருவத்துடன் நீங்கள் கொஞ்சிக் குலாவும் காட்சிகள் என் நெஞ்சத்தை அறுத்த கதை உங்களுக்கு தெரியுமா? யாருடைய வாழ்க்கையையோ பறித்துக்கொண்ட குற்ற உணர்வு என்னை கொலை செய்ததே!

அதையும் மீறி என் உள்ளம் உங்களைத் தேடும்போது, ச்சீ... என்று என்னை நானே அருவருத்து, கூனிக்குறுகி நின்ற காட்சிகளை உங்கள் வீட்டுக் குளியலறைச் சுவர்கள் மட்டுமே அறிந்திருக்கும்.

உங்களை விட்டுத் தொலையவும் முடியாமல், உங்களை விட்டுக் கொடுக்கவும் முடியாமல் நரகத்தில் தவித்தேன் தீரா!

நீங்கள் பொண்டாட்டி என்றதும் நான் குளிர்ந்து விட வேண்டும்.

ஐ லவ் யூ என்றதும் மகிழ்ந்து விட வேண்டும்.

படுக்கையை காட்டியதும்...." என்றவளை, "அமிழ்தா..." என்ற தீரனின் குரல் தடுத்து நிறுத்தியது.

" நான் வார்த்தைகளால் சொன்னால் உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. ஆனால் அதையே நீங்கள் வாழ்க்கையாக்குவீர்கள் நான் பொறுத்துக் கொள்ள வேண்டும். சூப்பர் தீரா!" என்று கைத்தட்டி அவனை பரிகாசம் செய்தாள்.

" அப்போ உன் முடிவு? " என்றான் தீரன் மரத்த குரலில்.

" ஒரு பெண்ணிற்கு அவள் பெண்மை தான் ஆளுமை. அவள் பெண்மை தான் கர்வம். அந்த ஆளுமையும், கர்வமும் சாயும் இடம் ஒரு ஆண்மையின் உன்னதமான காதலிடத்தில்தான்.

எந்தன் உள்ளத்தில் உங்கள் காதல் நிறைந்து வழியும் போது, என் மனதின் கசப்புகள் மாறலாம். என் பெண்மையின் கர்வத்தை நீங்களும் ஆளலாம்! அதுவரை நாம் வாழாமல் வாழலாம். குட் நைட்" என்று கூறிவிட்டு படுக்கையின் மறுபக்கம் சென்று படுத்துக் கொண்டாள்.

எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னால் ஏற்றுக் கொள்வாள் என்றவளை சாதாரணமாக எடை போட்ட தீரன், அயர்ந்து நின்றான்.

அமிழ்தாவின் உயிர்வலியில், வெளிவரத் துடித்த தன் வார்த்தைகளை மென்று விழுங்கினான்.

தேவதையின் காதல் வரத்தை பெற, காதல் தவம் புரிய ஆரம்பித்தான்.

உடலால் உணர்வுகளை பரிமாறிக் கொள்வதை விட, உள்ளத்தால் உணர்வுகளை பரிமாறிக் கொள்ள விரும்பும் பெண்மையை மதிக்க ஆரம்பித்தான்.

அன்று முதல் அடாவடித் தீரன், காதல் காவடி தூக்கிச் சுமந்தான். அமிழ்தாவிற்காக அவன் கொடுத்த ரோஜாக்கள் நிராகரிக்கப்பட்டது. பரிசுப் பொருட்கள் ஒதுக்கப்பட்டது.

"ரொம்பத்தான்..." என்று அலட்டினாலும், தன் முயற்சியிலிருந்து முற்றும் மனம் தளராத அந்த விக்ரமாதித்தனும், அடிக்கடி முருங்கை மரம் ஏறும் தன் காதல் வேதாளத்தை தூக்கிச் சுமந்தான்.

ஆதியிடம் தொடர்பு கொண்டு, அவளுக்குப் பிடித்த உணவுப் பதார்த்தங்களை கேட்டறிந்து ஆர்டர் செய்தும் பார்த்தான். மகராசி நன்றாக சாப்பிட்டுவிட்டு கையை கழுவி விட்டுச் சென்றது தான் மிச்சம்.

ஆண்ட்ரூஸ் குடும்பம் கனடாவிற்கு திரும்பும் போது அவர்களுடன் வியாபார ஒப்பந்தத்திற்காக தீரனும் ஒரு வாரம் சென்றான்.

மதுரவல்லியும், அமிழ்தாவும் சேர்ந்து வீட்டை சுத்தப்படுத்தி ஒழுங்கு படுத்தினர். பழைய பொருட்கள் வைக்கும் அறையில் புழங்காத பொருட்களை அள்ளிப் போட்டாள் அமிழ்தா. திரும்பும் போது ஒரு மர அலமாரி அவள் காலை தட்டி விடவே, "யூ... ஸ்டுப்பிட் " என்று அந்த மர அலமாரியை உதைத்தாள்.

அலமாரியின் மேலிருந்து அதன் சாவி கீழே நின்று கொண்டிருந்த அமிழ்தாவின் தலையில் விழுந்தது. தலையை தேய்த்துக்கொண்டே அந்த அலமாரியைத் திறந்து பார்த்தவளின் விழிகள் விரிந்தது.

அமிழ்தாவின் புகைப்படங்கள், அவள் சிறு வயதில் பயன்படுத்திய பொருட்கள் என ஒரு அருங்காட்சியாமே உள்ளே அடைக்கப்பட்டு இருந்தது. அவள் தொலைத்து விட்டதாக பத்மாவதியிடம் அடி வாங்கித் தந்த சங்கிலியும் அங்கு தான் வீற்றிருந்தது.

அமிழ்தாவின் மனதில் இருந்த பாரத்தை சற்று குறைந்தான் அந்த காதல் கள்வன். ஆனால் அடுத்த நிமிடம், தன் நினைவுகளை எப்படி பழைய குப்பைகளோடு போட்டு வைக்கலாம் என்ற கோபமும் வந்தது.

" இதையெல்லாம் காதலாக எடுத்துக் கொள்ள முடியாது. செல்லாது! செல்லாது!" என்று அவள் மனம் அவனுக்கு எதிராக தீர்ப்பு எழுதியது.

தான் தீரனிடம் இன்னும் என்ன எதிர்பார்க்கிறோம் என்று அவளுக்கு புரியவில்லை.

மதுராவிடமும் நாச்சியாரிடமும் மனம் விட்டு பேசும் அவளுக்கு தீரனிடம் பேச மனம் வரவில்லை.

கனடாவில் இருந்து திரும்பிய தீரன், நடுநிசியில் தன்னறையின் விளக்கை ஒளிரச் செய்தான்.

அவன் ஊரில் இல்லாததால் கட்டிலில் அவன் இடத்தையும் மொத்தமாக ஆக்கிரமித்து படுத்திருந்தாள்.

தன் கைகடிகாரத்தை திருப்பிப் பார்த்தான். சரியாக பன்னிரண்டு மணியளவில் அவள் காதருகே குனிந்து, " ஹாப்பி பர்த்டே பேபி!" என்றான்.

"ம்... காபியா? சூடா இருக்கா?" என்று பாதிக் கண்ணில் விழித்துப் பார்த்தாள்.

தீரனோ அவளை தன் கையோடு அள்ளி அணைத்துக் கொண்டான். தூக்கத்தில் தடுமாறியவள் அவன் கழுத்தை கட்டிக் கொள்ள, தன் கைகளில் சுமந்தபடி கீழே இறங்கி வந்தான் தீரன்.

ஐந்து நாட்கள் அவனைப் பார்க்காத ஏக்கத்தில், கண்களில் அவனை நிறைத்துக் கொண்டவள் சுற்றுப்புறத்தை கவனிக்க மறந்தாள்.


வரவேற்பறைக்கு வந்ததும், அனைத்து விளக்குகளும் ஒரே நேரத்தில் ஒளிர்ந்தன.

" பிறந்தநாள் வாழ்த்துக்கள் அமிழ்தா!" என்று சச்சிதானந்தத்தின் மொத்த குடும்பமும் ஒரு சேர வாழ்த்தியது.


எந்தவித முக மாறுதலும் இன்றி அனைவரையும் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார் நாச்சியார்.

ஆனந்தத்தில் கண்களில் நீர் வழிந்தது அமிழ்தாவிற்கு.

தான் என்ற நிலையிலிருந்து கீழிறங்கி, தன் அன்னையையும் தாண்டி, அவளுக்காக மொத்த குடும்பத்தையும் ஏற்றுக்கொண்ட தீரனின் மேல் காதல் பெருகிப் பொழிந்தது அமிழ்தாவிற்கு.


அனைத்தையும் கடந்து நிமிர்ந்து நின்ற மதுரவல்லியின் மேல் மரியாதை பெருக, தீரனின் கையில் இருந்து குதித்தோடி மதுரவல்லியை கட்டி அணைத்துக் கொண்டாள் அமிழ்தா.

சிரித்தபடியே மருமகளின் கன்னத்தில் முத்தம் பதித்து மகிழ்ந்தார் மதுரா.

"அத்தை நீங்கள் கொடுக்கும் முத்தம் தான் ஸ்வீட் அண்ட் சாஃப்ட். உங்கள் மகன் கொடுக்கும் முத்தம் எல்லாம் முகத்தில் தார் ரோடு போடுவது போல் இருக்கிறது" என்றாள் மதுராவின் காதில் மெதுவாக.

"அடப் போக்கிரி!..." என்றவள் காதை பிடித்து வலிக்காமல் திருகினார்.

அவர்களின் இணக்கத்தில் தளிர்மதி தயங்கியபடியே நிற்க, "வாம்மா..." என்றார் மதுரா அன்பொழுக.

"இப்படி உண்மையான தாய் பாசத்தை நான் அனுபவித்ததே இல்லை. நான்... நான்... உங்களை மதுராம்மா என்று அழைக்கட்டுமா?" என்று கண்களில் மிரட்சியுடன் கேட்க, அமிழ்தாவோடு சேர்த்து தளர்மதியையும் அணைத்துக் கொண்டார் மதுரா.

அவர்களோடு சிரித்தபடியே நிமிரும்போது, நிறைமதி தள்ளிக் கொண்டு வந்த சக்கர நாற்காலியில், வாயில் நீர் வடிய அமர்ந்திருந்த சிவானந்தத்தை பார்க்கவே பரிதாபமாக இருந்தது.


தலையை சாய்த்து கொண்டே மதுரவல்லியை பார்த்தார் சிவா. கண்களில் தீட்சண்யத்துடனும், உடலில் நிமிர்வுடனும், அருள்பாலிக்கும் கர்ப்பகிரகத்து சிலை போல் நின்று கொண்டிருந்தவரை, தன் கைகளை தூக்கி வணங்க முயன்ற சிவானந்தத்திற்கு தோல்வியே கிட்டியது.

தெய்வத்தை ஒதுக்கி வைத்த பாவியாய், மானசீகமாய் மனதிற்குள் கைவணங்கி மன்னிப்பு கோரினார்.

அவர் கண்களில் தெரிந்த அந்த காலம் கடந்த குற்ற உணர்வை உணர்ந்த மதுரவல்லி, சிவானந்தத்தை பார்த்து, "காலம் என்ற கடலில் கரைக்கப்பட்ட என் நினைவுகளில் இருந்து தேவையில்லாத குப்பைகள் எல்லாம் ஒதுங்கி விட்டன. சேர வேண்டிய பொக்கிஷங்களோ என் கை சேர்ந்து விட்டது. இது என் புதிய பாதை. புதிய பயணம்" என்றார் மீட்டெடுத்த ஆளுமையுடன்.

பதில் சொல்ல இயலாதவரின் கண்களில் கண்ணீர் வடிந்தது. பெற்ற கடமைக்காக பத்மாவதி வருத்தத்துடன் துடைத்து விட, அவர் அருகில் ஆறுதலாய் நின்றார் சச்சிதானந்தம்.

மனம் கொண்ட மகிழ்வுடன், வீட்டுப் பெரியவர்கள் ஒவ்வொருவர் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர் புதுமணத் தம்பதியர்.

இளைய பட்டாளம் கேக் வெட்டி, வெடி வெடித்து ஆரவாரம் செய்தது.

அவன் கண்களைப் பார்க்க முடியாமல் நாணத்துடன் தலை குனிந்தபடியே கேக்கை ஊட்டி விட்டாள் தீரனுக்கு.

ஆதியும் நந்தனும் அவர்களின் சிரித்த முகத்தைக் கண்டு, மகிழ்ச்சியாக கைகுலுக்கிக் கொண்டனர்

நடு இரவில் கொண்டாட்டம் முடிந்ததும், அனைவரும் தங்கள் வீட்டிற்கு கண்டிப்பாக வரவேண்டும் என்ற அன்பு அழைப்புடன் விடைபெற்றுச் சென்றது சச்சிதானந்தத்தின் குடும்பம்.

அவர்களை கையசைத்து வழி அனுப்பிக் கொண்டிருந்தவளை விழி அசைக்காமல் பார்த்தபடி நின்றிருந்தான் தீரன்.

தனது வலது கையை அவள் புறம் நீட்டினான். மறுக்க முடியாதவளும் தன் கரத்தை அவனோடு கோர்த்துக் கொண்டாள் ஆனந்தமாய்.

மாலையில் மலர்ந்த பூக்களின் வாசத்தில் நிறைந்திருந்த தோட்டத்திற்குள் அழைத்துச் சென்றான்.

முல்லை பந்தலுக்குக் கீழ் அவளை நிறுத்தி, தன் கைகளை மேலே உயர்த்தி, கொடியினை அசைத்து பூக்களை தன் கொடியிடையாள் மீது சிதறச் செய்தான்.

உடலெங்கும் ஓடிய நடுக்கத்தோடு, இதழ் கடித்து அவனைப் பார்த்தாள்.

" அன்று வரிசையாக கேள்விகளை அடுக்கினாயே, கேட்டுக்கொள்! இந்த மாமனிடம் அதற்கான பதில்களை.

நீ எனக்கானவள் அமிழ்தா. உன்னை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது. உன்னை கவர்ந்து வரவில்லை கண்ணம்மா. கண்ணியமாய் அனைவர் முன்பும் கரம் பிடித்து அழைத்து வந்தேன்.

உன் உறவுகளிடம் இருந்து விலக்கி வைக்கவில்லை. உன் உறவுகளை அடையாளம் காட்ட பிரித்து நிறுத்தினேன்.

உன்னை பசிக்க வைத்ததால் என் உயிர் கசிந்ததடி. என்னோடு சத்தமிட்டு, சண்டையிடுவாய் என்று நினைத்தால், யுத்தமிட்டு என்னை வென்றாய்.

சாலையில் தனித்து விட்டது உன்னைத் தான். ஆனால் தனியாக நின்றது என்னவோ நான் தானடி.

உன் கரத்தால் உணவு வாங்கிய தருணங்கள், என் உயிரில் பூ பூத்த நிமிடங்கள்.


சுதந்திரமா? உன்னை அடைக்கவில்லை. உன் உலகத்திற்குள் நான் அடைந்து கொள்ளவே ஆசைப்பட்டேன்.

என்னிடத்தில் உன் உரிமையை உணர வைக்க நான் எடுத்த கடைசி ஆயுதத்தில், கலங்கித் தவித்து என்னை பிரிந்து செல்வாய் என்று நான் நினைக்கவில்லையே.

அவப் பெயரை சுமந்து கொண்டு என் அன்னைக்காக போராடிய நீ, என் அன்னையாகவே மாறிவிட்டாய் அமிழ்தா.

என் காதலை உணர வைத்து விடலாம் என்ற கர்வத்தில் நான் நிற்க, காதலால் எனை ஆளும் கர்வமே நீதானடி!" என்றான் சுட்டுவிரலை அவள் புறம் நீட்டி.

அவன் தொடாமலேயே தொட்ட உணர்வில், மூச்சை ஆழமாக உள்ளே இழுத்துக் கொண்டாள்.

"உன்னை தேடியது தாபத்தால் அல்ல. என்னோடு தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆதங்கத்தால். கூடலை ஆரம்பிக்கும் போதெல்லாம் மோதலில் சென்று தானே முடிந்தது. அதை இப்போது காதலில் ஆரம்பிக்கலாமா?" என்றவன் அவளை நோக்கி வர, "சீ போங்க மாமா குட்டி!" என்று லாவகமாய் அவனை விலக்கி விட்டு வீட்டிற்குள் ஓடினாள்.

தங்களின் அறைக்குள் நுழைய வந்தவள், புதிதாக முளைத்த வெட்கத்தில், நெஞ்சை முட்டி நின்ற சந்தோஷம் மூச்சை அடைக்க, மொட்டை மாடிக்குச் சென்றாள்.

ஏனோ நிலவு இல்லாமல் வானம் கருகருத்து இருந்தது. குளிர் காற்று தந்த இதத்தில் கரும்வானத்தில் மின்னல்கள் வெட்டும் காட்சியைக் கண்டு ரசித்தாள்,

நெற்றியில் விழுந்த ஒற்றைத் துளியில் மழை வருவதற்கான அறிகுறியை உணர்ந்தாள். கைகள் இரண்டையும் விரித்து, கண்களை மூடி, அந்தச் சக்கரவாகம் மழைக்காய் தவம் இருக்க ஆரம்பித்தது.

நேரம் செல்லச் செல்ல, காற்றுடன் மழை சேர, உடல் முழுவதும் நனைந்தாள். ஆனந்த பெருமூச்சில் கண்களைத் திறந்தவள் எதிரில் சொட்டச் சொட்ட நனைந்தபடி தீரன் நின்றதைக் கண்டு சிலையானாள்.

வானத்தில் மின்னிய மின்னலுக்கு ஈடாக பெண்ணவளின் கண்களில் மின்னிய காதலைக் கண்டு, பெண்ணவளின் மனதை வென்ற கர்வத்துடன் தீரன் முன்னே ஒரு அடி எடுத்து வைக்க, அமிழ்தா பின்னே ஒரு அடி எடுத்து வைத்தாள்.

மேகத்தின் தூறலில் தாபம் கூட, பாய்ந்து சென்று, அவள் இடை வளைத்து தனக்குள் புதைத்துக் கொண்டான். மழைத்துளிகள் அவள் மேனியில் முத்தாய் தெறித்து விழ, தெறித்து விழுந்த ஒவ்வொரு துளிகளையும், தன் இதழால் கோர்த்தான்.

அவன் தேடலில் மழையின் நீரோடு கரைந்தவள், அவன் வேகத்தில் அதிர்ந்தவள், அவனை தள்ளிவிட, மழை நீரில் வழுக்கி கீழே சரிந்தவனின் கைகளுக்குள் அமிழ்தாவின் பாதம் சிக்கிக் கொண்டது.

தன் காலை விலக்கிக் கொள்ள அவள் துடிக்க, அவள் துடிப்பிற்கு அவள் பாதத்தில் அணிந்திருந்த சலங்கைகள் சிணுங்கிச் சிரித்தது.

சரிந்த கர்வத்தில், அங்கே காதலும் சிரித்தது கர்வமாய்.


"கர்வமும் காதலும் ஒன்றெனக் கலந்திட - காதல் முதற்றே உலகு"

*****சுபம் *****


 
Last edited:
Status
Not open for further replies.
Top