வாசம் - 01
காலை வேளையின் இளந்தென்றல் ஜன்னல் வழியே நுழைந்து மெல்லென அவளை அணைத்துக் கொண்டது. ம்..... தென்றலுக்கும் தான் எத்தனை ஆசை அவளை அணைத்துப் பார்க்க தென்றலின் வருடலில் மெல்லக் கண்களை திறந்தவள் நேரத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டாள்.
'அட, என்ன பொல்லாத தூக்கம். அலாரம் வச்சனே அடிக்கல்லையோ. காலையில் இவ்வளவு நேரமா தூங்கிருக்கேன் பாரு. வேலைக்குச் செல்ல இன்னும் ஒரு மணி நேரந்தான் இருக்கு. ஐயையோ மறந்துட்டேனே இன்றைக்கு முக்கியமான மீட்டிங் வேற இருக்கே. அவசர அவசரமாக் கிளம்பினாத் தவிர நேரத்துக்குப் போக முடியாது' எண்ணியவளாய் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள் ப்ரியவர்ஷினி. தயாராகி வந்தவள் நேராக சமயலறையில் நுழைய அங்கு பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தார் அவளின் தாய் நீலவேணி. அவளைக் கண்டவர்,
"வாம்மா ப்ரியா?" என்றதும்
"என்னம்மா என்னை எழுப்பி விட்டிருக்கலாமே? தனியா எல்லா வேலைகளையும் பார்த்துட்டிருக்கீங்க."
"அதனால என்னம்மா, ஒவ்வொரு நாளும் தானே வேலைக்கு போக முன்ன எனக்கு எல்லாம் செஞ்சுட்டுப் போற ஒரு நாள் தவறினா என்ன வந்துடப்போறது சொல்லு?"
"அதில்லம்மா நீங்களும் உடம்பு சரியில்லாதவங்க தனியா எத்தனைய பார்ப்பீங்க? அதுக்குத்தான் என்னால முடிஞ்சளவு செஞ்சுட்டுப் போகனுமென்று நினைப்பேன். அதுசரி ஏன் இவ்வளவு நேரமா என்னை எழுப்பாம விட்டீங்க?"
"இல்லடாம்மா நீ வழக்கமான நேரத்துக்கு எழுந்து வராம இருந்ததால நானும் உன்னை எழுப்ப வந்தேன். ஆனால் நீ நல்லா அசந்து தூங்கிட்டிருந்த அதனால எழுப்ப மனம் வரல்ல அதான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டுமென்று விட்டுட்டேன்"
"அதுக்காக இப்படியா விடுவீங்க? நல்லா நேரம் போயிட்டு பார்த்தீங்களா?"
"அதுக்குப் பிறகு நான் இரண்டு தடவை வந்து எழுப்பினேன், நீ அசையவே இல்லை. அலாரம் வேற விடாம அடிச்சிட்டே இருந்துச்சு. நீயா எழுந்து வந்துடுவ என்றுதான் நானும் மத்த வேலைகளப் பார்க்க போயிட்டேன். இப்போ நீ வரல்ல என்றால் நானே உன்னை வந்து எழுப்பி இருப்பேன். அதுசரி என்னம்மா இவ்வளவு நேரம் தூங்கிட்ட என்னாச்சு உடம்பு சரி இல்லையா?" தேநீர் கோப்பையை நீட்டியவாறே அக்கறையாகக் கேட்டாள் தாய்.
"இல்லம்மா, நைட் கொஞ்சம் தூங்க லேட்டாயிடுச்சு அதான் வேறொன்றுமில்ல."
"அப்படியா? சரிம்மா நேரம் ஒன்னும் அந்த அளவுக்குப் போகல்ல. சரி முதல்ல நீ டீயக் குடிம்மா நான் காலச் சாப்பாட்ட எடுத்து வைக்குறேன். சாப்பிட்டுட்டு கிளம்ப, டைம் சரியா இருக்கும்."
"ஐயோ அம்மா, சாப்பிடெல்லாம் நேரமில்ல இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. வழமைக்கு ஏர்லியாவே வரச் சொன்னாங்க. ஆனால் இன்றைக்குப் பார்த்து இப்படி கும்பகரணி மாதிரி தூங்கிருக்கேன் பாருங்க. சரிம்மா நேரமாகுது இப்போ கிளம்பினாத்தான் சரியா இருக்கும். லன்ச் கட்டிட்டா தாங்க." என்றவள் தேநீரைப் பருகிக் கொண்டே மதிய உணவுப் பொதிக்காக கை நீட்ட அவள் கையில் உணவுத்தட்டை வைத்தவர் உண்ணுமாறு கட்டளையிட்டார். முதலில் மறுத்தவள் தாய் வற்புறுத்தவே அதன் பிறகு அவளும் தாயுடன் மல்லுக்கு நிக்காமல் அவசரமாக அள்ளி வாயில் திணித்துக் கொண்டவள் தாயிடம் விடை பெற்று ஓட்டமும் நடையுமாக பேரூந்து நிறுத்தத்தை அடைய பேரூந்தும் வர ஏறிக் கொண்டாள். வேலை செய்யும் வளாகத்தை அடைந்த பின்தான் அவளால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது. நேரத்துக்கே வந்து விட்டோமென எண்ணியவள் அந்த உயர்ந்து நின்ற ஐந்து மாடி கட்டிடத்தைப் பார்த்தாள். 'வர்ஷிகாஷ் ஷாப்பிங் மால்' என பொறிக்கப்படிருந்தது.
'வர்ஷி... யூ ஆர் மை லைஃப், இந்தப் பெயரும் சரி நீயும் சரி என்றைக்குமே எனக்கு மட்டும்தான் சொந்தம். அதை யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.' பெயர் பலகையைப் பார்த்ததும் எப்போதும் போல அவள் காதுகளில் அந்த ஆழ்ந்த குரல் ஒலித்தோய்ந்தது. கண்களில் நீர் திரையிட மெல்ல தலையை உலுக்கிக் கொண்டாள். மனதில் லேசான வருத்தத்துடன் அதேநேரம் மெல்லிய புன்னகை உதட்டில் பரவ தன் பெயர் கொண்டதாலோ என்னவோ ஒருவித பெருமிதத்துடனே உள் நுழைந்தாள் ப்ரியவர்ஷினி.
அது ஒரு பெரிய பல்பொருள் அங்காடி ஐந்து தளங்களை கொண்டியங்கியது. தரைத் தளம் வீட்டுத் தளபாடங்கள், அலங்காரப் பொருட்கள் மற்றும் சமயலறை உபகரணங்களையும் பில்லிங் கவுண்டர்களையும் வாடிக்கையாளர்களுக்கான சிறந்த உணவகத்தினையும் கொண்டிருக்க, இரண்டாவது தளம் பெண்களுக்கான ஆடை அணிகலங்களுடன் பெண்களுக்கான அனைத்துப் பொருட்களையும் கொண்டிருந்தது. மூன்றாந்தளத்தில் ஒரு பகுதி குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களுடன் அவர்களுக்கான சகலவிதமான பொருட்களையும் அத்தோடு குழந்தைகள் விளையாடுவதற்கான ஒரு சிறு பகுதியையும் கொண்டிருந்தது. நான்காம் தளம் ஆடவர்களுக்கானது. அதன் பிரிதொரு பகுதியில் பல்தரப்பட்ட துணிவகைகளையும் சிறிய கார்மன்ஸையும் உள்ளடக்கியிருக்க ஐந்தாம் தளத்தில் அலுவலகமும் ஊழியர்களுக்கான சிறு உணவகமுமிருந்தது. அடித்தளம் முழுக்க ஸ்டோராகவும், வாகனத்தரிப்பிடமாகவும் பயன்படுத்தப்பட்டது. ஆண்களும் பெண்களுமாக சுமார் நூறு பேரளவில் பணியாளர்கள் அங்கு பணிபுரிந்தார்கள். மொத்த நிறுவனத்திற்கும் பொறுப்பாக ஒரு பொது மேலாளரிருக்க, ஒவ்வொரு தளத்திற்கும் பிரத்யேக மேலாளர்களும் அவர்களுக்கு கீழே உதவி மேலாளர்களும் பல விற்பனையாளர்களும், கடை நிலை ஊழியர்களும் பாதுகாவலர்களும் வேலை செய்தனர். பிரத்யேக அலுவலக ஊழியர்களுடன் கார்மன்ஸ் மற்றும் உணவகத்திற்கான ஊழியர்களும் இருந்தனர். அங்குதான் ப்ரியா இரண்டாம் தளத்தின் உதவி மேலாளராக கடமை புரிகிறாள். ஒன்பது மணி நேர வேலை, நல்ல சம்பளம்தான் ஆனாலும் அவள் குடும்ப நிலைக்கு அது போதவில்லை. உள் நுழைந்தவள் ஐந்தாம் தளத்திலுள்ள அலுவலக வரவேற்பிற்கு சென்று வருகை பதிவுப் புத்தகத்தில் கையொப்பம் இட்டுவிட்டு திரும்ப
"ஹாய் ப்ரியா." என்றவாறே அவள் தோள்களில் கை வைத்தாள் அவளின் உயிர் தோழியும் மூன்றாம் தள உதவி மேலாளருமான ராதா.
"ஹாய்டி" என்றாள் ப்ரியா.
"என்னடி வழமையா ஏர்லியா வர்ரவ இன்னைக்கு கொஞ்சம் லேட்டாகிட்ட போல?"
"ஆமாப்பா இன்றைக்குப் பார்த்து இந்த பொல்லாத தூக்கம் போயிட்டுடி எழும்ப லேட் அதான். நீ வந்து ரொம்ப நேரமோ?"
"ஒரு பதினஞ்சு நிமிஷம் இருக்கும்."
"ஓ... அதுசரி மீட்டிங் ஸ்டார்ட் ஆகிடுச்சா?"
"இல்லடி இனி ஸ்டார்ட் ஆகிடும். எனக்கும் கொஞ்சம் வேலையிருந்துச்சு முடிச்சுட்டு வாரேன். சரி வா மீட்டிங் ஹாலுக்குப் போகலாம்." என்றவாறே தோழிகளிருவரும் கூட்டம் நடக்கும் கூடத்தினுள் நுழைந்தனர். மேலாளர்களுக்கும், அலுவலக ஊழியர்களுக்கும் மட்டுமே இந்த கூட்டம் ஏற்பாடாயிருந்தது. சற்று நேரத்தில் பொது முகாமையாளர் சிவராமனுடன் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகவனும் உள் நுழைந்தார். அவரைக் கண்டு எழுந்தவர்களுக்கு வணக்கம் கூறி அனைவரையும் அமரச் சொன்னவர் பேச ஆரம்பித்தார்.
"உங்க எல்லோருக்கும் முதல்ல என் நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன். இவ்வளவு காலமும் எனக்கு பக்கபலமா இருந்து இந்த நிறுவனத்தை இந்த உயரத்துக்கு கொண்டு வந்ததுக்காக. இதே ஒத்துழைப்பை உங்க புது எம்.டிக்கும் நிச்சயமா நீங்க வழங்கணும்." அவர் கூற கூட்டத்தில் சிறு சலசலப்பு. அனைவரையும் அமைதிப்படுத்தியவர்,
"உங்களுக்குள்ள ஆயிரம் கேள்விகள் முளைச்சிருக்கும். சரி உங்க எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லவும் புது நிர்வாகம் பற்றி சொல்லவும் தான் இந்த மீட்டிங்கே. இவ்வளவு நாளும் பெயரளவு எம்.டி பொறுப்புல இருந்துதான் நான் இந்த நிறுவனத்தைப் பார்த்துகிட்டேனே தவிர இந்த நிறுவனத்தோட உண்மையான முதலாளி என் மருமகன் அருண் ஆகாஷ்தான்." ராகவன் கூற அந்தப் பேரைக் கேட்டதும் ப்ரியாவினுள் என்னவென்று சொல்ல முடியாத பல்வேறுபட்ட உணர்ச்சிகள் அவளை ஆட்கொண்டன. தன்னை ஒருவாறு சமநிலைப் படுத்தியவள் மீண்டும் ராகவனின் பேச்சுக்கு செவி சாய்த்தாள்.
"அவர் இத்தனை நாள் லண்டன்ல இருந்தார். இப்போதான் பொறுப்பேத்துக்க மொத்தமா இங்கே வரார். அருணின் மொத்த உழைப்பும் கனவும்தான் இந்த நிறுவனம். அதை என்னை நம்பி கொடுத்திருந்தார். என்னைப் பொறுத்தளவுல உங்க ஒத்துழைப்போட அந்த பொறுப்பை நல்ல படியா நிறைவேத்திட்டேன் என்று நினைக்கிறேன். வயசாயிடுச்சில்ல, இனி எனக்கும் ஓய்வு தேவை. அதனாலதான் அருண்கிட்டேயே அவரோடதை ஒப்படைக்க முடிவெடுத்தேன். இன்னும் ஒரு வாரத்துல அருண் இந்த கம்பனிய பொறுப்பேத்துப்பார். அதாவது வர்ற திங்கள் விட்டு அடுத்த திங்கள். ஸோ, கண்டிப்பா அன்றைக்கு ஒரு சின்ன விழாவ நாம ஏற்பாடு பண்ணணும். சிறு அறிமுகப்படுத்தலோட வரவேற்புரை, நன்றியுரை அத்தோட கம்பனி பத்தின ஒரு முன்னோட்டத்தையும் சொல்லிடலாம். இறுதியா சிறு விருந்துபசாரமும் வச்சுக்கலாம். அன்றைக்கு எல்லோருக்கும் கம்பனியிலதான் விருந்து. எல்லோரும் எட்டு மணிக்கே வேலைக்கு வந்திடுங்க. மற்ற ஊழியர்களுக்கும் சொல்லிடுங்க. முக்கியமான விசயம் என் மகளும் மகனும் கூட வாராங்க, இந்த ஃபங்சன் முடிய என்னோட சொந்தக் கம்பனிப் பொறுப்ப என் பிள்ளைகள்கிட்ட ஒப்படைக்கணும், நாங்க அங்கேயும் போகணும். ஸோ, எல்லாமே டைமுக்கு நடந்தாத்தான் சரியா இருக்கும். அருணுக்கு டைமிங் ரொம்ப முக்கியம் அது மிஸ்ஸானா கடுப்பாயிடுவார். அத்தோட வேலையிலயும் சுத்தமாக இருக்கனும். அலட்சியம், பொறுப்பின்மை எல்லாம் கண்டாலே அவருக்கு சுத்தமா பிடிக்காது, வாக்கு கொடுத்தா எப்பாடு பட்டாவது அதை நிறைவேத்தணும் பின்வாங்கக் கூடாதென்னு நினைப்பார். கோபம் அதிகமா வரும். ஸோ, பீ கியார்ஃபுள். என்ட் ஸ்டொக் டிடைல்ஸ், உங்க பென்டிக் வொர்க்ஸையும் கிளியர் பண்ணிடுங்க." என்று கூறிக் கொண்டு சென்றவர் ஊழியர்களின் முகத்தைப் பார்த்துவிட்டு சத்தமாக சிரித்தார்.
"என்ன பயந்துட்டீங்களா? நான் சொன்ன மாதிரி வேலையில தப்பு செய்தால்தான் பிரச்சனையே மற்றப்படி அருண் மாதிரி ஒரு முதலாளி கிடைக்க உண்மையிலே நீங்க கொடுத்து வச்சிருக்கணும். ஒவ்வொருவரையும் தன்னுல ஒருத்தராகத்தான் பார்ப்பார். அவரவருக்கான தேவைகளை நீங்க கேட்கும் முன்னமே செஞ்சுடுவார். நானே சில சமயங்கள்ல என் மருமகனின் பொறுமையையும் பொறுப்பையும் பார்த்து பெருமை பட்டிருக்கேன். உண்மைய சொல்லணும் என்றால் ஹீ இஸ் எ ஃபென்டாஸ்ட்டிக் காய். பார்க்கதானே போறீங்க." என்றவர் மேலும் தன் திட்டங்களை தெளிவாக கூறிவிட்டு விழாக்கான நிகழ்ச்சிகளை ஒழுங்கமைக்க ஒரு குழுவை நியமித்தவர் கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியேற மற்றவர்கள் அன்றைய வேலைகளைக் கவனிக்கச் சென்றனர்.
"என்னடி ப்ரியா, சார் இப்படிப் பயங்காட்டிட்டுப் போறார். அந்த புது எம்.டி டேன்ஜரான ஆள் போல இருக்கே! இப்ப என்னடி பண்ணுறது? எனக்கு பயமா இருக்கு." ராதா கூற
"ஆமாமா எனக்கும் அந்த டென்ஸன்தான்." தரைத் தளத்துக்கான உதவியாளர் வான்மதி ஒத்துப் பாட
"நல்ல வேளை இன்னும் ஒரு வாரமிருக்கு அதுக்குள்ள இருக்குற பென்டிக் வொர்க்ஸ முடிச்சிடணும்." அலுவலக ஊழியை ராகினி நிம்மதியுற்றாள்.
"எப்பவும் போல ராகவன் சாரே இருந்திருக்கலாம்." ஆண்கள் பகுதிக்குப் பொறுப்பான வினோத் சொன்னதும் மற்றையவர்களும் அதையே வழி மொழிந்தனர்.
"சேம் சேம் பப்பி சேம்." நான்காம் தள உதவி மேலளார் கபிலனின் வார்த்தையில் மற்றையவர்கள் சிரிக்க
"என்ன கபில் நீங்க ஆம்பிளப் பிள்ளை இப்படி பயப்படலாமா?" குழந்தைகள் பகுதிக்குப் பொறுப்பான மேலாளர் மாதவி கிண்டலடிக்க
"ஏன் மாதவி, அப்போ உங்களுக்கு பயமா இல்லையா?" அலுவலக ஊழியர் ரஞ்சன் கேட்க
"ஏன் இல்லாம அதெல்லாம் வண்டி வண்டியா இருக்கு."
"அப்போ எதுக்காக இந்த நக்கல்?" கபிலன் அவளை நோக்க
"அது நீங்க ஆம்பிள எப்படி பயப்படுறதுன்னு கேட்டேன் அவ்வளவுதான்."
"இதுல என்ன ஆம்பள, பொம்பள? பயம் எல்லாருக்கும் ஒன்னு தானே."
"அது சரி கபிலன் நீங்க சொல்லுறது ஹன்ட்ரட் பேஸன்ட் கரெக்ட், பயம் பயம்தான். அதுல என்ன ஆம்பள, பொம்பள?" என்று கபிலனுக்கு சார்பாக பேசிய ராதா எதுவும் கூறாது அமைதியாக வந்த ப்ரியாவின் புறம் திரும்பி
"ஏய் ப்ரியா, நீ என்ன எதுவும் பேசாம இவ்வளவு அமைதியா வர்றாய், உனக்கு பயமாயில்லையா? எங்களுக்கு எல்லாம் டென்ஸன் தலைக்கேறுது நீ என்னடான்னா ரொம்ப கூலா வர்றாய்?"
"அதானே" மற்றையவர்களும் கேட்க ஏதோ பேச வந்த ப்ரியாவை முந்திக் கொண்ட கணக்காளர் அகிலன்
"ப்ரியா எப்பவுமே இப்படித்தானே எதுலயுமே உங்களை மாதிரி டென்ஸனாகாம கூலாத்தான் இருப்பாங்க. அதுமட்டுமில்ல அவங்க வேர்க்ஸ்லயும் பெர்ஃபெக்ட்டா இருப்பாங்க. ஸோ, அவங்க கூலா இருக்காங்க அதனாலயே எனக்கு அவங்கள ரொம்ப பிடிக்கும். நான் சொல்லுறது கரெக்ட் தானே ப்ரியா." என்றவனை உள்ளூர கடுகடுப்புடன் யாருமறியாது ராகினி முறைத்தாள்.
"என்ன அகிலன் சார் ப்ரியாக்கிட்ட கேள்வி கேட்டா நீங்க பதில் சொல்லுறீங்க இது சரியில்லையே..." மாதவி இழுக்க அதில் அசடு வழிந்த அகிலனோ
"ஏன் நான் சொன்னா என்ன தப்பு, உண்மையத்தானே சொல்லுறேன். ஏன் ப்ரியா நான் சொல்லலாம் தானே?" ஏதோ ஒருவித எதிர்பார்ப்புடன் ப்ரியாவிடம் வினவிய அகிலனின் கேள்விக்கு பதில் கூறாது மற்றையவர்களைப் பார்த்து
"நான் மட்டுமா லலிதா மேடமும் ரொம்ப கூலா அமைதியாத்தானே வர்றாங்க அப்போ அவங்களுக்கு டென்ஸன் இல்லையா?"
"என்ன ப்ரியா என்னை இழுக்குறீங்க?" சிறு சிரிப்புடன் லலிதா கேட்க
"அதானே லல்லி, ப்ரியா சொல்லுற மாதிரி நீங்களும் ரொம்ப கூலாத்தான் இருக்கீங்க ஸோ...." வான்மதி கேட்டதும்
"அதுவா இங்கப்பாருங்க நான் உங்கள மாதிரி சாக்குப் போக்கு சொல்ல முடியாது. ஏன்னா, என் வேல அப்படி. முதலாளியோட நேரடிப் பார்வையில இருக்குறவ எம்.டி சாரோட செகரட்டரியா அவரோட பாதி வேலைய நான்தான் முடிக்கணும். அதனால நான் என்றைக்கும் வேர்க் பென்டிங் வச்சதில்ல."
"லலிதா மேம் மட்டுமில்ல நானும் அப்படித்தான். ஆனாலும் உள்ளுக்குள்ள கொஞ்சம் உதறலாத்தான் இருக்கு." என்றாள் சிவராமனின் செயலாளர் வீணா.
"வீணா சொல்லுறது உண்மைதான். எனக்கும் உள்ளுக்குள்ள ஒரு பயம் ஓடிட்டே இருக்கு. அதனாலதான் நான் எதுவும் பேசாம நீங்க பேசுறதை கேட்டுட்டு வர்றேன். நான் கூலா எல்லாம் இல்லப்பா எனக்கும் டென்ஸன் தலைக்கு ஏறுதுதான். அப்படி பார்த்தா எங்களை விட ப்ரியாதான் ரொம்ப கூலா வர்றா, என்ன ப்ரியா நான் சொல்லுறது கரெக்ட் தானே?" லலிதா வினவ
"ப்ரியா, நீங்க பெரிய ஆளுதான் போங்க, ஆம்பள எனக்கே லைட்டா உதறுது. ஆனால், பாருங்க மேடம் எப்படி இருக்கான்னு." கபிலன் கூற்றிற்கு
"ஏய் சும்மா பயப்படாதீங்கப்பா, அந்த எம்டிக்கு என்ன கொம்பா முளச்சிருக்கு. சார் தான் சொன்னாரே தப்பு பண்ணினால்தான் கோபப்படுவார் என்று நாம நம்ம வேலையில கரெக்ட்டா இருந்தா அவர் ஏன் கோபப்படப் போறார். சோ டூ யூர் வேர்க் வெல் என்ட் கிவ் யூவர் பெஸ்ட். டோன்ட் வொரி பீ ஹெப்பி." அனைவரிடமும் அமைதியாக பதிலளித்தவள் அறியவில்லை அந்த எம்டியிடம் கோபத்தை முதலில் எதிர்கொள்ளப் போவது அவள்தான் என்று. அவளின் இந்த பதிலில் அவளை பெருமையாய் நோக்கியவாறு
"நான்தான் சொன்னேனில்ல இதுதான் நம்ம ப்ரியா." மார்தட்டிக் கொண்ட அகிலனைப் பார்த்த ராதாவோ
'சரியில்லையே இந்த பாராட்டு சரியே இல்லையே, அதோட இந்த பார்வையும் சரியே இல்லையே. ஹா.... இதுக்கு நம்ம அம்மணியோட ரியாக்ஷன் என்ன?' மனதினுள் நினைத்தவாறு தோழியின் புறம் திரும்ப அவளோ அதற்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல் இவளையே பார்த்து நின்றவள்
"ஏய் ராது, என்னடி மந்திரிச்சு விட்டமாதிரி இருக்குற இங்கப்பாரு இன்னும் ஒரு வாரம் இருக்கு, நியூ எம்டி வாரதுக்கு. இப்பவே டென்ஸனாகாத நம்ம கரெக்ட்டா இருந்தா எல்லாம் ஓகே தான்டி. ஸோ, டோன்ட் வொரிடி டேகிட் ஈஸி."
"உனக்கு எல்லாம் ஈஸிதான் ஆனால் எனக்கு ம்ஹ்ம்..... உனக்குத்தான் தெரியுமே எனக்கு டைம் மெயின்டைன் கொஞ்சம்..... கொஞ்சமென்ன ரொம்பவே கஷ்டம் என்று. அதான் கொஞ்சம் பயமாயிருக்கு." ராதா புலம்ப
"இங்கப்பாரு சும்மா பயப்பட்டுக்கு இருக்காம உன்னோட வேலைய சரியா செய், டைம் பங்சுவல் கொஞ்சம் மெயின்டைன் பண்ணு அதுக்குப்பிறகு அந்த புது எம்டி என்ன, யாரும் உன்னை குற்றம் சொல்ல முடியுமா?" ராதாவுக்கு எடுத்துக் கூறிய போதும் ப்ரியாவையும் சிறு பயம் தொற்றிக் கொண்டது.
"ரொம்ப ஈஸியா சொல்லிட்ட, உனக்கென்னம்மா நீ ஏர்லியா வர்றவ."
"ஆனாலும்டி எனக்கும் எப்பவும் போல நம்ம ராகவன் சாரே எம்டியா இருந்தால் நல்லா இருக்கும் போலத்தான் இருக்கு." அவளும் தன் பயத்தை எடுத்துரைக்க
"என்ன அகிலன் சார்? மேடம் அப்படி இப்படி என்று ரொம்பப் புகழ்ந்தீங்க, இப்போ என்ன சொல்லுறீங்க?" அவனுடன் கோபமாயிருந்த ராகினி சமயம் பார்த்து அவனை நக்கல் செய்ய
"அதானே அகிலன் சார்...." அவனை வம்பிழுக்கும் நோக்குடன் ராதா கேட்க
"ஐயோ! என்ன ப்ரியா இப்படி காலவாரிட்டீங்களே!" அவன் முகத்தை தொங்கவிட
"என்ன சார் இப்படி சொல்லுறீங்க? என்னோட மனநிலையத்தானே நான் சொன்னேன். உங்க எல்லார் மாதிரியும் எனக்கும் பயமாத்தான் இருக்கு"
"அதைத்தானே இம்பட்டு நேரமா நாங்களும் சொல்லிட்டிருக்கோம்." ரஞ்சன் கூற்றிற்கு
"ராகவன் சார் நம்ம டைமிங்க கண்டுக்க மாட்டார். ஆனால், இந்த புது ஆளு வேற மாதிரி போல அதுக்காகத்தான் இந்த பயம்." ராதா கூற
"ஆனாலும் என்ன செய்ய, இது அவரோட கம்பனி இல்லையாமே இதுக்கு சொந்தக்காரர் அந்த புது ஆளுதானாமே. எப்படியோ நல்லவரா இருந்தா சரி. நாம நம்ம வேலையில சரியா இருந்தால் அவர் எதுக்காக கோபப்படப் போறாரு சொல்லு, எல்லாம் நம்ம கையில தான் இருக்கு ம்.... பார்க்கலாம்." ப்ரியா மற்றையவர்களுக்கு எடுத்துரைத்தவள் தன்னையும் திடப்படுத்திக் கொண்டாள்.
"அது சரி தான். அதைவிடுங்க ராகவன் சாரோட மருமகன் என்றால் மகளோட வீட்டுக்காரவராக்கும்." வான்மதி கேட்க
"இருக்கும் இருக்கும் சாரோட மகளும் கல்யாணமாகி லண்டன்லதான் இருக்காங்க. அதனால அப்படித்தான் இருக்கும். என்னடி ப்ரியா?" ராதா தன் சந்தேகத்தைக் கேட்க
"இருக்கலாம்டி. அதனால்தான் சாரும் ரொம்ப பொறுப்பா இதைப் பார்த்திருக்கார் போல." என அவள் கேள்விக்கு பதிலளித்தாள் ப்ரியா.
"என்ன இருந்தாலும் மகளோடது இல்லையா? கண்டிப்பா நல்லா பார்க்கத்தானே வேணும்." மாதவி கூற, அனைவரும் பேசியவாறே தங்கள் தங்கள் தளங்களை நோக்கிச் செல்ல ராதாவும் ப்ரியாவும் தங்கள் தளங்களுக்குச் செல்ல படிக்கட்டில் இறங்கினர்.
"ஏய் ப்ரியா, அந்த அகிலனுக்கு உன் மேல ஒரு கண்ணுன்னு நினைக்குறேன்டி"
"சும்மா கண்டத உளராம வா."
"நான் எங்க உளர்றேன், உண்மையத்தான் சொல்லுறேன்."
"எது உண்மை?"
"அவருக்கு உன் மேல கண்ணு, அந்த ராகினிக்கு அகிலன் மேல கண்ணு. இதுதான் உண்மை." ராகமாய் இழுக்க
"லூசு மாதிரி உளறாத, ராகினி விசயமெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், என் விசயம் அப்படி ஒன்னுமிருக்காது. எல்லாம் உன்னோட கற்பனை."
"கற்பனையல்ல, முழு நிஜம்."
"என்ன இப்போ, என்னை பாராட்டுற மாதிரி பேசினாரே அதுக்கு சொல்லுறாயா?"
"அதுமட்டுமில்ல அவர் உன்கிட்ட பேசுற முறை, உன்னைப் பார்க்குற பார்வை, எல்லாத்தையும் வச்சுத்தான் சொல்லுறேன். நான் மட்டுமில்லடி நம்ம மத்த ஸ்டாஃப்ஸையும் கேட்டுப் பாரு இதேதான் சொல்லுவாங்க."
"இங்கப்பார் ராது, அப்படி எதுவும் எனக்குத் தெரியல்ல."
"அதுக்கு நம்மள சுத்தி என்ன நடக்குதுன்னும் அப்பப்ப பார்க்கணும். இப்படி ஒரே வேல, வேல என்று மட்டும் இருக்கக் கூடாது, புரிஞ்சதா?"
"அதுக்குத்தானே வந்திருக்கோம். இல்ல மத்தவங்க என்ன பண்ணுறாங்க, ஏது பண்ணுறாங்க என்று பார்க்கவா நமக்கு சம்பளம் தாராங்க?"
"உன்கிட்ட மனுஷன் பேசுவானா? அம்மா தாயே தெரியாம சொல்லிட்டேன் விடு மிஸ் பெர்ஃபெக்ட். ஆனால், ஒன்னுடி அகிலன் ஒன்னும் மோசமானவருமில்ல நல்ல தொழில், நல்ல வருமானம், ஆளும் பார்க்க ஹீரோ போல சும்மா அட்டகாசமாத் தான் இருக்கார். ஸோ, சீக்கிரமே உன்கிட்ட வந்து ப்ரப்போஸ் பண்ணுவாரென்னு நினைக்கிறேன். அப்படி மட்டும் நடந்துச்சுன்னா எதையும் யோசிக்காதே, உடனே ஓகே சொல்லிடு என்ன?"
"அடி வாங்கப் போற வாய மூடிக்கிட்டு வா."
"என்னடி இப்போ நான் என்ன தப்பா சொல்லிட்டேன். இப்படிக் கோபப்படுற? எப்படியும் இனி கல்யாணம் பண்ணத்தானே வேணும் அதனாலதான் சொன்னேன்."
"எல்லாம் தெரிஞ்ச நீயே இப்படிக் பேசலாமா ராது? இப்போ என் நினைப்பு முழுக்க தம்பியோட படிப்பும் ப்ரீத்தியோட கல்யாண செலவிற்கு சேர்க்கிறதுலயும் தான்டி இருக்கு."
"அவங்களையே பார்த்துட்டிருந்தா நீ எப்போடி உன் கல்யாணத்தைப் பத்தி யோசிக்கப் போற? உனக்கும் வயசாகுதில்ல." தன் கேள்வியில் விரக்தியாய் சிரித்த தோழியைப் பார்த்த ராதாவிற்கு கோபம் வர
"என்னடி ஒரு மார்க்கமா சிரிக்குற? இந்த சிரிப்பே சரியில்லையே! உன் மனசுல என்னம்மோ இருக்கு, என்ன என்றுதான் சொல்லித் தொலடி."
"நான் என்றைக்குமே கல்யாணம் பண்ணிக்கப் போறதில்ல." அவளின் தீர்க்கமான குரலிலே ப்ரியாவின் எண்ண ஓட்டத்தை அறிந்தவள்
"என்ன ப்ரியா இது, ஏன் இப்படி ஒரு முடிவு? அப்போ நீ இன்னும் பழசு எதையும் மறக்கல்ல அப்படித்தானே."
ராதாவின் கேள்விக்கு அவள் மௌனமாயிருக்க
"அப்போ, நீ இன்னும் அவனத்தான் மனசுல நினச்சிட்டிருக்கல்ல." சிறு அதிர்ச்சியுடன் ராதா வினவ, அப்போதும் ப்ரியாவின் மொழி மௌனமாகவே இருக்க, தோழியின் மனதினை முற்று முழுதாக உணர்ந்து கொண்ட ராதா
"ப்ரியா! நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத, இன்னொருத்தங்களுக்கு சொந்தமான பொருள, நம்ம நினக்கிறது சரியில்லடி. கிடைக்காதுன்னு தெரிஞ்சும் அந்த நினப்ப மனசுல சுமந்துட்டிருக்கிறது உனக்குத்தான் ரொம்ப வலியக் கொடுக்கும். ப்ரியா, உன் நல்லதுக்குத்தான் சொல்லுறேன். பழைய நினைவுகளை மொத்தமாத் தூக்கி தூரப் போடு, அகிலன் என்று இல்ல, உனக்கானவர் உன்னைத் தேடி வர்றப்போ மறுக்காம கல்யாணம் பண்ணிக்கத் தயாராகுடி."
"ஏய் லூசு ராதா, அப்படி எதுவுமில்ல, உன் கற்பனைக்கு என்னை பலியாக்காதடி." என சிரிக்க
"நல்லா சமாளிக்குற, நான் சொல்லுறது உண்மைதானே, எனக்கு பதில் சொல்லு."
"அப்படி எதுவுமில்ல, சரி சரி இந்த கதைய விடு, உன் இடம் வந்துடுச்சு. நான் என் ஃப்ளோருக்குப் போறேன்."
"என்ன எஸ்கேப் ஆகிட்டம் என்று சந்தோசப்படுறயா? இதுக்கு பதில் சொல்லாம விடமாட்டேன்டி"
"ஏய் நேரமாச்சுடி, அப்புறம் பார்க்கலாம் பைடி" என்றவாறே படிகளில் இறங்கி மறைந்தாள் பெண்.
ராகவன் அருணைப் பற்றி நல்ல விதமாகக் கூறியபோதும் புதுமுதலாளி கொஞ்சம் கோபக்காரன் என்பதையும் கூறியிருக்க, அனைவரும் மனதில் சிறு கவலையுடன் சேர்ந்த பயத்துடனே அன்றைய வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். உண்மையிலே ராகவன் ஒரு சிறந்த முதலாளி, அனைவரையும் தட்டிக் கொடுத்தே வேலை வாங்குவார். மேல்நிலை ஊழியரிலிருந்து கடைநிலை ஊழியர்கள் வரை அறிந்தே வைத்திருந்தார். அவரவரின் வேலைத் திறத்திற்கேற்ப அவ்வப்போது பதவி உயர்வுகளையும் கொடுப்பார். அதுபோல் தான் இரண்டு வருடங்களுக்கு முதல் விற்பனைப் பிரிவில் முதன்முதல் வேலைக்குச் சேர்ந்த ப்ரியாவிற்கு அவளின் வேலைத் திறனைப் பார்த்தே படிப்படியாக வேலை உயர்வை வழங்கினார். இன்று உதவி மேலாளராகப் பணியாற்றுகிறாள்.
வேலை முடிந்து வாடிய முகத்துடன் வீட்டுக்கு வந்த மகளைப் பார்த்த நீலவேணி, அவளின் வாட்டத்துக்கான காரணம் கேட்க, அன்று அலுவலகத்தில் நடந்ததைக் கூறினாள் ப்ரியா.
"இதுல பயப்பட என்னம்மா இருக்கு. தப்பு செஞ்சாத்தானே அந்தத் தம்பி கோபப்படும் என்று உங்க முதலாளி சொல்லிருக்காரு. நிச்சயமா நீ் வேலையில தப்பு பண்ண மாட்டே. அப்போ ஏம்மா கவலைப்படுறே. உன் வேலைத்திறனைப் பார்த்து அந்தத்தம்பியே உன்னைப் பாராட்டும் பாரு. நல்லத மட்டும் யோசி எல்லாம் நல்லதாவே நடக்கும். சரி கை கால் கழுவிட்டு வாம்மா. டீ குடிக்கலாம்." என நீலவேணியும் அவளுக்கு ஆறுதல் கூறி சமலறைக்குள் நுழைந்து கொள்ள, ப்ரியாவும் தன் அறையை நோக்கி நடந்தாள்.
ஆனால் அந்தத் தாயின் வாக்கு பொய்க்கப் போவதை பாவம் அவர்கள் இருவருமே அறியவில்லை.
வீசும்.....