அந்த கதவின் துளை வழியாக பார்த்தவளின் விழிகள் பயத்தில் நடுங்கி போக, உடன் உயிர் பயமும் வந்து ஒட்டிக் கொண்டது.
கருவில் வேறு ஒன்பது மாத குழந்தை. படபடப்பிலும் அச்சத்திலும் பிரசவ வலி நேர்ந்து விடுமோ என்ற பயமும் சேர்ந்துக் கொள்ள, அமைதியான அந்த இரவு நேரத்தில் மூச்சு சத்தம் கூட யாருக்கும் கேட்டு விட கூடாதென்று பயந்தாள் பெண்ணவள்.
நடுங்கிக் கொண்டு இருந்த இதயத்தோடு ஒன்பது மாத கருவை சுமந்துக் கொண்டு யாருக்கும் சத்தம் கேட்காதவாறு மெதுவாக நடந்து பின் பக்கம் வந்தவள், நயனங்கள் பயத்தில் வெளிறி போய் இருக்க, வியர்வை உடல் முழுவதும் நனைத்துக் கொண்டு அவள் பாதம் நிற்க முடியாமல் நடுக்கம் கொடுக்க, மூச்சும் வாங்க ஆரம்பித்தது.
ஆனாலும் எப்படியாவது தன் உயிரையும் தன் குழந்தை உயிரையும் காப்பாற்றி விட வேண்டும் என்று முனைப்பில் இருந்தவள் கரம் கெட்டியாக பின் பக்கம் இருக்கும் கதவின் பிடியை பிடித்துக் கொண்டு இருந்தது.
செவியோ கூர்மையாக முன் பக்க கதவு திறக்கும் சத்தத்தை கேட்பதில் இருக்க, அதே போல் கதவும் திறக்கும் சத்தம் கேட்க, இவளும் கேட்கும் சத்தத்தை வைத்துக் கொண்டு மெதுவாக பின் பக்க கதவை திறந்தாள்.
சரியாக அறை கதவு திறந்துக் கொள்வதற்குள், முன் பக்கம் திறந்த கதவின் சத்தம் நின்று விட, இவளுக்கு திக்கென்று ஆனது.
இவள் பாதி அளவு தானே கதவை திறந்து வைத்து இருக்கிறாள். தன் பாதி உடல் கூட இந்த வழியாக நுழைய முடியாதே என்ற பதற்றம் சட்டென்று ஏற்பட்டு விட, அதில் சுருக்கென்று அடி வயிற்றில் வலி தோன்ற பல்லை கடித்துக் கொண்டு வலியை தாங்கிக் கொண்டவள் அப்படியே அந்த இருட்டில் கதவின் பக்கத்தில் சாய்ந்துக் கொண்டாள்.
முதல் முறை தான் ஏன் இவ்வளவு குண்டாக இருக்கிறோம் என்று எண்ணி வேதனைக் கொண்டவள் மனமோ 'தங்கம் பயப்படாதீங்க அம்மா உங்களை எப்படியாவது காப்பாத்திடுவேன்' என்று அந்நிலையிலும் கருவில் இருக்கும் குழந்தைக்கு தைரியத்தை கூறினாள்.
கருவில் இருந்த குழந்தைக்கு தைரியம் கூறினாளா இல்லை தனக்கு தானே தைரியம் கூறிக் கொண்டாளா என்று அவளுக்கு மட்டும் தான் தெரியும்.
அப்பொழுது "ஐயா உங்க சம்சாரத்தை ரூம்ல காணும். நம்ம கொலை பண்ண வரோம்னு தெரிஞ்சிட்டு தப்பி போயிட்டாங்களா? எதுக்கும் நான் வேணும்னா பின் பக்கம் போய் பார்த்துட்டு வரவா?" என்று பேசுவதை செவியில் வாங்கியவளுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.
தன் உயிராக நினைத்து திருமணம் செய்து குடும்பம் நடத்தி இப்பொழுது குழந்தையை சுமந்துக் கொண்டு இருக்கும் தன்னையும் குழந்தையையும் தன் கணவனே கொலை செய்ய சொல்லி இருக்கிறானே என்ற துயரம் அவள் நெஞ்சை அடைத்துக் கொள்ள, தனக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை எப்படியாவது தன் பிள்ளையை மட்டுமாவது காப்பாற்றி விட வேண்டும் என்று துடித்தாள்.
அப்பொழுது பின் பக்கம் யாரோ ஒருவர் வரும் காலடி சத்தம் கேட்க, மீண்டும் கதவின் பிடியை பிடித்துக் கொண்டு காதை கூர்மையாக்கினாள்.
அவள் நினைத்தது போலவே மற்றொரு கதவு திறக்கும் சத்தம் கேட்ட அந்த சத்தத்திற்கு ஏற்றது போல் இவளும் கதவை வேகத்துடன் முழுமையாக திறந்து வெளியேச் சென்றவள் அதே வேகத்துடன் கதவை சாற்றி வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு நொடியும் தாமதிக்காமல் அந்த இருட்டான பாதையில் வேகமாக நடந்தாள்.
அவளால் ஓட கூட முடியவில்லை. நடப்பதற்கே மூச்சு வாங்கியது. ஆனாலும் உயிர் பயம், அவளை துணிச்சலாக நடக்க வைத்தது.
கிட்டத்தட்ட பாதை தார் ரோட்டை வந்தடைய, அவளும் மூச்சு வாங்க தார் ரோட்டில் பாதத்தை வைத்த அந்த கணம், அதே சாலை வழியாக வேகமாக வந்த ஒரு கார், உயிருக்கு பயந்து வந்த கர்ப்பிணி பெண்ணான இவள் மீது மோத, அதில் பறந்து போய் கீழே விழுந்தவளுக்கு தலையிலும் இடுப்பு மற்றும் வயிற்று பகுதியிலும் கை கால் என்று உடல் முழுவதுமே பலத்த அடிப்பட்டு அந்த இடத்திலே மயங்கி சரிந்தாள்.
அவள் மீது மோதிய வேகத்தில் கார் ஒரு குலுக்கலுடன் நின்று விட, "என்னாச்சி எது மேலேயோ மோதிட்டோம் போல" என்று குலைவாக பேசியபடி எதன் மீது கார் மோதியது என்று பார்ப்பதற்காக காரிலிருந்து இறங்கியவன் பாதம் தரையில் பட்டும்படாமல் தள்ளாடியபடி இறங்கினான்.
போதையின் உச்சியில் இருந்தவனின் பார்வைக்கு வேறு இருளில் எதுவும் புலப்படவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தானே தவிர, கீழே தரை அவன் கருத்தில் கூட பதியவில்லை போல்.
"என்னடா இது மேகத்துல மிதக்குற மாதிரி இருக்கு. அந்த கடைக்காரன் கொடுத்தது செம சரக்கு போல. அடிச்சதும் அப்படியே சொர்க்கத்துல மிதக்குற மாதிரியே இருக்கு" என்று மதுவின் பிடியில் உளறியவனின் கரம் காரின் பிடியில் வைக்க, அந்நேரம் மயக்கத்தில் இருந்தாலும் பிரசவ வலி ஏற்பட மெல்லியதாக அவளின் முணங்கல் சத்தம் இவனின் செவியில் தீண்டியது.
சத்தம் கேட்டதும் மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்தான். ஆனால் அவன் கண்களுக்கு எதுவுமே தெரியவில்லை.
"என்னடா இது இப்போ தான் யாரோ முணங்கியது போல இருந்துச்சி. ஆனா திரும்பி பார்த்தா யாரையும் காணும். ஒருவேளை பேய் பிசாசோ" என்று சொல்லிக் கொண்டே இடுப்பில் இருக்கரத்தையும் ஊன்றியபடி நேராக நின்றவன் "ஏய் நீ எந்த பேயா வேணாலும் இரு. இல்ல பிசாசா வேணாலும் இரு. ஆனால் என் முன்னாடி வராம இரு. நானே செம கொலை காண்டுல இருக்கேன். எவனாவது என் கண்ணு முன்னாடி வந்தீங்க. பேய் பிசாசுனு கூட பாவம் பார்க்க மாட்டேன் அடிச்சி தூக்கிட்டு போயிட்டே இருப்பேன்" என்று பேய்களையே மிரட்டியவன் மீண்டும் காரில் ஏற போனான்.
அப்பொழுது "ம்மா..." என்று வலியில் யாரோ முணங்கும் சத்தம் மீண்டும் கேட்க, அவனோ "அடங் கொய்யாலே, சொல்லிட்டே இருக்கேன்..." என்று பேசிக் கொண்டே திரும்பியவனின் விழிகள் இடுங்க "அங்கே ஏதோ உருண்டையா கிடக்குது" என்று தள்ளாடியபடியே சற்று அருகில் செல்ல அதிர்ச்சியில் அவன் விழிகள் விரிந்து போனது.
அங்கே உதிரங்கள் நிறைந்து போய் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த பெண்ணை பார்த்து.
அப்பெண்ணை பார்த்ததுமே அடித்த போதை கூட சட்டென்று இறங்கி விட, மெதுவாக அவள் அருகில் சென்றான்.
பார்த்ததுமே புரிந்துக் கொண்டான் கர்ப்பிணியாக இருக்கிறாள் என்று. அவள் அருகில் மேலும் நெருங்கி "ஏய் உயிரோட இருக்கீயா?" என்று கேட்டவனை எதைக் கொண்டு அடிக்கலாம் என்று அந்த இயற்கையே கோபம் கொண்டு மழை தூற ஆரம்பித்தது.
மழை நீர் அவள் முகத்திலும் பட ஜில்லிட்டு போனது போல் "ஆ..." என பெரும் மூச்சோடு கண்களை திறந்தவள் எதிரே நின்று இருந்தவனை பார்த்தவள் அப்படியே மீண்டும் மயங்கி போனாள்.
அதை கண்டு ஆடிப் போனவன் சுற்றும் முற்றும் மீண்டும் ஒருமுறை பார்த்தான். அந்த இருளான சாலையில் இவர்கள் இருவரை தவிர வேற யாருமே இல்லை என்பதை உணர்ந்தவன், மனசாட்சியை கழட்டி அடமானத்திற்கு வைத்தது போல், வேகமாகச் சென்று கார் கதவை திறந்து உள்ளே ஏறி காரை எடுத்துக் கொண்டு அங்கே இருந்து கிளம்பி இருந்தான் இக்கதையின் நாயகன்.
கருத்துகள் தெரிவிக்கும் பெட்டியின் கருவி கீழே உள்ளது. அதன் வழியே சென்று உங்கள் கருத்துகளை கூறுங்கள் பட்டூஸ்.
சிறு தூரம் கூட சென்று இருந்து இருக்க மாட்டான் அவன். சடன் பிரேக் போட்டு அப்படியே நின்றவன் விழிகள், முன் கண்ணாடி வழியாக அங்கே மழையில் நனைந்தபடி குருதி வழிய பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பவளை அழுத்தமாக பார்த்தான். ஏனோ அவன் மனம் வெறுப்பாக இருந்தது. இவனின் இந்த இரக்க குணத்தை அடியோடு வெறுத்து போக நினைத்தவனுக்கு மீண்டும் யாரென்றே தெரியாத ஒருத்தியின் மீது இரக்கம் பட வைத்தது.
அப்படியே இமைகளை மூடி இருக்கையில் சாய்ந்தவன் மூளை 'இங்கே இருந்து போய் விடலாம்' என்று கட்டளையிட
மனமோ 'ஒரு உயிர் இல்லை இரு உயிர் இன்னும் இந்த உலகத்தை கூட பார்க்காமல் அந்த உயிர் அப்படியே மேலுலகம் சென்று விட வேண்டுமா?' என்று கேட்க மழை வேகம் எடுப்பதை பார்த்து சலிப்பாக காரை பின்னால் எடுத்தவன் அவள் அருகில் நிறுத்தி விட்டு காரிலிருந்து இறங்கி அவளை தூக்க முயன்றான்.
அதிகம் எடைக் கொண்ட பெண்ணவளை அவன் ஒருவனால் சட்டென்று தூக்கி விட முடியவில்லை. மழை வேறு மேலும் அதிகரிக்க, மூச்சை உள்ளே இழுத்து தம்கட்டி அவளை தூக்கி பின்னிருக்கையில் கிடத்தியவன் "அய்யோ இடுப்பு போச்சே" என்று கதவை சாத்திக் கொண்டே ஒற்றை கையை இடுப்பில் வைத்து நெட்டி முறித்தான்.
"நல்லா மாடுக்கணக்கா தின்னுவா போல. இந்த கனம் கனக்குறா. எப்படியும் ஒரு எண்பது கிலோவாவது இருப்பா போல" என்று புலம்பிக் கொண்டே காரை எடுத்துக் கொண்டு அதிவேகமாக அங்கே இருந்து பறந்தான் அவன்.
அந்த ஊர் அருகில் அவசரத்திற்கு மருத்துவமனை வசதி கூட இல்லாமல் போக, கடுப்பானவன் "ச்சைக் என்ன ஊரு இது. ஒரு எமர்ஜென்சிக்கு ஹாஸ்பிடல் கூட இல்லை" என்று திட்டிக் கொண்டே எல்லையை கடந்து சிட்டிக்கு வந்தவன் கண்ணில் ஒரு மருத்துவமனை விழ, காரை அந்த மருத்துவமனை நுழைவாயிலில் விட்டான்.
பின் காரின் கதவை திறந்தவனுக்கு தானாகவே இடுப்பு வலி வந்து ஒட்டிக் கொள்ள, "அய்யோ இவளை தூக்கினா என் இடுப்பு எலும்பெல்லாம் உடைஞ்சிடும் போலவே" என்று இரண்டடி பின்னால் சென்று "உப்..." என காற்றில் ஊதிவிட்டு, அங்கே வந்த செவிலியரிடம் காரில் அடிப்பட்டு ரத்தம் வழிந்துக் கொண்டு இருப்பவளை காட்டி கர்னியை(ஸ்ட்ரெச்சர்) எடுத்து வர சொன்னான்.
செவிலியரும் அவளின் நிலையை பார்த்து விட்டு பதறி போனவள் "சார் அவங்களுக்கு பனிகுடம் உடைஞ்சிடுச்சு சார். சீக்கிரம் தூக்கி ஸ்ட்ரெச்சர்ல வைங்க" என்று அவன் பக்கத்தில் கர்னியை தள்ளி வைக்க,
அவனோ "யம்மா என்னால தூக்க முடியலனு தானே உங்கள கூப்பிட்டேன். போய் கம்பவுண்டர் யாராவது இருந்தா அழைச்சி வாங்க. ஒன்னா தூக்கி வைப்போம். அரிசி மூட்டையை விட செம வெயிட்டா இருக்கா" என்று அந்த நிலையிலும் மனசாட்சியே இல்லாமல் அவளை திட்டிக் கொண்டு இருந்தான் அவன்.
அந்ந செவிலியரோ பதற்றத்திலும் அவனை முறைத்து விட்டு உள்ளேச் சென்று இரண்டு ஆட்களை அழைத்து வந்தவள், மெதுவாக காரினுள் மயங்கி இருந்தவளை தூக்கி கர்னியில் படுக்க வைத்து அவசரபிரிவுக்கு அழைத்துச் சென்றார்கள்.
அதை பார்த்தவனோ "ஸ்ப்பா... நம்ம கடமை முடிஞ்சுது" என்று சொல்லிக் கொண்டே காரின் கதவை திறக்க போக, அப்பொழுது அருகில் வந்த மற்றொரு செவிலியர் "சார் சீக்கிரம் வாங்க உங்க வைஃப்க்கு பிலீடிங் ரொம்ப அதிகமா போய் இருக்கு" என்று அவனை உள்ளே வர வற்புறுத்தினாள்.
அவனோ "ஏதே அந்த பூரி சாம்பார் என்னோட" என்று ஏதோ சொல்ல வர, அதற்குள் உள்ளே இருந்து அவசரமாக வெளியே ஓடி வந்த கம்பவுண்டர், "அக்கா இவரோட காரிலிருந்து தூக்கிட்டு போனோமே அந்த பொண்ணுக்கு பெரிய ஆக்சிடென்ட் நடந்து இருக்காம். உடல் முழுக்க அடிப்பட்டு இருக்கு. பிழைக்கிறதே கஷ்டமாம். குழந்தையையாவது காப்பாத்திடணும்னு சொல்றாங்க. அதுக்கு அந்த அம்மாவோட புருஷன் கையெழுத்து வேணுமாம். பெரிய டாக்டர் இந்த ஃபார்ம்ல சைன் வாங்கிட்டு வர சொன்னாரு. சீக்கிரமா வர சொல்லி இருக்காரு. இல்லனா வயித்துல இருக்கிற குழந்தைக்கு தான் ஆபத்தாம். அப்படியே போலீஸ்க்கு இன்பார்ம் பண்ண சொன்னாங்க" என்று மூச்சே விடாமல் பேசியதை கேட்டவனுக்கு பேச்சே இல்லை.
'ஒரு கர்ப்பிணி பெண்ணை குடி போதையில் ஆக்சிடென்ட் நம்ம தான் பண்ணோம்னு தெரிஞ்சா நம்மளை புடிச்சி கம்பி எண்ண வச்சிடுவானுங்களே. இப்போ என்ன செய்யுறது' என்று தீவிரமாக யோசித்தவன் மனமோ 'ஒரு குழந்தையை காப்பாத்துறதுக்கு நீ அப்பாவா மாறி சைன் பண்றதுல தப்பு இல்லை. நீ தானே அந்த பொண்ணு சாக போறது காரணம். அட்லீஸ்ட் அந்த குழந்தையாவது காப்பாத்து' என்று கட்டளையாக சொல்ல,
வழக்கம் போல் மூளையோ 'சைன் போட்டு காலம் முழுக்க அந்த குழந்தைக்கு ஆயா ச்சைக் ஆயா கூட சொல்ல முடியாது தாத்தா வேலை பார்க்க போறீயா? எவனோ ஒருத்தனோட பிள்ளைக்கு நீ உன்னோட இன்ஷியல் கொடுக்க போறீயா?' என்று மல்லுக்கு நிற்க,
செவிலியரை பார்த்து "நான் வேற யாரையாவது சைன் போட சொல்றேன்" என்று சொன்னவனிடம்,
"இது போல ஆப்ரேஷனுக்கு எல்லாம் ஹஸ்பண்ட் சைன் தான் சார் எங்க ஹாஸ்ப்பிட்டல வாங்குவோம்" என்று கூறினார்.
அதை கேட்டு மீண்டும் மனமோ 'அது ஒரு பிஞ்சி குழந்தை. அந்த குழந்தைக்காக தானே இப்போ நீ அந்த பொண்ணை ஹாஸ்ப்பிட்டல் வரை அழைச்சி வந்த' என்று மூளையும் மனமும் சண்டை போட்டுக் கொண்டு இருக்க,
அதற்குள் அருகில் இருந்த செவிலியரோ அவன் கரத்தில் ஆப்ரேஷனுக்கு உண்டான ஃபார்மை திணித்து "சீக்கிரம் சார் டீடைல்ஸ் ஃபில் பண்ணி சைன் போடுங்க" என்று துரிதப்படுத்தினாள்.
அவனோ இருக்கரத்தாலும் முகத்தை ஆழ்ந்து துடைத்தவன் வானத்தை பார்த்து "ஊப்..." என்று ஊதினான்.
பின் என்ன நினைத்தானோ அவனுக்கே தெரியவில்லை. அந்த படிவத்தை வாங்கிக் கொண்டே உள்ளேச் சென்றான்.
மருத்துவமனை வரவேற்புக்கு வந்தவன் ஒரு பேனாவை வாங்கி அந்த படிவத்தில் நிரப்ப தொடங்கினான்.
ஆரம்பமே நோயாளியின் பெயர் இருக்க, அவளின் பெயர் தெரியாததால் என்ன பெயர் எழுதுவது என்று தெரியாமல் சற்று தயங்கியவனின் பார்வை மேலே உயர அங்கே அனைவரையும் நேசியுங்கள், என்ற வசனம் இருக்க, அருகில் ஒரு பெரியவர் படத்தில் மல்லி பூ மாலை மாட்டப்பட்டு இருப்பதை பார்த்தவன்,
நோயாளியின் பெயர் என்ற இடத்தில் 'நேசமல்லி' என்று எழுதினான். அவனுக்கு பிடித்த பெயரும் அது. பின் வயது, முகவரி என்ற இடத்தில் அவன் இஷ்டத்துக்கு கிறுக்கி வைத்தவன் மனம் கைப்பேசி என்னும் இடத்தில் அவனின் அலைப்பேசியின் எண்களையே எழுத வைத்தது. அதன் பின் கடைசியாக கணவர் என்று கையெழுத்துயிடும் இடத்தை கண்டு ஒரு கணம் தயங்க,
அருகில் இருந்த செவிலியரோ, "சார் சீக்கிரம்" என்று அவசரப்படுத்த பெருமூச்சு ஒன்றை விட்டு விட்டு கணவர் என்ற இடத்தில் அவனின் பெயர் "உத்தமன்" என்று எழுதி கையெழுத்து போட்டான் உத்தமன்.
படிவத்தை நிரப்பி முடித்ததும் செவிலியரிடம் நீட்ட, அவளோ "ஆப்ரேஷனுக்கு தேவையான பணத்தை கட்டிடுங்கள் சார்" என்று கூறிவிட்டு விறுவிறுவென அங்கே இருந்து நகர்ந்தாள்.
அதை கேட்ட உத்தமனோ "என்னது பணம் கட்டணுமா? யார் பணத்தை யாருக்கு கட்டுறது. என்னால எல்லாம் ஒரு நயா பைசா கூட கட்ட முடியாது" என்று அவன் சொல்லி முடித்த பத்து நிமிடத்தில் வேறு வழியே இல்லாமல் கடுகடுவென நேசமல்லிக்கு தேவையான சிகிச்சைக்கான பணத்தை மொத்தமாக கட்டி இருந்தான்.
அதில் கடுப்பானவன் கார் பார்க்கிங் சென்று அவன் ஓட்டி வந்த காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி "எவனோ ஒருத்தன் கிரிக்கெட் விளையாடிட்டு போவான். அதை சுத்தம் பண்ண நான் பலியாடு ஆகணுமா? சம்பாதிச்ச காசு எல்லாம் எவன் பொண்டாட்டி புள்ளைக்கோ செலவு பண்ண நான் ஒன்னும் அவவ்ளவு நல்லவன் இல்லடா உத்தமன். இந்த உத்தமன் எதையும் இலவசமா செய்ய மாட்டான். வட்டியும் முதலுமா வாங்கிட்டு தான் விடுவான்" என்று யாருமற்ற அந்த கார் பார்க்கிங்ல் கத்தியவன் ஒரு சிகரெட்டை ஊதி தள்ளிவிட்டு முகத்தை நீரால் கழுவிக் கொண்டு மருத்துவமனைக்குள் சென்றான்.
அது சற்று பெரிய மருத்துவமனை என்பதால் உடனே அவளுக்கு தேவையான மருத்துவம் பார்க்க, அடுத்த ஒரு மணி நேரத்தில் குழந்தையை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தவர்கள் நேசமல்லிக்கு தேவையான சிகிச்சைகளையும் செய்ய ஆரம்பித்தனர்.
கிட்டத்தட்ட பல மணி நேரம் சிகிச்சைக்கு பிறகு அந்த ஆப்ரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வந்த பெரிய மருத்துவர் "அந்த பேஷண்டோட ஹஸ்பண்ட் எங்கே?" என்று கேட்டுக் கொண்டே நடந்தார்.
அப்பொழுது அருகில் வந்த செவிலியரோ "அதோ அங்கே சேர்ல தூங்கிட்டு இருக்காரு டாக்டர்" என்று விரல் நீட்டி காட்ட,
அதை கேட்டு "வாட் தூங்கிட்டு இருக்காரா? அவரோட வைஃப்க்கு எவ்வளவு பெரிய ஆப்ரேஷன் நடந்து இருக்கு. பிழைப்பாங்களானு தெரியாதவங்களை நம்ம கஷ்டப்பட்டு காப்பாத்தி இருக்கோம். ஆனால் அதை பத்தி கொஞ்சம் கூட கவலை இல்லாமல் தூங்கிட்டு இருக்காரு" என்று சொல்லிக் கொண்டே அங்கே நான்கு பேர் அமர கூடிய நாற்காலியில் கால்களை நீட்டி கையை இரண்டும் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு வாயை நன்றாக திறந்து குறட்டை விட்டு உறங்கிக் கொண்டு இருப்பவனை கண்டு கடுப்பாகி தான் போனார் அவர்.
இதுவரை அறுவை சிகிச்சை பிரிவிலிருந்து வெளியே வரும் மருத்துவரிடம் அந்த நோயாளிகளின் உறவினர்கள் என்ன குழந்தை, குழந்தை எப்படி இருக்கு என்று கேட்டு கையெடுத்து கும்பிட்டு கதறியபடி நன்றிகளை கூறியோ, இல்லை அவர்களை எப்படியாவது காப்பாற்றும்படி என்று கேட்டு தான் பார்த்திருக்கிறார். முதல் முறை தன் மனைவியையும் குழந்தையையும் அவ்வளவு ஏன் என்ன குழந்தை பிறந்து இருக்கிறது என்று கூட கேட்காமல் அதை பற்றி சிறிதும் கவலைக் கொள்ளாமல் நன்றாக உறங்குபவனை இப்பொழுது தான் காண்கிறார்.
அதற்குள் கம்பவுண்டர் உத்தமன் அருகில் சென்று அவனை எழுப்ப, அவனோ "உச்" கொட்டி அவன் கையை தட்டி விட, மீண்டும் அவனை எழுப்ப, உத்தமனோ "அடிங், நானே இரண்டு நாளா சரியா தூங்கல. இங்க ஏசி வருதுனு கொஞ்சம் கண்ணை மூடினால் அதுக்குள்ள வந்து எழுப்பி விடுற" என்று திட்டிக் கொண்டே எழுந்து அமர்ந்தவன் கால்கள் வேறு பரப்பிக் கொண்டு இருந்தது.
அவனை பார்த்தாலே பக்கா லோக்கல் போல் தெரிய, முகத்தை சுழித்த டாக்டரோ தன் கடமையையாற்ற எண்ணி "உங்களுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கு. உங்க வைஃப்பை எப்படியோ காப்பாத்திட்டோம். ஆனால் இன்னும் கண்ணு முழிக்கல. தலையில் பெரிய அடிப்பட்டு இருக்கிறதால கோமாக்கோ இல்ல பழசை மறக்கவோ சான்ஸ் இருக்கு. எதுவா இருந்தாலும் அடுத்து இருபத்தி நான்கு மணி நேரம் கழித்து தான் எதுவா இருந்தாலும் சொல்ல முடியும்" என்று அவர் சீரியஸ் ஆக பேசிக் கொண்டு இருக்க, அவனோ தூக்க கலக்கத்தில் கொட்டாவி விட்டானே பார்க்கலாம்.
அவ்வளவுதான் மருத்துவரே கடுப்பாகி விட்டார். அதற்கு மேல் அவனோ "சரி குட் நைட். இந்த ஹாஸ்ப்பிட்டல நல்லா தூக்கம் வருதுப்பா" என்று கூறிவிட்டு அதே போல் மீண்டும் படுத்து விட, மருத்துவருக்கு கோபம் தலைக்கேறியது.
ஆனாலும் அது மருத்துவமனை என்பதால் அமைதியாக அங்கே இருந்து சென்று விட்டார்.
அவர்கள் போனதை உணர்ந்தவன் "எந்த குழந்தை பிறந்தா எனக்கென்ன வந்துச்சி. அதோட அப்பன் கிட்ட போய் சொல்லுங்கடா" என்று இமைகளை மூடியபடியே சாதாரணமாக கூறினான் உத்தமன்.
கருத்து பெட்டி
அடுத்த நாள் அதிகாலையில் மெல்ல முழிப்பு தட்ட, கொஞ்சம் நஞ்சம் இருந்த போதையும் மொத்தமாக தெளிந்து எழுந்து இருக்கரத்தாலும் தலையை பிடித்துக் கொண்டு அமந்தான் உத்தமன்.
"ஆ... தலைவலிக்குதே" என்று தலையை அழுத்தி விட்டு நிமிர்ந்து அவன் இருக்கும் இடத்தை சுற்றி பார்த்தான்.
விழிகளை சுருக்கி நேற்று நடந்ததை எல்லாம் சிந்தனைக்கு கொண்டு வந்தவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
"டேய் உத்தமா என்னடா பண்ணி வச்சி இருக்க. ஆக்சிடென்ட் பண்ணதுக்காக அந்த குண்டச்சியை ஹாஸ்ப்பிட்டல் கூட்டி வந்து சேர்த்த வரைக்கும் ஓகே. அப்படியே கிளம்பி இருக்க வேண்டியது தானே. என்ன டேஷ்க்கு புருஷன் அப்பன்னு சைன் வேற போட்டு கொடுத்து இருக்க" என்று அவன் தலையை பிடித்து தனக்கு தானே புலம்பிக் கொண்டு இருக்கும் போது,
துணியால் சுற்றியபடி கையில் குழந்தையுடன் அவன் முன் வந்த செவிலியரோ "சார் நேத்து நைட்ல இருந்து உங்க கிட்ட குழந்தை முகத்தை காட்ட வெயிட் பண்ணிட்டு இருந்தோம். ஆனால் நீங்க முழிக்கவே இல்லை..." என்று சொல்லிக் கொண்டே அந்த பிஞ்சு குழந்தையை அவன் கரத்தில் ஒப்படைக்க,
அவனோ "ஹேய்..." என்று பதற,
செவிலியரோ "முதல் முறை தன்னோட குழந்தை முகத்தை கூட பார்க்க விரும்பாத அப்பாவை இப்போ தான் சார் பார்க்கிறேன். புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் சண்டை இருக்கட்டும் சார். ஆனால் அவங்களுக்கு ஒன்னுனா, எப்படியாவது காப்பாத்திடணும்னு உடனே ஹாஸ்ப்பிட்டல் அழைச்சி வந்தீங்க பாருங்க. அது தான் சார் லவ். அங்க பாருங்க சார் அந்த பிஞ்சி முகத்தை. இந்த பால்வடியும் முகத்தை பார்த்தாவே இருக்கிற எல்லா கவலையும் சண்டையும் காணாம போயிடும் சார்" என்று அவனுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டே அவன் கரத்தில் குழந்தையை ஒப்படைத்து விட்டு இரண்டடி தள்ளி நின்றார்.
இத்தனை நேரம் அவர் சொன்னதை கேட்டு கோபம் கொண்டவன் கரத்தில் அந்த பிஞ்சின் தேகம் தவழ, அவனின் மொத்த மேனியும் சிலிர்த்து போனது. கரம் தானாக நடுங்க ஆரம்பிக்க, குனிந்து குழந்தையை பார்த்தான்.
என்ன தான் பல வண்ணங்களை தீட்டி ஓவியங்கள் வரைந்தாலும், தாயின் கருவறையிலிருந்து முதல் முறை இப்பூவுலகிற்கு வருகை தரும் தேவதைகளின் அழகுக்கு ஈடாகுமா என்ன?
அழகோவியமாக இருந்த குழந்தையை கண்டவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. திக் பிரம்மை பிடித்தவன் போல் அப்படியே அமர்ந்து விட்டான்.
குழந்தையை பிடித்து இருந்த அவன் கைகள் நடுங்கியது. எங்கே குழந்தையை கீழே போட்டு விடுவோமோ என்று அஞ்சியவன் அந்த பிஞ்சு பிள்ளையை தன் நெஞ்சோடு அணைத்தவனுக்கு இதய துடிப்பு வேற எகிற, என்ன செய்வது என்று தெரியாமல் செவிலியரை நிமிர்ந்து பார்த்தான்.
அவரோ சிரித்துக் கொண்டு "உங்க பொண்ணு அப்படியே உங்களை போலவே இருக்காளா சார்" என்று கூற,
'உங்க பொண்ணு' என்ற வார்த்தையில் அவன் மூளை மொத்தமாக செயல் இழந்து போக, மனமோ குழந்தையை மீண்டும் காண துடித்து, குனிந்து குழந்தையின் முகத்தை பார்த்தான்.
வாய் அருகில் தன் கரத்தை வைத்து "ஆ...ஆ..." என்று தாய் பாலுக்கு ஏங்கிய பிஞ்சை காண அவன் மனம் பிசைய தொடங்கியது.
நேற்று இரவு தன்னால் போக வேண்டிய உயிர், இன்று அவன் கரத்திலே தழுவுவதை காண அவனுள் ஏதோ ஒரு உணர்வு. அதற்கு என்ன பெயர் வைப்பது என்றே தெரியாமல் திணறியவன் சில நொடியில் தன்னுள் நிகழ்ந்த மாற்றத்தை கண்டு திடுக்கிட்டு போய் தன்னை தானே வெறுத்து போனவன் சட்டென்று முகத்தை இறுக்கமாக மாற்றிக் கொண்டு செவிலியரிடம் மீண்டும் குழந்தையை ஒப்படைத்த உத்தமன் எதுவும் பேசாமல் விறுவிறுவென அந்த இடத்திலிருந்து சென்றான்.
அவன் போவதை அதிர்ந்து பார்த்த செவிலியரோ குழந்தையை அணைத்துக் கொண்டு உள்ளேச் சென்று விட்டார்.
மருத்துவமனயிலிருந்து வெளியே வந்த உத்தமனோ அது எந்த இடம் என்று பார்த்தான்.
அந்த மருத்துவமனையின் போர்ட்டில் அவ்வூரின் பெயர் அச்சிடப்பட்டு இருக்க... மூச்சை நன்றாக இழுத்து விட்டவனின் நினைவில் நேற்று நடந்த அனைத்தும் நிழல் போல் வந்து போனது.
அதை நினைத்து பார்க்க கூட அவனுக்கு விருப்பம் இல்லை போல். கசப்பாக உணர்ந்தவன் காரை எடுத்துக் கொண்டு அங்கே இருந்து சென்று விட்டான்.
அவன் கணவன் என்று கையொப்பம் போட்டதை கூட மறந்துவிட்டான் போல்.
ஆம் உண்மையான கணவனாகவோ இல்லை தகப்பனாகவோ இருந்து இருந்தால் உள்ளே மயக்கத்தில் இருப்பவளின் எண்ணங்களும் இல்லை சிறிது நேரத்திற்கு முன் தன் நெஞ்சோடு அணைத்த அந்த பிஞ்சியின் நினைவுகளும் வந்து அவனை அங்கே இருந்து செல்ல விடாமல் தடுத்து இருக்குமோ என்னவோ. ஆனால் அவன் தான் உண்மையானவனும் இல்லை அவர்களுக்கு சொந்தமானவனும் இல்லையே!
அடுத்த சிறிது நேரத்தில் சிட்டிக்குள் வந்தவனின் கார் பெரிய வளாகத்தின் முன் நின்று ஹாரன் அடிக்க, வாட்ச்மேனோ ஓடி வந்து பெரிய கேட்டை திறந்து விட்டவர் சலியூட் அடித்து விட்டு அவன் கார் உள்ளேச் சென்றதும் மீண்டும் கேட்டை சாற்றினார்.
பல வீடுகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் அது. அதனுள் நுழைந்தவன் அவன் எப்பொழுதும் நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்தி விட்டு காரிலிருந்து இறங்கியவன் நேராக மின்தூக்கியினுள் நுழைந்தான்.
பின் அதில் இருபதாம் நம்பர் பட்டனை தட்டி விட்டு அப்படியே கண்களை மூடி சாய்ந்து நின்றவன் மனதில் பல போராட்டங்கள். அவன் உள்ளம் அமைதியே இல்லாமல் தத்தளித்துக் கொண்டு இருக்க, அவனின் தளமும் வந்து விட, மின்தூக்கியிலிருந்து வெளியே வந்தவன் அவனின் பிளாட்டிற்குள் சென்றான்.
நேராக அறைக்குள் நுழைந்த பின் ஒரு டவலை எடுத்துக் கொண்டு குளியலறைக்குச் சென்று கொட்டும் தண்ணீரின் கீழே நின்றவனின் எண்ணங்கள் பல நிகழ்வுகளில் சுழன்றாலும் கடைசியாக அவன் நினைவில் வந்து நின்றது என்னவோ அந்த பிஞ்சின் முகம் தான்.
ஆணி அடித்தது போல் குழந்தையின் வதனம் அவன் மனதில் பதிந்து விட, சலிப்பாக இருந்தது அவனுக்கு. பின் டவலை இடுப்பில் கட்டிக் கொண்டு வெளியே வந்தவன் கப்போர்ட்டை திறந்து மாற்று உடையை அணிந்துக் கொண்டு அறையிலிருந்து வெளியேச் சென்றான்.
சமையலறைக்கு வந்தவன் குளிர்சாதனப்பெட்டியை திறந்து அதிலிருந்த இரண்டு பீர் பாட்டிலை எடுத்தவன் உடன் ஆப்பிளையும் எடுத்தான். பின் ஹாலில் உள்ள சோபாவில் தொப்பென்று விழுந்தவன் முன்னாடி இருந்த மேசையின் மீது பீர் பாட்டிலை வைத்து விட்டு டிவியை ஆன் செய்தான்.
அதில் பிரபல தொழிலதிபர் மகளின் திருமண நிகழ்வு ஓடிக் கொண்டு இருப்பதை கண்டு கோபம் கொண்டவன் சட்டென்று சேனலை மாற்றினான் உத்தமன்.
அக்காணொளியை பார்த்ததும் உள்ளம் வேறு குமற ஆரம்பித்து இருந்தது. யாரோ இதயத்தில் பஞ்ச் பேக்கில் குத்துவது போல் தாக்கிய வலி ஏற்பட, செவிகளிலோ,
"ஏய் ராதிகா எதுக்குடி என்னை நம்ப வச்சி ஏமாத்தின?"
"உன்னை யாரு நம்ப சொன்னது உத்தமன். நான் உன் கூட பழகும் போதே சொன்னேன் தானே. எனக்கு இந்த லவ் கிவ் மேல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்லைனு. நீ தான் என் பின்னாடியே வந்து தொங்கிட்டு இருந்த. சரி ஒன்டே ஸ்டே பண்ணா, என்னை நீ விட்ருவேன்னு பார்த்தேன். ஆனாலும் விடாம என் பின்னாடியே சுத்திக்கிட்டு இருந்த. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?" அலட்சியமாக வந்த வார்த்தையை கேட்டு,
வலியுடன் "அது நம்ம குழந்தைடி. இன்னும் முழுசா உருவாகி கூட இருந்து இருக்காது ராதி. அதுக்குள்ள எப்படிடி அதை கலைக்க உனக்கு மனசு வந்தது?"
"என் கிட்ட கொடுத்து இருக்க வேண்டியது தானே ராதிகா?"
"எதுக்கு உத்தமன் குழந்தையை வச்சி என்னை பிளாக் மெயில் பண்ணவா?"
"பிளாக் மெயிலா? என்னை பார்த்தா உன்னை பிளாக் மெயில் பண்றவன் மாதிரியாடி இருக்கேன். உன்னை எவ்வளவு சின்சியரா லவ் பண்ணேன்னு உனக்கு தெரியாதா ராதிகா?"
"ம்கூம் லவ்... கருமம் பிடிச்ச லவ். நீ எதுக்கு என்னை லவ் பண்ணி என் பின்னாடியே சுத்தினனு எனக்கு தெரியாதா என்ன? என்னை வச்சி நீ பெரிய ஆளா வரணும்னு தானே லவ் பண்ற மாதிரி நடிச்ச. ஜஸ்ட் இது லவ் தானே. என்னவோ உன் சொத்தே பறிபோனது போல பிகு பண்ணுற"
"ஜஸ்ட் லவ் தானா? எவ்வளவு அசால்ட்டா சொல்ற நீ? நீ சொன்ன இந்த ஜஸ்ட் லவ்க்காக ஒரு நாள் நீ ஏங்குவ. அப்பவும் உனக்காக நான் வெயிட் பண்ணுவேன்டி. அப்போ தெரியும் என்னோட லவ் ஜட்ஸ் லவ்வா இல்லை சின்சியரா லவ் பண்ணேனானு" என்ற சொற்கள் அவனை சூழ்ந்துக் கொண்டே இருக்க,
ரிமோட் பட்டனை அழுத்தி வேறு சேனலை மாற்றியது போல், அவன் மன எண்ணங்களை சட்டென்று மாற்ற முடியவில்லை போல் அவனால்.
அவனுள் அடக்கி வைத்த உணர்வுகளின் வலி கரத்தில் உள்ள ரிமோட்டில் அழுத்த, சில வினாடிகளில் அந்த ரிமோட் தூள்தூளாக சிதறி போனது.
அவனுள் இருந்த அழுத்தம் அப்பொழுதும் குறையாமல் போக, பீர் பாட்டிலை எடுத்து குடிக்க போனவனின் கைப்பேசி அலற, அதை எடுத்து பார்த்தான்.
புது எண்ணிலிருந்து அழைப்பு வரவும் எடுக்க வேணாம் என்று நினைத்தவன் கரம் தானாக அழைப்பை ஏற்று காதில் பொருத்தியது.
எதிர்முனையிலோ "உத்தமன் சார் உங்க வைஃப்க்கு கான்ஷியஸ் வந்துடுச்சி. நீங்க எங்க இருக்கீங்க. நாங்க ஹாஸ்ப்பிட்டல் முழுக்க தேடி பார்த்தோம். உங்களை காணோம். கொஞ்சம் சீக்கிரம் ஹாஸ்ப்பிட்டல் வரீங்களா? உங்க மனைவி ரொம்ப வித்தியாசமா நடந்துக்குறாங்க. எல்லாரையும் பார்த்து பயப்படுறாங்க. அவங்க குழந்தையை கூட தொட்டு பார்க்கல. ப்ளீஸ் சீக்கிரம் வாங்க" என சொல்லிக் கொண்டு இருக்கும் போதே பின்னால்,
"நீங்க எல்லாம் யாரு என்னை விடுங்க. என்னை கொலை பண்ண போறீங்களா?" என்ற ஒரு பெண் கத்தும் சத்தம் கேட்க, உடன் அந்த பிஞ்சின் "கீச்..." என்ற அழுகுரலும் கேட்டது.
அக்குரலை கேட்டதுமே அவனுள் ஏதோ ஒன்று செய்ய, 'வர முடியாது' என்று சொல்ல வந்த வார்த்தையை சொல்ல முடியாமல் "உடனே வரேன்" என்று கூறிவிட்டு கார் கீயை எடுத்துக் கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கு விரைந்தான்.
எந்த காயத்திலிருந்து அவன் தப்பிக்க நினைத்து விலகி ஓட முயன்றானோ, அந்த காயத்திற்கு மருந்தாக அவனுக்கு கிடைக்க போகும் இரண்டு பொக்கிஷங்களை பத்திரமாக பார்த்து அடை காத்துக் கொள்வானா இந்த உத்தமன்?
மருத்துவமனை வளாகத்தினுள் நுழைந்தவன் வேகமாக உள்ளேச் செல்ல, அவன் எதிரே அவசரமாக சில மருத்துவ உபகரணங்களை எடுத்தபடி ஓடி வந்த செவிலியரோ,
"சார் எங்கே போனீங்க. உங்க வைஃப் ரொம்ப பயப்படுறாங்க. கையில இருந்த டிரிப்ஸ் எல்லாத்தையும் பிடுங்கி போட்டுட்டாங்க. பெட்ல இருந்து வேற கீழே விழுந்துட்டாங்க சார். எங்களால அவங்கள கட்டுப்படுத்தவே முடியல" என்று கூறியதை கேட்டதும் தான், அப்பெண்ணின் மனநிலையில் இருக்கும் வீரியம் என்னவென்று அவனுக்கு புரிந்தது.
மனதினுள்ளே 'ஒரு வேளை பைத்தியக்காரியா இருப்பாளோ' என்று கேட்டுக் கொள்ள, அந்த நர்ஸுடன் அவனும் வேகமாக அவர் பின்னால் சென்றவன் அங்கே ஒரு மூலையில் ஒடுங்கிப் போய் தன்னை தானே குறுக்கிக் கொண்டு ஆடைகள் எல்லாம் கலைந்து அங்கே அங்கே அவளின் மேனி எல்லாம் வெளிப்படையாக தெரிய, ரத்தமும் அதன் கறைகளும் இருக்க, முகத்தை மூடி அமர்ந்து அழுதுக் கொண்டு இருப்பவளை பார்த்ததுமே அறையின் வாயிலே நின்று விட்டான் உத்தமன்.
அவளின் அக்கோலத்தை பார்த்ததுமே அவனுக்கே பாவமாக தோன்றியது, அவளை சுற்றி மருத்துவர் இருவர் மற்றும் ஒரு கம்பவுண்டர் நின்று அவளை சமாதானப்படுத்த முயன்றுக் கொண்டு இருந்தார்கள்.
வெளியில் வேறு இக்காட்சியை பார்ப்பதற்காக சிலர் கூடி இருக்க கதவின் வாயிலிலே அந்த பிஞ்சு குழந்தையை கையில் வைத்தபடி உள்ளே என்ன நடக்கிறது என்று எட்டி பார்த்துக் கொண்டு இருந்தார் செவிலியர் பெண் ஒருத்தி.
இதையெல்லாம் பார்த்தவனுக்கு எரிச்சலாக இருந்தது. அவசரத்தில் தன் கைப்பேசி இலக்கத்தை எழுதியதை எண்ணி தன்னை தானே நொந்தபடி வந்தவனுக்கு அக்குழந்தையின் வதனத்தை பார்த்ததுமே சற்று அமைதிக்காத்தான்.
அதற்குள் உள்ளேச் சென்ற செவிலியரோ "டாக்டர் இந்தம்மாவோட புருஷன் வந்துட்டாரு" என்று கூறியதை கேட்டு அப்பெண் தன் முகத்தை மூடி இருந்த கரத்தை மெதுவாக கீழே இறக்கி பார்த்தாள்.
அவள் மயங்கும் சமயம் கடைசியாக பார்த்த உருவம் அவன் தானே. அவனை பார்த்ததுமே இத்தனை நேரம் இருந்த பயம் அனைத்தும் எங்கோ பறந்து ஓடியது போல், தன்னை காக்கும் பாதுகாவலன் வந்து விட்டது போல் "ப்பா..." என்று அந்த மூலையிலிருந்து எழ முயன்றாள்.
ஆனால் அவளின் உடல்நிலை அவளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
எழ முயன்றவள் அப்படியே தொப்பென்று கீழே விழுந்து விட, அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு கண்ணீரோடு அவனை ஏறிட்டு பார்த்து "ப்பா..." என்று குரல் கரகரக்க மீண்டும் அழைத்தாள்.
அவளின் அந்த அழைப்பு அவனை என்னவோ செய்ய, பாதங்கள் அவன் சொல் பேச்சை கேட்காமல் கீழே விழுந்து கிடந்தவளின் அருகில் சென்று நின்றது.
பின் குனிந்து அவளை பார்த்துக் கொண்டே அவளின் அருகில் ஒற்றை காலை மடித்து அமர்ந்து வெறுமையான குரலில் "என்னாச்சி" என்று கேட்டான்.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்னும் கதையாக இவன் கேட்பதை அந்த நர்ஸ் பார்த்து "சார் அதான் சொன்னேனே. உங்க மனைவிக்கு" என்று பேச வர, உத்தமனோ தன் கையை தூக்கி புரியுது என்பது போல் சைகை செய்தான்.
அவளோ சட்டென்று அவனின் வலக்கரத்தை தன் உதிரம் வழியும் கரத்தினுள் வைத்து பொற்றிக் கொண்டவள் தாயை பிரிந்து திருவிழாவில் தொலைந்த குழந்தை போல் "நீங்க யாரு எனக்கு? எனக்கு உங்க முகம் மட்டும் தான் ஞாபகத்துல இருக்கு. வேறு எதுவுமே எனக்கு ஞாபகத்துல இல்ல. நான் யாருனும் சரியா தெரிய மாட்டிக்குது. தலை எல்லாம் ரொம்ப வலிக்குது. அதை விட" என்று தன் அடிவயிற்றை மெல்ல தொட்டு காட்டி "வயிறெல்லாம் ரொம்ப ரொம்ப வலிக்குது. இவங்க எல்லாரும் கத்தி ஊசினு எடுத்து வந்து என்னை கொலைப் பண்ண பார்க்கிறீங்க. அப்புறம் அப்புறம்" என்று பேச முடியாமல் அவளுக்கு மூச்சு வாங்கியது.
இத்தனை நேரம் பொறுமையாக இருந்த மருத்துவர்களோ "சார் உங்க வைஃப்பை சாந்தப்படுத்துங்க. இல்லனா அவங்களுக்கு ஜன்னி வச்சிடும். ஆல்ரெடி ரொம்ப பெரிய ஆக்சிடென்ட்ல இருந்து உயிர் தப்பிச்சி இருக்காங்க. இதுல இவங்க இவ்வளவு எமோஷனல் ஆனாங்கனா அது இவங்க உயிருக்கே ஆபத்தா போய் முடியும்" என்றவர்,
"முதல அவங்கள பெட்ல உட்கார வைங்க சார். பிளீடிங் அதிகமா போயிட்டே இருக்கு. அதை ஸ்டாப் பண்ணனும்" என்று உத்தமனிடம் சொன்னவர் அருகிலிருந்த செவிலியரிடம் அதற்கான சில மருந்துகளை எடுத்து வர சொன்னார்.
மருத்துவர் அவ்வளவு தூரம் சொல்லியும் உத்தமன் அவளை தொட்டு தூக்கி கட்டிலில் கிடத்தாமல் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாற்றத்துடன் ஒற்றை காலை மடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்து இருக்க,
கம்பவுண்டர் தான் அவனின் தயக்கத்திற்கான காரணம் எதுவாக இருக்கும் என்று புரிந்தது போல் "சார் நீங்க அந்த பக்கம் கையை பிடிங்க. நான் இந்த பக்கம் பிடிச்சி தூக்கி வைப்போம். இவங்க ரொம்ப வெயிட்டா இருக்காங்க, எப்படி தூக்குறதுனு தானே யோசிச்சிட்டே இருக்கீங்க" என்று கேட்டபடி அவளின் ஒற்றை கரத்தை பிடித்தான்.
அதை பார்த்த உத்தமனும் வேறு வழியில்லாமல் மற்றொரு கரத்தை பிடித்து மெதுவாக அவளை தூக்கி கட்டிலில் கிடத்தினார்கள்.
உத்தமன் அருகில் இருந்ததால் கம்பவுண்டரை தன்னை தொட அனுமதித்து அமைதியாக இருந்தவள் கட்டிலில் படுத்ததும் உத்தமனின் மீதே தான் அவளின் பார்வை நிலைத்து இருந்தது.
பின் கம்பவுண்டர் விலகிச் செல்ல, உத்தமனும் அவளிடமிருந்த தன் கரத்தை உருவ முயல, அந்த அதீத வலியிலும் அவனின் கரத்தை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டவள்,
"என்னை விட்டு போயிடாதீங்கப்பா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு" என்று எண்பது கிலோ எடை உள்ள பெண், குழந்தை போல் கூறி அழுவதை பார்க்க அவனுக்கு விசித்திரமாகவும் பாவமாகவும் இருந்தது.
ஆனாலும் அவளின் கரத்தினுள் தன் கரத்தை வைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு காட்சி பொருளாக அவன் நிற்க விரும்பவில்லை.
யாரோ ஒரு பெண்ணிற்காக தான் ஏன் மற்றவர்களின் பார்வைக்கு கேலியாக நிற்க வேண்டும் என்று எண்ணியவன் "ட்ரீட்மெண்ட் பண்ணனும் தானே. டாக்டருக்கு டிஸ்டர்ப்பா இருக்க கூடாது. நான் வெளியே இருக்கேன்" என்று இறுக்கமாக கூறிக் கொண்டே அவன் கரத்தை உருவ முயல, அவளுள் இருக்கும் அந்த மரண பயம் அவனின் கரத்தை விடாமல் தன் மொத்த பலத்தையும் சேர்த்து கெட்டியாக பிடித்துக் கொண்டு இருந்தது.
இதை கவனித்த மருத்தவர் "நோ ப்ராப்ளம் உத்தமன். நீங்க அவங்க பக்கத்திலே இருங்க. அப்போ தான் எங்களால சரியா ட்ரீட்மெண்ட் பண்ண முடியும்" என்று கூறிவிட்டு கதவை சாற்ற சொல்லிவிட்டு அவளுக்கான சிகிச்சையை ஆரம்பித்தார்.
முதலில் குருதிகள் வழியும் இடத்தில் எல்லாம் அதை சுத்தம் செய்ய ஆரம்பிக்க, உத்தமனோ அவளின் ஆடைகள் விலகியதும் சங்கடத்துடன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.
அங்கே கம்பவுண்டர் உதவிக்காக அவளையே பார்த்தபடி நிற்க, அதை புருவம் சுருக்கி பார்த்தவன் தன்னையும் அறியாமல் அந்த கம்பவுண்டரை முறைத்து பார்த்தான்.
எதேர்ச்சையாக அவன் உத்தமனை பார்க்க, அவனின் நெருப்பு போன்ற பார்வை அவனுள் என்ன உணர்த்தியதோ தெரியவில்லை. மெதுவாக அந்த இடத்திலிருந்து மெல்ல வெளியேறி விட்டான்.
அதன் பின் சலிப்பாக தன் கரத்தை பிடித்து இருந்த அவள் கரத்தை பார்த்து விட்டு பெண்ணவளின் வதனத்தை பார்த்தான்.
பயத்தில் முகம் எல்லாம் வெளிறி போய் இருந்தது. அங்கே சுற்றி இருந்தவர்களை பயத்துடன் பார்த்தவளின் நயனங்கள் அவனை காணும் போது மட்டும் பாதுகாப்பாக உணர வைக்கும் பார்வையாக இருந்தது.
அதை உணர்ந்த உத்தமனுக்குள் என்னவோ செய்ய உள்ளம் பிசைய ஆரம்பித்தது.
பின் அவளுக்கான சிகிச்சை முடிய, அவளை பார்த்த மருத்துவர் "நேசமல்லி" என்று அழைத்தார்.
அப்பெயரை கேட்டதும் அவள் திரும்பி பார்க்காமல் சட்டென்று அவன் திரும்பி பார்த்து "இந்த பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்?" என்று கேட்டவனை விசித்திரமாக பார்த்தபடி,
"நீங்க தானே மனைவி பெயர் நேசமல்லினு சொன்னது" என்று கேட்ட,
அவனோ இல்லை என்று தலையை ஆட்டிக் கொண்டே "நான் சொல்லலையே" என்றான்.
அதை கேட்டு அருகிலிருந்த செவிலியரோ "உத்தமன் சார் நீங்க தானே ஹாஸ்பிடல் ஃபார்ம்ல உங்க வைஃப் பெயர் நேசமல்லினு எழுதினீங்க" என சொன்னதை கேட்டு,
"அப்படியா எழுதினேன்" என்று கேட்டானே பார்க்கலாம்.
அவனை பார்த்து மற்றவர்கள் குழப்பமாக முகத்தை வைக்க, அதை பார்த்தவன்,
"இல்ல அது வந்து..." என்று யோசித்தவன் சமாளிக்கும் விதமாக "அது இப்போ இந்த இடமே ரொம்ப பதற்றமா இருக்குல அதான் சும்மா... சும்மா விளையாட்டுக்கு" என்று பல்லைக்காட்டியவன் முகம் அழுவது போலவும் சிரிப்பது போலவும் பாவனைகள் இருக்க,
அவனை கேவலமாக பார்த்த மருத்துவர் "இப்போ அவங்க நல்லா உறங்குவதற்கு ஊசிப் போட்டு இருக்கோம். சோ அவங்க தூங்க ஆரம்பிச்சதும் என்னோட கேபினுக்கு வாங்க. இப்போதைக்கு குழந்தையை இவங்க கிட்ட கொடுக்க வேணாம்.குழந்தைக்கு தேவையான எல்லா ப்ரோஸியூஜரும் நாங்களே பார்த்துப்போம். குழந்தைக்கு தாய் பால் கொடுப்பது முதற்கொண்டு" என்று சொன்னவர்,
அவளை நோக்கி "நேசமல்லி..." என்று மீண்டும் அழைத்தார்.
இம்முறை அவள் மெதுவாக திரும்பி பார்க்க, மருத்துவரோ "எதை நினைச்சும் பயப்படாதீங்க. நல்லா தூங்கி எழுந்திடுங்க. சீக்கிரம் சரியாகிடுவீங்க" என்று அவர் கூறிக் கொண்டு இருக்கும் போதே அவளின் விழி அசைந்து சம்மதம் கூறுவது போல் அசைக்க, மருத்துவருடன் சேர்ந்து மற்றவர்களும் அந்த இடத்தை விட்டு வெளியேறி இருக்க.
அவளுக்கோ உறக்கம் மெல்ல மெல்ல தழுவ ஆரம்பிக்க, உத்தமனை ஆழமாக பார்த்தபடி இமைகளை அப்படியே மூடினாள் நேசமல்லி.
அந்த கடைசி நிமிட பார்வை "என்னை விட்டு எங்கும் போகாதே" என்பது போல் அவனுக்கு உணர்த்தவும், அவன் கரம் தானாக அவளின் கரத்தை மெல்ல அழுத்தியது.
தன் உயிரையும் தன் குழந்தையின் உயிரையும் பறிக்க எமனாக வந்தவனையே, இப்பொழுது அவள் நம்பிக்கைக்கு உரிய ஒரே மனிதனாக மாறியதின் அதிசயம் தான் என்னவோ!
வார்ட்டினுள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவளை அழுத்தமாக பார்த்தபடி அமர்ந்து இருந்தவனின் சிந்தனைகள் முழுவதும் சிறிது நேரத்திற்கு முன் மருத்துவர் கூறியதை பற்றியே தான் யோசித்துக் கொண்டு இருந்தன.
"இங்க பாருங்க உத்தமன். உங்க மனைவிக்கு இப்போ பழசு எதுவும் ஞாபகத்துல இல்ல. ஐ மீன் நேசமல்லிக்கு மெமரி லாஸ். இது பெர்மன்ட்டா இல்லையானு இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. எப்போ வேணாலும் அவங்களுக்கு திரும்ப எல்லா நினைவுகளும் வர வாய்ப்பு இருக்கு. அண்ட் வராமல் போகவும் சான்ஸ் இருக்கு. இப்போ அவங்களோட கண்டிஷன் ரொம்ப மோசமா இருக்கு. அவங்களோட ஆழ் மனசுல பயம் என்னும் கொடூரன் அழுத்தமா பதிந்து இருக்கான். அவங்க முழுசா நம்புற ஒரே ஆள் அது நீங்க மட்டும் தான். சோ ஒரு குழந்தையை போல ஜாக்கிரதையா அவங்களை கையாளணும். அதாவது இப்போ உங்களோட பொறுப்பு இரண்டு குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்கு சமம். நான் எழுதி கொடுக்குற டேப்லெட் கண்டினியூவா கொடுங்க. அண்ட் குழந்தைக்கு சீக்கிரம் அம்மாவோட தாய் பாலை கொடுக்க ட்ரை பண்ணுங்க" என்று கணவனிடம் அவனின் மனைவியின் நிலைமை பற்றி எடுத்துக் கூறுவது போல் மருத்துவர் அனைத்தையும் சொல்லி முடிக்க,
அமைதியாக அனைத்தையும் கேட்டுக் கொண்டவன் பெருமூச்சி ஒன்றை விட்டு "ஆக மொத்ததுல ஒரு வேலைக்காரன் மாதிரி இருக்கணும் அப்படி தானே" என்று கேட்டுக் கொண்டே எழுந்து வெளியேற போனவனை விசித்திரமாக பார்த்தபடி,
"இல்ல, ஒரு தாயா! ஒரு தந்தையா! அண்ட் ஒரு நல்ல கணவனாவும் இருக்கலாம்" என்று அழுத்தி சொன்னார்.
கதவின் பிடியில் கையை வைத்த உத்தமன் அவர் சொன்னதை கேட்டு தலையை மட்டும் திருப்பி பார்த்தவன், அமைதியாக அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.
மருத்துவரும் அடுத்த கேஸை பார்க்கச் சென்று விட, வார்ட்க்குள் வந்த உத்தமனோ அங்கே இருந்த நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தவன் அனைத்தையும் யோசித்து விட்டு,
"யாருடி நீ? ஒரே நாள்ல என் லைஃப்பையே மொத்தமா திருப்பி போட்டுட்ட. எவனோ ஒருத்தனை நம்பி நீங்க ஏமாந்து போய் புள்ளையை வாங்கிட்டு வருவீங்க. எங்களை மாதிரி அப்பாவிங்க நடுவுல வந்து மாட்டிக்கணுமா? முதல நான் எதுக்காக உனக்கு இதெல்லாம் பண்ணனும். உனக்கும் எனக்கும் அப்படி என்னடி சம்மந்தம் இருக்கு" என்று உறங்கிக் கொண்டு இருப்பவளை பார்த்தபடி பேசிய கணம்,
"சார்" என்று குழந்தையை தூக்கிக் கொண்டு வந்தார் செவிலியர்.
அக்குழந்தையை பார்த்ததுமே அவனின் இத்தனை நேரம் இருந்த கடுப்புக்கு இதமாக தோன்ற, செவிலியரை கேள்வியாக பார்த்தான்.
அவரோ "கொஞ்ச நேரம் குழந்தை அப்பா அம்மா கிட்ட இருக்கட்டும்னு டாக்டர் கொடுக்க சொன்னாரு. அதான் குழந்தையை தூக்கிட்டு வந்தேன்" என்று சொல்லிக் கொண்டே குழந்தையை அவன் கரத்தில் ஒப்படைத்தார்.
அவனும் "ம்..." என்று கூறி குழந்தையை வாங்கிக் கொண்டவன் பிஞ்சின் முகத்தை பார்த்தான்.
மெல்லிய புன்னகை ஒன்று அவன் உதட்டில் பூக்க, அதை பார்த்த செவிலியரோ "ப்பா... இப்போ தான் நீங்க சிரிச்சே பார்க்கிறேன். சிரிக்கும் போது எவ்வளவு அழகா இருக்கீங்க. பொண்ணை பார்த்தா தான் சிரிப்பு வரும் போல" என்று அவர் எதார்த்தமாக பேச,
சட்டென்று தன் புன்னகையை நிறுத்தியவன் அவரை ஏறிட்டு பார்த்து, "குழந்தையை கொடுத்துட்டீங்கல்ல? அப்போ கிளம்ப வேண்டியது தானே? அடுத்தவ புருஷனை சைட் அடிச்சிட்டு இருக்கீங்க?" என்று கேட்டவனை திகைத்து போய் நெஞ்சில் கை வைத்தபடி பார்த்த நர்ஸோ,
"சார் எனக்கு ஆல்ரெடி கல்யாணம் ஆகிடுச்சி. இரண்டு பசங்களுக்கு அம்மா. என் புருஷன் இருக்கும் போது எதுக்கு அடுத்தவ புருஷனை பார்க்க போறேன். ஏதோ நீங்க சிரிச்சதை பார்த்து சொன்னேன். அதுக்கு இப்படியா பேசுவீங்க" என்றார்.
"ஓ புருஷன் இருக்கும் போதே அடுத்தவன் சிரிக்கிறதை ரசிச்சி பார்க்கிறீங்களே அசிங்கமா இல்ல?" என்றவனை முறைத்து பார்க்க,
அவனோ "நான் சிரிச்சா உங்களுக்கு என்ன? அழுதா உங்களுக்கு என்ன? நான் வந்து கேட்டனா, ஈஈஈ னு சிரிச்சி என்னோட சிரிப்பு அழகா இருக்கானு? எனக்கே தெரியும் நான் எவ்வளவு அழகுனு" என்று தற்பெருமையை பற்றி அவன் பேச ஆரம்பிக்க, அவரோ பெரிய கும்பிடு போட்டு,
"ஐயா சாமி தெரியாம சொல்லிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க. இனிமேல் நீங்க இருக்கிற பக்கம் கூட வர மாட்டேன். நீங்களே உங்க குழந்தையை கவனிச்சிக்கோங்க" என்று சொன்னவர் அந்த அறையிலிருந்து விறுவிறுவென நடந்துச் சென்று விட்டார்.
அவனோ "சரி தான் போ. இப்போ யாரு உன்னை தேடி வர போறா..." என்றவனுக்கு தெரியவில்லை அடுத்த அரைமணி நேரத்தில் உதவிக்காக அவர் முன் தான் போய் நிற்க போகிறோம் என்று.
பின் குழந்தையை பார்த்தவன் அந்த அழகு தேவதையிடம் கொஞ்சும் குரலில் "நீங்க யாருனு எனக்கு தெரியல. ஆனால் இந்த பாவப்பட்டவன் கிட்ட வந்து இருக்கீங்க. ஒருவேளை என்னோட நேசமல்லியை என் கிட்ட இருந்து பறிச்சதுக்காக உங்களோட ரூபத்துல புது நேசமல்லியை அந்த கடவுள் என் கிட்ட கொடுத்து இருக்காரோ" என்று குழந்தையின் வதனத்தை பார்த்து அவன் பேசிக் கொண்டு இருக்க, குழந்தையோ அவன் சொற்களை கேட்டு உறக்கத்திலே அழகாக புன்னகைத்தது.
கிட்டத்தட்ட அரைமணி நேரம் பிள்ளையை கொஞ்சியவனின் கரத்தில் ஏதோ பிசுபிசுவென்று வழிவதை கண்டவனின் விழிகள் விரிய, முகமோ அஷ்ட கோணலாக சென்றது.
"நோ... நோ... நோ... இது மட்டும் பண்ணாதீங்க நேசமல்லி. என் ட்ரெஸ் எல்லாம் வீணாகிடும்" என்று அவன் சொல்லி முடிக்கும் முன் குழந்தை மொத்தமாக அசுத்தம் செய்து விட, என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தான் உத்தமன்.
நிமிர்ந்து உறங்கிக் கொண்டு இருப்பவளை பார்த்தான். "இம்சை பிடிச்சவ எப்படி தூங்குறா பாரு. பிள்ளையை கூட கவனிக்காது தூங்கிட்டு இருக்கா..." என்று குழந்தையை திட்ட முடியாமல் அதன் தாயை திட்டியவன் பிள்ளையை பத்திரமாக பிடித்துக் கொண்டு எழுந்து நின்றான்.
பின் அந்த அறையிலிருந்து வெளியேறி குழந்தையை கொடுத்த நர்ஸை தேடியபடி நடந்தவனை வித்தியாசமாக பார்த்து தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர் அவனை கடந்து போனவர்கள்.
அவனோ அதை பற்றியெல்லாம் கருத்தில் கொள்ளாமல், செவிலியரை தேட, அவரோ ஒரு இடத்தில் நின்று மற்றொரு நர்ஸிடம் பேசிக் கொண்டு இருக்க, எதேர்ச்சையாக அவன் நடந்து வரும் அழகை பார்த்து பக்கென்று சிரித்து விட்டார்.
அங்கே குழந்தையை நெஞ்சோடு அணைத்து கெட்டியாக பிடித்துக் கொண்டு கால்களை அகண்டு விரித்து அவனின் ஜீன்ஸ் பேண்டில் தொடை முழுவதும் குழந்தை செய்த அசுத்தம் இருக்க, அதை கூட துடைக்காமல் அப்படியே கால்களை விரித்தபடி நடந்தவனை பார்த்தால் யாருக்கு தான் சிரிப்பு வராது.
பார்ப்பவர்கள் அனைவரும் என்னவோ அவன் தான் அசுத்தம் செய்து இருப்பான் என்று அல்லவா நினைப்பார்கள். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இப்பொழுது உத்தமன் நடந்து வரும் தோரணை நாம் அனைவரும் விரும்பி பார்க்கும் காங்... கிங்காங் போலவே இருக்கும்.
செவிலியரை பார்த்ததும் "ஈஈ" என்று வெட்கமே இல்லாமல் பல்லை காட்டியவனை ஏன் என்றும் கண்டுக் கொள்ளவில்லை அவர்.
அவனோ 'வேணும்னே பழி வாங்குறாளே' என்று நினைத்துக் கொண்டவன்,
"ஹலோ குழந்தையை பார்த்துக்கிறது தானே உங்க வேலை. அந்த வேலையை செய்யாம இங்க நின்னு கதை பேசிட்டு இருக்கீங்களா?" என்று அதிகாரமாக பேசியவனை ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் பேச ஆரம்பித்து விட்டார்.
அவனோ 'என்னடா உத்தமா. இப்போ போய் குரலை உயர்த்துற. அடக்கி வாசி அடக்கி வாசி' என்று தன்னை தானே சாந்தப்படுத்திக் கொண்டவன்,
"அக்கா..." என்று பாசமாக அழைத்தானே பார்க்கலாம்.
அதை கேட்டு அந்த செவிலியரே திடுக்கிட்டு போக, அருகில் இருந்த மற்றொரு நர்ஸோ "அக்காவா?" என்று ஆச்சரியமாக சொன்னாள்.
அவனோ "பின்னே இல்லையா? இங்க இருக்கிற பேஷன்ட்டை எல்லாம் தன்னோட கூட பிறக்காத சகோதரன் சகோதரி போல பார்த்துக்கிறாங்க. அப்போ இவங்களை அக்கானு தானே அழைக்க முடியும்" என்றவன் அங்கே அதிர்ந்து நின்ற அந்த செவிலியரை பார்த்து மீண்டும்,
"அக்கா கொஞ்ச நேரம் உங்க தம்பியோட குழந்தையை பார்த்துக்கிறீங்களா? நான் போய் என்னை சுத்தம் பண்ணிட்டு வந்துடுறேன்" என்று பணிவுடன் கேட்டான்.
'காரியம் ஆக வேண்டுமென்றால் எந்த எல்லைக்கும் போவான் போலவே இவன்' என்ற நினைத்த செவிலியருக்கோ உண்மையாவே அவன் நின்ற கோலத்தை பார்த்து பாவமாக தான் தோன்றியது.
போனால் போகட்டும் என்பது போல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு குழந்தையை வாங்கிக் கொண்டார்.
அவ்வளவு தான் அடுத்த வினாடி அங்கே இருந்து விரைந்தான் உத்தமன்.
நேராக அறையினுள் இருந்த பாத்ரூமுக்குச் சென்றவன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வந்தவன் குனிந்து தன் பேண்ட்டை பார்த்தான்.
"யாராவது என்னை இந்த கோலத்தில் பார்த்தால் என்ன நினைப்பாங்க. என்னவோ நான் தான் அவசரம் தாங்க முடியாமல் பேண்டிலே நாசம் பண்ணிட்டேன்னு நினைக்க மாட்டாங்க. அய்யோ ஒரே ஒரு வாட்டி தான் வண்டியை ஏத்தி கொலை பண்ண பார்த்தேன். அதுவும் தெரியாமல் தான். அதுக்கு இப்படி வச்சி செய்றாங்களே? ஒரு நாளுக்கே இப்படினா, இந்த குண்டு பூசணிக்காய்க்கு எல்லா நினைவும் வரவரைக்கும் எப்படி எல்லாம் வச்சி செய்ய போறாங்களோ தெரியலையே" என்று தனியாக புலம்பிக் கொண்டு இருந்தான் இந்த உத்தமன்.
வெகுநேரம் கழித்தே இமைகளை மெல்ல திறந்த நேசமல்லி முதலில் தேடியது என்னவோ உத்தமனை தான்.
தன் அருகில் அவன் இல்லை என்றதும் பதற்றமாக எழுந்துக் கொள்ள போனவளை பார்த்தபடியே "நான் எங்கேயும் ஓடி போகல. இங்கே தான் இருக்கேன்" என்று சொல்லிக் கொண்டே கதவை திறந்து உள்ளே வந்தான்.
குழந்தை செய்த வேலையில் அவனின் ஆடை முழுவதும் வீணாகி போனதால் வேறு ஆடையை மாற்றுவதற்காக வீடு சென்று திரும்ப வந்து இருந்தான் உத்தமன்.
வீடு சென்றவனுக்கு மூளை மீண்டும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டாம் என்று எடுத்து கூறினாலும் மனம் கேளாமல் வந்து விட்டான்.
சரியாக உத்தமன் உள்ளே வரவும் அவள் விழிகளை திறக்கவும் சரியாக இருந்தது.
உத்தமனை பார்த்தவள் "நீ...ங்க யா...ரு எனக்கு?" என்று திக்கி திணறிக் கேட்டாள் அவள்.
அதை கேட்ட உத்தமனின் கண்கள் மிளிர "அப்போ என்னையும் மறந்துட்டீயா?" என்று உற்சாக குரலில் கேட்டவனை பார்த்து,
இல்லை என்பது போல் இருப்பக்கம் தலையை ஆட்டி "உங்க முகம் மட்டும் தான் எனக்கு நினைவுல இருக்கு. ஆனால் எனக்கு நீங்க யாருனு ஞாபகத்துல இல்லை" என்று சொன்னாள்.
மிளிர்ந்த கண்கள் ஒளி இழந்து போக, உற்சாகம் தோன்றிய குரல் சுரத்தே இல்லாமல் "ஹாங்... உன்னோட சித்தப்பா" என்று சொல்லி விட்டு அங்கே இருந்த தண்ணீரை குடிக்க ஆரம்பித்தான் உத்தமன்.
அதை கேட்டு அவள் முகத்தை சுருக்கி "ஆனா நீங்க என்னுடைய புருஷன்ல சொல்லிட்டு இருந்தாங்க சித்தப்பா" என்று அவள் சொன்னதை கேட்டதுமே தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்தவனுக்கு புரையேறி போனது.
அவனுக்கு புரையேறியதும் "அய்யோ சித்தப்பா பார்த்து..." என்று அவள் பதற, அதில் கடுப்பானவன் இருமிக் கொண்டே இருக்கரத்தையும் தலைக்கு மேல் கொண்டுச் சென்று கும்பிட்டு இருமலுடனே "உனக்கு நான் சித்தப்பா எல்லாம் இல்ல. நான் உனக்கு பு..." என்றவன் வார்த்தை அப்படியே தட்டுப்பட, 'புருஷன் தான்' என்று முழுமையாக சொல்ல முடியாமல் தடுமாறியவன்,
"நான் உனக்கு எல்லாரும் சொன்னது போல தான்" என்று கூறினான்.
"எல்லாரும் சொன்னது போலனா?" என்று அவள் கேள்விக் குறியாக நோக்க,
அவனோ எரிச்சலுடன் 'நல்லா உருண்டை சைஸ்ல இருந்துட்டு கண்ணை முழிச்சதும் கேள்வி கேட்டே கொல்றாளே' என்று நினைத்துக் கொண்டவன் உள்ளத்திலோ மருத்துவர் கூறிய விஷயங்கள் எல்லாம் வந்துச் செல்ல,
மிகவும் கஷ்டப்பட்டு "ம்... உன் புருஷனும், உன்னோட பிள்ளைக்கு இளிச்சவாயன் அப்பனும் நான் தான் போதுமா?" என்று நெஞ்சின் மீது தட்டி சொன்னான்.
உத்தமன் கூறியதை கேட்டு "ஓ அப்போ எல்லாரும் சொன்னது போல நீங்க தான் என் புருஷனா?" என்று மீண்டும் அவள் கேட்க,
"ஆமாடி இப்போ என்னடி உன் பிரச்சனை? ஒரு மனுஷனை சுதந்திரமா இரும கூட விட மாட்டியா?" என்று எரிந்து விழுந்தான்.
அவனின் உயர்ந்த குரலில் பயந்து போனவளுக்கு உடல் தானாக நடுங்க ஆரம்பித்தது.
அதை பார்த்து தன்னையே நொந்துக் கொண்டவன் அவளை சகஜமாக்குவதற்காக அவளின் கரத்தை தன் கரத்தில் பிணைத்துக் கொண்டு,
"ஏய்... பயந்துட்டியா?" என்று கேட்டுக் கொண்டே அவளின் நயனங்களை பார்த்தான்.
அவளும் அவனின் நயனங்களை தான் நோக்கினாள்.
இத்தனை நேரம் இருந்த எரிச்சலை தன்னுள் கட்டுப்படுத்திக் கொண்டவன் மென்மையான குரலில் "நான் கொஞ்சம் டென்ஷனா இருந்தேன்டி. அதான் நீ கேள்வி மேல கேள்வி கேட்டதும் கொஞ்சம் சத்தமா பேசிட்டேன். இதுக்கு போய் பயந்து நீ நடுங்கலாமா?" என்று அக்கறையாக அவன் பேச ஆரம்பிக்கவும் அவளின் நடுக்கம் மெதுவாக குறைய ஆரம்பிக்க, அதை உணர்ந்தவன் 'ஸ்ப்பா...' என்று தனக்குள் சொல்லிக் கொண்டே அவள் கரத்துடன் பிணைந்து இருந்த தன் கரத்தை உருவ முயன்றான்.
ஆனால் அவள் விடாமல் பிடித்துக் கொண்டு "இப்படியே கொஞ்சம் நேரம் இருங்களேன் ப்பா" என்று மிகவும் கெஞ்சுதலாக கேட்கவும், அவனுக்கு பாவமாக தோன்றவும் வேறு வழியில்லாமல் அவளுடன் மிகவும் நெருக்கமாக அமர்ந்து இருந்தான் உத்தமன்.
அப்பொழுது தான் அவளின் விலகிய ஆடையில் தொடை பகுதி சிறியதாக தெரிய, சட்டென்று தன் பார்வையை விலக்க போனவனின் புருவம் சுருங்க ஆடை விலகிய இடத்தை உற்று கவனித்தான்.
அந்த இடத்தில் பல முறை சிகரெட்டால் சூடு வைத்த தடயம் இருப்பதை கவனித்தவனுக்கு என்னவோ போல் ஆகி விட்டது.
அதன் பின் தன் பார்வையை விலக்கிக் கொண்டவன் குரலை செறுமிக் கொண்டு "உனக்கு ஏதாவது ஞாபகம் வந்துச்சா?" என்று கேட்டான்.
அவளோ இல்லை என்பது போல் தலையை ஆட்ட, அந்த நேரம் குழந்தையை தூக்கிக் கொண்டு வந்து உத்தமனிடம் அதே செவிலியர் கொடுத்து,
"குழந்தைக்கு அம்மாவோட தாய்ப் பால் கொடுக்க சொல்லி டாக்டர் சொல்ல சொன்னாரு. குழந்தை வெளி பாலுக்கு பழகிட்டா அப்புறம் அம்மாவோட ஃபீடிங்கை ஏத்துக்காது. இந்நேரம் நேசமல்லி கண் முழிச்சி இருப்பாங்கனு சொல்லி குழந்தையை கொடுத்துட்டு அப்படியே நேசமல்லியை செக் பண்ணிட்டு வர சொன்னாரு" என்று குழந்தையை உத்தமன் கரத்தில் ஒப்படைத்து விட்டு நேசமல்லியை பரிசோதித்தார்.
குழந்தையை பிடிப்பதற்காக நேசமல்லி கரத்திலிருந்து தன் கரத்தை எடுத்துக் கொண்டவன் பிள்ளையை அழகாக தாங்கிக் கொண்டு நேசமல்லியை பார்த்தான்.
அவளோ ஆச்சரியமாக "இது தான் நம்ம குழந்தையா?" என்று கேட்டாள்.
அவளின் நம்ம குழந்தையா என்ற கேள்வியில் அவன் பேச்சற்று போக, செவிலியர் தான் "ஆமா" என்று கூறினார்.
அதை கேட்ட நேசமல்லியோ "ஆனால் எனக்கு எதுவும் ஞாபகம் இல்லையே" என்று சொல்லிக் கொண்டே வயிற்றில் கரத்தை வைத்து தடவியவளுக்கு தையல் போட்ட இடம் சுருக்கென்று வலியை கொடுக்க, அதில் "ஸ்..." என முகத்தை சுருக்கினாள்.
அதை கவனித்த செவிலியரோ "உங்களுக்கு ஆப்ரேஷன் செய்து தான் குழந்தையை எடுத்தோம். தையல் போட்ட இடத்துல கையை வைச்சி தேய்க்காதீங்க" என்று கூறிவிட்டு அவளை முழுமையாக பரிசோதனை செய்தவர் அவளை மெதுவாக தூக்கி சாய்வாக அமர வைத்து,
உத்தமனிடமிருந்து குழந்தையை வாங்கி அதன் தாயிடம் ஒப்படைத்தார்.
முதல் முறையாக தன் உயிரில் ஜனித்த உயிரை கரத்தில் ஏந்தியவளுக்கு தானாகவே விழி நீர் சுரக்க, உள்ளமோ தாயின் அன்பின் அரவணைப்பில் தாய்ப் பாலும் சுரக்க ஆரம்பித்தது.
தாயின் இதயத்தின் துடிப்பு சத்தத்தை உணர்ந்த குழந்தையோ, வீறிட்டு அழ, அதில் பதறி போனார்கள் நேசமல்லியும் உத்தமனும்.
உத்தமன் வேகமாக அடுத்த பக்கம் வந்து அவள் கரத்தின் மீது தன் கையை வைத்து குழந்தையை சமாதானம் செய்ய முயற்சிக்க,
நேசமல்லி "என் கிட்ட வந்ததும் ஏன்ப்பா குழந்தை அழுது" என்று கண்ணீரோடு கேட்டாள்.
அவனுக்குமே அதற்கான பதில் தெரியாமல் போக, செவிலியரை தான் பார்த்தான்.
அவரோ புன்னகையுடன் "குழந்தை பிறந்தது முதல் தாயோட அரவணைப்பில் இல்லை. இப்போ தாயோட தொடுகையை உணர்ந்ததும் இத்தனை மணி நேரம் பிரிந்த ஏக்கம் தான் இந்த அழுகை. பிள்ளை கருவில் இருக்கும் போது உங்களோட இதயத் துடிப்பை கேட்டு தான் பாதுகாப்பா உணர்ந்து இருக்கும். அந்த இதயத் துடிப்பை கேட்டதும் மீண்டும் பாதுகாப்பாக உணர்ந்து இருக்கும். அதை உங்களுக்கு வெளிப்படுத்தும் விதமாக அவளோட அழுகை இருக்கு. அவ்வளவு தான். நீங்க ஃபீட் பண்ணீங்கனாவே அவ அமைதியாகிடுவா" என்று விளக்கமாக அவர் பதில் அளித்தார்.
அதை பிரம்மித்து போய் கேட்டுக் கொண்டு நின்று இருந்தான் உத்தமன். பிறகு குழந்தைக்கு தாய்ப் பால் கொடுக்க வேண்டும் என்பதை கேட்டதும்,
"அப்போ நான் வெளியே இருக்கேன். நீ ஃபீட் பண்ணு" என்று சொல்லி விட்டு விலக போனவனின் கரத்தின் மீது தன்னுடைய மற்றொரு கரத்தை வைத்து குழந்தையுடன் பிடித்துக் கொண்டவள்,
"நீங்க ஏன் வெளியே போகணும். இங்கேயே இருங்கப்பா" என்றாள்.
அவனோ சிறு அதிர்வுடன் "நான் எப்படி?" என்று ஆரம்பிக்க,
அதற்குள் செவிலியரோ "இதுல என்ன இருக்கு. அம்மா குழந்தைக்கு ஃபீட் பண்ணும் போது அப்பா தானே அவங்களை கம்ஃபர்டபிளா இருக்க வைக்க முடியும். அது மட்டுமில்லை, இவங்களை கூட இருந்து பார்த்துக்க இப்போ நீங்க மட்டும் தானே இருக்கீங்க. சோ இதெல்லாம் நீங்களும் கத்துக்கணும் இல்லையா? அவங்க ஃபீட் பண்ணி முடிச்சதும் பிள்ளையை வாங்கி தோளில் போட்டு மெதுவாக தட்டணும். இது போல எவ்வளவோ இருக்கு" என்று அவர் குழந்தைக்கு தேவையானதையும் தாயிற்கு உதவியாக எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்தவர்,
"இப்போ நான் சொன்னது போல அவங்க வசதியா உட்கார தலையணையை சரியா வைங்க" என்று கூறிவிட்டு பிள்ளையை அவள் கரத்தில் தாய்ப் பால் கொடுப்பதற்கு ஏதுவாக வைத்தார்.
குழந்தையும் தாயின் மார்பை உணர்ந்ததுமே தன் வாயை திறந்துக் கொண்டு தழுவ, செவிலியரோ எப்படி பிடித்து குழந்தைக்கு தாய்ப் பால் புகட்ட வேண்டும் என்று கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.
அவளின் மேலாடை விலகியதும், உத்தமனுக்கு மிகவும் சங்கோஜமாக போய் விட, ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டு விழிகளை வேறு புறம் திருப்பிக் கொண்டான்.
அவன் மனதில் சிறு தவறான எண்ணமும் இல்லை உள்ளத்திலும் தோன்றவில்லை. ஆனால் யாரோ ஒருவன் முன்னால் தன் மேலாடையை விலக்கி தாய்ப் பால் கொடுக்கிறாளே என்ற சங்கடம் மட்டும் தான் இருந்தது.
குழந்தைக்கு பால் புகட்டியதும் உத்தமனை அழைத்து பிள்ளையை எப்படி தூக்கி முதுகில் தட்டி ஏப்பம் வர வைக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார் செவிலியர்.
அதன் பின் "இனிமேல் குழந்தை உங்க கூடவே இருக்கலாம். நேசமல்லி இப்போதைக்கு ஓகே தான். பட் அங்க காயம் இன்னும் இருக்கு. அதனால இரண்டு பேரையும் ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க" என்று சொல்லிவிட்டு குழந்தையை அருகில் இருந்த தொட்டிலில் போட்டு விட்டுச் சென்றார்.
அவர் சென்றதும் நேசமல்லி தயக்கமே இல்லாமல் "எனக்கு பாத்ரூம் போகணும்" என்று உரிமையாக அவனிடத்தில் அவள் கேட்க.
அவள் இப்படி கேட்டதுமே அவனுக்கு தான் மீண்டும் சங்கோஜமாகி போனது.
சிறு தயக்கம் கூட இன்றி மூன்றாம் மனிதனிடம் அவள் இப்படி எல்லாம் நடந்துக் கொள்வது அவனுக்கு தான் மிகவும் சங்கடமான நிலையாகிவிட்டது.
ஆனால் அவளை பொறுத்தவரை இப்பொழுது அவன் மட்டும் தான் அவளுக்கு எல்லாமுமாக இருக்கிறான் அல்லவா.
வேற்று ஆளாக அவள் நினைத்து இருந்தால் அவன் புறம் கூட அவளின் பார்வை திரும்பி இருக்காது. ஆனால் தன்னவன் என்ற உரிமை இப்பொழுது அவள் ஆழ் மனதுவரை நிலைத்து இருக்கிறது.
அப்படி இருக்க அவள் ஏன் சங்கடப்பட போகிறாள்.
ஆனால் ஒரு நாள் நிஜம் எது என்று தெரிய வரும் போது இந்த உத்தமனின் நேசமல்லியின் நிலை என்னவாக இருக்கும்.
இப்படியே ஒரு பத்து நாள் சென்று இருக்கும். நேசமல்லிக்கு உடல் சிறிது சிறிதாக சரியாகி தேறிக் கொண்டு வர, அவளை டிஸ்சார்ஜ் செய்ய சொல்லி உத்தமன் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதால் மருத்துவர்களும் சரி என்று ஒப்புக் கொண்டனர்.
அவர்கள் ஒப்புக் கொண்டதற்கு மற்றொரு காரணம் தாயையும் பிள்ளையையும் அவன் பத்திரமாக பார்த்துக் கொண்ட விதம் தான்.
இந்த பத்து நாளும் உத்தமனுக்கு தான் பெரும் திண்டாட்டமாகி போனது. அவளுக்கும் குழந்தைக்கும் தேவையானதை எல்லாம் பார்த்து பார்த்து செய்துக் கொண்டு இருந்தான். இடையிடையில் அவனின் வேலைகளையும் செய்துக் கொண்டு வீடு மருத்துவமனை என்று தன் உடல் சோர்வையும் பொருட்படுத்தாமல் இருவருக்காகவும் அலைந்துக் கொண்டு இருந்தான்.
கிட்டத்தட்ட அவன் அவளுக்கு கணவனாகவும் குழந்தைக்கு நல்ல தகப்பனாகவும் ஒரு பொறுப்புள்ள குடும்பஸ்தனாக மாறி இருந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.
நேசமல்லி தான் ஒவ்வொரு கேள்வியாக கேட்டு கேட்டு அவனை படாத பாடு படுத்தி எடுத்தாள் என்றால், அவளின் குழந்தையோ பத்து நொடிக்கு ஒரு முறை அவனின் மீதே மலம் கழிப்பது, வாந்தி எடுப்பது, என்று அனைத்தையும் செய்துக் கொண்டு இருந்தாள் அந்த குட்டி தேவதை.
ஆரம்பத்தில் இதெல்லாம் அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தாலும், போக போக இந்த சூழ்நிலையை வெகுவாக அனுபவிக்க ஆரம்பித்து விட்டான் உத்தமன்.
முதலில் எல்லாம் அவள் குழந்தைக்கு தாய்ப் பால் கொடுக்கிறேன் என்ற பெயரில் அவனை சங்கடத்திற்கு உள்ளாக்க, அதுவும் இந்த பத்து நாளில் அவனுக்கு பழகி விட்டது.
குழந்தைக்கு எத்தனை மணி நேரத்துக்கு ஒரு முறை தாய்ப் பால் கொடுக்க வேண்டும் என்பது இப்பொழுது அவளை விட அவனுக்கு தான் நன்றாக தெரிந்து இருந்தது.
அவள் உறங்கிக் கொண்டு இருந்தாலும் நடு இரவு என்றும் பாராமல் அவளை எழுப்பி வசதியாக அமர வைத்து தாய்ப் பால் கொடுக்க சொல்லுவான்.
நேசமல்லியும் உத்தமனின் அக்கறையிலும் அன்பிலும் அவர்களுக்காக அவன் பார்த்து பார்த்து செய்யும் ஒவ்வொரு செயலையும் கண்டு அவன் மீது அதீத நேசம் உருவாக தொடங்க... அவன் அறியா நேரம் அவனின் ஆளுமையான தேகத்தையும், வசீகர வதனத்தையும் கூர்ந்து ரசித்துக் கொள்வாள்.
அவளுக்கு பழைய நினைவுகள் எதுவுமின்றி போனாலும்,கணவன் தான் என்ற உரிமையில் அவள் இருக்க, நேசமல்லியின் நிலை புரிந்தாலும் அனைத்தும் அவர்களுக்காக பார்த்து பார்த்து செய்துக் கொடுத்தாலும் நூலளவு இடைவெளி வித்தியாசத்தில் ஒரு அடி தள்ளியே தான் இருந்தான் உத்தமன்.
ஆக மொத்தம் பழைய ஞாபகங்களை மறந்து போன நேசமல்லியின் மனதில் இப்பொழுது ஆழமான ஒரு காதல் சிமெண்ட் ஜல்லி இல்லாமலே உத்தமனின் மீது உருவாக ஆரம்பித்து இருந்து.
உத்தமனுக்கோ அவள் மீது பிடிப்பு இருக்கிறதா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் குழந்தையுடனான பிணைப்பு மட்டும் இறுக்கமாக இருந்தது. யாருக்காகவும் விட்டு விட கூடாது என்று உறுதியாக இருந்தான்.
அதற்கு அவளும் அவனுடன் தான் இருக்க வேண்டும் என்பதையும் உணர்ந்துக் கொண்டு அனைத்தையும் செய்ய ஆரம்பித்து இருந்தான்.
ராதிகாவை காதலித்த நேரம், அவள் மீது அளவுகடந்த காதலை வைத்து இருந்தவன் தான் இந்த உத்தமன். அந்த காதல் எல்லைகளை கடந்து போக, திருமணம் செய்துக் கொள்கிறேன் என்று கேட்டவனை அவமானப்படுத்தி அனுப்பி வைத்து இருந்தாள் அந்த ராதிகா.
தந்தை பெரிய தொழிலதிபர் என்பதாலும் பணத்திற்காகவும் தான் காதலிப்பதாக நடிக்கிறான் என்று அவனை ஒரு தூசியாக கூட ராதிகா மதித்ததில்லை.
இருந்தாலும் அனைத்தையும் பொறுத்துக் கொண்டான் உத்தமன். அவனின் உயிரில் உருவான குழந்தைக்காக.
குழந்தைகள் மீது அலாதி பிரியம் கொண்டவன் இவன். அதனாலே திருமணத்திற்கு பிறகு நிறைய குழந்தைகளை பெற்று வளர்க்க வேண்டும் என்று பல முறை ராதிகாவிடம் கூறி இருக்கிறான்.
அதையெல்லாம் கேட்ட ராதிகாவுக்கோ, தன் அழகு போய் விடுமே என்ற பயம் தோன்ற உத்தமனை மொத்தமாக கழட்டி விட வேண்டுமென்று ஆறே வாரங்களான கருவை எந்த தயக்கமுமின்றி கலைத்து விட்டு வந்து இருந்தாள்.
அதை கேள்விப்பட்ட உத்தமன் மொத்தமாக உடைந்தே போய் விட்டான். தன் உயிரில் உருவான முதல் குழந்தை பெண் பிள்ளையாக இருந்தால் நேசமல்லி என்று பெயர் வைக்க வேண்டும் என்ற கனவை மொத்தமாக கலைத்து விட்டாள் ராதிகா.
அந்த நேரம் தான் மனம் தாளாமல் மூக்கு முட்ட குடித்து விட்டு எங்கே செல்கிறோம் என்று கூட தெரியாமல், சாலை போகும் திசையில் அதிவேகமாக காரை ஓட்டிக் கொண்டு வந்தவன், எதிர்ப்பாராத விதமாக அவள் மீது காரை மோதி விட்டான் உத்தமன்.
ஒரு விபத்தில் உருவான இவர்களின் வாழ்க்கை பயணம் இருவரையும் ஒன்றாக இணைக்குமா? இல்லை பிரித்து வேடிக்கை பார்க்குமா? என்பது அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்.
மருத்துவமனை விதிமுறைகளை எல்லாம் முடித்து விட்டு நேசமல்லியையும் குழந்தையையும் அவனின் பிளாட்டிற்கே அழைத்துக் கொண்டு வந்து இருந்தான் உத்தமன்.
வாட்ச்மேன் முதற்கொண்டு இவர்களை கடந்து போவர்கள் அனைவரும் உத்தமனுடன் இருந்த பெண்ணையும் குழந்தையையும் தான் கேள்விக் குறியாக பார்த்து விட்டு கடந்தனர்.
அவர்களின் பார்வையின் பொருளை உணர முடியாத நேசமல்லிக்கு ஏதோ ஒன்று இடிப்பது போல தோன்ற, வீட்டிற்குள் நுழைந்ததுமே,
"ப்பா ஏன் நம்மளை தாண்டி போனவங்க எல்லாம் நம்மளை ஒரு மாதிரி வித்தியாசமா பார்த்துட்டு போனாங்க?" என்று கேட்டாள்.
உத்தமனோ 'உள்ள நுழைஞ்சதுமே கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாளே' என்று நினைத்து என்ன பதில் சொல்லி சாமாளிக்கிறது என்று யோசித்தவன் ஐடியா வந்தது போல்,
"நீ இத்தனை நாளா ஊருல தானே இருந்த. சோ இங்க இருக்கிறவங்களுக்கு எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலனு தான் தெரியும். அதான் இப்போ என் கூட உன்னையும் குழந்தையையும் பார்த்ததுமே குழம்பி போய் இருப்பாங்க. நான் நாளைக்கே அசோசியேஷன்ல சொல்லி ஒரு நோட்டீஸ் போட சொல்லிடுறேன். நீயும் பாப்பாவும் என் கூட தான் இருப்பீங்கனு" என்று அவன் சொல்லி முடிக்கவும்,
அவனை புருவம் சுருக்கி நம்பாத பார்வை பார்த்த நேசமல்லி "அப்போ நான் உங்க கூட இல்லையா? நீங்க என்னை தனியா விட்டு வந்துட்டீங்களா? ஏன் என்னை உங்க கூட அழைச்சி வரல. நான் ஊர்ல இருந்து இருந்தால் அப்போ குழந்தை எப்படி? அது என்ன பொண்டாட்டி பிள்ளைனு சொல்லாமல் உங்க கூட தான் இருப்போம்னு மொட்டையா சொல்ல போறீங்க? அதுவும் நாளைக்கு? ஏன் இன்னிக்கு இப்போவே போய் சொன்னா அவங்க ஏதாவது சொல்லிடுவாங்களா என்ன?" என்று கேள்விகளை கேட்டுக் கொண்டு இருந்தவளை சற்று அதிர்ந்து பார்த்த உத்தமன்,
'இவளை இங்க கூப்பிட்டு வந்து இருக்கவே கூடாது வெளியே வேற ஏதாவது ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருக்கணும். தேவையில்லாமல் வாடகை காசுக்கு செலவு பண்ணனுமானு நினைச்சது என் தப்பு தான்' என்று தன்னை தானே திட்டிக் கொண்டவன் அவள் முறைத்துக் கொண்டு நிற்பது தெரிய,
"அப்படியெல்லாம் ஒன்னுமில்லையே" என்றான்.
"அப்போ போய் இப்போவே நோட்டீஸ் போட்டு வாங்க. உங்களுக்குனு ஒரு மனைவி இருக்கா. குழந்தை இருக்குனு. அதுக்கு அப்புறம் வந்து ஏன் என்னை உங்க கூட வச்சிக்காம ஊர்ல விட்டு வந்தீங்கனு சொல்லுங்க" என்று அவள் விடாபிடியாக இருக்க, அவளை சமாளிக்க முடியாது என்று தெரிந்தவன் வேறு வழியில்லாமல் நோட்டீஸ் போடச் சென்றான்.
எப்படி இருந்தாலும் இவள் கூட இருப்பது எல்லாருக்கும் தெரிய வர தானே செய்யும். அப்போ அவர்களுக்குள் காது மூக்கு வைத்து பேசுவதை விட, அவனே விளக்கமாக நோட்டீஸ் எழுதி ஒட்டுவது சரியாக இருக்கும் அல்லவா.
அவன் தங்கி இருக்கும் அந்த அடுக்கு மாடி குடியிருப்பு பல கட்டிடங்கள் பல குடியிருப்புகள் கொண்டதாகவும் இருந்தது.
மற்ற ஃபிளாட்களில் உள்ள விதிமுறைகள் போல் தான் இங்கேயும். எந்த ஒரு தொந்தரவுகளும் இல்லாமல் இருக்க வேண்டும்.
இதுநாள் வரை இவன் தனியாக இருந்து விட்டதால், யாருமே இப்படி ஒருவன் இருப்பதை கண்டுக் கொள்ளவில்லை. ஆனாலும் அவனை பற்றி அறிந்து வைத்து இருந்தார்கள்.
அதிலும் உத்தமன் ஒரு லாயர் என்று தெரிந்ததிலிருந்து பல பேர் அவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணவும் அதை எப்படி சமாளிப்பது என்றும் உதவி கேட்டு அவனிடம் வந்துச் செல்வார்கள்.
அதனாலே அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று அறிந்து இருந்தவர்களுக்கு இப்பொழுது ஒரு குழந்தையுடன் பெண்ணும் வந்து இருப்பது எங்கேயோ தவறாக தோன்ற, அவனுக்காக சிலர் ஆபிஸ் ரூமில் காத்திருந்தார்கள்.
சரியாக உத்தமனும் அங்கே செல்ல அவனை பார்த்ததுமே அந்த ஃபிளாட்டின் செக்ரட்டரி "அட வாங்க லாயர் சார். உங்களுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம். எப்படியும் தெரியும் நீங்க வருவீங்கனு" என்று கண்ணாடி கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தவனை பார்த்து கேட்டவரிடம் சிறு புன்னகை கூட இன்றி,
"ம்" என்றவன் மனமோ 'ஊர் கதையை பத்தி தெரிஞ்சிக்க எவ்வளவு ஆர்வமாக இருக்காங்க' என அங்கே சுற்றி ஏதோ வேலைகள் செய்வது போல் இவன் என்ன பேச போகிறான் என்று ஓரக் கண்ணால் அடிக்கடி உத்தமனையே பார்த்துக் கொண்டு இருந்தவர்களை பார்த்து நினைத்துக் கொண்டான்.
பின் குரலை செறுமிக் கொண்டு "செக்ரட்டரி சார், நான் என்னோட மனைவியையும் குழந்தையையும் என் கூடவே அழைச்சி வந்துட்டேன். அதை பத்தி சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தேன். அண்ட் இதை ஒரு நோட்டீஸா போட்டுடுங்க. நாளை பின்ன என் மனைவியை பார்த்து யாரும், அவளை கேள்வி கேட்க கூடாது. இனிமேல் அவங்க என் கூட தான் இருப்பாங்க" என்று மட்டும் சொன்னவன் அங்கே இருந்து திரும்பி நடக்க, இவன் சொன்னதை கேட்டு அதிர்ந்த சிலரில் ஒருவர் மட்டும்,
"என்ன லாயர் சார் திடீர்னு மனைவி குழந்தைனு சொல்றீங்க. நேத்து வரை உங்களுக்கு கல்யாணமே ஆகலைனு ஒண்டிக்கட்டையா இருந்துட்டு, புதுசா எங்கே இருந்து முளைச்சாங்க மனைவி, குழந்தை?" என்று ஒருவர் ஆதங்கமாக கேட்டார்.
அவரை திரும்பி பார்த்த உத்தமன் "ம்... நேத்துவரை நான் ஒண்டிக்கட்டை தான். ஆனால் இன்னைலிருந்து நானும் ஒரு குடும்பஸ்தன் போதுமா?" என்றவனை இடைமறித்து,
"அது எப்படி" என்று பேச வந்தவரை தடுத்த உத்தமன் "இங்க பாருங்க பாபு சார் நீங்க ஏன் இவ்வளவு ஆதங்கப்படுறீங்கனு எனக்கு தெரியும். உங்க தங்கச்சியை என் தலையில கட்டி விட ட்ரை பண்ணிட்டு இருந்தீங்க. அது நடக்கலைனு இப்போ கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கீங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு பாபு சார். உங்களுக்கு நின்னு பதில் சொல்ல முடியாது இல்லையா? என் பொண்ணு வேற இவ்வளவு நேரம் அப்பாவை காணாம அவளோட அம்மாவை படாதபாடு படுத்தி எடுத்து இந்நேரம் ஆய் வேற போய் வச்சி இருப்பா. அதை போய் நான் கிளீன் பண்ணனும்" என்று சொன்னவன் யார் பதிலுக்கும் காத்திருக்காமல் அங்கே இருந்து சென்றான்.