அஸ்திரம் 57…
என் வாழ்வின் வசந்தமவள்!...
அத்தியாயம் 6…
மதி தேவாவிடம் ஏதோ பேசுவதும்…. அதற்கு தேவா பதில் அளிப்பதும் பின் அவள் பாட்டிற்கு செல்வதையும் பார்த்த வேந்தனுக்கு ஏதோ தவறாக படவும் விரைந்து சென்றான் நண்பனை நோக்கி…
பின்னந் தலையை அழுந்த கோதியபடி நின்றிருந்தவனது தோளினை தொட்டு திருப்பிய வேந்தன் தேவாவின் முகத்தைக் கண்டு திகைத்துப் போனான்…. அவனது கன்னத்தை தொட்டு,
" டேய் …என்னடா ஆச்சு??.."
என பதறியவாறு கேட்டிடவும் அவனது கையை விலக்கிவிட்டு பார்வையை அங்கும் இங்கும் சுழல விட்டு நின்று இருந்த தேவா,
" கடுப்பா இருக்கு மச்சான்….என்னன்னே தெரியல…?" என கண்களை இறுக மூடி கூறினான் …
இன்று ஏனோ தேவா வித்தியாசமாக நடப்பது போல் தோன்றியது வேந்தனுக்கு…அதை வெளிப்படையாகவும் கேட்டு விட்டான் ,
"என்னடா ஆச்சு உனக்கு இன்னிக்கி..?காலைல நல்லா தானே இருந்த திடீர்னு அப்படி கத்துற..?? அப்புறம் கூலா நடந்துக்குற…? இப்ப என்னடானா மூஞ்சி மூஞ்சுறு கணக்கா இருக்கு… என்னதான் ஆச்சு உனக்கு???ஒழுங்கா தெளிவா சொல்லு…ஊர்ல ஏதாவது பிரச்சனையா..??இல்ல பாட்டிக்கு ரொம்ப சீரியஸா??என்ன ஏதாவது சொல்லுடா..??"
என உள்ளே போன குரலில் கேட்டான் வேந்தன்….
ஏனெனில் இதுநாள் வரை தேவாவை இவ்வாறு கண்டதில்லை….அதனால் தான் அவனை இவ்வாறு கேட்டது…. கீழ் உதட்டை கடித்த தேவா இடுப்பில் இரு கரங்களையும் ஊன்றியவாறு வேந்தனை நிமிர்ந்து பார்த்து ,
"பார்த்துக்கலாம் மச்சான் ….எதுவும் இல்ல …."
"ஆமா நீ எதுவும் சொல்லிடாத …போ"
என சலிப்பாக விலகிச் சென்றவனது முழங்கையை பற்றி,
" எதுவும் இல்லடா…"
" நம்பிட்டேன் …யாராவது கூமூட்டை இருப்பான்… அவன்கிட்ட போய் சொல்லு" என கோபமாகவே கூறிய வேந்தனது தோளில் கரம் போட்டு அங்கே இருந்த படிக்கட்டுகளில் அமர்ந்த தேவா பெருமூச்சு விட்டு கூறத் தொடங்கினான்,
"ஊர்ல பாட்டிக்கு வேற உடம்பு சரி இல்லை மச்சான்… எப்பவும் நல்லா பேசுவாங்க …போன வாரம் உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க… அது வேற போய் பார்க்கலை.. இப்ப மதி என்னடான்னா பார்ட்டி வை அப்படின்னு சொல்றா… நானும் எடுத்து சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்றா… நான் அவளுக்கு இம்பார்ட்டன்ஸ் தரமாற்றேன் அப்படின்னு நினைக்கறாடா.. என்ன பண்றதுன்னு தெரியல …உன் கிட்ட கொஞ்சம் காசு இருக்குமா மச்சான்" எனக் கேட்டவனை வேதனையுடன் பார்த்த வேந்தன்,
" மச்சான் என்ன பேசுற நீ??.. பாட்டிக்கு உடம்பு சரியில்ல… இப்ப இந்த மதிக்கு பார்ட்டி அவசியமா ரொம்ப..?? ஏன் இந்த வருஷம் பிறந்த நாள் கொண்டாடலைன்னா அந்த அம்மாக்கு என்ன வயசு ஏறிடாதா?...இல்ல கொறைஞ்சிடுமா..?? ரொம்பதான் பண்றா ….டேய் நீ அவளுக்காக இவ்வளவு பாக்கணும்னு அவசியமே இல்ல….பேசாம விடு…என்ன ஒரு நாள் பேசாம இருக்கும் அடுத்த நாள் ஐஸ் கிரீம் வாங்கி தரேன்னு சொல்லு உடனே ஓடி வந்துடும்"என மதியை எண்ணி கடுப்பாக பேசியவளை ஏறிட்டு பார்த்த வேந்தன்,
" என்னை விட நீ தான்டா அவளை நல்லா புரிஞ்சு வச்சிருக்க…!" என்றிடவும் இப்போது விளக்கெண்ணெய் குடித்தது போல் ஆனது வேந்தனின் முகம்….
"டேய்..! வேணா மச்சான் எனக்கு அதைப் பார்த்தாலே கடுப்பா வருது… இதுல புரிஞ்சு வேற வச்சிருக்காங்க அந்த அம்மாவை… நீ முதல்ல போய் பாட்டிய பாரு …! பாவம் அவங்களுக்கும் உன்னை விட்டா வேற யாரு இருக்கா..?"
என அறிவுரை வழங்கிடவும் மெல்லமாய் தலையை அசைத்த தேவா,
"இந்த வாரம் எப்படியாவது போயிடனும் மச்சான்… இல்லனா எனக்கே ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கும் டா" என ஊருக்கு கிளம்ப யோசனை செய்தான் தேவா….
இரண்டு நாட்கள் கழித்து மதியின் பிறந்தநாள் வருவதால் தேவாவும் வேந்தனும் அவளுக்கு ஏதேனும் வாங்கலாம் என கடைக்கு வந்திருந்தனர்…
அது ஒரு பெரிய மால் இருவரும் சுற்றிக் கொண்டே தான் இருந்தார்கள் தவிர என்ன வாங்கலாம் என ஒரு யோசனையும் இல்லை…..
வேந்தனோ,
" மச்சான் அதுக்கு கிப்ட் வாங்குற காசுக்கு எனக்கு ஏதாவது வாங்கி கொடுடா பசிக்குதுடா…!" என வயிற்றை தடவியபடி கேட்க அவனது முதுகிலேயே பட்டென அடித்த தேவா,
"காலையில சாப்பிட்டு தானே வந்த..? இன்னும் மதியம் கூட ஆகலை… அதுக்குள்ள உனக்கு பசிக்குதா… மூடிட்டு வாடா" என இழுத்துக் கொண்டு சென்றான்…
உடைகள் வாங்கலாம் என்றாலும் அவளிடம் ஏற்கனவே ஏராளமான உடைகள் உள்ளது…. அதை மதியே அடிக்கடி கூறுவாள்… வேற என்ன வாங்கலாம் என யோசித்து இருக்கும் போது தான் அங்கிருந்த பரிசுப் பொருட்கள் விற்கும் கடைக்கு உள்ளே சென்றனர்….
தேவா இக்கடைக்கு அழைத்துச் செல்வதை புரியாது பார்த்த வேந்தன்,
"மச்சான்…? எதுக்குடா இந்த கடைக்கு கூட்டிட்டு வந்த…?" என கேட்டிடவும் அவனை முகம் சுருக்கி பார்த்த தேவா,
" பர்த்டேக்கு கிப்ட் வாங்க கிப்ட் ஷாப் தானடா வரணும்..? வேற எங்க போக சொல்ற..??" என கேட்டவாறு எதிரில் இருந்த பொருளை ஆராய்ந்து கொண்டிருந்தான்….
அதற்கு வேந்தன் கிளுக்கென சிரித்து,
" மச்சான்… நீ இதெல்லாம் வாங்கி கொடுக்கறதே வேஸ்ட்டா…" என்றிடமும் அவன் எதைக் கூற வருகிறான் என சரியாக கண்டுகொண்ட தேவா,
" போதும் ….விட்று" எனக் கூறிவிட்டு அங்கிருந்து விலக முயல அதற்குள் அவனது தோளில் கரம் போட்டு அவனது காதில்,
" அவளுக்கு ஒரு பர்பி வாங்கி கொடேன் அதுக்கே அலைஞ்சுகிட்டு வந்துரும்…. நீ எதுக்கு மச்சான் இவ்வளவு காசு வேஸ்ட் பண்ற…??" என்ன கூறிவிட்டு ஓடிவிட்டான்….
அதில் அவனை துரத்தி சென்ற தேவா தலையிலேயே பட்டென அடித்து விட்டு,
"ஒழுங்கு மரியாதையா அமைதியா இருடா… தேவையில்லாம என்னை கடுப்பேத்தாத… அவளைப் பற்றி தேவையில்லாம பேசாதே..கிண்டல் பண்ணிகிட்டே இருக்க…?? இனி அவளை பத்தி பேசு அப்பறம் இருக்கு மச்சான் உனக்கு"
என கட்டளையாய் கூறிவிட்டு அவளுக்காக என்ன வாங்கலாம் என ஆராய்ந்தவாறு நின்று இருந்தான் தேவா….
வேந்தனும் அதற்குப் பிறகு தோளை குலுக்கி விட்டு வேடிக்கை பார்க்கலானான்.…பிறகு அங்கே இருந்த கிறிஸ்டலில் செய்யப்பட்ட ஆணும் பெண்ணும் நின்றிருப்பது போலவும் அவர்களுக்கிடையில் இதய வடிவிற்கு நடுவே ஐ லவ் யூ என ஆங்கிலத்தில் எழுதியது போல் இருப்பதை கண்ட தேவா அதை கையில் எடுத்து பார்த்தான்…
அச்சமயம் சட்டென அவனது மன கண்ணில் இனியாவின் முகம் வந்து செல்ல… தலையை அழுந்த கோதிக் கொண்டவனுக்கு,
'என்ன இது..?? மதிக்கு கிப்ட் வாங்கலாம் பார்த்தா இனியா முகம் வருது…. கடவுளே!!..' என மனதில் முணுமுணுத்தவாறு தலையை குலுக்கி கொண்டான்….
பின்னர் அப்பரிசினை எடுத்துக் கொண்டு நேராக பில் போடும் இடத்திற்கு சென்றவன் என்ன நினைத்தானோ வேந்தனிடம் ,
"மச்சான் இதை பேக் பண்ண
சொல்லு …நான் இப்ப வந்துடுறேன்" என கூறிவிட்டு மீண்டும் கடைக்குள் சென்றான்….
அவன் செல்வதை பார்த்த வேந்தன் பில் போடுபவரிடம் ,
"இதை கிஃப்ட் பேக் பண்ணிடுங்க அண்ணா" என்று கூறிவிட்டு மீண்டும் தேவா சென்ற திசை நோக்கி பார்வையை செலுத்தினான்….
சிறிது நேரத்தில் தேவா மேலும் ஒரு கிஃப்ட் உடன் வந்தவன் பில் போடுபவர் இடம் ,
"அண்ணா இதையும் சேர்த்து பில் போட்டுடுங்க….கிஃப்ட் பேக் பண்ணிடுங்க அண்ணா" என்று வைத்துவிட்டு வேந்தனை பார்த்தான்,
" எதுக்கு மச்சான் இப்ப அந்த மதிக்கு இரண்டு கிஃப்ட்டு…??... அதுக்கு ஒண்ணே அதிகம் இதுல ரெண்டும் வாங்கணுமா ரொம்பத்தான்…!" என சலித்துக் கொண்டான்…
இருவரும் கடையை விட்டு வெளி வர வேந்தனுக்கு பசி எடுக்கவும் அங்கிருந்த உணவகத்தில் இருவரும் சேட் ஐட்டம்ஸை உண்டு விட்டு ஹாஸ்டலுக்கு வந்து விட்டனர்….
மதியின் பிறந்த நாளும் வந்தது…..வழக்கமாய் தேவா தான் இரவு பன்னிரெண்டு மணிக்கு வாழ்த்து கூறுவான்…. அன்றும் அவளுக்காக தூங்காது கைபேசியை கையிலே வைத்துக் கொண்டிருந்தான்….
சரியாக பன்னிரெண்டாக ஒரு நிமிடமே இருக்க கைபேசியில் மதியின் எண்ணை அழுத்த போகும் சமயம் திடீரென இனியாவிடமிருந்து அழைப்பு வந்தது….. புருவம் சுருக்கியவன் சற்றும் தாமதிக்காது அழைப்பை ஏற்று காதில் வைக்க மறுபுறம் பதற்றமான குரலில் இனியா,
"தே… தேவன்.." என்று தான் கூறியிருப்பாள் அதற்கே அமர்ந்திருந்த இடத்திலிருந்து சடார் என்று எழுந்த தேவா,
" ஏய்…. இனியா??... என்ன ஆச்சு??... ஏன் டென்ஷனா பேசுற…?" என பதறிடவும்… அதற்கு இனியா,
" தேவன்….ப்…ப்ளீ… ப்ளீஸ் கொஞ்சம் வீட்டு…க்கு…. வாயேன்" என தட்டு தடுமாறி அழைத்தாள் அவனை….
திகைப்புற்ற தேவா இந்நேரத்தில் அழைக்கிறாளே என எண்ணியவனுக்கு இன்னுமே பதறச் செய்வது….
" இனியா..? என்ன ஆச்சுன்னு சொல்லு?...இந்த டைமுக்கு வர சொல்ற..? அங்க எதாச்சும் ப்ராப்ளமா..?? உங்க சித்தி ஏதாவது சொன்னாங்களா??.." என கேள்வி மேல் கேள்வி கேட்கவும் பொறுமை இழந்த இனியா,
" இப்ப வர முடியுமா…? வர முடி..யாத தேவன்" என அழுத்தமாய் கேட்டாள்….
அதற்கு மேல் அவளது தேவனால் மறுக்க முடியுமா என்ன??...திரும்பி வேந்தனைப் பார்த்தான்…. அவன் நல்ல உறக்கத்தில் இருக்கவும் பெருமூச்சு விட்டு கைபேசியையும் தனது பர்சையும் எடுத்து பாக்கெட்டில் போட்டவன் யாருக்கும் தெரியாது சுவரேறி குதித்து சாலையை அடைந்தான்….
அவனது இருசக்கர வாகனம் உள்ளே இருப்பதால் எடுத்து வரும்போது நிச்சயம் வாட்ச்மேன் இடம் மாட்டிக் கொள்ள இயலும்…. அதனால் தான் அவன் அதை எடுத்து வராது ஆட்டோவில் செல்லலாம் என வந்து விட்டான்….
வாட்ச்மேனை சரி கட்டுவது அவனுக்கு பெரிய விடயம் அல்ல ஆனால் இந்நேரத்தில் செல்வதை அறிந்து என்ன?..ஏதென்று?? கேள்விகள் வரும்… அதனை தவிர்க்கத்தான் அவன் சுவர் ஏறி குதித்து வந்தது….
அச்சமயம் ஆட்டோவும் ஏதும் தென்படவில்லை இருந்தும் விறுவிறுவென இனியாவின் வீட்டை நோக்கி நடந்தே சென்றவன்…. வழியில் ஒரு ஆட்டோ வரவும் அதில் ஏறி இனியாவின் வீட்டின் முன்பு இறங்கி கொண்டான்….
தனது பர்ஸிலிருந்து பணத்தை எடுத்து ஆட்டோக்காரருக்கு கொடுத்த தேவா சுற்றும் முற்றும் பார்க்க….அனைத்து வீடுகளிலும் விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்தது….
மெதுவாக கேட்டை திறந்து காலிங் பெல்லை அடிக்காது கதவை தட்டினான் தேவா….
" இனியா…?...இனியா?" என இரு முறை அழைத்தவாறு கதவினை தட்ட உள்ளே இருந்து தடுமாறியபடி வந்து விழுந்தது வார்த்தைகள் ,
"உள்…ள…வா…. தேவன்"
என மூச்சு வாங்கியபடி கூறிய இனியாவின் குரலில் சட்டென்று கதவை திறந்தான்…தாழ் போடாமல் இருக்கவும் திகைப்புற்றவாறு அவளை நெருங்க அங்கு அவன் கண்ட காட்சி அவனை அதிரச் செய்தது எனலாம்….
தலை கலைந்திருக்க…. முகம் முழுவதும் வியர்வையில் குளித்திருக்க…. கால்களை ஒடுக்கியபடி… கீழே அமர்ந்திருந்த இனியா கிட்டத்தட்ட பாதி மயக்கத்தில் இருந்தாள் எனலாம்….
அவளை அந்நிலையில் கண்டதும் தேவாவின் அணு முழுவதும் அவளுக்காக துடித்தது….விரைந்து சென்று அவளை நெருங்கியவன்,
"இனியா..???இனியா… என்னாச்சு உனக்கு..?? சொல்லுடீஇஇ…" என கன்னத்தை பட்பட்டென்று தட்டினான்….
அவளோ தன் தேவன் தனக்கு அருகே இருப்பதை உணர்ந்ததால் வந்து தைரியத்தில் மெதுவாய் கண்களை திறந்து,
" தேவன்…வயிறு ரொம்ப வலிக்குது தேவன்…என்னால முடியல" என்றிடவும் அவள் முகத்தையும்.. அவளது வயிற்றையும் மாறி மாறி பார்த்தவன்,
" என்ன ஆச்சு வயிறு வலிக்கற அளவு??.." என அடுத்து என்ன கேட்பது என திணறியவாறு இருந்தவனிடம்,
"பீரிய….ட்ஸ்…தேவன்… வலி ரொம்ப அதிகமா இருக்கு….தாங்க முடியல டிரஸ் எல்லாம் அதிகமா ஆயிடுச்சு" என திக்கி திணறி கூறியவளை என்ன நினைத்தானோ தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்தவன் அவளது உச்சி முகர்ந்து,
" எதும்.. ஆகாது நான் உன் கூட தான் இருப்பேன்.." என கரகரத்த குரலில் கூறியவன் சற்றும் தாமதிக்காது அவளை தன் இரு கரங்களில் தூக்கிக் கொண்டு கதவினை பூட்டிவிட்டு கேட்டினை தாண்டி வெளிவந்தான்..
நல்ல வேளை அவனை விட்டு சென்ற ஆட்டோ ஓட்டுநர் அங்கு யாருடனோ கைபேசியில் பேசியவாறு இருக்கவும் இனியாவை தூக்கிக் கொண்டு ஆட்டோவில் படுக்க வைத்து விட்டு,
" அண்ணா…. ப்ளீஸ் கொஞ்சம் ஹாஸ்பிடல் போங்கண்ணா…. உடம்பு சரியில்லண்ணா… ப்ளீஸ்"என 'ப்ளீஸ்' என்கிற வார்த்தையை உபயோகப்படுத்திடவே யோசிப்பவன் இன்று யாரென்று தெரியாதவரிடத்தில் தன் உயிர்த்தோழிக்காக அத்தனை 'ப்ளீஸ்' களை உபயோகப்படுத்தினான்….
அவரும் இனியாவை பார்த்துவிட்டு உடனே ஆட்டோவை எடுத்து மருத்துவமனை நோக்கி விட்டார்….நல்லவேளை அருகிலேயே சின்ன கிளினிக் ஒன்று திறந்திருந்தது….ஸ்ட்ரக்சரை எதிர்பார்க்காது அவளை தன் இரு கரங்களால் தூக்கிக்கொண்டு உள்ளே நுழைந்தவன் ,
"டாக்டர்…!... நர்ஸ்….?!" என கத்திக் கூப்பாடு போட தூங்கிக் கொண்டிருந்த பெண்மணி ஒருவர் பதறிக்கொண்டு எழுந்து,
" என்னாச்சு சார்?" என்றிடவும் இனியாவை பார்த்து,
" வயிறு வலி…கொஞ்சம் சீக்கிரம் பாருங்களேன் ப்ளீஸ்" என கூறியவனை கண்ட பெண்மணி என்ன நினைத்தாரோ உடனே மருத்துவரையும் நர்சுகளையும் அழைத்து இனியாவை சோதிக்க ஏற்பாடு செய்தார்….
தேவா தலையில் கை வைத்தவாறு வெளியே இருந்த இருக்கையில் அமர்ந்து விட்டான்…. தலை குனிந்து இருந்தவன் அவனது கரங்களை பார்த்தான் அப்படி நடுங்கியது அவனது விரல்கள் அனைத்தும் ….மூச்சு வாங்க அமர்ந்தவனது இதயத்துடிப்பும் ஏகத்துக்கும் எகிறி இருந்தது….
அவன் ஒரு முறை கூட இவ்வாறு உணர்ந்ததில்லை…. இரு கரங்களால் முகத்தை மூடியவன் அழுந்த துடைத்தான்…. கண்கள் சற்றே கலங்கி காணப்பட்டது ….நெற்றியை நீவியவாறு விழிகள் மூடி,
'கடவுளே என் இனியாக்கு எதும் ஆகக்கூடாது 'என மனதிற்குள்ளேயே கடவுளை நினைத்து பிரார்த்தனை வைத்தான் தேவா….
எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்திருப்பானோ ஒரு செவிலி பெண் வெளியே வந்து அவனிடம் ,
"சார்…. இதெல்லாம் போய் கொஞ்சம் மெடிக்கல் ஷாப்ல வாங்கிட்டு வந்துடுங்க வெளிய தான் இருக்கு" என ஒரு சீட்டினை நீட்டிட அவனும் விரைந்து சென்று அவற்றையெல்லாம் வாங்கி வந்து அந்த செவிலி பெண்ணிடம் கொடுத்தான் …
கொடுக்கும்போதே,
" உள்ள… அவ….ங்களுக்கு…. எப்படி இருக்கு" என கேட்டவனுக்கு வார்த்தைகள் வர மறுத்தது…. அவனை பரிதாபமாக பார்த்த செவிலி பெண்ணும்,
"பயப்படுற மாதிரி எதுவும் இல்லை…அவங்களுக்கு பீரியட்ஸ் ரத்தப்போக்கு அதிகமா இருக்கு….வலி தாங்க முடியாம ரொம்ப மயக்கம் ஆகியிருக்காங்க ….இப்ப ட்ரிப்ஸ் போட்டு இருக்கோம்…. டாக்டர் வந்து டீடைலா இப்ப சொல்லுவாங்க" என்று மட்டும் கூறியவர் உள்ளே சென்று விட்டார்….