எரிதழல் ஏந்திழையே
1.அத்தியாயம்
நிசப்தம் நிறைந்த காரிருளைக் கிழித்துக் கொண்டு மரண ஓலத்தின் சப்தம் அம்மிகப்பெரிய மாளிகையை ஒரு நொடி ஆட்டம் காண செய்தது. கீச்சென்ற இரவுப் பூச்சிகளின் சத்தம் கூட அந்நொடி மறைந்து போனது தான் போலும், அப்படியொரு பெரும் சத்தம் ஓங்கியொலித்தது.
அறையின் சுவற்றில் குருதியின் சிவப்பு நிறம் துளிகளாய் தெளித்திருக்க, கையில் இரத்தம் பொங்க தன் அடி வயிற்றைப் பற்றிக்கொண்டு, தூணின் மீது சாய்ந்தபடி சரிந்துக்கிடந்தார் இராஜாங்கம்.
தனக்கென தனி சாம்ராஜ்யத்தை அமைத்து எப்படியெப்படியோ வாழ நினைத்த இராஜாங்கத்தின் இராஜாங்கம் மெல்ல மெல்ல முடிவை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்க,
ஐம்பது வயதைக் கடந்தவரின் வைராக்கியம் மட்டும் குறைந்தப்பாடில்லை. 'மரணமா...! எனக்கா!' என்று மனதில் உறுதி எடுத்துக்கொண்டவர், தனக்கு எதிரே நின்றிருந்தவளை கண்கள் சிவக்க உக்கிரப்பார்வைப் பார்த்தார்.
அந்நொடி எங்கிருந்து வந்தது வேகம் என்று அவருக்கே தெரியவில்லை. வீறுக்கொண்டு எழ முயன்றவர், ஒரு நொடி தடுமாறினாலும் மறுநொடி தூணைப் பற்றி நின்றபடி, அவளை தன் சிவந்தக் கண்களால் பொசுக்க முயலும் பார்வையில் பார்த்தார்.
"ஏழை சிறுக்கி, உன் புத்தியை காட்டிட்டியே... உன்ன கொல்லாமா விடவே மாட்டேன்....டி." என்றவன் வெஞ்சினத்துடன் தன் கைத்துப்பாக்கியை எடுத்து அவளை சுட முயன்ற நொடி, அவனது பின்னிடுப்பில் கூர் ஈட்டியொன்று முதுகைத் துளைத்துக் கொண்டு வயிற்றில் பாய்ந்தது.
அந்நொடி அத்தாக்குதலை அவர் எதிர்பார்க்கவில்லை. தள்ளாடிக் கொண்டே திரும்பிப் பார்த்தவரதுக் கண்கள் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்து தான் போனது.
'மாரில் தூக்கி வளர்த்த குழந்தையின் கைகளிலா தன் சாவு?' என்று அதிர்ந்து விழித்தவரது அதரங்கள் இரத்தத்தை அவன் பாதத்தின் முன்பு சிதறவிட்டிருக்க, அந்நொடி அவனைப் பார்த்தப்படியே அவரது உயிரும் அவரை விட்டு ஒரேயடியாக பிரிந்திருந்தது.
தன் முன்னே விழுந்துக் கிடப்பவரை கண்களில் நீர்க் கோர்க்க பார்த்தவனின் வயதோ வெறும் பன்னிரண்டுதான். பன்னிரண்டு வயதில் அவன் செய்த செயலால் உயிரொன்று காத்தது என்றாலும், நாளை அவனுக்கு கிடைக்கப் போகும் பட்டமோ கொலையாளி மட்டுமே.
இறந்தவரது விழிகள் இரண்டும் அவனையே பார்த்தப்படி திறந்துக்கிடக்க, அவனது கண்கள் முழுவதும் இரத்த நிறம் நிறைந்திருக்க, தேகம் ஒருவாறு படபடக்க, "வா...வாசுமா...." என்று திக்கித் திணறி எதிரே இருந்தவளை பார்த்து பெரும் அழுகையில் கதறியவனோ, அதிர்ச்சியில் மயங்கி கீழே சரிந்திருந்தான்.
அடுத்த நாள் காலை காவல் துறையினர் அவனை எழுப்பியிருக்க, அடித்துப் பிடித்து எழுந்தவன் தேடியது என்னவோ அவனது வாசுமாவை தான். ஆனால் அவள் இருப்பதற்கான தடம் சிறிதும் அவ்விடமில்லை.
"கொலை நீ தான் பண்ணியா?" என்ற காவல் அதிகாரியின் கேள்விக்கு கூட பதில் கூறாது சுற்றும் முற்றும் தேடினான்.
சுற்றிலும் சூழ்ந்த கூட்டமும், அழுகையும், பேச்சுக்களும், அச்சிறுவனின் மனதில் துளியும் பதியவில்லை.
காவல் துறையினர் கைது செய்தப்படி அவனை அழைத்துச் செல்வதுக் கூட அவன் புத்திக்கு எட்டவில்லை. பன்னிரண்டு வயதில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான் அந்த பாலகன்.
நீதிமன்றத்தில் கூட அவன் ஒரு வார்த்தை பேசவில்லை. ஒப்புக்கொண்டான் தான் தான் கொலையாளி என்று. ஆனால் வார்த்தைக்குக் கூட 'வாசுமா' என்று அவனால் அழைக்கப்படும் வாசுகியைப் பற்றி அவன் கூறவில்லை. புத்திசாலியான குழந்தை தான் அவன். ஆதலாலோ என்னவோ வாசுகியைப் பற்றி துளியும் அவன் கூறவில்லை.
இருப்பினும் ஒவ்வொரு நாளும் அவன் கண்கள் அவனது வாசுமாவைத் தேட, நாட்கள் செல்ல செல்ல அவனது அதீத பாசமே அவர் மீது வெறுப்பையும் சேர்த்து உருவாக்கியிருந்தது.
"வாசுமா உங்களை நான் ரொம்ப வெறுக்கிறேன். ஐ ஹேட் யூ வாசுமா." என்றவனது விசும்பல் அந்த வாசுகியின் காதிலும் விழுந்தது போலும்.
ஒவ்வொரு நாட்களை கடக்கும் போதும் வேதனையில் தத்தளித்துக் கொண்டே தான் இருந்தார் வாசுகி.
கண்முன் நிகழ்ந்த பெரும் நிகழ்வு அது அல்லவா! உயிரைக் காத்தவனை அப்படியே விட்டுவிட்டு வந்தவள் அவள் அல்லவா! சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஒருவரை எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லும் அதில் வாசுகி என்ன விதி விலக்க, அவள் பட்ட துயரங்களை அச்சிறுவனும் பட்டுவிட்டுப் போகட்டும் என்றவள் கனவிலும் நினைக்கவில்லை.
இருந்தும் சந்தர்ப்பம் நிகழ்த்தியிருக்க,
நாட்கள் மெல்ல நகர்ந்து வருடங்கள் பல கடந்து சென்றும் கூட இன்றும் உள்ளுக்குள் வேதனையில் மறுகிக் கிடக்கிறார் வாசுகி.
"வாசுமா.. எப்போ என்ன பார்க்க வருவீங்க?" என்னும் குரல் உறங்கிக் கொண்டிருந்தவளின் காதுகளை அடைவதுப் போல் பிரம்மை உண்டாக, பல வருடங்கள் கழித்தும் கேட்கும் மழலைச் சிறுவனின் குரலில் பட்டென்று உறக்கத்திலிருந்து கண் விழித்திருந்தார் வாசுகி.
தலையில் ஆங்கேங்க எட்டிப் பார்க்கும் நரை, வயதுக்குரிய முதிர்ச்சி அவ்வளவு தான் மாற்றமே தவிர்த்து அவரின் கலையான முகம் மட்டும் அப்படியே இருந்தது.
முகமெல்லாம் வியர்த்து விட்டது அவருக்கு. அருகிலிருந்த தண்ணீர் குவளையை தேடி எடுத்தவருக்கு காலிக் குவளையே கையில் கிடைக்க, முகத்தை சேலை முந்தானைக் கொண்டு துடைத்தவரோ, படுக்கையறையை விட்டு சமயலறையை நோக்கி நடந்துச் சென்றார்.
அங்கிருந்த ஒரு சொம்புத் தண்ணீரை எடுத்து அருந்தியும் அவர் தாகம் தணியவில்லை. இத்தனை வருடங்கள் கழிந்தும் அச்சிறுவனின் முகமே அவரின் கண்முன் வந்துச்சென்றது.
சுற்றும் முற்றும் பார்த்தவர், வீட்டின் கதவினைத் திறந்துக் கொண்டு வெளியே சென்றிருந்தார். வீட்டின் பக்கவாட்டிலிருந்த மாமரத்தின் கீழ் சுற்றியிருந்த வெள்ளை நிற ரோஜக்களை வெறித்துப் பார்த்தவரதுக் கண்கள் அவரையும் மீறி கலங்கியிருக்க, அவரது மனமோ மானசீகமாக அவனிடம் மன்னிப்பை யாசித்திருந்தது.
அக்கணம் "தேவா" என்னும் குரல் அவரது சிந்தையைக் களைத்திருக்க, தன் விசும்பலையும், அழுகையையும் அடக்கிக் கொண்டவள், மிக எதார்த்தமாக திரும்பிப் பார்த்தாள்.
அங்கு நின்றிருந்தது என்னவோ அவளது கணவன் தான். பதினெட்டு வருட திருமண பந்தத்தில் எதுவுமே மாறவில்லையே. அடிக்கடி இரவு தூங்காமல் அவள் இவ்விடம் வந்து நிற்பது ஒன்றும் புதிதல்ல. இருந்தும் அவரிடமிருந்து வெளிப்பட்டது என்னவோ பெரும் மூச்சுக் காற்று ஒன்று மட்டுமே.
"இன்னும் எத்தனை நாளுக்கு தான் இப்படியே இருப்ப தேவா? மனசுல பூட்டி வெச்சிருக்க விசயத்தை சொல்லிடு.. இல்லைனா இப்படி தான் காலம் பூரா நீ இங்க வந்து நின்னு யோசிக்க வேண்டியது தான்." என்று மிக இயல்பாய் அவர் கூறிவிட்டார்.
"சில விசயங்களை சொல்லாமல் இருந்தால் தான் நிம்மதியாக வாழ முடியும்." என்று மட்டும் உரைத்தவளோ அவரைப் பார்த்து சிரித்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்திருக்க,
"நீ என்னைக்குமே புரியாத புதிர் தான் தேவா... தேவவாசுகி." என்றவரும் மனைவின் புன்சிரிப்பில் மதிமயங்கியபடியே அவள் பின்னால் சென்றார்.
அவள் மறைக்க நினைக்கும் விசயங்கள் மீண்டும் துளிர் விட்டு விருட்சமாய் வளர்ந்து நிற்பதை அவள் அறியவில்லை போலும், அவள் விட்டுச்சென்ற தழலோ அவளை சந்திக்கும் நொடிக்காக காத்திருந்தது.
அதே சமயம், மகாபலிபுரம் செல்லும் சாலையில் சீறிப்பாய்ந்துக் கொண்டிருந்தது சிவப்பு நிற ஜீப் ரேங்குலர். ஜீப்பினுளொருவன் முகத்தை தொப்பியொன்றால் மறைத்தப்படி உறங்கிக் கொண்டிருக்க, ஜீப்பை அதிவேகமாக ஓட்டிக் கொண்டிருந்தது என்னவோ மற்றொருவன்.
அவன் பவித்ரன். முகம் முழுவதையும் தன் தாடியில் மறைத்திருந்தான். அவனது சிறுக் கண்களோ மிக கூர்மையாய் சாலையில் பதிந்திருந்தது. அளவான உயரம், அதற்கேற்ற உடல்வாகு, சிரித்தே பிறரை மயக்கும் அதரங்கள், அந்த புன்னகையை மறைக்கும் தாடி மொத்ததில் அழகன் தான் அவன். அளவாக குடித்திருந்தால் மிகத் தெளிவாகவே பார்வையை சாலையில் பதித்தப்படி சென்றுக் கொண்டிருந்தான்.
புயலென சீறிப்பாய்ந்துக் கொண்டிருந்தவனோ, "இடியே விழுந்தாலும் இவன் எழுந்திரிக்கப் போறதே இல்ல" என்று புலம்பியபடி அந்த கும்மிருட்டிலும் இயற்கையை ரசித்துக்கொண்டு வந்தான் பவித்ரன்.
ஆளறவமற்ற அந்த கும்மிருட்டைக் கிழிக்கும் வண்ணம் ஒரு பெண்ணின் குரல் அவனது காதுகளை வந்தடைந்திருந்தது. அதிவிரைவாக சென்றுக் கொண்டிருந்தவன் வேகத்தைக் குறைத்து ஜீப்பை பாதி வழியில் நிறுத்தியிருந்தான்.
"எதோ சத்தம் கேட்டுச்சே?" என்று செவியை தீட்டி பொறுமையுடன் கேட்க, மீண்டும் அமைதி மட்டுமே அவ்விடம் நிலவியது.
தன் பிரம்மையோ? என்றவன் சிந்தித்தாலும் சத்தம் கேட்டதே என்கின்ற எண்ணம் அவனை அவ்விடமிருந்து செல்ல யோசிக்க வைத்திருந்தது. மீண்டும் ஜீப்பை மெதுவாக அங்கிருந்து இயக்கத் தொடங்கியிருந்தவனதுக் கண்கள் அவ்வப்போது ஜீப்பின் பக்கவாட்டு கண்ணாடி வழியே பார்வையை பதித்தது.
சாலையில் நிலவு வெளிச்சத்தில் இரண்டு ஆண்கள் ஓர் பெண்ணை வாயைப் பொத்திக் கொண்டு இழுத்துச் செல்லும் காட்சி அப்பட்டமாய் கண்ணாடியில் தெரிய, இதழை லேசாக வளைத்து புன்னகைத்தவனோ,
"ஹீரோயிசம் காட்ட நேரம் வந்திருச்சு. மவனே.... வரேன்டா உங்களுக்கு ஆப்பு வைக்க." என்று முணுமுணுத்தவனது முகம் நொடியில் இறுகியது.
ஜீப்பை சடாரென்று வளைத்துத் திருப்பியவனது செயலை அவ்விரண்டு ஆண்களும் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை போலும்.
போதைப் பொருளின் உதவியில் மிருகமாய் நின்ற இவ்விருவரை தவிர்த்து, சாலையின் ஓரத்தில் மறைக்கப்பட்ட மகிழுந்தில் மூவர் இருக்க, ஐவரும் சேர்ந்து சாலையில் இரவு வேளையில் ஐடி பணி முடித்து திரும்பி வந்துக் கொண்டிருந்த இளம்பெண்ணை திட்டமிட்டு கடத்திக் கொண்டு இவ்விடம் வந்திருக்க, அவர்களிடமிருந்து தப்பி ஓடி வந்த வேளையில் அவள் எழுப்பிய சத்தம் தான் ஆணவனின் காதுகளை எட்டியிருந்தது. மேலும் அவள் சத்தமிட முடியாதவாறு இருவர் அவளை வளைத்துப் பிடித்துக் கொண்டனர். இருப்பினும் வசமாக பவித்ரனிடம் மாட்டிக் கொண்டு விட்டனர் இருவரும்.
ஜீப்பை அவர்கள் முன்பு கொண்டு வந்து நிறுத்தியவன், அசட்டையாக கதவைத் திறந்துக் கொண்டு, அவர்கள் முன்பு வந்து நின்றவனதுப் பார்வையில் துளியும் பயம் தெரியவில்லை.
தனது ஸ்லீவை கை முட்டி வரை மடித்துக்கொண்டே, "நான் பொறுமையா சொல்றேன். அந்த பொண்ணை விட்டுட்டு இங்கயிருந்து ஓடியிருங்க. இல்லைனா நடக்கும் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பு இல்ல." என்று மிக நிதானமாக கூறினான்.
"இதோ பாருடா ஒத்தையா வந்துட்டு எங்களை மிரட்டுறியா? டேய் வாங்கடா இவனை கொன்னு புதைச்சுட்டு நம்ம வேளையை பார்ப்போம்." என்றொருவன் கூறியிருக்கவும் மற்ற மூவரும் அவனை சூழ்ந்து நிற்கவும் சரியாக இருந்தது.
"அண்ணா ப்ளீஸ் என்ன காப்பாத்துங்க." என்றவள் கதறி அழுதாள்.
அடுத்த நொடியே அவளை ஓங்கியொருவன் அடித்தது மட்டுமின்றி, "கழுதை அவனே சாகத் தான் போற? இதுல உதவி வேற கேட்குறியா?" என்று எகத்தாளம் நிறைந்த பார்வையை பவித்ரனைப் பார்த்துக் கொண்டே கூற, அப்பெண்ணோ மயங்கி மற்றொருவன் கையில் சரிந்தாள்.
அவனது செயலில் கடுப்படுந்த பவித்ரனோ, கோபம் கொந்தளிக்க, "டைம் ஓவர்." என்று கூறியபடி எதிரில் இருந்தவனை ஓங்கி அடிக்கவும், மற்றவர்கள் அவனை அடிக்கவும், ஒரே நொடியில் மாறிமாறி சண்டை பெரிதாகிக் கொண்டே சென்றது.
அவர்கள் ஐவர், இவன் ஒருவன் என்பதால் இவன் மீதும் அடிகள் ஒருபுறம் விழுந்துக் கொண்டிருக்க, தன் முழு பலத்தையும் திரட்டி ஒவ்வொருவராக மாறிமாறி வீழ்த்திக் கொண்டிருந்தான் பவித்ரன்.
அதிலொருவன் இரும்பு ராடைக் கொண்டு பவித்ரனை தாக்க வர, அவனோ வளைந்துக் கொண்டு நகர்ந்திருக்க, இரும்புக் கம்பியோ ஜீப்பின் பக்கவாட்டு கண்ணாடியை அடித்து நொறுக்கியிருந்தது.
"டேய்...டேய் சொதப்பிட்டியேடா.... கண்ணை எங்க வெச்சுட்டு வந்த? போச்சு போ இனி நீங்க பிழைக்குறது கஷ்டம் தான்" என்று பவித்ரனோ அடிப்பதை மறந்து அவனிடம் எகிறிக் கொண்டு செல்ல, மற்றொருவன் கட்டையால் அவனது முதுகை ஓங்கித் தாக்க வர, அந்நொடி வலுப்பொருந்தியக் கரமொன்று கட்டையை பலமாக பற்றிக் கொண்டு தடுத்திருந்தது.
தாக்க முனைந்தவனோ வியர்வைத் தெறிக்க நிமிர்ந்துப் பார்க்க, முறுக்கேறிய கைகளைக் கொண்ட எதிரில் நின்றவனோ, "தூக்கத்துல இருந்தப்போ என்ன எழுப்புனது எவன்டா?" என்று வெகு நிதானமாக கேட்டான்.
அவனது குரல் கேட்டு திரும்பிய பவித்ரனோ புன்னகை மாறாது, "அது இவன் தான் மச்சி?" என்று எதிரில் நிற்பவனைக் கைக்காட்டியிருக்க,
அதில் ஆணவனோ பவித்ரனைப் பார்த்து கண்ணசைக்க, பவித்ரன் அந்த நபரின் கரம் பற்றி வெகு விசையுடன் இழுத்து அவனை நோக்கி விட்டிருக்க, அவனது முகத்தில் ஓங்கியொரு குத்து விட்டு இரத்தம் தெறிக்க விழ வைத்திருந்தான் அவன்.
அவன் அபாரஜீத். நெடுநெடுவென்ற உயரம். அசட்டை மிகுந்த அலட்சியப் பார்வை. சிரிக்க மறுத்த இறுகிய முகம், முறுக்கேறிய இருக்கரங்களில் ஒற்றைக் கரம் முழுவதிலும் போடப்பட்டிருந்த டாட்டூ, முறையாய் பயிற்சி செய்த வலிய தேகம் இதுவே அவனது சாராம்சமாய் இருக்க, உறக்க கலக்கத்திலும் தனக்குரிய திமிர் குறையாது நின்றிருந்தான் பவித்ரனின் ஆருயிர் நண்பன் அபாரஜீத்.
"நானாவது டைம் கொடுத்துட்டு அடிப்பேன். ஆனால் அவன் அடிச்சுட்டு தான் டைமே கொடுப்பான்." என்று அங்கு வாய்பிளந்து நின்ற மற்றவர்களைப் பார்த்து கேலியாக கூறிய பவித்ரனோ ஓய்யாரமாய் ஜீப்பீன் மீது சாய்ந்து நின்றுக் கொண்டான்.
இம்முறை அங்கிருந்த அனைவரையும் அடித்து வீழ்த்துவது அபாரஜீத்தின் முறையானது. ஐவரும் ஒவ்வொரு திசையில் குற்றுயிரும் கொலையுருமாய் விழுந்துக் கிடந்தனர்.
மயக்கத்திலிருந்த பெண்ணவளை எழுப்பி, அவள் தங்கியிருந்த விடுதிக்கு அழைத்துச் சென்றனர் இருவரும். அபாரஜீத் பெரிதாக எதையும் கண்டுக் கொள்ளவில்லை. பவித்ரனோ அவளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக பேசிக் கொண்டு வந்தான்.
அவளை பத்திரமாக சேர்த்துவிட்டு இருவரும் மீண்டும் ஜீப்பை அவர்கள் செல்லும் வழி நோக்கி திருப்பிக் கொண்டு வந்திருந்தனர்.
"அபி, நல்லவேளை சரியான நேரத்துல நம்ம அங்க போனதுனால அந்த பொண்ணு தப்பிச்சா? இல்லையாடா?" என்றவனின் கேள்விக்கு கேலியாக இதழை சுளித்தான் அபாரஜீத்.
"இப்படியே, யாரும் யாரையும் காப்பாத்தா சரியான நேரத்துக்கு வரமாட்டாங்க. நம்மளை நம்ம தான் காப்பாத்தணும்." என்று அலட்சிய பதில் கூறினான் அபாரஜீத்.
"இந்த மாதிரி பொறுக்கீங்க இருக்கவரைக்கும் என்னடா பண்ண முடியும்? இவனுங்களை கொன்னு புதைச்சா கூட தப்பில்லை."
"பவின், நீ எதுக்கு இவ்ளோ ரியாக்ஷன் கொடுக்கற? போனோம் கண்ணு முன்னாடி நடந்ததை தடுத்தோம், அவ்வளவு தான். யாருக்கும் யாரையும் கொல்றதுக்கு உரிமையில்ல. அப்படி கொன்னா மட்டும் திருந்திடவா போறாங்க? நம்ம வேளையை பார்த்து போயிகிட்டே இருக்கணும்." என்றான் அசட்டையாக.
"அப்போ சார் ஏன் வந்து அந்த பொறுக்கீங்களை அடிச்சீங்க?" என்கின்ற கேள்விக்கு புன்னகை மட்டுமே பரிசளித்தான்.
மிக அரிதாக வெளிப்படும் புன்னகை ஒரு நண்பனாய் அவனைக் கவராமல் இல்லை. இருந்தும் அபராஜீத்தை முறைத்தவன்,
"நான் அப்படி இல்லடா... தட்டிக் கேட்பேன். வன்முறை பண்றவங்களை வன்முறையால தான் தண்டிப்பேன்." என்றான் கோபமாக.
"அது உன் ஒப்பீனியன்டா." என்று மீண்டும் அலட்சிய பதில் அளித்தவன் உறக்கத்தை தொடர்ந்திருந்தான்.
சேருமிடம் வந்ததும் ஜீப்பை நிறுத்தியிருந்தான் பவித்ரன். வண்டியை அவன் நிறுத்தவும் அபராஜீத்தும் எழுந்திருந்தான்.
ஜீப்பை விட்டு இறங்கிய பவித்ரனோ விறுவிறுவென்று அங்கிருந்த செல்ல, "ஒரு நிமிசம் பவின்." என்ற பவித்ரனோ அவனை நோக்கி நடந்து வந்தான்.
"எதுக்காக அடிச்சேனு கேட்டல்ல? அந்த பொண்ணுக்காக இல்லை. உனக்காக.. உனக்காக மட்டும் தான். உன் மேல கைவைக்க எவனுக்கும் உரிமையில்ல என்னத்தவிர" என்ற உறுதியான குரலில் கூறியவன் கடைசி வார்த்தையை மட்டும் சிறு கேலியுடன் கூறிவிட்டு செல்ல,
செல்லும் அவனை பார்த்து புன்னகைத்த பவித்ரன் அறியவில்லை, தன் உயிர் நண்பனே தன்னை தாக்கவிருக்கிறான் என்பதை. அவனிழைக்க போகும் அநீதி அவனுள்ளே பேரிடரை விளைவிக்க காத்திருந்தது.
அதுவும் ஒரு பெண்ணால்.....