வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

எவ்வம் தீர்க்கும் துகிரே - கதை திரி

Status
Not open for further replies.

அத்தியாயம் 01​

இலங்கையின் மத்திய மலைநாடு எழில் கொஞ்சும் மலைகளும் ஆங்காங்கே பச்சை கம்பளம் விரித்தது போல் தேயிலை தோட்டங்களும் மழை வெயில் பாராது உழைக்கும் தோட்டத் தொழிலாளர்களுமாக காலைப் பொழுது புலர தொடங்க, சூரியனின் ஒளிக்கதிர் அவன் மேனியில் பட்டுத் தெறிக்க, புருவத்தை சுருக்கி விரித்தப்படி எழுந்தமர்ந்த ஆடவனின் நெற்றிப்பொட்டு நேற்று உட்கொண்ட மதுபானத்தின் தாக்கத்தில் விண் விண்னென தெறிக்க,​

கடிகாரத்தை ஏறிட்டு பார்க்க அது மணி 6 .30 ஐ காட்டியது. அவனது இதழோ​

"ஓ ஷீட் கோர்ட்டுக்கு வேற போகணும் "​

என்றபடி ஆறடி உடலை அசைத்து நெளித்து எழுந்துக் கொண்டவனின் முகத்தில் பலநாள் மழிக்காத தாடி மீசை புதரென பரவிக் கிடக்க கபில நிறக் கண்களில் அத்தனை அழுத்தம் தினசரி விடமால் மேற்கொள்ளும் உடற்பயிற்சியால் முறுக்கேறி நின்ற உடல் மேலும் விறைத்து தான் போனது.​

இதயமோ வேகமாக துடிக்க மார்பை தன் கையால் ஒரு நொடி அழுத்தமாக வருடிக் கொண்டவன் குளியலறைக்குள் நுழைந்து​

குளிர் நீருக்கடியில் வெற்றுடலுடன் நின்றவன் காதுகளில் அதே குரல் மீண்டும் மீண்டும் ஒலித்தது குற்றவுணர்ச்சியும் கவலையும் போட்டிபோட​

"அத்தான் நாம டைவர்ஸ் பண்ணிக்கலாம் நீங்க பிடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிக்கோங்க "​

என்று மென்று விழுங்கியபடி அவனை பார்க்க முடியாது கூனிக்குறுகி நின்ற பெண்ணவளின் தோற்றம் அவனை பாடாய்ப்படுத்த கண்ணை திறந்து கொண்டவன் கண்களில் அத்தனை துயரம் கோடாய் அழுந்திய உதடுகளோ,​

"ஐயம் சாரி விபி ஐயம் எக்ஸ்ட்ரீமிலி சாரி "​

என்று கூற கண்களிலோ கண்ணீர் தாரைதாரையாக வழிந்தது.​

அதே சமயம் மாத்தளையில் நடுத்தர அளவிலான வீடு சுற்றியே பூந்தோட்டம், மாமரம் என அழகாக காட்சியளித்த வீட்டில் அன்று யாருடைய மனமும் மகிழ்ச்சியில் பூத்து குலுங்கவில்லை மாறாக கவலையில் கருகி வாடி போனது தான் மிச்சம்​

அவர்கள் வீட்டின் மூத்த வாரிசும் கடைசி வாரிசுமான அவர்கள் வீட்டு ஒரே பெண் திருமண பந்ததத்தை இன்றுடன் முடித்துக் கொண்டு வீட்டுக்கு வர போகிறாள் அல்லவா ?​

தனது அறையிலிருந்து இள நீல கரைக் கொண்ட வெள்ளை சாரியை நேர்த்தியாக அணிந்தவள் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பில்லை ஆனால் ஒரு வித மிடுக்குடன் கூடிய தோற்றம் அத் தோற்றத்தின் வெளிப்பாடு ஒன்று தான் நான் யாருக்கும் இனி அஞ்சப் போவதில்லை என்பது மட்டுமே,​

உள்ளத்தில் அத்தனை வெறுமை இருந்தும் அதை நேர்த்தியாக மறைத்திருக்கிறாள்., என்பதை அவளது நிர்மலமான முகம் கூறியது.​

அதிக பருமனுமல்லாத ஒடிசலுமல்லாத அழகிய வாகுடைய உடல், சந்தன நிறம் வலப்புற மூக்கில் ஒற்றை வளையம் சிவப்பு நிற உதடுகள் கருநிற கண்மணியில் ஒரு வித ஏக்கம் அழுத்தம்,​

அவளது தோற்றம் நேர்த்தியாக இருப்பதை ஆராய்ந்துக் கொண்ட பெண்ணவள் தனதறையிலிருந்து வெளியே வர,​

அவளை ஏக்கமாக பார்த்தபடி பெருமூச்செறிந்தனர் தாய் தந்தையாரான சீதாவும், வேந்தனும் அவர்களது கண்ணிலிருக்கும் சோகத்தை கண்டுக் கொண்டாலும் சலனமற்ற முகத்துடன் உணவு மேசைக்கு வந்தவளோ​

"அம்மா அப்பா வாங்க சாப்பிடலாம் " என்று குரல் கொடுக்க​

அவளருகே வந்த தாயோ "ஷணா உனக்கு வருத்தமாயில்லையாடி ? "​

என்று ஒரு வித ஆதங்கத்துடன் வினவ அவரை அழுத்தமாக பார்த்த விபீஷணாவோ,​

"அம்மா அத்தானுக்கு என்கிட்ட இருக்குற குணம் பிடிக்கலனா என்னை நான் மாத்திக்கலாம் அதே அவருக்கு இன்னொரு பொண்ணத்தான் பிடிச்சிருக்குன்னா என்ன பண்ணட்டும்மா ? "​

என்று பேசியபடியே உணவை பரிமாற சீதாவோ​

"உனக்கு பிரச்சனை அதுமட்டுமில்லன்னு என் மனசு சொல்லுதே ஷணாம்மா"​

என்றது தான் தாமதம் விபீஷணாவின் முகம் ஒரு நொடி விகாரத்தையும் கொடூரத்தையும் தத்தெடுத்தது., கைகளோ அதீத கோபத்தில் நடுங்க தொடங்கியது.​

"இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை கல்யாணம் கட்டி போன பொண்ணு ஒரு வருஷத்துல திருப்பி பாரமா வந்துட்டாளேனு எரிச்சலா இருக்கா ? இல்ல உங்க அண்ணன் பாசம் கண்ண மறைக்குதா ? இது கடைசி தடவையா இருக்கணும் நீங்க இப்டி பேசுறது "​

என்றவள் கோபத்துடன் சாப்பிடாது நீதிமன்றத்துக்கு கிளம்ப,​

'முத்துமாரியம்மா இவ வாழ்க்கைய சரி செய்து கொடும்மா '​

என்று பெற்றோர்கள் வேண்டிக் கொள்ள, தனது வீட்டிலிருந்து சற்று தொலைவிலிருக்கும் அதே முத்துமாரியம்மனின் கோயிலில்​

'அம்மா தாயே எனக்கு இன்னைக்காவது விடுதலை கிடைச்சிரணும் நான் விரும்பியபடியே லண்டனுக்கு படிக்க போயிரணும் '​

என்று அவளது வேண்டுதல் நீண்டுக் கொண்டே செல்ல அவளது மனவோட்டத்தை தடுக்கும் பொருட்டு​

" யார் பெயருக்குமா அர்ச்சனை பண்ணனும் ?"​

என்றபடி பூசகர் பூசை தட்டுடன் நிற்க அவளை பார்த்து சினேகமாக புன்னகை புரிந்தவளோ​

"வழமை போல அம்மா பெயருக்கு தான் ஐயா"​

என்றவள் அர்ச்சனையை முடித்துக் கொண்டு கோயிலை சுற்றி வரத் தொடங்கினாள்.​

என்றுமே எந்த துன்பத்திலுமே ஆறுதல் கொடுக்க கூடிய ஒரு இடமென்றால் அது முத்துமாரியம்மன் கோயில் தான் அங்கே கம்பீரமாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் அம்பாளின் முகத்தை பார்க்கும் போது அவள் மனதுக்குள்,​

'எந்த பிரச்சினையிலும் எத்தனை பிரச்சினையிலும் யாருக்காகவும் எதற்காகவும் வளைந்து கொடுக்கவே கூடாது எதற்கும் துணிந்து நிற்க வேண்டும் என் அம்மாவை போல '​

என்ற எண்ணம் மட்டுமே அவள் மனதுக்குள் விரவி படர்ந்திருக்கும்.​

கோயிலை சுற்றி முடித்த பெண்ணவளோ வசந்த மண்டபத்தினருகே கண் மூடி அமர்ந்துக்கொள்ள அவள் மன எண்ணங்கள் இறந்த காலத்தை நோக்கி பயணப்பட தொடங்கிய கணம், அவளது தோளை அழுத்தமாக தொட்டது.,​

ஒரு கரம் அது அவளுடன் பள்ளியில் பயின்ற சக மாணவி வருணிகா​

"ஹாய் விபீஷணா எப்படி இருக்க ? " என்று குதூகலமாக வினவ​

விபியோ புன்னகை முகமாக,​

" நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க?"​

என்ற குரலே அவளை அந்நியமாக நிற்க வைக்க, அவளை பார்த்து இயலாமையுடன் கூடிய புன்னகை சிந்திய வருணியோ​

"நான் நல்லா இருக்கேன் விபி "​

என்றதும் சுறுசுறுவென கோபம் தலைக்கேற​

அவளை ஏறிட்ட விபியோ,​

“என்னோட பெயர் விபீஷணா அப்டியே கூப்பிடுங்க அதுதான் உங்களுக்கும் எனக்கும் எல்லோருக்கும் நல்லது"​

என வெடுக்கென பேசியவளை பார்த்து வருணிக்கு கோபம் வரவில்லை மாறாக மனதில் வருத்தமே நிறைந்தது.​

"சாரி விபீஷணா நான் உன்கிட்ட அன்னைக்கு அப்டி பேசியிருக்க கூடாது ஒரு கோபத்துல அப்டி வாய் விட்டுட்டேன் "​

என்றவளை கண்களில் நக்கல் வழிய ஏறிட்ட விபியோ,​

"எனக்கு ஏதும் நோயிருக்குன்னு நினைச்சீங்களா ? வருணிக்கா ரோட்ல வார போற எல்லார் மீதும் கோபப்பட "​

என்றபடி எழுந்துக் கொள்ள சற்றே திகைத்த வருணியோ​

" அது அப்படியில்ல விபி நான் "​

என்று ஏதோ காரணம் கூற முற்படவளை கை நீட்டி தடுத்த பெண்ணவளோ​

"எனக்கு எந்த காரணமும் வேண்டாம் நான் கோர்ட்டுக்கு போகணும் டைம் ஆச்சு "​

என்றபடி வேகமாக நடந்து ஸ்கூட்டியை உயிர்பித்தவள் முகமோ ஏகத்துக்கும் சிவந்திருந்தது.​

அதே கோபத்துடன் நீதிமன்ற வளாகத்தில் நுழைந்தவளுடைய கோபம் கட்டுக்கு வராமலிருக்க அங்கிருந்த கல் பெஞ்சில் சாவகாசமாக​

அமர்ந்தவளருகில் ஓடி வந்த அவளது வக்கீல் நடராஜனோ,​

"பாப்பா இன்னைக்கு எப்படியும் டைவர்ஸ் கிடைச்சிரும்னு நினைக்குறேன் இன்னொரு தடவ எதுக்கும் இந்த முடிவ "​

என்று இழுத்தவரை அழுத்தமாக பார்த்தவள்,​

"இல்ல அங்கிள் இது தான் என்னோட கடைசி முடிவு எனக்கு டைவர்ஸ் கண்டிப்பா வேணும் "​

என்று முடிக்கவும் அவளை இடிப்பது போல் ஒரு கருப்பு நிற ஸ்கார்பியோன் வகை ஜீப் வந்து அவளருகே நிற்கவும் நேரம் சரியாக இருந்தது.​

அந்த ஜீப்பை ஒருவித அலட்சிய பாவத்துடன் பார்த்தவள் மார்புக்கு குறுக்காக கைக்கட்டி நிற்க அவளை அழுத்தமாக பார்த்தபடி இறங்கி கொண்டான் அவளது மாமன் மகனும் கணவனுமான சத்ரேஷ்வர்,​

மத்தியதர வர்க்கத்தினரிலும் பார்க்க சற்றே வசதி படைத்தவன் தான் மாத்தளையிலிருந்து சற்றே ஒதுக்கு புறமாக காணப்படும் நக்கிள்ஸ் பகுதியிலுள்ள தேயிலை தோட்டத்தை நிர்வாகித்துக் கொண்டிருக்கிறான்.​

அதைத் தவிர்த்து மாத்தளை பிரதேசத்தில் சில பல விவசாய நிலங்களும் உண்டு சுருக்கமாக சொன்னால் ஒரு நவீன கால விவசாயி இயற்கை மீது தீராத அன்புக் கொண்டவன் தாய் தந்தையருக்கு ஒரே மகன் தனது அக்காவுக்கு செல்ல தம்பியென எல்லா உறவுகளையும் சரியாக கையாண்டவனுக்கு​

மனைவி, காதலி என்ற உறவை மட்டும் சரியாக கையாளத் தெரியாமல் போனதன் காரணமாக மனைவியிடம் மறு வாய்ப்பு வேண்டி நிற்கும் கடமை தவறிய கணவன் இது தான் நம் நாயகனின் தற்போதைய நிலை,​

வெள்ளை நிற ஷர்ட்டும் கருப்பு நிற பேண்ட்டும் அணிந்திருந்தவனின் ஆளை அசரடிக்கும் அழகு அனைவரையும் ஒரு முறை திரும்பி பார்க்க வைக்கும் ஆனால் அதை கூட துச்சமாக மதிக்காத பெண்ணவளோ கோணல் சிரிப்புடன்​

"அத்தான் இன்னைக்கு டைவர்ஸ் கிடைச்சிரும் பிறகு என்ன உங்க லவ்வர் கூட கல்யாணம் தான்"​

என்று நக்கலாக பேசும் விபியை ஏகத்துக்கும் முறைக்க அவனது பார்வையில் நடராஜனுக்கு தான் வியர்வை ஆறாக வழிந்தது. அதையெல்லாம் சட்டை செய்யாத பெண்ணவளோ​

அவனை நேருக்கு நேராக பார்த்தபடி நிமிர்ந்து நிற்க,​

"டைவர்ஸ் தானே எப்படி கிடைக்குதுன்னு நானும் பார்க்குறேன் "​

என்றபடி சன்கிளாசை சட்டை பாக்கெட்டில் சொருகியவனை அற்பமாக பார்த்தவள்​

அடுத்த சில மணி நேரங்களிலேயே தனது வீட்டுக்குள் புயலென நுழைந்திருக்க,​

அவளை அதிசயமாக பார்த்த பெற்றோரோ​

"என்னம்மா ஆச்சு ? ஏன் இவ்ளோ கோபம் ?"​

என்று படபடப்புடன் வினவ​

"உங்க மருமகன் தான் காரணம் "​

என்று ஒருவித ஒவ்வாமை கலந்த குரலில் பெற்றோர்களிடம் பேசியபடியே உடையை ட்ராவெலிங் பேகில் அடுக்க​

அவளை பார்த்துக் கொண்டே என்னவோ ஏதோவென்று கையை பிசைந்தபடி நின்றவர்களின் கவனத்தை கலைக்கும் விதமாக​

"அத்தை ஒரு டீ ஊத்துங்க காலையிலேயே உங்க மகளால சாப்பிட கூட இல்ல "​

என்று ஷர்ட்டை முட்டி வரை மடித்தபடி ஹாலில் தோரணையாக அமர்ந்த மருமகனையும் உள்ளே உடைகளை அடுக்கும் மகளையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே நின்றிருந்த சீதாவை பார்த்த வேந்தனோ​

"நீ முதல்ல அந்த பையனுக்கும் எனக்கும் டீ எடுத்துட்டு வா நான் என்ன விஷயம்னு கேக்குறேன் "​

என்று கூறியவாறு குரலை செறுமியபடி சோபாவில் வந்தமர அவரை முந்திக்கொண்டவன்,​

"மாமா பிரச்சனை ஒண்ணுமில்ல உங்க மகளும் நானும் ஒரு 7 மாசத்துக்கு சேர்ந்து வாழணும்னு கோர்ட் முடிவு பண்ணியிருக்கு அதுக்கு பிறகு தான் உங்க பொண்ணு கேட்ட டைவர்ஸ் மிட்டாய் கொடுப்பாங்களாம் "​

என்று நக்கல் தெறிக்க கூறிய சத்ரேஷ்வரை எரிச்சல் பொங்க பார்த்த வேந்தனோ பற்களை நறநறவென கடித்தபடி,​

"என் மக வாழ்க்கையை அழிச்சது போதாதா ? மறுபடியும் ஏன் உயிர வாங்குறீங்க தம்பி ? அவ மேல படிக்க யூகே போகணும்னு சொன்னா நாங்க தான் ஒரே மக எங்க பக்கத்துலயே இருக்கணும்னு உங்களுக்கு கட்டி கொடுத்தோம் இப்போ மூணு மாசம் முன்னாடி அரை உசுரா வீட்டுக்கு வந்தா ? உங்க கிட்டயும் பேசினோம் ஒழுங்கான பதிலில்லை பரவயில்ல டைவர்ஸ் பண்ணிட்டு அவளுக்கு புடிச்ச மாதிரி வாழட்டும்னு மனச தேத்திக்கும் போது திருப்பியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறீங்க ?"​

என்று விரக்தியுடன் பேசியவரை அர்த்தமாக பார்த்தவன்​

"இந்த ஒரு தடவ மட்டும் எனக்கு வாய்ப்பு கொடுங்க ப்லீஸ் மாமா எந்த தப்பும் நடக்காது நான் உறுதியா சொல்றேன் "​

என்று உறுதியாக கூறியவனை கோபத்துடன் பார்த்தவர்​

"மறுபடியும் என் பொண்ணு கண்ணு கலங்கினா பிறகு நான் மனுஷனா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன் "​

என்று முடிக்கவும் விபீஷணா உடைகளை அடுக்கிய பையுடன் வெளியே வரவும் நேரம் சரியாக இருந்தது. அவளை அழுத்தமாக பார்த்தபடி எழுந்துக் கொண்ட சத்ரேஷ்வரோ​

"அப்போ கிளம்பலாமா ? சரி அத்தை மாமா நாங்க வாரோம் "​

என்று எழுந்துக்கொண்டவன் ஜீப்பை நோக்கி போக தனது தாய் தந்தையரை இயலாமையுடன் கலந்த விரக்தியுடன் நோக்கிய பெண்ணவள் எலும்புகள் நொறுங்குமளவுக்கு அழுத்தமாக கட்டிப்பிடிக்க அவளது முதுகை ஆறுதலாக வருடிக் கொடுத்தவர்கள்​

"கவலைப்படாத ஷணா எல்லாம் நல்லபடியா நடக்கும் தினசரி கால் பண்ணு ஏதாவது பிரச்சினைனா போன தடவை மாதிரி பார்த்துட்டு இருக்காதா உடனே கிளம்பி வந்துரு அப்பறமா என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்"​

என்று தேற்றியவர்கள் ஈஸ்வருடன் அவளை அனுப்பி வைக்க கனத்த மனதுடன் ஜீப்பில் ஏறியவள், அவனை அழுத்தமாக பார்த்து​

"எனக்கு யாரையும் காயப்படுத்த முடியாதுன்னு தெரிஞ்சிதானே என்னோடயும் என் உணர்வோடேயும் விளையாடி பார்க்குறீங்க ?"​

என்று விரக்தியுடன் வினவ அவனோ இடம் வலமாக தலையசைத்தவன்​

"இல்ல விபி அப்படியாவது கோபத்தை காட்டிறமாட்டியானு விளையாடி பார்க்கிறேன்"​

என முறுவலுடன் கூற இதற்கு மேல் உங்களுடன் போராட சக்தி இல்லை என்பது போல சீட்டில் பெண்ணவள் கண்மூடி சாய்ந்துக் கொள்ள ஆடவனோ இழந்த வாழ்க்கையை மீண்டும் வாழ போராட போகிறேன் என்ற உத்வேகத்துடன் வண்டியை கிளப்பினான்.​


தொடரும்...​

****************************************************

பல நாள் கழித்து மீண்டும் மீண்டும் நானே இப்போ தான் எக்ஸாம் எழுதிட்டு நிம்மதியா கதை எழுதலாம்னு வந்துருக்கேன் முதல்ல போட்டிக் கதையெல்லாம் முடிச்சுட்டு மத்த கதையெல்லாம் பிறகு எழுதலாம்னு ஒரு ஞானோதயம் வந்திருக்கு வாசிச்சுட்டு வழமை போல ஹீரோவா கமெண்ட் செக்ஷன்ல கழுவி ஊத்திட்டு போங்க


 

அத்தியாயம் 02​

இருக்கையில் சாய்ந்தமர்ந்தவள் அப்படியே அதீத மன அழுத்தத்தின் காரணமாக அப்படியே உறங்கி போக ஈஸ்வரோ லாவகமாக வண்டியை கையாண்டபடி மலைச்சரிவுகளையும் கொண்டையூசி வளைவுகளையும் மித வேகத்துடன் கடந்து செல்ல மனமோ இறந்த காலத்தின் பொக்கிஷமான நினைவுகளை மீட்டி பார்க்க தொடங்கியது.​

பதின்பருவத்தில் ஆரம்பத்திலிருக்கும் பதினைந்து வயதேயான சிறுமி விபிக்கும் பதினேழு வயது நிரம்பிய விடலை பையன் ஈஸ்வருக்குமான அழகிய பந்தத்துடனான நாட்கள் அப்போதிருந்த விபீஷணாவை நினைத்தவனுக்கு முகத்தில் நகை அரும்பியது.​

எண்ணெயில் குளித்த தலை கண்களில் சோடாபுட்டி கண்ணாடி பூசினாற் போல் உடல்வாகு எப்போதும் ஒருவித குதூகலத்துடன் பட்டாம்பூச்சியாய் சுற்றித்திரியும் அவளது துள்ளலென ஒவ்வொன்றும் இன்னும் அவனை விட்டு மறையாத அழகிய நினைவுகள் தான், அவனோ பதினேழு வயதே நிரம்பிய விடலை பையன் குட்டி மீசை அரும்ப, வாட்டசாட்டமான உருவமும் ஐந்தரையடி உயரமென பருவப்பெண்கள் ஆசைக்கொள்ளும் கண்ணனாக சுற்றி வர தொடங்கிய சமயம் அவனுக்கு காதலும் முளைக்க ஆரம்பித்தது.​

அதற்கு தூது புறாவாக அவளையே அறியாமல் செயற்பட்டவள் தான் அவனுடைய ஒன்று விட்ட அத்தை மகள் விபீஷணா,​

அன்று பிரத்தியேக தனியார் வகுப்புகளுக்கு விருப்பமேயில்லாமல் கிளம்பி நான்கு மணிக்கு ஆரம்பிக்கும் வகுப்புகளுக்கு மூன்று மணிக்கே அன்னநடை போட்டு கொண்டிருந்தவளை வழி மறித்த ஈஸ்வரோ,​

"ஹாய் விபி " என்க,​

விபியோ "சொல்லுங்க அத்தான் என்ன விஷயம் ? "​

என்று சுரத்தே இல்லாமல் வினவ அவளது குரல் மாற்றத்தை கண்டுகொண்ட ஈஸ்வரோ,​

"ஏன் விபி ஏதும் பிரச்னையா ? வாய்ஸ் ஏன் டல்லா இருக்கு ? " என்று உண்மையான அக்கறையுடன் வினவ ஆனால் அதையறிந்தும் பெரிதாக அதை கவனத்தில் கொள்ளாத விபியோ,​

"என்ன விஷயம் அதை மட்டும் சொல்லுங்க ? " என்றாள் சற்றே எரிச்சல் மேலிட ஆனால் அதை கண்டுக்கொள்ளாத ஈஸ்வரோ​

"முதல்ல உன் பிரச்சனையா சொல்லு பிறகு என் பிரச்சனைக்கு வரலாம் "​

என்று சொல்ல அவளோ சலித்துக்கொண்டே,​

"இன்னைக்கு டியூஷன்ல எக்ஸாம் எனக்கு இந்த மேத்ஸ்னாலே பிரச்சினை அது தான் எரிச்சலாயிருக்கு "​

என்றவளை தலையை சரித்து பார்த்து புன்முறுவல் பூத்தவன்​

"சரி தா நான் சொல்லி தாரேன்"​

என அவளிடமிருந்து புத்தகத்தை வாங்கியவன் ஒவ்வொன்றையும் பொறுமையாக சொல்லிக் கொடுக்க அதை கூர்ந்து கவனித்த பெண்ணவளோ​

"ரொம்ப தேங்க்ஸ் அத்தான் " என குதூகலமாக கூறியவள் அதே உற்சாகத்துடன்,​

"இப்போ சொல்லுங்க அத்தான் உங்களுக்கு என்ன பண்ணனும் ?"​

அவனோ சற்று நேரம் யோசிப்பது போல் பாவ்லா செய்தவன்​

"ஒன்னும் செய்ய வேணாம் நானும் உன்கூட கிளாஸ்க்கு வாரேன் "​

என்று கூறும் ஈஸ்வரை 'ங்கே' என பார்த்த விபியோ,​

"ஏன் அத்தான் ? அதெல்லாம் நானே" என்றவளிடம்​

"உனக்கு டிபி டிப்பும்,சாக்லெட் பப் பிஸ்கட்டும் வாங்கி தாரேன் நான் சொல்றபடி கேளு "​

என்றவனை குதூகலமாக ஏறிட்டவள் சரி சரியென​

தலையை அசைக்க இது தான் சந்தர்ப்பமென அவனும் அவளுடன் வகுப்புக்கு வர, அவர்களையே ஒரு சோடி கண்கள் ஒரு வித ஒவ்வாமையுடன் நோக்க அதைக் கண்டுக்கொண்ட ஈஸ்வரோ கண்களாலேயே அக் கண்களிடம் மன்னிப்பை வேண்ட அக்கண்களோ போனால் போகுதென்று மன்னிப்பு கொடுத்தது.​

இக் கூத்தையெல்லாம் காணாது போனது விபீஷணாவின் பிழையா? இல்லை விதி செய்த சதியா ? என்பது கடவுள் ஒருவர் தான் அறிவார். வகுப்பிற்குள் நுழைந்த விபியோ அதே உற்சாகத்துடன் அவளது ஆருயிர் தோழி அனிதாவின் அருகில் அமர்ந்துக் கொள்ள இருவரும் வழமைப் போலவே சிரித்து கலந்து பேசிக் கொண்டிருக்க​

அவர்களது சம்பாஷணையில் குறுக்கிட்ட அம்ரிதாவோ,​

"என்ன வெள்ள பன்னி இன்னைக்காவது படிச்சுட்டு வந்தியா ? இல்ல பிட்டு தானா ? "​

என்றவளை வெள்ளந்தியாக பார்த்து சிரித்த விபியோ​

"இன்னைக்கு முழுசா படிச்சுட்டு தான் எல்லா ஏரியாவும் மேடம்க்கு அத்துப்படி"​

என்றவளை விளையாட்டுத்தனத்துடன் வம்பிழுக்கும் பொருட்டு குறுக்கிட்ட வருணிக்காவோ​

"எப்படியும் 100 க்கு 50 க்கூட வாங்க மாட்ட அதுக்கு தானே இந்த பில்ட் அப்"​

என நக்கலாக கூற அதில் சண்டைக்கோழியாக சிலிர்த்த விபியோ​

"எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த குரு யாரு தெரியுமா? ஈஸ்வர் அத்தான் அதுனால தான் சொல்றேன் இந்த முறை 70 க்கு மேல மார்க்கு கண்டிப்பா வரும்”​

என மிதப்பில் கூற அவளையே சற்று வஞ்சத்துடன் நோக்கிய அம்ரிதாவை கண்டுக்கொண்ட அனிதாவுக்கு அடிவயிற்றில் ஒரு வித சிலிர்ப்பு தோன்ற​

"விபி வா நாம அந்த பக்கம் போய் உட்காரலாம்"​

என இழுத்துச் சென்றவள் அதனை தொடர்ந்து​

" இன்னையோட உங்க அத்தான் கதைய விடு நான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லிருக்கேன் உங்க அத்தானோட பார்வையா இருக்கட்டும் அந்த அம்ரிதாவோட பார்வையா இருக்கட்டும் எதுவுமே சரியா இல்ல நீ அவங்க கிட்ட கவனமாவே இரு "​

என்று தீவிரமாக சொல்ல அதையெல்லாம் பெரிதாக கவனிக்காத பெண்ணவளோ பரீட்சையை முடித்துக் கொண்டு ஆரூயிர் தோழி அனிதாவுடன் வீட்டுக்கு கிளம்ப, இங்கே அம்ரிதாவோ ஈஸ்வருடன் ஒற்றையடி பாதையில் நடந்தபடி,​

"இங்கே பாருங்க ஈஸ்வர் அவ உங்க கூட பேசுறது எனக்கு சுத்தமா பிடிக்கல கத்திரிக்காய்க்கு கைகால் முளைச்ச மாதிரி அதோட சோடாபுட்டி கண்ணாடியும் "​

என திட்ட அதை கேட்டு வாய்விட்டு சிரித்த ஈஸ்வரோ,​

"என் மேல பொசெசிவ் ஆகுதா என்ன ? "​

என கண் சிமிட்டி கேட்க, அவனது தோளில் இரண்டு அடி அடித்த பெண்ணவளோ​

"இல்ல அந்த மாதிரி ஒரு மக்குக் கூட சேர்ந்து சுத்துறியேனு கோபம் வருது"​

என்றவளை அர்த்தமாக பார்த்தவன் அவளது உயரத்துக்கு குனிந்து​

"மக்கு அது தான் நமக்கு பிளஸ்சே அறிவாளியா இருந்தா வீட்ல போட்டு கொடுத்துறமாட்டா ? "​

என்றபடி இருவரும் வீட்டை நோக்கி நடக்கவும் நிகழ்காலத்தில் விபீஷணாவின் தொலைப்பேசி இசைக்கவும் நேரம் சரியாக இருந்தது.​

கனவிலிருந்து சட்டென விழித்துக் கொண்டவள் ஒரு கணம் பக்கத்திலிருந்து வண்டியை செலுத்திக் கொண்டிருந்த ஈஸ்வரை உற்று நோக்கி விட்டு அழைப்பையேற்றவள் முகத்தில் பழைய தெளிவும் குதூகலமும் தோன்ற அதை ஒரு நிமிடம் ஆச்சரியத்துடன் உற்று நோக்கினான் ஆடவன்,​

"ஹலோ அனி எப்படி போச்சு இன்னைக்கு வர்க்கெல்லாம் ?"​

என்று துள்ளலுடன் வினவ ஈஸ்வரின் உதடுகளோ​

"சூனியக்காரி " என்றது கடுமையான முகபாவத்துடன்​

அனிதாவோ,​

"எல்லாம் நல்லா போச்சு இப்போ தான் ஆண்ட்டி கால் பண்ணாங்க கோர்ட்ல அந்த காட்டானோட உன்ன 7 மாசத்துக்கு வாழ சொல்லிட்டாங்களாமே ? என்னடி இதெல்லாம் ? "​

என்று ஒவ்வாமை கலந்த வெறுப்புடன் வினவ விபீஷணாவோ,​

"நாளைக்கு வேலைக்கு வரும் போது எல்லாம் விளாவாரியா சொல்றேன்டி நாளைக்கு எனக்கும் உன்கிட்ட அப்பாயிமென்ட் இருக்குன்னு நினைக்குறேன் "​

என்றதும் அனிதாவோ,​

"அட ஆமாம்டி நானும் அதை நினைவுபடுத்த தான் போன் எடுத்தேன் நாளைக்கு எல்லா விஷயத்தையும் என்கிட்ட சொல்லணும் பை, டேக் கேர் டி "​

என்று அழைப்பை துண்டிக்க, அது வரை காத்திருந்த ஈஸ்வரோ,​

"அரண்மனைக்கு வந்து விட்டோம் மகாராணியாரே தாங்களே இறங்குகிறீர்களா ? இல்லை மென்பாதம் நோகாமல் தங்களை என் கைகளால் தாங்கி செல்லட்டுமா ?"​

என்று நாடக பாணியில் வினவியவனை ஒரு வித நக்கலுடன் நோக்கிய பெண்ணவளோ சுற்றும் முற்றும் கண்களை ஓட்டியபடி எதையோ தேட,​

அதில் சற்றே கடுப்பானவன்,​

"என்ன தேடுற ?" என்க,​

அவளோ ஆச்சரியத்துடன்​

"மகாராணின்னு சொன்னீங்க அது தான் உங்க லவ்வர் ஏதும் இருக்காங்களான்னு தேடினேன் நான் தான் உங்க வீட்டு சம்பளமில்லா வேலைக்காரியாச்சே "​

என்றதில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அவளை உறுத்தவன் நேராக அமர்ந்து ஸ்டேரிங்கை அழுத்தமாக பிடித்தபடி,​

"விபி நீ என்மேல கோபமாயிருக்க புரியுது அதுக்கு உன்னையே நீ தாழ்த்தி பேசாத எனக்கு அது பிடிக்கல இந்த 7 மாசத்துக்குள்ள எப்படியாவது நம்ம வாழ்க்கைய சரிபண்ண ட்ரை பண்றேன் "​

என்று கூறிக் கொண்டே பக்கவாட்டில் திரும்பி பார்க்க அவன் கூற வரும் விடயங்களை காது கொடுத்து கேளாத பெண்ணவளோ தனது பயணப் பொதியையும் வீட்டு சாவியையும் எடுத்தபடி வீட்டிற்குள் நுழைந்திருந்தாள்​

அன்று அவள் பேச அவன் கேட்காது போனான். இன்று அவன் பேச தொடங்கிய விடயத்தை கூட அவள் பொருட்டாக மதிக்காமல் போனாள்.​

பல நாட்கள் கழித்து அவன் வீட்டினுள் காலடியெடுத்து வைக்கிறாள். அவள் கண்களையோட்டி பார்த்த திக்கு திசையெல்லாம் அவளது கண்ணீரும் கவலையும் மாத்திரமே நிறைந்திருந்தது.​

பழைய நினைவலைகளின் தாக்கத்தில் நெற்றியின் ஒரு புறம் மாத்திரம் தாங்க முடியாது வலிக்க, கண்கள் கண்ணீரில் நனைந்து தான் போனது. சமநிலையற்று தரையில் விழப்போனவளை ஒரு கரம் அழுத்தமாக தாங்கி பிடிக்க,​

அந்த கரத்தின் உரிமையாளனை அறிந்து கொண்ட பெண்ணவளோ தனது மொத்த பலத்தையும் திரட்டி அவன் கையிலிருந்து விடுபட துடிக்க,​

அவளது முயற்சியை கண்டு ஒரு கணம் கோபம் கொண்டவனோ,​

"அது தான் முடியலையே அப்பறம் எதுக்கு இந்த தடுமாற்றம் ?"​

என்ற சமயம் விரக்தியாக புன்னகை புரிந்தவளோ​

"இங்கே முடியலன்னு சொன்னதும் என்ன தாங்கி பிடிக்க யாருமில்ல என்ன நான் தான் பார்த்துக்கணும்ங்குறத ஒன்றரை வருட வாழ்க்கை எனக்கு காட்டிக்கொடுத்துருச்சு மிஸ்டர் ஈஸ்வர் நீங்க தாங்கிப்பிடிச்சு நிறுத்த வேண்டியது என்ன இல்ல உங்க காதலிய தான் "​

என்று முடிக்க ஈஸ்வரின் கையும் அவளை விட்டு தாமாக விலகி இருந்தது.​

ஆழ்ந்த மூச்சையெடுத்து தன்னை சமன் செய்துக் கொண்டவன் மனதுக்குள்​

'அவள கொஞ்சம் கொஞ்சமா தான் மாற்ற முடியும் காம் டவுன் ஈஸ்வர் '​

என தனக்கு தானே சொல்லிக் கொண்டவன்​

"வா மேல நம்ம ரூம்க்கு போகலாம் " அவள் கையை பிடிக்க,​

அவனது கையிலிருந்து தன் கையை உருவிக் கொண்டவள்​

"எனக்கு நிம்மதியா தூங்கணும் அதுக்கு உங்க ரூம் சரிப்பட்டு வராது தனி ரூம் தான் வேணும் "​

என்று அழுத்தமாக கூற அவளது நடவடிக்கையில் ஈஸ்வருக்கு புரிந்த ஒரே ஒரு விடயம் அவன் நினைக்கும் மாற்றங்கள் எதுவும் சுலபத்தில் நிகழாது என்பது தான்​

உறுதியான குரலில்,​

"இங்கேபாரு விபி நான் ஒன்னும் உன்மேல பாய்ஞ்சிரமட்டேன் வா"​

என்று கையை பிடித்து அழைத்து செல்ல விபீஷணாவோ,​

"நான் தூக்கத்துல புலம்புவேன் சிலநேரம் ட்ரெஸ்ஸெல்லாம் கூட விலகிரும் உங்களுக்கு தான் கஷ்டம் அத்தான் நான் ஒரு 7 மாசம் வேற ரூம்ல இருந்துக்கிறேன் ப்ளீஸ் "​

என்றவளின் குரலிலிருந்த சோர்வே அவள் ஏதோவொரு விடயத்தில் சிக்கி தவிக்கிறாள் என்பதை சொல்லாமல் சொல்ல ஈஸ்வரோ,​

"அதை நான் பார்த்துக்கிறேன் இனி என் கூட என் ரூம்ல தான் நீ தங்கணும் வா "​

என்று சற்றே குரலை உயர்திக் கூற அக்குரலிலிருந்த கண்டிப்பில் அவன் போக்கிற்கு கட்டுப்பட்டு அவளும் சரியென தலையசைக்க அவனோ முதலாவது வெற்றியில் பூரித்து தான் போனான்.​

அவளுக்கோ உள்ளூர நடுக்கம் தான் தோன்றியது. திருமணம் புரிந்து ஒன்றரை வருடத்தில் அவனது அறைப்பக்கம் தலைவைத்துக் கூட அவள் படுத்ததில்லை அவனும் அவளை அவனது அறைக்குள் அனுமதித்ததில்லை.​

அவள் எதிர்ப்படும் சமயங்களில் மாத்திரம் குத்தி கிழிப்பவன் மற்றைய சமயங்களில் இருக்கிறாளா ? இல்லையா ? என்று கூட கண்டுக்கொள்ளமாட்டான். அப்படிப்பட்டவன் இன்று தனதறையில் தங்கும்படி அழைக்க அவளுக்கோ,​

மனதுக்குள் பல போராட்டம் குறிப்பாக தனது நண்பிகள் கேலி செய்தது போல் இவனும் தன்னை கேலி கிண்டலுக்கு ஆளாக்கி விடுவானோ ? மோசமாக பேசி விடுவானோ ? என்று மட்டும் தான் தோன்றியதே தவிர வேறு எந்த பயமும் அவளுக்கில்லை. என்பது தான் நிதர்சனமான உண்மை​

தொடரும்....​

**********************************************************************
வணக்கம் மக்களே மீண்டும் மீண்டும் நானே
அடுத்த எபிசொட் போட்டாச்சு வாசிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க
 
Last edited:

அத்தியாயம் 03​

தன்னிலை மறந்து அசந்து தூங்கிய ஈஸ்வருக்கு விழிப்பு தட்டியது என்னவோ அதிகாலை ஆறு மணிக்குத்தான் துடித்து பிடித்து எழுந்துக் கொண்டவன் தன்பார்வையால் அறையை துளாவ, அறையிலும் சரி வீட்டிலும் சரி விபீஷணா இருப்பதற்கான எந்தவொரு சாத்தியக்கூறும் தென்படவில்லை. மனமோ,​

'இந்த பனி குளிர்ல அப்படி எங்கே தான் போயிருப்பா ? குளிர் வேற அவளுக்கு அவ்வளவா ஒத்துக்காதே ?'​

என்று பதற துரிதமாக செயற்பட்டவன் அவள் அழைப்பேசிக்கு அழைப்பையேற்படுத்த,​

அழைப்பேசியின் தொடுதிரையை வெறித்தபடி அனிதாவின் வீட்டில் அமர்ந்திருந்தாள் விபீஷணா, தூக்க பற்றாக்குறையாலோ அல்லது அதீத மனவழுத்தத்தின் வெளிப்பாட்டினாலோ அவளது கண்கள் ரத்தமென சிவந்திருக்க தொடுதிரையில் தோன்றிய பெயரை கண்டவளுக்கு கோபத்தின் உச்சத்தில் உடலும் சிவக்கத் தொடங்கியது.​

அதை தேநீர் வார்த்தபடியே அவதானித்த அனிதாவோ, கையிலிருந்த பொருட்களை அப்படியே சமையலறை மேடையில் வைத்து விட்டு விபியை இறுக அணைத்து தட்டி கொடுத்துக் கொண்டே,​

"காம் டவுன் விபி யூ கேன் ப்ளீஸ் காம் டவுன்"​

என சமாதானப்படுத்த விபிக்கோ கோபத்தில் மேலும் மேலும் உடல் நடுங்கியதே தவிர குறைந்தபாடில்லை. அவளது கண்கள் தொடுதிரையை மட்டுமே வெறிக்க கோபமோ கட்டுக்குள் வர மறுத்தது. என்பது தான் நிதர்சனமான உண்மை,​

வீட்டிலிருந்த ஈஸ்வரோ அவளது நிலைமை தெரியாது மீண்டும் மீண்டும் அவளது அழைப்பேசிக்கு அழைப்பையேற்படுத்திக் கொண்டேயிருக்க, ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த விபியோ,​

அழைப்பேசியை தூக்கி தரையில் அடித்திருந்தாள். அதனை தொடர்ந்தும் கோபம் கட்டுக்குள் வர மறுக்க​

"ஆ.. ஆஅ.." என அடிக்குரலில் கத்தியபடியே மயங்கி சரிந்தவள் உடல் காய்ச்சலில் கொதிக்க உடலோ தூக்கிப்போடத் தொடங்கியது.​

அனிதா ஒரு மருத்துவராக அவளுக்கு தேவையான முதலுதவிகளை வழங்கிவிட்டு முதலில் அழைத்தது என்னவோ ஈஸ்வருக்கு தான்​

"மிஸ்டர் சத்ரேஸ்வர் நான் உங்கள இப்போவே பார்க்கணும் உடனே கிளம்பி என் வீட்டுக்கு வாங்க "​

என அழைப்பை துண்டிக்க போனவளை அவசரமாக இடைமறித்தவன் குரலோ,​

"விபி அங்கதான் இருக்காளா ? பத்திரமா இருக்காத்தானே ?"​

என பதற்றத்துடன் வினவ அனியோ அதிருப்தியான குரலில்​

"ம்ம்" என கூறி அழைப்பை துண்டித்து விட்டு விபீஷணாவின் கையை பற்றியபடி அமர்ந்த அனிதாவுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னால் தன்னிடம் வந்த விபியின் ஞாபகம் மனதில் விரிசலிட்ட கண்ணாடியாக விரிந்தது.​

அன்றும் வழமைபோல வைத்தியசாலையில் தனது வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்த அனிதாவுக்கு மனம் ஏனோ படபடவென அடித்துக் கொண்டது.​

இருந்தும் தன்னை சமன்படுத்தியபடி வீட்டை திறக்க முற்பட்டவளின் அழைப்பேசிக்கு சீதாவிடமிருந்து அழைப்பு வர அதையேற்றவளுக்கு அப்பக்கம் என்ன கூறப்பட்டதோ அடுத்தநொடியே வைத்தியசாலைக்கு கிளம்பியிருந்தாள்.​

அங்கு அவளை வரவேற்றதென்னவோ வாழ்க்கையே முடிந்ததென இடிந்து அமர்ந்திருந்த சீதாவும் வேந்தனும் தான் அவர்களை நோக்கி விரைந்த அனிதாவோ,​

"அங்கிள் விபிக்கு என்னாச்சு ?" என்று உலுக்க,​

அவரோ,​

"மோசம் போய்ட்டேன்மா ஒத்த பொண்ணுன்னு பாசத்த கொட்டி வளர்த்து அவள எங்க கூட வச்சிக்கணும்னு ஆசைப்பட்டு நானே என் பொண்ணுக்கு சவக்குழி தோண்டிட்டேன்மா "​

என்று தலையிலடித்துக் கொண்டு அழ சீதாவோ,​

"அப்போவே படிக்க போறேன்னு சொன்னா நாங்க கேட்கல அத்தானுக்கு என்ன பிடிக்கல கல்யாணம் வேணாம்னு சொன்னா அதையும் கேட்கல​

அண்ணன் மகன் தானே நல்லா பார்த்துக்குவான்னு கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிவச்சு எங்க மகளுக்கு தீராத வியாதி வந்தது தான் மிச்சம் "​

என்று கதறிக் கொண்டிருக்க இவர்களது நடவடிக்கை கண்டு ஆத்திரம் மேலிட்டதே தவிர எந்தவொரு பரிதாபமும் பாவமும் அவர்கள் மேல் வரவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை, இருந்தும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு​

ஒருவித இறுகிய குரலில்,​

"இப்போ என்ன ஆச்சுன்னு ? சொல்லறீங்களா இல்லையா ? " என வினவ ,​

"அவளுக்கு பிவேர் அதிகமாகி பிட் வந்துருச்சுமா" என கலக்கமாக கூற​

"எப்போ வீட்டுக்கு வந்தா ? எப்போலாயிருந்து பிவேர் ? " என்று மீண்டும் இறுகிய குரலிலேயே அனி வினவ,​

அவர்களோ, "எத்தனை மணிக்கு வந்தான்னு தெரிலமா காலையில வீட்டு வாசல்ல மயங்கி கிடந்தா ஜூரம்னு தெரிஞ்சதும் ஹாஸ்ப்பிட்டலுக்கு கூட்டிட்டு வந்துட்டோம் "​

என கலங்கியபடியே கூற, அனிதாவுக்கு ஆத்திரம் தான் வந்தது இருந்தும் ஒரு மனநல மருத்துவராக பணிபுரிபவளுக்கு பொறுமை மிக அவசியமல்லவா அதனால் பொறுமையை இழுத்து பிடித்தபடி,​

"மிஸ்டர் ஈஸ்வருக்கு இதெல்லாம் தெரியுமா ?"​

என்று எரிச்சலாகவே வினவ​

"அவருக்கு கால் பண்ணோம் உங்க மக வந்துட்டா தானே அங்கேயே வச்சுக்கோங்க திருப்பி மட்டும் அனுப்பிறாதீங்கன்னு விட்டேத்தியா பேசுறாருமா "​

என்று கதற​

அனிதாவோ கோபம் உச்சிக்கேற, "வில் யூ ப்ளீஸ் ஸ்டாப் இட் இந்த நாடகத்த கொஞ்சம் நிப்பாட்டுறீங்களா ? "​

என கத்தியேவிட்டாள்.​

அவள் கண்களில் அத்தனை கோபம், அத்தனை ஆற்றாமை தன் ஆருயிர் தோழியை சில்லு சில்லாக நொறுக்கி விட்டார்களே என்ற வேதனையில் உழன்றுக் கொண்டிருக்க,​

அவளை நிகழ்காலத்திற்கு மீட்டு வந்தது வீட்டின் அழைப்பு மணியோசை இறந்த காலத்தை நினைத்தவளுக்கு நிகழ்காலத்திலும் அதன் விளைவாக கண்களில் கண்ணீர் வழிந்தது. கண்ணீரை துடைத்துக் கொண்டே கதவை திறந்தவள்,​

ஈஸ்வரின் முகத்தை கூட பாராது,​

"தயவு செஞ்சு அவளை விட்டு போய்டுங்க ஈஸ்வர் அவளுக்கு நல்ல பியூச்சர் இருக்கு ஆனா அதுல நீங்க இல்லாம இருந்தா இன்னும் நல்லாயிருக்கும்னு எனக்கு தோணுது"​

என்று வெறுப்புடன் கூற அவனோ, "அத நீங்க சொல்லாதீங்க என் வைப் சொல்லட்டும் " என்றது தான் தாமதம்​

நக்கல் கலந்த வெறுப்புடன் அவனை ஏறிட்ட அனிதாவோ​

"ஓஹ் வைப் அப்டினா பொண்டாட்டி தானே அந்த நியாபகம் உங்களுக்கு இருக்கா என்ன ? பொண்டாட்டிய தான் வீட்ட விட்டு நடுராத்திரில துரத்துவங்களோ ?"​

அவனோ இறுகிய குரலில், "இந்தமுறை நான் துரத்தல"​

என்றானே பார்க்கலாம் அனிதாவின் கரம் அவனை நோக்கி நீண்டிருக்க அதே சமயம் அவளது கையை அழுத்தமாக பற்றிய ஈஸ்வரோ,​

"என்ன அடிக்கவோ இல்ல என்னைய அவ வாழ்க்கையை விட்டு போக சொல்லவோ அவ ஒருத்திக்கு மட்டும் தான் உரிமையிருக்கு அது உன் பிரென்ட் என் பொண்டாட்டி அவளுக்கு மட்டும் தான், எல்லா சமயமும் ஒரே மாதிரி இருக்காது சூனியக்காரி "​

என கடுமையாகவே எச்சரிக்க அனிதாவும் சற்று பயந்து தான் போனாள் இருந்தும் தையரியத்தை வரவழைத்தபடி,​

"அப்போ போனமுறை நீங்க தான் அவள துரத்திவிட்டீங்க அப்படித்தானே?"​

அவனும் கண்ணை மூடி திறந்து, ஆம் என்பது போல் தலையசைக்க​

"இப்போ ஏன் தீடிர்னு வந்து அவ தான் வேணும்னு நிக்கிறீங்க? இப்பயும் சொல்றேன் உங்களுக்கு சரியான ஜோடி அம்ரிதா தான் என் பிரெண்டுக்கு டிவோர்ஸ கொடுத்துருங்க அவ வாழ்க்கையை அவ வாழட்டும் "​

அவனோ நக்கலாக,​

"கவுன்ஸ்லிங் கொடுத்து கொடுத்து நீ பைத்தியமாகிட்டியா என்ன ? 7 மாசம் அதாவது 7 மன்த்ஸ் என்கூட உன் பிரென்ட்ட சேர்ந்து வாழ சொல்லி கோர்ட்டே ஆர்டர் போட்ருக்கு "​

என கூற, அனிதாவோ விடாப்பிடியாக "அதை நான் பார்த்துக்கிறேன் ஒரு டாக்டரா எனக்கு என் பேஷண்ட் மேலயும் ஒரு பிரெண்டா விபியோட ஹெல்த் மேலயும் எனக்கு அக்கறை இருக்கனால தான் சொல்றேன் தயவு செஞ்சு கிளம்புங்க "​

என்று தலைக்கு மேல் கைகூப்பிட, வாசல் நிலையில் ஸ்டைலாக சாய்ந்து நின்றபடி அவளை சொடக்கிட்டு அழைத்தவன்​

"உன்ன விட அவ மேல எனக்கு அக்கறையிருக்கு என்ன விட்டு அவ தனியா போய்ட்டா அவளுக்குள்ள பிரச்சனை சரியாகிருமா ? இல்ல அவள விட்டுட்டு போறதுக்காக தான் கோர்ட்ல 7 மாசம் டைம் கேட்டேனா?"​

அதைக் கேட்ட அனிதாவுக்கு சுர்ரென்று கோபம் வர​

"அதுக்கான மெடிகேஷனை " என்று தொடங்க நிறுத்து என்பது போல் பாவனை செய்தவன்​

"நீ எனக்கு தர வேண்டியது அவளோட மெடிக்கல் ஹிஸ்டரிய இப்போ அவ எப்படி இருக்காங்குற அப்டேட்ட எனக்கு நம்பிக்கையிருக்கு இந்த 7 மாசத்தோட முடிவுல அவகிட்ட முழுசா மாற்ற முடியும் நான் செஞ்ச தப்ப நானே சரி பண்ணுறேன் ஏன் அவ வாயாலேயே நீதான் எனக்கு வேணும்னு சொல்ல வைப்பேன் "​

என்றவனிடம் இருந்த தீவிரத்தை கண்டவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது அதாவது என்ன பேசினாலும் இந்த 7 மாத கெடுவை சாத்ரேஸ்வர் விட்டுக்கொடுக்க மாட்டான்.​

இந்த 7 மாத கெடுவில் நண்பியின் வாழ்க்கை சீர்ப்பட்டால் நல்லது தான் ஆனால் அதுவே இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டால் என்ன செய்வது என்று யோசித்தவள் மீண்டும் ஒரு முறை முயற்சித்து பார்க்கலாம் என எண்ணியவாளோ,​

"மிஸ்டர் ஈஸ்வர் அவளுக்கு உங்க கூட ஒரே ரூம்ல ஸ்டே பண்ண முடியலன்னு சொல்லியும் அவளை உங்ககூட தங்க வச்சுக்கிட்டிங்க அதன் விளைவு தான் இது "​

என்று சற்று கடுமையான குரலில் கூறியவள் காய்ச்சலில் முனகியபடி படுத்திருந்த விபியை காட்ட ஒரு நிமிடம் ஈஸ்வரின் கண்கள் கலங்கி தான் போனது இருந்தும் அதை காட்டிக் கொள்ளாது வதங்கிய கொடி போல் தளர்ந்து கிடக்கும் தன்னவளை வெறிக்க,​

அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அனிதாவோ,​

"ஈஸ்வர் அவ ஒரு பேஷண்ட் அவளுக்கு நல்ல தூக்கம் தேவை அது அவ பயப்படுற இடத்துல கிடைக்காது அதனால அவளுக்கு ஸ்பெஸ் கொடுத்து விலகி இருக்குறது தான் நல்லது உங்களுக்கு புரியும்னு நினைக்குறேன் "​

என்று சற்றே கடுமையான தொனியில் கூற மீண்டும் அவளை நக்கலாக பார்த்த ஈஸ்வரோ,​

"ஏன் சூனியக்காரி நீ திருந்தவே மாட்டியா ? எப்போ பாரு என்னையும் அவளையும் பிரிக்க பார்க்குறது தான் உன் வேலையா ? "​

என்றவாறே மருந்தின் வீரியத்தில் உறங்கிக் கொண்டிருந்த மனைவியையும் கைகளில் அள்ளிக் கொண்டான். அதே சமயம் அனிதாவிடம் திரும்பி​

"இங்கே பாரு அனிதா உன் பிரென்ட் மேல உனக்கிருக்க அக்கறை எனக்கு புரியாமலில்ல அதுக்குன்னு என்கிட்ட ஒரண்டை இழுக்குற வேலை வச்சிக்காத அது உனக்கே ஆபத்துல முடியலாம் அடுத்து முக்கியமான விஷயம் என் பொண்டாட்டி ஒன்னும் பேஷண்ட் இல்ல அவள பேஷண்ட்னு சொல்றது இதுவே கடைசியா இருக்கணும் புரியும்னு நினைக்குறேன் "​

என்று மிரட்டும் குரலில் கூறியவன் விறுவிறுவென வீட்டுக்கு கிளம்பி விட்டான்.​

அனிதாவுக்கோ இவனை நம்பலாமா வேண்டாமா என்ற மனநிலை, சத்ரேஸ்வருக்கு விபீஷணாவை காதலிக்க வைக்க வேண்டும் தன்னை நம்ப வைத்தே தீர வேண்டுமென்ற மனநிலை, விபீஷணாவுக்கோ பட்டவரை போதும் இனியாவது சந்தோஷமாக​

வாழாவிடினும் நிம்மதியாக வாழ வேண்டுமென்ற மனநிலை, யாருடைய மனநிலைக்கு சக்தி அதிகமென்பதை கதையின் போக்கில் அறிந்துக் கொள்வோம்.​



தொடரும்...​

****************************************************************

ஹாய் மக்களே அடுத்த எபி போட்டாச்சு லேட்டானதுக்கு மன்னிக்கவும் வாசிச்சுட்டு நிறை குறைகளை சொல்லிட்டு போங்க & குட் நைட்

 
Status
Not open for further replies.
Top