அத்தியாயம் 4
மான்சி மெடிக்கல் ரிப்போர்ட் முழுவதையும் படித்து முடித்த விஜித் முகம் உணர்வுகள் எதையும் வெளிக்காட்டவில்லை. சலனமின்றி இருந்தவனின் முகத்தில் இருந்து எதையும் கண்டுக் கொள்ள முடியாது ரவி தான் குழம்பிப் போனான்.
"போலீஸ் எப்படி அங்க வந்தாங்க?" என்று விஜித் கேட்க,
"ஏ.சி.பி சரவணன் திலகன் சாரோட பெஸ்ட் ப்ரெண்ட். அவ்வளவு ப்ரொடக்ஷனையும் தாண்டி அவார்ட் ஃபங்ஷன்ல மான்சி காணாம போனதால நேரடியா உங்கள பத்தி தான் விசாரிச்சிருக்கார்." என்று ரவி கூற, விஜித் புருவங்கள் கேள்வியாக உயர்ந்தது.
"நீங்க என்ன தான் வெளிப்படையா சினி ஃபீல்ட்ல இன்வால்வ் ஆகலன்னாலும் உங்கள பத்தி அவருக்கு தெரிஞ்சிருக்கு. அண்ட் அவரு அன்அஃபீஷியலா அந்த பக்கம் மான்சிய தேட அனுப்பி வைச்ச போலீஸ் ஜீப் அது. அதுல வந்த எஸ்.ஐ அந்தளவு விவரம் இல்ல. அதனால தான் உங்கள உங்க கார் பத்தி எதுவும் விவரமா ஏ.சி.பி கிட்ட சொல்லல." என்று ரவி கூறியதும் விஜித் புலன்கள் சரவணனை நினைத்து இன்னும் கூர்மையானது.
விரைவில் அவர் தன்னை நெருங்கி விட கூடும் என்பது அவனுக்கு தெளிவாக புரிந்தது. ஆனால் அதற்கு முன் மான்சியை அவன் நெருங்க நினைத்தான்.
"### படத்தில மெலோடி பாட்டுக்கு மான்சிய புக் பண்ணிடு." என்று விஜித் கூற,
"சார் அது கிட்டத்தட்ட ஐநூறு கோடி செலவுல எடுக்கிற ஹிஸ்டாரிக்கல் மூவி. அதுல வொர்க் பண்ற எல்லாருக்கும் எக்ஸ்பீரியன்ஸ் அதிகம் இருக்கணும்னு சொன்னதால பெஸ்ட் சிங்கர் ### புக் பண்ணிருக்கிறோம்." என்று ரவி கூற,
"சொன்னத மட்டும் செய் ரவி. மான்சி பாடினாலும் நல்லா தான் இருக்கும். அவளோட கடைசி பாட்டு என் படத்தில பாடினதா இருக்கட்டுமே." என்று வில்லத்தனமாக கூறி சிரிக்க, ரவியால் தலையாட்ட மட்டுமே முடிந்தது.
ரவி வெளியேறியதும் விஜித் கைகள் புத்தகத்தை எடுத்து அதில் "Once may smile, and smile and be a villain" என்ற சேக்ஸ்பியரின் வரிகளின் கீழ் அடிக் கோடிட்டது.
"முறைச்சு பார்த்து அடிக்கிறத விட சிரிச்சிக்கிட்டே அடிச்சா நிச்சயம் ரொம்ப வலிக்கும் ஏந்திழையாள். அன்னைக்கு அவார்ட் வாங்கும் போது என்ன சொன்ன 'என் கூடவே எல்லா நேரமும் இருக்கிற என் அம்மா, அப்பா அப்புறம் பாட்டு. இதை தவிர வேற எதுவும் எனக்கு பிடிக்காது. இந்த மூனும் இல்லாம என்னால மூச்சு கூட விட முடியாதுன்னு'
சோ முடிவு பண்ணிட்டேன் உனக்கு பிடிச்சத பறிச்சிட்டா உனக்கு மூச்சு கொடுத்தவங்களுக்கும் மூச்சு அதுவா நின்னுடும். கொஞ்சம் கொஞ்சமா நீங்க கஷ்டப்படுறத பாத்தா கூட எனக்கும் சந்தோஷமா தான் இருக்கும்." என்று கூறி சிரித்துக் கொண்டான்.
________________________________________
"அப்பா நீங்களாவது அம்மா கிட்ட சொல்லுங்க. என்னால அங்க பாட போக முடியாது." என்று மான்சி தந்தையிடம் செல்லம் கொஞ்ச, அவருக்கு மகள் பயம் புரிந்தாலும் அவள் கூறுவதை ஏற்க முடியவில்லை.
யாருக்காகவோ பயந்து தன் மகளின் திறமையை முடக்கி வைப்பதில் வெண்பா, திலகன் இருவருக்கும் விருப்பம் இல்லை.
"மான்சி நீ பாடுற அவ்வளவு தான். இதுக்கு மேல ஆர்கியூ பண்ணாத. அம்மா வேலைய ரிசைன் பண்ண போறேன். இனி நீ எங்க போனாலும் உன் கூடவே இருப்பேன். அண்ட் வெளியூர் போக வேண்டியது இருந்தா அப்பாவும் நம்ம கூட வருவாங்க. அப்புறம் சரவணன் அண்ணா உனக்கு செக்யூரிட்டி காட்ஸ் கூட அரேஞ் பண்ணிட்டாரு." என்று வெண்பா கூற, மான்சிக்கு மனதே சரியில்லை.
தாய்க்கு ஆசிரியர் பணி எவ்வளவு பிடிக்கும் என்பதை உடனிருந்து பார்த்தவள் ஆயிற்றே. தனக்காக தாயின் கனவு கலைவதை அவளால் ஏற்க முடியவில்லை. தான் நினைத்ததை மான்சி அப்படியே கூற, வெண்பா சிரித்துக் கொண்டார்.
"மான் குட்டி அம்மா இருபது வருசம் எனக்கு பிடிச்ச வேலைய மன நிறைவோட செய்திட்டேன். எனக்கு அது போதும். இனி நான் என் பொண்ணுக்கு முழு நேர டீச்சரா மாற போறேன்." என்று வெண்பா கூறும் போது அவர் முகத்தில் வலி தெரிகின்றதா என்று மகள் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மகளின் எண்ணவோட்டத்தை புரிந்துக் கொண்டவர் "மான்சி நீ தான் என் ஒட்டு மொத்த சந்தோசம். சோ உனக்காக நான் எது வேணும்னாலும் செய்வேன்.'' என்றவர் வார்த்தையில் சிறிதும் பொய்யில்லை.
அடுத்து வந்த நாட்களில் மான்சி விஜித் நிறுவனம் முதல் முறை நேரடியாக தயாரிக்க போகும் படத்தில் பாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாள்.
சரித்திர படம் என்பதால் பாடல்களின் வார்த்தைகள் கண்ணியமாகவே இருக்க பாடுவதில் அவளுக்கு சிரமம் எதுவும் இருக்கவில்லை. முதல் நாள் அவள் பாடும் போது தவறும் இடத்தில் கூட இசையமைப்பாளர் மிக பொறுமையுடனே சொல்லி கொடுத்தார்.
முந்தைய படங்களில் பாடியது போல் அல்லாமல் இப்படத்தில் முதல் பாடலை முழு மன நிறைவுடனே பாடி முடித்தாள். பாடி முடித்து கிளம்பும் நேரம் ஓடி வந்த ஒருவர்
"ஒரு நிமிசம் எல்லாரும் இருங்க. நம்ம படத்தோட புரோடியூசர் வரார்." என்று கூற, அனைவரும் அவர்கள் இடம் விட்டு நகரவில்லை.
தன் பாதுகாவலர்கள் நடுவே கம்பீரமாக நடந்து வந்த விஜித் ஏகலைவனை பார்த்ததும் மான்சியின் விழிகள் வியப்பில் விரிந்தது. இருளில் கண்டவனை இன்று வெளிச்சத்தில் பார்க்கும் போது வித்தியாசாமாக இருந்தாலும் அவனை விட்டு பார்வையை விலக்க முடியவில்லை.
மகள் மீது மட்டும் எப்போதும் கவனம் வைத்திருக்கு வெண்பா அசைவற்று நின்ற மகளை பற்றி உலுக்க அதில் சுய உணர்வு பெற்றவள், தாயிடம் பார்வையால் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள்.
மகள் ஒரு ஆணை இவ்வளவு நேரம் பார்த்தது அவள் வயதுக்குரிய குணம் என்றாலும் வெண்பாவிற்கு சற்று சங்கடமாகவே இருந்தது.
"ஹாய்..." என்று அனைவரையும் பொதுவாக பார்த்து கூறியவன் நடுநாயகமாக போடப்பட்டிருந்த இருக்கையில் விஜித் அமர்ந்ததுக் கொள்ள, இசையமைப்பாளர் அவனிடம் பேச ஆரம்பித்தார்.
சிறிது நேரத்திற்கு பின் மான்சியை காட்டி அவர் ஏதோ கூற, விஜித்தின் தலை மறுப்பாக அசைந்தது. அவனை மட்டும் கவனித்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் மறுப்பான தலையசைவு பயத்தை கொடுத்தது.
"மான்சி நீ பாடின பாட்ட திரும்ப ஒரு தடவை முழுசா பாடி காட்டு. அப்போ தான் நம்ம புரோடியூசர்க்கு உன் திறமை மேல நம்பிக்கை வரும்." என்று கூற, சரி என்று மான்சி ஏற்றுக் கொண்டு பாடுவதற்கு தயாரானாள்.
மான்சி பாட வந்து விட்டாலும் பாடல் வரிகளை நினைத்தே படபடப்பாக உணர்ந்தாள். ஏனெனில் காதல் கொண்ட பெண்ணவள் தன் மனதை கவர்ந்த தலைவனிடம் தன் காதலை மறை பொருளாக உணர்த்தும் படியாகவே பாடல் வரிகள் இருந்தது.
அவற்றையெல்லாம் விஜித் முகத்தை பார்த்துக் கொண்டு எப்படி பாடுவது என்று தயக்கம் கொள்ள, வெண்பா விஜித்திற்கு பின் வந்து நின்றார். தாயை கண்டதும் அவள் தயக்கங்கள் அனைத்தும் மறைந்து போனது.
பாடல் வரிகள் ஆரம்பிக்கும் வரை தாயின் மீது நிலைத்திருந்த கண்கள் தானாகவே தன்னை மட்டும் பார்த்திருந்தவன் மீது திரும்பியது.
மான்சியின் குரலில் காதல் ததும்பும் பாடலை கேட்டுக் கொண்டிருந்தவன் முத்தில் உணர்வுகள் எதுவும் வெளிப்படவில்லை என்றாலும் மனது செய்ய வேண்டியதை கணக்கிட்டுக் கொண்டு தான் இருந்தது.
மான்சி பாடி முடிக்கும் வரை அந்த இடமே அப்படி ஒரு அமைதியில் நிறைந்திருக்க, பாடல் முடிந்த அடுத்த நொடி அனைவரின் கரவொலி காதை நிறைத்தது.
விஜித் தன் இருக்கையில் இருந்து எழுந்துக் கொண்டதும் அனைவரும் கை தட்டுவதை நிறுத்தி விட்டு அடுத்து அவன் என்ன சொல்வானோ என்று பார்த்துக் கொண்டிருந்தனர்.
"ம்ம் ஓகே... பட் ஏந்திழையாள் பாடும் போது ஒரு இடத்தில சின்ன தடுமாற்றம் இருந்துச்சே." என்று யோசிப்பது போல விரல்களை நெற்றியில் தேய்த்துக் கொண்டு கூறினான்.
விஜித் கூறிய தடுமாற்றத்தை மான்சியும் உணர்ந்திருந்தாள். பாடிக் கொண்டுருக்கும் போது மான்சியின் விழிகள் விஜித் விழிகளுடன் கலந்த ஒரு நொடி அவளுக்கே பாடல் வரி மறந்து அவன் மட்டுமே நினைவில் நின்றான்.
மீண்டும் தாயை பார்த்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டு சரியாக பாட ஆரம்பித்தாள். இவையனைத்தும் இரு நொடி தடுமாற்றம் என்றாலும் அது விஜித் மற்றும் இசையமைப்பாளர் இருவரும் கவனித்துக் கொண்டனர்.
"நானும் கவனிச்சேன் சார். பட் இதுவும் கூட நல்லா தான் இருக்கும். ஹீரோயின் பாடும் போது ஹீரோ கண்ணசைக்க, அதில் ஹீரோயின் வெட்கப்பட்டு தடுமாறி பின் பாடுற மாதிரி சீன் டைரக்டர் சொல்லிருந்தார். அதுக்கு இந்த டூ செக்கென்ட் கேப் பர்ஃபெக்ட்டா இருக்கும்." என்று இசையமைப்பாளர் விளக்கம் கொடுத்தார்.
"வெட்கத்தில் வர தடுமாற்றமா? அப்போ ஓகே தான்." என்று மான்சியை பார்த்து கூறி விட்டுச் செல்ல, அவளோ அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என தெரியாது நின்றாள்.
வீட்டிற்கு வந்த பின் கூட அவள் சிந்தனை முழுவதும் விஜித் ஏகலைவன் மட்டுமே. அவனிடம் தனக்கு தோன்றுவது என்ன மாதிரியான உணர்வு என்று கூட அவளால் பிரித்தறிய முடியவில்லை.
அனைத்திற்கும் தாயின் உதவியை நாடுபவளுக்கு, இதை அவரிடம் சொல்லவே தடுமாற்றமாக இருந்தது. தான் கூறுவதை தாய் எப்படி எடுத்துக் கொள்வாரோ என்ற பயம் அவள் மனதை நிறைத்திருந்தது.
"மான் குட்டி உனக்கு அம்மா கிட்ட எதாவது சொல்லணுமா?" என்று கேட்க அவளோ தடுமாறும் மனதை இழுத்து பிடிக்க வழி தெரியாது தாயை அணைத்துக் கொண்டாள்.
"நான் தப்பு பண்றேனாமா?" என்று காரணத்தை கூறாமலே கேட்க,
"என் மான் குட்டி தப்புன்னு தெரிஞ்சா அதை செய்ய மாட்டா." என்று மகள் கூறாமல் விட்டதை புரிந்துக் கொண்டு அதற்கு பதில் கூறினார்.
"மான் குட்டி அம்மா உன் கிட்ட ஒரு நல்ல தோழியா தான் நடந்துக்க நினைக்கிறேன். அதனால நீ நினைக்கிறத தயங்காம சொல்லலாம்." என்று பரிவுடன் மகளின் தலையை தடவி கொடுத்தார்.
அம்மாவின் அன்பில் முழுதாய் கரைந்தவள் அவர் தோளில் சாய்ந்துக் கொண்டு விஜித்தை சந்தித்ததை பற்றி கூறி, இன்றைய தடுமாற்றத்தையும் கூறினாள்.
"எனக்கு அவரை இன்னைக்கு பார்த்ததும் வந்த ஃப்லீங்கை எப்படி சொல்றதுன்னு தெரியல ம்மா. பட் எனக்கு அது பிடிச்சிருந்தது அதே நேரம் பயமாவும் இருந்துச்சு." என்று மனதை மறைக்காமல் கூறினாள்.
"நம்பிக்கை இருக்கிற இடத்தில பயம் வராது மான் குட்டி. நீ பயப்படுறன்னா அதுக்கான காரணத்தை முதல்ல யோசி. இத தவிர வேற எதையும் நான் சொல்ல விரும்பல. உனக்கான முடிவுகளை நீயே எடுக்குறது தான் சரி வரும்." என்று கூறிவிட்டுச் சென்றார்.
அன்னை கூறி விட்டுச் சென்ற செய்தி மான்சியின் மனதை சரியாக சென்று தாக்கியது. அவளின் பிடித்தம் அதற்கு அடுத்த கட்டத்திற்குச் செல்ல வாய்பில்லாத போது அது தவறு என்று மூளை எடுத்து கூற அதை அவள் மனதும் ஏற்றுக் கொள்ள தயாராகியது.
காதல் என்னும் விதை மகளின் மனதில் விழும் முன்னே வெண்பா அதை தடுத்துவிட்டார். மகளின் பிடித்தம் அத்தோடு நின்றுவிடாது என்று அவருக்கு தெரியும். ஆனாலும் எட்டாத உயரத்தில் இருப்பவனை பற்றி கனவு காண்பது கூட தவறு தான் என்று மகளுக்கு உணர்த்தி விட நினைத்தார்.
நினைப்பது மட்டும் நடந்துவிட்டால் வாழ்க்கையில் சுவாரஸ்யம் என்பது இருக்காதே. இவர்களின் விருப்பத்திற்கு அப்பாற்பட்டவன் ஒருவன் இருக்கின்றானே.
தனது அறைக்கு வந்த மான்சி தன் உடமைகளுக்கு நடுவே இருந்த பொருளை மெல்ல எடுத்து சில நிமிடம் ரசித்து பார்த்தாள். விஜித் ஏகலைவன் MD Of விஜித் க்ரூப் ஆஃப் கம்பெனிஸ் என்று எழுதியிருந்தது.
அன்று விஜித் மான்சிக்கு உதவிய போது அவனின் காரில் இருந்த விசிட்டிங் கார்டை எதற்காக என்று காரணம் அறியாமல் எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டாள்.
அதில் இருந்த எண்ணிற்கு அழைத்து தனக்கு உதவியதற்கு ஒரு நன்றியாவது சொல்ல வேண்டும் என்று ஆயிரம் முறையாவது எடுத்து பார்த்து விட்டு வைத்திருப்பாள்.
இன்று தாய் கூறியதை கேட்ட பின் இனியும் இது தன்னிடம் இருக்க கூடாது என்று நினைத்தவள் கிழித்து குப்பை தொட்டியில் வீசியிருந்தாள்.
அட்டையை கிழிக்க முடிந்தவளால் அதிலிருந்த அவனது தொலைப்பேசி எண்ணை மனதிலிருந்து அழிக்க முடியவில்லை.
ஆசைக்கும் நிதர்சனத்திற்கும் இடையே போராடிக்கொண்டிருந்தவளின் சிந்தனையை அவளது அலைப்பேசியின் சப்தம் கலைத்தது.
திரையில் தெரிந்த எண்ணை பார்த்ததும் அவளது மனது பந்தய குதிரையை விட வேகமாக குதித்து ஓட தொடங்கியது. முழுவதும் அழைத்து ஓய்ந்த அலைப்பேசியை பார்த்தவளுக்கு அந்த எண்ணிற்கு மீண்டும் அழைக்கும் தைரியம் இல்லை.
நடுங்கும் கரங்களினால் அலைப்பேசி நழுவி விடாமல் இறுக பற்றியிருக்க, அது மீண்டும் அவளுக்காக இசைத்தது. இந்த முறை அழைத்தவனை காத்திருக்க செய்யாமல் உடனே அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.
அழைப்பது விஜித் ஏகலைவன் என்று தெரிந்தே ஏற்றவளுக்கு அவனிடம் பேசும் தைரியம் இல்லை. அவளின் மௌனத்தில் சில வினாடி மட்டும் பொறுமை காத்தவன்
"பிஸியா?" என்று கேட்க, அவன் குரல் மனதின் அடி நாதத்தை மீட்டும் இசையாக தழுவிச் சென்றது.
"ஏந்திழையாள் பிஸியா?" என்று மீண்டும் அவனுக்கே உரிய அழுத்தமான குரலில் கேட்க,
"ம்ஹூம்" என்ற பதில் மட்டும் வந்தது.
"ஏகலைவனுக்கு ஏந்திழையாளை பார்க்கணும்." என்று கூற, காரணமின்றி அவள் கண்களில் கண்ணீர் கசிந்தது.
"அம்மாக்கு பிடிக்காது." என்று கூறும் முன் அவள் குரல் வளையை யாரோ நெருக்கி பிடிப்பது போல வலியை உணர்ந்தாள்.
"ஓகே." என்று கூறியவன் அழைப்பை துண்டித்துவிட்டான்.
அழைப்பு துண்டிக்கப்பட்டதும் அப்படி ஒரு அழுகை மான்சியிடம். நெஞ்சை பிடித்துக் கொண்டு கதறி அழுதவளின் சத்தத்தில் பெற்றவர்கள் பதறியடித்துக் கொண்டு அவள் அறைக்குள் வந்தனர்.
"மான் குட்டி என்ன ஆச்சு. எதுக்காக இப்படி அழுற? சொல்லு ம்மா" என்று வெண்பா பதற, காரணத்தை கூற முடியாது தாயை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
மகளின் கையில் இருந்த அலைப்பேசியும் அவள் கிழித்து எறிந்திருந்த அட்டையுமே அவருக்கான பதிலை தந்தது.
ஹாய் மக்களே...
தாமதத்திற்கு மன்னிக்கவும்... எனக்கு ஆறாவது மாத செக்கப் போனதுல யூடி போட மறந்திட்டேன். அதனால இரண்டு யூடி இன்று போடுகிறேன்..