அத்தியாயம் 6
விஜித் ஏகலைவன் வீட்டிற்கு வந்த திலகனும் சரவணனும் அதன் பிரம்மாண்டத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். தங்கள் மொத்த வீடும் இங்கிருக்கும் ஒரு அறையின் அளவு தான் இருக்கும் என்று அவர்கள் மனது கூறிக் கொண்டது. இருவரையும் சில நிமிடம் காத்திருக்க வைத்த பின்னே விஜித் அவ்விடம் வந்து சேர்ந்தான்.
"வாங்க... என்ன முடிவு பண்ணிருக்கிறீங்க?" என்று நேரடியாக கேட்க,
"எங்க முடிவு சொல்றதுக்கு முன்ன மான்சி கடத்தல் பத்தி சில கேள்வி கேட்க வேண்டியது இருக்கு." என்று சரவணன் கூறினார்.
"ஓ ஏ.சி.பி சரவணன் சார் விசாரணையா. என்ன விசாரணை பண்ண பர்மிஷன் இருக்கா?" என்று புருவம் உயர்த்தி கேட்டவன் தோரணையே சொன்னது உன்னால் அப்படி செய்ய முடியாது என்று.
"நான் இங்க போலீஸா வரல. மான்சி வெல்விஷரா வந்திருக்கிறேன். தேவைப்பட்டா போலீஸா கூட வர தயங்க மாட்டேன்." என்று அவரும் நான் உனக்கு எந்த விதத்திலும் பயப்படவில்லை எனும் விதத்திலே பதிலளித்தார்.
சில வினாடி அவரை ஆழ்ந்து பார்த்த விஜித் "வெல் உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. பட் ஏந்திழையாள்காக மட்டும் இந்த ஒரு முறை பதில் சொல்றேன்.
நீங்க எவ்வளவு தேடினாலும் மான்சிய கடத்தினது யாருன்னு உங்களால கண்டு பிடிக்க முடியாது. ஏன்னா அவங்க என் கஸ்டடில இருக்கிறாங்க. என் இடத்தில வந்து ஒருத்தன் இவ்வளவு துணிச்சலா கடத்த நினைச்சா நான் சும்மா இருக்க மாட்டேன்." என்று பின் கழுத்தை வருடிக் கொண்டு கூற, அது சிங்கத்தின் கர்ஜனை போல இருந்தது.
"யாரு கடத்தினா? அவங்களை என்ன பண்ணீங்க?" என்று சரவணன் கேட்க,
"அது உங்களுக்கு தேவையில்லாதது." என்று திலகன் முகத்தை பார்த்துக் கொண்டு சரவணனிடம் முகத்தில் அடித்தார் போலவே கூறினான்.
"நான் கேட்கலாமா? யார் என் பொண்ண கடத்தினாங்க?" என்று கேட்க, அதில் தன் பெண்ணை பாதுகாக்க முடியாத வருத்தம் நிரம்ப இருந்தது.
"நேத்ரன்." என்று ஒற்றை வார்த்தையில் பதில் வர, அனைத்தும் திலகனுக்கு விளங்கியது.
இதற்கு முன் நேத்ரன் தயாரித்த படத்தில் தான் மான்சி பாடல் பாட இருந்தாள். அவர் பார்வை சரியில்லை என்று வெண்பா கூற பாடல் வாய்ப்பு வேண்டாம் என்று நிராகரித்து விட்டனர்.
முதலில் தன் படத்தில் பாட வருமாறும் அழைத்தவர் பின் தனக்கு மான்சியை திருமணம் செய்து வைக்குமாறும் கேட்டுக் கொண்டிருந்தார்.
மது, மாது என்று அனைத்து கெட்ட பழக்கங்கள் நிறைந்தவருக்கு தன் பெண்ணா என்று அவரை நிராகரித்தனர். நேத்ரன் தொந்தரவு தாங்க முடியாமலே வருணுடன் திருமண பேச்சை திலகனும் ஆதரித்தார்.
"உங்க இடத்தில நடந்ததுக்காக அந்த நேத்ரனுக்கு தண்டனையா? இல்ல மான்சிக்காகவா?" என்று திலகன் கேட்க,
"என் இடத்தில நடந்ததுக்காகன்னா போலீஸ் கிட்ட எவிடன்ஸ் கொடுத்திருப்பேன்..." என்று கூறி நிறுத்த, அதில் தான் செய்வது மான்சிக்காக மட்டுமே என்னும் செய்தி இருந்தது.
"வீட்டுல போய் பேசிட்டு கல்யாணம் எப்போ வச்சுக்கலாம்ன்னு கேட்டு சொல்றேன்." என்று கூறி விட்டு திலகன் எழுந்துக் கொள்ள, உடன் சரவணனும் எழுந்துக் கொண்டார்.
மரியாதைக்காக கூட அவர்களை வழியனுப்ப விஜித் தனது இருக்கையில் இருந்து எழுந்துக் கொள்ளவில்லை. அவன் கால் மேல் காலிட்டு அமர்ந்திருப்பதை பார்த்துக் கொண்டே சரவணன் வெளியேறினார். தன் மனதில் தோன்றியதை திலகனிடம் கூற,
"இது எனக்கு புரியாம இல்ல சரவணன். விஜித்க்கு என்னையும் வெண்பாவையும் பிடிக்கலன்னு எங்க வீட்டுக்கு வந்தப்பவே புரிஞ்சிக்கிட்டேன். அதனால தான் எங்க வீட்டுக்கு வந்தப்போ எதுவும் சாப்பிடல, இப்போ நமக்கு சாப்பிட எதுவும் தரல.
எனக்கு என் பொண்ணு முக்கியம். அவளுக்காக நான் எல்லா செய்து கொடுத்திருக்கிறேன். இப்போ அவளோட ஆசை விஜித் இதையும் நிறைவேத்துவேன். அவமானப்பட்டாலும் பரவாயில்லை.'' என்று கூற, சரவணன் மேற்கொண்டு எதையும் பேசவில்லை.
வழியிலே சரவணன் இறங்கிக் கொள்ள, திலகன் வீடு வரும் நேரம் வெண்பா ஹாலில் அமர்ந்திருந்தார். மனைவியை பார்த்து புன்னகைத்து கொண்டு மகள் எங்கே என்று கேட்க, அவள் அறை நோக்கி கை காட்டினார்.
தந்தையின் பதில் என்னவென்று தெரிந்துக் கொள்ளும் எதிர் பார்ப்பில் அறை வாசலிலே நின்றுக் கொண்டிருந்தாள்.
"வெண்பா இனி நம்மளுக்கு ரெஸ்ட் எடுக்க நேரம் கிடைக்காது. நம்ம பொண்ணு கல்யாண வேலை நிறைய இருக்கு." என்று புன்னகையுடன் கூற, அது மற்ற இருவரையும தொற்றிக் கொண்டது.
ஓடி வந்து தந்தையை கட்டிப் பிடித்துக் கொண்டவளுக்கு மகிழ்ச்சியில் வார்த்தைகள் வரவில்லை. மகளின் தோளில் ஆதரவாக தட்டிக் கொடுத்த திலகன், மகள் முகத்தை நிமிர்த்தி
"அப்பா மேல மான் குட்டிக்கு நம்பிக்கை இல்லையா? நீ கேட்கிறதுக்கு முன்ன செய்து கொடுக்க மாட்டேனா இந்த அப்பா?" என்று கேட்க,
"நம்பிக்கை நிறைய இருக்கு. நீங்க என் அப்பா." என்று அழுகையுடன் அவர் சட்டையிலே முகத்தை துடைத்துக் கொண்டாள்.
"போடி அந்த பக்கம். என் புருஷன் சட்டைய அழுக்காக்கிட்டு." என்று மகளை கணவனிடமிருந்து பிரித்தெடுத்த வெண்பா,
"உன் மனசு மாதிரி நீயும் சந்தோஷமா இருக்கணும்." என்று மகளை அணைத்துக் கொண்டார்.
தன் கட்டிலில் வந்து விழுந்தவளுக்கு வாழ்க்கை வண்ணமயமாக மாறி விட்ட உணர்வு. அதிகம் பார்த்து பழக்கமில்லாதவன் மீது தனக்கு காதல் வந்ததை உணரும் முன் அது கை கூடிய சந்தோஷம் அவள் மனதை நிறைத்தது.
"நாளைக்கு ஈவ்னிங் ஐந்து மணிக்கு தயாரா இரு. நான் உன்ன பிக்கப் பண்ண வரேன்." என்று குறுஞ்செய்தி ஏகலைவன் எண்ணில் இருந்து வர, அவளுக்கு என்ன பதில் அனுப்புவது என்று தெரியவில்லை.
முன்பு தாய்க்கு பிடிக்காது என்று கூறவும் முடியாது வருகின்றேன் என்று சொல்லவும் முடியாது தவித்தாள். தனது செய்தியை அவள் பார்த்து விட்ட பின்னும் பதில் வராத கோபத்திலே விஜித் அவளுக்கு அழைத்தான். அவள் அழைப்பை ஏற்றதும்
"உன் மனசுல என்ன இருக்குது ஏந்திழையாள். நான் வேலை வெட்டி இல்லாதவன் இல்ல. எனக்கு உன் கிட்ட முக்கியமானது பேசணும். என்னோட மெசேஜ்க்கு ரிப்ளை அனுப்ப இவ்வளவு யோசிக்கிற நீ எப்படி என்ன..." என்று மேலும் வார்த்தைகளை கொட்டும் முன் நிறுத்திக் கொண்டான்.
"நாளைக்கு நீ வர. வர முடியாதுன்னா எல்லாத்தையும் ஸ்டாப் பண்ணிக்கலாம். அண்ட் ஒன் மோர் திங் இது தான் நான் உனக்கு கால் அண்ட் மெசேஜ் பண்ற லாஸ்ட் டைம்." என்று மான்சி பேசுவதற்கு வாய்ப்பளிக்காமல் கூறி விட்டு அழைப்பை துண்டித்து விட்டான்.
அலைப்பேசியை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு தன் மீதே கோபம் வந்தது. அவன் கூறுவதும் சரி தானே.
முதல் முறை அழைத்த போது சந்திக்க மறுத்ததை கூட நியாயப்படுத்திக் கொள்ளலாம். தான் அழைத்ததும் தன்னை காட்டிக் கொடுக்காமல் தன் வீட்டில் பேசிச் சென்றவனது குறுஞ்செய்திக்கு பதில் கூட அனுப்பாமல் இருப்பது அவனை அவமானப்படுத்தும் செயல் தானே என நினைத்தவள் அவனுக்கு அழைப்பு விடுத்தாள்.
மீண்டும் மீண்டும் விஜித் எண்ணிற்கு மான்சி முயற்சிக்க அவனோ வேண்டுமென்றே அவளது அழைப்பை ஏற்காமல் அவளை தவிக்க விட்டான். ஒவ்வொரு முறை அவளது அழைப்பை துண்டிக்கும் போதும் அவனுள் இருக்கும் அரக்க குணம் சிரித்துக் கொண்டது.
இரவில் சரியாக உறக்கமின்றி தவித்தவள் முகம் சோர்ந்து இருந்தது. பகலில் காரணம் கேட்ட தாயிடம் வாய்க்கு வந்த பொய் காரணங்களை கூறி சமாளிக்க முயன்றாள். மாலை நெருங்கும் போதே அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை.
"மான்சி என்ன பிரச்சனை?" என்று கேட்க தாயிடம் மறைக்க முடியாது நடந்ததை அப்படியே கூறி விட்டாள். சில நொடி யோசித்த வெண்பா
"பேபி பிங்க் கலர் சுடிதார் போடு அது உனக்கு ரொம்ப அழகா இருக்கும். ரொம்ப லேட் ஆக்காம சீக்கிரம் வந்துடுங்க. அண்ட் எங்க போறீங்கன்னு அம்மாக்கு மெசேஜ் பண்ணிடு." என்று சம்மதத்தை கூற,
"அம்மா உண்மையாவா?" என்ற வியப்பு மான்சியிடம்.
"உண்மை தான் அதுக்கென்ன. கல்யாணத்துக்கு முன்ன நானும் உன் அப்பாவும் யாருக்கும் தெரியாம சந்திச்சிருக்கோம். இந்த காலத்தில மீட்டிங் தப்பு கிடையாது. உன்ன எல்லாருக்கும் தெரியும் சோ கொஞ்சம் கவனமா இரு. மாஸ்க் மறக்காம எடுத்துட்டு போ. அப்புறம் இது உன் ஏடிஎம் கார்ட் எவ்வளவு செலவு பண்ணனும்னாலும் ஓகே." என்று வெண்பா கூற,
"தேங்க் யூ ம்மா." என்று அன்னையை கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவள், தன்னவனுடன் புறப்பட ஆயத்தமானாள்.
துள்ளிக் குதித்து ஓடும் மகளை பார்த்த வெண்பா கணவனிடம் வருத்தத்துடன் அனைத்தையும் பகிர்ந்துக் கொள்ள மறக்கவில்லை.
மான்சி தயாராகி வெளியே வருவதற்கும் விஜித் கார் வீட்டின் வாசலில் வந்து நிற்பதற்கும் நேரம் சரியாக இருந்தது. மான்சி நிச்சயம் வருவாள் என்று எதிர்பார்த்தவன் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை.
இளம் சிகப்பு வண்ண உடையில் அவளின் அழகு மேலும் அதிரிகரித்து காட்ட, அது எதுவும் அவன் கருத்தில் பதியவில்லை. அவன் கவனம் முழுவதும் மகளை வழியனுப்ப நிற்கும் தாயின் மீதே இருந்தது.
மான்சி அருகில் வந்ததும் கார் கதவை திறக்க, அன்னையிடம் விடைபெற கூட அவகாசம் அளிக்காது விஜித் கரங்களில் கார் வேகமெடுத்தது.
தன் மீது இன்னும் அவன் கோபமாக இருக்கின்றானோ என நினைத்த மான்சிக்கு சாதாரணமாக பேச கூட வாய் திறக்க முடியவில்லை.
அரை மணி நேர பயணத்திற்கு பின் கடற்கரைக்கு வந்து சேர்ந்த பின்னும் இருவரின் மௌனம் தொடர்ந்தது. விஜித் காரை விட்டு இறங்க, அவனை பின் பற்றி மான்சியும் இறங்கினாள்.
மான்சிக்காக விஜித் மெதுவாக நடந்த போதிலும், கடற்கரை மணலில் குதிங்கால் உயர செருப்புடன் நடக்க முடியாமல் தடுமாறினாள்.
"ம்ச்" என்று அதிருப்தியை வெளிப்படுத்திய விஜித்
"செப்பலை கார்ல வைச்சிட்டு வா..." என்று கூற, ஆசிரியருக்கு பயந்த மாணவியாக அவன் கூறியதை செய்து விட்டு வந்தாள்.
மீண்டும் இருவரும் கடற்கரையை நோக்கி நடக்க, இருவரின் கரங்களும் எதிர்பாராமல் உரசிக் கொண்டது. அச்சிறு உரசலில் மின்சாரம் உடலில் பாய்வதை போல் உணர்ந்த மான்சி விலகி நடக்க நினைக்க அவள் வலக்கரமோ விஜித்தின் இடக்கரத்தில் சிக்கியிருந்தது.
இதை எதிர்பார்க்காத மான்சி விஜித் முகத்தை பார்க்க அவனோ எதையும் கண்டுக் கொள்ளாத பாவனையுடன் கடலை நோக்கி நடந்துக் கொண்டிருந்தான். கடல் அலையில் காலை நனைக்கும் அளவு வந்த பின்னே நடையை நிறுத்தினான்.
சூரியன் அஸ்தமிக்க போவதை உணர்த்தும் வண்ணம் வானமே வர்ணஜாலத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தது. சென்னையில் குடியேறி சில வருடங்கள் ஆன பின்னும் பெரிதாக கடற்கரைக்கு வந்ததில்லை.
முதல் முறை அதுவும் மனதிற்கு பிடித்தவனுடன் கண்ணை குளிர்விக்கும் வகையில் இயற்கையை ரசிப்பதில் அவள் மனம் நிறைந்திருந்தது.
"உனக்கு மிஸஸ் ஏகலைவன் ஆக சம்மதம் தானே?" என்று அவன் கேட்கவும் திரும்பி பார்க்க, பதிலுக்காக அவள் முகம் பார்த்து நின்றிருந்தான்.
"ம்ம்." என்று புன்னகையுடன் தலையசைத்தாள்.
"எனக்கு இந்த ம்ம் போதாது. வாய திறந்து பதில் சொல்லு. இனி வர நாள்ல நீ மிஸஸ் ஏகலைவனா மட்டும் இருக்கணும். உனக்கு சம்மதமா?" என்று கேட்க, அதில் ஆயிரம் அர்த்தம் ஔிந்திருந்தது.
"மிஸ்.ஏந்திழையாளுக்கு மிஸஸ்.ஏகலைவனாக முழு சம்மதம்." என்று வெட்கத்துடன் மான்சி கூறிய நொடி அவளது தாடையை பற்றி தன் முகம் நோக்கி உயர்த்தியவன்
"குட்... இனி யார் நினைச்சாலும் ஏன் நீயே நினைச்சாலும் என்ன விட்டு போக முடியாது." என்று கூறியவன் குரலில் சிறிதும் காதல் இல்லை.
"ஏன் இப்படி பேசுறீங்க. ஏதாவது பிரச்சனையா?" என்று மான்சி கலவரமாக கேட்க,
"நத்திங்... நீ என் பக்கம் இருக்கிற வரை பிரச்சனை இல்ல." என்று விஜித் கூற,
"நான் எப்பவும் உங்க பக்கம் தான். மதர் ப்ராமிஸ்." என்று அவன் உள்ளங்கையில் தன் கையை வைத்தாள்.
"மதர் பிராமிஸ்..." என்று புருவம் உயர்த்தி கேட்டவன் சத்தமாக சிரித்துக் கொண்டான். காரணம் தெரியாத போதும் அவன் சிரிப்பில் அவளின் இதழ்களும் புன்னகைத்தது.
அவன் சிரிப்பின் காரணம் தெரியும் போது அவளின் புன்னகை மொத்தமாக அழிந்து விடும் என்று பாவைக்கு அப்போது புரிய வாய்ப்பில்லை.
"சரி எங்க போகலாம்...?" என்று விஜித் கேட்க,
"இங்கயே நல்லா தான் இருக்கு." என்றவளுக்கு சூரியன் மீதிருந்து கண்களை எடுக்க முடியவில்லை.
தன் வாழ்க்கையில் பெரும் பகுதி சூரியனை கண்டு பயந்து இருளின் துணையை நாடியவளுக்கு, இப்போது சில காலமாக தான் குறைந்த பட்ச வெளிச்சத்தை பார்க்க முடிகின்றது.
இழந்தவர்களுக்கு தானே ஒரு பொருளின் அருமை தெரியும். மான்சியை புருவம் சுருங்க பார்த்தவனுக்கு அவளை பற்றி முழுதாக தெரிந்த போதும் அதை அப்போது காட்டிக் கொள்ள அவன் நினைக்கவில்லை.
"உனக்கு பிடிச்சா இன்னொரு நாள் வரலாம். இப்போ இன்னொரு இடத்துக்கு போகணும்." என்று கூற, மனதே இன்றி புறப்பட்டாள்.
அடுத்ததாக விஜித் அவளை அழைத்து வந்தது நகரின் நடுவே இருந்த தனக்கு சொந்தமான நகை கடைக்கு தான். இன்று தான் முதல் முறை வருகின்றான். கடையின் திறப்பு விழாவிற்கு கூட அவனால் வந்திருக்க முடியவில்லை.
"கூட்டமா இருக்கு." என்று கடையை பார்த்து விட்டு மான்சி கூற,
"மாஸ்க் போட்டுக்கோ..." என்று கூறி அவளை தனது அறைக்கே அழைத்து வந்தான்.
"நான் கேட்ட மாதிரி செயின்ஸ் கொண்டு வாங்க." என்று மேனேஜரிடம் கட்டளையிட, அவரும் சிலவற்றை கொண்டு வந்து கொடுத்து விட்டுச் சென்றார்.
சில நிமிடங்கள் தன் முன் இருந்தவற்றை ஆராய்ச்சியாக பார்த்த விஜித் தன் எதிர் பார்ப்பை முழுவதும் பூர்த்தி செய்யும் வகையில் இருந்த ஒன்றை கையில் எடுத்தான்.
"இது சூப்பர்..." என்று மான்சி முன் ஒன்றை உயர்த்தி காட்டினான்.
"உனக்கு தான் போட்டுக்கோ..." என்று கூற, மான்சிக்கு ஏதோ நெருடியது.
விஜித் கைகளில் இருந்த வைரக்கற்கள் பதித்த டாலருடன் கூடிய செயின் கண்ணை பறித்தாலும், அதை ஏற்பதற்கு அவள் மனம் தயங்கியது.
"மான் குட்டி உனக்கானதை நீ தான் செலக்ட் பண்ணனு ம்." என்று கூறும் தாயின் வார்த்தை செவியில் ஒலிக்க, தலையை உலுக்கிக் கொண்டாள்.
"வாட் ஹேப்பன்ட்?" என்று மான்சி மாற்றத்தில் விஜித் கேட்க,
"ஒன்னுமில்ல..." என்று அவள் வாய் கூறினாலும் மனம் விஜித்தையும் தாயையும் ஒப்பிட்டு பார்த்தது.
கழுத்தில் ஏதோ உரசுவது போன்ற உணர்வில் யோசனை கலைத்த மான்சி கைகள் தட்டி விட பார்க்க, அவள் கையை விஜித் கெட்டியாக பிடித்துக் கொண்டான்.
"நான் தான்." என்று அழுத்தமாக கூறியவன் அவள் கழுத்தில் இருந்த செயினை கழட்ட,
"அதை எதுக்கு கழட்றீங்க?" என்று பதற
"ஏந்திழையாள் நான் செலக்ட் பண்ணது பத்தோட பதினொன்னா இருக்க கூடாது. எப்பவும் யூனிக்கா தெரியணும்." என்று கூறிக் கொண்டே தான் தேர்வு செய்ததை மாட்டி விட்டான்.
"அது அம்மா கொடுத்தது..." என்று மான்சி கூற,
"சோ வாட்... இந்தா உன் அம்மா செயின்." என்று அவள் கையில் வைத்து அழுத்தினான்.
விஜித் அழுத்தியதில் கை சற்று வலி கொடுக்க அதை அவள் முகம் பிரதிபலித்தது. அவள் வலியை உணர்ந்தாலும், சிறிதும் சலனமின்றி அவன் மெதுவாவே அவள் கையை விடுவித்தான்.