வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ஏகலைவனின் ஏந்திழையாள் - கதை திரி

அத்தியாயம் 17

16 ஆண்டுகளுக்கு முன்...

பள்ளி ஆண்டு விழாவில் ஏழு வயது மான்சி பயத்துடனே முதல் முறை மைக் பிடித்து பாடிக் கொண்டிருந்தாள்.

மேடையில் நிற்கும் போது விளக்கின் ஔியில் எதுவும் அவள் கண்ணுக்கு தெரியவில்லை. கண்களுக்கு அனைத்தும் இருளாக இருந்தாலும் அம்மா அருகில் இருப்பார் என்ற தைரியம் அவளை பாட வைத்தது.

மான்சியின் மழலை குரலை ரசித்துக் கொண்டிருந்த விஜயா தனது கேமராவில் படம் பிடித்துக் கொண்டார்.

பாடி முடித்த மான்சி கீழே இறங்க திரும்ப, வெண்பா ஓடி வந்து மகளை அணைத்து முத்தமிட்டபடி தூக்கிக் கொண்டார். பார்க்கும் யாருக்கும் மான்சி குறை தெரிய விடாது கவனமாக நடந்துக் கொண்டார்.

மான்சி பாடும் வரை மழலை குரலில் பாடலை ரசித்துக் கொண்டிருந்த விஜயா, அவளை தூக்கிச் சென்ற வெண்பாவை பார்த்ததும் விழிகள் அதிர்ந்து விரிந்தது. ஓடிச் சென்று பேசும் ஆசை இருந்தாலும் வெண்பா தன்னிடம் பேச மாட்டார் என்று ஒதுங்கிக் கொண்டார்.

பல வருடம் கழிந்தாலும் தன் மீது வெண்பாவிற்கு கோபம் இருக்கும் என்ற பயத்தில் விஜயா வெண்பாவை நெருங்கவில்லை.

சுற்றுலாவிற்காக கணவன் மற்றும் மகனுடன் கேரளா வந்தவர் திரும்பும் வழியில் கார் பழுதாகி மான்சி படிக்கும் பள்ளி முன் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

விஜயா இயற்கை காட்சியை படம் பிடிக்க ஆரம்பிக்க, சரியாக அதே நேரம் மான்சி மேடையில் பாட தொடங்கினாள். இசை பிரியையான விஜயா தன்னை மறந்து மேடை எதிரே வந்து நின்று பாடலை ரசித்துக் கொண்டிருந்தார்.

தனது கையில் இருந்த கேமராவில் பாடல் பாடும் மான்சியின் உருவத்தை பதிவு செய்யவும் தவறவில்லை.

பாடல் முடிந்ததும் மான்சியை தூக்கிச் சென்ற வெண்பாவை பார்த்ததும் எதிலிருந்தோ தப்பும் உணர்வுடன் காருக்கு வர, பழுது நீக்கிவிட்டதாக விஜித் கூற காரில் ஏறிக் கொண்டார்.

விஜயா காரில் அமர்ந்து கண்ணாடியை ஏற்றிக் கொள்ளும் நேரம் வெண்பா கணவன் மகளுடன் நடந்து அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றுக் கொண்டிருந்தார்.

மூவரையும் கண்ணாடிக்கு பின் இருந்து பார்த்துக் கொண்ட விஜயாவின் பயணம் பல யோசனைகளுடன் தொடங்கியது.

சென்னை வீட்டிற்கு வந்த விஜயா மான்சி புகைப்படத்தை பெரிதாக சட்டமிட்டு ஒரு அறையில் விஜித் கைகளால் மாட்ட சொன்னார். விஜித் தாய் சொல்லை தட்டாத தனையனாக போட்டோவை மாட்டி முடித்தான்.

"நீ ஏந்திழையாளை கல்யாணம் பண்ணிக்கோ விஜித்..." என்று விஜயா மான்சி புகைப்படத்தை தடவி பார்த்தபடி கூற...

"மாம்... இது உங்களுக்கே ஓவரா தெரியலையா. இந்த குட்டிப் பொண்ண நான் எப்படி கல்யாணம் பண்ண முடியும்?" என்று கேலியாகவே பதினெட்டு வயது வாலிபனான விஜித் கேட்டான்.

'ஏந்திழையாளை சீக்கிரம் மிஸஸ்.ஏகலைவனா இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன்.' என்று புகைப்படத்தின் அடியில் தேதியுடன் எழுதி வைத்தார்.

"ம்மா..." என்று விஜித் கத்தியதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

"ம்மா இந்த குழந்தை வளரும் முன்ன எனக்கு குறைஞ்சது ரெண்டு குழந்தை இருக்கும்." என்று நிதர்சனத்தை கூற, விஜயா தனது எண்ணம் நிறைவேறாதோ என்ற வருத்தத்துடன் மகனை பார்த்தார்.

தாயின் வருத்தத்தை தாங்கிக் கொள்ள முடியாத விஜித் அவரை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

"இப்போ எதுக்கு இவ்வளவு ஃபீலிங். கல்யாணத்தை பத்தி இப்பவே பேச்சு எதுக்கு? அதுவும் சின்னப் பொண்ணு கூட." என்று கேட்க, பதில் கூற முடியாது விஜயா தலையை குனிந்துக் கொண்டார்.

"வெண்பா என் அத்தை பொண்ணு எனக்கு பெஸ்ட் ப்ரெண்டும் கூட. உனக்கே தெரியும் அப்பா கூட என் கல்யாணம் நடந்ததுக்கு அப்புறம் என் வீட்டு ஆளுங்க என் கூட பேசுறதில்லை. இந்த கல்யாணம் நடந்தா எனக்கு என் சொந்தம் கிடைக்கும்." என்று விஜித்திடம் எதனால் அவர்கள் பேசவில்லை என்ற உண்மையை மறைத்து கூறினார்.

"அதுக்கு இந்த குட்டிப் பொண்ண எப்படி கல்யாணம் பண்ண முடியும். உங்க சொந்தத்தில் வேற முறைப் பொண்ணு இல்லையா?" என்று விஜித் கேட்க,

"கட்டிக்கிற முறையில மான்சி ஏந்திழையாள் மட்டும் தான் இருக்கிறா." என்று கூற விஜித் பெரும்மூச்சுடன் தலையசைத்து எழுந்துக் கொண்டான்.

விஜித் சென்றதும் விஜயாவின் நினைவுகள் கடந்த காலத்தை நினைத்து பார்த்தது.

பதினாறு வயது விஜயாவுக்கும் தன் ஊருக்கு தொழிற்சாலை கட்ட இடம் வாங்க அடிக்கடி வந்துச் செல்லும் சர்வஜித்திற்கும் எப்படி என்று தெரியாமலேயே காதல் மலர்ந்தது.

காதல் பயிர் வளர்த்த பிறகு தான் அவருக்கு திருமணமாகி ஆறு வயதில் மகன் இருப்பதே விஜயாவிற்கு தெரிய வந்தது. முதலில் உண்மையை கூறாமல் மறைத்ததற்கு கத்தி சண்டையிட்ட விஜயா சர்வஜித் மனைவி உயிருடன் இல்லை, விஜித் பிறக்கும் போதே இறந்து விட்டார் என்பதில் இறங்கி வந்தார்.

அரசாங்கம் இலவசமாக கொடுத்த கணினியில் மின்னஞ்சல் வழியாக விஜயா தனது காதலை வளர்த்துக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் விஜயா மடிக்கணினியை வெண்பா பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது விஜயா தந்தை செல்வராஜ் வந்துவிட்டார்.

எப்பொழுதும் பெண் பிள்ளை மீது நம்பிக்கை இல்லாதவர் வெண்பாவிடமிருந்து கணினியை பறித்து ஆராய, சற்று நேரத்திற்கு முன் விஜயா பயன்படுத்திய மின்னஞ்சல் பக்கம் திறந்து இருந்தது.

அதில் இருந்த அனைத்தையும் படித்து முடித்தவர் வெண்பாவை பேச விடாமல் அடி வெளுத்து விட்டார்.

தெருவில் அனைவரும் வேடிக்கை பார்த்ததை கருத்தில் கொள்ளாது அடித்தே வெண்பாவை அவள் வீட்டிற்கு இழுத்து வந்தவர் மின்னஞ்சல் பற்றி கூற, வெண்பாவின் பெற்றோர் மகள் மீது கொண்ட நம்பிக்கையில் செல்வராஜ் கூறியதை நம்பவில்லை.

தனது வீட்டில் இருந்து கணினியை எடுத்து வந்து காட்டினார். அரசு அனைவருக்கும் ஒரே மாதிரி கணிணி கொடுத்திருப்பதால் அது விஜயாவினுடையது என்று யாருக்கும் தெரியவில்லை.

உண்மை உணர்ந்த விஜயா தான் மாட்டிக் கொள்ள கூடாது என்று வெண்பா கணினியில் தன் புகைப்படத்தை வால்பேப்பராக வைத்துக் கொண்டாள்.

"அப்பா அது விஜயா அண்ணி லேப்டாப்." என்று வெண்பா வலியை தாங்கிக் கொண்டு கூற, செல்வராஜ் அனல் தெறிக்க மகளை பார்த்தார்.

"ஐயோ அப்பா வெண்பா பொய் சொல்றா. என்னாேடது இங்க இருக்கு" என்று திறந்து காட்ட, அதில் விஜயா புகைப்படம் மின்னியது.

அதன் பின் வெண்பா கூறியதை யாரும் நம்பாமல் திட்டிக் கொண்டிருந்தனர். மறுநாள் விஜயா காணாமல் போகும் வரை வெண்பா செய்யாத தவறுக்கு பழியை ஏற்று மூலையில் முடங்கி கிடந்தாள்.

'அப்பா வெண்பா மேல தப்பு இல்ல. என்னோட லேப்டாப் தான் அது. நான் காதலிச்சவர் கூட போறேன்.' என்று விஜயா எழுதிய கடிதம் கிடைத்த பின்னரே வெண்பா தப்பித்தாள்.

அடுத்த நாள் விஜயா சர்வஜித்துடன் வந்து நிற்க குடும்பம் மொத்தமும் வெண்பா வாங்கிய அடிகளை நினைத்து அவர்களை விரட்டியது.

வெண்பாவை தனியாக சந்தித்த விஜயா மன்னிப்பு கேட்க, "தயவு செய்து இனி என் முகத்தில முழிக்காத." என்று கூறி விட்டார்.

அதன் பிறகு பன்னிரெண்டு வருடங்களுக்கு பிறகு வெண்பாவை பார்க்கின்றார். பழைய நட்பு கண் முன் நின்றாலும் மகனிடம் சிலதை கூறி தனது நல்ல பிம்பத்தை உடைக்க முடியவில்லை.

தந்தை விஜயாவை காதல் திருமணம் செய்துக் கொண்டார் என்பது வரை மட்டுமே அவனுக்கு தெரியும். மற்ற பிரச்சனை எதுவும் தெரியாது.
திருமணம் முடித்து வந்த விஜயாவிற்கு முரட்டு குழந்தை விஜித்தை சமாளிப்பது பெரிய வேலையாக இருந்தது.

சாதாரணமாக பேசினாலும் அன்னையாக அவரை அவன் ஏற்றுக் கொள்ளவில்லை. விஜித் மட்டும் போதும் என்று விஜயா குடும்ப கட்டுப்பாடு செய்துக் கொண்டதை தெரிந்துக் கொண்ட பின்னே விஜித் அவரை அன்னையாக ஏற்றுக் கொண்டான்.

விஜயாவும் கணவன் தன் மீது காதலை பொழிய, தனக்கு குழந்தை வேண்டும் என்று நினைக்காமல் தனது குழந்தையாகவே விஜித்தை வளர்த்தார்.

இப்போது வெண்பாவை பார்த்ததும் தனது சொந்தம் வேண்டும் என்று நினைத்தவர் விஜித் மூலம் தன் உறவுகளை தன் பக்கம் இழுக்க நினைத்தார்.

பதினாறு வயதில் தாயாக பொறுப்பு ஏற்றுக் கொண்டதால் என்னவோ முப்பது நெருங்கும் முன் தனக்கு முதுமையடைந்தது போல நினைத்துக் கொண்டார்.

இறுதி காலத்திலாவது சொந்தங்கள் வேண்டும் என்ற அவரது எண்ணத்தை நிறைவேற்ற கிடைத்த ஒரே துருப்புச் சீட்டு தான் மான்சி.

சர்வஜித் விஜயாவை தங்கமாக தாங்கினாலும் தாய் வீடு தேடியது அவரது உள்ளம். விஜித் யாரையும் காதலித்து விட்டால் தனது எண்ணம் நிறைவேறாது என்பதால் அவனிடம் இப்போதே தனது ஆசையை கூறிவிட்டார்.

விஜயா நினைத்தது போலவே விஜித் மனதில் மான்சி பற்றிய நினைவு சிறு விதையாக விழுந்தது. ஆனாலும் மான்சியின் வயது அவனை மேற்கொண்டு யோசிக்கவிடவில்லை.

ஏரோனாட்டிக்கல் இஞ்சினியரிங் முடித்து இந்திய விமானப்படையில் அவன் இணையும் போது யாரின் எதிர்ப்பையும் கருத்தில் கொள்ளவில்லை.

சில நாடுகளில் இளைஞர்கள் கட்டாயம் ராணுவத்தில் பணி செய்வது போல தானும் சில வருடம் பணி செய்துவிட்டு வருகின்றேன் என்று புறப்பட்டுவிட்டான்.

விஜித் சொன்னது போலவே சில வருடங்களில் ராணுவ வேலையை விட்டுவிட்டு வந்து தந்தையின் ஏர்லைன்ஸ் பிசினஸ் எடுத்து நடத்த ஆரம்பித்தான். அப்போதே அவனுக்கு சர்வஜித் தீவிரமாக பெண் தேட ஆரம்பித்திருந்தார்.

விஜயா மீண்டும் தனது ஆசையை சர்வஜித்திடம் கூறும் முன் வெண்பாவிடம் பேசிவிட வேண்டும் என்று யாரிடமும் கூறிடாமல் புறப்பட்டார்.

அப்போது ஒரு சில படங்களில் மான்சி பாடகியாக பாடல் பாடியிருக்க, அவளை பற்றிய தகவலை தெரிந்துக் கொள்வது பெரிதாக இருக்கவில்லை.

விஜயா வெண்பாவை பார்க்க வந்த நேரம் வீட்டில் திலகன், மான்சி இருவரும் இல்லை. வெண்பா மட்டுமே தனியாக இருந்தார்.

அழைப்பு மணி ஓசையில் கதவை திறந்த வெண்பாவிற்கு விஜயாவை சட்டென்று அடையாளம் கண்டுக் கொள்ள முடியவில்லை.

தன் எதிரில் நிற்கும் நவநாகரீக பெண்ணை கிராமத்து விஜயாவும் பொருத்தி பார்த்து கண்டு பிடிக்கவே சில நிமிடம் தேவைப்பட்டது.

விஜயா மீது கோபம் மலையளவு வந்தாலும் அதை காட்ட விரும்பாது இன்முகமாய் வரவேற்று உபசரித்தார். வெண்பாவின் உபசரிப்பில் மகிழ்ந்த விஜயா வந்த விசயத்தை கூற அவர் முகம் மாற ஆரம்பித்தது.

"அண்ணி உங்கள கஷ்டப்படுத்த வேண்டாமேன்னு நீங்க வந்ததும் சாதாரணமா பேசினேன். அதுக்காக உங்க கூட உறவ வளர்க்க முடியாது. ஏற்கனவே என் வீட்டுக்காரர் பக்க உறவு எனக்கு சரி இல்லை. இதுல என் பக்க உறவையும் பகைச்சிக்க முடியாது.
வயசு வித்தியாசம், சாதி இப்படி பல தடைய கடந்து கல்யாணம் பண்ண வேண்டிய அவசியம் என் பொண்ணுக்கு இன்னும் வரல. அது மட்டுமில்ல நீங்க பொண்ணு கேட்டு வந்திருக்கிறது உங்க கணவரோட பையனுக்கு உங்க பையனுக்கு இல்ல." என்று வெண்பா உண்மையை முகத்தில் அடித்தார் போல கூறியே மறுத்து விட்டார்.

"எல்லாத்துக்கும் மேல உங்கள சார்ந்தவங்களுக்கு கஷ்டம் வரும் போது அவங்களுக்காக பேசுற தைரியம் இல்லாத உங்கள நம்பி என் பொண்ண எப்படி அனுப்ப முடியும்." என்று கூற விஜயா மனதளவில் நொறுங்கி விட்டார்.

தன் மகளுக்கு இந்த வரன் தேவையில்லை என்று நினைத்ததால் என்னவோ வெண்பாவிற்கு விஜித் பற்றிய விவரம் எதுவும் மனதில் பதியவில்லை.

கல்லூரி முதல் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் மகளுக்கு அடுத்த வருடம் முப்பது வயதை அடைய போகும் ஒருவன் மாப்பிள்ளையா என்று நினைக்கவே பயமாக இருந்தது.

மகளுக்கான எதிர்கால துணையை பற்றி அவருக்கு இருந்த எதிர்பார்ப்பு எதிலும் விஜித் அப்போது இல்லை என்பது தான் உண்மை.

வசதியை விட மகளின் பிரச்சனை தெரிந்தும் அதை குறையாக நினைக்காமல் தாங்கும் குடும்பத்தை எதிர்பார்த்தார்.

சிறு வயதில் செய்யாத தவறுக்கு அடி வாங்கிய போது தடுக்காத விஜயா, நாளை தன் மகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் எப்படி அவள் பக்கம் நிற்பார் என்ற கேள்வியே விஜயாவின் வீட்டிற்கு மான்சியை மருமகளாக்கும் எண்ணத்தை வளர விடாமல் செய்தது.

விஜயா சென்றதும் வந்த திலகனிடம் எதையும் மறைக்காமல் கூறவும் செய்தார்.

சோகமாக வீட்டிற்கு வந்த விஜயா விஜித்திடம் வெண்பா கூறியதை கூற, பார்க்காமலே வெண்பா பற்றிய பிம்பம் தவறாக அவன் மனதில் பதிந்தது.

"பொண்ணு தர மாட்டேன்னு சொன்னத விட, நீ என் பையன் இல்லன்னு சொன்னது தான் கஷ்டமாக இருக்கு." என்ற விஜயாவிற்கு அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

முதல் முறை விஜயா அழுகையை பார்த்த விஜித்திற்கு கோபம் கட்டுக்கடங்காமல் எழுந்தது. ஆனாலும் மான்சியை அதற்காக திருமணம் செய்யும் எண்ணம் அவனுக்கு வரவில்லை.

 
அத்தியாயம் 18

விஜித்திடம் திருமணத்திற்கு பெண் பார்க்கலாமா என சர்வஜித் அனுமதி கேட்க, விஜயாவை ஒரு நொடி பார்த்த விஜித் மனக்கண்ணில் சிறுமியான மான்சி முகம் மின்னி மறைந்தாலும், தந்தைக்கு சம்மதம் தெரிவித்தான்.

மகனுக்காக பெண் பார்க்க தொடங்கிய சர்வஜித்திடம் மான்சி பற்றி கூறலாம் என யோசித்த விஜயாவிற்கு வெண்பா போல இவரும் விஜித் தன் மகன் இல்லை என்று சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் வாயை திறக்கவில்லை.

தொழில் விசயமாக வெளிநாடு சென்ற சர்வஜித் உயிர் தூக்கத்திலே பிரிந்ததாக தகவல் வர இங்கு அவர் குடும்பம் நிலைகுலைந்து போனது.

ஐம்பத்தி ஆறு வயதை நெருங்கும் சர்வஜித்தின் உயிர் திடீர் மாரடைப்பில் பிரிந்ததை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் இழப்பை விஜித் ஏற்றுக் கொள்ள சில நாட்கள் தேவைப்பட்டது.

நல்ல மகனாக தந்தையின் அனைத்து தொழிலையும் ஏற்று நடத்த ஆரம்பித்தவன் தாயாக விஜயாவையும் கவனிக்க தவறவில்லை.

சர்வஜித்தை ஆதாரமாக கொண்டு வாழ்ந்தவருக்கு அவர் இல்லாத வீட்டில் இருக்க முடியாது தவிக்க, விஜித் தூரமாக இருந்தாலும் பரவாயில்லை என்று கடற்கரை பங்களாவிற்கு தங்கள் இருப்பை மாற்றிக் கொண்டான்.

வருடங்கள் சில கடந்த பிறகும் இலக்கின்றி அமர்ந்திருக்கும் அவரிடம் பெரிதாக முன்னேற்றம் இல்லாததை கண்ட விஜித் கவலை கொண்டான்.

ஒரு நாள் டிவியில் மான்சி பாடிக்கொண்டிருக்க அதை விஜயா புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார், அவள் பாடி முடித்ததும் முகம் வாடியது. அதை கண்ட விஜித்திற்கு அவரின் மகிழ்ச்சி எதில் இருக்கின்றது என புரிந்தது.

எவ்வளவு யோசித்தும் மான்சியின் முழு பெயர் அவன் நினைவுக்கு வரவில்லை. தாய் எழுதியது நினைவு வர இனி இவள் ஏகலைவனின் ஏந்திழையாள் என்று மட்டும் அவன் மனது கூறியது.

"ம்மா ஏந்திழையாளை இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டு வந்தா உங்களுக்கு ஓகே வா?" என்று கேட்க,

"நிஜமாவா சொல்ற விஜித்... எனக்கு வெண்பா மகள் இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா போதும். உள்ளங்கையில வைச்சு பார்த்துப்பேன்." என்று ஆனந்தத்துடன் கூறினார்.

தாயின் மகிழ்ச்சிக்காக அவர் விரும்பியதை செய்ய முடிவெடுத்தவன் மான்சி பற்றிய தகவல்களை திரட்ட ஆரம்பித்தான்.

எப்படி மான்சியை நெருங்குவது என்று விஜித் திட்டமிடும் போதே விஜயா செய்த செயல் அனைத்தையும் தலை கீழாக மாற்றியது.

விஜித் சம்மதம் கிடைத்ததும் திருமணமே நடந்து விட்டது போல எண்ணிய விஜயா தான் வேண்டுதல் வைத்த எல்லா கடவுளுக்கும் நன்றி செலுத்த ஒவ்வொரு கோவிலாக செல்ல ஆரம்பித்தார்.

அப்படி சென்ற ஒரு கோவிலில் தான் வெண்பாவை மீண்டும் சந்தித்தார். மகன் தான் அனைத்தையும் பார்த்துக் கொள்வேன் என்று சொன்னது எதுவும் அவர் நினைவில் இல்லை. இந்ந நொடி வெண்பாவிடம் சம்மதம் பெற வேண்டும் என்பது மட்டுமே அவரது எண்ணமாக இருந்தது.

அதே நேரம் மான்சியின் குடும்பம் நேத்திரன் தொந்தரவு ஒரு பக்கம், மான்சிக்கு இன்னொரு அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என்று டாக்டர் கூறியதை நினைத்து வருந்திக் கொண்டிருந்தனர்.

"வெண்பா எப்படி இருக்க...?" என்று சிரித்தபடி கேட்க, வெண்பாவால் பதிலுக்கு சிரிக்க முடியவில்லை.

"ம்ம் நல்லா இருக்கேன்..." என்று கூற, விஜயா அருகில் இருந்த மான்சியை பிடித்துக் கொண்டார்.

லேசர் சிகிச்சை முடிந்திருந்த மான்சிக்கு எதையும் சரியாக பார்க்க முடியவில்லை. உடல் நிலை சரியில்லை என்றாலும் வீட்டிற்குள்ளே அடைந்து கிடந்தால் ஊடகம் என்ன என்று தோண்டி துருவ ஆரம்பித்து விடுமே.

ஏற்கனவே அவள் மருத்துவமனைக்கு பரிசோதனைக்குச் சென்ற புகைப்படம் வெளியாகி ஏன் சென்றார் என்ற கேள்வி பரவியது. அதற்காக தான் வாரம் ஒரு முறையாவது வெளி உலகிற்கு மகளை காட்ட எங்காவது அழைத்து வருவார்கள்.

அதற்காகவே இம்முறை மகளுடன் கோவில் வந்து சேர்ந்தார். பிரபலங்கள் முககவசம் கண்ணாடியுடன் வலம் வருவது சாதாரணம் என்பதால் அவளை யாரும் சந்தேகமாக பார்க்கவில்லை.

மான்சியை அடையாளம் கண்டுக் கொண்ட சிலர் ஆட்டோகிராப் கேட்க, தாய் கையில் கொடுத்ததில் எல்லாம் புன்னகையுடன் கையெழுத்திட்டு கொடுத்தாள். கண்ணாடி அணிந்திருந்தாலும் மான்சிக்கு தலையும் கண்ணும் வலிக்க, தாயிடம் கூறினாள்.

மகள் வலி முன் எதுவும் பெரிதாக தெரியவில்லை. மகளை அழைத்துக் கொண்டு புறப்படலாம் என்று நினைக்க விஜயா பிடித்துக் கொண்டார்.

"வெண்பா நான் உனக்கு செய்ததை நினைச்சு என் பையனுக்கு உன் பொண்ண கொடுக்க மாட்டேன்னு சொல்லாத. அவன் ரொம்ப நல்லவன்..." என்று விஜித் அருமை பெருமைகளை கூற ஆரம்பித்தார்.

"ம்மா போகலாம்... வலிக்குது." என்று மான்சி முனங்க, அது அங்கு மகளை அழைக்க வந்த திலகனுக்கு நன்றாக கேட்டது.

"வெண்பா மான்சிய காருக்கு கூட்டிட்டு போ..." என்று கூறினார்.

வெண்பாவிற்கும் மகள் மட்டுமே முக்கியமாக தோன்ற விஜயாவை கண்டுக் கொள்ளாமல் மகளுடன் காருக்குச் சென்றார். அவர்களை தொடர நினைத்த விஜயாவை கை நீட்டி திலகன் தடுத்து விட்டார்.

வெண்பா அடையாளம் காட்டாததால் விஜயா யார் என்பதெல்லாம் அவருக்கு தெரிந்திருக்கவில்லை. மகளிடம் கையெழுத்து வாங்க வந்த ரசிகை என்று நினைத்துக் கொண்டார்.

"இங்க பாருங்க என் பொண்ண தொந்தரவு பண்ணாதீங்க." என்று கூறிக் கொண்டே தூரத்தில் செல்லும் மகளை பார்க்க, அங்கே அவள் தாயின் தோளில் சாய்ந்துக் கொண்டுச் சென்றாள்.

மகளுக்கு வலி அதிகமோ என்று நினைத்துக் கொண்டு விரைந்தவர் விஜயாவை தன் வழியில் இருந்து நகர்த்த, அவரோ எதிர்பாராத விதமாக கீழே விழுந்து விட்டார்.

அவர் விழுந்த வேகத்தில் நெற்றியில் கல் மண்டபத்தின் நுனி மோதி சிறிது ரத்தம் கசிந்தது.

திலகன் எதையும் கவனிக்காமல் மகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்று விட்டார். நடந்த அனைத்தையும் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த கார் டிரைவர் திலகன் தள்ளி விட்டதாக விஜித்திற்கு தகவல் கொடுக்க, விஜித் கண்கள் கோவை பழம் போல சிவந்து விட்டது.

அடுத்த சில நிமிடத்தில் கவனமின்றி சாலையை கடந்த விஜயா விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக தகவல் வர, விஜித் பதறி அவரை காண ஓடினான்.

விஜயா உயிர்க்கு ஆபத்தில்லை என்றாலும் கோமாவிற்குச் சென்றுவிட, அவரை கவனிக்க ஆரம்பித்தவன் மொத்த கோபமும் திலகன், வெண்பா மீது திரும்பியது.

அதுவரை மான்சியை திருமணம் செய்துக் கொண்டால் போதும் என்று நினைத்தவன், தாயின் நிலையை கண்டதும் அதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை கொடுக்க தீர்மானித்தான்.

தந்தை சினிமா துறையில் கொண்ட மோகத்தில் சிறிதும் விஜித்திற்கு இருந்ததில்லை. பினாமி பெயரில் நடத்தி வந்தவன் இப்போ மான்சிக்காக சினிமா துறையில் நேரடியாக கால் வைத்தான்.

முதலில் மான்சியை கடத்தி திருமணம் செய்து அவள் பெற்றோரை கதற வைக்க வேண்டும் என்பது மட்டுமே அவனது திட்டமாக இருந்தது.

அவனே எதிர்பாராத சில விசயம் நடக்க, அனைத்தையும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டான்.

மான்சியின் கண்ணில் தெரியும் காதல் சில நேரம் அவனை அசைத்து பார்த்தாலும், தாயின் நிலை அவனை இரும்பாக இறுக செய்தது.

வெண்பா, திலகன் இருவரையும் முடிந்த வரை மான்சியை விட்டு விலக்குவது மட்டுமே தங்கள் அனைவருக்கும் நல்லது என்று நினைத்தான்.

மகளின் பிரிவு அவர்களுக்கு தண்டனையாகவும், தங்கள் நல்வாழ்விற்கு வழியாகவும் இருக்கும் என்று நினைக்க, மான்சியின் பாசம் அதற்கு தடையாக வந்தது.

தன்னை விட பெற்றோர் தான் முக்கியம் என்று மான்சி கூறியதும் அவனுக்குள் இருக்கும் மிருகம் விழித்துக் கொண்டது.

திலகன், வெண்பா காயமடைய வேண்டும், மான்சி தனக்கு அடி பணிய வேண்டும் என்று நினைத்தவன் அவள் மெல்லிய மனதின் தேவையை கவனிக்க மறந்து போனான்.

அவள் மீது சிறிது அக்கறை காட்டியிருந்தாலே மான்சி எதையும் யோசிக்காது அவன் கூறியதை கேட்டு அமைதியாகியிருப்பாள்.

திருமணத்திற்கு பிறகாவது அவளிடம் மனம் திறந்து பேசியிருந்தால் பிரச்சனை அனைத்தும் சரியாகியிருக்கும். ஆனால் அவனது அகம்பாவம் அதற்கு இடமளிக்கவில்லை.

பெண்ணின் உடலை வென்றால் அவளை வென்று விடலாம் என்று தப்புக் கணக்கு போட்டு விட்டான். அனுமதியில்லாமல் அவள் உடலை நெருங்கியதே மனதளவில் அவனை விட்டு விலக செய்தது.

மான்சி உடல் நிலை சரியில்லாத போது தன்னிடம் உதவி கேட்பாள் என்று விஜித் மனது எதிர் பார்க்க, அவளோ அப்படி எதுவும் கேட்கவில்லை.

அவளின் வலி அவனுக்கும் வலிக்கத்தான் செய்தது. எங்கே தானாக இறங்கிச் சென்றால் பெற்றோருடன் சேர நினைப்பாள் என்று அவளிடம் கடுமையாகவே நடந்துக் கொண்டான்.

இசை வெளியீடு விழா அன்று பெற்றோர் பற்றி யாரிடமும் பெருமை பேச கூடாது என்று மான்சியை மிரட்ட மட்டுமே அவளது கண்ணாடியை எடுத்து வைத்திருந்தான். நிச்சயம் அவள் ரகசியத்தை வெளியிட நினைக்கவில்லை.

ஆனால் பதிலுக்கு அவள் தன்னை மிரட்ட, எதை பற்றியும் யோசிக்காமல் திலகன் வீடியாவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிட்டான்.

மான்சி கர்ப்பமாக இருப்பது தெரிந்து மகிழ்ச்சி அடையும் முன், தன் பிள்ளையை வைத்து அவள் தந்தையை காக்க நினைக்க, விஜித் அவளது மிரட்டலுக்கு அடிபணியவில்லை.

தன் குழந்தையை அழிக்கும் அளவு துணிவு அவளுக்கு இல்லை என்பதால் மான்சி கோரிக்கை எதையும் நிறைவேற்றவில்லை.

உன்னால் முடிந்ததை செய்துக் கொள் என்று வீம்பாக இருந்தவனுக்கு, வயிற்று பிள்ளையுடன் அவளின் போராட்டம் சரி இல்லை என்று தோன்ற, சற்று தன் ஆணவத்தில் இருந்து இறங்கி வந்து மான்சி முயற்சி வெற்றியடைய அமைதியாக இருந்து கொண்டான்.

விஜித் நினைத்திருந்தால் மான்சி கொடுத்த சாட்சியத்தை பொய் என்று நிரூபித்திருக்க முடியும். ஆனால் தன் குழந்தையை சுமப்பவளுக்காக அமைதி காத்தான்.

தந்தை வெளியில் வந்த மகிழ்ச்சியில் மான்சி விஜித் பற்றிய நினைவுகளை ஒதுக்கி வைத்து விட்டாள். ஆனால் அவனோ தன்னவள் நினைவில் உருக ஆரம்பித்தான்.

பெண்ணவள் மீது காதல் இல்லை என்று நினைத்தவனுக்கு அவளின் பிரிவு வலிக்க வலிக்க உண்மையை உணர வைத்தது.

மான்சி தாய்மை அடைந்த செய்தி விஜயா உடல் நிலையை முன்னேற செய்தது. அவராக பேசவும் ஆரம்பித்தார்.

மனைவி பற்றி தனியே யோசித்து வருந்துவதற்கு தாயுடன் இருக்கலாம் என நினைத்து வந்த விஜித்திடம் இதுவரை சொல்லாத அனைத்தையும் விவரமாக விஜயா கூறினார்.

"வெண்பா என்னால நிறைய கஷ்டப்பட்டா. அதனால தான் கடவுள் எனக்கு இந்த தண்டனை கொடுத்திருக்கார். அவளுக்கு நான் செய்த துரோகத்துக்கு பதிலா அவ பொண்ண நல்லா பார்த்துக்கணும்." என்று கூற, அவர் சொன்னதை கேட்ட பிறகே மான்சி பெற்றோரை தான் தவறாக நினைத்துக் கொண்டதை நினைத்து வருந்தினான்.

விஜயா மட்டும் சில நாட்களுக்கு முன் இதை கூறியிருந்தால் தன்னவள் தன்னை பிரிந்திருக்கும் நிலை வராமல் தடுத்திருக்கலாம் என்று நினைத்தவனுக்கு தனிமை கொடுமையானது.

மீண்டும் கடற்கரையில் வந்து நின்றவனுக்கு அவள் நினைவுகள் அலையாக தொடர, பைத்தியம் பிடித்தவன் போல கத்த ஆரம்பித்தான்.
 


அத்தியாயம் 19

ஒரு மாதம் முழுதாக கடந்த பின்னும் மான்சியை பார்க்க முடியாத விஜயா விஜித்தை கேள்வியால் துளைத்தெடுக்க ஆரம்பித்தார்.

விஜித் விஜயாவிடம் நடந்த எதையும் மறைக்கவில்லை. அனைத்தையும் விஜயா முகம் பார்க்காமலே கூறி முடித்து விட்டான்.

தாயின் பார்வையில் தான் கீழ் இறங்குவது எந்த மகனுக்கு தான் பிடிக்கும். விஜித் அவரின் பார்வையை எதிர் கொள்ள முடியாது முகத்தை திருப்பிக் கொண்டு நின்றான்.

"விஜித் மருமகளை எப்போ கூட்டிட்டு வருவ?" என்று எதையும் தோண்டி துருவாமல் மான்சி பற்றி கேட்க விஜித் மனதில் பாரம் ஏறியது.

"என் மேல கோபம் இல்லையா?" என்று விஜித் தாயின் கையை பிடித்துக் கொண்டு கேட்டான்.

"பிரச்சனைக்கு மூல காரணமே நான் தான்னும் போது உன் மேல எப்படி கோபம் வரும். உன் கிட்ட நடந்ததை முழுசா சொல்லாம விட்டது என் தப்பு. எப்படியாவது எந்திழையாளை மட்டும் சமாதானப்படுத்தி நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திடு." என்று விஜயா கூற, அதற்கான வழி தான் விஜித்திற்கு தெரியவில்லை.

முன்பு போல அதிரடியாக அவளை அழைத்து வர முடியாது. அன்பாக பேசினால் தான் நடந்துக் கொண்ட விதத்திற்கு அதை அவள் புரிந்துக் கொள்ளும் வாய்ப்பும் குறைவு தான்.
உன்னை பெற்றவர்கள் மீது கொண்ட கோபத்தில் அப்படி நடந்துக் கொண்டேன் என்று கூறினால் மான்சி தன்னை வெறுத்து விடுவாள் என்று உண்மையை கூற தைரியம் வரவில்லை.

அதேசமயம் மான்சியிடம் தான் மன்னிப்பு கேட்கின்றேன் என்று சொன்ன விஜயாவையும் தடுத்து விட்டான். யாரிடமும் தன் தாய் இறங்கிச் செல்வது அவனுக்கு பிடிக்கவில்லை.

அன்று கோவிலில் மான்சியை பெண் கேட்கச் சென்ற போது அவர்கள் பக்கம் என்ன நடந்தது என்று முழுமையாக தெரியாத போதும், திலகன் விஜயாவை தள்ளி விடாது இருந்திருக்கலாம் என்று நினைத்தவனுக்கு இன்னும் அவர் மீது சிறு கோபம் இருக்கத்தான் செய்தது.

அந்த சிறு கோபத்தை பிடித்துக் கொண்டு மான்சியை பார்க்கும் நாளை ஒத்தி வைத்துக் கொண்டிருந்தான்.

விஜித் நினைவுகளை ஒதுக்க முடியாது தவித்த மான்சி, தன் மீது காதல் இல்லாமல் ஒவ்வொரு இரவும் தன்னுடன் கூடியவனை நினைத்து அவள் மேனி மீதே வெறுப்பு தோன்றிக் கொண்டிருந்தது.

மான்சியின் கைகள் கழுத்தை தடவி பின் வயிற்றை தடவி பார்க்க எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கற்பனை கூட செய்ய முடியவில்லை.

ஊடகங்கள் இப்போதே அவள் தாய் வீட்டில் இருப்பதை பற்றி பேச ஆரம்பித்திருக்க, நிலமையை எப்படி கையாளுவது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

அவனுடன் சேரும் எண்ணமெல்லாம் இல்லை. ஆனால் நிரந்தர பிரிவை வெண்பா கூறியதன் படி குழந்தை பிறக்கும் வரை ஒத்தி வைத்தாள்.

மேலும் ஒரு மாதம் முடிவடைந்திருக்க, விஜித் தயாரித்த படம் அன்று வெளியாகியிருக்க, நினைத்ததை விட மக்களிடம் அதற்கான வரவேற்பு அதிகமாக இருந்தது.

அதிலும் மான்சி பாடிய பாடல் வயது வித்தியாசம் இன்றி பலர் முணுமுணுக்கும் வரிகளாக மாறியது. படத்தின் வெற்றி எதுவும் விஜித்திற்கு மகிழ்ச்சி கொடுக்கவில்லை. அவனின் மகிழ்ச்சி அவனவளிடம் அல்லவா இருக்கின்றது.

நாளை படத்தின் வெற்றியை கொண்டாட விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு மான்சிக்கு அழைப்புச் சென்றிருந்தாலும் அவள் வருவதற்கான வாய்ப்பு குறைவு தான் என நினைத்தான்.

மனதின் ஏதோ ஒரு மூலையில் அவள் வருவாள் என்ற நம்பிக்கை இருக்க விஜித் ஆவலுடன் புறப்பட்டான். அவன் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் அவளும் வந்து சேர்ந்தாள்.

மான்சி தனியாக வந்திருப்பதில் அவன் புருவம் சுருங்கியது. ஏனெனில் இதுவரை மான்சி தனியாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டது இல்லை.

மான்சி கலந்துக் கொள்ளும் அனைத்து நிகழ்ச்சியிலும் வெண்பா எப்போதும் உடன் இருப்பார். இன்று அவர் இல்லாமல் தனியே வந்திருக்க அவன் கவனம் முழுவதும் மனைவி மீது தான்.

இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்று தான் அவளை நேரில் பார்க்கின்றான். நான்காம் மாதம் முடிந்து ஐந்தின் ஆரம்பத்தில் இருப்பதால் வயிறு நன்கு மேடிட்டு அவன் குழந்தையின் இருப்பை அனைவருக்கும் காட்டியது.

தாய்மை கொடுத்த சோபை கூட அவளை மேலும் அழகியாக காட்டியது. மான்சி ஒல்லியான உடல்வாகு கிடையாது. சற்று கொழுகொழு பெண் தான். இதில் கர்ப்ப காலத்தில் கூடும் எடை கூட அவனுக்கு அழகாக தெரிந்தது.

தன் பிரிவு அவளை வருத்துகின்றதா என அவளிடம் தேடி பார்க்க, அவளோ தாயின் கவனிப்பில் விஜித் வீட்டில் இருந்ததை விட மினுமினுப்பு கூடி தெரிந்தாள்.

திரை பிரபலங்கள் அனைத்தும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க ஆரம்பிக்க, அவர்களிடம் சிரித்து பேசினாலும் கண்கள் மட்டும் தன்னவள் மீது தான் இருந்தது.

மான்சி மீது கவனத்தை வைத்திருந்தவன் அவளுக்கு தேவையானதை அவ்வப்போது ரவி மூலம் கவனிக்கவும் தவறவில்லை.

புதிகாக அவன் காட்டும் அக்கறை கண்டு வியந்த மான்சியும் விஜித் புறம் பார்வையை திருப்பாது இருந்து கொண்டாள்.

அவள் தன்னை பார்க்காதது ஏமாற்றமாக இருந்தாலும் அதற்கு தான் தான் காரணம் என்பதால் அமைதியாக இருந்தான்.

விழா முடிந்து அனைவரும் வெளியேற ஆரம்பிக்க, அவர்களுடன் மான்சியும் வெளியேறினாள்.

தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாதுச் சென்றதில் மனதில் எழுந்த ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு விஜித் மீதி இருக்கும் வேலைகளை ரவியிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்பினான்.

கார் பார்க்கிங் வரை வந்தவன் மான்சி தெரிகின்றாளா என தேடி பார்க்க, அவளை கண்டு பிடிக்க முடியாது சோர்ந்து போனான்.

தன் முன் நீட்டப்பட்ட கார் சாவியை வாங்கிக் கொண்டு ஏறி அமர்ந்தவன் மான்சி நினைவிலேயே காரை இயக்க ஆரம்பித்தான்.

சிறிது தூரம் சென்ற பிறகே அருகில் யாரோ இருப்பதை உணர்ந்து திரும்ப, அவன் விழிகள் வியப்பில் விரிந்தது.

மான்சியை சத்தியமாக அவன் தனது காரில் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை அவன் வியப்பே காட்டி கொடுத்தது.

இது உண்மையா அல்லது ஆவல் கொண்ட மனதின் எதிர்பார்ப்பில் தோன்றிய பிம்பமா என அறிய கை நீட்டி தொட முயன்றான். தன்னை நோக்கி நீண்ட கையை மான்சி தட்டி விட்டாள்.

"மீடியா முன்னாடி சீன் க்ரீயேட் பண்ண கூடாதுன்னு தான் உங்க கார்ல வரேன். என்ன என் வீட்டுல விட்டுடுங்க. எனக்கு டையர்டா இருக்கு... தூக்கம் வருது..." என்று கூற, விஜித் மனது தன்னவள் வருகையில் சிறகில்லாமல் வானில் பறந்தது.

அவளிடம் மனம் திறந்து பேசலாம் என்று நினைத்தவன் மூளையில் மான்சியின் உணர்ச்சி துடைத்த முகம் எச்சரிக்கை மணியடிக்க மேற்கொண்டு பேசாமல் அமைதியாகவே வீடு வந்தான்.

எப்படி அவளை தன் வீட்டிற்கு அழைத்து வருவது என்று வழி தெரியாமல் தவித்தவனுக்கு அவளே தன்னிடம் வந்த பிறகு அதை சரியாக பயன்படுத்திக் கொண்டான்.

எப்போதும் தன்னை செய்தியாளர்கள் பின் தொடர்ந்து வருவது தெரிந்தால் காவலர்கள் மூலம் தடுத்து விடுவான். ஆனால் இன்று மான்சிக்காக அவர்கள் தன்னை பின் தொடர அனுமதித்தான்.

கார் விஜித் வீட்டை நெருங்கும் போது கண் திறந்தவளுக்கு வந்திருப்பது அவனது வீட்டிற்கு என்றதும் கோபம் பீறிட்டு வந்தது.

"நான் என் வீட்டுல விட சொன்னேன்." என்று பற்களை கடித்த படி கூற,

"ஐ திங்க் இது தான் உன் வீடு. வேணும்னா பின்னாடி நிக்கிற மீடியா கிட்ட கேட்போமா?" என்று புருவம் உயர்த்தி கேட்க, காரில் இருந்து இறங்கியவள் வெண்பாவிற்கு தகவல் அனுப்பினாள்.

இப்போதே விஜித் வீட்டில் இருந்து வெளியேறி மீடியா கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல மான்சியால் முடியும். ஆனால் இரு பக்க உறவுகளும் தன் பொருட்டு பெற்றோரை வாட்டி வதைப்பதை தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

விஜித்தை முறைத்து பார்த்த மான்சி விஜயாவின் அறைக்குச் செல்ல, அவர் தூங்கிக் கொண்டிருந்தார். தங்கள் அறைக்கு மான்சி வரும் வரை விஜித் மனது படபடத்துக் கொண்டிருந்தது.

உள்ளே வந்தவள் அவனை கண்டுக் கொள்ளாமல் படுத்து உறங்க, அவள் களைப்பை உணர்ந்து தொந்தரவு செய்ய மனதின்றி காலையில் பார்த்துக் கொள்ளலாம் என அவனும் படுத்துக் கொண்டான்.

அடு்த்த நாள் காலை விரைவாக எழுந்தவன் தன்னவள் முகம் பார்த்தே அமர்ந்திருந்தான். அவனுக்கு அவளிடம் கேட்க சொல்ல ஏராளமாக இருந்தது.

மெதுவாக கண்விழித்த விஜித்தை கண்டுக் கொள்ளாமல் ஓய்வறைக்குள் புகுந்துக் கொண்டாள். வெளியே வந்தவள் முன் வழியை மறைத்தபடி விஜித் நிற்க,

"பசிக்குது..." என்று ஒற்றை வார்த்தை கூற, வேகமாக விலகி நின்றான்.

மான்சிக்காக உணவு தண்ணீர் தொடக்கம் அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு அவள் முகத்தை கவனிக்க, மான்சி முகத்தில் உணர்வு எதுவும் இல்லாமல் வெறுமையாக இருந்தது.

விஜித் எடுத்து வைத்த உணவை கண்களால் கூட தீண்டாமல் விஜயாவின் அறைக்குள் செல்ல, அவள் வெளி வர காத்திருந்தான்.

மான்சியை கண்டதும் விஜயாவின் முகம் மலர்ந்தது. அவர் முகத்தை பார்த்ததும் முன்பு போல அவளால் சிரிக்க முடியவில்லை.

"நீங்க உங்க உறவுகள் கூட குற்ற உணர்வு இல்லாம சேர என்ன பகடைகாயா வைச்சு விளையாடிட்டீங்க இல்ல." என்று மனதில் இருந்ததை கேட்டு விட்டு வெளியே வந்தாள்.

"ஏந்திழையாள்..." என்று பொறுமை இழந்து அழுத்தமாக அவள் பெயரை விஜித் உச்சரிக்க, அதே அழுத்தமான பார்வையுடன் திரும்பினாள்.

"உங்கள பெத்த சாரி சாரி... வளர்த்த அம்மாவ யாரும் கேள்வி கேட்டா கூட உங்களால தாங்கிக்க முடியாது. ஆனா நீங்க என் அப்பா அம்மாக்கு எவ்வளவு கஷ்டம் கொடுத்திருப்பீங்க. அவங்களுக்கான நியாயத்தை நான் யார் கிட்ட கேட்கிறது." என்று கூறியவள் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

"உங்க அப்பா தள்ளி விட்டு அவமானப்படுத்தினதால தான் அம்மா இந்த நிலையில இருக்காங்க." என்று கோபம் குறையாமல் அன்று டிரைவர் தன்னிடம் கூறியதை மான்சியிடம் கூறினான்.

"என்ன நடந்ததுன்னு முழுசா தெரியாம பேசாதீங்க." என்று தங்கள் பக்கம் நடந்ததை முழுவதும் கூறியவள்,

"ஃபர்ஸ்ட் அத்தை யாருன்னே அப்பாக்கு தெரியாது. அவங்க கீழ விழுந்ததை அப்பா கவனிச்சிருக்க மாட்டாரு. பார்த்திருந்தா அப்படி விட்டிருக்கவும் மாட்டார்." என்று தந்தைக்காக வாதாடினாள்.

இருவரும் மற்றவர் கூறியதை கேட்டு மனதுக்குள்ளே வாதம் நடத்திக் கொண்டிருந்தனர்.

தான் திலகனை தவறாக நினைத்து விட்டோமோ என்று விஜித் நினைத்துக் கொண்டிருக்க, தன் தந்தை மீது வீண் பழி சுமத்தியவன் மீது மான்சி கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தாள்.

"இனி நீங்க என் கிட்ட ஒரு வார்த்தை கூட பேசாதீங்க. உங்க கேள்விக்கு பதில் சொல்ல எனக்கு விருப்பம் இல்ல. என் குழந்தைக்காகவும் அப்பா அம்மாக்காவும் தான் நான் இங்க திரும்ப வந்தேன். உங்க அம்மாக்காக நான் இங்க இருக்கணும்ன்னு நினைச்சா எதுவும் என் கிட்ட கேட்காதீங்க." என்று கூற விஜித் வாய் பூட்டிக் கொண்டது.

எதற்காக மான்சி திரும்ப வந்திருக்கின்றாள் என்று முழுதாக தெரியாத போதும் அவளை திரும்ப அனுப்பி விட கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். தனது கேள்வி அவளை கோபப்படுத்தும் என்பதால் அமைதியாகி விட்டான்.

இவளிடம் இறங்கிச் சென்று மன்னிப்பு கேட்க நினைத்தால் தன்னையே அடக்க நினைக்கின்றாள் என்று தோன்ற பழைய படி முறுக்கிக் கொண்டான்.

இன்னும் சில நாட்கள் மட்டும் இங்கிருந்து விட்டு வளைகாப்பிட்டு தாய் வீடு சென்று விட வேண்டும். அதன் பிறகு நடப்பதை பார்த்துக் கொள்ளலாம் என்று மான்சி மனதில் பல திட்டங்கள் இருந்தது.

மான்சி விஜித் வீட்டிற்குச் சென்றது வரை தற்செயலாக நடந்த ஒன்று தான். விழா அன்று வாசலில் கூடியிருந்த மீடியாவை சமாளிக்க விஜித் காரில் ஏறினாள்.

நடு இரவில் மகள் தனியாக வர கூடாது என்பதற்காக மட்டுமே அவளை விஜித் வீட்டில் தங்க வைத்தனர்.

அடுத்த நாள் வெண்பாவிற்கு மான்சி மூலம் நடந்தது முழுமையாக தெரிந்த பின் விஜித்திற்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்று தான் தோன்றியது.

தங்களை தவிர்த்து பார்த்தால் விஜித் மகளிடம் கோபமாக நடந்துக் கொள்ள காரணம் எதுவும் இல்லையே. அதற்காகவே வளைகாப்பு வரை அவளை அங்கே தங்க கூறினார்.

முதலில் மறுத்த மான்சி பின் வெண்பாவின் கட்டாயத்தில் அங்கிருக்க ஒத்துக் கொண்டாள்.
நாட்கள் மெல்ல நகர மான்சியின் பேச்சு விஜயா வரையில் மட்டுமே. விஜயா மீது கோபம் இருந்தாலும் அவர் உடல் நிலையை கருத்தில் கொண்டு சில வார்த்தைகள் பேசிச் செல்வாள். ஆனால் தவறி கூட எதற்காகவும் விஜித்திடம் பேசுவதில்லை.

விஜயாவும் மகன் மருமகளை சமாதானம் செய்து அழைத்து வந்திருக்கின்றான் என நினைத்து முடிந்ததை பற்றி பேசவில்லை.

விஜயாவுடன் மான்சி பேசும் போது விஜித் வந்துவிட்டால் அவள் மௌனமாகிவிடுவாள். சில நேரங்களில் பெற்றோருடன் அலைப்பேசியில் பேசும் போது மட்டுமே அவள் குரலை அவனால் கேட்க முடிந்தது.

அவள் தன்னிடம் வந்துவிட்டால் போதும் என்று நினைத்தவனுக்கு இந்த மௌனத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தன் கர்வத்தில் இருந்து மீண்டும் ஒரு முறை இறங்கிச் சென்றால் என்ன என்று காதல் மனம் கூற, அதற்காக அவளிடம் வந்து விட்டான்.

"ஏந்திழையாள்..." என்று அவள் முன் வந்து கையை பிடித்துக் கொண்டு விஜித் கூப்பிட, மெல்ல தன் கையை உருவி திரும்பிக் கொண்டாள்.

"ஒரு நிமிசம்..." என்று தன் முன் வந்து நின்றவனை பார்த்தவள்

"என்ன சொல்ல போறீங்க. அத்தைக்காக இத செய்தேன்னுகிறத தவிர உங்க கிட்ட வேற என்ன காரணம் இருக்க போகுது. யாரு வந்து பொண்ணு கேட்டாலும் பெத்தவங்க எதையும் யோசிக்காம தூக்கி கொடுக்கணுமா? பொண்ணு கொடுக்க மறுத்ததுக்கு என் அப்பா அம்மாக்கு எவ்வளவு பெரிய தண்டனை கொடுத்திருக்கீங்க.

உங்களால நான் அனுபவித்த கஷ்டத்துக்கு பதில் சொல்ல முடியும்ன்னா பேசுங்க. நான் கஷ்டம்ன்னு சொன்னது இந்த கல்யாணத்தை இல்ல. அன்னைக்கு என்னை கடத்திட்டு வந்தவங்க என்ன சொன்னாங்க தெரியுமா? சும்மா தொட்டு பார்த்ததுக்கே ஜிவ்ன்னு இருந்துச்சாம். மொத்தமா ஒரு தடவை பார்த்துட்டா போதுமாம். அத நினைச்சு எத்தனை நாள் அழுதேன் தெரியுமா?

அவங்க கிட்ட இருந்து என்ன நீங்க காப்பாத்திட்டதா நினைச்சு காதல் வந்துச்சு. சரவணன் அங்கிள் சொன்னாரு என் கஷ்டத்துக்கு காரணமே நீங்க தானாம். உங்களுக்கு என் மேல கொஞ்சம் காதல் இருந்திருந்தாலும் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்கிருப்பேன். பட் உங்களுக்கு நான் ஒன்னுமே இல்லன்னு எனக்கு புரிய இரண்டு மாசம் தேவைப்பட்டுருக்கு.

எவ்வளவு பெரிய முட்டாள் நான்... உங்க வாய்ல இருந்து காதலிக்கிறேன்னு ஒரு வார்த்தை வராமலே, நீங்க என்ன காதலிக்கிறதா நினைச்சு உங்க கூட வாழ்ந்திருக்கேன்.

எனக்கு தெரியும் நீங்க கேஸ் நடக்கும் போது எங்களுக்கு எதிரா எதுவும் செய்யாம அமைதியா இருந்ததால மட்டும் தான் அப்பா வெளிய வந்திருக்கிறார். அதனால தான் நீங்க கொஞ்சம் நல்லவரோன்னு நம்பி நான் இங்க இருக்கேன். என் காதலுக்கு நீங்க தகுதியானவர் இல்ல, என்னால உங்கள எப்பவும் மன்னிக்க முடியாது." என்று கூறிய மான்சி சென்ற பிறகும் அவள் வார்த்தையின் தாக்கம் அவனிடம் அப்படியே இருந்தது.

தன்னை கடத்தியது விஜித் என்பதையும் சரவணன் மூலமும், தந்தை வெளி வர விஜித்தும் ஒரு காரணம் என்பதை முரளி மூலமும் தெரிந்துக் கொண்டவள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள்.

நெஞ்சு முழுவதும் காதல் இருந்தாலும் அவனை பழி வாங்கும் அளவு கோபமும் இருந்தது. மருத்துவ பரிசோதனைக்குச் சென்ற இடத்தில் பிள்ளைக்காக வழக்கை விட்டு கொடுத்ததை டாக்டர் மூலம் அறிந்தவள் அந்த பிள்ளை மூலமே தனது கோபத்தை தீர்க்க நினைத்துக் கொண்டாள்.

தனக்கும் அவள் மீது காதல் இருக்கின்றது என்பதை நிரூபிக்க விஜித்திற்கு ஒரு நிமிடம் போதும். ஆனால் அவ்வாறு நிரூபிப்பதை விட தன் காதலை அவளுக்கு உணர்த்த விரும்பினான்.



ஹாய் மக்களே....
இன்னும் இரண்டு எப்பில கதை முடிந்து விடும். கதை அடுத்த ஞாயிறு வரை மட்டுமே தளத்தில் இருக்கும்.

 
அத்தியாயம் 20

விஜித் நெருங்கினாலே மான்சி விலகி ஓட ஆரம்பித்தாள். அவளிடம் பேச வாய்ப்பு கொடுக்காமல் அவனுக்கே ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தாள்.

தானே சென்று முடிக்க வேண்டிய வேலைகள் இருந்தாலும், மான்சியை விட்டுச் செல்ல முடியாது முடிந்தவரை வெளி வேலைகளுக்கு ரவியை அனுப்ப ஆரம்பித்தான்.

வேலை முடிந்து வீடு வரும் நேரம் மான்சி நல்ல உறக்கத்தில் இருப்பாள். அல்லது அவள் தாய் தந்தையுடன் பேசிக் கொண்டிருப்பாள்.

அவள் குரலை கேட்க வேண்டும் என்பதற்காகவே அவனும் அமைதியாக இருப்பானே தவிர கோபப்படுவதை குறைத்துக் கொண்டான்.

மான்சிக்கு ஆறாம் மாதம் தொடங்கியிருக்க அவன் பிள்ளையின் வளர்ச்சியை ரசித்து பார்க்க ஆரம்பித்தான். அவன் தன்னையும் வயிற்றையும் பார்ப்பது பிடிக்காத மான்சி அன்றிலிருந்து சற்று பெரிய சைஸ் உடைகளை அணிய அது அவள் வயிற்றை பார்க்க விடாமல் தடுத்தது.

மான்சி மனநிலைக்காக ஒதுங்கி இருந்தாலும் பிள்ளை பாசம் அதிகமாகும் போதெல்லாம் உறங்கும் அவனவளின் வயிற்றில் கை வைத்து கருவில் இருக்கும் தன் பிள்ளைகளிடம் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டான்.

"நீங்க அப்பா கைக்கு சீக்கிரம் வந்திடுங்க. எந்த கஷ்டமும் தெரியாம உங்களை என் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்குவேன்." என்று இரவில் தன் பிள்ளையை கொஞ்சிக் கொண்டிருந்தான்.

உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொண்டிருந்த விஜித், அவன் கை பட்டு கூச்சத்தில் மான்சி எழுந்துக் கொண்டதை கவனிக்கவில்லை. கணவன் பேசுவதை எல்லாம் கேட்டவளுக்கு கோபம் மட்டுமே வந்தது.

வயிற்றை தடவிக் கொண்டிருந்த அவன் கையை தட்டி விட்டவள் உடையை சரி செய்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்.

"உங்க குழந்தை மேல ரொம்ப பாசம் போல?" என்று நக்கலாக கேட்க, தனது பாசத்தை அவள் கேலி செய்வது அவனுக்கு பிடிக்கவில்லை.

"உன் வயற்றில இருந்தாலும் இது என்னோட குழந்தை. என் பிள்ளை மேல உன்ன விட அதிகமாவே எனக்கும் பாசம் இருக்கு." என்று கூறி எழுந்துக் கொண்டான்.

"என் அப்பா என் மேல வைச்ச பாசத்த விடவா உங்க பாசம் பெருசு?" என்று எழுந்து நின்று மான்சி கேட்க,

"நிச்சயம் பெருசு தான். உங்க அப்பா உனக்கு கொடுத்ததை விட அதிகமா, கூடவே கொடுக்காத எல்லா சந்தோஷத்தையும் சேர்த்து என் பிள்ளைக்கு நான் கொடுப்பேன்." என்று கண்களில் கர்வத்துடன் கனவு மின்ன கூறினான்.

"அது உங்களால முடியாது. எனக்கு என் அப்பா கொடுத்ததை உங்களால கொடுக்கவே முடியாது." என்று சவாலாகவே சொன்னாள்.

"ஏன் முடியாது?" என்று புருவம் இடுங்க கேட்டான்.

"இந்த உலகத்தில என் அப்பாவுக்கு என்ன தவிர எதுவும் முக்கியம் இல்ல. எனக்காக அவரோட பெத்தவங்க, கூட பிறந்தவங்க, பிறந்த வீட்டு வசதி எல்லாத்தையும் ஒரு நொடியில எனக்காக தூக்கி எறிஞ்சிட்டு வந்தாரு. கையில ஒத்த ரூபா காசு இல்லாம கஷ்டத்தில இருக்கும் போது கூட என்ன மகாராணியா உணர வைச்சாரு. என் அம்மா எனக்காக என் குறை தெரியாம இருக்க, மொத்த சொந்தங்களையும் ஒதுக்கினாங்க.

ஒரு சாதாரண குழந்தையை வறுமையில வளர்க்கிறதே கஷ்டம், இதுல என்ன மாதிரி கண்ணு தெரியாத குழந்தைக்கு அதோட குறை தெரியாம வளர்க்கிறது எவ்வளவு பெரிய கஷ்டம். யாரு உதவியும் இல்லாம எனக்காக போராடி என்னையும் ஜெயிக்க வைச்சு அவங்களும் வாழ்க்கையில ஜெயிச்சாங்க.

நான் அழுதா எனக்கு ஆறுதல் சொல்லி, சிரிச்சா என் கூடவே சேர்ந்து சிரிச்சு என்ன சுத்தி மட்டும் தான் அவங்க வாழ்க்கை இருந்தது. இனியும் இருக்கும். அவங்கள விட பெஸ்ட் அம்மா, அப்பா யாரும் இருக்க முடியாது." என்று கூறினாள்.

மான்சியின் பேச்சுக்கு பதில் கூற நினைத்தவன் அவள் மூச்சு வாங்குவதை பார்த்து அமைதியானான்.

அப்போது மான்சியிடம் எதுவும் பேசாமல் படுத்துவிட்டாலும், அவன் மனது அவள் கூறியதை அலசி ஆராய்ந்துக் கொண்டிருந்தது.

நிச்சயம் திலகன் போல தன்னால் தன் பிள்ளைக்காக விஜயாவை தூக்கி எறிய முடியாது. ஆறு வயது பிள்ளைக்கு பதினாறு வயது பெண் தாயாக மாறுவது ஒன்றும் சாதாரண காரியம் இல்லையே.

தந்தை மீது காதல் கொண்டு திருமணம் செய்துக் கொண்டாலும், விஜித் மீது காட்டிய தாய் அன்பு என்றும் துளி கூட குறைந்ததில்லை.

விஜயா மாடர்ன் உடையை விரும்பி அணியும் நேரம் எல்லாம் அவர் வயதுக்கு ஏற்ப சிறு பெண்ணாக தெரிவதால் உடன் பயிலும் நண்பர்களிடம் தந்தையின் மனைவி என்று அறிமுகப்படுத்த முடியாது திணறி அவரிடம் உடைக்காக சண்டையிட்டு இருக்கின்றான்.

அவனுக்காகவே பள்ளி கல்லூரிக்கு வரும் நேரத்தில் புடவையை தவிர வேறு எதையும் அணிவதில்லை. அதே போல விஜித் அன்பை முழுமையாக பெற குடும்ப கட்டுப்பாடு செய்துக் கொண்டு வந்தார்.

இப்படி பெறாமலே தன் மீது அன்பு காட்டுபவரை எப்படி அவனால் விலக்க முடியும்? நிச்சயம் முடியாது...

அவரின் அன்பில் கணவனின் காதலை பெற வேண்டும் என்ற சுயநலம் இருந்த போதிலும் அவரை கறை சொல்ல அவனால் முடியவில்லை.

திலகன் போல தாயை தூக்கி எறிந்து தான் தன் பாசத்தை பிள்ளைக்கு காட்ட வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே என்று மூளை வாதிட்டாலும், அவர்களின் பிள்ளை பாசம் அவனை வியக்க வைத்தது.

மான்சி விசயத்தில் தனது முட்டாள் தனம் புரிந்த போதும் மன்னிப்பு கேட்கத்தான் மனதில்லை.

மான்சி தன் மனதின் ஆதங்கத்தை வெளிப்படுத்திய பின் விஜித்திடம் கோபமாக பேசவில்லை. அவனிடம் அவள் மொழி மௌனம் மட்டுமே என்ற நிலைப்பாட்டில் இருந்து அவள் வெளி வரவில்லை.

யானையின் காதுக்குள் சென்று குடையும் எறும்பு போல மான்சியும் விஜித் மனதை மௌனமாகவே இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குடைய ஆரம்பித்தாள்.

விஜித் மீது முன்பு இருந்த கோபம் குறைந்த போதும், அவனால் தந்தை சிறை சென்றதை மட்டும் மறக்க முடியவில்லை. அதற்காகவே அவனை கொஞ்சம் வதைக்க நினைத்தாள்.

தன் மீது காதல் இல்லை என்றாலும் குழந்தையின் மீது நிச்சயம் பாசம் இருக்கும் என்று புரிந்துக் கொண்டு கொஞ்சம் தைரியமாகவே சில வேலைகளை செய்து வைத்தாள்.

காலையில் எழுந்த விஜித் உடற்பயிற்சி முடித்துவிட்டு காபி அருந்துவான். அன்றும் அப்படியே காபியை ஒரு மிடறு மிடறியவன் அதன் சுவையில் அப்படியே அதை துப்பிவிட்டு வேலையாட்களை திட்ட ஆரம்பித்தான்.

"காபி கூட போட தெரியாதா?" என்று திட்ட,

"சார் இது மேம் போட்டது." என்று வேலையாள் கூற, மான்சியை முறைத்து பார்த்தான்.

அவளோ அவனை கண்டுக் கொள்ளாது அறைக்குச் சென்று விட்டாள். கோபத்தை அவளிடம் காட்ட கூடாது என்று நினைத்துக் கொண்டவன் அவளை தொடர்ந்து வந்தான்.

"ஏந்திழையாள் பழைய கதைகள்ல வர மாதிரி இப்படி சில்லியா பிஹேவ் பண்ணாத." என்று கூறி விட்டு குளிக்கச் செல்ல, அங்கு அவன் பயன்படுத்தும் ஷாம்பு, சோப், துண்டு என எதுவும் அதன் இடத்தில் இல்லை.

கோபத்தில் பற்களை கடித்தவன் அனைத்தையும் தேடி கண்டு பிடித்து குளித்து விட்டு வெளியே வர, அவன் உடைகள் அனைத்தும் கலைத்து போடப்பட்டிருந்தது.

கோபம் கட்டுக்கடங்காமல் வந்த போதும் கைக்கு கிடைத்த உடையை அணிந்துக் கொண்டான்.

அலுவலகம் செல்ல தேவையானதை எடுத்துக் கொண்டிருக்க, இன்றைய பங்குதாரர் சந்திப்பிற்கு என்று வைத்திருந்த கோப்பில் தண்ணீர் கொட்டியிருந்தது. பக்கங்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று ஒட்டி பிரித்தால் கிழியும் நிலையில் இருந்தது.

உண்மையில் அந்த கோப்பில தண்ணீரை கொட்டியது அவள் அல்ல. அவள் வளர்க்கும் செல்ல பூனைக்குட்டி.

விஜித்தை வெறுப்பேற்ற காபி தொடங்கி கபோர்ட் வரை தன் கை வரிசையை சிறப்பாக காட்டி விட்டாள்.இறுதியாக அலுவலக மேஜையில் இருந்த கோப்பை எடுத்து படித்தவள் அதை ஔித்து வைப்போமா என்று யோசித்து பின் அதை கைவிட்டாள்.

அந்த கோப்பில் அடங்கியிருப்பது விஜித் என்ற ஒருவனின் தனிப்பட்ட உழைப்பு மட்டும் இல்லையே.

கோப்பை மேஜை மீது வைத்து விட்டு திரும்ப அவள் செல்ல பூனைக்குட்டி அருகில் இருந்த தண்ணீர் டம்ளரை தட்டி விட்டிருந்தது.

"டீனு (பூனைக்குட்டி) என்ன பண்ணி வைச்சிருக்க?" என்று பூனைக்குட்டியை கடிந்துக் கொண்டவளுக்கும், சற்று குற்ற உணர்ச்சியாகி விட்டது.

"ஏந்திழையாள் என்ன இது?" என்று கை முஷ்டி இறுக கேட்க, அவளோ கண்டுக் கொள்ளாமல் புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள்.

"எனக்கு ஆபிஸ் போக டைம் ஆகுது. இனி இப்படி செய்து எனக்கு கோபம் வர வைக்காத." என்று கோபமாகவே கூற,

"கோபம் வந்தா இனி செய்வீங்க." என்று வீம்பாக கேட்டு அவனுக்கு மிக அருகில் நின்றாள்.

பூனைக்குட்டி செய்த தவறை கூறாமல் குழந்தைக்காக தன்னை ஒன்றும் செய்ய மாட்டான் என்ற நம்பிக்கையில் அவன் முன் நின்றாள்.

நீண்ட நாள் கழித்து தனக்கு மிக அருகில் நின்றவளின் வாசம் அவன் நாசியை நிறைக்க, கோபம் மறைந்து வேறு உணர்வுகள் ஆட்கொண்டது.

"எனக்கு கோபம் வந்தா சேதாரம் உனக்கு தான். இப்போ எனக்கு நேரம் இல்ல வந்து நான் என்ன செய்வேன்னு புரிய வைக்கிறேன்." என்று அவள் மேனியை பார்வையால் அளவிட்டபடி கூறினான்.

செல்லும் வழி முழுவதும் மனம் கவர்ந்தவளின் நினைவுகள் மட்டுமே. நாசியில் அவள் வாசம் மிச்சம் இருக்க வீம்பை இழுத்து பிடித்துக் கொண்டிருக்க முடியவில்லை. இன்று மாலை தனது பக்க தவறுக்கு அவளிடம் மன்னிப்பு கேட்டுவிட வேண்டும், அவள் பெற்றோரிடமும் பேசுகின்றேன் என்று கூற முடிவெடுத்துக் கொண்டான்.

யோசனையுடன் அலுவலகம் சென்றவன் தனக்காக அணிவகுத்து நின்ற வேலைகளுக்கு நடுவே எதையும் சிந்திக்க நேரம் கிடைக்கவில்லை.

ரவியிடம் வேறு கோப்பு ஒன்றை தயாரிக்க சொல்ல, அவனும் கணினி தகவலை திரட்டி ஒரு மணி நேரத்தில் புதிதாக ஒன்றை தயாரித்து விட்டான்.

வெளிநாட்டு ஒப்பந்தம் ஒன்றிற்காக பல நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் கலந்துரையாடல் மதியம் ஆரம்பித்து மாலை வரை நீண்டது.

இடையில் யாரும் வர அனுமதி இல்லை என்பதால் வெளியே நடக்கும் கலவரம் எதுவும் அவனுக்கு தெரியவில்லை. ரவியும் விஜித் உடன் இருந்ததால் யாரும் அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை.

மாலை முடிந்து இரவு நெருங்கும் நேரம் கலந்துரையாடல் முடிய, ரவி அனைத்தையும் எடுத்து வைக்க ஆரம்பித்தான். அதுவரை அணைத்து வைத்திருந்த கைப்பேசியை இருவரும் உயிர்ப்பிக்க எண்ணற்ற அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் வந்திருந்தது.

அதில் மான்சியின் எண்ணும் இருக்க புருவம் சுருக்கிய விஜித் அவளுக்கு அழைத்தான். அழைப்பு சென்றுக் கொண்டிருந்ததே தவிர மான்சி அதை ஏற்கவில்லை.

ஏதோ தவறாக தோன்ற வீட்டு எண்ணிற்கு அழைத்தான். அந்த பக்கம் சொன்ன செய்தில் அவன் கைப்பேசி தவறி கீழே விழுந்தது.

திலகன் மான்சியை அழைத்துச் சென்றது தெரிந்தும் அவனால் கோபம் கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் அவள் அங்கு இருப்பது கூட அவனுக்கு நிம்மதியே.

மான்சி நிலை என்னவாகிற்றோ என்று பயந்த விஜித் பதறிக் கொண்டு அவள் வீட்டிற்கு கிளம்பினான். வீட்டு வாயிலில் ஊடகம் முற்றுகையிட்டிருக்க, அவர்களை தன் காவலர்கள் கொண்டு ஒதுக்கியவன் வீட்டிற்குள் வந்தான்.

விஜித் பதறியதற்கு அவசியம் இல்லை என்பது போல மான்சி சலனமின்றி அமைதியாகவே தன் பெற்றோருக்கு நடுவில் அமர்ந்திருந்தாள்.

விஜித் வந்து விட்டதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தவள் மெல்ல எழுந்து அவன் அருகில் வந்தாள். அவள் நடந்து வரும் தோரணையே மனது வலிக்கும் படி ஏதோ சொல்ல போகின்றாள் என்பதை உணர்த்தியது.

"சொன்ன மாதிரி எனக்கு தண்டனை கொடுத்துட்டீங்க... இப்போ சந்தோஷமா?" என்று ஆர்ப்பாட்டமின்றி கேட்க, விஜித் தலை இல்லை என்பது போன்று மறுப்பாக அசைந்தது.

"ம்மா உங்க விருப்பப்படி இவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்தேன். ஆனா பதிலுக்கு இவர் எனக்கு காயத்தையும் வலியையும் மட்டும் தான் கொடுக்கிறார். இனி நான் என்ன செய்யணும்..?" என்று வெண்பாவிடம் மான்சி கேட்க, மகளிடம் கூற அவரிடம் பதில் இல்லை.

விஜித் உண்மை தெரிந்த பின் மகளிடம் மன்னிப்பு கேட்டு சந்தோஷமாக வாழ்வான் என்று நினைத்திருக்க, இன்று மகள் கண்ணீருடன் வந்ததை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை...

தாங்கள் காயப்பட்ட போது கூட தைரியமாக காட்டிக் கொள்ள முடிந்தது. ஆனால் மகள் மீண்டும் காயப்படும் போது அவர்களும் அவளுடன் உடைந்து போயினர்.

இது வரை செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் முன், செய்யாத தவறும் சேர்ந்துக் கொள்ள விஜித்திற்கு தன்னவள் முகத்தை பார்க்க முடியவில்லை.
 

அத்தியாயம் 21

"என் மேல காதல் இல்லன்னாலும் உங்க பிள்ளைக்காக என்ன பொறுத்து போவீங்கன்னு தப்பா நினைச்சுட்டேன். அம்மா சொன்ன மாதிரி இன்னொரு வாய்ப்பு கொடுத்தா மனசு மாறுவீங்கன்னு நினைச்சு சும்மா உங்கள சீண்டி விளையாடுனது கூட உங்களால தாங்கிக்க முடியல. ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கோங்க நீங்க மிரட்டினா பயப்படுற பழைய மான்சி நான் இல்ல." என்று கூறியவள், ஒரு கையால் வயிற்றை பிடித்துக் கொண்டு வேகமாக தொலைப்பேசி நோக்கி நடந்தாள்.

"ரிப்போர்ட்டர்ஸ் அண்ட் மீடியா எல்லாரையும் வீட்டுக்கு முன்னாடி வர சொல்லுங்க." என்று செக்யூரிட்டியிடம் கூறி விட்டு வைத்தாள்.

அவர்களை வர கூறிய இடத்திற்கு மான்சி சென்று நிற்க அவளுடன் அவளுக்கு துணையாக பெற்றவர்களும் வந்து நின்றுக் கொண்டனர்.

பின்னே திரும்பி விஜித்தை பார்த்து நக்கலாக சிரித்தவள் ஊடகத்தின் கேள்விக்கு பதில் சொல்ல தயாராகவே இருந்தாள்.

அவள் பார்வையே எனக்கு துணை என் பெற்றவர்கள் மட்டுமே என்று விஜித்திற்கு சொல்லியது. அதை புரிந்துக் கொண்டவன் நிலமையின் தீவிரத்தை எப்படி தடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

வந்தவர்கள் இடைவிடாது தங்கள் கேள்விகளை மான்சியிடம் கேட்க, ஆத்திரத்தில் விஜித் நரம்புகள் புடைத்துக் கொண்டு நின்றது.

நடந்தது இது தான்.

மான்சியின் மருத்துவ அறிக்கையின் நகல் அனைத்து ஊடகங்களுக்கும் இன்று காலை சென்றடைந்திருக்க, அவளின் பார்வை திறன் பற்றி கேள்வி கேட்டுக் கொண்டு நின்றனர்.

'மான்சி மேடம் உங்களுக்கு பகலிலும் வெளிச்சத்திலும் பார்வை தெரியாதுன்னு வந்த தகவல் உண்மையா..?'

'அதனால தான் நீங்க கண்ணாடி இல்லாம வெளிய வரதில்லையா..?'

'இந்த உண்மை விஜித் சாருக்கு தெரியாம மறைச்சு தான் கல்யாணம் செய்தீங்களா..?'

'உண்மை தெரிஞ்சு வந்த சண்டையால தான் நீங்க இரண்டு மாதம் அம்மா வீட்டுல இருந்தீங்களா..?' என்று கேள்வி கணை பறக்க அமைதியாக அனைத்தையும் எதிர் கொண்டாள்.

"எனக்கு டே ப்ளைன்ட்னஸ் இருந்தது உண்மை தான். பட் இப்போ எனக்கு கண் நல்லா தெரியும். இரண்டு சர்ஜெரி கண்ணுக்கு செய்திருகேன். நான் இத சொல்லாம விட்டது ஒன்னும் பெரிய கொலை குற்றம் இல்ல.
என் குறை எந்த விதத்திலையும் என் பாட்டை ரசிக்கிற ரசிகர்களை பாதிக்காது. அண்ட் என்ன பற்றி எல்லாம் தெரிஞ்சு தான் விஜித் என்ன கல்யாணம் செய்தார்." என்று மான்சி துணிவுடன் பத்திரிக்கையளர்களை எதிர் கொண்டாள்.

துணிவு கொண்டவர்களை உடைப்பது தானே கேள்வி கேட்பவர்களின் வேலை. அடுத்த சில கேள்விகள் மான்சி கண்களோடு சேர்த்து காதையும் மூடிக் கொள்ள செய்தது.

மான்சிக்கு பாடங்களில் பாட முதல் வாய்ப்பு கொடுத்த நேத்ரன் தொடங்கி அனைவரும் குறுகிய கால கட்டத்தில் எதற்காக குறையுள்ள பெண்ணான தங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று சில தகாத வார்த்தைகளையும் சேர்த்து கூற விஜித் பத்திரிக்கையாளர்கள் முன் வந்தான்.

"இனஃப் இதுக்கு மேல ஒரு கேள்வி வந்தாலும் என்னோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டியிருக்கும். உங்க எல்லாருக்கும் என்ன பிரச்சனை?

மான்சி ஏந்திழையாள் மாதிரி தன் குறையோட சொந்த வாழ்க்கையிலும் வெளி உலகத்திலும் போராடி சாதித்த சாதனையாளர்கள் இந்த உலகத்தில நிறைய பேர் இருக்காங்க. அப்படிபட்ட பெண்கள் சாதிக்க தடையா இருக்கிறதே இதோ இப்போ நீங்க கேட்டீங்களே இந்த மாதிரி கேள்வி தான். பெண்களும் சாதிக்க திறமையும் கடின உழைப்பும் மட்டும் போதும்ன்னு எப்போ உங்கள மாதிரியான ஆட்கள் உணருவீங்களோ அப்போ தான் பெண்கள் நிம்மதியா வேலை செய்ய முடியும்.

ஒரு பெண்ணு சாதிச்சா அவளோட திறமையால் அடைந்த அந்த வெற்றிய விட, அவ ஒரு பொண்ணு அது மட்டும் தான் உங்களுக்கு தெரியுது ரைட்.

என் மனைவிக்கு கிடைச்ச மாதிரி ஒரு அப்பா அம்மா எல்லா பொண்ணுங்களுக்கும் கிடைக்கணும். அப்போ யாருக்கும் நீங்க கேட்ட மாதிரி கேள்வி கேட்க தோணாது." என்று பேசிய விஜித் ரவியை பார்த்து கண் ஜாடை காட்டி விட்டு மான்சியை கையணைவில் வைத்துக் கொண்டு வீட்டிற்குள் வந்தான்.

வரும் போது ரவி கையில் திணித்த காகிதத்தை பிரித்து படித்தவன் சட்டை பையில் பத்திரப்படுத்தினான்.

வீட்டிற்குள் வந்ததும் விஜித் மூவரின் முகத்தையும் பார்க்க யாரிடமும் உயிர்ப்பில்லை.

"என்ன மன்னிச்சிடுங்க மாமா, அத்தை." என்று வெண்பா, திலகன் இருவரின் காலிலும் விஜித் விழ, இதை எதிர்பாராத மூவரும் பதறினர்.

"ப்ளீஸ் எழுந்திரிங்க..." என்று திலகன் கூறிய பிறகே எழுந்தவன் அனைவரின் முகத்தையும் ஆழ்ந்து பார்த்தான்.

"நான் மட்டும் தான் சரின்னு ஒரு ஆணவம் எனக்குள்ள எப்பவும் இருக்கும். அது இன்னைக்கு மொத்தமா இல்லாம போயிட்டு. என்னோட தவறான புரிதல், அதனால நான் உங்க கிட்ட நடந்துக்கிட்டது எல்லாம தப்பு தான். அதுக்கு மன்னிப்பு கேட்க கூட எனக்கு தகுதி இல்ல.

ஏந்திழையாள் அப்பா அம்மா விட அதிகம் பாசம் கொட்டுற அப்பாவா இருக்கிறது கஷ்டம் தான். ஆனா நான் அவங்க மாதிரி இருக்க முயற்சி செய்றேன். இந்த முறை நான் தப்பு பண்ணல. இதுக்கு காரணம் உங்க அக்கா பையனும், டாக்டர் வருணோட பையன் தருணும் தான்." என்று கூற, நிலையை முழுதாக புரிந்துக் கொள்ளவே மூவருக்கும் நேரம் தேவைப்பட்டது.

பெண் தராத கோபத்தில் தருண் மற்றும் அவனது பள்ளி நண்பனான திலகனின் அக்காள் மகனும் சேர்ந்தே இதை செய்திருந்தனர்.

அலுவலகத்தில் இருந்த மான்சியின் மருத்துவ அறிக்கையை அழித்து விடும் படி விஜித் கூறியிருக்க, ரவி தவறுதலாக அதை மேசையில் வைத்து விட்டு உணவருந்தச் சென்று விட்டான்.

திலகனின் மூத்த சகோதரியின் மகன் தனது கல்லூரி தோழனான ரவியை பார்க்க வந்தவன் கண்ணில் அந்த மருத்துவ அறிக்கை விழுந்தது.

அதில் தருண் மருத்துவமனை விபரத்தை பார்த்தவன் அவனிடம் தேவையான தகவலை திரட்டி அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பி விட்டான்.

நடந்ததை கேள்விப்பட்டதும் திலகன் தனது சகோதரி வீட்டிற்குச் சென்று சண்டையிட்டு, சில வருடங்களுக்கு முன் கொடுத்த தனது பணம் நாளை வர வேண்டும் என்று மிரட்டி விட்டே வந்தார்.

திலகன் வீடு வரும் வரை விஜித் அங்கே தான் இருந்தான். இரவு உணவு நேரம் யாரும் அழைக்காமல் சென்று அமர வெண்பாவும் மகளை பார்த்து விட்டு பரிமாறினார். அனைத்தையும் கேட்டு வாங்கி உண்டு பாராட்டவும் செய்ய மான்சி தான் குழம்பி போனாள்.

இன்று நடந்ததற்கு கணவன் காரணம் இல்லை என்று தெரிந்தது, தாய் தந்தையிடம் அவன் மன்னிப்பு கேட்டது என இரண்டில் கணவன் மீது இருந்த கோபம் குறைந்து விட்டது. ஆனாலும் அவளுக்கு முன்பு அவன் செய்த எல்லாவற்றையும் மறக்க சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது.

இதுவரை பெற்றவர்களிடம் சாதாரணமாக பேசியிராதவனின் உரிமையான நடவடிக்கை தான் அவளை யோசிக்க வைத்தது.

"சாப்பாடு சூப்பர். மார்னிங் எனக்கு சாப்பாடு லைட்டா இருந்தா போதும். அத ஈக்குவல் பண்ண மதியம் நான்வெஜ்ல கொஞ்சம் ஹெவியா சமைச்சிடுங்க. ஃப்ரூட் சேலட் மஸ்ட். நைட் டின்னர் யோசிச்சு சொல்றேன்." என்று வெண்பாவிடம் கூறி விட்டு மான்சியை பார்க்க, அவளும் விஜித் முகத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என்ன?" என்று விஜித் கேட்க,

"அத நான் கேட்கணும். உங்களுக்கு என்ன வேணும்?" என்று கேட்க,

"இப்போதைக்கு மாமியார் வீட்டு விருந்து வேணும்." என்று கூறியவன் அவளை கடந்து வாசல் நோக்கிச் சென்றவனிடம் விஜித் கார் ட்ரைவர் சில பெட்டிகளை கொடுத்து விட்டுச் செல்ல, அவற்றுடன் மான்சி அறைக்குச் சென்றான்.

பெட்டியுடன் விஜித் செல்வதை பார்த்த மூவரும் அவன் இங்கு தான் இருக்க போகின்றான் என்பதில் ஒருவர் மற்றவரை பார்த்துக் கொண்டனர்.
 
அத்தியாயம் 22

விஜித்தை தொடர்ந்து வேகமாக மாடி ஏறி வந்த மான்சிக்கு மூச்சு வாங்கியது.

"ஏந்திழையாள் தண்ணி குடி... இப்படியா வேகமா மாடிக்கு வருவ. அத்தை மாமாக்கிட்ட சொல்லி கீழ இருக்கிற ரூம்க்கு ரெண்டு பேரும் ஷிஃப்ட் ஆகணும்." என்று கூறி பாட்டிலை நீட்ட அதை தட்டி விட்டாள்.

"உங்க அடுத்த திட்டம் தான் என்ன விஜித்? எதுக்காக இந்த ட்ராமா?" என்று மான்சி கோபமாக கேட்க, விஜித் முகம் மாறியது.

"லுக் அட் மீ ஏந்திழையாள்... உன் அம்மா அப்பாவ தப்பா புரிஞ்சிக்கிட்டு பழி வாங்க நினைக்கும் போது கூட நான் யார் கிட்டவும் நடிக்கல." என்று இறுக்கமாக பேச,

"அதான் கேட்கிறேன் அப்போ பாசமா இருக்கிற மாதிரி நடிக்காத நீங்க இப்போ எதுக்காக நடிக்கிறீங்க..?" என்று கேட்டாள்.

"எனக்கு எப்பவும் நடிக்க வேண்டிய அவசியம் இருந்ததில்லை ஏந்திழையாள். அம்மா உயிருக்கு போராடும் போது மகனா அவங்கள மட்டும் யோசிச்சு செய்த தப்ப இப்போ சரி செய்ய பார்க்கிறேன்." என்று விஜித் அவள் கண்களை பார்த்துக் கொண்டே கூறினான்.

"நடந்த உண்மை உங்களுக்கு சில நாட்களுக்கு முன்னே தெரியும். ஆனா அப்போ இல்லாத மாற்றம் இன்னைக்கு ஏன் வந்திருக்கு..?" என்று மான்சி வினவ, தலையை அழுத்தமாக கோதிக் கொண்ட விஜித் திரும்பி நின்றான்.

"உண்மை தெரிஞ்சாலும் இறங்கி வர என் ஈகோ இடம் கொடுக்கல. ஒரு பிரச்சனை வரும் போதே நீ உன்ன பெத்தவங்க கிட்ட ஓடி வரன்னா அவங்க உனக்கு கொடுத்த நம்பிக்கை தான் காரணம். அந்த நம்பிக்கை என் மேலயும் உனக்கு வர நான் என் ஈகோல இருந்து இறங்கி வந்திட்டேன். அவ்வளவு தான்..." என்று கூறியவன் அவள் கையை பிடித்து கட்டிலில் அமர்த்தியவன் தானும் அவளை நெருங்கி அமர்ந்தான்.

விஜித் கையில் இருந்து தன் கையை உருவிக் கொண்டவள் விலகி அமர்ந்தாள்.

"நம்ம கதையில் லவ் அண்ட் ரொமான்ஸ் ரொம்ப கம்மியா இருக்குல்ல." என்று இருவருக்கும் இடையே உள்ள இடத்தை நிரப்பிக் கொண்டு விஜித் கூற,

"அதுக்கு நான் காரணம் இல்ல. என்னோட எதிர்பார்ப்பு எதுவும் உங்க கூட இருந்த நாட்களில் எனக்கு கிடைக்கல." என்று மான்சி பெருமூச்சுடன் கூறினாள்.

"ஐ நோ ஏந்திழையாள் நான் மட்டும் தான் காரணம். என்னால நடந்து முடிஞ்சத மாற்ற முடியாது. பட் இனி நடக்க போறது நல்லபடியா கொண்டு போகலாம்." என்று கூற, மான்சியிடம் அதற்கு பதில் இல்லை.

மனது வேறு ஒன்றை விஜித்திடம் எதிர் பார்த்தது. அதை அவனிடம் கேட்டு பெறுவதில் அவளுக்கு விருப்பம் இல்லை. அவனாக வரட்டும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்து விட்டாள்.

சுவரில் மாட்டப்பட்டிருந்த ஓவியத்தை பார்த்துக் கொண்டிருந்த மான்சியின் முகத்தை தன் புறம் திருப்பிய விஜித் "நீ மனசில நினைக்கிறத சொல்லு ஏந்திழையாள்." என்று மென்மையாகவே கேட்டான்.

"மனசில இருக்கிறத எல்லாம் பேசுனா இங்க காயங்கள் மட்டும் தான் மிஞ்சும். உங்களுக்கு ஓகேன்னா சொல்லுங்க நானும் சொல்றேன்." என்று கூற அவள் என்ன சொல்லப்போகின்றாள் என்று ஓரளவு கணிப்பு இருந்தாலும் அவள் வாய் வார்த்தைக்காக காத்திருந்தான்.

"தப்பு செய்யாம கிட்டத்தட்ட ஏழு மாதம் என் குடும்பம் உங்களால கஷ்டப்பட்டிருக்கோம். இதுக்கு என்ன சமாளிப்பு சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியல.

சொந்தம் எதுவும் வேண்டாம்ன்னு விஜயா அத்தை வீட்ட விட்டு ஓடி போய் கல்யாணம் பண்ணும் போது இருந்த உறுதி கடைசி வரைக்கும் இருந்திருக்கணும். கொஞ்சம் கூட லாஜிக்கா யோசிக்காம முடிவெடுத்து ஓடி போனவங்களுக்கு சொந்தம் வேணும்னா அதுக்கு நானும் என்ன பெத்தவங்களும் தான் பலி ஆடா?

உண்மைய சொல்லணும்னா அவங்க சுயநலத்தோட மொத்த உருவம். உங்களுக்கு நல்ல அம்மாவா இருந்திருந்தாலும் எனக்கு அவங்க சுயநலவாதியா தான் தெரியுறாங்க. அண்ட் அவங்க சுயநலம் தெரியாம ஆடுன நீங்க ஒரு முட்டாளா மட்டும் தான் தெரியுறீங்க.
துளி காதல் கூட இல்லாத உங்க முட்டாள் தனம் தெரியாம உங்க கிட்ட சிக்கின நான் தான் பெரிய முட்டாள். என்னோட சேர்த்து என் அப்பா அம்மாவையும் கஷ்டப்படுத்திருக்கிறேன்." தனது மனதில் இருந்த மொத்த ஆதங்கத்தையும் இறக்கி வைத்த மான்சி விஜித் முகத்தை பார்க்க அதுவோ சலனமின்றி இருந்தது.

"நான் ஃபர்ஸ்ட் டைம் பார்த்தது ஏழு வயசு குட்டிப் பொண்ணு போட்டோவை. அதை பார்த்து எனக்கு எப்படி காதல் வரும். அம்மாக்காக மட்டும் தான் உன்ன கல்யாணம் பண்ண நினைச்சேன். ஆனா எனக்காக தான் உன்ன கல்யாணம் செய்தேன். இது உண்மை மான்சி. என் மனசில இருக்கிற இருக்க போற பொண்ணு நீ மட்டும் தான்.

அன்னைக்கு பீச்ல உன் கிட்ட ஏன் சத்தியம் கேட்டேன்னு தெரியுமா? எனக்கே முதல் தடவை நான் செய்யுறத நினைச்சு ஒரு பயம். எங்க உண்மை தெரிஞ்சு நீ என்ன விட்டு போயிடுவியோன்னு.

எனக்கு பொய்யா நடிக்க தெரியல அதான் உன் கிட்ட இல்லாத காதலை சொல்லல. பட் நீ என்ன வேண்டாம்ன்னு சொல்லிட்டு போன அன்னைக்கு தான் நான் உன்ன எவ்வளவு லவ் பண்றேன்னு உணர்ந்தேன்.

அந்த பொண்ணு நான் செட் பண்ணல. அதுவும் தருண் வேலை தான். தருண் ஆட்கள் எடுத்த வீடியோவை உங்க அப்பாவ கடத்த அனுப்பின என் ஆட்கள் பிடிங்கிட்டாங்க. நடந்ததை எனக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டேன்.

நீயா என்கிட்ட வரணும்னு உன் கஷ்டத்தில கூட கிட்ட வரல. உன் ப்ரையாரிட்டி உன்ன பெத்தவங்க தான்னு நீ சொன்ன கோபத்தில புத்தி மலுங்கி போய் வீடியோவ ரிலீஸ் பண்ணிட்டேன். அந்த நேர கோபத்தில எதையும் நான் யோசிக்கல. ஆத்திரத்தில அறிவ கடன் கொடுத்திட்டேன்.

நீ உங்க அப்பாக்காக உருவாக்கின ரிப்போர்ட் பொய். அத என்னால ஈஸியா நிரூபிச்சிருக்க முடியும். பட் உனக்காக மட்டும் அமைதியா இருந்தேன். பணத்தை கொடுத்து அந்த பொண்ணையும் தருண் ஆட்களையும் அடக்கினேன்." என்று கூற மான்சி எதுவும் கூறாமல் படுத்துக் கொண்டாள்.

முழு தவறும் விஜித் செய்யவில்லை என்றாலும் தந்தை கஷ்டத்திற்கு அவனும் தானே காரணம் என்று மூளை மீண்டும் மீண்டும் நினைவுப் படுத்த கோபத்தில் வார்த்தைகளை விட மனதின்றி படுத்தவள் உறங்கி போனாள்.

மான்சி உறங்கிய பின்னும் உறக்கம் வராமல் அறைக்குள் நடை பயின்றவன் நடு இரவிற்கு பின்னே உறங்கினான்.

அடுத்த நாள் மாதாந்திர பரிசோதனைக்கு மான்சி கிளம்ப விஜித்தும் அவளுடன் தயாராகி வந்தான். அவனை பார்த்தும் மான்சி எதையும் பேசி மனநிலையை கெடுத்துக் கொள்ளாமல் அமைதியாக காரில் ஏறினாள்.

பரிசோதனை முடிந்து வெளி வரும் வரை அவளிடம் என்ன பேசினாலும் அதற்கு பதில் இல்லை.

பிரிந்திருந்த காலத்தில் விஜித் செய்த தவறை முன்னிறுத்தி அவன் நினைவை ஒதுக்க முடிந்தவளுக்கு அவன் தன்னிடம் வந்த பிறகு கோபத்தை முகத்திற்கு நேரே காட்ட முடியவில்லை. அதே போல் அவன் செய்த செயலை மன்னித்து முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளத்தான் முடியவில்லை.

விருப்பத்திற்கும் வெறுப்பிற்கும் இடையே சிக்கி தவித்தவள் மனநிலை என்ன என்பதை அவளாலே உணர முடியவில்லை.

மான்சி முழுதாக தன் காதலை உணரும் முன் தன் தவறை மன்னிக்க வேண்டும் என்று நினைத்த விஜித் நேரடியாக நாடியது வெண்பா திலகனின் உதவியை தான்.

வெண்பா, திலகன் இருவருக்கும் அவன் மீது மலையளவு கோபம் இருந்த போதிலும் மகளுக்காக இறங்கி வந்தனர்.

மான்சி விருப்பங்களை கேட்டு தெரிந்துக் கொண்டான்.

ஒவ்வொரு நாளும் மான்சிக்கு பிடித்த ஏதோ ஒன்று அவளுக்கு கிடைத்தாலும் அதை ஏற்க முடியாதவள் ஒரு முறைப்புடன் அவனை கடந்து விடுவாள்.

விஜயாவின் பொறுப்பு மொத்தமும் அவரது பெற்றோர் செல்வராஜ் கனகா ஏற்றுக் கொள்ள, அவரை பற்றி கவலை இல்லாமல் மான்சியை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினான்.

விதிக்கு விஜித்துடன் விளையாட பிடித்திருந்தது போல. அவனுடன் மேலும் விளையாடி பார்க்க நினைத்து அடுத்த ஆட்டத்தை ஆரம்பிக்க, மான்சியின் கோபம் மொத்தமும் கணவன் மீது திரும்பியது.
 
அத்தியாயம் 23


மான்சியை சமாதானம் செய்ய விஜித் எடுத்த அனைத்து முயற்சிகளும் வெற்றிகரமாக தோல்வியை தழுவியது.

மனதின் வார்த்தைகளுக்கு ஒலி வடிவம் கொடுக்க தெரியாது தவித்தவன் அவளை எப்படி அணுக என்று யோசித்து யோசித்து முடியை பிய்த்துக் கொள்ள ஆரம்பித்தான்.

விஜித் முயற்சிகள் புரிந்த மான்சிக்கு அவன் மீதான கோபம் மட்டும் குறையவில்லை. தந்தை கைதான காட்சி மட்டும் அவளது மனக்கண்னை விட்டு அகலவில்லை.

இருவரின் கவனமும் மற்றவர்கள் மீது இருக்க வெண்பா திலகனின் பதட்டம் அவர்களுக்கு தெரியாமல் போனது. தங்களுக்குள் பேசிக் கொள்ளும் இருவரும் விஜித், மான்சி வந்து விட்டால் பேச்சை நிறுத்தி விடுவர்.

சில நேரம் விஜித் கவனித்தாலும் என்ன என்று கேட்க தயங்கி விலகியே நின்றான். அவர்களிடம் மன்னிப்பு கேட்ட பின்னும் குற்றம் செய்தவனின் மனது அவர்களிடம் உரிமையாக பேச விடாமல் தடுத்தது.

நாட்கள் மெதுவாக நகர்ந்து கிட்டத்தட்ட விஜித் மான்சி பெற்றவர்களின் வீட்டிற்கு வந்து ஒரு மாதம் கடந்து விட்டது. ஆனாலும் அவர்களின் உறவில் எந்த முன்னேற்றமும் இல்லை.

இடையில் ஒரு நாள் மான்சிக்கு அழைத்த விஜயா "சீக்கிரம் வீட்டுக்கு வந்திடுமா. விஜித்க்கு அங்க வசதி பத்தாது. ரொம்ப கஷ்டப்பட்டாலும் உனக்காகத்தான் அங்க இருக்கிறான்." என்று கூற, அருகில் இருந்த கணவனை முறைத்து பார்த்தாள்.

"எங்க அப்பாக்கு ஜெயில்ல கிடைச்ச வசதிய விட அதிகமான வசதியை தான் நாங்க கொடுத்திருக்கிறோம்." என்று ஆரம்பித்த மான்சி விஜித் செய்த செயலை பட்டியலிட ஆரம்பித்து விட்டாள்.

விஜித் விஜயாவை பேசியே சமாதானம் செய்ய, அவரும் அதற்கு பின் மான்சியை அழைப்பதில்லை.

முதல் நாளுக்கு பின் பெரிதாக பேச்சும் அவர்களிடையே இல்லாமல் போக விஜித் முதல் முறை சோர்வாக உணர்ந்தான்.

வீட்டில் ஆட்கள் இருந்தும் தன்னிடம் மட்டும் எதையும் பேசாமல் இருக்கும் போது தான் மான்சி தன் வீட்டில் எப்படி இருந்திருப்பாள் என்று உணர முடிந்தது.

நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாமல் தவிப்பது கூட கொடுமையான விசயம் தான் என்பதை இந்த ஒரு மாத காலம் அவனுக்கு நன்கு உணர்த்தியது.

சில நேரம் அதீத பசியில் வீட்டிற்கு வரும் நேரம் அவனுக்கு பிடிக்காத உணவுகள் மேஜையில் இருக்கும். வெண்பா வேண்டுமென்று அப்படி செய்திருக்க மாட்டார்.

வெண்பாவிற்கு விஜித் உணவு பழக்கம் தெரிந்திருந்தால் அதற்கு ஏற்றார் போல சமைத்திருப்பார். அதை உணர்ந்த விஜித் முடிந்த வரை உணவை வீணடிக்காமல் சாப்பிட்டு விடுவான்.

விஜித் சாப்பிடும் அளவை வைத்தே வெண்பா அந்த உணவு அவனுக்கு பிடிக்குமா இல்லையா என்பதை கண்டுக் கொண்டு அதற்கு ஏற்றார் போல சமைக்க ஆரம்பித்தார்.

முழு மனதாய் மன்னிக்காத போதே தனக்கு தேவையானதை வெண்பா செய்து கொடுக்க, உணவு விசயத்தில் தான் மான்சிக்கு செய்தது கண் முன் வந்து போக அடுத்த பிடி உணவு தொண்டைக்குள் இறங்க மறுத்தது.

"சாரி ஏந்திழையாள்..." என்று விஜித் மன்னிப்பு கேட்க, மான்சி புரியாது பார்த்தாள்.

"சாப்பாடு, பேச்சு ரெண்டும் தனி மனித சுதந்திரம் தான். அதுல கூட நான் உன்ன ரொம்ப கொடுமை பண்ணிருக்கிறேன். உண்மையிலே நான் உனக்கும் உன் அப்பா அம்மாக்கும் செய்ததை நினைச்சா எனக்கே அவமானமா இருக்கு." என்று கூறி விட்டு பால்கனியில் சென்று நின்றுக் கொண்டான்.

தவறு செய்தவரை தண்டிக்க மனசாட்சியை விட வேறு பெரிய நீதிபதி தேவையில்லை. விஜித் மனதே அவனுக்கான தண்டனையை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்துக் கொண்டிருந்தது.

விஜித் உண்மையிலேயே தனது தவறை உணர்ந்து வருந்துவது மான்சிக்கு தெளிவாக தெரிந்தது. ஆனாலும் காயம் கொண்ட மனது அவனுக்கு மன்னிப்பை மட்டும் கொடுக்க கூடாது என்று தடுத்து விட்டது.

நள்ளிரவிற்கு பின் உறங்கிய இருவரும் காலையிலும் உணவு நேரத்திற்கு தான் எழுந்தனர். இருவரும் தயாராகி கீழே வரும் நேரம் செல்வராஜ் பெரியப்பா வெண்பாவிடம் கோபமாக பேசிக் கொண்டிருந்தார்.

"அங்க என் பொண்ணு தனியா கிடந்து கஷ்டப்படுறா ஆனா அத பத்தி கவலைப்படாம உன் பெண்ணையும் மாப்பிள்ளையையும் உன் கூட வைச்சி சீராட்டுற. இதுவே விஜயா அந்த பையனோட பெத்த அம்மாவா இருந்திருந்தா இப்படி தனியா விட்டுட்டு வந்திருப்பானா..?" என்று பேச, கோபத்தில் விஜித் நரம்புகள் புடைத்துக் கொண்டு வந்தது.

"என்ன இருந்தாலும் பெத்தவளுக்கு கிடைக்கிற மரியாதையும், உரிமையும் மத்தவளுக்கு கிடைக்காது." என்று செல்வராஜ் பெரியப்பா பேச, விஜித் அவர் முன் வந்து நின்றான்.

கோபத்தில் விஜித் வார்த்தைகளை விட்டுவிட கூடாது என்று அவன் கரத்தை பிடித்த மான்சி மறுப்பாக தலையசைக்க, அவள் கையை விலக்கியவனுக்கு கோபம் மட்டும் கட்டுக்குள் வர மறுத்தது.

"நான் என் அம்மாவ தனியா விட்டுட்டு வரல. அவங்க அப்பா அம்மா கிட்ட தான் விட்டுட்டு வந்திருக்கேன். அண்ட் எனக்கும் என் அம்மாவுக்குமான உறவ நீங்க க்ரிட்டிசைஸ் பண்ண வேண்டாம்." என்று கூறியவன் வேகமாக வெளியேறினான்.

விஜித் சென்ற பிறகும் செல்வராஜ் பெரியப்பாவின் வாய் ஓயவில்லை. விஜயாவை குடும்பமாக சேர்ந்து கொடுமை செய்வதாக பேசி அவருக்கே வாய் வலித்த பின் தான் சென்றார்.

அவர் சென்ற பின் வெண்பா சோர்ந்து அமர, மான்சிக்கு தாயை நினைத்து கவலை தோன்றியது.

"ம்மா நான் வேணும்னா அந்த வீட்டுக்கு போகட்டுமா..?" என்று தயங்கி கேட்க, தலையை உயர்த்தி மகளை பார்த்தார்.

"உன்னால அது என் வீடுன்னு உரிமையா சொல்ல கூட முடியல. இனி யாருக்காகவும் யோசிக்காத மான்குட்டி... முழு மனசா உன்னால உன் வீடு உன் குடும்பம்ன்னு ஏத்துக்க முடிஞ்சா மட்டும் சொல்லு." என்று முடித்துக் கொண்டவர் எழுந்து நடக்கும் போது அவர் நடை சற்று தடுமாறியது.

"வெண்பா மெதுவா எழுந்திருக்கணும். இந்த மாதிரி நேரத்தில கவனமா இரு." என்று கூறி கை தாங்கலாக மனைவியை அறைக்குள் அழைத்துச் செல்ல, மான்சி கவனம் பெற்றவர்கள் மீது திரும்பியது.

'இந்த மாதிரி நேரம்...' என்று தந்தை கூறியது மட்டும் மூளைக்குள் ஓடிக் கொண்டிருக்க, தாயின் உடல்நிலை குறித்த அச்சம் அவளை பிடித்துக் கொண்டது.

வேகமாக கதவை தட்டாமல் திறந்துக் கொண்டு பெற்றவர்களின் அறைக்குள் செல்ல, திலகனின் தோளில் சாய்ந்திருந்த வெண்பா மகளை கண்டதும் பதட்டத்துடன் விலகி அமர்ந்தார்.

"ம்மா உங்களுக்கு என்ன செய்யுது..?" என்று கேட்க, வெண்பா பதில் கூற முடியாது கணவனின் முகம் பார்த்தார்.

"ஒன்னும் இல்லடா மான் குட்டி..." என்று திலகன் சமாளிக்க பார்க்க, மான்சி அதை ஏற்பதாக இல்லை.

"நான் ஜெயில்ல இருந்த நாள்ல இருந்து அம்மாக்கு பிபி ப்ரஷர் அதிகமாகிட்டு. இன்னைக்கு அவ பெரியப்பா பேசவும் ப்ரஷர் அதிகமாகி தலை சுத்தல் வந்திருக்கு." என்று திலகன் கூற, அன்று முழுவதும் தாயை விட்டு நகரவில்லை.

வெண்பா எவ்வளவோ மறுத்தும் அவரை விட்டு நகராமல் உடன் இருந்து பார்த்துக் கொள்ள ஆரம்பித்தாள்.

இரவு வீடு திரும்பிய விஜித்திடம் எல்லாவற்றிற்கும் காரணம் அவன் தான் என்று சண்டையிடவும் மறக்கவில்லை.

"எங்க அம்மா எவ்வளவு சுறுசுறுப்பா இருப்பாங்க தெரியுமா? இப்போ உங்களால தான் உடம்புக்கு நோய இழுத்துக்கிட்டாங்க." என்று கூறும் போதே மான்சிக்கு இரவு உணவு ஓங்கரித்துக் கொண்டு வெளியே வந்தது.

அவளை கை தாங்கலாக ஓய்வறைக்கு அழைத்துச் சென்றவன், அவள் வாந்தி எடுத்து முடித்ததும் தண்ணீ் துண்டு என்று ஒவ்வொன்றாக எடுத்து கொடுக்க, அவன் கவனிப்பை பார்த்த மான்சி காலையிலிருந்து வெண்பாவை திலகன் கவனித்துக் கொண்ட நினைவுகள் வந்து போக மீண்டும் தலை சுற்றுவது போல இருந்தது.

தன்னை சமாளித்துக் கொண்டு வெளியே வந்தவள் நேராகச் சென்றது பெற்றவர்களிடம் தான்.

"ம்மா உங்களுக்கு என்ன செய்யுது? மறைக்காம உண்மைய சொல்லுங்க." என்று கேட்ட மான்சிக்கு கண் கலங்கியது.

வெண்பாவிற்கு தனது உடல் நிலையை மகளிடம் மறைக்கும் எண்ணமெல்லாம் இல்லை. ஆனாலும் மகள் எப்படி அதை எடுத்துக் கொள்வாள் என்ற பயத்திலேயே சொல்லாமல் இருந்தார்.

எல்லாவற்றிற்கும் மேலாக திலகன் மீது போடப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்திருந்தாலும், தனது உடல்நிலை புதிதாக பூகம்பத்தை கிளப்பக் கூடும் என்றே அமைதியாக இருந்தார்.

இப்போது மகள் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி கேட்க, தனது மருத்துவ அறிக்கையை மகளிடம் கொடுத்து விட்டார். அதில் இருந்த ஓவ்வொரு வரிகளும் மான்சிக்கு ப்ரளயத்தை உண்டாக்க போதுமானதாக இருந்தது.

"கேரளால நாங்க இருக்கும் போது தான் தெரிஞ்சுது. கேஸ் நடக்கும் போது இத பத்தி உன் கிட்ட சொல்ல தோணல. அப்புறம் யார் கிட்டவும் சொல்ல முடியல." என்று எல்லாவற்றையும் சொல்லி முடித்த வெண்பாவிற்கு மகள் முகத்தை பார்க்க முடியவில்லை.

"ம்மா இதுல உங்க தப்பு எதுவும் இல்ல. இனி நான் பார்த்துக்கிறேன்." என்று வெண்பாவிற்கு ஆறுதல் கூறி முடித்தவள் தனது அறைக்கு வந்தாள்.

"இப்போ சந்தோஷமா? இன்னும் உங்களால நாங்க எவ்வளவு அசிங்கப் பட வேண்டியது வருமோ தெரியல." என்று வெண்பாவின் மருத்துவ அறிக்கையை விஜித் மீதே விட்டெறிந்தாள்.

மான்சி செயலில் கோபம் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு மருத்துவ அறிக்கையை கையில் எடுத்தான்.

முழுவதும் படித்து முடித்தவன் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.

தங்கள் வாழ்வில் இப்படி ஒரு திருப்பம் வரும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. விதி தன் விளையாட்டை சிறப்பாக ஆரம்பித்துவிட்டது.






அத்தியாயம் 24 (இறுதி அத்தியாயம்)

விஜயா கணவனின் மகன் தான் விஜித் என்று தெரிந்த பின், அவன் கோபத்திற்கு காரணம் பெண் தராதது மட்டும் தான், அதுவும் காலப்போக்கில் சரியாகி விடும் என்ற எண்ணத்தில் வெண்பா திலகனும் கேரளா அருகில் இருக்கும் தங்கள் பழைய வீட்டிற்கு குடியேறினர்.

மகள் வாழ்வு நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் நடுத்தர வயது தம்பதியர் தங்களுக்கான நேரத்தை செலவிட ஆரம்பித்தனர்.

இதில் வெண்பா தனக்கு நாள் தள்ளி போனதில் முதலில் பயந்து போனார். நாற்பத்தி ஐந்து வயதில் தனக்கு இன்னொரு குழந்தையா என்று யோசித்தவருக்கு கணவனிடம் சொல்ல கூட கூச்சமாக இருந்தது.


முதல் குழந்தைக்கு பின் இரண்டு வருடம் அடுத்த குழந்தை வேண்டாம் என்று தள்ளிப் போட்டவர்கள் மான்சியை வளர்ப்பதில் கவனத்தை செலுத்தினர். பின் தங்களுக்கு கடவுள் கொடுத்தது ஒரு குழந்தை தான் போல என்று மனதை தேற்றிக் கொண்டனர்.

மகளுக்கே திருமணம் முடிந்து விட்ட பின் தான் குழந்தை பெற்றால் ஊரும் உறவும் என்ன பேசும் என்று நினைத்தவருக்கு இந்த குழந்தை வேண்டாம் என்ற எண்ணம் மட்டும் வரவில்லை
அந்நேரத்தில் தான் திலகன் கைது, வழக்கு என்று நாட்கள் நகர யாரிடமும் தனது தாய்மை பற்றி மூச்சு விட முடியவில்லை. இதில் மகளும் கணவனை பிரிந்து வந்து விட திலகன், மான்சி மற்றும் வயிற்றில் இருக்கும் குழந்தை என்று யாரை பார்ப்பது என புரியாது தவித்தார்.

திலகனை வெளியேக் கொண்டு வர சரவணன் கொடுத்த யோசனை தான் போலி குடும்பக் கட்டுப்பாடு சான்றிதழ். முதலில் அதை பற்றி வெண்பாவிற்கு கூட தெரிந்திருக்கவில்லை.

தெரிந்த போது கணவன் வெளியே வந்தால் போதும் என்று தனது கர்ப்பம் பற்றி கூறாது விட்டுவிட்டார். வழக்கு முடிந்து திலகன் இயல்பு நிலைக்கு திரும்பும் முன் வெண்பா கருவின் வளர்ச்சி இரண்டு மாதத்தை கடந்து விட்டது.

கணவன் மற்றும் மகளின் நலனை கருத்தில் கொண்டு கருவை கலைத்து விட நினைத்த போது திலகன் கண்டுக் கொண்டார்.

தனக்கு என்ன ஆனாலும் கருவை கலைப்பதில் அவருக்கு உடன்பாடில்லை. இதை பற்றிய வாக்குவாதம் நடந்து இருவரும் மருத்துவரை காணச் சென்ற போது வெண்பா வயிற்றில் வளரும் சிசு மூன்று மாத வளர்ச்சியை நிறைவு செய்திருந்தது.

மருத்துவ அறிக்கையை படித்த விஜித் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை.

ரவிக்கு அழைத்த விஜித் செய்ய வேண்டியதை கட்டளையிட, மான்சி அவனை வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள். தன்னை பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்து கண் சிமிட்டி விட்டு தனது உரையாடலை தொடர்ந்தான்.

விஜித் தன்னை பார்த்து கண் சிமிட்டியதும் மான்சி திரும்பி அமர்ந்துக் கொண்டாலும் அவள் கவனம் முழுவதும் அவன் பேசுவதில் தான் இருந்தது.

விஜித் கட்டளையின் படி தருண் மற்றும் திலகனின் தமக்கை மகன் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட, அவர்கள் திலகனுக்கு எதிராக தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

மேலும் விஜித் பத்திரிக்கையாளர்களை அழைத்து தான் தான் மாமனாரை விடுவிக்க போலி குடும்பக் கட்டுப்பாடு சான்றிதழ் தயாரித்ததாக கூறினான். ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் அவன் வாரி இறைத்த பணம் திலகனை அப்பாவியாகவும், அவரை காக்க விஜித் உதவியதாகவும், வருண் மற்றும் அவனது கூட்டாளிகள் தண்டனைக்குறிய குற்றவாளிகள் என பாதி உண்மை மீதி பொய்யாக செய்திகளை வெளியிட்டது.

இந்த புதிய செய்தி மக்களிடம் பரவி அடங்கும் நேரம், விஜித் தனது மனைவியின் வளைகாப்பு வைபவத்தை கோடி கணக்கில் பணத்தை வாரி இறைத்து கோலாகலமாக நடத்தினான்.

"இப்போ இவ்வளவு ஆடம்பரம் தேவையா?" என்று கேட்ட மான்சியிடம்,

"கண்டிப்பா தேவை தான். ஒன்னு மக்கள் உங்க அப்பா நியூஸ் பத்தி இனி பேச கூடாது அண்ட் எனக்கு நம்ம கல்யாணத்தில் செய்ய முடியாததை இதில் செய்யணும்." என்று கூறி அவன் விருப்பப் படி அனைத்தையும் செய்து முடித்தான்.

இந்தியாவின் பெரும் பணக்காரர்கள், திரை உலக நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என்று மக்களுக்கு அறிமுகமான அனைவரும் விஜித் வீட்டு நிகழ்வில் கலந்துக் கொள்ள, மக்கள் கவனம் திலகனை மறந்து வளைகாப்பு நிகழ்வில் திரும்பியது.

வளைகாப்பு நிகழ்வுகள் அனைத்தும் முடியும் முன் மான்சி மிகவும் சோர்ந்து போனாள். விஜித் அவளுக்காக வெந்நீர் தயாராக வைத்திருக்க குளித்துவிட்டு வந்தவளுக்கு தூக்கம் மட்டும் வரவில்லை.

விஜித் குறைகளை தாண்டி அவனது நிறைகள் கண் முன் நிற்க அவனுக்கான நியாயத்தை கொடுக்க அவள் மனது கூறியது.

"உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்." என்று ஆரம்பித்தவளிள் இதழில் விரல் வைத்து தடுத்தவன்

"தூங்கு ஏந்திழையாள். உன் மேல எனக்கு இருக்கிற காதலை மட்டும் நீ உணர்ந்தா போதும். எனக்கு வேற எதுவும் தேவையில்லை." என்று விஜித் கூற, மன நிறைவுடன் அவன் மார்பில் சாய்ந்துக் கொண்டான்.

நீண்ட நாட்களுக்கு பின் மனைவியிடம் கிடைத்த நெருக்கத்தை கண் மூடி அனுபவிக்க, அவன் மார்பிலே பெண்ணவள் துயில் கொண்டாள்.

மெல்ல அவளை தலையணையில் படுக்க வைத்தவன், அவள் நெற்றியல் இதழ் பதித்தான்.

"பொறுமையா உண்ணை காதலித்து கல்யாணம் பண்ணியிருந்தா நல்லா இருந்திருக்கும் ஏந்திழையாள். நம்ம கதை கூட காதல் கதையா இருந்திருக்கும்" என்று கூறியவன் அவள் முகம் பார்த்துக் கொண்டே உறக்கத்தை தழுவினான்.

அடுத்து வந்த நாட்கள் அனைத்தும் மான்சிக்கு மகிழ்ச்சியுடன் கழிந்தது. திலகன், வெண்பா எவ்வளவோ மறுத்தும் அவர்களையும் அழைத்துக் கொண்டு விஜித் தங்கள் வீட்டிற்கு வந்து விட்டான்.

குறைந்த பட்சம் குழந்தை பிறந்து வளர்க்க கற்றுக் கொள்ளும் வரை உடன் இருக்க வேண்டும் என்று மான்சி கேட்டுக் கொண்ட பின்னே இருவரும் அங்கு வர சம்மதித்தனர்.

திலகன், மான்சி பிறக்கும் போது வெண்பா இழந்ததை திருப்பி கொடுக்கும் முனைப்புடன் வெண்பாவை கவனித்துக் கொண்டார்.

மாமனாரின் செயலை பார்க்கும் போது சில சமயம் விஜித் கடுப்பாவதுண்டு.

"சும்மா ஒரு பேச்சுக்கு உங்க அப்பா, அம்மா செகன்ட் ஹனிமூன் போயிருக்கிறதா சொன்ன. அத உன் அப்பா உண்மையாக்கிட்டார். இதுல அவர் பண்ற பர்ஃபாமென்ஸ பார்த்து நான் அவர் கிட்ட மனைவியை கவனிப்பது எப்படின்னு க்ளாஸ்க்கு போகணும் போல." என்று விஜித் மான்சியிடம் போலியாக குறை படிப்பதும் அதற்கு அவள் முறைப்பதும் வாடிக்கையானது.

மருத்துவர் குறித்து கொடுத்த நாளுக்கு இரு தினம் முன்னே வலி எடுத்து மான்சி பெண் குழந்தையை பெற்றெடுத்தாள்.

விஜித் சொன்னது போலவே தனது மகள் விஜிதா ஏழிசையாளை கைகளில் வைத்து தாங்க ஆரம்பித்தான். மகள் என்று வரும் போதும் மனைவி கூட அவனுக்கு இரண்டாம்பட்சமாக மாறி விடுவதுண்டு. அந்த நேரங்களில் மான்சியின் செல்ல கோபங்களும் அதற்கு மகள் உறங்கிய பின் விஜித் சமாதானங்கள் என்று நாட்கள் நகர்ந்தது.

வெண்பாவிற்கு வயது அதிகம் என்பதால் அறுவை சிகிச்சை மூலமாக ஆண் குழந்தை பிறந்தது.

சொந்தங்களில் சிலர் இந்த வயதில் பேத்தி பிறந்த பிறகு பிள்ளையா என்று கேலியாகவும், சிலர் வெண்பாவின் மீது அக்கறை கொண்டும் பார்த்து விட்டுச் சென்றனர்.

விஜித் மகளை எப்படி பார்த்துக் கொண்டானோ அதை போலவே தனது குட்டி மச்சான் மானவ் ஏரமுதனனையும் பார்த்துக் கொண்டான்.

வெண்பாவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு முழு ஓய்வு கொடுக்க விரும்பி அவர்களை கவனித்துக் கொள்ள தனி வேலையாட்களையும் நியமித்தான்.

விஜயாவும் ஓரளவு எழுந்து நடமாட ஆரம்பித்ததும் பிள்ளைகளை பார்த்துக் கொண்டே நேரத்தை கடத்த ஆரம்பித்தார்.

ஏரமுதன் முதல் பிறந்த நாள் வரை திலகன், வெண்பா தம்பதியர் விஜித் வீட்டில் தான் இருந்தனர்.

பல பல சமாதான பேச்சுக்களுக்கு பின்னே அவர்கள் தனியேச் செல்ல மான்சியும் விஜித்தும் அனுமதி கொடுத்தனர்.

"ஏரமுதன் இல்லாம வீடு ரொம்ப வெறுமையா இருக்கு." என்று விஜித் கூற மான்சி தம்பியின் நினைவில் புன்னகைத்துக் கொண்டாள்.

விஜிதா வெண்பாவை போல அமைதியான குணம் கொண்டவள். பெரிதாக சேட்டை அவளிடம் இருக்காது. ஆனால் அவளுக்கும் சேர்த்து மானவ் சுட்டித்தனத்தால் வீடு எப்பொழுதும் கலகல என்று இருக்கும்.

நடக்க ஆரம்பித்த உடனே அவனது சேட்டைகளும் ஆரம்பித்து விட்டது. "உன்னை மாதிரி உன் தம்பியும்" என்று சிறு வயது மான்சி செய்த சேட்டைகளை வெண்பா, திலகன் கதையாக கூற விஜித் புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருப்பான்.


"நாம வேணும்னா மானவ் மாதிரி இன்னொரு சேட்டைக்கார பையன பெத்துக்கலாமா..?" என்று மான்சி கேட்க, விஜித் வேகமாக அவள் புறம் திரும்பினான்.

"நீ கேட்டு இல்லன்னு சொல்ல முடியுமா?" என்று கூறிக் கொண்டு மனைவியை நெருங்க, மகள் காலை அசைத்து கொலுசொலிழுப்பினாள்.

மகள் விழித்துக் கொண்டாளோ என்று பார்க்க விஜித் திரும்ப, தலையில் அடித்துக் கொண்ட மான்சி கணவனையும் மகளையும் பார்த்துக் கொண்டே கண்ணயர்ந்தாள்.

முற்றும்.



ஹாய் மக்களே...

போன வாரம் முடிக்க வேண்டிய கதை இந்த வாரம் வரை இழுத்துக்கிட்டு வந்துடுச்சி. ஏகலைவனின் ஏந்திழையாள் கதை ஞாயிறு வரை மட்டுமே தளத்தில் இருக்கும். அதற்கு பிறகு அமேசானில் மட்டுமே படிக்க முடியும்
 
Last edited:
Top