அத்தியாயம் 4
நாட்கள் நகர்ந்தன,
கயல்விழிக்கு பிரசவ வலியும் வந்து விட்டது...
வைத்தியசாலையில் சேர்த்து இருந்தார்கள்...
அப்படியே அவள் தந்தை மணிவண்ணனோ ஜெயராமுக்கு விடயத்தை சொல்ல, அவனும் வைத்தியசாலைக்கு வந்து விட்டான்...
அவனுக்கோ பதட்டம்...
கயல்விழி உடல் நிலையை நினைத்து எல்லாம் பதட்டபடவில்லை அவன்...
பெண் குழந்தை பிறந்து விடுமோ என்று பதட்டம்...
பிரசவ அறைக்கு முன்னால், அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தான்...
கயல்விழிக்கும் அதே பதட்டம் தான்... பெண் குழந்தை மேல் அவளுக்கு விருப்பம் இருந்தாலும், ஜெயராம் என்ன செய்வான் என்று பதட்டம்...
பிரசவ வலி வேறு தாங்க முடியவில்லை...
நீண்ட போரட்டத்துக்கு பிறகு குழந்தை பிறந்தது...
குழந்தையை கையில் ஏந்திய பிரசவம் பார்த்த வைத்தியரோ, "பெண் குழந்தைம்மா" என்று சொல்லி, அவள் மார்பில் குழந்தையை வைத்த கணம், அவளுக்கோ உலகம் தலை கீழாக சுழல்வது போன்ற உணர்வு...
உயிருடன் மரித்து விட்டாள்...
உலகம் தலை கீழாக சுழலும் உணர்வு...
பிரசவ வலியை விட, இப்போது மனம் அதிகமாக வலித்தது...
வாய் விட்டு அழுதபடி கையால் குழந்தையை அணைத்துக் கொண்டாள்.
ஆணோ பெண்ணோ அன்னைக்கு எல்லாருமே குழந்தைகள் தான்...
அந்த பக்குவம் சுற்றி இருக்கும் சமூகத்துக்கு இல்லையே...
குழந்தை அவள் மார்பில் படுத்துக் கொண்டே அழுதது...
மீண்டும் குழந்தையை எடுத்த அங்கிருந்த பெண்ணோ, "பாப்பாவுக்கு எல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிட்டு கொடுக்கிறோம், பால் கொடும்மா" என்று சொல்லிக் கொண்டே குழந்தையை தூக்கி செல்ல, அவளோ அப்படியே விட்டத்தை வெறித்தபடி படுத்து இருந்தாள்.
சுற்றி இருக்கும் சமூகமோ, 'ஏன் எனக்கு பெண் குழந்தை பிறந்தது?' என்று அவளையும் நினைக்க வைத்து விட்டார்கள்...
இதே சமயம், வெளியே வந்த வைத்தியசாலையில் வேலை செய்யும் பெண்ணோ, "இங்க கயல்விழியோட கணவர் இருக்காங்களா?" என்று கேட்க, ஜெயரமோ, "நான் தான், சொல்லுங்க" என்றபடி அவளை நோக்கி சென்றான்...
அந்த பெண்ணோ, "உங்களுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கு" என்று அவள் சொன்னதும் தான் காரணம், அவன் முகம் இறுகி போனது...
"க்கும் போச்சு போ" என்று வைதேகி வேறு சொல்ல, "வாங்க" என்று வைதேகியிடம் சொன்னவன் விறு விறுவென அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானான்...
மணிவண்ணன் பதறி விட்டார்.
"மாப்பிள்ளை" என்று சொல்லிக் கொண்டே, அவனை நோக்கி ஓடிச் செல்ல, அவனோ, அவரை முறைத்துப் பார்த்தவன், "பொட்டை புள்ளய பெத்து வச்சு இருக்கா உங்க பொண்ணு, இவள நான் வீட்டுக்கு கூட்டி போக மாட்டேன்... நீங்களாச்சு உங்க பொண்ணாச்சு" என்று சொல்ல, "ஐயோ மாப்பிள்ளை" என்றார் அவர் அவனை மறித்தபடி...
"யோவ் மரியாதை கேட்டுடும்" என்று அவன் ஒற்றை விரல் நீட்டி சொல்ல, அவருக்கோ செருப்பால் அடித்த உணர்வு...
சட்டென்று விலகி நிற்க, அவனோ அங்கிருந்து கிளம்பி விட்டான்...
மணிவண்ணனோ மாதவியை பார்க்க, அவரோ கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே கயல்விழியை பார்க்க உள்ளே சென்றார்...
அவளோ அப்போது தான் குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டு இருந்தவளோ வாசலை பார்த்து விட்டு மாதவியை பார்த்தவள், "அவர் எங்க?" என்றாள்.
அவரோ கஷ்டப்பட்டு சிரித்துக் கொண்டே, "பாப்பா பால் ஒழுங்கா குடிக்கிறாளா?" என்று குழந்தையை வருட, "அவர் எங்கம்மா?" என்றாள் மீண்டும்...
அவரோ, "பொண்ணு பிறந்திடுச்சுன்னு பார்க்காம போய்ட்டார்" என்றார்...
அவளிடம் பெருமூச்சு...
"அப்பாடா போய்ட்டாரா?" என்றாள்.
மாதவி அவளை அதிர்ந்து பார்க்க, "குழந்தையை ஏதாவது பண்ணிடுவாரோன்னு பயந்துட்டு இருந்தேன்... பார்க்காம போனது கூட பரவாயில்லை" என்றாள்.
மாதவிக்கு அதிர்ச்சி...
"என்னடி பேசுற" என்றார்...
"என்னம்மா பேச சொல்றீங்க?" என்றாள் அவள்...
அவரோ, "குழந்தையோட அப்பா குழந்தைய பார்க்காம போய் இருக்காருன்னு உனக்கு வருத்தம் இல்லையா?" என்று கேட்க, அவளோ, "என் பொண்ணுக்கு எதுவும் ஆக கூடாதுன்னு நினைப்பு மட்டும் தான் மா இப்போ இருக்கு" என்றாள்.
இப்படி பேசுபவளது ரணம் எப்படி இருக்கும் என்று அவரால் நினைக்காமல் இருக்கவே முடியவில்லை...
சட்டென்று தனது கண்ணீரை துடைத்துக் கொண்டே, "நீ பாப்பாவை பாரு" என்று சொல்லிக் கொண்டே, அருகே அமர்ந்து கொண்டார்...
கயல்விழி குழந்தைக்காக இப்படி பேசினாலும், உள்ளுக்குள் வலித்தது...
சராசரி பெண்ணின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்று வலித்தது...
இந்த திருமணமே அவளுக்கு சாபமோ என்று தோன்றியது...
திருமணத்துக்கு முதல் இருந்த சந்தோஷம் இப்போது வரையும் இல்லை...
குழந்தை பிறந்த சமயமும் இல்லை...
என்ன வாழ்க்கை இது?
கயல்விழி மட்டும் அல்ல, பல பெண்களின் வாழ்க்கையே இப்படி தான்...
மனம் மொத்தமாக மரத்து போய் இருந்தது...
அதனை தொடர்ந்து மணிவண்ணன் குழந்தையை பார்க்க வந்து இருந்தார்...
"மாப்பிள்ளை மனசு மாறிடுவார்மா" என்றார்...
அவளிடம் பதில் இல்லை, ஒரு தலையசைப்பு மட்டுமே...
அதனை தொடர்ந்து வீட்டுக்கு அவளையும் குழந்தையையும் அழைத்து சென்றார்கள்...
அவளுக்கோ வீட்டில் குழந்தையை பார்த்துக் கொள்வதிலேயே நேரம் சென்றது...
ஒரு மாதம் கடந்து இருக்கும், மணிவண்ணனோ, "என்னம்மா மாப்பிள்ளை கூட பேசலையா?" என்று கேட்டார்...
"இல்லப்பா, அவருக்கு தோணுற நேரம் பார்க்க வரட்டும்" என்றாள்.
"ஒரு மாசம் ஆயிடுச்சேம்மா" என்றார்...
பதில் இல்லை அவளிடம்...
"அக்கம் பக்கத்தில இருக்கிறவங்க எல்லாம் தப்பா பேசுறாங்க, சொந்த பந்தங்கள் எல்லாம் ஜாடை பேசுறாங்க" என்று சொன்னார்...
அவளோ, "இப்போ என்னப்பா பண்ணனும்?" என்று கேட்க, "மாப்பிள்ளை கிட்ட ஒரு தடவை பேசி பாரும்மா" என்றார்...
அவளுக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை...
ஒன்று கணவன் காலில் இல்லை என்றால் தந்தை காலில் தான் அவள் நிற்க வேண்டும்...
சொந்த காலில் நிற்க அவளுக்கு தைரியம் இல்லை...
மணிவண்ணனோ அவளை இப்போது விரட்டுவதில் குறியாக இருக்க, வேறு வழி இல்லாமல் தொலைபேசியை எடுத்து ஜெயராமுக்கு அழைத்தாள்.
அவன் அவள் நம்பரை பார்த்து விட்டு தொலைபேசியை எடுக்கவில்லை...
மீண்டும் அழைத்தாள்...
தொலைபேசியை எடுத்தான்...
"என்னடி?" என்று அதட்டலாக கேட்டான்...
அவளுக்கோ திக்கென்று இருந்தது...
"குழந்தையை பார்க்க வரலையே" என்றாள் நலிந்த குரலில்...
"அந்த சனியனை நான் வேற பார்க்க வரணுமா?" என்றான்...
நெஞ்சில் ஊசியால் குத்திய உணர்வு... அப்படியே திரும்பி குழந்தையை பார்த்தாள்...
"கவிதா" அந்த பச்சை மண்ணின் பெயர்...
சனியன் என்று விழிக்க அவனுக்கு எப்படி தான் மனம் வந்ததோ என்று நினைத்துக் கொண்டே, "நான் என்னங்க பண்ணுறது?" என்று கேட்கும் போதே கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது...
குரல் தழுதழுத்தது...
"பொட்ட புள்ளைய பெத்த உன் கிட்ட எனகென்னடி பேச்சு" என்று சொல்லி விட்டு வைத்து விட்டான்...
அவளோ அலைபேசியை வெறித்துப் பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தாள்.
அவன் அலைபேசியை வைத்ததுமே, அவன் அருகே இருந்த வைதேகி, "ஜெயராம், இப்படியே அவளை அங்க விட்டு வச்சா ஊரு நம்மள தப்பா பேசும்... எல்லாத்துக்கும் அவ கொடுத்த காணியை வித்து தான் பணம் கொடுக்கணும்... விக்குறதுக்கு இப்போ தான் நேரம் சரியா வந்து இருக்கு, அவ கையெழுத்து வேற வேணும்... அடுத்த புள்ள பையனா பெத்துக்கிட்டா சரி தானே" என்றார்...
அவருக்கோ வேலை எல்லாம் தான் செய்ய வேண்டும் என்கின்ற சலிப்பு...
பணம் என்று சொன்னதுமே ஜெயராம் நிதானமாக யோசிக்க தொடங்கினான்...
ஆம் அவள் சீதனமாக கொடுத்த காணியை இப்போது தான் விலை பேசி முடித்து இருக்கின்றான்...
அவள் கையெழுத்து வேறு அதற்கு வேண்டும்...
நீண்ட நேரம் யோசித்தவன், "சரி அவளை அழைச்சிட்டு வரேன்" என்று சொல்லிக் கொண்டே, ஆட்டோவில் புறப்பட்டான்...
இதே சமயம் கயல்விழியோ, "அவர் ஃபோனை வச்சுட்டார்பா" என்று கலங்கிய விழிகளுடன் சொல்லிக் கொண்டே இருக்கும் போது, அவர்கள் வீட்டின் முன்னே ஆட்டோ சத்தம் கேட்டது...
மணிவண்ணன் எழுந்து சென்று பார்த்தார்...
ஜெயராம் தான் வந்து இருந்தான்...
"நான் சொல்லல, மாப்பிள்ளைக்கு கோபம் குறைஞ்சு வந்துட்டார்" என்று சொல்லிக் கொண்டே, மணிவண்ணன் வாசலுக்கு சென்றவர், "வாங்க மாப்பிள்ளை" என்று அழைக்க, "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே வீட்டினுள் நுழைந்தவன், "சீக்கிரம் வா, வீட்டுக்கு போகலாம்" என்றான்...
அவள் கையில் தான் கவிதா இருந்தாள்.
குழந்தையை அவன் பார்க்கவே இல்லை...
பெண் குழந்தையை பாவம் என்று நினைத்து இருந்தவனுக்கு அப்போது தெரியவில்லை பெண் குழந்தை என்றால் வரம் என்று...
கயல்விழி கையில் இருந்த குழந்தையை வாங்கிய வைதேகியோ, "சீக்கிரம் ரெடியாகும்மா" என்றார்...
அவன் மனது மாறி விடுவாளோ என்கின்ற பதட்டம் அவருக்கு...
கயல்விழியும் வேகமாக உள்ளே சென்று உடைகளை அடுக்கி எடுத்துக் கொண்டே வெளியே வந்தாள்.
அவனோ, "வா" என்று சொல்லிக் கொண்டே, முன்னே செல்ல, அவள் உடைப்பெட்டியை எடுத்துக் கொண்டே அவனை பின் தொடர, மாதவி குழந்தையுடன் பின்னால் சென்றார்...
"கிளம்புறேன்" என்று ஒற்றை வார்த்தையை சொல்லிக் கொண்டே அவன் ஆட்டோவில் ஏறி விட்டான்...
மாதவியிடம் இருந்து குழந்தையை வாங்கியவள், "அப்போ வரேன்மா" என்று கண்ணீருடன் சொல்லிக் கொண்டே ஆட்டோவில் ஏறினாள்...
அவன் இப்போதும் குழந்தையை பார்க்கவே இல்லை...
வீடும் வந்தது...
அவள் குழந்தையுடன் இறங்கிக் கொள்ள, அவனோ ஆட்டோவுக்கு பணத்தை கொடுத்து விட்டு விறு விறுவென உள்ளே செல்ல, அவளுக்கோ உடை பெட்டியை எடுப்பதா இல்லை குழந்தையை தூக்குவதா என்று தெரியவில்லை...
அவள் தடுமாற்றத்தை பார்த்த ஆட்டோக்காரனா, "நானே பெட்டியை தூக்கி வைக்கிறேன்மா" என்று சொல்லிக் கொண்டே,உடைப்பெட்டியை தூக்கிக் கொண்டே வீட்டினுள் வைத்து விட்டு வந்தான்...
குழந்தையுடன் வந்து இருக்கின்றாள்...
ஆரத்தி இல்லை, "வா" என்ற ஒற்றை வரவேற்பு கூட இல்லை...
குழந்தையின் முகத்தை பார்த்தவளோ, "என்ன பாவம் பண்ணி என் வயித்துல பிறந்து இருக்கியா தெரியல" என்று சொல்லிக் கொண்டே, வலது காலை எடுத்து வைத்து படியேறி சென்றாள்.
"தேவதைகளுக்கு சொந்த காலில் நிற்க கற்றுக் கொடுங்கள், நிர்க்கதியாக நிற்கும் போது தனியாக நடக்க முடியாமல் திணறி போவார்கள்... அதனால் பிடிக்காத வாழ்க்கையை வாழ முனைவார்கள்..."