வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ஏகாந்தத்தில் எரியும் ஏந்திழை- கதை திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் 9

அடுத்த நான்கு மாதங்களில் அவள் படித்து முடித்து இருக்க, ராஜ் உதவி செய்ததன் மூலம் அவளுக்கு வேலையும் கிடைத்து விட்டது...

நேரே நிர்மலாவிடம் வந்தாள்...

அவர் வீட்டினுள் நுழைந்ததுமே அவர் காலில் விழ, "என்னம்மா இது?" என்று பதறி விட்டார் அவர்...

எழுந்து நின்றவளுக்கு கண்ணீர் நிற்கவே இல்லை...

நிர்மலாவோ, "யார் காலுலயும் விழக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல" என்றார் கண்டிப்பாக...

"அம்மா கிட்ட ஆசீர்வாதம் வாங்குறது தப்பில்லையே" என்றாள்.

நிர்மலா அவளை விழி விரித்து பார்க்க, அவர் இதழ் மெலிதாக விரிந்தது...

"தப்பில்லம்மா" என்று சொல்லிக் கொண்டே, அவள் நெற்றியில் முத்தமிட, அவளோ கண்ணீருடன், "நன்றி சொல்லி நான் உங்கள விலக்கி வைக்க விரும்பல... நீங்க என்னை போல பலருக்கு முன்னுதாரணம் அம்மா" என்று சொன்னவள் ஒரு கணம் நிறுத்தி, "நான் உங்கள அம்மான்னு கூப்பிடலாம்ல" என்றாள்.

அவரோ மென்மையாக புன்னகைத்துக் கொண்டே, "தாராளமா கூப்பிடலாம்" என்று சொல்லி முடிக்க முதல்,

"எனக்கே போட்டியா?" என்று சிரித்தபடி கேட்டுக் கொண்டே கல்லூரிக்கு செல்ல அங்கே வந்து சேர்ந்தாள் நிர்மலாவின் மகள் ராதிகா...

கயல்விழி மென்மையாக சிரித்துக் கொள்ள, நிர்மலாவோ, "ராதிம்மா, எக்ஸாம் நல்லா பண்ணுடா" என்றார்.

கயல்விழியும், "ஆல் தெ பெஸ்ட்" என்று சொல்ல, ராதிகாவோ, "உங்களுக்கும் வேலை கிடைச்சதுக்கு கங்கிராட்ஸ்" என்று கயல்விழியிடம் சொல்லி விட்டு புறப்பட்டு விட்டாள்.

அன்று வீட்டுக்கு வந்த கயல்விழியிடம், "டாக்டர் அம்மா கிட்ட போனியா?" என்று மாதவி கேட்க, அவளோ, "போனேன்மா" என்று சொல்லிக் கொண்டே மகளை தூக்கிக் கொண்டு இருக்கும் போது மணிவண்ணன் வீட்டுக்கு வந்தார்...

அவர் கையில் ஒரு பெரிய பை இருந்தது... கயல்விழியோ, "பையில என்னப்பா?" என்று கேட்க, அவரோ அவளை நோக்கி வந்தவர், மென்மையாக புன்னகைத்துக் கொண்டே, "ஸ்டெதஸ் கோப் போட வேண்டிய உன் கழுத்துல தாலி கட்ட வச்சுட்டேன்... அது உனக்கு தூக்கு கயிறு ஆயிடுச்சு... அடுத்த வீட்டுக்கு போக போற பொண்ணுன்னு உன்னை நினைச்சது ரொம்ப தப்பும்மா, என் தப்புக்கு பிராயச்சித்தம் இருக்குமான்னு தெரியல... ஆனா இப்போ சொல்றேன் கேட்டுக்கோ, நீ எவ்ளோ உயரம் வேணும்னாலும் பறந்துடும்மா, இந்த அப்பா கூட இருப்பேன்... இது என்னால முடிஞ்ச உனக்கான பரிசு" என்று கையில் இருந்ததை நீட்ட, அவளுக்கும் கண்கள் கலங்கி விட்டது...

மகளை மாதவியிடம் கொடுத்தவளோ, "என்னப்பா இது?" என்று கேட்டுக் கொண்டே திறந்தாள்.

புதிய லேப்டாப் அவளுக்காக வாங்கி இருந்தார்...

அவள் வாங்க தான் நினைத்து இருந்தாள்...

ஆனால் இவ்வளவு புதியது வாங்க நினைக்கவில்லை...

அவளோ அவரை அதிர்ந்து பார்க்க, "இது ரொம்ப விலையாச்சே, பணம் எப்படி?" என்று கேட்க, அவரோ, "எப்படியோ கொடுத்தேன்... அத விடு, உனக்கு இது பிடிச்சு இருக்கா?" என்று கேட்டார்...

அவளும், "ரொம்ப பிடிச்சு இருக்குப்பா, ஆனா பணம்" என்று கேட்டுக் கொண்டே அவர் கையை பார்த்தாள்.

அவர் கையில் இருந்த தங்க மோதிரம் காணாமல் போய் இருந்தது...

அவரது அன்னையின் தாலியில் செய்த மோதிரம் என்பதால் அதனை பத்திரமாக வைத்து இருப்பார்... எந்த கஷ்டம் வந்தாலும் அந்த மோதிரத்தில் அவர் கை வைத்தது இல்லை...

"மோதிரம் எங்கப்பா?" என்றாள்.

மாதவி அவரை அதிர்ந்து பார்த்தார்...

"என் அம்மாவோட நினைவு என் மனசுல இருக்கு... மோதிரத்துல இருக்கணும்னு அவசியம் இல்ல" என்று சொல்ல, கயல்விழிக்கு விம்மலுடன் கண்ணீர்... சட்டென அவன் மார்பில் தலையை முட்டியவளுக்கு கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை... இது சந்தோஷத்தில் வரும் கண்ணீர்... அவள் வலியை அனுபவித்த காலம் எல்லாம் மலையேறி விட்டது...

நிறைவான கண்ணீர்...

மாதவிக்கும் கண்கள் கரித்துக் கொண்டே வர, "ஆழாதீங்க பாத்தி" என்று மழலை மொழியுடன் கவிதா அவர் கண்களை துடைக்க, "என் செல்லம்" என்று சொல்லிக் கொண்டே அவளை இறுக அணைத்துக் கொண்டார் மாதவி...

கயல்விழியும் மணிவண்ணனும் அவர்களை பார்த்து சந்தோஷமாக சிரித்துக் கொண்டார்கள்...

அன்றில் இருந்து கயல்விழிக்கு ஏறு முகம் தான்...

வேலையில் மும்முரமாக ஈடுபட்டவளுக்கு பதவி உயர்வுகள் தேடி வந்தன...

வேலை விட்டு வீட்டுக்கு வந்ததும் கவிதாவுடன் நேரம் செலவு செய்பவள், அவளை தூங்க வைத்த பின்னர்,

இரவிரவாக படிப்பாள்...

"என்னம்மா இன்னும் தூங்கலையா?" என்று மாதவி அதட்டிய பின்னர் தான் தூங்குவாள்...

கவிதாவுக்கு ஐந்து வயதானதும், "எனக்கு அப்பா இல்லையாம்மா?" என்று கேட்டாள்.

மாதவியோ, "அவர்" என்று ஆரம்பிக்க, "இறந்துட்டார் மா" என்றாள் கயல்விழி...

மாதவி அதிர்ந்து வாயில் கையை வைக்க, அவரை ஒரு கணம் அழுத்தமாக பார்த்து விட்டு, "அப்பா நீ சின்ன வயசா இருக்கும் போதே இறந்துட்டார்... உனக்கு அம்மாவும் நான் தான்... அப்பாவும் நான் தான்" என்று சொல்லி, அணைத்துக் கொண்டாள்.

அங்கிருந்து கவிதா அகன்றதுமே, "பொண்ணுக்கு என்னம்மா சொல்லி கொடுக்கிற?" என்று மாதவி அதிர, "அவளுக்கு பருவம் தெரியுற நேரம் எல்லாமே சொல்வேன்மா... இப்போ வேணாம்" என்று சொல்ல, அவரும் பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டார்...

கவிதாவுக்கு பதினொரு வயதாகும் போது அவள் வயதுக்கும் வந்து விட்டாள்.

பன்னிரண்டு வயதில் அவள் பெறுபேறுகள் குறைந்து விட்டன...

பயத்துடன் பெறுபேறுகளை தாயிடம் காட்டினாள்...

கயல்விழி நீண்ட நேரம் யோசித்து விட்டு, "உள்ளே வா" என்று சொல்ல, மணிவண்ணனோ, "அடிக்காதம்மா புள்ளைய... அடுத்த எக்ஸாமுக்கு நிறைய மார்க்ஸ் எடுப்பா" என்றார்...

அவரை அழுத்தமாக பார்த்து விட்டு கவிதாவை அழைத்துக் கொண்டே உள்ளே சென்றவளோ, அங்கே இருந்த இருக்கையில் அவளை அமர வைத்து விட்டு, அவளும் அமர்ந்தாள்.

கவிதாவுக்கு கண்ணெல்லாம் கண்ணீர்...

"இப்போ எதுக்கு அழுற?" என்று கேட்டாள் கயல்விழி...

கவிதாவோ விம்மிக் கொண்டே, "எனக்கு படிப்பு வருது இல்லம்மா" என்றாள்...

கயல்விழியிடம் பெருமூச்சு...

சிறிது நேரம் மௌனமாக அவளை பார்த்துக் கொண்டே இருந்தவளோ, "படிச்சா தானேம்மா நம்ம காலுல நிற்க முடியும்... எப்போவும் அடுத்தவங்க கிட்ட கையேந்தி நிற்க கூடாது... இது உனக்கு எப்போவும் சொல்வேன்ல" என்றாள்...

"எனக்கு புரியுதும்மா, ஆனா படிப்பு வரமாட்டேங்குதே" என்றாள்.

"அப்போ என்ன தான் உனக்கு பிடிக்குது?" என்று நேரடியாக கயல்விழி கேட்க, கவிதாவிடம் மௌனம்...

அடுத்த கணமே, அவளை இறுக அணைத்துக் கொண்டே, "உன் மனசுல இருக்கிறத சொல்லும்மா நான் இருக்கேன்" என்றாள்.

அவளும் கயல்விழியை இறுக அணைத்தவள், "எனக்கு பேட்மிட்டன் விளையாட பிடிக்குதும்மா, ஸ்கூல்ல நடந்த காம்பெடிஷன்ல கூட நான் தான் வின் பண்ணினேன்... பி வி சிந்து போல எனக்கும் பெரிய சாம்பியன் ஆகணும்னு ஆசையா இருக்கு" என்றாள்.

கயல்விழியிடம் நீண்ட மௌனம்... பெரிய அளவில் ஆசைப்படுகின்றாள்... திறமையும் இருக்கின்றது...

"சரிம்மா நான் நாளைக்கு நிர்மலா அம்மா கிட்ட பேசுறேன்..." என்று சொல்ல, கவிதாவும் சம்மதமாக தலையாட்டினாள்...

அடுத்த நாளே நிர்மலாவை தேடி செல்ல, அவரோ, "எனக்கு இந்த ஸ்போர்ட்ஸ் விஷயமா யாரையும் தெரியாதும்மா, நீ ராஜ் கிட்ட பேசிப் பாரு, அவனுக்கு நிறைய கண்டாக்ட்ஸ் இருக்கு... அவனும் ஸ்போர்ட்ஸ் பிளேயர் தான்" என்றார்...

கயல்விழிக்கோ ராஜ்ஜிடம் கேட்க சங்கடம்...

அவள் வேலை தொடக்கம் எல்லாமே அவன் செய்த உதவி தானே...

அவனுடன் தொடர்பில் இருந்தாலும், மீண்டும் மீண்டும் உதவிக்கு அவனிடம் செல்வது தயக்கம் தான் அவளுக்கு... வேறு வழி இல்லை... மகளுக்காக மீண்டும் அவனை தேடி சென்றாள்.

பல வருடங்கள் கழித்து கம்பியூட்டர் சென்டருக்கு சென்றாள்.

அவளைக் கண்ட ராஜ்ஜோ, "உள்ளே வா கயல்" என்று அழைக்க மெலிதாக புன்னகைத்தபடி உள்ளே நுழைந்தவளோ, "எப்படி இருக்கீங்க சார்?" என்று கேட்டுக் கொண்டே அவன் முன்னே அமர, "எனக்கென்ன சூப்பரா இருக்கேன்... நீ எப்படி இருக்க? கவிதா எப்படி இருக்கா?" என்று கேட்க, அவளும், "நல்லா இருக்கோம் சார், கவிதா பத்தி தான் பேச வந்தேன்" என்றாள்...

"என்ன விஷயம்?" என்று அவன் வினவ, கவிதாவை பற்றி எல்லாம் சொன்னவளோ, "எனக்கு ஸ்போர்ட்ஸ் பத்தி தெரியல சார், நிர்மலாம்மா கிட்ட போனேன்... உங்க கிட்ட கேட்க சொன்னாங்க, ஆனா நான் உங்கள தொல்லை பண்ணுறேனா?" என்று கேட்டாள் தயங்கி...

"இதுல என்னம்மா தொல்லை? எனக்கென்ன புள்ள குட்டி இருக்கா? தனி மனிதனா சந்தோஷமா கேக்கிறவங்களுக்கு உதவி செஞ்சிட்டு இருக்கேன்... இந்த வாழ்க்கைல எவ்ளோ நிம்மதி தெரியுமா? கவிதாவுக்கு பேட்மின்டன் பிடிக்கும்னு கேட்டதும் ரொம்ப சந்தோஷமா இருக்கு... எனக்கும் பிடிக்கும்... சின்ன வயசு பேட்மின்டன் செம்பியன் நான்... எனக்கு தெரிஞ்ச கோச் ஒருத்தர் இருக்கார்... அவர் கிட்ட பேசிட்டு உனக்கு நைட் கால் பண்ணுறேன்" என்று சொல்ல, அவளும் மென்மையாக புன்னகைத்து விட்டு, "அப்போ நான் கிளம்புறேன் சார்" என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து கிளம்பி இருந்தாள்...

ராஜ் சொன்ன போலவே தனது நண்பனுக்கு அழைத்து விபரங்களை கேட்டவன் அன்று இரவே கயல்விழிக்கு அழைத்து இருந்தான்...

"சொல்லுங்க சார்" என்று அவள் சொல்ல, "நான் பேசிட்டேன் கயல்... அவன் இடத்துல கோர்ச்சிங் நடக்குது... நஷனல் இன்டெர்னஷனல் டூர்ன்மெண்டுக்கு எல்லாம் அவன் ஸ்டுடென்ட்ஸ் போறாங்க... கவிதாவுக்கு அது தான் சரியான இடம், நாளைக்கு ஸ்கூல் லீவு தானே... அவளை அழைச்சுட்டு நான் சொல்ற இடத்துக்கு வா, நானும் வரேன்..." என்று சொல்ல, கயல்விழி நெகிழ்ந்து விட்டாள்...

"ரொம்ப நன்றி சார்" என்று சொல்லி விட்டு அலைபேசியை வைத்தவளுக்கு ஒரு நிம்மதி பெருமூச்சு...

அப்படியே கவிதாவை தேடிச் சென்றாள்.

அவளோ டி வியில் பேட்மின்டன் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அருகே வந்து அமர்ந்த கயல்விழியை திரும்பிப் பார்த்த கவிதாவோ, "மேட்ச் செமயா போகுதும்மா" என்றாள்.

அவளை இமைக்காமல் பார்த்து இருந்தாள் கயல்விழி...

"என்னம்மா அப்படி பார்க்கிறீங்க?" என்று கவிதா கேட்க, கயல்விழியோ, "நீ அங்கே விளையாடணும்" என்று டி வியை கையால் காட்டியவள், "நான் இங்க இருந்து பார்க்கணும்" என்றாள்.

கவிதாவின் விழிகள் விரிய, "என்னம்மா சொல்றீங்க?" என்றாள் அவள்...

கயல்விழியோ, "உன் கோச்சிங்க்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன்" என்று சொல்லி முடிக்கவில்லை, "ஐ லவ் யூம்மா" என்று சொல்லிக் கொண்டே அவளை இறுக அணைத்துக் கொண்டாள் கவிதா...

"தேவதைகளுக்கு பறக்க வழியை மட்டும் காட்டி விடுங்கள், வானை தொட்டு விடுவார்கள்..."
 
அத்தியாயம் 10

அடுத்த நாள் காலையில் கயல்விழியுடன் புறப்பட்டு இருந்தாள் கவிதா...

அங்கே ஏற்கனவே ராஜ் நின்று இருக்க, "ஹாய் அங்கிள்" என்று சொல்லிக் கொண்டே அவனை நோக்கி கவிதா வர, "ஹாய் கவிதா, அம்மா எல்லாமே சொன்னாங்க, நாம ஜெயிக்கிறோம்" என்று பெருவிரலை தூக்கி காட்ட, அவளும் பெருவிரலை தூக்கி புன்னகையுடன் காட்டினாள்...

அன்று கவிதாவை அங்கே ராஜ் மற்றும் கயல்விழி அறிமுகப்படுத்தி விட்டு அவள் விளையாடுவதை பார்த்துக் கொண்டே நின்றார்கள்...

"கவிதா செமயா விளையாடுறா கயல்... அவளுக்கு இந்த வழி தான் சரி... நீ ரொம்ப பொருத்தமான முடிவு எடுத்து இருக்க" என்று சொல்ல, கயல்விழியும் பெருமையுடன் சிரித்துக் கொண்டாள்.

மகள் விளையாடுவதை பார்க்க பார்க்க அவளுக்குள் ஒரு நெகிழ்ச்சியும் பெருமிதமும் சேர்ந்து கொண்டது...

அன்று மாலையே அவளை கடைக்கு அழைத்து சென்று அவளுக்கு தேவையான எல்லாமே வாங்கிக் கொடுத்தாள்.

கவிதாவுக்கு சந்தோஷம் தாங்க முடியவே இல்லை...

வார்த்தைக்கு வார்த்தை, "ஐ லவ் யூம்மா" என்று சொல்லிக் கொண்டே இருந்தாள்.

பாடசாலைக்கு சென்று கொண்ட கோச்சிங்குக்கும் சென்றாள்...

பதின்மூன்றாவது வயதில் தனது முதலாவது பேட்மிண்டன் டூர்னமெண்டில் கலந்து கொண்டாள்.

காலையில் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்ட கயல்விழி தான் அவளை அழைத்து சென்றாள்.

ராஜ்ஜூம் கூடவே சென்றான்...

போகும் வழியில், "என்ன கவிதா? உன்னை விட உன் அம்மா தான் பயப்படுறா போல" என்று கேட்க, கவிதாவோ, "ஆமா அங்கிள்... நானே ஜாலியா இருக்கேன்... இவங்க காலைல இருந்து பதட்டமா இருக்காங்க" என்று சொல்ல, கயல்விழியோ, "நான் ஒண்ணும் பதட்டமா இல்லையே" என்றாள்...

"பார்க்கவே தெரியுது" என்று கவிதா சிரித்துக் கொண்டே சொல்லி இருக்க, டூர்ன்மெண்ட் நடக்கும் இடத்துக்கும் வந்து விட்டார்கள்...

கவிதா பயிற்றுவிப்பவருடன் பேச சென்று விட்டாள்.

கயல்விழிக்கு பதட்டம் கையை பிசைந்து கொண்டே பார்வையாளர் அரங்கில் அமர்ந்து இருந்தாள்.

அவள் அருகே இருந்த ராஜ்ஜோ, "ரிலாக்ஸ் கயல்" என்று சொல்ல, அவளும் ஆமோதிப்பாக தலையாட்டிக் கொண்டாள்.

டூர்ன்மெண்டும் ஆரம்பமானது...

கவிதாவின் முதல் போட்டி... கடினமாக தான் இருந்தது... இறுதி தருணம்...

யார் வெற்றி பெறுகிறார்கள் என்று சீட் நுனியில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்தார்கள்...

"கவிதா கமான்" என்று சத்தமாக கத்தினாள் கயல்விழி...

அடுத்த கணமே கவிதா அடித்த பூப்பந்தை எதிரணி பெண் தவறவிட, கவிதா வென்று விட்டாள்.

பலத்த கரகோஷம்...

கயல்விழிக்கு கண்ணீருடன் புன்னகை...

எழுந்து நின்று கைகளை தட்டினாள்...

துள்ளிக் குதித்தாள்...

குழந்தையாகவே மாறி விட்டாள்...

தன் மகளின் வெற்றியில் குழந்தையாக மாறி விட்ட தாயவள்...

கவிதாவோ வியர்த்து வடிய சந்தோஷத்தில் கையை உயர்த்திக் கொண்டே தாயை பார்த்தவள் இதழ் பிரித்து சிரித்துக் கொண்டாள்.

அவளது முதல் வெற்றி...

கயல்விழிக்கு தானே வாழ்வில் வென்று விட்ட உணர்வு...

கத்தி அழ வேண்டும் போல இருந்தது...

சிரித்துக் கொண்டே கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

நிற்காமல் வழிந்தது...

அன்று போட்டி முடிய வீட்டுக்கு அவள் வந்ததுமே, வாசலில் நின்ற மாதவியோ, "எல்லாரோட கண்ணும் என் பேத்தி மேல தான் பட்டு இருக்கும்" என்று சொல்லிக் கொண்டே திருஷ்டி சுற்றினார்...

மணிவண்ணனோ, "இங்க வாம்மா" என்று கவிதாவை அணைத்துக் கொண்டவருக்கோ கண்ணீர்...

அதே அழுகையுடன் கயல்விழியை ஏறிட்டுப் பார்த்தவர், "சாதிச்சுட்டம்மா, நான் உனக்கு கொடுக்காம விட்டதை, நீ உன் பொண்ணுக்கு கொடுத்துட்டே..." என்று சொல்ல, அவளும் ஆமோதிப்பாக சிரித்துக் கொண்டே தலையாட்டியவள் அங்கே நின்ற ராஜ்ஜிடம், "ரொம்ப நன்றி சார், நீங்க இல்லன்னா இதெல்லாம் சாத்தியம் இல்ல" என்று சொல்ல, "நான் என்ன கயல் பண்ணினேன்? அவளுக்கு திறமை இருக்கு... நான் வழி மட்டும் தானே காட்டினேன்" என்றான்...

அதனை தொடர்ந்து கவிதாவுக்கு ஏறு முகம் தான்...

அனைத்து போட்டியிலும் வெற்றி தான்...

நிறைய போட்டிகளில் பங்கு பற்றி பரிசுகளை அள்ளிக் குவித்தாள்.

வீடெல்லாம் அவள் எடுத்த கிண்ணத்தால் நிரம்பின...

பத்திரிகைகளில் அவள் படமும் வர ஆரம்பித்து விட்டது...

பதினாறு வயதையும் கடந்து விட்டாள்.

கயல்விழிக்கும் வேலையில் பதவி உயர்வு கிடைத்து விட்டது...

அன்று மேனேஜர் ஆக பொறுப்பு ஏற்கின்றாள்...

காலையிலேயே புடவை அணிந்து ஆயத்தமாகிக் கொண்டு இருந்தவள் பின்னே கையை கட்டிக் கொண்டே நின்று இருந்தாள் கவிதா...

கயல்விழியையே பார்த்து இருந்தாள்.

"என்ன கவி?" என்றாள் கயல்விழி கண்ணாடியூடு அவளை பார்த்துக் கொண்டே...

"ரொம்ப அழகா இருக்கீங்க" என்றாள் புன்னகையுடன்...

"ரொம்ப ஐஸ் வைக்காதே" என்று சிரித்தபடி சொன்ன கயல்விழியோ, தனது கைக்கடிகாரத்தை கட்ட முயல, அவள் அருகே வந்த கவிதாவோ, "எல்லாம் ஓகே, இப்போவும் இந்த பழைய வாட்ச் தானா?" என்று கேட்டுக் கொண்டே, அதனை பறித்து எடுத்தவளோ அடுத்த கரத்தில் பின்னால் மறைத்து வைத்து இருந்த புது கைக்கடிகாரத்தை நீட்டினாள்...

அவளை அதிர்ந்து பார்த்த கயல்விழியோ, "என்னம்மா இது?" என்று கேட்க, கவிதாவோ அவள் கையில் கடிகாரத்தை கட்டிக் கொண்டே "என் அம்மாவுக்கு நான் கொடுக்கிற முதல் பரிசு... போன டூர்ன்மெண்ட்ல எனக்கு பத்தாயிரம் கிஃப்ட் கொடுத்தாங்க... உங்க கிட்ட நான் கொடுக்காம வச்சு இருந்தேன்... நீங்களும் கேட்கல... இதுக்காக தான் வச்சு இருந்தேன்..." என்று சொல்ல, கயல்விழி நெகிழ்ந்து விட்டாள்.

அடுத்த கணமே மகளை இறுக அணைத்துக் கொண்டாள்.

நெகிழ்ந்து போய் விட்டாள்.

"நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் கவி..." என்று விம்மலுடன் சொல்ல, "சந்தோஷமா இருக்கேன்னு சொல்லிட்டு அழறீங்களே" என்று கவிதா கேட்க, அவளோ கண்ணீரை துடைத்துக் கொண்டே, "சரி அழல... போதுமா?" என்று கேட்டுக் கொண்டே கவிதாவுடன் வெளியே சென்றவள், "அப்பா, கவிதா எனக்கு வாங்கி கொடுத்த வாட்ச்" என்று கைக்கடிகாரத்தை காட்டினாள்...

கண்ணில் படும் எல்லோரிடமும் காட்டினாள்... பூரிப்பாக காட்டினாள்.

கணவன் வாங்கி கொடுத்ததை மட்டும் தான் பெண்கள் பெருமையாக பேச வேண்டும் என்று இல்லையே... தமது தேவதைகள் வாங்கி கொடுத்ததையும் பெருமையாக பேசலாம்...

கயல்விழி பேசினாள்...

இப்படியே நாட்கள் நகர்ந்து கவிதாவுக்கு பதினெட்டு வயதும் தொட்டு விட்டது...

அன்று இரவு, குளித்து விட்டு சாப்பிட்டு விட்டு கயல்விழி முன்னே வந்து அமர்ந்தாள் கவிதா...

"சொல்லும்மா" என்றாள் கயல்விழி...

"இதுவரைக்கும் நான் கேட்டது இல்லம்மா... ஆனா இப்போ என்னாச்சுன்னு தெரிஞ்சுக்க ஆசைப்படுறேன்..." என்று கவிதா ஆரம்பிக்க, "என்ன புதிர் போடுற?" என்றாள் கயல்விழி...

பெருமூச்சுடன் அவள் கையை பற்றிய கவிதாவோ, "ஒரு தடவை பாட்டி அப்பாவுக்கு திட்டும் போது உளறிட்டாங்க... அப்பா உயிரோட இருக்காருன்னு எனக்கு தெரியும்... உங்க வாழ்க்கைல என்னாச்சுன்னு தெரிஞ்சுக்க தோணுது" என்றாள்.

கயல்விழியிடம் மௌனம்...

"இஷ்டம்னா சொல்லுங்க, இல்லன்னா பரவாயில்ல" என்று சொல்லிக் கொண்டே, எழப் போக, அவள் கையை பற்றிய கயல்விழியோ, "சொல்றேன்மா" என்று ஆரம்பித்தவள் தனது வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் சொன்னாள்.

கயல்விழி அழவில்லை... ஆனால் கவிதாவின் கண்ணில் இருந்து கண்ணீர்...

"ஏன்மா அந்த பொறுக்கிய பொலிஸ் ல பிடிச்சு கொடுக்கல?" என்று கேட்டாள். சற்று முன் அப்பா என்ற அழைப்பு இப்போது பொறுக்கி என்று மாறி இருந்தது...

கயல்விழியோ பெருமூச்சுடன், "உன் மேல அவனோட மூச்சு காத்து கூட படக் கூடாதுன்னு நினச்சேன்... அதான் மொத்தமா விலகிட்டேன்" என்று சொல்ல, அவளை பெருமிதமாக பார்த்த கவிதாவோ, "நீங்க உண்மையாவே கிரேட் மா" என்று சொல்லிக் கொண்டே அவளை அணைத்துக் கொள்ள, கயல்விழியோ, "நாளைக்கு டூர்ன்மெண்ட் இருக்குல்ல, சீக்கிரம் தூங்கும்மா" என்றாள்.

இதே சமயம் தனக்கு முன்னே இருந்த பத்திரிகையை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தான் ஜெயராம்...

அதில் கவிதா மற்றும் கயல்விழியின் புகைப்படம்...

கவிதாவின் சாதனைகள் எல்லாம் எழுதப்பட்டு இருந்தன... அவன் அதனை பார்த்துக் கொண்டு இருக்கும் போதே, "டேய் ஜெயராம் இங்க வாடா" என்று சத்தம்...

அது வைதேகியின் சத்தம்...

உள்ளே இருந்து கேட்டது...

அவனோ ஒரு பெருமூச்சுடன் எழுந்து உள்ளே செல்ல, அங்கே நிலம் எல்லாம் அசிங்கப்படுத்தி வைத்து இருந்தார் வைதேகி... படுத்த படுக்கையாக இருக்கின்றார்...

ஜெயராமின் தந்தை இறந்து விட்டார்...

ஜெயராமின் இரெண்டாவது மனைவியும் இவன் கொடுமை தாங்க முடியாமல் தூக்கு மாட்டி இறந்து இருக்க, போலீஸ் கேஸ் என்று பல வருடங்களை சிறையில் கழித்த ஜெயராம், இப்போது படுக்கையாக இருக்கும் தாயை பார்க்க வேண்டிய கட்டாயம்...

கையில் கொஞ்சமும் பணம் இல்லை...

குடிப்பதற்காக வாங்கிய கடன் எல்லாம் அவனை நெரித்துக் கொண்டு இருந்தது...

ஒழுங்கான வேலை இல்லை...

தாயை எரிச்சலாக பார்த்தவன், "அவசரம்னா சொல்ல வேண்டியது தானே" என்று திட்டிக் கொண்டே அந்த இடத்தை சுத்தம் செய்தான்...

சுத்தம் செய்யும் போது கயல்விழியின் நினைவு வந்து போனது...

ஆழ்ந்த மூச்சை எடுத்தவனோ, மீண்டும் வெளியே வந்து டூர்ன்மெண்ட் நடக்கும் இடத்தை பத்திரிகையில் பார்த்தான்...

மகளை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது...

அவர்களை தேடி செல்ல புறப்பட்டு விட்டான்...

இதே சமயம் டூர்னமெண்டில் ஜெயித்த கவிதாவோ கயல்விழி அருகே பெருமிதத்துடன் நின்று இருந்தாள்.

"பேட்மிண்டன் சேம்பியன் கவிதா ஜெயராம்" என்று அவளை மேடைக்கு அழைக்க, மேடை ஏறியவளோ தனது பெயரை உச்சரித்தவளின் காதில் ரகசியம் சொன்னாள்.

அடுத்த கணமே, "பேட்மிண்டன் சேம்பியன் கவிதா கயல்விழி" என்று அந்த அனௌன்சர் சொல்ல, கயல்விழி அதிர்ந்து போய் மகளை பார்த்தாள்.

"உன் பொண்ணு கலக்குறா கயல்" என்று அவள் அருகே நின்ற ராஜ் சிரித்துக் கொண்டே சொல்ல, ஆம் என்ற ரீதியில் கண்ணீருடன் தலையாட்டிக் கொண்டாள்.

அடுத்தது கவிதா வெற்றிக் கிண்ணத்தை வாங்கிக் கொண்டே பேசுவதற்காக மைக்கை வாங்கியவள், "நான் இங்க நிக்கிறேன்னா அதுக்கு என் அம்மா தான் காரணம்... அவங்களுக்கு கிடைக்காதது எல்லாம் எனக்கு கொடுத்து இருக்காங்க, என்னை சாதிக்க வச்சு இருக்காங்க, என் ஸ்ட்ரென்த் வீக்னஸ் எல்லாமே என் அம்மா கயல்விழி தான்... ஷி இஸ் தெ பெஸ்ட் மதர்... அம்மா ஐ லவ் யூ... இது உங்களுக்கு தான்" என்று கிண்ணத்தை தூக்கி காட்டியவள், "மேல வாங்க" என்றாள்...

கயல்விழியோ அவசரமாக மறுக்க, ராஜ்ஜோ, "மேல போ கயல்" என்று சொல்ல, "அங்கிள் நீங்களும் வாங்க" என்றாள் கவிதா...

அங்கே நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், "மேல வாங்க மேடம், மேல வாங்க சார்" என்று அழைக்க, மறுக்க முடியாமல் மேலே ஏறினார்கள்...

கயல்விழியின் கையில் கிண்ணத்தை கொடுத்த கவிதாவோ, "இவங்க தான் என் அம்மா, ஸ்ட்ரோங் வுமன்... என்னோட இன்ஸ்பையரேஷன்... பொண்ணுங்களால சாதிக்க முடியும்னு எனக்கு கத்து கொடுத்தவங்க... அயர்ன் லேடி... என்னோட சிங்கப்பெண் இவங்க தான்…" என்று சொல்ல, கயல்விழி அவளை புன்னகையுடன் பார்த்துக் கொண்டே நின்று இருந்தாள்.

"மேலும் தொடர்ந்த கவிதாவோ, "இது என்னோட அங்கிள்... அம்மாவுக்கு கூட பிறக்காத அண்ணா போல... அவங்களோட பெக் போன் மட்டும் இல்லை... என்னோட பெக் போனும் இவர் தான்" என்று சொல்ல, ராஜ்ஜிக்கும் கண்கள் கலங்கி விட்டன... இப்படி ஒரு அங்கீகாரத்தை அவன் எதிர்பார்க்கவே இல்லை...

அவள் பேச பேச கரகோஷம் வானை பிளந்தது...

தாயை பெருமை படுத்தி விட்டாள்.

நிகழ்வு முடிய சந்தோஷமாக மூவரும் வெளியேறி வந்தார்கள்...

ராஜ்ஜோ, "கயல், நானும் கவிதாவும் கோச் கூட பேசிட்டு வர்றோம்... நீ கார் கிட்ட வெய்ட் பண்ணு" என்று சொல்ல, அவளும் கார் அருகே இருந்த மர நிழலில் நின்று கொண்டாள்.

அவள் முன்னே வந்து நின்றான் ஜெயராம்...

கயல்விழிக்கு அதிர்ச்சியில் விழிகள் விரிந்து கொண்டன...

பரட்டை தலை... பாதி நரைத்த தாடி மீசை...

நேர்த்தி இல்லாத உடை என்று பார்க்கவே சற்று அருவருப்பாக இருந்தான்...

அவள் முகம் இறுக, "எப்படி இருக்க கயல்?" என்று கேட்டான்...

அவளோ, "ம்ம்" என்று மட்டும் தலையாட்டினாள்...

"என் பொண்ண சாதிக்க வச்சுட்டேல்ல" என்றான்...

"என் பொண்ணு" என்கின்ற வார்த்தையில் கயல்விழிக்கு கோபம் தலைக்கு ஏறியது... அடக்கிக் கொண்டாள்.

பிறந்தது பெண் குழந்தை என்பதால் முகத்தை கூட பார்க்காதவன் அல்லவா அவன்?

"என்ன விஷயம்?" என்றாள்...

ஜெயராமோ, "என் வாழ்க்கைல என்னவோ எல்லாம் நடந்து போச்சு..." என்று ஆரம்பித்து எல்லாமே சொன்னான்... கயல்விழியின் மனமோ, "அந்த பொண்ணை கொன்னுட்டான் ச்ச" என்று நினைத்துக் கொள்ள, "நான் பண்ணுனது தப்பு தான்... எனக்கு நீங்க எல்லாரும் திரும்ப வேணும்... நாம சந்தோஷமா இருக்கலாம்" என்று சொல்ல, இப்போது இளக்காரமாக சிரித்த கயல்விழியோ, "உன் அம்மாவை பார்த்துக்கணும், உனக்கு குடிக்க பணம் வேணும்... அதுக்கு நான் வேணுமா? நான் ஒன்னும் பழைய கயல்விழி இல்லை... பொண்ணா பிறந்ததால அவளை பார்க்கவே இல்ல நீ... ஆனா இப்போ அவள் தேவைப்படுறாளா? எனக்கு திட்டுனது எல்லாமே நான் மறந்துட்டேன்... ஆனா என் பொண்ணு பச்சை குழந்தையா இருக்கும் போது சனியன்னு திட்டுன... என் இன்னொரு பொண்ண வயித்துலயே கொன்ன... எதையும் நான் மறக்க மாட்டேன்... இனி என் பொண்ணு மண்ணாங்கட்டின்னு இந்த பக்கம் வந்தா செருப்பால அடிப்பேன்" என்று சொல்லி முடிக்க முதல், "அம்மா சீக்கிரம் வாங்க" என்று சொல்லிக் கொண்டே, அவள் கையை பற்றி இருந்தாள் கவிதா...

ஜெயராமோ கவிதாவை பார்த்து சிரித்துக் கொண்டே, "நான்" என்று ஆரம்பிக்க, அவனை மேலிருந்து கீழ் பார்த்த கவிதாவோ, "குடிகாரன் கூட எதுக்கு பேசிட்டு இருக்கீங்க, சீக்கிரம் வாங்க" என்று கயல்விழியை வேகமாக இழுத்துக் கொண்டே சென்று காரில் ஏற, ஜெயராம் அவர்கள் காரை வெறித்துப் பார்த்தான்...

ராஜ் தான் காரை ஒட்டி சென்றான்... கவிதா அவன் அருகே இருக்க, கயல்விழி பின்னால் அமர்ந்து இருக்க, கார் கொஞ்ச தூரம் தான் சென்று இருக்கும், "உங்க கழுத்துல தாலி கட்டி உங்க வாழ்க்கையை நாசமாக்குன பொறுக்கி தானே இது... இப்போ என்னவாம்?" என்றாள்.

ராஜ்ஜூம் கயல்விழியும் அவளை அதிர்ந்து பார்க்க, "உனக்கெப்படி தெரியும்?" என்று கயல்விழி கேட்டாள்...

"அன்னைக்கு ஸ்டோர் ரூம்ல உங்க கல்யாண படம் ஒன்னு இருந்திச்சு... பார்த்துட்டேன்... இப்போ பொண்டாட்டி மேலயும் மகள் மேலயும் பாசம் பொங்குதாமா? பொண்ணுங்கள இஷ்டத்துக்கு ஆட்டி வைப்பானுங்க, கொடுமை படுத்துவானுங்க, அப்புறம் பாசம் அது இதுன்னு சொல்லி காலுல விழ வேண்டியது... உடனே நாங்க மன்னிச்சு ஏத்துக்கணுமா? இவனுங்கள திருத்தவா எங்களை உலகத்துல படைச்சு இருக்கு... இந்த கொலைகாரனை அன்னைக்கே ஜெயில்ல நீங்க தள்ளி இருக்கணும்" என்றாள் கடுப்பாக...

அவளது தெளிவான சிந்தனையை கயல்விழி வியந்து பார்க்க, "பொண்ண சூப்பரா வளர்த்து இருக்க கயல்" என்று ராஜ் சிரித்தபடி சொல்லிக் கொண்டான்...

"கவிதா" என்று அழைத்தாள் கயல்விழி...

அவளும் திரும்பிப் பார்க்க, "ஐ லவ் யூ" என்றாள் நெகிழ்வாக...

"ஐ க்னோ அம்மா" என்று கண் சிமிட்டி சொல்லிக் கொண்ட கவிதாவோ, ராஜ்ஜை திரும்பி பார்த்து, "இப்படி கழிசடைகள் நடுவுல ராஜ் அங்கிள் போல விதிவிலக்கானவங்களும் இருக்காங்கல்ல" என்றாள் புன்னகையுடன்...

"ஆமாம் கவி" என்று அதற்கு ஆமோதிப்பான பதிலை வழங்கி இருந்தாள் கயல்விழி...

"என்ன ரெண்டு பேரும் பெருமை பேசி என்னை வெட்கப்பட வைக்கிறீங்களா?" என்று சிரித்தபடி கேட்டுக் கொண்டே ராஜ் காரை செலுத்த, கவிதாவும் கயல்விழியும் மனம் விட்டு சிரித்துக் கொண்டார்கள்...

"பெண் தானே என்று தேவதைகளை ஒதுக்கி வைத்து விடாதீர்கள், இளக்காரமாக நினைக்காதீர்கள்... மறைமுகமாக இந்த உலகத்தை ஆழ்வதே பெண்கள் தான்... சமையலறை தாண்டி ஒவ்வொரு பெண் தேவதைகளுக்கும் ஆசை உண்டு, சாதிக்க வேண்டும் என்கின்ற வெறி உண்டு... ஒவ்வொரு தேவதைகள் உள்ளேயும் ஒவ்வொரு சாதனைப் பெண் ஒளிந்து இருக்கின்றாள்... சிறகடித்துப் பறக்க விடுங்கள், இந்த உலகத்தையே வென்று காட்டுவார்கள் எங்கள் தேவதைப் பெண்கள்..."

முற்றும்
 
Status
Not open for further replies.
Top