ஹாய் டியர்ஸ்,
ஓவியப்பாவையிவளோ நின் நேச நயனங்களில் கதை டீசர்,
விருப்பமில்லாத திருமணம்,காதல்,நகைச்சுவை,குடும்பம் என அனைத்தும் கலந்த கலவை!!
"கெட்டிமேளம்…கெட்டிமேளம்" என புரோகிதர் ஒற்றை விரலசைத்து குரல் கொடுக்க,மங்கள வாத்தியங்கள் முழங்க சுற்றத்தாரின் ஆசிர்வாதத்தில் துருவ் அவளின் சங்கு கழுத்தில் தாலியை கட்டி தன்னில் சரிப்பாதியாக்கிக்கொண்டான்.
நாணை கர்வத்துடன் பூட்டிவிட்டு தன் இணையானவளின் முகத்தை பார்த்து ரசிப்பதற்காக புன்னகையுடன் திரும்பியவன்,அருகில் கருமை நிறத்தில் நெற்றியில் பெரிய வட்டவடிவ பொட்டு வைத்து மாங்காய் பிஞ்சு முக்குத்தி அணிந்து வெண்ணிற பற்கள் பளீச்சென ஒளிர 'ஈ' என்று இளித்த பெண்ணவளை கண்டு அதிர்ந்து "ஆஆஆஆஆ" என பயத்தில் அலறி பதறி எழுந்தான் துருவ் விக்ரமாதித்தன்.
கட்டிலில் எழுந்து அமர்ந்தவனின் முகங்மெங்கும் வியர்த்திருக்க,பதட்டத்தில் இருந்தவன் அப்போது தான் 'தாம் கண்டது கனவு' என்பதை உணர்ந்து ஆசுவாசமடைந்தவனின் நிம்மதிக்கு ஆயுள் குறைவு என்பது போல் "மாமா என்னாச்சு??" என பதறியடித்துக்கொண்டு அந்த அறைக்குள் ஓடி வந்தாள் அவனது மனைவி வடிவாம்பாள்.
அதன்பிறகே தனக்கு நடந்தேறிய திருமண நிகழ்வு தினந்தோறும் கனவாக வந்திருக்கிறது என்பதை உணர்ந்த துருவ்வின் தேகமெங்கும் சிவந்து இறுக "ஏய் உன்னை யாரு என் ரூமுக்குள்ள வரச்சொன்னது?முதல்ல வெளிய போடீ" என பற்களை கடித்து துப்ப,
அதில் மேனி தூக்கிவாரிப்போட்டாலும் இயற்கையில் துணிச்சலான பெண் வடிவாம்பாள் என்பதால் "மாமா ஏதோ பயந்து கத்துனீங்கன்னு பாவம் பார்த்து வந்தால் ரொம்ப தான் சிலுப்புக்கிறீங்க?" என்று இடுப்பை சிலுப்பிக் கொள்ள,
வெகுண்டு கட்டிலிலிருந்து எழுந்து அவளின் கழுத்தை நெறிக்க சென்று இறுதியில் சுதாரித்து "ச்சை" என கரத்தை பின்னோக்கி இழுத்த துருவ் "ஆமாடீ…ஆமா உன்னை என்னைக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டனோ அன்னைக்கு என் நிம்மதியெல்லாம் போயிடுச்சு…பட்டிக்காடு…பட்டிக்காடு" என அவளின் தலையில் தட்டி திட்டியவன்,அவள் "ஸ்ஆ" என வலியில் முகச்சுழித்தவளை கண்டுக்கொள்ளாமல்,
"உன்னை பார்த்தால் பதினெட்டு வயசு பொண்ணு மாதிரியா இருக்கு…நாற்பது வயசு ஆன்ட்டி மாதிரி பெரிய பொட்டு வைச்சு கண்டங்கி சிலைக்கட்டி மங்காத்தா மாதிரியே இருக்கே இடியட்…போயும் போயும் உன் கழுத்தில் தாலிக்கட்டினேன் பாரு என்னை செருப்பாலே அடிச்சிக்கணும்…சென்ட்டிமென்ட்டா அதையும் இதையும் பேசி உன்னை என் தலையில் கட்டி வைச்சிட்டாங்க…என் வாழ்க்கையிலிருந்து முதல்ல போய் தொலைடீ எருமை மாடு" என வாயிற்கு வந்தது போல் கண்டப்படி மனைவி என்று பாராமல் அவன் திட்டிக்கொண்டிருக்க,இவளோ முகம் சோர்ந்து அறையிலிருந்து வெளியேறியவுடன் இவனிற்கு தான் பேசியது அதிகப்படி என்றே தோன்றியது.
இப்போது அவளை திட்டிவிட்டு வருந்திக்கொண்டிருந்த வேளையில் வடிவு மீண்டும் அந்த அறையில் நுழைந்தாள்.
அவன் தவறை உணர்ந்து வருத்தத்தில் இருந்ததினால் அவளை நிதானமாக ஏறிட,அவளோ தன் முதுகிற்கு பின்னால் மறைத்து வைத்திருந்த பொருளை எடுத்து அவனிற்கு முன்பு நீட்டி "இந்தாங்க மாமா" என்றாள் அப்பாவியாக.
அவள் எடுத்துக்காட்டிய பொருளை கண்டு குழப்பமடைந்த துருவ் விக்ரம் "எதுக்குடீ இது?" என புருவம் சுருக்கி வினவ,
"இல்லை மாமா…என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு செருப்பாலே அடிச்சிக்கணும்னு சொன்னீங்களே…அதான் உங்களுக்கு எதுக்கு கஷ்டம்னு நானே செருப்பு கொண்டு வந்திருக்கேன்…ஹூம் அடிச்சிக்கோங்க" என பாவமாக இமைக்கொட்டியப்படி பேசி அவனிடம் காலணியை நீட்டியவளை கண்டு ஒரு நொடி அதிர்ந்தவன்,சடுதியில் அவள் கூறிய சொற்களின் அர்த்தம் உணர்ந்து "ஏய்" என கர்ஜித்து அடிக்க கை ஓங்க,
"அய்யோ" என கண்களை மூடி அலறிய வடிவும் காலணியை கையில் எடுத்துக்கொண்டு "வேணாம் மாமா" என அங்கிருந்து ஓட,
"ஏய் நில்லுடீ" என துரத்திக்கொண்டு அவனும் அவளின் பின்னோடு கொலைவெறியோடு ஓடினான்.