வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

கனவாகுமோ உந்தன் நினைவுகள் - கதை திரி

Status
Not open for further replies.
வணக்கம் நட்புகளே 🙏💐
"கனவாகுமோ உந்தன் நினைவுகள்"
இன்றையில் இருந்து தினமும் ஒரு எபி வரும் படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிருங்கள் நட்புகளே 🙏💐


"கனவாகுமோ உந்தன் நினைவுகள்"



கனவு 1


மும்பை நகரத்தை விட்டு சற்று தொலைவில் இருந்த அந்த பல நூறு ஏக்கர்கள் முழுவதும் ஆர். ஆர். இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது. கார், பஸ், பைக், ஸ்கூட்டி, டிராக்டர் என பல வாகனங்களின் உதிரிபாகங்கள் தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனம்.

பெரிய பெரிய வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை இங்கிருந்து தான் வாங்குவர். உள்நாட்டிற்கும் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்கின்றனர். அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் குடும்பத்துடன் வசிக்க வீடுகளும் கம்பெனியின் அருகிலேயே பல அடுக்கு மாடி குடியிருப்புகளாக கட்டப்பட்டு இருந்தன.

அத்தியாவசிய பொருட்கள், பள்ளிகள், கல்லூரி, விளையாட்டு திடல்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டிடங்கள், சினிமா தியேட்டர்கள், மருத்துவமனை என்று அனைத்தும் அந்தப் பகுதியிலேயே இருந்ததால் அங்கு இருப்பவர்கள் எதற்கும் நகரத்திற்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த அளவுக்கு ஒரு ஊரையே உருவாக்கி இருந்தனர் ஆர். ஆர். இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினர்.

நிறுவனத்தின் உரிமையாளர்களும் அந்த பகுதியிலேயே பெரிய மாளிகை கட்டி வசித்து வருகிறார்கள். இந்த நிறுவனத்தின் நான்காவது தலைமுறையினர் இப்போது தொழிலில் அடியெடுத்து வைத்து இருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் இருந்து வேலைக்காக மும்பை வந்து சில வருடங்களில் சொந்தமாக சிறு தொழிலாக சைக்கிள் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனமாக ஆரம்பித்தது தான் இந்த ஆர். ஆர் இண்டஸ்ட்ரீஸ். ராமராஜன், ரங்கராஜன் என்ற மகன்களின் பெயர்களின் முதல் எழுத்துகளையே கம்பெனியின் பெயராக வைத்தார் தந்தை.

மகன்கள் படிப்பை முடித்து வந்த போது நிறுவனம் நன்றாக வளர்ச்சி அடைந்து இருந்தது. மகன்கள் தொழிலில் இறங்கியதும் சைக்கிள் பாகங்கள் மட்டும் இல்லாமல் பைக், ஸ்கூட்டர் பாகங்களையும் செய்ய அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. படிப்படியாக உயர்ந்தது நிறுவனம்.


ராமராஜனின் மனைவி கற்பகம் இவர்களுக்கு மகளும் மகனும் இருக்கிறனர்.

ரங்கராஜனின் மனைவி சாந்தி இவர்களுக்கும் இரண்டு மகன்கள்.

மூன்றாவது தலைமுறை நிறுவனத்திற்கு வந்த பிறகு அபார வளர்ச்சி அடைந்து இந்தியாவில் பெரிய நிறுவனங்களில் ஆர். ஆர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் உயர்ந்து இருந்தது. அனைத்து வாகனங்களின் உதிரிபாகங்களையும் தயாரித்து ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளது. தங்களுக்கு என்று ஒரு நகரத்தையே உருவாக்கும் அளவுக்கு தொழிலில் வளர்ச்சி அடைந்து இருந்தனர்.

இப்போது நான்காவது தலைமுறைகள் தொழிலில் அடியெடுத்து வைத்து இருக்கின்றனர். அன்றிலிருந்து இன்று வரை அனைவரும் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்கள். மும்பை நகரத்திற்குள் பல மாளிகைகள் அவர்களுக்கு இருந்த போதும் அங்கு தேவைக்கு மட்டும் சென்று வருபவர்கள் சில வருடங்களாக அவர்கள் வசிப்பது அவர்கள் உருவாக்கிய ஆர் ஆர் இண்டஸ்ட்ரீஸ் நகரத்தில் பெரிய மாளிகை கட்டி வசித்து வருகின்றனர்.

ராமராஜனின் மகள் மஞ்சுளா கல்லூரியில் படிக்கும் போதே தன் சீனியர் மாணவர் வைத்தீஸ்வரனை காதலித்து படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொண்டார். வைத்தீஸ்வரனின் தந்தை தமிழ் தாய் வட இந்தியர். பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தவர்கள் வைத்தீஸ்வரன் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போது விபத்தில் இறந்து இருந்தனர்.

எனவே படிப்பை முடித்து தங்கள் பைனான்ஸ் நிறுவனத்தை பார்த்துக்கொண்டு இருந்தவர் மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டு மாமனார் வீட்டிலேயே வந்து தங்கி விட்டார்.

மாமனார் வீட்டில் இருந்த போதும் அவரின் பைனான்ஸ் நிறுவனத்தை மட்டுமே பார்த்துக்கொண்டார். மாமனார் தொழிலில் உரிமை கொண்டாடவில்லை. அதுவே அந்த கூட்டுக்குடும்பத்தில் இதுவரை எந்த பிரச்சினையும் இல்லாமல் ஒற்றுமையாக இருக்க காரணமாகவும் இருந்தன.

அவராக உரிமை கொண்டாடாமல் இருந்ததாலும் வீட்டின் முதல் வாரிசின் கணவர் என்பதாலும் அவருக்கு மரியாதையும் மதிப்பும் அதிகம். அக்காவின் கணவர் பெரியவர் என்பதால் மஞ்சுளாவின் தம்பிகளுக்கு மிகவும் பிடித்தவராக இருந்தார் வைத்தீஸ்வரன். அவர்களிடம் ஒரு நண்பனாகத்தான் பழகுவார் வைத்தீஸ்வரன்.

வைத்தீஸ்வரன் மஞ்சுளா தம்பதிகளுக்கு ஆருத்ரன், ரகுநந்தன் இருமகன்கள். ஆருத்ரன் வயது 28 படிப்பை முடித்து நான்கு வருடங்களாக தந்தையின் பைனான்ஸ் நிறுவனம் தாத்தாவின் ஆர் ஆர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இரண்டு தொழிலையும் பார்த்துக்கொண்டு இருக்கிறான். ரகுநந்தன் 25 வயது அண்ணனுடன் ஒராண்டுக்கு மேலாக தொழிலை பார்த்து கொண்டு இருக்கிறான்.

மஞ்சுளாவின் மூன்று தம்பிகளுக்கு இரண்டு இரண்டு மகன்களே அனைத்து பிள்ளைகளும் கல்லூரி, பள்ளி படித்து கொண்டு இருக்கின்றனர். மஞ்சுளாவிற்கு பிறகு அந்த வீட்டில் பெண் வாரிசு இல்லை. எட்டு ஆண்பிள்ளைகள் வாரிசுகளாக இருந்தனர். பெண் வாரிசு இல்லை என்ற மனக்குறை அனைவருக்கும் இருந்தது.

எப்போதும் அந்த வீட்டில் ஆண் பிள்ளைகளின் பேச்சும் சிரிப்பும் கலாட்டாக்கள் மட்டுமே இருக்கும். எல்லா பிள்ளைகளும் எப்போதும் ஆட்டம்பாட்டமாக இருந்த போதும் அதில் ஆருத்ரன் கலந்து கொள்ளமாட்டான்.

சிறு வயதில் இருந்தே ஒரு இறுக்கத்துடனே இருப்பான். கணக்கில்லாத பணமும் பாசமான குடும்பமும் இருந்தபோது அவனுக்குள் ஒரு தேடல் இருந்து கொண்டே இருந்ததால் அவனால் இயல்பாக இருக்கமுடியாமல் எப்போதும் ஒதுங்கியே இருப்பான்.

அந்த சிவனின் பெயரை வைத்ததாலோ என்னவோ வெளியே அமைதியாக வளைய வருபவனின் மனதுக்குள் எரிமலையின் சீற்றம் இருந்து கொண்டே இருக்கிறது. அது அதிகமாகும் போது அவன் சரணடையும் ஒரே இடம் பாட்டி கற்பகத்தின் மடிதான். வெளியே இரும்பு மனிதனாக தெரிபவன் பாட்டியிடம் மட்டும் குழந்தையாக மாறி விடுவான்.

ஒவ்வொரு ஞாயிறுக்கிழமையும் மதிய உணவு குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து உண்டு விட்டு தொழில் பற்றியும் குடும்ப விசயங்களையும் பேசுவது அந்த குடும்பத்தில் வழக்கம். பிள்ளைகளும் தொழில் பற்றி தெரிந்து கொள்ளவே இந்த பழக்கம்.

இரண்டு வாரத்திற்கு முன்பு பேசும் போது இந்த ஆண்டு இரண்டு பேரன்கள் படிப்பை முடிப்பதால் அவர்களையும் அதே தொழில் செய்வதை விட வேறு தொழில்கள் புதிதாக தொடங்கலாம் என்று பேசியிருந்தனர்.

ஏற்கனவே இரண்டு தாத்தாக்கள் மூன்று அப்பாக்கள் அவர்களுடன் ஆருத்ரன், ரகுநந்தன் என்று அனைவரும் ஒரே தொழிலில் இருப்பதோடு பெரிய நிறுவனமும் அதன் கீழ் உள்ள பள்ளி, கல்லூரி மால்கள், தியேட்டர், மருத்துவமனை என்று இருந்த போதும் அனைத்தும் அதற்குரிய ஆட்களை நியமித்து நன்றாக சென்று கொண்டு இருப்பதால் அடுத்து புதிதாக எதாவது தொழிலில் இறங்க வேண்டும் என்று முடிவு செய்து எந்த தொழிலில் இறங்கலாம் என்ற பேசி இருந்தனர்.

அதற்கான முடிவை இன்று மதிய உணவுக்கு பின் பேச இருந்தனர். இந்த இரண்டு வாரங்களாக ஆருத்ரன் எப்போதும் இருப்பதை விட இன்னும் ஒதுங்கிப்போனான் எப்போதும் சிந்தனையுடனே இருந்தான். இரண்டு நாட்களாக தன் பணியைக்கூட செய்யாமல் எங்கோ சென்று விட்டு இன்று காலை தான் வந்திருந்தான். அவனை யாரும் எங்கு சென்றாய் என்று கேட்கவில்லை கேட்டாலும் பதில் கிடைக்காது.

காலை டிபனை மறுத்துவிட்டு பாட்டியின் மடியில் தலைவைத்து படுத்திருந்தான் ஆருத்ரன். அவனின் தலைகோதி மெல்லிய குரலில் பாடிக்கொண்டு இருந்தார் கற்பகம் பாட்டி.


"ஆயர்பாடி மாளிகையில் தாய்
மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகிறான்
தாலேலோ"

"ஆயர்பாடி மாளிகையில் தாய்
மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகிறான்
தாலேலோ"

"அவன் வாய் நிறைய மண்ணை
உண்டு
மண்டலத்தை காட்டிய பின்
ஓய்வெடுத்து தூங்குகிறான்
ஆராரோ
ஓய்வெடுத்து தூங்குகிறான்
ஆராரோ"

"ஆயர்பாடி மாளிகையில் தாய்
மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகிறான்
தாலேலோ"


பாடலை கண்மூடி கேட்டுக்கொண்டு இருந்தவனின் மனதில் அதுவரை இருந்த குழப்பங்கள் நீங்கின. எவ்வளவு தடைகள் வந்த போதும் தான் நினைத்ததை நடத்தியே தீருவேன் என்ற உறுதியை எடுத்தவன் அடுத்து செய்ய வேண்டியவைகளை மனதில் ஓட்டிப்பார்த்து விட்டு தெளிந்த முகத்துடன் எழுந்தான்.

"பாட்டி எனக்கு பசிக்குது வாங்க" என்று அவரை எழுப்பி டைனிங் டேபிளுக்கு கை பிடித்து அழைத்து சென்றான்.

கற்பகம் பாட்டி அவனுக்கு தட்டில் இட்லியை வைத்து அவனுக்கு பிடித்த புதினா சட்னியையும் சாம்பாரையும் வைத்து கொடுக்கவும்

"நீங்களே ஊட்டி விடுங்க பாட்டி" என்றான்.

பாட்டியும் ஆருத்ரனுக்கு ஊட்டி விட்டுக்கொண்டு இருந்த நேரம் "ஆரம்பிச்சுட்டாங்கடா பாசமலர் படத்தை" என்று கூறிக் கொண்டு வந்து ஆருத்ரனின் அருகில் அமர்ந்தான் ரகுநந்தன்.

அவனை முறைத்த ஆருத்ரன் "நீ எதுக்குடா இங்க உட்கார்ந்த எழுந்து போடா" என்றான்.

"இது என்ன அநியாயமாக இருக்கே பசிக்குது என்று வந்த பச்சபுள்ளைக்கு ஒரு வாய் சோறு கூட போடாமல் துரத்துராங்களே இதை கேட்க யாரும் இல்லையே ஐய்யகோ நான் என்ன செய்வேன் ஏது செய்வேன் என விவேக் பாணியில் பேசியவனின் முதுகில் ஒரு அடியை வைத்த கற்பகம் பாட்டி.

"பசிக்கிறவன் இவ்வளவு நேரம் சாப்பிடாமல் என்ன பண்ணிட்டு இருந்த சாப்பிடவேண்டியது தானே" என்றார்.

"அப்ப பசிக்கலை இப்பதான் பசிக்குது" என்றவன் ஆவென பாட்டி ஊட்டுவதற்காக வாயைத்திறந்தான்.

கற்பகம் பாட்டி ஊட்டுவதற்காக உணவை ரகுநந்தனின் வாயருகில் கொண்டு சொல்ல ஆருத்ரன் அவரின் கைபிடித்து உணவை தன் வாயில் வாங்கிக்கொண்டவன் "அவனுக்குத்தான் கையிருக்கே அவனே போட்டு சாப்பிடட்டும் நீங்க எனக்கு மட்டும் ஊட்டுங்க பாட்டி" என்றான்.

'இட்லி போச்சே' என்று சோகமாக பார்த்தவன் ஆருத்ரன் கையை பிடித்து "அப்ப இது பேர் கையில்லையா? உலக்கையா?" என்று கூறியவன் எழுந்து ஓடுவதற்கு தயாராக நிற்க அவன் எதிர்பார்த்தது போல் இருக்கையில் இருந்து வேகமாக எழுந்தான் ஆருத்ரன்.

"கையா? உலக்கையா? என்று காட்டுறேன் இருடா" என்றவன் ஓடிய ரகுநந்தனை துரத்தினான் ஆருத்ரன்.

ஓடிக்கொண்டிருந்த ரகுநந்தனோ அந்த பெரிய ஹாலிலேயே சுற்றியவன் "தாத்தாஸ், பாட்டிஸ், மாமாஸ், அத்தைஸ், அப்பா, அம்மா ஹெல்ப்... ஹெல்ப்...." என்று அங்கிருந்தவர்களை அழைத்தபோதும் யாரும் அவனின் உதவிக்கு வராமல் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

பெரியவர்களின் உதவி கிடைக்காமல் போக அங்கு அமர்ந்து இருந்த மாமாவின் மகன்களை பார்த்து "அடேய் அரை டசன் மச்சான்ஸ் வந்து காப்பாத்துங்கடா" என்று கத்தியதும் அதற்காவே காத்திருந்தது போல்

"இதோ வந்துட்டோம் மாம்ஸ்" என்று ஆறு பேரும் கோரஸ் பாடி எழுந்து ஓடி வந்து ரகுநந்தனை பிடித்திருந்தனர்.

"அடேய் என்னை ஏன்டா பிடிச்சிங்க அவனை பிடிக்கச்சொன்னேன்" என்று சோகமான குரலில் சொன்னான் ரகுநந்தன்.

"அப்படியா மாம்ஸ் நீங்க விளக்கமாக சொல்லியிருந்தால் புரிந்து இருக்கும் நீங்க ஹெல்ப் ஹெல்ப் என்று கூப்பிட்டதும் உங்களுக்குத்தான் ஹெல்ப் தேவை என்று உங்களை பிடிச்சு இருக்கோம்" என்றான் ஒருவன். மற்றவர்கள் "ஆமாம் ஆமாம் மாம்ஸ்" என்று கோரஸ் பாடினர்.

"ஆமாம்டா நல்லா கோரஸ் பாட கத்து வச்சிருக்கிங்க" என்றவன் எதிரில் இடுப்பில் கை வைத்து முறைத்து நின்ற ஆருத்ரனை பார்த்து "அதான் உனக்கு எட்டப்பன் வேலை செய்துட்டான்களே நீ எதுக்கு நிக்குற உன் வேலையை ஆரம்பி" என்றான் சோகக்குரலில் ரகுநந்தன்.

அதுவரை முறைத்துக்கொண்டு இருந்தவன் பக்கென்று சிரித்துவிட்டான் ஆருத்ரன்.

அனைவரும் கண்கள் கலங்க ஆருத்ரனை பார்த்திருந்தனர். இப்படி வாய்விட்டு அவன் சிரிப்பது அபூர்வமாக நடக்கும் அதுவும் சில மாதங்களாக சிறு புன்னகை கூட அவன் முகத்தில் பார்க்க முடியாமல் இருந்தது. இன்று அவனின் புன்னகையை அனைவரும் ஆசையாக பார்த்துக்கொண்டே மனதில் 'எப்போதும் இந்த புன்னகையை இவனுக்கு நிலைக்க வை கடவுளே' என்ற கோரிக்கையை வைத்தனர்.

தம்பியின் தலையில் ஒரு குட்டு வைத்தவன் அவனின் தோளில் கை போட்டுக்கொண்டு மற்றவர்களை பார்த்து "வாங்கடா" என்று அழைத்துக்கொண்டு டைனிங் டேபிளுக்கு சென்றான் ஆருத்ரன். தான் உண்ணவில்லை என்பதால் தம்பியும் மாமன் மகன்களும் உண்ணாமல் இருக்கின்றனர் என்பதை அறிந்தவன் தட்டில் இருந்த இட்லியை எடுத்து ரகுநந்தனுக்கு ஒரு வாய் ஊட்டி விட்டவன் அருகில் இருந்த ஆறு பேருக்கும் ஒவ்வொரு வாய் ஊட்டி விட்டு

"டேய் நீங்களே சாப்பிடுங்கடா நான் ஊட்டிட்டு இருந்தால் லன்ச் சாப்பிடும் நேரமே வந்திடும்" என்று புன்னகையுடன் கூறிவிட்டு பாட்டியிடம் "இவங்களுக்கும் டிபன் வைங்க பாட்டி" என்றான்.

"இல்லை எங்களுக்கு நீங்களே ஊட்டி விடுங்க பாட்டி" என்று கோரஸ் பாடினர் ஏழு பேரும்.

"டேய் பாட்டி பாவம்டா" என்றான் ஆருத்ரன்.

"அதான் இரண்டு பாட்டி இருக்காங்க இல்லை ஊட்டுவாங்க" என்றான் ரகுநந்தன்.

இவர்களை சமையல் அறை வாசலில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்த சாந்தி பாட்டியும் டைனிங் டேபிளுக்கு வந்தார். இரண்டு பாட்டிகளும் பேரன்களுக்கு இட்லியை ஊட்ட ஆரம்பித்தனர்.

பேரன்களுக்கு ஊட்டிக்கொண்டு இருந்த கற்பகம், சாந்தி பாட்டிகளின் கண்கள் கலங்கி இருப்பதை கண்ட ரகுநந்தன்

"பாட்டிஸ் உங்களுக்கு வைக்காமல் நாங்களே சாப்பிடுவோம் என்று கண்ணீர் விடுறீங்களா கவலைப்பட வேண்டாம் நான் உங்களுக்கு கொடுக்கிறேன்" என்றவன் இட்லியை ஒவ்வொரு வாய் இரண்டு பாட்டிகளுக்கும் ஊட்டி விட்டான்.

"ரகுநந்தனை தொடர்ந்து மற்ற ஆறு பேரும் ஒவ்வொரு வாய் இரண்டு பாட்டிகளுக்கும் ஊட்டி விட்டனர். கடைசியாக ஆருத்ரன் இரண்டு பாட்டிகளுக்கும் ஊட்டி விட்டவன் அவர்களின் கண்ணீரை துடைத்துவிட்டான்.

சமையலறை வாசலில் நின்று ஆவலாக பார்த்துக்கொண்டு இருந்த அம்மா, அத்தைகளை கண்ட ரகுநந்தன், பெரிய தட்டில் இருந்த அனைத்து இட்லியையும் வைத்தவன் சாம்பார் சட்னியையும் ஊற்றிக்கொண்டு சமையலறை வாசலில் இருந்தவர்களை நோக்கி சென்றான்.

அவன் பின் ஆறு பிள்ளைகளும் சென்று ஆளுக்கு ஒவ்வொரு வாய் என்று ஊட்டி விட்டு பின் ஹாலில் உட்கார்ந்திருந்த ஆண்கள் இருந்த இடம் சென்றவர்கள் அவர்களுக்கு ஆளுக்கொரு வாய் ஊட்டி விட்டனர்.

பாட்டிகளுக்கு மட்டும் ஊட்டியவன் ஏக்கமாக பார்த்துக்கொண்டு இருந்த தாயை ஒரு பார்வை பார்த்து விட்டு கையை கழுவி விட்டு மற்ற யாரையும் பார்க்காமல் மாடியேறி சென்றுவிட்டான் ஆருத்ரன்.

இருப்பதை வைத்துக்கொண்டு வாழாமல் இல்லாத ஒன்றிற்கு தான் இந்த மனம் எப்போதும் ஏங்கும். அதுபோலத்தான் அங்கு இருந்த பிள்ளைகள் ஊட்டிய உணவை உண்ட போதும் ஊட்டி விடாமல் மாடியேறி சென்றவனின் மீதே அனைவரின் பார்வையும் ஏக்கமாக படிந்து இருந்தது.
 
கனவு 2



நகரமும் இல்லாமல் கிராமமும் இல்லாத அந்த ஊரில் மிகவும் பாரம்பரியமான குடும்பம் வாழும் அந்த பெரிய வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வராண்டாவில் கூடியிருந்தனர்.

அங்கிருந்த ஒவ்வொருவரின் முகங்களும் பலவித உணர்ச்சிகளை தங்கியிருந்தன. கோபம், ஆற்றாமை, இயலாமை, கண்ணீர், பரிதவிப்புமாக இருந்தன.

கோபத்துடன் இறுகி நின்ற தன் மகனின் கை பிடித்து கொண்டு கண்ணில் கண்ணீரும் பரிதவிப்புமாக

"கண்ணா போகதடா நீயில்லாமல் அம்மா எப்படி இருப்பேன் கண்ணா. அப்பா உனக்கு நல்லதை தான் சொல்லுவார். அவர் பேச்சை கேட்டுட்டு இங்கேயே இருப்பா. உனக்கு பிடிக்காத எந்த வேலையும் செய்ய வேண்டாம். நீ இங்கேயே அம்மா கூடவே இரு கண்ணா என்று மகனின் கையை பிடித்து கொண்டு கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருந்தார் அம்மா.

தாயின் கண்ணீரை கண்டும் இளகாமல் இறுக்கத்துடன் நின்ற மகனோ "அம்மா இவ்வளவு பேச்சை கேட்ட பிறகும் நான் இந்த வீட்டில் இருக்கனுமா?... அவ்வளவு ரோசம் இல்லாதவனாக நீங்க என்னை வளர்க்கலை. நான் சொன்ன வார்த்தையை நிறைவேற்றிய பிறகு தான் என் காலடி இந்த வீட்டு வாசற்படியை மிதிக்கும். அப்ப தெரியும் இந்த லட்சுமணன் யார் என்று எல்லோருக்கும்" என்றவனின் பார்வை தன் குடும்பத்தினர் மீது கோபமாக படிந்தது.

அவன் தான் குடும்பம், உறவு எதுவும் வேண்டாம் என் கனவு தான் முக்கியம் என்று சொல்லுறானே அவனை எதுக்கு இப்படி கொஞ்சிட்டு இருக்கிற விடுமா, வெளியே போய் நாலுநாள் சோறு தண்ணி இல்லாமல் இருந்தால் தானாக திரும்பி வந்திடப்போகிறான் என்று பேசிய தந்தையின் பேச்சு லட்மணனுக்கு கோபத்தை அதிகமாக்கியது.

கோபத்துடன் "அப்பா...." என்றான்.

"என்னடா நான் சொன்னதில் என்ன தப்பு இருக்கு படிப்பை முடித்து விட்டு வந்து தொழிலை கவனிக்காமல் சினிமாவில் நடிக்கப்போறேன் என்று சொல்லுகிறாய். நாலுநாள் சினிமா எடுக்கறதை பார்த்ததும் நடிக்க ஆசை வந்திடுச்சா இல்லை நடிக்க வந்த எவளையாவது பிடித்து போய் அவள் பின்னாடி போக நடிக்கனும் என்று கிளம்பறியா?..." என்ற தந்தையின் பேச்சை கேட்டு வந்த அதித கோபத்தில் அலங்காரத்திற்காக வைக்கப்பட்ட பூக்குவளையை தூக்கி எறிந்ததில் அது சுவற்றில் பட்டு சில்லுசில்லாக உடைந்தது.

"கண்ணா.. என்ற பல அழைப்புகளுடன் அங்கிருந்தவர்கள் அதிர்வுடன் லட்சுமணனை பார்க்கவும். அவனோ யாரையும் பார்க்காமல் தந்தையை மட்டும் முறைத்து கொண்டு நின்று இருந்தான்.

மகனின் செயலில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் அவனை பார்த்துக்கொண்டு இருந்தவர் "சினிமா துறையில் சாதிச்சவங்களை விட தோல்வி அடைந்து சுத்திட்டு வாழ்க்கையை இழந்தவங்க தான் அதிகம். ஆசை மட்டும் இருந்தால் வாய்ப்பு கிடைத்து விடாது அதிர்ஷ்டமும் திறமையும் இருக்கனும். அப்படியே வாய்ப்பு கிடைத்து ஒரு படம் வெற்றி பெற்றாலும் அடுத்த வாய்ப்பு இல்லாமல் சினிமா விட்டு எவ்வளவே பேர் காணாமல் போய் இருக்காங்க. ஒரு சிலர் அடுத்த வாய்ப்புக்காக அலைஞ்சிட்டு இருக்காங்க."

"சினிமாத்துறை ஒரு புதை குழி ஆசையா வரவங்க எல்லோரையும் தனக்குள் புதைத்திடும் திரும்ப வரமுடியாமல் காணாமல் செய்திடும். யாரோ ஒன்று இரண்டு பேர் மேலே வந்திடுவாங்க உனக்கு அந்த தொழில் வேண்டாம்.
ராஜா மாதிரி வாழுறதை விட்டுட்டு வாய்ப்பு கேட்டு ஒவ்வொருத்தன் கையையும் காலையும் பிடிக்கனுமா?... உனக்கு என்ன தலையெழுத்து. நம்ப தொழில் செய்ய பிடிக்கவில்லை என்றால் உனக்கு பிடிச்சமாதிரி வேற தொழில் பண்ணு இந்த சினிமா வேண்டாம்" என்றார் தந்தை.

"அது எப்பவும் நடக்காது அப்பா உங்களுக்கு இருக்கிற அதே வைராக்கியம் எனக்கும் இருக்கு. ஏன்னா நான் உங்க இரத்தம் தானே கண்டிப்பாக நான் சினிமா உலகத்தில் எனக்கென ஒரு பேரை உருவாக்கிட்டுத்தான் இந்த வீட்டுக்கு திரும்ப வருவேன். அதுவரை எனக்கு பின்னாடி இருக்க உங்க பேரையோ உங்க செல்வாக்கையோ நீங்க கொடுத்த படிப்பையோ உங்க பணத்தையோ பயன்படுத்த மாட்டேன்" என்று சபதம் செய்தான் லட்சுமணன்.

"கண்ணா என்னடா இப்படி பேசுற உனக்கு சினிமாவில் நடிக்கனும் என்றால் நடிச்சுக்கோ ஆனால் அதுவரை உனக்கு வேண்டியதை அப்பா செய்வார் வேண்டாம் என்று சொல்லாதடா கண்ணா" என்றார் அன்னை.

"அம்மா... என்னை பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரிகிறது ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட என்னால் சம்பாதிக்க முடியாது என்று நினைக்கிறீங்களா?...." என்று தாயின் பாசத்தை உணராத தனயன் பேசினான்.

"அய்யோ... கண்ணா நான் அப்படி சொல்லலைடா நீ வேலைக்கு போயிட்டு நடிக்க வாய்ப்பு தேடுறது கஷ்டம் என்று தான் உனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கும் வரை உன் செலவுக்கு பணம் அனுப்புறேன் கண்ணா. உனக்கு அப்பா கிட்ட பணம் வாங்க பிடிக்கலை என்றால் உன் தாத்தா எனக்கு கொடுத்தது இருக்கு அந்த பணத்தில் நல்ல வீடா எடுத்து தங்கி சமையலுக்கு ஒரு ஆள் போட்டுக்க கண்ணா. உனக்கு வெளியே சாப்பிட்டால் ஒத்துக்காதுப்பா அதுக்கு தான் அம்மா சொல்லுறேன். இதுக்கு மட்டுமாவது சம்மதம் சொல்லு கண்ணா" என்று கண்ணீர் சிந்திய தாயின் பாசத்தை உணராமல்

"அம்மா என்ன பேசுறீங்க யாருடைய உதவியும் இல்லாமல் என் சொந்தக்காலில் நின்று சாதிக்கனும் என்று சொல்லுறேன், நீங்க பணம் கொடுக்கிறேன் என்று சொல்லுறீங்க. உங்க பையன் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லை என்றால் மற்றவங்க எப்படி நம்புவாங்க. நீங்க பேசுற ஒவ்வொரு வார்த்தையும் எதுக்கும் லாயக்கில்லாதவன் என்று சொல்லுறது மாதிரி இருக்கு" என்றவனை இடைமறித்தார் தாய்.

"அய்யோ கண்ணா.... அம்மா உன்னை போய் அப்படி சொல்வேனா உனக்கு வேலை செய்து பழக்கம் இல்லையே அதனால் தான் அம்மா அப்படி சொன்னேன்" என்று கண்ணீருடன் பேசிக்கொண்டு இருந்தவரை

"போதும் நிறுத்துங்க ஒன்னும் தெரியாது என்று சொல்லி மட்டம் தட்டுற பேச்சை நிறுத்துங்க" என்ற மகனின் கோபக்குரலில் தாய் சட்டென்று வாயை மூடிக் கொண்டார்.

"நான் போறேன் என்னை தேடி யாரும் வரக்கூடாது. நான் எங்கே இருக்கேன் எப்படி இருக்கேன் என்று யாரையும் வேவு பார்க்க அனுப்பாதிங்க". என்று கூறியவன் அங்கிருந்தவர்களை பார்க்காமல் ஏற்கனவே எடுத்து வைத்து இருந்த துணிப்பெட்டியை எடுத்துக்கொண்டு விறுவிறு என வீட்டை விட்டு வெளியேறினான் லட்சுமணன்.

"கண்ணா... கண்ணா.... என்ற பல கண்ணீர் குரல் காதில் விழுந்தபோதும் வெளியேறி சென்று இருந்தான் லட்சுமணன்.

பிறந்ததில் இருந்து கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாமல் வசதியாக வளர்ந்தவன் லட்சுமணன். அதுவும் வீட்டின் கடைக்குட்டி அதித பாசத்தில் வளர்ந்தவன். படிப்பை முடித்து வந்து சில மாதங்களாக ஊரைச் சுற்றிக்கொண்டு இருந்தவனின் கண்ணில் பட்டது சினிமா ஷூட்டிங். முதலில் சாதாரணமாக பார்த்துக்கொண்டு இருந்தவனுக்கு நடிகர்களை கண்டு மக்களின் ஆர்ப்பாட்டம் அவர்களை கொண்டாடுவதையும் கண்டவனுக்கு உற்சாகம் தர தொடர்ந்து நான்கு நாட்கள் அந்த இடத்திலேயே இருந்து பார்த்தவனுக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது.

எதை கேட்டாலும் செய்து தரும் குடும்பத்தினரிடம் தன் ஆசை சொன்னதும் நடத்தி வைத்து விடுவார்கள் என்று நினைத்து கூறியவனுக்கு முதல் ஏமாற்றம் அங்கே கிடைத்தது. குடும்பத்தினர் அனைவரும் அதற்கு மறுப்பை தெரிவித்தனர். ஏமாற்றமே அறிந்து இல்லாதவனுக்கு முதல் ஏமாற்றம் அவனுக்குள் கோபத்தை ஏற்படுத்தியது.

தான் ஒன்று கேட்டு இல்லை என்று எப்படி சொல்லுவார்கள் என்ற கோபமும், எப்படியும் தான் கேட்பதை நடத்தித்தான் ஆகவேண்டும் பிடிவாதமும் அவனை ஆட்கொண்டது.

குடும்பத்தினரிடம் இருந்து மறுப்புகள் வர வர அவனுக்கு தான் நினைத்ததை அடைந்தே தீர வேண்டும் என்ற வெறி உண்டாக வீட்டினரின் கொஞ்சல் கெஞ்சல் அழுகை எல்லாவற்றையும் தாண்டி பிடிவாதத்துடன் வீட்டை விட்டு வெளியேறி இருந்தான் லட்சுமணன்.

பிள்ளைகள் கேட்கும் முன்பே அனைத்தும் செய்து கொடுக்கும் தந்தைக்கு மகனின் இந்த சினிமா மோகத்தை சுத்தமாக பிடிக்கவில்லை. சிறிது நாளில் மகனுக்கு சினிமாவின் மீது இருக்கும் மோகம் குறைந்து விடும் என்று நினைத்தவருக்கு மகனுக்கு நாளுக்கு நாள் சினிமா மோகம் அதிகரித்தது மிகுந்த கவலை அளித்தது.

தன் மகன் அன்பு, பாசம், உறவு என்ற கூட்டுக்குள் வளர்ந்தவனுக்கு திரைக்கு முன் ஒரு முகமும் திரைக்கு பின் வேறுமாதிரி முகமும் இருக்கும் சினிமா துறையில் நுழைய விடுவது பிடிக்கவில்லை. எது உண்மை முகம் எது போலி முகம் என்று பிரித்து பார்க்க தெரியாத தன் மகனின் குணத்தையும் அவனின் பின் இருக்கும் பணத்தையும் கண்டு எளிதில் அவனை ஏமாற்ற வாப்பிருப்பதால் அவனை தடுத்து இருந்தார் தந்தை.

ஆனால் மகனோ பிடிவாதத்தின் மொத்த உருவமாக மாறி குடும்பத்தினர் அனைவரையும் எதிர்த்து வெளியேறி இருந்தான். மகனின் இந்த அவசரமும் நினைத்ததை முடிக்க வேண்டும் என்ற பிடிவாத குணத்தை கண்ட தந்தை வெளியுலகம் சென்று சில நாட்கள் வாழ்ந்தால் அனுபவ அறிவு மகனை பக்குவப்படுத்தும் என்றே அவனை தடுக்காமல் விட்டிருந்தார்.

வேகநடையுடன் நடந்து கொண்டு இருந்தவனின் மனம் உலைக்களமாக கொதித்தது. எப்படி எல்லாம் பேசுகிறார் இந்த அப்பா. நடிக்க ஆசையா?... இல்லை பெண் மீது ஆசையா?... என்று கேட்கிறாரே.

நான் பெண்கள் பின்னால் சுற்றுபவனா?... என்று நினைத்தவனுக்கு மேலும் மேலும் தந்தையின் மீது கோபம் பெருகியது. அவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து மெயின் ரோடு வந்தது கூட தெரியாமல் கோபத்துடன் நடந்து கொண்டு இருந்தவனை

"சார் எங்க போகனும்?..." என்று கேட்ட குரலில் நினைவுலகம் வந்தவனுக்கு தான் இருக்கும் இடம் புரிய சில வினாடிகள் ஆகின.

"சார் எங்க போகனும் சவாரி வரிங்களா?..." என்று மீண்டும் ஆட்டோக்காரர் கேட்கவும்

"ரயில்வே ஸ்டேஷன் போகனும்" என்று லட்சுமணன் கூறவும்.

"வாங்க சார் மீட்டருக்கு மேல போட்டுக் கொடுங்க சார் நீங்க தான் முதல் சவாரி" என்று ஆட்டோக்காரன் கேட்கவும்

தலையாட்டி ஆட்டோவினுள் ஏறப்போனவனை "தம்பி" என்ற பழகிய குரல் அழைக்கவும் சட்டென்று நின்று திரும்பி பார்த்த போது அவனின் வீட்டில் வேலை செய்யும் நடுத்தர வயது வேலையாள் வேகமாக வந்து கொண்டிருந்தார்.

"ஒரு நிமிஷம்" என்று ஆட்டோ ஓட்டுனரிடம் கூறிவிட்டு வேலையாள் நோக்கி நடந்தான் லட்சுமணன்.

வேலையாள் கையில் இருந்த சிறு பையை லட்சுமணனிடம் கொடுக்கவும் அதை வாங்கி உள்ளே பார்த்தவன் அதில் இரண்டு நூறு ரூபாய் கட்டுகள் இருந்தது.

கேள்வியாக வேலையாளை நோக்கினான் லட்சுமணன்.

வேலையாள் என்ன சொல்வது என்று சற்று திணறியவர் பின் "தம்பி இது என் சம்பளப்பணம் நேற்று தான் ஊருக்கு போகனும் என்று மொத்தமாக வாங்கி வச்சிருந்தேன்" என்றார் தயக்கத்துடன்

"அதை ஏன் என்கிட்ட கொடுக்கிறீங்க?..." என்றான்.

"இல்ல தம்பி வீட்டில் இருந்து நீங்க பணம் எதுவும் எடுத்துட்டு போகலை என்று பெரியம்மா அழுதிட்டு இருந்தாங்க. இப்ப பயணத்திற்கு உங்களுக்கு தேவைப்படும் என்று தான் என் பணத்தை கொடுத்தேன். நீங்க பணம் வந்ததும் திருப்பி கொடுங்க தம்பி" என்றவரின் பார்வை அவனின் முகத்தில் இல்லாமல் தலைகுனிந்து இருந்தது.

அவரின் தலைகுனிவே லட்சுமணனுக்கு வேறு கதையை சொன்னது.

"இந்த பணத்தை எங்கிட்ட கொடுக்க சொல்லி யார் கொடுத்தது?..." என்று லட்சுமணன் கேட்டதும் வேலையாள் திகைத்துப்போனார்.

"அது... தம்பி.." என்று திக்கித்திணறி பேசியவரின் கையில் பணப்பையை திணித்த லட்சுமணன் திரும்பி நடக்க அவனின் முன் வேகமாக வந்த வேலையாள் "தம்பி உங்க மாமா தான் கொடுக்கச்சொன்னார்" என்றதும் லட்சுமணன் முகம் இறுகியது.

"தம்பி இது உங்க குடும்பத்து பணம் இல்லை உங்க மாமாவுடைய பணம் என்று சொல்லச்சொன்னார். அப்புறம் இது கடனாகத்தான் கொடுக்கிறேன் அதனால் திரும்ப வட்டியோட கொடுத்திடனும் என்று சொல்லச்சொன்னார்" என்று வேலையாள் சொன்னதும்

அதுவரை இருந்த இறுக்கம் குறைந்து முகத்தில் மெல்லிய புன்னகை வந்தது லட்சுமணனுக்கு. வேலையாளின் கையில் இருந்த பையை வாங்கியவன் "கண்டிப்பாக வட்டி போட்டு கொடுக்கிறேன் என்று அவர்கிட்ட சொல்லுங்க" என்றவன் ஆட்டோவில் ஏறி அமர்ந்தான்.

ஆட்டோ சத்தத்துடன் கிளம்பி வேகமெடுத்து அங்கிருந்து ரயில் நிலையம் நோக்கி சென்றது.


 
கனவு 3


மதிய உணவுக்கு பின் ஹாலில் அனைவரும் அமர்ந்து இருந்தனர். ராமராஜன் தாத்தா அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் அருகில் அமர்ந்து இருந்த தம்பி ரங்கராஜனை பார்த்து பேசும் படி கண்ணை காட்ட ரங்கராஜன் பேசினார்.

"எல்லோரும் என்ன என்ன பிசினஸ் செய்யலாம் என்று பிளான் செய்து இருக்கிங்க ஒவ்வொருவராக உங்க பிளானை சொல்லுங்க" என்று பேரன்கள் அமர்ந்து இருந்த பக்கம் பார்த்து கேட்டார்.

அனைவர் பார்வையும் ஆருத்ரன் பக்கம் சென்றதே தவிர யாரும் பேசவில்லை.

சிறிது நேரம் அமைதியாக இருந்த ரங்கராஜன் பின் "என்ன யாரும் எதுவும் சொல்லாமல் இருக்கிங்க என்ன பிசினஸ் பண்ணலாம் என்று யோசித்து வச்சு இருப்பிங்க இல்ல சொல்லுங்க" என்றார்.

ஒரே நேரத்தில் ஏழு பிள்ளைகளும் "ருத்ரன் அண்ணா ருத்ரன் மாமா சொல்லும் பிசினஸில் எங்களுக்கு விருப்பம்" என்றனர்.

பெரியவர்கள் பார்வை அமைதியாக அமர்ந்து இருந்த ஆருத்ரன் மீது படிந்தது.

சிறிது நேரம் தன் விரல்களை பார்த்துக்கொண்டு இருந்தவன் ஒரு முடிவு எடுத்தவனாக நிமிர்ந்து அனைவரையும் ஒர் பார்வை பார்த்தவன் பின் தாத்தாக்களை நேராக பார்த்து "நான் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கப்போறேன்" என்று அனுமதி கேட்காமல் முடிவாக சொன்னான்.

அனைவரும் அமைதியாக ஆருத்ரனையே பார்த்து இருந்தனர். பெரியவர்கள் இதை எதிர்பார்த்து தானே இருந்தனர்.

எதிர்ப்பு குரல் வரும் என்று எதிர்பார்த்தவனுக்கு அனைவரும் அமைதியாக இருக்கவே மீண்டும் அவனே பேசினான். "தாத்தா சொத்தில் பேரனுக்கு உரிமை இருக்கு அதனால் பைனான்ஸ் கம்பெனியில் இருந்து எனக்கு தேவையான பணத்தை எடுத்துப்பேன்" என்று தன் தந்தையை பார்த்துக்கொண்டு சொன்னவனின் பேச்சில் உங்கள் யாருடைய அனுமதியும் எனக்கு தேவையில்லை என்று தன் முடிவை கூறியிருந்தான்.

அதுவரை அமைதியாக இருந்த ராமராஜன் தன் தொண்டையை கணைத்து விட்டு பேச ஆரம்பித்தார். "உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ நாங்களே தரோம், பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து எடுக்க வேண்டாம். ஆனால் எங்களுக்கு சில கண்டிஷன் இருக்கு அதுக்கு சம்மதம் என்றால் தாராளமாக உனக்கு பின்னால் நாங்க எல்லோரும் இருப்போம் உன் ஆசைக்கு உறுதுணையாக இருப்போம்" என்றார்.

தன் தாத்தாவிடம் இருந்து இப்படி ஒரு சம்மதத்தை ஆருத்ரன் எதிர்ப்பார்க்கவில்லை. எப்படியும் எதிர்ப்பார் என்று தான் உங்கள் பணம் வேண்டாம் என் தந்தை வழி தாத்தா பணம் இருக்கு என்று கூறியிருந்தான். ஆனால் அவர் சம்மதம் சொல்லியதோடு அவரின் கண்டிஷன் என்னவாக இருக்கும் என்பது ஒரளவுக்கு ஊகித்து இருக்கவே அவன் மனம் கொதித்தது.

சம்மதம் சொல்லிவிட்டு இப்படி கண்டிஷன் போடுறாரே என்ற கோபம் இருந்தபோதும் இப்போது அதை வெளிகாட்டக்கூடாது. அவரே என்ன என்று கூறட்டும் அதன் பிறகு முடிவு செய்து கொள்ளலாம் என்று அமைதியாக இருந்தான்.

மீண்டும் ராமராஜன் பேசியதை கேட்டதும் அமர்ந்து இருந்தவன் சட்டென்று எழுந்து "தாத்தா..." என்றான் ஆச்சரியமாக

ஆருத்ரன் கோபப்படும் படி எதுவோ சொல்லப்போகிறார் என்று குடும்பத்தினர் அனைவரும் பார்த்து இருக்க ராமராஜன் சொல்லியதை கேட்ட அனைவரும் ஆச்சரியப்பட்டதோடு சந்தோஷம் அடைந்தனர்.

பிள்ளைகள் அனைவரும் "ஹேஹே...." என்று கூச்சலிட்டு ஆருத்ரனை தூக்கி சுற்றினர். அதை பெரியவர்கள் புன்னகையுடன் பார்த்திருந்தனர்.

பாட்டிகள் இருவர் கண்ணிலும் கண்ணீர் சுரந்தது ஒருவரை ஒருவர் கை பிடித்து ஆறுதல் அளித்துக்கொண்டனர்.

சிறிது நேரம் கலாட்டாக்கள் செய்தவர்கள் மீண்டும் அமர்ந்து அடுத்து ஆருத்ரன் என்ன திட்டங்கள் செய்து வைத்து இருக்கிறான் என்று விசாரித்து விட்டு மேலும் அவரவர்களுக்கு தோன்றிய யோசனைகளை கூறியவர்கள் கடைசியாக திட்டத்தை சரியாக வகுத்து அதன்படி செய்ய முடிவு எடுத்தனர்.

ஆருத்ரன் மட்டும் செய்வதாக சொல்லவும் தாத்தாக்கள் ரகுநந்தனையும் உடன் வைத்துக்கொள்ளுமாறு கூறினார்கள்.

அடுத்த நாளில் இருந்தே தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கும் பணிகளை ஆருத்ரனும் ரகுநந்தனும் ஆரம்பித்து இருந்தனர்.


சென்னையில் ஈசியார் கடற்கரை சாலையில் பணக்காரர்கள் மட்டுமே வசிக்கும் அந்த பகுதியில் அதிகாலை வேளையில் அந்த சிறு பங்களாவில் பக்தி பாடல்கள் ஒலிக்க பூஜை அறையில் சாம்பிராணி புகையை சாமிப்படங்களுக்கு காட்டியபடி கடவுளின் பாடல்களை முனுமுனுத்து கொண்டு இருந்தார் பாக்யாவதி .

பெயரில் மட்டுமே பாக்யவதியாக இருப்பவருக்கு வாழ்க்கையில் அது கிடைக்கவில்லை. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவங்களுக்கு என்ன குறை பெரிய டைரக்டர் மனைவி அழகான பெண் குழந்தை வசதியான வாழ்க்கை என்று தான் சொல்லுவார்கள் உள்ளே அவர் அனுபவிப்பது அவருக்கும் அவரை படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரியும்.

பாக்யாவதி நாற்பது வயது இருபது வயதில் ஒரு மகள் இருக்கிறாள் என்று சொன்னால் யாரும் நம்பாத தோற்றம். இப்போது நடிக்கச்சென்றாள் கூட ஹீரோயினாக நடிக்கலாம் அந்த அளவுக்கு அழகான தோற்றத்தில் இருந்தார். மஞ்சள் பூசி நெற்றியில் குங்குமம் வைத்து தலை குளித்து இடை தாண்டி இருந்த கூந்தலை கீழே சிறு முடிச்சிட்டு சதாரண காட்டன் புடவை அணிந்து காதில் சிறு கல் வைத்த கம்பல் கழுத்தில் மெல்லிய தாலிச்செயின் கையில் இரண்டு மெல்லிய வளையல்கள் அந்த எளிய தோற்றத்திலேயே கோயிலில் இருக்கும் அம்மன் சிலையாக கையெடுத்து கும்பிடத்தோன்றும் அழகுடன் இருப்பவரை அந்த வீட்டில் இருப்பவர்கள் சொல்லும் வார்த்தை பட்டிக்காடு டிரஸ்ஸிங் சென்சே இல்லை மேக்கப் போட்டுக்கக்கூடா தெரியாத வேஸ்ட் என்பது தான்.

பூஜை அறையில் சாம்பிராணி புகையை காட்டிவிட்டு சமையல் அறை ஹால் அங்கிருந்த மற்ற அறைகள் முழுவதும் காட்டிவிட்டு காபி போட்டுக்கொண்டு இருந்த நேரத்தில் கலகலவென சிரிக்கும் ஓசையில் மாடிப்படியை எட்டி பார்த்த பாக்யவதியின் முகம் இறுகியது.

தொடை தெரியும் அளவுக்கு சிறிய ஷார்ட்ஸ் உடலை இறுக்கிய கையில்லாத இரண்டு கயிறு மட்டுமே இணைத்திருந்த சிறிய பனியனும் அணிந்து இருந்த மகள் தந்தை நாதனுடன் சிரித்து பேசிக்கொண்டே படிகளில் இறங்கிக்கொண்டு இருந்தாள்.

தனக்கு கிடைக்காத அனைத்தும் மகளுக்கு நிறைவாக கிடைக்க வேண்டும் என்று நிரஞ்சனி என்ற பெயரை வைத்திருந்தார் பாக்யவதி.

"நிரஞ்சனி என்ன கோலம் இது?..." என்று கோபத்துடன் பாக்யவதி கேட்டதை காதில் வாங்காமல் வாயில் கதவை நோக்கி சென்றனர் நாதனும் நிரஞ்சனியும்

வேகமாக சென்று நிரஞ்சனியின் கையை பிடித்து நிறுத்தினார் பாக்யவதி.

"அம்மா கையை விடுங்க" என்று கத்தினாள் நிரஞ்சனி.

"இந்த டிரஸோட எங்க போற?..." என்றார்.

"இந்த டிரஸ்சுக்கு என்ன குறை நல்லா தானே இருக்கு" என்றாள் நிரஞ்சனி.

"டிரஸே குறையாகத்தான் இருக்கு இது மாதிரி போடாதே என்று எத்தனை முறை சொல்லியிருக்கேன் முதலில் போய் பேண்ட் சட்டை அணிந்திட்டு வா" என்று உள்நோக்கி அவளை அழைத்து சென்றார் பாக்யவதி.

"இரண்டு அடி தாயின் இழுப்புக்கு சென்றவள் பின் தாயின் கையை வேகமாக உதறி "என்ன டிரஸ் போடனும் என்று நான் தான் முடிவு செய்யனும் நீங்கள் இல்லை. அம்மா என்று அமைதியாக இருந்தால் உங்களை மாதிரி பழைய பஞ்சாங்கமாக சேலையை சுத்திட்டு போகச்சொல்லுவிங்க போல" என்றவள் தந்தையின் பக்கம் திரும்பி

"டாடி... இந்த அம்மா ஏன் இப்படி இருக்காங்க ஒரு டிரஸ்சிங் சென்ஸ் கூட இல்லாமல் எப்படி தான் இவ்வளவு நாளாக இவங்க கூட வாழ்ந்திட்டு இருக்கிங்களோ?..." என்றாள்.

"ரஞ்சிமா இவள் எப்பவுமே இப்படித்தான் பாட்டிக்காலத்திலேயே இருக்கா இந்த காலத்திற்கு ஏற்றாற்போல மாறவே இல்லை. அவகிட்ட பேசுறது வேஸ்ட் நீ வாம்மா நம்ப ஜாகிங் போகலாம்" என்றார் நாதன்.

தந்தையை நோக்கி சென்றவளை மீண்டும் கைபிடித்து தடுத்த பாக்யவதி "உன்னை புடவை கட்டச் சொல்லலை பேண்ட் டீசர்ட் போட்டுட்டு போ என்று தான் செல்லுறேன் நிரஞ்சு" என்றார் பாக்யவதி.

"நான் என்ன காலேஜா போகப்போறேன் வாக்கிங் தானே போறேன் இந்த டிரஸ் போதும்" என்று மீண்டும் தாயின் கையை உதறி விட்டு சென்றாள் நிரஞ்சனி.

கண்ணீர் மல்க செல்லும் மகளை பார்த்தவர் பின் பூஜை அறையில் தஞ்சம் புகுந்தார். தன் மகளை பாதுகாக்க இப்போது இருக்கும் ஒரே வழி கடவுள் தானே அவரால் மட்டும் தான் தன் மகளை சுற்றி பின்னப்பட்ட சதிவலையில் இருந்து பாதுகாக்க முடியும் என்று கண்ணீருடன் கடவுளிடம் வேண்டுதலை வைத்துக்கொண்டு இருந்தார் பாக்யவதி.

ஒரு காலத்தில் புகழ் பெற்ற டைரக்டராக இருந்தவர் தான் நாதன் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். பெரிய தயாரிப்பாளர் மகளை திருமணம் செய்து கொண்டு இரண்டு ஆண்டுகள் வாழ்ந்தவர்கள் பின் விவாகரத்து வாங்கிக்கொண்டு பிரிந்துவிட்டனர். அதன் பிறகு பத்து ஆண்டுகள் திருமணம் செய்யாமல் இருந்தவர் தன் படத்தில் நடித்த பாக்யவதியை தனது நாற்பதாவது வயதில் திருமணம் முடித்து இருந்தார்.

திருமணம் முடித்த ஒரு வருடத்திற்குள்ளேயே நிரஞ்சனி பிறந்திருந்தாள். ஐந்து வயது வரை தாயின் பேச்சை கேட்டுக்கொண்டு இருந்தவள் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தாயை விட்டு ஒதுங்கி தந்தையுடன் ஒட்டிக்கொண்டாள்.

அதில் இருந்து பாக்யவதியின் சோதனைக்காலம் ஆரம்பித்தது. தந்தையின் அதித சலுகைகளால் தாயின் கண்டிப்புகள் மகளுக்கு பிடிக்காமல் போனது. தாயின் பேச்சிற்கு மதிப்பு இல்லாமல் போனது. படிப்பு நன்றாக வந்த போதும் அதில் நாட்டம் இல்லாமல் போனது.

நடிப்பின் மீது அதிக ஆசை வந்தது . மகளிடம் எவ்வளவோ போராடியும் நடிப்பின் மீது மகளுக்கு இருந்த ஆசையை போக்க பாக்யவதியால் முடியாமல் போனது. நடிக்க வைத்தே தீருவேன் என்று நாதன் முடிவு எடுத்து அதன்படி மகளை ஆட்டுவிக்கும் போது பாக்யவதியால் என்ன செய்துவிட முடியும். இன்று வரை போராடிக்கொண்டு தான் இருக்கிறார் பாக்யவதி.

பாக்யவதியும் ஒரு காலத்தில் பெரிய ஹீரோயினாக வேண்டும் என்று நினைத்தவர் தான். நடிக்க வரும் பெண்களுக்கு நடப்பதை பார்த்திருக்கிறாரே. அவர் எப்படியோ போராடி எந்த பிரச்சினையும் இல்லாமல் தன் திறமைக்கு மட்டும் மதிப்பு கொடுப்பவர்களின் படங்களில் நடித்து கொண்டு இருந்தார். இவரின் குணத்தை கண்டு விருப்பப்பட்டு பாக்யவதியின் தாயாரிடம் கேட்டு திருமணம் முடித்து இருந்தார் நாதன்.

மகள் நடிக்க போனால் பல போராட்டங்களை சந்திக்க வேண்டும் அந்த அளவுக்கு அவளுக்கு முதிர்ச்சி இல்லையே. என்ன தான் நாதன் அந்த துறையில் இருந்த போதும் இப்போது அவரின் நிலை கொஞ்சம் தாழ்ந்து இருக்கிறது. பழையபடி பெரிய டைரக்டர் என்ற இடத்தை பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கு மகளை நடிக்க வைக்க மகளுக்கு நடிக்கும் ஆசையை தூண்டியவரே அவர் தான். அதுமட்டும் இல்லாமல் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையினால் சிறு வயதில் இருந்தே நிரஞ்சனியை பாக்யவதிக்கு பிடிக்காத விஷயங்களை செய்ய வைப்பதே அவரின் முக்கிய வேலை. தனக்கு வேண்டியதை அடைய எதையும் செய்பவர் நாதன்.

அதற்கு பலியாவது தன் மனைவி மகள் என்பதில் அவருக்கு அக்கறை இல்லை. அவரை பொறுத்தவரை தான் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் சுயநலவாதி அதை அறிந்தவர் பாக்யவதி மட்டுமே. அப்படிபட்டவரிடம் தன் மகள் எப்படி விட முடியும்.

நாதனின் பேச்சுகளுக்கு தலையாட்டி பொம்மையாக மாறியிருக்கிறாள் நிரஞ்சனி. பாக்யவதியின் பேச்சுக்களுக்கு நிரஞ்சனி செவி சாய்ப்பது இல்லை. பேச வந்தாலே விலகி செல்பவளிடம் நாதனை பற்றி எங்கிருந்து சொல்வது. அப்படி சொன்னாலும் நம்புவாளா நிரஞ்சனி.

மகளின் உதாசீனங்களை கண்டு பாக்யவதி விலகி போனது இல்லை. மீண்டும் மீண்டும் மகளிடம் பேச முயற்சித்துக்கொண்டு தான் இருக்கிறார் பாக்யவதி.

பத்து மாதம் சுமந்து பெற்ற பெண்ணை எப்படியாவது போ என்று விட்டு விட முடியுமா?... அவர் வாழ்வதே மகளுக்காகத்தானே அவள் வாழ்க்கையை எப்படியாவது காப்பாற்றி நல்லவன் ஒருவனிடம் அவளை மணமுடித்து கொடுத்து விட வேண்டும் என்று போராடிக்கொண்டு இருக்கிறார் பாக்யவதி.


பாக்யவதியின் வேண்டுதலுக்கு கடவுள் செவிச்சாய்ப்பாரா?.... இல்லை மும்பையில் இருந்து வரும் அந்த கடவுளின் பெயர் கொண்ட ஆருத்ரனின் ருத்ர தாண்டவத்திற்கு ஆளாவளா?.....
 
கனவு 4


மறுநாள் அதிகாலை சென்னையில் வந்து இறங்கிய லட்சுமணன் இரயில் இருந்து இறங்கி அங்கு இருந்த கல் இருக்கையில் அமர்ந்து கொண்டான். நெருக்கி அடிக்கும் கூட்டத்தில் புகுந்து வெளியேற விருப்பம் இல்லை என்பதை விட பழக்கம் இல்லை என்றே சொல்லலாம்.

எங்கு சென்றாலும் காரில் செல்பனுக்கு இந்த கூட்டம் மலைப்பாக இருந்தது. இரயிலில் பயணம் செய்தது கூட குறைவு தான். இப்போது கூட முதல் வகுப்பில் தான் பயணம் செய்து வந்திருந்தான்.


வேக வேகமாக உடைமைகளை எடுத்துக்கொண்டு முண்டியடித்து செல்பவர்களை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டு இருந்தவனுக்கு தானும் இப்படி ஓடவேண்டிய நிலைமை கூடியவிரைவில் வரும் என்பதை அறியாதவனாக பார்த்துக்கொண்டு இருந்தான் லட்சுமணன்.

கூட்டம் ஓரளவுக்கு குறைந்ததும் வெளியே வந்தவனுக்கு எங்கு எப்படி போவது என்று புரியாமல் நின்று இருந்தான். நடிக்க வேண்டும் என்று வந்துவிட்டான் யாரிடம் சென்று விசாரிப்பது என்று குழப்பத்துடன் வந்து நின்று இருந்தான்.


சென்னை அவனுக்கு புதிது, இது வரை அவன் ஒரு முறை மட்டுமே சென்னைக்கு வந்து இருக்கிறான். பள்ளி படிக்கும் போது சுற்றுலா செல்ல பள்ளி நிர்வாகம் சென்னையை தேர்வு செய்து இருப்பதை லட்சுமணன் தந்தையிடம் கூறிய போது அவர்களுடன் சென்றால் எல்லா இடங்களையும் பார்க்க முடியாது என்று கூறியவர். சென்னைக்கு உடனே குடும்பத்துடன் கிளம்பி வந்து மகனுக்கு அனைத்தையும் ஒரு வாரம் பெரிய ஓட்டலில் தங்கி சுற்றிக்காட்டி அழைத்து சென்றார்.

அந்த நிகழ்வு மனதில் வந்ததும் தான் சொன்னதற்கே அழைத்து வந்து சுற்றி காட்டிய தன் தந்தை. இன்று தான் ஆசைப்பட்ட நடிப்பை வேண்டாம் என்று உறுதியாக மறுத்துவிட்டாரே என்ற எண்ணம் லட்சுமணனுக்கு தோன்றியது.

சிந்தனையில் நின்று இருந்தவனை ஒரு குரல் கலைத்தது.

"சார் எங்க போகனும்?... டாக்ஸி இருக்கு வரிங்களா?..." என்று ஒருவன் வந்து நின்றான். மாநிறத்தில் சராசரி உயரத்தில் அடர்ந்த தாடி மீசையுடன் ஒல்லியான தேகத்துடன் கசங்கிய சட்டை ஜீன்ஸ் பேண்ட் அணிந்து நின்று இருந்த டாக்ஸி டிரைவர் கண்ட லட்சுமணனுக்கு இவனிடம் கேட்டால் என்ன என்று தோன்றியது.

"சார்" என்று மீண்டும் டாக்ஸி டிரைவர் அழைக்கவும்

"ஆங்.. வரேன்" என்றான்.

"வாங்க சார்" என்று முன்னே சென்றவன் திரும்பி "சார் நீங்க எங்க போகனும்?..." என்றான் டாக்ஸி டிரைவர்.

எங்கு போவது என்று தெரியாமல் தானே இருக்கிறான். என்ன சொல்வது என்று புரியாமல் நின்றவனை பார்த்த டிரைவர் "என்ன சார் அட்ரஸ் மறந்து போச்சா எழுதி வச்சிருந்தா பார்த்து சொல்லுங்கள், இல்லை போன் நம்பர் இருந்தால் போன் செய்து அட்ரஸ் கேட்டுக்கங்க" என்றான்.

எப்படி தன்னை பற்றி சொல்வது சுற்றி வேறு மக்கள் நடமாட்டம் இருக்கும் போது பேசமுடியாது என்று நினைத்த லட்சுமணன் "இல்ல காரில் உட்கார்ந்து பேசலாமே" என்றான்.

டாக்ஸி டிரைவரும் "சரி வாங்க சார் உட்காருங்கள்" என்று காரின் பின் கதவை திறந்து விட்டான். காரில் ஏறி அமர்ந்தவன் எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல் இருந்தவனை டாக்ஸி டிரைவரே முன்னாள் டிரைவர் இருக்கையில் அமர்ந்து பின் பக்கமாக திரும்பி லட்சுமணனை பார்த்து "சொல்லுங்கள் சார்" என்றான்.

"அது... வந்து... " என்று சிறு தயக்கத்துடன் ஆரம்பித்தவன் பின் "நான் சினிமாவில் நடிக்கனும் என்று வந்து இருக்கேன். எங்க தங்குறது யாரை பார்க்கனும் தெரியலை உங்களுக்கு எதாவது அதைப்பற்றி தெரிந்தால் சொல்லுங்க" என்றான் லட்சுமணன்.

லட்சுமணன் பேச்சை கேட்டவன் "ஏன் சார் அந்த புதைகுழி உங்களுக்கு எதுக்கு?... பார்த்தா படிச்ச வசதியான வீட்டு பையன் போல இருக்கிங்க. இப்படியே அடுத்த இரயில் பிடிச்சி ஊர் போய் குடும்பத்தோட சந்தோஷமாக இருங்க சார்" என்றான்.

தந்தை சொன்ன புதைகுழி என்பதையே டிரைவரும் சொன்னதும் சிறு அதிர்வு ஏற்பட்ட போதும், கூடவே தந்தையின் பேச்சுக்கள் ஞாபகம் வர அதற்கு தான் கூறிவிட்டு வந்த வார்த்தைகளும் ஞாபகம் வரவே சற்று கோபத்துடன்

"சினிமா புதைகுழி என்று உங்களுக்கு எப்படி தெரியும்?...." என்றான் லட்சுமணன்.

"எனக்கு தெரியும் சார் ஏனென்றால் அந்த புதைகுழியில் விழுந்து நானும் ஐந்து வருசமாக போராடிட்டு இருக்கேன்" என்றான் டிரைவர்.

"என்ன நீங்களும் நடிக்க வந்தவரா?...." என்று ஆச்சரியத்துடன் கேட்டான் லட்சுமணன்.

" நடிக்க வரலை சார் டைரக்டர் ஆகும் ஆசையில் ஐந்து வருசத்துக்கு முன்னாடி அப்பாகிட்ட சண்டை போட்டுட்டு வந்தேன். ஊரிலேயே இருந்து நாலு மாடு வாங்கி மேய்ச்சி இருந்தால் கூட இன்னேரம் மாட்டுப்பண்ணை வச்சு வாழ்ந்து இருப்பேன். இப்போ ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட அவனவன் காலை பிடிக்க வேண்டியதா இருக்கு" என்று புலம்பினான் டிரைவர்.

அவனின் பேச்சை கேட்டவனுக்கு தந்தையின் பேச்சுக்களும் ஒரு பக்கம் ஓடிக்கொண்டு தான் இருந்தது. அவனவன் கையையும் காலையும் பிடிக்கனும் என்று அவரும் சொன்னாரே மனதில் குழப்பங்கள் சூழ்ந்த போதும். திரும்பி வீட்டிற்கு செல்லக்கூடாது என்ற முடிவை மாற்றிக்கொள்ளும் எண்ணம் மட்டும் தோன்றவில்லை.

இப்போது எதையும் ஆராயவேண்டாம் என்று முடிவு செய்தவன் டிரைவரை பார்த்து "இப்போதைக்கு எனக்கு தங்க ஒரு இடம் வேண்டும் உங்களால் ஏற்பாடு செய்ய முடியுமா?..." என்றான் லட்சுமணன்.

"சார் இங்க சினிமா பேரைச் சொல்லி வந்தால் வீடு கிடைப்பது கஷ்டம் கொஞ்சம் அலையனும் அதுவரை ஓட்டல் எதிலாவது தங்குங்க" என்றான்.

"இல்லை எனக்கு இந்த சென்னை புதுசு நல்ல இடமாக நீங்களே சொல்லுங்க" என்றான் லட்சுமணன்.

"சார் உங்களை பார்த்தால் பெரிய இடத்து பையன் மாதிரி தெரியுது. இங்க சாதாரணமாக தங்குற ஓட்டல் அவ்வளவு சுத்தமாகவும் வசதியாகவும் இருக்காது. பெரிய ஓட்டலாக பார்த்தால் வாடகை நிறைய வாங்குவாங்க" என்றான் தயக்கத்துடன் டிரைவர்.

அப்போது தான் பணம் பற்றிய சிந்தனை வந்தது லட்சுமணனுக்கு தந்தையின் மீது இருந்த கோபத்தில் கையில் பணம் எதுவும் எடுத்து வராமல் வெளியேறியவனுக்கு மாமா மட்டும் பணம் கொடுக்காமல் போயிருந்தால் என்ன செய்து இருப்பேன். இரயில் டிக்கெட் கூட அந்த பணத்தில் தானே எடுத்தேன். அந்த பணம் இல்லை என்றால் இங்கு வந்து கூட இருக்கமுடியாதே என்று சிந்தனையில் இருந்தவனை

"சார்...சார்..." என்ற டிரைவரின் குரலில் சிந்தனை கலைந்தவன்

"ஓ... சாரி என்ன சொன்னிங்க என்றான் லட்சுமணன்.

"எப்படிபட்ட ஓட்டல் போகனும் என்று சொன்னால் கிளம்பலாம்" என்றான் டிரைவர்.

"இருபது ஆயிரம் ரூபாயில் இரயில் டிக்கெட் எடுத்தது போக மீதி இருக்கு" என்று லட்சுமணன் சொல்லவும்.

காரை ஸ்டார்ட் பண்ணப்போன டிரைவரின் கை அப்படியே நின்றது. முன் பக்கமிருந்த கண்ணாடியில் பின் பக்கம் பார்த்த டிரைவர் மனதில் ஆள் தான் அமுல்பேபி போல இருக்கிறார் என்று பார்த்தால் மனசும் அப்படித்தான் போல என்று நினைத்தான்.

தாடி மீசை இல்லாமல் கிளீன் சேவிங்கில் கன்னங்கள் சற்றே உப்பி அடர்ந்த புருவங்களும் எப்போதும் எனக்கு சிரிக்க மட்டுமே தெரியும் என்று கூறும் சிறிய கண்ணும் எந்த வித தீய பழக்கங்களும் என் பக்கம் கூட வந்ததில்லை என்பதை அறிவுறுத்தும் சிவந்து இருந்த உதடும் சீராக வெட்டப்பட்ட சிகையும் சராசரி உயரத்தை விட சற்றே உயரமாக இருந்தவன் விலை உயர்ந்த ஜீன்ஸ் பேண்ட் டீசர்ட் அணிந்து உடலில் எந்த வித நகைகள் இல்லாத போதும் கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாத பணக்காரன் தோற்றத்தில் சிவப்பு இல்லாமல் கருப்பு இல்லாமல் சராசரி நிறத்தில் இருந்தான் லட்சுமணன்.

டிரைவரிடம் பதில் வராமல் போனதால் "ஏன் பணம் பத்தாதா ஓட்டலில் பணம் அதிகமாக கேட்பாங்களா?..." என்று சற்று கவலை குரலில் லட்சுமணன் கேட்டதும்

"சார் நீங்க திரும்ப உங்க வீட்டுக்கே போயிடுங்க சார்" என்றான் டிரைவர்.

"ஏன்?...." என்று புரியாமல் கேட்டான் லட்சுமணன்.

"சார் தப்பாக நினைக்காதிங்க நீங்க வெளியுலகம் தெரியாமல் செல்வ செழிப்பாக வளர்ந்து இருக்கிங்க என்று தெரியுது. உங்களால் இங்க வாழறது கஷ்டம் சார். பாக்கெட்டில் பத்து ரூபாய் இருப்பது தெரிந்தாலே திருடிட்டு போயிடுவாங்க. நீங்க கையில் இருக்கும் பணத்தை இப்படி வெளிப்படையாக சொல்லிட்டு இருக்கிங்க. காருக்குள்ள இருக்கிறதால் உங்க பணம் தப்பியது. இதுவே வெளியே நின்னு சொல்லி இருந்தால் நீங்க கண்ணை மூடி திறப்பதற்குள் திருடிட்டு போய் இருப்பாங்க சார். இங்கே வாழுறது ரொம்ப கஷ்டம் அதனால் தான் சொல்லுறேன். நீங்க திரும்பி உங்க வீட்டுக்கே போயிடுங்க சார். உங்களை பெற்றவங்க எவ்வளவு தவிச்சுட்டு இருக்காங்களோ" என்றான்.

டிரைவர் சொன்னதை வியப்பாக கேட்டுக்கொண்டு இருந்தவனுக்கு பெற்றவர்கள் என்றதும் தாயின் முகம் கண்ணீருடன் நின்றது கண் முன் வந்தது. மனம் வேதனைப்பட்ட அதே நேரத்தில் தந்தையின் முகம் வந்து லட்சுமணனின் முகத்தை இறுக வைத்தது.

"இல்லை திரும்பி போகமாட்டேன். இனி பேசும் போது ஜாக்கிரதையாக பேசுறேன். இப்போ எனக்கு தங்குறதுக்கு ஒரு இடம் பார்த்து கொடுங்க கூடவே இந்த ஊரில் எப்படி இருக்கனும் என்று சொல்லி கொடுத்திங்கனா நல்லா இருக்கும்" என்றான் லட்சுமணன்.

டிரைவருக்கு ஏனோ மனதில் கவலை ஏற்பட்டது. இப்படி அப்பாவியாக இருக்காரே எப்படி இங்கு இருப்பார். இவரை எப்படியாவது திரும்ப அவங்க வீட்டுக்குப் போக வைத்து விடவேண்டும். அதுவரை இவர் கூடவே இருக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இவரை பற்றி விசாரித்து அவர் குடும்பம் பற்றி தெரிந்தால் நாமே கூட அவங்களை வரவைத்து அனுப்பிடலாம் என்று நினைத்தவன் அதன் முதல் படியாக காரை ஓட்டிக்கொண்டே பேச்சு கொடுத்தான் டிரைவர்.

"சார் என் பேர் சேகர் செந்த ஊர் மதுரை பக்கம் சின்ன கிராமம். அம்மா, அப்பா ஒரு அண்ணன் இருக்காங்க. விவசாயம் பண்ணுறாங்க. நான் காலேஜ் படிக்கும் போது காலேஜ் பங்கஷனில் நாடகம் எல்லாம் பசங்களுக்கு சொல்லிக்கொடுக்கிறதை பார்த்து நிறைய பேர் டைரக்டர் ஆசையை தூண்டி விட்டுட்டாங்க. நானும் குடும்பத்தை எதிர்த்திட்டு சென்னை வந்து ஐந்து வருடம் ஆகுது."

"வாய்ப்பு தேடி அலைந்திட்டு இருக்கேன். சில சமயம் சின்ன சின்ன பட்ஜெட் படங்கள் எடுப்பவங்க துணை இயக்குநரா சேர்த்துப்பாங்க. ஒன்று இரண்டு மாதம் படம் எடுப்பாங்க அப்புறம் படம் பாதியிலேயே நின்று விடும். இல்லை படம் முழுசா முடிந்தால் சரியா ஓடாது. அதனால் படம் நஷ்டம் ஆகிடும் சம்பளம் கூட கிடைக்காது. அதனால் இப்படி டாக்ஸி, ஆட்டோ என்று ஓட்டுவேன். இந்த வேலை கிடைக்காத போது ஓட்டலில் வேலைக்கு போவேன் இப்படி தான் ஐந்து வருடமாக ஓடிட்டு இருக்கு" என்றான் டிரைவர் சேகர்.

அதை கேட்ட லட்சுமணுக்கு இப்படி எல்லாம் கஷ்டப்படனுமா என்று மலைப்பாக இருந்தது. சேகர் சிறிது நேரத்திற்கு முன் வெளிப்படையாக இருக்கிங்க என்பது மனதில் இருந்ததாலோ என்னவோ முகத்தை அமைதியாக வைத்துக்கொண்டு

"ஓ... அப்படியா!..." என்றான் லட்சுமணன்.

ஓ... அப்படியா! என்று மட்டும் கூறிவிட்டு அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு லட்சுமணன் வரவே சேகரே மீண்டும் பேசினான்.

"சார் உங்க பேர் என்ன சொந்த ஊர் எது?...." என்றான் சேகர்.

"என் பெயர் லட்சுமணன்" என்று மட்டும் கூறியவன் வேறு எதுவும் கூறாமல் மீண்டும் அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தான் லட்சுமணன்.

மீண்டும் கேட்க தயங்கிய சேகர் பிறகு கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்தவன் வேறு எதுவும் பேசாமல் காரை ஓட்டியவன் ஒரு நடுத்தர ஓட்டல் முன்பு காரை நிறுத்தினான்.
 
கனவு 5



அடுத்த ஒரு மாதத்தில் மும்பையில் பெரிய அளவில்
நவநீதன் புரொடக்ஷன்ஸ் ஆரம்பிக்கப்பட்டது. அப்போதே முதல் பட அறிவிப்பும் வெளியிட்டு இருந்தனர். தங்கள் நிறுவனத்தின் முதல் படம் தமிழில் எடுக்க திட்டமிட்டு உள்ளதாகவும் நடிகர் நடிகைகள் டைரக்டர் மற்ற அனைத்தையும் தேர்வு செய்துவிட்டு விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருந்தனர்.

அடுத்த ஒரு வாரத்தில் ஆருத்ரன் ரகுநந்தன் சென்னையில் குடியேறினர். ஏற்கனவே அங்கு அவர்களுக்கான புதிய பங்களா ஒன்று சென்னையில் வாங்கியிருந்தனர். மஞ்சுளா மகன்களுடன் சென்னை வர கேட்கும் முன்பே ஆருத்ரன் யாரும் வர வேண்டாம் என்று சொல்லி விட்டான். அவனை மீறி எதுவும் செய்ய முடியாமல் மும்பையிலேயே இருந்து விட்டார் மஞ்சுளா. பாட்டிகள் இருவரில் ஒருவர் வருகிறோம் என்ற போதும் ஆருத்ரன் மறுத்து விட்டான். அதனால் தங்கள் வீட்டில் பணிபுரியும் பணியாட்கள் சிலரையும் புதிய பணியாட்கள் சிலரையும் சென்னை வீட்டில் வேலைக்கு நியமித்தனர்.

வடபழனியில் புதிதாக கட்டிடம் ஒன்று வாங்கி நவநீதன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாராகிக்கொண்டு இருந்தது. அதனால் படத்தை பற்றி பேச ஏற்கனவே பேசி முடிவு செய்து இருந்த டைரக்டரை சந்திக்க ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றிற்கு ஆருத்ரன், ரகுநந்தன் வந்திருந்தனர்.

டைரக்டர் வர சிறிது நேரம் ஆகும் என்று இவர்கள் காரில் வரும் போது போன் வந்ததால் புக் செய்த அறைக்கு சொல்லாமல் அந்த ஓட்டலில் பக்கவாட்டில் இருந்த திறந்தவெளி உணவகத்திற்கு சென்று ஒர் ஓரமாய் இருந்த டேபிளில் அமர்ந்து ஜூஸ் ஆர்டர் செய்து விட்டு செய்ய வேண்டிய வேலைகளை பற்றி மெல்லிய குரலில் அண்ணன் தம்பி இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.

அந்நேரத்தில் அந்த சிரிப்பொலிகள் அவர்களின் பேச்சை தடை செய்தது. திரும்பி பார்த்தவர்கள் அங்கு நான்கு நவநாகரீக பெண்கள் இவர்களுக்கு இரண்டு டேபிள்கள் தள்ளி இருந்த டேபிளில் அப்போது தான் வந்து அமர்ந்து கொண்டிருந்தனர்.

தங்களை சுற்றி பலர் இருக்கிறார்கள் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பதை மறந்து சத்தமாக சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர். அவர்களின் பேச்சும் சிரிப்பும் சுற்றி அமர்ந்து இருந்தவர்களை திரும்பி பார்க்க வைத்தது. அப்படி தான் ஆருத்ரன் ரகுநந்தன் பார்க்கவும் ஆருத்ரனின் முகம் இறுகியது. அந்த பெண்களை பார்த்ததும் ரகுநந்தனின் பார்வை திரும்பியது தன் அண்ணன் மீது தான்.

இறுகிய அண்ணன் முகத்தை கண்டதும் அங்கிருந்து கிளம்புவது நல்லது என்று ரகுநந்தனுக்கு தோன்றியது. அதனால் "அண்ணா நாம் ரூமுக்கு போயிடலாம்" என்று கூறி எழுந்தவனை கை பிடித்து தடுத்தான் ஆருத்ரன்.

பார்வை அந்த நான்கு பெண்களில் ஒருத்தியை மட்டும் உக்கிரத்துடன் பார்த்துக்கொண்டு இருக்க ரகுநந்தனை அமரும்படி கூறியிருந்தான்.

'அய்யோ பேச்சு இன்னைக்கு தான் கொஞ்சம் நல்ல மூடில் இருந்தான் அதை கொடுக்கவே இவள் இங்க வந்து இருக்கா. ஓட்டல் அறைக்கு போனவனை நான் தான் காற்றாட இங்க உட்காரலாம் என்று அழைத்து வந்து நானோ ஆப்பு வச்சுக்கிட்டேன். என்ன செய்யப்போறானோ' என்று மனதில் புலம்பிக்கொண்டு அமர்ந்து இருந்தான் ரகுநந்தன்.

ஆனால் அருகில் அமர்ந்து இருந்தவனோ இப்போது கண்ணில் கூலர்ஸ் அணிந்து அமைதியாக இருந்தான். மற்றவர்களுக்கு ஆருத்ரன் பார்வை எங்கு இருக்கிறது என்று தெரியாமல் இருக்கலாம் ஆனால் அருகில் இருந்த ரகுநந்தனுக்கு அண்ணனின் பார்வை எங்கு இருக்கிறது என்று தெரியுமே.

தாங்கள் செய்து கொண்டு இருந்த பணிகளை கைவிட்டு பெண்களின் பேச்சுக்களை சகோதரர்கள் இருவரும் ஊன்றி கவனித்தனர்.

"எப்ப தான் இந்த எக்ஸாம்ஸ் முடியும் இருந்தது இன்னைக்கு தான் நிம்மதியாக இருக்குடி" என்றாள் அங்கு அமர்ந்து இருந்த நான்கு பெண்களில் ஒருத்தியான நிரஞ்சனி.

"உனக்கு என்னடி சினிமா உலகில் பெரிய டைரக்டர் நாதன் சாரோட ஒரே பெண்ணு நீ என்ன சொன்னாலும் கேட்பார் உன் டாடி. அவரே உன்னை படிக்க வேண்டாம் சினிமாவில் நடிக்க சொல்லிட்டார். எங்களுக்கு அப்படியா மேலே படிக்கனும் பிறகு பிசினஸ் பார்க்கனும் என்று பொறாமையோடு தோழி கூறியதை கூட உணராமல் புன்னகையுடன்

"ஆமாம்டி இப்ப எடுக்குற சரித்திரப்படத்தில் நான் தான் ஹீரோயினாக நடிக்க இருந்தது. ஆனால் ஹீரோ தான் ஸ்கூல் படிக்கிற பெண்ணு மாதிரி இருக்காள் எடுத்தவுடனே வெயிட்டான கேரக்டர் வேண்டாம் என்று சொல்லி அவரே வேற ஹீரோயினை செலக்ட் பண்ணிட்டார். அதனால் தான் டாடி அடுத்து எடுக்கிற படத்தில் நடிக்க போறேன்" என்று குதூகலத்துடன் சொல்லிக்கொண்டு இருந்தவளை முகத்தில் புன்னகையுடனும் மனதில் பொறாமையுடனும் பார்த்துக்கொண்டு இருந்தனர் தோழிகள்.

பள்ளியில் இருந்து ஒன்றாக படித்தவர்கள் நால்வரும். வசதியிலும் குறைவில்லாத பணக்கார குடும்ப வாரிசுகள் தான். நிரஞ்சனியை விட மற்ற மூவரும் பணக்காரர்கள். பிறந்ததில் இருந்து பணத்தின் செழுமையில் வளர்ந்தவர்கள் தங்களை விட குறைவான வசதி உள்ளவர்களை தங்கள் அருகில் கூட அமரவைக்க விரும்பாதவர்கள். பணம் என்ற ஒன்று மட்டுமே அவர்களை நட்பு கொள்ள வைத்தது.

நிரஞ்சனியுடன் நட்பு கொண்டதற்கு காரணம் அவள் பெரிய டைரக்டர் மகள் என்ற ஒன்று மட்டுமே. எவ்வளவு பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் வெளியுலகத்தில் சிலர் மட்டுமே அவர்களை அறிந்து இருப்பர். ஆனால் பெரிய திரையில் வந்து விட்டால் இண்டு இடுக்கில் உள்ளவர்கள் எல்லாம் அறிந்த இருப்பார்கள். நிரஞ்சனிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது தான் தோழிகளுக்கு பொறாமை கொள்ள வைத்திருந்தது.

"இப்ப எடுக்கிற படம் இன்னும் ஒரு வாரத்தில் ஷூட்டிங் முடிந்து விடும். அதுக்கு பிறகு மற்ற வேலைகளை முடித்து நான்கு அல்லது ஐந்து மாதத்தில் படம் ரிலீஸ் ஆகிடும். அப்புறம் அடுத்த படம் ஆரம்பித்திடலாம் என்று டாடி சொன்னார்" என்று கூறிக்கொண்டிருந்தாள் நிரஞ்சனி.

ஆருத்ரனின் போன் ஒலிக்கவும் எடுத்து பார்க்க தாங்கள் சந்திக்க இருந்த டைரக்டர் ராஜா என்று திரையில் ஒளிரவும் போனை ஆன் செய்து காதில் வைத்தான்.

அவர் கூறியதை கேட்டவன் "நாங்க வரோம்" என்று கூறி வைத்தவன் தம்பியிடம் கிளம்பலாம் என்றவனின் பார்வை மீண்டும் நிரஞ்சனியின் மீது கோபத்துடன் படிந்து மீண்டு சென்றது.

ஒருவன் தன்னை சினத்துடன் கண்டு விட்டு சென்றதையோ கூடிய விரைவில் அவனிடம் அகப்பட்டு படாதபாடு படப்போவதையோ அறியாமல் குதூகலமாக தோழிகளிடம் பேசிக்கொண்டு இருந்தாள் நிரஞ்சனி.


ஓட்டல் ரிசப்ஷன் வந்த போது அங்கு டைரக்டர் ராஜா இவர்களுக்காக காத்திருந்தார். கை குலுக்கிக்கொண்டவர்கள் பேசிக்கொண்டே லிப்ட் நோக்கி சென்றனர்.

"என்னாச்சு ராஜா சார் காலேஜில் என்ன பிரச்சினை?..." என்று விசாரித்தான் ஆருத்ரன்.

"காலேஜில் என் மகள் சீதாலட்சுமிக்கு சீனியர் பையன் லவ் லெட்டர் கொடுத்து இருக்கான். அவனை போட்டு அடிச்சி இருக்கா அது பிரின்ஸ்பல் வரைக்கும் போய்விட்டது. அவங்க தான் வரச்சொல்லி இருந்தாங்க ருத்ரன் சார்" என்றார்.

"என்ன படிக்கிறாங்க சார்?... என்றான் ஆருத்ரன்.

"முதல் வருடம் பி காம் படிக்கிறாள். பையன் பத்தாம் வகுப்பு படிக்கிறான்" என்றார் ராஜா.

"என்னது பஸ்ட் இயர் படிக்கிறவள் சீனியரை அடிச்சாளா?..." என்று ஆச்சரியத்துடன் கேட்டான் ரகுநந்தன்.

"ஆமாம் சார் அவளுக்கு தப்பு என்று தெரிந்தால் எதிரில் இருக்கறவங்க யார் என்று பார்க்கமாட்டாள். இந்த ஒரு வருடத்தில் காலேஜிக்கு எட்டு முறை போய் இருக்கேன் என்றால் பாருங்க" என்றவரின் முகத்தில் மகளின் துணிச்சலை நினைத்து புன்னகை வந்தது.

"தப்பை கண்டால் பொங்கி எழும் பாரதி கண்ட புதுமை பெண்ணா!...." என்று கூறியவனின் மனதில் அந்த புதுமை பெண்ணை பார்க்கணுமே என்ற எண்ணம் தோன்றியது ரகுநந்தனுக்கு.

"ஓட்டலின் ஐந்தாவது மாடிக்கு வந்தவர்கள் முன்பதிவு செய்திருந்த அறைக்கு சென்றதும் பேச ஆரம்பித்து விட்டனர். ராஜா தன் லேப்டாப்பில் ஏற்கனவே இருந்த நடிகர் நடிகைகள் படங்களை காட்டினார்.

ஒவ்வொருன்றாக பார்த்த ஆருத்ரனுக்கு யாரும் கதைக்கு ஏற்றவர்கள் போல தெரியவில்லை. ரகுநந்தனுக்கும் அப்படியே தோன்றியது.

புதுமுகமாக வாய்ப்புக்காக வந்திருந்தவர்கள் புகைப்படங்களையும் காட்டினார் ராஜா.

"கதைக்கு யாரும் பொருந்தவில்லை" என்றவன் "கதையை கேட்டால் உங்களுக்கே தெரியும் சார்" என்றவன் கதையை சொல்ல அதிர்ந்து எழுந்து நின்றுவிட்டார் ராஜா.

சிறிது நேரம் அமைதியாக இருந்த ராஜா பின் தன் தொண்டையை செருமி சரி செய்தவர் தனக்கு தோன்றிய சில சந்தேகங்களை கேட்டு தெளிந்தவர் கதையை பற்றியும் கதாபாத்திரங்கள் கதை எடுக்க வேண்டிய இடங்கள் என்று படம் எடுக்க தேவையான பல விஷயங்களை பேசி முடித்த நேரம் இரவு எட்டு மணியை நெருங்கி இருக்க இரவு உணவை அறைக்கே வரவைத்து உண்டு முடித்து ராஜா விடை பெற்று சென்றார்.

ராஜா சென்றதும் அணிந்து இருந்த சட்டையின் பட்டன்கள் இரண்டை கழட்டியவன் கால்களை டிபாயின் மீது வைத்து சோபாவில் தலை சாய்த்து கண்களை மூடினான் ஆருத்ரன்.

மூடியிருந்த கண்களின் கருமணிகள் அலைப்புற்றன. தன் தேடல் சரியான பாதையில் செல்கிறதா முடிவு தனக்கு வெற்றியை தருமா அடுத்து என்ன என்ற பல கேள்விகள் ஆருத்ரனை சூழ்ந்திருந்த அதே நேரத்தில் அந்த சிரிப்பொலியும் அதற்கு சொந்தக்காரியும் கண்முன் வந்து நின்றன.

வெளிர் புளு நிறத்தில் டிரெண்டிங் என்ற பெயரில் ஆங்காங்கே ஓட்டை போட்ட ஜீன்ஸ் பேண்ட்டும் கருப்பு நிற கையில்லாத டாப்பு அணிந்து கலரிங் செய்த குட்டை கூந்தலை விரித்து விட்டிருந்தவள் காற்றில் பறந்த கூந்தலை காதோரம் ஒதுக்கிய போது அவள் காதில் அணிந்து இருந்த சிறிய கம்பல், கூந்தலை ஒதுக்கிய விரலில் அணிந்து இருந்த சிறிய வளையம், வலது கையில் மெல்லிய பிரேசிலேட் அதில் தொங்கிய சிறு சிறு இதயங்கள். இடது கையில் எதையும் அணியாமல் இருந்த போதும் அதுவும் அழகாகவே இருந்தது.

சிறிய நெற்றியும் அடர்ந்த புருவங்களுக்கு மத்தியில் சிறு மச்சம் போன்று கருப்பு நிற பொட்டும் பேசும் போதெல்லாம் விரிந்தும் சுருங்கியும் பாவனைகளை காட்டிக்கொண்டு இருந்த அந்த பெரிய கண்களை இன்னும் பெரிதாக காட்டியது ஐ லைனர், ஐ ஷேடோ. கூரான மூக்கும் அதில் ஒரு சிறு மூக்குத்தி அணிந்து இருந்தால் இன்னும் அழகாக இருந்து இருக்குமோ என்று யோசித்தவன் அதை பிறகு பார்த்துக்கலாம் என்று விட்டவனின் மனதில் அந்த உதடுகள் வந்தன.

எப்போதும் அடர்ந்த நிறத்தில் லிப்ஸ்டிக் அணிந்து பார்த்ததால் லிப்ஸ்டிக் இல்லாமல் அந்த உதடுகள் எப்படி இருக்கும் என்று அறியும் ஆவல் வந்தது. எப்படியும் அந்த உதடுகள் அவளின் கன்னங்களை போல மென்மையாகத்தான் இருக்கும் என்று நினைத்தவனின் எண்ணம் இப்போது கன்னங்களை ஆராய்ந்தன ஆப்பிளை வைத்தது போல குண்டு கன்னங்கள் அதில் தன் விரல் வைத்து மென்மையை ஆராய கைகள் துருதுருத்தன.

அந்த குழந்தை தனமான முகத்திற்கு கொஞ்சமும் அவள் செய்து இருந்த அரை இன்ச் மேக்கப் பொருந்தவில்லை என்பதே அவனின் எண்ணம். எந்த மேக்கப்பும் இல்லாமல் இயற்கையான அவளின் அழகு முகத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவல் அவளை கண்டதில் இருந்து தோன்றிக்கொண்டுதான் இருக்கிறது.

கண்மூடி அவளின் அழகை ரசித்தவனின் காதில் அவளின் இனிமையான குரலும் கேட்டது. அதுவரை இருந்த இளகுத்தன்மை மாறி இப்போது ஆருத்ரனின் சிவந்த முகம் மேலும் கோபத்தில் சிவந்தன.

அதுவரை எதிர் சோபாவில் அமர்ந்து அண்ணனையே பார்த்துக்கொண்டு இருந்த ரகுநந்தனின் மனதில் போச்சா நியாபகம் வந்திடுச்சா இன்னைக்கு என்ன பண்ணப்போறானோ பேசாமல் ராஜா சார் கிளம்பும் போதே இவனை கூட்டிட்டு வீட்டுக்கு போய் இருந்தால் கொஞ்ச நேரமாவது தூங்கி இருக்கலாம். இன்னைக்கு காதில் எவ்வளவு ரத்தம் வரப்போகுதோ எல்லாம் அங்க இருக்குற அந்த பெரிசுகளை சொல்லனும். அண்ணன் கூட போடா என்று அனுப்பிட்டாங்க. இந்த நாலு மாசமா இவன் பண்ணுறதை வெளியக்கூட சொல்லமுடியாமல் இருக்கேன் என்று வாய்விட்டு புலம்ப முடியாமல் மனதுக்குள் புலம்பிக்கொண்டு இருந்தான் ரகுநந்தன்.

அந்த நேரத்தில் "ரகு" என்றான் ஆருத்ரன்.

"வீட்டிற்கு போயிடலாமே அண்ணா" என்றான்.

"நீ சொல்லுறியா இல்லை நானே சொல்லிக்கவா?..." என்ற கோபக்குரல் ஆருத்ரனிடம் இருந்து வந்ததும் வேகமாக ஓட்டல் அறையில் இருந்த தொலைபேசியை கையில் எடுத்தான் ரகுநந்தன்.
 
கனவு 6


காரில் இருந்தே லட்சுமணன் அந்த ஓட்டலை பார்த்தான். மூன்று அடுக்குகளில் இருந்தது. பார்க்க கொஞ்சம் பழைய கட்டிடமாகத் தெரிந்தது. சேகரை கேள்வியாக பார்க்கவும்

"சார் இந்த ஓட்டல் கொஞ்சம் வசதியாக இருக்கும் சாப்பாடும் ஒரளவுக்கு நல்லா இருக்கும் வாடகையும் குறைவு. அதுவு‌ம் இல்லாமல் என்னை மாதிரி சினிமா வாய்ப்புக்காக வந்தவங்க சில பேர் இங்க வேலை செய்யுறாங்க அவங்க உங்களை பார்த்துப்பாங்க. உங்களுக்கு இந்த ஓட்டல் பிடிக்கலை என்றால் இன்னும் கொஞ்சம் பெரிய ஓட்டலாக பார்க்கலாம்" என்றான் சேகர்.

"என்னை முதலில் சார் என்று கூப்பிடுவதை நிறுத்துங்க சேகர் நான் உங்களை விட சின்னவன் என்னை பெயர் சொல்லியே கூப்பிடுங்க. அடுத்து நானும் சினிமா வாய்ப்புக்காகத்தான் வந்து இருக்கேன். அதுவும் எதுவும் தெரியாமல் வந்து இருக்கேன். நீங்கள் தான் இப்போதைக்கு எனக்கு தெரிந்தவர் நீங்க எனக்கு நல்லது தான் செய்வீங்க என்று உங்களை பார்த்ததும் எனக்கு தோன்றியது அதனால் தான் உங்க கிட்ட எல்லாம் சொன்னேன். இப்ப இங்க தங்குறது நல்லது என்று நீங்க சொல்லுறதால் நான் இங்கேயே தங்குறேன்" என்றான் லட்சுமணன்.

"சரி லட்சுமணன் வாங்க போகலாம்" என்று புன்னகையுடன் கூறிய சேகர் காரில் இருந்து இறங்கவும் லட்சுமணனும் இறங்கி ஓட்டலுக்குள் இருவரும் சென்றனர்.

முன் பணம் செலுத்தி அறை சாவியை வாங்கிக் கொண்டு மாடியேறினர். அறையை திறந்து உள்ளே சென்ற போது லட்சுமணனுக்கு அதிர்ச்சியே சாதாரணமாக ஓட்டல் அறை என்றால் வரவேற்பு அறை, படுக்கை அறை, பால்கனி, குளியல் அறை என்பதோடு முழுவதும் ஏசியின் குளுமையில் இருப்பதைத்தான் பார்த்து இருக்கிறான். ஏன் அதைவிட பெரியப்பெரிய செகுசு ஓட்டல்களில் தங்கி இருக்கிறான். ஆனால் இங்கே பத்துக்கு பத்து அடியில் அறையும் அதற்குள்ளேயே சிறிய பெட்டி போல் குளியல் அறையும் ஒரே ஒரு ஜன்னலும் இருப்பதோடு வந்த சிறிது நேரத்திலேயே அவனுக்கு வேர்க்க ஆரம்பித்து இருந்தது.

"லட்சுமணன் நீங்க குளிச்சிட்டு வாங்க நான் கீழே போய் பசங்க கிட்ட பேசிட்டு இருக்கேன். கதவை தாள் போட்டுட்டு குளிக்க போங்க" என்று கூறிவிட்டு வெளியேறினான் சேகர்.

சேகர் சொன்னது போல் தாளிட்டு விட்டு அங்கிருந்த சிறு ஜன்னல் அருகே சென்று பார்த்தவனுக்கு தெரிந்தது பரபரப்பாக சென்று கொண்டு இருந்தவர்கள் தான். சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை எல்லா வயதினரும் அவசரமாக சென்று கொண்டு இருந்தனர்.

இதையெல்லாம் இதுவரை ஊன்றி கவனித்தது இல்லை லட்சுமணன். வசதியான குடும்பத்தில் பிறந்ததால் பணம் தாராளமாக இருந்தது. குடும்பத்தினருடன் ஜாலியாக இருப்பதும் பள்ளி கல்லூரி சென்றபோது நண்பர்கள் உடன் சுற்றுவது என்று எந்த இலக்கும் இல்லாமல் சுற்றிக்கொண்டு இருந்தவனுக்கு ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட கிடைக்கிற வேலை செய்யனும் என்று சேகர் சொன்னது மனதை ஏதோ செய்தது.

இவ்வளவு வருஷம் எதுவுமே தெரியாமல் வாழ்ந்து இருக்கும் தன்னை நினைத்து அவனுக்கே கோபம் வந்தது. இனியாவது ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் எவ்வளவு இடர்கள் வந்த போதும் தான் வந்த நோக்கத்தை அடையாமல் பின்வாங்கக்கூடாது என்ற முடிவை எடுத்தவன் குளியல் அறை சென்றான்.

இதற்கு முன்பு அந்த குளியல் அறை கண்டு முகம் சுளித்தவனுக்கு இப்போது அப்படி தோன்றவில்லை. இது கூட கிடைக்காமல் எவ்வளவு பேர் வாழ்ந்திட்டு இருக்காங்க. சேகர் சொன்னாரே சினிமா வாய்ப்புக்காக வந்தவர்கள் இந்த ஓட்டலில் வேலை செய்வதாக தன் கையில் இருக்கும் பணம் செலவாகிப்போனால் நானும் இப்படி எதாவது ஒரு வேலை செய்து தானே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றவும் இப்போது வசதி குறைவு அவனுக்கு கண்ணில் படவில்லை. சீக்கிரம் தான் வந்த நோக்கம் நடக்கவேண்டும் அதற்கு தன்னை தயாராக்கிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற குளித்து முடித்து விட்டு வந்த நேரம் சேகர் வந்து சேர்ந்தான்.

இருவரும் கீழே சென்று அந்த நண்பர்களுக்கு லட்சுமணனை அறிமுகப்படுத்தி விட்டு அங்கிருந்த உணவு உண்ணும் பகுதிக்கு சென்றவர்கள் தங்களுக்கு இட்லியை ஆர்டர் செய்தனர்.

இட்லி வந்ததும் அதை பிட்டு சாப்பாரில் நனைத்து வாயில் வைத்த லட்சுமணனுக்கு புரையேறியது. அந்த அளவுக்கு அந்த சாம்பார் விறுவிறுவென காரமாக இருந்தது.

லட்சுமணன் தண்ணீர் குடிங்க என்று சேகர் எடுத்துக்கொடுத்தான். தண்ணீர் குடித்து தன்னை சரி செய்தவன் "ஒன்னும் இல்ல சேகர் காரம் அதிகமாக இருக்கு அதான்" என்றான்.

சேகருக்கு லட்சுமணனை கண்டு பாவமாக இருந்தது. இந்த சாம்பார் அவனுக்கு சற்று காரம் குறைவாக இருக்கிறது அதையே காரம் என்கிறானே என்று இருந்தது.

"சட்னி காரம் குறைவாகத்தான் இருக்கு அதில் தொட்டு சாப்பிடுங்க" என்றான் சேகர்.

இட்லியில் பட்டும் படாமலும் தொட்டு உண்டு பார்த்தான் லட்சுமணன் அது கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றியது. உணவு முடித்ததும்

"லட்சுமணன் நீங்க ரெஸ்ட் எடுங்க நான் ஈவினிங் வந்து பார்க்கிறேன். நாளைக்கு உங்களுக்கு வீடு பார்க்க போகலாம். இப்ப நான் சவாரிக்கு போகனும்" என்றான் சேகர்.

அப்போது தான் லட்சுமணனுக்கு உரைத்தது டாக்ஸி ஓட்டிட்டு இருந்தவரை தன் தேவைக்காக இப்படி பயன்படுத்தி கொண்டதும் இல்லாமல் சேகருக்கு தான் இன்னும் பணம் கூட கொடுக்காதது ஞாபகம் வந்தது. தன் பர்சில் இருந்து இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து சேகரிடம் நீட்டினான்.

"என்ன லட்சுமணன்?..." என்றான் சேகர்.

"உங்க வண்டியில் வந்ததுக்கு பணமே கொடுக்கலையே...." என்றான்.

"வேண்டாம் லட்சுமணன் இப்ப நீங்க நண்பனாகிட்டிங்க நண்பர்களுக்குள் கணக்கு பார்க்கக்கூடாது" என்றான் சேகர்.

"நீங்க இன்னேரம் சவாரிக்கு போய் இருந்தா இதைவிட அதிகமாக சம்பாதித்து இருப்பிங்க தானே" என்று கூறி சேகரின் கை பிடித்து பணத்தை வைத்தான் லட்சுமணன்.

"இவ்வளவு பணம் வேண்டாம் லட்சுமணன் உங்களை கூட்டிட்டு வந்ததற்கு ஐம்பது ரூபாய் தான் அதுமட்டும் கொடுங்க" என்றான்.

"சேகர் இந்த பணத்தை வாங்கவில்லை என்றால் நீங்கள் என்னை பிரண்டாக ஏத்துக்கலை என்று அர்த்தம்" என்று கூறிவிட்டு திரும்பி வேகமாக தன் அறை நோக்கி சென்று விட்டான் லட்சுமணன்.

வேறுவழி இல்லாமல் சேகர் பணத்தை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வெளியேறினான்.

அடுத்த நாள் காலையிலேயே வந்துவிட்டான் சேகர் இருவரும் கிளம்பி லட்சுமணனுக்கு வீடு பார்க்க சென்றனர். அவர்கள் சென்ற பெரும்பாலான வீடுகளில் நிறைய குடும்பங்களுக்கு ஒரே ஒரு குளியலறை, கழிவறை என்று தான் இருந்தது.

சில இடங்களில் சினிமாகாரர்கள் என்றதும் வீடு தர மறுத்தனர். தனி குளியலறை இருக்கும் இடங்களில் அட்வான்ஸ், வாடகை அதிகமாக கேட்டனர். அன்று முழுவதும் வீடு கிடைக்காமல் போகவே மீண்டும் ஓட்டல் அறைக்கு லட்சுமணனை அழைத்து வந்து விட்டு விட்டு "நாளை திரும்ப சொல்லலாம்" என்று சொல்லி சென்றான் சேகர்.

மறுநாள் வந்த போது லட்சுமணன் எழக்கூட முடியாம‌ல் படுத்து இருந்தான். கதவை நீண்ட நேரம் தட்டிய பிறகே மெல்ல எழுந்து வந்து கதவை திறந்துவிட்டவன் நிற்க முடியாமல் சாய்ந்தவனை சேகர் தாங்கிப்பிடித்தான்.

"லட்சுமணன் என்னாச்சு?..." என்று கூறிக் கொண்டே பிடித்தவனுக்கு லட்சுமணனின் உடல் சூடு தெரிந்தது. "உடம்பு இவ்வளவு சுடுதே எப்போதில் இருந்து ஜுரம் இருக்கு?..." என்று கேட்டான் சேகர்.

"நேற்று இரவில் இருந்து வயிறு வலிச்சது அப்புறம் நிறைய முறை கழிவறை சென்று வந்ததையும் அதன் பிறகு பீவர் வந்ததாக" மெல்லிய குரலில் சொன்னான் லட்சுமணன்.

"அப்பவே பசங்களை கூப்பிட்டு இருக்கலாம் இல்லையா லட்சுமணன்" என்றவன் "இருங்க நான் போய் கூட்டிட்டு வர்றேன்" என்று கட்டிலில் படுக்க வைத்து விட்டு சென்ற சேகர் சில நிமிடங்களில் இருவரை அழைத்து வந்தான்.

"லட்சுமணன் வாங்க டாக்டர் கிட்ட பேகலாம் பீவர், வயிறு வலி இருக்கிறதால் இப்ப உங்களுக்கு குடிக்கக்கூட என்ன கொடுக்கிறது என்று தெரியலை டாக்டரை பார்த்தால் அவர் என்ன கொடுக்கலாம் என்று சொல்லுவார் வாங்க" என்று இரண்டு பக்கமும் இருவர் பிடித்து அழைத்து சென்றனர்.

அந்த ஏரியாவில் இருந்த சற்று பெரிய மருத்துவமனை அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர் பரிசோதனை செய்து விட்டு மேலும் சில டெஸ்ட் எடுக்க வேண்டும் மருத்துவமனையில் ஒர் நாள் இருக்கும் படி கூறிவிட சேகர் லட்சுமணன் உடன் இருக்க மற்ற இருவரும் சென்று விட்டனர்.

ஒரு நாள் என்றது இரண்டு நாள் மருத்துவமனையில் இருந்தனர் மறுநாள் மாலையில் தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான் லட்சுமணன்.

ஓட்டல் உணவு ஒவ்வாமையால் உடல்நிலை சரியில்லாமல் போனது எனவே ஓட்டல் உணவை தவிர்க்கச்சொல்லி மருத்துவர் அறிவுறுத்தவே சேகர் தான் தங்கியிருந்த அறைக்கு லட்சுமணனை அழைத்தான்.

"லட்சுமணன் உங்களுக்கு உடம்பு சரியாகும் வரை என் கூட வந்து தங்கறீங்களா?..." என்றான் தயக்கத்துடன் சேகர்.

"ஏன் சேகர் தயக்கமாக சொல்லுறீங்க இப்ப இருக்கும் ஒரே ஆதரவு நீங்க தான். நீங்க மட்டும் இல்லை என்றால் என்ன ஆகியிருப்பனோ?.... இப்படி ஒரு நண்பன் கிடைத்ததற்கு நான் எதோ நல்லது செய்து இருக்கேன்" என்று கூறிய லட்சுமணனின் குரல் தழுதழுத்தது.

"என்ன லட்சுமணன் நீங்க நண்பனாக கிடைத்ததற்கு நான் தான் கொடுத்து வச்சு இருக்கனும் இனி இப்படி எல்லாம் பேசாதிங்க. நான் இருக்கிற இடத்தில் பொது பாத்ரூம் தான் அதனால் தான் உங்களை ஓட்டலில் தங்க சொன்னேன். ஆனால் அதுவே உங்க உடம்பு சரியில்லாமல் போயிடுச்சு.". என்று வருந்தியவன் பின்

"நான் இருக்கும் இடத்தில் ஆண்டாள் அக்கா ஒருத்தர் இட்லி கடை வச்சு இருக்காங்க. அவங்க செய்யுற சமையல் வீட்டில் செய்யறது போல இருக்கும். காலையில் இட்லி ஆப்பம் கிடைக்கும். மதியம் நாம் முன்னாடியே சொல்லி வச்சா சாப்பாடும் செய்து தருவாங்க" என்றான் சேகர்.

"அப்ப முதலிலேயே என்னை நீங்க தங்கியிருக்கும் பகுதிக்கு கூட்டிட்டு போய் இருக்கலாமே சேகர்?..." என்றான்.

"இல்லை லட்சுமணன் அந்த ஏரியா அவ்வளவு நல்லா இருக்காது. கொஞ்சம் அடிமட்டத்தில் இருப்பவர்கள் இருக்கும் ஏரியா அது உழச்சிட்டு வந்தால் படுத்து தூங்க ஒரு மறைவு இருந்தால் போதும் என்று வாழும் மக்கள் இருக்குற இடம். நிறைய பேர் சினிமாவில் கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் துணை நடிகர் நடிகைகள் குரூப் நடனம் ஆடுறவங்க சினிமா வாய்ப்புகாக வந்தவங்க இப்படிபட்டவங்க தான் அங்கு இருக்காங்க" என்றான் சேகர்.

"நானும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்புக்காக தான் வந்தவன் என்பதை மறந்திட்டிங்களா சேகர்?..." என்றான் லட்சுமணன்.

"இல்லை லட்சுமணன் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த எனக்கே ஆரம்பத்தில் அந்த இடத்தில் இருக்கமுடியாமல் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?... அப்படி பட்ட இடத்தில் உங்களை எப்படி அழைச்சிட்டு போவேன் லட்சுமணன்" என்றான் சேகர்.

"சேகர் உங்க மனதில் இருக்கும் நான் பணக்காரன் என்ற எண்ணத்தை மறந்திடுங்க. அப்ப தான் என்னை உங்களில் ஒருவனா நினைப்பிங்க. இந்த நிமிடம் நான் பணக்காரன் இல்லை. சினிமா வாய்ப்புகாக வந்த ஒருவன் அவ்வளவு தான்."

"நான் இதுவரை இருந்த
இடம் வேற இப்போது வந்து இருக்குற இடம் வேற தான். செகுசாக வாழ்ந்த எனக்கு இப்படி பட்ட இடங்களை தூரத்தில் இருந்து பார்த்து இருக்கேன் அவ்வளவு தான். அவங்க வாழ்க்கை முறை எப்படி பட்டது என்று சிந்தித்தது கூட இல்லை. ஆனால் இப்ப அந்த இடங்களில் வாழுகிற வாய்ப்பு கிடைத்து இருக்கு அதை நான் அனுபவிக்க முடிவு பண்ணிட்டேன்."

"என் அம்மா ராஜாக்கள் கதை சொல்லும் போது அதில் பட்டம் பெற போகிறவங்க கொஞ்சம் காலம் மக்களோட மக்களா வாழ்ந்து அவங்க கஷ்டங்களையும் அவங்க வாழ்க்கை முறை எல்லாம் தெரிஞ்சுக்கனும் என்று அனுப்புவாங்களாம் அதற்கு பிறகு தான் அரசனாக பட்டம் சூட்டுவாங்களாம். நாட்டை ஆண்ட அரசனுக்கே இப்படி ஒரு நிலை என்றால் நான் சதாரண மனுஷன் தான். அதனால் இனி என்னை பற்றி எந்த பேச்சும் வேண்டாம் எனக்கு அந்த இடத்தில் எப்படி இருக்கனும் என்று சொல்லிக்கொடுங்க சேகர்" என்றான் லட்சுமணன்.

அதன் பிறகே மருத்துவமனையில் இருந்து லட்சுமணனை தான் தங்கியிருந்த இடத்திற்கு சேகர் அழைத்து சென்றான்.

 
கனவு 7


போனை எடுத்த ரகுநந்தன் அருகில் இருந்த ஓட்டல் இணைப்பு எண் புத்தகத்தில் இருந்த பார் எண்ணை அழுத்தி அந்த பக்கம் எடுத்த உடன் தங்கள் அறை எண்ணை சொல்லி விட்டு உயரக மதுபானத்தையும் தேவையான சைடிஸ்களையும் ஆர்டர் செய்து வைத்தான்.

அவர்கள் குடும்பத்தில் யாருக்கும் மதுபானம் அருந்தும் பழக்கம் இல்லை. தொழில் முறை மீட்டிங்கில் கூட டேபிள் மேனர்ஸ் என்று கையில் வைத்துக் கொண்டு பேசுவார்களே தவிர அருந்த மாட்டார்கள்.

ஆருத்ரன், ரகுநந்தன் கல்லூரி நண்பர்கள் உடன் வெளியே செல்லும் போது உடலுக்கு கெடுதல் இல்லாத பீர் அருந்துவர். பிசினஸில் வந்த பிறகு கையில் இருக்கும் மதுபானத்தையும் சிறிது பருகுவர் அவ்வளவு தான்.

ஆனால் நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டில் நடந்த பிரச்சனைக்கு பிறகு ஆருத்ரனுக்கு அதிகமான கோபங்கள் வரும் போது மதுபானம் அருந்த ஆரம்பித்து விட்டான். அந்த நாட்களில் ஆருத்ரனிடம் மாட்டுவது ரகுநந்தன் தான்.

பெரும்பாலும் இருவரும் ஒன்றாக இணைந்து இருப்பதால் ஆருத்ரன் மதுவை நாடும் போது அவனை தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்லாமல் மும்பை நகரத்தில் உள்ள வீடுகளில் ஒன்றிற்கு அழைத்து சென்று விடுவான்.

மது அருந்திவிட்டு அந்த இரவு முழுவதும் ஆருத்ரனின் புலம்பல்களை கேட்டு கொண்டு இருக்கும் நிலை ரகுநந்தனுக்கு தான். புலம்பட்டும் என்று அறையில் விட்டு செல்லவும் முடியாது. கோபம் அதிகமாகும் போது வீட்டில் உள்ள பொருட்கள் உடையும். அதனால் தன் அண்ணனின் புலம்பல்களை கேட்கும் நிலை ரகுநந்தனுக்கு.

இன்றும் அந்த நிலையில் தான் உட்கார்ந்து இருக்கிறான் ரகுநந்தன். வீட்டில் இருந்தாலாவது பொருட்கள் உடைந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் ஓட்டல் பொருட்கள் உடைந்து அது வெளியில் கசிந்தால் தங்கள் குடும்ப பெயர் கொட்டை எழுத்தில் மீடியா முழுவதும் பேசும் பொருள் ஆகிவிடுமே என்ற பயத்துடன் அமர்ந்து இருந்தான் ரகுநந்தன்.

பத்து நிமிடங்களில் ஆர்டர் செய்தவை வந்து விட கொண்டு வந்த பணியாளை அறைக்குள் விடாமல் வெளியேயே நிற்க வைத்து வாங்கிக்கொண்டு அனுப்பி இருந்தான் ரகுநந்தன்.

ஆருத்ரன் அமர்ந்திருந்த சோபாவின் முன் இருந்த டீப்பாயில் அனைத்தும் வைத்தவன் "ருத்ரா" என்று அழைத்தான். பெரும்பாலும் ஆருத்ரனை பெயர் சொல்லி தான் அழைப்பான் ரகு நந்தன். பணியிடத்தில் மட்டும் தான் அவனை அண்ணா என்று அழைப்பான். வீட்டில் இருக்கும்போது வெளியில் இருக்கும் போது அவனை பெயர் சொல்லியே அழைப்பான் இருவரும் நண்பர்களைப் போல பழகுவார்கள்.

ஆருத்ரன் வேகமாக மதுபானத்தை திறந்து அப்படியே வாயில் சரிக்கப்போனவனை கை பிடித்து தடுத்து இருந்தான் ரகுநந்தன்.

"டேய் விடுடா..." என்றான் ஆருத்ரன்.

"அப்படியே குடிக்காதடா" என்று ஆருத்ரனின் கையில் இருந்து பாட்டிலை பிடுங்கி தானே டம்ளரில் ஊற்றி கொஞ்சமாக கொடுத்தான் ரகுநந்தன்.

கொஞ்சம் கொஞ்சமாக குடித்தவன் போதை ஏறியதும் பேச ஆரம்பித்து விட்டான்.

"ஏன்டா எனக்கு மட்டும் கொடுக்குற நீ குடிக்கலையா" என்றான்.

"ஒரு குடிகாரனே போதும்டா சீக்கிரம் ஆரம்பி உன்னுடைய பேச்சு வார்த்தையை, முன்னமே தெரிந்திருந்தால் கொஞ்சம் பஞ்சாவது எடுத்து வச்சிட்டு வந்து இருப்பேன்" என்றான் ரகுநந்தன்.

அதை காதில் வாங்காமல் ஆருத்ரன் பேசினான்.

"ஏன்டா அவள் எதுக்குடா அப்படி டிரஸ் பண்ணுறா நம்ப பாட்டிகள் இரண்டு பேரும் எவ்வளவு அழகா புடவை கட்டி கொண்டை போட்டு பெரிய பொட்டு வச்சு இருக்காங்க. ஆனால் இவள் முடியை விரிச்சிட்டு அதில் கலர் அடிச்சு கண்றாவியாக இருக்காடா. அதுமட்டுமா நெத்தியில் பொட்டு கூட வைக்க மாட்டுறாடா. இன்னைக்கு மச்சத்தை விட சின்னதா பொட்டு வச்சு இருந்தாடா."

"அப்புறம் அந்த முகத்தில் அவ்வளவு மேக்கப் எதுக்குடா போட்டு இருக்கா நம்ம பாட்டிகள் வெறும் மஞ்சள் தான் பூசி இருப்பாங்க எவ்வளவு அழகாக இருக்காங்க" என்று அவனின் புலம்பல்களை ஆரம்பித்து இருக்க அதை கேட்டுக்கொண்டு இருந்தவன் மனதுக்குள் புலம்பிக்கொண்டு இருந்தான்.

'அடப்பாவி செவன்டி பிளஸ் வயதுக்கும் இப்போது தான் டீன்ஏஜ் முடித்தவளுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கு அவளை போய் பாட்டிகள் மாதிரி இருக்கனும் என்று நினைக்கிறியே அணியாயமாக இருக்குடா.'

'பாட்டி மாதிரி பெண்ணு வேண்டும் என்றால் நீ என்பது வருசத்திற்கு முன்ன பிறந்து இருக்கனும்டா. இப்ப வந்து அவள் டிரஸ்சை குறை சொல்லிட்டு இருக்கியேடா.'

' நேற்று கூட அந்த நீச்சல் குளத்தில் நீந்திட்டு இருக்கும் போது இரண்டு பெண்ணுங்க நீச்சல் உடையில் இருந்ததை ரசிட்டு இருந்தவன், நீ காதலிக்கும் பெண்ணும் மட்டும் பர்தா போட்டுட்டு இருக்கனும் என்று நினைக்கறியோடா' என்று புலம்பியவன் காதில் ஆருத்ரன் புலம்பல் கேட்டது.

"அந்த கூரான மூக்கில் பாட்டி மாதிரி ஒரு மூக்குத்தி போட்டா எவ்வளவு அழகாக இருக்கும்டா" என்றான் ஆருத்ரன்.

"அடேய் முதலில் அவளை பாட்டிங்க கூட கம்பேர் பண்ணுறதை நிறுத்துடா" என்று வாய் திறந்த கத்தியிருந்தான் ரகுநந்தன்.

அவனின் கத்தலில் திகைத்த ஆருத்ரன் பின் "ஏன்டா?... " என்றான்.

"அந்த பாட்டிங்க கூட பழகறதை முதலில் நிறுத்தனும். அவங்க கூடவே இருந்ததால் காதலிப்பவளை கூட அவங்க கூட கம்பேர் பண்ணிட்டு இருக்க. நம்ப அம்மா அத்தைகள் கூட வெளியே போகும் போது மார்டன் உடைகளை அணிந்துக்கறாங்க. அப்படி இருக்கும் போது இப்பத்தான் இருபது வயது ஆன பெண்ணை புடவை கட்டி மஞ்சள் பூசி பெரிய பொட்டு வைக்க சொன்னால் உனக்கு பைத்தியம் பிடித்து இருக்கு என்று சொல்லுவாங்கடா."

"நீ அடுத்த வீட்டு பெண்களை சைட் அடிக்கலாம். ஆனால் உன் காதலியை யாரும் ரசிக்கக்கூடாதா உனக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னியா முதலில் இப்படி பொசசிவ் குணத்தை மாற்றுடா. அவளை எப்படி கரைட் பண்ணுறது என்று யோசிக்காமல் லூசு மாதிரி பேசிட்டு இருக்கான்" என்றான் ரகுநந்தன்.

"யாருடா லூசு?..." என்று சொல்லிக்கொண்டே தன் சட்டையின் கைகளை முட்டிக்கு மேல் ஏற்றி சண்டைக்கு தயாரானான் ஆருத்ரன்.

"இப்ப சண்டை போடும் மூடில் நான் இல்லைடா. உன் புலம்பல் முடிந்ததா இல்லை இன்னும் இருக்காடா முக்கியமான விஷயம் பேசனும்" என்றவனின் முகம் அதுவரை இருந்த இலகுத்தன்மை மாறி இறுக்கமாக இருந்தது.

இப்போது ஆருத்ரன் எதுவும் பேசாமல் அமைதியாக மீதம் இருந்த மதுவை குடிக்க ஆரம்பித்து இருந்தான்.

இன்றைக்கு ஆருத்ரன் அதிகம் கோபப்படவில்லை. அவனின் புலம்பல்களுக்கு அவளை பார்த்ததும் அவள் பேசியதும் தான் காரணம். அவன் அவளின் உடை அலங்காரம் பற்றி பேசியது கூட அவள் மீது உள்ள கோபத்தின் வெளிப்பாடு தானே தவிர ஆருத்ரன் ஒன்றும் பழைய பஞ்சாங்கம் இல்லை.

அவனும் இந்த காலத்திற்கு ஏற்ப டிரன்டிங் உடை அணிபவன் தான் இப்போது கூட தலைமுடியை கலரிங் செய்து இருக்கின்றான். அவன் கோபத்தின் அளவு குறைந்து இருப்பதால் அடுத்து செய்ய வேண்டியவைகளை பேசி முடித்துவிடலாம் என்றே ரகுநந்தன் பேசினான்.

ஆருத்ரனின் அமைதியே ரகுநந்தனுக்கு சம்மதமாக எடுத்து கொண்டவன் "ஹீரோவை வெளியே தேடுவதை விட நீயே நடிச்சால் என்னடா?... அவளும் ஹீரோயினாக நடிக்கனும் என்று ஆசைப்படுறா பேசாமல் அவளையே நடிக்க வைத்தால் என்ன?... அவளை நம்ப பக்கத்தில் கொண்டு வந்துட்டா ஈசியாக அவகிட்ட உன் காதலை சொல்லிடலாம்" என்றான் ரகுநந்தன்.

தம்பியை பார்த்து பல்லைக்கடித்தவன் "எப்படி அவளை நடிக்க வைக்க சம்மதம் வாங்குவாய்?..." என்றான் ஆருத்ரன்.

"அந்த நாதன் கிட்ட பணத்தை கொடுத்தால் நடிக்க சம்மதிக்கப்போறார்" என்றான் ரகுநந்தன்.

கையில் இருந்த மதுவை மொத்தமாக வாயில் சரித்தவன் "எப்படி அவன் கிட்ட போய் பணம் கொடுத்து நடிக்க சம்மதம் வாங்கனுமா?...." என்றவன் கையில் இருந்த கண்ணாடி குடுவையை விசிறியடிக்க அது தரையில் பட்டு சில்லுசில்லாக உடைந்தது.

அதிர்ந்த ரகுநந்தன் "அண்ணா...." என்றான்.

"சிங்கம் எப்பவும் காட்டுக்கு இராஜா அது எப்பவும் இராஜாவாகத்தான் இருக்கும். தனக்கு தேவையானதை தன்னை தேடி வர வைக்கறவன்தான் இராஜாவாக இருக்கமுடியும்" என்றான் ஆருத்ரன்.

"அண்ணா என்ன பண்ணியிருக்க?... ஏன் என்கிட்ட எதுவும் சொல்லலை?..." என்றான் ரகுநந்தன்.

"என்ன பண்ணியிருக்கேன் என்று நாளை காலையில் தெரியும். அப்புறம் அவளுக்கு நடிக்க ஆசையா?... என்கிட்ட வருவா இல்லையா வந்ததும் அவளுக்கு நடிக்கனும் என்ற எண்ணமே வராத மாதிரி பண்ணுறேன்" என்றான் கோபமாக

"அண்ணா வேண்டாம் அவள் சின்ன பெண்ணுடா அவளை கஷ்டப்படுத்தாதே" என்றான்.

"சின்ன பெண்ணா?... அவளா?... சின்ன பெண்ணு செய்யுற வேலையா செய்து இருக்கா?... காலேஜ் படித்து முடித்து இருக்கா அவளுக்கு தெரியாதா?...." என்றான் கோபத்துடன்

"அண்ணா..." என்றான் குரலில் தயக்கத்துடன்

"இந்த கதையில் ஹீரோவும் நான் தான் வில்லனும் நான் தான். அதனால் நீ அவளை காப்பாற்ற நினைத்தால் இந்த ஆருத்ரனின் வில்லன் முகத்தை பார்க்க நேரிடும்" என்று விரல் நீட்டி எச்சரிக்கை செய்தவன் வேகமாக பால்கனி நோக்கி சென்று தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த சிகரெட் ஒன்றையும் லைட்டரையும் எடுத்தவன் வாயில் வைத்து பற்ற வைத்தவன் அந்த புகையை ஆழமாக இழுத்து வெளியிட்டான்.

அவனின் கொதித்துக்கொண்டு இருந்த உள்ளத்தை அந்த புகை அதிகப்படுத்தியதே தவிர குறைக்கவில்லை. தொடர்ந்து மூன்று சிகரெட்டை காலி செய்தவன் நான்காவதாக ஒன்றை வாயில் வைத்து பற்ற வைக்கப்போக அதை பிடுங்கி தூர எரிந்து இருந்தான் ரகுநந்தன்.

"இப்ப எதுக்குடா இவ்வளவு டென்ஷன் ஆகிற அதான் எல்லாம் சரியாக பிளான் போட்டு பண்ணிட்டு இருக்கியே அப்புறம் என்ன?..." என்றான் ரகுநந்தன்.

"என்னவா எல்லாம் தெரிந்தே இப்படி சொல்லுறியோடா என்னால் ஒரு நிமிஷம் கூட மறக்கமுடியலையோ எல்லாம் நினைவாகாமல் கனவாகவே போயிடுமோ என்று பயமாக இருக்குடா" என்றவனின் கண்களில் கண்ணீர் ததும்பியது.

எதற்கும் கலங்காதவன் கண்களில் கண்ணீரை கண்டதும் ஆருத்ரனை அணைத்து முதுகை தட்டிக்கொடுத்தவன் "ருத்ரா அப்படி எதுவும் நடக்காதுடா எதையும் யோசிக்காத நல்லதே நடக்கும் என்று நினைப்போம்டா இந்த முயற்சி கண்டிப்பாக எல்லாவற்றையும் சரியாக்கிடும்டா" என்று ஆறுதலாக பேசினான் ரகுநந்தன்.

ஆருத்ரனை அழைத்து சென்று அறையில் இருந்த கட்டிலில் படுக்க வைத்தவன் "தூங்குடா" என்றான் ரகுநந்தன்.

"எனக்கு எப்படிடா தூக்கம் வரும் கண்ணை மூடுனாலே அந்த நியாபகம் தான் வருது" என்றவனின் குரலில் அவனின் வலி தெரிந்தது.

"பாட்டி பாடுன பாட்டு என் போனில் இருக்கு அதை கேட்டா தூக்கம் வரும்" என்றவன் தன் போனை எடுத்து பாட்டை ஓடவிட்டான்.


கண்ணன் வந்தான் அங்கே
கண்ணன் வந்தான்

ஏழை கண்ணீரைக் கண்டதும்
கண்ணன் வந்தான்

கண்ணன் வந்தான்

தேடி நின்ற கண்களிலே
கண்ணன் வந்தான்

தீபம் ஒன்று கையில் கொண்டு
கண்ணன் வந்தான்


தேடி நின்ற கண்களிலே
கண்ணன் வந்தான்

தீபம் ஒன்று கையில் கொண்டு
கண்ணன் வந்தான்

கேட்டவர்க்குக் கேட்டபடி
கண்ணன் வந்தான்

கேள்வியிலே பதிலாகக்
கண்ணன் வந்தான்

தருமம் என்னும் தேரில் ஏறிக்
கண்ணன் வந்தான்

தாளாத துயர் தீர்க்கக்
கண்ணன் வந்தான்

கண்ணன் வந்தான் மாயக்
கண்ணன் வந்தான்

கண்ணன் வந்தான்



பாட்டியின் குரலில் பாடல்களை கேட்ட ஆருத்ரன் தன்னை மறந்து உறங்கி இருந்தான்.

சீக்கிரம் எல்லாம் சரியாக வேண்டும் கண்ணா என்று மனதில் வேண்டிய ரகுநந்தனும் அண்ணனின் அருகில் படுத்து உறங்கிப்போனான்.
 
Status
Not open for further replies.
Top