வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

கனவாகுமோ உந்தன் நினைவுகள் - கதை திரி

Status
Not open for further replies.
கனவு 16


சிறு பெண்ணின் குரல் சேகருக்கு பழக்கப்பட்ட குரல் என்பதால் தான் கவனித்திருந்தான். அது உறுதியாகியதும் வேகமாக எழுந்து அந்த பக்கம் சென்ற நேரத்தில்


"பாப்பா நீ ரொம்ப சின்ன பெண்ணா இருக்க இன்னும் ஒரு நாலைந்து வயசு பெரிசா இருந்திருந்தா நாங்க கொடுக்கும் காசுக்கு பெருமானம் கிடைக்கும்" என்று சொல்லி சிரிக்கவும்,


சேகர் சென்ற வேகத்தில் அங்கிருந்தவர்களை பார்க்க இரு கல்லூரி மாணவர்கள் அமர்ந்து புகைத்து கொண்டு இருந்தனர். அவர்கள் எதிரில் பத்து வயது சிறு பெண்ணும் ஐந்து வயது பையனும் நின்று இருந்தனர்.


அந்த சிறுவர்களை ஒரு பார்வை பார்த்தவன் அங்கு பிள்ளைகளை பார்த்து சிரித்துக்கொண்டு இருந்த மாணவர்கள் இருவரையும் ஓங்கி அறைந்திருந்தான் சேகர்.


இருமாணவர்களும் அடிவாங்கிய கன்னத்தை பிடித்துக்கொண்டு எழுந்து நின்றனர். பார்க்க படிக்கிற பசங்களா தெரியறீங்க. குழந்தை கிட்ட பேசற பேச்சா பேசறீங்க. இதே வார்த்தையை உங்க அக்கா தங்கச்சிக்கிட்ட பேசுவீங்களா?..." என்று சேகர் கோபமாக பேசவும், அந்த மாணவர்கள் தலைகுனிந்தனர்.


"சின்ன குழந்தைங்க பசிக்குது என்று கேட்கிறாங்க, உங்க கிட்ட காசு இருந்தால் கொடுக்கனும் இல்லை கொடுக்கப்பிடிக்கலை என்றால் இல்லை என்று அனுப்பி இருக்கனும் அதை விட்டு ச்சீ... என்ன வார்த்தை பேசறீங்க. இதை உங்க பெத்தவங்க எதிர்க்க பேசுவீங்களா?...." என்று கோபத்துடன் சேகர் பேசிக்கொண்டு இருக்கவும்


"சாரி சார் தெரியாமல் பேசிட்டோம் இனி அப்படி பேசமாட்டோம் என்றவர்கள் தங்கள் பாக்கெட்டில் இருந்து இரண்டு ரூபாய் எடுத்து கொடுக்கவும் அந்த சிறு பெண் கை நீட்டி வாங்கப்போக, "மகி..." என்ற அதட்டல் குரல் சேகர் கொடுக்கவும் சட்டென்று கையை பின்னால் கொண்டு சென்றது அந்த சிறு பெண்.


"நீங்க கொடுக்க வேண்டாம், இனி இப்படி பேசறதை பார்த்தால் அவ்வளவு தான் போங்க" என்று சேகர் கோபமாக சொல்லவும் அந்த மாணவர்கள் அந்த இடத்தில் இருந்து வேகமாக சென்றனர்.


"இவ்வளவு தூரம் வரக்கூடாது என்று உன் கிட்ட சொல்லி இருக்கேன் இல்ல மகி" என்று சேகர் கேட்கவும்


அந்த சிறு பெண்ணோ "அது... அண்ணா.... விளையாட.... வந்தோம்..." என்று மிரட்சியுடன் சொல்லவும்.


"விளையாடக்கூட இங்க வரக்கூடாது என்றுதானே சொல்லியிருக்கேன்" என்று கண்டிப்புடன் கேட்கவும் மகி தலைகுனிந்து நிற்கவும் அவளின் கைப்பிடியில் இருந்த சிறுவன்


"அண்ணா பசிக்குது" என்றான்.


அதுவரை இருந்த கோபம் மறைந்து அந்த பிள்ளைகள் மீது பச்சாதாபம் எழுந்தது. எப்படி இருக்க வேண்டிய பிள்ளைகள் இன்னைக்கு பசிக்காக பிச்சை எடுக்கும் அளவுக்கு ஆளாகியிருக்காங்க என்று மனம் வேதனை அடைய,


சிறுவனின் கைபிடித்து" வா..." என்று அழைத்து சென்றான் சேகர். அவன் பின் மகியும் சென்றாள்.


நடந்த அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த லட்சுமணனின் மனதில் இந்த குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்காமல் இவங்க அப்பா அம்மா என்ன செய்கிறார்கள் என்று தான் தோன்றியது.


அந்த மாணவர்கள் பேசியது கேட்டதும் இப்படியெல்லாம் பேசுவார்களா என்ற எண்ணம் வந்தது. அவன் வெளியுலகம் தெரியாமல் இருந்தாலும் அவனும் இளைஞன் தானே அந்த மாணவர்கள் பேசிய வார்த்தையின் பொருள் புரியாமல் இருக்குமா?...


சிறு பெண்ணிடம் இப்படி பேசுகிறார்களே இப்படியும் மாணவர்கள் இருக்கிறார்களா என்று அவர்கள் மீது கோபம் வந்தது. அவனுக்கு முன்பே சேகர் அடித்ததால் அமைதியாக இருந்து விட்டான். அந்த மாணவர்கள் சென்ற பின் சேகர் பேசியதை கேட்டவன், இந்த பிள்ளைகள் சேகருக்கு தெரிந்தவர்களாக இருப்பர் என்று நினைத்தான். அந்த சிறியவன் பசிக்குது என்றதும் லட்சுமணனின் கண்கள் கலங்கியது.


தங்கள் வீட்டில் இருந்த வரை பசி என்பதை அறிந்தது இல்லை. இங்கு வந்த சில நாட்களில் தான் உடல் நிலை சரியில்லாமல் போனதும் சாப்பிட முடியாமல் இருந்த போது தான் பசியை அறிந்து இருந்தான்.


இந்த சிறு குழந்தைகள் இந்த வயதில் அதனை அனுபவிப்பது எவ்வளவு கொடுமை என்று லட்சுமணன் மனம் வேதனை பட்டது.



ரோட்டோரம் இருந்த தள்ளு வண்டி கடைக்கு அழைத்து சென்று சிறுபிள்ளைகளுக்கு இட்லியை வாங்கி கொடுத்தான் சேகர்.


பிள்ளைகள் வேக வேகமாக உண்பதை வைத்தே பிள்ளைகளின் பசி தெரிந்தது. உண்டு முடிக்கும் வரை சேகரும் லட்சுமணனும் அமைதியாக இருந்தனர்.


பிள்ளைகள் உண்டு முடித்ததும் பணம் கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பவும்,


மகி தயங்கி நின்றாள்.


"என்ன மகி நிக்கிற வா" என்று அழைத்தான் சேகர்.


"அண்ணா... அம்மா... கூட நேற்று ராத்திரியில் இருந்து சாப்பிடலை" என்று தயங்கித்தயங்கி சொன்னாள் மகி.


அவளைத் தொடர்ந்து மகியின் தம்பி அருண் "அம்மாவை அப்பா அடிச்சிட்டார் அண்ணா, அதனால் அம்மாவுக்கு ஜுரம் வந்திடுச்சு. அம்மா படுத்திட்டே இருந்தாங்க. காலையில் இருந்து சாப்பிட எதுவும் தரலை பசி எடுத்திச்சி அதான் அக்காகிட்ட கேட்டேன். அக்கா இங்க கூட்டிட்டு வந்தாங்க" என்றான்.


"எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த மகி பசித்தால் ஆண்டாள் பெரியம்மா வீட்டுக்கு போக வேண்டியது தானே?..." என்று கோபத்துடன் கேட்டான் சேகர்.


"அது.. அண்ணா.. என்று மகி தயங்கினாள் என்றால் அந்த தயக்கம் எதுவும் அந்த சிறுவனுக்கு இல்லாமல் அப்பா அம்மாவை அடிக்கும் போது அக்கா அப்பாக்கிட்ட அடிக்காதீங்க அப்பா என்று சொல்லி அப்பா கையை பிடிச்சாங்க, அப்ப அப்பா அக்காவையும் அடிச்சிட்டார் அண்ணா. அப்புறம் அக்கா அழுதிட்டே பெரியம்மாவை கூட்டிட்டு வரேன் என்று சொன்னாங்க அதுக்கும் அக்காவை திரும்ப அடிச்சிட்டு இனி பெரியம்மா என்று அந்த வீட்டு பக்கம் போனால் காலை உடைத்து விடுவேன் என்று சொல்லி அடித்தார்" என்று கூறினான் சிறுவன் அருண்.


அதை கேட்டுக்கொண்டு இருந்த சேகர், லட்சுமணன் இருவரின் மனதிலும் கோபமும் வேதனை ஒருங்கே சூழ்ந்தது.


"மகி நீ தம்பியை கூட்டிட்டு போ நான் ஆண்டாள் பெரியம்மாவை அனுப்புறேன். அவங்க அம்மாக்கு சாப்பாடு எடுத்துட்டு வருவாங்க" என்று கூறியதும் மகி சற்று பயத்துடன் சேகரை பார்க்கவும் "உன் அப்பா எதுவும் சொல்லமாட்டார் நீ பயப்படாமல் போ" என்றான் சேகர்.


பிள்ளைகள் இருவரும் முன்னாள் நடக்க அவர்கள் பின் சென்ற சேகர் மெல்லிய குரலில் லட்சுமணனிடம் "இந்த குழந்தைகள் எப்படி வாழ்ந்து இருக்க வேண்டியவங்க தெரியுமா?... லட்சுமணன். பெரிய வீட்டில் பணக்கார வாழ்க்கை வாழவேண்டிய பிள்ளைகளை இப்படி பிச்சை எடுக்க வச்சுட்டானுங்க சில பொறாமை பிடித்த மனித மிருகங்கள்" என்று கோபத்துடன் சொன்னான்.


ஏற்கனவே அந்த சிறுவன் பேசிய பேச்சைக்கோட்டு இப்படியும் ஒரு தகப்பன் இருப்பானா என்ற கோபமும் குழந்தைகள் நிலை நினைத்து வேதனையில் இருந்தவனுக்கு சேகரின் பேச்சு அதிர்ச்சியை கொடுத்தது.


"என்ன சொல்லுறீங்க சேகர் இந்த பசங்க வசதியானவங்களா இப்ப எப்படி இப்படி?..." என்று புரியாமல் கேட்டான்.


"இந்த பசங்களோட அப்பாவும் ஒரு நடிகர் தான். கஷ்டப்பட்டு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து சின்ன வேடத்தில் நடிச்சிட்டு இருந்தார். ஒரு படத்தில் காமெடி சீன் நடிக்கிறவர் வேற பெரிய படத்தில் வாய்ப்பு கிடைத்ததால் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று சொல்லிட்டார்."


"டைரக்டர் திரும்ப புது காமெடி ஆக்டர் கால்ஷீட் வாங்க லேட் ஆகும் என்று புதிய ஆளையே நடிக்க வைக்கலாம் என்று நினைத்து தேடியபோது கண்ணில் பட்டவர் தான் வேலு. அவரை அழைத்து ஒரு சீன் சொல்லி நடிக்க சொன்னபோது இவரும் நல்லா நடித்து இருக்கார். அவரையே அந்த படத்தில் முழுநேர காமெடி நடிகனாக நடிக்க வச்சு அந்த படமும் நல்லா ஓடி அடுத்தடுத்து புதிய படங்கள் கிடைத்தது.


வருமானம் நல்லா வந்ததும் பெரிய வீடு வாடகைக்கு எடுத்துட்டு குடிபோனாங்க, பசங்களை பெரிய பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிக்க வச்சாங்க. இரண்டு வருடம் நல்லா இருந்தவர் வாழ்க்கையில் நண்பர்கள் என்ற பெயரில் இருந்த பொறாமை பிடித்தவர்கள் குடிக்க கற்றுக்கொடுத்துவிட அந்த பழக்கம் அதிகமாகி, சரியாக நடிக்கமுடியாமல் அவரின் படவாய்ப்புகளை நண்பர்கள் என்ற பெயரில் இருந்தவர்கள் தட்டி பரித்து விட்டார்கள்."


"படவாய்ப்பு சுத்தமாக நின்றதோடு குடியையும் விடமுடியாமல் சம்பாதித்த அனைத்தும் காலியாகி திரும்ப இந்த இடத்திற்கே வந்தாச்சு. இப்ப ஒரு வருஷமாக இந்த பசங்களோட அம்மா வீட்டு வேலைக்கு போய் சம்பாதித்து குடும்பத்தை பார்க்கறாங்க. குடிக்க பணம் இல்லை என்றால் அவங்ககிட்ட சண்டை போட்டு வாங்கிட்டு போய் குடிப்பார்."


"இப்ப அடிக்கவும் ஆரம்பித்திட்டார் போல, நல்லா வாழவேண்டிய குடும்பத்தை நாசமாக்கிட்டு இன்னிக்கு அவங்க எல்லாம் நல்லா வாழ்ந்திட்டு இருக்காங்க" என்று பேசிக்கொண்டே ஆண்டாள் அக்கா வீட்டின் முன் வந்து நின்றனர்.


விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டு இருந்தார் ஆண்டாள். லட்சுமணனின் கண்கள் ஊர்மிளாவை தேடியது, அவனின் கண்களில் அவள் படவில்லை. எங்க போனாள் என்று எண்ணிக்கொண்டு இருந்த நேரம் சேகரின் "அக்கா..." என்ற குரல் கேட்டதும் தன் எண்ணம் போகும் பாதையை நினைத்து தன்னையே மானசீகமாக குட்டிக்கொண்டான் லட்சுமணன்.



"என்ன சேகர் ரோட்டு பக்கம் போய் வந்திட்டிங்களா வாங்க சாப்பிட்டு போங்க..." என்று அழைத்தார்.


"அக்கா இருக்கட்டும் நான் முக்கியமான விஷயம் சொல்ல வந்தேன்" என்று கூறிய சேகர் மெல்லிய குரலில் நடந்ததை கூறவும் நெஞ்சில் கை வைத்து "அய்யோ..." என்றார் ஆண்டாள்.


"வீட்டின் உள்பக்கமாக திரும்பி அடியேய் உள்ள என்னடி பண்ணுற என்று குரல் கொடுத்தார். வீட்டின் உள்ளே ஓரமாக அமர்ந்து சிந்தனையில் இருந்த ஊர்மிளா காதில் தாயின் குரல் கேட்கவும் வேகமாக வெளியே வந்தாள்.


அருகில் வந்த மகளின் தலையில் குட்டு ஒன்றை வைத்த ஆண்டாள். "ஏன்டி சாயங்காலம் ஆனால் மகியையும் அருணையும் பார்க்க போவாய் இல்லையா?... இன்னைக்கு போகாமல் மூளையில் உட்கார்ந்திட்டு என்ன பண்ணிட்டு இருக்க?...." என்று கூறி மீண்டும் ஒரு குட்டு வைத்தார்.


வீட்டின் உள்ளிருந்து வெளியே வந்த போதே சேகர், லட்சுமணனை கண்டுவிட்டு இருந்தாள் ஊர்மிளா. அவர்கள் எதிரிலேயே தாய் திட்டியதோடு அடிக்கவும் அவளின் பார்வை லட்சுமணனை முறைத்தது.


எல்லாம் இவனால் தான் இவனை பார்த்ததில் இருந்து தான் இப்படி பைத்தியம் மாதிரி இவனை பற்றியே சிந்தனை பண்ணிட்டு இருக்கேன் என்று மனதுக்குள் லட்சுமணனை திட்டிக்கொண்டு இருந்தாள்.



"அடியேய் நான் இங்க பேசிட்டு இருக்கேன் உன் சிந்தனை எங்க இருக்கு போய் அந்த பாலை கொஞ்சம் சூடு பண்ணி எடுத்துட்டு வா. நான் மகி வீட்டுக்கு போறேன்" என்றவர் "சேகர் வாப்பா இன்னைக்கு அவனை ரெண்டில் ஒன்னு பார்க்கனும்" என்று முன் சொல்ல அவரின் பின் சேகரும் லட்சுமணனும் சென்றனர்.


ஊர்மிளாவுக்கு அப்போது தான் எதுவோ பிரச்சனை என்று தெரிந்து வேகமாக பாலை அடுப்பில் வைத்து சூடு செய்து சிறு தூக்கில் ஊற்றி எடுத்து சென்றாள்.


ஆண்டாள் அக்கா வீட்டில் இருந்து ஐந்து வீடு தள்ளி ஒரு சிறு சிமெண்ட் சீட் போட்ட வீட்டின் முன் இருந்த திண்ணையில் பயத்துடன் மகியும் அருணும் அமர்ந்து இருந்தனர்.


ஆண்டாள் வேகமாக அந்த வீட்டின் முன் சென்றவர் பிள்ளைகள் மிரட்சியுடன் வீட்டினுள் பார்ப்பதை கண்டதும்


"உங்க அப்பா உள்ள இருக்காரா?...." என்று கேட்கவும் "இருக்கார் பெரியம்மா இப்ப தான் எழுந்தார்" என்றாள் மகி.


கொஞ்சமாக திறந்திருந்த கதவை நன்றாக திறந்து உள்ளே சென்ற ஆண்டாள் கண்டது தட்டுத்தடுமாறி எழுந்து நின்ற வேலுவையும், ஓரமாக சுருண்டு படுத்திருந்த அவன் மனைவி கல்பனாவையும் தான். வேகமாக வேலுவின் முன் சென்று நின்றதும் அவரைக்கண்டு அதிர்ந்து அக்கா.... என்று தடுமாற்றத்துடன் வேலு அழைக்கவும், இரு கன்னத்திலும் ஓங்கி அறைந்திருந்தார் ஆண்டாள்.

 
கனவு 17



மேக்கப் செய்யும் பெண்கள் நிரஞ்சனியை அழைத்துக்கொண்டு மேக்கப் அறைக்கு சென்றனர். நிரஞ்சனியை அமரவைத்து ஒரு பெண் அவளின் முகத்தில் இருக்கும் மேக்கபை துடைத்தாள். இன்னொரு பெண் அவளின் தலைமுடியில் கைவைக்கவும்,


"என்ன செய்யப்போறீங்க?..." என்று கேட்டாள்.


"சார் இந்த கலரிங் இருக்கக்கூடாது என்றார் மேடம்" என்றாள்.


"இப்போ போட்டோ தானே எடுக்கறாங்க அதற்கு டோப்பா எதாவது போட்டு எடுக்கலாம் இல்லையா?..." என்று கேட்டாள் நிரஞ்சனி.


"சார் அப்படி எதுவும் செய்யக்கூடாது உங்க நேச்சுரல் எதுவோ அது மட்டும் தான் இருக்கனும் என்று சொன்னார் மேடம்" என்றாள்.



நேச்சுரல் அழகு வேண்டுமா அந்த உர்ரான் கோட்டானுக்கு அவனும் அவன் மூஞ்சியும், முகம் புல்லா தாடியும் மீசையும் கரடி மாதிரி வச்சிக்கிட்டு முறை மாப்பிள்ளை மாதிரி முறைச்சிட்டு இருக்கான். ச்சே... ச்சே... முறை மாப்பிள்ளையா இவன் முறைமாப்பிள்ளையாக இருந்தால் பின்னங்கால் பிடரியில் ஓடிடுவாங்க பொண்ணுங்க. அவனும் அவன் மூஞ்சியும், அப்படி முறைச்சிட்டு இருந்தான்.


நான் என்னவோ அவன் சொத்தில் பங்குக்கு வந்த மாதிரி கொலை வெறியில் பார்த்திட்டு இருந்தான். டாடிக்கு இந்த பணப்பிரச்சனை மட்டும் இல்லை என்றால் அவன் மூஞ்சியில் இரண்டு குத்து விட்டு நீயும் வேண்டாம் உன் பணமும் வேண்டாம் என்று போயிட்டு இருப்பேன்.


டாடியோட படம் ரிலீஸ் ஆகட்டும் இவன் பணத்தை கொடுத்திட்டு, அவன் முகத்தை பார்த்து நல்லா திட்டிட்டு போகனும் என்று கண்மூடி மனதில் கண்டபடி திட்டிக்கொண்டு இருந்தவளுக்கு சட்டென்று விரலில் வலி ஏற்படவும் கண்திறந்து பார்த்த நிரஞ்சனி அதிர்ந்து போனாள்.


"ஏய்.... என்ன பண்ணுற, யூ.. யூ..." என்று அதற்கு மேல் வார்த்தைகள் வராமல் கண்கள் கலங்கின. ஆசை ஆசையாக அவள் வளர்த்து இருந்த நகங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு இருந்தன. கடைசியாக வெட்டும் போது சிறு சதைப்பகுதியும் கட்டரில் மாட்டியதில் வலி வந்ததால் கண் திறந்து பார்த்து இருந்தாள் நிரஞ்சனி.


"சாரி மேடம் கொஞ்சம் மிஸ் ஆகிட்டது" என்று விரல் சதையை கட் செய்ததால் திட்டுவதாக நினைத்து அந்த பெண் மன்னிப்பு வேண்டினாள்.


"ஏய்... நீ என்ன பண்ணி வச்சு இருக்க, உன்னை யாரு நெயில் கட் பண்ணச்சொன்னது" என்று கோபத்துடன் கேட்டாள்.


"மேடம்... சார் தான் சொன்னார்" என்றாள் அந்த பெண்.


"சார் என்ன சொன்னாலும் செய்வியா?... என்கிட்ட கேட்கனும் என்ற பேஸிக் மேனர்ஸ் கூட இல்லையா?..." என்று திட்டவும், அதுவரை அவளின் தலை முடியை ஹேர் டிரையர் கொண்டு உலர்த்திக்கொண்டு இருந்த பெண்.


"மேடம் என்ன மேனர்ஸ் இல்லையா என்று கேட்கறீங்க. நாங்க சார் கிட்ட தான் வேலைக்கு சேர்ந்து இருக்கோம் உங்க கிட்ட இல்லை. அவர் சொல்லுற வேலையைத்தான் செய்வோம். இப்ப அவர் சொன்ன வேலையைத்தான் செய்கிறோம். நீங்க எங்களை இப்படி பேசினால் சார் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண வேண்டியிருக்கும்" என்றாள்.


"ஏய் என்ன பேசுற என் பர்மிஷன் இல்லாமல் என் நெயில் கட் பண்ணிட்டு இப்ப கம்ப்ளைன்ட் பண்ணுவியா நான் யார் தெரியுமா?.." என்று கோபத்துடன் பேசினாள் நிரஞ்சனி.


அந்த பெண் எந்த பயமும் இல்லாமல் "மேடம் நாங்க இங்க மேக்கப் கேர்ள்ஸாக வேலைக்கு வந்து இருக்கோம், நீங்க படத்தில் நடிக்க சான்ஸ் கேட்டு வந்து இருக்கிங்க, எங்க வேலை நிரந்தரமாகிவிட்டது. ஆனால் நீங்க இங்க செலக்ட் ஆனால் தான் இங்க தொடர்ந்து இருக்க முடியும். செலக்ட் ஆகலை என்றால் நீங்க இங்க இருக்கமுடியாது. இதில் நீங்க யார் என்று தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே நீங்க செலக்ட் ஆனாலும் உங்களுக்கு டைரக்டர் சொல்லுற மாதிரி மேக்கப் போடுற வேலை மட்டும் தான் எங்களது" என்று அந்த பெண் பேசவும்,


"ஏற்கனவே ஆருத்ரனின் செயலினை நினைத்து கோபத்தில் திட்டிக்கொண்டு இருந்த நிரஞ்சனிக்கு, மேக்கப் பெண் அவளை நீயாராக இருந்தாலும் எனக்கு என்ன என்பது போல் பேசியது அவளுக்கு அவமானமாக இருந்தது. , அந்த பெண்களின் மீதும் அந்த பெண்கள் அப்படி பேச காரணமானவன் மீதும் அதித கோபத்தில் வேகமாக எழுந்து அந்த அறையில் இருந்து வெளியேறினாள் நிரஞ்சனி.


அந்த நீண்ட பாதையில் கோபமாக நடந்த வந்தவளை அந்த பாதை முடியும் இடத்தில் அமர்ந்து இருந்த நாதனின் உதவியாள் பார்த்து விட்டு வேகமாக எழுந்து வந்தான். அவளின் முகமே ஏதோ பிரச்சனை என்பதை அறிவுறுத்த "மேடம் என்ன ஆச்சு?...." என்று வினவினான்.


"அவன் கிட்ட இப்பவே பேசனும்..." என்று வேகமாக நடக்கவும் அவள் பின்னே நடந்தவன் "அவன்னா யார் மேடம்?...." என்றான்.


"அதான் அந்த ப்ரொடியூசர் அவனைத்தான் பார்க்கனும்" என்றதும் அதிர்ந்து நின்றவன் சில வினாடிகளில் தன்னை சமாளித்துக்கொண்டு வேகமாக நிரஞ்சனியின் முன் சென்று வழிமறித்து "மேடம் நாதன் சார் சொன்னதை மறந்திட்டிங்களா?..." என்றதும்


அதுவரை கோபத்தின் உச்சியில் இருந்தவள் காற்று எடுத்து விட்ட பலூன் போல பொத்தென்று அங்கு போடப்பட்டு இருந்த சேரில் அமர்ந்தாள். நாதன் கூறிய அனைத்தும் மனதில் வர கைகளால் தலையை தாங்கி கண்மூடி அமர்ந்துவிட்டாள் நிரஞ்சனி.



அவள் அறையில் இருந்து வெளியேறியதும் அந்த மேக்கப் பெண்களில் ஒருத்தி "எதுக்குடி அப்படி பேசுன, வேலை செய்யும் இடத்தில் தேவையில்லாமல் பேசாதே என்று சொல்லி இருக்கேன் இல்லையா?.... இப்ப அவங்க போய் என்ன சொல்லப்போறாங்களோ..." என்று கவலைப்பட்டாள் அந்த பெண்.



"நான் ஒன்னும் தப்பாக பேசலை, அவங்க பேசினதுக்கு பதில் பேசினோன். நம்ப அமைதியாக இருந்தால் அவங்க இஷ்டத்திற்கு நடத்துவாங்க அதான் அப்படி பேசினேன். இப்ப வா நம்பள பத்தி தப்பு தப்பாக போட்டு கொடுக்கப் போறாங்க" என்று கூறி இருவரும் வெளியே வந்தனர்.


அதேசமயத்தில் தான் ஆருத்ரனும் ரகுநந்தனும் அந்த இடத்திற்கு வந்தனர். நிரஞ்சனி அமர்ந்திருந்த கோலத்தை கண்டதும் வேகமாக அருகில் வந்த ரகுநந்தன் "என்னாச்சி நிரஞ்சனி..." என்று கேட்டான்.


ரகுநந்தன் குரலில் கண் திறந்தவளின் கண்கள் லேசாக கலங்கியிருந்தன. பின் வந்து நின்ற ஆருத்ரனை பார்த்தவள் எழுந்து நின்றாள்.


மீண்டும் "என்னாச்சு நிரஞ்சனி?..." என்றான் ரகுநந்தன்


மேக்கப் செய்யும் பெண்கள் அந்த இடத்திற்கு வந்ததும் அவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு அமைதியாக நின்றாள் நிரஞ்சனி.


"என்ன நடந்தது?..." என்று அந்த மேக்கப் பெண்களிடம் சற்று கோபத்துடன் ஆருத்ரன் கேட்டதும், அந்த குரலில் பயந்த பெண்கள் இருவரும் நடந்ததை கூறினர்.


அந்த பெண்களின் பேச்சை கேட்க கேட்க ஆருத்ரனின் முகம் இறுகியது. அவனை ஓரப்பார்வையில் பார்த்த நிரஞ்சனிக்கு எப்படியும் என் மீதுதான் தவறு என்று திட்டப்போகிறான் என்பதால் தலைநிமிராமல் நின்றிருந்தாள்.


"ஆக நீங்க இங்க நிரந்தர வேலையில் இருக்கிறதால் புதுசா வரவங்களை என்னவென்றாலும் பேசலாம். அவங்க அனுமதி இல்லாமல் நகம் வெட்டலாம் ஏன் அவங்க கையைக்கூட வெட்டலாம் என்று சொல்லுறீங்க இல்லையா?..." என்றான் ஆருத்ரன்.


"சார்.... அது.... அவங்க தான் மரியாதை இல்லாமல் பேசினாங்க அதான்..." என்று தயக்கத்துடன் அந்த பெண் பேசவும்,


"அவங்க பேசினதுக்கு பதில் பேசினீங்க ஓகே, ஆனால் வேலை செய்யச்சொன்னது நான் தான் ஆனால் நீங்க செய்தது அவங்களுக்கு தானே, என்னென்ன செய்ய சொன்னேன் என்று அவங்க கிட்ட சொல்லிட்டு அவங்களுக்கு ஓகே என்றால் தானே நீங்க வேலை செய்ய ஆரம்பித்து இருக்கனும். நீங்க சொல்லியிருந்தால் அவங்களுக்கு பிடிக்காத பட்சத்தில் அவங்க இந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லி போயிட்டு இருப்பாங்க இல்ல..." என்றான் ஆருத்ரன்.


"சாரி சார்..." என்று இரு பெண்களும் கூறவும்,


"சாரி சொல்ல வேண்டியது என்கிட்ட இல்லை, அவங்க பர்மிஷன் இல்லாமல் நகத்தை வெட்டியதும் இல்லாமல் அவங்ககிட்ட பேசிய பேச்சுக்கு அவங்ககிட்ட சாரி கேளுங்க. அத்தோடு இன்னொரு முறை இப்படி உங்க மேல் கம்ப்ளைன்ட் வராமல் உங்க வேலையை மட்டும் பாருங்க. தேவையில்லாத பேச்சுக்கள் பேசினீங்க என்று தெரிந்தது அடுத்த நிமிஷம் உங்க வேலை போயிடும்..." என்று இறுகிய குரலில் பேசியவனின் கைமுஷ்டி இறுக்கத்திலேயே அவனின் கோபம் அறிந்த ரகுநந்தன்,


அப்பெண்களை பார்த்து சொல்லுமாறு ஜாடை காட்டினான்.


அப்பெண்கள் இருவரும் "சாரி மேடம்" என்று நிரஞ்சனியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர்.



அந்த பெண்கள் பின்னே நாதனின் உதவியாள் சென்றவன் சில அடிகள் சென்றதும் "ஹலோ..." என்று அப்பெண்களை அழைத்தவன் அவர்கள் திரும்பி பார்த்ததும்


" மேடம் யார் என்று உங்களுக்கு தெரியாதா?...". என்று கேட்டவனின் குரலில் கோபம் இருந்தது. அந்த பெண்கள் இல்லை என்று தலையாட்டவும்,


"டைரக்டர் நாதன் சாரோட பெண்ணு அவங்க" என்றதும் அந்த பெண்கள் முகத்தில் ஆச்சரியமும் பயமும் வந்தது.


"இனி அவங்க கிட்ட மரியாதையா நடந்துக்கங்க..." என்று கூறி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.


அதே நேரத்தில் ரகுநந்தன் போன் ஒலிக்கவும் சற்று நகர்ந்து சென்று பேசினான்.


இங்கே ஆருத்ரனும் நிரஞ்சனி மட்டுமே நின்று இருந்தனர். நிரஞ்சனியால் நம்பமுடியாமல் நின்று இருந்தாள். எப்படியும் தன் மீது பழிபோட்டு அந்த பெண்கள் எதிரில் திட்டப்போகிறான் என்று நினைத்திருக்க, அவனோ தனக்கு சப்போர்ட் செய்து இருக்கிறான் என்று நம்பமுடியாமல் நின்று இருந்தாள்.



அவனின் பாதங்கள் அவளை நெருங்கி வருவதை கண்டவள் மெல்ல தலைநிமிர்ந்து பார்த்த நேரத்தில் அவளின் கையை பிடித்து இருந்தான் ஆருத்ரன்.


ஆருத்ரனின் செயலில் அதிர்ந்தவள், அவனிடம் இருந்து கையை விலக்கப்பார்க்க அவளால் முடியவில்லை. "சார் கையை விடுங்க..." என்றாள்.


"ஏன் இந்த கையை நான் பிடிக்கக்கூடாதா?... எப்படியும் நடிக்கும் போது நடிகர்கள் உன்னை தொட்டுத்தானே நடிப்பாங்க. அப்போ அவங்க பிடிச்சா ஓகேவா..." என்றவன் அவளின் விரல்களை ஆராய்ந்து கொண்டு இருந்தான்.


"அது நடிப்புக்காக...." என்றாள்.


"ஓஹோ.... நடிப்புக்காக எங்கே வேண்டுமானாலும் தொடலாமா?..."


அதுவரை தந்தையின் பேச்சுக்காக அமைதியாக இருந்தவளை அவனின் பேச்சு அவளின் கட்டுப்பாட்டை மீறச்செய்ய அவனை முறைத்து இருந்தாள் நிரஞ்சனி.


"ஓஹோ.... அப்படி தொட வருபவர்களை இப்படி முறைச்சே எரிச்சிடுவியா?....." என்று இருபுருவங்களை உயர்த்தி ஆச்சரியமாக கேட்டான்.


அவனின் முகத்தை பார்த்திருந்தவள் இப்போதும் அவளின் முறைப்பையே காட்டினாள்.


"ஆமாம் கையில் இருந்த நகம் போனதுக்கா அவ்வளவு பீல் பண்ணிட்டு இருந்த, இந்த படம் முடிந்ததும் ஒரு பத்து பதினைந்து நாளில் திரும்ப வளர்ந்திடப்போகிறது" என்று பேசியவனின் இன்னொரு கை அந்த வெண்டை பிஞ்சு விரல்களை வருடின.


ஆருத்ரனின் பேச்சும் செயலும் கோபத்தை அதிகமாக்க அவனின் கையில் தன்னால் முடிந்த அளவுக்கு வலிக்கும்படி கிள்ளியிருந்தாள்.


"ஏய்ய்...." என்று வலியால் கைகளை உதறவும் அதுவரை அவன் பற்றி இருந்த அவளின் கை விடுதலை பெற்றது.


"என்கிட்ட வம்பு பண்ணுறவங்களுக்கு இப்படி கிஃப்ட் கொடுக்க வேண்டாமா அதுக்குத்தான் நகம் வளர்ப்பது" என்று சொல்லிக்கொண்டே மேக்கப் அறை நோக்கி வேகமாக சென்றாள் நிரஞ்சனி.


"ராட்சசி..." என்று சிவந்து சற்றே ரத்தம் கசிந்த இடத்தை வாயினால் ஊதிக்கொண்டு இருந்த நேரம் ரகுநந்தன் அருகில் வந்தான்.


அண்ணனின் கையை பார்த்தவன். "ஓஹோ.... வார் ஸ்டார்ட் ஆகிடிச்சிப்போல ஆரம்பமே அமர்க்களமாக இருக்கு" என்று புன்னகை செய்தான்.



"டேய் இரத்தம் வர அளவுக்கு கிள்ளிட்டு போயிருக்கா... இப்படி சிரிச்சுட்டு இருக்க" என்றான் பற்களை கடித்து கோபத்துடன் ஆருத்ரன்.


"அண்ணா உங்க இரண்டு பேர் சண்டைக்குள் என்னை வரக்கூடாது என்று சொல்லி இருக்க, அதனால் நான் வரமாட்டேன்" என்று கையெடுத்து கும்பிட்டு புன்னகை செய்தான் ரகுநந்தன்.


"அவளை என்ன பண்ணுறேன் பார்...". என்று மேக்கப் அறை நோக்கி போனவனின் கை பிடித்து தடுத்த ரகுநந்தன். "இப்ப வேலை நேரம் உங்க விளையாட்டை எல்லாம் இந்த படம் முடிந்த பிறகு விளையாடிக்கோங்க. இப்ப ராஜா அங்கிள் வந்திட்டார் வா போகலாம்" என்று ஆருத்ரனை அழைத்துக்கொண்டு தங்கள் அறை நோக்கி சென்றவர்களின் முகம் அதுவரை இருந்த புன்னகையை தொலைந்து இறுகி இருந்தது.



 
கனவு 18





இரு கன்னத்திலும் ஓங்கி வேலுவை அறைந்த போதும் மீனாட்சியின் கோபம் குறைவில்லை.


"பாவி நீ தான் குடிச்சி சீரழியற என்று பார்த்தால், இப்ப உன்னை நம்பி இருக்க ஜீவன்கள் வாழ்க்கையையும் சீரழிக்க ஆரம்பிச்சிட்டியா?... அப்படி என்னடா இருக்கு அந்த சாராயத்தில் இப்படி உன் வாழ்க்கையும் கெடுத்திட்டு உன் பொண்டாட்டி பிள்ளைகள் வாழ்க்கையும் கெடுத்திட்டு இருக்க?..."



"இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அவங்ககளை கொல்லுறதை விட கொஞ்சம் விஷம் வாங்கி கொடுத்து, அவங்களை ஒரேயடியாக கொன்னுட்டா உனக்கும் நிம்மதி அவங்களும் இப்படி கஷ்டப்பட வேண்டியதில்லை" என்று தன் கோபத்தை வார்த்தைகளாக கொட்டிக்கொண்டிருந்தார் மீனாட்சி.



வேலுவிற்கு மீனாட்சி அக்காவை தன் வீட்டினுள் கண்டதே அதிர்ச்சி தான். அவர் அவ்வளவு சீக்கிரம் யார் வீட்டிற்கும் போகவும் மாட்டார் பேசவும் மாட்டார். அவன் மனைவியும் பிள்ளைகளும் தான் மீனாட்சி அக்காவின் வீட்டிற்கு சென்று வருவர்.



இதுவரை வேலுவிடம் ஒரிரு முறை தான் பேசியிருக்கிறார். அதுவும் பிள்ளைகள் பற்றி தான் பேசியிருக்கிறார். இன்று வீட்டினுள் வந்ததும் இல்லாமல் அடித்தது வேறு வேலுக்கு அதிர்ச்சி என்றால் அவர் பேசிய பேச்சுக்கள் அவனின் நெஞ்சில் வலியை உண்டாக்கியது. காதலித்து கைபிடித்த என் கல்பனாவையும், என் பிள்ளைகளை நான் கொல்வதா?.... அந்த வார்த்தைகளே நெஞ்சில் வலிக்கச்செய்ய

"அக்கா...." என்றான் அதிர்வுடன்,



ஆனால் அடுத்தடுத்து ஆண்டாள் அக்காவின் பேச்சு அவனை உயிரோடு கொன்றது.



"அவளை அடிச்சி இப்படி அரை உயிராக ஆக்கியதும் இல்லாமல் அந்த குழந்தையை அடிச்சி என் வீட்டுக்கு போகக்கூடாது சொல்லியிருக்க, அதுங்க பயந்து என் வீட்டுக்கு வராமல் பசிக்குது என்று பார்க்கில் போய் பிச்சை எடுத்து இருக்குங்க" என்று ஆண்டாள் சொன்னதும்,



"அக்கா...." என்று அதிர்ச்சியில் கத்தியிருந்தான் வேலு.



ஆண்டாள் பேசிக்கொண்டு இருக்கும் போது பாலை எடுத்துக்கொண்டு உள்ளே வந்திருந்த ஊர்மிளா, அங்கு மூலையில் நினைவின்றி உடலை குறுக்கி படுத்து இருந்த கல்பனாவை கண்டவள், அங்கு சென்று கல்பனாவை தூக்கி மடி மீது சாய்த்து கொஞ்சம் கொஞ்சமாக பாலை அவள் வாயில் ஊற்றவும், கொஞ்சம் உணர்வு வந்த நேரம் ஆண்டாளின் பிள்ளைகள் பிச்சை எடுத்து இருக்குங்க என்ற பேச்சு காதில் விழவும்,


"அய்யோ....." என்று கத்திய கல்பனா ஊர்மிளா மீது இருந்து எழுந்து கொள்ள முயற்சித்துக்கொண்டே தன் பிள்ளைகளை தோடியது அவளின் பார்வை. கதவோரம் நின்ற பிள்ளைகளை கண்டு விட்டு கண்ணீருடன் கை நீட்டவும் தாயையே பார்த்துக்கொண்டு இருந்த பிள்ளைகள் அழுகையுடன் ஓடிவந்து அவளின் இருபக்கமும் அமர்ந்து கட்டிக்கொண்டன.


பிள்ளைகளை கட்டிக்கொண்டு வாய்விட்டு அழுதாள் கல்பனா. "அய்யோ... நான் குத்துக்கல்லாட்டும் இருக்கும் போதே என் குழந்தைகளை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளிட்டேனே" என்று முகத்தில் அறைந்து கொண்டு அழுதாள் கல்பனா.


வீட்டின் உள்ளே வராமல் வெளியே நின்று இருந்த லட்சுமணன், சேகர் இருவருக்கும் கல்பனாவின் பேச்சு கண்களை கலங்கச் செய்தன. தான் இருக்கும் போதே தன் குழந்தைக்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு விட்டுவிட்டேனே என்ற தாயின் பரிதவிப்பு தெரிந்தது.



பிள்ளைகள் பிச்சை எடுத்தார்கள் என்ற வார்த்தையிலேயே அதிர்ந்து நின்ற வேலுவின் பார்வையில், பிள்ளைகள் தாயின் மடியில் ஓடிவந்து அமர்ந்தது. கல்பனா வாய்விட்டு புலம்பி அழுவது, ஊர்மிளா தடுப்பது அனைத்தும் பார்வையில் பதிந்த போதும் கருத்தில் பதியவில்லை.


என் பிள்ளைகள் பிச்சை எடுத்தார்களா?... அந்த வார்த்தையிலேயே அவனை நிலைகுலையச் செய்தது என்றால், அடுத்து ஆண்டாள் அக்கா சொன்ன வார்த்தை அவனை உயிரோடு கொன்றது.



"பிச்சை எடுத்த பிள்ளை கிட்ட இரண்டு பொறுக்கி பசங்க என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?... பாப்பா நீ ரொம்ப சின்ன பெண்ணா இருக்க, இன்னும் ஒரு நாலைந்து வயசு பெரிசா இருந்திருந்தா நாங்க கொடுக்கும் காசுக்கு பெருமானம் கிடைக்கும் என்று சொல்லி இருக்கானுங்க" என்றதும், அதுவரை நின்று இருந்த வேலு அப்படியே தொய்ந்து அமர்ந்து விட்டான்.



தன் மகளிடம் இப்படி பேசியவனை கொன்று போடும் வெறி வந்து யார் அவன் என்று கோபத்துடன் கேட்பான் என்று அங்கிருந்தவர்கள் நினைத்திருக்க, வேலுவோ இப்படி கேவலமான பேச்சு கேட்கும் அளவு தன் பிள்ளைகளின் நிலைக்கு காரணம் தான் தானே என்று எண்ணியவன் "அய்யோ..... அய்யோ..." என்று வாய்விட்டு அலறியவன் அங்கிருந்த சுவற்றில் வேகமாக தலையை முட்டினான்.



அவனின் செயலைக் கண்டு சேகர், லட்சுமணன் வேகமாக உள்ளே வருவதற்குள் மூன்று நான்கு முறை சுவற்றில் முட்டியதில் நெற்றியில் இருந்த குருதி வெளிவந்திருந்தது. சேகரும் லட்சுமணனும் வேலுவை பிடித்த இரண்டு அடி பின்னால் அமரவைத்த போதும், மீண்டும் வேலு சுவற்றை நோக்கி சொல்லவும் இருபக்கமும் கொட்டியாக பிடித்து கொண்டனர்.



"வேலு அண்ணா என்ன காரியம் பண்ணுறீங்க" என்று கோபத்துடன் சேகர் கேட்கவும், "என்னை விடுங்க நானெல்லாம் உயிரோடு இருக்கக்கூடாது. நான் பாவி... நான் பாவி..." என்று அழுகுரலுடன் பேசிக்கொண்டே திமிறினான்.


"நீங்க செத்துப் போயிட்டா எல்லாம் சரியாகிடுமா?... அப்புறம் இந்த குழந்தைகள் நிலமை என்ன ஆகும் யோசித்து பாருங்க. இன்னைக்கு நடந்தது நிரந்தரமாகிடும்" என்று சேகர் சொன்னதும், திமிறி இருவர் கைகளில் இருந்து விடுபட்ட வேலு தாவிச்சென்று மனைவி அணைத்திருந்த பிள்ளைகளை இழுத்து அணைத்தவன் "இல்லை... இல்லை.... என் பிள்ளைகளை அப்படி ஒரு நிலைமையில் விட்டு போகமாட்டேன்," என்று பேசிக்கொண்டே பிள்ளைகளை இறுக்கி அணைத்து கொண்டான்.



"சாரிடா... சாரிடா... அப்பா தப்பு பண்ணிட்டேன், மன்னிச்சுடுங்கடா இனிமேல் அப்பா உங்களை அடிக்கமாட்டேன். உங்களின் இந்த நிலைமைக்கு அப்பா தான் காரணம் அப்பாவை அடிங்கடா" என்று சொல்லிக்கொண்டே இரண்டு பிள்ளைகளின் கையை பிடித்து தன் கன்னத்தில் அடித்தான்.



ஏற்கனவே அழுது கொண்டு இருந்த பிள்ளைகள் வேலு கைபிடித்து தன் கன்னத்தில் அறைந்து கொண்டது, அவனுக்கு வலித்ததோ இல்லையோ பிள்ளைகளுக்கு வலித்தது. அதில் மேலும் அழுகவும் அதுவரை அமைதியாக இருந்த ஆண்டாள் வேலுவிடம் இருந்து பிள்ளைகளை பிரித்து, "டேய் என்னடா பண்ணுற பசங்க பயந்து அழுவறாங்க, பிள்ளைகளை சமாதானம் செய்யாமல் இன்னும் அழ வைக்கிறாயோ, முதலில் இப்படி புலம்புவதை நிறுத்து. நெத்தியில் இரத்தம் வருது பார் அதை துடைச்சிட்டு, அரை உசிரா இருக்கிற இவளை முதலில் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போ" என்று பேசிக்கொண்டு இருக்கும் போதோ ஓடிச்சென்று ஒரு துணியை தண்ணீரில் நனைத்து எடுத்து வந்து வேலுவின் நெற்றியில் வழிந்த ரத்தத்தை துடைத்தாள் அவனின் மகள் மகி.


அந்த செயலில் மேலும் கண்ணீர் வந்தது வேலுவுக்கு, தன் தாயே தனக்கு மகளாக பிறந்து இருக்கிறாள் என்று தன் தாயின் பெயரையே தன் மகளுக்கு மகேஸ்வரி என்று வைத்திருந்தான். இப்போது மகள் அவன் தாயாக மாறி அவனின் காயத்தை வலிக்காமல் துடைத்துக்கொண்டு இருக்கிறாள்.



இந்த அன்பு பிள்ளைகளை இந்த நிலைக்கு தள்ளிவிட்டேனே என்று அவன் மீதே அவனுக்கு கொல்லும் வெறி வந்தது. ஆனால் தனக்கு தானே தண்டனை கொடுப்பதை விட இப்போது இந்த குழந்தைகளை நன்றாக வாழ வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மகளை அணைத்து தலையில் அழுத்தமான ஒரு முத்தத்தை வைத்து நிமிர்ந்த போது, மகனின் ஏக்கப்பார்வை கண்ணில் படவும், இங்கு வா என்று கையசைக்க ஓடி வந்து மடியில் அமர்ந்தவனின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தான் வேலு.




கன்னத்தை துடைத்த அருண், "அப்பா நாத்தம்" என்று சொல்லவும், வேலுவின் முகம் சங்கடத்துடன் குனிந்தது. அதனை பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் முகத்தில் மெல்லிய முறுவல் வந்தது.



"வேலு இருட்டிடுச்சி அப்புறம் டாக்டரை பார்க்க லேட்டாகிடும். நீ சீக்கிரம் கிளம்பு, பிள்ளைகளை என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்" என்றவர் தன் இடுப்பில் செருகி இருந்த சுருக்குப்பையை எடுத்து அதில் இருந்து சில பத்து ரூபாய் தாள்களை வேலுவிடம் நீட்டி, "அவளால் நடக்கமுடியாது அதனால் ஒரு ரிக்சா வண்டியை கூட்டியாந்து அதில் கூட்டிட்டு டாக்டர் கிட்ட போய் வா" என்றார்.




"அக்கா...." என்று பணத்தை வாங்க தயங்கினான் வேலு.




"இது தயங்குற நேரம் இல்ல வேலு, பணத்தை பிடி அவள் நல்லா இருந்தால் தான் பிள்ளைகளையும் உன்னையும் பார்க்க முடியும். உன் அக்காவாக என்னை நினைத்தால் வாங்கிக்க" என்று பணத்தை வேலுவின் கைகளில் திணித்தார் ஆண்டாள்.



கையெடுத்து வேலு கும்பிடவும், " என்ன பண்ணுற வேலு " என்று கையை தட்டிவிட்டவர், "இவங்க தான் பசங்களை பார்க்கில் பார்த்து இருக்காங்க. தப்பா பேசினா பசங்களையும் அடித்து துரத்தி இருக்காங்க. இவங்களுக்கு தான் நீ நன்றி சொல்லனும்" என்று சேகர், லட்சுமணனை காட்டி சொல்லவும்,



பட்டென்று சேகர், லட்சுமணன் காலில் விழுந்து விட்டான் வேலு. சட்டென்று சேகரும் லட்சுமணனும் விலகி நின்றனர்.


"வேலு அண்ணா என்ன பண்ணுறீங்க... எழுந்திருங்க..." என்று கைபிடித்து எழுப்பினான் சேகர்.


"நீங்க அந்த இடத்தில் இல்லாமல் இருந்து இருந்தால் அந்த பொறுக்கிங்க இன்னும் என்ன பேசியிருப்பாங்களோ, என் குழந்தைங்க இன்னும் என்னென்ன வார்த்தைகள் கேட்டு இருக்குமோ, தெய்வம் போல என் பிள்ளைகளை காத்துயிருக்கிங்க" என்று மீண்டும் கையெடுத்து கும்பிடவும்,


"அய்யோ வேலு அண்ணா கையை கீழே போடுங்க" என்று கையை விலக்கியவன் "நீங்க முதலில் அக்காவை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போங்க. நான் போய் ரிக்சா வண்டியை கூட்டிட்டு வரேன்" என்று அங்கிருந்து சேகர் வெளியேற பின்னே லட்சுமணன் சென்றான்.



தெரு முனையில் இருந்த ரிக்சா வண்டியை அழைத்து வந்து விட்டு இருவரும் தங்கள் அறை நோக்கி சென்றுவிட, ஆண்டாள் அக்காவும், ஊர்மிளாவும் வேலுவையும் கல்பனாவையும் அனுப்பி விட்டு பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தங்கள் வீட்டுக்கு சென்றனர்.



அறைக்கு வந்த சேகர் லட்சுமணனுக்கு எதுவும் பேச தோன்றவில்லை. அமைதியாக அறைக்கு வெளியில் இருந்த மாடி கைபிடி சுவற்றில் சாய்ந்து வானத்தில் ஒளிர்ந்து கொண்டு இருந்த நிலவை பார்த்துக்கொண்டு இருந்தனர்.



எவ்வளவு நேரம் அப்படி இருந்தார்களோ அவர்களுக்கு தெரியாது. முதலில் நினைவுக்கு வந்தது சேகர் தான். "லட்சுமணன் நான் போய் ஊருக்கு எஸ் டிடி பேசிட்டு அப்படியே டிபன் வாங்கி வந்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.



அறைக்குள் வந்த லட்சுமணன் தன் பொட்டியில் இருந்த டைரியை எடுத்தவன், அன்றைய ஒரு நாளில் அவனுக்கு கிடைத்த அனுபவங்களை எழுதினான். முதலில் அவன் கைகள் டையிரியில் எழுதியது ஊர்மிளா என்பதைத்தான். அதுவரை சோகத்தில் இருந்த முகம் புன்னகை சிந்தியது. அவளுடனான பேச்சுக்கள், அவள் அன்று தெருவில் செய்த வம்பு சண்டை என்று எழுதியவன், அதன் பிறகு நடந்தவைகள் அனைத்தும் சுருக்கமாக எழுதி முடித்தவன் டையிரியை பெட்டியில் வைத்து விட்டு, அன்றைய ஒரு நாளில் எத்தனை விதமான மனிதர்களை சந்தித்தும், சேகர் மூலமாக கேட்டு இருக்கிறான். சுயநலவாதிகள் ஒரு புறம் என்றால் சுயநலமில்லாத நாலு பேருக்கு உதவும் நல்லவர்களும் இருக்கின்றனர் என்ற சிந்தனையில் இருந்தவனுக்கு தன் வாழ்க்கையும் சுயநலவாதியின் பிடியில் சிக்கப்போகிறது என்று தெரியாமல் போனது.
 
கனவு 19




ஆருத்ரனை கிள்ளிய பிறகே தன் நிலை உணர்ந்தவள் திடத்தை வரவழைத்து பேசி சென்றவளுக்கு உள்ளுக்குள் பயம் தொற்றிக்கொண்டது. என்ன காரியம் செய்து இருக்கேன், அவனை காயப்படுத்தி விட்டு வந்து இருக்கேன். இதனால் நடிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டாள் டாடிக்கு என்ன சொல்வேன் என்ற கலக்கத்துடன் அறைக்குள் நுழைந்தாள் நிரஞ்சனி.


மேக்கப் பெண்கள் இவளை கண்டதும் பயத்துடன் எழுந்து நின்று "சாரி மேடம், நீங்க யாரு என்று தெரியாமல் அப்படி பேசிவிட்டேன் சாரி மேடம்" என்று மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டனர்.


"நான் பெரிய இடத்து பெண் என்றதும் இந்த மரியாதையா?... அப்ப எந்த பேக்கிரவுண்டும் இல்லாமல் வந்தால் எப்படியென்றாலும் பேசிவீங்களா?..." என்று கேட்டாள்.


. "அப்படி இல்ல மேடம் இதுக்கு முன்னாடி வேலை செய்த இடத்தில் எல்லாம் எங்களை மதிக்கவே மாட்டாங்க மேடம். அவங்க அடிமை மாதிரி தரக்குறைவா நடத்துவாங்க பேசுவாங்க அதான். இங்கேயும் அதுமாதிரி பேச்சு வாங்காமல் எதிர்த்து பேசினால் அப்படி நடந்துக்க மாட்டாங்க என்று தான் அப்படி பேசினேன் மேடம்... சாரி மேடம்...." என்று அந்த பெண் சொல்லவும்,



நிரஞ்சனிக்கு சற்று பரிதாபமாக இருந்தது. "ஓகே இனிமேல் எதை செய்தாலும் முன்னாடியே சொல்லிட்டு செய்யுங்க" என்றவள் அடுத்து என்ன செய்யனும் என்று அவர்கள் வேலை பற்றி பேசி திசை திருப்பினாள்.



"மேடம் உங்க காலில் வளர்ந்து இருக்கும் நெயிலையும் ரிமூ பண்ணனும்" என்று தயக்கத்துடன் ஒரு பெண் சொல்ல அதற்கு தலையாட்டி "செய்யுங்க" என்றாள்.



"உங்க தலைப்பின்னிட்டு அந்த டிரஸ் போட்டு விடனும்" என்று அங்கிருந்த உடைகளை காட்டவும்,



"வாட்... " என்று எழுந்து நின்று விட்டாள் நிரஞ்சனி. ஏனெனில் அங்கு இருந்தது பாவாடை தாவணி உடைகள், அதுவும் பழைய காலத்தில் அணிவது போல காட்டன் துணிகளில் பெரியப்பெரிய பூ டிசைனில் இருந்தது.


அதை கண்டதும் அதிர்ச்சி மட்டும் அல்லாமல் அவள் கல்லூரியில் சேர்ந்த புதிதில், அவளின் பாட்டி ஊரில் இருந்து வந்த போது சில பாவாடை தாவணி, சுடிதார் என்று உடைகள் எடுத்து வந்திருந்தார். அதை இவளிடம் ஆசையாக பாட்டி கொடுத்த போது அதை தூக்கி எறிந்து "நான் என்ன உங்களை போலவும், உங்க பெண்ணை போலவும் பட்டிக்காடு என்று நினைத்திங்களா" என்று சொல்லி இருந்தாள்.



நாதன் ஒரு படி மேலே போய் அந்த உடைகளை வெளியே போட்டு எரித்ததோடு "என் மகளுக்கு உடை எடுத்து கொடுக்க நீங்க யாரு?..." என்று கேட்டவர், அன்றே அழைத்து சென்று விதவிதமான மாடர்ன் உடைகளை எடுத்து கொடுத்து இருந்தார்.



நினைவுகளில் இருந்தவளை "மேடம்... மேடம்..." என்ற குரல் கலைத்தது. "மேடம் இந்த படத்தில் உங்களுக்கு கிராமத்து பெண் ரோல்" என்றாள்.



"ஓ..." என்றவள் அமைதியாக அமர்ந்து விட்டாள். இங்க வந்ததிலிருந்து நடக்கிறது எல்லாம் ஏன் எனக்கு அம்மா, பாட்டியை ஞாபகம் செய்யுது என்று நினைத்தவளை மீண்டும் மேக்கப் செய்யும் பெண் குரல் கலைத்தது. அவளின் கேள்விக்கு பதில் அளித்தவளின் எண்ணங்கள் இப்போது ஆருத்ரன் இடம் சென்றது.



எல்லாம் அவன் வேலை தான் வேண்டும் என்றே கிராமத்து கேரக்டர் கொடுத்து இருக்கான். அப்படி என்ன அவனுக்கு என்மேல் கோபம் என்று தெரியலை, வந்ததில் இருந்து முறைச்சான், அப்புறம் கொலை வெறியில் பார்த்தான். இந்த பெண்ணுங்க கிட்ட எனக்கு சப்போர்ட் பண்ணுறானே என்று நினைக்கும் போது என் பர்மிஷன் இல்லாமல் கையை பிடிக்கிறான்.


சரியான திமிர் பிடித்தவன், உர்ரான் கேட்டான், கரடி என்று திட்டிக்கொண்டு இருந்தாள் நிரஞ்சனி.


இங்கே அறைக்கு வந்து டைரக்டர் ராஜா உடன் பேசிக்கொண்டே குளிர்பானம் குடித்தவனுக்கு புரையேறியது. அவன் தலையை தட்டிய ரகுநந்தன். "செம டோஸ் விட்டுட்டு இருக்காப்போல" என்று புன்னகை செய்தான்.


ஆருத்ரன் முறைக்கவும் "போதும் ருத்ரா, உன் முறைப்பை வேறெங்காவது காட்டு" என்றவன், "அங்கிள் இங்க என்ன நடந்தது தெரியுமா?..." என்று நடந்தவைகளை ராஜாவிடம் கூறினான் ரகுநந்தன்.


"அச்சச்சோ.... ரத்தம் வந்ததா மருந்து போட்டியா ருத்ரா" என்றார்.


"வரும்போதே செக்யூரிட்டி கிட்ட இருந்த முதலுதவி பாக்ஸில் இருந்த மருந்தை போட்டுட்டு தான் வந்தோம் அங்கிள். ஆனால் எதுக்கும் ஒரு இன்ஜெக்ஷன் போடுறது நல்லது என்று நினைக்கிறேன். இவன் அவளை படுத்தும் பாட்டுக்கு இனி அடிக்கடி இப்படி ரணகளம் நடக்கும்" என்றதும்



"ஹாஹாஹா.... என்று வாய்விட்டு சிரித்தார் ராஜா. பின் "யாரோட பெண்ணு அவள், அது ரத்தத்தில் ஊரிய குணம் அதை யாராலும் மாற்றமுடியாது. எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதை ருத்ரா" என்று கூறி சிரிக்கவும்,


"இவன் தான் ஓட்டுறான் என்றால் நீங்களுமா அங்கிள்" என்றவனின் முகத்திலும் புன்னகை.


சிறிது நேரம் புன்னகையுடன் மூவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.


பின் ராஜா தான் சென்று வந்ததை பற்றி பேசவும் இப்போது புன்னகை மறைந்தது. தன் போனை எடுத்த ராஜா அதில் வீடியோவை ஓட விட அதில் தெரிந்த முகத்தை கண்டதும் ஆருத்ரன், ரகுநந்தன் கண்கள் லேசாக கலங்கின.


வீடியோ முழுவதும் பார்த்து முடித்ததும் சில கணங்கள் அங்கே அமைதி நிலவியது. அதனை ஆருத்ரனே கலைத்தான்.


"அங்கிள் இதுக்கு மேல நாம் லேட் பண்ண வேண்டாம். சீக்கிரம் எல்லாத்தையும் முடிக்கனும் அதனால் இன்னும் ஒரு வாரத்தில் சூட்டிங் ஸ்டார்ட் பண்ணிட முடியுமா?..." என்று கேட்டான்.



"பண்ணிடலாம் ருத்ரா எல்லாம் ரெடியாக இருக்கு. படம் ஆரம்பித்து விட்டால் டே அண்ட் நைட் என்று ஒரு மாதத்தில் எடுக்க வேண்டியது எடுத்திடலாம். பாட்டு எல்லாம் கடைசியா எடுத்துக்கலாம், மியூசிக் டைரக்டர் கிட்ட கொஞ்சம் சீக்கிரம் தரும்படி கேட்கனும்" என்றார்.


"ஓகே அங்கிள் அப்ப அந்தாளை வரச்சொல்லிடலாமா?..." என்றான்.


"அந்தாளுக்கு மெதுவாக கொடுக்காலாம் என்று சொன்னியே அண்ணா" என்று கேட்டான் ரகுநந்தன்.



"இன்னும் ஒரு வாரம் இழுத்தடித்து கொடுக்காலாம் என்று தான் நினைத்தேன், ஆனால் இப்ப நம்ப வேலை முடியும் போது அந்த ஆள் வேலையும் முடியனும். அப்பத்தான் நம்ப அடுத்த ஸ்டெப் எடுத்து லாக் பண்ண முடியும்" என்றவனின் குரலில் ரெளத்திரம் வந்திருந்தது.


"ருத்ரா ரிலாக்ஸ் நீ கோபத்தை குறை நம்ப பிளான் படி எல்லாம் நடக்கும் என்றார் ராஜா.



"எப்படி அங்கிள் முடியும், அவனை நினைத்தாலே கொலை பண்ணும் வெறி வருது. எல்லாரும் சேர்ந்து என் கையை கட்டி போட்டுட்டிங்க, இல்லைனா நீங்க விஷயத்தை சொன்ன அன்னைக்கே அவனை இல்லாமல் ஆக்கியிருப்பேன்" என்றவனின் குரலில் ரெளத்திரம் குறையாமல் இருந்தது.



"அண்ணா தாத்தாக்கள் எவ்வளவு தூரம் சொன்னாங்க, ஆத்திரமோ அவரசரமோ இல்லாமல் இந்த வேலை செய்யனும், நீ செய்யுற காரியத்தால் வேற யாரும் பாதிக்கப்படக்கூடாது என்று சொல்லி தானே அனுப்பினாங்க. டென்ஷன் ஆகதோ" என்று ஆருத்ரனின் கைபிடித்து ஆறுதல் சொன்னான் ரகுநந்தன்.



"ருத்ரா நீ இவ்வளவு எமோஷனல் ஆகுவாய் என்று தெரிந்து இருந்தால் உன்கிட்ட இந்த விஷயத்தை சொல்லி இருக்க மாட்டேன். அன்னைக்கு நம்ப மீட் பண்ணும் போது நீ நிரஞ்சனியை பார்க்க நேர்ந்ததால் தான் இதை நான் உன் கிட்ட சொன்னேன், இல்லை என்றால் உன் அப்பாகிட்ட தான் நான் பேசுவதாக இருந்தேன். எல்லாம் பார்த்துக்கலாம் ருத்ரா நம்ப அவசரப்பட வேண்டிய நேரம் இது இல்லை."


"நிதானிக்கவேண்டிய விஷயம், இதில் நிரஞ்சனியும் இருக்கா. இந்த விஷயம் அந்த நாதனுக்கு கொஞ்சம் தெரிந்தால் கூட அவன் மேப்பம் பிடித்து அதனால் நிரஞ்சனிக்கு எதாவது பாதிப்பு வந்திட்டால் என்ன பண்ணுறது. அதனால் இன்னும் இரண்டு மாதம் உன்னை கட்டுப்படுத்திக்கோ" என்றார் ராஜா.


"அவனால் என்ன பண்ண முடியும் அங்கிள். அவன் இப்போ பல்லு பிடுங்கின பாம்பு" என்றான் கோபத்துடன் ஆருத்ரன்.


" இல்லை ருத்ரா, அவன் குள்ளநரி நிரஞ்சனியை வச்சு அவன் காரியத்தை சாதிக்க முடியும். இப்பவோ அவன் பணத்தேவைக்கு அவளை நடிக்க வைக்கவில்லையா, அதுவும் நம்ப போடும் அனைத்து நிபந்தனைகளுக்கும் ஓகே சென்னதிலேயே தெரியவில்லையா அவன் குணம். அதனால் பொறுமை அவசியம்."


"இப்போ நம்ப வேலையை பார்க்கலாம். நாதனை எப்ப வரச்சொல்வது என்று பேசிவிட்டு வாங்க, நான் போய் நிரஞ்சனி ரெடியா என்று பார்த்து என் வேலையை பார்க்கிறேன்" என்று எழுந்து அந்த அறையில் இருந்து வெளியேறினார் ராஜா.


"அந்த பைனான்ஸ் மேனேஜரை எல்லா பேப்பர்ஸும் எடுத்திட்டு வரச்சொல்லுடா" என்று தம்பியிடம் கூறிவிட்டு, தன் இருக்கையில் சாய்ந்து கண்மூடியவனின் மனதில் ராஜா அங்கிள் சொன்னதே ஓடியது. அவர் சொல்வது போல் அவசரப்பட்டு அந்த குள்ளநரிக்கு எதாவது தெரிந்தால் நிரஞ்சனியை வைத்து எதை வேண்டுமானாலும் செய்யலாம்.. அப்படி எதாவது என் நிரஞ்சனிக்கு ஆபத்து வந்தால் என்னால் தாங்க முடியுமா... முடியாது.. என் நிரூ செல்லத்திற்கு எந்த துன்பமும் நெருங்க விடமாட்டேன். அவள் என் தேவதை அவளை பாதுகாக்க வேண்டும். கூடிய விரைவில் என்னிடம் அவளை கொண்டு வந்து விட்டு அதன் பிறகு அந்த குள்ளநரிக்கு இருக்கு. இன்னைக்கு அதன் முதல் படியாக அந்த குள்ளநரிக்கு பெரிய வலை காத்திட்டு இருக்கு அதில் மாட்டினால் அவன் உயிர் போகும் வரை அதிலிருந்து வெளியே போக முடியாது என்று மனதிற்குள் கருவியவன் கண்களை திறந்தான்.


அவனையே பார்த்துக் கொண்டு இருந்தான் ரகுநந்தன்.


"என்னடா?....."


"உன் திட்டம் எல்லாம் சரியா நடக்கும், மேனேஜர் கிட்ட பேசிட்டேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் எல்லாம் எடுத்திட்டு வந்திடுவார், இப்போ நம்ப போட்டோ சூட் பார்க்க போகலாமா" என்றான் ரகுநந்தன்.


"அவன் முதுகில் பாசமாக ஒரு அடி வைத்தவன் வாடா, அவள் எப்படி இருக்கா என்று பார்க்கனும்" என்று புன்னகையுடன் முன்னே நடக்க அவன் பின் வந்த ரகுநந்தன் "பார்த்துடா இருக்கிற கோபத்தில் கேமராவை எடுத்து உன் தலைமீது போடப்போறா" என்று சொல்லிக்கொண்டே செல்ல,


"பார்த்துக்கலாம் வாடா, தம்பி நீ எதுக்கு இருக்க, பாட்டி சொல்லுவாங்க இல்ல பழமொழி தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று அதுமாதிரி நீ வந்து கேமராவை உன் தலையில் தாங்கி என்னை காப்பாற்றிட மாட்ட" என்றதும்,


"அடேய் என்னை விடுங்கடா, உங்க ரெண்டு பேருக்கும் இடையே நான் தான் மாட்டினேனா, நான் மும்பைக்கு போறேன்" என்று திரும்பி நடந்தவனை ஒரே எட்டில் பிடித்து இழுத்து சென்றான் ஆருத்ரன். இருவர் முகத்திலும் புன்னகை பூத்தது.
 
Status
Not open for further replies.
Top