வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

கள்வனின் தீராக்காதல் (KT) கதை திரி

Status
Not open for further replies.
கள்வனின் தீராக்காதல் !

கள்வன் : 1


விரைவுச் செய்தி (பிரேக்கிங் நியூஸ்)


‘பிரபல தொழிலதிபரான ஆர்.எஸ் குழுமத்தின் நிறுவனர் சத்தியவதனி இன்று காலை அவரது வீட்டில் மாரடைப்பால் காலமானார்...’ என்று செய்தியும் அவரின் புகைப்படமும் தான் இப்போது அனைத்து செய்தி ஊடங்களிலும் சமூக வலைதளங்களிலும் பகிரப்படும் பரபரப்பு தகவல்.


தமிழ்நாட்டில் மட்டுமில்லாது இந்தியா முழுவதும் இச்செய்தியே ஒலிப்பரப்பாக இதனைக் கண்ட மக்களின் ஒரு சிலர் சந்தோஷப்பட, ஒரு சிலர் வேதனைக் கொண்டு அவரின் நிலையை எண்ணி கவலையடைந்தனர்.


அன்றைய நாளின் விடியலே சத்தியவதினியை பற்றிய செய்தி தான். அவரின் சாகசங்கள், விருதுகள், தொழில்கள், அவர் செய்த நற்பண்புகள் இப்படி அவரை பற்றி தெரிந்தவர்கள் கூறுவது தான் ஊடங்களில் பரபரப்போடு பேசிக் கொண்டிருந்தது.


சத்தியவதனி இறந்த நொடியே தகவல் காவல் துறை அதிகாரிகளின் மூலம் இலண்டனின் இருக்கும் அவரின் மகன் விஜயநேத்ரனுக்கு சென்றடைந்தது.


இருள் சூழப் போகும் நேரம் பிரேத பரிசோதனை அனைத்தும் முடியும் தருவாயில் அந்த மருத்துவமனைக்குள் காரில் வந்து இறங்கினான் விஜயநேத்ரன்.


அவர்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சிலர் அங்கே இருக்க அவனைக் கண்டதுமே அவனருகில் செல்ல, அதற்கு முன் சத்தியவதனியின் மகன் இவன் தான் என்பது புரிந்ததும் செய்தியாளர்கள் அவனை சூழ்ந்துக் கொண்டனர்.


அவனிடம் மாறிமாறி கேள்வி கேட்க, ஒரு கேள்விக்கு கூட பதில் கூறாத அந்த ஆறடி ஆண்மகன் தன்னை சூழ்ந்திருந்தவர்களை பார்வையாலே எரித்து விட்டு உள்ளே நுழைந்தான். மற்றவர்கள் அவனின் முன் நின்று அவனையே கேள்வி கேட்பது என்பது பிடிக்காத ஒன்று..!


அவன் பேசாமல் போனதுக்கு கூட செய்தியாளர்களோ ஒன்றுக்கு இரண்டாக ஏதேதோ பேசி ஊடங்களில் பரப்பினர்.


சத்தியவதினியை வைத்திருக்கும் அறைக்குள் வெளியே காவல் அதிகாரிகள் சிலர் நிற்க, அவர்களின் அருகில் விஜயநேத்ரன் வந்து நின்றான்.


“சார்..இவர் தான் எங்க மேடம்மோட சன் விஜயநேத்ரன்...” என்று அருகிலிருந்தவர்கள் அவனை அறிமுகப்படுத்த,


“இப்போ தான் உங்க அம்மாவோட போஸ்ட்மாடம் முடிஞ்சது. ரிப்போர்ட் இன்னைக்கே இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்திரும். உங்களுக்காக தான் வெயிட்டிங்...”


“தேங்க் யூ. ஐ வான்ட் டூ சீ மை மாம்...” என தன் செவ்விதழ் திறந்து முதல் சொல் கணீரென உதிர்த்தான். எப்போதுமே விஜயநேத்ரனின் இதழிலிருந்து உதிரும் சொற்கள் முன் நிற்பவர்களை ஒரு நொடி திடுக்கிட்டு அதிர வைப்பது போல் தான் இருக்கும்.


“ஓகே. நீங்க போங்க. இந்த ரூம்ல தான் வச்சிருக்கோம்...” என்றதும் அந்த அறைக்குள் அவன் மட்டும் நுழைய, வெள்ளை துணியால் சுத்தி முகம் மட்டும் தெரிய அதே வெள்ளை விரிப்பில் உயிரற்ற உடலாக கிடந்தார் சத்தியவதினி.


அருகில் வந்து அன்னையைக் கண்டவனின் கண்களோ கலங்கவில்லை. மாறாக நெஞ்சமோ குத்தி குதறி குமிறியது.


“கண்ணா..! நீ மறுபடியும் போகணும்மா. இங்கே இருந்து நம்ம தொழிலை பார்த்துக்கலாம்ல...”


“நோ மாம். நான் போயே ஆகணும். எனக்கு இதெல்லாம் சுத்தமா செட் ஆகாது. அன்ட் நீங்களுமே இதெல்லாம் விட்டிருங்க, தேவையில்லாம இதை பார்த்துக்குறேன்னு சொல்லி உங்க ஹெல்த்தை இஸ்பாயில் பண்ணிக்காதீங்க...”


இது தான் தன் அன்னையிடம் தான் நேரில் கண்டு பேசிய கடைசி வார்த்தைகள். அதன் பின் அலைபேசியில் பேசிய போது கூட இதே வார்த்தை தான் ஆனால் அவனின் நெஞ்சத்திலோ பதியவில்லை. தான் கூறியதையும் அன்னை கேட்கவில்லை. அன்னை கூறியதையும் தான் கேட்கவில்லை. அதனால் நடந்த விளைவு தானே இதோ இன்று இப்படி..?


ஒருவரின் அருமை இருக்கும் போது தெரியாது. இல்லாத பின் தான் உணர முடியும் என்பார்களே..! அதே போல் இப்போது விஜயநேத்ரன் உணர ஆரம்பித்தான்.


விதி அவனை இன்றிலிருந்து ஒரு புது பாதைக்குள் இழுத்துச் சென்றது. இந்த பாதை அவனுக்கு எவ்வாறு இருக்கும்..?


மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ்சில் உடலை ஏற்றி அங்கிருந்துச் செல்ல, அங்கிருந்த செய்தியாளர்கள் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் நிறுவனத்தில் பணிபுரியும் மேலதிகாரியே பதில் கூறினார்.


அதில் தெரிந்த தகவல் அவர்களின் வீட்டிலே நாளை இறுதி சடங்கு நடக்கப் போகிறதென.


மறுநாள் அந்த பிரமாண்டமான மாளிகை போன்ற வீடே பொலிவற்று காணப்பட்டது. வீட்டின் உள்ளே பார்க்கிங்கிலும் சரி கேட்டின் வெளிப்புறத்திலும் சரி எங்கும் வாகனமும், பாதுகாப்பு காவலர்களும் நிரம்பி இருந்தனர்.


தொழில் சார்ந்தவர்கள் மட்டுமில்லாது ஒரு சில அரசியல் பிரமுகர்கள், சினிமா தயாரிப்பு நிறுவனம் சார்ந்தவர்கள் இறுதி சடங்கிற்க்கு வருகை புரிந்த வண்ணம் இருந்தனர். விஜயநேத்ரனோ, வெள்ளை உடையில் கண்ணாடி பெட்டிக்குள் மலர்கள் சூழ விழி மூடி கிடந்த அன்னையை தான் இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான்.


‘தன்னை எப்படி அவர் விட்டுச் செல்லலாம்..?’ மனமோ வேதனைக் கொள்ளாது மாறாய் அவரை எண்ணி தீயாய் எரிந்தது. அந்த நொடியிலும் கூட மௌனமோடு மனதில் சீறிக் கொண்டிருந்தான்.


யார் வருகிறார்கள்..? யார் செல்கிறார்கள்..? தன்னிடம் யார் துக்கம் விசாரிக்கிறார்கள் என்று எதுவும் உணராது தனிமரமாய் சிலையென நிற்க, அதற்கும் அன்னையை தான் வசைபாடினான்.


‘எதுக்கும்மா இப்படி என்ன நிக்க வச்சீங்க..? ஏன் நான் சொன்னதை நீங்க கேட்கல..? ஏன் என்னை விட்டிட்டு போனீங்க..? எனக்குன்னு யார் இருக்கா..? சொல்லுங்கம்மா...’ நினைத்தவனின் விழிகளோ ரத்தசிகப்பாய் மாறியது.


பின் இறுதி ஊர்வலத்திற்கு பாதுகாப்போடு ஏற்பாடுகள் துவங்க, அன்னையின் சடலத்தின் முன்னே விஜயநேத்ரன் சென்றான். அதனை அனைத்து செய்தி மற்றும் ஊடங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்தனர்.


சத்தியவதனியின் மதிப்பும், மரியாதையும் என்ன என்பதை இன்னும் அவர் பெற்று வளர்த்த செல்ல செல்வமகன் கூட அறியாது தான் இருந்தான்.


பின் செய்ய வேண்டிய அனைத்து இறுதி சடங்களும் மரியாதையோடு மகனாய் இருந்து தன் கடமையை சரியாக செய்தான். இருள் சூழப் போகும் நேரம் அசைதியோடும், மனச் சோர்வோடும் வீட்டுக்குள் நுழைந்தவனோ நேராக மாடியேறி தன் அறைக்குள் வருடங்கள் கடந்து நுழைந்தான்.


பஞ்சு மெத்தையும் உடன் அன்னையும் தானும் சேர்ந்து எடுத்த புகைப்படம் இரண்டும் அவனை வரவேற்க, அதனை கண்டவாறு சரிந்தவனோ அப்படியே விழி மூடினான்.


ஏசியின் குளிர் தன்னை தாக்குவது கூட உணர முடியவில்லை. உடலும், மனமும் இறுகிப் போய் தான் இருந்தது.


விஜயநேத்ரன் சிறு வயதிலிருந்தே செல்வ செலுப்பில் பணத்தின் அருமை தெரியாது வளர்ந்தவன். எதிலும் நிலையில்லாது இருப்பவன். பள்ளி படிப்பு முடியும் வரை மட்டும் தான் இங்கே இருந்தான். பின் சுதந்திர பறவையாய் பறக்க வெளிநாடுச் சென்று விட்டான்.


கண்டிப்பு காட்டுவதிலும் சரி பாசம் காட்டுவதிலும் சரி சத்தியவதினி மகனை சரியாக தான் நடத்துவார். ஒரு சில நேரங்களில் அன்னையின் செயலுக்கு முரணாக தான் இருப்பான். அப்படி தான் அன்னை கூறியபடி பிஸ்னஸ் பற்றி படிக்காது சம்மந்தமே இல்லாத கேட்ரிங் படித்தான். சரி விருப்பப்பட்டு படிக்கிறான் என விட்டால் படித்து முடித்து சில நாட்கள் தான் நிலையாக இருந்தானா என்ன..? அதுவுமில்லை. காரின் மீது அதீத நாட்டம் கொண்டு கார் ரேஷர்(பந்தய வீரர்) ஆக வேண்டுமென பயிற்சி எடுத்து நாட்களை செலுத்தி வருகிறான். இது என்று அலுப்பை தருமோ அப்போது வேறொன்றிக்கு நிச்சியம் தாவி விடுவான். எதை நினைக்கிறானோ அதை மட்டுமே செய்ய விரும்புவன். மற்றவர்கள் சொன்னால் மட்டும் வேணுமென்றே கேட்டுக் கொள்ளாதவன்.


முக்கியமாக இவனின் அன்னை சத்தியவதனிக்கு பிடிக்காத ஒன்று என்றால் இவனின் செய்கை மட்டுமே..! ஒவ்வொரு நாளும் பெற்றவளின் மனம் நினைக்கும் வார்த்தைகள், ‘இதுல தான் நிரந்திரமா இருக்க மாட்டிக்கான். வாழ்க்கையில உறவுன்னு வந்துட்டா நிரந்திரமா இருப்பானா..?’ என்று தான்.


ஆதவனோ இந்த உலகத்தை காண வந்து விட, விஜயநேத்ரனின் அறையில் இருந்த இன்டர்காம் ஒலித்தது. மல்லாக்க படுத்திருந்தவனோ சத்தம் உணர்ந்து லேசாக விழி திறந்து மறுபடியும் திரும்பி படுத்துக் கொண்டான். மறுமுறையும் அழைக்க, தேடி தழுவி அதனை எடுத்து செவியில் வைத்தான்.


“ஹலோ சார்..! குட் மார்னிங். ப்ரேக்பஸ்ட் ரெடியா இருக்கு சார்...” என்று ஒருவனின் குரல் வர,


“யார் நீங்க..?” நித்திரையோ இன்னும் முழுதாக நீங்காது கேட்டான்.


“நான் உங்க வீட்டு சர்வண்ட் கேசவன் இஸ்பீக்கிங் சார்...”


“ஓ...அப்படியா..சரி..சரி வரேன்..!” எனக் கூறிவிட்டு வைத்தவனோ சில நிமிடம் சென்ற பின்னே பட்டென பதறி அடித்துக் கொண்டு எழுந்தான்.


அதன் பின்னே அவனுக்கு தான் இருக்கும் இடமும் சரி நடந்த நிகழ்வுகளும் சரி நினைவுக்கு வந்தது. திரும்பியவனின் விழிகளில் அன்னையின் புகைப்படம் விழ, அதனை கரங்களில் எடுத்தான்.


“விஜய்..கண்ணா..! அடேய்..! எழுந்திருடா...” தன்னை தட்டி எழுப்பும் அன்னையின் வார்த்தைகள் இன்னுமே செவியில் ஒலிக்க,


“ஐ ஆம் ரியலி மிஸ் யூ மாம்...” வார்த்தைகள் சிதற கலங்கிக் கொண்டு கூறியவனோ அன்னையின் புகைப்படத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.


பத்து மணி போல் கீழே இறங்கி டைனிங் டேபிளில் அருகே நெருங்கி வரும் போது பசி என்பதையே உணர்ந்தான். முழுதாக அவன் உண்டு இரண்டு நாட்கள் சென்றது. எப்படி தான் உண்ணாமல் இருந்தான் என்பதே அவனுக்கே ஆர்ச்சிரியம் தான்.


யூனிஃபார்ம் உடை அணிந்து டைனிங் டேபிளில் அருகே இருந்த பணியாளன் ஒருவன் அவனுக்கு நாற்காலியை நகர்த்தி விட, அமர்ந்தான். இன்னொரு பெண்மணி வந்து உணவினை பரிமாற உள்ளுக்குள்ளோ சுள்ளென கோவம். காரணம் அவன் சாப்பிடும் உணவினை அவன் மட்டுமே என்றும் தேர்ந்தெடுப்பான்.


முன்னே இருப்பவளின் மீது சீற்றத்தைக் காட்டாது சற்று பொறுமையோடு, “என்ன இது..?” அதிரும் குரலில் கேட்டான்.


அதிரும் குரல் தான் அவனுக்கு பொறுமையே..? உண்மையிலே கோவத்தை காட்டினால் எதிரில் இருப்பவர்கள் பஸ்பமாகி தான் விடுவார்கள்.


“எப்பவும் இந்த மாதிரி தான் இங்கே பிரேக்பஸ்ட் பண்ணுவாங்க...” பயத்தோடு நடுங்கிக் கொண்டு அப்பெண் உரைக்க,


“இதுவரைக்கும் சரி. ஆனா இனி என்ன செய்யணும் என் கிட்ட கேட்டு தான் செய்யணும்...”


“ஓகே..சார்...” என்றதும் ஒரு வாய் எடுத்து உண்ண, பசிக்காக இறங்கியதே தவிர ருசியாய் இறங்கவில்லை. உண்டு முடித்து அங்கிருந்து எழுந்துச் சென்று விட்டான். யாரிடமும் எதுவும் பேசவில்லை கேட்கவுமில்லை..?


அதனை தொடர்ந்து வந்த நாட்கள் காரினை எடுத்துக் கொண்டு வெளியேச் சென்றால் இரவில் தான் வீட்டுக்கு வருவான். ஒரு சில நேரங்களில் மது போதையில் நுழைபவனோ அப்படியே சோபாவிலே சரிந்து விடுவான். வேலைக்கார்கள் அந்த வீட்டில் வேலையாளியாகவும், காவலாளியாக மட்டுமே இருந்தனர்.


ஒரு வாரம் கூட சென்றிருக்காத நிலையில் ஒரு நாள் பகலிலே நடு கூடத்தில் அமர்ந்து மதுபானம் அருந்த, முன்னால் தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருந்தது. அவனின் ஒரு கையில் சரக்கு கோப்பை, இன்னொரு கையில் ரிமோர்ட் இரண்டுமே சிக்கிக் கொண்டது என்று தான் சொல்ல முடியும்.


ஒன்றிலும் நிலையில்லாது மாறி மாறி வைத்துக் கொண்டே வந்தவனின் கரங்களோ ஒரு நொடி அப்படியே நின்றது.


விரைவுச் செய்தி (பிரேக்கிங் நியூஸ்)


‘ஆர்.எஸ் குழுமத்தின் நிறுவனர் சத்தியவதனி இறந்து விட்ட நிலையில் இனி அந்த நிறுவனத்தை பார்த்துக் கொள்ள போவது அவரின் மருமகள் மகிழினி...’ என்று ஒளிப்பரப்பாகியது.


அதோடு மட்டுமில்லாது அந்த பெண்ணும் தன்னை அறிமுகப்படுத்தி நிறுவனத்தின் முன்னே நேரலையில் இருக்க, அதனைக் கேட்ட விஜயநேத்ரனுக்கோ கட்டுப்படுத்த முடியாத ஆத்திரம், கோவம் சினத்தோடு கையிலிருந்த கிளாஸ்சை பறக்க விட சில்லாக நொறுங்கியது.


“யார் இவ என்ன தைரியும் இருந்தா இப்படி சொல்லுவா..?” பற்களை அழுத்தக் கடித்துக் கொண்டு எழுந்தவனோ செல்லப் பார்க்க, அவனின் கைபேசியில் குறுஞ்செய்தி ஒன்று வந்தது.


“உங்க அம்மாவோட இறப்பு எதார்த்தமா நடந்ததோ இல்ல தற்கொலையோ கிடையாது. திட்டமிட்டு சதி பண்ணி கொன்னுட்டாங்க...” என்ற குறுஞ்செய்தியை கண்டவனுக்கோ சர்வமும் சூடேறியது.


எதிரே தொலைக்காட்சியில் அப்பெண், கையிலோ குறுஞ்செய்தி..!

🙏 நன்றி 🙏

முதல் அத்தியாயம் எப்படி இருந்ததுன்னு உங்களோட கருத்துகளை மறக்காம கருத்து
திரில சொல்லிட்டு போங்க நண்பர்களே..!


Thread 'கள்வனின் தீராக்காதல் (KT) கருத்து திரி'
https://pmtamilnovels.com/index.php?threads/கள்வனின்-தீராக்காதல்-kt-கருத்து-திரி.32/
 
Last edited:
கள்வனின் தீராக்காதல் !கள்வன் : 2


தொலைக்காட்சியில் ஓடிய செய்தியையும், அவனின் அலைபேசியில் வந்த குறுஞ்செய்தி இரண்டையும் பார்த்த வண்ணமே இருந்தவனுக்கு ஆயிரம் குழப்பங்கள்.

‘எப்படி இது சாத்தியமாகும். அம்மா இறந்துக்கான ரிப்போர்ட்டை கூட மறுநாள் என் கிட்ட வந்து கொடுத்தாங்களே..! அதுல நெஞ்சுவலி தானே இருந்தது. விசாரிக்கும் போது வேலை பார்த்தவங்க கூட அதை தானே சொன்னாங்க. பின்னே எப்படி..? யார் இதை எனக்கு அனுப்பினது..?’ ஒரு புறமாய் எண்ணி குழம்பியவனோ எதிரே இருந்த அப்பெண்ணை கண்டான்.


‘இவ யாரா இருக்கும்..? எதுக்காக இப்படி சொல்லுற..? எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல. அப்பறம் எப்படி என் அம்மாவுக்கு இவ மருமகளா வருவா..? எங்க கம்பெனியை ரன் பண்ண இவ யாரு..? ஒரு வேலை இந்த மெசேஜ்க்கும் இவளுக்கும் சம்மந்தம் இருக்குமா..? இவ தான் பண்ணிருப்பாளோ..! எது எப்படியோ இவ எப்படி இப்படி சொல்லலாம்...’ நினைத்து சீறியவனோ புயலென வெளியேறினான்.அதே நேரம் இங்கே அர்.எஸ் குழுமத்தின் தற்போதைய புது நிறுவனரான மகிழினி தன் நேரலையை முடித்துக் கொண்டு சத்தியவதனி அறையின் அவரின் இருக்கையில் அமர்ந்தாள்.முன்னே இன்னும் சத்தியவதனி பெயர் பலகை இருக்க, உள்ளே ஒருவர் அனுமதி கேட்டு நுழைந்தார்.


“மேடம்..! நீங்க நேத்து சொன்ன மாதிரி போர்ட்டு மீட்டிங் ஏற்பாடு பண்ணியாச்சு. டைரக்டர்,ஷேர்ஹோல்டர் அப்பறம் மத்த எல்லாருமே ரெடியா இருக்காங்க...” என்றதும்,


எழுந்தவளோ, “ஓகே வாங்க போகலாம்...” என்று முன்னேச் செல்ல, வந்தவரோ பெயர் பலகையை மாற்ற முயற்சித்தார்.


“என்ன பண்ணுறீங்க நீங்க..?”“இல்ல மேடம் உங்களோட நேம் போர்ட்டு...”


“வேண்டாம் அவங்களோடதே இருக்கட்டும்...” என்றவளோ வெளியேறிச் சென்று விட, பின்னே வந்தவரும் சென்றார். சத்தியவதினி இல்லையென்றாலும் அவரின் செயல்களும்,, நினைவுகளும் என்றும் இருக்கும் என்பது போன்றே அந்த பெயர் பலகை காட்சியளித்தது.

பின் மீட்டிங் அறையில் அனைவரும் முன்னே மடிக்கணினியின் கோப்புகளோடு அமர்ந்திருக்க, உள்ளே நுழைந்தாள் மகிழினி. அவளைக் கண்டதுமே அனைவரும் எழுந்து நிற்க பின் அவள் அமர்ந்து அமரக் கூறியதும் அமர்ந்துக் கொண்டனர்.


அவள் யாரென மறுபடியும் அங்கே அறிமுகப்படுத்திக் கொண்டு இப்போது நிறுவனத்தின் நிலவரம் என்ன என்பது பற்றியும் கேட்டறிந்துக் கொண்டிருந்தாள். இதில் அவள் இப்போது கத்துக்குட்டி என்று அவர்கள் நினைத்திருக்க அதற்கு மாறாக இருப்பதை முன்னே இருப்பவர்கள் அறியவில்லை.

ஒரு வாரத்திற்கு ஒரு முறை சத்தியவதினி இப்படி மீட்டிங் நடத்துவார் என்பது அவள் அறிந்த ஒன்றே..! திரையில் நிறுவனத்தின் ஏற்றம், இறக்கம், மதிப்பு பட்டியல் என்று பகிரப்பட்டு விளக்கிக் கொண்டிருக்க, கவனோடு முதலில் கேட்டாலே தவிர ஒன்றும் கூறவில்லை.


அந்தநொடி புயலென அறையின் கதவு திறக்க, விழிகளை கூசும் வெளிச்சமும் படர்ந்தது. யாரென அனைவரும் காண சீற்றமோடு நின்றிருந்தான் விஜயநேத்ரன்.


இதனை எதிர்பார்த்த மகிழினியும் இவ்வளவு விரைவில் எதிர்பார்க்கவில்லை.


அன்னையின் இருக்கையில் முன்னே தலைவியாக அமர்ந்திருப்பவளை கண்டவனோ, “ஹே..! யார் நீ..? எழுந்திரு முதல...” பேரிரலைச்சலோடு கத்தினான்.


தன் செவியை மூடிக் கொண்டு எழுந்தவளோ கரங்கள் இரண்டையும் குறுக்காக கட்டிக் கொண்டு, “எதுக்காக இப்படி கத்துறீங்க மிஸ்டர் விஜயநேத்ரன்..?” நிமிர்வோடுக் கேட்டாள்.

“ஏய்..! யாருடி நீ..? எனக்கு இன்னும் கல்யாணமே ஆகாத போது நீ எப்படி என் அம்மாவுக்கு மருமகளா ஆகுவே..?” என்க,

“அதை என் கிட்ட கேட்டா என்னை மருமகளாக்குன உங்க அம்மா கிட்ட போய் கேளுங்க..?”எனக் கூறியவளின் குரலில் ஒரு விதமான திமிர் தென்படுவதை கண்டுக் கொண்டான்.


“என்ன அவங்க இல்லைன்னு நீ என்னவேனாலும் பண்ணுவியா..? அவங்க வர மாட்டாங்கன்னு தெரிஞ்சும் கேட்குற..?” கத்தியவனோ,


அங்கிருந்தவர்களை பார்த்து, “இங்கே பாருங்க..! இவ என்னோட வைப் இல்லை. இவளை இதுக்கு முன்னாடி நான் பார்த்தது கூட இல்லை. அப்பறம் எப்படி இவ என் அம்மாக்கு மருமகளா வருவா..? அப்படியே இவ சொன்னாலும் நீங்க எப்படி நம்பலாம். இதுக்கு முன்னாடி நீங்க இவளை பார்த்திருக்கிறீங்களா..?” கேட்க, அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு குழம்பினர்.


“முதல நீங்க வெளியே போங்க விஜயநேத்ரன். செக்கியூரட்டி மீட்டிங் நடக்கும் போது அனுமதி இல்லாம யாரையும் விடக் கூடாதுன்னு உங்களுக்கு தெரியாதா..?” அவனுக்கு பின்னே இருந்தவர்களிடம் மகிழினி கூற,


“ஏன் இங்கே இருந்தா உன்னை பத்தி எல்லாம் தெரிஞ்சி இவங்களே கழுத்தை பிடிச்சி வெளியே தள்ளிருவாங்கன்னு தெரிஞ்சிருச்சோ...?” என்று ஏளனத்தோடு கேட்டான்.


“வார்த்தையை பார்த்து பேசுங்க..?”


“அப்படி தான் பேசுவேன். சொல்லு நீ எப்படி என் அம்மாக்கு மருமகள்ன்னு சொல்லலாம். அப்பறம் நீங்க இவளை பார்த்திருக்கீங்களா இல்லைல. எப்படி நம்பலாம் நீங்க..?” சீறியவனுக்கோ, சிறு துளி கூட ஆத்திரம் என்பது அவனுக்கு குறையவில்லை.


“மேடம்..! நீங்க யார்..? இதுக்கு கூட நாங்க உங்களை பார்த்ததேயில்லையே..? அதுவும் போக சாரும் அவரோட வைப் இல்லைன்னு சொல்லுறாங்க. அப்பறம் எப்படி நீங்க மருமகளாகுவீங்க..? இப்போ எப்படி இந்த கம்பெனியை நீங்க ரன் பண்ணலாம்...” என அப்போது தான் அங்கிருந்தவர்களுக்கு புதைந்திருந்த அறிவோ தட்டி எழுப்பியது.


‘அசருவாளா என்ன மகிழினி..?’


அங்கிருந்தவர்களை கண்டு கைதட்டியவளோ, “அது சரி நீங்க ஏன் இந்த கேள்வியை இவ்வளோ நேரம் கேட்காம என்னோட ஹஸ்பண்ட் வந்து கேட்டதுக்கு அப்பறம் கேட்குறீங்க..?” இதழ் விரிய லேசான புன்னகையோடு கேட்டாள்.


பதில் கூற முடியாது அமைதியாக இருக்க, “ஏய் யார் உன் ஹஸ்பண்ட்..? நேரத்தை கடத்தி மழுப்பாதே..! இப்படி சீட் பண்ணுறதுக்கே சுத்துவீங்களோ..? ஐ வில் கால் தீ போலீஸ்...” கூறியவனோ தன் கைபேசியை எடுக்க,


“சீட் பண்ணுறதாவே இருந்தாலும் இப்படியா ஆழம் பார்த்து கால்லை விட்டிருப்பேன். பொய் சொல்லுறேன்னோ வச்சிக்கோங்க எப்படி என்னால இங்கே இப்படி வந்து நிக்க முடிஞ்சிருக்கும். ஒரு வேலை உங்களுக்கு இது இல்லையோ...?” என அவளின் மூளையை தொட்டு அவனுக்கு சைகையால் காட்ட, பெண்ணென பாராது கரங்களை ஓங்கினான்.


அதனை புரிந்து இறுக தன் முழு பலத்தையும் கொண்டு தடுத்தவளோ, “இப்படி தான் பொண்ணுங்க கிட்ட நடந்துப்பீங்களோ..?” கேட்க, அவனின் பொறுமையோ எல்லை மீறியது.


பட்டென கரங்களை உதறியவனோ, “நீ யாரா வேணா இருந்துட்டு போ முதல வெளியே போடி..?” ஆக்ரோஷமாய் கத்த,


“முடியாது..? நான் தான் இதை பார்த்துக்கணும் என் அத்தை சொல்லிருக்காங்க...?” கரங்களை கட்டிக்கொண்டு முகத்தை திருப்பி கூறினாள்.


தலைமுடியை கோதிக் கொண்டவனோ, “எப்போ..? எப்படி சொன்னாங்க உன்கிட்ட இதை எப்படி நான் இல்லை நாங்க நம்ப முடியும்..?” கேட்க,

“அப்படியா..! அப்போ இங்கே பாருங்க என் அத்தை அதான் சத்தியவதனியோட பையன் தான் இவருன்னு உங்களுக்கு எப்படி தெரியும்..? இதுக்கு முன்னாடி இவரை நீங்க நேர்ல பார்த்திருக்கீங்களா..?” என்று தன்னை துளைத்த கேள்வியை அவர்களிடமே திரும்பி விட்டாள்.


“ஆனா மேடம்டோட ரூம்ல போட்டோல பார்த்திருக்கோம்...” என வேகமோடு பதில் கூற,


“இப்படி தான் யார் என்ன கேட்டாலும் சொன்னாலும் நம்பிருவீங்களோ..? இதோ நிக்கிறாரே இவர் என்னோட ஹஸ்பண்ட் தான். ஆனா பாருங்களேன் அவருக்கே அது தெரியல. ஏன்னா ஒரு வருசத்துக்கு முன்னாடி எங்க கல்யாணம் முடிஞ்ச கொஞ்சம் மாசத்துல இவருக்கு கார் ரேஸ் மூலமா ஒரு விபத்தாகி இப்போ சில வருஷமா நடந்த எல்லாமே மறந்து போச்சு...” என்று ஒரு புது கதையை அழகாக உரைத்தாள்.


ஸ்தம்பித்து நின்றவனே ஒரு நொடி உண்மையென நம்பி விட்டான் என்று தான் கூற முடியும். அப்படி அவன் அமைதியாக இருந்தான்.


பின் சட்டென சுதாரித்து தங்களை பைத்தியமாக்க பார்க்கிறாள் என்பது புரிய, சிக்குவானா சிவனாண்டி..!


“ஏய் என்னை புது கதையா..? அப்படியா சரி உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆனதுக்கு ஆதாரம் இருக்கும்ல அதை காட்டு. அப்படியும் இல்லைன்னா என் அம்மா உன்னை தான் இந்த நிர்வாகத்தை பார்க்க சொன்னாங்க அப்படிங்குற ஆதாரத்தை காட்டு...” என்க,


‘வந்ததும்ல இதை கேட்டுக்ருகணும். எத்தனை தடவை தோத்தாலும் மறுபடியும் தோக்குறதுல தான்பா இருக்கான்...’மனதிற்குள் நினைத்துக் கொண்டவள்,


சத்தியவதனிக்கு உதவியாளராக இருந்த ராமமூர்த்தி என்பவர் இப்போது இவளுக்கு உதவியாளராக இருக்க, அவரைக் கண்டு, “ நான் மார்னிங் கொடுத்த பைல் எடுத்துட்டு வாங்க...” என்றதும் அவரும் சரி என்று அதனை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார்.


அந்த பையிலை அனைவருக்கும் கேட்கும் படி வாசிக்க கூறவே, அவரும் ஒலிபெருக்கி முன்னே சென்று வாசிக்க ஆரம்பித்தான்.


அதில் விஜயநேத்ரன், மகிழினி இருவருக்கும் இரண்டு ஆண்டுகள் முன்னே பதிவு திருமணம் முடிந்து, அதுவும் சாட்சி கையெழுத்தாக சத்தியவதனியும் இவளின் குடும்பத்தாரும் கையொப்பம் போட்டது தெளிவாக இருந்தது. அந்த திருமணச் சான்றிதழை வாசித்துக் காட்ட, அந்த நொடியே அனுமதி வாங்கிக்கொண்டு உள்ளே வந்து நின்றார் ஒருவர்.

“இவர் யாருன்னு உங்க எல்லாருக்கும் தெரியும். சத்தியவதனி அத்தையோட பேமிலி வக்கீல்...” என அனைவரிடமும் கூறி அவரை பார்த்து,


“சார். அதுல இருக்குற சைன் என் அத்தையோடது. அதாவது என் மாமியாரோடது தானா கொஞ்சம் செக் பண்ணி சொல்லுறீங்களா..? அதுவும் போக அவங்க உங்க கிட்ட சொன்ன பிராபர்டி டாக்குமென்ட் பத்தியும் சொல்லிருங்க...” என்றதும், அவரும் சரி என்று அதனைப் பார்த்தார்.


“ஆமா..! இது மேடம்மோட கையெழுத்து தான். இனி இந்த நிர்வாகம், கணக்குவழக்கு எல்லாத்தையும் என் மருமக மகிழினி தான் பார்க்கணும் சொல்லி இவங்களையும் என் கிட்ட நேர்ல காட்டி தான் சொன்னாங்க...” எனக் கூறவே, இப்போது நூறு சதவீதம் உறுதியாக யாரால் என்ன கூற முடியும்..?


அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த விஜயநேத்ரனுக்கு மூக்கருப்பட்டதை போன்ற உணர்வு. அனைவரும் முன்னால் தன்னை அவமானப்படுத்தியவளை விடக் கூடாது என்ற உறுதியை தன் நெஞ்சுக்குள் பதித்துக் கொண்டான்.


அந்தநொடி அவனின் முதல் எதிரியாக அவளாக தான் இருந்தாள். அதே தீப்பார்வையை இன்னும் அவளிடம் வீசியவாறு இருக்க நிமிர்வோடு அவனைக் கண்டு நின்றாள்.


“என்னாச்சு அமைதியாகிட்டீங்க பேசுங்க..? சின்ன பொண்ணுன்னு நினைச்சீங்களா..? சின்ன பொண்ணாவே இருந்தாலும் சத்தியவதனி மருமக...” புருவம் உயர்த்தி வெற்றியைக் கண்ட களிப்பில் கூறவே, அவனின் அருகில் இருந்த பொருட்களை அனைத்தையும் உதறி விட்டுச் சென்றான்.


அவன் சென்ற பின்னே மழை பொழிந்து ஓய்ந்தது போல் உணர்ந்தவளோ தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, வந்த வக்கீலுக்கு நன்றி கூறினாள்.


பின் அவரும் சென்று விட, மறுபடியும் அந்த மீட்டிங்கை நடத்தி முடித்து மதிய நேரத்திற்க்கு மேல் அவளின் அறைக்கு வந்தாள்.


மாலையோடு சிரித்த முகமாக போட்டோவில் இருந்த சத்தியவதனியை கண்டவளோ மெல்லிய சிரிப்பு ஒன்றை சிரித்து விட்டு தன் அலைபேசியை எடுத்தாள்.


“ஹலோ..! நான் தான் பேசுறேன். நினைச்ச மாதிரியே இந்த ஆபிஸ்க்குள்ள புகுந்துட்டேன். நம்ம எதிர்பார்த்தது நடந்தது ஆனா பிரச்சனையில்லாம முடிஞ்சிருச்சி. ஓகே..இனி அடுத்த வீட்டுக்குள்ள நுழைய பார்க்குறேன். சரி நான் கவனமா இருந்துக்குறேன்...” எனக் கூறி அலைபேசியை வைத்து அடுத்த என்ன என்பதை திட்டமிட்டாள்.


எதிராளி இருந்தால் தானே விளையாட்டு சுவாரசியமாக இருக்கும். சும்மா இருந்த தீயை(விஜயநேத்ரனை) வார்த்தையால பத்த வச்சிட்டா..? இனி தானே இருக்கும் இவளுக்கு வினையும், விளையாட்டும்.
🙏 நன்றி 🙏
இந்த பதிவு எப்படி இருந்ததுன்னு மறக்காம சொல்லிட்டு போங்க நண்பர்களே..!


Thread 'கள்வனின் தீராக்காதல் (KT) கருத்து திரி' https://pmtamilnovels.com/index.php?threads/கள்வனின்-தீராக்காதல்-kt-கருத்து-திரி.32/
 

Attachments

  • ei2JF2E22089.jpg
    ei2JF2E22089.jpg
    302.6 KB · Views: 1
Last edited:
கள்வனின் தீராக்காதல்..!

கள்வன் : 3

பளபளக்கும் கண்ணாடி கதவுகளும். எங்கும் ஏ.சி காற்று வீசும் அந்த கட்டத்திற்குள் மகிழினி இருந்த அறை அவளுக்கு ஏனோ மூச்சு முட்டுவது போல் தான் இருந்தது.இருள் சூழப் போகும் நேரம் கதிரவனை போல் தானும் வீட்டுக்குச் செல்ல நினைத்து தன் கைபையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.


மேல் தளத்தில் இருந்து கீழ் தளத்தில் வந்தடையும் நொடி மறுபடியும் உள்ளே நுழைந்தான் விஜயநேத்ரன். அவனைக் கண்டவளோ அப்படியே ஸ்சம்பித்து சிலையென நின்று விட்டாள்.


என்ன தான் வெளியே அவனை எண்ணி அங்கலாய்ப்பாய் மதிய பேசி விட்டாலும், உள்ளுக்குள் ஒவ்வொரு நொடியும் என்ன செய்ய காத்திருக்கிறானோ என்றெண்ணி மனம் துடித்துக் கொண்டிருந்தது.


அவனின் எதிர் தாக்குதல் நிச்சியம் பலமாக இருக்கும் என்பதை முன்னே அறிந்து வைத்தது தானே..? இதோ இப்போது எதையோ செய்ய மறுபடியும் இங்கு வந்து விட்டான்.


கண்ணாடி கதவுகள் தானாக இருபுறமும் திறக்க, காலையில் இருந்த அதே கோலம் தான். தன்னை நோக்கி நடந்து வர வர ஏதோ ஒரு வித்தியாசம். தலை முடிகளோ லேசாக கலைந்திருக்க, கால் ஊன்றி நடக்கும் நடையில் லேசான தடுமாற்றம்.


“ஆப்டர்நூன் டைம் குடிச்ச மாதிரி இப்பவும் குடிச்சிருக்கான்னா..?” அயர்வோடு தான் மனம் நினைத்தது.


காரணமோ மதிய நேரத்தில் சற்று தொலைவில் இருந்து பேசும் போது தெரியாத வாசனை தன்னருகில் நெருங்கிய நொடி உணர்ந்துக் கொண்டாள் மகிழினி. லேசாக அருந்தியிருக்கிறான் என்பது புரிய பேச்சுவாக்கிலே அவனை மற்றவர்களிடமும் அனுமதிக்காது பார்த்துக் கொண்டாள். அவனின் மோதல் தன்னோடு மட்டும் இருந்துக் கொள்ள வேண்டுமென எண்ணம்.


உள்ளே நுழைந்ததுமே எதிரில் அவளே தரிசனம் கொடுக்க நேராக அவளின் முன்னே சென்று நின்றான்.


ஏளனப் சிரிப்பு ஒன்றை சிரித்தவனோ, “என்ன அப்படி பார்க்குற மை ஹாட் பொண்டாட்டி..?” அழைக்கவே,


“மைன்ட் யுவர் வோர்ட்ஸ்...” விரல் நீட்டி எரிச்சரித்தாள்.


அந்த விரலையே மடக்கி உள்ளங்கையை பற்றியனோ, “மை ஹார்ட் பொண்டாட்டிக்கு பதிலா மை ஹாட் பொண்டாட்டி சொல்லிட்டேன். சரி வா போகலாம்...” அழைத்துச் செல்ல முயன்றான்.


அவனிடமிருந்து தன் கரங்களை உருவ முயன்றவாறு, “என் கையை விடுங்க. எதுக்கு இப்படி பண்ணுறீங்க..? எனக்கு போக தெரியும்..?” பல்லை கடித்துக் கொண்டு அவனுக்கு மட்டும் கேட்குமாறு முணுங்கினாள்.


“விட்டா நீ உன் வீட்டுக்குள்ள போவே..? இப்போ நீ வைப் என் வீட்டுக்கு தானே வரணும். அதுக்கு தான் கூட்டிட்டு போக வந்திருக்கேன். வா...வா செல்லம்...” அழுத்தமோடு பற்றி அழைக்க,


தான் நினைத்தது போன்றே நடக்கிறது என்றாலுமே போதையில் இருப்பவனோடு செல்வதற்கு ஒரு வித பயம்.


“என்னால முடியாது..? எனக்கு விருப்பமில்லை விடுங்க என்னை..? குடிச்சிட்டு வந்து கலாட்டா பண்ணாதீங்க..? முதல வெளியே போங்க நீங்க..?” கூறியவளின் கரங்களோ அவனின் கரங்களில் சிக்கியிருக்க பிடியின் அழுத்தமும் தாங்க முடியாது மணிக்கட்டு பகுதியோ நொடியில் சிவந்து விட போராடி துடித்தாள்.


அவளின் விழிகள் ஒரு நொடி அவள் படும் அந்த துடிப்பு தெரிய, இவனுக்கோ அது சந்தோஷசராலானது. தன் நெஞ்சம் மட்டுமில்லாது தானே நனைவது போன்றே நினைப்பு. மதிய அனைவரும் முன்னே தன்னை அவமானப்படுத்தி விட்டாலே என்பதை நினைக்க, நினைக்க பிடியின் இறுக்கத்தை இன்னும் அதிகரித்தான்.


இரும்புக்கம்பி போன்ற கரங்களை கொண்டவனிடம் பூ போன்ற மென்கரம் சிக்கி கசங்கிக் கொண்டிருக்க, அவர்கள் இருவர் மட்டுமே குளிரும், நெருப்புமாய் அதனின் தாக்கத்தை உணர்ந்தனர்.சுற்றி அவர்களைக் கண்ட அனைவருமே எதையோ பேசுகிறார்கள் என்பது போல் பார்த்துச் சென்றனர்.


“ஆமா..! நான் குடிச்சிட்டு தான் வந்திருக்கேன். ஆனாலும் தெளிவா இருக்கேன். நீ என் வைப் தான். அப்போ என் வீட்டுக்கு தானே வரணும். அப்பறம் மதிய என்ன சொன்னே எனக்கு விபத்துல கொஞ்சம் வருசத்துக்கு முன்னாடி நடந்தது எல்லாமே மறந்து போச்சுன்னு சொன்னேல. அப்போ வா வந்து நியாபகப்படுத்து. ஒரு வேலை அந்த டைமிங்ல நான் உன்னை காதலிச்சிருக்காலம்ல. அதுனால கூட என் அம்மா உன்னை கல்யாணம் பண்ணி வச்சிருந்திருப்பாங்க...”


“அத்தை..! ஆபிஸ்சை பார்த்துக்கிட சொல்லிருந்தாங்க. உங்க வீட்டுக்கு வரணும் சொல்லலை. அதுனால என்னால வர முடியாது...” இன்னுமே அவனிடம் சிக்கிய கையை மீட்டெடுக்க முடியவில்லை.

“ஏன் வந்தா உன் மனசுல இருக்குற பயமெல்லாம் வெளியே தெரிஞ்சிரும்ன்னு நினைப்போ..! நீ இப்போ வர்றியா இல்லை நானே தூக்கிட்டு போகவா..?” கேட்க, விழிகளோ ஒரு நொடி விரிந்து அவன் காணாது பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.


“சரி..! அப்போ தூக்கிட்டு போக வேண்டியது தான்...” கரங்களை விடுத்து அவனை தூக்குவது போல் பாவனை காட்ட, சட்டென பின்னே நகர்ந்துக் கொண்டாள்.


“வரேன்...!” வார்த்தைகளும் அவளறியாது பயத்தில் ஒலித்து விட, அவளை பார்த்து வெற்றிச் சிரிப்போடு முன்னே நடக்க பின்னே நடந்து வந்தாள் மகிழினி.


‘சிரிக்கவாடா செய்யுற சிரிக்கிற..? இனி உன் லைப்ல ஒவ்வொரு நாளும் கஷ்டம் தான். இனி சிரிப்பு எப்படி வருதுன்னு பார்க்குறேன். ஏழரை உன் கையோட நீயே வான்னு கூட்டிட்டு போறே அனுபவி...’ மனதிற்குள் கருவிக் கொண்டு வெளியே வந்தாள்.


டிரைவர் இருக்கையில் அவன் அமர, அவளோ வெளியே நின்றிருக்கவே, காரின் அலாரத்ததை வேணுமென்றே அழுத்தி ஒலிக்க விட்டான். சற்று முன் அவனின் கரங்களில் சிக்கிய அவளின் கை போன்று இப்போது இஸ்டேரிங்கின் நிலை.


“நீங்க ட்ரிங்க்ஸ் பண்ணிருக்கீங்க. இறங்குங்க. நான் ட்ரைவ் பண்ணுறேன்...”


“பராவாயில்லை செத்தாலும் ரெண்டு பேரும் சேர்ந்தே சாகலாம்...”


“ரூல்ஸ் படி ட்ரிங்க்ஸ் பண்ணிட்டு கார் ஓட்டக் கூடாது...”


“அது மத்தவனுக்கு எனக்கில்லை...”


“அது சரி நீங்க மிருகம் தானே..?” புலம்பலோடு கூறியவனோ முன்னே ஏறி அமர, கார் சீட்பெல்ட் போடாலாம் இருப்பதை கண்டான்.


காரினை எடுத்ததுமே பயமுறுத்துவது போல் வேகத்தை கொடுக்க, தடுமாறியவளுக்கோ அதன் பின்னே நினைவு வந்து சீல் பெல்ட் போட அப்போதும் வேகமென்பது குறையவில்லை.


சிறிது நேரம் பொறுத்து போனவளோ, “கொஞ்சம் ஸ்லோவா போங்க. இது ஒன்னும் நீங்க வளர்ந்த பாரின் இல்லை...” எரிச்சலோடு கத்த, வேணுமென்றே வேகத்தை இன்னும் கூட்டினான்.


புரிந்துக் கொண்ட மகிழினியும் ஒரு வார்த்தை பேசாது மௌனமாக இருக்க, இதழில் அரும்பிய புன்னகையோடும், மனதில் அரும்பிய தணலோடும் வேகமெடுத்து வந்தவனோ வீட்டின் முன்னே வந்த பின்பு தான் வேகத்தையே ஒரேடியாக நிறுத்தினான்.

விழிகளை திறந்து தன்னை ஆசுவாசபடுத்துவதற்குள் இறங்கி அவளின் புறம் புயலென வந்தவனோ கதவினை திறந்து கரம் பற்றி வீட்டில் உள்ளே இழுத்துச் சென்றான்.


அவனால் காயம் கொண்டு சிவந்திருந்த அதே கரம் மேலும் சிவக்க, “என்னை பண்ணுறீங்க விடுங்க என்ன..?” கூறுவதெல்லாம் காற்றில் தான் போனது.


மிகப்பெரிய வீட்டில் நடு ஹாலில் கொண்டு வந்து அவளை நிறுத்தியவனோ நின்றிருந்த வேலைக்காரர்களை கண்டு, “போங்க..! முதல எல்லாரும்...” கத்தவே நொடியில் அனைவரும் மாயமென மறைந்து விட்டனர்.


அவளை நெருங்கி கழுத்தினை பற்றியவனோ பற்களை கடித்துக் கொண்டு, “நீ யார் எதுக்கு இப்படியெல்லாம் பண்ணுறேன்னு நான் சீக்கிரமே கண்டு பிடிக்கிறேன். இந்த சொத்து சுகம், என் அம்மாவோட பேர் அவங்க பதவி இதுக்கெல்லாம் ஆசைப்பட்டு தான் நீ வந்திருக்கேன்னா அதை நிரூபவச்சி காட்டுவேன் எல்லாருக்கும். என் அம்மாவுக்கு ஒரே மகன் நான் என் கல்யாணத்தை ஒரு சின்ன ரிஜஸ்டர் ஆபிஸ்ல என் அம்மா நடந்துவாங்களா என்ன..? எனக்கு விபத்து நடந்ததுன்னு ஒரு அழகான பொய். அவனுங்க வேணா நம்புவாங்க. நம்புறதுக்கு நான் ஒன்னும் இளிச்சவாயனோ பைத்தியமோ இல்ல புரிஞ்சதா..? இனி உன்னோட வாழ்க்கையில ஒவ்வொரு நிமிஷமும் வேதனையும் வலியும் தான் கிடைக்கும். அதுவும் யாரால என்னால...” கூறியவனோ அவளை தள்ளி விட்டு மாடியேறிச் சென்று விட, சோபாபில் பொத்தென விழுந்தாள் மகிழினி.


அந்த நொடி சட்டென பவர் கட்டாகி வீடே இருளுக்குள் சென்று விட, தங்கஜரி வைத்த பட்டில் மஞ்சள் ஒலி மெல்லிய விளக்கில் சத்தியவதனி மட்டும் போட்டோவில் சந்தன மாலையோடு சிரித்துக் கொண்டிருந்தார்.


அதே இரவில் நட்சத்திர விடுதி ஒன்றில் ஒரு அறையில் முக்கிய பிரபல தொழிலதிபர் மூவர்கள் அமர்ந்து ரகசியமாக மது அருந்துக் கொண்டிருந்தனர்.


“என்னப்பா இது இப்படியாகி போச்சு..? அந்த சத்தியவதனி தொல்லை முடிஞ்சதுன்னு பார்த்தா இப்போ யாரோ அதோட மருமக வந்து இருக்காளேம்மே..?” என சியர்ஸ் அடித்து ஒருவன் கூற,


“எல்லாத்தையும் கைக்குள்ள வச்சவளே போய் சேர்ந்துட்டா..? இவ சின்ன பொண்ணு ஒன்னு தெரியாதவ பார்த்துக்கலாம் வரதன் சார். நம்ம கால் தூசிக்கு சமம்...” என்றான் இன்னொருவன்.


“அப்படி நினைக்க கூடாது விநாயகம் சார். சத்தியவதனி போனாலுமே எதாவது ஸ்கெட்ச் போட்டு வச்சிருப்பா. வரதா சார் சொல்லுற மாதிரி பையன் இருக்கும் போது மருமகளுக்கு எதுக்கு கொடுத்தாங்கலாம் இந்த தொழில் சாம்ராஜ்யத்தை....” சந்தேகமாய் கேட்க,


“அவனோட பையனுக்கு தான் பிஸ்னஸ்ல எ, பி, சி, டி கூடத் தெரியாதே..? அதுனால கூட இருக்கலாம்...” என்றான்.


“இருந்தாலும் ஏதோ காரணம் இருக்கு இதுக்கு...”


“சரி விடுங்க. இந்த பொண்ணு நம்மலை மீறினா, அவளோட மாமியார் கிட்டையே அனுப்பி வச்சிரலாம். நம்ம கிட்ட இல்லாத ஆள்பலமா, பணபலமா. ஒரு கட்டை மட்டும் தூக்கி போட்டா போதும் ஆள் காலி ஜி. போலீஸ்சோ, டாக்டரோ, ரிப்போர்ட்ஸ்சோ யாரும் எதுவும் கேட்க முடியாது. சொல்லவும் முடியாது. எல்லாரும் நம்ம கையில..? இப்போ பாருங்க இந்த சத்தியவதனி இறந்தது அன்னையோட முடிஞ்சது அதே மாதிரி. ஒரு நாள் பரப்பரப்பா பேசுற இந்த உலகம் அடுத்த நாள் மறந்தே போயிருவாங்க...” என தனக்கு கீழ் தான் இந்த உலகமென செயல்படுகிறது என்ற நினைப்பில் போதையின் உட்சத்தில் தள்ளாடி மிதப்போடு கூறினான்.


அதனைக் கேட்ட மற்ற இருவருமே அதே சிரிப்போடு குதூகலமாக மது அருந்த, ஆண்களுக்கு மத்தியில் பெண்ணானவள் உயர்வு தொழில் போட்டியில் இனி இல்லை என்ற கொண்டாட்டம் அவர்களுக்கு.சத்தியவதனி நல்லது செய்து நல்லவர்களை தன்னோடு சேர்த்து வைத்தது போல் எதிரிகளையும் தன்னோடு சேர்த்து வைத்தே இருந்தார். ஒரு சிலர் மறைமுகமான தாக்க, ஒரு சிலர் நேரகாக தாக்க அதையெல்லாம் பார்த்து தான் முன்னேறினார். சொத்து சேர்ந்த அளவுக்கு பகையும் அவரின் மீது இருந்ததால் தான் இன்று இந்த பூவுலகத்தை விட்டு பிரிந்துப் போனார்.


வேதனையோ நெஞ்சினை அடைத்தாலுமே கண்ணீரை வெளிக் கொட்ட விரும்பாதவளோ சோபாவில் இருந்து எழுந்து அமர்ந்து தன்னை சரி செய்துக் கொண்டாள்.சுற்றி பார்த்து யாருமில்லை என்பதை உறுதி செய்தவளோ அலைபேசியை எடுத்து, “ஹலோ..! நான் தான். நினைச்ச மாதிரி இன்னைக்கே வீட்டுக்கும் வந்துட்டேன். இனி நான் பார்த்துக்குறேன்...” எனக் கூறி வைத்து விட்டாள்.பின் தன் அன்னைக்கு அழைத்தவளோ, “அம்மா..!” என்க,


இரவாகியும் வாராத மகளுக்காக காத்திருந்த அன்னையின் தவிப்பு, “அம்மாடி...” என்ற ஒற்றை வார்த்தையில் ஏங்கி நின்றது.


எந்த இடத்தில் இப்போது இருக்கிறேன் எனக் கூறி, “ நாளைக்கு காலையில நீங்க எல்லாரும் இங்க வந்துடுங்க” என்ற அழைப்போடு அலைபேசியை அணைத்தாள் மகிழினி.
🙏 நன்றி 🙏
உங்களின் விலைமதிப்பற்ற கருத்துகளை கீழே உள்ள லிங்கில் பதிவு செய்யவும்.

Thread 'கள்வனின் தீராக்காதல் (KT) கருத்து திரி' https://pmtamilnovels.com/index.php?threads/கள்வனின்-தீராக்காதல்-kt-கருத்து-திரி.32/
 
கள்வனின் தீராக்காதல் !


கள்வன் : 4

ஆதவன் விழித்தெழுந்த காலை வானம் கண்டு, புதிதாக பூத்த மலர்களின் இருந்த பணித்துகளோ வெட்கத்தில் மினுமினுத்தது.


மெதுவாகத் தழுவிக் கொண்ட தென்றல் காற்றோ இதமாக மேனியை வருட, குருவியொன்று சிரித்து பறந்துச் செல்ல, குயிலொன்று எங்கோ தூரத்தில் பாடி ஓசை எழுப்ப, இனிமையான அந்த ஏகாந்தத்தில் விழி திறந்தாள் மகிழினி.


ஏசியில் குளிர்காற்றினை தேகம் உணர கரங்கள் இரண்டையும் பரபரவென தேய்த்து தன்னோடு சேர்த்துக் கட்டிக் கொண்டாள். விழிகளோ ஏசியின் ரிமோர்ட் எங்கே என்று தேடியது. ஒரு வழியாக தேடி எடுத்து அதனை அமர்த்திய பிறகு தான் தன் மேனியின் நடுக்கம் குறைந்த உணர்வு.மணியைக் காண காலை ஏழு. ‘இன்னும் சிறிது நேரத்தில் தன் குடும்பத்தார் வந்துவிடுவார்கள். ஆமாம்..! இது யாரின் அறையாக இருக்கும்...’ யோசிக்க, அந்த நொடி மனசாட்சி அவளை திட்டி ஒரு கேள்வி கேட்க, மௌனமோடு ஏற்றுக் கொண்டாள்.இரவு வெகு நேரம் சோபாவிலே அமர்ந்தவளோ நித்திரை தன்னை தழுவவே இந்த அறைக்கு வந்தாள். இதற்கு முன் இந்த அறையினை யாரும் பயன்படுத்தியதில்லை என்பது புரிந்தது.நேற்று இருந்த அதே உடையில் தான். ‘எப்படி வேற ட்ரெஸ் மாத்த முடியும். ஆபிஸ்ல இருந்தது மாதிரியே இழுத்துட்டு வந்துட்டானே அந்த கிராதகன்...’ நினைத்து அங்கிருந்த குளியலறைக்குள் நுழைந்தவளோ சிறிது நேரம் சென்று வெளியே வந்தாள்.தன் கைபேசியை நோண்டியவாறு ஹாலில் இருந்த சோஃபாவில் அமர, வேலை பார்க்கும் கேசவன் முன்னே வந்து, “மேடம்..! காஃபி ஆர் டீ..?” பணிவோடு கேட்டான்.“காஃபி...”“ஓகே மேடம்...” குனிந்து கூறிவிட்டு சென்றான்.மறுபடியும் மகிழினி விட்ட வேலையை பார்க்க, இங்கே மாடியில் தன் அறையில் படுத்திருந்த விஜயநேத்ரன் இரவு திறந்து வைத்த கண்ணாடி சாளரம் வழியாக ஆதவனின் வெளிச்சம் முகத்தில் பட்டு விழி திறந்தான்.“ச்சே...! இதை மூடாம விட்டுட்டேன்னா...” நினைத்துக் கொண்டு சோம்பல் முறித்தவாறு இன்டர்காமில் காஃபி ஒன்றை கூறிவிட்டு குளியலறைக்குள் நுழைந்தான்.நேரம் சென்று காஃபி வர அதே நேரம் அவனும் வெளியே வர, அதனை வாங்கியவனோ மகிழினியை பற்றி விசாரித்தான்.“மேடம்..! கீழே ஹால்ல தான் சார் இருக்காங்க. இப்போ தான் காஃபி கொடுத்தேன்...” என்றதும், அவனை அங்கிருந்து போகக் கூறினான்.அந்த காஃபியோடு சென்று பால்கனியில் இருந்த குசனில் அமர்ந்தவனின் எண்ணம் முழுவதும் நேற்று நடந்த அனைத்து நிகழ்வுகளில் மட்டுமே..!“யாரிவள்..? இதுக்கு முன்னாடி இவளை நம்ம பார்த்திருக்கோமா? எதுக்காக இப்படியெல்லாம் பண்ணிட்டு இருக்கா..? அம்மாவோட இடத்துல இப்போ இவ அதுவும் மருமகள்ன்னு சொல்லிட்டு. அந்த மேரேஜ் சர்டிபிகேட் ஒர்ஜினல் தான் ஆனால் எப்படி நடந்தது..? நான் சைன் பண்ணுனதுக்கான வாய்ப்பே இல்லையே..? எதுக்காக இப்படி ஒரு பொய்யான நாடகம் ஆடிட்டு இருக்கா..? அப்பறம் எனக்கு மெசேஜ் அனுப்புனது யாரா இருக்கும்..? எதுக்காக இப்படி மெசேஜ் அனுப்பியிருக்காங்க. இது உண்மையா இருந்து அதை பண்ணினது ஒரு வேலை இவளா இருக்குமோ..? இந்த வீட்டுக்கு இதுக்கு முன்னாடி வந்திருக்காளா..?” யோசித்து பார்த்தவனோ அந்த எண்ணிற்கு அழைத்து பார்க்க, ஸ்விட்ச் ஆப் என்று வந்தது.மறுபடியும் முயற்சி செய்ய அந்த நொடி தங்கள் வீட்டு கேட் திறக்க உள்ளே ஒரு இஸ்கார்பியோ கார் வருவது தெரிந்தது.உடனே எழுந்து கீழே காண, சில வினாடிச் சென்று அதில் சிலர் இறங்க, அவர்களை உள்ளிருந்து வந்து மகிழினி இன்பமாய் வரவேற்பது புரிந்தது.முதலில் அதிர்ந்து கண்டவனின் விழிகளோ இரத்தமென சிவக்க, கோவமெனும் இருளுக்குள் புகுந்தவனுக்கு எங்கே அதிலுள்ள வெளிச்சம் தெரிய..? விறுவிறுவென கீழே இறங்கினான்.அதே நேரம் இங்கே கீழே அமர்ந்திருந்த மகிழினி கார் சத்தம் கேட்டதுமே வேகமாய் வெளியே வர அவள் நினைத்தது போன்றே, அன்னை ,அண்ணன், அண்ணி, அண்ணனின் மகள் நால்வரும் காரிலிருந்து இறங்கினர்.“அண்ணா..! அம்மா...! வாங்க உள்ள...” ஆனந்தமாய் தன் வீடென்ற உணர்வோடு உள்ளே அழைத்துச் செல்ல, மேலே தங்களைக் கண்ட விஜயநேத்ரனை கவனிக்க தவறினர்.உள்ளே வந்து நின்ற நொடி, “நில்லுங்க...!” என்ற கர்ஜிக்கும் குரலில் படிகளில் வேக எட்டுகளோடு வந்த விஜயநேத்ரனை தான் அனைவரும் கண்டனர்.அவர்களின் முன்னே வந்து நின்றவனோ கரங்களை இறுக அழுத்தப் பற்றிக் கொண்டு, “யார் நீங்க..? எப்படி என் அனுமதி இல்லாம என் வீட்டுக்குள்ள வரலாம்...” சீறவே,“நான் தான் வரச் சொன்னேன். இவங்க தான் என் குடும்பம்...” அவனின் முகத்தின் முன்னே வந்த அதே சீற்றமுடன் உரைத்தாள்.“நீ சொன்னா வெட்கமே இல்லாம வந்திருவாங்களோ..? ஓ குடும்பமா சேர்ந்து தான் நடிக்கிறீங்களோ..? எல்லாத்தையும் உங்க கைக்குள்ள வச்சி சொகுசு வாழ்க்கை வாழ இப்படியொரு திட்டமா என்ன நினைச்சிக்கிட்டு இருக்கே நீ..? இந்த வீட்டுல நீ இருந்தா உன் குடும்பமும் இருக்கணுமா..? நான் உன்னை மட்டும் தான் இங்கே கூட்டிட்டு வந்தேன். இவங்க யாரும் இந்த வீட்டுக்குள்ள வரக் கூடாது. இந்த நிமிஷமே வெளியே போக சொல்லு. போங்க எல்லாரும்....”“அதை நீங்க சொல்ல தேவையில்லை விஜயநேத்ரன். இந்த வீட்டோட மருமக நான் முடிவெடுக்குற உரிமை எனக்கு இருக்கு...”“இந்த வீட்டுக்கு மருமக இல்லை நீ என் அம்மாவுக்கு மட்டும். அதுவும் ஒரு பொய் சீக்கிரம் நிரூபவிக்கிறேன். அப்பறம் யார் சொன்ன உரிமை இருக்குன்னு? நேத்து வக்கீல் உன் முன்னாடி நீ சொல்லி தானே படிச்சாரு. நீ நிர்வாகத்தையும், கணக்குவழக்கு மட்டும் தான் பார்த்துக்குற சொல்லிருக்காங்க. நீ ஆபிஸ்க்கு சரி இந்த வீட்டுக்கும் சரி ஒரு வேலைக்காரி தான்...” எனக் கூறி முடிக்கும் முன்னே, மகிழினி அண்ணன் வேந்தனின் கரங்களோ அவனின் டீஷர்டை பற்றி இருந்தது.“என்ன தைரியம் இருந்தா என் முன்னாடியே என் தங்கச்சியை நீ வேலைக்காரின்னு சொல்லுவே உன்னை..?” கத்தியவாறு பிடித்த பிடியை இன்னும் அதிகரிக்க முயல, அங்கிருந்தவர்களோ தடுத்தனர்.“அண்ணா என்ன பண்ணுற விடு..?” மகிழினி பிரித்து தடுத்து கூற,“அவன் என்ன சொல்லுறான்னு கேட்டே தானே..? வா போகலாம் முதல. நீ இங்கே இருக்கணும் எந்த அவசியமுமில்லை. இங்கே பாருடா நான் யாருன்னு தெரியும்மா. ஏ.சி.பி.வேந்தன். உன்னை இப்போ நினைச்சா கூட ஜெயில்ல தள்ள முடியும்...”“என்னை பயமுறுத்தி பார்க்குறையா..? முதல்ல என் வீட்டை விட்டு வெளியே போங்க...” உறுமலோடு கத்தியவனோ திரும்பி மாடியேறி விட்டான்.சில நொடி அமைதி பார்த்திருந்த வேலைக்கார்கள் அனைவரும் அங்கிருந்துச் சென்று விட, “ஐ ஆம் சாரிம்மா..! எல்லாம் என் தப்பு தான்...” கூறியவளின் விழிகளில் கண்ணீர் வழிந்தோட, அதுவரை அமைதியாக இருந்த அன்னை கோசலை மகளை அணைத்துக் கொண்டார்.


“விஜய்...” அவரின் அதரங்கள் முணுமுணுக்க, அன்னையிடமிருந்து விலகியவளோ, “விஜய் தான் இது. பார்த்தையாம்மா எப்படி மாறிட்டான்னு...?” அன்னையிடம் கேட்க, அவருக்கோ இதனை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.


“பணம் இருந்தா எல்லாம் மறந்திடும். பெத்த அம்மாவை விட்டிட்டு வெளிநாடு போனவன். அவங்க சொல் பேச்சை கேட்காதவன். தான் சந்தோஷம் மட்டுமே போதும்ன்னு இருக்குறவன். அடுத்தவங்களை ஒரு நாளும் நினைச்சி பார்க்காதவன். வார்த்தைக்கு வார்த்தை விஜய் விஜய் சொல்லுவீங்களேம்மா. அந்த விஜய் தான். இப்போ என்ன சொல்லிட்டு போறான்னு பாருங்க. இவன் எல்லாம் என்ன ரகம். எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு இவனை இந்த நிமிஷமே கொல்லணும் போல இருக்கு. இப்படி ஒரு பிள்ளையை போய் அந்த சத்தியவதனி மேடம் எப்படி தான் பெத்தாங்களோ...!”


“போதும்பா...போதும். இனி எதுவும் சொல்லாதே என்னால கேட்க முடியாது. அதை கேட்குற சக்தியும் எனக்கில்லை. எல்லாமே முடிஞ்சி போச்சுன்னு இப்போ புரிஞ்சது. பெத்தது சரியில்லைப்பா என் வளர்ப்பு தான் தப்பா போச்சு..?” என்று தன் ஈரக்குலையே நடுங்கும் வேதனையோடும், கவலையோடும் புலம்பி அழுது கரைந்தார்.


தன் அன்னையை அமர வைத்து தண்ணீர் கொடுத்து சிறிது நேரம் பேசி சரிப்படுத்த, “மகிழ் நீ வா நம்ம எல்லாரும் போகலாம்...” வேந்தன் அழைக்க, அத்தையை விட்டு வர மாட்டேன் என்பது போல் அவனின் செல்ல மகளும் மகிழினியின் கரங்களை பற்றிக் கொண்டாள்.


“மகிழ் உன் அண்ணன் சொல்லுறதும் சரி தான். எனக்கு என்னமோ நீ இங்கே இவன் கூட தனியா இருக்குறது நல்லதில்லை. வந்திரும்மா...” என்று கனிவோடு வேந்தனின் மனைவி உத்ராவும் கூறினாள்.


மகிழினி யோசிக்க, “இல்ல முடியாது. இவ இங்கே தான் இருக்கணும். இங்க தான் இருந்தாகணும். எல்லாம் என் தப்பு மக கூப்பிடான்னு ஆசையா வந்திருக்க கூடாது. வாங்க நம்ம எல்லாரும் போகலாம். இந்த பெட்டியில உன்னோட துணிமணி எல்லாமே இருக்கு. வாங்க கிளம்பலாம்...” கலங்குவதை நிறுத்தி ஒரு முடிவோடு கூறிய கோசலை தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டுச் சென்றார்.


தடுக்க விழியில்லாது அடர் இருட்டு காடான இந்த வீட்டில் தன்னை விட்டுச் செல்வது மகிழினியின் நெஞ்சினை வதைக்க, அனைத்திற்கும் காரணமான விஜயநேத்ரன் நோக்கி அம்பினை தொடுக்க தயாரானாள்.


கீழே இருந்த தான் தங்கியிருந்த அறைக்கு உடமைகளோடு சென்றவளோ சிறிது நேரம் கழித்து கிளம்பி வெளியே வந்து உணவினை மறுத்து அலுவலகம் கிளம்பி விட்டாள்.


நேரம் சென்று பத்து மணி போல் விஜயநேத்ரன் டைனிங் டேபிளில் வந்து அமர, “எங்கே அவ..?” உணவு பரிமாறும் பெண்ணிடம் கேட்டான்.


“மேடம்..! ஆபிஸ் கிளம்பி போய்ட்டாங்க...” என்க, வெற்றிச் சிரிப்பு உதடுகளின் பரவியது. பின் அவனுமே தன் காரினை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.


காவல் நிலையத்தில் தன் அறையில் அமர்ந்திருந்த வேந்தனின் மனமோ தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது. அந்த தீயை அவனை தவிர யாராலும் அணைக்க முடியாது என்பது உறுதி.


விஜயநேத்ரனுக்கு இணையில்லாத சினத்தோடு இருந்தான் வேந்தன்.


தன் கைபேசியை எடுத்தவனோ யாரையோ அழைத்து, “என்னாச்சு நான் சொன்ன விசியம் இன்னுமா முடியல சீக்கிரம் பண்ணுங்க..? இந்த சத்தியவதனி கேஸ்ல நான் இருக்குறேன் அப்படிங்குற விசியம் வெளியே யாருக்கும் தெரியக் கூடாது.. அதுவும் என் குடும்பத்துக்கு முக்கியமா தெரியக் கூடாது. நான் சொன்ன மாதிரியே பண்ணிட்டு இருங்க...” கூறிவிட்டு கைபேசியை வைத்தவனோ ஆத்திரமோடு டேபிளில் குத்தினான்.


செந்நிற கதிர்கள் தாக்கிய செவ்வானம் சித்தம் கலங்கி சிதையும் அந்தி நேரம் பார் ஒன்றில் வரவேற்பில் பில்பே பண்ண நின்றிருந்தான் விஜயநேத்ரன்.


“கேஸ் ஆர் கார்டு சார்...” என்றதும்,தன் கார்டினை விஜயநேத்ரன் கொடுக்க அவரும் அதனை வாங்கி பில்போட எடுக்கவில்லை.“சார் எடுக்க மாட்டிங்குது. வேற கார்டு இருக்கா..?”“இந்தாக இதுல போடுங்க...” என இன்னொரு கார்டினை கொடுக்க, அதையும் போட்டு பார்த்தால் மறுக்கப்பட்டது என்றே வந்தது.“இதுவும் வொர்க் ஆகலை...”“உங்களுக்கு சரியா போட தெரியுமா..?”“தெரியும் சார். இப்போ கூட போட்டேன் எங்க இதுல பிராபளம் இல்லை. நீங்க கேஸ் இருந்தா கொடுங்க. இல்ல இந்த ஸ்கேன் கோடுல பே பண்ணுங்க...” என்றதும் தன் கைபேசியை எடுத்து முயற்சிக்க, விஜயநேத்ரனுக்கு வேலை செய்யவில்லை.மறுபடியும் மறுபடியும் முயற்சி பார்த்து தோல்வியை தழுவ, அருகே ஏ.டி.எம். இருப்பதாக கூறவே எரிச்சலோடு சென்று பணத்தினை எடுக்க பார்த்தான். அப்போதும் அதே பதில் தான்.அந்த நொடி அவனின் கைபேசியிற்க்கு, ‘உங்களின் வங்கி கணக்கு பணபரிவர்த்தனை தடை செய்யப்பட்டது...’ என வர ஒரு நொடி புரியாது குழம்பியவனுக்கு யாரின் செயலென புரிய, அலைகடலில் வரும் சூறாவளியாய் கொந்தளித்தான்.


(தங்களின் அபிப்பிராயங்களையும், கருத்துகளையும் கீழே உள்ள லிங்கிள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். )
Thread 'கள்வனின் தீராக்காதல் (KT) கருத்து திரி'
https://pmtamilnovels.com/index.php?threads/கள்வனின்-தீராக்காதல்-kt-கருத்து-திரி.32/
 
கள்வனின் தீராக்காதல் !

கள்வன் : 5

விஜயநேத்ரனின் கரங்களில் சிக்கிய கார் நேராக வந்து நின்றது அவனின் அலுவலகத்தில் தான். அதனை விட்டு இறங்கியவனோ புயலென அக்னியாய் விரைந்தான்.

கையில் இருந்த கோப்புகளையும், மடிக்கணினியையும் கண்டு கொண்டே அதி தீவிரமாக வேலையில் இருந்த மகிழினியின் அறை கதவு பலமாக திறக்க, உள்ளே நுழைந்தவனோ நேராக அவளை நோக்கி பாய்ந்து வந்தான்.

சத்தம் கேட்டு நிமிர்ந்தவளோ அவனின் செய்கையைக் காண, “உன் மனசுல என்ன நினைச்சிக்கிட்டு இருக்கே..? காலையில தானே நீ ஒரு வேலைக்காரின்னு சொன்னேன். என்ன தைரியம் இருந்தா என் கார்டை பிளாக் பண்ணுவே சொல்லு..?” அவளின் தோள்பட்டையை பற்றி எழுப்பி அழுத்திக் கேட்க,

“விடுங்க என்ன..?” விலகவே போராடினாள்.

“ஏய்..உன்னை...” அவளின் கழுத்தில் கரங்களை வைத்து நெறிக்க பின்னோடு சென்றவளோ சுவரில் முட்டி தான் நின்றாள். அதற்கு மேல் செல்ல முடியவில்லை.

“இனி ஏதாவது என் விசியத்தை தலையிட நினைச்சே அப்பறம் இப்படியே கொன்னு தொங்க போட்டிருவேன் பார்த்துக்கோ...” மிரட்டவே, அவனின் இறுகிய பிடியில் எச்சிலை கூட விழுங்க முடியாது மூச்சுக்கு திணறி திண்டாடினாள்.

வலியோ அதிகரிக்க அவளின் கரங்களோ அவனை சரமாரியாக அடித்து வெளுத்து, “விடு..விடு..என்னை...” போராடி வார்த்தைகள் வராது உளறினாள். வலியில் அவளின் சிப்பி கண்களில் முத்தாய் கண்ணீர் கோர்க்க, அவளின் கண்களும் சிவந்திருக்க, அதன் பின்னே விட்டான்.

மூச்சினை விட்டு துரத்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் அங்கிருந்த தண்ணீரை எடுத்துக் குடிக்க, அமைதியாக அவளின் செயலைக் கண்டவாறு இருந்தவனின் கோபவிழிகள் சிவந்திருந்த கழுத்தின் மீது படிந்தது. விஜயநேத்ரன் உடலும், கரமும் எப்போது வலிமை கொண்டதாகவே இருக்கும்.

“கணக்குவழக்கு பொறுப்பு எல்லாமே என்னோட கையில. என் விருப்பம் நான் அப்படி தான் பண்ணுவேன். உங்களுக்கு வேணும்ன்னா நீங்க சம்பாரிச்சி செலவு பண்ணனும். இந்த ஆபிஸ் அகவுண்ட்ல இருந்தோ, வீட்டு அகவுண்ட்ல இருந்தோ இனி ஒரு ரூபா கூட உங்களுக்கு வராதது...” என அவன் சற்று முன் கொடுத்த காயத்தையும் பொருட்படுத்தாது கூறினாள்.

“இது ஒன்னும் உன்னோட பணமோ உன்னோட கம்பெனியோட பணமோ கிடையாது. என் அம்மாவோடது....”

“உங்க அம்மா பொறுப்பை என் கிட்ட கொடுத்திருக்காங்க. இப்போ என்னோடது. என் விருப்பம் போல தான் பண்ணுவேன். நீங்க காலையில உங்க விருப்பம் போல பண்ணுனீங்களே அதுக்கு பதில் தான் இது...” கூறியவளோ இதற்கு மேல் ஒன்றுமில்லை என்பது போல் அமர்ந்து தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

உதாசீனப்படுத்தி அவமானப்படுத்துபவளை பார்க்க பார்க்க தீராத ஆத்திரம் நெருப்பாய் எரிய அவளை பார்த்த வண்ணம் தன் முன்னே இருந்த இருக்கையை உதைத்து விட்டுச் சென்றான்.

அவன் சென்ற விட்ட பின் நெஞ்சிலே கை வைத்து விட்டாள் மகிழினி. கழுத்து வலியோ உயிரை பறிப்பது போன்ற உணர்வு. கொஞ்சம் நேரம் மட்டும் விடாமல் இருந்தால் அவ்வளோ தான் இந்த நொடி பரலோகம். எந்த விசியம் எடுத்தாலும் எதற்காக இப்படியொரு கோவம் கொள்கிறான்..? இனி என்ன செய்யப் போகிறான் பார்க்கலாம்..?

அச்சமே இருந்தாலும் சிங்கத்தின் குகைக்குள் சிங்கத்தோடு வாழத் தான் நினைத்தாள் மகிழினி.

ஆதிகேசவன் இல்லம் என்ற பெயர் பலகை கொண்ட வீட்டில் அந்த வீட்டாள்களின் பேச்சு சத்தம் தான் ஒலித்தது.

“என்னடா கிஷோர்..? எப்படி இருக்கா அந்த சத்தியவதனி மருமக, அந்த நிறுவனத்தோட புது தலைமை பொறுப்பாளர்...” என்று தன் மூத்த மகனிடம் கேட்டார் ஆதிகேசவன்.

“மாமியார் மாதிரியே வருவா போலப்பா...! சின்னப் பொண்ணுன்னு நம்ம தப்பு கணக்கு போட முடியாது. ஆமா திடீருன்னு எப்படி மருமகள்ன்னு வந்தா அதுவும் நமக்கு தெரியாம எப்போ கல்யாணம் பண்ணி வைச்சாங்க..?” என்று சந்தேகமாய் தன் தந்தையிடம் கேட்க, அங்கே வந்து அமர்ந்த இன்னொருத்தான்.

“அந்த சத்தியவதனி தொழில்ன்னு வந்துட்டா பண்ணாத கள்ளத்தனமே இல்லை. ஒன்னு கை நழுவி போகுதுன்னு தெரிய வரும் போதே பணத்தை வச்சும், ஆளை வச்சும் கைபத்துற கேஸ் தான் அவங்க. ஏதா இருந்தாலும் புகுந்து விளையாட நினைக்கிற ஆளு. அதான் அந்த கடவுள் என் கூட வான்னு இழுத்துட்டு போயிட்டாரு...” என்று எள்ளல் கொண்ட வெற்றி சிரிப்போடு சிரித்தான் தருண்.

“நம்ம கொடுக்குற டாரச்சர் இன்னும் அனுபவச்சி கொஞ்சம் கொஞ்சமா சாவான்னு பார்த்தா இப்படி டக்குன்னு போயிட்டா. விதி நம்ம மூலமா தான் அவ சாகணும்ன்னு இருந்திருக்கு போல...” என ஆதிகேசவன் கூற,

கிஷோரோ, “நம்ம அவ்வளோ செஞ்சோம். இப்போ பாருங்க அந்த சொத்து, ராஜ்ஜியம், நிறுவனம் எதுவுமே நமக்கு கிடைக்கல. எல்லாத்தையும் வச்சி புதுசா வந்தவ சொகுசு காணுற..?” என்க,


“இவளுக்கு பின்னாடியும் எமன் துரத்திட்டு வந்தா எத்தனை நாளைக்கு இருக்க முடியும்...”


“அப்போ இவ கிட்டயும் விளையாட வேண்டியது தான்...” கூறிவிட்டு மகன்கள் இருவருமே சிரிக்க, தந்தையும் அனுமதி கொடுப்பது போல் பார்த்து சிரித்தனர்.

ஆதிகேசவன் செல்வாக்கும், பணபலமும் கொண்டவர் தான். இருந்தாலும் இவரை விட முதற்படியில் இருப்பது சத்தியவதனி தான். ஆதிகேசவனின் தம்பி மனைவி தான் சத்தியவதனி.

விஜயநேத்ரன் தந்தை அவனின் சிறு வயதிலே இறந்த விட இந்த ராஜ்ஜியம் முழுவதும் தனக்கே என்று ஆதிகேசவன் நினைத்திருந்தார், விதியின் விளையாட்டால் அவரின் தந்தை அப்போதே இரு பங்காக பிரித்து விட்டார். சத்தியவதனி, ஆதிகேசவனை விட தொழிலில் எப்பவும் முன்னேற்றம் கொண்டவராக இருக்க மருமகளின் மீது முழு நம்பிக்கை கொண்டார் மாமனார். தன் மாமனார் கொடுத்த சொத்துக்களை வைத்து பல மடங்காக மகனுக்கு உற்பத்தி செய்யும் எண்ணத்தில் வளர்ந்துக் கொண்டே போக, ஆதிகேசவனுக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை.

ஆதிகேசவனுக்கு நான்கு பிள்ளைகள், ஒரு மகள், மூன்று மகன்கள். ஒருவன் வெளிநாட்டில் இருக்க, மற்ற இருவரும் தந்தையின் தொழிலை கவனித்துக் கொண்டு இருக்கின்றனர். இதில் மகளுக்கும் மூத்தவன் கிஷோர் இருவருக்கும் மட்டும் திருமணம் முடிந்து விட்டது. ஆதிகேசவனின் குணத்திற்கு தப்பாத மனைவி என்று தான் சொல்ல வேண்டும். எந்த நேரமும் கிளப், பார்லர் என்று சுற்றிக் கொண்டிருப்பவர்.

ஆரம்பத்தில் ஆதிகேசவன் பார்த்த தொழில் சரிவினை அடைந்துக் கொண்டே வர, பல கோடிகளை இழக்க ஆரம்பித்தார், இவர் இழக்க சத்தியவதனி ஏறுமுகத்தில் இருக்க பெண்ணிடம் தொழிலில் தோற்ற உணர்வு. தொழிலிலே போட்டியாக பலர் சத்தியவதனிக்கு இருந்தாலும் அந்த தொழிலையே தான் கைபற்றும் முயற்சியில் ஆதிகேசவன் இருந்தார். விஜயநேத்ரன் தொழிலில் விருப்பமில்லை என்பதை வளர்ந்து வந்த பருவத்திலே அறிந்துக் கொண்டார். ஆதிகேசவன் தந்தை இறந்து விட, பல நாள் ஆசையை கொஞ்சம் கொஞ்சமாக கைபற்ற முடிவு செய்து தொல்லை கொடுக்க அதில் சிக்கியது தான் சத்தியவதனி. இறந்த பின் விஜயநேத்ரனிடம் மெல்ல பேசி ஏமாற்றி பறித்துக் கொள்ளலாம் என்று நினைத்திருக்க மருமகள் என்ற ஒருத்தி புதிதாக வந்தது இடைஞ்சலாக தான் இருந்தது.


“அப்போ சீக்கிரமே அந்த புதுமருமக மகிழினி யாரு அவளோட குடும்பம் எங்கே இருக்கு..? எங்கயிருந்து வந்தா அப்படிங்குறதை பார்த்து என் விளையாட்டை ஆரம்பிடிக்கிறேன்...” எனக் கூறிவிட்டு எழுந்துச் சென்றான் தருண்.

தருணின் இந்த குரோதம் கொண்ட விளையாட்டு மகிழினியை எப்படி பாதிக்க போகிறது..? சத்தியவதனியே இவர்களின் பிடியில் தாங்காத போது மகிழினி எப்படி தாங்கிக் கொள்வாள்..?


நீலமேகங்கள் கருமையாக மாறி தனிமையில் இனிமை தரும் இதமான இருள் நேரம் தான் வந்த கேப்பினை அனுப்பி விட்டு வீட்டுக்குள்ளே நுழைந்தாள் மகிழினி.


அவளை வரவேற்பது போன்றே ஹாலில் கையில் மதுகோப்பையோடு அமர்ந்திருந்தான் விஜயநேத்ரன். நுழைந்த நொடி அதனை கண்டவளோ தன் ஈரக்குலையே அதிர்வது போல் நடுங்க, சுற்றி பார்த்தால் வேலை பார்ப்பவர்கள் யாருமேயில்லை.

மறுபடியும் இவனோடு ஒரு போராட்டமா சலிப்போடு எண்ணிக் கொண்டவளின் உள்மனதில் பேரலையாய் அச்சம் படர்ந்தது. ஏற்கனவே அவனால் காயம் கொண்ட கையும் சரி கழுத்தும் சரி இன்னும் வலியில் துடிக்க இப்போது என்ன செய்யப் போகிறானோ..?

“வீட்டுலையே இந்த சரக்கு பாட்டில் எல்லாம் ஸ்டாக் வச்சிருப்பானோ..?” நினைத்துக் கொண்டு மௌனமோடு அவன் இருப்பதையே கண்டுக் கொள்ளாதது நடந்து வந்தாள்.

தன்னறை நோக்கிச் செல்ல, “நில்லுடி..! நில்லு...” தடுமாறி எழுந்து கூறியவனோ அவளின் முன்னே வந்து நிற்க, குமட்டிக் கொண்டு வருவது போல் இருந்தது.

“ச்சே..! எப்படி தான் இந்த கருமத்தை குடிக்கிறான். அதுவும் வீட்டையே பாழாக்குறான். என்ன மனுஷன் இவன்..?” எண்ணத்தோடு முறைப்பாய் காண, அவளின் உயரத்திற்கு கீழே குனிந்து தோள்பட்டையில் மாலையாக கை போட்டான்.

“நீ என் கார்டை பிளாக் பண்ணுனா என்னால ஒன்னும் பண்ண முடியாதுன்னு நினைச்சையா..? இங்கே பாரு...எத்தனை பாட்டில் வச்சிருக்கேன்னு. பார்த்தையா இப்போ தெரியுதா நான் யாருன்னு..?” கெத்தாக போதையில் உளற,

“இதுல இந்த எருமைக்கு பெருமை வேறையா..?” மௌனமோடு மனதில் நினைத்தாள்.


“என்னையே எதிர்க்க நீ யாருடி..? சொல்லு நீ யாரு..யாருடி நீ சொல்லு..?”

“ச்சி...விடுங்க என்ன முதல...” விலக போராட,

“நீ என் பொண்டாட்டி தானே நான் ஏன் விடணும். இங்கே வா...” தோள்பட்டையில் இருந்த கரங்களை எடுத்து தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொள்ள, விலக முடியாது திணறினாள்.


அவர்களுக்கு முன்னே சத்தியவதனி புகைப்படத்தில் இருக்க, அவரை மட்டுமே அவள் அந்த நொடி கண்டாள். அதனை உணர்ந்தவனும், “பார்த்தியா என் அம்மாவை எப்படி நிக்கிறாங்கன்னு..? உன்னால இப்படி இருக்க முடியுமா..? இவங்களோட இடத்துல நீ இருந்தா இவங்களாவே மாறிடலாம் நினைப்பா உனக்கு..? சொல்லு என் அம்மாவை எதுக்கு நீ கொலை பண்ணுனே..? ஏன் கொலை பண்ணுனே..? இந்த சொத்துக்காகவா சொல்லுடி சொல்லு...” என்க, அவனை ஆர்ச்சிரியமாகக் கண்டாள்.


“நான் உங்க அம்மாவை கொலை பண்ணிருப்பேன்னு நீங்க நினைக்கிறீங்களா..? நான் யாருன்னு இன்னுமா உங்களுக்கு தெரியல..? எதுக்காக விஜய் நீங்க இப்படி இருக்கீங்க..?”

“ஏய்..! என் அம்மா தவிர யாருமே அப்படி கூப்பிட கூடாது. இந்த வீடு, பணம், பதவி, அந்தஸ்து என் அம்மாவோட தொழில் இதெல்லாம் உனக்கு வேணுன்னு எனக்கு தெரியும். அதுனாலே தானே இப்படி பண்ணுனே..? ஏன் கொன்னே..?” கத்தியவனின் கரங்களோ அவளின் மேனியை போதையோடு காயப்படுத்த, சட்டென கரத்தினை அவனின் கண்ணத்தில் பதித்து விட்டாள்.

“போதையில உலர்றதை நிறுத்துங்க. உங்க அம்மா இறந்தது நெஞ்சு வலியில. தேவையில்லாத விசியங்களை கற்பனை பண்ணாம போய் தூங்குங்க...” கூறியவளோ விலகப் பார்க்க, முடியவில்லை.

அவளின் கரங்களோ அவனிடம் சிக்கியிருக்க, “நீ என் பொண்டாட்டி தானே..? அப்போ எங்க போறே..?” கூறியவாறு அவள் அடித்த கன்னம் அவமானத்தில் உணர்ச்சிகளை தூண்ட, தன்னோடு அணைத்து அவளின் மீது படர ஆரம்பித்தான்.


கருத்துகளை பகிர

Thread 'கள்வனின் தீராக்காதல் (KT) கருத்து திரி' https://pmtamilnovels.com/index.php?threads/கள்வனின்-தீராக்காதல்-kt-கருத்து-திரி.32/ 
Last edited:
கள்வனின் தீராக்காதல்!

கள்வன் : 6


மகிழினி அடித்ததை தாங்க முடியாது ரௌத்திரம் கொண்ட விஜயநேத்ரன் அவளை இழுத்து தன்னோடு அணைத்து எல்லை மீற முயன்றான்.

அவனின் இந்த செய்கையை எதிர்பாராத மகிழினி தடுமாறி, “விடுடா..என்னை விடு...விடுடா...!” போராடி துள்ளவே, இறுக்கமோ அதிகரித்தது.

அவனின் இதழ்களோ அவளின் மீது ஊர்வலம் நடத்த போதை வாசமோ அவளுக்கு குடலை பிரட்டிக் கொண்டு வந்தது. தன் கழுத்து வளைவில் உரசும் அவனின் செய்கை, ஒரு வித அருவருப்பாய் பூச்சி உர்வதை போல் உணர்ந்தாள்.

முகம் சுழித்தவளோ தன்னிடமிருந்து அவனைப் பிரிக்க முயற்சிக்க, தள்ளாடிக் கொண்டிருந்தாலும் அவனின் கால்களோ தரையில் அழுத்தப் பதிருந்திருக்க அவளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

காலையில் இருந்து அலைந்து திரிந்த கலைப்பும், மதிய உண்ணாததும் சேர்ந்து அவனிடம் போராட முடியாது சோர்ந்துப் போக வைத்தது. அவனின் செய்கையும் முன்னேறியது.

“நீ இப்படி பீகேவ் பண்ணுவேன்னு நான் நினைச்சி கூட பார்க்கலை..? மோசமான மிருகமா இருக்கே..? விடுடா என்ன..?” ஆடை மீறி எல்லையை கடக்கும் அவனின் கரங்களை விடுக்க முயற்சி செய்தவளோ அப்படியே தடுக்காது விட்டாள்.

அவளின் மனம் அந்த நொடி யோசித்தது ஒன்றை. அவள் நினைத்தது போன்றே மகிழினியிடம் எதிர்ப்பு வராது போக, சற்று தளர்ந்து நிமிர்ந்து அவளைக் கண்டான்.

“என்னாச்சு ஏன் அப்படி பார்க்குற..? நான் உன் பொண்டாட்டி தானே. தாராளமா என்னை எடுத்துக்கோ..? ஆம்பளை அப்படிங்குறதை நிரூபவிக்க உன்னால இதை தவிர வேற என்ன பண்ண முடியும். அதுனால தானே உன் திமிரை என் கிட்ட இது மூலமா காட்டுற..?” முறைப்போடு கூற, அவளின் கன்னமோ தீயாய் எரிந்தது.

“என்னடி சொன்னே..? நான் ஆம்பளைன்னு உன்கிட்ட நிரூபவிக்கணும் எனக்கு எந்த அவசியமுமில்லை. நான் நினைச்சா இந்த நிமிஷம் கூட உன்னை கொல்ல முடியும். என் விசியத்துல தலையிடாம ஒழுங்கா இருந்துக்கிற வழியை பாரு. அதையும் மீறி எதையாவது பண்ணுன அப்பறம் இப்போ விட்டதை தொடர வேண்டியதா இருக்கும். இருந்தாலும் சும்மா சொல்லக் கூடாது எப்படி தன்னை தற்காத்துக்கணும் தெரிஞ்சே வச்சிருக்கே..? வார்த்தையால அடிக்கிற வித்தை. கவனிச்சிக்கிறேன்...” மிரட்டலாய் பல்லை கடித்து கூறியவனோ விலகி மாடியேறிச் செல்ல, தான் அடித்தது போல் அவன் அடித்த கன்னமும் செவ்வென சிவந்திருக்க அறைக்குச் சென்றாள்.

அறைக்குள் வந்து படுக்கையில் சரிந்தவளின் கண்களிலோ கண்ணீர் வழிந்தோடியது.

‘இந்த இடத்தில் விஜய்வாக இருக்க போய் சரி விலகிவிட்டான். இதே வேறு யாராவது இருந்திருந்தால் தன்னால் என்ன செய்ய முடியும்..? சற்று முன் அவன் தன்னை நெருங்கியதில் ஒன்று புரிந்தது. அது தான் பலகீனமாக இருப்பது. இதே போல் பெண்மையை காரணம் காட்டி மடக்கி தன்னை கீழ் தள்ளும் நிலைமை வரும் போது தன்னை தன்னால் தற்காத்துக் கொள்ள வேண்டும். அதுக்கு தன்னை முதலில் தான் திடப்படுத்த வேண்டும்...’ மனதுக்குள் உறுதிக் கொண்டாலும், மாறாய் மெல்லிய மனம் கொண்ட இதயமோ அழுதது. இப்போதெல்லாம் தான் அதிகமாக அழுவதை உணர்ந்தாள்.

“இங்கே பாரும்மா பொண்ணா பிறந்தா இந்த உலகத்துல நம்ம அடிமைப்பட்டு போய் அழுதுக்கிட்டே இருக்கணும் அவசியமில்லை. எதையும் எதிர்த்து நிக்கணும். தோல்வியோட கடைசி படில நின்னாலுமே வெற்றியை பற்றி மட்டும் தான் யோசிக்கணும். நான் உன் மேல நம்பிக்கை வச்சிருக்கேன்...” என்று தலை வருடி கூறிய சத்தியவதனியின் வார்த்தைகள் இன்னும் தன் செவியில் ஒலிப்பது போன்றே இருந்தது.

நினைவுகளோ தான் இப்போது இருக்கும் நிலையை நினைக்க கடந்த காலத்திற்கு பயணித்தது.

சிறுமியாய் முதல் முறையாக இந்த வீட்டுக்குள் அன்னையின் கைபிடித்து அடியெடுத்து வைக்க, இனிய முகத்தோடு வரவேற்றார் சத்தியவதனி.

“வணக்கம்மா..!”

“என்ன கோசலை இந்த பொண்ணு யார்..?”

“என் பொண்ணு தான்ம்மா. இன்னைக்கு இவளுக்கு லீவ். இவ அண்ணன் வேற ஸ்பெஷல் கிளாஸ் இருக்குன்னு போயிட்டான். தனியா இருக்கேன் நானும் வரேன்னு ஒத்த காலுல நின்னா அழுதா சரி வான்னு கூட்டிட்டு வந்தேன். சேட்டை பண்ண மாட்டா. என் பக்கத்துல கூட வச்சிக்கிறேன்மா...” என்க,

“லிட்டில் பிரின்சஸ். இங்கே வாங்க..!” அவளின் உயரத்திற்கு சற்று குனிந்து மகிழினியை அழைக்க, அன்னையை கட்டிக் கொண்டு பயத்தோடு நின்றாள். அவளுக்கு அவ்வளோ பெரிய வீடே சற்று மிரட்சியை தான் கொடுத்தது.

“அம்மா கூப்பிடுறாங்களா போம்மா பேசு...” தன் அன்னை கூறியதும் தலையாட்டிவளோ அவரை நோக்கி வர, அப்படியே அவளை குவியலாய் தூக்கி சோபாவில் நிற்க வைத்தார்.

பஞ்சு மெத்தை போன்றதில் நிற்பது மிருவாக இருக்க, “நீ போ வேலையை பாரு கோசலை. இன்னைக்கு மாமாவை டாக்டர் செக் பண்ண வாராங்க. நான் வீட்டுல தான் இருப்பேன். பார்த்துக்குறேன்...” என்றதும் அவரும் தன் மகளை சத்தியவதினியிடம் விட்டுச் சென்றார்.

“செல்லக் குட்டி பெயர் என்ன..?” கொஞ்சி அவளின் கன்னம் தொட்டு கேட்க,

“மகிழினி. அம்முன்னு கூப்பிடுவாங்க...” என்றாள்.

“என்ன படிக்கிறீங்க..?”

“மூணாப்பு...”

“அப்படியா..! ஸ்கூல்ல என்ன சொல்லிக் கொடுத்தாங்க..? உன் அண்ணன் பெயர் என்ன..? என்னென்ன விளையாடுவீங்க நீங்க..?” எனக் கேள்வியாக கேட்க, அவளும் அவரின் அருகில் அமர்ந்து பேச்சுக் கொடுத்தாள்.

முதலில் பயத்தோடு பேச ஆரம்பித்தவள் அவரின் மென்மையான அணுகுமுறையில் சட்டென பழகி விட்டாள். பெண் பிள்ளை இல்லாத சத்தியவதனி அழகிய நிலவான மகிழினி பார்த்ததும் பிடித்து விட்டது.

அப்படியே நேரம் செல்ல பத்தாம் வகுப்பு ஸ்பெஷல் கிளாஸ் முடிந்து சீருடையில் வீட்டுக்கு வந்த விஜயநேத்ரன் தன் அன்னை மகிழினியை மடியில் வைத்து ஊட்டுவதைக் கண்டான்.

“அம்மா..! யார் இந்த பாப்பா..?” வந்ததும் நேராக அன்னையிடம் சென்று பொறாமையோடு கேட்க,

“இந்த பாப்பா உனக்கு பிடிச்சிருக்கா..? அழகா இருக்கால..?”

“அழுக்கா இருக்காம்மா. இவளோட ட்ரெஸ்சை பாரு. நீட் ட்ரெஸ்சிங் ஸ்டைல்லே இல்லை. வெரி பேடு...” கோவமாக கூறி விட்டு அங்கிருந்துச் சென்று விட்டான். தன் அன்னை இப்படி தன்னை மடியில் வைத்து ஊட்டவில்லையே விபரம் தெரிந்து என்ற எண்ணம் அவனுக்கு.

மகிழினி அவன் கூறியதின் அர்த்தம் எதுவும் தெரியவில்லை. நாட்கள் செல்லச் செல்ல என்றாவது ஒரு நாள் மகிழினி வருவதுண்டு. விஜயநேத்ரன் பத்தாம் வகுப்பு என்பதால் விடுமுறை நாட்கள் கூட அவனுக்கு வகுப்புகளே இருக்கும்.

அப்படியும் என்றாவது ஒரு நாள் மகிழினியை பார்த்துவிட்டால் கசப்பை மட்டுமே கக்குவான் தவிர ஒரு நாளும் அவளிடம் பேசியதில்லை. சத்தியவதனி மகனின் சிறு வயது பொருட்களை எடுத்து அவளிடம் கொடுத்தால் அவ்வளோ தான் அன்னையை ஒன்றும் கூற மாட்டேன் அவர் இல்லாத நேரம் இவளை அடித்து வைத்து சென்று விடுவான். வருடங்கள் பிறந்து விஜயநேத்ரனுக்கு பக்குவம் வந்தாலுமே எதிரியாகவே இருந்துக் கொண்டான். பாசம் காட்டும் அண்ணனின் அன்பிலே வளர்ந்த மகிழினி விஜயநேத்ரனை கண்டாலே பயந்து ஒதுங்கிச் சென்று விடுவாள். அவளின் பயம் இவனுக்கு மிதப்பாகியது.

ஒரு நாள் சத்தியவதனி சோபாவில் அமர்ந்து அலுவலக வேலைகளை பார்க்க, அவரின் அருகில் அமர்ந்து தன் புத்தகங்களை விரித்து வைத்து ஹோம்வொர்க் செய்துக் கொண்டிருந்தாள் மகிழினி.

அப்போது எதார்த்தமாக திரும்பிய சத்தியவதனி அவளின் செய்கையை கவனித்த வண்ணம் சிறிது நேரம் இருக்க, அவருக்கு புரிந்தது இவளுக்கு கணக்கு நன்றாக வருமென..!

“உனக்கு கணக்கு நல்லா வருமா அம்மு..?”

“ஹ்ம்ம் சூப்பரா போடுவேன் ஆண்ட்டி. எங்க ஸ்கூல்ல எப்பவும் நான் தான் பஸ்ட்டு...” கரங்களை தூக்கி சந்தோஷமாக கூற,

“அப்படியா..! எங்கே நான் சொல்லுற கணக்கை போடு...” என்று சின்ன சின்ன பெருக்கல், வகுத்தல் கணக்குகளை கூற, நொடியில் அதற்கு பதில் கூறினாள்.

‘ஐந்தாம் வகுப்பு படிக்கும் பெண்ணிற்கு இவ்வளோ புத்தி கூர்மையா..?’ வியந்து தான் போனார்.

அந்த நொடி அவர் ஒன்றை யோசித்தார். சாதாரண சின்ன பள்ளியில் போதுமான வசதி கூட சரியில்லாத இடத்திலே இவள் இவ்வளோ படிக்கிறாள் என்றால் நல்ல பள்ளியில் அல்லது சி.பி.எஸ்.சி பள்ளியில் படித்தால் எப்படி வருவாள்.

“அம்மு.! உனக்கு இங்கிலீஷ் தெரியுமா..?”

“கொஞ்சம் தெரியும். ஆனா பேசுனா புரிஞ்சுப்பேன். எனக்கு தான் பேச வாராது...” என்க,

“சரி அப்போ ஆண்ட்டி உன்னை பெரிய இஸ்கூல்ல படிக்க வைக்கிறேன். நீ படிச்சி எனக்கு உதவி பண்ணுறையா..?”

“என்ன உதவி..?”

“உனக்கு ஒரே புக் தானே இருக்கு. ஆண்ட்டிக்கு பாரு எவ்வளோ புக் இருக்கு. என்னால எப்படி தனியா இவ்வளோ கணக்கையும் எழுத முடியும்...”

“விஜய் அண்ணா இருக்காங்களா அவங்க கிட்ட கொடுங்க...”

“அவனுக்கு உன் அளவுக்கு திறமை இல்லை. படிப்புல கூட மந்தம் தான். அவனுக்கு விளையாட்டுன்னா தான் உயிர். அப்போ நீ எனக்கு உதவி பண்ண மாட்டே அப்படி தானே..?” வருத்தமோடு முகத்தை வைத்துக் கொண்டு கூறவே, அந்த பிஞ்சு மனமும் வருந்தியது.

“நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுறேன். ஆனா இவ்வளோ வளர்ந்ததுக்கு அப்பறம். அதுவரை நான் படிக்கிறேன்...” என சைகை செய்து தலையாட்டி கூற,

“என் செல்லம் எனக்கு அப்பறம் நான் பார்க்குற எல்லா வேலையும் நீ தான் பார்க்கணும். இந்த வருஷம் படிப்பு முடிஞ்சதுமே உன்னை ஆண்ட்டி வேற ஸ்கூல்ல சேர்த்து விடுறேன்...” எனக் கூறி அவளின் கன்னத்தை கிள்ள, அதுவரை கேட்டுக் கொண்டிருந்த விஜயநேத்ரன் மௌனமோடு அங்கிருந்துச் சென்றான். மறுநாள் நெற்றியில் காயத்தோடு இருந்தாள் மகிழினி. பெரியவனான பின்பும் கூட சிறு பிள்ளையின் மீது பொறாமை உணர்வு இருக்க தான் செய்தது.

பள்ளி பருவம் முடியும் தருவாயில் சத்தியவதனியின் மாமனார் இறந்து விட, அதனை தொடர்ந்து விஜயநேத்ரனும் தனக்கு பிடித்த படிப்பினை தேர்ந்தெடுத்து தன் விருப்பம் போல் தான் இருப்பேன்னென கூறி வெளிநாடு பறந்து விட்டான்.


சத்தியவதனிக்கு பார்த்ததும் மகிழினியை எப்படி பிடித்து விட்டதோ அதே போல் தான் கோசலை அந்த வீட்டில் வேலைக்கு சேர்ந்த முதல் நாளே நான்கு வயது குழைந்தையான விஜயநேத்ரனை பிடித்து விட்டது.

சத்தியவதனிக்கு அப்போது கணவனை இழந்த துக்கம், தொழில் சரிவு, சொத்து பிரிவு, கூடுதல் பொறுப்பென வேலைகளும், கவலைகளும் அவரை வாட்டி எடுக்க, மகனை கூட கவனிக்க தவறினார்.

அந்த நேரங்களில் எல்லாம் கோசலையே சமையல்காரியாக மட்டுமில்லாது விஜயநேத்ரனுக்கு செய்ய வேண்டிய வேலையை எல்லாம் செய்து அன்னையின் மறுவுருவாக இருந்து கவனித்துக் கொண்டார்.

உணவு கூட அவனுக்கு பிடித்ததை மட்டும் தனியாக சமைத்து அவனின் விருப்பம் போல கேட்டதை எல்லாம் செய்து தருவார். சத்தியவதனியை போன்றே விஜய் என்று அழைக்க அது தான் அவனுக்கு பிடித்தும் இருந்தது.

அப்படி சந்தோஷமாகச் சென்ற நாட்களில் தான் வளர்ந்து பருவ பெண்ணான மகிழினி சத்தியவதனியின் கவலையை அறிந்துக் கொண்டாள். அவரின் கவலை ஒவ்வொரு நொடியும் மகனை நினைத்து மட்டும் தான் இருக்கும்.

சத்தியவதனி கூறியது போன்றே மகிழினியை இங்கிலீஷ் மீடியம் பள்ளியில் படிக்க வைத்து அவளுக்கு தேவையான உதவியும் செய்து, பிசினஸ் படிப்பு பற்றியும் சொல்லிக் கொடுத்தார்.

இவரின் இந்த செயல் தான் தனக்கு பின்னாளில் பெரும் தைரியத்தை கொடுக்கும் என்பதை அப்போது மகிழினி அறிந்திருக்கவில்லை. ஆனால் சத்தியவதனிக்கு தெரிந்து முடிவெடுத்தே அனைத்தும் செய்தார்.


கருத்துகளை பகிர:


Thread 'கள்வனின் தீராக்காதல் (KT) கருத்து திரி' https://pmtamilnovels.com/index.php?threads/கள்வனின்-தீராக்காதல்-kt-கருத்து-திரி.32/
 
கள்வனின் தீராக்காதல் !

கள்வன் : 7

மகிழினி பள்ளி இறுதி வருடத்தில் இருக்கும் போது அவளை விட ஒன்பது வயது மூத்தவனான அவளின் அண்ணன் வேந்தனுக்கு காவல்துறையில் வேலை கிடைத்தது.

அன்னையை இனி வேலைக்குச் செல்ல வேண்டாமென கூறி நிறுத்தி விட, மகிழினியும் அவ்வப்போது சத்தியவதனியின் வீட்டுக்குச் செல்லும் பழக்கம் நின்றுவிட்டது.

ஆனாலும் அவர்களின் உறவினை சத்தியவதனி வளர்த்துக் கொண்டே தான் இருந்தார். சிறு வயதிலே தந்தை இறந்து விட கஷ்டப்பட்டு போராடி நல்ல பதவிக்கு வந்த வேந்தன் போலீஸ் குவாட்டர்ஸ்சில் தங்கை, அன்னையோடு சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.

சத்தியதவனி அடிக்கடி வந்து இருவரையும் பார்த்துச் செல்வார். பெரும்பலான நேரம் வேந்தன் பணியிலே இருக்க இவர்களின் உறவின் ஆழம் அவனுக்கு அறியவில்லை. மகிழினி கல்லூரி சென்றுக் கொண்டிருக்க அவளுக்கு வேந்தனும் சத்தியவதனியும் இருவருமே உதவி புரிந்தனர்.

பிசினஸ் சம்மந்தப்பட்ட படிப்பினை தேர்ந்தெடுத்து படித்தாள். அவளுக்கு அதில் அப்படியொரு ஆர்வம். தன்னோட ரோல்மாடல் யார் அப்படின்னு கேட்டால் ஒரு நிமிஷத்துல சத்தியவதனி எனச் சொல்லும் அளவுக்கு அவரோட திறமை, பண்பு, வேலை பார்க்குற விதம், அணுகுமுறை எல்லாமே பிடித்து தெரிந்து வைத்துக்கொள்ளத் தொடங்கினாள்.

மாதம் ஒரு முறை வந்துச் சென்றவர் வருடங்கள் ஓட ஓட அடிக்கடி வர ஆரம்பித்தார். அப்படி வரும் போதெல்லாம் அவரிடம் ஏதோ ஒரு மாற்றம் தென்படுவதை மகிழினி கவனித்தாள்.

“ஏதாவது பிரச்சனையா..? ஏன் ஒரு மாதிரியா எந்த நிமிசமும் தவிப்பாவே இருக்கீங்க ஆண்ட்டி.?” என்க,

“ஒன்னுமில்லை...” என்றார்.

எப்போது அவள் கேட்டாலும் அதை மட்டுமே சொல்வார். இளங்கலை படித்த மகிழினி மேற்படிப்புக்குச் செல்ல, அப்போதே தன் அலுவலக விசியங்களை பற்றி சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்.

விடுமுறை நாட்களே வந்தாலும் அவரே வருவாரே தவிர ஒரு நாளும் மகிழினியை அலுவலகம் அழைத்துச் சென்றதில்லை. வேந்தனுக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க, இனி அந்த வீட்டிற்கு மருமகள் உத்ராவும் வந்து விட்டாள். இனிமையான அன்பான பெண்ணாக உத்ரா, தன் நாத்தனார், மாமியார் இருவரையும் கவனித்துக் கொண்டாள். அடுத்த ஒரு வருடத்தில் அழகான பெண் குழைந்தையும் வந்து விட நிறைவான குடும்பமாகியது.

திடீரென ஒரு நாள் சத்தியவதனி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வர, சட்டென விரைந்துச் சென்றனர்.

முதல் முறையாக ஹார்ட்அட்டாக் வந்திருக்க சிறிய அளவில் என்பதால் பிரச்சனை இல்லாமல் போனது. வெளிநாட்டில் இருக்கும் மகனுக்கு தகவல் கொடுத்திருக்கவே அவனும் அப்போது வந்திருந்தான். விஜய் உடன் இருப்பதால் மகிழினியின் குடும்பத்தார் விலகிக் கொள்ள, ஒரு வாரம் அன்னையோடு இருந்து கவனித்து, பின் வீட்டிற்கு அழைத்து வந்தான்.

மறுபடியும் மகன் திரும்பிச் செல்ல போகிறான் என்பது புரியவே பேசி பார்த்தும் தோல்வியடைந்த சத்தியதவனி உள்ளுக்குள் பிள்ளைகளின் வருங்காலத்தை எண்ணி மலையளவு பயம். விஜயநேத்ரனுக்கு சுத்தமாக தொழில் பற்றி தெரியாது. மகிழினியை தனியாக இந்த தொழிலில் இழுக்க முடியாது. பிரச்சனை தன்னை சுற்றுவதை போல் அவளையும் சுற்றி விட்டால்..? அவள் தங்களின் தொழிலை நிச்சியம் நல்லபடியாக தன்னை போல் பார்த்துக் கொள்வாள். அதற்கு முன் தான் அவளுக்கு அதற்கான உரிமையும், அங்கீகாரமும், பாதுகாப்பும் கொடுக்க வேண்டுமென முடிவெடுத்தார்.

மறுநாள் கிளம்பவிருக்கும் மகனிடம் வந்தவரோ ஒரு பத்திரத்தை நீட்டி, “விஜய் இதுல ஒரு சைன் பண்ணு. நம்ம வக்கீல் கீழே வெயிட் பண்ணுனாரு..?” என்க,

அவனும் அதனை வாங்கியவாறு, “என்ன டாக்குமெண்ட்..?” பார்க்கலாமே கேட்டான்.

“இடம் ஒன்னு உன் பேர்ல ரிஜிஸ்டர் பண்ண போறேன். அதுக்கு தான்...” என்றதும், அவனும் உடனே கையெழுத்து இட்டுக் கொடுக்கவே அதனை வாங்கிக் கொண்டார்.

மறுநாள் அவன் கிளம்பும் போது, “கண்ணா..! நீ மறுபடியும் போகணும்மா. இங்கே இருந்து நம்ம தொழிலை பார்த்துக்கலாம்ல...” மென்மையாய் கேட்க,

“நோ மாம். நான் போயே ஆகணும். எனக்கு இதெல்லாம் சுத்தமா செட் ஆகாது. அப்பறம் நீங்களுமே இதெல்லாம் விட்டிருங்க, தேவையில்லாம இதை பார்த்துக்குறேன்னு சொல்லி உங்க ஹெல்த்தை இஸ்பாயில் பண்ணிக்காதீங்க...” எனக் கூறி மறுபடியும் வெளிநாடு பறந்து விட்டான்.

அடுத்த அவர் சென்று நின்ற இடம். மகிழினியின் வீடு. மகிழினி இளங்கலை, முதுகலை இரண்டும் முடித்து தற்போது ஒரு நிறுவனத்தில் பார்த்துக் கொண்டிருந்தாள். மகனிடம் பேசி விட்டாகியிற்று, இனி மகிழினியை மருமகளாக்குவது தான் சரி என முடிவெடுத்தார்.

“அடடா.! வாங்கம்மா வாங்க. இப்போ உடம்பு எப்படி இருக்கு.? விஜய் எப்படிம்மா இருக்கான்...” கோசலை கனிவோடு கூற,

“ரொம்ப நல்லாயிருக்கான் கோசலை. மறுபடியும் என்ன விட்டிட்டு போய்ட்டான்...” வேதனையோடு சத்தியவதனி கூற, ஆறுதலாய் அவரின் கரங்களை பற்றிக் கொண்டாள் மகிழினி.


‘ஒரே உறவான பெற்ற அன்னையை தவிக்க விட்டுச் சென்று விட்டானே..? அப்படி என்ன அவனுக்கு அங்கே தலைபோற வேலை இருக்காம்...’ மனதோடு திட்டித் தீர்த்தாள்.

“அம்மாடி மகிழினி..! நான் பெத்த மகனை விட நான் உன்னை தான்ம்மா முழுசா நம்புறேன். நீ எனக்கு வாக்கு கொடுத்த மாதிரி என் கம்பெனியை எனக்கு அப்பறம் நல்லபடியா பார்த்துக்கணும்...”

“கண்டிப்பா பார்த்துக்குவேன் ஆண்ட்டி. நான் உங்களுக்கு ரொம்ப கடமை பட்டிருக்கேன். நீங்க இல்லைன்னா நான் இந்த அளவுக்கு வந்திருக்கேன் மாட்டேன்..,”

“அப்படியெல்லாம் இல்லம்மா. இது உன் திறமைக்கான வெகுமதி தான். என் கம்பெனியை மட்டும் பார்த்துக்கிறது மட்டுமில்லாம என்னையும் என் குடும்பத்தையும் நல்லபடியா பார்த்துக்க நீ வருவியா..? என் இறுதி மூச்சு வரைக்கும் என் கூட இருப்பியா என்னோட மருமகளா.?” கேட்க, ஸ்தம்பித்து போய் மௌனமாகினாள்.

“யோசிச்சி பார்த்து சொல்லும்மா..? உன்னை என் வீட்டு மருமகளாக்க என் மகனுக்கு மனைவியாக்க என் உசுரு துடிக்குதும்மா..” எனக் கூறி கவலையோடுச் சென்று விட,

‘விஜயநேத்ரனுக்கு தான் மனைவியா...’ நினைக்கும் போது வேப்பங்காயாய் கசந்தது.

முடிவெடுக்க முடியாது தவித்தவளுக்கு சத்தியவதனி அடிக்கடி தன்னை ஏக்கத்தோடு காண்பது புரிந்தது. அவரின் தயவில் தானே தாங்கள் வாழ்ந்து வந்தோம். அந்த நன்றியுணர்ச்சியாவது தனக்கு இருக்க வேண்டுமே..! தன் வீட்டாரிடம் பேசி விட்டு அவர்களின் முடிவினையும் கேட்டு பின் சம்மதம் எனக் கூறினாள்.

“அப்போ இப்போதைக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வைக்கிறேன். ஒரு நாள் உங்க ரெண்டு பேர் சம்மதத்தோட பிரமாண்டமா எல்லாருக்கும் தெரியப்படுத்துற மாதிரி பண்ணலாம். இந்தாம்மா இதுல ஒரு கையெழுத்து போடும்மா..” என்றதும், அவளோ குழம்பினாள்.

“இந்த அத்தையை நீ நம்புறீல? இதுல விஜய் கையெழுத்து போட்டான். நீயும் போட்டா ரிஜிஸ்டர் பண்ணிடலாம்..”

“உங்க பையன் இல்லாம எப்படி..? புரோசியர் எல்லாம் இருக்குல...” தயங்கி கூற வர,

“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். நீ போடும்மா..” என்க, தன் குடும்பத்தார் அனைவரையும் கண்டு மனவுவர்ந்து தெரிந்தே அதில் கையெழுத்து இட்டாள். பின் வீட்டாரிடம் சாட்சி கையெழுத்தும் வாங்கிக் கொண்டுச் சென்ற சத்தியவதனி மகன் இல்லாமலே பணத்தினைக் கொடுத்து மகனுக்கு திருமணம் முடிந்ததை சட்டப்படி பதிந்து விட்டார்.

சில நாட்கள் கழித்து வந்து திருமண சான்றிதழ் மகிழினியின் கையில் கொடுத்து, தன் நிறுவனத்தின் பொறுப்புக்கான ஒப்பந்தத்தையும் அவளிடம் கொடுத்தார். இவர்கள் நடத்திய இந்த செயல் குடும்ப வக்கீல் ஒருவருக்கு மட்டுமே தெரிந்திருந்தது.

வேறு கம்பெனியில் வேலை பார்த்தாலும் சத்தியவதனிக்கு மற்ற நேரங்களில் துணையாகவே இருந்தாள். நேரடியாக இப்போதே வந்து பொறுப்பை ஏற்றுக் கொள்ளென அவரும் அழைக்கவில்லை. இவளும் செல்லவில்லை. ஆண்ட்டி என கூறிக் கொண்டிருந்தவளை அத்தையென கூற வைத்தார். நாட்கள் கடக்க இருவருக்குமிடையில் அழகான அன்பான பிணைப்பு ஒன்று உருவாகியது. அப்படியிருந்தும் சில விசியங்களை மட்டும் சத்தியவதனி மருமகளிடம் மறைத்து வைத்திருந்தார்.

மகிழினி வேளையில் துவண்டு விழும் நேரங்கள் எல்லாம் தோள் கொடுத்து தூக்கி விட்ட பெண்ணாக இருந்த சத்தியவதனி இறப்பதற்கு முந்தின இரவு கூட அவளிடம் தான் கடைசியாக பேசினார்.


இரவு படுத்திருந்த மகிழினிக்கு தன் அத்தையிடமிருந்து அழைப்பு வரவே, “அத்தை.! இன்னும் தூங்கலையா நீங்க..? மாத்திரை போட்டீங்களா..?” கனிவாய் கேட்க, உருகி தான் போனார்.

“மகிழ்..எனக்கு ஏதாவது ஆச்சுன்னா என் மகனை நல்லபடியா நீ பார்த்துக்கணும். அவனை நீ உன் கூடவே வச்சிக்கோ..? என்னால அவனுக்கு கொடுக்க முடியாத அன்பு, பாசம், நேசம், காதல் எல்லாத்தையும் நீ அவனுக்கு கொடுக்கணும். அவனுக்கு ஒரு நல்ல தோழியா மனைவியா நீ இருக்கணும். நான் உன்னை சுயநல எண்ணத்தோட தேர்ந்தெடுத்தேன்னு நினைச்சிறாதம்மா..?”

“என்னாச்சு அத்தை உங்களுக்கு.? திடீருன்னு ஏன் இப்படி பேசுறீங்க.? உங்க மகன் வரேன்னு சொல்லிருக்காங்களா..? இல்ல வேற எதுவும் சொன்னாங்களா..? இல்ல அவருக்கு எதுவும் பிரச்சனையா..?”

“இல்லம்மா.! அவன் நல்லாத்தான் இருக்கான். எனக்கு தான்..நான்..நான்...” கூற முடியாது தடுமாற,

“உங்களுக்கு என்ன அத்தை..? உடம்புக்கு முடியலையா.? நான் வரட்டுமா..?” தவிப்போடு கேட்க, மருமகளின் மீது முழு நம்பிகை வைத்திருந்தார்.

“ஒன்னுமில்லை. நான் நல்லா தான் இருக்கேன். எல்லாத்தையும் நல்லபடியா பார்த்துக்கணும். நீ கவனமா சந்தோஷமா இருக்கணும். உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். ரொம்ப வேலை பார்த்து உன் உடம்பை நீ கெடுத்துக்க கூடாது சரியா...” என இன்னும் சிறிது நேரம் கூறிக் கொண்டே போக, கேட்ட வண்ணம் இருந்தாள்.

நேரம் சென்று அழைப்பினை அவர் திடீரென துண்டித்து விட, மறுநாள் விடிந்ததுமே அவளுக்கு இடியாய் வந்து இறங்கியது சத்தியவதனி இறந்த செய்தி தான். அவளால் அதனை நம்பவே முடியவில்லை. ‘எப்படி இது உண்மையாகும்..? தன்னோடு பதினோரு மணிவரை பேசினாரே..?’ உயிரற்ற சடலமாக அவரை பார்த்த நொடி அந்த மருத்துவமனையிலே மயங்கி காய்ச்சலில் விழுந்தவள் தான் மறுநாளே கண் விழித்தாள்.

இறுதி சடங்கிற்கு கூட மகிழினி செல்லவில்லை. வேந்தன் மட்டுமே சென்று வந்தான். மருத்துவமனையில் இருந்து வீடு வந்து உடல்நலம் தேறி வரவே சில நாட்கள் ஆனது. இந்த இடைப்பட்ட நாட்களில் விஜயநேத்ரனின் செய்கையை அறிந்துக் கொண்டாள்.

அவன் அலுவலகத்தில் சென்று பார்த்து வருவான். அன்னை இல்லை என்பதால் தொழிலை கையில் எடுப்பான் என காத்திருந்தது ஏமாற்றம் கொண்டு, மதுபோதையோடு சுற்றுகிறான் என்பது புரிந்தது.

இனி காலம் தள்ளி ஒன்றும் ஆகப் போவதில்லை என்பது புரிந்து தானே தொழிலை மருமகள் என்ற உரிமையோடு கையில் எடுத்தாள். அவள் நினைத்தது போன்றே எதிர்ப்பாய் விஜய் வந்தான். இதில் எதிர்பார்க்காத ஒன்று அவன் குணம் மாறியது தான்.

தன் கைபேசி ஓசை எழுப்பும் சத்தத்தில் நினைவிலிருந்து மீண்டவள் அன்னையின் எண்ணைக் கண்டதும், கடந்த கால நினைவால் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

பின் சிறிது நேரம் அன்னையிடம் பேசி விட்டு வைத்தவளுக்கு அத்தையின் நினைவு. தன் அத்தை தன்னிடம் எதையோ மறைத்திருந்தார் என்பது புரிந்தது.

அப்படி எதை மறைத்தார்.? திடீருன்னு எப்படி நெஞ்சுவலி வந்தது..? அவர் இறப்புக்கு வேறெதுவும் காரணமாக இருக்குமா.? இதனை எப்படியாவது கண்டு பிடிக்க வேண்டும்.? நினைத்துக் கொண்டே படுக்கையில் சரிந்தாள்.

மகிழினி கடந்த கால நினைவுகளுக்கு சென்று மீண்டு வந்திருக்க, இதை எதையும் தெரியாத விஜயநேத்ரன் போதை தந்த சுகத்தில் ஆழ்ந்த நிம்மதியான நித்திரையில் இருந்தான்.

கருத்துகளை பகிர :
Thread 'கள்வனின் தீராக்காதல் (KT) கருத்து திரி' https://pmtamilnovels.com/index.php?threads/கள்வனின்-தீராக்காதல்-kt-கருத்து-திரி.32/
 
Status
Not open for further replies.
Top