வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

காதல் கிறுக்கன் -கதை திரி

Status
Not open for further replies.
காதல்-6
ஞாயிற்றுக்கிழமை எல்லோருக்கும் பிடித்த விடுமுறை நாள். நிலாவிற்கு மட்டும் இந்த நாள் ஏன் விடிகிறதென்று இருக்கும். காரணம் ‘இதோ கேட்கிறதே...’ நினைத்த மதிநிலாவின் இதழ்களில் விரக்தி புன்னகை நெளிய காதை கூர்மையாக்கினாள்.

“ஏ...ய் நிலா.. எங்கடி போய் தொலைஞ்ச.. எரும கூப்பிட்டா வராளான்னு பாரு..” என காலையிலேயே மதிநிலாவை வறுத்துத்தெடுத்து கொண்டு இருந்தாள் அமுதா.

“இதோ வரேன் சித்தி..” என வீட்டின் பின் புறத்தில் இருந்து கைகளில் சோப்பின் நுரையுடன் வேகமாக வந்தாள் மதிநிலா.

அவளைப் பார்வையால் அளந்த அமுதா “ஏண்டி...ஒரு நாலு துணிய துவைக்க இவளோ நேரமா?” என கேட்டாள் அதிகாரமாக.

“காலைல டிபன் செஞ்சிட்டு பாத்திரம் எல்லாம் கழுவிட்டு இப்ப தான் துணி துவைக்க போனேன் சித்தி” என்றாள் பெண்.

“ஆமா.. பெருசா நூறு வகை டிபன் செஞ்சி கிழிச்சா..செஞ்சது வெறும் இட்லியும் சாம்பாரும்..... அதுக்கு இவளோ நேரம்.. சரியான சோம்பேறி கழுத” என திட்டினாள்.

அவளை அமைதியாகப் பார்த்தாள் மதிநிலா.

“என்னோட வாயையே பார்க்காம சீக்கிரமா போய்... துணிய துவச்சி காய போட்டுட்டு... மார்கெட்க்கு போய்ட்டு மீன் வாங்கிட்டு வந்து மதியம் சமையல ஆரம்பி” என சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்று விட்டாள் அமுதா.

ஒரு பெருமூச்சுடன் விட்ட வேலையை செய்ய சென்றாள் மதிநிலா.

துவைத்த துணிகளை காயப் போட்டுவிட்டு பர்மா காலனி மீன் மார்க்கெட் வரை சென்று மீனை வாங்கி வந்து மதியத்துக்கான சமையலையும் செய்து முடித்துவிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுக்க தனது அறைக்கு சென்றவளுக்கு ஆயாசமாக இருந்தது.

அவள் ஓய்வெடுப்பதை கண்டாலே சித்திக்கு ஏதேனும் புது வேலை ஒன்று வந்துவிடும். இன்று சித்தி தன் அறையில் இருந்த டிவியில் மூழ்கியிருக்க அவளுக்கு கிட்டிய சொற்ப ஓய்வும் கிட்டுமோ கிட்டாதோ என்ற பயத்துடனேயே கழிந்தது.

சுவரில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடியவளின் மனக் கண் முன் ‘வாழ்க்கை இப்படியே தான் இருக்கப் போகிறதா? அவளது வாழ்வில் அடுத்த கட்டம் என்ன? பெரியவளானால், படித்து முடித்து விட்டால், வேலை கிடைத்தால் சரியாகி போய் விடும் என்று சொல்லப்பட்ட இதுவரை சரியாகாத இந்த துன்பங்கள் எப்போது சரியாகும்?’ என பரீட்சை வினாப் பத்திரம் போல் நீண்ட வினாக்கள் வந்து போனது.

‘விதி வரைந்த பாதை வழியே

வாழ்க்கை ஓடுது....’ என்று உள்ளம் ஊமை கானம் பாட தன்னைச் சுற்றி கூரிய அம்புகள் குறி பார்த்திருக்க வில்லேந்திக்கொண்டு சித்தியும் சஞ்சயும் இன்னும் முகம் தெரியாத பலரும் நெருங்கிவர காதை பொத்திக்கொண்டு கத்த நினைக்கையில் நெற்றியில் அம்பொன்று பாய்ந்துவிட “அய்யோ..ம்மா ....”வென அலறினாள்.

விண்விண்ணென்று தெறித்த நெற்றியை தடவிக்கொண்டு பார்த்த போது துளைத்தது அம்பில்லை சித்தி விட்டெறிந்த குடை எனக் கண்டாள்.

அவள் விழித்து விட்டாள் என்பது தெரிந்தவுடன் ஒன்றும் சொல்லாமல் விட்டு விட்டால் அவள் அமுதா இல்லையே.

“ஏண்டியம்மா .. காணாத கழுத கஞ்சிய கண்டுச்சாம், ஓயாம ஓயாம ஊத்திக் குடிச்சிச்சாம்ன .. கதையா இல்ல இருக்கு.. என்னத்த வெட்டி முறிச்சண்ணு இப்படி ஓடி ஓடி வந்து தூங்கிட்டு இருக்க.. பொட்டப் புள்ள பட்டப் பகல்ல தூங்குனா உருப்பட்டுரும்டி குடும்பம்.. போய் சாப்பாட்ட எடுத்து வைடி..” என்று ஏகத்துக்கும் எகிறினாள்.

கதவருகில் நின்ற அவளை கடந்து போகும் போது “வெளக்கமாத்துக்கு பட்டுக்குஞ்சம் கேக்குதாமில்ல..” என்றாள் எகத்தாளமாக.

பழக்கப்பட்டது தான் என்றாலும் அவளுக்கு வலிக்க வேண்டும் என்றே சொல்லப்பட்டது என்பதால் அவளும் முகத்தில் வேதனையைக் காட்டிவிட்டே கடந்து சென்றாள்.

இல்லாவிட்டால் சித்தி இத்துடன் நிறுத்த மாட்டாள்.

கைகள் தன் போக்கில் உணவை பரிமாறிக் கொண்டிருக்க மனமோ வேதனையில் உழன்றது.

இது சித்தியின் திட்டுகளால் வந்த வேதனை இல்லை. சித்தியின் இந்த போக்கிற்கு தன் உணர்வுகள் எதிர்வினை ஆற்றவில்லை என்பதைக் கூட மறைத்து போலியாக நடிக்க வேண்டி இருப்பதே அவளை வருத்தியது. முகத்தில் அழகு சாதன பூச்சுகள் பூசினாளோ இல்லையோ மறக்காமல் சோக பூச்சை தினமும் அப்பிக் கொள்வாள். அதனாலேயே அன்றலர்ந்த தாமரையாக இருக்க வேண்டியவள் வாடிய தாமரையாகவே காட்சி தந்தாள்.

சாப்பிட்டு எழுந்த அமுதா, “எனக்கு சாப்பாட்ட வீணாக்குனா பிடிக்காதுன்னு தெரியும் இல்ல ..... ஃபிரிஜ்ல இருக்கிற அந்த பழைய சாதத்த சாப்பிடு..... இந்த மீன் குழம்ப எடுத்து வைச்சு நைட் சூடு பண்ணி எனக்கு வை.......” என சொல்லிவிட்டு சென்றாள்.

“ம்ம்.. சரி..” என்றவள், வெள்ளியன்று ஆபீஸில் நடந்த சம்பவம் அவளை உண்மையிலேயே வருத்தி இருந்ததால் சாப்பிடக் கூட பிடிக்காமல் மீந்த சாதம் அது. ‘நேற்றைய தப்புக்கு இன்னைக்கு தண்டனை’ என்று நினைத்தவாறு முன் தினம் மீந்த சாதத்தை ஊறுகாயுடன் சாப்பிட்டாள்.

சமையலறையை ஒதுக்கிய பின், புழக்கடை பக்கம் சென்று அமர்ந்தவளது ஃபோன் மெல்லிய குரல் எழுப்ப,

‘நான் கொஞ்ச நேரம் நிம்மதியா உக்காருரதுல இந்த ஃபோனுக்கு கூட பொறுக்கல’ என்று தன் செல்லை முறைத்தவள், அட்டென்ட் செய்து “ஹலோ..” என்றாள்.

M.D.யின் P.A.என்பதால் வேலை தொடர்பான பல அழைப்புகள் புதுப்புது எண்களில் இருந்து வரும் என்பதால் சாதாரணமாகவே அழைப்பை ஏற்றாள். ஆனால் அழைப்பில்,

“ஹே.. ஹியர்ஸ் கௌஷிக்....” என்றதும்,

“சார் நீங்க...?என்ன விஷயம் சா.. ர்..” என தயங்கியபடி கேட்டாள்.

“சாரி ஃபார் கோசிங் தோஸ் ப்ராப்ளம்ஸ்... நிலா”என்றான். குரலில் உண்மையான வருத்தம் தொனித்தது.

“அ...து.... ”

“எஸ்.... நிலா.... இட் வாஸ் ராங் ஆஃப் மீ ... எனக்கு ஒரே கில்டி ஃபீலிங்கா இருந்துச்சி.. ஸோ அங்கிள்கிட்ட விஷயத்த சொல்லி உங்க நம்பர் வாங்குனேன்..” என்றான்

“பாஸ்கிட்ட சொல்லியிருக்க வேண்டாமே சார்... அவருக்கு இது தெரிய வந்தா ரொம்ப வருத்தபடுவார்னு தான் நானே சொல்லல..”என்றாள் ஆதங்கத்துடன்.

“ஏன் நாங்க வருத்தப்பட்டா பரவாயில்லையா?.. ரெண்டு நாளா அந்த அழுது வடிஞ்ச முகத்தோட ‘நீ பார்த்த வேலைக்கொரு நன்றி..’ன்னு பாட்டு பாடிக்கிட்டு என் கனவுல வந்துகிட்டு இருக்கீங்க நீங்க” என்றான் பல நாள் கஷ்டப்பட்டவன் போல்.

“சா....ர்.. அது ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி..’..”என்றாள்.

“என்னவோ போங்க எனக்கு அப்படிதான் கேக்குது..” என்றான் சிறு குழந்தை அடம் பிடிப்பது போல.

பேச்சு திசை மாறி போவதை அப்போது தான் உணர்ந்தவள், “ம்ம்ம்.... ஓகே சார் வைக்கட்டுமா” என கேட்டாள்.

“வெ.. யிட்.. நிலா நான் சாரி கேட்டனே..” என இழுத்தான் கெளஷிக் .

“சார்.... உங்க ஃப்ரெண்ட் என்ன தாளிக்கணும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தார்.... நீங்க தெரியாம எண்ணை சட்டிக்கு பக்கத்துல கூட்டிட்டு போய்ட்டீங்க.. ஸோ தாளிச்சு விட்டுட்டார்..” என்றவள்

சம்பாஷனையை அத்தோடு முடிக்கும் நோக்கில் “இட்ஸ் ஓகே சார்” என்றாள்.

“ஆ.... நிலா... நான் உங்ககிட்ட சாரி சொன்னேனு உங்க ஃப்ரெண்ட்கிட்ட சொல்லிறீங்களா?.. என்றான் பவ்யமாக.

“யார்கிட்ட..?”

“அப்போ ஆபீஸ்ல உங்க பக்கத்துல இருந்தாங்களே... அவங்க உங்க ஃப்ரெண்ட் தானே” என கேட்டான்.

“ஆமா.... அவகிட்ட எதுக்கு சாரி சொல்லணும்?”

“அவங்ககிட்ட சாரி சொல்ல வேண்டாம்.. நீங்க சாரிய எக்செப்ட் பண்ணிட்டதா சொல்லுங்க”

“அது ஏன்?”
“அன்னிக்கு நானும் சஞ்சய்யும் கேபின்ல இருந்து வெளிய வர நேரம்... என்ன பார்த்து அந்த மொற மொறச்சாங்க..”

“ஐயோ!.... அப்படியா நான் பார்க்கலயே” என்றாள்.

“நான் பார்த்தேனே....” என்று அவன் சொல்ல ,


தனக்குள்ளே சிரித்தவள் , “அவளுக்காக நான் சாரி கேட்டுக்குறேன் சார்” என்றாள் மெதுவாக.

“சாரி.. எல்லாம் வேணாம் அவங்க பேர மட்டும் சொல்லுங்க.. அப்படியே முன்னாடி சொன்ன மேட்டரயும் சொல்லிடுங்க..” என்றான்.

“அவ பேரு அமிர்தா” என்றாள் . உள்ளூர அவள் பெயரை எதற்கு கேட்கிறான் இதில் வில்லங்கம் ஏதும் இருக்குமா என்ற எண்ணம் ஓடியது.

“சார் அவளுக்கு எதுவும் சிக்கல் வந்திராதே?..” என்றாள் கலக்கத்துடன்.

“அவங்களுக்கு என்னம்மா சிக்கல்....நான் இல்ல தூக்கமில்லாம அல்லாடுறேன்”

“வாட்” என்று அதிர்ச்சியாகினாள்.

“இல்ல உங்க அழுக மூஞ்சி சாங்க்கு அப்பறமா அவங்க சந்தரமுகி கெட்டப்புல வந்து மிரட்டுராங்க.. அப்புறம் எப்படிங்க தூங்கறது.. அத சொன்னேன்....”

“அப்பாடா” என அவள் ஆசுவாசமாக,

“அப்புறம் லைப் எல்லாம் எப்படி போகுது” என பேச்சை வளர்த்தான்.

‘இப்ப வரைக்கும் நல்லா போகுது இனி எப்படின்னு தெரியல..” என்றாள் சித்தியின் தலை எங்கேயும் தென்படுகிறதா என பார்த்துக்கொண்டே .

‘உங்க சொந்த ஊர் கோயம்புத்தூர் பக்கமா?” என கேட்டான்

“இல்லயே.... ஏன் கேக்குறீங்க?” என கேட்டாள்

“இல்ல ஏதோ குசும்புன்னு சொல்லுவாங்களே அது இதுவான்னு பார்த்தேன்...” என்க,

இப்போது இவனை எப்படி போனை வைக்க சொல்லலாம் அவள் யோசித்துக் கொண்டிருக்க,
“என்ன மேடம் சத்தத்தையே காணோம்... லைன்ல இருக்கீங்களா..?” என கேட்டான்.

“ம்ம்ம்......வேற ஏதாவது இம்பார்டண்ட் இல்லனா ..” என்று இழுக்க,

“வெட்டியா பேசாம ஃபோன வைன்னு இன்டைரக்ட்டா சொல்லுரீங்கா..... ஆம் ஐ ரைட்?” என கேட்டான்.

“அது வந்து.......”

“ஓகே.. ஓகே.. நிலா.... நீங்களே வைடா ஃபோனைன்னு சொல்ல மொத நானே ... வச்சிடறேன் ..”என சிறு சிரிப்புடன் ஃபோனை அணைத்துவிட்டான்.

முழங்கால்களை கட்டிக்கொண்டு அங்குள்ள சுவரில் சாய்ந்து அமர்ந்து நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டவள், கடந்த இரு தினங்களாக இருந்த மன உளைச்சல் கௌஷிக் பேசியதில் குறைந்து முகத்தில் ஒரு அமைதி பரவியிருக்க, தன் மனநிலையை மாற்றவே அவன் இத்தனை நேரம் பேசினான் என்பதும் புரிந்தது.

அன்றைய வாணலிக்கு தப்பிய அந்த எலி மறுபடி அடுப்பினில் வீழ்ந்திடுமோ?........












 
Status
Not open for further replies.
Top