வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

காந்தர்வியின் கந்தர்வன் கதை திரி

Status
Not open for further replies.
கந்தர்வன் 1


கார்குழலாள்
கண்ணின் மணியாள்
கந்தர்வனின்
கானமயிலாள்!!!வெகு அதிகாலைப் பொழுது! அர்த்த ஜாமம் தெளிந்த கொண்டிருந்த வானம்! மினுக்கிடும் உயர் ஜாதி வைரமாய் மிளிரும் விடி வெள்ளி! உலகமே எழ சோம்பல் கொள்ளும் மூன்றுக்கும் நான்குக்கும் இடையிலான வைகறை வேளை. வீடே இருளில் மூழ்கியிருக்க மேஜை விளக்கை மட்டும் ஒளிர விட்டபடி நேற்று கின்டலில் பதிவிறக்கியிருந்த ஒரு அமானுஷ்ய திரில்லர் நாவலைப் படித்துக் கொண்டிருந்தாள் அர்வி.. ம்கூம்.. காந்தர்வி.

போனுக்குள்ளே புதையல் எடுப்பவளாய் அதன் திரையினில் மட்டும் கவனம் வைத்திருந்தாள்.

'இரவின் அந்தகார இருளில் அமர்ந்திருவளின் புறம் இரு கைகள் நீண்டு வாசுகியின் கழுத்தை நெறிக்க வர' என்ற கதையின் வரிகளில் பயத்துடன் நாற்காலியில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தவளின் தோளை சட்டென பின்னிருந்து பற்றியது ஒரு கரம்.

"யம்மே…!"என்று அலறியவளாய் அமர்ந்திருந்த நாற்காலியை தள்ளிக் கொண்டு எழ, பின்னால் நின்றிருந்த உருவத்தில் அந்த நாற்காலி இடித்ததில் "அவுச்.." என்ற சத்தத்துடன் கீழே விழுந்தாள் மகரி.

மகரியின் சத்தத்தில் பயத்திலிருந்து மீண்ட காந்தர்வி,

"ஹே எரும இருட்டுல இப்படியா வந்து பயமுறுத்துவ…பிசாசே!"

"எது நான் பயமுறுத்துறேனா? நடுச்சாமத்துல மூஞ்சிக்கு நேரா போனை புடிச்சுகிட்டு கொல்லிவாய் பிசாசு போல சேர்ல குத்த வச்சுட்டு உக்காந்துருக்க உன்ன பார்த்துத்தான்டி எனக்கு நெஞ்சு வலியே வந்துருச்சு"என்று பதிலுக்கு பாய்ந்த மகரியைப் பார்த்து ஈஈஈ'யென இழித்து வைத்தாள் காந்தர்வி.

"சாரி மச்சி. ஒரு டெரர் ஸ்டோரி. முடிக்காம வைக்க முடியல. அதிலயும் பேய் வர லைன் படிச்சுட்டு இருந்தேனா! அதான் உன்னையும் பேய்ன்னு நினச்சுட்டேன்.வலிக்குதா மச்சி? அடி பலமோ?"

பம்மிக் கொண்டே அருகில் வந்தவளை இழுத்து வைத்து முதுகில் மொத்தினாள் மகரி.

"ஹா அய்யோ.. அம்மா.. யாராச்சும் காப்பாத்துங்களேன்"எனக் கத்திய காந்தர்வியின் வாயை இறுகப் பொத்திய மகரி,

"அடியே கான மயிலு காந்தாரி வாய மூடித் தொலை.ஊரைக் கூட்டி உள்ளாற விட்டுறாத"

"ம்ம்ம்ம் ம்ம்ம்ம் " என அவள் வேகமாய் சரியென தலையசைக்கவும் அவள் வாயிலிருந்து கையை எடுத்தாள் மகரி.

"யாத்தா! தயவு செஞ்சு போனை ஆஃப் பண்ணிட்டு தூங்கித் தொலை. நாளைக்கு மார்னிங் ஷிப்ட் டி. எட்டு மணிக்கு சரியா அங்கில்லைனா சவுந்திரா தேவி சவுண்டு தேவியா மாறிடும்."என எச்சரித்தவாறே மகரி தன் கட்டிலில் படுத்துக் கொள்ள, அடுத்த நிமிடமே அவளை அணைத்துக் கொண்டு படுத்து விட்ட காந்தர்வியைக் கண்டு தலையிலடித்துக் கொண்டாள் மகரி.

"எழுந்து உன் கட்டிலுக்கு போடி. சிங்கிள் காட் பெட்டுல இப்படி நசுங்கிட்டுலாம் என்னால தூங்க முடியாது. பீரியட்ஸ் வேற. கசகசன்னு இருக்கு "

"ப்ளீஸ் ப்ளீஸ் மகி செல்லம். பேய் கதை படிச்சுட்டு தனியா படுக்க பயமா இருக்கு.இன்னைக்கு மட்டும்டி ஓகே…ஓகே நான் தூங்கிட்டேன் குட் நைட்டு "அவசரமாய் கண்ணை மூடிக் கொள்ள,

"சரியான சல்லடி நீ "என நொந்தவாறே தானும் தூங்க முனைந்தாள்.

காலை ஆறு மணி அலாரத்தை ஆறாவது முறையாக ஆஃப் செய்து விட்டு காந்தர்வி தூக்கத்தை தொடர ஏழாவது அலாரத்தின் இசைப்பில் அடித்து பிடித்து எழுந்தனர் இருவரும்.

"அச்சச்சோ மணி ஏழாச்சு.. இன்னைக்கு ஹாஸ்பிடல்ல நமக்கு ஏழரை தாண்டி. எதுக்குடி அர்வி அலாரத்தை கட் பண்ணி தொலைஞ்ச?"நடு அறையில் நின்று கத்திக் கொண்டிருந்த மகரியை கண்டு கொள்ளாமல் மாற்றுடையையும் துண்டையும் அள்ளிக்கொண்டு குளியறைக்குச் சென்ற காந்தர்வி,

"நீ அப்பிடியே பேசிட்டு இரு மச்சி. நான் குளிச்சுட்டு வந்திடறேன் " என்றவாறு உள் நுழைந்து தாழிட்டுக் கொள்ள,

"ஏய் ஏய் நான் அவசரமா சுச்சு போகணும் கதவ திற"என வயிற்றைப் பிடித்துக் கொண்டு கத்தியவளை கண்டு கொள்ளாமல் உள்ளே "ஊ லலலா ஊ லலலா " பாடிக் கொண்டிருந்தாள் அவள்.

அதில் காண்டான மகரி, "அரமெண்டல் அர்வி வெளிய வருவில்ல, அப்ப இருக்கு உனக்கு " பல்லைக் கடித்து வெறுவியவாறு கீழிருக்கும் பொது கழிப்பிடத்துக்கு ஓடி விட்டாள்.

பின்னே டேங்க் வெடித்து மகரி மட்டையாகிவிடும் வாய்ப்புள்ளதே!

கோவையின் பிரதான தெருவிலிருந்த ஒரு வீட்டின் மாடியில் தான் குடியிருந்தனர் நண்பிகள் இருவரும். கீழ் வீட்டில் அந்த வீட்டின் உரிமையாளரான வடிவு பாட்டி மட்டுமிருக்க மேல் போர்சன் இவர்களுடையது. அருகிலிருக்கும் பிரபல மருத்துவமனையில் செவிலியர்களாக பணிபுரிந்து வரும் இருவரும் சொந்த அத்தை மகள் மாமன் மகள்.

இரு குடும்பமும் அக்கம்பக்கத்து வீடு. அதனாலே ஆருயிர் நட்பு இவர்களுடையது.

வீட்டில் கெஞ்சிக் கூத்தாடி வேலையை சாக்கிட்டு கடந்த ஒரு வருடமாக தனியாக அல்லி ராஜ்யம் நடத்திக் கொண்டு வருகின்றனர்.

அவசரமாய் காலை கடன்களை முடித்து வெளியே வந்த மகரியிடம்,

"என்னடி இங்கனயிருந்து வர. ரெவுண்டு பேருக்கு அந்த ஒத்த பாத்துரூமு போதலையாமா" கடைவாயில் வெத்தலையை அதக்கியபடி கீழ் வீட்டு வடிவுப்பாட்டி கேக்க,

"ஆத்தா கொஞ்சம் அவசரம் லேட்டாயிடுச்சு. நான் வேல முடிச்சு வந்து பெனாயில் போட்டுக் கழுவித் தரேன் " என்று நகர முற்பட்டவளை,

"விடியக்கால எதுக்குடி கத்திட்டு கிடந்தீங்க.வயிசான காலத்துல நிம்மதியா தூங்க கூட விடமாட்டீங்களா"

'கிழவி ஜொல்லு ஒழுக தூங்கிப்புட்டு கொழுப்ப பாரு'மனதில் கவுண்டர் குடுத்தவள்

"அது அவ ஆத்தா. பேய் கனவு கண்டு பயந்துட்டா.."

பாட்டி ஏதோ பதிலுக்கு கேட்பதற்குள்,

"மகி லேட்டாச்சு. கீழ உக்காந்து வெட்டி அரட்டை அடிக்காம சீக்கிரம் வந்து குளி " என மேலிருந்து காந்தர்வியின் சத்தம் வரவும்,

'திண்ணக்கம் பிடிச்ச தீவட்டி கழுத' புறுபுறுத்தவாறே பாட்டியை சமாளித்து மேலே வந்தாள்.

கண்ணாடி முன்னின்று தலைவாரிக் கொண்டிருந்த காந்தர்வியின் தலையில் சில பல கொட்டுகளை வைத்த பின்,

"வர வர ஓவர் ராங்கி ஆகிப் போச்சுடி உனக்கு"என வைதவாறே துண்டை எடுத்துக் கொண்டு குளியலறைக்கு ஓடியவள்,

"காக்கா குளியலுக்கும் இன்னிக்கு டேக்கா தான்" என புலம்பிக்கொண்டே சென்றாள்.

அப்படியும் இப்படியும் ஆடி ஓடி சரியாக(!) எட்டேகாலிற்கு வருகை பதிவேற்றியில் தங்கள் வருகையை பதிவு செய்து விட்டு திரும்பிப் பார்க்க சீப் இன்சார்ஜ் சவுந்தர்யா இடுப்பில் கைவைத்து இவர்களை முறைத்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்து லேசாய் தலையை சொரிந்து அசட்டு சிரிப்பை வெளியிட்ட இருவரும்,

"குட் மார்னிங் மேம் "என்றனர் கோரசாக.

"உங்க குட் மார்னிங்க நீங்களே வச்சுக்குங்க. இதான் உங்க பங்ச்சுவாலிட்டியா. இந்த ஒரு வருசத்துல ஒரு நாளாவது சரியான டைம்க்கு வந்துருக்கீங்களா? இர்ரெஸ்பான்ஸிபில் இடியட்ஸ்…. " ஸ்க்ரீனை ஸ்பீட் செய்யும் பொது கொயமுய கொயமுய என்று சத்தம் வருமே, அதுபோல அவர் இடைவிடாது தாளித்துக் கொண்டிருக்க அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டிருந்த இருவரையும் பார்த்த ரிசப்சனிஸ்ட் ரேவதிக்கு சிரிப்பாய் வந்தது.

"வெளியூர்ல இருந்து வர புள்ளைங்க கூட எவ்ளோ நேரமே வராங்க.உங்களுக்கு ரொம்ப வலிக்குதோ. ஹாஸ்பிடல்க்கு பக்கத்துல இருந்துட்டு சீக்கிரமா வரதுக்கு அம்மணிங்களுக்கு அவ்ளோ கஷ்டமா இருந்தா மேல இருக்க நர்ஸ் ஹாஸ்டல்ல வந்து தங்கிக்குங்க."என்று ஒரே போடாய் போட்டதும் காலில் விழாத குறையாக கெஞ்சி கூத்தாடி அவரை மலையிறக்கினர்.

இதுதான் கடைசி முறை என எச்சரித்து விட்டு அவர் சென்றபின் "எல்லாத்துக்கும் நீதான்டி காரணம் " என காந்தர்வியின் முதுகில் அடித்த மகரி,ரேவதியைப் பார்த்து முறைத்தவாறே

"ரொம்ப திவ்யமா இருந்திருக்குமே உனக்கு?" எனக் கேட்க,

"டெபினிட்லி…டெபினிட்லி " என ரேவதி பல்லைக்காட்டவும் மூவரும் மருத்துவமனை என்றும் பாராது அடித்துக் கொண்டனர்.

அவர்களுக்குள் நடந்த களேபரத்தைப் பார்த்தவாறே அங்கு வந்தான் அகரன் இளஞ்செழியன்.காருண்யம் மகப்பேறு மருத்துவமனையின் இளம் குழந்தைகள் நல மருத்துவன்.

"இங்க என்ன இவ்வளவு சத்தம். பேஷண்டஸ் முன்னாடி சின்னப்புள்ளைங்க மாதிரி அடிச்சிக்கிட்டு இருக்கீங்க. மகரி! காருண்யா மேம் வந்திட்டு இருக்காங்க.அவங்க ரூம் ரெடி பண்ணி பேஷண்ட்ஸ் நேம் லிஸ்ட் டீட்டைல்ஸ் நோட் பண்ணி டேபிள்ல வைங்க. அண்ட் ரேவதி இன்னைக்கு ஸ்கேன் டாக்டர் ஷீலா லீவ். சோ நானும் டாக்டர் பிரீத்தாவும் சேர்ந்து ஸ்கேன் அட்டெண்ட் பண்ண வேண்டி இருக்கும். அதை அவங்க கிட்ட இன்ஃபார்ம் பண்ணிட்டு அதுக்கேத்த மாதிரி ஓபி பேஷண்ட் அலோவ் பண்ணுங்க.

அண்ட் சைல்ட் யாராவது ஹெவி இன்ஃபெக்ஸனோட வந்திருந்தா அவங்களுக்கு பிரிஃபரன்ஸ் குடுத்து உள்ள அனுப்பி விடுங்க." என இருவருக்கும் மளமளவென கட்டளைகளை பிறப்பித்தவன், தன்னையே ஆ'வென பார்த்துக் கொண்டிருந்த காந்தர்வியை,

"நான் வந்ததுக்கு அப்புறம் கூட என் ரூமை ரெடி பண்ண போகாம இங்க நின்னு என்ன பண்ணிட்டு இருக்கீங்க காந்தர்வி" என அதட்டவும்,

"சாரி சாரி சார்" என அவசரமாய் நகர முயன்றாள் அவள்.

"எங்க போறீங்க?"என அவன் மீண்டும் அதட்ட அப்பிடியே நின்றவள்,

"ரூம் ரெடி செய்ய சார்"என்றாள் பாவமாய்.

"அப்போ ஜபி விசிட்க்கு என் கூட யார் வருவா?"என்று காட்டமாய் கேட்க,

"அதுவும் நான் தான் சார்.."என்றாள் விட்டால் அழுது விடுபவள் போல்.

" ப்ச்.. ஜபி வார்டுல போய் விசிட்டிங் வரத இன்பார்ம் பண்ணுங்க. நான் டூ மினிட்ஸ்ல வரேன்" என்று விட்டு அங்கிருந்து அகன்ற பின் சிட்டாய் பறந்து விட்டனர் மற்ற மூவரும்.

மருத்துவர்களின் பிரத்யேக ஒய்வறைக்குள் சென்று தன் பேக்கினை வைத்து விட்டு பேண்ட் பாக்கெட்டிலிருந்த கைபேசியில் பார்வையைப் பதித்த அகரன்,

"இப்படி பாவமா முகத்தை வச்சுட்டா சரியா திட்டக் கூட முடியலடி காரமிளகா. கடிச்சு சாப்பிடணும் போல தான் தோணுது."என கைபேசித் திரையில் தெரிந்த காந்தர்வியின் நிழலுருவுடன் பேசியவன் யாருமற்ற அறையை ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு தொடுதிரையில் இதழ்களை பதிந்து எடுத்தான்.அந்நிகழ்வு தந்த மலர்ச்சியினூடே ஐபி விசிட் சென்றான்.

ஆனால் நிஜவுருவில் இதழ் பதிக்கவிருந்தவனோ கருப்பு வெள்ளைக் காகிதங்களின் வரிகளுக்கிடையில் ஜீவனிழந்து ஜீவித்திருந்தான்.
Thread 'காந்தர்வியின் கந்தர்வன் கருத்து திரி' https://pmtamilnovels.com/index.php?threads/காந்தர்வியின்-கந்தர்வன்-கருத்து-திரி.68/ 
கந்தர்வன் -2


காவியத் தலைவன்
கவிப் பேரழகன்
கானமயில் கசிந்துருக்கும்
கந்தர்வ தேவன்!!


அன்று வெள்ளிக்கிழமை.
முந்தைய தினம் இரவுப் பணியென்பதால் பகல் முழுதும் தூங்கிக் களைத்து, மாலைப் பொழுதை தரிசிக்க காருண்யம் மருத்துவமனைக்கு சற்று அருகிலிருந்த ஈஸ்வரன் கோவிலுக்கு வந்திருந்தனர் நண்பிகள் இருவரும்.


"இந்த வாரம் அப்பா நம்ம ரெண்டு பேரையும் ஊருக்கு வர சொல்றாரு அர்வி."

"போகலாம்டி. இங்கிருந்து வெட்டியா தூங்கி முழிக்கிறதுக்கு பதிலா அங்க போய் கிணத்துலயாச்சும் குதிச்சு விளையாடலாம் "

"அப்போ சரி, நான் அப்பா கிட்ட சொல்லிடறேன்."

கோவிலின் வெளிப் பிரகாரத்தை பேசிக் கொண்டே பொறுமையாய் சுற்றி வர, சித்தர் சன்னிதியில் நின்றிருந்த அகரன் இவர்களைத் திரும்பிப் பார்த்தான்.

மெஜந்தா நிற டாப்ஸிற்கு வெள்ளை துப்பட்டா பாட்டம் அணிந்து இருபக்கமும் மஞ்சள் அரளிப்பூக்கள் கொழித்து வளர்ந்திருக்க அதன் மத்தியில் புன்னகையும் பூவனமுமாய் நடந்து வந்த காந்தர்வியின் மீது அகரனின் காந்தப் பார்வை பதிந்தது.

அவனை சமீபித்திருந்த பெண்கள் இருவரும் அவனைப் பார்த்து பழக்கத்தின் வழக்கமாய் புன்னகை புரிய, அகரனின் இதழ்களும் மலர்ந்து விரிந்தது.

"கோவிலுக்கு வர்ற நல்ல பழக்கம்லாம் இருக்கா உங்களுக்கு" அவன் நக்கலாய் வினவ,

' சிடுமூஞ்சியே கோவிலுக்கு வரும் போது நாம வரக் கூடாதா?' மகரி மெதுவாய் காந்தர்வியின் காதுக்குள் முனுமுனுக்க உள்ளுக்குள் பீறிட்ட சிரிப்பை அடக்கினாள் அவள்.

"என்ன சொல்றாங்க உன் ஃபிரண்ட்? இந்த சிடுமூஞ்சியே கோவிலுக்கு வரும்போது நாம வரக்கூடாதுன்னா?" புருவத்தை உயர்த்தி கேட்க, பதறிய இருவரும்,

"அப்படியெல்லாம் இல்லவே இல்லை சார்" கோரசாக சொல்ல சத்தமாகச் சிரித்தான்.

அவன் சிரிப்பதை அதிசயமாகப் பார்த்த காந்தர்வி, " உங்களுக்கு சிரிக்கக் கூட தெரியுமா சார்?" மனதில் தோன்றியதை சட்டென வாய் விட்டே கேட்டு விட ,அவளின் அல்லையில் இடித்தாள் மகரி.

ஆனால் அகரனோ" சிரிக்காம இருக்க நானென்ன ஜடமா?" சிரிக்காமல் சீரியஸாய் கேட்க,

"ஐயோ சார் இவ சும்மா விளையாட்டுக்கு சொன்னா. நீங்க ப்ளீஸ் கோவப்படாதீங்க" அவசரமாய் சொன்னாள் மகரி.

"சரி அப்போ நான் சமாதானம் ஆக பிரசாத ஸ்டால்க்கு போய் சர்க்கரைப் பொங்கல் வாங்கிட்டு வாங்க." என்று அகரன் சொல்ல முழித்தாள் அவள்.


கைப்பையைக் குடைந்த காந்தர்வி நூறு ரூபாய் நோட்டை எடுத்துக் கொண்டு,

" பேக்க பிடி மகி.நான் போய் வாங்கிட்டு வர்றேன்" என்றவாறு நகர முயல அவள் நீட்டிய கைப்பையை பிடித்துக்கொண்ட அகரன் காந்தர்வி கையிலிருந்த பணத்தைப் பிடுங்கி மகரியிடம் கொடுத்தான்.

' என்னடா நடக்குதிங்க! '

மலங்க மலங்க விழித்தவள் அவன் நீட்டிய நூறு ரூபாயை வாங்கிக் கொண்டு இருவரையும் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே பிரசாத ஸ்டால் நோக்கி நகர்ந்தாள்.

அகரனுடன் தனித்து விடப்பட்ட காந்தர்வி சற்று சங்கடமாய் உணர்ந்தாள்.அதிலும் அவன் கைப்பையை இன்னமும் விடாமல் நிற்க இவள் அதை விடவும் முடியாமல் இறுகப் பற்றிக்கொண்டு நின்றாள்.

மகரியின் தலைமறையும் வரை பார்த்துக் கொண்டு நின்ற அகரன் அந்த கைப்பையோடு சேர்த்து அவளையும் இழுத்துக் கொண்டு அரளிப்பூக்கள் சற்று அடர்ந்து வளர்ந்திருந்த சுவரோரமாய் இருந்த பெஞ்சிற்கு செல்ல முயன்றான்.

மகரி போன திசையையே பார்த்துக் கொண்டு நின்ற காந்தர்வி சட்டென இழு படவும் தடுமாறி அவன் மீதே விழுந்தாள்.

" ஹே! சாரி சாரி அர்வி" என்றவாறு அவளைத் தாங்கிப் பிடித்தான். சட்டென விளைந்த நெருக்கத்தில் தவித்த பெண்ணவள் சற்று சுதாரித்து விலகி நின்றாள்.

"சாரி மெதுவா தான் இழுத்தேன்.ஆர் யூ ஆல்ரைட்."

"ஹான்…ம்ம்…சார் "என்று மெதுவாய் உரைத்தவள் அவன் முகம் கான முடியாமல் தலை கவிழ்ந்து நின்றிருந்தாள்.

சிவப்பு அரளிப்பூவாய் சிவந்திருந்த அவளது கன்னத்தை அகரன் ரசித்துப் பார்த்தான்.

"உன் கன்னம் ரோஸ் பவுடர் போட்ட மாதிரி சிவந்திருக்கு" என்றவாறு அவள் கன்னத்தை விரலால் நிமிண்ட அதிர்ந்து அவனைப் பார்த்தவள் சட்டென விலகி நின்றாள்.

"ஹே ச்சில்.. சும்மா.." என்று சொல்லி சிரித்த அகரன் எப்பொழுதும் போல் அல்லாது விசித்திரமாய் தெரிந்தான்.

அவளுக்கு இதெல்லாம் புதிதாக இருந்தது. எப்பொழுதும் கட்டளையும் கண்டிப்புமாக இருப்பவன் திடீரென குழைந்து நிற்பது ஏன் என புரியவில்லை. அதிலும் அவனது விழிப் பாவைகள் அவள் மீது புதுவித சுவாரஸ்யத்தில் பதிந்தது கண்டு அவன் முகம் பார்க்க தயக்கமாய் இருந்தது. அதிலும் முந்தைய அணைப்பும் இப்போதைய கன்ன நிமிண்டலும் ஒரு வித பதட்டத்தை தருவிக்க, வியர்த்த உள்ளங்கைகளை துப்பட்டாவில் துடைத்துக்கொண்டே இன்னமும் வராத மகரியை மனதுக்குள் அர்ச்சித்துக் கொண்டே நின்றிருந்தாள்.

அவளின் பதட்டம் புரிந்தவன் அதற்குமேல் சீண்ட மனமற்று அருகில் இருந்த கல் இருக்கையில் அமர்ந்தான்.

"இப்படி வந்து உக்காரு அர்வி " என்று அவளை அழைத்தான்.

"இல்லை சார் இங்கயே இருக்கேன் "என்றவள் அரளிச் செடிகளுக்கு தடுப்பாய் அமைந்திருந்த கல் திட்டில் அமர்ந்து கொண்டாள்.

அப்போது சித்தர் சன்னதியிலிருந்து வெளியே வந்த சன்னியாசி ஒருவர் வந்து அவளருகில் வந்து அமர்ந்தார்.
அவரிடமிருந்து வந்த விபூதி மணம் அதுவரை இருந்த அவளின் பதட்டத்தை சமன் செய்தது.இருக்கையிலிருந்து எழுந்து வந்து அவளருகில் அமர்ந்த அகரனின் செயல் கூட அவளை பாதிக்கவில்லை. மனம் ஒருவித நிர்மலமாய் இருந்தது.

பிரசாதம் வாங்கிக் கொண்டு வந்த மகரி காந்தர்வியின் அருகில் அமர்ந்திருந்த அகரனை பார்த்து புருவமுயர்த்தினாள்.

'இவரு போக்கே சரியில்லையே' என எண்ணியவளாய் அகரனிடம் பிரசாதத்தை நீட்டினாள். அதை வாங்கிக் கொண்டவன்,

"இந்தா அர்வி " என்று அதை காந்தர்வியிடம் தந்தான்.

'ஏன் அவளுக்கு குடுக்க எனக்கு தெரியாதா. இவருக்கு ஏன் இந்த கொரியர் வேலை ' என உள்ளுக்குள் அவனை வறுத்தாலும் வெளியே சிரித்தவாறு அவனுக்கு மற்றோரு பார்சலை குடுத்தவள்,

" சார் கொஞ்சம் நகர்ந்துக்குறீங்களா? " எனக் கேட்க, பதிலுக்கு சுருங்கிய முகத்துடன் காந்தர்வியை விட்டு விலகி அமர்ந்தான் அகரன்.

அந்த இடைவெளியில் அமர்ந்து கொண்டாள் மகரி.

"ப்ச் " என்ற சலிப்புடன் இன்னும் நகர்ந்து அமர்ந்தவனிடம்,

"இங்க உக்கார கஷ்டமா இருந்தா அந்த பெஞ்சுல உக்காந்துக்குங்க சார். சும்மா உச் பச்ன்னுட்டு…"கேலியும் லேசான கடிதலுமாய் சொல்ல,

"ஒன்னும் பிரச்சனையில்ல " என முனுமுனுத்தவன்,

'சரியான ராங்கி 'என திட்டிக்கொண்டான் மனதில்.

இவர்களின் சலசலப்பை அறியாத காந்தர்வி அருகிலிருந்த பெரியவரிடம்,

"இந்தாங்க சாமி பிரசாதம் சாப்பிடுங்க "என பொங்கலை அவரிடம் தந்தாள்.

அதுவரை தியானத்தில் மூழ்கி இருப்பது போல் இரு கண்களையும் மூடி அமர்ந்திருந்தவர், காந்தர்வி சொன்னதைக் கேட்டு அவள் புறம் பார்த்தார். அவர் கண்களும் முகமும் மலர்ந்த புன்னகை புரிந்தது.

அவள் நீட்டிய பிரசாதத்தை மறுக்காமல் வாங்கிக் கொண்டவர்,

"நல்லாயிரு கண்ணு "என்று சொல்ல பதிலுக்கு புன்னகைத்தாள்..

பிறகு மகரியும் அர்வியும் பொங்கலை பகிர்ந்து கொள்ள,

"உங்க ரெண்டு பேருக்கும் அது போதுமா? இந்தா அர்வி என்கிட்டயும் கொஞ்சம் ஷேர் பண்ணிக்க" என்றவாறு அவனுடையதை நீட்டினான் அகரன்.

ஒரு வாய் மட்டுமே அவன் உண்டிருக்க, அதிலிருந்த மிகுதி பகுதியை எடுத்துக் கொண்ட மகரி ரொம்ப தாராள மனசு சார் உங்களுக்கு."என்றுவிட்டு அவள் உண்ண ஆரம்பிக்க,

அகரனின் முகம் தான் விளக்கெண்ணெய் குடித்தது போலானது.அதைக் கண்ட தோழிகள் ரகசிய சிரிப்பை பரிமாறிக் கொண்டனர்.

"இந்தாளு அப்பட்டமா வழியுது அர்வி. உஷாரா இருந்துக்கோ "என்று அவளுக்கு மட்டுமே கேட்கும் வகையில் முனுமுனுத்தாள்.அவளும் புரிந்ததாக தலையசைத்து வைத்தாள்.

அகரன் அதற்குமேல் அங்கிருக்கவில்லை. அவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

"தேங்க்ஸ்டி மகி. இவரு இன்னைக்கு திடிர்னு இப்படி பண்ணவும் ரொம்ப சங்கடமா போச்சு "என்றவள் அவன் பிடித்து இழுத்தபோது நடந்த சம்பவத்தையும் பகிர்ந்து கொள்ள கவலை கொண்டாள் மகரி.

"அகரன் சார் நல்லவர் தான் அர்வி.இப்படி வழியறதை பார்த்தா ஒருவேளை உன்னை லவ் பண்றாரோ " என்று சொல்லவும் திடுக்கிட்டாள்.

"ஹே ஈர்ப்பு, அஃபெக்சன், கிரஸ் இப்படி ஏதாச்சும் இருக்கும்டி. நீ வேற பயமுறுத்தாத."

"அப்பிடி இருந்தா நல்லதுடி இல்லைனா என்ன பண்ணுவ?"

"ஏதா இருந்தாலும் வீட்ல பார்த்த மாப்பிள்ளைய தான்டி கல்யாணம் செஞ்சுக்குவேன். அவருக்கு நிஜமா என்னை பிடிச்சிருந்தா அப்பா கிட்ட வந்து பேசட்டும். அப்பா முடிவு தான் என் முடிவு."

"அட அட இந்த சின்ன மூளைக்குள்ள இவ்ளோ பக்குவம் இருக்கா " என போலியாய் வியந்தவளை அடித்த அர்வி அங்கிருந்து எழுந்து கைப்பையிலிருந்த தண்ணீர் போத்தலை எடுத்து கைகளை கழுவிக் கொண்டாள். மகரியும் கை கழுவிய பின் அருகிலிருந்த பெரிவருக்கும் தண்ணீரை குடுத்தாள்.

"என்கிட்டயே இருக்கு பாப்பா "என்றவர் தானும் கை கழுவியிய பின் தன் தோளில் மாட்டியிருந்த துணிப் பையில் ஈரத்தை துடைத்துக் கொண்டவர் தன் பையிலிருந்த ஒரு புத்தகத்தை காந்தர்வியிடம் தந்தார்.

மறுக்க முயன்றவளின் கைகளில் வலுகட்டாயமாக திணித்தவர்,

"எது எப்போ யாருக்கு கிடைக்கணும்னுங்கறது ஈசன் எடுக்குற முடிவு கண்ணு. அதை நாம மறுக்க கூடாது. சந்தோசமா இரு" என்று அவள் தலை தொட்டு ஆசீர்வதித்து விட்டு,

"ஓம் நமசிவாய " என்றவாறு அங்கிருந்து சென்று விட்டார்.


Thread 'காந்தர்வியின் கந்தர்வன் கருத்து திரி' https://pmtamilnovels.com/index.php?threads/காந்தர்வியின்-கந்தர்வன்-கருத்து-திரி.68/
 
கந்தர்வன் -3


காந்தங்கள் கருமையென
யார் சொன்னது
நீலமென நான் சொல்கிறேன்
அவனின்
நீல விழிகளைப் பார்த்தவர்கள்
அப்படித்தான் சொல்லிக்கொள்கிறார்கள்.லேசாய் அட்டை மங்கியிருந்த அந்த புத்தகத்தை பரவசமாய் பார்த்துக் கொண்டிருந்தாள் காந்தர்வி. கடவுள் வந்து அவளிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டால், ஒரு அறை முழுக்க கதை புத்தகங்கள் வேண்டுமென கண்ணை மூடிக் கொண்டு சொல்லிடுவாள்.

அப்படிப்பட்டவளிடம் இப்படி ஒரு புத்தகத்தை குடுத்தால் வானுக்கும் பூமிக்கும் குதிக்காமலா இருப்பாள்?

நீல வானத்தை பின்னனி கொண்ட அடர்ந்த வனமதில் தனித்து தெரிந்த உயர்ந்த மரத்தின் நீண்ட கிளையில் அமர்ந்திருந்தான் ஒருவன். அவனின் கையில் ஒரு கையடக்க யாழ் இருந்தது. அதை அவன் லயித்து வாசிக்கும் பக்கவாட்டு தோற்றம் அந்த புத்தகத்தின் அட்டைப் படத்தை அலங்கரித்தது.

'வாவ் என்ன அழகா இருக்கு '

காந்தர்வியின் கரங்கள் புத்தகத்தின் அட்டையை ரசனையுடன் மென்மையாய் வருடியது.

'விழி மூடி சுகமாய் வாசித்துக் கொண்டிருந்தவன் மீது அவளின் விரல்கள் தீண்டியதில், ஊனற்று உணர்வுகளற்றுக் கிடந்தவனது தவம் கலைந்தது. மங்கி மக்கிப் போயிருந்த விழிப் புலன்கள் விடுதலை கொண்டு தன்னை தீண்டிய யுவதியைப் பார்த்தான் அவன்.

பரிசுத்த வெள்ளைக் காகிதத்தில் ஒற்றைப் புள்ளியாய் அவள் அவனுக்கு தெரிந்ததில் பெரிதும் ஈடுபாடின்றி விழி மூடி யாழை மீட்டத் துவங்கினான்.

அவனின் அசுவாரஷ்யத்தை பற்றிய எண்ணம் ஏதும் இல்லாமல் அந்த புத்தகத்தை விரித்து அதன் நடுப் பக்கத்தில் முகத்தை பதித்தாள். கம்மென சந்தனமும் ஜவ்வாதும் மணந்தது.

'எதற்கு இந்தப் பெண் அவள் முகத்தை இப்படி என்னில் வைத்து இழைக்கின்றாள் 'முகத்தை சுழித்துக் கொண்டான் உள்ளிருந்தவன்.

வழக்கமாக வரும் புத்தகத்தின் வாசனையை எதிர்பார்த்து முகர்ந்தவளுக்கு கிடைத்த சந்தன வாசம் அவளை ஒரு வித மயக்கத்தில் தள்ளியது.கண்களை மூடி ஆழ மூச்செடுத்தாள்.

அதைக் கண்ட மகரி,

"ஏய் அர்வி இது பஸ் அந்த நியாபத்தோட இரு. நீ குடுக்குற ரியாக்ஷன்லாம் பார்த்து பக்கத்து சீட் பையன் ஓரு மாதிரி பார்த்து வைக்குறான்." மகரி சொன்னதெல்லாம் காதிலேயே வாங்காமல் காந்தர்வி அமர்ந்திருந்தாள்.

"இதெல்லாம் திருந்துற கேஸ் இல்லை " என புலம்பியவள், பக்கத்து சீட் பையனைப் பார்த்து கழுத்தை சீவுவது போல் செய்கை செய்ததில் அவன் முகத்தை திருப்பிக் கொண்டான்.

"இந்தாடி ஜன்னல் பக்கம் உக்காந்து படிச்சுத் தொலை.இவனுகள நம்ப முடியாது " என்று காந்தர்வியை யன்னலோரத்தில் தள்ளிவிட்டு மறுபுறம் வந்து அமர்ந்து கொண்டாள்.

மாலை நேரத்து மயக்கம், யன்னலில் அத்து மீறும் காற்று, பேருந்து ஓட்டுநரின் கரிசன தொண்ணூறுகளின் பாடல் கீதம் அதுவே போதுமென கண் மூடி அமர்ந்து விட்டாள் மகரி.

ஆனால் காந்தர்வியின் பிரியங்கள் அனைத்தும் அந்த ஒற்றை புத்தகத்தில் குவிந்திருக்க ஆர்வமாய் முதல் பக்கத்தை புரட்டினாள்.

கதை தலைப்பில்லை ஆசிரியர் பெயரில்லை அத்தியாய வரிசையில்லை. அப்பிடியே ஆரம்பித்திருந்தது அவன் கதை.

மனமென்னும் மாயலோகத்தில் சஞ்சரிக்க ஆரம்பித்தாள் காந்தர்வி.

பசும் வண்ணம் கொய்யும் சோலையினை அந்த பிரம்மன் நெய்யும் போது மிகு நேர்த்தியை கடை பிடித்து விட்டது போலொரு அழகிய பசுஞ் சோலையது எங்கள் கந்தர்வ புரி. காணுமிடந்தோறும் கண்ணின் மணிக்குள் ஒத்தி வைக்க நெஞ்சம் ஏங்கும் இயற்கை எழில் சூழ் நாடு.


கோட்டைகளுக்கு மதில் அமைத்துப் பார்த்திருப்பாய். அகழி சூழ்ந்து கண்டிருப்பாய். இங்கனம் மலைகளும் மதில் சுவாரகும். சுழித்தோடும் ஆறுகள் அகழிகலாகும்.

எத்தனை ஆண்டுகள் எத்தனை மாற்றங்கள் வந்த பொழுதும் கந்தர்வ புரி அந்நியர்கள் எவர் கையிலும் அகப்பட்டதே இல்லை. இப்படி ஒரு தேசம் இருப்பதே வெளி உலகுக்கு அறிய கிடைப்பதே அரிது.

அப்படி எங்கள் நாட்டை மிக சிறப்பாக ஆட்சி புரிந்து வழி நடத்தியவர்கள் எங்கள் மூத்தோர்.

அன்று நிறைந்த பௌர்ணமி சுப திதியை. கந்தர்வ புரி அரண்மனையின் அந்தபுரம் மிகுந்த பரபரப்பில் மூழ்கியிருந்தது. ராணி மதுரா தேவி தலைப் பிரசவத்தின் வலியில் துடித்துக் கொண்டிருந்தார். இரவில் ஆரம்பித்த வலி அர்த்த ஜாமம் கடந்தும் தொடர்ந்து கொண்டிருந்ததில் அவரது எழில் முகம் களைத்துப் போயிருந்தது.

ராஜ்ஜியத்தின் பேரரசர் மகர வேந்தன் அரசியின் அறைக்கு வெளியே இருந்த உப்பரிகையில் கவலையுடன் நடந்து கொண்டிருந்தார்.

"அரசே சற்று நேரம் இளைப்பாருங்கள்.நீண்ட நேரமாக நடந்து கொண்டுள்ளீர்கள்" தலைமை மந்திரி கவிராயர் சற்று கவலையுடன் கூறினார்.

"நான் எங்கனம் இளைப்பாறுவது ராயரே. உள்ளே தேவியின் அழுகைக் குரல் என் செவியில் தீண்டி உள்ளத்தை பதற வைக்கும் நிலையில் மனம் அலைப்புறத் தான் செய்கிறதே அன்றி அமைதியடைய மறுக்கிறது."

"பெண்ணாய் பிறந்தவளுக்கு இந்த வலியை வாழ்க்கையில் ஒருமுறையேனும் அனுபவித்துத் தான் ஆக வேண்டும் வேந்தா." ராஜமாதா நிதர்சனத்தை எடுத்துரைத்தார். ஆனால் மகர வேந்தரின் தவிப்பை அவ்வார்த்தைகள் போக்க வில்லை.

நேரம் வைகறை வேளையை மெல்ல கடக்க ஆரம்பித்தது. கிழக்கு வானில் செஞ்சூரியன் மேலெழும்ப ஆரம்பித்த நேரம் அரசியாரின் பலத்த வீரிடலுக்கு பிறகு அந்நாட்டின் இளவரசன் பிறந்திருந்தான்.

ஆர்வமும் படபடப்புமாய் மகர வேந்தர் காத்திருக்க சற்று நேரத்தில் வந்த மருத்துவச்சி குழந்தையை அரசரின் கையில் தந்தார்.

ரோஜா வண்ணத்தில் சந்தனத்தை குழைத்து செய்த நிறத்தில் தன் கையிலிருந்த குழந்தையை பரவசத்துடன் பார்த்தார். மங்கிய வெளிச்சத்தில் பொன் வண்ணம் மின்னும் முகத்தில் பளிச்சிட்ட நீல விழிகள் மகர வேந்தரை ஆச்சிரியத்தில் தள்ளியது.

அரசரின் கையிலிருந்த குழந்தையை பார்த்த கவிராயர் "அரசே! தேவலோகத்து கந்தர்வன் போலிருக்கிறார் நம் இளவரசர் " பக்தியும் பரவசமுமாய் அவருரைக்க வேந்தர் பெருமிதமாய் தலையசைத்தார்.

"நம்முடைய முன்னோர்கள் கந்தர்வர்கள் வழி வந்தவர்கள் என என் தந்தை சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன். இக்குழந்தை அவர்களின் பிரதி போன்று இருக்கின்றான்."ராஜமாதா சிலாகித்தார்.

அரண்மனையே அல்லோகலப் பட்டது. கந்தர்வ புரி மக்களைனைவரும் இளவரசனை கொண்டாடித் தீர்த்தனர். அவனது நீல விழிகளை காண மக்களைனைவரும் வழி மேல் விழி வைத்து காத்திருந்தனர். வளர்பிறை திகதி நன்னாளில் அவனுக்கு கந்தர்வ வேந்தன் என நாமம் சூட்டினர்.

அத்தனை கொண்டாட்டங்களின் நிறைவில் மிகப்பெரும் இடியொன்று எங்கள் வாழ்வில் விழுமென்று யாருமே எண்ணியிருக்கவில்லை.

மலர்களும் மகரந்தமும் மட்டுமே நிறைந்திருக்கும் என எண்ணியிருந்த என் வாழ்க்கை பாதைகளில் கற்களும் முட்களும் காட்டுச் செடிகளும் மட்டுமே நிறைந்திருக்கப் போவதையறியாமல் மிக மகிழ்வாய் என் அன்னையின் மடியில் உறங்கிக் கொண்டிருந்தேன்.


"ஏய் அர்வி எழுந்திரு…ப்ச் அர்வி எரும எழுந்திரு " மகரியின் அவசர உழுக்கலில் திகைத்து விழித்தாள் காந்தர்வி. திருப்பூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தது அவர்கள் வந்த பேருந்து.

அப்பொழுது தான் புத்தகத்தை படித்தபடியே அவள் உறங்கியிருப்பது புரிந்தது. மகரியைப் பார்த்து அசட்டுப் புன்னகை புரிந்தாள்.

"யம்மா பஸ் அடித்த ஸ்டாப்புக்கு போக வேண்டாமா. சீக்கிரம் இறங்குங்க " கண்டக்டரின் திட்டில் இருவரும் அடித்துப் பிடித்து பேருந்தை விட்டு இறங்கினர்.

"ஸ்டாப் வருமின்னயே எழுப்பி இருக்கலாம்ல மகி " தூக்கத்தில் கனத்த இமைகளை கசக்கியவாறே கேட்டாள்.
அதில் லேசாய் நெளிந்த மகரி,

"நானும் கொஞ்சம் தூங்கிட்டேன்டி. கண்டக்டர் அண்ணா பார்த்து எழுப்பி விடலைனா நேரா கரூர் தான் போயிருப்போம்."

"சரி சரி அப்பா வராங்க. தெரிஞ்சா வள்ளுன்னு விழுவாரு " அவசரமாய் மகரி குசுகுசுக்கவும் மகரியின் தந்தை அருள்ஜோதி அருகில் வரவும் சரியாக இருந்தது.

"இந்நேரத்துல வராதீங்கன்னு எத்தினி தடவ சொன்னாலும் கேக்கறதில்ல." வரும் போதே திட்டிக் கொண்டு தான் வந்தார்.

"கிடைக்குறதே ஒரு நாள் லீவு மாமா. அதுலயும் அங்க ஒரு நைட் எப்படி வேஸ்ட் பண்றது. அதான் விட்டா போதும்னு ஹாஸ்பிடல்ல இருந்து நேரா வீட்டுக்கு பஸ் ஏறிட்டோம்."

"சேரி சேரி கண்ணு.. ராவு நேரமா போச்சுல்ல காந்தி அதான். சரி வுடு.. பசில இருப்பீங்க.. இப்பத்தா கோனார் கடையில புரோட்டா அல்லாருக்கும் வாங்குனேன். வீட்டுக்கு போய் சாப்புடலாம்.."

'கண்ணா புரோட்டா துன்ன ஆசையா..' சந்தானம் மாடுலேசன் மகரிக்கும் காந்தர்விக்கும் ஒலித்ததில் முகம் பல்பு போட்டது.

அதன் பின் நிமிட நேரம் கூட தாமதியாமல் அருளின் ஸ்பிலண்டர் பைக்கில் தொத்திக் கொள்ள, திருப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து சின்ன நாயக்கம் பாளையம் நோக்கி புறப்பட்டனர்.

இரண்டு மச்சு வீடுகள் பெரிய தென்னந்தோப்பின் வாயிலில் அருகருகே அமைந்திருக்க அதன் வெளியே முற்றத்தில் அனைவரும் அமர்ந்திருந்தனர்.கோனார் கடை புரோட்டா அனைவர் வாயிலிருந்தும் ஏப்பமாக வெளி வந்திருந்தது.

"இப்படி வாரா வாரம் வந்து போங்க புள்ளைங்களா.நீங்க இல்லைனா வீடே வெறிச்சோன்னு கிடக்கு."மகரியின் அன்னை கோமதி அலுத்துக் கொண்டார்.

"அதான் இந்த தடிமாடு இருக்குல்லம்மா " என அருகிலிருந்த காந்தர்வியின் தம்பி அரவிந்தனை காட்டினாள்.

"இவன் எங்க மகி வீடு தங்குறான். நிமிச நேரம் வீட்டுல இருக்க மாட்டிங்குறான். அந்த மட்டைய தூக்கிட்டு கோவில் கிரௌண்டுக்கு ஓடிடறான். ந்தா வெயில்ல வெளாண்டு வெளாண்டு கருவழிஞ்சு போய் கிடக்குறான் பாரு " தன் மடியில் படுத்திருந்த மகனை கன்னத்தில் இடித்தார் பேபி.

"யம்மா வலிக்குது."என கன்னத்தை தேய்த்துக் கொண்டு எழுந்தான் அரவிந்த்.

"ஏன்டா இன்னும் அந்த கரிமேட்டு கருவாயன் கூட தான் கிரிக்கெட் விளையாட போறியா "

"ஆமா அந்தண்ணன் கருவாயன். நீ அப்பிடியே பேரழகி.. உன் வேலைய பாருடி கருவாச்சி." காந்தர்வியிடம் சிலிர்த்துக் கொண்டு நின்றான் அரவிந்த்.

"அப்பா இங்க பாருங்க கருவாச்சின்னு சொல்றான் " கோவமாய் தந்தையிடம் முறையிட்டாள் அவள்.

"அரவிந்து இப்படித் தான் அக்காவ பேச சொல்லி ஸ்கூல்ல சொல்லிக் குடுத்தாங்களா. தென்னந் தோவைய உரிச்சேன் முதுகு தோலு பிஞ்சிபுடும் ஆமா " கண்டித்தார் ராசு.

"ஆமா எப்ப பாரு என்னையே திட்டிகிட்டு இருங்க. அவளுந்தான அந்த அண்ணாவை கருவாயன்னு சொன்னா. அவளை எதும் சொல்ல மாட்டீங்களே.." அவரிடம் கடுகடுத்து விட்டு காந்தர்வியை பார்க்க அவள் கேலியாக வாயை சுழித்தாள். அதில் கோபத்துடன் அவளை துரத்திக் கொண்டு ஓடினான் அரவிந்த்.

"இப்ப உங்க காது குலுகுலுன்னு இருக்குமே. எனக்கு இதுங்களோட கத்தி கத்தியே சீவன் போயிரும்.."என்று அலுத்துக் கொண்டே அவர்கள் பின் சென்றாள் மகரி.உள்ளே அவர்கள் அடித்துக் கொள்ளும் சத்தம் கேட்டு சிரித்தனர் நால்வரும்.

"இப்பத்தான் வீடு வீடா இருக்கு " ராசு சொல்ல மற்றவர்கள் ஆமோதித்தனர்.

காந்தர்வியின் படுக்கையறை உள்ளே ஒருவரை ஒருவர் தலையணையால் அடித்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை விலக்கி விட்டாள் மகரி.

"போதும் நிறுத்துங்கடா.. முடியல உங்களோட.."அயர்வாய் கட்டிலில் அமர்ந்தாள்.அவளருகில் தானும் அமர்ந்த காந்தர்வி அரவிந்தனையும் பிடித்திழுத்து அருகில் அமர வைத்தாள்.மூவரும் ஒரே நேரத்தில் மெத்தையில் சாய்ந்தனர்.

அப்போது அரவிந்தன் பக்கத்தில் காந்தர்வி வைத்திருந்த புத்தகம் இருக்க அதை கையிலெடுத்தான்.

"இதென்ன புக்குக்கா பழசா இருக்கு. பழைய புத்தக கடையில வாங்குனியா?"

"இல்லடா. ஒரு தாத்தா குடுத்தாங்க.. ஹிஸ்டாரிக் நாவல்."

"ஓசில எது கிடைச்சாலும் வாங்கிடறது.."என கேலி பேசியவாறே அந்த புத்தகத்தை திறந்தான்.

"என்னது! கதை புத்தகம்ன்னு சொன்ன. உள்ள ஒரே வெள்ள பேப்பரா இருக்கு?" அரவிந்தன் சொல்லவும் திடுக்கிட்டாள் காந்தர்வி.


Thread 'காந்தர்வியின் கந்தர்வன் கருத்து திரி' https://pmtamilnovels.com/index.php?threads/காந்தர்வியின்-கந்தர்வன்-கருத்து-திரி.68/
 
கந்தர்வன் -4

மினிமினியாய் நான்
பறக்கிறேன்
பளிச்சிடுகிறேன்
யாருமற்ற வனாந்திரத்தில்!


"என்னது! கதை புத்தகம்ன்னு சொன்ன. உள்ள ஒரே வெள்ள பேப்பரா இருக்கு?" அரவிந்தன் சொல்லவும் திடுக்கிட்டாள் காந்தர்வி.

வேகமாய் அவனிடமிருந்து புத்தகத்தை பறித்தவள் அதன் பக்கங்களை பார்வையிட அதில் எழுத்துக்கள் தெரியவும் நிம்மதி பெருமூச்சு விட்டவள், அந்த புத்தகத்தாலேயே அரவிந்தன் பின் மண்டையில் தட்டினாள்.

"எதுக்குடா எரும பொய் சொன்ன?"

"நானெதுக்குடி பொய் சொல்றேன்? அந்த புத்தகம் நிஜமா வெறுமனா தான் இருந்துச்சு "

"இருந்த கண்ணும் அவிஞ்சு போச்சா? நல்லா கண்ண தொறந்து வச்சுப் பாரு " என்று அவன் முன் புத்தகத்தை விரித்துக் காட்டினாள். அதில் கடுப்பானவன் காந்தர்வியின் பின்னந்தலையை பிடித்து புத்தகத்தில் வைத்து அழுத்தினான்.

"நீ நல்லா பாருடி. இதுல எந்த எழுத்து தெரியுது "

"தலைல இருந்து கையை எடுடா முதல்ல " அவனிடமிருந்து விடுவித்துக் கொண்டவள், அவனின் முதுகில் மொத்த ஆரம்பித்தாள். அவனும் பதிலுக்கு அவளின் முடியை பிடித்து இழுத்தாள். இருவரும் குடுமிப் பிடி சண்டையிட, காந்தர்வியிடமிருந்து புத்தகம் நழுவி விழுந்தது.

சண்டையிட்டுக் கொண்டிருந்த இருவரையும் விலக்கி விட்ட மகரி கீழிருந்த புத்தகத்தை கையிலெடுத்தாள். அதன் நடுப்பக்கத்தை விரிக்க மங்கிய மஞ்சள் தாள் வெறுமையையே பிரதிபலித்தது.

"அரவிந்த் சொல்ற மாதிரி இந்த புதக்கத்துல ஒண்ணுமே இல்ல அர்வி " என்று சொல்லவும் குழம்பியவளாய் அந்த புத்தகத்தை பிரித்து அலசினாள்.

கருமையினால் எழுத்துக்கள் அச்சில் வார்த்திருக்க இடையிடயே வண்ணப் படங்களும் இடம் பெற்றிருந்தது. அப்படி ஒரு ஓவியத்தில் எதேச்சையாய் அவள் பார்வை விழ, ஒரு நீல ஒளி வெள்ளம் அவளை சூழ்ந்தது.

அவள் முன் சிறு பாலகன் ஒருவன் மயிற் பீலியை தன் கன்னத்தில் வைத்து இழைத்துக் கொண்டிருந்தான். அதில் சுருங்கி விருந்த அவன் கண்கள் அந்த மயிலறகு கண்ணின் நீல வண்ணத்தை பிரதிபலித்தது. அவனை நோக்கி அவள் கைகள் மெல்ல நீள, அந்த கணத்தில் அவள் மண்டையில் சுளீரென அடி விழுந்ததில் மாயையிலிருந்து விடுபட்டவள் போல் திடுக்கிட்டு விழித்தாள் காந்தர்வி. அவள் முன் கோவமாக நின்றிருந்தாள் மகரி.

"எத்தனை தடவ கூப்பிட்டும் காதுல விழாத மாதிரி உக்காந்திருக்க எரும."

"நீ கூப்பிட்டியா? எனக்கு நிஜமா கேக்கவே இல்ல மகி."பாவம் போல் விழித்தாள் அவள்.

"ஆவூன்னா மூஞ்சிய இப்படி வச்சுக்கோ.. ப்ச் நான் பேச வந்த விஷயத்தையே மறந்துட்டேன் பாரு."என்று தலையிலடித்துக் கொண்டவள்,சுற்றும் முற்றும் பார்த்தாள். அரவிந்த் அப்பொழுதே வெளியே சென்றிருக்க அறையில் யாருமில்லை. பின் அறைக் கதவை ஒருக்களித்து சாத்தி விட்டு காந்தர்வியின் அருகில் வந்தாள்.

"ஏய் அர்வி இந்த புக்ல நிஜமா எதாவது எழுதியிருக்கா. இல்ல என்கிட்ட விளையாடறியாடி?"

"சத்தியமா இதுல கதை எழுதிருக்கு மகி. ஹிஸ்டாரிக் நாவல் போல செந்தமிழ்ல இருக்கு. அதுல கந்தர்வபுரிங்குற நாட்டுல நடக்கறமாதிரி கதை ஆரம்பிச்சுருக்கு. அதோட நிறைய டிராயிங்லாம் இருக்கு."என்று சொல்ல மகரியின் கண்கள் வியப்பில் விரிந்தது.

"அர்வி இந்த புக்ல சம்திங் ஏதோ இருக்குன்னு நினைக்குறேன்."

"என்னடி சொல்ற"

"அந்த புக்ல இருக்க லெட்டர்ஸ் உன் கண்ணுக்கு மட்டும் தான் தெரியுது "

"என்ன சொல்ற மகி.. அப்போ அரவிந்த் சொன்ன மாதிரி…."

"எஸ்.. இதுல இருக்க கதையை உன்னால மட்டும் தான் படிக்க முடியுது. நாங்க பார்க்கும் போது இந்த புக் எம்ட்டியா தான் தெரியுது" மகரி சொல்ல சொல்ல காந்தர்வியின் கண்கள் விரிந்தது.

"அப்போ இது மேஜிக் புக்கா மகி?"
பரவசம் மிகுந்து வந்து விழுந்தது வார்த்தைகள்.

"அப்பிடித் தான் போலடி. ஆனா அந்த சாமியார் ஏன் உனக்கு குடுத்தாரு. ஒரு சர்க்கரை பொங்கலுக்கு இந்த மகிமைன்னு தெரியாம போச்சே. அடுத்த தடவ அவரை பார்த்தா நாலஞ்சு பார்சல் வாங்கி குடுத்து கரெக்ட் பண்ணிரனும்டி"

"அவர கரெக்ட் பண்ணி கைலாசா போய் செட்டில் ஆகிரு மச்சி "

"மாஜிக் புக் கிடைச்சுடுச்சுன்னு ஆணவத்துல ஆடாதடி " என அவள் மண்டையில் கொட்டினாள். பின் அவள் தோளில் முழங்கையை வைத்து ஊன்றியவள்,

"ஆமா அப்பிடி அந்த புக்ல என்ன கதைடி இருக்கு. உனக்கு மட்டும் தெரியற அளவுக்கு அந்த கதை என்ன ஸ்பெஷல்?" என்று கேட்க உதட்டைப் பிதுக்கினாள்.பின்,

"நான் இப்ப தான்டி படிக்க ஆரம்பிச்சுருக்கேன். பெருசா எதுவும் தெரியல. பட் படிக்கும் போது சம்திங் பீலிங் டிஃபரென்ட்"என்று சொல்ல கொஞ்சம் எச்சரிக்கையான மகரி,

"அர்வி.. படிக்கும் போது எதாவது சரியில்லைன்னு தோணுச்சுனா மேற்கொண்டு படிக்காதடி. இந்த மாஜிக் புக் எல்லாம் இமாஜின் பண்ணும் போது ஜாலியா இருந்தாலும் ரியல் லைப்ல ரிஸ்க் எடுக்க முடியாது "

"நீ பயப்படுற அளவுக்கு இதுல ஏதும் இருக்கும்னு தோணல மகி."

" எதுக்கும் உஷாரா இருன்னு தான் சொல்றேன். "

"ம்ம் சரிடி "

அனைவரும் உறங்க சென்ற பின் தனது அறைக் கதவை தாழிடாமல் வெறுமனே சாத்தி வைத்து விட்டு புத்தகத்தை எடுத்துக் கொண்டு மெத்தையில் அமர்ந்தாள். அறையில் மஞ்சள் நிற இரவு விளக்கு எரிந்தது.

புத்தகத்தின் நீல வண்ண அட்டை மெல்ல சூரியோதைய ஆரஞ்சு வண்ணத்திற்கு மாற ஆரம்பித்தது.வியப்பை உள்ளுக்குள் விதைத்தவாறு புத்தகத்தை புரட்டினாள்.

சூழ்நிலை மாற ஆரம்பித்தது..

அன்றைய இரவு அரண்மனை ஆலோசனை கூடத்தில் அவசர கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. அங்கு குழுமியிருந்த அனைவரின் முகமும் வருத்தத்தில் தொய்ந்து கிடந்தது.

"இளவரசின் வருகையை எண்ணி கந்தர்வபுரியே கோலாகலம் பூண்டிருக்கும் இவ்வேளையில் நாம் கூடியிருக்கும் காரணம் யாவரும் அறிவீர்கள் அல்லவா "

"ஆம் அரசே. இந்த செய்தியை கேள்விப்பட்டதிலிருந்து பெரும் கவலையில் ஆழ்ந்துந்துள்ளோம் "

"கவலைப்பட காலம் முழுதும் அவகாசமுள்ளது அமைச்சரே.ஆனால் அதை விட முக்கியமானது இளவரசரின் இந்த பிரச்சனைக்கு தகுந்த தீர்வு மட்டுமே "

"புரிகிறது அரசே. நாங்களும் கூடி ஆலோசித்து ஒரு தீர்வைக் கண்டுள்ளோம். தாங்கள் விருப்பப்பட்டால் அதை சொல்ல சித்தமாயிருக்கிறோம்."முதல் மந்திரி கவிராயர் சொல்ல அரசரின் முகத்தில் பிரகாசம் வந்தது.

"கூறுங்கள் ராயரே. என் மைந்தன் கந்தர்வ வேந்தனுக்காக எத்தகு செயலையும் செய்து அவன் வருங்காலத்தை வசந்தமாய் மாற்றிக் காட்டுவேன்."

மகர வேந்தர் சொன்னதைக் கேட்டு அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பின் கவிராயர் சற்று தயங்கிய குரலில்,

"அரசே நாங்கள் கூற வரும் செய்தி தங்களால் ஏற்றுக் கொள்ள சற்று கடினமாக இருக்கும். ஆனால் இளவரசின் வருங்கால நிம்மதியை எண்ணியே நாங்கள் இவ்வாறு யோசித்தது "

"பீடிகைகள் வேண்டாம் ராயரே. நேராக விஷயத்திற்கு வாருங்கள்"

"அது வந்து அரசே, நம் இளவரசர் எப்பெண்ணை காதலித்தாலும் அவள் இறந்து விடுவாள் என்பது தானே நமது ஜோதிடர் கூறிய ஜென்ம சாபம் "என்று சொல்ல முகம் இறுக்கமுற ஆம் என்பது போல் தலையசைத்தார் மகர வேந்தர்.

"அங்கனம் அவர் எந்த பெண்ணையும் காதலிக்கவில்லை என்றால்
இளவரசர் வருங்காலத்தில் எவ்வித துன்பத்திற்கும் ஆளாக வேண்டியதில்லையே "

"அதெப்படி ராயரே முடியும்.ஒரு ஆண் மகனால் எந்த ஒரு பெண்ணையும் விரும்பாமல் காலம் முழுதும் வாழ்ந்திட முடியுமா " அரசர் தன் சந்தேகத்தைக் கேட்டார்.

"முடியும் அரசே. ஒரு பெண்ணின் மேல் வைக்கும் நேசத்தை எம்பெருமான் ஈசன் மீது வைத்து விட்டால் "

"சுற்றி வளைக்காமல் நேராக விஷயத்தை கூறுங்கள் ராயரே " இம்முறை கூறியது ராஜ மாதா.

"மன்னியுங்கள் மாதா " என்று அவசர மன்னிப்பை அவரிடம் வேண்டிவிட்டு மேலும் தொடர்ந்தார்.

"நம் இளவரசை சிறு வயதிலிருந்தே சிவ நாட்டம் உடையவராய் வளர்க்கலாம் அரசே. தாங்கள் அறியாதது ஒன்றுமில்லை. பரம்பொருள் மேல் நாட்டம் வந்துவிட்டால் பெண்ணாசை மண்ணாசை எல்லாம் அடியொழிந்து போகுமல்லவா.."

"முடியவே முடியாது. இதற்கு ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன்.எனது மகன் இந்த கந்தர்வபுரியை ஆளுவதை விட்டுவிட்டு காவி வஸ்திரம் பூணுவதை ஒரு போதும் ஏற்க முடியாது " ராணி மதுரா தேவி படபடத்தார்.அவரது கையிலிருந்த குழந்தை வீறிட்டு ஆழ ஆரம்பித்தது. அதை தூக்கி தோளில் போட்டு தட்டியவாறு சமாதானம் செய்தார். பின் உறுதியான குரலில்,

"என் மகனை ஒரு போதும் நான் சிவ அடியாராய் வளர்க்கப் போவதில்லை " என்றுரைத்தார்.

அவையோர் அனைவரும் அமைதியையே கையாண்டனர்.ராஜமாதா இசைஞானியார் கூட அமைதியாகத் தான் இருந்தார். அவருக்குமே தங்கள் வம்சத்தின் மூத்த வாரிசு காவிப் பட்டம் துறப்பதை ஏற்க இயலவில்லை.

மகர வேந்தர் மட்டும் சற்று சிந்தனை செய்தார். பின்,

"தாங்கள் அனைவரும் அவரவர் அலுவல்களை காணப் புறப்படுங்கள். இது பற்றி நான் சிறிது யோசித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது." என்றிட அவை கலைந்தது.

மதுரா தேவியின் தனியறையில் குழந்தை கந்தர்வ வேந்தன் மஞ்சத்தில் துயில் கொண்டிருக்க யன்னல் மாடத்தில் சோகமே உருவாய் நின்றிருந்தார் அரசியார்.

"உறக்கம் கொள்ளவில்லையா மதுரா ? " என்று கேட்டவாறு அவரின் அருகில் வந்து நின்றார் மகர வேந்தர்.

"உறக்கமா? அது இனி சாத்தியமா வேந்தே. அயர்ந்து உறங்கும் நம் பாலகனை கண்டீரா. இக்குழந்தை என்ன தவறு செய்திருப்பான் என வாழ்நாள் முழுமைக்கும் இத் தண்டனை. விரும்புவதும் விரும்பப் படுவதுமே சாபமாய் ஒருவற்கு ஆக முடியுமா?" மதுரா தேவி ஆதங்கமாய் கேட்க பெருமூச்செரிந்தார் வேந்தர்.

"அது அவனது வினைப்பயனாக இருக்க நாம் யாது செய்ய முடியும் "

"வேந்தே ஒருவேளை நம் சோதிடர் எதையாவது தவறாக கணித்திருக்கலாம் அல்லவா. நாம் வேறு தேசத்திலிருந்து சாஸ்திர நிபுணர் யாரையாவது அழைத்து வரலாமல்லவா."

"நம் சோதிடரின் கணிப்புகள் எப்பொழுதும் பொய்த்ததேயில்லையென்று நீ நன்றாக அறிவாய் மதுரா "

"ஆம் நன்றாக அறிவேன் தான். ஆனால் தாய் மனம் ஏற்க மறுக்கிறது மன்னவரே "

விழிநீர் சிந்த அவருரைக்க மெல்ல அணைத்துக் கொண்டார் மகர வேந்தர்.

"நான் சொல்வதை கொஞ்சம் கேள் மதுரா. நம் மகனுக்காக நீ உன் மனதை பலப்படுத்தித் தான் ஆக வேண்டும். கவிராயர் உரைத்த தீர்வின் படி நம் மகனைப் பிரிந்து தான் ஆக வேண்டும்." என்று சொல்ல வெடுக்கென அவரிடமிருந்து தள்ளி நின்றார் மதுரா தேவி. அவர் எழில் முகம் கோபத்தில் மின்னியது.

" ஒருக்காலும் இதற்கு நான் ஒப்பவே மாட்டேன். "

"நீர் என்னை விரும்பியதால் நான் இறந்து போவேன் என்றால் யாது செய்திருப்பாய் தேவி "

"வேந்தே " என பதறியவராய் மகர வேந்தரின் அதரங்கள் மீது கரங்களை வைத்து மூடினார்.

"என்ன பேச்சு இது
வேந்தே.."சொல்லும் போதே கண்கள் கலங்கி விட்டிருந்தது.

" கேட்கும் போதே உன் மனம் என்னவாய் துடிக்குறது மதுரா. இதை விட வலியை நம் மைந்தன் அனுபவிப்பதை எங்கனம் நாம்மால் தாங்கிக் கொண்டிருக்க இயலும். இப்பொழுது நாம் எடுக்கும் முடிவு நமக்கு வலியைக் குடுத்தலும் கந்தர்வனின் எதிர்காலத்தில் கடும் துன்பத்தில் துவழாமல் இருப்பானல்லவா"

மகர வேந்தரின் மொழிகள் மதுரா தேவியை கொஞ்சம் அசைத்துப் பார்த்தது. உறங்கும் குழந்தையை பார்த்தார். தூக்கத்திலேயே சிரித்துக் கொண்டிருந்தது.

கலங்கிய விழிகளை துடைத்துக் கொண்டார். மாடத்தில் பதிந்திருந்த மகர வேந்தரின் கைகளைப் பற்றினார். அவரின் தோள்களில் மெல்ல சாய்ந்து கொண்டார். வெளி வானில் நிலவு பூரணத்துவம் அடையும் முயற்சியிலிருந்தது.மதுரா தேவியின் மனமும் அனைத்தையும் ஏற்கும் படிப்பினைக்கு தயாராக ஆரம்பித்தது.


"ஹாஹாஹா.. எந்த விதியிலிருந்து என்னை காப்பாற்ற முயற்சி செய்தார்களோ அவை அனைத்தையும் முறியடிக்க காலம் காத்திருந்ததை யாரும் அறியாமல் போனது காலத்தின் கோலமல்லவா காந்தர்வி "

இரவின் நிசப்தத்தை மீறிக் கொண்டு ஒரு கணீர்க் குரல் காதுகளில் விழ அடித்துப் பிடித்து எழுந்தாள் காந்தர்வி..Thread 'காந்தர்வியின் கந்தர்வன் கருத்து திரி' https://pmtamilnovels.com/index.php?threads/காந்தர்வியின்-கந்தர்வன்-கருத்து-திரி.68/
 
Status
Not open for further replies.
Top