வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

சர்வமும் ஆனவனே - கதை திரி

Status
Not open for further replies.

Priyanka Muthukumar

Administrator
சர்வம் 9:

வந்தவர்கள் இருவருக்கும் தான் அங்கிருப்பதில் பிடித்தமில்லை என்பது பதுமையவள் தெளிவாக உணர்ந்திருந்தாலும்,ஏனோ தன்னுடைய எதிர்க்கால வாழ்வே அங்கு தான் இருப்பது போல் உள்மனம் அச்சரம் பிசகாமல் கூறியதை அவள் எவ்வாறு மறுக்க?

அத்தோடு யாருமில்லை என்று கவலையில் உழன்று நேரத்தில் அதிரடியாய் தன் வாழ்வில் நுழைந்து அன்பு செலுத்தும் அந்த ஒற்றை ஜீவனை இழக்க விரும்பவில்லை பாவையவள்.

அது சற்றே சுயநலம் என்று தெரிந்தும் வலுக்கட்டாயமாக அவர்களது பார்வையில் தெரிந்த உதாசீனத்தையும்‌,அதனால் விளைந்த அவமானத்தையும் தாங்கிக்கொண்டு இல்லத்தினுள்ளே தங்கிக்கொண்டது அந்த குழந்தை உள்ளம் கொண்ட குமரி.

அவனது தாயின் கண்களில் கூட தன் மகனின் தலையில் சுமையாய் வந்துவிட்டாள் என்ற எரிச்சல் மண்டியிருந்தது என்றால்,அவன் தங்கையின் கண்ணில் சினம் மட்டுமே தாண்டவமாடியது.

பெண்ணவளது கடுகடுத்த முகத்திற்கு காரணம்,அவனது தங்கை டெய்ஸியின் அறையில் தான்,தற்போது சர்வத்மிகா தங்கியிருப்பதாக பொன்னம்மாவின் வாய்மொழியாக கேட்டு தெரிந்துக்கொண்டவளிற்கு அவள் தன்னிடம் முகம் கொடுத்து பேசாமல் இருப்பதற்கான செயற்காரணத்தை அறிந்துக்கொள்ள முடிந்தது.

அதற்காகவே சர்வத்மிகா இரண்டு முறை அவளிடம் மன்னிப்பு வேண்டிட எடுத்த முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிய அந்த சிறுப்பெண்ணின் மனம் சோர்ந்துப்போனது.

இதற்கெல்லாம் மேலாக,அலெக்ஸ் அன்று உதிர்த்த கடுமையான வார்த்தைகளுக்கு பிறகு அவளிடம் சரியாக முகம் கொடுத்து பேசாதது தான் அவளை அதிகம் பாதித்தது.

அவன் மனதில் எந்த கல்மிஷமும் இல்லை என்றாலும்,நாளுக்கு நாள் அவளின் பார்வையில் தெரிந்த இனம் புரியாத உணர்வை தன் கூரிய விழிகள் கொண்டு அறிந்தவன் 'இது சரியில்லை' என்று தீர்க்கதரிசியாய் அன்றே அவளின் ஆழ் மனதின் நேசத்தை கணித்து விலகிவிட்டான்.

இந்நிலையில் இரவு வெகு நேரம் கழித்து வீட்டிற்கு வருபவனை நேரடியாக எதிர்க்கொள்வதற்காக உறங்க செல்லாமல் சர்வத்மிகா வரவேற்பறையிலே காத்திருக்க தொடங்கினாள்.

இன்று எப்பாடுபட்டாவது தெளிவாக அவனிடம் தன் மனதிலிருப்பதை பேசிவிட வேண்டும் என அவனிற்காக வரவேற்பறையில் காத்திருக்க தொடங்கினாள்.

ஆனால் இன்று இரவு முழுவதும் காத்திருந்தாலும் அவன் வீட்டிற்கு வரப்போவதில்லை என்று பாவம் பேதையவள் அறியவில்லை.

ஏனெனில்,தமிழ்நாடு மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு முக்கிய வழக்கை விசாரணை செய்து குற்றம் புரிந்த குற்றவாளியை கண்டிப்பிடிப்பதற்கு ஏதுவாக காவலர்கள் தலைமையில் சிறப்பு குழு ஒன்று நியமனம் செய்யப்பட்டிருந்தது.

அந்த குழுவின் தலைவனாக குற்றவியல் பிரிவை சார்ந்த ஆர்யன் என்பவனின் கீழ் அந்த குழு அமைக்கப்பட்டிருக்க,அதில் ஆர்யனிற்கு அடுத்ததாக பொறுப்பில் இருந்தான் அலெக்ஸ் பாண்டியன்.

ஆர்யனிற்கு இந்த வழக்கு விசாரணையின் போது நிகழ்ந்த எதிர்ப்பாராத தாக்குதலினால் காலில் பலமான அடிப்பட்டிருந்தது.அதன்பலனாய் தலைமை பொறுப்பு முழுவதும் இவன் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்க குற்றவாளியை கண்டுப்பிடிக்கும் பணியில் இரவு பகல் பாராது வீட்டிற்கு கூட வராமல் அயராமல் உழைத்துக்கொண்டிருந்தான்.

அதற்கு காரணம்,நாட்டில் மர்மமான முறையில் பொது மக்கள் சிலர் தங்கள் சுய உணர்வை இழந்தாற் போல் நடந்து சென்று மற்றவர் பார்க்கையில் ஒரு உயரமான மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து வரிசையாக தற்கொலை செய்துக்கொண்டு இறந்திருந்தனர்.

இதுவரை ஐந்திற்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துக்கொண்டு விசித்திரமான முறையில் இறந்துப்போனவர்களை பற்றி விசாரித்ததில் ஒரு முக்கிய தடயம் ஒன்று கிடைத்திருந்தது.

உயிரற்ற பிணங்களாக பாலத்திற்கு அடியில் கிடைத்த சடலங்களை பற்றி உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டதில்,அவர்கள் அனைவரும் பெண்கள் கற்பழிப்பு வழக்கில் தவறு செய்தவர்களுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்கள் என்பதை அறிந்துக்கொண்ட அலெக்ஸ், அவர்கள் இதுவரை வாதாடிய வழக்குகளை பற்றி தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு அலசி ஆராய்ந்து கொண்டிருந்தான்.

ஒரு வழியாய் சரியான பாதையில் துப்புத்துலக்கிய அலெக்ஸ் குற்றவாளியை நெருங்கிய வேளையில் முற்றிலும் எதிர்ப்பாராத வகையில் ஒரு மர்ம கும்பல் தன்னை நோக்கி நடத்திய துப்பாக்கி சூட்டில் காயத்தை தனக்கு பதிலாக ஆர்யன் வாங்கிக்கொண்டதில் அலெக்ஸிற்கு அவனின் மீது ஒரு பரிதாபமும் மரியாதையும் ஒருங்கே தோன்றியிருந்தது.

அதற்காகவே யாவரின் உதவியின்றி தனிமையில் வாடி தவிப்பவனிற்கு ஆறுதலளிக்கும் விதமாக இரவு அவனுடனே தங்கிக்கொள்ள போவதாக தாயிடம் முன்னரே தகவல் தெரிவித்திருந்தான்.

அதையறியாத சின்னஞ்சிறு பாவையோ தன்னை வழிநடத்தி செல்லும் மீகாமனை எதிர்நோக்கி வாசலிலே பார்வையை பதித்து கண்கள் பூக்க தவமிருந்தாள்.

பொன்னம்மாவிடமும் இதைப்பற்றி விசாலினி தெரிவிக்காததால் அவருக்கும் அவன் இரவு வீட்டிற்கு வரப்போவதில்லை என்ற விடயம் அறியாமையால் அவர் எவ்வளவோ வற்புறுத்தி 'தூங்க' வருமாறு அழைத்தும் அவள் பிடிவாதமாக வரமறுத்து வரவேற்பறையிலே பலியாய் கிடந்தாள்.

அவன் வருகையை எதிர்நோக்கியப்படியே பொன்னம்மா கீழே சுவற்றில் சாய்ந்து உறங்கியிருக்க,சர்வத்மிகாவோ சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த நிலையிலே உணவு மேசையின் மீது தலை சாய்த்து தன்னை மீறி உறங்கியிருந்தாள்.

எப்பொழுதும் போல் காலை எழு மணிக்கு கண்விழித்த டெய்ஸி அறையை விட்டு வெளியே வருகையில் கண்ணை கசக்கி "பொன்னம்மா காபி" என கொட்டாவி விட்டப்படியே வர,

அவளின் குரல் ஒலித்ததற்கு பிறகே அடித்து பிடித்து அவசரமாக எழுந்துக்கொண்ட பொன்னம்மாவோ புடவை தலைப்பில் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு "இதோ போட்டு வரேன் பாப்பா" என பதட்டத்துடன் கூறியப்படி சமையலறைக்குள் நுழைந்தார்.

எப்பொழுதும் ஆறு மணிக்கெல்லாம் எழுந்து சமையல் வேலைகளை ஆரம்பிப்பவர்,இன்று வெகு நேரம் உறங்கிய குற்றவுணர்விலும் விசாலினிக்கு தெரிந்தால் தன்னை ஒரு வழி செய்துவிடுவார் என்ற அச்சத்திலும் படபடப்புடனே சமையலறையில் தன் பணியை தொடங்கினார்.

அதற்குள் கண்ணை கசக்கிக்கொண்டே வரவேற்பறைக்குள் நுழைந்திருந்த டெய்ஸி உணவு மேசையின் முன்பு போடப்பட்டிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்து இரு கரங்களையும் மேசையின் மீது ஊன்றி தலையை கரங்களால் தாங்கி உறக்கத்தை தொடர்ந்தாள்.

சர்வத்மிகாவோ இரவு வெகு நேரம் கழித்து உறங்கியதால் டெய்ஸியின் சத்தத்தில் கூட உறக்கம் களையாமல் இப்போதும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.

அதற்குள் பாலை நன்கு காய்ச்சி கொட்டை வடிநீர் தயாரித்து எடுத்து வந்தவர்,டெய்ஸியும் சர்வத்மிகாவும் அருகருகே உள்ள இருக்கையில் அமர்ந்த வாக்கிலே உறங்கிக்கொண்டிருப்பதை கண்டு ஆச்சரியத்துடன் விழி விரித்தார் பொன்னம்மா.

ஏனெனில் இரண்டு நாட்களுக்கு முன்பு கூட டெய்ஸியும் அவளது தாய் விசாலினியும் அலெக்ஸிடம் சர்வத்மிகாவை வேறு எங்கேயாவது விடுதியில் அல்லது இல்லத்தில் சேர்த்து விடும்படி சண்டையிட்டு விவாதம் நடத்திக்கொண்டிருந்ததை இவரும் கேட்டு சர்வத்மிகாவின் நிலையை எண்ணி மனம் நொந்துப்போனார்.

அத்தோடு அவள் பக்கத்தில் வந்தால் கூட தீட்டு என்பது போல் அவளை தீண்டத்தகாதவளாக பாவித்து அவள் வரவேற்பறைக்கு வந்தால் தாயும் மகளும் உடனடியாக முகத்தை திருப்பிக்கொண்டு தங்களது அறைக்குள் நுழைந்து கொள்வதை அறிந்த சர்வத்மிகாவிற்கு உள்ளுக்குள் ரணமாய் வலித்தாலும் வேறுவழியின்றி வரவேற்பறைக்கு வராமல் அறையினுள்ளே அடைந்து கிடந்தாள்.

நெஞ்சமெல்லாம் ஊசியால் குத்தும் உணர்வு!

நேற்று தான் அலெக்ஸிடம் பேசுவதற்காக வெளியே வந்திருந்தவளிற்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.

ஆனால் இப்போது டெய்ஸி அவளாக சர்வத்மிகாவின் அருகில் அமர்ந்திருப்பதை எண்ணி வியந்தப்படியே அவளை நெருங்கினார்.

"பாப்பா இந்தா காப்பி" என்றவுடன் "ஹூம்" என்று சிணுங்கி கண்ணை கசக்கியப்படி விழி திறந்தவள் தன் முன்னே ஆவி பறக்க இருந்த கொட்டை வடிநீர் குவளையை ஆசையோடு விழி விரிய பார்த்து "தேங்க்ஸ் பொன்னம்மா" என வடிநீரை ரசித்து உறிஞ்சி குடிக்க தொடங்கினாள்.

பொன்னம்மாவோ மனதிற்குள் 'பரவாயில்லை பாப்பா மனசு மாறி இந்த பாப்பாவை ஏத்துக்கிச்சு போல்' என அகமகிழ்ந்துப்போனவர்,அதற்கான ஆயுள்குறைவு என்பதை அச்சமயம் அறியவில்லை.

ஏனெனில் சிறிது சிறிதாக வடிநீரை மிடறு விழுங்கிக்கொண்டே "பொன்னம்மா உன்னை மாதிரி காப்பி போட இந்த உலகத்தில் யாருமே இல்லை...செம்ம சூப்பர்" என புன்னகையுடன் சிலாகித்துக்கொண்டே பார்வையை சுழற்றியவளின் விழி வட்டத்தில் அப்போது தான் தன் அருகே வலதுப்புற இருக்கையில் அமர்ந்திருந்த சர்வத்மிகாவின் உருவம் தெரிந்தது.

அவளை பார்த்தவுடன் டெய்ஸியின் முகம் மாறி அஷ்டக்கோணலாகியது.

உடனடியாக குவளையை கீழே வைத்தவள் 'இவளா?' என பல்லை நறநறவென கடித்தவளின் முகம் ஜிவுஜிவுவென்று சிவந்துப்போனது.

இதழை அருவருப்புடன் சுழித்து படீரென்று இருக்கையை பலத்த சப்தத்துடன் தள்ளிக்கொண்டு எழுந்து நின்றவள் பொன்னம்மாவை தன்னுடைய கனல் விழிகளால் முறைத்து "பொன்னம்மா உனக்கு கொஞ்சம் கூட அறிவேயில்லையா?முன்னாடியே சொல்லி‌ தொலைச்சிருந்தா கண்ட கழுதையெல்லாம் பார்க்கவேண்டிய அவசியமே இருந்திருக்காது...எல்லாம் உன்னால் தான்" என விரல் நீட்டி படபடவென புரிந்து தள்ளியவள் "உன்னை இரு அம்மாகிட்டயே சொல்லி கொடுக்கறேன்...அம்மாஆஆஆஆ" என வீடே கிடுகிடுக்கும் படி கத்தினாள்.

அவளது கீச்குரலில் அலறியடித்து உறக்கம் களைந்து எழுந்து நேராக அமர்ந்த சர்வத்மிகாவோ தன் முன்னே காளி அவதாரம் எடுத்து நின்றிருந்தவளை கண்டு ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழிக்கத்தொடங்கினாள்.

அதை கண்டு மேலும் முகத்தை வெறுப்புடன் சுழித்த டெய்ஸியோ "அம்மாஆஆஆ" என்று உரக்க கத்தி குரல் கொடுக்க,

அதில் பதறிப்போன பொன்னம்மா "பாப்பா அம்மாவை கூப்பிடாதேம்மா...அம்மாவுக்கு தெரிஞ்சா ரொம்ப சத்தம் போடுவாங்க...நான் வேணா இந்த பாப்பாவை ரூமுக்கு கூட்டிட்டு போயிடறேன்...இனிமேல் நீங்க இருக்கும் போது வெளிய வராதமாதிரி பார்த்துக்கிறேன்" என கெஞ்சலாக மன்றாடியதற்கு பிறகே டெய்ஸி சிறிது இறங்கி வந்தாள் என்றால்,சர்வத்மிகாவிற்கோ அதன்பிறகே நடந்த நிகழ்வுகளின் காரணம் புரிப்பட இதயம் தன் துடிப்பை நிறுத்துவது போல் சுருங்கிப்போனது.

அவளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அச்சிறு பெண்ணின் இதயத்திற்குள் பெரும் பூகம்பத்தை விளைவித்தது.

மகள் அமைதி அடைவதற்குள் "ஏய் காலங்காரத்தாலே எதுக்குடீ எட்டு ஊருக்கு கேட்கமாதிரி கத்தறே?இந்த வீட்டில் நிம்மதியா தூங்க முடியாதா?" என வசைப்பாடி கொண்டே வரவேற்பறைக்கு வந்தவர்,

உணவு மேசையின் அருகே நின்றிருந்த மகளை கண்டு "என்னடி உனக்கு பிரச்சனை?எதுக்கு கத்தி கூப்பாடுப்போட்டே?" என்று மகளை அதட்ட,

அவளோ தன்னிடம் கண்களில் இறைஞ்சிய பொன்னம்மாவையும் தன்னுடைய வார்த்தைகளால் விழிகளில் உயிரற்று எங்கோ வெறித்த சர்வத்மிகாவின் பார்வையும் அவளின் நெஞ்சை பிசைந்திட தாயிடம் "ஒண்ணுமில்லைம்மா...அண்ணனை இன்னும் காணும்?அதுக்கு தான் உன்னை கூப்பிட்டேன்" என சமாளித்து வைத்தாள்.

மகளை இடுப்பில் கை வைத்து முறைத்து "அதுக்கு அவனிற்கு போன் பண்ணி கேட்க வேண்டியது தானேடி...என் தூக்கத்தை கெடுத்து எதுக்கு தொந்தரவு செய்யறே?" என்று திட்டிக்கொண்டே வரவேற்பறைக்கு வரமுனைந்தவரை கண்டு பொன்னம்மாவிற்கு திக்கென்றது.

அவளிற்குள்ளும் ஒரு பூ மனம் எங்கோ மறைந்திருக்க வேண்டும்‌ என்பது போல்,

சடுதியில் தனது தாயின் வார்த்தைகளின் வீரியம் உணர்ந்த டெய்ஸி உடனடியாக முன்வந்து அவரின் தோளில் கைவைத்து அறைக்குள்ளே தள்ளிக்கொண்டே "அம்மா அண்ணாவுக்கு போன் பண்ண சொல்லிட்டு வெளிய வந்தால் என்ன அர்த்தம்?போன் ரூமுக்குள்ள இருக்கு...வா நாம் அண்ணாகிட்ட பேசலாம்" என்று பகுமானமாக கூறி அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றாள்.

அதனை கண்டு நன்றிப்பெருக்குடன் இருகரம் குவித்தவரை பார்த்து மறுப்பாக தலையசைத்த டெய்ஸி கதவை சாற்றிக்கொண்டாள்.

அதன்பிறகு பொன்னம்மா சர்வத்மிகாவிடம் ஓடோடி வந்தவர் "பாப்பா வா...நாம் ரூமுக்கு போகலாம்" என விரைந்து செயல்பட்டு சக்கர நாற்காலியை அறைக்கு தள்ளிச்சென்றார்.

டெய்ஸி இயற்கையில் நல்லகுணமுடையவள் என்றாலும் சர்வத்மிகாவின் மீது பிடித்தமின்மை உருவாகியதற்கு காரணம் அவளது சகோதரன் அலெக்ஸ் இதுநாள் வரை எந்தவொரு பெண்ணிடமும் அவ்வளவு ஏன் அவளிடம் கூட அக்கறையாக நடந்துக்கொண்டதில்லை.

அவனது தாயின் மீதும் தங்கையின் மீதும் மலையளவு பாசத்தை நெஞ்சிற்குள் சுமந்திருந்தாலும் அதனை ஒரு நாளும் அலெக்ஸ் முகத்திற்கு நேரே வெளிக்காட்டியதில்லை என்றாலும்,தன் செயல்பாடுகளின் வழியாக அன்பை தங்கையிடம் பகிர்ந்துக்கொண்டிருந்ததை இருபத்தி இரண்டு பாவையால் உணர்ந்துக்கொள்ள இயலவில்லை.

அவனை போலவே நாட்டில் பல ஆண்கள் தங்கள் வீட்டு மகளிரின் மீது கொள்ளை கொள்ளையாய் பாசத்தையும் அன்பையும் நெஞ்சம் நிறைய வைத்திருந்தாலும் அதை அவ்வளவு எளிதாக வெளியிட விரும்பமாட்டார்கள்.

அப்படியே அவர்களின் அன்பும் அக்கறையும் வெளிப்படுமாகின் அது அதட்டலாகவோ கோபமாகவோ மட்டுமே புறத்தே காட்டுவார்கள்.

அதுப்போலான ஆண்களின் வகையை சேர்ந்த அலெக்ஸ் சர்வத்மிகாவின் மீது வெளிப்படையாக காட்டும் அக்கறை டெய்ஸியின் மனதினுள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி பொறாமையை தூண்டிவிட்டிருந்தது.

அதனால் புதுப்பிக்க வேண்டிய உறவுகளுக்கிடையே விரிசல் தோன்ற தன்னையறியாமலே காரணமாகியிருந்தான் வேந்தனவன்.

 

Priyanka Muthukumar

Administrator
சர்வம் 10:

ஆண்கள் மேம்போக்காக ஒரு விடயத்தில் நோட்டம் விடுவதால் தான் குடும்பத்திற்குள் தங்களை அறியாமலே சில விரிசல்கள் வர எளிதாக காரணமாகிறார்கள்.

அலெக்ஸூம் அந்த வகையாறாவில் தன்னை அறியாமல் சேர்ந்துவிட்டாலும் முழுவதுமாக அப்படியான வகையில் சேராமல் விரைவாகவே மனம் தெளிந்து சுதாரித்திருந்தான்.

ஏனெனில்,இங்கு வீட்டு பெண்களுக்கிடையே நடைப்பெற்ற உரையாடல் முழுமையையும் அந்த தருணத்தில் தன்னுடைய இல்லம் நோக்கி வந்தவனின் செவியில் தெள்ள தெளிவாக விழுந்திருந்தது.

பிறந்ததிலிருந்து அவன் அறிந்த வகையில் அவனது தங்கை இதுப்போல் கடினமான சொற்களை உபயோகிக்க கூடிய கொடிய மனம் கொண்டவள் இல்லை என்பதை சரியாக கணித்தவன்,அதற்கான காரணங்களை ஆராய்ந்தவாறே தன்னிடம் உள்ள சாவியை கொண்டு கதவை திறந்துக்கொண்டு உள் வந்தவன் நேரே தன் அறைக்குள் சென்று கூட்டிற்குள் அடைந்துக்கொண்டான்.

நெற்றியை யோசனையோடு வருடியப்படியே மெத்தையில் விழுந்தவன் ‘நான் எங்கு தவறுகிறேன்?’ என்று சரியான பாதையில் சிந்திக்க தொடங்கியவன்,பெண்கள் மூவரின் வார்த்தைகளையும் நியாய தராசில் வைத்து குற்றங்களை அலசி ஆராய தொடங்கினான் இந்த காவலன்.

ஒவ்வொருவரின் குணங்களையும் அலசி ஆராய்ந்து அவர்களின் உணர்வு குவியல்களுக்கான காரணத்தை அறிந்த அலெக்ஸ் ‘இதனை இப்படியே வளரவிடுவது சரியில்லை’ என தீவிர சிந்தனைகளின் தோன்றுதலாக ஒரு தீர்க்கமான முடிவெடுத்தான்.

அவன் சரியான பாதையில் யோசனை செய்து முடிக்கையில் கடிகாரத்தில் மணி எட்டை கடந்திருக்க,அவசரமாக தன் குளியலை முடித்துக்கொண்டு காக்கி உடையில் தயாராகி வெளிவந்த மகனை கண்ட விசாலினியோ “அலெக்ஸ் எப்போதுப்பா வீட்டுக்கு வந்தே?முன்னாடியே சொல்லியிருந்தால் உனக்கு காபி எடுத்திட்டு வந்திருப்பனே?” என அக்கறையாக வினவினாள்.

உள்ளிருந்து அலேக்ஸின் குரல் கேட்ட பாவையவளிற்கு முன்பிருந்த ஆர்வம் முற்றிலும் துடைத்தெறியப்பட்டிருந்தது.

அவனிடம் பேசுவதற்காக விடியும் வேளை வரையிலும் காத்திருந்த சர்வத்மிகாவிற்கோ டெய்ஸியின் செயல் மனதை கீறி ரணப்படுத்தியிருக்க,அவனிடம் பேச வேண்டும் என்பதை மறந்து தன் துயரத்தில் ஆழ்ந்திருந்தவளின் இதயம் துடித்துக்கொண்டிருந்தது.

இங்கோ அவனது பார்வை முழுவதும் அழுத்தமாக தங்கையை உரசியப்படி இருக்க “சொல்லாமல் வந்ததால் தான் கேட்க வேண்டியது எல்லாம் என் காதில் விழுந்தது” என உணர்ச்சியற்ற குரலில் சம்பந்தமின்றி பதில் உரைத்தான்.

அவனது வார்த்தையில் டெய்ஸியிற்கு மனம் திடுக்கிட தமையனை விழி விரிய அச்சத்தோடு ஏறிட,அதற்குள் விசாலினியோ “அலெக்ஸ் நான் என்ன கேட்கறேன்?நீ என்ன பதில் சொல்லுறே?” என்றார் குழப்பத்துடன்.

“எல்லாம் புரிய வேண்டியவங்களுக்கு புரிந்தால் சரிம்மா” என்றான் இப்போதும் தங்கையை பார்த்து குத்தலாக.

“கண்ணா அலெக்ஸ் என்னடா புதுசு புதுசா ஒண்ணுமே புரியாத மாதிரி புதிர் போடறே?” என்ற தாயின் கேள்விகளுக்கு “இங்க எல்லாரும் புதுசு புதுசா நடந்துக்கும் போது நானும் புதிர் மாதிரி தானே பேச வேண்டியிருக்கு” என்று அழுத்தமான குரலில் கூறிக்கொண்டே தன்னுடைய கூரிய பார்வையால் தங்கையை துளைத்துக்கொண்டிருந்தான்.

அவளோ 'அச்சோ!அண்ணாவுக்கு நான் பேசியது தெரிஞ்சிடுச்சே...தன்னை எதுவும் திட்டிவிடுவாரோ?' என பெரும் அவஸ்தையுடன் அங்கே அமர்ந்திருக்க முடியாமல் நெளிய,

விசாலினி “என்னவோ போ...ஒண்ணுமே புரியலை...சரி வேலைக்கு கிளம்பிட்டியா? வந்து இரண்டு வாய் சாப்பிட்டு போ அலெக்ஸ்” என தன் கரம் பற்றி இழுத்து வந்து அமர வைத்த தாயை “ப்ச்” என கையை உதறி சலித்துக்கொண்டு “அம்மா எனக்கு நேரமாகிடுச்சு...சாப்பாடு வேணாம்” என எழுந்துக்கொள்ள சென்றவனின் தோள்பட்டையை பிடித்து அழுத்தி அமர வைத்தவர் “கண்ணா நீ சாப்பிட்டு தான் வேலைக்கு போகணும்...இல்லை செய்யப்போற வேலை எதுவுமே சரியா நடக்காது” என்றவரிடம்,

“இல்லைனா மட்டும் எல்லாம் சரியா நடந்திடுமா?” என இப்போதும் புரியாமல் பேசும் தனயனின் சொற்கள் அவனை பெற்றெடுத்தவளிற்கு குழப்பத்தை விளைவித்தாலும்,அவனது தங்கையானவளிற்கு அவனது ஒவ்வொரு வார்த்தையிலும் வெளிப்பட்ட ஆதங்கமும் சினமும் அவளுக்கு உள்ளுக்குள் ஒரு அச்சத்தையும் வருத்தத்தையும் விளைவிக்க விருட்டென்று எழுந்து தன்னறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டாள்.

அதில் சுறுசுறுவென கோபம் பொங்கி பெருகினாலும் ஆழ்ந்ததொரு பெருமூச்சை வெளியிட்டு கழுத்தை ஒரு முறை நீவி உணர்ச்சியை கட்டுப்படுத்திய அலெக்ஸிடம் “உன் தங்கச்சிக்கு என்னாச்சுடா?வர வர அவள் போக்கே சரியில்லை...கண்டிச்சு வை அலெக்ஸ்” என புலம்பிக்கொண்டே உணவை அவனது தட்டில் பரிமாறி “சாப்பாடு அலெக்ஸ்” என்றார் கனிவுடன்.

உள்ளுக்குள் 'ஆமாம்மா அவள் போக்கு சரியில்லை தான்' என மானசீகமாக உரைத்த அலெக்ஸ் வேறு வழியின்றி தாயின் சொற்களை மீற முடியாமல் வேகமாக உணவருந்தி தட்டில் கை கழுவி எழுந்துக்கொண்டவனிற்கு தாயிடம் ‘நீ சாப்பிட்டியாம்மா?’ என்ற கேள்வி எழுப்பிட வேண்டும் என்று மனம் உணரவில்லை.

ஏனெனில் இதுநாள் வரை அவ்வாறு அவரது நலன் கேட்டு அறிவது வழக்கமில்லை என்பதினால் அவரை பற்றிய விசாரிப்பை விடுத்து பொன்னம்மாவை விழிகளால் தேடினான்.

அவர் சர்வத்மிகா அறையில் இருப்பதை அறிந்து பெயரிட்டு அழைத்து “பொன்னம்மா நீ சர்வத்மிகாவை ஒழுங்கா சாப்பிட வை...அவள் சாப்பிடலைனா இரண்டு அடி போட்டு சாப்பிட வை...எனக்கு நேரமாச்சு” என புறப்படும் வேகத்தில் அவசரமாக வார்த்தைகளை உதிர்த்து ஆணையிட்டு கிளம்பிய மகனின் மீது சிறு சினத்தையும் அதேசமயம் சர்வத்மிகாவின் மீது சிறு வன்மத்தையும் தன்னையறியாமல் தாயின் மனதினுள் விதைத்துவிட்டு சென்றுவிட்டான்.

அவனிற்கோ தங்கை பேசிய சொற்கள் மட்டுமே மனதிற்குள் இருக்க,அன்னை இதுப்போலான விசயங்களில் சரியாக நடந்துக்கொள்வார் என அவரின் மீது வைத்திருந்த கண்மூடித்தனமான அன்பும் நம்பிக்கையும் அவனை நம்ப வைத்திருக்க தாயின் மெல்லிய உணர்வுகள் அறியாமல் பேசிவிட்டு சென்றுவிட்டான்.

இவரோ மகன் சென்ற அடுத்த வினாடியே சர்வத்மிகா இருக்கும் அறையை வெஞ்சினத்துடன் ஒரு தடவை பார்த்து வெறித்தவர் மகளை போலவே விருட்டென்று அறைக்குள் நுழைந்து கதவை படீரென்று சாற்றிக்கொண்டார்.

இத்தனை வருடங்களாய் எதிர்ப்பாராத ஒன்று என்றாகினும்,மகன் தன்னை விட்டு வேறொரு பெண்ணை பெரிதாக மதித்து அவளை உபசரிக்கிறான் என்பதினால் பெண்களுக்கே உரித்தான பொறாமை குணம் இங்கு தலைத்தூக்கியது.

அத்தோடு யாரென்று அறியாத ஒரு பருவமடைந்த பெண் வீட்டில் இருந்தால்,அதனால் தனது மகன் மற்றும் மகளின் எதிர்க்கால வாழ்வு பாதிப்படையும் என்று சுயநலமாக எண்ணிய தாயுள்ளம்,அவளது நிலையை கிஞ்சுத்தும் கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் அவளை வீட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று துடித்தது.

பொன்னம்மாவிற்கோ பல வருடங்களாக இவர்களது வீட்டில் பணியாளாக பணிப்புரிந்தவரால் கூட இவர்களின் தற்போதைய நடவடிக்கைக்கான அர்த்தம் விளங்கவில்லை.

ஊரில் ஒரு பிச்சைக்காரன் கையேந்தி வந்தால் கூட அன்பாய் அன்னமிட்டு அரவணைக்கும் இந்த குடும்ப பெண்கள் இப்போது எதற்காக அநாதரவான நிலையில் இருக்கும் ஒரு அப்பாவி பெண்ணின் மீது வெறுப்பையும் சினத்தையும் காட்டுக்கிறார்கள் என்பது அவருக்கு புரியாத புதிராகவே இருந்தது.

இந்நிலையில் டெய்ஸியின் வாய்மொழியாக உதிர்ந்த வார்த்தைகளை கேட்டவளிற்கு வேள்வியில் குளித்து வெளிவந்தது போல் அவளது சரீரம் முழுவதும் அவமானம் என்னும் தீ பரவி திகுதிகுவென எரிய,அதன் கனல் தாங்க முடியாமல் உள்ளுக்குள் அனலில் இட்ட புழுவாய் துடித்துக்கொண்டிருந்தாள் சர்வத்மிகா.

இத்தனை அவமானத்தையும் வார்த்தைகளையும் தாங்கிக்கொண்டு கழிவிரக்கத்தோடு இங்கே இருக்க வேண்டுமா என்று தன்மானம் கூக்குரலிட்டாலும்,இரு கால்களையும் இழந்த நிலையில் தன்னால் மற்றவரின் உதவியின்றி எதுவும் செய்யமுடியாத இயலாமையில் உள்ளுக்குள் மேலும் இறுகிப்போனாள்.

அலெக்ஸ் தங்கையின் கொடிய வார்த்தைகளால் சர்வத்மிகாவின் மனம் பெருங்காயம் கொண்டிருப்பதை அறிந்தாலும் தற்போது அவனது கடமையே முதன்மையாக தெரிந்திட,இருவரிடமும் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று எண்ணி காவல்நிலையம் புறப்பட்டு சென்றுவிட்டான்.

ஆனால் அவன் செய்த கால தாமதத்தினால் அவனது தாய் மற்றும் தங்கையின் மனதிற்குள் பெரும் நஞ்சை கலந்துவிட்டிருப்பதை அறியாமலே போனான்.

சர்வத்மிகா உள்ளுக்குள் மரித்துப்போனாலும் பொன்னம்மா கூறியதை வேதவாக்காக கொண்டு ஒரு பதுமை போல் அனைத்தையும் செய்தவளின் கண்களில் ஜீவனின்றி இருந்தது.

உயிர்வாழ்வதற்காக உணவருந்தினாலும் அதன் சுவை அறியாமலும்,தட்டில் இருப்பது என்னவென்று பார்க்காமலும் உணவை அள்ளி உண்டவளின் மேனியோ நாளுக்கு நாள் மெலிந்துக்கொண்டே சென்றது.

அதை அறிந்து பொன்னம்மா அவளிற்காக கண்ணீர் வடித்தார் என்றால்,தாய் மற்றும் மகள் இருவரின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

முன்பாவது ஜாடையாக சர்வத்மிகா அறியாமல் தொடர்ந்த பேச்சுகள் இப்போது நேரடியாகவே அவளை விஷம் தடவிய சொற்கள் கொண்டு கத்திப்போல் தாக்கத்தொடங்கிவிட்டது.

அதன்வலியில் தனக்குள்ளே ஒடுங்கிப்போனாலும் பொன்னம்மாவிடம் 'இதைப்பற்றி அவரிடம் தெரியப்படுத்த வேண்டாம்' என்று இறைஞ்சி கேட்டுக்கொண்டாள்.

'இத்தனை நல்ல குணமுள்ள பெண்ணை இவர்கள் வாட்டி வதைக்கிறார்களே?' என அவரால் மனதிற்குள் வருத்தம் கொள்ள மட்டுமே முடிந்தது.

இப்போது சர்வத்மிகாவின் உடல் ஊனத்தை கொண்டு தொடர்ந்த கேலிப்பேச்சுகளை அவளால் பொறுத்துக்கொள்ள முடியாமல் வீட்டிற்குள்ளே நரகம் போல் காட்சியளிக்கத்தொடங்கிட,அங்கு அறைக்குள் இருக்க முடியாமல் மூச்சுமுட்டியது.

இதற்கிடையில் இயன் மருத்துவம் செய்தவதற்கு ஒரு பெண் மருத்துவரை வீட்டிற்கு அனுப்பி வைத்த அலெக்ஸ் பொன்னம்மாவிடம் “பொன்னம்மா அந்த பொண்ணு சொல்லறதையெல்லாம் சரியா கேட்டு வைச்சுக்கோ...அப்புறம் சொல்லி தர எக்ஸைஸ் எல்லாம் சர்வத்மிகா சரியா செய்யறாளா இல்லையான்னு என்கிட்ட சொல்லு...அவள் எதுவும் முரண்டு பிடிச்சா எனக்கு கால் பண்ணு உடனே வந்திடறேன்” என்றான் விறைப்புடன்.

அவரோ ‘சரி’ என்று தலையசைத்ததோடு நிறுத்திக்கொண்டார்.

இப்போதெல்லாம் வீட்டில் நடக்கும் கொடுமைகளை அவனிடம் கூறவும் முடியாமல் அதேசமயம் எங்கோ சென்று நிம்மதியாக இருக்கவேண்டிய பெண்ணை அழைத்து வந்து துயரம் கொள்ள செய்கிறானே என அவன் மீது கோபம் கொள்ளவும் இயலாமல் இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்துக்கொண்டிருந்தார் பொன்னம்மா.

அவளை பற்றிய பேச்சுகள் அனைத்தும் பொன்னம்மாவிடம் இருந்ததே ஒழிய, சர்வத்மிகாவின் முகத்தின் முன்பு பேசுவதை கூட நிறுத்திவிட்டான்.

அவளின் மனதில் நேசம் முளைவிட்டிருப்பதை கண்டறிந்த அந்த காவலனோ பெண்ணவளை சரியான பாதையில் அழைத்து செல்லும் ஆசானாய் இருக்க விரும்பினானே தவிர,அவளை மயக்கி தன் இச்சைக்கு பயன்படுத்தும் காமுகனாகவோ அல்லது காதலனாகவோ இருக்க விரும்பாமல் அவளை பார்த்து பேசுவதை கூட தவிர்த்துவிட்டான்.

சர்வத்மிகாவிற்கோ மகளிர் கூட்டணியின் வரம்பு மீறிய வசைப்பாடல்களை விட,அவனது ஒதுக்கமே பெண்ணவளிற்கு உயிர் போகும் வலியை கொடுத்தது.

'இந்த ஜென்மம் முழுவதும் நான் அனுபவிக்க வேண்டிய வேதனைகள் இன்னும் தீரவில்லையா இறைவா?' என கடவுளிடம் நியாயம் கேட்பதை தவிர சர்வத்மிகாவால் எதையும் செய்ய முடியவில்லை.

முன்பு உடல் குணமடைந்தால் இவனை விட்டு அனுப்பிவிடுவானோ என அஞ்சியிருந்தவளின் மனநிலையோ இப்போது ஒரு கட்டத்தில் கால் சரியாகி தினந்தோறும் அனுபவிக்கும் நரக வேதனையிலிருந்து தப்பிவிடமாட்டோமா என்னும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தாள் என்பது தான் கொடுமையிலும் கொடுமை!!

'மனம் இருந்தால் மார்க்கம் உண்டு' என்ற பழமொழிக்கு ஏற்ப பாவையவள் மனது அமைதியாய் இருந்தால் ஒழிய எடுத்த காரியத்தில் வெற்றியடைய முடியும் என்கையில் மனம் ஒரு நிலையில்லாமல் அவளால் ஒரு நாளும் எழுந்து நடக்க முயற்சிக்க கூட முடியாது என்று பாவம் பேதையவள் அறியவில்லை.

இன்னொரு புறம் தங்கையிடம் பேசுவதற்கு தக்க தருணத்தை எதிர்ப்பார்த்து காத்திருந்த அலெக்ஸிற்கோ அதற்கான சந்தர்ப்பம் என்பது அமையாமல் வேலை செய்யும் நேரம் நீடித்துக்கொண்டே சென்றது.

இந்நிலையில் தன் மீது மிகப்பெரும் பணிச்சுமையை செலுத்திய அந்த வழக்கு ஒரு வழியாக முடிவிற்கு வந்தது.

இலக்கியா என்னும் ஒரு ஐந்து வயது குழந்தையின் கற்பழிப்பு வழக்கில் தொடர்புடைய ஒரு காம கொடூரனுக்காக வாதாடிய வழக்கறிஞர் ஒருவர் அவனிற்கு விடுதலை வாங்கி தந்ததை தொடர்ந்து,அந்த குழந்தையுடைய தாய் மாமன் சஞ்சீவ் என்பவன் வெளிநாட்டில் மருத்துவம் பயின்றிருந்தவன் விஷயம் கேள்வியுற்று அவனை பழி தீர்ப்பதற்காக படிப்பு முடிந்து கையோடு இந்தியா வந்தவுடன் தன்னுடைய வேட்டையை தொடங்கியிருப்பது அலெக்ஸின் விசாரணையில் தெரிய வந்தது.

அவன் வெளிநாட்டில் படித்துக்கொண்டிருக்கையில் மனிதனின் மூளையை சில நிமிடங்கள் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பான கடுமையான ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கையில் நடந்தேறிய இந்த நிகழ்வில் மன உளைச்சலுக்கு ஆட்பட்டாலும் அதிலிருந்து விரைவாக தேறி இதுப்போல் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் கற்பிற்கு கேடு விளைக்கும் கொடியவர்களுக்கும் அவர்களுக்காக வாதாடும் ஈனப்பிறவிகளான வழக்கறிஞர்களையும் கொன்றே தீர வேண்டும் என தனக்குள் சபதம் எடுத்தவனால்,வெகு விரைவிலே அந்த ஆராய்ச்சியில் வெற்றி கிட்டியது.

அதனை தனது பேராசிரியரிடம் கூட மறைத்துவிட்டு படிப்பு முடிந்த கையோடு இந்தியா வந்திறங்கிய அடுத்த வினாடியே தனக்கென ஒரு இரகசிய ஆய்வுக்கூடம் ஒன்றை நிறுவி தீயவர்கள் ஒவ்வொருவராக கருவறுக்க தொடங்குவதற்கான மருந்துகளை தயாரிக்க ஆரம்பித்தான்.

அத்தோடு இதனை செய்வதற்கு ஒரு விதமான போதை பொருள் அவசியம் என்பதால்,தமிழகம் முழுவதும் போதை பொருட்களை வழங்கும் ஒரு இரகசிய நிறுவனத்தை கண்டறிந்து அதன்வழியாக அதிக பணம் கொடுத்து பொருளை பெற்று தன்னுடைய பலி வேட்டையை தொடங்கினான்.

அவனிற்கு உதவி செய்வதற்கு அடியாட்கள் சிலரை பணம் கொடுத்து விலைக்கு வாங்கி அவர்களை தன்னுடைய வேட்டைக்கு பயன்படுத்திக்கொண்டான்.

ஆனால் ஐந்து கொலைகள் வரை யாவருக்கும் சந்தேகம் வராத வகையில் வெகு சிறப்பாக வியூகம் அமைத்து திட்டமிட்டு தன் எண்ணத்தை நிறைவேற்றிய சஞ்சீவ்,ஏதோ ஒரு இடத்தில் சறுக்க அந்த அடியாட்களின் ஒருவன் காவலரின் பிடியில் சிக்கிக்கொள்ள அவன் வாய்மொழியாக அந்த போதை பொருட்கள் வழங்கும் நிறுவனம் முதற்கொண்டு சஞ்சீவ் வரை அனைவரும் ஒரு சேர பிடிப்பட்டனர்.

சஞ்சீவ் நியாயமான காரணத்திற்காக பெண்களை அவமதித்த அயோக்கியர்களை கொன்று வதம் செய்திருந்தாலும் சட்டத்திற்கு முன்பு ஒரு உயிரை பறிக்கும் உரிமை எந்தவொரு தனிநபருக்குமில்லை என்பதினால்,எந்த வித தயக்குமும் காட்டாமல் நீதி மன்றத்திற்கு முன்பு நிறுத்தினான் அநீதி இழைக்காத அலெக்ஸ் பாண்டியன்.

ஆனால் அயோக்கியர்களுக்கு நீதி வழங்கிய கோமகன் தன்னையறியாமல் ஒரு சிறு பெண்ணிற்கு அநீதியை மட்டுமே வழங்கிக்கொண்டிருக்கும் அநீதத்தை அறிய நேர்ந்தால்??




 

Priyanka Muthukumar

Administrator
சர்வம் 11:

ஒரு வழியாக தன்னுடைய பணிச்சுமை முழுமையாக தணிந்ததற்கு பிறகே அலெக்ஸால் அவனது வீட்டின் மீது கவனம் செலுத்த முடிந்தது.

திடக்கத்திரமான ஆடவன் என்றாலும் இந்த குறிப்பிட்ட தொடர் கொலை வழக்கில் ஏற்பட்ட அளவிட முடியாத அலைச்சலினால் அவனது படிக்கட்டு தேகம் மிகுந்த சோர்வுடன் காணப்பட்டது.

இரவு நேரத்தில் அந்த வழக்கு சம்பந்தமான சட்ட விதி முறைகள் அனைத்தையும் முடித்துவிட்டு வீடு வருகையில் நள்ளிரவு பன்னிரெண்டு மணியானது.

அவன் இன்று இல்லம் வருவதை பற்றி எந்த தகவலும் கூறாததால் அவனது தாய் விசாலினியும் தங்கை டெய்ஸியும் முன்னரே உறங்கிவிட்டிருந்தனர்.

'தனக்காக விழித்து காத்திருக்கக்கூடாது' என கண்டிப்பான கட்டளை போட்டிருப்பதால் அவனிற்காக யாவரும் கண்விழித்து காத்திருப்பதில்லை.

எப்பொழுதும் போல் தன்னிடமுள்ள சாவியை வைத்து வீட்டின் கதவை திறந்து உள்ளே நுழைந்த அலெக்ஸின் தேகமோ வெகுவாக களைத்து சோர்ந்திருக்க,முதன்முறையாக அவனது ஒட்டிய வயிறு பசியென்ற உணர்வை அதிகமாய் உணரத்தொடங்கியது.

ஆயினும்,இதுநாள் வரை தன்னுடைய பணிகளை தானே செய்து பழக்கப்பட்டிருந்ததால் யாரையும் தொந்தரவு செய்ய விரும்பாமல் சமையலறை நோக்கி சென்றவன்,அங்கே அடுப்பங்கரை திண்டு முழுமையாக துடைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டு முகத்தை இலேசாக சுழித்தவனின் உடல் அவனுடைய கட்டுப்பாடின்றி எங்கோ பறந்துக்கொண்டிருப்பது போல் தோன்றியது.

அவனது கண்கள் ஓய்விற்காக கெஞ்ச,முரட்டு தேகமோ ஒத்துழைக்க மறுத்து பசிக்காக அவனிடம் இறைஞ்ச 'உறக்கமா?பசியா?' என சில நிமிட பட்டிமன்றத்திற்கு பிறகு கண்களே வெற்றியடைய நேராக தன் உடையை கூட மாற்ற தோன்றாமல் தொப்பென்று மெத்தையில் விழுந்தான்.

ஆனால் சில நாட்களாகவே உறக்கத்தை தொலைத்து தன் கவலையில் ஆழ்ந்திருந்த சர்வத்மிகாவிற்கு நித்திரை தேவி அவளை விட்டு தொலைத்தூரம் சென்றிருந்தது.

அதனால் அலெக்ஸ் வீட்டிற்குள் வந்தவுடன் உருவாகிய அரவம் தொடங்கி,அவன் சமையலறையில் பாத்திரங்கள் சிலதை உருட்டி பார்த்து இரண்டு நிமிடங்களில் தன்னறைக்குள் நுழைந்து கட்டிலில் விழுந்தவுடன் அது எழுப்பிய ஓசை வரை அனைத்தையும் செவியின் வழியாக நுண்ணியமாக உணர்ந்து மனதிற்குள் அவன் தேடல்களை கிரகித்தவளிற்கு அவனுடைய தற்போதைய நிலையை நன்றாகவே தெரிந்துக்கொள்ள முடிந்தது.

அவன் மீதிருந்த மனவருத்தத்தில் எப்படியோ போகட்டும் என மெத்தனமாக இருக்க இயலாமல் இயற்கையாகவே பெண்களுக்குள் இருக்கும் தாய்மை உணர்வு தடுக்க மனமோ அவன் பசியோடு படுத்திருப்பதை அறிந்து பரபரத்தது.

சாதரணமாக படுக்கையில் இருந்து எழுந்துக்கொள்ளவே மற்றவரின் உதவியை நாடும் பாவையவளால் 'என்ன செய்திடமுடியும்?' என்பதினால் பொன்னம்மாவை அதிக சப்தம் செய்யாமல் அழைத்து எழுப்பினாள்.

இரவு நேரங்களில் அவள் தன்னை இதுவரை எழுப்பியதில்லை என்பதினால் கண்ணை தேய்த்து "என்ன பாப்பா?வெளிக்கி எதுவும் போகணுமா?" படுக்கையிலிருந்த எழுந்தப்படியே அவசரமாக வினவ,

அவளோ "இல்லை" என்பதாய் தலையசைக்க,

கனிவான குரலில் "வேற என்ன வேணும் தாயி?பசிக்குதா?எதையாவது செய்து எடுத்திட்டு வரட்டுமா?" என படபடவென பொரிவது போல் அக்கறையாக கேட்டவரை கண்டு சர்வத்மிகாவிற்கு விழிகள் பனித்தது.

முகத்தில் வெளிச்சம் பரவ "ஆமா" என்பது போல் தலையாட்டியவளை கண்டு 'இந்நேரத்தில் தொந்தரவு செய்கிறாளே?' என்ற எந்த வித முகச்சுழிப்புமின்றி கண்கள் ஆச்சரியத்துடன் விரிய "சரி இரு பாப்பா...நான் தோசை ஊத்தி பொடி கலந்து எடுத்தாறேன்...நீ இங்கியே இருக்கியா?" என்றார்‌.

ஏனெனில் இதுப்போல் அவள் பசியோ ருசியோ அறிந்து உணவருந்தி பல நாட்களே ஆகின்றதே!!

அதனால் தோன்றியதே இந்த ஆச்சரியம்.

அவளோ மென் புன்னகையுடன் "இல்லை பொன்னம்மா...நான் உன்னோட கிச்சன் வரைக்கும் வரேன்...அங்கே சாப்பிட்டு தட்டு வைச்சிட்டு வந்திடலாம்" எனவும்,

'அதுவும் சரி' என்று எண்ணி அவளை அலேக்காக தூக்கி சக்கர நாற்காலியில் அமர வைத்து சமையலறை வரை தள்ளி சென்றார்.

நாற்பது வயது பெண்மணியாகினும் கிராமத்தில் பத்து ஆட்களின் வேலையை இவர் ஒருவரே செய்து பழக்கப்பட்டிருந்ததால் உரமேறிய நெஞ்சுரம் படைத்த உடல் கொண்டவரின் பலம் இன்று நாற்பது கிலோ மட்டுமே எடை உடைய சர்வத்மிகாவை மிக எளிதாக தூக்க உதவிப்புரிந்தது.

அவருக்குள் இருக்கும் மனோ பலத்தையும் மற்றவரிடம் தணிவாக பேசும் அவருடைய குணத்தையும் கணக்கில் கொண்டே சர்வத்மிகாவை பார்த்துக்கொள்ள சரியான ஆள் இவராக இருப்பார் என்று இவரை இங்கு வரவழைத்திருந்தான் அலெக்ஸ்.

அவன் எண்ணிய எண்ணம் நிச்சயம் சோடைப்போகவில்லை.ஒற்றை ஆளாக அவளை மிக எளிதாக வலிமையின் வழியாக அவளை கையாளுபவரால் அவளது பிடிவாதத்தில் மட்டும் எவ்வாறு நடந்துக்கொள்வது என்று இன்று வரை அவரால் அறிய இயலவில்லை.

பொன்னம்மாவும் சர்வத்மிகாவும் சமையலறையில் ஓசை எழுப்பாமல் பேசிக்கொண்டே தோசை வார்த்து முடித்தனர்.

பொடியில் நல்லெண்ணெய் கலந்து தோசையோடு சேர்த்து இரண்டையும் தட்டில் வைத்து கொடுத்தவரிடம் “வேண்டாம்” என நிதர்சனமாக தலையசைத்து மறுத்தவளை விசித்திரமாக நோக்கியவரிடம் “இது எனக்கில்லை பொன்னம்மா” என்றாள் மெல்லிய குரலில் இமைத்தாழ்த்தி.

“பின்னே எதுக்கு பாப்பா பசிக்குதுன்னு சொன்னே?” என்று புரியாமல் குழப்பமாக அவளை நோக்க,

விழியை உயர்த்தி பெருமூச்சுடன் “பசிக்குது தான்...ஆனால் எனக்கில்லை” என்றாள் புதிராக.

அப்போது கூட அவளிடம் எந்த சினத்தையும் வெளிப்படுத்தாமல் “உனக்கில்லைனா வேற யாருக்கு தாயி?” என பொறுமையாக வினவவும்,சர்வத்மிகாவின் கருவிழிகளோ ஒரு முறை அலெக்ஸின் அறைப்புறம் சென்று மீண்டு வந்தது.

கிராமத்து வெகுளியான பெண்மணியால் எளிதாக அவளின் கண்சிமிக்கைகளை புரிந்துக்கொள்ள இயலவில்லை.

முகத்தை பாவமாக வைத்து “பாப்பா எங்க குலத்தெய்வம் சத்தியமா நீ என்ன பேசறன்னு இந்த மரமண்டைக்கு தெரியலை தாயி” எனவும்,

நீண்ட நாட்களுக்கு பிறகு மெல்லியதாக முறுவலித்தவள் “பொன்னம்மா இந்த தோசையை ஆபிசர் சார்கிட்ட கொண்டு போய் கொடுங்க...அவருக்கு தான் ரொம்ப பசிக்குது” என்றவுடன்,

அவரோ குழப்பமாக “தம்பி தான் இன்னும் வீட்டுக்கு வரலையே பாப்பா?” என,

“அதெல்லாம் வந்தாட்டாரு...நீ போய் அவருக்கு இந்த தோசையை கொடு...ரொம்ப பசிக்குதாம்”

“ஏன் பாப்பா அவரே ரூமுக்கு வந்து கேட்டாரா?நான் தான் நல்ல தூங்கிட்டனே?” என அப்பாவியாக வினவ,சட்டென்று முகம் வாட சில நொடி இதழ்கடித்து தலைகுனிந்திருந்தாள்.

பின்பு பெருமூச்சுடன் நிமிர்ந்து ‘இல்லை’ என்பதாய் தலையசைத்து “நீ போய் தோசையை கொடு...பாவம் இப்போ தான் வீட்டுக்கு வந்தாரு...பசிக்கும்” என்றாள் தாய்மையுணர்வுடன்.

ஆனால் பொன்னம்மாவோ “அடியாத்தி...அவருக்கு யாராவது சாப்பாடு கொடுத்தாக்கவே பிடிக்காது” என்று கிட்டத்தட்ட அலறியவரிடம் முகத்தில் அச்சம் பரவி கிடந்தது.

அதை உணர்ந்தாலும் வெகு நேரமாக பசியில் வாடிய அவனின் முகம் மானசீகமாக மனதில் தோன்றிட “ப்ச் பொன்னம்மா” என இதழை சுழித்து சலித்துக்கொண்டு நாசி விடைக்க கோபத்துடன் “பொன்னம்மா!அவருக்கு ரொம்ப பசிக்குது போய் தோசையை கொடுன்னா...இப்போ தான் வியாக்கியானம் பேசிட்டு இருக்கே?இப்போ நீ போறீயா?இல்லை நான் போகட்டுமா?” என அதட்டல் விட,அது சரியாக வேலை செய்தது.

'இந்த புள்ளை என்னடா இன்னைக்கு பொசுக்கு பொசுக்குன்னு கோபப்படுது' என புலம்பியவர்,

அடுத்த வினாடியே “இல்லை பாப்பா...நானே போறேன்” என பதட்டமாக கூறியவருக்கு முகமெல்லாம் வியர்த்து வழிய தொடங்கியது.

ஏனெனில் ஏற்கனவே ஒரு முறை இதுப்போல் அவனிற்கு உணவை எடுத்துச்சென்று வாங்கிய வசவுகளையும் கூடவே விடுத்த எச்சரிக்கையையும் உணர்ந்து அவரின் தயக்கம் உணர்ந்தவளாய் “பொன்னம்மா உன் கூட நானும் வரேன் வா...அவர் உன்னை திட்ட வந்தால் நான் பதில் பேசிக்கிறேன்...எனக்கு தெரிஞ்சு நிச்சயம் இன்னைக்கு அவர் உன்னை திட்டமாட்டார்...வா” அவருக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக திடமாக பேசி அழைத்தாலும் அவர் நின்ற இடத்திலிருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்காததை அறிந்து “பொன்னம்மா அதான் எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்னு சொன்னேன் இல்லை” என்றப்படியே அவரின் கைப்பிடித்து வலுக்கட்டாயமாக அவனறைக்கு இழுத்துச்சென்றாள்.

மனதிற்குள் அவனது செயல்களை எண்ணி மனகசப்புகள் குவிந்திருந்தாலும் தற்போது அதையெல்லாம் மறந்துவிட்டு அவனுடைய பசியை தீர்க்கும் அன்னப்பூரணியாக துடித்துப்போனாள் மங்கை.

‘இன்னைக்கு திட்டு விழப்போகுது’ என அச்சத்துடனே உள்ளே நுழைந்த பொன்னம்மாவிற்கு அங்கு நடந்தவை அனைத்தும் அதிசயம்,ஆனால் உண்மை என்பது போல் பேரதிர்ச்சியாக இருந்தது.

காரணம் அறைக்குள் நுழைகையிலே அவன் பசியோடு உறக்கம் வராமல் புரண்டுக்கொண்டிருக்கும் காட்சியை கண்ட பொன்னம்மா “தம்பி” என கதவருகே இருந்தப்படியே தயக்கமாக அழைக்க,

அடுத்த வினாடியே படக்கென்று எழுந்து அமர்ந்தவனின் கண்கள் சிவந்திருந்த விதத்தை கண்டு பயத்தோடு ஓரடி பின்னால் எடுத்து வைத்து சர்வத்மிகாவை காண,அந்தோ பரிதாபம் அவளிருந்த இடம் காலியாக இருக்க ‘இந்த பாப்பா ரொம்ப மோசக்கார பாப்பாவா இருக்கே...இப்படி தனியா மாட்டிவிட்டு போச்சே’ என உள்ளுக்குள் தடதடத்த இதயத்தை அடக்கும் வகையறியாமல் நின்றிருந்தவரின் கரத்தில் இருந்த உணவுகள் அடங்கிய தட்டை பார்த்தவுடன் அவனது முகத்தில் ஒரு பரவசம் குடிக்கொண்டது.

எப்பொழுதும் எளிதாக ஒன்று கிடைத்துவிட்டால் அதன் அருமை புரிவதில்லை.ஏனெனில் அது நம் கைகளில் தானே இருக்கிறது என்ற மெத்தனம் மனிதனிடம் தாண்டவமாடும்.அதுவே அந்த பொருள் தன்னிடம் இருந்து பிரிந்து தூரச்சென்று ‘நீ எனக்கு வேண்டாம்’ என பழிப்பு காட்டிய பிறகே அதன் மகத்துவம் அறிவார்களாம்.

அதுப்போல் அவன் வேண்டாதப்போது கிடைத்த உணவு பொக்கிஷத்தை சில நேரங்களில் அவமதித்தும் சில நேரங்களில் வேண்டாவெறுப்பாக உண்டும் வயிற்றை கவனித்துக்கொண்டிருந்தவனிற்கு அது தூர சென்று ‘உனக்கு தேவைப்படும் போது கிடைக்கமாட்டனே’ என திமிர் காட்டியதற்கு பிறகே முதன்முறையாய் பசியென்ற உணர்வை அறிந்து சுவையறிந்து சாப்பிடுவதற்கு நாவின் சுவை அரும்புகள் அனைத்தும் தயாராக இருந்ததை அவனே அறிந்தான்.

இருப்பினும் தன்னுடைய நிலையை விட்டுக்கொடுக்காமல் “நான் உன்னை சாப்பாடு கேட்டனே?” என சினத்தோடு கேட்பது போல் அவரிடம் புருவம் சுருக்கி வினவ,

அவரோ “அது...அது வந்து தம்பி” என தொடங்கும் போதே அவசரமாக இடைமறித்து “சரி...சரி...கேட்காமலே சாப்பாடு கொண்டு வந்துட்டே டேபிள் மேலே வைச்சிட்டு போ” என விட்டுக்கொடுப்பது போல் பேசுவதை அறிந்து பொன்னம்மா திருதிருவென விழித்தார் என்றால்,வெளிப்புறமாக இருந்து இவர்களது உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த சர்வத்மிகாவிற்கு இதழோரம் சிரிப்பில் துடித்தது.

‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாது போல்...பெரிய சூரன் தான்’ மனதிற்குள் அவனை செல்லமாக திட்டிக்கொண்டாள்.

“பொன்னம்மா இப்பிடியே இரத்திரி முழுக்க முழிச்சிட்டு நிற்கப்போறீயா?எனக்கு நேரமில்லை” வயிற்றில் சுரந்த அமிலம் அவனை அவ்வாறு பேச வைத்தது.

அவனது கணீர் குரலில் கவனம் கலைந்தவர் “ஐய்யோ மன்னிச்சுக்கிடுங்க தம்பி...இதோ வரேன்” என்றவர் உணவு தட்டை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு சென்ற வேகம் கூட தாமதிக்காமல் தட்டை எடுத்து வேகமாக தோசையை காலி செய்ய தொடங்கினான்.

மூன்று தோசைகள் அவனது அகோர பசியை நீக்கவில்லை என்றாலும் அரை வயிறு நிரம்பியதிலே திருப்தியாக உணர்ந்தாலும்,சிறிது ஏமாற்றமாகவே இருந்தது.

அதை உணர்ந்தாற் போன்று ஆபத்பாந்தவளாய் கையில் தோசைகள் அடங்கிய தட்டுடன் சக்கர நாற்காலியில் வந்துக்கொண்டிருந்தாள் சர்வத்மிகா.

அவன் தட்டில் கை கழுவ சென்றதை அறிந்து “சார்...சார்‌...வெயிட் பண்ணுங்க நான் தோசை எடுத்திட்டு வந்திருக்கேன்” என அவசரமாக மொழிந்து அவனருகே சென்றாள்.

அவனோ தண்ணீர் குவளையை மேசையின் மீது வைத்துவிட்டு “நீ இன்னும் தூங்காமல் என்ன செய்யறே?” என புருவங்கள் நெரிய அவளை கூர்ந்து நோக்கி யோசனையுடனே கேட்டவனிடம்,

அவளோ தலைச்சரித்து “ஆபிசர் சார் முதல்ல சாப்பிடுங்க...உங்க கேள்வி கணைகளையெல்லாம் சிறிது நேரத்திற்கு பிறகு தொடுக்கலாம்” என கேலியாக கூறி,

அவனது தட்டில் தோசையை வைத்துவிட்டு திரும்ப செல்ல முனைந்தவளிடம் “நீ எதுக்கு இதெல்லாம் செய்யறே?” சற்று கடின குரலில் வினவியவனின் தோரணையிலே அவனது கோபத்தை உணர்ந்தவள்,

“ப்ச்...ஆபிசர் உங்க கோபத்தில் தீயை வைக்க...முதல்ல வயிறு நிறைய சாப்பிடுங்க...அப்புறம் விடிய விடிய உங்க விவாத மேடை புரோகிரமுக்கு பதில் சொல்லறேன்” என அலுத்துக்கொண்டு சக்கர நாற்காலியை உருட்டிக்கொண்டு சென்றவளை நன்றாக முறைத்தான்.

அத்தோடு மனதிற்குள் ‘இவளை சாப்பிட்ட பிறகு பார்த்துக்கலாம்’ என முதலில் வயிற்றை கவனிப்பதில் குறியாய் இருந்தவன்,எத்தனை தோசைகளை வயிற்றுக்குள் அனுப்பினான் என்பது கணக்கில் அடங்காமல் சென்றுக்கொண்டிருந்ததை அவனே அறியேன்.

‘அளவு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதை உணர்ந்தவனாய் ஒரு கட்டத்தில் “சர்வத்மிகா அடுத்த தோசையோட போதும்...கடைசி தோசையில் முட்டை ஊத்தி தர சொல்லு” என்றவுடன் “சரி” என்று தலையசைத்தவள்,அதன்பிறகு கவனமாய் அவனறைக்குள் வராமல் தப்பித்துக்கொண்டாள்.

காவலனின் தொடர் விசாரணையில் மாட்டிக்கொண்டு தன்னால் திண்டாட முடியாது என்பதை முன்னரே கணித்து விவரமாக இறுதி தோசையை பொன்னம்மாவையே கொடுக்க சொல்லி அனுப்பி வைத்தவள்,அவன் விரித்திருக்கும் வலையில் சிக்காத விளாங்கு மீனாக நேரே தன்னறைக்குள் புகுந்துக்கொண்டாள்.

தன்னறைக்குள் தோசை அடங்கிய தட்டுடன் உள்ளே நுழைந்த பொன்னம்மாவை வைத்தே பெண்ணவளின் சாமர்த்தியத்தனத்தை உள்ளுக்குள் மெச்சினாலும் தன்னிடமிருந்து தப்பி சென்றவளை நினைத்து ‘சரியான பிராடு...நீ நாளைக்கு மாட்டாமலா போயிடுவே’ என மனதிற்குள் கறுவி பல்லை கடித்தான்.

அத்தோடு நிறுத்தாமல் உணவருந்தி முடித்து கைகழுவியவாறே “சர்வத்மிகா தூங்காமல் எதுக்காக இதெல்லாம் செய்யறா?” என்று இரும்பு குரலில் வினவியவனின் முகத்தில் இப்போது தீவிரம் குடியேறியிருந்தது.

அவரோ ஒரு கணம் தயங்கி “அது வந்துங்க தம்பி...நீங்க வந்ததே எனக்கு தெரியாது...ஆனாக்க பாப்பா தான் என்னை எழுப்பி உங்களுக்கு பசிக்குதுன்னு சொல்லி தோசை ஊத்தி எடுத்திட்டு போக சொல்லிச்சு” என்னும் போதே அவனது விழிகளில் கனல் கூடிக்கொண்டே சென்றதை அறிந்து பேசுவதை நிறுத்தியவரை கத்திப்போன்ற தன் கூரிய விழிகளால் உறுத்து விழித்தவன் “இனிமேல் அவள் இந்த வீட்டில் எந்த வேலையும் செய்யக்கூடாது...புரியுதா?” என உறும,

அவருக்கு மேனியில் நடுக்கம் இழையோட முகம் வெளிற புடவை தலைப்பால் முகத்தை துடைத்து பயத்தை போக்க முயன்றப்படியே “இல்லீங்க தம்பி பாப்பா தான்..” என உதறலுடன் கூறிக்கொண்டிருக்கும் போதே அவர் புறம் ஒற்றை கரத்தை நீட்டி “பொன்னம்மா...எனக்கு வேற எந்த சில்லி காரணமும் தேவையில்லை...இனிமேல் இந்த வீட்டில் சர்வத்மிகா எந்த வேலையும் செய்யக்கூடாது டாட்" என ஆழி பேரலையின் அடக்கப்பட்ட சீற்றத்துடன் அழுத்தம் திருத்தமாக உரைத்தவன்,

“அதையும் மீறி செய்தால்…?” என்ற எச்சரிக்கையுடன் கேள்வியை முடிக்காமல் நிறுத்தியதிலே அவனின் பெருஞ்சினத்தை அறிந்தவராய் “நான் பார்த்துக்கிறேன் தம்பி...நீங்க தூங்குங்க” என்றதோடு பேச்சை முடித்துக்கொண்டு அங்கிருந்து கிட்டத்திட்ட ஓடிவந்தார்.

அவருக்கோ குகைக்குள் இருக்கும் சிங்கத்திடம் தனிமையில் மாட்டிக்கொண்ட மானின் உணர்வு எழ,அறையை விட்டு வெளியே வந்ததற்கு பிறகு தான் அவரால் நன்றாக மூச்சே விடமுடிந்தது.

‘ஆத்தாடி!இந்த பாப்பா என்ன சொன்னாலும் இனிமேல் கேட்கக்கூடாதுடா சாமி’ உள்ளுக்குள் புலம்பி தள்ளினார் என்றால், ‘இவர் செய்ததில் பாதி கூட நான் செய்யலை...இதில் இவருக்கு பெருசா சேவகம் செய்த மாதிரி எதுக்கு இந்த அலப்பறை’ என மனதிற்குள் சர்வத்மிகா திட்டிக்கொண்டாள்.

ஆனால் தன் உடையை மாற்றிவிட்டு வந்து படுக்கையில் விழுந்த அலெக்ஸின் மனமோ இருவருக்கும் முற்றிலும் எதிர்விதமாக வேறொரு விதத்தில் யோசனை செய்துக்கொண்டிருந்தது.

பெற்றெடுத்த தாய் உணராத மகனின் வருகையையும் பிள்ளையின் பசியையும்,ஒரு திருமணமாகாத கன்னிக்கழியாத பெண் தன்னுடைய அரவம் வைத்தே தன்னை பற்றி அனைத்தையும் உணர்கிறாள் என்றால்,அதற்கு அர்த்தம் என்னவாக இருக்கும் என்று புரியாத வகையில் அவன் மடையன் அல்லவே?

எந்த அளவு தன் மீதான அன்பும் பாசமும் இருந்திருந்தால் தன்னுடைய மன உணர்வுகளை தள்ளியிருந்தே புரிந்துக்கொண்டிருப்பாள் என்பதை அறிந்து சிலாகித்துப்போனாலும்,அது வெறும் அன்பாக இருக்கும் பட்சத்தில் எவ்வாறோ?ஆனால் அதே பருவமடைந்த பெண்ணின் மனதில் ஒரு ஆண்மகனின் மீது தோன்றும் நேசமாக இருக்கும் பட்சத்தில் அதனை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொண்டு ஊக்குவிக்க முனைவது ஒரு நல்ல ஆண்மகனிற்கு அழகல்லவே?

அவளின் இந்த உணர்வுகள் ‘நன்மையா?தீமையா?’ என்ற விவாதத்திற்கே செல்லாமல்,அது என்ன வகையான உணர்வாக இருந்தாலும் இதற்கு மேல் செல்லாமல் இருப்பதே இருவரின் எதிர்கால வாழ்விற்கு நலம் என்பதனை அறிந்தவனாய் ஒரு தீவிரமான முடிவெடுத்தான்.

அந்த முடிவே அவனிற்கு விபரீதமாக முடியவிருப்பதை அந்நொடி ஆடவன் அறியவில்லை.

 

Priyanka Muthukumar

Administrator
சர்வம் 12:

இரவு வெகுநேரம் கழித்து உறங்கியதால் சர்வத்மிகாவும் அலெக்ஸூம் கடிகாரத்தில் மணி ஒன்பதை கடந்ததற்கு பிறகும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர்.

பொன்னம்மா தாமதமாக உறங்கினாலும் வீட்டு வேலைகளை செய்யும் பொருட்டு அதிகாலையே எழுந்து தனக்கு கொடுத்த பணிகளை செவ்வனே செய்யத்தொடங்கிவிட்டார்.

விசாலினி காலை எழுந்ததற்கு பிறகு மகன் தன்னறையில் உறங்கிக்கொண்டிருப்பதை கண்டு ஆச்சரியமடைந்தவர்,இன்று அவனிடம் எப்பாடுபட்டாவது அவனது திருமணம் தொடர்பாக பேசிட வேண்டும் என்று ஆவலாய் காத்திருக்க தொடங்கினார்.

அவனிடம் எப்பொழுது திருமணத்தை பற்றி பேசினாலும் பிடிவாதமாக அதனை மறுத்துவிடுவான்.அதில் மிகப்பெரிய மன வருத்தம் அவரை வதைக்க அவனை பெற்றெடுத்த தாயாக இருப்பினும் அவராலும் எதையும் செய்ய இயலாத நிலையில் இருந்தார் விசாலினி.

ஆரம்பத்தில் அவனிற்கு மணம் செய்வதற்காக பெண்களை பார்க்க தொடங்கிய வேளையில் ஆடவன் காவல் நிலையத்தில் பணிப்புரிகிறான் என்பதற்காக வரும் வரன்கள் அனைத்தும் தட்டி பறிப்போனது.

அதையும் கடந்து ஒரு சிலர் தங்கள் வீட்டு பெண்களை கொடுக்க முன் வந்தாலும் மணமகனிற்கு நிறைய வசதிகள் இருக்கவேண்டும் என எதிர்ப்பார்த்தனர் என்றால்,வேறு சிலர் மணமகனின் காலத்திற்கு பிறகு தங்களது பெண்ணிற்கு சொத்துகள் அனைத்தும் கிடைக்கும் படி எழுதி வைக்க வேண்டும் என்று விதிமுறைகளை இட்டனர் என்றால்,மேலும் சிலர் அவனின் உயிருக்கு ஆபத்து எதுவும் நேர்ந்தால் ‘என்ன செய்வது?’ என்ற கேள்வியுடன் அவனை பணியை விட்டு நீங்கி வேறு வேலை செய்யும் படி வற்புறுத்தி கேட்டுக்கொள்ள அலெக்ஸ் மனம் வெறுத்தே போனான்.

மனித மனங்களின் பேராசையினால் அவனால் புதிதாக ஒரு பந்தத்தை ஏற்க முடியாத நிலையில் தனக்குள்ளே இறுகிப்போனான்.

ஊருக்கே பாதுகாப்பு வழங்கும் காவலனிற்கே காப்பீடும் கேட்கும் மனிதர்கள் வாழும் கலியுகம் இது.

அதிலிருந்தே பெண் பார்க்கும் சடங்கு,திருமணம் என்றாலே உள்ளுக்குள் வெதும்பத்தொடங்கியவன்,தாயிடம் கட்டாயமாக “எனக்கு இப்போது திருமணம் தேவையில்லை...தங்கையின் திருமணம் முடிந்ததற்கு பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்று உறுதியாக முடித்துவிட்டான்.

அவனிடம் இருந்த உறுதியை எந்த வகையிலாவது குலைத்து புதல்வனின் எண்ணத்தை திசை மாற்றி திருமணம் செய்து வைக்க,அந்த தாய் எடுத்த முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிந்துவிட துவண்டுப்போனார்.

மகனிற்கு வயது கூடிக்கொண்டே சென்றதில் அவர் பெரும் வருத்தம் கொண்டிருந்த நிலையில்,எந்தவொரு உறவும் இல்லாத பெண்ணை வீட்டில் வைத்திருந்தால் மகனின் திருமணம் மேலும் பாதிக்கப்படும் என்ற அச்சம் மனதிற்குள் பரவி விரிந்து கிடந்ததே அவளை அந்த வீட்டிலிருந்து விரைவாக அகற்றி மகனிற்கு ஒரு நல்வாழ்வு அமைத்திட வேண்டும் என்று அந்த தாயுள்ளம் எண்ணியது.

மகனின் எதிர்க்கால திருமண வாழ்வு தள்ளிக்கொண்டே செல்வதாலும் அகவை கூடியதாலும் எங்கு அவன் காலம் முழுவதும் மணம் செய்துவிடாமலே தனிமரமாக இருந்துவிடுவானோ என்ற பயம் இதயத்தில் வேரூன்றியதினால் ஒரு அன்னையாக அவருடைய எண்ணங்கள் மிகவும் நியாயமானதே!!

அதேப்போல் நம் நாட்டிற்கு ஒரு பெரும் சாபக்கேடு இருந்தது.

தேசத்திற்காக நாட்டின் எல்லையில் போராடும் இராணுவ வீரர்களுக்கும் அதேசமயம் தேசத்திற்குள் உலவும் புல்லுருவிகளை களைப்பிடுங்குவதற்காக இரவு பகல் பாராமல் இருப்பத்து நான்கு மணிநேரமும் தன் உயிரை துச்சமென கருதி போராடும் காவலர்களுக்கும்,அவர்களுக்கு உரிய மரியாதை செய்யவில்லை என்றாலும் அவர்களின் வீரத்தையும் பறைச்சாற்றும் பணியை அவமதிக்காமல் இருத்தலே நலம்.

காவலர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் என்றாலும் அவர்களுக்கும் மற்ற சாதாரண மனிதர்களுக்கு இருப்பதை போலவே ஒரு மனம் இருக்கும்,அதிலும் தங்களுடைய எதிர்க்கால வாழ்வை பற்றிய கனவுகள் நிறைந்து இருக்கும் என்ற சிந்தனையேயின்றி சிறிதும் குற்றவுணர்வு இல்லாமல் அவர்களை வார்த்தையால் வாட்டி வதைக்கிறார்கள்.

வீர,தீர,சூரராக இருந்தாலும் அதற்கு ஈடான அழகு நிரம்பி வழிந்தப்போதிலும் இன்றளவும் பெண்களை பெற்றவர்களின் மனதில் ஒரு வித அச்சம் ஊடூருவி இருக்கவே செய்தது.

அதை தவறு என்று கூறமுடியவில்லை என்றாலும் மற்றவர்கள் பார்க்கும் தொழிலை விட மிகப்புனிதமான ஒரு தொழில் செய்யும் மனம் படைத்தவர்களை காயப்படுத்தாமல் அவர்களின் நற்குணத்தை வைத்து தங்களின் பெண்ணையே சிதனமாக கொடுத்து அவர்களை ஊக்குவித்தால் நாட்டை காக்கும் பணியை வெகு சிறப்பாக செய்து மக்களை தங்களது நாட்டிற்குள் சுதந்திரமாக உலவுவதற்கு தேவையான பாதுகாப்பை பலப்படுத்தி,மேலும் ஒரு வித உற்சாகத்துடன் தங்கள் கடமையை செவ்வேனே செய்து நமது நாட்டை பொருளாதாரத்தில் உயர்த்துவது மட்டுமின்றி நாட்டிற்குள் அமைதி நிலவ இவர்களே காரணமாகி இந்தியாவை உயர்ந்து நிலைக்கு கொண்டு சென்றுவிடுவார்கள் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.

இதேப்போலவே அலெக்ஸின் காவலர் பணியை கணக்கில் கொண்டு அவனது மனதினுள் பெரும் காயம் செய்து திருமணம் என்ற உறவையே அடியோடு வெறுக்கும் படி அவனது மனதில் ஒரு விதையை போட்டுவிட்டனர்.

அது வளர்ந்து மரமாக விருட்சமானதில் விவாகத்தையே பிடித்தமற்ற வார்த்தையாக கருதி அகவையை கூட்டிக்கொண்டே சென்றாலும் தாயிடம் பிடிக்கொடுக்காமல் திடமான முடிவில் இருந்தான்.

கண்மூடித்தனமான முடிவில் இருந்தவனை எவ்வளவு முறை அசைக்க முனைந்தும் முடியாமல் சோர்ந்த போன விசாலினி அதன்பிறகு திருமணம் என்ற பேச்சையே அடியோடு நிறுத்திவிட்டார்.

ஆனால் முப்பத்தி மூன்று வயதை கடந்து சென்றுக் கொண்டிருக்கும் மகனின் அகவையை மனதில் வைத்து இன்று எப்படியாவது திருமணத்தை பற்றி பேசிட வேண்டும் என உறுதியாய் இருந்தார்.

அதனால் மகனின் வருகையை எதிர்நோக்கி அவனது அறையையே நோட்டம் விட்டு கொண்டிருந்தவரின் பொறுமையை வெகுவாக சோதித்த பிறகே அலெக்ஸ் எழுந்து வந்தான்.

உடலை சுத்தம் செய்துக்கொண்டு வந்து இருக்கையில் அமர்ந்த அடுத்தவினாடியே பொன்னம்மா கொட்டை வடிநீரை கொண்டு வந்து கொடுக்க கைமுஷ்டியை இறுக்கி அணிந்திருந்த இரும்பு காப்பை பின்னுக்கு தள்ளிவிட்டு குவளையை வாங்கியவன் "சர்வத்மிகா எழுந்துட்டாளா பொன்னம்மா?" என வடிநீரை உறிஞ்சியப்படியே வினவினான்.

அதில் பொன்னம்மாவின் முகம் மலர்ந்தது என்றால்,தாய் மகள் இருவரின் முகம் கசங்கிட 'இங்க இரண்டு பேர் குத்துக்காலாட்டம் இருக்கோமே நம்மை பத்தி விசாரிக்கிறானா பாரு...எழுந்தவுடனே அந்த வேஷக்கள்ளியை பத்தி தான் கேட்கணுமா?' என உள்ளுக்குள் புகைச்சலாய் இருந்தது.

தன்னெதிரே அமர்ந்திருந்த தாயின் முகத்தில் எள்ளு வெடிப்பதை நொடியில் தன் கூரிய விழிகளால் படம் பிடித்தவனின் புருவம் சிந்தனையில் நெரிந்தது‌.

அதற்குள் பொன்னம்மா "பாப்பாவும் இப்போ கொஞ்ச நேர முன்னாடி தான் தம்பி எழுந்துச்சு...முகம் கை கால் கழுவி விட்டு பூஸ்ட் கலந்து கொடுத்திட்டு வந்திருக்கேன்" என்றவுடன்,

தலையசைத்து "சரி பொன்னம்மா...இன்னைக்கு பதினொரு மணிக்கு வெளிய போகணும்...அதுக்கு ஏத்த மாதிரி அவளை தயாராக சொல்லிடுங்க" என்றவன் "கூடவே நீயும் வரணும்" என சேர்த்தே கூறினான்.

இதுவரை அவனை எதிர்த்து எந்த கேள்வியும் எழுப்பி பழக்கமில்லாததால் "சரிங்க தம்பி" என்றவர் சர்வத்மிகாவை தயார் செய்ய தன் அறைக்கு சென்றார்.

இவனும் தன் கொட்டை வடிநீரை உறிஞ்சியப்படி தாய் மற்றும் தங்கை இருவரின் முகத்தையும் நோட்டமிட்டப்படியே "அம்மா டெய்ஸிக்கு கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்" என அசராமல் ஒரு குண்டை தூக்கிப்போட்டான்.

ஏனெனில் அவர்களோ அவனது திருமணத்தை பற்றி பேசுவதற்கு காத்திருக்க இவனோ தங்கையின் வாழ்க்கை பற்றிய முடிவை எடுத்து வந்து இருப்பது அதிர்ச்சியாக இருக்க "கண்ணா" என பேசத்தொடங்கிய தாயின் முன்பு ஒற்றை கரம் நீட்டி தடுத்து நிறுத்தி ஆளுமையுடன் எழுந்து நின்றான் அலெக்ஸ்.

தன் அலைப்பேசியில் அவசரமாக எதையோ தேடி எடுத்து அதனை தாயின் புறம் தள்ளிவிட்டு,எப்பொழுதும் போல் காலை அகட்டி நின்று தன்னுடைய முரட்டு கரங்கள் இரண்டையும் கால்சட்டை பையினுள் நுழைத்து ஆழ்ந்த குரலில் பேசத்தொடங்கினான்.

"பையன் பேரு ஆர்யன்...இப்போ தான் நம்ப ஊருக்கு புதுசா போஸ்டிங் வாங்கி வந்திருக்க ஏ.சீ.பி...சொந்தம்ன்னு சொல்லிக்க யாருமில்லை...அவன் வளர்ந்தது எல்லாம் ஆஸிரமத்தில் தான்" என்றவுடன்,

தாயின் முகத்தில் பிடித்தமின்மையை உணர்ந்தவனாய் "இதுக்கு முன்னாடி வேலை செய்த ஊரில் எல்லாம் நல்லா விசாரிச்சிட்டேன்...ரொம்ப நல்ல விதமாக தான் சொல்லுறாங்க...இதுவரை தன்னுடைய வேலையிலும் எந்த விதமான பிளேக் மார்க்கும் வாங்கலை...அதுமட்டுமில்லாமல் பர்சனலா அவன் கூட இருந்து பார்த்த வரை ரொம்ப நல்லப்படியவே நடந்துக்கிறான்...மரியாதையானவன்...அழகானவன்...உறவுகளுக்காக ஏங்கி தவிக்கிறான்...நம்ப டெய்ஸியை அவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தால் நிச்சயம் சந்தோஷமா வைச்சுப்பான்...தனியா வளர்ந்ததால் ஒரு பொசஸிவ் குணம் இருக்க தான் செய்யும்...ஆனால் டெய்ஸிக்கு அதனால் எந்த பதிப்பும் இருக்காதுன்னு நினைக்கிறேன்...நான் ஆரம்பித்த கல்யாண விஷயமா இருந்தாலும் உங்களோட முடிவை தெரிந்த பிறகு தான் அவனிடம் மேற்கொண்டு பேசணும்னு வெயிட் பண்ணறேன்மா" மிக நீளமாக ஒரு வித ஏற்ற இறக்கத்துடன் அனைத்தையும் பேசி முடித்தவுடன் விசாலினி அலைப்பேசியை எடுத்து புகைப்படத்தில் அழகாய் சிரித்து கொண்டிருந்த பழுப்பு நிற விழி அழகனை பார்த்தவருக்கு மனம் திருப்தியாய் இருந்தது.

ஆயினும் யாருமற்ற அநாதரவான நிலையில் வளர்ந்தவனிடம் எந்த விதமான சொந்த உடைமைகளும் நிலையான வருமானமும் இருக்காது.அதனால் தன் பெண்ணின் எதிர்கால வாழ்வு பாதிப்படையுமோ என கலக்கம் கொண்டு மகனிடம் அதை பற்றி பேசிட,அவனோ விரக்தியாய் ஒரு முறுவலை உதிர்த்து இருக்கையின் புறமாக சாய்ந்து கைகள் இரண்டையும் அதில் ஊன்றி குனிந்து நின்றவன் சில நொடிகள் அமைதியாய் தலையை திருப்பி சினத்தை கட்டுப்படுத்த முயற்சித்து அதில் வெற்றியும் கண்டான்.

பின்பு சிகையை அழுந்த கோதி தாயின் புறம் திரும்பி தன் கூரிய விழிகளால் அவரை துளைத்தப்படி "உங்க பையனுக்கு என்றால் ஒரு நியாயம் அதே மருமகன் என்றால் ஒரு நியாயம் இல்லையாம்மா?" என்ன தான் முனைந்து கட்டுப்படுத்தியும் குரலில் சிறிது எகத்தாளம் வெளிப்படவே செய்தது.

அவன் கூறிய வார்த்தைகள் அவரது மனதை சுருக்கென்று தைக்க 'அவன் கூறியது சரிதானே?சொத்தை பற்றி கேட்டதால் நானே எத்தனை பெண்களை நிராகரித்திருக்கிறேன்...இப்போது வீட்டிற்கு வரப்போகும் மாப்பிள்ளையிடம் சொத்தை எதிர்ப்பார்ப்பதா?' என உள்ளுக்குள் தன் பிழையை நொந்துக்கொண்டு மகனை பாவமாய் ஏறிட,

அவர் தன் தவறை உணர்ந்ததை அறிந்து சிறிது கோபம் தணிந்தவன் "அம்மா நம்மை மண்ணுக்குள் போட்டு புதைக்கும் போது எந்த சொத்தும் நம்ப கூட வரப்போறதில்லை...அவன் நம்முடைய பொண்ணை சந்தோஷமா பார்த்துக்கிறதை விட வேற என்ன சொத்தும்மா உங்களுக்கு வேணும்...அவன் அதை சிறப்பா செய்யவான்னு எனக்கு நம்பிக்கையிருக்கு...இன்னைக்கே சொல்லணும்னு எந்த வித கட்டாயமும் இல்லை...அவனை நேரடியா வர சொல்லறேன்...பேசி பாருங்க...பிடிச்சிருந்தால் கல்யாணத்தை எப்போ வைச்சுக்கலாம்னு பார்த்து பேசிடலாம்” தன்னுடைய முடிவை அவர்கள் மீது திணிக்காமல் மிகவும் பொறுப்பாக மணமகனை பற்றி எடுத்துரைத்த அந்த செயல் அவனின் தாயிற்கும் தங்கையிற்கும் வெகு திருப்தியாக இருந்தது.

ஏனெனில் அவனின் உடன் பிறந்த தங்கையின் எதிர்கால வாழ்விற்கென அக்கறையுடன் ஒன்றை பார்த்து செய்திருப்பதிலே இருவரின் மனதில் இத்தனை நாட்களாய் ஊறிய ஆதங்கமும் மனதாங்கலும் சிறிது குறைவது போல் இருந்தது.

அதனால் இருவரின் வதனமும் விளக்குப்போட்டாற் போன்று பிரகாசமாகிட,அதனை மனநிறைவாக உணர்ந்து களிப்படைந்தவன்,தங்கை ஓர விழிகளால் தாயின் கரங்களில் இருந்த அலைப்பேசியில் மிளிர்ந்த அந்த புகைப்படத்திலிருப்பவனை அவ்வப்போது கள்ளத்தனமாய் ரசிப்பதையும் அவனை கண்டவுடன் காரிகையின் முகத்தில் ஒளிர்ந்த சிறு நாணத்தையும் கண்ணுற்றவனிற்கு விரைவில் இந்த திருமண விடயம் வெற்றி வாகை சூடும் என்ற எண்ணம் மனதிற்குள் உச்சம் பெற தொடங்கியது.

விசாலினி மகனிடம் “அலெக்ஸ் நீ அந்த பையனை சந்திக்க வேண்டி ஏற்பாடு பண்ணு...மீதியெல்லாம் பிறகு பேசிக்கலாம்” தன் முடிவை மறைமுகமாக வெளிப்படுத்திய தாயின் உள்ளத்தை கூர்ந்து அறிந்த தனயனாய் அகமகிழ்ந்தவன் “கண்டிப்பாம்மா...இந்த வாரம் சன்டே அவனை வீட்டிற்கு விருந்திற்கு வர சொல்லியிருக்கேன்...அப்போது பார்த்து பேசி முடிவெடுக்கலாம்” என்றான் உறுதியான குரலில்.

சம்மதமாக தலையசைத்த விசாலினியோ ‘இது தான் சந்தர்ப்பம்’ என்பது போல் மெல்லிய குரலில் “கண்ணா அப்படியே உன்னோட கல்யாண…” என தயங்கியப்படியே பேச தொடங்கிய தாயை மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்யும் வகையில் அவர் கூறுவதை சடுதியாக இடைமறித்து இறுகிய முகத்துடன் “அம்மா எனக்கு கல்யாணத்திற்கு சம்மதம்...பொண்ணு பாருங்க” என்று இரும்பு குரலில் அதேசமயம் வீடெங்கும் நிறையும் வகையில் கணீரென்று கூறிவிட்டு விருட்டென்று தன் அறைக்குள் நுழைந்துக்கொண்டான் ஆடவன்.

அலெக்ஸை திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பதற்கு ஒரு மாபெரும் யுத்தத்தை நிகழ்த்த வேண்டும் என்று தாயும் மகளும் எதிர்ப்பார்த்திருக்க,யாவரும் முற்றிலும் எதிர்ப்பாராத திருப்பமாக அதிரடியாக திருமணத்திற்கு ஒப்புதல் தெரித்தவுடன் இருவரும் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்க தொடங்கிவிட்டனர்.

டெய்ஸியோ ஒரு படி மேலே சென்று “ஹே” என கூச்சலிட்டு தாயை அணைத்து கொண்டு சந்தோஷத்தை வெளியிட,தாயிற்கோ ஆனந்தத்தில் விழிகள் கலங்கிப்போனது.

ஆனால் உள்ளே ஒரு இளம் குருத்துவோ உயிரோடு மரித்துப்போனதை இவர்கள் இருவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.


 

Priyanka Muthukumar

Administrator
சர்வம் 13:

பத்தொன்பது வயது நிரம்பிய பாவையின் இதயத்திற்குள் இதுவரை இல்லாத ஒரு வேதனை உணர்வு ஆக்கரமித்திருந்தது.

இதுவரை எத்தனையோ பாணியில் துன்பங்களை அனுபவித்து வந்தவளிற்கு இது என்ன வகையான துயரம் என பகுத்தறிய முடியவில்லை.

ஏனெனில் அவன் திருமணம் செய்வதற்கு சம்மதம் தெரிவித்த அடுத்த வினாடி அடிவயிற்றிலிருந்து ஒரு வலி கிளர்ந்தெழுந்து இதயத்தையும் தொண்டையையும் ஓரே அடியாய் அடைத்து மூச்சடைப்பது போலான உணர்வை இதுவரை பெண்ணவள் அனுபவித்தறியாத ஒன்று.

ஆனால் ‘அவன் திருமணம் செய்தால் தனக்கு என்ன?’ என்று கவலையில் கிறுகிறுத்து மயக்கமடைய சென்ற மூளையை ‘ஏய்!ஒரு நிமிஷம் இரு...என்னை யோசிக்க விடு’ என அதட்டி அடக்கிய அந்த சிறு உள்ளத்தால் அதற்கான பதிலை கண்டறிய முடியவில்லை என்பதே நிஜம்!!

தலையை இரு கரங்களால் தாங்கிக்கொண்டு சிரம் தாழ்த்தி அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர் மடைத்திறந்த வெள்ளமென பெருகிக்கொண்டிருந்தது.

அதனை உணர்ந்து அதிர்ச்சியுடன் மேனி தூக்கிவாரிப்போட அழகிய மான் விழியில் கன்னத்தில் வழிந்த கண்ணீரை தொட்டு பார்த்தவளிற்கு ‘இது எதனால்?யாருக்காக?’ என மூளையை குடைந்து யோசித்தவளிற்கு உடலின் ஒவ்வொரு அணுவிலும் ஊசியால் குத்தியது போல் பெரும் வலியை அனுபவித்த சிறுப்பெண்ணால் அவளின் உணர்வுகளையே புரிந்துக்கொள்ள இயலவில்லை.

அவளின் அகவையும் அதற்கு தடையாய் இருந்தது.

ஆனால் அவளின் ஆழ்மனதில் புதைந்திருக்கும் தனக்கான நேசத்தை மிகச்சரியாக ஆராய்ந்து அறிந்துக்கொண்டதினாலே,அலெக்ஸின் இந்த தீடிர் முடிவு என்று பாவம் பேதையவள் அறிந்துக்கொள் முனைவதற்கு முன்பே காயை நயமாய் நகர்த்தி செல்ல முனைந்திருந்தான் அந்த காவலன்.

மங்கையின் மனதில் நேசமென்னும் விதை மூளைவிட்டிருப்பதை அவளால் ஆழ்ந்து அறிய முடியாத வகையில் அவள் இதயமெங்கும் காயங்களும் அதனால் ஏற்பட்ட ரணங்களுமே மிகையாக இருக்கையில் அவளால் அவனின் மீதான நேசத்தை உணர்வதற்கான சந்தர்ப்பமாக இவை அமையவில்லை.

அதற்குள் பொன்னம்மா குளியலறை கதவை திறந்துக்கொண்டு வெளிவருவதை அறிந்து அவசரமாக தன் கண்ணீரை கைக்குட்டையால் ஒற்றியெடுத்து கொண்டவள்,கண்ணாடியின் முன்பு சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே அழுத அடையாளங்கள் தெரியாமல் இருப்பதற்கு இலேசான ஒப்பனை செய்துக்கொண்டாள்.

மனதிற்குள் அவ்வப்போது தோன்றி மறையும் வலி ‘எதனால்?’ என்ற தேடலுக்கான கேள்விகளும் மூளையை குடைந்துக்கொண்டே இருந்தது.

ஒருவேளை மூளையின் வழியாக வினா எழுப்பியதற்கு பதிலாக உள்ளத்தின் ஆழ்மனதை நோக்கி இந்த வினாவை தொடுத்திருந்தால் அவளிற்கான விடை அறிய நேர்ந்திருக்குமோ?

ஒரு வித குழப்பத்துடனே தயாராகி அவன் அழைத்து செல்லப்போகும் இடத்திற்கு எந்த வித மறுப்பும் கூறாமல் உடன் சென்றாள் பேதை பெண்.

மூவரும் தங்களுக்குள் எந்த வித உரையாடலையும் தொடராமல் மௌனமாக அந்த பயணத்தை தொடர்ந்தனர்.

பாவையவளின் விழிகள் அவ்வப்போது ஆண்மகனை ஏக்கத்தோடு தழுவி மீண்டதை அவனும் அறிந்தேயிருந்தான்.

அதனால் தொண்டையை செருமி அவளின் கவனத்தை திசை திருப்பிய அலெக்ஸின் தேகமோ இறுகிப்போனது.

'இளங்கன்று பயமறியாது' என்பது போல் அவளோ அவனது உறுமலிற்கெல்லாம் அசராமல் அவன் வண்டியோட்டும் அழகை கண்ணால் ரசித்தப்படி வந்தாள்.

அதனை உணர்ந்த அலெக்ஸிற்கு கடுப்பாக இருந்தாலும்,வார்த்தையால் அவளை காயப்படுத்த விரும்பாமல் விரைவில் அவளை தன்னலிருந்து விலக்க வேண்டும் என்று தீவிரமான முடிவோடு சாதாரணமாகி விட்டான்.

ஒரு வழியாய் அவர்களது நீண்ட நெடிய பயணம் ஓரிடத்தில் முற்று பெற்றது.

அவன் அழைத்து வந்து நிறுத்திய இடத்தை அப்போது தான் விழிகளை சுழற்றி பார்வையிட்டவளின் முகமோ பேயறைந்தது போல் மாறியது.

அதனை கண்டும் காணாதவன் போல் தோளை அலட்சியமாக உலுக்கி அவளை அலேக்காக தூக்கி சக்கர நாற்காலியில் அமர வைத்த அலெக்ஸ் பொன்னம்மாவிடம் கண்ணை காட்டிவிட்டு தனது நீண்ட கால்களால் முன்பிருந்த கட்டிடத்தை நோக்கி எட்டி நடைப்போட்டான்.

அவனிற்கே உரிய கம்பீரமான நடையுடன் ஆறடி உயரத்தில் நடந்து சென்றவனை அங்கிருந்த ஒரு சில பெண்கள் திரும்பி பார்ப்பதை உணர்ந்தவளிற்கு அப்போது தான் சுய உணர்வு வந்தது போல் ‘ஆம்பளையையே பார்க்காதது மாதிரி பார்ப்பதை பார்...இவரை இங்கயெல்லாம் யார் வரசொன்னது?’ என வெளிப்படையாக பல்லைக்கடித்தவளிற்கு அங்கு ஒரு நிமிடம் கூட இருப்பதற்கு பிடித்தமில்லை.

ஏனெனில் அவர்கள் வந்திருப்பது தமையன் இருந்தவரை அவள் படித்துக்கொண்டிருந்த கல்லூரி வளாகம் அது.

அங்கு அவள் அனுபவித்த வேதனைகளும் வலிகளும் அவமானத்தின் சின்னங்களும் எதிர்க்கொண்ட கேலிப்பேச்சுகளும் பரிதாபமான பார்வைகளும் கணக்கில் அடங்காதவை.

பள்ளியில் முன்பு உடனிருந்த தோழிகள் ஓரிருவர் கேடயமாக போற்றி பாதுகாத்ததால் அவளால் மிக எளிதாக அந்த பாதையை கடந்து வர முடிந்த பருவ மங்கையால் கல்லூரியின் எண்ணற்ற பரிமாணங்களை கொண்ட மாணவர்களின் குணத்தால் அவர்களை தனித்தனியாக எதிர்க்கொள்ள முடியாமல் திணறினாள்.

இதற்கெல்லாம் மேலாக படிப்பில் முதலிடம் பிடிக்கும் அவளை எவ்வகையிலாவது காயப்படுத்த வேண்டும் என்பதற்காகவே சில மாணவிகள் அவளின் உடல் ஊனத்தை பற்றி இழிவாக பேசுவதோடு,அவளால் செய்ய இயலாத அந்தரங்க செயல்களை சொல்லிக்காட்டி கேலிச்செய்து முகம் சுழிக்க வைத்து அவளை மிகுந்த மன அழுத்தத்திற்கு தள்ளிய இடத்தில் அவளால் இயல்பாக ஒரு நாளும் மூச்சுவிட முடிந்ததில்லை.

இப்போது அதே நரகத்தில் தன்னை கொண்டு வந்து சேர்க்க நினைப்பவனின் மீது ஆத்திரமாக வந்தாலும் வந்திருக்கும் இடம் பொருட்டு சிறிது அமைதிக்காத்தவளிற்கு அங்கிருந்த மாணவர்கள் தன்னை எகத்தாளமாக பார்த்து தங்களுக்குள் கேலிப்பேசி சிரிப்பது அவளால் தெள்ளதெளிவாக உணரமுடிந்தது.

அதில் கூனிக்குறுகிப்போனவளால் அவர்களின் பேச்சுக்கள் என்ன மாதிரியாக இருக்கும் என்பதை தெளிவாக உணர முடிந்ததினால் அவ்விடத்தில் இருப்பது மூச்சடைப்பது போலான உணர்வை அளித்தது.

அதற்குள் பொன்னம்மா அவளை கல்லூரியின் தாளாளர் அறைக்கு முன்பாக சக்கர நாற்காலியை நிறுத்திவிட “நீங்க இங்கே இருங்க...நான் பேசிட்டு வரேன்” என்று கூறி உள்ளே நுழைந்தான்.

அவளிற்கு ‘நீ என்ன பேசி கிழிக்கப்போறே...எனக்கு இந்த இடமே பிடிக்கலை...வா’ என தொண்டையை அடைத்துக்கொண்டு அவனிடம் கத்த வேண்டும் உள்ளம் ஆத்திரத்தோடு படபடத்தது.

அவனிற்காக அறைக்கு வெளியே காத்திருந்த அந்த பதினைந்து நிமிடங்களும் ஒவ்வொரு யுகங்களாக கழிய,நீண்ட நேர காத்திருப்பிற்கு பிறகு வெளியே வந்த அலெக்ஸ் இருவரையும் உள்ளே வரும் படி சைகை செய்தான்.

கல்லாரி தாளாளரின் அருகே நெருங்குகையில் ஒவ்வொரு முறையும் நெருப்பில் குளித்து எழுவது போல் பதைபதைக்கும் இதயத்துடன் நெருங்கியவுடன்,

அவரோ சிநேகமாக புன்னகைத்து “அலெக்ஸ் சார் எல்லாமே சொன்னாரும்மா...நீ நாளையிலிருந்து காலேஜிக்கு வந்திடு...உனக்கு இங்கே எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு..அதையும் மீறி உன்கிட்ட யாரும் வம்பு வளர்த்தால் என்கிட்ட வந்து சொல்லு...அவர்கள் மீது கண்டிப்பாக தக்க நடவடிக்கை எடுப்பேன்” என உறுதிமொழி கூறி அவளுக்கான சேர்க்கை கடிதத்தை அவளிடம் நீட்ட,

அவளோ அதை வாங்காமல் அலெக்ஸ் மீது எரிக்கும் பார்வையை செலுத்த அவனின் முகம் அமைதியை தத்தெடுத்து இருந்தாலும் கண்களில் கடினம் குடியேறியது.

“சர்வத்மிகா அதை வாங்கு” என்றான் எச்சரிக்கும் விதமாக.

அவனது கண்டிப்பில் தாளாளரிடமிருந்து கடிதத்தை பெற்றுக்கொண்டு மற்றவரின் முன்பு அவனை விட்டுக்கொடுக்க விரும்பாமல் வலுக்கட்டாயமாக சிரித்து வைத்தவளை பார்த்து “சர்வத்மிகா நீ ஒரு ப்ரைட் ஸ்டூடண்ட்மா...தொடர்ந்து காலேஜ் வந்தால் உன்னால் நிச்சயம் யூனிவர்சிட்டி மெடல் வாங்க முடியும்...ஆல் தி பெஸ்ட்" என அவளிற்கு மேலும் சில அறிவுரைகளை வழங்கி மூவருக்கும் விடைக்கொடுத்தார்.

அவரிடம் புன்னகையுடன் கைக்குலுக்கி விடைப்பெற்று வெளிவந்தவனின் முகம் இறுகிப்போனது.

தங்களது ஜீப் நிற்கும் இடம் வரும் வரை அமைதியாக இருந்தவன்,அவளை வண்டியில் ஏற்றியதற்கு பிறகு "சர்வத்மிகா உன் மனசில் நீ என்ன தான் நினைச்சிட்டு இருக்கே?நான் சொல்லறதை கேட்கவே கூடாதுன்னு முடிவில் இருக்கியா?" என படபடவென பொரிய தொடங்கியவனை கண்டுக்கொள்ளாமல் வேறுப்புறம் முகத்தை திருப்பிக்கொண்டு "என்னால் இங்கே படிக்க முடியாது" என்றாள் விச்ராந்தியாக.

அதில் ஜிவுஜிவுவென்று முகம் சிவந்து நாசி விடைத்திட "அப்போ உன்னை இங்க படிக்க வைக்க நினைக்கிற நான் என்ன லூசா?" என எகிற,

அவளோ தலையை சிலுப்பிக்கொண்டு "நீங்க என்ன சொன்னாலும் நான் இங்க படிக்கமாட்டேன்" என்றவுடன்

அவளை அடிக்க கையை கொண்டு சென்றவன் அவளின் முகத்தில் பரவிய அச்சத்தை கண்டு இறுதி நொடியில் சுதாரித்து கரத்தை கீழிறக்கினான்.

விழிகளை மூடி கட்டுக்குள் அடங்காத சினத்தோடு இமை திறந்து "அடிச்சு பல்லை கழட்டிடுவேன் ராஸ்கல்..நானும் உன்கிட்ட பொறுமையா பேசணும்னு ஒவ்வொரு முறை முயற்சி செய்தாலும் என்னை கோபப்படுத்தற மாதிரி எதையாவது செய்யணும்னே செய்யறே...உன் மனசில் என்ன தான் நினைச்சிட்டு இருக்கே?" வார்த்தைகளை நெருப்பில் மூழ்கடித்து தெளித்தப் போதும் அவனின் மீது அசராத ஒரு பார்வையை செலுத்தியவள் "நான் காலேஜூக்கு போகமாட்டேன்" என்றாள் நிறுத்தி நிதானமாக அவனது கூரிய கண்களை ஊன்றி பார்த்தப்படி.

அவளது அத்தகைய பார்வை ஏதோ செய்திட படீரென்று பார்வையை திருப்பி சிகையை அழுந்தக்கோதி வெளியே வெறித்தப்படி "ஏன்?" என்றான் உணர்ச்சியற்ற குரலில்.

"எனக்கு இங்க பிடிக்கலை"

"அதான் ஏன் பிடிக்கலை?"

"இங்க இருக்கிற மனுசங்களை பிடிக்கலை"

"அப்போ வேற காலேஜில் படிக்கிறீயா?"

"வேண்டாம்"

"இப்போ வேற என்ன தான் நான் செய்யணும்னு நினைக்கிறே?" என்று ஆத்திரத்தில் வெடித்தான்.

"நான் வேணும்னா கரஸ்ஸில் படிச்சுக்கிறேன்…காலேஜிக்கு எல்லாம் போகமாட்டேன்" என்றாள் உறுதியாக.

அவள் உறுதியை கண்டு உள்ளத்திற்குள் நொந்தவன் "சர்வத்மிகா வாயை திறந்து பதில் சொல்லு...இப்போ உனக்கு என்ன பிரச்சனை?எதையும் வெளிப்படையாக சொன்னால் தானே என்னால் ஒரு உறுதியான முடிவெடுக்க முடியும்...சொல்லும்மா" கோபத்தை அடக்கி பொறுமையாக.

அவனின் அமைதியான அணுகுமுறையால் தானும் அடங்கிப்போனவளாய் "இன்னொரு முறை இந்த கேலிப்பேச்சுகள் எல்லாத்தையும் தாங்கமுடியாது...அவங்க பார்க்கிற பார்வையில் இருக்க இளப்பமும் இரக்கமும் என்னை இயல்பாகவே இருக்க விடமாட்டிக்குது...என்னை தீண்ட தகாத ஜீவன் மாதிரி என்னை ஒதுக்கி வைத்து அருவருப்பான வார்த்தைகளை வீசும் பிராணிகளை எதிர்க்கொள்ள முடியாத கோழைத்தனம் எனக்கு பிடிக்கலை..இது மாதிரி எத்தனையோ பிடிக்காத விஷயங்கள் இருக்கு...இதையெல்லாம் மீறி இங்கு வந்து நான் படிக்கணும்னு நினைச்சீங்கன்னா என்னைக்கோ ஒரு நாள் நான் பிணமா தான் இருப்பேன்...என்னை நீங்க வந்து அள்ளிக்கிட்டு தான் போகணும்" என்றாள் கண்ணீர் நிறைந்த குரலில் விரக்தியாக.

அவளது ஒவ்வொரு வார்த்தைகளிலும் நிறைந்திருந்த வலியும் வேதனையும் அவனுள் பெரும் பூகம்பத்தையே ஏற்படுத்த அவளின்‌ மறுப்புகளுக்கு பின்பு இப்படியொரு கொடூர நிகழ்வுகள் இருக்கும் என்பதை எதிர்ப்பாராதவன் சிலையாய் சமைந்து அமர்ந்திருந்தான் என்றால்,பொன்னம்மாவோ அவளிற்காக கண்ணீர் வடித்தவர் அவளின் இறுதி வாக்கியத்தில் பதறிப்போய் "பாப்பா என்ன பேச்சு இது?இதுமாதிரியெல்லாம் இனிமேல் பேசாதே" என நடுக்கத்துடன் கூறி அவளின் கரங்களை ஆதரவாக அழுத்தி பிடித்துக்கொண்டார்.

ஒரு சிறுப்பெண்ணை இதுப்போலான மனநிலையில் கொண்டு வந்து நிறுத்திய ஒவ்வொருவரின் மீது தார்மீக கோபம் எழுந்தாலும்,அவர்களின் அத்தகைய செயலில் இந்த சின்னஞ்சிறு பாவையின் தன்னம்பிக்கை அழிவதை விரும்பாமல் உள்ளுக்குள் கலங்கியதை மறைத்து வீம்பாக உணர்ச்சிகளற்ற பாறையாக அமர்ந்திருந்தான்.

“நீ சொல்லறது மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தன கதையா இருக்கு...இன்னைக்கு இவங்களை எதிர்க்கொள்ள பயந்து ஓடி ஒளியற சரி...எதிர்காலத்தில் இதைவிட கொடுமையான பல சவால்களை சந்திக்க வேண்டி இருக்குமே...அப்போதும் இப்படி உன்னால் ஓடி ஒளிய முடியாது சர்வத்மிகா” என்று கூறி பேச்சை ஒரு நொடி நிறுத்தி அவளின் கலங்கிய விழிகளை ஊன்றி பார்த்து “உனக்காக இந்த பறந்து விரிந்த சமுதாயத்தில் போராட கூடிய ஒரே ஜீவன் நீ மட்டும் தான்...வேற யாரையும் நம்பி நீ இருக்கிறதை நான் விரும்பமாட்டேன்...அவ்வளவு ஏன் நீ அப்படி எதிர்ப்பார்க்கிறதா எனக்கு சின்ன சந்தேகம் வருவது கூட நிச்சயம் எனக்கு பிடிக்காது...புலியை முறத்தால் அடித்து விரட்டினாள் மறத்தின்னு கேள்விப்பட்டிருப்போம்...அந்த பெண்ணால் புலியை விரட்ட முடிந்தால் உன்னை சுற்றியிருக்கும் கொடிய பிராணிகளை எதிர்க்கொள்ள முடியாதா என்ன?” எந்த வந்த பிசிறுமின்றி தெளிவான சிந்தனையுடன் பேசிக்கொண்டே வந்தவன் இறுதியாய் இரு புருவம் உயர்த்தி கேள்வியோடு நிறுத்தி பதிலை எதிர்ப்பாராமல் அவளை சிந்திக்கவிட்டு வண்டியை எடுத்தான்.

அவனது நடவடிக்கையோ ‘நான் கூற நினைப்பதை பேசிவிட்டேன்..இதற்கு மேல் உன் விருப்பம்’ என்பது போல் இருந்தது.

அதுவரை கலங்கிய கண்களுடன் வேட்டையாட தயாராய் நிற்கும் கொடிய மிருகங்களை எண்ணி அச்சத்தோடு மிரண்டவள்,தற்போதைய அவனது பேச்சுகளுக்கு பிறகு எண்ணம் தெளிவடைந்திட பயம் விலகி ஓடி,எதையும் எதிர்த்து நிற்கும் துணிச்சல் உருவாகியது.

அதனால் அழுத விழிகளை அழுந்த துடைத்து நிமிர்ந்து அமர்ந்தவளின் முகத்தில் இருந்த தெளிவை கண்டவனின் இதழோரம் எதையோ சாதித்த புன்முறுவல் தோன்றியது.

 

Priyanka Muthukumar

Administrator
சர்வம் 14:

தொடர்ந்து வந்த நாட்களில் அலெக்ஸ் கூறியதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு சர்வத்மிகா சமுதாயத்தை எதிர்க்கும் போர் வீராங்கனையாய் இரும்பு கவசங்களுடன் தயாராகினாள்.

தன்னுடைய உடலை பேணி பாதுகாக்கும் சிறு சிறு பணிகளை பொன்னம்மாவை எதிர்ப்பாராமல் தானே செய்துக்கொள்ள பழகத்தொடங்கினாள்.

இதற்கிடையில் தன்னை ஒதுக்கி வைத்தே பழகும் விசாலினி மற்றும் டெய்ஸியின் சில செயல்களினால் பல வேளைகளில் மனதில் காயம் ஏற்பட்டாலும்,அதனை எளிதாக கடந்துச்செல்ல பழகிக்கொண்டாள்.

இருப்பினும் ஒரு நாள் கல்லூரியில் நிகழ்ந்த உச்சக்கட்ட கேலியினால் மனதில் பெரும் பாதிப்புடன் வீட்டிற்கு வந்தப்போது அலெக்ஸின் திருமணத்திற்காக பார்த்த பெண்களை பற்றிய பேச்சு காதில் விழ திடுக்கிட்டு சக்கர நாற்காலியின் சுழற்சியை நிறுத்தி சிலையானாள்.

அவனின் திருமண பேச்சுகள் அவளிற்கென இருக்கும் அரும்பெரும் பொக்கிஷத்தை இழந்தது போல் ஒரு உணர்வை தோற்றுவிக்க திகைப்போடு முகம் வெளிறி தாய் மற்றும் மகளின் அறைக்கு முன்னாலே வேதனை சுமந்த விழிகளோடு அமர்ந்திருந்த வேளையில் திடீரென்று டெய்ஸியின் குரல் ஓங்கி ஒலித்தது.

“ஏய் இங்க என்னடி பண்ணறே?” என அகங்காரமாய் ஒலித்த குரலில் தேகம் தூக்கிவாரிப்போட அதிர்ந்து மலங்க விழித்தவளை பார்த்து மேலும் ஆத்திரம் கொண்ட டெய்சி “என்னடி நாங்க பேசறதை ஒட்டுக்கேட்கறீயா?” என கீச்குரலில் கத்தி கூப்பாடுப்போட்டவள் தாயின் புறம் திரும்பி சண்டையிட்டாள்.

“அம்மா உங்களுக்கு கொஞ்சமும் விவஸ்தையே இல்லையா?எதையாவது பேசறதுக்கு முன்னாடி கதவை முடிட்டு பேசணும்னு இல்லாமல் பாருங்க கண்டதும் நம்ப பேசறதை ஒட்டுக்கேட்குதுங்க” என எரிமலையாய் சீறி பெண்ணவளை உயிர் சுருட்டி போக செய்தாள்.

அதை அறியாமல் மகளிற்கு ஈடாக தாயும் “திறந்த வீட்டுக்குள்ள ஏதோ நுழைஞ்ச மாதிரி கண்ட நேரத்தில் அந்த கழுதை வரும்ன்னு எனக்கு என்ன தெரியும்?நீயாவது கதவை சாத்தி தொலைக்க வேண்டியது தானே” என்று முகத்தை அருவருப்புடன் சுழித்து கூறிக்கொண்டிருக்கும் போதே சர்வத்மிகாவை எரிச்சல் மிக பார்த்தவாறு “அது அதுங்களுக்கா அறிவிருக்கணும்...நாம் சொல்லியா தெரியணும்...ச்சை” என கூறி அவளின் முகத்திற்கு முன்பாகவே கதவை அடித்து சாற்றினாள் டெய்ஸி.

அவர்களது குரல்கள் நாராசாமாய் ஒலித்துக்கொண்டிருந்த வேளையில் இவர்களது இத்தகைய செயல் முகத்திலறைந்தாற் போன்ற உணர்வை கொடுத்து மேனியை உலைக்களமாய் கொதிக்க வைத்தது.

வேள்வி இல்லாமலே வெறும் வார்த்தைகளாலே பெண்ணவளின் உடலை தீயிலிட்டு பொசுக்கியது போன்ற உணர்வினால் அந்த சின்னஞ்சிறு உள்ளம் துடித்தது.

பொன்னம்மா இவர்களின் இத்தகைய சொற்களை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்த வேளையில் விருட்டென்று சக்கர நாற்காலியை வேகமாக உருட்டிக்கொண்டு தன்னறைக்குள் புகுந்து கதவை அடித்து சாற்றிய பேதை மனதிற்குள் மாபெரும் சூறாவளி வீசத்தொடங்கியது.

கதவை தாளிட்டு நாற்காலியின் முகப்பில் தலைசாய்த்தவளின் உள்ளம் எரிமலையாய் குமுறிக்கொண்டிருந்தது.

‘இந்த கொடிய வார்த்தைகளையெல்லாம் வாங்கிக்கொண்டு எதற்காக இதற்கு மேலும் இங்கு இருக்கவேண்டும்?எனக்கான படிப்பை மேற்கொள்ள தேவையான பணம் என் கையில் இருக்கையில் யாருடைய சொல்லுக்கு கட்டுப்பட்டு நான் இங்கு இருக்கிறேன்?’ என உள்ளுக்குள் பொருமியவளின் கண்ணில் நீருக்கு பதிலாக கனல் பறந்தது.

மற்றவர்களின் வார்த்தைகளினால் ஏற்பட்ட கொடிய பாதிப்பிற்கு எதிர்விதமாக இவர்களது சொற்களினால் உண்டான பாதிப்பு பெருஞ்சினத்தை விளைவித்து இருந்தது.

மனதிற்கு நெருக்கமானவனின் நெருங்கிய உறவினருக்கு தன்னை பிடிக்காமல் சென்றதினால் ஏற்பட்ட தார்மீக கோபம் அது என்று அந்த இளம்குருத்தினால் அறிய இயலவில்லை.

அதற்கு அவளின் வயதிற்கான பக்குவம் இல்லாமல் இருப்பதே மிக முக்கிய காரணம்.

இதற்கு மேலும் இங்கு இருப்பதற்கு அவளது தன்மானம் இடமளிக்காததினால் உடனடியாக தன்னுடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு வீறு கொண்ட பெண் சிங்கமாய் தன்னுடைய சக்கர நாற்காலியில் புறப்பட தயாராகியவளின் முகம் இதுவரை இல்லாத வகையில் எஃகிரும்பென இறுகி கிடந்தது.

அவள் வெளியே செல்வதை கண்டு தாயும் மகளும் சந்தோஷமடைந்தனர் என்றால்,ஆதரவற்ற நிலையில் தனித்து செல்லும் பெண்ணை பரந்த உலகத்தில் தனியே விட மனமின்றி அவளுடனே பொன்னம்மாவும் சென்றார்.

அவள் வெளியேறுவதற்கு முன்பாக பொன்னம்மா ‘தம்பி வந்த பிறகு பேசிக்கொள்ளலாம் பாப்பா...பொறுமையா இரு’ என்று இறைஞ்சிய கெஞ்சல்கள்கள் அனைத்திற்கும் அவளிடத்தில் மதிப்பின்றி போனது.

ஆனால் ‘எனக்குன்னு சொந்தம்ன்னு சொல்லிக்க யாருமில்லை பாப்பா...என்னை உன் அம்மாவா நினைச்சு என்னை உன்னோட கூட்டிட்டு போ பாப்பா’ என்ற வார்த்தைக்கு அவளிடம் பெரும் மதிப்பு இருந்திட,அவரை தன்னோடு அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.

செல்வதற்கு முன்பு அலெக்ஸ் பாண்டியனிற்கு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தாள்.

அதன் சாராஹம்சம் இதுவே,

‘சார் இதுவரை எனக்கு தங்குவதற்கு இடம் கொடுத்து கேட்டதையெல்லாம் செய்த உங்களின் அன்பிற்கும் அக்கறைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...இதற்கு மேல் என் வாழ்க்கையை நான் சுயமாக வாழ ஆசைப்படுகிறேன்...தயவுசெய்து என்னை தேடி வந்து என் தன்னம்பிக்கையை உடைத்துவிடாதீர்கள்...நீங்கள் எனக்கு செய்த செலவுகளுக்கான பணத்தை என் தலையணைக்கு அடியில் வைத்திருக்கிறேன்...மறக்காமல் எடுத்துக்கொள்ளுங்கள்’

இப்படிக்கு,
சர்வத்மிகா.

இவ்வாறாக எளிமையான எழுத்துக்களை கொண்டு மடல் எழுதி வைத்துவிட்டு அந்த சின்னஞ்சிறு பறவை கூட்டை விட்டு வெளியேறி இருந்தது.

தன்னுடைய பணியை முடித்துக்கொண்டு இல்லத்திற்குள் நுழைந்த அலெக்ஸின் மனதிற்குள் தாய் மற்றும் மகளின் சிரிப்பொலி உள்ளுக்குள் அபாய மணியை அடிக்க,உடனடியாக வினாடியும் யோசிக்காமல் சர்வத்மிகா அறை சென்று அவளை தேடி களைத்து ஓய்ந்தவனிற்குள் மேசையின் மீது படபடத்த காகிதத்தை படித்தவனிற்குள் பெரும் சூறாவளியே வீசத்தொடங்கியது.

அவனது மூச்சுக்காற்றின் அனலிலும் தகித்த தேகத்தின் வெப்பத்தின் கனலிலும் அந்த இல்லமே தீப்பற்றி எரியும் அளவு சினம் விஸ்வரூபம் எடுத்திருந்த அந்த சமயத்திலும் பொறுமையை கடைப்பிடிக்க எண்ணிய அலெக்ஸ் இத்தனை நாட்களாய் பெண்ணவள் படுத்திருந்த மெத்தையில் தொப்பென்று விழுந்து இமைகளை இறுக்கி மூடினான்.

கழுத்து நரம்புகள் புடைத்து தெறிக்கும் வகையில் சினம் ஆடவனின் மனித நரம்புகளை ஆட்டிப்படைக்க,கைமுஷ்டியை இறுக்கி கோபத்தை கட்டுகள் கொண்டு வர முனைந்தவனின் இமை திரையினுள் சர்வத்மிகாவின் சிரித்த முகம் நிழலாய் வந்து சென்றது.

இத்தனை நாட்களாய் அவளிற்கு தன்னால் நேர்ந்த அநீதியினால் விளைந்த குற்றவுணர்வின் காரணமாகவே அவளை தனக்குள் வைத்து பொத்தி பாதுகாக்கிறோம் என்று நினைத்திருக்க,ஆனால் இன்று விழிகளுக்குள் அவளின் புன்னகை சுமந்த முகம் தோன்றி அவன் ஆழ் மனதில் புதைந்திருக்கும் அவளுக்கான நேசத்தை அந்த நொடி வெட்டவெளிச்சமாக்கியது.

உடனடியாக திடுக்கிட்டு இமைத்திறந்தவனின் நாசியினுள் நுழைந்த சுகந்தம் பெண்ணவளுக்கே உரிய நறுமணத்தை தோற்றுவிக்க,அதனை ஆழ்ந்து சுவாசத்தவனிற்கு தன் வீட்டு பெண்களிடம் சர்வத்மிகாவை பற்றி பேச எண்ணியதில் தாமதப்படுத்தியிருப்பதை நன்கு உணர முடிந்தது.

அத்தோடு அவனிற்கே ஒரு பேரதிர்ச்சியாக மங்கையின் மணளானாக மனதிற்குள் தன்னையறியாமலே வரிவடிவம் கொடுத்திருக்கும் விதம் வேறு யாருக்கும் அடங்கா ஆண்மகனை கலவரப்படுத்தியது.

அதற்கு முக்கிய காரணம்,இருவருக்குமிடையே இருந்த அகவையின் வித்தியாசம் மலைக்கும் மடுவுக்குமான வேற்றுமையுடன் இருப்பதே!!

அவள் தன்னை விட்டு பிரிந்து சென்றதினால் எல்லையில்லாத கோபமும் வேதனையும் உண்டானாலும்,தன்னுடைய நெஞ்சத்திற்குள் கள்ளத்தனமாய் புகுந்திருந்த நேசத்தை கண்டு அஞ்சி ‘அவள் தன்னை விட்டு சென்றது நல்லதற்கே’ என எண்ணி தன்னை தானே சமாதானம் செய்துக்கொண்டாலும் நெஞ்சினோரம் அவள் தனியாக எங்கு சென்றாளோ என படபடத்துக்கொண்டே இருந்தது.

அடுத்த வினாடியே மெத்தையிலிருந்து எழுந்து அமர்ந்த அலெக்ஸ் பொன்னம்மாவின் அலைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டான்.

‘இந்த பிரச்சனைகள் நடைப்பெறும் வேளையில் பொன்னம்மா வீட்டில் இருந்தாரா?அப்படி இருந்தார் என்றால் இப்போது எங்கு சென்று இருக்கிறார்?அல்லது அவளுடனே சென்றுவிட்டாரா?’ என்று விபரம் அறியும் பொருட்டு தன்னுடைய கழுத்தை ஒரு முறை அழுந்த தடவிக்கொண்டே அவரை அழைக்க முயன்றான்.

ஆனால் எதிர்திசையில் சில அழைப்பு மணிகள் சென்ற பிறகும் பொன்னம்மா தன்னுடைய அழைப்பை ஏற்கவில்லை என்றவுடன் இதயத்திற்குள் திகில் சூழ தொடங்கிய வேளையில்,திடீரென்று எதிர்ப்பாராத இடத்திலிருந்து அவனது அலைப்பேசியிற்கு ஒரு அழைப்பு வந்தது.

‘இவர் எதுக்கு இந்த நேரத்தில் கூப்பிடுகிறார்?’ என்று புருவம் நெரிய குழப்பத்தோடு மெத்தையிலிருந்து எழுந்து நடை மேற்கொண்டவாறே அலைப்பேசியை உயிர்ப்பித்து காதில் வைத்த அலெக்ஸ் “சொல்லுங்க ஆர்யன்” என்றப்படியே வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறினான்.

வீட்டிற்கு வந்தவனின் அரவம் உணர்ந்த பெண்கள் அவனிடம் பேச முயல,அவனோ தன்னுடைய சுட்டெரிக்கும் பார்வையினால் அவர்களை தள்ளி நிறுத்தி அவர்களது தவறை உணர்த்த முயன்ற அதேவேளையில் சர்வதமிகாவின் இந்த தீடிர் முடிவிற்கு காரணமாக தன்னுடைய தாயும் தங்கையும் இருப்பார்கள் என்பதை நன்கு அறிந்தே இருந்தான்.

ஆனால் வெளிப்படையாக அவர்களிடம் சினத்தை காட்ட விளைந்தால் அது எதிர்ப்பாராத விபரீதத்தை விளைவிக்கும் என்பதாலும்,தன் மீதிருந்த அதீத பாசமும் அன்புமே அவர்களை இவ்வாறு நடக்க வைத்திருக்கும் என்பதை அறிந்தவன் என்பதாலும் தற்சமயம் குடும்பத்திற்குள் வீணான சண்டைச்சச்சரவுகளை தோற்றுவிக்க விரும்பாமல் பொறுமையை கையாண்டான்.

தற்போது வீட்டை விட்டு வெளியேற முயன்றவனை தடுக்க நினைத்த பெண்களை தன்னுடைய கூரிய பார்வை வீச்சின் வீரியத்தால் மிரள செய்தவனின் இதழிலிருந்து இறுதியாக ஒலித்த ஆர்யனின் பெயர் கேட்டு தாயும் மகளும் ‘என்ன விசயமாக இருக்கும்?’ என்ற கேள்வியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்த வேளையில் அலெக்ஸ் வீட்டிலிருந்து புறப்பட்டுவிட்டிருந்தான்.

அலைப்பேசியின் வழியாக அலெக்ஸ் பாண்டியனை அழைத்திருந்த ஆர்யன் எதிர்ப்புறம் கூறிய செய்தியை கேட்டு “அப்படியா?உடனே நான் வரேன் ஆர்யன்” என பதட்டத்தோடு உரைத்து தன்னுடைய ஜீப்பை அசுர வேகத்தில் ஓட்டிக்கொண்டு அவ்விடத்தை நோக்கி சென்றான்.
 

Priyanka Muthukumar

Administrator
சர்வம் 15:

ஆர்யன் கூறியதை கேட்டு பதட்டத்தோடு ஒரு பிரபல மருத்துவமனைக்குள் வியர்வை படிந்த முகத்தோடு நுழைந்த அலெக்ஸ் கிட்டத்தட்ட அவசர சிகிச்சை பிரிவை நோக்கி ஓடினான்.

அவனது கம்பீரம் பொருந்திய ஆண்மகனுக்கே உரிய இலக்கணம் கொண்ட கர்வம் தலைவிரித்து ஆடுபவனின் அழகிய வதனத்தில் முதன்முறையாக மிளிர்ந்திருந்த அச்சத்தை ஆச்சரியத்தோடு பார்த்த ஆர்யன் “அலெக்ஸ் இங்க வாங்க” அலைப்புறுதலுடன் கண்முன்னே நின்றிருந்தவனை கவனியாமல் பார்வையை அலைப்பாய விட்டப்படியே ஓடி வந்தவனை கைப்பிடித்து தடுத்து நிறுத்தினான்.

அவனும் அவ்விடத்திலே நின்றப்பொழுதும் “ஆர்யன் எங்க அவங்க?நான் உடனே அவங்களை பார்க்கணும்...அவங்களுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே?அடி எதுவும் பலமா இருக்கா?” என்று பொரிவது போல் கேள்விக்கணைகளைத் தொடுத்து படபடப்போடு விழிகளை சுழற்றியவனின் தோளை இறுக பற்றி நிலை நிறுத்திய ஆர்யன் “அலெக்ஸ் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை...கொஞ்சம் அமைதியா இருங்க” என்று அவனை அதட்டி அடக்கினான்.

அதில் தன்னிலை உணர்ந்த அலெக்ஸ் நெற்றியை நீவி “ச..சர்வாக்கு…” எத்தனை முயன்றும் குரலில் அவனின் தடுமாற்றம் வெளிப்பட,அதை அதியசத்தோடு புருவம் உயர்த்தி பார்த்த ஆர்யன் அவனிடம் எதையும் வெளிப்படையாக கேட்க விரும்பவில்லை.

இருப்பினும் அவனின் கேள்விக்கு சரியான பதிலளித்தான் ஆர்யன்.

“சர்வத்மிகாவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை...அவங்க ரொம்ப பாதுகாப்பா இருங்காங்க...ஆனால் அவங்க கூட வந்த அம்மாவிற்கு தான் கொஞ்சம் பலமான அடி”

“பொன்னம்மாவா?அவங்க எப்படி சர்வத்மிகா கூட" என சிந்தனையோடு கேள்வி எழுப்பியவன் பின்பு விஷயம் புரிப்பட்டாற் போன்று "இப்போ அவங்க எப்படி இருக்காங்க?" என்றான்‌ வெறுமையுடன்.

தன் சிகை கோதிய ஆர்யன் “முன்னாடி ரொம்ப சீரியசா இருந்தாங்க...ஆனால் இப்போ எந்த பிரச்சனையும் இல்லைன்னு டாக்டர் வந்து இப்போ தான் சொல்லிட்டு போறாங்க” என்று இயம்பினான்.

அதை கேட்ட அலெக்ஸ் ஏதோ யோசனையோடு “ஓ…” என்றவன் திடீரென்று தீவிரமான குரலில் “இது எதிர்ப்பாராமல் நடந்த விபத்தா?இல்லை கொலை முயற்சியா?” என்றான் ஆர்யனின் முகத்தை உற்று நோக்கியப்படி.

ஆர்யனோ தனது கால்சட்டை பையினுள் கைவிட்டு சுவற்றில் சாய்ந்து நின்றுக்கொண்டு “உங்க சந்தேகம் சரி தான் அலெக்ஸ்...கண்டிப்பாக இது திட்டமிட்ட சதி தான்...நான் மட்டும் அந்த இடத்திற்கு சரியான நேரத்திற்கு வந்து சேரலைனா நிச்சயம் சர்வதமிகாவை நாம் உயிரோடு பார்த்திருக்க முடியாது” என்றவுடன் அலெக்ஸின் சர்வ அங்கமும் பதறிப்போனது.

கண்களில் வலி நிறைய,ஆனால் அது பொய்யோ என்னும் விதமாக அவனது முகம் சகஜநிலைக்கு மாறி சற்றே கடினமுற “நிச்சயம் இதெல்லாம் அந்த சுரேஷ் ஆரம்பித்த சதி வேலையின் மிச்சம் தான்” என்றான் வெறுப்புடன்.

“எஸ்..நீங்க சொல்லறது சரி தான்...அவன் இறப்பிற்கு பிறகு தங்களுடைய இரகசியம் அனைத்தும் அவன் தங்கையால் வெளிப்பட்டுவிடுமோன்னு அந்த கும்பலில் இருக்கும் மிச்ச மீதியிருக்கும் தெருநாய்கள் தான் இந்த தாக்குதலை நடத்தியிருக்கனுங்க...என்ன ஒண்ணு இத்தனை நாளா சர்வத்மிகா உங்க நிழலிற்கு கீழ் இருந்ததால் அவர்களால் எதுவும் செய்ய முடியலை...இப்போ அந்த பொண்ணு தனியா வெளிய வருவதை பார்த்து தான் விபத்து ஏற்படுத்த நினைச்சிருக்கான் அந்த பொறுக்கி...ஆனால் அவளோடு கூட வந்த அம்மா கடைசியாக சுதாரிச்சு அந்த பொண்ணை தள்ளிவிட்டு தானே அந்த வண்டியில் விழுந்தாட்டாங்க...அவளுடைய உயிர்ப்போகலைனு கீழே தலையில் அடிப்பட்டு விழுந்து கிடந்த சர்வத்மிகா மீது மறுபடியும் வண்டி ஏத்த முடிவு பண்ணி அவன் வண்டியை ஓட்டிக்கிட்டு வரும்போது நல்லவேளையா அந்த வழியா ஒரு வேலையா போன நான் நடக்கவிருக்கும் விபரீதத்தை பார்த்து கடைசி நேரத்தில் சுதாரித்து அந்த பொண்ணையும் அம்மாவையும் காப்பாத்தி இங்க கூட்டிட்டு வந்துட்டேன்...அந்த ராஸ்கலை பிடிச்சு அங்கிருந்த பொது மக்கள்கிட்ட ஒப்படைச்சு நம்ப ஸ்டேஷனுக்கு தகவல் சொல்லி அரெஸ்ட் பண்ணியாச்சு” மிக நீளமாக அங்கு நடந்த நிகழ்வுகளை தெளிவாக எடுத்துரைத்த ஆர்யனிடம் தன் நன்றியை தெரிவித்த அலெக்ஸ் “இப்போ சர்வத்மிகா எங்கே?” என்று கேட்டான் மெல்லிய குரலில் சுவற்றை வெறித்தவாறு.

தங்களது வயது வித்தயாசத்தை உணர்ந்து அவளிற்கு ஏற்றவன் தானில்லை என்று மனதை சமன்செய்து கொண்டப்போதும் அவளின் மீதிருந்த அந்த இனம்புரியாத அன்பு அவனின் ஆவியை துடிக்க வைத்து உணர்ச்சிகளை தன்னை மீறி வெளிவர வைத்தது.

ஆர்யன் அதனை கவனித்தாலும் எதையும் கண்டுக்கொள்ளாதது போல் கன்னங்குழி புன்னகையுடன் "அவங்களை சாதாரண வார்டில் வைச்சிருக்காங்க அலெக்ஸ்...இப்போ கொஞ்சம் மயக்கத்தில் இருக்காங்க.‌..மத்தப்படி எந்த பிரச்சனையும் இல்லை" என்றவன் அவள் தற்போது இருக்கும் அறையின் எண்ணை கூறிய அடுத்த வினாடியே "ஓகே ஆர்யன்...நான் அவளை பார்த்திட்டு வரேன்" என்று சிறுப்பிள்ளையென சிட்டாய் பறந்தவனை பார்த்தவனின் இதழ்கள் மேலும் விரிந்தது.

அவசரமாக ஒவ்வொரு அறையாக கடந்து சர்வத்மிகாவை படுக்க வைத்திருக்கும் அறையை அடைந்து படீரென்று கதவை திறந்துக்கொண்டு உள் நுழைந்த அலெக்ஸ் வாடிய கொடியென வதங்கிப்போய் படுத்திருக்கும் மலர்க்கொடியை பார்த்தவனின் விழிகள் பனித்தது.

முன்பே உடல் மெலிந்து சோபையுடன் காணப்படுபவள் இன்று நிகழ்ந்த சம்பவத்தால் மேலும் சோர்ந்து படுத்திருப்பது நெஞ்சத்திற்குள் ஊசியால் குத்திய உணர்வை அளித்திட,தனக்கே உரிய வேக நடையுடன் பெண்ணவளை அழுத்தமான காலடியோசைகளுடன் நெருங்கினான்.

அத்தகைய மயக்கத்திலும் அவனது வருகையை உணர்ந்தாற் போன்று இலேசாக நெரிந்த புருவத்தை பார்த்தவாறே அவளருகே நெருங்கிய அலெக்ஸின் இதழ்கள் தன்னையறியாமலே சுய உணர்வின்றி இருந்த மலரவளின் பிறைநெற்றியில் பதிந்தது.

உடனடியாக,சுழித்த புருவங்கள் நேராகிட அலைப்புறுதல் சிறிதுமின்றி நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்ற காரிகையின் கரங்களோ தன்னை நோக்கி குனிந்திருந்தவனின் முரட்டு கரங்களை ஆறுதலுக்காக இறுக்கிப்பிடித்து கொண்டது.

அதன்பிறகே தன்னுடைய செயலை எண்ணி வெட்கியவனாய் ‘சுய உணர்வு இல்லாத பெண்ணிடம் என்ன காரியம் செய்துவிட்டேன்’ தவறை உணர்ந்து பெண்ணவளிடமிருந்து விலகிட முனைந்து தோற்றான்.

ஏனெனில் அவனது நீண்ட வலிய கரங்கள் அவளிடம் சிறைப்பட்டிருப்பதை உணர்ந்து வேறு வழியின்றி முறுக்கேறிய கரத்தை அவளிடம் கொடுத்துவிட்டு அருகிலிருந்த நாற்காலியில் சுவாதீனமாக அமர்ந்தான்.

சிறைப்படாத கரம் கொண்டு மதிவதனத்தை மறைத்தாற் போலிருந்த கூந்தலை ஒதுக்கிவிட்டவனின் தொடுகை உணர்ந்த ஸ்பரிஷத்தை இதுவரை எந்த உயிரிடமும் உணராத ஒன்றாக இருந்தது அந்த காவலுனுக்கு!!

இது எதிர்ப்பாராமல் நிகழ்ந்த உரசல் தான் என்றப்பொழுதும் ஏனோ குழந்தையின் மென்மையான ஸ்பரிசத்தை கொண்டு இருந்த பாவையின் அழகை முதன்முறையாக தன் கூரிய விழிகளால் ஆராய்ந்தான் அலெக்ஸ் பாண்டியன்.

தான் செய்வது பெரும் பிழை என்பதை உணர்ந்திருந்தாலும் அவனது கண்கள் தன் அனுமதியின்றி சர்வத்மிகாவின் அழகிய வதனத்தின் மீது நீக்கமற நிறைந்திருந்தது.

குழந்தை தனம் மாறாத வட்டவடிவ பால் போன்ற முகம்,பிறைப்போன்ற நெற்றி,வில்லென வளைந்த இரண்டு புருவங்கள்,கிளி போன்று வளைந்த கூரான நாசி,செர்ரி பழத்தை வெட்டி ஒட்டி வைத்தாற் போன்ற சிவந்த நிற அதரங்கள் என்று ஒவ்வொன்றையும் தன் விழிகளுக்கு விருந்தாக்கிய அதே வேளையில் அவன் கரங்களுக்கு அதனை படையிலிட்டான் அந்த வீரமகன்.

அவனது சீண்டலை உணர்ந்தாற் போன்று அவளின் உறக்கம் கலைய முற்பட இதழில் இளைப்பாறியிருந்த கரத்தை வெடுக்கென்று தன்புறம் இழுத்துக்கொண்ட அலெக்ஸின் முகம் கன்றி சிவந்துப்போனது.

தன்னுடைய உணர்ச்சிகள் தறிக்கெட்டு ஓடியதில் தன்னையே இழிவாக எண்ணியவன் படீரென்று அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்துக்கொண்டவனின் வலது கரம் அவனது பின்னந்தலையை செய்த தவறுக்கான தண்டனையை அளித்தது.

மனசாட்சியோ ‘அலெக்ஸ் அவள் உனக்கு ஏற்றவள் அல்ல...உன்னுடைய வயது என்ன?அவள் வயது என்ன?சிறுப்பெண்ணிடம் இவ்வாறு நடந்துக்கொள்ளும் காமுகனா நீ?’ காறி உமிழாத குறையாக அவனிடம் கேள்வி எழுப்பிட,செய்து குற்றத்திற்காக தன் மீதே கோபம் எழ பற்களை நறநறவென கடித்தவனின் கரங்கள் கைமூஷ்டியை இறுக்கி அருகிலிருக்கும் சுவற்றில் ஓங்கி ஒரு குத்துவிட்டது.

மேலும் மூன்று முறை கைமூஷ்டியை இறுக்கி சுவற்றில் குத்திய ஓசையில் பெண்ணவளது மயக்கம் நன்றாக களைந்து கருமணிகள் திறப்பதற்கு தயாராகிய நிலையை அறிந்தவனால்,அவளை நேருக்கு நேராக எதிர்க்கொள்ளும் துணிச்சலில்லை என்பதினால் விரைவாக அறையிலிருந்து வெளியேறினான்.

சர்வத்மிகா மிகுந்த சிரமத்துடன் விழிகளை திறப்பதற்கும் அலெக்ஸ் வெளியேறும் போது முதுகு பகுதி அவளின் விழிகளில் காட்சிப்படிவங்களாய் படுவதற்கும் சரியாக இருந்தது.

அடி மனதின் ஆழத்தில் வேரூன்றி இருக்கும் நேசத்தால் மூச்சுக்காற்றை வைத்தே கண்ணாளனின் வருகையை உணர்பவளால்,அவனுடைய முதுகுப்பகுதியை கொண்டு வந்திருந்தது தன்னுடையவன் என்று அறிய முடிந்திடதா என்ன?

தனக்கு ஒன்று என்றவுடன் துடித்துக்கொண்டு வந்து நிற்பவனின் தன் மீதான அன்பை உணர்ந்தவளின் முகம் விளக்குப்போட்டாற் போன்று பிரகாசமாகியது.

ஆனால் உடனடியாக அவனுடைய வீட்டிலிருந்து எதற்காக வெளியேறினோம் என்ற காரணம் தோன்றிய நொடியினில் முகத்திலிருந்து பொலிவு மங்கி இருளடைந்தது.

ஏனெனில் அவள் அந்த வீட்டிலிருந்து வெளியேறியதற்கு டெய்ஸியும் அவள் தாயும் மட்டும் காரணமல்லவே?

அவள் அங்கிருந்து புறப்பட வேண்டும் என்று உறுதியான முடிவெடுத்ததற்கு பின்னால் அலெக்ஸ் பாண்டியனின் நலனே அதிகம் இருந்ததை பாவையவள் மட்டுமே அறிவாள்.

அந்த செயலின் நோக்கம் என்னவென்றால் தான் அவ்வீட்டில் இருந்தால் அவனின் திருமணம் தடைப்படும் என்பதாலும்,தன்னால் ஒரு வளமான வாழ்க்கையை அவன் இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தாலும்,கூடவே அவனை வேறொரு பெண்ணுடன் இணைத்து பேசுவது தனக்குள் ஒரு வலியை கொடுப்பது எதனால் என்பதை அறிய முடியாததாலும் அந்த வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறினாள் காரிகை.

அதற்கான காரணத்தை அறிய மனம் முற்பட்டாலும் அது நல்லதிற்கில்லை என்று மூளை குரல் கொடுத்து எச்சரித்ததால்,இதற்கு மேலும் அவனிற்கு பாரமாக இருக்கவேண்டாம் என்ற முடிவுடன் தன் எதிர்க்கால வாழ்வை தானே அமைத்துக்கொள்ள எண்ணி தனித்து வாழும் முடிவை எடுத்தாள் சர்வத்மிகா.

ஆனால் தன் மனதின் திரை விலகினால் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் பூகம்பம் தன் எதிர்க்கால வாழ்வை அடியோடு அழித்துவிடும் என்று அந்த பேதை பெண் அறியவில்லை.

பெண்ணவள் இத்தகைய நிலையில் இருக்க ஆடவனோ அவளின் மீதான காதலை உணர்ந்ததற்கு பிறகும் இருவருக்குமிடையே உள்ள ஏற்ற தாழ்வுகளை கணக்கில் கொண்டு இது சரிவராது என தன்னுடைய மனதை தேற்றிக்கொள்ள முயற்சித்து வெற்றியடைந்தான்.

அதேசமயம் அவளை நேருக்கு நேர் பார்க்கையில் தன்னை மீறி ஆழ் மனதின் நேசத்தை அவளிடம் வெளிப்படுத்தி விடுவோமா என்ற அச்சத்தோடு,இன்று அவளிடம் நடந்துக்கொண்ட தன்னுடைய இழிவான செயலை கணக்கில் கொண்டு ‘இனிமேல் தன் வாழ்வின் இறுதிவரை அவளை ஒரு முறை கூட பார்த்துவிடக்கூடாது’ என்ற விபரீத முடிவை அவனை எடுக்க வைத்தது.

அதற்காக தான் எடுத்துக்கொண்ட பொறுப்பிலிருந்து விலகிவிடாமல் ஆர்யனிடம் அவளின் படிப்பு முடியும் வரை சர்வத்மிகாவை பாதுகாக்கும் கடமையை அவனிடம் ஒப்படைத்துவிட்டு மருத்துவமனையிலிருந்தும் அவளின் வாழ்விலிருந்தும் முழுமையாய் வெளியேறியிருந்தான் அலெக்ஸ் பாண்டியன்.

முதலில் அவனுடைய முடிவை கேட்டு ஆர்யன் திகைத்தாலும் அவன் எடுத்த இத்தகைய முடிவிற்கு பின்னால் இருக்கும் நியாயத்தை உணர்ந்து,தற்போது அலெக்ஸிடம் பேசுவதற்கு ஏற்ற நேரம் இதுவல்ல என்று அமைதியடைந்தான்.

அத்தோடு சர்வத்மிகாவின் மனதிலிருப்பதை அறியாமல் இதில் எந்த வித உறுதியான முடிவும் எடுக்க இயலாமல்,இப்போது சர்வதமிகாவின் படிப்பும் அவளது பாதுகாப்பும் மட்டுமே முதன்மை என்பதால் ஆர்யன் தன்னிடம் ஒப்படைத்த பணியை நிறைவேற்றுவதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை செய்ய தொடங்கினான்.

 

Priyanka Muthukumar

Administrator
சர்வம் 16:

சர்வத்மிகாவிற்கு தேவையான இருப்பிடத்தை தானிருக்கும் குடியிருப்பிற்கு எதிர்ப்புறமாக இருக்கும்படி அமைத்துக்கொடுத்த ஆர்யனிற்கு சர்வத்மிகாவை அதற்கு சம்மதிக்க வைப்பதே பெரும்பாடாக இருந்தது.

ஆர்யனை முன்பே ஒருமுறை தங்களது வீட்டில் சந்தித்திருப்பதால் ‘இவன் நிச்சயம் அலெக்ஸின் வேண்டுக்கோளிற்கிணங்கியே இதனை செய்ய விளைகிறான்’ என்பதை யூகிக்க பெரிதாக மூளை ஒன்றும் இருக்கவேண்டிய அவசியமில்லை.

அதற்காகவே ஆர்யன் செய்த உதவிகள் அனைத்தையும் முரண்டுப்பிடித்து மறுத்தவளால் அவனுடைய அன்பான வார்த்தைகளுக்கு கட்டுப்பாடாமல் இருக்க இயலவில்லை.

ஏனெனில் “பிறந்திலிருந்து யாருமற்ற அனாதையாக வளர்ந்துவிட்டேன்...உன்னை பார்த்தால் எனக்கொரு தங்கை இருந்திருந்தால் உன்னை போல் இருப்பாள் என்று தோன்றுகிறது...இதற்கு மேல் வாழப்போகும் வாழ்க்கையில் எனக்கொரு தங்கையாக இருந்து ஒரு புது உறவை அளிப்பாயா?” என யாசகமாக இறைஞ்சியவனிடம் தனது பிடிவாதத்தை இழுத்துப்பிடிக்க இயலாமல் ஒப்புக்கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டாள்.

ஆயினும்,அவனுக்கென சில கட்டுப்பாடுகளை விதித்து அதனை ஆர்யன் ஏற்றுக்கொண்டதற்கு பிறகே அவனுடன் வர சம்மதித்தாள்.

அவள் விதித்த கட்டளைகளை கேட்ட ஆர்யனிற்கு முதலில் தலை சுழன்றாலும் அவளின் பாதுகாப்பிற்காக மானசீகமாக தன்னையே மனதிற்குள் நொந்துக்கொண்டு வெளியே சிரிப்பது போல் இதழை இழுத்து வைத்து “சரிம்மா” என்று தலையாட்டி வைத்தான்.

ஏனெனில் அவளிட்ட விதிமுறைகள் அவ்வளவு கடுமையானதாக இருந்தது.

1.அவன் வீட்டில் வந்து தங்கமாட்டேன்.அவனது வீட்டிற்கு அருகிலோ அல்லது எதிர்ப்புறத்திலோ தனக்கென வாடகைக்கு வீடு பார்த்துக்கொடுக்க வேண்டும்.

2.தனக்கென உணவு,உடை,இருப்பிடம் மற்றும் கல்லூரி கட்டணம் என்று எதற்கும் செலவு செய்யக்கூடாது.தனக்குரிய அனைத்து செலவுகளையும் அவளே பார்த்துக்கொள்ளுவாள்.

3.வீட்டிலிருந்தே தன் கல்லூரி படிப்பை தொடரப்போவதாகவும்,பகுதி நேரமாக வீட்டிலிருந்து பணிசெய்யும் படியாக ஒரு வேலையை செய்யப்போகதாகவும் அதற்கு எவ்வித தடையும் கூறக்கூடாது.

4.தேவையென்றால் ஒழிய தன் வீட்டின் கதவை தட்டக்கூடாது என்றும்,பொன்னம்மாவிடமும் தன்னை பற்றி எவ்வித தகவலையும் சேகரிக்கக்கூடாது.அப்படியே தன்னைப்பற்றிய விபரம் ஏதேனும் தெரிந்தாலும் அதனை யாரிடமும்(குறிப்பாக அலெக்ஸிடம்) பகிரக்கூடாது.

5.தன்னை பார்க்க யாரும் பிரியப்பட்டாலும் அவர்களை தன்னிடம் நிச்சயம் அழைத்துவரவேக்கூடாது.அப்படி யாரேனும் வந்தால் அடுத்தவினாடியே யாரிடமும் கூறாமல் இந்த இடத்தை விட்டே சென்றுவிடுவேன்.

6.(இது தான் இருப்பதில் மிகவும் முக்கியமானதொரு கட்டளை என்ற எச்சரிக்கையுடனே ஆரம்பித்தாள்)அலெக்ஸ் சம்பந்தமான எவ்வித தகவலையும் தன்னிடம் வந்து நிச்சயம் கூறக்கூடாது.

இவையனைத்தையும் கேட்ட ஆர்யனால் ‘இதற்கு நான் கண்காணாத இடத்துக்கு போறேன்’ என்று நேரடியாகவே கூறிவிடலாம் என்று நினைக்காமல் இருக்கமுடியவில்லை.

ஆனால் ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்பது போல் ‘தன் கண்பார்வையால் அவள் இருந்தால் அதுவே போதும்’ என்று பெருமூச்சோடு அவளிட்ட கட்டளைகளை மனதினுள் பதிய வைத்து அதற்கு ஏற்றாற் போன்று நடக்கத்தொடங்கினான் ஆர்யன்.

அத்தோடு அவளது ஒவ்வொரு வார்த்தையிலும் வெளிப்பட்ட அவளிற்கே உரிய சுயமரியாதையையும் தன்மானத்தையும் கண்டு ஆடவனால் பிரம்மிக்காமல் இருக்க முடியவில்லை.

உடலளவில் அவளிற்கு குறை இருந்தாலும் பெண்ணவளின் மனதில் இருந்த உறுதி,இவளை போலவே இருக்கும் ஒவ்வொரு மங்கையிருக்குள்ளும் இருக்க வேண்டியாக நிமிர்வாக கருதியவனிற்கு அவளின் துடினமான பேச்சுக்களும் அவனை மிகவும் கவர்ந்தது.

சிறு வயதிலிருந்தே குடும்ப சூழலின்று தனித்து வாழ்ந்து வந்திருந்தவனிற்கு சர்வத்மிகாவை தன் உடன்பிறவாத சகோதரியாக ஏற்றுக்கொள்ள வைத்தது.

மருத்துவமனையில் இருந்த பொன்னம்மாவும் அவளும் நன்றாக உடல்நிலை தேறிய பின்னர் தனக்கு எதிரே உள்ள அடுக்குமாடி வீட்டில் குடிவைத்தவன் எந்நேரமும் அவர்களை கண்காணிப்பதற்காக அவள் அறியாமல் சிறிய அளவில் கள்ளத்தனமான செயல்களை செய்தப்பிறகே நிம்மதியடைந்தான் அவன்.

வீட்டின் வாசலிலும் வரவேற்பறையிலும் இரகசிய ஒளிப்பட கருவியை மறைத்து வைத்த ஆர்யன் மனதிற்குள் ‘இது மட்டும் அந்த பிள்ளைக்கு தெரியவே கூடாது’ என திகிலுடனே இருந்தான்.

அதேசமயம் சர்வத்மிகாவின் படிப்பு முடியும் வரை தனக்கும் டெய்ஸிக்குமான திருமணத்தை தள்ளி வைக்கும்படி அலெக்ஸிடம் வேண்டுக்கோள் விதித்த ஆர்யன்,அவனிடமும் சர்வத்மிகாவின் கட்டளைப் பற்றி கூற அவனது இதழோரம் முறுவல் தோன்றியது.

அதை கண்டு கடுப்பான ஆர்யன் “டேய் மச்சான்!என் நிலைமை உனக்கு சிரிப்பா இருக்காடா?சிவனேனு நான் உண்டு என் வேலை உண்டுன்னு பேச்சுலரா என் லைப்பை என்ஜாய் பண்ணிட்டு போயிட்டே இருந்தேன்...இப்படி வந்து ஒரு ராட்சஸியோட பொறுப்பை என்கிட்ட தள்ளிவிட்டுட்டு சிரிப்பாடா சிரிக்கிற?” என்று இடுப்பில் கைவைத்து முறைத்தான்.

அலெக்ஸோ எதையும் கூறாமல் சிறு முறுவலுடனே நாற்காலியில் அமர்ந்திருக்க,அதில் மேலும் போலியான சினமானவன் அவனது கழுத்தைப்பிடித்து விளையாட்டாக நெறித்து “டேய் சிரிக்காதே!சிரிச்சே மவனே,கொலைவெறியில் கழுத்தை நெறிச்சு கொன்னுடுவேன் ராஸ்கல்” என மிரட்டியவனின் இதழிலும் புன்னகையே நிறைந்திருந்தது.

ஒற்றை புருவத்தை எகத்தாளமாக உயர்த்தி “மாப்பு இப்போ புரியுதா?நைசா ஏன் அவளோட பொறுப்பை உன்கிட்ட தள்ளிவிட்டேன்னு” என்றவன் அத்தோடு நிறுத்தாமல் “ஆளு தான் சில்வண்டு கணக்கா இருப்பா...சூடானேன் சுளுக்கெடுத்திடுவேன் சுளுக்கு கோவைசரளா மாதிரி வாயாலே புரட்டி புரட்டி அடிப்பா” என தலையசைத்து கண்சிமிட்டி சிரித்தான் அலெக்ஸ்.

அதில் பல்லைக்கடித்த ஆர்யன் கழுத்திலிருந்து கையை எடுத்து இமை சுருக்கி முறைத்தவன் “அடேய் பச்ச துரோகி...உனக்கு ஒரு நாள் இல்லைன்னா ஒரு நாள் இருக்குடா மவனே...அப்போ இந்த ஆர்யனை பத்தி உனக்கு தெரியும்” என,

“அதான் இப்போவே எனக்கு தெரியுமே?” என்று திமிராக மொழிந்தவனை தன் புருவம் சுருக்கி ஆர்யன் அவனை சந்தேகமாக பார்த்த வேளையில் “அதான் காமெடி பிஸூன்னு” என சிரியாமல் அவனை கேலி செய்த அலெக்ஸை கனல் விழிகளால் முறைத்த ஆர்யன் “டேய்” என கத்திக்கொண்டு அவனை அடிக்கச்சென்ற நேரத்தில் அவனுடைய அலைப்பேசி ஒலி எழுப்பிட அதனை கையில் எடுத்து பார்த்தவன் “உனக்கு நேரம் நல்லாயிருக்கு...இன்னைக்கு நீ தப்பிச்சடா மவனே!” என போலியாக விரல் நீட்டி மிரட்ட,

அலெக்ஸ் “இல்லனா மட்டும் ஐயா என்ன செய்து கிழிப்பீங்க” என எகத்தாளமாக புருவம் உயர்த்தி சிரிக்க,

“டேய் வேணாம்”

“வலிக்குது...அப்புறம் அழுதிடுவேன்” என்று விடாமல் வடிவேல் பாணியில் அவனை கேலி செய்ய,

“போலீஸ் ஸ்டேஷனா போச்சு...இல்லைனா…”

“இல்லைனா சுவர் வழியா எகிறி குதிச்சு ஓடிப்போயிருப்பே...அதானே?” என்றான் நக்கலாய் அலெக்ஸ்.

“என்னடா உன் ஆளும் நீயும் டைம் டேபிள் போட்டு ஒரு சின்னப்பையனை கலாய்க்கிறீங்களா?உங்க இரண்டு பேருக்கும் ஒரு நாள் இருக்குடா” என வீர வசனம் பேசிக்கொண்டிருக்கையிலே மீண்டும் கைப்பேசியின் அழைப்பு மணியோசை எழ “கமிஷனர் கூப்பிடறார் பேசிட்டு வரேன்” என தீவரமான முகப்பாவனையோடு ஆர்யன் அறையிலிருந்து வெளியேறினான்.

இருவரும் உறவினர் என்ற அளவில் நெருங்கிவிட்டாலும் பணி என்று வந்துவிட்டால் மிகவும் விஸ்வாசமாக தங்களது பதிவிக்கு உரிய மரியாதையளித்து கடமை தவறாத காவலர்களாய் தங்களது உயரம் அறிந்தே செயல்பட்டு பாயும் புலியாய் மாறி குற்றவாளிகளை வேட்டையாடினார்கள்.

ஆர்யன் ஆணையரின் எண்ணை கண்டு தன்னறைக்கு விலகி சென்றுவிட,அவன் இறுதியாக ‘உன் ஆளும் நீயும்’ என்று கூறிச்சென்ற வார்த்தையிலே முகம் இறுக கைமுஷ்டியை இறுக்கி நரம்புகள் புடைக்க அமர்ந்திருந்தான் அலெக்ஸ் பாண்டியன்.

அவள் சுயமாக தன்னை பற்றி முடிவெடுப்பதில் அவனிற்கும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தாலும்,அவளின் மீது உண்டான உணர்விற்கு உருவம் கொடுக்க இயலாமல் மனம் தவியாய் தவிக்க,எந்தவொரு உறுதியான முடிவும் தோன்றாமல் தனக்குள்ளே இறுகிப்போனான் ஆடவன்.

தன்னுடைய நேசத்திற்கு தகுந்த வரிவடிவம் கொடுக்க முடியாத சிற்பியின் நிலையில் அதீத மனவலியில் இருந்தவனிற்கு ‘இது எப்போதும் கைக்கூடாத ஒன்று’ என்று தெளிவாக தெரிந்தப்போதும்,வருடங்கள் பல கடந்ததற்கு பிறகு தனக்குள் உருவாகிய விருப்பத்தை நிராகரிக்க வேண்டிய நிலையில் இருக்கும் தன்னிலையை அறவே வெறுத்தான்.

சர்வத்மிகாவிடம் தன் ஆசையை வெளிப்படுத்தினால் நிச்சயம் ஏற்றுக்கொள்வாள் என்பதை நிச்சிந்தையாக அறிந்தப்போதும்,ஏனோ தங்களுக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வான நிலை பிற்காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் விரும்பதகாத ஒன்றாக மாறினால்,அந்த சூழ்நிலையை சமாளிக்கும் வல்லமை தன்னிடத்தில் இல்லை என்பதினாலே தன்னுடைய ஆசைகளை இதயத்திற்குள்ளே குழித்தோண்டி புதைத்திருந்தான் காதல் கண்ணாளன்.

மற்றவர்களுக்காக வெகு சாதாரணமாக இருப்பதாக காட்டிக்கொண்டாலும் அவளின் மீதான அவனது நேசம் சிறிது சிறிதாக ஒரு கிருமியாக தேகமெல்லாம் பரவி ஆடவனை உள்ளுக்குள் செயலிழக்க செய்து கொண்டிருந்ததை அவன் மட்டுமே அறிவான்.

இரு மனங்கள் இணைவதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை ஆண்மகன் அறியாத அதேகணத்தில் பெண்ணவளிற்கு இருக்கும் குறையை ஒரு பொருட்டாக கூட மதியாத அவனது நற்சிந்தனையிலே அவனின் உயர்ந்த குணம் சிகரம் தொட்டது.

அந்த ஒன்று மட்டுமே இரு இதயங்களும் சங்கமிப்பதற்கு ஏற்றது என்று அலெக்ஸ் அந்நொடியில் அறியவில்லை.

இதற்கிடையில் டெய்ஸியின் திருமணம் தற்போது தள்ளி சென்றதினால்,உடனடியாக அலெக்ஸின் திருமண வைப்போகம் நடைப்பெற வேண்டும் என்பதற்காக விசாலினி அவசரமாக ஒரு பெண் பார்த்து அவனறியாமல் நிச்சயம் செய்து வைத்துவிட்டார்.

டெய்ஸியோ "அம்மா!அண்ணாவிற்கு தெரியாமல் எந்த ஏற்பாட்டையும் செய்யதீங்க...அப்புறம் சபையில் மூக்கறுப்பட்டு நிற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்" என எச்சரிக்க,

"அடிப்போடி பைத்தியம்...என் மகன் தான் கல்யாணத்திற்கு ஒத்துக்கிட்டானே...பிறகு என்ன?நான் எந்த பொண்ணை பார்த்தாலும் அவன் கல்யாணம் செய்துப்பான்" என உறுதியாக கூறிய தாய் அறியவில்லை,அவரது மகன் எத்தனுக்கெல்லாம் எத்தன் என்று!!

ஏற்கனவே சர்வத்மிகா வீட்டை விட்டு வெளியேறியதற்கு தாம்தான் காரணமென்று குற்றவுணர்ச்சியோடு மனதிற்குள் புழுங்கிக்கொண்டு இருக்கும் வேளையில் இந்த காரியம் அவனை எரிமலையாய் வெடித்து சிதற வைக்கும் என்பதை அந்த தாய் அறியவில்லை.

இந்த விஷயம் கேள்வியுற்ற அலெக்ஸின் நடவடிக்கை அடுத்து என்னவாக இருக்கும்?

 
Status
Not open for further replies.
Top