வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

சாகரத்தின் கொற்றவன் - கதை திரி

Status
Not open for further replies.
ஹாய் நட்புக்களே,

எப்படி இருக்கீங்க எல்லாரும்... போட்டி கதைகள் எல்லாம் போட ஆரம்பிச்சுட்டாங்க... நான் கொஞ்சம் லேட்ட தான் வந்திருக்கேனு நினைக்குறேன். இந்த டீஸர் எல்லாம் வேண்டாம். நேரா கதைக்குள்ள போயிடலாம்னு நினைக்குறேன்...

கதையின் தலைப்பு - சாகரத்தின் கொற்றவன்

சாகரம் அப்படினா ஆழிப்பெருங்கடல் அப்படினு அர்த்தம்...
கொற்றவன் - தலைவன்...

சோ... இப்ப எல்லாருக்கும் இந்த கதையோட அர்த்தம் புரிந்திருக்கும்...

நாயகன் நாயகி எல்லோரையும் கதையில் இனி மீட் பண்ணிக்கோங்க... எப்ப எழுதி முடிச்சாலும் அடுத்த எபி வந்துரும்... கண்டிப்பா போட்டி முடியறதுக்குள்ள கதையை எழுதி முடிச்சறனும்னு நினைக்குறேன்.

என்னுடைய கதைக்கு கண்டிப்பா ஆதரவு தெரிவிக்கனும் மக்காஸ்....

கண்டிப்பா கருத்துகள், லைக்ஸ் எல்லாத்தையும் வரவேற்கிறேன்.

என்னுடைய கதை வெற்றி பெற வாழ்த்தி அனைவரும் படிக்க ஆரம்பியுங்கள்... நன்றி...

இதோ முதல் அத்தியாயம்....
 
சாகரம் – 1

சிவப்பும் மஞ்சளும் கலந்த பகலவன் அந்த நீலப்பெருங்கடலில் பாதி நிலையில் மூழ்கியவாறு தெரிந்தான். பகலவனின் அந்த நிறத்தை ஒத்து பிரதிபலித்து கொண்டிருந்தது அந்தி மேக வானம்.

சுற்றிலும் பார்வை சுழல விட்டாலும் எங்கு நீல நிறமாக தெரிவதை கண்டு அந்த பூமிதாய் தான் தனது செந்நிற ஆடையை விடுத்து நீல நிறத்தை போற்றி கொண்டாளோ என்று தோன்றும் அதை பார்ப்பவர்களுக்கு. ஆனால் தன்னுடைய உடல் மேலும் கீழும் அசைவதை வைத்தே தான் நிற்பது பூமியில் இல்லை எங்கும் நீர் சூழ்ந்து அதில் மிதந்து கொண்டிருந்த படகினில் என்று அதில் பயணம் செய்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.

ஆனால் அந்த இயற்கையான சூழ்நிலையை ரசித்து பார்ப்பதற்கு தான் ஆட்கள் யாரும் இல்லை அந்த விசைப்படகில்.

மொத்தமாகவே அந்த படகில் பத்து ஆட்களே இருந்தனர். அதில் ஒரு சிலர் மீன் பிடிப்பதற்காக வலைகளை சரி செய்து கொண்டிருந்தனர். சிலரோ ஏற்கனவே பிடித்திருந்த மீன்களை பெட்டியில் அடுக்கும் வேலையில் இருந்தனர். மேலும் சிலரோ அங்கே இருக்கும் தனது நண்பர்களுக்காக உணவு சமைக்க சென்றனர்.

இவ்வாறு ஒவ்வொருவரும் வேலையில் மூழ்கி இருக்க ஒருவன் மட்டும் அங்கேயும் இங்கேயும் நடை பயின்று கொண்டிருந்தான்.

ஓரு மணி நேரமாக அவனும் அந்த இடத்தின் நீள, அகலங்களை அளந்து கொண்டு தான் இருக்கிறான். சிறிது நேரம் நடப்பவன், படகின் தடுப்பை பிடித்து கொண்டு கடலையே அங்கும் இங்கும் பரபரப்பாக பார்த்து கொண்டிருந்தான்.

தாங்கள் செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தி விட்டு அங்கே வந்த இருவர் அவனை தடுத்து நிறுத்தினர்.

“ஏய் எதுக்கு இப்ப அங்கேயும் இங்கேயுமா அலைஞ்சுட்டு இருக்க??? என்ன ஆச்சு??”

“ஆரோன் உள்ள போய் ஒரு மணி நேரமாச்சு... இன்னும் காணோம்.”

“இவ்வளவு தானா… அதெல்லாம் வந்துடுவாரு… “

“அதில்லை… ஒரு முக்கியமான விசயம் ஆரோன் கிட்ட பேசனும். அதுக்கும் தான்…” என்றான்.

“இவர்கள் பேசி கொண்டிருக்கையில் அவர்கள் இருந்த அந்த விசைப்படகின் அருகே கருப்பாக ஒரு உருவம் நீந்தி வருவது போல் இருந்தது.

அருகில் வர வர ஆழ்கடலில் வெகு நேரம் நீந்த தேவையான உடைகள் மற்றும் ஆக்ஸிஜன் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் தென்பட்டான் ஒருவன்.

விசைப்படகின் அருகே வந்தவன் நீரிலிருந்து மேலெழும்பி தனது முகத்தில் சுவாசத்திற்காக மாட்டியிருந்த அந்த மாஸ்க்கை எடுத்து இயற்கை காற்றை சுவாசித்தான்.

பின்பு அங்கே அந்த படகிலிருந்து தொங்கி கொண்டிருந்த ஒரு சிறு கயிற்றை பிடித்து கொண்டு படகின் மேலேறி வந்து குதித்தான்.

அவன் குதிக்கும் சப்தம் கேட்டே இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தவர்கள் தங்களது பேச்சினை நிறுத்தி அவனை பார்த்தனர்.

“ஆரோன் வந்துட்டயா??? என்ன இவ்வளவு நேரம் பண்ணிட்ட??? எனக்கு பயமாயிடுச்சு தெரியுமா??” என்றான்.

நீரிலிருந்து மேலெழும்பி வந்தவனோ அவன் கூறியதை கேட்டு திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு படகில் இருந்த ஒரு சிறு அறைக்குள் நுழைந்தான்.

தனது பைகளில் சேகரித்து கொண்டு வந்திருந்த பொருட்களை பத்திரப்படுத்தியவன் உடை மாற்றி கொண்டு வெளியே வந்தான்.

துணியினால் தனது அடர்த்தி மிகுந்த கேசத்தில் உள்ள நீரை துவட்டி கொண்டே அந்த செவ்வானத்தை பார்த்து கொண்டிருந்தான் தன் கூர்மையான விழிகளால்.

அவன் அந்த காட்சியை ரசித்து கொண்டிருக்கிறானா அல்லது வெறித்து நோக்கி கொண்டிருக்கிறானா என்பதை அவனது முகத்தை வைத்து ஆராய்ந்து முடிவு செய்யும் அளவிற்கு தனது உணர்வுகளை வெளிப்படுத்துபவன் அல்ல இந்த ஆரோன்.

ஐந்தரை அடி உயரத்தில் தினமும் உடற்பயிற்சி செய்ததன் விளைவாக முறுக்கேறிய உடல், மாநிறத்தை விட சற்றே வெளிர் நிறம் கொண்டவன், முன்நெற்றியை மறைக்கும் அளவிற்கு அடர்த்தி மிகுந்த கேசம், நாசியை போலவே அவனது பார்வையும் ஒருவரை பார்த்தவுடனே அவரை எடைபோடும் அளவிற்கு கூர்மையானது. கன்னங்களை மறைக்கும் அளவிற்கு தாடியும், அந்த தாடிக்கிடையே சற்றே கருத்திருந்த தடித்த உதடுகள் பறை சாற்றியது அவனுக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டு என்பதை. ஆனாலும் அதுவும் அவனுக்கு கூடுதல் அழகை கூட்டியது என்றால் மிகையில்லை.

“டேய் ஆரோன்… நான் உங்கிட்ட அப்பவே முக்கியமான விசயம்னு சொன்னேனே… ஆனா நீ எதையும் காதுல வாங்கிக்காம ரூமுக்குள்ள போய்ட்டு இப்ப இங்க வந்து நின்னுட்டு இருக்க…” என்றான் அவனது பால்ய வயது நண்பனும் அவனுக்கு அனைத்துமாகவும் இருப்பவனான மைக்கேல்.

“என்ன அந்த ராயப்பன் பிரச்சனை பண்ணுறானா?”

அவன் பேசியதை கேட்ட மைக்கேலிற்கோ “டேய்! எனக்கே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் சொன்னாங்க… உனக்கு அதுக்குள்ள எப்படி தெரிஞ்சுது?” என்றான்.

“ம்… அவன் எப்பேற்பட்டவன்னு எனக்கு தெரியும் அதான் சொன்னேன்…”

“அது சரி… இன்னொரு முக்கியமான விசயம் இருக்கு அது என்னனு சொல்லு பார்க்கலாம்…”

ஒரு பெருமூச்சுடன் அவனை நோக்கி திரும்பியவன் “அம்மா என்னை பார்க்கனும்னு கூப்பிட்டாங்களா?” என்றான்.

“டேய்…” என்று ஆர்ப்பரித்தவன் அவனை கட்டி கொண்டு “எப்படிடா எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுருக்க? ஆமா ஆமா இதெல்லாம் கூட உனக்கு தெரியலைனா எப்படி இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆள முடியும்… சரி சொல்லு… படகை கரைக்கு செலுத்த சொல்லட்டுமா??” என்றான்.

“அம்மாட்ட இருந்து போன் வந்துச்சுனு சொல்லும் போதே நீ அதை செஞ்சு இருப்பேனு எனக்கு தெரியும்…” என்றான் ஆரோன்.

“பரவாயில்ல டா… என்னையும் பத்தி தெரிஞ்சு வச்சுருக்க… ஆமா படகு இப்ப கரை நோக்கி தான் போய்கிட்டு இருக்கு… நீ படகுல ஏறின உடனேயே கரைக்கு செலுத்த சொல்லிட்டேன். அம்மா கையால மீன் குழம்பு சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சு? எப்படியும் நாளைக்கு தான் நாம வீட்டுக்கு போவோம் இன்னைல இருந்தே நான் சாப்பிடாம இருக்க போறேன்…” என்றவன் பேசி கொண்டே உள்ளே சென்றான்.

அவனின் கூற்றிற்கு எந்த விதமான உணர்ச்சிகளையும் வெளிக்காட்டி கொள்ளாமல் இறுகி போன முகத்துடன் மறுபடியும் அரபிக்கடலில் மறைந்து கொண்டிருந்த அந்த கதிரவனை பார்த்து நின்று கொண்டிருந்தான்.

எப்பொழுது தனது தந்தை உயிரிழந்தாரோ அப்பொழுதே தனக்கென்று ஒரு வட்டத்தை உருவாக்கி கொண்டான் ஆரோன்.

அவனது வாழ்வில் அவனது அன்னை மேரி மற்றும் மைக்கேலை தவிர வேறு யாருமே அவனை நெருங்கியதில்லை. அம்மாவிற்காக மட்டுமே அவர்களின் முன்பு சிறிது புன்னகை சிந்துபவன் மற்றபடி அனைவரிடமும் எந்த உணர்ச்சிகளையும் காட்டாதவன்.

அனைத்து உணர்வுகளையும் மனதிற்குள் ஆழப்புதைத்து கொண்டவன் அவன் ஆரோன்.

அவனை எதிர்த்து நிற்பவர்களுக்கு எப்பொழுதுமே எமன் தான். கஷ்டம் என்று கேட்பவர்களுக்கு உதவி செய்வதில் கர்ணன் அவன். ஆனால் எதையுமே வெளிக்காட்டி கொள்ள மாட்டான்.

ஒரு பெரிய நிழல் உலக சாம்ராஜ்யத்தையே கட்டி ஆளுபவன் அவன். நிழல் உலகில் இருந்து கொண்டே நிஜ உலகத்தை ஆட்டி படைத்து கொண்டு இருந்தான்.

வெளி உலகிற்கு மீன்பதனிடும் தொழிற்சாலை நடத்தி வருபவன். வெளிநாட்டிற்கு மீன்களை ஏற்றுமதி செய்யும் தொழிலை நடத்தி வருகிறான். அவனது தந்தை சகாயம் ஒரு மீனவர். அதனாலயே கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவது அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று. மாதத்தில் பத்து நாட்களுக்கு மேல் ஆழ்கடலுக்கு சென்று வருபவன்.

அவனது தாய்க்கோ அவனுடைய ஒரு பக்கம் மட்டுமே தெரியும். தாய்க்கு சிறந்த தனையன். அவரது ஆசைகள் எதுவாயினும் அதை நிறைவேற்றி வைத்து விடுவான். அவரது சொல்லை மீறி ஏதும் செய்யாதவன். அதனாலயே அவனது கருப்பு பக்கங்களை எந்நாளும் அவர் அறிய விடமாட்டான்.

அவனுடைய தொழில்கள் அனைத்தும் தூத்துக்குடியில் அமைத்திருந்தான். ஆனால் அவனது அன்னை தூத்துக்குடி அருகே இருந்த சிறு கிராமத்தில் வசிப்பவர். அங்கே இருந்தவர்கள் அனைவரும் அண்ணன் தம்பி போல் பழகி விட்டனர். இவனும் முடிந்த வரையில் அங்கே இருப்பவர்களுக்கு உதவி செய்து பொருளாதார வகையில் முன்னேற வழிவகுத்து கொடுத்து விட்டான். சிறு வயதில் அவர்கள் குடும்பமாக வசித்த வீட்டை சற்று பெரிது படுத்தி கட்டியிருந்தான். அதிலே அவனது தாய் மட்டுமே தற்பொழுது வசித்து வந்தார்.

எத்தனையோ முறை தூத்துக்குடிக்கு அழைத்தும் அவரது கணவனின் நினைவாக அந்த ஊரை விட்டு வர மறுத்து விட்டார் அந்த தாய். அதுமட்டுமில்லாமல் அவனை பற்றி முழுதாக அவனது அன்னை அறிந்து கொள்வதை அவன் விரும்பவுமில்லை. அதனால் அவன் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வந்து பார்த்து செல்வான்.

அவனை பற்றி முழுதாக அறிந்தவன் ஒருவன் அவனுடைய நண்பன் மைக்கேல் மட்டுமே.

படகு கரையை நெருங்கி கொண்டிருப்பதை உணர்ந்த ஆரோன் திரும்பி பார்க்க மைக்கேல் தங்களது உடைமைகளை எடுத்து கொண்டு வெளியே வந்தான்.

அவனை ஓர் பார்வை பார்த்து விட்டு உள்ளே சென்றவன் வெளியே வருகையில் எப்பொழுதும் போல் கருப்பு நிற சட்டை அணிந்து வந்து நின்றான்.

அவன் தற்பொழுது இருப்பது கேரளாவில் அரபிக்கடலின் கரையில்.

மனிதர்கள் தான் இடத்திற்கு இடம் தங்களுடைய பாசை, பழக்க வழக்கம் ஏன் சில நேரங்களில் பச்சோந்திகள் போல தங்களையே மாற்றி கொள்வர். ஆனால் பரந்து விரிந்த அந்த கடல், அதனுள் இருக்கும் வளங்கள் எங்கும் மாறாதே. அதனாலயே அவன் தன்னுடைய தொழில்களை இங்கும் விரிவு படுத்தி இருந்தான்.

படகிலிருந்து இறங்கி கரைக்கு வந்தவனை வரவேற்றது அங்கே இருந்த அவனது கருப்பு நிற கார். நிறங்களிலேயே அவனுக்கு மிகவும் பிடித்தது கருப்பு நிறம்.

வாகன ஓட்டுனரை தவிர்த்து தானே ஓட்டுனரின் இருக்கையில் அமர்ந்து கொண்டு அவனது அன்னையை காண கிளம்பினான்.

“டேய்… கொஞ்ச நேரம் நான் வண்டிய ஓட்டுறேன்… நீ கொஞ்ச நேரம் தூங்கு…’’ என்றான் மைக்கேல்.

“இல்ல பரவாயில்ல… எனக்கு தூக்கம் வரல நீ தூங்கு… நானே ஓட்டுறேன். என்றான்.

“டேய்... நைட் ஃபுல்லா நீ தூங்கல… இப்பவும் ரெண்டு மணி நேரத்துக்கு மேல கடல்ல நீந்திட்டு வந்துருக்க…. ரொம்ப டையர்டா இருக்கும். தூங்கி கொஞ்சம் ரெஸ்ட் எடு…”

“அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை… நீ தூங்கறதுனா தூங்கு… சும்மா தொண தொணனு பேசிட்டு வராத…” என்றவன் தனக்கு பிடித்த எஸ்.பி.பாலசுப்பரமணியத்தின் பாடலை காரில் ஒலிக்க விட்டான்.

இதுக்கு மேல அவன் என்ன சொன்னாலும் கேட்க மாட்டான் என்று நினைத்த மைக்கேலோ அதன் பிறகு ஏதும் பேசாமல் அமைதி காத்தான்.

மாலையும் இரவும் சந்திக்கும் வேளையில் கேரளாவில் இருந்து கிளம்பியவன் மறுநாள் விடியற்காலை தான் வீடு வந்து சேர்ந்தான். கிட்டத்தட்ட பணிரெண்டு மணி நேரம் வண்டி ஓட்டி கொண்டு வந்தான்.

அவன் வீடு சேர்ந்ததும் வண்டியை நிறுத்தி விட்டு தூங்கி கொண்டிருந்த மைக்கேலையும் எழுப்பினான்.

அவன் சோம்பல் முறித்து வாண்டியை விட்டு இறங்கி வீட்டிற்குள் நுழையும் போது தனது அன்னையுடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தான் ஆரோன்.

“என்ன ராசா… இப்படி இளச்சு போய் வந்துருக்க… ரொம்ப வேலையாக்கும்… பாரு கண்ணெல்லாம் எப்படி செவந்துருக்கு… ராத்திரி முழுக்க கண்ணு முழிச்சயாக்கும்…” என்று தனது தனையனை தடவி பார்த்து நலம் விசாரித்து கொண்டிருந்தார்.

“ஏலேய்… என் புள்ள ராத்திரி முழுக்க கண்ணு முழிச்சு வண்டிய ஓட்டிட்டு வந்துருக்கு நீ நல்லா தூங்கிட்டு வந்தியாக்கும்…” என்று அப்பொழுது தான் உள்ளே நுழைந்த மைக்கேலை கடிந்து கொண்டார்.

“ம்மா… நான் ஓட்டுறேன் நீ தூங்குனு சொல்லியும் அவன் தான் கேட்கல… நான் ஓட்டினா கட்ட வண்டி ஓட்டின மாதிரி இருக்குமாம். வேகமா போக மாட்டேனாம்… அதான் அவன் என்னை ஓட்ட விடல…”

“அது சரி தான்… என் மகன் ஓட்டினதால தான் இப்ப வீட்டுக்கு வந்தீங்க… நீ ஓட்டியிருந்தா நாளைக்கு தான் வந்துருப்பீங்க…” என்று மைக்கேலிடம் நொடிந்து கொண்டவர் தன் மகன் புறம் திரும்பு “யய்யா… இருந்தாலும் ரொம்ப வேகமா ஓட்டாதீக… ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்காதுயா…” என்று தன் மகனிடம் அக்கறையை காட்டினார்.

“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் மா…”

“சரியா… நீ போய் குளிச்சுட்டு வா… அம்மா உனக்காக இட்லியும், மீன் குழம்பும் வச்சுருக்கேன்…” என்று அவனது தாடையை தடவி கூறினார்.

“சரிமா…” என்று சிரித்து கொண்டே கூறியவன் எழுந்து அவனது அறைக்கு சென்றான்.

மைக்கேலோ எழுந்து செல்லாமல் அங்கேயே அமர்ந்திருக்க “ஏலேய்… உனக்கு வேற தனியா சொல்லனுமா? போய் குளிச்சுட்டு வாடா…” என்றார்.

“அடப்போமா ஆடு மாடெல்லாம் பல்லு விளக்கிட்டா சாப்பிடுது… அவன் வரட்டும் நான் சாப்பிட்டுட்டு அதுக்கப்புறம் எல்லாம் பண்ணிக்கிறேன்…” என்று விளக்கம் கொடுத்தான்.

“அது சரி தான். அப்ப ஆடு மாடெல்லாம் இட்லி மீன் குழம்பு சாப்பிடாது… இலை, தழை தான் சாப்பிடும்… இரு எடுத்துட்டு வர்ரேன்…” என்று வெளியே போக அவரது கைகளை பிடித்து இழுத்தான் மைக்கேல்.

“ஆத்தா… அப்படி ஏதும் பண்ணி புடாத…. உன் கையால மீன் குழம்பு சாப்பிடனும்னு தான் நேத்தைலிருந்தே சாப்பிடாம கிடக்கேன்… என் ஆசையில மண்ணள்ளி போட்டுடாத தாயி… இப்ப என்ன பல்லு விளக்கி குளிக்கணும்... அவ்வளவு தானே… இதோ இப்பவே போறேன்…” என்றவன் எப்பொழுதுமே அந்த வீட்டில் அவனுக்கென்று இருக்கும் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

மைக்கேல் சிறு வயதில் இருக்கும் பொழுதே தாய் தந்தை இறந்து விட ஆரோனின் தந்தை தான் அவனை எடுத்து வந்து வளர்த்தனர். சிறு வயதிலிருந்தே இருவரும் சேர்ந்தே வளர்ந்தனர்.

அதனாலயே ஆரோனிற்கும் மைக்கேலிற்கும் இடையே ஒரு ஆழமான நட்பு உருவாகி இருந்தது.

இருவரும் குளித்து விட்டு வெளியே வர அவனது அன்னை காலை உணவை பறிமாறினார்.

ஆரோன் மைக்கேல் இருவரும் காலை உணவை முடித்து விட்டு படுத்து உறங்கி விட்டனர்.

அன்று முழுவதும் இருவருக்கும் நல்ல ஓய்வு. ஆரோன் அவனுடைய தொழில் விசயங்கள் எதை பற்றியும் யோசிக்கவேயில்லை.

மறுநாள் காலை எழுந்து அவனது அன்னையிடம் சென்றவன் “ம்மா… இன்னைக்கு நான் கிளம்பணும்… நீங்க பத்திரமா இருந்துக்கோங்க…” என்றான்.

“இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போலாமேயா…”

“இல்ல மா… நீங்க கூப்பிட்டதும் அப்படியே வேலை எல்லாம் விட்டுட்டு வந்துட்டேன்… அடுத்த முறை வர்றப்போ ரெண்டு நாள் சேர்த்து தங்கறேன்…” என்று முடித்து கொண்டான்.

“சரியா… இந்த வார கடைசில நம்ம ஆரோக்கியராஜ் பொண்ணுக்கு கல்யாணமாம். பொண்ணு ஏதோ பெரிய படிப்பெல்லாம் படிச்சுருக்காம்… சென்னையில எல்லாம் போய் வேலை பார்த்துச்சாம்… உனக்கு அந்த பொண்ண கேட்கலாம்னு நினைச்சேன்… அதுக்குள்ள வேற இடம் பார்த்துட்டான் அந்த ஆரோக்கியம்… சரி விடு பரவாயில்ல… அவன் பத்திரிக்கை வச்சு அழைக்கும் போது உன்னையும் சேர்த்து தான் கூப்பிட்டான்… வந்துரு ராசா…”

அவரது வார்த்தைகளை பொறுமையாக கேட்ட ஆரோன், “அம்மா… கல்யாணத்துக்கு எதுக்கு நான்… அதான் பெரியவங்க நீங்க போறீங்களே… அப்புறம் என்ன?” என்றான்.

“சரி விடுயா… உன் கல்யாணத்தை பத்தி கேட்டேனேயா…” என்றார் கண்களில் ஏக்கம் மின்ன…

“ம்மா… உங்க சொல்ல நான் என்னைக்காவது தட்டியிருப்பேனா… நீங்க யாரை சொன்னாலும் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்… ஆனா நீங்க அதையே நினைச்சு கவலை பட கூடாது… அது அது எப்ப நடக்குமோ அப்ப நடக்கும்… கவலைய விடுங்க…” என்றவன் அவரை கட்டியணைத்தான்.

“ம்மோவ்…. ஆரோனுக்கு மட்டும் தான் பொண்ணு பார்ப்பீங்களா??? எனக்கும் சேர்த்து பாருங்க… ரெண்டு கல்யாணத்தையும் ஓண்ணா நடத்திரலாம் …” என்று மைக்கேல் கூற அவனது பேச்சை கேட்டு ஆரோன் மெலிதாக புன்னகைத்தான்.

அவனது அன்னையோ மைக்கேலின் காதை திருகி “ஏலேய்… உன்னை விட மூணு வயசு மூத்தவன் அவன்… அவனுக்கு பின்னாடி தான் உனக்கு… புரிஞ்சுக்கோ…” என்றார்.

“ஐயோ… ம்மா… விடு வலிக்குது… முதல்லே அவனுக்கே பண்ணு… இப்ப என் காதை விடு…” என்று கூற அவனை விடுவித்தார்.

அதன் பின்பு இருவரும் கிளம்பி தூத்துக்குடி சென்றனர்.

“எப்படியோ… நம்ம வீடும் சீக்கிரமா கல்யாணக்களை கட்ட போகுது… நீயும் கோட் சூட் எல்லாம் போட்டுட்டு ஒரு பொண்ணு கைல மோதிரத்தை மாத்த போற… சீக்கிரமா இதெல்லாம் நடக்க போகுது… டேய் கண்டிப்பா எனக்கும் கோட் சூட் தான் வேணும் சொல்லிட்டேன்…”

“உனக்கு கோட் சூட் தான் வேணும்னா இப்பவே போய் வாங்கிக்கோ… என் கல்யாணத்துல தான் போடனும்னா அதெல்லாம் இந்த ஜென்மத்துல நடக்காது…” என்றான் வண்டியை ஓட்டி கொண்டே.

“டேய்… அம்மாவ பொண்ணு பார்க்க சொல்லிட்டு என்ன இப்படி பேசற…”

“அது… அவங்க ஆசை… சொன்னாங்க… அவங்க திருப்திக்காக சரினு சொன்னேன்… நாம செய்யற வேலைக்கு இந்த கல்யாணம் எல்லாம் செட் ஆகாது தம்பி…”

“அப்ப அம்மா மனசுல ஆசைய வளர்த்து விட்டுட்டு வந்திருக்கயே … இது தப்பில்லையா டா…”

“அம்மாகிட்ட வேணாம்னு சொல்லி அவங்களோட வருத்தப்பட்ட முகத்தை நான் எப்படி பார்ப்பேன் சொல்லு…”

“போடா… இப்ப அவங்க பொண்ணு பார்த்து வேண்டாம்னு நீ சொன்னா மட்டும் அவங்க வருத்தப்பட மாட்டாங்களா?”

“டேய்… அம்மா இந்த ஊர விட்டு வெளியே போக மாட்டாங்க… அதோட எனக்கு பொண்ணு பார்த்தா நல்ல படிச்ச பொண்ணு அதோட அழகா இருக்கனும்னு நினைப்பாங்க… சோ அதுக்கெல்லாம் ரொம்ப நாளாகும் விடு பார்த்துக்கலாம்…” என்று அவனுக்கு சமாதானம் கூறினான்.

ஆனால் ஆரோன் அடுத்த முறை அவனது அன்னையை பார்த்த பின்பு தனது கல்யாண வேலைகளை தானே முன்னின்று செயல்படுத்த போகிறோம் என்பதை அறியவில்லை.
 
Status
Not open for further replies.
Top