GG writers
Moderator
உயிராடும் உணர்வே!
“ அம்மு , உன்னோட நகை, திங்க்ஸ் எல்லாமே அந்த பச்சைப் பைக்குள்ள போட்டு இருக்கேன்.”கழுத்தில் மஞ்சள் தாலி அழகாய் தொங்க புதுப் பெண்ணின் அத்தனை பொழிவுடனும் , தன் கணவனுடன் புகைப்படம் எடுக்க தயாராகிக்கொண்டு இருந்தவளிடம் , காதுக்குள் அவசரமாக ரகசியம் பேசிவிட்டு வேக நடையுடன் மேடையை விட்டு இறங்கச் சென்றாள் கயல்விழி.
அந்த அவசர வேகத்தில் யாரோ ஒரு வளர்ந்தவன் மேலே மோதுண்டு , தோள்ப்பட்டை வலிக்க நின்றுவிட்டாள் அவள்.
மோதிய அந்த வளர்ந்தவனோ, இவளை திரும்பிக் கூட பார்க்க இல்லை. மோதிய வேகத்திலேயே அமுதாவிடம் விரைந்த அவனை “கார்த்திக் அண்ணா!” என்று அச்சிரியமும் பரவசமுமாக கைக்குலுக்கிக் கொண்டாள் அமுதா.
இதை பார்த்திருந்த கயலுக்கு , சுறுசுறுவென்று மண்டைக்குள் கோபம் ஏறியது. மோதியவன் ஒரு மன்னிப்பு கேட்டானா, திரும்பி என்ன ஆனது என்று ஒரு பார்வை ?, அது கூட இல்லை. ஏதோ கல்லிலோ மரத்திலோ இடித்தவன் போல போகிறான், வளர்ந்து கெட்ட திமிர் பிடித்தவன் என்று முகம் கோபத்தில் சிவக்க மனதுக்குள் அர்ச்சித்துக் கொண்டு அவனை வெறித்தப்படி நின்றாள்.
அப்போது தான் அமுதாவின் ‘கார்த்திக் அண்ணா’ என்ற அழைப்பு அவளை தீண்டியது. ஓ... அமுதா அடிக்கடி சொல்லும் நல்லவன் வல்லவன் இவன் தானா. ரொம்பத் தான் நல்லவன். இடித்து விட்டு ஒரு மன்னிப்புக் கூட கேட்காதவன் என்று எரிச்சலலுடன் நினைத்துக் கொண்டு , அந்த மேடையில் இருந்து விறுவிறு என்று சென்றவள் தானும் வேகமாக வந்து அவன் மீது மோதியதை மறந்து போனாளோ என்னவோ.