வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தீத்திரள் அசுரனே! - கதை திரி

Status
Not open for further replies.
தீத்திரள் அசுரனே!

அத்தியாயம் – 1

"தக தக தக தின தின தின நக நக நக

திக்கிட தான தான தான திக்கிட திக்கிட

தாகின தான் தாக்குடு தான திக்கிட்டு தக்கட்ட தி தி தி

தாணு தாணு கென் தனான......"

என்ற ஆலாபனை தொடங்க, அந்த ஸ்வரங்களுக்கு ஏற்ப, காலில் சலங்கையைக் கட்டிக்கொண்டு, அபிநயம் பிடித்து ஆட ஆரம்பித்தாள், நம் கதையின் நாயகி கார்முகில்.

அலாரிப்பு, ஜதிஸ்வரத்தில் கண், முகபாவம், அங்க அசைவுகள், கால்களில் தீர்மானம் யாவும் கச்சிதம்.

“அதிநவநீதா அபிநயராஜா கோகுலபால கோடிபிரகாஷா விரக நரக ஸ்ரீ ரக்

ஷக மாலா எத்தனை முறை நான் ஏங்கி சாவேன். இத்தவனை எனை ஆட்கொள்வாயா.......”

என்ற வரிகள் பின்னிசையுடன் ஒலிக்க, நவரசத்தில் ஒன்பது வித உணர்வுகளை, அந்தந்த உணர்வுகளுக்குக்கேற்ற முகபாவங்களைப் பிரதிபலிக்க, அவளது நவரசம் பார்க்க மிகவும் அருமையாக இருந்தது. அதிலும் ரௌத்ரம், பயம், வீரம் மூன்றும் மிக இயல்பாய் இருந்தன.

பாடல் முடிய, அங்கிருந்த நடராஜர் சிலையை தொட்டு வணங்கிவிட்டு, தன் சலங்கையைக் கழட்டினாள்.

அடுத்த மாதம் நடக்கப்போகும் பிரம்மாண்ட அரங்கேற்றத்திற்கான ஒத்திகை தான் இப்போது நடந்து கொண்டிருந்தது.

அவள் அருகே வந்த அவளின் குரு, “மிகவும் அருமை கார்முகில். அடுத்த மாதம் நடக்கும் அரங்கேற்றத்திற்கு இப்போதே நன்றாக தயாராகிவிட்டாய்!.” என்று பாராட்டிவிட்டு சென்றார்.

அவர் சென்றதும், அவள் அருகே வந்த கார்முகிலின் தோழி ஒருத்தி, “மிகவும் மனம் உருகி ஆடிக்கொண்டிருந்தாய் முகில்!. என்னிடம் சொல் யாரை நினைத்து ஆடினாய்?.” என்று அவள் கேட்கும் போதே, தன் மனக்கண் முன் வந்தவனை நினைத்து நாணத்தால் வெட்கி நின்றாள்.

அவள் வெட்கத்தைக் கண்டவள், “அவர் உன் அத்தான் வசிகரன் தானே!.” என்று சொன்னதும், அதுவரை ஆயிரம் தாமரை மலர்ந்த முகப்பொலிவுடன் இருந்தவள், அவன் பெயரைக் கேட்டதும், தீயில் கால் வைத்தது போல், தன் மயக்கத்தில் இருந்து வெளியே வந்தாள்.

“எனக்கு நேரமாகிவிட்டது, அப்பா தேடுவார்.” என்று கூறி, தன் தோழியிடம் இருந்து விடைபெற்றவள், தன் மகிழுந்து நிற்கும் இடத்தை நோக்கி சென்றாள்.

மகிழுந்தில், அவள் ஏறியதும் அது புறப்பட ஆரம்பித்தது, மங்கையின் மனமோ, வேறு ஒரு யோசனையில் உழன்று கொண்டிருந்தது.

கார்முகில், நிலா வடிவம் கொண்ட பேரழகின் பிறப்பிடமாய் காட்சியளித்தாள். வனப்புடன் கூடிய தேக சௌந்தரியத்தையும் கொண்டவள்.

அகன்ற நெற்றி, தாமரைக் கண்கள், கொவ்வைச் செவ்வாய், மாம்பழக் கன்னம், சிவந்த ஆதாரங்கள், செண்பகப்பூவை ஒட்ட வைத்தது போன்ற காதுகள், என ஈடு இணையில்லாத அழகிய முகலாவண்யத்தையும் கொண்டவளாக விளங்கினாள் கார்முகில்.

கல்லூரியில் இறுதி வருடத்தில் இருப்பவள். அவள் உலகமே அவள் தாய் தந்தை மட்டும் தான்.

அவளின் தந்தை ராம். மிகப்பெரிய வைர வியாபாரி. தாய் பிரியா, தொழிலில் தன் கணவனுக்கு துணையாக இருப்பவர். இவர்களின் ஒரே மகள் தான் கார்முகில்.

ஏதேதோ யோசனையில் அப்படியே தன் கண்களை மூடி, மகிழுந்தின் இருக்கையில் சாய்ந்தவளின் காதுகளில் அருவமாய், சலங்கையின் சப்தம் கேட்டுக் கொண்டு இருந்தது.

நாட்டியம் ஆடி முடித்தாலும், அவள் அதிக யோசனையிலோ, அல்லது அதிக வருத்தத்திலோ இருக்கும் போது, தன்னைப் போல அந்த சத்தம் அவள் காதுகளில் கேட்க ஆரம்பிக்கும்.

அதுவே அவள் வருத்தத்திற்கும் குழப்பத்திற்கும் வடிகாலாக அமைந்தது. அந்த சத்தம் கேட்டவுடனே, தன்னைப் போல ஒரு புன்னகை அவள் இதழில் வந்து ஒட்டிக்கொண்டது.

அவள் வீடு வந்ததும், மெதுவாக மகிழுந்தில் இருந்து கீழே இறங்கினாள். நலினத்தை நடைகொண்ட நளிணையாய், அவள் நடந்து, மாளிகை போன்ற அந்த வீட்டிற்குள் நுழைய, அங்கு நடுக்கூடத்தில் அமர்ந்து, தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த, அவளின் தந்தை ராம், முகத்தில் தோன்றிய புன்னகையுடன், “வந்துவிட்டாயா முகில். உனக்காக தான் நான் இவ்வளவு நேரமும் காத்துக்கொண்டிருந்தேன்.” என்றார் குதுகலமாக.

தன் தந்தையின் மகிழ்ச்சி, கார்முகிலின் முகத்திலும் ஒட்டிக்கொண்டது, நடையில் ஒரு வித துள்ளலுடன், அவர் அருகே சென்று அமர்ந்தவள், “சொல்லுங்கள் அப்பா. என்னிடம் பேசுவதற்காகவா காத்துக்கொண்டு இருந்தீர்கள்?.” என்றாள் கேள்வியாக.

“ஆம் முகில். உன்னிடம் ஒரு முக்கியமான விஷயத்தைக் கூற வேண்டும்.” என்றார் பீடிகையுடன்.

“நீங்கள் என்னிடம் என்ன கேட்கப்போகின்றீர்கள் என்பதனை நான் அறிவேன் அப்பா. உங்கள் இஷ்டம் தான் என் இஷ்டமும்.” என்றவளுக்கு நன்றாக தெரியும், அவரிடம் இருந்து வரும் வார்த்தைகள் கண்டிப்பாக தன் இதயத்தை வருத்தப்போகின்றது என்று.

கார்முகிலின் மென்மையான மொழிகளின் தன்மையால், ராம் பேரானந்தம் கொண்டு, “இதுபோதும் முகில். உன் அன்னையும் இதைக் கேட்டால் மிகவும் மகிழ்ந்து போவாள்.” என்று அவர் முகம் பொங்கி பூரிக்க, இந்த மகிழ்ச்சியான செய்தியை உடனே தன் மனைவியிடம் தெரிவிக்க, அலைபேசி மூலம் ப்ரியாவை தொடர்பு கொண்டார். அவரோ வெளியில் சென்றிருந்தார்.

அவர் ப்ரியாவிடம், அலைபேசி மூலமாக பேச ஆரம்பித்ததுமே, அங்கு நிற்கப் பிடிக்காமல் வேகமாக தன் அறை நோக்கி மாடி ஏறினாள்.

இறைவனிடம் சாபம் வாங்கியது போல, மிகவும் வேதனையாக உணர்ந்தாள். அவள் கண்முன்னே அருவமாய் வந்த உருவம் ஒன்று, அல்லும் பகலும், அவள் சிந்தையில் இருத்தி, அவள் மனதை படாத பாடு படுத்திக்கொண்டு இருந்தது.

தன் கட்டிலில் சென்று பஞ்சுமெத்தையில் விழுந்ததும், திரும்பவும் அவள் சலங்கையின் ஒலி அவள் காதுகளில் ஒலிக்க ஆரம்பித்தது. பின் எப்போது அவள் கண்ணயர்ந்தாள் என்பதே அவளுக்குத் தெரியவில்லை.

அவள் நேரம் கழித்து கண்விழிக்கும் போது, ஆயிரம் கோடி சூரியன் உதித்தார் போன்ற பேரொளியுடன், வருத்தங்கள் எல்லாம் மறைந்து ஆசுவாசமாக எழுந்தாள்.

அப்போது அவள் அறைக்குள் நுழைந்த ப்ரியா, “மாலை நேரத்தில் உனக்கு என்ன உறக்கம்?.” என்று கேட்டுக்கொண்டே, அவள் அலைமாரியைத் திறந்து, அதில் எதையோ தேட ஆரம்பித்தார்.

அவரின் செயலை புரியாமல் நோக்கியவள், “என்ன அம்மா தேடுகின்றீர்கள்?.” என்று கேட்டாள்.

அவளின் நளினமான மொழிகேட்டு ப்ரியா, “இன்று என்ன, உன் முகம் பேரொளி பொங்க காட்சி தருகின்றது?. எல்லாம் உன் தந்தை சொன்ன விஷயத்தினால் தானே!” என்று ஆசையாக வினாவினார்.

அதற்கு மெல்லியதாக சிரித்துக் கொண்டவள், “இல்லை அம்மா. சில விஷயங்கள் இனி என் சிந்தனையில் உதிக்கக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தேன். அதில் வந்த தேஜஸாக இருக்கலாம்.” என்று வேதனையோடு விளம்பினாள்.

“ஏதோ ஒன்று நீ சந்தோஷமாக இருந்தால், அதுவே எங்களுக்குப் பரம திருப்தி.” என்றவர், ஏதோ நியாபகம் வந்தவராக, “ஆம் சொல்ல மறந்துவிட்டேன், அடுத்த வாரமே உங்கள் நிச்சயதார்த்ததிற்கு, உன் தந்தை நாள் குறித்துவிட்டார்.” என்றார் செய்தியாக.

அதில் அதிர்ந்தவள், அடித்து பிடித்து, தன் கட்டிலில் இருந்து எழுந்தாள், “என்ன சொல்கின்றீர்கள் அம்மா?. நான் இன்னும் படிப்பையே முடிக்கவில்லை.” என்றாள் முகத்தை சிறியதாக வைத்துக் கொண்டு.

“அதனால் என்ன?. உனக்கு இப்போதே திருமணம் முடிக்கவில்லையே!. அதெல்லாம் உன் படிப்பு முடிந்ததும் தான்.” என்று சொல்லிக் கொண்டே சில புடவைகளை அலைமாரியில் இருந்து எடுத்து கட்டிலில் வைத்தார்.

“அம்மா, அனைத்தும் இவ்வளவு வேகமாக நடப்பது, ஏனோ எனக்கு பயத்தைத் தருகின்றது.” என்றாள் தன் மனதில் உள்ளதை மறைக்காமல்.

கார்முகிலின் எதிர்வாதம் ப்ரியாவிற்கு சினத்தைக் கொடுத்தது.

“முகில்! குதர்க்கம் பேச இதுவா நேரம்! நாங்கள் எது செய்தாலும் உன் நன்மைக்குத் தான் என்பதை முதலில் நீ புரிந்து கொள்ள வேண்டும். அதுவும் இல்லாமல் திருமணமாகி நீ ஒன்றும் வேறு வீட்டிற்கு போகப்போவது இல்லை. இதே வீட்டில் தான் இருக்கப் போகின்றாய்.” என்று சொல்லிக் கொண்டே, ஒவ்வொரு புடவையாக அவள் தோளில் வைத்துப் பார்க்க ஆரம்பித்தார்.

அவளோ, உணர்வே இல்லாமல் பதுமை போல் நின்றாள். அதற்கும் ப்ரியாவின் கோபத்தை சம்பாதித்தாள்.

“உன் கவனம் இங்கே இருக்கட்டும் முகில்.” என்றார் அவளை அழுத்தமாக முறைத்துப் பார்த்தபடி.

உடனே கட்டிலில் இருந்த பச்சை நிற புடவையை எடுத்துப் பார்த்தாள் முகில். உடனே, “இந்த நிறம் வசிக்குப் பிடிக்காது என்று தெரியும் தானே!. அப்படி இருக்க இதை ஏன் உன் கையில் எடுக்கின்றாய்?.” என்று தன் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு, தன் கோபத்தை இழுத்துப் பிடித்து வைத்தபடி வினாவினார்.

உடனே அவள் முகம் சோகத்தை தத்தேடுத்தது, “ஆனால், இது எனக்கு மிகவும் பிடித்த நிறம் அம்மா.” என்றதும் அவர் பார்த்த பார்வையில், அதை அப்படியே கீழே வைத்துவிட்டாள்.

“வசியை திருமணம் செய்ய நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த வருஷத்தின் சிறந்த இளம் தொழில் அதிபர் விருதிற்கு தேர்வாகி இருக்கின்றான். அவன் விருது வாங்க செல்லும் போது, நீயும் அவனுக்கு உடைமைப்பட்டவளாக அவனுடன் செல்ல வேண்டும் என்று ஆசையாக கூறினான். அதனால் தான் உன் தந்தை இந்த நிச்சயதார்த்தத்தை வேகமாக நடத்த எண்ணினார்.” என்று நீண்ட விளக்கத்தைத் தந்தார் ப்ரியா.

அவரின் இறுதி வார்த்தையைக் கேட்டவள், “அம்மா, அப்படி என்றால், வசி இதற்கு சம்மதித்து விட்டானா?.” என்று கேட்டாள்.

“ஆம். அவன் சொல்லி தான் அனைத்தையும் ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றார் உன் தந்தை. வசிக்கு இப்போதெல்லாம் அமரக்கூட நேரம் இல்லை. இப்போது கூட, வெளிநாட்டு முதலீட்டாளரை சந்திக்க சென்றிருக்கின்றான்.” என்று பெருமையாக பேசினார்.

அதை எல்லாம் கார்முகில் தன் காதில் வாங்கினாளா என்பது கூட அவருக்குத் தெரியவில்லை. அவள் எண்ணம் முழுவதும் வேறு ஒரு கனவுலகில் இருக்க, ப்ரியாவோ அவர் பாட்டிற்கு பேசிக்கொண்டிருந்தார்.

ப்ரியாவால் இங்கு பெருமையாக பேசப்பட்டவனோ, அங்கே ஏழு நட்சத்திர விடுதியில், குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறையில், போர்வையின் உள்ளே வேறு ஒரு பெண்ணுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தான்.

அவள் முதுகில் கோலம் வரைந்து கொண்டிருந்தவன், “உன் அழகிற்கு ஈடு இணையே இல்லையடி பெண்ணே.” என்று மாது மற்றும் மது போதையில் பிதற்றிக்கொண்டு இருந்தான்.

அவன் தான் வசி. இவ்வளவு நேரம் ப்ரியாவால் புகழப்பட்டுக் கொண்டிருந்தவன். ராமின் ஒரே தங்கையின் மகன். அவர் இப்போது உயிரோடு இல்லை. ராம் மற்றும் ப்ரியா தம்பதியினர் பலமுறை வசியை தங்களது வீட்டிலையே இருந்து கொள்ள கேட்டதற்கு அவன் மறுத்துவிட்டான்.

பின்னே, இவர்களுடன் தங்கினால், எவ்வாறு தன் லீலைகளை செய்வது?. ஆனால் அவனோ, “வயது பெண் இருக்கும் வீட்டில் என்னால் இருக்க முடியாது மாமா.” என்று கூறி, மிகவும் நல்லவன் போல், அவர்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்து கொண்டான்.

“ஆனால் முகிலுடன் உன் திருமணம் முடிந்ததும், நீ எங்களுடன் தான் இருக்க வேண்டும்.” என்று அவனிடம் உறுதியாக கூறிவிட்டார் ராம்.

அதற்கும் நல்லவன் போல், “உங்கள் சொல்படியே மாமா.” என்று தலையை ஆட்டிக் கொண்டான்.

அவன் மலர் விட்டு மலர் தாவும் வண்டு. அவனுக்குப் பிடித்த பெண்களை அடையாமல் விடமாட்டான். இதில் கார்முகில் மட்டும் விதிவிலக்கு. அதற்கு, “அவள் எங்கே சென்று விடப்போகின்றாள்!.” என்ற எண்ணமாகக் கூட இருக்கலாம்.

*****************************************

அறைமுழுவதும் அந்தகாரமாய் காட்சியளிக்க, நானிலம் போற்றும் நான்மறை நாயகனின் பெயரை தன் பெயராக கொண்டவன், மன்மதனுக்கு நிகரான அழகுடன் காட்சியளித்தான்.

ஸ்படிகத்திற்கு ஒப்பான, அவன் திருமேனி, தீராத உடற்பயிற்சியினால், படிக்கட்டு தேகமாக இருந்தது. அனற்பிழம்பாகிய மேனியும், பாறை போல இறுகிப்போய் இருந்த அவன் முகமும், வஜுராயுதத்தை ஒத்த அவன் கைகளில் பன்னிரு விரல்களும் , அவனுக்கு அழகையும், கம்பிரத்தையும் தந்தது.

ஆம், ஒவ்வொரு கைக்கும் ஆறு விரல்கள் விகிதம், அவன் கைகளில் மொத்தம் பன்னிரண்டு விரல்கள் இருந்தன. தன் ஆள்காட்டி விரலால், விளக்கை எரியவிட்டவன், தன் முன்னே செய்திதாளில் இருந்த செய்தியை, உக்ரமான பார்வையுடன் பார்த்தான்.

அவன் அனல்விழியில் தீப்பொறி பறந்து, செய்தித்தாளில் இருந்தவனை பஸ்பமாக்கிக் கொண்டிருந்தது.

கோபத்தைக் கட்டுபடுத்த முடியாமல், தீப்பட்டியை எடுத்தவன், குச்சை உரசி, அந்த செய்திதாளின் மீது வைத்தான்.

“இந்த வருடம் சிறந்த இளம் தொழில் அதிபர் விருதினை வாங்குபவர் வசிகரன்.” என்ற செய்தியுடன், அதில் இருந்த வசியின் புகைப்படமும் சேர்ந்து எரிந்து கொண்டிருந்தது.

அது முழுவதுமாய் எரிந்ததைப் பார்த்ததும் தான், ருத்ர மூர்த்தியின் மனது குளிர ஆரம்பித்தது. ஆம் அவன் பெயர் ருத்ர மூர்த்தி.




 
(சென்ற யூடிக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் செய்த அனைத்து வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இனி தினமும் யூடி தவறாமல் பதிவிட முயற்சி செய்கின்றேன் நண்பர்களே!)

அத்தியாயம் – 2

நிலா மகள் உலா வரும், அந்த ஏகாந்த பொழுதில், மாளிகை போன்ற தன் வீட்டில், ஒளி ஊடுருவாத அறைக்குள் நுழைந்தான் ருத்ர மூர்த்தி. இனி சுருக்கமாக ருத்ரா என்றே அழைக்கலாம்.

உள்ளே நுழைந்தவனைப் பார்த்து பதறிப் போய் எழுந்தாள் பெண் ஒருத்தி. மிரட்சியுடன் தன் அருகில் வந்தவனைப் பார்த்து பயந்தவள், அவனிடம் உண்மையைக் கூறவும் தயங்கினாள்.

அவ்வளவு உயிர் பயத்திலும், தன் உதடு தந்தியடிக்க, “நான்... நான் இல்லை சார்...” என்று தன் மீது தவறு இல்லை, என்பதுபோல் பொய் உரைக்க ஆரம்பித்தாள்.

ருத்ரா தன் காற்சட்டையின் பின்புறத்தில் இருந்த துப்பாக்கியை உருவி தன் கையில் வைத்துக் கொண்டான்.

“நீ உண்மையைச் சொன்னால் ஒரு வேளை உயிர் தப்பலாம். நீ பொய் சொல்லி உண்மையை நான் விளங்கிக் கொண்டால், இந்த கணமே உன்னுடைய குருதி இந்த இடத்தில் ஆறாக ஓடும்.” என சீரும் சிங்கம் போல கர்ஜித்தான்.

நிலைகுலைந்து நடு நடுங்கிய அந்தப்பெண், தரையில் விழுந்து ருத்ராவின் கால்களைப் பற்றிக்கொண்டாள்.

“என்னை மன்னித்துவிடுங்கள் சார்... சிந்தையிலும் நினைக்கக் கூடாத, ஒரு பெரிய தவறை நான் செய்துவிட்டேன். எனக்கு புரிகின்றது... அவ்வளவு எளிதாக மன்னிக்கக் கூடிய தவறல்ல இது. நான் உண்மையைக் கூறிவிடுகின்றேன்.” என்று அவள் சொல்லும் போதே அவள் நெற்றியில் துப்பாக்கியை வைத்து, தன் காலைப் பற்றி இருந்தவளை பின் தள்ளினான் ருத்ரா.

“உண்மை மட்டும் தான் உன் நாவில் இருந்து வரவேண்டும்.” என்று கோபத்தில் வார்த்தைகளை தன் பற்களுக்குள் கடித்துத் துப்பினான்.

“வசி... வசி... சொல்லி தான், நான் அவ்வாறு செய்தேன் சார். உங்கள்.... உங்கள்.... நிறுவனத்தின் கோப்புகளை வசிக்குக் கொடுத்தது நான் தான்.” என்று திக்கித்திணறி, அவனிடம் அனைத்தையும் ஒப்பித்தாள், வசியின் ஆசை நாயகிகளில் ஒருவள்.

ருத்ராவின் நிறுவனத்திற்கு வேலைக்கு வருபவள் போல் வந்து, லாவகமாக கோப்புக்களை திருடி இருந்தாள் அந்த பெண். ஆனால் ருத்ராவின் ஊடுகதிர் பார்வையில் அது விழுந்துவிட்டது.

அவள் மொழி கேட்டு, அவன் ஒன்றும் பெரியதாக அதிர்ந்துவிடவில்லை. அவன் முகத்தில் இருந்த உணர்வே, இந்த செய்தி அவனுக்கு ஏற்கனவே தெரியும் என்பதனைப் போல இருந்தது.

அவள் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியின் முனையை வைத்து தட்டியவன், “இன்னும் சில விஷயங்கள் உன் மூளையில் இருக்கின்றது என்று தெரியும். அதையும் என்னிடம் சொல்.” என்றான் கண்களில் தீப்பொறி பறக்க.

‘சொல்வதா இல்லை வேண்டாமா.’ என்று தன் மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்த பெண், தன் முன்னே நிற்கும் ஆடவனின் புலி போன்ற பார்வையில் பயந்து, “உங்களுடன்... நெருக்கமாக இருப்பது போல்... புகைப்படம் எடுக்க வேண்டும் என்று வசி என்னிடம் கூறினான்.” என்று சொல்லிவிட்டு, பயத்தில் தன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.

அதற்கு வெற்று சிரிப்பை சிந்தியவன், “கையாலாகாத கயவன்! சிறுவயதில் இருந்தே அவனுக்குத் தெரிந்தது இது தானே!.” என்று கேட்பவள் நடுங்க கர்ஜித்தவன், அந்த பெண்ணை ஏறிட்டு, “உன்னை உயிருடன் அனுப்பும் நோக்கம் எனக்கில்லை.” என்றான் தன் உதட்டை கடித்தபடி.

பதறிப்போன பெண், நிலைகுலைந்தவளாக அவன் முகத்தை ஏறெடுத்துப் பார்க்கவும் துணிச்சல் இல்லாதவளாக தரையைப் பார்த்த வண்ணம், “என்னை எதுவேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால் என்னை உயிருடன் விட்டுவிடுங்கள்.” என்றாள்.

“சீ... மாதுவைப் பார்த்ததும் பல்லைக்காட்டுவேன் என்று, அந்த வசி போல் என்னையும் நினைத்துக்கொண்டாயா?.” என்றவன் குரலின் ஒலி, அவள் தலையில் விழுந்த பேரிடி போன்ற உணர்வை உண்டாக்கியது.

அவள் கண் இமைக்கும் நேரத்தில், அவன் நெற்றிப் பொட்டில், தன் துப்பாக்கியை வைத்து அழுத்தி, “மன்னித்து விட நான் ஒன்றும் நல்லவன் இல்லை.” என்று அவளை சுட்டு வீழ்த்தினான்.

மன்னிப்பு என்ற வார்த்தை ருத்ராவின் அகராதியிலையே கிடையாது. அவனுக்கு துரோகம் செய்யும் ஒருவரையும், அவன் துப்பாக்கி குருதி பார்க்காமல் விடுவது இல்லை.

பின் மிகவும் அமைதியான குரலில், “நகுல்...” என்று அழைத்தான்.

அவன் அழைப்பதற்காகவே காத்திருந்தவன் போல அறையின் வெளியே நின்று கொண்டிருந்த நகுல் உள்ளே வந்தான், அங்கே இருக்கும் உடலையும், ருத்ராவையும் பார்த்தவன், “நான் பார்த்துக்கொள்கின்றேன் ருத்ரா.” என்றதும், தன் தலையை ஆட்டிவிட்டு வெளியே சென்றான் ருத்ரா.

இப்போது ருத்ராவிற்கு இருக்கும் ஒரே சொந்தம் என்றால் அது நகுல் மட்டும் தான். பள்ளிக்காலத்தில் இருந்தே அவனின் ஆருயிர் நண்பன். அவனுக்கும் பெற்றோர்கள் இல்லை. ஆனால் அவர்கள் அவனுக்காக விட்டு சென்ற சொத்துக்கள் ஏராளம்.

ஆனால் அதை எல்லாம் விடுத்து, தன் நண்பனே தனக்கு உலகம் என்ற உணர்வில், அவனுக்கு நிழலாக இருக்கின்றான்.

ருத்ராவும் செல்வத்தில் குறைந்தவன் இல்லை. அவனும் செல்வந்தன் தான். அவன் நிறுவனம் தவறான வழியில் உருவானது கிடையாது.

***************************************

வசியின் இதழ்களில், தன் இதழ்களைப் பொருத்தி எடுத்த பெண் ஒருத்தி, “என் அழகும் இளமையும் உங்களுக்கே சொந்தம் வசி...” என்று காம மயக்கத்தில் பிதற்றிக்கொண்டிருந்தாள்.

அவள் சிகையின் உள்ளே கைவிட்டு அவள் தலை கோதியவன், “ஆயிரம் பேர் உன்னை அடையத் துடிக்க, ஆனால் அவர்களிடம் சிக்காமல், என்னிடம் வந்தாயே!. உனக்கு என்ன வேண்டும் கேள் பேபி...” என்று அவனும் மயக்க குரலில் வினாவ.

“உங்கள் கையால் தாலி வேண்டும்.” என அந்த மோகினி கூற.

அவள் மொழி கேட்டு மயக்கத்தில் இருந்து விடுபட்டவன், அவள் முடியைப் பற்றி இழுத்து, “உன் தந்தை என்ன கோடீஸ்வரனா?.” என்று கேட்க.

அதற்கு, “இல்லை.” என்று அவள் தலையை மறுப்பாக ஆட்டியதும், “பின் எந்த தகுதியின் அடிப்படையில் என்னை திருமணம் செய்ய நினைக்கின்றாய்!. வெள்ளித்திரையில் பெரிய நடிகையாகிவிட்ட மெத்தனாமா.” என்று கேட்டுக் கொண்டே அவள் இதழ்களை வன்மையாக சுவைக்க ஆரம்பித்தான்.

அப்போது ராமிடம் இருந்து, அவனுக்கு அலைபேசி அழைப்பு வரவே, அந்த பெண்ணை தன் கைவளைவுகளில் வைத்துக் கொண்டே, “சொல்லுங்கள் மாமா..” என்றான் பவ்யமாக.

இப்போது அவனது தோற்றத்திற்கும், அவன் பேச்சுக்கும் சிறிதும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது.

“வசி, அடுத்த வாரம் நடக்கப்போகும் நிச்சயதார்த்தத்தைப் பற்றி கலந்து ஆலோசிக்கத் தான் உன்னை அழைத்தேன்.” என்று அந்தப்பக்கம் பேசிய ராம் கூறினார்.

அதைக் கேட்டு முகமலர்ச்சியுடன், “மாமா! உங்கள் விருப்பம் எதுவோ அதையே செய்யுங்கள். உங்கள் விருப்பம் தான் என் விருப்பம்.” என குலைந்து பேசினான்.

“என்ன வசி இப்படி சொல்லிவிட்டாய்!. நடக்கப்போகின்றது உன் நிச்சயதார்த்தம் தானே!. அதில் நீ தானே முடிவு எடுக்க வேண்டும்.” என்று சொன்ன ராமிற்கு, தன் சொந்த மகளின் விருப்பத்தைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லை.

அவர் விடாமல் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டு முகத்தை சுழித்த வசி, அதை அவரிடம் காட்டாமல், “நான் கிளையண்ட்டுடன் இருக்கின்றேன் மாமா...” என்றான் இழுவையாக.

“சரி சரி வசி... வியாபாரம் தான் முக்கியம். நீ அதைப் பார். நாம் பிறகு பேசிக்கொள்ளலாம்.” என்று கூறிவைத்தார்.

அவர் இணைப்பை அணைத்ததும் நிம்மதி அடைந்த வசி, தான் விட்ட வேலையை திரும்பவும் தொடங்கினான்.

இங்கு ராம் தன் மனைவியிடம், “ப்ரியா, வசி ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருக்கின்றான். அவன் வந்ததும், மண்டபத்தை எவ்வாறு அலங்காரம் செய்யலாம் என்பதைப் பார்த்துக் கொள்ளலாம்.” என்றார்.

காகிதத்தையும், எழுதுகோலையும் எடுத்துக் கொண்டு, ராமின் அருகே அமர்ந்த ப்ரியா, “சரி. அப்படி என்றால், நாம் யாரை எல்லாம் அழைப்பது என்பதை முதலில் பட்டியலிடலாம்.” என்றார்.

ப்ரியாவை ஏறிட்ட ராம், “நாம் ருத்ராவை அழைப்போமா...” என்று ஒரு வித தயக்கத்துடன் கேட்டார்.

அவர் மொழி கேட்டு, மிகவும் ஆத்திரத்துடன் எழுந்து, ராமைப் பார்த்து, “என் வீட்டில் நல்லது நடக்கின்ற நேரத்தில், கெட்ட சகுனம் போல், அவன் எதுக்கு?.” என மொழிந்தார்.

“என்ன இருந்தாலும், அவன் வசியின் தம்பி தானே!. அவன் அண்ணன் நிச்சயதார்த்தத்திற்கு அவனையும் அழைக்க வேண்டும் என்பது தானே முறை.” என மிகவும் பொறுமையாக, தன் மனைவிக்கு எடுத்துரைத்தார்.

ஆம் வசியும், ருத்ராவும் உடன் பிறந்த சகோதரர்கள். ருத்ரா வளர்ந்தது எல்லாம் அவன் தாத்தாவிடம் தான். அவர்கள் தந்தையின் இறப்பிற்குப் பிறகு அவரது நிறுவனம் முறையாக பிரிக்கப்பட்டு, தனியே வசி மற்றும் ருத்ராவின் பெயரில் இயங்குகின்றது.

ஆனால் அதை சிறிதும் தன் காதில் வாங்கிக்கொள்ளாத ப்ரியாவோ, கத்த ஆரம்பித்தார். “இத்தனை வருடம் இல்லாத பாசம் இப்போது புதியதாக முளைத்து விட்டதா?. அவன் பெயரை இந்த வீட்டில் யாரும் எடுக்கக்கூடாது என்று முதலில் மொழிந்தது நீங்கள் தானே!. அதுவும் அவன் இங்கே வருவது நமக்கு கெட்ட சகுனமாகிவிடும். அதுவும் அந்த குருடன்....” என்று அவர் எதுவோ சொல்லவருவதற்குள், “ப்ரியா...” என கத்தினார் ராம்.

அப்போது சரியாக, அழகுப்பதுமை போல் அங்கே வந்த கார்முகிலைப் பார்த்து, அவளின் பெற்றோர் இருவரும் அதிர்ந்துவிட்டனர்.

“அப்பாவுடன் உங்களுக்கு என்ன பிரச்சனை?. எதற்காக கோபமாக கத்துகின்றீர்கள்?.” என அவள் கேட்டதும் தான் இருவருக்கும் நிம்மதி உண்டானது.

“அது ஒன்னும் இல்லைடா முகில். உன் அம்மாவிற்கு வேறு வேலை இல்லை. அது சரியில்லை... இது சரியில்லை என்று என்னை குற்றம் சொல்கின்றாள்.” என்று கூறி சமாளித்தார் ராம். தன் மகளின் காதுகளுக்கு ‘ருத்ரா.’ என்ற பெயர் விழுவதைக் கூட அவர்கள் விரும்பவில்லை.

“சரி அப்பா...” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்றாள்.

அவள் செல்வதைப் பார்த்த ராம், “இப்படி தான் கத்துவாயா?.” என்று தன் மனைவியைப் பார்த்து அடிக்குரலில் சீறினார்.

“அவன் பெயரைக் கேட்டதும், கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். மன்னித்து விடுங்கள் ராம்.” என்றார் ப்ரியா.

“சரி அதைவிடு. நாம் ஏற்பாட்டை பார்க்கலாம்.” என்று வேறு பேச்சை எடுத்தார்.

தன் அறைக்குள் வந்த கார்முகிலின் உதடு, ‘ருத்ரா... ருத்ரா...’ என்ற பெயரை சிறிதும் சத்தம் வராமல் உச்சரித்துக் கொண்டே இருந்தது.

ஆம் தன் அன்னை பேசியதை ஒன்று விடாமல் தன் செவிகளில் வாங்கி இருந்தாள் கார்முகில். அந்த பெயர் அவள் நினைவுகளில் வந்ததும், தன்னைப் போல சலங்கையின் சத்தமும் அருவமாய் அவள் காதில் கேட்க ஆரம்பித்தது.

ஆனால் இப்போது கேட்ட சலங்கையின் சத்தம், அவளை அதிகம் யோசிக்க வைத்தது. இப்படியே இருந்தால், தனக்கு பைத்தியம் பிடித்துவிடும் என்ற எண்ணத்தில், தன் அறையை ஒட்டியவாறு இருந்த நீச்சல் குளத்திற்கு சென்றாள்.

தன் தோளில் தொங்கிய துப்பட்டாவை கழட்டியவள், டால்பின் போல நீருக்குள் பாய்ந்து, நீந்த தொடங்கினாள்.

அவளது அலைகழிக்கும் எண்ணங்களை கட்டுக்குள் கொண்டு வர இதை வடிகாலாக பயன்படுத்த ஆரம்பித்தாள்.

நீந்தும் பெண்ணவளை, வேறு ஒரு கட்டிடத்தின் மாடியில் இருந்து, தொலைநோக்கி மூலம் பார்த்துக்கொண்டிருந்தான் ருத்ரா. பின் தன் அலைபேசியை எடுத்தவன், “இன்று வேண்டாம் நகுல். நாளை பார்த்துக் கொள்ளலாம். இன்று எனக்கு வேறு ஒரு வேலை வந்துவிட்டது.” என்று தூரத்தில் நீந்தும் கார்முகிலை பார்த்துக்கொண்டே, அழுத்தமாக சொல்லிவிட்டு வைத்தான்.




 
அத்தியாயம் – 3

அந்த பெரிய வீட்டின் கோட்டை சுவருக்கு உட்புறமாக, வானளாவிய வளர்ந்திருந்த மரங்களின் கிளைகள், நெடுந்தூரத்திற்கு பரவி கிடந்து, உள்ளே இருந்த அழகான மாளிகை போன்ற வீடு வெளியே தெரியாமல் மறைத்து பாதுகாத்தது.

வீட்டைச் சுற்றி இருந்த மரங்களின் அடியில் ஆங்காங்கே கற்களால் செய்யப்பட்ட அழகிய பதுமைகள் காணப்பட்டன.

அந்த மனோகரமான காலை வேளையில், சூரியன் உதயமாகி, ஒரு ஜாமம் இருக்கும். கோர்ட்டும் சூட்டுமாக வீட்டில் இருந்து கம்பிரமாக வெளியே வந்தான் ருத்ரா.

சரியாக அவன் வாயில் படியில் காலடி எடுத்து வைக்கும் போது, கதிரவன் பளிரென்று அவன் முகத்தில் ஒலி வீசியது. உடனே அவன் நடையில் சிறிது தடுமாற்றம்.

தலையை பிடித்துக் கொண்டே கீழே விழப்போனவனை கெட்டியாக பிடித்துக் கொண்டான், அவன் பின்னே வந்த நகுல்.

“நான் வருவதற்குள் உனக்கு என்ன அவசரம்.” என்று தன் நண்பனை கடிந்து கொண்டவன், தன் கையில் இருந்த கண்ணாடியை, ருத்ராவிற்கு அணிவித்து, “இதை மறந்து விட்டாயா ருத்ரா...” என்றான்.

தன் கண்ணில் இருந்த கண்ணாடியை சரி செய்து கொண்டபடி, திரும்பவும் கம்பிரமாக தன் நடையைத் தொடர ஆரம்பித்தவன், “நான் நேற்று கார்முகிலைக் கண்டேன்.” என்றதும் அவன் பின்னே நடந்து வந்து கொண்டிருத்த நகுல் அதிர்ந்து விழித்தான்.

அவன் தன்னை பின் தொடராததை உணர்ந்து கொண்ட ருத்ரா, அவனைத் திரும்பி பார்த்து, “இதற்கு ஏன் அதிர்சியாகின்றாய்?.” என மிகவும் சாதரணமாக கேட்டான்.

“இல்லை. அந்த வீட்டின் ஆட்கள் பெயரை நான் உச்சரித்தாலே மிகவும் கோபம் கொள்வாய். இப்போது நீயே முகில் பெயரை எடுக்கின்றாயே அதனால் பார்த்தேன்.” என்றான் நகுல்.

ஆனால் அவன் பேச்சை கண்டுகொள்ளதவன், அதை மாற்றும் விதமாக, “நேற்று விட்ட வேலையை இன்று தொடரவேண்டும். நம் ஆட்களை வைத்து நீயே அதைப் பார்த்துக் கொள் இன்று எனக்கு வேறு வேலைகள் உள்ளது.” என்று கூறிக்கொண்டே, தன் மகிழுந்தில் ஏறினான்.

ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்த ருத்ராவை அதிர்ந்து பார்த்தவன், “நீ வண்டியை ஓட்ட வேண்டாம் ருத்ரா... நீ எங்கு சென்றாலும் நானும் உன்னுடன் வருவேன். முதலில் இறங்கு.” என்று கண்டிப்பான குரலில் கூறினான்.

ருத்ராவின் முன் யாரும் குரலை உயர்த்தி பேசிவிட முடியாது. அவனைப் பார்த்தாலே, ஏன் அவன் பெயரைக் கேட்டாலே, அவனை சுற்றி இருப்பவர்களுக்கு ஒரு வித பயம் வந்து ஒட்டிக் கொள்ளும். ஆனால் இதில் நகுல் மட்டும் விதிவிலக்கு.

அவன் பேச்சை காதில் வாங்காதவன், “கவலைப்படாதே நகுல். நான் யார் மீதும் மகிழுந்தை ஏற்றிவிட மாட்டேன்.” என்று சொல்லிக்கொண்டே, தன் மகிழுந்தை ஆவேசமாக இயக்க ஆரம்பித்தான்.

அதை வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த நகுல் தான் பயந்து போனான். ‘இவன் ஏதோ ஒரு முடிவை எடுத்துவிட்டான். இனி சொன்னாலும் கேட்க மாட்டான்.’ என்ற நினைப்போடு, ருத்ரா ஏவி சென்ற வேலையை முடிக்க ஆயத்தமானான்.

தங்கள் நிறுவனத்தைப் போலவே போலியாக சரக்குகளை தயாரித்து ஏற்றுமதி செய்த போலி நிறுவனத்தின் இடத்தை கண்டுபிடிக்கவே, நேற்று இரவு அவன் அங்கே வந்திருந்தான். அப்போது தான் தற்செயலாக நீச்சல் குளத்தில் நீந்தி கொண்டிருந்த கார்முகில் அவன் கண்களில் விழுந்தாள்.

நீந்துவது அவள் தான் என்று அவ்வளவு தூரத்தில் இருந்தும், அந்த இரவில் அவன் கண்களுக்கு நன்றாக தெரிந்து இருந்தது.

உடனே அவன் மூளை ஏதேதோ திட்டங்கள் வகுக்க, வந்த வேலையை முடிக்காமல் பாதியிலையே திரும்பி இருந்தான் ருத்ரா.

பகல் முழுவதும் ருத்ராவின் நிழல் போல அவனைப் பின் தொடரும் நகுல், இரவானதும் ருத்ராவின் ஆணைக்கிணங்கி, அவனை பின் தொடரமாட்டான்.

குதிரை வீரன் புரவியை செலுத்துவது போல, மிகவும் லாவகமாக தன் மகிழுந்தை இயக்கிக்கொண்டிருந்தவன், தன் இடது கையில் இருந்த ஆறாவது விரல் மூலம், அடிக்கடி, தன் கண்களில் அணிந்து இருந்த கண்ணாடியை சரி செய்து கொண்டான்.

அவன் கண் முன்னால், கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில், பேரழகின் பிறப்பிடமாய் காட்சி அளிக்கும் கார்முகில் வந்து போனாள்.

ஆனால் அவளது எண்ணைத்தை தூசி போல் தட்டிவிட்டவன், “உன்னை வைத்தே என் ஆட்டத்தை ஆரம்பிக்கின்றேன் கார்முகில்....” என்றான் கர்ஜனையாக.

சித்தத்தை அவன்பால் வைத்திருக்கும் பெண்ணவளுக்கு, அவனின் செயலை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருக்குமா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

*************************************************

கார்முகிலின் வீட்டிற்குள் அப்போது தான் அடி எடுத்து வைத்திருந்தான் வசி. இரவு முழுவதும், ஆடாத ஆட்டங்கள் அனைத்தும் ஆடி விட்டு, காலையில் குளித்து கிளம்பி, நெற்றியில் விபூதி வைத்து பக்திப்பழமாய் காட்சியளித்தான்.

அவனைக் கண்டவுடனே, வரவேற்பு அறையில் அமர்ந்திருந்த ராம், இருக்கையை விட்டு கீழிறங்கி அவனை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்று அமரவைத்தார்.

“நேற்றே வரவேண்டும் என நினைத்தேன் மாமா. ஆனால் வரமுடியாமல் வேலை என் கழுத்தை பிடித்து விட்டது.” என்று தன் கழுத்தை தடவிக் கொண்டே கூறியவன், தவறுதலாக தன் கழுத்தில் இருந்த காயத்தில் கைவைத்து, “ஆ....” என்று வலியால் கத்தினான்.

அதில் பதறிய ராம், “என்னாச்சி வசி...” என்றார்.

“அது ஒன்னும் இல்லை மாமா. மோதிரம் குத்திவிட்டது போல...” என்று தன் கையில் அணிந்து இருந்த மோதிரத்தைக் காட்டி, அவர் அறியாமல் பெருமூச்சும் விட்டுக்கொண்டான்.

‘ராட்சசி இது அவள் வேலை தான்...’ என்று அவனுடன் நேற்று சல்லாபித்த அழகி, அவன் கழுத்தில் ஏற்படுத்திய காயத்தை நினைத்து அவளை மனதினுள் வருத்தேடுத்தான்.

“பார்த்து வசி.” என்று ராம் சொல்லும் போதே, அங்கு பிரசன்னமானார் ப்ரியா, “வசி... உன்னை தான் நான் நேற்றில் இருந்து எதிர் பார்த்துக்கொண்டே இருந்தேன்.” என்று ஆரவாரமாக அவனை வரவேற்று, தேநீர் கொடுத்து உபசரித்தார்.

பின் அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்ட ப்ரியா, “இன்று மதிய விருந்து இங்கே தான். நீ கண்டிப்பாக உண்டு விட்டு தான் செல்லவேண்டும்.” என்றார் அன்பொழுக.

“சரி அத்தை.” என்று சொல்லிவிட்டு சுற்றும்முற்றும் பார்த்தவன், “கார்முகில் எங்கே அத்தை.” என்று கேட்டான்.

அவன் மொழி கேட்டு தம்பதியர் இருவரும் தங்களுக்குள் சிரித்துக்கொண்டனர். ப்ரியா, “அவள் நடன வகுப்பிற்கு சென்றிருக்கின்றாள் வசி.” என்றார் புன்னகையுடன்.

தன் தொண்டையை கரகரத்துக்கொண்டவன், “எங்களுக்கு நிச்சயதார்த்தம் முடியும் வரை அவள் எங்கும் செல்லவேண்டாம் அத்தை.” என்றான் மெதுவாக.

அவனது கருத்தை ராம் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் வசியை நோக்கி, “நீ எந்த காலத்தில் இருக்கின்றாய் வசி?.” என்றார் அழுத்தமாக.

அவன் பதில் பேசுவதற்கு முன்பாகவே முந்திக்கொண்ட ப்ரியா, “நம் வசி சொன்னால், அதில் ஆயிரம் காரணங்கள் இருக்கும் ராம். நீங்கள் எதுவும் பேசாதீர்கள்.” என்று சொல்லிவிட்டு, வசியைப் பார்த்தவர், “நாளையில் இருந்து, அவள் எங்கும் செல்லமாட்டாள் வசி.” என்றார் உறுதியாக.

அவரின் பதிலைக்கேட்டு, ‘இந்த பைத்தியங்கள், நான் சொல்வதை கேட்கும் வரைக்கும், நான் தான் இங்கு ராஜா.’ என்று மிகவும் இழிவாக நினைத்து வைத்தான்.

பெரும்பான்மையான பெற்றோர்கள் செய்யும் தவறை தான் கார்முகிலின் பெற்றோரும் செய்துகொண்டிருந்தனர்.

பிள்ளைகளின் விருப்பம் எதையும் கேட்காமல், இது தான் அவர்களுக்கு நன்மையை கொடுக்கும் என்றும், தாங்கள் அவர்களுக்காக செய்யும் அனைத்தும் அவர்களுக்கு விருப்பமானதாக தான் இருக்கும் என்றும் அவர்களுக்கு அவர்களே முடிவு செய்து கொள்கின்றனர்.

மற்றவர்கள் பேச்சை எல்லாம் கேட்டு, அதை அப்படியே தங்கள் பிள்ளையின் மேல் திணிக்கும் அவர்களுக்கு, தங்கள் மகனுக்கோ அல்லது மகளுக்கோ, சொந்த விருப்பு, வெறுப்புகள் உள்ளது என்பதை ஒத்துக்கொள்ள மறுக்கின்றனர்.

மூவரும் சேர்ந்து நிச்சயதார்த்தத்தைப் பற்றி, பல விஷயங்களை பேசிக்கொண்டிருந்தனர். கடைசியாக அவர்களுடைய பேச்சு ருத்ராவிடம் வந்து நின்றது.

ராம் நேற்று, தனக்கும் ப்ரியாவிற்கும் நடந்த வாக்குவாதத்தைப் பற்றி வசியிடம் கூறினார். அதை கேட்டுக் கொண்டு, தன் மனதில் சந்தோஷப்பட்டுக் கொண்டவன், வெளியே பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டு,

“ருத்ரா மிகவும் அறிவாளி மாமா...” என்று எடுத்ததும் ருத்ராவைப் பற்றி உயர்வாக பேச ஆரம்பித்தான். அதாவது, தான் நல்லவன் என்பதனைக் காட்டிக் கொள்ள அநேகம் பேர் எடுக்கும் அதே ஆயுதம்.

தொடர்ந்து பேசியவன், “எனக்கு இருக்கும் ஒரே ரத்த சொந்தம் அவன் தான்.” என்று கண்கலங்கினான். பிரபல நடிகர்களே வசியிடம் தோல்வி அடைந்துவிடுவர். அப்படி தான் இருந்தது அவனது பேச்சு.

வசி, அழகான முக லாவண்யத்தைக் கொண்டவன். அதே அளவு வஞ்சகம் உள்ளம் படைத்தவனும் ஆவான்.

அவன் தோளில் கைவைத்து, ஆறுதல் படுத்திய ராம், “நான் ருத்ராவிடம் பேசட்டுமா வசி.” என்றார்.

தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு, அவரை ஏறிட்டு பார்த்தவன், “என் ரத்தமாக இருந்தாலும், அவன்...” என்று சொல்லாமல் நிறுத்தியவன், “வேண்டாம் விடுங்கள் மாமா. அவனை நாம் நிச்சயதார்த்தத்திற்கு அழைக்க வேண்டாம் மாமா. இதை வேறு உங்களிடம் சொல்லி, உங்களை வருந்தவைக்க நான் விரும்பவில்லை.” என்றான்.

“என்ன விஷயம் என்று என்னிடம் சொல் வசி. உன் மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் அல்லவா.” என்றார் ப்ரியா.

“நீங்கள் இவ்வளவு தூரம் கேட்பதால், உங்களிடம் சொல்கின்றேன் அத்தை.” என்று சொல்லிவிட்டு, சிறிது தயங்கியவனாக, “அது... நேற்று அவன் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் காணொளி காட்சியை யாரோ பெயர் தெரியாதவர் எனக்கு அனுப்பி வைத்தார்.” என்று மிகப்பெரிய, சுமத்தக்கூடாத பழியை எல்லாம் ருத்ராவின் மீது சுமத்தினான்.

“நான் தான் அவனைப் பற்றி சொன்னேனே!.’ என்பது போல் ராமை பார்த்தார் ப்ரியா.

அவன் மொழி கேட்டு கோபம் அடைந்த ராம், “இதுவரை மது, அராஜகம் என்று இருந்தான். இப்போது இதையும் செய்ய ஆரம்பித்துவிட்டானா.” என்று மொழிந்தார்.

“நீங்கள் கோபம் கொள்ளாதீர்கள் மாமா. என் பவரை உபயோகப்படுத்தி, அந்த காணொளி காட்சியை சமூக ஊடகங்களில் இருந்து நீக்கிவிட்டேன்.” என்றதும், “நீ ஏன் அப்படி செய்தாய் வசி. அவனுக்கு உன் மேல் இல்லாத அக்கறை உனக்கு எதுக்கு?.” என்று கண்டித்தார் ராம்.

“என்ன இருந்தாலும் அவன் என் சகோதரன் மாமா.” என்று பசப்பும் கனிவும் நிறைந்த வார்த்தைகளைக் கூறினான்.

அவன் ருத்ராவிடம் அனுப்பிய பெண் திரும்பி வராததால், ஏற்கனவே செய்துவைத்திருந்த தன் திட்டத்தின் படி சரியாக நடித்து முடித்தான். ராமின் மனதில் ருத்ராவை அழைக்கும் எண்ணம் வந்துவிடக்கூடாது என்று நினைத்தே இந்த நாடகத்தை நடத்தினான். அதுவும் அவன் எண்ணப்படியே கட்சிதமாக நடந்தது.

‘இந்த டீனா என்ன ஆனாளோ!. அவளிடம ஒரு வேலையை கொடுத்தால் உருப்படியாக செய்ய மாட்டாள்.’ என்று அப்போது அவளை நினைத்து திட்டினான்.

ஆனால் அந்த பெண்ணோ, ருத்ராவின் வீட்டு தோட்டத்தில் நிரந்திரமாக துயில் கொண்டிருந்தாள். அவள் மேலே அழகான மயில் சிலை எழுப்பப்பட்டு இருந்தது.



(ஹாய் டியர்ஸ்! இனி தான் கதையே ஆரம்பிக்கப் போகின்றது. ருத்ராவிற்கு கண்ணில் என்ன பிரச்சனை என்பதனை இந்த பதிவில் மறைமுகமாக உணர்த்தி இருக்கின்றேன். அடுத்து வரும் யூடியில் அதைப் பற்றி விவரமாக விளக்குகின்றேன். (நியாபகம் வச்சிக்கோங்க... அவன் இரவு நேரத்தில் கண்ணாடி இல்லாமல் தான் இருந்தான்.)

உங்களில் யாருக்காவது அது என்னவென்று தெரிந்தால் அதை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

சென்ற அத்தியாயத்திற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். கதையைப் பற்றிய கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.)
 
ஹாய் டியர்ஸ்! சென்ற அத்தியாயத்திற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் செய்த அனைவருக்கும் என் நன்றிகள். தாமதத்திற்கு மன்னிக்கவும். இதோ அடுத்த யூடி.

அத்தியாயம் – 4

கால்களில் சலங்கைகள் தவழ, முகத்தில் லாவண்யத்துடன், கண்ணும் கதை பேசும் காரிகையாய் கருத்தோடு கலைநயத்தையும் கண்முன்னே கொண்டு வருவது போல, மயில் போல் ஆடிக்கொண்டிருந்தாள் கார்முகில்.

இவளின் இலகுவான நடனம் கண்டு சுற்றி இருந்த அனைவரும் ஒரு வித பிரம்மிப்பில் ஆழ, தூரத்தில் இருந்து அழகு பதுமையின் நடன அசைவைப் பார்த்துக்கொண்டிருந்த ருத்ரா மட்டும் ஒரு வித இறுக்கத்தில் நின்றிருந்தான்.

கம்பிரமான கன்னியர் மனதை கவர்ந்து இழுக்கும் தோற்றத்துடன் நின்றிருந்த ருத்ரா, ஆடிகொண்டிருந்தவளின் அஞ்சன விழிக்குள் விழுந்தான்.

அவனைப் பார்த்தும் சட்டென்று ஒரு வித பரவசம் அவள் உடல் முழுவதும் பரவ ஆரம்பித்தது. இருந்தாலும், பாடல் முடியும் வரை கடினப்பட்டு, தன் மனதை இறுக்கி பிடித்து கொண்டாள்.

‘இதுநாள் வரை தன் கண்களில் விழாதவன் இன்று எதற்காக வருகை தந்துள்ளான்!. என்னை பார்பதற்காகவா!.’ என்ற எண்ணம் அவளுக்கு வெட்கத்தை வரவழைத்தது.

அவள் அவ்வாறு நினைக்கும் போதே சிறுவயது ருத்ரா அவள் கண்முன்னே வந்து சென்றான். அவள் கண்களுக்கு அருவாமாய் தெரிந்த காட்சிகளும், அவள் சிந்தனையின் முழு உயர பிம்பம், நேரில் தன் கண் முன்னே நிற்பதும், அவள் மனதிற்கு இன்பமாய் இருந்தது. அது தந்த உணர்வில் மிகவும் மகிழ்ச்சியாக நடனத்தினை நளினியில் ஏற்றும் நங்கையாக ஆட ஆரம்பித்தாள்.

நடன பள்ளியில் வெளிப்புறமாக இருந்த மேடையில் தான் அவள் ஆடிக் கொண்டிருந்தாள். அதை தன் மகிழுந்து நிறுத்தும் இடத்தில் இருந்தே, பார்த்துக்கொண்டிருந்தான் ருத்ரா.

பாடல் முடிந்ததும், திரும்பவும் தன் மகிழுந்தில் ஏறி அமர்ந்து கொண்டான். ஆனால் அங்கிருந்து செல்லவில்லை.

நடனமாடி முடிந்ததும் அவள் கண்கள் அவனையே தேடியது. அதை தன் மகிழுந்தில் இருந்து பார்த்த ருத்ராவின் உதடுகள், வளைந்தன. பின் மெதுவாக தன் மகிழுந்தில் இருக்கும் கண்ணாடியை இறக்கிவிட்டவன், தன் முகம் அவளுக்கு தெரிவதைப் போல நிமிர்ந்து பார்த்தான்.

அதைப் பார்த்ததும் தான் அலைப்பாயும் அவளது கண்கள் அமைதி அடைந்தன. தன் தோழியர்களிடம் இருந்து விடை பெற்றவள் வேகமாக, ருத்ராவின் மகிழுந்தை நோக்கி வந்தாள்.

அவள் தன்னை நோக்கி வருவதைப் பார்த்து தன் மகிழுந்தில் இருந்து இறங்கி கொண்டான் ருத்ரா. அவன் கைகள் தன்னைப் போல், அவன் கண்களில் இருந்த கண்ணாடியை சரி செய்து கொண்டது.

பூரண சந்திரன் போல் அவன் முன்னே வந்து நின்றவள், “எப்படி இருக்க ருத்ரா.” என்றாள் மெல்லிய குரலில்.

அவள் மொழி கேட்டு, “பரவாயில்லையே! என்னை எல்லாம் நியாபகம் வைத்திருக்கின்றாய்!.” என்றான் ஆச்சரியாமாக.

“அனுதினமும் உன் நினைவில் இருக்கும் நான், உன்னை எவ்வாறு மறப்பேன் ருத்ரா.” என திருவாய் மலர்ந்தாள்.

அதில் அவன் புருவங்கள் நெரிந்தன, “பின் எதற்காக என்னை விட்டுச்சென்றாய்?. நான் குருடன் என்பதாலா...” என்று அவன் தன் வார்த்தைகளை முடிக்கவில்லை, அதற்குள் தன் கரங்கள் கொண்டு அவன் வாயை மூடியவள்,

“இனி அது போல் சொல்லாதே ருத்ரா!. உனக்கு சில நிறங்களை வேறுபடுத்தி அறியும் திறன் குறைவாக இருக்கின்றது அவ்வளவு தான்.” என்றாள் கண்களில் நீர் பொங்க.

அவள் கரங்களை தன் வாயில் இருந்து எடுத்தவன், புன்னகையை முகத்தில் தவழ விட்டு, “இப்போது இது போல் சொல்லும் நீ தான், முன்பு ஒருமுறை என்னை குருடு என அழைத்ததாக நியாபகம்.” என்றான் நையாண்டியாக.

“ருத்ரா! அறியா வயதில் சொல்லியதை இன்னும் நியாபகம் வைத்து, என் மனதை, உன் வார்த்தைகளால் குத்திக்கிழிக்காதே!” என்று மன்றாடினாள். அவள் சொல்லும் போதே, அவள் கண்களில் தேங்கி இருந்த கண்ணீர் அவள் கன்னத்தில் உருண்டோடியது.

சற்று நேரம் மெளனமாக இருந்த ருத்ரா தன் வாய் திறந்து, “உனக்கு அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் என்று கேள்விப்பட்டேன். அதற்கு வாழ்த்து தெரிவிக்கவே, உன்னை நேரில் சந்திக்க வந்தேன்.” என தான் வந்த காரணத்தை அவளிடம் கூறினான்.

அதற்கு வெற்று சிரிப்பை சிந்திய கார்முகில், “உன் வாழ்த்திற்கு மிகவும் நன்றி ருத்ரா.” என்றாள் சோகமான குரலில்.

ருத்ரா கலகலவென்று சிரித்தவாறு, “ஏன் இவ்வளவு சோகம். உன் மனம் கவர்ந்தவனைத் தானே திருமணம் செய்யப்போகின்றாய்!.” என்று கேட்டான்.

“ஆமாம்.” என்று ஒற்றை வார்த்தையில் வந்தன அவள் பதில். ஆனால் அவள் மனதின் உள்ளே, ‘நான் உன்னை மட்டும் தான் விரும்பினேன். விரும்புகின்றேன். இனி எதிர் காலத்திலும் உன்னை தான் விரும்புவேன் ருத்ரா. வசி என் கழுத்தில் மாங்கல்யம் அணிவிப்பதற்கு முன்பே, என் உயிர் இந்த உலகை விட்டுப்பிரிந்திருக்கும்.’ என்று சொல்லி சிரித்தாள்.

ஆனால் அவள் சிரிப்பிற்கு, தவறான கருத்தை நினைத்துக் கொண்டான் ருத்ரா.

தன் மகிழுந்தில் இருந்து காகிதத்தால் சுத்தப்பட்டு இருந்த பரிசை அவள் முன்னே நிட்டியவன், “உன் நிச்சயதார்த்தத்திற்கு என் அன்பு பரிசு.” என்றான்.

அதை உடனே தன் கையில் வாங்கிக்கொண்டவள், அவன் முன்னே அதை பிரிக்க ஆரம்பித்தாள்.

உள்ளே அவளுக்கு மிகவும் பிடித்தமான சலங்கை இருந்தது. அதை எடுத்து, அதன் சத்தத்தை கேட்க ஆவல் கொண்டு, சலங்கையை தன் காதின் அருகில் கொண்டு சென்றாள்.

ஆனால் மணிகளின் சத்தம் அவள் காதுகளை வந்து அடையவே இல்லை. மறுபடியும், அதை தன் கரங்கள் கொண்டு குலுக்கினாள். அதில் சத்தம் வராமல் போகவே, ருத்ராவின் முகத்தை ஏறிட்டாள்.

அவளைப் பார்த்து இகழ்ச்சியாக சிரித்தவன், “இந்த சலங்கையின் உள்ளே மணிகள் இல்லை. உன் வாழ்க்கையைப் போலவே!.” என்றான்.

அதில் அவள் அதிர்ந்து விழித்தது என்னவோ சில் கணங்கள் மட்டும் தான். உடனே சகஜ நிலைக்குத் திரும்பியவள், “சரியாக சொன்னாய் ருத்ரா. என் வாழ்க்கையும் இப்படி தான் உள்ளது.” என்று வெறுமையாக சிரித்தவள், “உன் பரிசுக்கு மிகவும் நன்றி ருத்ரா. நான் வருகின்றேன்.” என்று சொல்லி செல்லப்போனவளின் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினான்.

அவன் கரங்கள் பற்றி இருந்த தன் கரத்தைப் பார்த்தவள், அவன் முகத்தை ஏறிட்டு, “என்ன ருத்ரா!.” என்றாள்.

“நீ என்னுடன் இப்போது வரவேண்டும்.” என்றான் கட்டளையாக.

அதற்கு அவள் அதிர்ந்து எல்லாம் விடவில்லை மாறாக, “வீட்டில் என் பெற்றோர்கள் எனக்காக காத்துக்கொண்டு இருப்பார்கள் ருத்ரா. இப்போது என்னால் உன்னுடன் வரமுடியாது.” என்றாள்.

“நான் உன்னிடம் கேட்கவில்லை. நீ மறுத்தாலும் என்னுடன் வந்து தான் ஆகவேண்டும்.” என்றான் உரும்பிய குரலில்.

“சரி ருத்ரா. நான் வருகின்றேன்.” என்று உடனே சம்மதித்துவிட்டாள்.

அவனோ, அவள் தன்னைப் பார்த்து பயந்து போய் தான், தன்னுடன் வர ஒத்துக்கொண்டதாக கற்பனை செய்ய. அவளோ, அவன் மீது வைத்திருந்த நேசத்தால், வாழும் சில நாட்களில், அவனுடன் பொழுதை போக்கி, அந்த நினைவுகளை பசுமையாக்கவே அவனுடன் செல்ல சம்மதித்து இருந்தாள்.

அவனுடனே அவன் மகிழுந்தில் ஏறி அமர்ந்தாள். அவள் வண்டியில் ஏறியதும், அவன் மகிழுந்து சீறிப்பாய்ந்து சென்றது.

வண்டியை லாவகமாக இயக்கிக்கொண்டிருந்தவனைப் பார்த்தவள், “நீ நன்றாக மகிழுந்தை இயக்குகின்றாய் ருத்ரா.” என்று பாராட்டு சான்றிதழ் வழங்கினாள்.

திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தவன், எதுவும் பேசவில்லை.

தன் பேச்சை தொடர்ந்த கார்முகில், “நீ ஏன் என்க்ரோமா கண்ணாடி வில்லை (லென்ஸ்) வைக்காமல், கண்ணாடி அணிந்து இருக்கின்றாய்!.” என்று கேட்டு அவன் முறைப்பை பரிசாக வாங்கிக்கொண்டாள்.

“சரி சரி... முறைக்காதே!.” என்று சொல்லிவிட்டு அமைதியானாள்.

அவன் பேசவில்லை என்றாலும், அவனுடன் வரும் அந்த இனிமையான தருணமே, அவளுக்கு அவ்வளவு மனநிறைவாக இருந்தது. மனதில் பூக்கள் பூக்க கனவுலகிற்கு சென்றாள்.

எப்போது மகிழுந்தை நிறுத்தினான். தான் எங்கு வந்திருக்கின்றோம் என்ற நினைவு அவளுக்கு சிறிதும் இல்லை.

தன் முன்னே நின்று அவன் சுடக்கிட்டதும் தான் இயல்புக்குத் திரும்பினாள். “வெற்றிலை பாக்கு வைத்து உன்னை அழைக்க வேண்டுமா! கீழே இறங்கி வா.” என்றான் கடுப்பான குரலில்.

அவளும் மெதுவாக மகிழுந்தில் இருந்து கீழே இறங்கி, தான் வந்திருக்கும் இடத்தை சுற்றும் முற்றும் பார்த்து திடுக்கிட்டாள்.

அது ஒரு ஆள் அரவம் இல்லாத மயான பூமி. “இங்கு... எதற்காக... என்னை அழைத்து வந்தாய்?.” என்று பயத்துடன் கேட்டாள்.

“புகைப்படம் எடுக்க..” என்று சொல்லிக்கொண்டே, அவள் அருகில் வந்தவன், அவள் எதிர்பாராத நேரத்தில், அவள் கன்னத்தில் முத்தம் வைத்து அதை சுயபடம்(செல்பி) எடுத்துக்கொண்டான்.

சுயபடம் எடுத்தவுடன், அவன் அலைபேசியில் எதுவோ செய்ய, தன்னை மறந்து காதலுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கார்முகில்.

எதற்காக இப்படி ஒரு இடத்திற்கு தன்னை அழைத்து வந்தான் என்ற கேள்வி எதுவும் அவளின் மனதில் எழவில்லை. மாறாக, ‘இவனும் என்னை விரும்புகின்றானா!.’ என்ற எண்ணம் தான் அவள் மனதில் ஓடியபடி இருந்தது.

இங்கே கார்முகிலை காணாமல் அவள் வீடு அல்லோல்பட்டுக் கிடந்தது. ராமும் ப்ரியாவும் யார்யாருக்கோ, அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது முகத்தில் தோன்றிய பதைபதைப்புடன் அங்கே வந்தான் வசி. தங்க முட்டையிடும் வாத்து அல்லவா!. அதனால் வந்த பதற்றமாக இருக்கலாம்.

ராமிடம் வந்தவன், “நம் தொழில் எதிரி யாரேனும் கார்முகிலை கடத்தி இருக்கலாம் மாமா. நான் உடனே எனக்கு தெரிந்த டிஜியிடம் பேசுகின்றேன்.” என்று கூறி அலைபேசியை எடுத்தான்.

ப்ரியாவோ, “நீ பதற்றம் கொள்ளாதே வசி. அவளுக்கு எதுவும் ஆகாது. எங்கேனும் தோழிகளுடன் சென்றிருப்பாள். வரட்டும் அவள். நான் பேசிக்கொள்கின்றேன்...” என்று கோபத்தோடு பல்லைக்கடித்தார்.

ராம், “அவள் தோழிகளுடன் சென்றிருந்தால், இப்போது வந்திருக்க வேண்டுமே ப்ரியா.” என்று பதற்றமாக சொல்லியவர், அங்கே நிற்க்கும் வாசியைப் பார்த்து, “ஊடகங்களுக்கு இந்த செய்தி சென்றுவிடக்கூடாது வசி. எது செய்வது என்றாலும் பார்த்து செய்.” என்றார்.

“சரி மாமா.” என்று சொல்லிவிட்டு, தன் அலைபேசியில் பார்வையைப் பதித்தவனுக்கு, பகிரியில்(வாட்ஸ்ஆப்) இருந்து ஒரு செய்தி வந்தது. தெரியாத எண்ணில் இருந்து வந்த, அந்த செய்தியை நெற்றியை தடவியபடி பார்த்தவன், அந்த எண்ணில் கையை வைத்து உள்ளே சென்றான்.

அதில் ஒரு புகைப்படம் வந்திருந்தது. அதில் கைவைத்ததும், அது பதிவேற்றம் ஆகி, அந்த புகைப்படம் திறந்தது.

அதில் கார்முகிலின் கன்னத்தில், ருத்ரா முத்தம் கொடுப்பது போன்ற சுயபடம் இருந்தது. ஆம் அவன் எடுத்த புகைப்படத்தை வசிக்கு அனுப்பி வைத்திருந்தான்.

‘ருத்ரா...’ என்று கோபத்தில் அவன் உதடு துடிக்க முணுமுணுத்தவனுக்கு இன்னொரு செய்தியையும் அனுப்பி வைத்து, அவன் ரத்த நாளத்தை ஏகிற வைத்திருந்தான் ருத்ரா.


 
அத்தியாயம் – 5

புகைப்படத்தின் கீழே, இன்னொரு செய்தியும் ருத்ராவிடம் இருந்து வந்தது. அதில், “நீ அனுப்பிய பெண்ணுடன், நான் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை ஊடகத்திற்கு அனுப்பி வைக்க ஆசைப்பாட்டாய் அல்லவா!. அதற்கு நானே உனக்கு உதவி செய்கின்றேன். நான் அனுப்பி இருக்கும் இந்த புகைப்படத்தை அனுப்பு.” என்று கார்முகிலுடன் அவன் இருக்கும் படத்தை சுட்டிக்காட்டிய செய்தியையும் சேர்த்தே அனுப்பி இருந்தான் ருத்ரா.

கைகள் நடுங்க தன் அலைபேசியையே பார்த்துக் கொண்டிருந்தான் வசி. அவன் முகத்தில் தோன்றிய கோபத்தைக் கண்டு, ‘எதைப் பார்த்து இப்படி கோபமும், திகைப்புமாய் இருக்கின்றான்.’ என்ற நினைப்போடு, அவன் அருகில் வந்து வசி கையில் வைத்திருக்கும் அலைபேசியை பார்த்தார் ராம்.

அதில் இருந்த புகைப்படத்தைப் பார்த்து, வசியின் பிரதிபலிப்பை தான் ராமும் வெளிப்படுத்தினார். இருவரது தோற்றத்தையும் பார்த்த ப்ரியா, வசியின் கையில் இருந்த கைபேசியை வாங்கினார்.

அவரும் அதைப் பார்த்து அதிர்ந்தவர், “நான் நினைத்தேன். இதற்கெல்லாம் காரணம் இவனாகத் தான் இருப்பான் என்று.” என்றவர் அதிர்வுடன் இருக்கும் இருவரையும் பார்த்து, “எதற்காக இப்படி ஒரு அதிர்ச்சியில் நிற்கின்றீர்கள்?. வசி உடனே அவனுக்கு அழைத்து, பேச வேண்டியதை பேசி, முகிலை அழைத்து வா...” என்றார்.

அவன் இன்னும் சில போல் அப்படியே நிற்பதைப் பார்த்து அவன் கைகையத் தொட்டு உலுக்கியவர், “இன்னும் என்ன யோசனை வசி?.” என்றார்.

“அத்தை... அவன் நம்மை பழிவாங்கவே இவ்வாறு செய்கின்றான் என நினைக்கின்றேன். அதனால் தான்.... இவனுக்குப் பயந்து தான், நான் கார்முகிலை வெளியே அனுப்ப வேண்டாம் என்று கூறினேன்.” என்றான் ஒரு மாதிரியான குரலில்.

“அதனால் ஒன்றும் பிரச்சனை இல்லை வசி. இப்போதே அவனுக்கு அழைத்துப் பேசு.” என்றார் ஆணையாக.

அவர் சொல் கேட்டு, அதே எண்ணிற்கு அழைப்பு விடுத்தான். அவன் அழைப்பிற்காகவே காத்துக்கொண்டிருந்தவன் போல, உடனே அழைப்பை எடுத்து தன் காதில் வைத்த ருத்ரா, தன் முன்னால் நிற்கும் கார்முகிலை பார்த்துக் கொண்டே,

“இப்போது அந்த புகைப்படத்தை நீ ஊடகத்திற்கு அனுப்பி வை வசி...” என்றான் நக்கல் தொணிக்கும் குரலில்.

“ருத்ரா..... வார்த்தைகளை அளந்து பேசு. கார்முகில் பத்திரமாக வீடு வந்து சேர வேண்டும்.” என்றான் கட்டளையாக.

அதற்கு பெருங்குரல் எடுத்து சிரித்த ருத்ரா, “நீ, இது போல் தானே என்னை அசிங்கப்படுத்த காத்திருந்தாய்!. இப்போது அதற்கான வாய்ப்பை நானே தருகின்றேன். ஏன் வேண்டாம் என்கின்றாய்!.” என்றான் நையாண்டியாக.

அவன் மொழி கேட்டு தன் பல்லைக் கடித்த வசி, “கார்முகில் பத்திரமாக என்னிடம் வந்து சேர வேண்டும். அப்படி இல்லை என்றால், உன்னை உரு தெரியாமல் அழித்து விடுவேன் ருத்ரா...” என்றான் சினம் கொண்டவனாக.

அதில் தன் நெற்றி சுருங்க, “உன்னால் முடிந்ததை செய்து கொள் வசி. சிறு வயதில் இருந்தே நீ செய்த தவறுகளுக்கு எல்லாம் நான் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருப்பதால், இப்போதும் அப்படியே இருப்பேன் என்று கனவு காணாதே!.” என்றான் அழுத்தமாக

தொடர்ந்து பேசியவன், “அது மட்டும் இல்லாமல், உன் காதலி விரும்பியே என்னுடன் வந்தாள்.” என்று அவன் சொல்லும் போதே, “நான் ஒன்றும் அவன் காதலி இல்லை....” என்று ருத்ராவின் அருகில் நின்று கார்முகில் கத்துவது, வசிக்கு அப்படியே அச்சுப்பிசங்காமல் கேட்டது.

“முகில்... முகிலிடம் அலைபேசியை கொடு. நான் அவளிடம் பேச வேண்டும்.” என்று பல்லைக்கடித்துக் கொண்டே பேசினான்.

“அதற்கு எகத்தாளமாய் சிரித்தவன், “இவளை வைத்து நான் என்ன உறுகாயா போடப்போகின்றேன்!. இவளை நீயே வைத்துக் கொள். அவளுடன் நான் இருக்கும் புகைப்படம் ஊடகத்தின் கையில் சிக்காமல் இருக்கவேண்டுமானால், என்னிடம் இருந்து நீ பறித்த ப்ராஜெக்ட்டை, திரும்பவும் என்னிடமே கொடு.” என்று சொல்லிவிட்டு, அலைபேசி இணைப்பை ரத்து செய்தான்.

கோபத்தில் மூச்சு வாங்க ருத்ராவை முறைத்துப்பார்த்தவள், “முதலில் ஒன்றை நினைவில் வைத்துக் கொள் ருத்ரா... நான் ஒன்றும் அவன் காதலி அல்ல.” என்றாள்.

அதற்கு அவளை மேலும் கீழும் வித்தியாசமாக நோக்கியவன், “நீ எதுவாக வேண்டுமானாலும் இருந்து கொள். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. இன்னும் சிறிது நேரத்தில், நீ திருமணம் செய்து கொள்ளப்போகின்றவன் வந்துவிடுவான். நான் வருகின்றேன்.” என்று சொல்லி தன் மகிழுந்தில் ஏறி அமர்ந்தான்.

தன் கைகளை பிசைந்து கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தவள், வேகமாக மறுபக்கம் உள்ள மகிழுந்தின் கதவைத் திறந்து ஏறிக்கொண்டாள்.

“உன்னை யார் என் வண்டியில் ஏற சொன்னது.” என்றான் வார்த்தைகளை, தன் பற்களுக்குள் கடித்துத் துப்பியபடியே.

தன் முன்னே இருந்த மயான பூமியை சுட்டிக்காட்டியவள், “இது எந்த மாதிரியான இடம் என்பதனை உன் கண்ணைக் கொண்டு பார் ருத்ரா... உனக்கு அழைத்து வர வேறு இடமே கிடைக்கவில்லையா!. இதில் என்னை இங்கே தனியே தவிக்கவிட்டு வேறு செல்லப்பார்க்கின்றாய்!.” என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு பேசினாள்.

இங்கே கார்முகிலின் வீட்டில், ப்ரியா கத்திக்கொண்டிருந்தார். “நான் எது நடந்துவிடக்கூடாது என்று நினைத்தேனோ அதுவே நடந்து கொண்டிருக்கின்றது. முகிலின் கண்களில் இருந்து நாம் யாரை மறைத்து வைத்தோமோ, இப்போது அவனே அவளைக் கடத்தி சென்றிருக்கின்றான். அவனை உடனே காவல்துறையில் பிடித்துக்கொடுக்க வேண்டும்.” என்றார்.

தன் நெற்றியை நீவிவிட்ட ராம், “கொஞ்சம் பொறுமையாக இரு ப்ரியா. அவன் தான் கார்முகில் இருக்கும் இடத்தை நம்மிடம் கூறிவிட்டானே!.” என்றவர் வசியிடம் திரும்பி, “வா வசி... அவன் கேட்டதைக் கொடுத்துவிட்டு, நாம் சென்று கார்முகிலை அழைத்து வரலாம்.” என்றவர் வசியை அழைத்துக்கொண்டு சென்றார்.

ஆனால் ப்ரியாவின் வாய் மட்டும், ருத்ராவை வசைப் பாடுவதை நிறுத்தவே இல்லை.

வசிக்கு ஆத்திரமாக வந்தது. கடினப்பட்டு, ருத்ராவிடம் இருந்து தான் அபகரித்த ப்ராஜெக்ட்டை திரும்பவும் அவனிடம் கொடுக்க மனதில்லை. இருந்தும் சூழ்நிலை கருதி அமைதியாக இருந்தான்.

இங்கே ருத்ராவோ, “சரி அப்படியே அமர்ந்து இரு.” என்று சொல்லி மகிழுந்தில் இருந்து சாவியை எடுத்துவிட்டு, அவனும் அழுத்தமாக அமர்ந்திருந்தான்.

சில கணங்களுக்குப் பிறகு தன் அமைதியை போக்கிய கார்முகில், “நான் எதற்காக நீ அழைத்ததும் உன்னுடன் வந்தேன் தெரியுமா!.” என்றாள் தன் குரலை கிசுகிசுப்பாக்கி.

‘தெரியவில்லை.’ என்று மறுப்பாக தன் தலையை ஆட்டியவன், “பழைய நண்பன் என்ற முறையில் நீ என்னோடு வந்திருக்கலாம்.” என்றான் யோசனையாக.

மானசிகமாக தன் தலையில் அடித்துக் கொண்டவள், ‘இவனிடம் சுற்றி முற்றி பேசினால் சரிபடாது.’ என்று நினைத்தவள்.

“நீ கொடுத்த பரிசை வாங்கிக் கொண்டு, உன்னுடன் மாயன பூமி என்று கூட பார்க்கமால் வந்திருக்கின்றேன். இதில் இருந்து உனக்கு என்ன தெரிகின்றது?” என்று அவனுக்கு எப்படியாவது, புரியவைத்து விட வேண்டும் என்ற முயற்சியில் பேசினாள்.

ஆனால் பகைமையையும், தனக்கு ஏற்பட்ட துரோகத்தையும் அனுதினமும் மனதில் வைத்து, அசுரனின் மனம் போலாகி இருந்த அவனது மனது எவ்வாறு காதல் என்ற அழகான உணர்வை உணரும்?.

அவள் மொழி ருத்ராவை நகைக்க வைத்தது. “என்னை பழிவாங்க நீயும் அந்த வசியும் எடுத்திருக்கும் புதிய வழியைப் போல் தெரிகின்றது கார்முகில்.” என்று முடிக்கும் போது கோபத்துடன் முடித்தான்.

கார்முகிலோ திகைத்துப் போனாள். தான் சொல்லியதை, அவன் தவறாக அர்த்தம் புரிந்துகொண்டான் என்பதை உணர்ந்து கொண்டவள், “உன் கண் முன்னால் இருப்பது அனைத்தும் தீயவை அல்ல ருத்ரா. உன் கண்களால் பார்ப்பதை விட்டுவிட்டு, உன் மனக்கண்களால் பார்.” என்றாள் ஏக்கம் நிறைந்த குரலில்.

“என்னால் எந்த கண்கள் கொண்டும் பார்க்க முடியாது எனக்கு தெரிந்தது எல்லாம் கருப்பும் வெள்ளை மட்டும் தான்.” என்றான் விரக்தியான சிரிப்புடன்.

“அதனால் என்ன?. நீ நினைத்தால் அதை மாற்றி, உன் வாழ்கையில் வண்ணங்களை கொண்டு வர முயற்சி செய்யலாமே!.” என்றாள் கண்களில் நீர் பொங்க.

தன் முகத்தை அழுந்த துடைத்தவன், அவள் முகத்தை ஏறிட்டு, அவள் கண்களுக்குள் ஊடுருவி, “உன்னுள் தோன்றும் ஐயங்களுக்கு என்னிடம் விடை தேடாதே கார்முகில்!.” என்றான்.

அவன் மொழி கேட்டு, “தான் சொல்ல வந்த விஷயத்தை ருத்ரா முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டான்.’ என்ற மகிழ்ச்சியான நினைப்போடு,

“இது ஐயம் எல்லாம் ஒன்றும் இல்லை ருத்ரா. நான் பல ஆண்டுகளாக என் ஐயங்களை எல்லாம் தெளிவித்து உணர்ந்து கொண்டது.” என்றவள் வியப்பையும், அன்பையும் ஒருங்கே இணைத்துக் கூறினாள்.

வியப்பினால் விரிந்த கண்களில் கோபக்கனியின் பொறிபறக்க இமையா நாட்டத்துடன், கார்முகிலை வெறித்துப் பார்த்தவன், அவள் கைகளில் இருந்த, அவன் பரிசளித்த சலங்கையை சுட்டிக்காட்டி, “இதை எதற்காக உனக்கு பரிசாக அளித்தேன் என்று தெரியுமா!.” என்றான்.

பதுமை போல் மெல்ல, “இல்லை.” என்று தலையை ஆட்டியவளைப் பார்த்து, “வசியை நீ திருமணம் செய்து கொண்ட பின், என் கண்களில் தெரியும் கருப்பு வெள்ளை நிறம் கூட உன் கண்களுக்குத் தெரியாமல், வாழ்க்கை முழுவதும் அந்தகாரத்தில் இருக்கும் கருமை போல உன் நிலை மாறப்போகின்றது. அதை உணர்த்தவே உனக்கு மணிகள் இல்லாத சலங்கையை பரிசளித்தேன்.” என்ற சொற்கள் சீறிக்கொண்டு பாயும் அம்புகளைப் போல ருத்ராவின் வாயிலிருந்து புறப்பட்டன.

கார்முகில் அவன் மொழி கேட்டு திகைத்துப் போனவளாக, “அந்த கருமையில் இருந்து என்னைக் காக்க நீ வர மாட்டியா ருத்ரா....” என்றாள் அவன் முகத்தைப் பார்த்து.

“இல்லை நான் வரமாட்டேன். அந்த வசியுடன் வாழ, நீ தகுதி ஆனவள் தான் என்று என் உள்ளம் கூறுகின்றது. பின்னப்பட்ட சதிவலைகளை அறுத்து எடுக்க அவகாசமின்றி அரைப்பைத்தியமாகி திரிகின்றேன். இதில் நீயும் ஏன், உன் ஐயங்களுக்கு என்னுள் விடை தேடுகின்றாய்!” என்று கத்தினான்.

அவன் சொல்லும் போதே அவனுக்கும், அவளுக்கும் உண்டான பால்ய நினைவுகள் எல்லாம், எத்தனையோ யுகம் ஆகிவிட்டதைப் போல தோன்றியது. அதற்குக் காரணம் ருத்ராவின் இந்த ஒட்டாத பேச்சே ஆகும்.

கார்முகிலுக்கு உள்ளம் அருவமாய் கேட்கும் சலங்கையின் ஒலி இப்போது கேட்கவில்லை. அதனால் அவள் உள்ளம் வழக்கமான அமைதியை அடையவில்லை. அது தந்த கோபத்தில், “இப்போது சொல்கின்றேன் நன்றாக கேள், உனக்கு என் மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை. ஆனால் என் கழுத்தில் ஏறும் தாலி நீ கட்டியதாக தான் இருக்கும்.” என்று உதடு துடிக்க, புருவங்கள் இரண்டும் மேலேறி சூளுரைத்தாள்.

அதில் முகத்தை வெறுமையாக வைத்துக் கொண்ட ருத்ரா, அசுர வேகத்தில் தன் மகிழுந்தை எடுத்தான். அவன் மகிழுந்து சீறிபாய்ந்து, அவன் வீட்டின் முன்பு சென்று நின்றது.

நடப்பது எதையும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் கார்முகில். சாரைப்பாம்பு போல வேகமாக தன் மகிழுந்தில் இருந்து இறங்கி, மகிழுந்தின் மறுபக்கம் சென்று அங்கு அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த கார்முகிலின் கையை பிடித்து வெளியே இழுத்தான்.

பின் அவளையும் இழுத்துக் கொண்டு, வீட்டின் உள்ளே செல்லும் போது, “அப்பா....” என்ற அறைகூவலுடன் வந்த ஐந்து வயது பெண் குழந்தை ஒன்று ஓடி வந்து ருத்ராவின் கால்களை கட்டிக்கொண்டது.

அதைப் பார்த்து ருத்ராவின் முகத்தில் பாசம் பொங்க, கார்முகிலின் முகத்திலோ, திகைப்பின் சாயல்.

அந்த குழந்தையை தன் கைகளில் ஏந்தியவன், அதிர்ச்சியாகி நின்றிருந்தவளைப் பார்த்து, “இப்போதும் என்னை திருமணம் செய்துகொள்ளும் நினைப்பில் தான் இருக்கின்றாயா?.” என்றான் நக்கல் தொணிக்கும் குரலில்.


(ஹாய் டியர்ஸ்!. தாமதத்திற்கு மன்னிக்கவும். சென்ற யூடிக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் செய்த அனைவருக்கும் என் நன்றிகள்....யூடியைப் படித்துப் பார்த்து, உங்களது கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். இனி தினமும் யூடி உண்டு. கதை முடியப்போகின்றது....

அதிர்ச்சியாகதீர்கள்... எனக்கும் புரிகின்றது. இப்போது தான் ஐந்தாவது யூடியே வந்திருக்கின்றது. ஆனால் வரும் சண்டேக்குள் கடைசி யூடி தளத்தில் பதிவிடப்படும். நன்றி.)
 
ஹாய் டியர்ஸ்! தாமதத்திற்கு, மன்னிக்கவும். இதோ யூடி 6, 7. படித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை என்னோடு பகிருங்கள். முகப்புத்தகத்தில் சிலருக்கு நன்றி தெரிவிக்க முடியவில்லை. அதனால் சாரி டியர்ஸ்.

சென்ற யூடிக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் செய்த அனைவருக்கும் என் நன்றிகள்.


அத்தியாயம் – 6

அச்சு வார்த்தது போல், அப்படியே ருத்ராவை உரித்து வைத்து இருக்கும் குழந்தையைக் கண்டவள், “இது... இது யார் குழந்தை ருத்ரா....” என்று திணறியபடி கேட்டவளுக்கு, பதில் ஓரளவு தெரிந்தே இருந்தது.

அவள் எண்ணங்களில் நெருங்கி நிற்கின்றான். ஆனால் எதிர்வாதுரையால் விலகிப் போகின்றான். அப்படி இருக்க அவள் எந்த நிலைபாடில் இருக்க?.

‘வாதைதானே உனக்கும்... உன் சொற்களால் என்னை ஏன் வதை செய்கின்றாய்!. என்னில் இருந்து முரண்படுகின்றாய்... நம் பிணக்குகள் முற்றிப்போகும் நாள் எந்நாளோ!’ என நினைத்து வருந்தியது அவள் மனம்.

ஆம் வசியைப் பற்றி ஒன்றும் அறியாதவள் இல்லை கார்முகில். இது வசியின் குழந்தையாக இருக்கலாம் என்று ஓரளவு கணித்தே வைத்திருந்தாள். இருந்தும் ருத்ராவின் வாயில் இருந்து என்ன வருகின்றது என்று பார்க்கவே, அவள் அவ்வாறு கேட்டு வைத்தாள்.

“சொன்னேன் அல்லவா... என் குழந்தை என்று...” என்று மிகவும் சாதரணமாக கூறினான் ருத்ரா.

ருத்ராவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, “இந்த ஆண்ட்டி யாரு அப்பா...” எனக்கேட்டது குழந்தை.

உடனே, “உன் அப்பாவின் கேர்ள் பிரண்ட்...” என்ற வார்த்தை அப்போது தான் உள்ளே நுழைந்து கொண்டிருந்த நகுலிடம் இருந்து வந்தது.

கண்களில் தோன்றிய கனலோடு, நகுலைப் பரத்து முறைத்தவன், “குழந்தையிடம் உனக்கு எப்படி பேச வேண்டும் என்று தெரியாதா!.” என்று அடிக்குரலில் சீறினான்.

“அப்பா... நான் ஒன்றும் குழந்தை இல்லை...” என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டது, அந்த சின்ன வாண்டு.

அதில் அங்கிருந்த அனைவரது மனதிலும் இரக்கம் உண்டானது. ருத்ராவின் அருகே சென்று, குழந்தையின் முதுகை தடவியவள், “உன் பெயர் என்ன பேபி...” என்றாள் ஆதுரமான குரலில்.

அதற்கு பதில் பேசாமல், ருத்ராவின் முகத்தைப் பார்த்தது குழந்தை. அவன் சொல் என்பது தலை அசைக்க, குழந்தையோ, “கனிஷ்கா...” என்று தன் செப்பு வாயைத் திறந்து கூறியது குழந்தை.

நகுலிடம் குழந்தையைக் கொடுத்தவன், “நீ கனியை உள்ளே அழைத்து செல்.” என்றான். அவனும் குழந்தையை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றதும், கார்முகிலை ஏறிட்டவன், “குழந்தை அழகாக இருக்கின்றாள் அல்லவா!” என்று தன் கைகளை மார்பு அளவு கட்டிகொண்டபடி கேட்டான்.

அதற்கு சற்றும் தாமதிக்காமல், “மிகவும் அழகாக இருக்கின்றாள் வசியின் குழந்தை.” என்றாள் புன்னகைத்தபடி.

எத்தனையோ காலத்திற்குப் பிறகு கார்முகிலின் முகத்தில் மனதால் மகிழ்ச்சியான புன்னகை தோன்றியது. அந்த புன்னகை அவளுடைய முகத்திற்கு எல்லையற்ற வனப்பைத் தந்தது.

ஆனால் எல்லாம் சிறிது காலம் தான். அடுத்து பேசிய ருத்ராவின் மொழி கேட்டு, அனைத்தும் ஒன்றும் இல்லாமல் வடிந்தது.

“ஆம் நீ சொல்வது உண்மை தான் இவள் வசிக்குப் பிறந்தவள் தான். ஆனால் இப்போது இல்லை. இவள் என் குழந்தை மட்டும் தான்.” என்று கூறிக் கொண்டே அவள் அருகே மிகவும் நெருக்கமாக வந்தவன், அவள் கண்களை ஊடுருவி, “உனக்கும் வசிக்கும் பிறந்த குழந்தை....” என்று மிகப்பெரிய குண்டை தூக்கி அவள் தலையில் அப்படியே இறக்கினான்.

வசியும் ராமும், மகிழுந்தில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தனர். அவர்கள் மகிழுந்து மயான பூமியை அடைந்ததும், வசிக்கு கோபம் பெருகியது.

ராம், “தவறான பாதையில் வந்துவிட்டாயா வசி...” என்றார் சுற்றும் முற்றும் பார்த்தபடி.

“இல்லை மாமா... நான் சரியாக தான் வந்தேன். அவன் நம்மை ஏமாற்றி விட்டான் போல...” என்றான் கண்களில் சினம் பொங்க.

“அவன் வீட்டிற்கு சென்று பார்க்கலாம்... நீ வண்டியை எடு..” என்று சொல்லிவிட்டு இருக்கையில் சென்று அமர்ந்தார்.

அவன் வண்டியை ஓட்டும் போதே, அவனுக்கு அலைபேசி அழைப்பு வந்து கொண்டே இருந்தது. அதைப்பார்த்த ராம், “முக்கியமான அழைப்பாக இருக்கப்போகின்றது. நீ முதலில் அதை எடுத்து பேசு வசி.” என்றார்.

மகளைப் பற்றிய கவலை நெஞ்சில் அரித்துக்கொண்டே இருந்தாலும், வசியின் நலனிலும் அக்கறை கொண்டு, அவனுக்கு அறுதல் அளிப்பது போல் பேச ஆரம்பித்தார் ராம்.

ஆனால் அவனின் பயம் அவர் மகளிடத்தில் இல்லாமல், வேறு ஒன்றில் இருப்பது பாவம் அந்த பாசக்கார தந்தைக்குத் தெரியவில்லை.

ஆனால் அவன் வாயோ, “நம் முகிலை விட, எனக்கு முக்கியமானது எதுவும் இல்லை மாமா...” என்று கூசாமல் பொய் உரைத்தது.

உண்மை சந்தேகத்திற்கு உள்ளவதால் பொய் அங்கு அரசாள்கின்றது. ஆனால் அது எவ்வளவு காலம்!. உண்மை ஒரு நாள் வெளிவர தானே போகின்றது!.

ஊரை அடித்து உலையில் போட்டு விடும் திராணி, வசிக்கு இருந்தாலும், அது மொத்தமாக செரித்து விட்டால், தன் பிற்கால பசிக்கு என்ன செய்வான்?

என்ன தான் பெரிய தொழில் அதிபராக வசி வலம் வந்தாலும், அந்த உழைப்புக்கு உண்மையான சொந்தக்காரன் என்னவோ ருத்ரா தானே!. அவன் உழைப்பை சில நேரம் அழித்தோ அல்லது அபகரித்தோ, அதில் குளிர் காய்கின்றான்.

வசியை வீழ்த்த போதுமான வலிமை, திண்ணம், உறுதி அனைத்தும் ஒன்றாக பெற்ற ருத்ராவோ, தான் தன் தந்தைக்கு செய்த சத்தியத்திற்காக அமைதி காக்கின்றான். ஆனால் எல்லாம் ஒரு அளவிற்கு மேல் தான்.

வசியின் ஆட்டாம் அளவுக்கு மீறி சென்று, எப்போது தன் பெயரைக் கெடுக்க ஒரு பெண்ணை ஏற்பாடு செய்து தன்னிடம் அனுப்பி வைத்தானோ, அப்போதே அவன் பொறுமை எல்லாம் ஓடி சென்றது.

இப்போது இருக்கும் ருத்ராவிற்கு பழிவாங்கும் எண்ணம் அளவுக்கு அதிகமாய் ஓங்கி இருந்தது.

அது தந்த உணர்ச்சியில் தான், ‘அவனை நேரடியாக தானே எதுவும் செய்யக்கூடாது... மறைமுகமாக செய்யலாம் அல்லவா!.’ என்றவன் நினைப்பு கார்முகிலிடம் தான் சென்றது.

அதற்காக கார்முகில் மேல் அவனுக்கு எந்த விதமான கோபமும் கிடையாது. பால்ய வயதில் அவள் பேசியது எல்லாம் அவன் நினைவில் இருந்தாலும், அதை அவன் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ருத்ராவின் வீட்டை நோக்கி தன் வண்டியை செலுத்திக்கொண்டு இருந்தவனின் அலைபேசி விடாமல் அழைத்தது.

எவ்வளவு நேரம் தான் அவனும் அமைதியாக இருப்பான். அலைபேசியை எடுத்து அதில் இருக்கும் எண்ணை பார்த்தே அழைப்பது யார் என்று கண்டுகொண்டவனுக்கு அந்த ஏசி வண்டியில் வியர்க்க ஆரம்பித்தது.

எடுக்காமல் போனால் பின்விளைவுகள் கடினமாக இருக்கும் என்பதனை உணர்ந்தவன் வேகமாக அதை தன் காதில் எடுத்து வைத்து, தன் குரலை கிசுகிசுப்பாக்கி, “ம்... சொல்லுங்க....” என்றான்.

அதற்கு அந்தப்பக்கம் என்ன சொல்லப்பட்டதோ, தடுப்பக்கருவியை பயன் படுத்தி தன் வண்டியை நிறுத்தினான்.

அவன் பயந்த முகத்தைப் பார்த்த ராம், “என்ன ஆனது வசி... எதுவும் பிரச்சனையா?. ருத்ரா தான் பேசுகின்றானா... கொடு நான் அவனிடம் பேசுகின்றேன்.” என்று கூறியபடியே அவனிடமிருந்து அலைபேசியை வாங்க கையை நீட்டினார்.

அதில் பயந்தவனின் முகத்தில் இன்னும் அதிகமாக வியர்க்க ஆரம்பித்தது, பதறி, தன் அலைபேசியை அவரிடமிருந்து தள்ளி வைத்தவன், “ருத்ரா இல்லை மாமா... நிறுவனத்தில் இருந்து விடாமல் அழைத்துக் கொண்டு இருக்கின்றனர். இப்போது நான் அவசரமாக அங்கே செல்ல வேண்டும்...” என்றான்.

“சரி வசி... நான் இங்கே இறங்கி கொள்கின்றேன். இங்கே டாக்ஸி நிற்கின்றதே!. அதில் நான் செல்கின்றேன்.” என்று அவன் பதறிய தோற்றம் பார்த்துக் கூறினார்.

“இல்லை மாமா... உங்களை இப்படியே என்னால் விட்டு செல்லமுடியாது...” என்று பசப்பு வார்த்தைகளைக் கூறினான்.

“அதனால் ஒன்றும் இல்லை வசி. நான் முகிலை அழைக்க செல்கின்றேன் அல்லவா... நீ உன் வேலையைப் பார். அது தான் முக்கியம். ஏதாவது பிரச்சனை என்றால் உன்னை அழைக்கின்றேன்.” என்று கூறிக்கொண்டே மகிழுந்தில் இருந்து கீழே இறங்கினார்.

“பார்த்து பத்திரம் மாமா... அந்த ருத்ரா மிகவும் ஆபத்தானவன்...” என்று எச்சரிக்கை செய்தான்.

“என்னிடமும் துப்பாக்கி உள்ளது வசி..” என்று தன் காற்சட்டைப் பையில் இருந்து துப்பாக்கியை வெளியே எடுத்து, அவனுக்குக் காட்டிவிட்டு, திரும்பவும் உள்ளே வைத்தவர், “நான் வருகின்றேன் வசி..” என்று சொல்லி சென்றார்.

அவர் சென்றது தான் தாமதம் அடித்துப் பிடித்து, தன் அலுவலகம் நோக்கி மகிழுந்தைக் கிளப்பினான் வசி.

வேகமாக தன் நிறுவனத்திற்குள் நுழைந்தவன், அங்கே வரவேற்பு அறையில் இருந்த பெண்ணிடம், “எங்கே அவள்...” என்றான் ஆவேசமாக.

அவன் குரல் கேட்டு நடுங்கியபடியே அவன் அறைக்கதவு பக்கம் தன் கையை நீட்டினாள் அந்த பெண்.

உடனே வேகமாக தன் அறைக்குள் நுழைந்தவன், அங்கு இருக்கையில் அமர்ந்திருந்தவளின் கழுத்தைப் பிடித்தான்.

அவளோ மிகவும் சாதாரணமாக தான் கற்ற வர்மக்கலையைப் பயன்படுத்தி, தன் கழுத்தைப் பற்றி இருந்த வசியின் கையில் இருந்த நரம்பை அழுத்தமாக பற்றினாள்.

உடனே வலி தாங்காமல், தன் கையை அவள் கழுத்தில் இருந்து எடுத்து தன் கையை உதற ஆரம்பித்தான்.

அந்த பெண்ணோ, மிகவும் சாவாகசமாக மேலும் கீழும் அவனைப் பார்த்தவள், “எவ்வளவு தைரியம் இருந்தால், என் கழுத்தை பற்றுவாய்!.” என்று உதடு துடிக்க பேசினாள்.

தன் கையை உதறிக் கொண்டே அவளைப் பார்த்து தன் பல்லைக் கடித்தவன், “இப்போது எதற்காக இங்கு வந்திருக்கின்றாய்?.” என்றான் கேள்வியாக.

“உனக்கு அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் என்று கேள்விப்பட்டேன்... அதனால் அதை நிறுத்த வந்தேன்...” என்று சொல்லிக் கொண்டே, இதற்கு முன் தான் அமர்ந்திருந்த இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள்.

வசிக்கு மிகவும் பயம் பிடித்துக் கொண்டது, ‘இவளை எப்படி வெளியே அனுப்புவது.’ என்று அதி தீவிரமாக அவனது மூளை யோசிக்கத் தொடங்கியது.

ஆனால் தன்னை சமாளித்துக் கொண்டவனாக, “யார் நீங்கள்? வேலை நடக்கும் இடத்தில் எதற்காக தொந்தரவு செய்கின்றீர்கள்?.” என்று சில வினாடிகளுக்கு முன்பு அவள் கழுத்தைப் பற்றியதையும் மறந்து பேசினான்.

அதற்கு முகத்தில் தோன்றிய புன்னகையுடன் வசியை நோக்கினாள். அந்த முகமலர்ச்சியானது வசியின் உள்ளத்தில் பயத்தை உண்டாக்கியது.

‘போன தடவை அழுது புரண்டு வாடி வதங்கிய கொடி போல் சென்றவள், இப்போது மிகவும் உற்சாகமாக இருக்கின்றாள். நம்மை கவக்க ஏதேனும் திட்டத்துடன் வந்திருக்கின்றாளா!.’ என்ற எண்ணம் அவன் மனதில் உண்டாகி முகம் சுருங்கும் படி செய்தது.

அவன் மொழி கேட்டு எகத்தாளமாய் அவனைப் பார்த்து சிரித்த அந்த பெண்ணின் பெயர் நிலா. வசியை பணத்திற்காக இல்லாமல் மனதால் தீவிரமாக நேசிக்கும் ஒரே பெண்.

ஆம் பாம்பின் நஞ்சை விட கொடிய மனம் படைத்த வசியைப் போன்றோரை காதலிக்கும் பெண்களும் இருக்கத் தான் செய்கின்றனர். காதலுக்கு கண்கள் இல்லை என்று இதை வைத்து தான் பெரியோர்கள் சொல்லி இருக்கின்றனர் போல.
 
அத்தியாயம் – 7

“உனக்கும் வசிக்கும் பிறந்த குழந்தை தான் கனிஷ்கா.” என்று சொன்ன ருத்ராவை ஏறிட்டவள், “இதை நீ நம்புகின்றாயா?.” என்றாள் வெறுமையான குரலில்.

அதற்கு இல்லை என்று தன் தலையை ஆட்டியவன், “நான் இதை நம்பவில்லை. ஏனென்றால், இதை சொன்னது வசி தான். எனக்கு அவனையும், தெரியும் உன்னையும் தெரியும்.” என்று அவன் வார்த்தைகளை உதிர்த்ததும் தான் கார்முகிலின் உள்ளம் அமைதி அடைந்தது.

சில கணங்களுக்குப் பிறகு தன் அமைதியைக் கலைந்தவள், “இந்த குழந்தை உன்னிடம் எப்படி வந்தது ருத்ரா?.” என்றாள் கேள்வியாக.

தன் முகத்தை அழுந்த துடைத்தவன், “அது ஒரு பெரிய கதை. எனக்கும் கனியை அனாதை ஆசிரமத்தில் சேர்க்க சிறிதும் விருப்பம் இல்லை.” என்றான்.

அதற்கு தன் தலையை ஆட்டிக் கொண்டவள், “சரி. எனக்கு என்ன பதில் சொல்லப்போகின்றாய்.” என்றாள் தன் கைகளை குறுக்கே கட்டிக் கொண்டு.

அதற்கு தன் நெற்றியை நீவி விட்டவன், “உனக்கு எத்தனை தடவை தான் சொல்லி புரிய வைப்பது.” என்று சொல்லும் போதே, அந்த இடத்திற்கு வந்தார் ராம்.

மிகவும் கோபத்துடன் அவனை நோக்கி வந்தவர், “உன் வழியில் நாங்கள் வருவதே இல்லை. அப்படி இருக்க எங்கள் வழியில் ஏன் குறுக்கிடுக்கின்றாய்.” என்று வார்த்தைகளை தன் பற்களுக்குள் கடித்துத் துப்பினார்.

அதற்கு எதுவும் பேசாமல், அசட்டையாக சுவரை வெறித்துக் கொண்டு நின்றிருந்தான் ருத்ரா. அவன் திமிர் தனமான தோற்றம் ராமிற்கு அதிக கோபத்தை உண்டு செய்தது.

அது தந்த தாக்கத்தில், தன் காற்சட்டைப் பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து, அவனைக் குறி பார்த்தார்.

அதற்கு கொஞ்சமும் அசராத ருத்ரா, சுட வேண்டுமானால் சுட்டுக்கொள். என்ற தோற்றத்தில் நின்றிருந்தான்.

இதில் பதறியது என்னவோ கார்முகில் தான். ஓடி சென்று தன் தந்தைக்கும் காதலனுக்கும் இடையே நின்றவள், “அப்பா... என்ன செய்கின்றீர்கள்... நான் விருப்பப்பட்டு தான் ருத்ராவுடன் வந்தேன்.” என்றாள் அழுத்தமான குரலில்.

அவள் குரல் கேட்டு ராமின் கை தளர்ந்தது. தான் காதால் கேட்டது சரி தானா என்பதை அறிந்து கொள்ள, ராம் திரும்பவும் தன் மகளைப் பார்த்து, “என்ன சொல்கின்றாய்?. உனக்கு எப்படி ருத்ராவைத் தெரியும்.” என்று அவள் கண்களுக்குள் ஊடுருவிக் கேட்டார்.

அதற்கு சளைக்காமால் அவரை எதிர் பார்வை பார்த்தவள், “எனக்கு சிறுவயதில் நடந்தது அனைத்தும் நியாபகத்தில் உள்ளது அப்பா. நீங்கள் யாரை என்னிடம் இருந்து மறைக்க வேண்டும் என்று நினைத்தீர்களோ, அவன் எப்போதோ என் மனதில் சிம்மாசன மிட்டு அமர்ந்து கொண்டான்.” என்று சொல்லும் போதே, ராமின் ஐந்து விரல்களும், கார்முகிலின் கன்னத்தில் பதிந்தது.

அவள் அதிர்ச்சியுடன், “அப்பா...” என்க.

அவர் எது நடக்கூடாது என்று நினைத்து இருந்தாரோ அதுவே நடந்து விட்டது. இனி கார்முகிலின் குழம்பிய எண்ணத்தையாவது திசை திருப்பலாம் என்ற நோக்கோடு, அவளிடம பேச ஆரம்பித்தார்.

ஆனால் அவர் நினைப்பது போல் அவள் மனது குழம்பாமல், ருத்ராவை காதலிப்பதில் தீவிரமாக உள்ளது என்று அவருக்குத் தெரியவில்லை.

மெதுவாக அவள் முன்னே வந்தவர், அவள் கன்னத்தைத் தடவி, “வலிக்கின்றதா முகில்... என்னை மன்னித்துவிட்டு, உன்னைக் காணவில்லை என்ற கவலையில் அவ்வாறு நடந்து கொண்டேன்.” என்றார்.

அதற்கு எதுவும் பேசாமால் அமைதியாக பதுமையைப் போலவே நின்றிருந்தாள் கார்முகில்.

தொடர்ந்து பேசியவர், “அம்மாடி முகில், இந்த ருத்ரா உன்னிடம் என்ன சொன்னான் என்பது தெரியவில்லை. ஆனால் அவன் சொல்வது எதையும் நம்பாதே!. உனக்கு மிகவும் இளகிய உள்ளம். அதனால் தான் அவன் அனாதையாக இருப்பதைப் பார்த்து உன் உள்ளம் பொறுக்கவில்லை.” என்று மிகவும் சாதுரியமாக பேசி, தன் காரியத்தை சாதிக்க நினைத்தார்.

ருத்ரா அவர் பேச்சை சிறிதும் பொருட்படுத்தவில்லை. ஆனால் கார்முகிலோ, தன் தந்தையை அறிந்தவளாக, கைகைக் கட்டிக் கொண்டு, மேலே சொல்லுங்கள் என்பதனைப் போல அவரைப் பார்த்தாள்.

“நீ ருத்ராவை நினைத்துக் கவலை கொள்ளாதே!.” என்று சொல்லிக் கொண்டே ருத்ராவை ஒரு பார்வை பார்த்தவர், “நீ நினைப்பது போல, இவன் ஒன்றும் அவ்வளவு நல்லவன் கிடையாது.” என்றார்.

அதற்கு கார்முகில் எதுவோ சொல்ல வருவதற்குள் முந்திக்கொண்ட ருத்ரா, “எனக்கு வேலை இருக்கின்றது. இருவரும் வெளியே செல்கின்றீர்களா?.” என்று சொல்லிக் கொண்டே கதவை கைக்காட்டினான்.

அதில் அவமானமடைந்த ராம், கார்முகிலின் கையை இழுத்துக் கொண்டு வெளியே சென்றார்.

அவரிடம் இருந்து தன் கையை உதறியவள், வேகமாக உள்ளே ஓடினாள். ராமும், “முகில் நில்லு....” என்று கத்திக் கொண்டே அவளின் பின்னால் ஓடினார்.

ஓடி சென்று மூச்சு வாங்க ருத்ராவின் முன்பு நின்றவள், அவன் கேள்விப் பார்வையை கண்டுகொள்ளாமல், அங்கே அவனுக்கு இடப்பக்கமாக இருந்த மேஜையில் இருந்து, அவன் அளித்த பரிசான சத்தம் கேட்காத சலங்கையை தன் கையில் எடுத்துக் கொண்டவள், “இது நீ எனக்கு அளித்த முதல் பரிசு ருத்ரா. நம் காதலின் சின்னம்...” என்று அவள் சொல்லும் போதே, ருத்ராவின் கோபம் பலமடங்கு எகிறியது.

அவளை அடிக்க தன் கையைக் கொண்டு சென்று, பின் பாதியிலையே நிறுத்தி, தன் கோபத்தை அரும்பாடு பட்டு கட்டுப்படுத்தியவன், “இங்கிருந்து ஓடிவிடு கார்முகில்...” என்றான் பல்லைக் கடித்தபடி.

அதற்குள் ராம் வந்து எதுவும் பேசாமல் அவளை இழுத்துச் சென்றார். அவர் இழுத்த இழுப்பிற்கு அவருடன் சென்றவள். அவன் பரிசை, தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்.

*************************************

கால் மேல் காலைப்போட்டுக் கொண்டு, இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்தபடி வசியை ஏறிட்ட நிலா, “என்ன வசி! நீ பேசுவது புதியதாக உள்ளது!.” என்று சொல்லிவிட்டு, அந்த அறையை சுற்றும் முற்றும் பார்த்தவள், “இதோ இதே அறையில் தானே என்னிடம் கொஞ்சி குலாவினாய்...” என்றாள் அறிவும், அழகும் ஒருங்கே பெற்ற நிலா.

தன் முகத்தை அழுந்த துடைத்துவிட்டு அவளைப் பார்த்தவன், “இப்போது எதற்காக இங்கு வந்திருக்கின்றாய்?. உனக்கும் எனக்கும் இனி எந்த உறவும் கிடையாது என்று அன்றே உன்னிடம் கூறியதாக நியாபகம்.” என்று சுற்றி வளைக்காமல் நேராக விசயத்திற்கு வந்தான்.

அதற்கு சற்றும் தாமதிக்காமல், ஈட்டி போல் வந்தன நிலாவின் வார்த்தைகள். “உன்னை என்றும் நான் விடுவதாக இல்லை வசி.” என்றாள் அவனை நேர்பார்வை பார்த்தபடி.

தன் நெற்றியை சுருக்கியவன், “என்ன வேண்டும் உனக்கு... பணம் வேண்டுமா?. கேள் எவ்வளவு வேண்டுமானாலும் கேள். நான் தருகின்றேன். இங்கிருந்து சென்று விடு.” என்றான் கர்வமாக.

அதற்கு தன் உதட்டை ஒரு பக்கமாக வளைத்து சிரித்தவள், “எனக்கு உன் பணம் தேவை இல்லை வசி. ஏன் என்றால் உன்னை விட அது என்னிடம் அதிகமாகவே இருக்கின்றது.” என்றாள்.

“ஓ.... புதியதாக ஒருத்தனை பிடித்துவிட்டாயா?. பெரிய பணக்காரனா அவன்... பின் ஏனடி இங்கு வந்து என்னை தொந்தரவு செய்கின்றாய்!.” என்று அவன் சொல்லும் போதே, விருட்டென்று இருக்கையில் இருந்து எழுந்தவள், அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டாள்.” அவள் விட்ட குத்தில், அவன் வாயில் இருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது.

அதில் நிலை தடுமாறியவனின் சட்டை காலரை பற்றியவள், “எனக்கு நீ தான் வேண்டும் வசி. இந்த ஜென்மத்தில் நீ மட்டும் தான் என் கணவன் என்று வசனம் பேச மாட்டேன். ஆனால் உன்னை யாருக்கும் விட்டுத் தரமாட்டேன்.” என்று அவள் சொல்லும் போதே, தன் சட்டையை அவள் கையில் இருந்து வலுக்கட்டாயமாக பிரித்தவன், அலைபேசி மூலம் தன் செக்யூரிட்டியை அழைத்தான்.

“என்னைப் பார்த்து பயந்து போய்விட்டாயா வசி. நீ செக்யூரிட்டியை அழைக்க தேவை இல்லை. நானே செல்கின்றேன்.” என்று சொல்லிக்கொண்டு வெளியே செல்லப்போனவள், மறுபடியும் திரும்பி அவனைப் பார்த்து, “நன்றாக நியாபகம் இருக்கட்டும் வசி. என்னை ஏமாற்ற நினைக்காதே!.” என்றாள்.

“ஹேய்... நிறுத்துடி. விட்ட பேசிக்கிட்டே போற. கேவலம் என்கிட்ட கை நீட்டி சம்பளம் வாங்குற அன்னக்காவடி நீ என்னை அரட்டுகின்றாயா...” என்றான் கண்களில் கோபம் கொப்பளிக்க.

“ஆணவம் கொண்டு ஆடாதே வசி. நான் உன்னிடம் வேலை பார்த்தேன் தான். ஆனால் உன்னை உண்மையாக என் மனதால் நேசித்தேன். ஆனால் நீயோ அதற்கு விலை கொடுக்கின்றாய். உன்னை பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருந்தும், ஏன் உன்னைத் தேடி வந்தேன் தெரியுமா... என்றாவது ஒரு நாள் என் காதல் உன்னை மாற்றும் என்ற நினைப்பில் தான்...” என்று கோபமாக ஆரம்பித்தவள், உருக்கமாக சொல்லி முடித்தாள்.

அதற்கு பெருங்குரல் எடுத்து சிரித்தவன், “இத்தனை வருடங்களாக மாறாத என்னை நீ மாற்றிவிடுவாயா... அதிகம் தொலைக்காட்சி தொடர்களை பார்க்கின்றாய் என நினைக்கின்றேன்.” என்று அவன் சொல்ல, அப்போது செக்யூரிட்டி உள்ளே நுழைய, வசியைப் பார்த்து முறைத்துக் கொண்டே வெளியேறினாள் நிலா.

அவள் வெளியேறி சென்றதும், ‘இவளுக்குப் பின்னால் அந்த ருத்ரா இருப்பானோ!’ என்று யோசித்தவன், வேகமாக தன் அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தான்.

அந்தப்பக்கம் இணைப்பு கிடைத்ததும், “நான் வசி பேசுகின்றேன். நிலாவை கண்காணிப்பு செய். அவள் எங்கெல்லாம் செல்கின்றாள் என்ற தகவலை எனக்கு அனுப்பு.” என்றான்.

அதற்கு அந்தப்பக்கம் என்ன சொல்லப்பட்டதோ, உடனே பதறியவனாக, “இல்லை இல்லை... என் திருமணம் முடியும் வரை அவளை ஒன்றும் செய்ய வேண்டாம். அவள் வெறும் பல் பிடுங்கிய பாம்பு மட்டும் தான். அவளால் என்னை எதுவும் செய்ய முடியாது.” என்று சொல்லி வைத்தான்.

அன்று இரவு கார்முகில் தன்னுடைய வீட்டில் தனது அறையில் தன்னந்தனியாக அமர்ந்து இருந்தாள்.

அந்த அறையில் இருந்த மெல்லிய விளக்கு மட்டுமே, அவளுக்குத் துணையாக எரிந்து கொண்டிருந்தது. அவளுடைய உள்ளமோ பல்வேறு சிந்தனைகளில் ஆழ்ந்திருந்தது. அவளின் நீண்ட கண்களோ, தன் கைகளில் தவழ்ந்து கொண்டிருந்த ருத்ரா கொடுத்த சலங்கையில் நிலை பெற்று இருந்தது.

தன் தந்தையுடன் வீட்டிற்குள் வரும் போதே, தன் தாயிடம் இருந்து ஏகப்பட்ட வசை சொற்களை வாங்கி இருந்தாள். இப்போது இன்னும் பாக்கி சொற்களைப் பேசுவதற்கு என்றே அவள் அறைக்குள் நுழைந்தார் ப்ரியா.

“என்னடி அமைதியாக அமர்ந்து கொண்டிருக்கின்றாய்?. ஏதாவது திட்டம் தீட்டலாம் என்று கனவு காணாதே!.” என்று சொல்லி அவள் மனதை நோகடிக்க ஆரம்பித்தார்.

“அம்மா! உங்களிடம் இல்லை என்று நிருபித்து வாதமிட்டுக் கொண்டிருக்க எனக்கு நேரம் இல்லை.” என்று சொல்லி அமைதியானாள்.

இவளிடம் பேசி பயனில்லை என்று நினைத்து, தான் சொல்ல வந்த செய்தியை சொல்ல ஆரம்பித்தார் ப்ரியா.

“நாளையே உனக்கும், வசிக்கும் நிச்சயதார்த்தம், நாளை மறுநாள் திருமணம்.” என்றார் சர்வ சாதாரணமாக.


 
Status
Not open for further replies.
Top