வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தீமை - 01

GG writers

Moderator
தீமை தான் வெல்லும்..

Disclaimer: இந்தக்கதை வெறும் கற்பனையே.
இதில் வரும் கதாநாயகனின் பழக்க வழக்கங்கள் எந்த ஒரு வன்முறையையும் சமூக கலாசார சீரழிவுச் செயலையும் ஆதரிப்பதற்கு எழுதப்பட்டதல்ல. கதையின் போக்கில் அது உங்களுக்கே புரியும்.

இது எனது சொந்தக் கற்பனை அன்றி பிற படைப்புக்களின் தழுவல் அல்ல.கதையில் எந்த இடத்திலும் முகம் சுளிக்க வைக்கும் எந்த ஒரு காட்சியும் இடம் பெற மாட்டாது.

தீமை 01


குருதி வழிய அந்தப் பாதையில் விழுந்து கிடந்தான்,அவன்.
வதனம் குருதியில் குளித்திருந்தது.

ஆள் அரவமற்ற வீதி.
வண்டி இடித்துச் செல்லும் போது கத்தியது நிச்சயம் யாருக்குமே கேட்டிருக்காது.

கண்ணெக்கெட்டும் தூரம் வரை யாரும் இல்லை.அதி வேகத்துடன் கடந்து சென்ற வாகனங்களும் அவனை கண்டுகொள்ளவில்லை.

இதழ் பிளந்து சுவாசித்த படி அரை மயக்கத்தில் இருந்தவனின் முன்னே வந்து நின்றது,ஒரு வண்டி.

தன் அகன்ற பாதங்களை நிலத்தில் ஊன்றி விழிகளில் கோபம் மின்ன அந்த காரில் இருந்து இறங்கினான்,ஒருவன்.
சாதாரண ஒரு மனிதன் என்றால் கீழே விழுந்திருந்தவனின் நிலையைக் கண்டு கத்தியிருப்பர்..
கதறியிருப்பர்..
சிலர் துடித்தே விட்டிருப்பர்..

அவன் முகத்தில் அப்படி எந்த வித உணர்வும் இல்லை.முகம் முழுவதும் வன்மம் மட்டுமே.அந்த விழிகளின் ஓரம் மட்டும் துளியாய் ஒரு விரக்தி,
அவனால் தானே தன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதென்பதாய்.

அந்த மயக்கத்திலும் தன் முன்னே வந்து நின்றவனைக் கண்டதும் கீழே விழுந்திருந்தவனில் இருந்து ஆசுவாசப் புன்னகையொன்று.

"ஹா..ஹாஸ்..பிடல் கூட்டிப் போடா.." திக்கித் திணறி சொன்னவனை வெறுமையாய் பார்த்து வைத்தவனின் மனதில் உணர்வுகளின் போராட்டம்.

"நா..நா..த..தப்பு தா..தான்..ஹா..ஹா..ஸ்பி..பிடல்..கூட்டி.." அதற்கு மேல் அவனாலும் பேச முடியவில்லை.
மூச்சு வாங்கியது.

"நீ பண்ண வேலக்கி..நா ஹாஸ்பிடல் கூட்டிப் போகனுமா டா...வேற வண்டி வந்தா ஏறிப் போ..இல்லன்னா எக்கேடோ கெட்டுத் தொலடா நாயே.." அதற்கு மேலும் அங்கிருக்க முடியாமல் தன் வண்டியை கிளப்பிக் கொண்டு நகர்ந்திருந்தான்,
மனிதாபிமானத்தையும் மனசாட்சியையும் குழி தோண்டி புதைத்துக் கொண்டு.

●●●●●●●●●

அந்த இரவு நேர கேளிக்கை விடுதியில் பரவியிருந்த மெல்லிய வெளிச்சத்தில் கசிந்த இசையின் தாளத்திற்கேற்ப ஆடிக் கொண்டிருந்தனர்,
ஆண்களும் பெண்களும்.

சிலர் கையில் மதுபானக் குவளைகளும் தவழ்ந்து கொண்டிருக்க இன்னும் சிலரின் பார்வைகள் எதிர்ப்பால் இனத்தவரின் மேல் ஆர்வத்துடன் படிந்தது.

அந்த இடத்தில் ஓரமாய் போடப்பட்டிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தவனின் கரம் மதுபானக்குவளை ஒன்றை தாங்யிருக்க இதழ்களில் எள்ளல் நகைப்பு.

பார்வையோ மதுவின் வீரியத்தில் சுற்றம் உரைக்காது ஆடிக் கொண்டிருந்த பெண்களின் மீது விட்டேற்றியான பாவத்துடன் படிந்து மீள கரமோ தன் கையில் இருந்த குவளையில் இருந்த மதுவை மொத்தமாய் தன் தொண்டைக்குள் சரித்துக் கொண்டது.

"விவேக்..வன்ஸ் மோர்.." தன் அருகே இருந்தவனிடம் கட்டளையிட அவனும் தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்து அவன் கேட்டதை கொண்டு வந்து கொடுத்திருந்தான்.

அதை அப்படியே ஒரே மிடரில் வாய்க்குள் சரித்துக் கொண்டு எழுந்து நின்றவனின் நடை துளியும் தள்ளாடவில்லை.

அழுத்தமான தன் நடையுடன் அங்கு ஒரு ஓரமாய் ஆடிக் கொண்டிருந்த பெண்ணின் அருகே நெருங்கிட அவனின் செயலில் எப்போதும் போல் நொந்தவனாய் ஒரு மூலையில் ஒதுங்கி நின்றான்,விவேக்.

அவனுக்கு ஒழுக்கம் முக்கியம்.இரவு நேரத்தில் பார்ட்டி,பப் எனத் திரிவது துளியும் பிடிக்காதிருக்க இதையெல்லாம் அவன் சகித்துக் கொள்வது அவனின் முதலாளிக்காகத் தானே.

பற்களை நறநறத்தவாறு விவேக் முறைக்க அது புரிந்தாலும் கணக்கில் கொள்ளவில்லை,
பையனவன்.

அதிலும் அந்த பெண்ணிடம் அவன் குழைந்து வழிந்து பேசுவதைக் கண்ட விவேக்குக்கு அதற்கு மேலும் அங்கு இருக்க முடியாது போல் தோன்ற விருட்டென வெளியேறிச் சென்றிருந்தான்,கோபத்தை அடக்கும் வழி தெரியாது.

அவனோ அந்தப் பெண்ணை மையலாய் பார்த்தவாறே "பேபி..ஷெல் வீ டான்ஸ்..?" எனக் கையை நீட்ட அந்தப் பெண்ணின் விரல்கள் இவனின் கரத்தைப் பற்றிக் கொண்டது.

மறுநாள் அழகாய்ப் புலர தன் உருவத்தை கண்ணாடியில் விசிலடித்த படி ஆராய்ந்துக் கொண்டிருந்தான்,
அபிரக்ஷன்.

இதழ்கள் அழுந்த மூடியிருக்க முகத்தில் ஒரு வித இறுக்கம் மட்டுமே.விழிகளில் அகம்பாவம் நிரம்பி வழிந்தது.

அவனறைக்கு வெளியே நேரத்தைப் பார்த்தவாறு தன் முதலாளிக்காக காத்துக் கிடந்தான்,
விவேக்.

அபிரக்ஷன் தாமதிக்கவில்லை.
அவன் தான் முதலாளிக்கு பயந்து நேரத்துக்கு முன்னமே வந்து சேர்ந்திருந்தான்.
இல்லையென்றால்,
அவனின் காட்டுக் கத்தலை யாரால் தாங்கிக் கொண்டிட இயலும்..?

சொன்னது போலவே நேரத்திற்கு தயாராகி வெளியே வந்து நின்றான்,அபி.
அணிந்திருந்த க்ரே கலர் ஷர்ட்டும் அதற்கு மேல் இட்டிருந்த கரிய நிற கோர்ட்டும் அவனுக்கு பாந்தமாய் பொருந்தி இருந்தது.

ஆளுமையும் கம்பீரமுமாய் நின்றிருந்தவனின் தோற்றத்தில் வியந்தாலும் அவனின் செயல்களும் சரியாய் இருக்க கூடாதா என்கின்ற எண்ணம் என்றும் போல் இன்றும் விவேக்கின் மனதில் எழாமல் இல்லை.

தன் கையில் இருந்த உயர்ரக வாட்சில் நேரத்தை பார்த்தவாறு விடுவிடுவென அவன் நடைக்கு ஈடுகொடுத்து பின்னூபு நடந்த விவேக்குக்கு கால்கள் வலித்தது.

"எதுக்கு தான்..இப்டி சக்கரத்த கட்டிட்டு ஓடறாரோ.." தனக்குள் பலமுறை நினைத்திருக்க ஆனால், ஒரு தடவையேனும் வாய் திறந்து ஆணவனிடம் சொல்லியதில்லை.
அதற்கு விஷேடமாய் ஒரு தைரியம் பிறக்க வேண்டுமே.

வண்டியில் ஏறி தன் லேப்டாப்பில் மூழ்கியவனின் செவிகளோ விவேக்கின் வார்த்தைகளையும் தனக்குள் உள்வாங்கி கிரகிக்க அதற்கு பதிலுரையும் இயம்பிக்கொண்டு தான் இருந்தன,அவனிதழ்கள்.
அலுவலத்தினுள் நுழைந்தவனின் அழுத்தமான காலடியோசைக்கே மொத்தமாய் நிசப்தமாகி விட்டிருந்தது,அவன் கடந்து சென்ற இடங்கள்.

தலையசைப்பு கூட இல்லாமல் அழுத்தமான பார்வையுடன் அனைவரையும் கடந்து தன் கேபினுக்குள் நுழைந்து சுழல் நாற்காலியில் அமர்ந்து தன் வேலையில் மூழ்கியவனை மூச்சு வாங்க பார்த்துக் கொண்டிருந்தான்,
விவேக்.

"எப்டி தான் இவ்ளோ நடந்தும் டயர்ட் ஆகாம இருக்காரோ.." தனக்குள் நினைத்தவனோ அவனின் அறையின் பக்கத்தில் இருந்த தன் அறைக்குள் நுழைந்து கொண்டு தன் வேலையைத் தொடர்ந்தான்.

அதே நேரம்,
தன் பின்னலை தளர்த்தி மீண்டும் பின்னிக் கொண்டிருந்தவளை இயலாமையுடன் பார்த்திருந்தாள்,
கீர்த்தி.

"என்ன ஆது..எதுக்கு இப்டி பண்ணிட்டு இருக்க..நீ தான் பொண்ணு பாக்க வர சொன்ன..இப்போ ஒரு மாதிரி இருக்க.." என்க அவளை பார்வையால் முறைத்து விட்டு அறைக் கதவை அடைத்திருந்தாள்,
ஆதுரியாழ்.

"உஷ்ஷ்ஷ்..மெதுவா பேசு..கத்தாத..இங்க கேட்டா ப்ரச்சன ஆயிரும்..நா எங்க வர சொன்னேன்..சித்தி தான் வர சொன்னாங்க..நான் அவங்க பக்கத்துல இருந்ததால தான் உன் கிட்ட அப்டி பேசுனேன்.."

"அப்போ நெஜமாவே உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லயா..? செத்துப் போனவன நெனச்சு எத்தன நாள் பீல் பண்ணிகிட்டு இருப்ப..அதுவும் அந்த அர்ஜுன்கு நீ அவன லவ் பண்ணினதே தெரியாது..இதுல காதல் கருமாந்துரம்னு பினாத்திகிட்டு இருக்க.."

"அவங்களுக்கு அவங்க பீலிங்க்ஸ் பெருசு கீர்த்தி..செத்துட்டான்னு உடனே மறந்துர முடியுமா..? எந்த எடத்துலயும் அவன் பண்ணுன ஹெல்ப்ப என்னால மறக்கவே முடியாது.."

"ஆது..அவன் மேல இருக்குற லவ்வால நீ உன்னோட லைப தான் ஸ்பாயில் பண்ணிக்கிற..அவன் உசுரோட இருந்தா கூட நீ இப்டி இருக்குறது நியாயம்னு சொல்லலாம்..ஆனா இப்டி செத்ததுக்கு அப்றமும் உன்ன லவ் பண்ணாதவன் மேல லவ்வ வச்சு சுத்திகிட்டு இருக்குறது சுத்த பைத்தியக்காரத்தனம் ஆது.." தோழி சொன்னது புத்திக்கு உரைத்தாலும் அதை மனது ஏற்றுக் கொள்ளவில்லை.

"கீர்த்தி..இப்ப நீ வேணுன்னா பாரு..வர்ரவன் கருப்பட்டி கலர்ல பொண்ணு இருக்குன்னு வேணான்னு தான் சொல்லப் போறான்..அது தான் நடக்கும்..இதுல நா லவ் பண்ற பையன பத்தி நெனச்சா என்ன..? நெனக்காட்டி என்ன..? அமைதியா இரு.." என்றவளை அழைக்கும் சத்தம் கேட்க கூந்தலை சரி செய்த படி படியில் இறங்கி வந்தவளின் தோற்றத்தை தூரத்தில் இருந்து கண்ட மாப்பிளையின் தாயின் முகம் கசங்கியது.

"வாம்மா..ஆது.." என்று அவளின் சித்த தன்னருகே அழைக்க இயந்திரத்தன்மையுடன் அவர்களுக்கு வணக்கம் வைத்தவளின் இதழ்களில் ஒட்ட வைத்த புன்னகை.

"ஆமா..பொண்ணு பாக்க கலரில்லாம இருந்தாலும் கொஞ்சம் கலயாத்தான் இருக்கு..ஆமா என்னமா படிச்சிருக்க..?"

"அவ..அவ டீச்சர்..இங்க இருக்குற ப்ரைவேட் ஸ்கூல்ல தான் வேல செய்றா.." முந்திக் கொண்டு பதில் சொன்ன சித்தியை ஓரக்கண்ணால் முறைத்தாள்,அவள்.

"ஆமா..பொண்ணுக்கு இருபத்தேழு வயசாகுது..எங்ஆ பையனுக்கு முப்பது தான்..உங்களுக்கே புரியும்..பொண்ணுக்கு முப்பது சவரன் நகயும் பையனுக்கு ஒரு காரும் வாங்கிக் கொடுத்தா போதும்..கல்யாண செலவ பாதி பாதியா பிரிச்சுக்கலாம்.." ஏதோ நல்ல விடயம் செய்வது போன்ற பெருமிதத்துடன் அவர் மிதப்பாய் சொல்ல உள்ளுக்குள் பற்றிக் கொண்டு வந்தது.

அங்கு தலைகுனிந்து அமர்ந்திருந்தான்,
அவளைப் பெண் பார்க்க வந்திருந்த மாப்பிள்ளை கணேஷ்.
அவனைக் காணும் போது இன்னும் அவளின் கோத்தீயிற்கு எண்ணெய் ஊற்றுவது போல் தான் இருந்தது.

"என் பையன் என்னோட பேச்ச மீற மாட்டான்..என்ன மொதக் கல்யாணம் பொண்ணு சரியில்ல..அதான் ஒடஞ்சிருச்சு..இப்போ அதப் பத்தி பேசி எதுவும் ஆகப்போறது கெடயாது..உங்க பொண்ணுக்கு இஷ்டம் இருக்கான்னு கேட்டு சொல்லுங்க.."

"எனக்கு புடிக்கல.." பட்டென்று போட்டுடைத்தவளை சிறு சிரிப்புடன் பார்த்திருந்தார்,அவளின் தந்தை.
மகளைப் பற்றி அவருக்கு தெரியாதா..?

அவளின் சித்தியின் முகம் தான் கடுகடுவென மாறியது.
"ஆது என்ன இது..? சும்மா இரு.." அவள் புறம் திரும்பி கண்டித்தவரை இகழ்ச்சியாய் பார்த்திருந்தார்,கணேஷின் தாய்.

அவளின் சித்தி அவரைப் பார்த்து சங்கடமாய் புன்னகைக்க அவரின் கோபம் கொழுந்து விட்டெறிந்தது.

"அவ ஏதோ தெரியாம பேசறா..சம்பந்தி..நீங்க எதயும் மனசுல வச்சுக்காதீங்க.."

"என்னம்மா பொண்ணு வளத்துருக்கீங்க..பாக்க லட்சணமா இல்ல..கொஞ்சம் கொணமாச்சும் இருக்கும்னு பாத்தா அதுவும் இல்ல..இது தான் நீங்க பொண்ணு வளத்துருக்குற லட்சணமா..? இந்த வீட்ல பொண்ணெடுத்தா எங்களுக்கு தான் அசிங்கம்.."

"உங்க பையன் லட்சணம் தான் ஊருக்கே தெரியுமே..கண்ட கழிசட கூட சுத்திட்டு திரிஞ்சவன என் தலைல கட்டி வச்சுர்லாம்னு பாக்கறீங்களா..நீங்களே ஒத்துகிட்டாலும் எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல..அவ்ளோ தான்.." தீர்க்கமாய் மொழிந்தவள் அவ்விடத்தை விட்டு நகர்ந்திட முதலில் அவர்களை வெளியே அனுப்பி வைத்தது,
அவளின் சித்தி தான்.

அவள் சொல்லும் வரை அவனின் நடத்தைப் பிறழ்வு பற்றி அவருக்குத் தெரியாதே.
நல்ல பையன் என்று நெருங்கியவர்கள் என்று ஒப்புவிக்கவே முதல் திருமணம் முறிந்தது தெரிந்தாலும் பெண் கேட்டு வரச் சொல்லி இருந்தார்.

என்ன தான் சித்தி என்றாலும் அவளின் வாழ்க்கை எப்படியோ போகட்டும் என நினைக்கும் ரகமில்லை,
அவர்.

சிறு சுணக்கத்துடன் தன்னைப் பார்த்த மனைவியைக் கண்டு ஆதுரமாய் சிரித்தார்,
நந்தகோபாலன்.

மனைவிக்கும் மகளுக்கும் ஒத்துப்போவதில்லை என்று தெரிந்திருந்தாலும் அவர்களிடையே மூள்றாம் நபராய் நுழைய விரும்பும் ரகமில்லை,அவர்.

"புவனா..போய் காபி எடுத்துட்டு வா..நடந்தத மறந்துடு.." மனைவியை சமப்படுத்த அவர் சொல்ல தலையசைத்தவாறே சமயலறைக்குள் நுழைந்தார்,புவனா.

இருள் மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கத் துவங்கி இருக்க பால்கனியில் நின்று கொண்டிருந்தவளை நோக்கி வந்தார்,தந்தை.

"ஆதுமா.." அவர் அழைக்க கண்ணீரைத் துடைத்துக் கொண்டு திரும்பி புன்னகத்தாலும் அவளின் முகத்தில் இருந்த வாட்டம் அவருக்கு புரியாமல் போய் விடாதே.

அவளருகே வந்து நின்று கொண்டவருக்கு எப்படி பேச்சைத் துவக்குவது என்று தெரியவில்லை.

"நீ இன்னும் செத்துப் போன அந்தப் பையனா தான் நெனச்சிகிட்டு இருக்கியாமா..?"அவர் மென்மையாய் கேட்க சட்டென பதில் சொல்லிக் கொள்ள முடியாமல் அவள் தொண்டை அடைத்தது.

அவளின் மௌனம் கண்டு அவரிடம் இருந்து பெருமூச்சொன்று.

"உங்கம்மா விட்டுட்டு போனதும் எனக்கும் இப்டி தான் இருந்துச்சு..
உலகமே வெறுத்து போன மாதிரி..ஆனா கால் ஒன்னு இல்லாம உன்ன எப்டி பாத்துப்பேன்னு தவிச்சப்போ தான் புவனாவ கட்டி வச்சாங்க.."

"அவளோட பர்ஸ்ட் ஹஸ்பன்ட் எறந்து இருந்தாரு அப்போ..அவளும் விருப்பம் இல்லாம தான் என்ன கட்டிகிட்டா..
ஆனா எங்க வாழ்க்கய பாரு..ரொம்ப தெளிவா ஆத்மார்த்தமா இருக்கு.."

"பர்ஸ்ட் ஆப்ஷன் தான் எப்பவும் பெஸ்ட் ஆப்ஷனா இருக்கனும்னு இல்ல..
செகண்ட் பர்ஸ்ட விட பெஸ்டா அமயலாம்.."
கூறி விட்டு செயற்கை காலுடன் கெந்திக் கெந்தி நடந்தவரின் முதுகை வெறித்தது,
அவள் பார்வை.

தொடரும்.

2024.02.20
 
Last edited:
Top