GG writers
Moderator

மின்னல் 01
அந்தத் தெருவே சற்று மங்கிய வெளிச்சத்தில் காட்சியளிக்க, விடிந்தும் விடியாத அந்தக் காலைப் பொழுதினில் சில பெண்கள் கோலம் போட்டுக்கொண்டிருக்க, சிலர் வாசல் பெருக்கிக் கொண்டிருந்தனர்.
அது அவர்களது கதை பேசும் பொழுதுகளில் ஒன்று…
அதில் ஒருவரோ "என்ன இன்னும் யாரையும் காணோம்" என்று அங்கிருக்கும் வீடு ஒன்றை பார்த்துச் சொல்ல, பக்கத்தில் இருந்தவரோ "வருவாங்க சரஸு எதுக்கு பறக்குற, ராத்திரி பூரா தூங்கி இருக்க மாட்டியே" என்று சரஸு என்பவரைக் கேலி செய்த திருப்தியில் சிரிக்க, அருகில் இருந்தவர்களும் சிரித்தனர்.
அதற்கு சரஸுவோ "ஆமாடி உன் புருஷன் இல்லாத நேரம், உன் வீட்டுக்கு ராவுல ஒரு வண்டி வந்திச்சே, அத பார்த்துத் தான் தூங்கல நானு" என்றார் ஏகத்தாளமாய்...
அந்தப் பெண்ணோ 'இந்த நொள்ள கண்ண வெச்சிக்கிட்டு கொஞ்சம் அப்படி இப்படி இருக்க முடியுதா?' என்று எண்ணியவர் சிரித்து சமாளித்தபடியே "அது அவுக சிநேகிதரு சரஸு, அவுகல தான் தேடி வந்தாங்க" என்றார்.
அதற்கு சரஸு ஏதோ சொல்ல வர, சரியாய் சரஸு எதிர்பார்த்த வீட்டுக் கதவு திறக்கப்பட்டதும், அங்கே நின்றிருந்த பெண்கள் அனைவரின் பார்வையும் அந்த வீட்டை அடைந்தது.
அங்கே அவசர அவசரமாகக் கோலப்பொடியுடன் ஒரு இளம் பெண் வெளியே வர, சரஸுவோ அதுக்காகவே காத்திருந்தவர் போல "ஏன்டி மலரு, உனக்கு இப்போதான் விடிஞ்சிச்சாக்கும்… அப்படி என்ன வெட்டி முறிக்கிற நீ?" என்று குரலில் ஏற்ற இரக்கத்துடன் வினவினார்.
"ஏன் சரஸக்கா உனக்குத் தெரியாதாக்கும்? இங்க இருக்க ஏரியா மொத்ததுக்கும் நீதான சிசிடிவி… நேத்து கூட அப்படி எட்டி எட்டிப் பார்த்தியே அப்பறம் எப்படி நடந்தது தெரியாம போகும்… காலங்காத்தால என் வாய பிடுங்காம ஒழுங்கா போய்டு" என்றவள் பல்லைக் கடித்தபடி கோலம் போட ஆரம்பித்தாள்.
இருந்த கோபத்தில் கோலப் புள்ளிகள் தரையில் டங் டங் என்றே வைக்கப்பட்டது.
அதனைப் பார்த்து அடுத்து யாருக்கும் அங்கே பேசத் தைரியம் இருக்கவில்லை… மலரின் வாய் அவர்கள் அறியாததா? உள்ளே ஒரு ஆர்வம் அவர்களுக்கு, பின்னே சரஸு வாயடைத்து போவது மலரிடம் மட்டும் தானே! அடுத்து அம்பு அவர்கள் பக்கம் வந்துவிடும் என்ற அச்சத்தில் மெல்ல அவர்கள் அகன்று கொள்ள, சற்று முன் மலர்விழியால் சரஸக்கா என விழிக்கப்பட்ட சரஸ்வதி மட்டும் அவளையே பார்த்தபடி நின்றிருந்தார்.
அவருக்குத் தான் முழுதாய் தெரிந்து கொள்ளாவிடின் தலை வெடித்துவிடுமே!
நிமிர்ந்து பார்த்து 'இது திருந்தாத ஜென்மம்' என்று எண்ணியவளோ விரைவாய் கோலத்தை முடித்து உள்ளே நுழைந்து கொண்டாள்.
அப்படியே நேரே சமையலறைக்குள் நுழைந்தவள், அங்கே அடுப்பில் எண்ணெய்யில் வெடித்த கடுகை ஒத்து இவளும் வெடித்தாள்.
"இந்த சரஸக்கா ஒருநாளைக்கு எங்கையாள வாங்காம போகாது அண்ணி பாத்துக்கோங்க… எப்ப பாரு அடுத்த வீட்டுல என்ன நடக்கும் பாப்போம்னே காத்திருக்குமாக்கும்… சன்டேயானா கொழம்பு கொடு வத்தல் கொடுன்னு வந்து நிக்கும்ல அப்போ விஷம் வெச்சி கொடுக்குறேனா இல்லையானு பாருங்க" என்று படபடவெனப் பேச, அவளது அண்ணியோ புன்னகைத்து வைத்தாள்.
"அண்ணி கடுப்பாக்காதீங்க நீங்களும், எல்லாம் அந்த நாய சொல்லணும் பொண்ணு பார்க்க வாரானாம் ஊர்ல வேற பொண்ணா இல்லை, நீங்க எப்பவும் என் அண்ணி மட்டும் தான் உங்கள வேற யாருக்கும் கட்டிக்கொடுக்க மாட்டேன் சொல்லிட்டேன்" என்றவள் விருவிருவென வெளியேற, கதவருகில் அவளது தாய் ஜோதி லட்சுமி மகளை முறைத்துக் கொண்டிருந்தார்.
அவரைக் கண்டவளோ "எல்லாம் உன்ன சொல்லணும், மாப்பிளை அது இதுனு எவனாச்சும் இனிமேல் உள்ள வரட்டும், நேத்து காஃபில உப்பத்தான் போட்டேன் இனி வர்றவனுக்கு ஸ்ட்ரைட்டா வெசம் தான்" என்றாள் அதே கோபத்தோடு, தாயின் முன்னே நின்று வீரவசனம் பேசியபடி...
"அடச்சே நீ வேற தள்ளுடி, பெரிய ஜான்சி ராணி இவ வந்துட்டா… போடி காலேஜுக்கு நேரமாகல உனக்கு, போ சீக்கிரம் ரெடியாகு" என்றவர் மருமகள் பக்கமாகத் திரும்பப் போக, மீண்டும் அவளே "மா நீ என்னதான் தலைகீழா நின்னாலும் நான் இத நடக்கவே விடமாட்டேன்… அண்ணி மனசு ஏன் உனக்குப் புரிய மாட்டேங்கிது. என் அண்ணா இடத்துக்கு வேறொருத்தனா நோ வேய்" என்றவள் முதுகில் ஒன்றை வைத்து அவளைப் பத்திவிட்ட ஜோதி லட்சுமி, முன்னே நின்றிருந்த மருமகள் பக்கமாகத் திரும்பினார்.
"ஆதிமா, இவள என்னனு சொல்ல நான், எப்போவும் இப்படியே பேசிட்டு திரியிறா, நேத்து கூட வந்தவங்க முன்னே அத்தனை பேச்சு... கொழுப்பு அவ்வளவும் வேற ஒன்னுமில்ல, இப்போவே இதோ மூனு வருஷம் ஆகிடிச்சு, அடுத்து ரெண்டு வருசத்துல மலர் கல்யாணம் கூடக் கூடி வந்துடும். அதுக்கு முதல் உன்ன இன்னொருத்தன் கைல பிடிச்சு கொடுத்தா தானடா எனக்கு நிம்மதி" என்று எப்போதும் பாடும் அதே பாட்டையே பாடினார்.
அவளோ "ஏன் நான் என்ன காணாம போய்டுவேனாமா?" என்று புன்னகையுடன் கேட்டவள், "உங்களுக்குப் பதில் எப்போவோ சொல்லிட்டேனேமா, என்னோட யுதன் மட்டும் தான் எனக்குப் புருஷன்.. அவனத்தாண்டி இன்னொருத்தர் நிச்சயம் என் வாழ்க்கைல வரவே முடியாது, மலருக்குப் புரிஞ்ச என் மனசு உங்களுக்குப் புரியலையா?" என்று நிறுத்தினாள் எப்போதும் கேட்கும் அதே கேள்வியுடன்...
அவரோ அவளது முகத்தை வாஞ்சயாகத் தடவியவர் "ஏண்டா புரியாம, நீங்க வாழ்ந்த வாழ்க்கையை நேர்ல பார்த்தவ நான் எனக்கா புரியாது... அந்த அழகான வாழ்க்கைய வாழ என் மகனுக்குத் தான் கொடுத்து வைக்கலையே" என்று முந்தானை தலைப்பால் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டார்.
அவள் எதோ பேசவர அவளைத் தடுத்தவர் மீண்டும் "என்னதான் இப்போ இப்படியே இருந்துடலாம் என்னால முடியும்னு தோணினாலும் நம்மளோட கடைசி காலத்துல நிச்சயம் நமக்கு ஒரு துணை வேணும்டா... உன் மாமா என்ன விட்டுப் போன இந்த எட்டு வருசத்துல அவர நான் தேடாம இல்லையே! என் வயசுக்கு எனக்கே தேடும்போது உனக்கு இன்னும் வாழ்க்கை விரிஞ்சிருக்கு... நம்ம கவிக்குட்டிய நினைச்சு பாரு, அவளோட அப்பாக்கான ஏக்கம் அதுக்கு உன்னோட பதில் என்ன? எத்தனை நாளைக்கு அது இதுனு அவகிட்ட காரணம் சொல்லுவ, அவளுக்கா எல்லாம் புரியிற வயசு வர முதல் அவ கண்ணுல அப்பானு ஒருத்தரக் காட்டணும், அது உன் கைல தான் இருக்கு. என்னடா அத்தை எப்பவும் இதையே பேசுறாங்கனு நீ நினைக்கக் கூடாது, நிதர்சனம் அது தானே" என்றவர் அவள் பதிலைக் கேட்க அங்கே இருக்கவில்லை, அவள் பதில் தான் என்னவென்று அவருக்குத் தெரியுமே...
அவளோ பெற்றுமூச்சுடன் அதனை அலட்டிக்கொள்ளாமல் சமையலைத் தொடர்ந்தாள். இது தினம் நடப்பது தானே! அத்தை அவர் ஆதங்கத்தை கொட்டுக்கிறார் நான் கேட்டுக்கொள்கிறேன் அவ்வளவே அவள் எண்ணம்.
அதற்காகவெல்லாம் இன்னொரு திருமணம் என்ற எண்ணதுக்கே அவளிடம் இடமில்லை... விரைவில் அவள் மனது அவருக்குப் புரியும் என்ற நம்பிக்கையுடனே இதோ மூன்று வருடத்தைக் கடத்தி விட்டாள்..
அவள் ஆதிரை, வயது இருபத்து ஏழு.. கணவனை இழந்து, ஐந்து வயதுக் குழந்தையின் அம்மா.. ஊரைப் பொறுத்தவரை விதவை, ஆனால் அவள் மனதில் இன்றும் அவளவனுடன் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறாள்.
அவன் இல்லை என்பதையே ஏற்றுக் கொள்ளாத மனது இன்னொருத்தனை கட்டிக்கொள்ள எண்ணுமா என்ன???
அத்தை அவர் பங்குக்கு அவரது மனநிலையை சொன்னாலும் அது அவளுக்கு நலவே என்றாலும் அது வேண்டவே வேண்டாம் என்ற எண்ணம் தான் அவளுக்கு, 'அப்படி என்ன என்னால் என் யுதன் நினைவுகளுடன் வாழ முடியாதா என்ன?' என்ற எண்ணம் தான் அவளுக்கு...
சமையலைத் தொடர்ந்தபடியே "டேய் யுதன் எரும மாடே.. நீ ஜாலியா போய்ச் சொர்க்கத்துல இருந்துட்டு என்ன மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்குறல்ல, கவிக்குட்டி மட்டும் இல்ல, உன்ன அங்கையே வந்து டீல் பண்ணிருப்பேன் தப்பிட்டடா, ரொம்ப சந்தோசப்பட்டுக்காத, சீக்கிரமே உன் பொண்ணுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சிட்டு வந்து இருக்கு உனக்குக் கச்சேரி "என்று சேலையை இடுப்பில் தூக்கி சொருகியபடி சமையலுக்கான தாலிப்போடு சேர்த்து அவள் கணவனையும் தாலித்தாள்.
எல்லாம் நேற்று வந்த அந்த சுவாமிநாதனால் வந்தது.. பெண் கேட்டு வருகிறேன் என்று அத்தையை மீண்டும் ஏற்றிவிட்டு சென்றிருந்தான்.
இனி ஜோதி இதையே பேசி அவளைச் சம்மதிக்க வைக்கின்றேன் என்று ஒரு வாரத்துக்கு இந்தப் பேச்சு மாறாது என்று ஆதிராவிற்கு சர்வ நிச்சயம்.
அந்த சுவாமிநாதன் மீது கொலை வெறியே வந்தது அவளுக்கு.. இன்னைக்கு வேலைக்குச் சென்றாள் என்றால் தொலைந்தான் அவன்.
அப்படியே பல எண்ணங்களுடன் உணவைச் சமைத்து முடித்து, மலருக்கும் அவளுக்கும் மதிய உணவைப் பெட்டியில் அடைத்தவள், அடுத்து அவளது செல்ல மகளை எழுப்ப அவர்களது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அங்கே அவளது பஞ்சிப் பொதி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். மெல்ல அவளை நெருங்கி அவளருகில் படுத்துக்கொண்டவள் "கவிக்குட்டி எழுந்துடுங்க அம்மா வேலைக்குப் போகணும்ல.. நீங்களும் இன்னைக்கு எர்லியா போகணும் மிஸ் திட்டுவாங்கன்னு சொன்னீங்கல்ல" என்று மகளின் நெற்றியில் முத்தம் வைத்துத் தலையைக் கோதிவிட, அவள் மகளோ தகப்பனின் மறுவார்ப்பல்லவா? இன்னும் சுகமாய் அன்னையை அணைத்துக் கொண்டு உறங்கினாள்.
அதில் அவன் கணவன் எண்ணம் வர, "டிஎன்ஏ டெஸ்ட்யே வேணாம் உனக்கும் உன் பொண்ணுக்கும், பாரு அத்தனையும் உன் சேட்ட தான்" என்று வாய்விட்டே கணவனின் புகைப்படத்திடம் சொல்லிக்கொண்டவள் தாமதமாகுவதை உணர்ந்து, அடுத்த அரைமணி நேரத்தில் எல்லாம் குழந்தையைக் கொஞ்சி கெஞ்சி மிரட்டி அவள் பாணியில் தாயார்ப்படுத்தி அவளும் தாயாராகி வெளியே வந்தாள்.
அங்கே மலரோ கல்லூரிக்குச் செல்லத் தாயாராகி அமர்ந்திருந்தவள் "அண்ணி போகலாம் வாங்க லேட்டாகிடிச்சு பாருங்க, எல்லாம் இவளால" என்று அண்ணன் மகளை முறைக்க, அவளோ "கவி குத் கேர்ள், அத்த தான் பேட்" என்றாள்.
மலரோ "சொல்லுவடி சொல்லுவ ஏன் சொல்ல மாட்ட" என்று போருக்குத் தயாராக, கவியும் எதிரில் போர் வீரனை போல் தாயாராகினாள்.
வாசல்வரை தொடர்ந்த கலவரம், வண்டியில் ஏறிய பின்னும் தொடர, "இப்போ ரெண்டு பேரும் சத்தம் போடாம வரல இங்கயே விட்டுட்டு போய்டுவேன்" என்று ஆதிரா சத்தம் போட்டபின்னே அடங்கியது.
போகும் மூவருக்கும் கை காட்டியப்படி நின்றிருந்த ஜோதி லட்சுமியின் மனம் மருமகளின் நல் வாழ்வையே கடவுளிடம் பிராத்தித்தது.
இந்த மூன்று வருடமாக ஆதிராவின் மனம் உறுதியாய் தான் இருக்கிறது. அது உடையும் நாளும் என்றோ???
____________
அந்தப் பெரிய அறையின் உள்ளே மெத்தையில் இருவர் பிணைந்து கிடக்க, அந்த அறையே குளிரிலும் இருளிலும் மூழ்கி இருந்தது.
அங்கே மேசையில் வைக்கப்படிருக்கும் தொலைபேசி, அவர்களது நெருக்கத்தை கலைக்க எண்ணியதோ என்னவோ சத்தமாய் ஒலி எழுப்பியது.
அதில் தூக்கம் கலைந்தவன், மெல்ல கண்களை விழிக்க, தலையோ அத்தனை பாரமாய் இருந்தது. முகத்தைச் சுருக்கி வலியைப் பொறுத்துக்கொண்டு, தன் மீது படந்திருக்கும் பெண்ணைத் தன்னை விட்டு அகற்றியவன், எழுந்தமர்ந்து அடித்துக் கொண்டிருந்த தொலைபேசியைக் காதில் வைத்தான்.
அந்தப்பக்கமோ "சார், டென் தேர்ட்டிக்கு மீட்டிங் ஸ்டார்ட் ஆகிடும்… ஆல் அரேஞ்மெண்ட்ஸ் டன். நீங்க வந்தீங்கன்னா ஸ்டார்ட் பண்ணிடலாம்" என்றவனின் பேச்சுக்குப் பதில் கொடுக்காமல் "பிரவீன் கம் ஃபாஸ்ட்" என்றதோடு அழைப்பைத் துண்டித்தவன் குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.
பிரவீன் அவனது காரியதரிசி, இப்போது அவன் எங்கே இருக்கிறான் என்பதை பிரவீன் மட்டுமே அறிவான் என்பதால் தான் அப்படியொரு இரத்தினச் சுருக்கக் கட்டளை அவனிடமிருந்து. இல்லை என்றாலும் அப்படியே பக்கம் பக்கமாகப் பேசுபவனில்லை தான். தேவைக்கு மட்டும் பேச்சு என்பதோடு மூடிக்கொள்ளும் அவன் இதழ்கள்.
குளித்து முடித்துத் தயாராகி வந்தவன், மெத்தையில் தூக்கத்தில் இருக்கும் மாதுவை ஒரு பொருட்டாகக் கருதவே இல்லை… மீட்டிங்க்கு ஏதுவாகத் தாயாராகியவன் அந்த அறையை விட்டு வெளியேறி முன்னே இருக்கும் அறைக்கு வர, பிரவீனோ அடித்துப் பிடித்து அங்கே வந்திருந்தான்.
அவனைப் பார்த்தவனோ "கிளீயர் இட் பிரவீன்" என்று உள்ளறையைக் காட்டியவன், தனது அலைபேசியை ஆராய்ந்தபடி அங்கிருந்து வெளியேறி இருந்தான்.
பெருமூச்சுடன் அந்த அறைக்குள் நுழைந்த பிரவீனின் முகம் அஷ்டகோணலாக மாற "என்ன என்ன கண்ராவி வேலை எல்லாம் பாக்க வேண்டி இருக்கும், இத மட்டும் என் பொண்டாட்டி பாக்கணும் செத்தேன் நானு" என்றவன் அங்கிருந்த தலையணையை எடுத்து அந்தப் பெண்ணை உளுக்கினான்.
அவளோ சாவகாசமாகச் சோம்பல் முறித்துக் கொண்டு எழுந்தவள் "குட் மோர்னிங் பிரவீன்" என்று அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
'இது ரொம்ப முக்கியம் இப்போ' என்று எண்ணியவனோ பல்லைக் கடித்தபடி "குட் மோர்னிங் கிரேஸ், பணம் உன் அக்கௌன்ட்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணியாச்சு, நீ இப்போ இங்க இருந்து போகலாம்" என்க, அவளோ தனது அலைபேசியை எடுத்துப் பணம் வந்ததற்கான குருஞ்செய்தியை பார்க்க, அதிலோ சில லட்சங்கள் எனத் தகவல் வந்திருக்க, அவள் முகமோ சந்தோஷத்தில் ஜொலித்தது.
"பிரவீன், அடுத்த முறையும் என்னையே புக் பண்ணிடேன்" என்றாள் மெல்லிய சிணுங்களுடன்…
இப்படி இரவில் வரும் பெண்கள் எல்லாம் தினமும் கேட்கும் ஒன்று தானே! இப்படியொரு ஆண்மகனுடன் அதுவும் கொட்டிக்கொடுக்கும் பணத்துக்கும் கசக்கவா செய்யும்?
அப்படியென்றால் தான் பிரவீனுக்கும் பெண்களைத் தேடும் வேலை குறையுமே...
ஆனால் அவனது பாஸ் அந்த ஏமகாதகன் ஒன்று ஒன்றுமுறை என்று வியாக்கியானம் பேசுவானே! அதிலும் அவனுக்கு அவனது நாட்டு பெண் தான் வேண்டும்.
இத்தனைக்கும் பெண்களின் முகம் கூடப் பார்க்கமாட்டான். இரவில் இருளில் அதுவும் விடியும் வரை மட்டும் தான் அவனது நெருக்கம் எல்லாம், உடலுக்கு உணவுபோல் அதுவும் ஒரு உடல் தேவை என்ற எண்ணம் அவனுக்கு...
தினம் என்றெல்லாம் இல்லை… வாரத்தில் ஒருமுறை அதுவும் அவன் விரும்பும் நாளில்...
பிரவீனுக்கு தான் தலை சுற்றும், திடீரென அழைப்பான், வேண்டும் என்பான், அவ்வளவே பிரவீன் தான் முழிக்க வேண்டி இருக்கும். பின்னே அமெரிக்காவில் போய் இந்தியப் பெண்ணை அதுவும் விலைமாதுவை எங்கனம் தேடுவான்...
முட்டி மோதி எப்படியோ கொண்டு வந்து விடுவான்… நல்ல வேளை அவன் மனைவிக்கு மாடர்ன் மாமா வேலை பார்க்கும் கணவனைப் பற்றித் தெரியவில்லை, தெரிந்தால் தொலைந்தான்.
அவளை அங்கிருந்து அனுப்பியவன் நேரே சென்றது அவர்களது அலுவலகத்துக்குத் தான்.
ஏ.வி குரூப் ஒப் கம்பெனி, நாடு எங்கும் பல கிளைகள்… ஆண்கள், பெண்களுக்கான அனைத்து அழகு சாதன பொருட்களும் தயாரிக்கும் நிறுவனம் அது. இப்போது ஆடை தயாரிக்கும் நிறுவனத்தையும் அதன் கீழ் புதிதாகத் தொடங்கி இருக்கிறான்.
தன்னை அழகுபடுத்த விரும்பாதோர் யாரும் இருப்பார்களா என்ன? அதிலும் அவன் கம்பெனி பொருள் என்றால் அதுக்கொரு தனி இடமே இருக்கிறது. அதனால் அவன் தொழில் என்றும் ஏறுமுகம் தான். அதில் அவனுக்குக் கர்வமும் கூட...
அவன் ஆத்வீகன், வயது முப்பதுகளின் ஆரம்பத்தில் இருக்கும், ஆனால் அவனைப் பார்ப்போர் இருபதுகளின் இடையில் என்று கணிக்கும்படி தான் அவன் தோற்றம்.
ஆண்களுக்கான அழகு சாதனப் பொருட்களின் அத்தனை விளம்பரத்திலும் மாடல் அவனே... அவனை விடவா வேறு யாரும் பொருந்துவார்கள் என்ற எண்ணம் அவனுக்கு...
அடித்துப் பிடித்து அலுவலகத்தினுள் நுழைந்த பிரவீன் நேரே சென்றது ஆத்வீகனின் அறைக்குத் தான்.
"சார்" என்று அழைத்தபடி உள்ளே செல்ல, அவனோ "நைட் டாட் கால் பண்ணி இருந்தாரா பிரவீன்" என்று தீர்க்கமான பார்வையுடன் கேட்க, பிரவீனுக்கு மனதில் தோன்றியது 'ஐயையோ சாத்தான் சைக்கிள்ல வருதே' என்பது தான்.
குரலைச் செருமியவனோ "எஸ் சார் நைட் உங்கள ரீச் பண்ண முடியலன்னு பெரிய சார் என்ன கான்டெக்ட் பண்ணாங்க" என்று நிறுத்த, ஆத்வீகனிடம் ஒரு அமைதியான பார்வை கூடவே மேலே சொல் என்பது போலத் தான் பார்த்து வைத்தான்.
"சாருக்கு கொஞ்சம் உடம்பு மோசமா போகுதாம் உயில் எழுதணுமாம் உங்கள உடனே இந்தியா வரச் சொன்னாங்க, இல்லனா" என்று இழுவையுடன் அவன் நிறுத்த,
"இல்லனா என்ன டிரஸ்ட்டுக்கு எழுதி வெச்சிடுவாரு அதான" என்று கண்கள் சிவக்கக் கேட்டவன் கோபத்தில் எழுந்துகொண்டான்.
பிரவீனும் அதான் என்பது போலத் தலையசைக்க ஆத்விக்கு கோபம் மண்டைக்கேறியது.
கடந்த சில வருடமாக அவனது பல யோசனைகளிலும் கடின உழைப்பிலும் எத்தனையோ மடங்கு அவர்களது சொத்து மதிப்பை அவன் உயர்த்தி இருக்க, அவன் உழைப்பு அத்தனையும் டிரஸ்ட்க்கு போவதா???
தந்தை மேல் கொலைவெறியே வந்தது. தன்னை அங்கே வரவழைப்பதற்கான அவரது கடைசி ஆயுதம் அது என்பது அவன் அறியாததா???
கோபமாக இருந்த முகம் சட்டென நக்கல் சிரிப்பை உதிர்க்க, நாடியை நீவியபடி "ரொம்ப ஆசப்படுறாரு போல இருக்கே, போவோமே போய் அவரே இங்க இருந்து போடான்னு தூரத்துற வரப் பாசத்த பொழிவோம்" என்று ஏகத்துக்கும் நக்கலுடன் சொன்னவன் மீண்டும் "டிக்கெட் புக் பண்ணிடு பிரவீன், உனக்கும் சேர்த்து" என்றவன் மீட்டிங் நடக்கும் இடத்துக்குச் சென்றான்.
பிரவீனுக்கு தான் சந்தோஷப்படுவதா கவலைப்படுவதா என்றே புரியவில்லை… ஆதாயம் இல்லாமல் விழியைக் கூட அசைக்காத அவன் முதலாளி என்ன முடிவில் இருக்கிறானோ என்றே தெரியாமல் எப்படி சந்தோஷப்படுவது…
வருவதைப் பார்த்துக்கொள்ளலாமெனத் தான் ஊருக்கு வரும் விடயத்தை மனைவியிடம் பகிர்ந்து கொண்டான் ஒரு கணவனாய்...
____________
நேரம் மாலை ஆகியிருந்தது அங்கே ஆதிரையின் வீட்டின் நடுக்கூடத்தில் கையில் இரண்டு பாத்திரங்களை வைத்திருந்தவள், "அத்தை அந்த வாளிய எடுத்து அங்க வைங்க" என்று அவளுடைய அத்தையை ஏவியபடி இன்னும் இரண்டு பாத்திரங்களை எடுத்து, ஆராய்ந்து அதற்குரிய இடத்தில் வைத்தாள்.
"இன்னும் மலர் வீட்டுக்கு வரல ஆதிமா" என்றவர் சொல்ல, அவளோ "இப்போ தான் கால் பண்ணாமா, இந்த மழைனால பஸ் கொஞ்சம் லேட்டாகிடிச்சாம், சீக்கிரமே வந்துடுவேன்னு சொன்னா" என்றவள் மீண்டும் வீட்டுக்குள் மழை நீர் விழும் இடத்தைத் தேடி பாத்திரத்தை வைக்கத் தொடங்கினாள்.
ஒவ்வொரு இடமாக வைத்து முடிந்து திரும்பிப் பார்க்க, சமையலறையில் உள்ள அனைத்துப் பாத்திரங்களும் அங்கே முன்னறை, இரண்டு தனியறையென இருந்த அந்தச் சிறிய வீட்டின் எல்லா இடமும் பரவியிருந்தது.
அவளிடம் ஒரு பெருமூச்சு, கண்களை மூடித்திறந்தவள் 'மிஸ் யூ யுதன்' என்று அன்றைய நாளுக்குரிய லட்சமாவது முறை அவளவனை எண்ணிக்கொண்டவளைக் கட்டிக்கொண்ட கரங்கள் அவளை மேலும் சிந்திக்க விடவில்லை…
"கவிக்குட்டி எழுந்தாச்சா?" என்று தன்னை அணைத்த பிஞ்சு கரங்களின் சொந்தக்காரியை கையில் அள்ளிக்கொள்ள, அவள் கையிலிருந்த பூக்குவியல் அதன் பின்னான அவளது நேரத்தைக் களவாடினாள்.
மின்னல் வெட்டும்...
இப்படிக்கு
GG-13
Last edited: