GG writers
Moderator

மின்னல் 02
காரை ஓட்டிக்கொண்டிருந்த பிரவீன் அமைதியாக வந்ததைப் பார்த்த ஆதவிகனுக்கோ உண்மையில் அதிர்ச்சி தான். 'சார்' இல்லையேல் 'பாஸ்' என அழைத்து எதையாவது வளவளத்துக் கொண்டே தான் வருவான். இன்றானால் அமைதியின் சிகரமாக வருகையில் சந்தேகம் வரும் தானே!
"பிரவீன்" என்று அழைத்தும் சத்தம் இல்லை என்றதும் அவன் முதுகில் ஒரு அடி வைக்க, "யம்மா" என்ற சத்தத்துடன் விழித்தவன், "என்னாச்சு பாஸ்" என்று அப்பாவியாய் கேட்டு வைக்க, அவனை முறைத்த ஆத்விகனோ "எங்கடா யோசனைய வெச்சிட்டு வண்டி ஓட்டுற, என்னக் கொல்ல ட்ரை பண்ணுறியா என்ன? எவ்வளவு வாங்குன?" என்றான் அப்படி இருக்காது என்று தெரிந்தும் நக்கலாய்...
"எதே கொலையா? அடேப்போங்க பாஸ்" என்று சலித்துக் கொண்டவனை கண்டவனோ "என்னடா இத்தன சலிப்பு உனக்கு?" என்று புன்னகைத்தான்.
"இல்ல பாஸ், பெரிய சார் நேத்து தானே இந்தியா வரனும்னு பேசுனாங்க, அதுக்குள்ள எப்படி பாஸ் அங்க நமக்கு எதிரா இருக்க ஆதி குரூப் ஒப் கம்பெனிய விலை பேசுனீங்க? முன்னவே இந்தியா போற பிளான் இருந்திச்சா??" என்று இத்தனை நேர சந்தேகத்தையும் கேட்க, ஆத்விகனோ சத்தமாகவே சிரித்து விட்டான்.
"பரவா இல்லையே உனக்கும் கொஞ்சம் மூளை வேலை செய்யிது பிரவீன், ஆனா அதெல்லாம் சொன்னா உனக்குப் புரியாதுடா" என்று விசிலடித்தவாறு சொன்னவன் பிரவீனுக்கு புதிதாய் தான் தெரிந்தான்.
இப்படி இலகுவாக அவன் பேசும் நேரங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதுவும் பிரவீனுடன் மட்டும் தான் அவனது இந்த இலக்கம் கூட…
அவனுக்கு நடந்த கோர விபத்திலிருந்து அவன் தேறி, அவனது வியாபாரத்தில் ஓரளவு பழையபடி நிலையாக, அவனுக்குப் பெரிதும் உதவியது பிரவீன் தான். அதில் சிறு நன்றிணர்வு அவனிடம் எப்போதும் இருக்கும்.
"அது சரி மயூரி என்ன சொல்லுறா? குடும்பத்தைப் பார்க்கப் போறோம்னு ஒரு சந்தோசத்தையே உன் முகத்துல காணோமே! ஊருக்குப் போனதும் உன் வீட்டுல எனக்கு விருந்து உண்டுல" என்று வேண்டுமென்றே தான் கேட்டான்.
அவனுக்குத் தெரியும் பிரவீனின் மனைவி மயூரிக்கு கணவன் இங்கே வேலை செய்வதில், அதிலும் தனக்கு கீழ் வேலை செய்வதில் விருப்பம் இல்லை என்பது...
"பாஸ்" என்று அவன் சங்கடத்துடன் அழைக்க, "எனக்குத் தெரியாதுப்பா, எனக்கு விருந்து வேணும் சொல்லிட்டேன்" என்றவன் பேச்சு முடித்தது போல அமர்ந்து கொள்ள, அவர்கள் வரவேண்டிய இடமும் வந்து சேர்ந்தது.
அது ஒரு விளம்பர படப்பிடிப்பு நடக்கும் இடம். இன்னும் சில நாட்களில் புதிதாகச் சந்தைக்கு வரும் அவனது வாசனைத்திரவியம் ஒன்றுக்கான விளம்பரப் படப்பிடிப்புக்காகவே அங்கே வந்திருந்தான்.
அவனைக் கண்டு அங்கிருந்தவர்கள் ஒரு மரியாதை நிமித்தமாக எழ அவனும் புன்னகையைப் பதிலாகக் கொடுத்தான்.
எப்போதும் இவர்களது நிறுவனத்துக்கென விளம்பரப் படம் எடுக்கும் இயக்குனர் தான் இதையும் இயக்கவிருக்கிறார்.
"ஹெலோ மிஸ்டர் ஆத்விகன், லெட்ஸ் ஸ்டார்ட்" என்றவன் எப்படி நடிக்க வேண்டும் என்பதை ஆங்கிலத்தில் விளக்க, அவனும் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தான்.
அடுத்து படப்பிடிப்பு ஆரம்பமாக, முதலில் குளியலறையிலிருந்து இடையில் டவலுடன் அவன் வெளியே வர, அவன் தேகம் அத்தனை கவர்ச்சியாகப் படம் பிடிக்கப்பட்டது. அதிலும் அவன் படிக்கட்டு தேகம் மீதே அங்கிருக்கும் அனைவரின் பார்வையும்…
பிரவீனோ 'டேய் டேய் அநியாயம் பண்ணுறீங்களேடா, ஒரு பேர்ஃபியூமுக்கும் எயிட் பேக்க்கும் என்னடா சம்மந்தம், இதுல ரொமான்ஸ் வேற' என்று எண்ணியவன், அங்கே அடுத்த கட்டத்துக்காக ஆவலுடன் காத்திருக்கும் அந்த விளம்பரத்துக்கான நடிகையின் பார்வையைக் கண்டவன் 'ஆத்தி காம பார்வையாவுல இருக்கு' என்று மனதுக்குள் அலறினான்.
அடுத்து அவன் அப்படியே கண்ணாடி முன்னே வந்து சொடக்கிட, அத்துடன் அந்தப் பாகம் எடுத்து முடிந்து அடுத்த கட்டத்துக்கு இடைவேளை வழங்கப்பட்டது.
ஆத்விகனோ அடுத்த கட்டத்துகாக உடை அணிய அறைக்குள் நுழைந்திருந்தான். அவனை மொய்க்கும் யார் பார்வையையும் அவன் சட்டை செய்ததாகத் தெரியவில்லை…
அடுத்த ஐந்து நிமிடத்தில் கோட் ஷூட் சகிதம் அவன் வெளியே வர, மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமானது.
இப்போது கண்ணாடி முன்னே நின்றிருந்தவன் அவர்களது வாசனைத் திரவியத்தை உடலில் அடித்து அதனை அங்கிருந்த மேசையில் வைக்க, அந்த நடிகைப் பெண்ணோ அவன் அருகில் வந்து, அந்த வாசனையை அணுஅணுவாக முகர்ந்தவள், அவன் இதழில் இதழ் பதிக்கச் செல்ல, அந்த நேரம் கேமரா மேசையில் இருந்த அவர்களது வாசனைத் திரவியத்தில் பார்வையைச் செலுத்தி அப்படியே நிலைக்க, அடுத்து இயக்குனர் "கட்" என்று சொன்னதோடு அந்த விளம்பரப்படம் முடிவடைந்திருந்தது.
ஆனால் அந்த நடிகை இன்னும் உலகுக்கு வரவில்லை போலும் அவனது கம்பீரத்தில் மயங்கி முத்தமிட மேலும் நெருங்கி இருந்தவளின் இதழ்கள் அவன் இதழை இணைய நூலிழையில் அவன் விரல்களைக் கொண்டு தடுத்தவன், அவளை விளக்கி விட்டு அங்கிருந்து அகன்றிருந்தான்.
அடுத்து இயக்குனரிடம் பேசிவிட்டு வந்தவன் அப்போதும் "ஆஆ" என்று பார்வையை அந்த நடிகை மீதே வைத்திருந்த பிரவீனின் தலையில் தட்டியவன் "பார்த்தது போது வா போகலாம்" என்றபடி வெளியேறி இருந்தான்.
__________________
அங்கே அந்தக் கல்லூரியின் வாளாகத்தை அடைந்த ஒருவன், நேரே ஒரு வகுப்பினுள் நுழைந்து யாரையோ தேட அவனது தேடலின் நாயகி அங்கே இல்லை என்றதும் அவன் கால்கள் தன்னால் ஓரிடத்துக்குச் சென்றது.
"இங்கதான் இருக்கியா? என்ன மேடம் மூஞ்சி உம்முனு இருக்கு என்ன மேட்டர்" என்றபடி, அங்கே மரத்தின் கீழே இருந்தவளின் அருகே அமர்ந்தான்.
தன்னருகே யாரோ அமரவது புரிய, திரும்பிப் பார்த்தவள் "வா வினு" என்றதோடு முன்னே திரும்பிக் கொள்ள, அவனோ "என்னடி ஒருவாரம் கழிச்சு பார்க்குறோம் ஒரு எக்ஸ்ஸைட்மென்ட்டே இல்லாம வெறுமனே வாங்குற" என்றான் அவளது கரத்தைப் பிடித்தபடி...
"ப்ச், விடு வினு" என்று அவள் கரத்தைத் தன்னை நோக்கி இழுத்துக்கொள்ள, அவனோ "என்னாச்சு என் பூவுக்கு? முகமே இப்படி வாடிப்போயிருக்கு, என்னாச்சுடி?" என்றவன் அவள் புறம் திரும்பி அமர, அவளோ ஒரு பெருமூச்சுடன் "ஒன்னுமில்ல வினு, வா போகலாம்" என்று எழுந்துகொண்டாள்.
அவன் வினித், மலர்விழியின் காதலன்.. அதே கல்லூரியில் அவளது சீனியர் அவன்.. இதோ படிப்பு முடிந்து அவர்களது கம்பெனியில் வேலை செய்கிறான். கல்லூரியில் இருக்கும்போது பார்த்துக்கொண்டது போல இப்போதெல்லாம் பார்த்துக்கொள்ள முடிவதில்லை என்பதாலேயே வாரத்தில் ஒருநாள் அவர்களுக்கானதாக ஒதுக்கிக்கொண்டனர் இருவரும்..
இன்று அந்த நாளில் வேறு நினைப்பில் அவனை வருத்துவது அவளுக்குச் சரியாகப் படவில்லை என்பதால், அவள் எழுந்து கொள்ள... அவனோ அப்படியே அமர்ந்திருந்தான்.
அவளும் கேள்வியோடு அவளை நோக்க, "உக்காரு" என்று அருகில் காட்ட அவளும் யோசனையுடன் அமர்ந்தாள்.
"எது என் பூவோட மண்டைய குடையிது?" என்றான் கேள்வியாக, அவளோ "அண்ணி பத்திதான் வினு, முந்த நாள் நைட் ஒரு பெருச்சாலி வந்து குட்டைய குழப்பிட்டு போயிடிச்சு" என்றாள்.
அவனோ கதை கேட்கும் ஆர்வத்துடன் "யாருடி பூ அந்தப் பெருச்சாலி" என்றான்.
"அண்ணி கூட வேலை செய்ற அந்த சுவாமிநாதன் தான், அண்ணிய பொண்ணு கேட்டு வந்திருந்தான். எனக்கு வந்துச்சே ஒரு கோபம்" என்றவளின் முகத்தில் இன்றும் அன்றைய நாளுக்கான கோபம் மீதம் இருந்தது.
அவனோ "அட என் ஜான்சி ராணி சும்மாவா விட்டீங்க?" என்க... மலர்விழியோ "அதெப்படி சும்மா விடுவேன், திட்டலாம்னு தான் போனேன் ஆனா என் ஜோதி மாத்தா குருக்கால கௌஷிக் மாதிரி வந்துடிச்சு, அப்பவும் விடலையே காஃபில உப்ப போட்டுக் கொடுத்துட்டேன். அப்பறம் அண்ணியே பேசி அவங்கள அனுப்பிட்டாங்க இல்ல அந்த சுவாமி சுவாஹா ஆகிருப்பான்" என்றாள் எள்ளலுடன்..
"அதுசரி என் பூவா கொக்கா" என்று அவனும் சிரிக்க,
அவளோ அவனை முறைத்தபடி "அவனை எல்லாம் எதுக்குடா வேலைக்கு வெச்சிருக்க" என்றாள்.
"அத நீ உன் மாமனார் கிட்ட தான் கேக்கணும்" என்றவன் சிரிக்க,
அதனைப் புறம் தள்ளியவளோ "அவன் பொண்ணு கேட்டு வந்ததக் கூட மன்னிச்சு விட்டிருப்பேன் வினு, அண்ணிக்கு கல்யாணம் ஆனதே தெரியாதாம்.. அதோட குழந்தை இருக்குறது சுத்தமா தெரியாதாம்.. பரவாயில்லை நானே கட்டிக்கிறேன்னு சொல்லுறான் அதுக்கு அவன் அம்மா குழந்தையை விட்டுட்டு வாங்குது. அங்கேயே அவங்க ரெண்டு பேரு மண்டைய பிளக்கணும்னு தான் தோணிச்சு, அம்மா கைய பிடிச்சிருந்ததால தப்பிட்டான் டபரா தலையன்" என்றாள் அத்தனை ஆவேசமாக...
"ஓகே ஓகே கூல், அதான் போய்ட்டானே விடு" என்றவன் சிறு அமைதிக்குப் பின் "நீ வீணா பிடிவாதம் பிடிக்கிறன்னு தோணுது பூ" என்றதும் அவள் எப்போதும் போல் முறைக்க, அவனோ "நீ என் மேல கோபப்பட்டாலும் பரவா இல்லை நான் சொல்ல வர்றத கேளு" என்று சொன்னவன் அவள் அமைதியில் மீண்டும் தொடர்ந்தான்.
"பூ, உன் அண்ணிக்கு நிச்சயம் ஒரு துணை கண்டிப்பா வேணும்டி.. அவங்களுக்கு இப்போதான் இருபத்தேழு வயசு.. பொண்ணுங்க நிறைய பேர் இந்த வயசுல தான் கல்யாணமே பண்ணிக்குறாங்க ஆனா அவங்க இந்த வயசுல வாழ்க்கைய இழந்துட்டாங்க. கூடக் கவிக்குட்டி வேற இருக்கா, அவ வாழ்க்கையும் நீ யோசிக்கணும். இப்போவும் இத்தன வயசுக்குப் பிறகும் உன்னால உன் அப்பாவ மறக்க முடியலல அப்படி இருக்குறப்போ அவ குழந்தைடி... உனக்கு நான் சொல்லணும்னு இல்லையே நீயே யோசிச்சுப்பாரு அதுக்கு முதல் அவங்க காதல்ல இருந்து வெளிய வா.. அப்போ தான் உன்னால சரியா யோசிக்க முடியும்" என்றான் அவளுக்குப் புரியவைக்கும் நோக்குடன்...
"எனக்குக் கவிக்குட்டி நிலைமை புரியாம இல்ல வினு, ஆனா அண்ணிக்கு இன்னொரு கல்யாணம்னு யோசிக்க முடியலடா, அவங்க உடைஞ்சிடுவாங்க... இப்போ நான் இப்படி பேசுறது அவங்க முடிவுக்குத் துணையா இருக்குறது எல்லாமே அவங்களுகளுக்கு எவ்வளவு ஆறுதல் தெரியுமா? அண்ணனுக்காக அவங்க அடையாளத்தையே விட்டுட்டு வந்தவங்கடா அவங்க.. எவ்வளவு சொத்துக்கு அவங்க அதிபதி தெரியும்ல, இருந்தும் இப்போ எங்ககூட எங்களுக்காக வாழுறாங்களே எல்லாம் யாருக்காக வித்யூக்காகத் தானே! ஏன்டா அவன் அவங்கள விட்டுட்டுப் போனான்?" என்றாள் அண்ணனை எண்ணிக் கவலையுடன்...
அவளை ஆறுதலாக அணைத்துக் கொண்டவனோ "போதும்டி உன்ன நீயே கஷ்டப்படுத்திக்காத, எல்லாமே கடவுளோட எழுதுப்படி சரியா நடக்கும்.. நீ எதுவுமே பண்ணாத, நீ அவங்களுக்கு ஆதரவா பேசுறது கூட அவங்களுக்கு இப்படியே இருந்துடலாம் எங்குற எண்ணத்தத் தான் கொடுக்கும். கொஞ்ச நாளைக்கு இப்படியே விடு, நடக்க வேண்டியத கடவுள் நடத்துவாரு" என்றவன் அவளுக்கு நிதர்சனத்தை புரியவைத்து அழைத்துச் சென்றான்.
_________________
அங்கே ஆதி குரூப் ஒப் கம்பெனியின் சேர்மன் ஆதிசேஷன் அத்தனை கோபத்துடன் அங்கே அமர்ந்திருந்தார்.
அவருக்கு ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வு இது.. எப்படி எப்படி எங்கே சறுக்கினேன் என்ற எண்ணமே அவரை மொத்தமாய் ஆட்கொண்டிருந்தது.
இதோ அவர் யாரை எதிரியாய் நினைத்திருந்தாரோ அவனிடம் தனது கம்பெனியின் அறுபது சதவீத உரிமை சென்றிருப்பதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை...
அவரது நிறுவனம் பெண்களுக்கான அழகு சாதனப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனம்.. ஐந்து வருடங்களின் முன்னர் சந்தையில் முதலாவது இடத்தில் இருந்தது என்னவோ ஆதி குரூப் ஒப் கம்பெனியின் பொருட்கள் தான் ஆனால் இன்றோ?
எல்லாம் அவனால் தானே எங்கேயோ இருந்து கொண்டு கடந்த இரண்டு வருடங்களில் இவர்களது சாம்ராஜ்ஜியதையே சரித்துவிட்டானே!
இவர்களது உதட்டுச் சாயம் மற்றும் கண் பென்சிலில் தடை செய்யப்பட்ட இரசாயணமான லீட்(lead) இருப்பதாக ஆதாரத்துடன் நிரூபித்திருந்தானே!
அதிலிருந்து மீண்டு வருவதற்கு கொடுத்த லஞ்சம் கொஞ்சம் நஞ்சமா? அதில் சரிந்த பொருளாதாரத்தை ஈடுகட்ட, ஆறு இடங்களில் தலா பத்து சதவீதம் என நிறுவனத்தின் பங்குகளை விற்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க, அப்போதும் தன்னிடம் நாப்பது சதவீதம் எங்கையில் தன் முடிவுதான் இறுதியாகும் என்ற நம்பிக்கையுடன் தான் அதனையும் செயற்படுத்தி இருந்தார்.
ஆனால் இதோ விற்று ஒரு மாதத்திலே அவன் அத்தனையும் வாங்கிக் கொள்வானென அவர் கனவா கண்டார். எத்தனை ரகசியமாகச் செய்யப்பட்ட விடயம் இது அப்படி இருந்தும் அவன் காதுக்குக் கசிந்து விட்டதே!
இதோ அதிக உரிமை அவனுக்கு என்றாகி இருக்க, இனி அவன் எடுக்கும் முடிவுக்கு, தான் கட்டுப்படுவதா என்ற எண்ணமே அவரை நிம்மதியாக இருக்க விடவில்லை...
அதோடு அத்தனை தூரம் இருந்து தன் தில்லுமுல்லை கண்டு கொண்டவனை கூடவே வைத்திருப்பதா?? மண்டை வெடித்தது அவருக்கு, அந்த நேரம் சரியாய் வந்து மாட்டிக்கொண்டான் அவரது காரியதரிசி தீக்ஷன்..
"சார் மீட்டிங் லேட்டாகிடிச்சு" என்றபடி அவன் உள்ளே வர, "இடியட் என்னத்தடா கவனிக்கிற நீ? என்ன உன் முதலாளி விசுவாசத்தை இங்க எங்கிட்ட காட்டுறியா? சாவடிச்சிடுவேன். முதல்ல போ போய் அவனுக்கு வரவேற்புக்கு சந்தோசமா ரெடி ஆகு... உள்ளுக்குள்ள குளுகுளுனு இருக்குமே!" என்று அவனை அத்தனை காட்டத்துடன் தான் விரட்டினார்.
அவனோ விட்டால் போதுமென ஓடியே விட்டான்.
ஓடி வந்தவன் அங்கே வந்த பெண் ஒருத்தி மேலே மோத, அவளோ அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.
'ஐயையோ அடுத்து இவகிட்டயா மாட்டினேன் வெச்சு செய்வாளே, பிச்சிக்கோடா தீக்ஷா' என்று மனதில் அலறியவானோ "ஈஈஈ" என அவளைப் பார்த்துச் சிரித்து வைத்துவிட்டு ஓடிவிட்டான்.
"எரும மாடு, இவனை" என்று அவளால் பல்லைக் கடிக்க மட்டுமே முடிந்தது..
அவனோ நேரே அவன் அறைக்குள் சென்று மூச்சை இழுத்து விட்டவனோ.. யாரோ ஒருவருக்கு அழைப்பை விடுத்து காத்திருக்க, அந்தப்பக்கம் அழைப்பு எடுக்கப்பட்டது..
"விஷயம் கேள்விப்பட்டிங்களா பாஸ்" என்க அந்தபக்கமோ "ம்ம்ம்" என்று பதில் வந்தது.
தீக்ஷனோ "ஆதிசேஷன் கதறுறாரு பாஸ், இனிமேல் அவர் நிலைமையை நினைச்சா சிரிப்பா வருது" என்று சிரித்தும் வைக்க, அந்தபக்கமோ "சிரிச்சு முடிச்சா நான் சொல்றத கேக்குறீங்களா?" என்ற கேள்வியில் தீக்ஷன் கப்சிப்..
அந்தபக்கமோ அவனுக்கு மேலும் கட்டளை பிறப்பிக்க, அமைதியாய் கேட்டுக்கொண்டாவனோ "எதுக்கு பாஸ் இதெல்லாம் நீங்க ஒரு வார்த்தை சொன்னா இதெல்லாம் தேவையா?" என்று மனத்தாங்களுடன் வினவ, அந்தப்பக்கம் மௌனம்.. இனி என்ன பேசியும் பதில் வராது என்பதை உணர்ந்தவன் "ஓகே பாஸ் நான் பண்ணிட்டு உங்களுக்கு இன்போர்ம் பண்ணுறேன்" என்றான்.
அதற்குப் பதிலளிக்காமல் "அவ எப்படி இருக்கா? இன்னும் என் மேல கோபம் தானா?" என்ற கேள்வியில் இருந்த சோகம் இவனுக்குப் புரியவே செய்தது.
"கோபம் எல்லாம் எப்போவோ போயிடிச்சு பாஸ், இப்போ கேட்டாலும் கோபம் இருக்குற மாதிரி சும்மா நடிப்பா உங்களுக்குத் தெரியாதா?" என்க, "அவளை நல்லா பாத்துக்கோ" என்றதோடு அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
இவனும் பெருமூச்சுடன் அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றிருந்தான்.
___________________
மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருக்க அந்தச் சிறுவர் பூங்காவில் ஆதிரா கரத்தை மார்புக்கு குறுக்கே கட்டி தீர்க்கமான பார்வையுடன் நின்றிருக்க, முன்னே சுவாமிநாதன் பதற்றதுடன் நின்றிருந்தான்.
அவளிடம் பேச வேண்டும் என்று கூறி அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் பூங்காவிற்கு கெஞ்சி கூத்தாடி அழைத்து வந்தவன், வந்து இதோ பத்து நிமிடமாகியும் எதுவும் பேசும் வழியைத் தான் காணவில்லை...
ஆதிரா தான் மேலிட்ட எரிச்சலுடன் மௌனத்தை உடைத்தாள் "மிஸ்டர் சுவாமிநாதன் எனக்கு டைம் ஆகிடிச்சு என் பொண்ணு என்ன தேடுவா, இப்படியே நின்னுட்டு இருக்க முடியாது சீக்கிரம் சொல்லுங்க" என்றாள்.
அவள் குரலில் இருந்த எரிச்சல் அவனுக்கும் புரிந்தது. இனிமேல் நேரம் தாழ்த்த முடியாது என்பதை உணர்ந்தவன் "இப்படி இதுக்கு முதல் எப்போவாவது சொல்லி இருக்கலாமே ஆதி" என்றான் ஆதங்கமான குரலில்.. அவளோ "ஆதிரா" என்றாள் அவள் பெயரை அவன் சுருக்கி அழைப்பது பொறுக்காமல்...
"எத சொல்லி இருக்கணும்னு சொல்லுறீங்க மிஸ்டர் சுவாமிநாதன்?" என்றாள் தெளிவாய்..
அவனோ தடுமாறியபடி "உங்களுக்குக் குழந்தை இருக்கு கல்யாணம் ஆகிடுச்சுனு சொல்லி இருக்கலாமே! வீணா என் மனசுல ஆசைய வளர்திருக்க மாட்டேனே" என்றான் ஏதோ இவள் மீதுதான் குற்றம் என்பது போல...
"நீங்க என்ன நினைக்குறீங்க மிஸ்டர்.. நான் ஆபீஸ்ல ஒவ்வொருத்தரா போய் எனக்குக் கல்யாணம் ஆகிடிச்சு புள்ள இருக்கு புருஷன் இல்ல, வாழ்க்கை கொடுக்குறீங்களானு கேக்கணும்னு சொல்லுறீங்களா?" என்றவளது குரலிலோ அத்தனை காரம்.. விட்டால் அடித்து விடுவாள் போலத் தான் நின்றிருந்தாள்.
அவனோ "ஆதி" என்று அழைக்க, அவள் முறைத்த முறைப்பில் ஆதிரா என்று மாற்றிகொண்டான்.
"ஆதிரா, என்னால உங்கள மறக்க முடியல... ப்ளீஸ் என்ன ஏத்துக்கோங்க, உங்க பொண்ணுக்கு நல்ல அப்பாவா இருப்.." என்றவன் முடிக்க வில்லை அவளோ தீப்பார்வையுடன் "இனாஃப் மிஸ்டர் சுவாமிநாதன், என் பொண்ணுக்கு என் யுதன் தான் அப்பா, வேற யாரும் இனிஷியல் கொடுங்கன்னு வந்து நான் நிக்கலல, ஒரு தடவ சொன்னா புரிஞ்சிக்கணும்.. நீங்க வீட்டுக்கு வந்து பேசுனப்போ கூட விஷயம் தெரியாம வந்தீங்க புரிஞ்சிப்பீங்கனு தான் நான் அமைதியா பேசுனேன். அதையே நீங்க அட்வான்டேஜ்ஜா எடுப்பீங்கன்னு எதிர்பார்க்கல... இப்போ சொல்லுறேன் கேட்டுக்கோங்க, இனிமேல் லவ் அது இதுனு என்கிட்ட பேச வந்தீங்க" என்று அவள் விரலை நீட்டி எச்சரித்து நிறுத்தியதிலும் அவளது முகத்தில் தெரிந்த கோபத்திலும் அவன் தான் எட்ட நிற்க வேண்டியதாகியிற்று...
வண்டியை வீட்டுக்கு விட்டவளுக்கோ அத்தனை கோபம், அந்தக் கோபம் அவள் வேகத்திலேயே தெரிய, வண்டி பாதையில் பறந்தது. என்றும் இல்லா வேகத்துடன் வீட்டுக்கு அரைமணி நேரம் முன்னரே வந்துவிட்டாள்.
அவளது வண்டிச் சத்தம் கேட்டு, அவளது மகளோ துள்ளி வெளியே வர, அதுவரை இருந்த கோபம் சிறிது மட்டுப்பட, மூச்சை உள்ளே இழுத்து தன்னை ஆசுவாசப் படுத்தியவளோ குழந்தையைக் கைகளில் அள்ளிக் கொண்டாள்.
கவியோ "மா என்ன வாங்கிட்டு வந்தீங்க?" என்று அவள் கரத்தை ஆராய, இருந்த கோபத்தில் மகளுக்கு எதுவும் வாங்க மறந்த தன்னை நொந்து கொண்டபடி, ஒற்றைக் கண்ணை மூடித் திறந்து நாக்கைக் கடித்துக் கொண்டவளோ "அச்சோ அம்மா மறந்துட்டேனேடா கவிக்குட்டி, நம்ம அத்தை கிட்ட சொல்லலாம், அத்தை வரும்போது வாங்கி வரச் சொல்லுவோம்" என்று மகளைச் சமாதானம் செய்தபடி மலருக்கு அழைத்தாள்..
அந்தப்பக்கம் எடுத்த மலரோ "சொல்லுங்க அண்ணி?" என்க, இவளும் விடையத்தைச் சொல்லி, வங்கி வரும் படி சொல்ல, அவளும் சம்மதம் சொன்னவள் வேண்டுமென்றே கவியைச் சீண்ட எண்ணி சத்தத்தை அவளுக்குக் கேட்கும் படி வைக்கச் சொன்னவள் "அவளுக்கெல்லாம் என்னால வாங்க முடியாது அண்ணி, மரியாதையா அத்தை வரும்போது வாங்கி வானு சொல்லச் சொல்லுங்க அப்போ வேணும்னா வாங்கி வாரேன்" என்றாள் கேலியுடன்...
கவியோ முகத்தைத் திருப்பிக் கொண்டவளோ, "ம்ம்ம்கூம்" என்று அன்னையின் கழுத்தில் புதைந்து கொண்டாள். அவர்கள் கலாட்டாவில் ஆதிரா சிரிக்க,
கவியின் குரல் நலிந்து ஒலித்ததை பொறுக்காத வினித்தோ "கவிக்குட்டி" என்று அழைக்க, அந்தக் குரலில் சட்டென எழுந்தவளோ "மாமா" என்றாள் உற்சாகமாய்...
"நீங்க கவலப் படாதீங்க கவிக்குட்டி மாமா என் செல்லத்துக்கு வாங்கி கொடுத்து விடுறேன் சரியா, இவளுக்கு அடி கொடுக்கலாம்" என்க இறுதியில் அத்தைக்கு அடிப்பேன் என்றதுக்கே அவள் சத்தமாய் சிரித்தாள்.
மலரோ "அடக்கிராதகி" என்க குழந்தை இன்னும் சிரிப்பில் வெடித்தாள்..
அடுத்து வினித் அவளிடம் பேசி, ஆதிராவிடமும் சிறிது பேசியே வைத்திருந்தான்.
சென்ற வருடம் வினித் மலரிடம் காதல்ச் சொன்னபோது அவள் நேரடியாகப் பேசச் சொன்னது என்னவோ ஆதிராவிடம் தான்... அதிலேயே மலருக்கு அவன்மீது விருப்பம் என்பது அவளுக்குப் புரிந்து போனது.
அவர்கள் அலுவலகத்தில் வேலை செய்வதால் ஓரளவுக்கு அவன் பரீட்சயம் தான் ஆனாலும் விசாரித்து ஒருவாரத்தில் அவளும் சம்மதம் சொல்லி இருக்க, காதல் ஜோடிகளுக்கு அவள் தெய்வமாகத் தான் தெரிந்தாள்..
அவளும் காதல் திருமணம் செய்தவளாகிற்றே காதலிப்பவர்களது மனம் தெரியாமல் போகுமா என்ன??
அவளே ஒப்புக்கொண்டபின் ஜோதி லட்சுமியிடம் பெரிதாய் எதிர்ப்பு இருக்கவில்லை...
அடுத்து வந்த மாதத்திலேயே வினித்தின் தாயிடமும் தந்தையிடமும் ஆதிரா பேசிவிட்டாள்..
அவர்கள் வசதி படைத்தவர்களாக இருந்த போதிலும் குணத்திலும் செழிப்பானவர்களாகவே இருந்ததில் மலரின் குடும்பத்துக்கு அத்தனை மன நிறைவு...
மலரின் படிப்பு முடிந்ததும் திருமணத்தைப் பற்றிப் பேசலாமென முடிவு செய்திருந்தனர் இரு குடும்பத்தினரும்...
இதோ வீட்டின் மருமகளாக ஆதிரா இந்த ஒருவருடமாக நாத்தனாரின் திருமணத்துக்காகத் தன்னால் முடிந்தளவு பணம் சேர்த்துக் கொண்டு தான் இருக்கிறாள்.
தன் கணவன் இருந்தால் அவனது தங்கை திருமணத்தை எப்படி சீரும் சிறப்புமாய் செய்வானோ அப்படியே தானும் செய்ய வேண்டும் என்பது அவள் எண்ணம்.
இதோ காதல் ஜோடிகள் தங்களுக்கான நேரத்தைச் செலவிட்டு விட்டு வீடு திரும்பி இருந்தனர்.
அவனது பைக்கிலிருந்து இறங்கி வீடு நோக்கிச் சொல்லப்போன மலர்விழியின் கரத்தைப் பற்றிக்கொண்டான் அவன்.
அவளோ கேள்வியாகப் பார்க்க, "என்னடி அப்படியே போற?" என்றான் ஏக்கத்துடன்...
"பின்ன அப்படியே போகாம பறந்தா போக முடியும்" என்றவள் சிரிக்க, அவனுக்குத் தான் அந்தக் கேலியில் சிரிப்பு வரவில்லை...
"சரி சரி முறைக்காத, இவ்வளவு நேரம் உன் கூடதானடா இருந்தேன் அப்பறம் என்ன? அடுத்த வாரம் பார்க்கலாம் இப்போ சமத்து பிள்ளையா வீட்டுக்குப் போவியாம்" என்றவள் அவன் கன்னம் பிடித்துக்கொஞ்ச, அவள் கரத்தை அப்படியே கன்னத்தோடு பிடித்துக்கொண்டான் அவன்...
அவளோ "என் செல்லம்ல என்னடா சேட்டை இது, வீட்டு வாசல்ல வெச்சு அண்ணி வரப்போறாங்க பாரேன்" என்க அப்போதும் அவனிடம் அதே பார்வைதான்..
"வினு" என்றவள் சங்கடமாய் அழைக்க, அவளது கரத்தை விடுவித்தவனோ "கல்யாணம் முடியட்டும்டி உன்ன வெச்சிக்கிறேன்" என்று செல்லமாய் சொன்னவன் மீண்டும் "என் மாமா நெக்ஸ்ட் வீக் ஊருக்கு வாரங்க, சோ நாம சிம்பிளா எங்கேஜ்மென்ட் வெச்சிக்கலாம்டி... அம்மாவும் அப்பாவும் பேச வர்றதா சொன்னாங்க வீட்ல சொல்லிடு" என்றவன் சொல்லிகொண்டிருக்க மலருக்கோ யாரோ தங்களை பார்ப்பதை போலொரு உணர்வு...
அது யாரென்று தேட வேண்டிய அவசியமே இல்லையே.. சரியாய் அவள் பார்வை முன் வீட்டைத் தொட, அங்கே வீட்டு ஜன்னலின் மேல் அலங்காரத்துக்காக மலர் வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்த அலங்காரத்தின் இடைவெளியில் இரு கண்கள் அவளுக்கு அப்பட்டமாய் தெரிந்தது..
'பெரிய ஜேம்ஸ் போண்ட்னு நெனப்பு, மறைஞ்சிருக்குற அழகப்பாரு, என்னையே வேவு பார்க்குறியா சரஸு, இன்னைக்கு உன்ன தூங்க விட்டேன்னா பாரு' என்று எண்ணியவளோ, கிளம்ப தயாராக இருந்த வினித்தின் முகத்தை இரு கைகளாலும் பற்றி அவன் கன்னத்தில் ஆழ இதழ் பதித்தவள் குதூகலமாக உள்ளே ஓட, வெளியே ரெண்டு ஜீவன் உறைந்து நின்றது.
உடையவனுக்கு ஆனந்த அதிர்வு என்றால் இன்னொருத்தருக்கோ ஹார்ட் அட்டாக் வராத குறை தான், இதனை விடிந்ததும் யாரிடமாவது சொல்லாதவரை சரஸுக்கு தூக்கம் அரோகரா தான்...
மின்னல் வெட்டும்
இப்படிக்கு
GG-13
Attachments
Last edited: