வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தீராமின்னல் தீராதினி-03

GG writers

Moderator
1000010426.jpg

மின்னல் 03



வேலை செய்துகொண்டிருந்த ஆதிராவோ தனது கைக் கடிகாரத்தை திருப்பித் திருப்பிப் பார்த்தபடியே வேலையைச் செய்துகொண்டிருக்க,



வேலை முடிந்து வீட்டுக்குக் கிளம்ப தயாராகி வந்த அவளது அலுவலகத் தோழி சாந்தனாவோ "என்ன ஆதி இன்னும் உக்காந்திருக்க? இன்னைக்கி எர்லியா போகணும்னு சொன்னியே! நீ வேணும்னா போயேன் நான் பாத்துக்கிறேன்" என்றாள்.



அதற்கு அவளை முறைத்த ஆதிராவோ "என்ன மேடம் ரொம்ப ஹெல்தியா இருக்குறதா நினைப்போ? அடுத்த வாரம் டெலிவரி வெச்சிக்கிட்டு நீ ஆஃபீஸ் வர்றதுக்கே உன்ன திட்டிட்டு இருக்கேன். இதுல என் வேலையும் சேர்த்து செயிறீங்களோ? பிச்சிடுவேன் ஓடு முதல்ல" என்றவள் மீண்டும் "நாளைக்கு வேலைக்கு வந்தா பாத்துக்கிறேன் உன்ன?" என்று மிரட்ட வேறு செய்ய, அதன் பின் அங்கே எப்படி நிற்பது என அவளும் கிளம்பி விட, நேரம் மாலை நான்கைத் தொட்டிருந்தது.



அவ்வளவு ஒன்றும் தாமதமாகிவிடவில்லை, சாதாரணமாக இந்த நேரத்துக்குப் பின்னும் வீடு செய்பவள் தான்.



ஆனால் வேறு நாள் என்றாலும் பரவாயில்லை... இதோ நாட்கள் கடந்து, இன்று மலரைப் பெண் பார்க்க வரும் நிகழ்வு நடக்கவிருக்கிறது.



இன்றென்று இப்படி ஆகி விட்டதே என்பதே ஆதிராவின் கவலை...



விடுமுறை எடுத்துக்கொள்ளத் தான் நினைத்தாள், ஆனால் அவள் செய்து கொடுக்க வேண்டிய முக்கியமான வேலை ஒன்று மீதம் இருக்க, வரும் காட்டாயம் அவளுக்கு...



முடிந்து விடும் என்று பார்க்க இதோ இப்போது வரை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.


இப்படியே சிறிது நேரம் கடக்க,

வெளியே வந்த வினித்தோ இவளைக் கண்டவன் இவள் அருகே வந்து "ஆதிக்கா இன்னும் நீங்க கிளம்பலையா?" என்று கேட்க,



அவன் குரலில் நிமிர்ந்தவள் "இல்லை வினித், இந்த மந்துக்குரிய பெர்பியூம் அன்ட் காஸ்மெட்டிக் டீடெயில்ஸ் கொஞ்சம் அட் பண்ண வேண்டி இருக்கு, மந்த் என்ட் வேற இன்னைக்கே முடிச்சாகனும்" என்றாள்.

அவனோ "நீங்க தான் அப்பப்போ பண்ணிடுவீங்களே க்கா என்னாச்சு?" என்றான் கேள்வியாக...



அவளும் பெருமூச்சுடன், "நான் ஏற்கனவே பண்ணிட்டேன் வினித் இந்த வீக்குக்குரியது மட்டும் தான் என்டர் பண்ண வேண்டி பேலன்ஸ் இருந்திச்சி, ஆனா திடீர்னு பார்த்தா இன்னைக்கு மொத்தமா பைலக் காணோம், நல்ல வேல என் போன்ல அந்த டீடெயில்ஸ் சேவ்ல இருந்திச்சு. அதத் தான் இப்போ என்டர் பண்ணிட்டு இருக்கேன்… அந்த டீடெயில்ஸ் அரேஞ் பண்ணி மொத்த மந்த்க்குறியதும் ஒரே நாள்ல என்டர் பண்ணனும்ல அதான் லேட்" என்றாள் அவனுக்கு விளக்கமாக...



அவனோ யோசனையுடன் "உங்க சிஸ்டம்ல உள்ளது எப்படி காணாம போகும்க்கா? யாரோ வேணும்னு தான் பண்ணி இருக்கனும், அப்பாக்கிட்ட சொல்லி என்னனு பார்க்கச் சொல்லுறேன் க்கா" என்றவனிடம் "அச்சோ அதெல்லாம் எதுவும் வேணா, இதோ முடிஞ்சிது ப்ரோப்லம் சோல்வ்ட், சோ மாப்பிளை சார்… போய் சீக்கிரம் ரெடியாகி பொண்ணப் பார்க்க வாங்க, இல்லனா லேட்டான மாப்பிளை எனக்கு வேணான்னு பொண்ணு சொல்லிடப் போகுது" என்றவள் புன்னகையுடனே கணினியின் மின்சார இணைப்பைத் துண்டித்துக் கிளம்ப தயாரானாள்.



அவள் எண்ணியது போலவே, தன்னவளைப் பற்றிப் பேசியதும் வினித்தின் கவனம் திசை மாறியது.



அதுதானே அவளுக்கு வேண்டும்… நடந்த குழறுபடி யாரின் வேலை என்பது அவளுக்குத் தெரியும். இப்போது வேண்டாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்பது அவள் எண்ணம்...



அவனோ புன்னகையுடன் "அதெல்லாம் வேணாம்னு சொல்ல மாட்டா, அம்புட்டு லவ்வு" என்று கண் சிமிட்டிச் சொன்னான்.



அவளும் "ஆஹான் ரொம்ப தெரியுமோ?" என்று மீண்டும் நக்கல் குரலில் கேட்டவள் "ஓகே வினித் நான் போய் எல்லா வேலையும் பார்க்குறேன் நீ அம்மா அப்பாவோட வீட்டுக்கு வந்து சேரு" என்றபடி வெளியேறி இருந்தாள்.



வினித் அங்கே மேனேஜர் பொறுப்பில் இருக்கிறான். அவனது தந்தைக்கு அடுத்து அந்தக் கம்பெனிப் பொறுப்பை எடுத்து நடத்த அவனுக்கான பயிற்சி காலம் இதுவென மேலிடத்து உத்தரவு அவனுக்கு, மீற முடியாத கட்டளையும் கூட...



ஆரம்பத்தில் 'சார்' என்று விளித்தவளை வற்புறுத்தி வினித் என்று அழைக்கும் படி அன்பு தொல்லை அவன் செய்திருக்க, அவளுக்கும் ஒத்துக்கொள்வதை தவிர வேறு வழி இருக்கவில்லை...



வெளியேறியவளோ தேவையான பொருட்கள் என்று குறித்து வைத்திருந்தவற்றை ஒவ்வொன்றாய் பார்த்துப் பார்த்து இருக்கும் பணத்துக்குள் வாங்கியவளோ, அந்தப் பல்பொருள் அங்காடியில் வேறு ஏதேனும் வாங்க வேண்டுமா என்று பார்வையை செலுத்தியபடி இருந்தாள்.



"ஓவரா ஆடுனா இப்படித்தான்டா பார்த்துப் பார்த்துச் செலவழிக்கணும் எல்லாம் தலை விதி, திமிரெடுத்து ஆடுனதுக்கு அனுபவிக்கனும்ல" என்று ஒருத்தி சொல்ல,



அவளருகில் இருந்தவனோ "சும்மா இரு மனிஷா" என்று அந்தப் பெண்ணை அடக்கியவன் "அழகான பொண்ணு கஷ்டப்பட்டா என் மனசு தாங்காது இப்போவும் வாழ்க்கை கொடுக்க நான் தயார் தான்" என்று அவளைப் பார்த்து இதயத்தில் கை வைத்தபடி சொல்ல, அவர்களை நோக்கித் திரும்பியவளோ நெஞ்சுக்குக் குறுக்கே கை கட்டியபடி அவர்களைத் தீர்க்கமாய் பார்த்தாள்.



எதிர்த்து எதுவும் பேசவில்லை ஆனால் பாவையின் பார்வையின் தீவிரம் எதிரில் இருப்பவர்களைத் தடுமாற வைத்தது என்னவோ உண்மை...



அந்த நேரம் அந்த இருவரையும் தேடி வந்த பெண்மணி ஒருவரோ "இங்க என்ன பண்ணுறீங்க ரெண்டு பேரும்?" என்று கேட்டபடி முன்னே வர, அவரது பார்வை வட்டதுக்குள் விழுந்தாள் ஆதிரா.



அவளும் அவள் பார்வையும் அவர் கண்ணில் பட்டது தான் தாமதம்…



"மனிஷ், மனிஷா இங்க என்ன பண்ணுறீங்க? போகலாம்" என்றபடி அவர்கள் இருவரையும் இழுத்துச் செல்ல, அதுவரை இறுக்கமாக இருந்து ஆதிராவின் இதழ்கள் ஒரு நொடி விரிந்து கொண்டது.



அதே நேரம் அங்கே விமான நிலையத்திலிருந்து தன் நீண்ட கால்களால் எட்டுக்களை வைத்து ஓடுகிறானா? நடக்கிறானா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் புயலென வெளியேறினான் ஆத்விகன்.



பின்னே "பாஸ் என்று அழைத்தபடி அவன் வேகத்துக்கு ஈடுக்கொடுக்க முடியாமல் பிரவீன் வர, அவன் அழைப்பு காற்றில் கரைந்து தான் போனது.



விமான நிலைய கட்டடத்தினுள் இருந்து காருக்குச் செல்லும் அந்தக் குறுகிய தூர இடைவெளியைப் பார்த்தவனது கால்கள் சட்டென நின்றுவிட்டது.



பின்னால் வந்த பிரவீனுக்கோ அவன் நிற்கும் காரணம் அத்துப்படி என்பதால், அடித்துப்பிடித்து அஅவனுக்குத் தேவையானதை அவன் கையில் வைத்திருக்க, பிரவீனை ஒரு பார்வை பார்த்தவன், அந்த முகக் கவசத்தை அணிந்திருந்தான்.



அவன் சருமத்தில் அத்தனை கவனம் எப்போதும் அவனிடத்தில் இருக்கும். தூசு வெயில் இதுலெல்லாம் ஒவ்வாமை அவனுக்கு…




உலகின் புகழ் பெற்ற அழகு சாதன பொருட்களை உற்பத்தி செய்பவனாக இருப்பினும் அதில் எதனையும் அவன் உபயோகப்படுத்துவதில்லை...



சூரியக்கதிர் தடுப்புப் பூச்சு (சன்ஸ்கிரீன்) மாத்திரம் தான் அவன் பாவனை...



அதுவும் அவன் சருமத்தை சூரிய வெப்பத்திலிருந்து காப்பதால் மட்டுமே!



அவனைப் பாபார்த்துப் பம்மியபடி நின்ற பிரவீனை பார்த்தவனோ "வீட்டுக்குப் போயிட்டு எப்போ எனக்குச் சாப்பாடு போடலாம்னு உன் வைஃப் கூட டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்லுற ரைட்" என்று

காரில் ஏறியவன் கையசைக்க, வாகனம் அவன் வீட்டை நோக்கி நகர்ந்தது.




"போகும் போதும் என்ன கோர்த்து விட்டுட்டு போறாரே! அவ வேற மூஞ்சிலயே மிதிப்பா... என்ன காப்பாத்து ஆண்டவா" என்று அங்கு நின்று புலம்பியவனை, பைத்தியமோ என்ற ரீதியில் தான் மக்கள் கடந்து சென்றனர்.



காரினுள் அமர்ந்து வெளியே பார்த்துக்கொண்டு வந்தவனின் முகத்தில் சட்டென்று ஒரு ஒவ்வாமை வந்து ஒட்டிக் கொண்டது என்னவோ உண்மை...



இங்குள்ள தூசு, வெப்பம் மற்றும் கூட்ட நெருசல் இதெல்லாம் அவன் இங்கே வராமல் இருந்த காரணங்களில் சில...



அடுத்த அரைமணி நேரத்தில் அவன் வாகனம் அவன் வீட்டு வளாகத்தினுள் நுழைய, அங்கே வாசலில் தயாராக நின்றவர்கள் இவனைக் கண்டு அதிர்ச்சி அடையாத குறை தான்.



அவனை அழைத்த அவன் தந்தைக்கும் இது அதிர்ச்சி தான்...



இப்படி திடுதிப்பென்று வந்து நிற்பான் என்று அவர் என்ன கனவா கண்டார்.



சொத்து விடயம் சொல்லும் போதும் அவன் வருவான் என்றெல்லாம் அவருக்கு நம்பிக்கை இல்லை... எதாவது குறுக்கு வழியில் தன்னை அடக்க முயற்சிப்பான் என்று தான் எண்ணி இருந்தார்.



ஆனால் அவனோ உன் கணிப்பிற்குள் நான் அடங்கமாட்டேன் என்பதை நிரூப்பிப்பது போல் இதோ வந்து இறங்கி விட்டானே!



அவனது தந்தை ஞானேந்திரனோ "ஆத்வி" என்று அழைத்தவர் அடுத்து என்ன பேச என்று அவனைப் பார்க்க, அவனோ "எஸ் டாட்" என்றான் சற்று குதூகலமாய்...



"வா ஆத்வி உள்ள வா" என்றவர் கண்ணில் கண்ணீர், அதற்கான காரணம் அவர் மட்டுமே அறிவார்.



மறக்க முடியாத, மறைக்க முடியாத பல சோகம் அவருள்...



ஏதேதோ எண்ணங்கள் மனதை சூழ, "அப்பாவ பார்க்க உனக்கு இவ்வளவு நாள் ஆகிடுச்சுல ஆத்வி" என்க அவனோ சிரித்தபடியே "டாட் ஜஸ்ட் வன் இயர் தானே ஆச்சு நீங்க இங்க வந்து, இதுக்கேவா?" என்றான்.



"நான் இங்க வந்து வன் இயர் தான் பட் நீ இங்க வந்து எவ்வளவு நாள் ஆகுது ஆத்வி, எங்க நீ இங்க வராமலே போய்டுவேன்னு பயந்துட்டேன்" என்றார் அவர்...



அவனோ "அது உங்க மிரட்டல்லயே புரிஞ்சிது டாட், அதான் இப்போ வந்துட்டேன்ல" என்று அவரைச் சமாதானம் செய்துகொண்டிருந்தான்.



அதற்குள் அவனது அத்தை தாமரை ஆரத்தி எடுப்பதற்கு தட்டுடன் தயாராய் வந்திருக்க, அவனும் புன்னகையுடன் அவர் பக்கம் திரும்பினான்.



ஆரத்தி எடுத்து முடித்தவர், அவன் நெற்றியில் திலகமிட்டு, அவனை வாஞ்சையாய் பார்த்து வைத்தார்.



தாயில்லாமல் வளர்ந்த அண்ணன் மகனுக்குத் தாயாய் மடிகொடுத்தவர் அவர் அல்லவா??



அடுத்து அவன் மாமா சிதம்பரம் அவன் தலையைத் தடவிக்கொடுக்க, அந்த நேரம் தயாராகி வந்த வினித்தும் அவனது தங்கை நேஹாவும் இவனைக் கண்ட மகிழ்வுடன் "மாமா" என்ற கூச்சலுடன் அவன் அருகில் வர, அடுத்து என்ன வாயிலிலேயே ஒரே ஆரத்தழுவல் தான்...



சில வினாடிகளுக்குப் பின் "எங்க பயணம் எல்லாரும்?" என்றான் அவர்கள் தயாராகி நிற்பதைப் பார்த்து, அதன் பின்னரே அவர்களுக்குப் பெண் வீட்டுக்குச் செல்ல வேண்டியிருத்தது ஞாபகம் வர, அவனிடம் விடயத்தைச் சொன்னார் சிதம்பரம்.



அவனோ "கங்கிராட்ஸ் வினித்" என்று அவன் மாமன் மகனைத் தோளோடு கட்டிக்கொண்டவன் "ஓகே நீங்க போயிட்டு வாங்க நான் ரெஸ்ட் எடுக்கப்போறேன்" என்றபடி உள்ளே நுழையப்போக, அவன் தந்தை ஞானேந்திரனோ "நீயும் எங்க கூட வா ஆத்வி... குடும்பமா ஒரு நல்ல காரியத்துக்குப் போறோம். நீ இல்லனா எப்படி?" என்க, மற்றவர்களும் அதையே பிடித்துக்கொண்டனர்.



அவன் தந்தையை முறைக்க, அவரிடமோ மாட்டிக்கொண்ட பாவனை...



இத்தனை கேட்ட பின்னும் மறுக்கவா முடியும்??? அவர்களுடன் அவனும் பயணப்பட்டான்...


கடந்த மூன்று வருடங்களுக்கு முதல் நடந்த விபத்தில் சாவின் எல்லைக்கே சென்று வந்தவன் அவன், முன்பு பெரிதாக ஒட்டுதல் இல்லை என்றாலும் ஓரளவுக்கு உறவுகள் என்று நடப்பவன் தான் ஆனால் இந்த விபத்தின் பின் சற்று உறவு மேம்பட்டிருந்தது...

விபத்தில் பழைய நினைவுகள் அனைத்தும் அவனை விட்டுப் பிரிந்திருக்க, மிகவும் கடினப்பட்டுத்தான் போனான்.

அதிலிருந்து அவனை மீட்டு வந்ததில் அவன் குடும்பத்துக்கும் பிரவீனுக்குமே பெரிய பங்கு இருக்கிறால் மிகையில்லை...



அங்கே ஆதிராவின் வீடு அத்தனை பரபரப்பாய் தான் இருந்தது...

வீட்டில் இருக்கும் மூவரும் பெண்கள் தான். இப்படி விசேஷம் என்று வருகையில் அவர்கள் உள்ளம் அவர்கள் வீட்டு ஆண்களை எண்ணாமல் இருபதில்லை...

இன்றும் ஜோதி லட்சுமி அவர் கணவர், மகன் இருவரின் நிழற்படத்தின் முன்னர் தான் நின்றிருந்தார்.

'என்னங்க, என் ராசா இன்னைக்கு நம்ம மலருக்கு ஒரு நல்ல விஷயம் நடக்கப் போகுது, அவ வாழ்க்கைல நல்லா வாழணும்னு நீங்க ரெண்டு பேரும் தான் சாமியா இருந்து அவளைப் பாத்துக்கணும்" என்றவரது விழிகளோ அங்கு என்ன என்ன குறைகிறது, எல்லாம் தயார் செய்தாகி விட்டதா என்று ஒவ்வொன்றாய் தனியாளாய் பார்த்துப் பார்த்துச் செய்யும் மருமகளில் நிலைக்க, பெருமூச்சுடன் 'நான் கண்ண மூடுறதுக்குள்ள, இந்த மகராசிக்கு ஒரு நல்லா வாழ்க்கை அமஞ்சிடனும், அதுவும் உங்க பொறுப்பு தான்' என்று மனதினுள் பேசியவரோ மனதார வேண்டிக்கொண்டார்.

அந்த நேரம் அவரது கணவரின் படத்திலிருந்த பூவொன்று கீழே அவர் பாதத்தின் அருகே விழ, ஜோதி லட்சுமி பூரித்துத் தான் போனார்... அவ்வளவு நிறைவு அவருக்கு "இது போதும்ங்க இது போதும், என் பொண்ணுங்க ரெண்டும் நல்லா வாழும் என்குற நம்பிக்கையைக் கொடுத்துட்டீங்க" என்றவர் அந்த மலரைக் கண்ணில் ஒற்றிக் கொண்டார்.

அவர் அப்படியே நின்றிருக்க, வீட்டின் அழைப்பு மணி அடிக்கும் சத்தம்...

வினித்தின் வீட்டிலிருந்து வருவதாகச் சொன்ன நேரத்துக்கு இன்னும் முப்பது நிமிடங்கள் இருந்தது.

எப்படியும் நல்ல காரியம் என்பதால் குறித்த நேரத்துக்கே வருவார்கள் என்று தெரியும் அப்படி இருக்கையில் யார் இது? என்ற கேள்வியுடன் கதைவைத் திறந்த ஆதிரையை வரவேற்றது "ஈஈஈஈ" என்று பற்கள் முப்பத்திரண்டையும் காட்டியபடி நின்றிருந்தவனும், அவனருகே கண்களில் அனல் விட்டுகொண்டிருந்த பெண்ணும் தான்...

அவர்களைப் பார்த்ததும் புருவம் உயர கேள்வியுடன் உள்ளே நின்றிருந்த மலரைப் பார்க்க, அவள் முழியிலே இது அவள் வேலை என்று மட்டும் ஆதிராவுக்குப் புரிந்தது.

"உள்ள வாங்க" என்று அவள் அழைக்க, அந்தப் பெண்ணோ அப்போதும் முறைத்தபடியே தான் நின்றிருந்தாள்.

அதில் சுவரஷ்யம் வரப்பெற்ற ஆதிராவோ "ஹலோ மேடம் உங்க புருஷன் பெரிய நெருப்பு தான் ஒத்துக்கிறேன் அதுக்குனு உங்க காதல காட்டுறதுக்குக் கண்ணுல எல்லாம் நெருப்பு விட வேண்டாம் சொல்லிட்டேன்" என்று அந்தப் பெண்ணில் கரத்தைப் பற்ற, அவளோ தட்டிவிட்டபடி வெடுக்கென்று உள்ளே நுழைந்தாள்.

வெளியே நின்றிருந்த அந்தப் பெண்ணின் கணவனோ "விடுங்க பாஸ் எங்க போய்ட போறா பாத்துக்கலாம்" என்று அவனும் உள்ளே நுழைய, இதான் சாக்கென்று கதவை அடைப்பதற்குள், பக்கத்து வீட்டு சரஸ்வதி ஓடி வந்துவிட்டார்.

"என்னமா ஆதிரா, என்ன விசேஷம்? வீடெல்லாம் ஒரே பளபளனு இருக்கு" என்று கேட்டவரின் பார்வையோ கதவடுக்கில் உள்ளே தெரிந்தவற்றை ஆராயத் தொடங்கி இருந்தது.

அவளோ மானசீகமாகத் தலையிலடித்துக் கொண்டு 'திருந்தாத ஸ்பீசிஸ்' என்று எண்ணியவளோ "அது இன்னைக்கு மலர, பொண்ணு பார்க்க வர்றாங்க சரஸக்கா" என்றவள் அடுத்து ஏதேனும் கேட்பதற்கு முன் "சரி அப்பறம் பார்க்கலாம்க்கா உள்ளே நிறைய வேலை இருக்கு நான் வர்றேன்" என்க சரஸ்வதிக்கும் அடுத்து எப்படி பேசுவது என்று புரியாமல் "ம்ம்ம்ம் சரி ஆதி" என்று கிளம்பிவிட அப்போதுதான் ஆதிராவால் மூச்சு விடவே முடிந்தது.

பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்றே சதா நோட்டம் விடும் எதிர் வீட்டில் இருப்பவரிடம் சண்டை போட்டுக்கொள்ளவும் முடியாமல், அவர் தொல்லையைச் சகித்துக்கொள்ளவும் முடியாமல் தினம் இவருடன் ரோதனை தான்...

'இப்படியும் மனிதர்கள்' என்று எண்ணிக் கடந்துவிடுவாள் ஆதிரா… ஆனால் மலருக்குத்தான் கோபம் கோபமாய் வரும், பலநேரம் நன்றாகக் கொடுத்தும் விடுவாள் தான் சிலநேரம் அவளுக்கு வராத பொறுமையைக் கடைபிடிக்க வேண்டி இருக்கும்.


உள்ளே வந்த ஆதிராவோ அங்கு முறைத்தபடி அமர்ந்திருக்கும் பெண்ணின் அருகில் அமர, அவளோ இன்னும் முறைப்பை தொடர்ந்து கொண்டே தான் இருந்தாள்...

"அட என் நைல் நதிக்கு இன்னும் கோபம் போகலையோ?" என்று வேண்டும் என்றே கேட்டாள்.

"பாஸ் என் பொண்டாட்டி உங்கள மட்டுமில்ல பாஸ் என்னையும் வெச்சு செய்வா, பார்த்துப் பண்ணுங்க பாஸ் சேதாரம் எனக்குத்தான்" என்று பவ்யமாக அவன் சொல்ல, அதற்கும் புன்னகை தான் ஆதிராவிடம்...

அவளது முக மலர்வை ஆசையாய் பார்த்த ஜோதி லட்சுமியோ "அடடா வாமா நதி, வாப்பா தீக்ஷன்" என்றவர் இருவரையும் வரவேற்க,

அவரிடம் கோபம் எல்லாம் நதியிதழுக்கு இல்லையே, அவரைப் பார்த்துப் புன்னகைத்தவளோ" எப்படி இருக்கீங்கமா? வேலை எல்லாம் முடிஞ்சிதா? எதா இருந்தாலும் சொல்லுங்கமா பண்ணிடலாம். இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி தான்மா மலரப் பொண்ணு பார்க்க வர்றாங்கனு தெரியும் இல்லனா நேரதுக்கே வந்திருப்பேன்" என்றவளின் பார்வை கணவனையும் தோழியையும் சுட மறுக்கவில்லை...

"இதுல என்னடா இருக்கு, எல்லாம் ஆதியே பார்த்துக்கிட்டா, பெரிசா வேலை எதுவும் இல்லை... இனிமேல் அவங்க வந்தப்பறம் காஃபி போடுற வேலை மட்டும் தான் மிச்சம்... நீ தான் அம்சமா போடுவியே நீயே போடு" என்றவர், அவளது மேடிட்ட வயிற்றில் கை வைத்து "எப்படி இருக்கான் என் பேரன்?" என்று குழந்தையைப் பற்றிக் கேட்கத் தொடங்கி விட்டார்.

அவர்களது கவனம் இங்கே இல்லை என்றதும் தீக்ஷனோ "பாஸ், ஏன் எங்கிட்ட சொல்லல நீங்க? அப்படி இன்னும் எங்கள பிரிச்சு வைக்கணும்னு என்ன பாஸ் உங்களுக்கு? இது நியாயமே இல்லை, நதி கோப படுறதுல என்ன தப்பு இருக்கு... மூனு வருசமா எங்கள அவொய்ட் பண்ணுறீங்க" என்று மனத்தாங்களுடன் அவன் வினவ, ஆதிராவிடம் பெருமூச்சு மட்டுமே!

அவளிடமிருந்து பதில் வராது என்பதை அவன் அறிவான் தானே!! இன்று நேற்றா நடக்கிறது கடந்த மூன்று வருடங்களாக விடை தெரியா வினாவல்லவா இது...



இங்கே இப்படி இருக்க, அங்கே கடல்போல் பெரிய வீட்டின் நடுக்கூடத்தில் கோபமாய் அமர்ந்திருந்தார் ஆதிசேஷன்.

மனம் எல்லாம் கொழுந்து விட்டு எரிய, அவன் வந்துவிட்டான் என்ற தகவல் வந்ததிலிருந்து அவருக்கு எரிச்சல் தான் மண்டிக்கிடந்தது.

அவனை உருதெரியாமல் அழிக்க வேண்டும் என்பதே அவர் எண்ணம்... அதற்கான முயற்சியில் சற்று சறுகி இருந்தார்.

ஆத்விகனின் அந்தக் கோர விபத்துக்குக் காரணம் அவரே...

தப்பி விட்டானே என்று வருந்தாத நாளே இல்லை, ஆனால் அவன் பழைய நினைவுகள் தப்பி விட்டது என்று அஜாக்கிரதையாக இருந்ததில் இதோ மீண்டும் அவன் குடைச்சல், அதுவும் மீள முடியாத குடைச்சல்...


அவர் யோசனைகளின் மத்தியில் இருக்க, அவரது அடியாள் ஒருவனோ "சார் அவனப் போட்டுடலாம் சார் இந்த வாட்டி மிஸ் ஆகாது. அதான் இந்தியா வந்துட்டானே இங்க வெச்சி போடுறது ஈஸி தான்" என்றான்.

அவரோ "கிழிச்ச, அவ்வளவு அழகா கிடைச்ச வாய்ப்பைக் கோட்ட விட்டுட்டு இப்போ வந்து சொல்லு, அவன் ஒருத்தன கொல்லப் அத்தன பேர் போயும் முடியல, அப்பவே அப்படி இப்போ அவனுக்கு நாமதான் காரணம்னு தெரிஞ்சிருக்கும் இப்போ போய்க் கிழிப்பாறாம்" என்று கத்தியவர், மீண்டும் "நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது, உன் தலையை அடமானம் வெச்சாலும் எனக்குக் கவலை இல்லை அவன் மறுபடியும் இங்க இருந்து உயிரோட அமெரிக்கா போகக் கூடாது" என்றார் அத்தனை தீவிரத்துடன்...

"கண்ணடிப்பா சார், இந்த முறை மிஸ் ஆகாது" என்றான் அவன்.

அவரோ "மிஸ் ஆச்சு, நீ மிஸ் ஆகிடுவ" என்றவர் சில கட்டுப் பணங்களை அவன் கையில் வைத்து "சீக்கிரம் வேலைய முடி" என்றவர் அமர்ந்திருந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்து தலையைப் பிடித்துக்கொண்டார்.
 
Last edited:
அந்த நேரம் அவர் மனைவி மக்கள் உள்ளே நுழைந்திருந்தனர்.


அவரது அந்த நிலையைக் கண்ட அவர் மனைவி கமலமோ "என்னாச்சுங்க?" என்றபடி அருகில் வர, அவரோ இருந்த எரிச்சலில் "ம்ம்ம் சாகல போதுமா?" என்று கத்தி இருந்தார்.


அதற்குப் பிறகும் எங்கே பேச, அமைதியாய் அவருக்குத் தேநீர் தயாரிக்க சமையலறைக்குள் நுழைந்து கொண்டார்.


அங்கே எத்தனை வேலையாட்கள் இருந்தாலும் சமையல் என்றும் கமலம் தான். அது அங்கே எழுதப்பாடாத சட்டம்.


ஆதிசேஷன் வேறு யாரையும் நம்ப தயாராக இல்லை... பாம்பின் கால் பாம்பறியும் என்பதைப் போல அவன் செய்த பாவம் எங்கே தனக்கே வந்துவிடுமோ என்று அத்தனை அச்சம் அவருள்...


கமலமோ தேநீரைக் கொண்டு வந்து கொடுக்க, அது அவருக்கு அந்த நேரம் அவசியம் என்பதால் அருந்தத் தொடங்கினார் ஆதிசேஷன்.


அதன் பின்னரே அவருக்குத் தலைவலி சற்று மட்டுப்பட்டிருக்க, அருகில் அமர்ந்திருக்கும் மகளை அப்போது தான் பார்த்தார்.


மனிஷாவோ இன்னும் கடுகடு என்று தான் அமர்ந்திருந்தாள்.


"டேய் பாப்பா என்னாச்சுடா?" என்று தந்தை கேட்டதும் தான் தாமதம் பொறிந்து தள்ளினாள் அவள்.


"அந்தத் திமிரு பிடிச்சவளை பார்த்தேன் ப்பா, பிச்சை எடுத்தாலும் இன்னும் அவளுக்குத் திமிரு குறையல" என்று கடுகடுக்க, அருகில் அமர்ந்திருந்த அவள் இரட்டை சகோதரனான மனிஷோ "என்ன பேசுற மனிஷா? அவங்க நம்ம ஆதிக்கா, இன்னும் உன் குணம் மாறலல... நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்க, அவங்க கிட்ட சும்மா விளையாட்டுக்குப் பேசுறன்னு விட்டா, உன் மனசுல உள்ள கசடு இன்னும் மாறல" என்றான் கோபமாய்...


அவளோ "பாருங்கப்பா இவன, அவளுக்காக என்னயே திட்டுறான். பெரிய இவ அவ" என்றவள் முகத்தை வெட்டிக்கொண்டாள்.


அதிஷேஷனோ "நீ பிரீயா விடு பாப்பா, பணத்தோட அருமை தெரியாதவளுக்கு கஷ்டப்பட்டாலும் புத்தி வராது... அவ பல்லு பிடுங்கின பாம்பு, அவளெல்லாம் நமக்கு ஒரு ஆளா விடுடா" என்று மகளைச் சமாதானம் செய்ய, மனிஷோ கோபமாய் அங்கிருந்து சென்றிருந்தான்.


மனிஷா அவனையே பார்த்திருக்க, "விடுடா பாப்பா, உன் அண்ணா அந்த வெங்கடேஷனோட வளர்ப்புல கொஞ்சம் அவனோட காத்து தான் அடிக்கும். போகப்போக வழிக்கு வந்துடுவான்... அப்பா உனக்கு நீ கேட்ட வாட்ச் வாங்கி வெச்சிருக்கேன் போய்ப் பாரு அப்பா ரூம்ல இருக்கு" என்றதும் அவர் கன்னத்தில் முத்தமிட்டவளோ சிட்டாய் பறந்திருந்தாள்.


யார் பணத்தை யார் அனுபவிப்பது என்ற சிறு உறுத்தலும் இல்லாமல் வாழும் ஓட்டுண்ணிகளுக்கு அவர்கள் சந்தோசம் மட்டுமே பிரதானம்...





அங்கே ஆதிராவின் வீட்டில் "என்னமா பொண்ணு, பாட்டு பாடத் தெரியுமா?" என்று நேஹா வேண்டும் என்றே கேட்க, மலர் பார்த்த பார்வையில் வினித்துக்கோ அத்தனை சிரிப்பு...


பெரியவர்களும் சிரித்து விட, சற்று முன்னர் நடந்த நெருடல் கூட மனதை விட்டு அகன்றிருந்தது.



வேறு ஒன்றும் இல்லை எல்லாம் ஞானேந்திரனின் பிள்ளை என்னும் தொல்லையால் வந்தது.


சற்று முன்னர் தான் மாப்பிளை வீட்டிலிருந்து வந்திருக்க, அனைவரும் சிரித்த முகமகவே உள்ளே நுழைந்தனர்.


இறுதியாக வந்த ஆத்விகனோ, வீட்டைச் சுற்றி பார்த்த பார்வையில் ஏதோ ஒரு கீழறக்கம்... சட்டென முகக்கவசத்தை எடுத்து அவன் அணிந்த விதம் அங்கிருப்போருக்கு சற்று சங்கடமாய் போய் விட, ஆதிராவுக்கு சட்டென ஒரு கோபம்.


அவள் ஒன்றும் கோபத்தை அத்தனை இலகுவில் காட்டி விடுபவள் அல்லவே!!!


ஆனால் முகத்தில் இருந்த புன்னகை சற்று வற்றியிருக்க, ஞானேந்திரனோ நிலைமையைச் சுமூகமாக்கும் பொருட்டு, "யம்மாடி ஆதி இது என் பையன் ஆத்வீகன்" என்று ஆறுமுகம் செய்த பின்னரே, விளம்பர படத்தில் என்றோ பார்த்த அவன் முகம் தெளிவில்லாத நிழற்படமாக அவள் எண்ணத்தில் தோன்றி மறைந்தது.


அவளோ அவருக்கு ஒரு புன்னகையை கொடுத்தவள், "உக்காருங்க அங்கிள்" என்றவளுக்கு சிறிது சங்கடம் வந்து தொற்றிக் கொண்டது.


வந்திருக்கும் அத்தனை பேரும் அமர்வதற்கு அவர்களிடம் இருக்கும் இருக்கை போதாது என்பதால் தரையில் தான் விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது.


இவன் என்னவென்றால் வீட்டின்னுள் வரும் போதே முகக்கவசம் அணிகிறான், இதில் கீழே எப்படி அமரச் சொல்வது என்று ஒரு சங்கடம் அவளுள்... அவள் எதிர் பார்த்தது போலவே தான் நடந்தது.


மற்றவர்கள் அனைவரும் அமர்ந்து கொள்ள, அதில் பழக்கம் இல்லாதவனோ சற்று தடுமாறியபடி "டாட், இதுல எப்படி உக்காருறது, செயார் இல்லையா?" என்று வேறு கேட்டு வைக்க, ஞானேந்திரனோ தலையில் அடித்துக் கொள்ளாத குறை தான்...


அவர் நினைப்பில் மண்ணை அல்லவா மகன் போட்டுக்கொண்டிருக்கிறான்.


அவர் கட்டி வைத்திருக்கும் கற்பனைக் கோட்டை சிதவதற்குள் காப்பாற்ற எண்ணியவர் "ஆத்வி, அதெல்லாம் வேணா உக்காருப்பா" என்க, அவனோ நோ வேய் டாட்" என்றிருந்தான்.


அவன் வேண்டும் என்றெல்லாம் அப்படி பேசி இருக்கவில்லை, அவன் அணிந்திருந்த கால்சராயுடன் அவனால் கீழே அமர முடியாது


அப்படி இல்லை என்றாலும் அமர்ந்திருக்க மாட்டான் தான். ஆனால் இப்போது காரணம் என்ற ஒன்று அதுவாகவே இருந்தது.


இதுவரை கீழே அமர்ந்து பழக்கப்படாதவனுக்கு அது முடியாத காரியம் என்றே தோன்றியது.


ஆதிரா தான் "இட்ஸ் ஓகே அங்கிள் அவங்க இதுலயே உக்காரட்டும்" என்றவள் அவன் அருகே ஒரு இருக்கையை எடுத்துப் போட, அவனோ புன்னகையுடன் "தேங்க்ஸ்" என்றான்.


அவனைப் பொறுத்தவரை அவன் செய்ததில் ஒன்றும் தவறில்லையே என்ற எண்ணம் தான்...


அடுத்து திருமணத்தைப் பற்றிய பேச்சு வார்த்தை தொடர, நேரம் போனதே தெரியவில்லை...


சிதம்பரமோ "சீக்கிரமே நேஹாவோட கல்யாணமும் கூடி வரும்" என்றவரின் பார்வை ஆத்விகனை ஒரு நொடி தொட்டு மீண்டது.


அவரே மீண்டும் "இரண்டு கல்யாணத்தியும் ஒரே மேடைல வெச்சிடலாம். உங்களுக்கு அதுல ஒன்னும் அட்சேபனை இல்லையே?" என்று வினவ,


ஜோதி லட்சுமியோ "எங்களுக்கு ரொம்ப சந்தோசம் தான்ங்க, மலர விட நேஹா பெரிய பொண்ணுல... முறைப்படி அவ கல்யாணம் நடந்த அப்பறம் தான் மலருக்கு நடக்கணும், இப்போ ரெண்டும் ஒன்னா நடக்க போகுதுனா நல்லது தானேங்க" என்று சம்மதத்தை தெரிவித்திருக்க, இன்னும் மூன்று மாதத்தில் மலரின் படிப்பு முடிய திருமணம் செய்யலாமெனப் பெரியோர்களால் நிச்சயிக்கப் பட்டது.



நாம் நினைப்பது எல்லாம் அப்படியே நடந்துவிட்டால் கடவுள் இருப்பது எதற்கோ?????


நாம் நினைப்பது நமக்குத் தெரிந்தவரையில் நமக்கு நலவு அவ்வளவே... ஆனால் கடவுள் கொடுப்பது நிச்சயம் நமக்கு நலவு மட்டுமே!!





மின்னல் வெட்டும்


இப்படிக்கு,

GG-13
 
Last edited:
ஆத்வீகன் ரொம்பதான் பண்ணிக்கிட்டு இருக்கான் ஏன் கீழே உட்கார்ந்தா தான் என்னவாம்?
 
ஆத்வீகன் ரொம்பதான் பண்ணிக்கிட்டு இருக்கான் ஏன் கீழே உட்கார்ந்தா தான் என்னவாம்?
அதான நல்லா கேளுங்க கா... அவரு பெரிய இவரு உக்கார மாட்டாராம்ல.. அங்கேயே பாய போட்டு படுத்து ஊருல வெச்சிடுவோம் 🤭🤭🤭
 
ஏனுங்க அம்மணி வீட்ல ஒரு நாலஞ்சு சேர்கள் வாங்கி போட்டிருக்கலாம்ல 😌😌 அந்த சிசிடிவி சரஸக்கா கிட்ட கேட்டு இருந்தா குடுத்து கூடவே வந்திருக்கும்
 
ஏனுங்க அம்மணி வீட்ல ஒரு நாலஞ்சு சேர்கள் வாங்கி போட்டிருக்கலாம்ல 😌😌 அந்த சிசிடிவி சரஸக்கா கிட்ட கேட்டு இருந்தா குடுத்து கூடவே வந்திருக்கும்
அது கூடவே வரக்கூடாதுனு தான் கா கேக்கவே இல்ல 🤣🤣🤣
 
Top