GG writers
Moderator
வைகுண்ட வாசனே நேராக அவளுக்காக வந்து, அவள் கொடுத்த பண்ணை வாங்கி வைத்திருப்பதை பார்த்த மகாலட்சுமி இன்னும் ஒரு கணம் அதிர்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் திளைத்தாள். பெருமாளின் பிரகாசமான முகம், அவர் கையில் உள்ள பண்ணு இவை அனைத்தும் அவளுக்குக் கனவாகத்தான் இருந்தது. ஆனால் வின்னுலகை படுக்கையாகக் கொண்ட வைகுண்ட வாசனுக்கு கையில் இருந்த திண்பண்டத்தை சாப்பிடலாமா வேண்டாமா என்று இருந்தது. அவருக்குத் தெரிந்தது நாவில் வைத்தவுடனே கரைந்து ஓடும் வெண்ணையும், நெய் லட்டும் தானே! ஏனோ! அவருக்கு நெய் வாசனை மணக்கும் லட்டின் ஞாபகம் வரத் தானாகவே நாவில் எச்சில் ஊறியது. கையில் இருந்த பண்ணையும் அவரையும் பார்த்த மகாலட்சுமி. நாராயணனின் முகத்தருகே சென்றவள்.
"என்ன வெண்ணெய் வேணுமா?" மகாலட்சுமி கேட்க
"இல்லை! லட்டு வேணும்." அதே குழந்தைத்தனம் மாறாமல் தன் மனதிற்குள் இருந்த எண்ணத்தைச் சொல்லி விட
"இதோ! எடுத்துட்டு வர்றேன் ஆனால் ஒரு கன்டிஷன்"
"என்ன ஷன்?"
"அது ஷன் இல்லை கன்டிஷன்"
"அப்படின்னா என்னம்மா?"
"போன் இருக்குல்ல கூகுல் சர்ஜ் பண்ணுங்க. நான் லட்டோடு வர்றேன்" மகாலட்சுமி குடு குடுவெனச் சமையல் அறைக்கு ஓடினாள்.
"வசமா வந்து மாட்டிக்கிட்டேனா! குழந்தை என்ன பேசுதுன்னு தெரியலையே. எல்லாம் இந்தக் கிராதகன் நாரதனால் வந்தது. நாரதா!" பெருமாள் தன்னை மாட்டிவிட்ட நாரதனை அழைக்க வைகுண்டத்தின் மாடங்களில் நின்றவரைத் தன் வாலால் அடித்து விரட்டி இருந்தார் பெருமானின் சேவகன் ஆதிசேஷன். அவன் விட்ட ஒரே அடியில் தன் தெய்வத்தின் முன் வந்து நின்றான்.
"நாராயணா அழைத்தீர்களா?"
"நாரதா! இதற்கு நீ தான் காரணம் அதென்ன ஷன், அதுக்கு விளக்கம் சொல்."
"நாராயணா! அதற்குப் பொருள் நிபந்தனை"
"இதென்ன கொடுமை ஒரு லட்டு சாப்பிட நிபந்தனையா." பெருமாள் தலை வைக்க மகாலட்சுமி தூக்க முடியாமல் தன்னுடைய திண்பண்ட வாலியை தூக்கி வந்து பெருமாள் முன் வைத்தாள்.
"நான் லட்டு தருவேன் ஆனால் அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு கன்டிஷன் இருக்கு" மகாலட்சுமி தன் ஆள்காட்டி விரலை நீட்டிக் கேட்க. பெருமாள் அவர் அருகே இருந்த நாரதனை பார்த்தார். மகாலட்சுமி கண்களுக்குப் பெருமாள் தவிர வேறு யாரும் தெரியவில்லை.
"நாராயணா! சிறு பிள்ளை அப்படி என்ன நிபந்தனை வைத்து விடப்போகிறாள். சரி என்று சொல்லுங்கள்" நாரதர் சொல்ல
"அதுவும் சரி தான்" உலக நாயகன் தலையை ஆட்டிவிட்டு அந்தக் குழந்தை அடுத்து சொல்லப் போவதை கேட்கத் தயார் ஆனார்.
"இன்னையிலிருந்து நீங்க என் கூட ஸ்கூலுக்கு வரனும் சரியா"
"அதென்ன ஸ்கூல்?"
"ஐய்ய! இது கூடவா தெரியாது பள்ளிக்கூடம்" மகாலட்சுமி சிரித்தாள்
"அதெல்லாம் முடியாது?"
"அப்போ லட்டு கிடையாது"
"லட்டு இல்லையா! கண்ணுல காட்டி என்னை இப்படி மோசம் பண்ணுதே இந்தக் குழந்தை"
"சரி! வர்றேன்"
"ஐய்யா! ஜாலி இந்தா லட்டு சாப்பிடு" மகாலட்சுமி வாலியில் இருந்த லட்டுவை எடுத்துக் கொடுத்தாள். நாராயணின் நாக்கு அந்த லட்டுவை சுவைக்க துடித்தது.
"நாராயணா! எனக்கு ஒன்னு" நாரதரும் லட்டின் வாசனையை நுகர்ந்து விட்டுக் கேட்க
"இந்தா வச்சிக்கோ" நாரதருக்கும் ஒரு லட்டுவை கொடுத்தார். ரசித்துச் சாப்பிட்டு கொண்டிருந்த நாராயணனை பார்த்தவள்.
"நல்லா இருக்கா?"
"அற்புதமா இருக்கு"
"அதென்ன அற்புதம்? உங்க ப்ரண்டா"
"நாரதா!"
"கடவுளே!"
"அது நான் தான். எனக்குப் பதில் சொல்லு இதென்ன ப்ரண்டு"
"நாராயணா! என்னோட லட்டு வேலை முடிந்து விட்டது. இனி நீங்களாச்சு உங்க குழந்தையாச்சு. நான் போய்ட்டு வர்றேன்" நாரதர் அடுத்த நொடி மறைந்து விட்டார்.
"சொல்லுங்க! அவர் உங்க ப்ரண்டா"
"இல்லை"
"அப்போ உங்க ப்ரண்டு எல்லாம் யாரு நீங்க எங்கே இருக்கீங்க?"
"இந்தக் கேள்விக்கு நாளைக்கு வந்து பதில் சொல்லவா?"
"ஏன் லேட் ஆகிடுச்சா? உங்க வீட்டில் உங்களைத் தேடுவாங்களா" மகாலட்சுமி வாயைப் பிதுக்கிக் கொண்டு பாவமாகக் கேட்க
"ஆமாம்! எனக்கான வேலை ஒன்னு இருக்க அதை முடிச்சுட்டு நாளைக்கு வந்துடறேன்"
"சூப்பரு! அப்போ நாளைக்கு காலையில் நான் ஸ்கூல் போகும்போது வரனும் சரியா"
"சரிமா! வந்துடறேன் இப்போ போய்ட்டு வர்றேன்"
"வெயிட் காட்"
"என்ன வெயிட்டா?"
"அட ஆமாம் கொஞ்சம் இருங்க." மகாலட்சுமி அந்த வாலியில் தலையை விட்டுத் தேடியவள் சின்னப் பாக்கேட்டில் இருந்த தேன் மிட்டாயை எடுத்துத் தேனுலக நாதனிடம் கொடுத்தாள்.
"இது எதுக்கு?"
"இவ்வளவு நேரம் நீங்க என் கூடத் தானே இருந்தீங்க. எந்த வேலையும் செய்யலை உங்க வீட்டில் நீங்க ஏதாவது ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வருவீங்கன்னு என்ன மாதிரி ஒரு பாப்பா வெயிட் பண்ணுவாங்க. அவங்ககிட்ட தாங்க இந்தத் தேன் மிட்டாய் சூப்பாரா இருக்கும்." மகாலட்சுமி தன் குழந்தைத்தனம் ததும்பும் கண்ணைச் சிமிட்டி கூற. லட்டு சாப்பிட்டு தித்திக்காத அவருடைய மனம் அவள் சொன்ன வார்த்தையில் தித்தித்தது.
சின்னப் புன்னகையோடு அதை வாங்கிக்கொண்டு குழந்தையின் தலையைப் பாசமாக வருடிக்கொடுத்த நாராயணன் அங்கிருந்து மறைந்தார். மகாலட்சுமி சந்தோஷத்தில் தனக்கு தெரிந்தவாறு கைக்கால்களை அசைத்து நடனம் ஆடிக்கொண்டிருந்தாள். அவளைப் பொறுத்த வரை தனக்கு இனி பேச, தன்னை பாதுகாக்க ஒருவர் கிடைத்து விட்டார் என்கிற ஆனந்தம் பிறந்தது. ஆனால் மேலோகத்தில் நாராயணரோ அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்து இருந்தார். அவர் அருகே குழந்தை கொடுத்த தேன்மிட்டாயை தேவாமிர்தம் போல் ரசித்து, ருசித்து உண்டு கொண்டிருந்தார் இவ்வுலகின் ஜகத்ஜனனி.
"தேவி! நீங்க இப்படி செய்யலாமா?"
"ஏன் ஐயனே? நான் என்ன தவறு செய்தேன்?"
"உங்களின் கணவரின் குழப்பத்திற்கு பதில் சொல்லாமல் நீங்கள் இப்படி உண்டு கொண்டிருப்பது சரியல்ல"
"நீங்களும் என்னை விட்டு லட்டு சாப்பிட்டது சரி அல்லவே ஐயனே!"
"ஆ... அது. அதெல்லாம் இப்பொழுது எதற்குத் தேவி. அதை விடுங்க எனக்கு ஒரு வழி சொல்லுங்கள். இந்த மொழியை நான் எப்படி கற்றுக்கொள்வது"
"ஐயனே! இதற்கென்றே சரஸ்வதி தேவி இருக்கிறார்கள். அவர்களிடம் சீடனாகச் சேர்ந்து கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு அனைத்து பாடத்தையும் கற்பித்து அனுப்பி விடுவார்கள்"
"தேவி! மூவுலகத்திற்கும் ஞானத்தை படியளந்த முருகனின் மாமான் நான் எனக்கே படிப்பு தேவையா?"
"ஐயனே! டேக் இட் ஈஸி ஆல் ப்ராப்ளம் சால்வ் வித் சரஸ்வதி தேவி" திடிரென்று தன் மனைவி பேசிய மொழியில் பெருமாளே விழி விரித்தார்.
"இதென்ன தேவி?" ஆச்சரியத்தோடு கேட்க
"மன்னிக்கவும் ஐயனே! நீங்கக் கீழே படும் அவஸ்தையைக் கண்டேன் அதே நிலை எனக்கு வரக் கூடாது என்று அப்பவே! சரஸ்வதிதேவியிடம் சென்று பாடத்தைக் கற்றுக்கொண்டு வந்துவிட்டேன்"
"மிகச்சிறப்பு! நான் வருகிறேன்" நாராயணன் தன் மனைவியைப் பாராட்டி விட்டு நேராகச் சரஸ்வதிதேவி இருக்கும் இடம் சென்றார்.
**************
நாராயணன் நேராகச் சரஸ்வதி தேவி இருக்கும் இடத்திற்கு வந்தார். அந்த இடமெங்கும் ஞான ஒளி பரவியது. தேவி வெள்ளை உடையில் பளபளப்பாகப் பிரகாசித்துக்கொண்டிருந்தாள். அவர் அருகில் இருக்கும் வீணை தானாகவே இனிமையாக ஒலிக்கத் தொடங்கியது.
"நாராயணா! என்னைக் காண வந்திருக்கிறீர்கள் என்ன வேண்டும்?" சரஸ்வதி தேவி ஓர் புன்னகையுடன் கேட்டாள்.
"தேவி! நான் ஒரு மொழி கற்றுக்கொள்ள வேண்டும்."
"நாராயணா! மூவுலகங்களுக்கும் ஞானம் அளிக்கும் நீங்கள் என்ன கற்க வேண்டும்? அதுவும் இல்லாமல் இப்பொழுது தானே லட்சுமி தேவி வந்து கற்றுக் கொண்டார்கள். அவர்களைத் தொடர்ந்து நீங்களா?"
"அது... அது... காரணம் கேட்காமல் கற்றுத்தர மாட்டிர்களா!"
"உங்களுக்கு நான் கற்றுத்தர வேண்டிய மொழி என்ன நாராயணா?"
"பூலோக குழந்தை என்னை ‘வெயிட் காட்’ என்று கூப்பிட்டா! அதைச் சொல்லிக்கொடுங்க. இதையே இந்த நாரதன் சொல்லிக்கொடுத்தது"
சரஸ்வதி தேவி சிரித்தாள். "நாரதர் சொல்லிக் கொடுத்ததா, இல்லை அவரால் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையா?"
"இல்லை! குழந்தை எப்படி ப்ரச்சனை ஆகும். எனக்கு லட்டு எல்லாம் கொடுத்தது குழந்தை"
"லட்டில் தானே மாட்டிக்கொண்டு முழிக்கிறீர்கள்"
"அதென்னமோ உண்மை தான். இந்தச் சாப்பாடு விஷயத்தில் மட்டும் நான் அனைத்து லோகத்திலும் மாட்டிக்கொள்கிறேன். அதை விடுத்து சொல்லிக்கொடுங்கள்"
"சரி நாராயணா! முதலில் நீங்கள் ஆங்கில எழுத்துக்களைப் படிக்க வேண்டும். அதற்கு A to Z வரை சொல்லுங்கள்."
பெருமாள் தலையை ஆட்டிக்கொண்டு சொல்ல ஆரம்பித்தார்:
"A... ஆஆஆ... B... உம்ம்ம்… இதுக்கு மேல் பயங்கரமா இருக்கே!"
"நாராயணா! இதெல்லாம் குழந்தைகளுக்குச் சாதாரணம்! சரி, நான் எழுத்துக்களைச் சொல்லுகிறேன், நீங்கள்பின் தொடருங்கள்."
சரஸ்வதி தேவியிடமிருந்து தப்பிக்க முடியாது என்பதை புரிந்து கொண்ட பெருமாள் முழு ஈடுபாட்டோடு அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்து படிக்கத் தயாரானார். வகுப்பு நீண்டு கொண்டே சென்றது.
"சரி நாராயணா! இப்போது ‘Cat’ என்ற வார்த்தையைச் சொல்லுங்கள்."
பெருமாள் தன்னம்பிக்கையுடன் "கட்!"
"ஐய்யோ! இது ‘Cut’ இல்லை, ‘Cat’!"
"ஆமா, அதான் நானும் சொன்னேன். கட்"
"இல்லை, இல்லை! ‘கேட்’ என்று சொல்ல வேண்டும்!"
"அதென்ன கேட்?அடுத்து கரடியா"
"நாராயணா! இப்படியே போனால் நீங்க இந்த மொழியைக் கற்றுக்கொள்ளவே முடியாது"
"நான் கற்றுக்கொள்ள வேண்டும் அடுத்து சொல்லிக்கொடுங்கள் "
"அடுத்து 'Dog’ சொல்லுங்கள்."
"டேக்"
"இல்லை, ‘டேக்’ இல்லை. ‘டாக்’ என்பதே சரியான சொல்லுங்கள்."
"அதைத் தானே சொன்னேன்!"
"நாராயணா! நீங்கள் இப்படியே இருந்தால், கடைசிவரைக்கும் அந்தக் குழந்தையின் மொழி புரியாது. அதனால் சீக்கிரம் கற்றுக்கொள்ளுங்கள்"
பெருமாளுக்கு உடனே நாரதனின் ஞாபகம் வர, தன் கோதண்டத்தைப் பிடிக்கத் தொடங்கினார்.
"ஏன் கோபம் நாராயணா?"
"இந்த நாரதனை இந்தக் கோதண்டத்தால் அடிக்க வேண்டும் போல் இருக்கிறது"
"அதைவிட, நீங்கள் இங்கே படிக்க வேண்டும்!"
பெருமாள் கண்களைச் மூடு பின் திறந்து பார்த்தார். "நான் சிந்திக்க வேண்டும்!"
"எதைப் பற்றி?"
"இந்தப் படிப்பு அவசியமா என்று!"
"அவ்வளவு சுலபம் இல்லை, ஐயனே! நீங்கள் வார்த்தைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள். மகாலட்சுமி உறுதியாக இருக்க நீங்கள் படிக்காமல் போக முடியாது!"
"சரஸ்வதி தேவி! இப்பொழுதே என் தலையில் பெரும் சுமை வந்து விழுந்தது போல் இருக்கிறது."
இதைக் கேட்ட சரஸ்வதி தேவி ஜோராகச் சிரித்துவிட்டாள். "சுமையைச் சுமப்பவர் மேல் சுமையா"
"அதானே! எனக்குச் சுமையா ஒரு கடவுளைப் பள்ளிக்கூடம் அனுப்ப வேண்டியதா? இதெல்லாம் நாரதனால்தான்! நாரதா!" பெருமாள் சொர்க்கம் அதிர கூச்சலிட்டபடி கோதண்டத்தை கையில் ஏந்தி நாரதரை தேடிச்சென்றார்.
அவர் சென்ற எதிர் பக்கதில் "நாராயணா! நாராயணா!" என்ற நாமத்தின் ஓசை கேட்டது
"இதோ இவன் வந்துவிட்டான்! நான் போயிடணும்!"
சரஸ்வதி தேவி வீணையை இசைத்தபடி, "இதற்கே சலித்துவிட்டாள் எப்படி? கடவுளுக்கும் கண் கட்டிவிட்டது போல்" மெல்லிய புன்னகையோடு தன் உலகில் மூழ்கினாள்.