வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தேவதந்தை 05

GG writers

Moderator







மகாலட்சுமி வரலாற்றில் இன்னொரு சாதனை படைத்துவிட்டாள். கணக்கு தேர்வில் ஒரு வார்த்தை கூடச் சரியாக எழுதாத அவள் நாராயணின் உதவியால் முதல் முறையாக முழு மதிப்பெண்கள் வாங்கியிருந்தாள். ஆனால், சந்தோஷம் நீடிக்கவில்லை.

"நாளைக்கு அறிவியல் பரீட்சை!" என்ற ஆசிரியரின் வார்த்தைகள் அவள்மீது எறியப்பட்ட ஏழு அதிரடி தாக்குதல்களைப் போல இருந்தது. அதே சிந்தனையில் சைக்கிளை மித்து வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தாள்.

"ப்ரண்ட்! நீங்க எனக்காகத் தயார் ஆகிடூவீங்க தானே?" மகாலட்சுமி ஸ்ருதி அற்ற குரலில் கேட்டாள்.

"என்ன தயார்? யுக யுகமா யுத்தம் பண்ணினவன்! ஆயுதங்கள் இல்லாமலே போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவன்! ஆனா இதோ, உங்க பள்ளில ஒரு தேர்வுக்குத் தயார் ஆகணும்னுனா அது ஆகும் போல நாள் கணக்கா என்ன ஒரு சோதனை!" கண்ணன் முகம் சுளித்தார்.

"ப்ரண்ட்! நீங்கத் தான் பூலோகம், மேலோகம் எல்லாம் சுற்றிட்டு வர்றீங்களே! அதனாலே உங்களுக்கு அறிவியல் ரொம்ப ஈஸியா இருக்கும். நீங்கப் போயிட்டு வந்த நிலா, சூரியன், கிரகங்கள் எல்லாத்தையும் பற்றித் தான் கேப்பாங்க!"

"அட பாவமே! உங்க பள்ளி விக்ரமாதித்யன் காலத்திலே செஞ்சு வச்சதா!"

"என்ன ப்ரண்ட்?!"

"எதுக்கு நிலா, சூரியன் எல்லாம் எங்க இருக்குன்னு கேக்கறாங்க? அப்படியே பழங்காலத்துல இருந்து தான் கேள்வி கேக்கணும்னு பார்த்தா பூமியை யார் தூக்கி வைத்து இருக்கிறார்?’ இதுக்கு பதில் சொல்லி நம்மாலே 100க்கு 100 போடலாம் இல்லை"

"அது என்னது? பூமியை யார் தூக்கி வைச்சிருக்கிறார்?"

"நம்மது ஆதிசேஷன்! பெருமாளை தூக்குற மாதிரி பூமியையும் தூக்கி வைச்சிருக்கிறார்!" பெருமாள் மார்பில் கையை வைத்துப் பெருமையுடன் சொன்னார்.

மகாலட்சுமி இல்லாத மூலையில் எதையோ யோசனை செய்தவள் "ப்ரண்ட்! என்ன பேசுறீங்க? இவ்ளோ பெரிய பூமியை ஒரு பாம்பு தூக்கி வைச்சிருக்கா? அதுக்கு தலை வலிக்கும்னு யோசிச்சு பார்த்தீங்களா"

"யோசிக்கலை விடும்மா பார்த்துக்கலாம். வீடு வந்துடுச்சு. நீ உன் வீட்டுக்குள்ள போ நான் என் வீட்டுக்குப் போறேன்"

"எங்கே போறீங்க? என் கூட உள்ளே வாங்க"

"நான் எதுக்கு?"

"ப்ரண்ட் உள்ளே வாங்க போகலாம்" மகாலட்சுமி சந்தோஷமாக அவரை உள்ளே அழைத்துச் சென்றாள்.

"மகா!" என்ற குரலிலே யார் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரி என்பதை அறிந்து கொண்டாள் மகாலட்சுமி. அவளுடைய தந்தையின் சித்தப்பா பெண் சுந்தரி தான் வந்திருந்தாள். அவளைப் பார்த்தவுடனே மகாலட்சுமி கைத்தானாக நடுக்கம் கண்டது. அதைக் கண்ணன் உணர்ந்து கொண்டார்.
சுந்தரி அவளருகே வந்தவள் பாசத்தோடு அணைப்பது போல் அவள் கூரிய நெகம் கொண்டு அவளைக் காயப்படுத்தி இருந்தாள்.

"நாளைக்கு கோர்ட்டில் வந்து சுந்தரி அத்தைகிட்ட போறேன்னு தான் சொல்லனும் புரிந்ததா!" சுந்தரி சொல்ல அவள் குரலில் பயந்தாள் மகாலட்சுமி

"பாப்பா! நான் இருக்கேன் பயப்படாதே" கண்ணன் அவள் கையைப் பற்றி நம்பிக்கை தர. மகாலட்சுமி அவள் முன் நிற்காமல் அறை உள்ளே ஓடிவிட்டாள்.

'சின்னக்கழுதை இதுவும் அப்பவே செத்து போய் இருந்தா இந்நேரம் இந்தச் சொத்து எனக்கு வந்து இருக்கும். உயிரோடு இருந்து தடையாக இருக்கா. நாளைக்கு தீர்ப்பு வந்துச்சுன்னா இவளைத் தீர்த்துக் கட்ட வேண்டியது தான்' சுந்தரி சொல்ல அவளருகே மறைந்தே நின்று அனைத்தையும் கேட்ட கண்ணன் அவள் தலையில் ஒரு அடி வைத்துவிட்டு மகாலட்சுமி அறைக்குச் சென்று விட்டார்.

"பாப்பா!"

"ப்ரண்ட் இந்தாங்க முறுக்கு" மகாலட்சுமி நீட்ட அதை வாங்கிக்கொண்டவர்.

"இது யாரு?"

"எங்க அப்பாவோட தங்கச்சி. அவங்க இறந்த அப்போ முதல் ஒரு மாசம் அவங்க வீட்டில் தான் இருந்தேன். அப்போ எப்ப பாரு திட்டிகிட்டே இருப்பாங்க சாப்பாடு கூடப் போடமாட்டாங்க ப்ரண்ட். ஏதாவது வாங்கித்தர சொன்னா உடனே அடிப்பாங்க இல்லையா இதோ இப்படி காலில் சூடு வச்சிடுவாங்க. அப்போ! எல்லாம் எனக்கு அழுகையா வரும். அந்த நேரத்தில் எல்லாம் உன்னை எவ்வளவு திட்டி இருப்பேன் தெரியுமா! அந்தத் திட்டு எல்லாம் கேட்டுத்தான் என்னமோ என் பாட்டியை நீங்க அனுப்பனீங்க போல். அவங்க போலீஸில் கேஸ் கொடுத்து என்னை அவர்களோடு கூட்டிட்டு வந்துட்டாங்க ஆனால் சுந்தரி அத்தை என்னை அவங்ககிட்ட விடக்கூடாதுன்னு கேஸ் போட்டு இப்போ கோர்ட்டில் கேஸ் நடக்குது. அதுக்காகத் தான் அவங்க இங்கே வந்து இருக்காங்க. இந்த நேரத்தில் என் அம்மா, அப்பா இருந்து இருந்தா இப்படி எல்லாம் நடந்து இருக்காது ப்ரண்ட். அவங்களை நீங்க ஏன் இவ்வளவு சீக்கிரமா உங்ககிட்ட அழைச்சுட்டிங்க. கூப்டறதுக்கு முன்னாடி என்னை நினைச்சு பார்த்து இருக்கலாம் நான் பாவம் தானே! இந்த மாதிரி மனசாட்சியே இல்லாத என் அத்தை எல்லாம் இருக்கும்போது ஏன் அவங்களை கூப்டுட்டிங்க என் அப்பா, அம்மா ரொம்ப நல்லவங்க தெரியுமா! யாரையும் திட்டிக்கூட பேசமாட்டாங்க. ஏன் இப்படி பண்ணீங்க" மகாலட்சுமி கண்ணில் கண்ணீர் வழிந்தபடி கேட்க. இந்த ஜெகத்திற்கே தந்தையான அவன் தாயுள்ளம் சங்கடத்தைச் சந்தித்தது என்னமோ உண்மை தான். ஏனோ! அந்தக் குழந்தையின் கேள்விக்குப் பதில் சொல்லமுடியவில்லை. அதற்குப் பதில் அவளுடைய தலையைப் பாசமாக வருடிக் கொடுத்தவர்

"உனக்குத்தான் நான் இருக்கேனே பாப்பா"

"ப்ரண்ட்! எனக்கு நாளைக்கு நீங்கப் பரீட்சை கூட எழுத வேண்டாம். எப்படியாவது இந்தச் சுந்தரி அத்தை கிட்ட இருந்து தப்பிக்க வைங்க"

"சில் பேபி டோன்ட் பீல் யாமிருக்க பயமேன்."

"என்ன ஒரு இங்கிலிஷ்?" மகாலட்சுமி சிரித்தாள். மலர்ந்த முகத்தைப் பார்க்க அவருக்கே அத்தனை ஆசையாக இருந்தது. இப்பொழுது தான் புரிந்தது நாரதன் ஏன் தன்னை இதில் இழுத்து விட்டான் என்பது. இனி நடக்க வேண்டிய நாடகத்தை அவரே மறைவாக இருந்து நடத்தி வைப்பார். மகாலட்சுமி கொஞ்ச நேரத்தில் உறக்கத்தை தழுவிக்கொள்ள நாராயணன் இது தான் சாக்கு என்று அவர் நழுவி விட்டார்.

*******************



தேவலோகத்தில் தேவனின் சரிபாதியான லட்சுமிதேவி தன்னவரின் வரவிற்காகக் காத்திருக்க பலத்த யோசனையோடு வந்து ஆதிசேஷனின் நிழலில் அமர்ந்தார்.

"ஐயனே! பலமான யோசனைபோல் இருக்கிறது"

"ஆமாம்! தேவி"

"மகாலட்சுமி பற்றிய கவலையா"

"அதே தான் அந்தக் குழந்தையைப் பத்திரமான ஒருவரின் கையில் ஒப்படைக்க வேண்டும் அதற்கான யோசனை தான் செய்துகொண்டிருக்கிறேன்"

"நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால் நான் ஒன்று சொல்லவா"

"சொல் தேவி!"

"ஐயனே! இந்த நாடகத்தில் நானும் கலந்து கொள்ளலவா"

"ஏன்?"

"ஐயனே! நீங்க மட்டும் தினமும் மாங்கா பச்சடி, லட்டு என்று சாப்பிட்டால் நான் என்ன செய்ய எனக்கும் ஆசையாக இருக்கிறது மகாலட்சுமியோடு கதை அளந்து அந்தப் பள்ளியைச் சுற்றிவர அதனால் நானும் வருவேன்"

"நான் சுற்றுலா பயணமா சென்று வருகிறேன். என்னோடு நீயும் வருவேன் என்று அடம் பிடிக்கிறாய்"

"ஏதோ ஒன்னு நானும் வருவேன்"

"இந்த லட்சுமி அந்த லட்சுமியோடு சுற்றிவர நினைத்தால் அதை நான் தடுக்க மாட்டேன் ஆனால் என் நாடகத்தில் நீ குறுக்கே வரக் கூடாது"

"வரமாட்டேன் ஆனால் அந்தச் சுந்தரி அவளைக் காயப்படுத்த நினைத்தால் சும்மா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்"

"ஓ! இங்கே இருந்து கீழே ஃப்ரீ ஷோ பார்த்துட்டு இருக்கீங்க அப்படித்தானே"

"அதே தான் ஐயனே! எனக்கும்பொழுது போக வேண்டாமா"

"அதெல்லாம் சரி தேவி! நீ எப்படி அவளோடு பழகப்போகிறாய்"

"அதை நான் பார்த்துக்கொள்கிறேன் ஐயனே! நீங்கள் அடுத்து நடக்க வேண்டிய காரியத்தைப் பாருங்கள்"

"அடுத்து நடக்க வேண்டியது சுந்தரிக்கும் குழந்தைக்குமான உறவை முறிப்பது. அது மட்டுமில்லாமல் அவளுக்கு ஒரு நல்ல பாதுகாப்பை தர வேண்டும்."

"ஆமாம்! குழந்தை பாவம் ஏற்கனவே பல துன்பத்தை அனுபவைத்து விட்டாள்"

"தேவி! நாரதன் சதி செய்தாலும் அதில் நல்லதை நினைத்துத் தான் செய்கிறான். அதனால் தான் அவன் என் பக்தனாக இருக்கிறான்"

"சதிகாரருக்கு சதி செய்பவன் தானே பக்தனாக முடியும். நீங்க மாயம் புரிவதிலும் இப்படி மழுப்பிப் பேசுவதிலும் உங்களை வெல்ல யார் இருக்கிறார்கள் ஐயனே"

"என்னைவிட சதி செய்யும் நபர்கள் பூலோகத்தில் இருக்கிறார்கள் தேவி. நீ மறந்து விட்டாயா சகுனி என்னும் பெரும் சதிக்காரனை"

"அவர் உங்களின் மறு உருவம் தானே ஐயனே"

"இல்லை! அவர் மானுடத்தில் பிறக்கும் மனிதர்களின் பிம்பமே"

"உங்களிடம் பேசி ஜெயிக்க முடியாது நான் வருகிறேன்" மகாலட்சுமி தேவி அங்கிருந்து சென்றிருந்தார். அடுத்து நடக்க போகும் பல மாற்றங்களை நினைத்து அவரே சிரித்து கொண்டார். இந்த ஒற்றை சிரிப்பில் தானே மூவுலகத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.
 
Top