GG writers
Moderator
மகாலட்சுமி தன் அறிவியல் அட்டைப்பட புத்தகத்துடன் வகுப்பறையில் உட்கார்ந்திருந்தாள். வைகுண்ட வாசன் அவள் பக்கத்தில் அமைதியாக அமர்ந்து இருந்தார்.
"ப்ரண்ட்! நீங்க ரெடி இல்லையா?" முகத்தில் சோகத்தை வைத்துக்கொண்டு கேட்க
"நீயே ரெடி இல்லாம இருக்கும்போது நான் எதுக்காக ரெடி ஆகணும்?"
"நீங்க இப்படி பொறுப்பே இல்லாமல் பதில் சொன்னா நான் எப்படி பாஸ் ஆக?"
"எப்ப பாரு ஒரு பழமொழி சொல்லுவாங்க காலனுக்கே காலன் வந்ததுன்னு அதே மாதிரி எல்லாரையும் சோதித்து பார்க்கிற எனக்கு இந்தப் பரீட்சை பெரிய சோதனையாகத் தான் இருக்கு"
"ப்ரண்ட்! ஹெல்ப் மீ"
"ஹெல்ப் தானே பண்றேன்" கன்னத்தில் கை வைத்து அவளைப் பார்க்க
வகுப்பிற்குள் வந்த ஆசிரியர் முதலில் மாணவர்களுக்குக் கேள்வித் தால்களை கொடுத்தாள். மகாலட்சுமி விரைவாக அந்தப் பேப்பரை திறந்து பார்த்தாள்.
முதல் கேள்வி:
"நிலா எதனால் ஒளி தருகிறது?"
மகாலட்சுமி பெருமாளை பார்த்தாள். அவரும் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு சிந்தித்தார்.
"ப்ரண்ட்! சொல்லுங்க!"
"என்ன சொல்லணும்? சூரியனால் தானே நிலா ஒளி தருது!"
மகாலட்சுமி விரைவாக அதை எழுதினாள்.
இரண்டாவது கேள்வி:
"நம்ம வீடுகளுக்கு மின் ஒளி எப்படி கிடைக்கிறது?"
மகாலட்சுமி புரியாமல் பெருமாளை பார்த்தாள்.
"ப்ரண்ட்! இது ஒரு கடினமான கேள்வி!"
"அது என்ன கடினம்? ஸ்விட்ச் ஆன் பண்ணினா விளக்கு எரியுதே! நீயும் அதையே எழுதிக்கோ!"அவர் சொன்னதை அப்படியே கேட்டு மகாலட்சுமி எழுதியதோ "ஸ்விட்ச் ஆன் பண்ணினா மின் ஒளி கிடைக்கும்."
பெருமாள் தலையில் அடித்துக்கொண்டு, "நான் எதுவும் பண்ணலை இவளே அடிக்கடி மாட்டிக்கிறா!" அவர் வாய் உள்ளே முனு முனுக்க. அவரிடம் மூன்றாவது கேள்வியைக் கேட்டாள்.
மூன்றாவது கேள்வி:
"மனிதர்களின் உடலுக்கான முக்கியமான ஆற்றல் மூலங்கள் எவை?"
"ப்ரண்ட்! இதுக்கு பதில் என்ன?"
"சாப்பாடு! அதுவும் மாங்கா பச்சடி இருக்கே?"
மகாலட்சுமி உடனே எழுதியது "மனிதர்கள் எரிசக்தியை மாங்கா பச்சடியிலிருந்து பெறுகிறார்கள்!"
பெருமாள் தலைக்குனிந்து கொண்டார். "இவள் படிச்சா உலகம் ஒரு பக்கம் அடிச்சு போய்டும் போல!"
மகாலட்சுமி பெருமாளின் முகத்தைப் பார்த்து, "ப்ரண்ட்! நீங்க எப்படி இவ்வளவு அறிவா வளர்ந்து இருக்கீங்க?"
"எல்லாம் பிறப்பில் இருந்தே வரனும் பாப்பா"
"அப்போ நீங்க அதிசயம் பிறவியா"
"ஆமாம்! யாருக்கு ஒன்பது கிரகமும் ஒன்றாக ஒரே நேர்கோட்டில் நின்று வேலை செய்யுதோ அவங்க எல்லாம் அதிசயப்பிறவி அதில் நானும் ஒருத்தர்."
"நீங்க அதிசயப்பிறவி என்றால் உங்களை ப்ரண்டா கூடவே வச்சி இருக்க நானும் அதிசயப்பிறவி தானே!" மகாலட்சுமி முகம் முழுக்க புன்னகையோடு கேட்க
"அதே தான்" என்று அவரும் சிரித்தபடி சொல்லி விட்டார்.
பரீட்சை முடிந்தது. மாணவர்கள் அனைவரும் ஓய்வாக இருந்தார்கள். மகாலட்சுமி தன்னருகே இருந்த வைகுண்ட வாசன் பக்கம் திரும்பி, "ப்ரண்ட்! இந்தப் பரீட்சை பெரிய சோதனையா இருந்தது! ஆனால் நீங்கக் கூட இருந்ததால் சுலபமா எழுதிட்டேன்." அவள் என்னமோ ஒரு பெரிய விஞ்ஞான ஆய்வாளர்போல் கையை அசைத்துச் சொன்னாள்.
"ஆமாம், ஆனா உன் பதில்கள் எல்லாருக்கும் இன்னும் பெரிய சோதனையா இருக்கும்!" கண்ணன் குழப்பத்துடன் சொன்னார்.
"நீங்க எதுக்கு கவலைப்படறீங்க? என் பதில்களை யாரும் புரிஞ்சுக்க மாட்டாங்க. திரும்பத் திரும்ப வாசிக்கவேண்டியதாயிருக்கும். அதனால் நம்ம ஆசிரியர் எனக்குக் கூடுதல் மதிப்பெண்கள் கொடுப்பாங்க!"
பெருமாள் தலையில் அடித்துக் கொண்டவர். "நீ மாறவே மாட்டியா பாப்பா!"
"அதற்கு வாய்ப்பு இல்லை ராஜா" மகாலட்சுமி வாய் விட்டுச் சிரிக்க அவளுடைய குழந்தை புன்னகை பிடிக்காமல் போனது போல் வகுப்பறை வாசலில் வந்து நின்றாள் சுந்தரி. அவளைப் பார்த்த அடுத்த நொடி மகாலட்சுமி முகம் மாற உடனே அந்த மேசையின் ஓரத்தில் மறைந்தாள். காலையில் பாட்டியிடம் அழுது அடம் பிடித்துக் கோர்ட்டுக்கு போகாமல் பள்ளிக்கு வந்து விட்டாள். ஆனால் விடாது கருப்பு போல் சுந்தரி அவளைப் பின் தொடர்ந்து இதுவரை வந்து விட்டாள். அதை நினைத்துக் குழந்தையின் உள்ளம் பயம் கொண்டது பயத்தின் சாயல் அவளின் கண்ணில் அப்பட்டமாகத் தெரிந்தது. அதைக் கவனித்த ஜெகத்தின் ஜெகரூபன் அவளைச் சமாதானம் செய்யக் கையைப் பற்றினார். வகுப்பறையின் உள்ளே ஆசிரியர் யாரும் இல்லை என்பதை உணர்ந்து அனுமதியின்றி உள்ளே வந்து மகாலட்சுமி முன் நின்றாள்.
"அடிக்கழுதை உனக்கு எவ்வளவு தைரியம் நேற்று நான் சொல்லியும் நீ கோர்ட் பக்கம் வராமல் இங்கே வந்து இருப்ப" சுந்தரி கோபத்தில் முகத்தைச் சுருக்கி பேச அதில் பயந்து விழித்த மகாலட்சுமி பேசாமல் நின்றாள்.
"வாடி" அவள் கையைப் பற்றி இழுக்க அவள் எங்கே அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். ஒரு அடிக்கூட நகரவில்லை ஏனென்றால் உலகத்தைக் கையில் ஏந்தியவனின் கையில் அவள் பத்திரமாக இருக்க அவரிடமிருந்து யார் அவளைப் பிரித்து அழைத்துச்செல்ல முடியும். சுந்தரியும் இழுத்து பார்க்க அவள் நகரவில்லை.
"இங்கே என்ன நடக்கிறது?" புதுக்குரல் கேட்கக் குழந்தைகள் முதல் குமரனான கண்ணன் வரை வகுப்பறை வாசலைத் தான் பார்த்தனர். அங்கே புது ஆசிரியர் நின்றிருந்தாள். பிரகாசமான முகம் குழந்தைகளைக் கவரும் குரல் வளம் அப்பெண்ணிடம் இருந்தது. பார்த்த நொடியே கண்டுக்கொண்டார் அந்த ஆசிரியர் யார் என்பதை. ஜெகத் ஜனனி ஆசிரியர் வடிவில் வந்து இருக்கிறாள். குடும்பமே ஒரு குழந்தையைக் காக்கா பூலோகத்தில் குதித்து விட்டனர்.
"மேம்!"
"நீங்க யாரு?"
"நான் மகாலட்சுமியோட அத்தை"
"அது வீட்டில் இங்கே என்ன பண்றீங்க?"
"மேம்! அவளை அழைத்துச்செல்ல வந்திருக்கிறேன்"
"இது ஸ்கூல் டைம் இந்த நேரத்தில் குழந்தைகளை நாங்க வெளியே அனுப்ப மாட்டோம். எதுவாக இருந்தாலும் ஈவ்னிங் வந்து கூட்டிட்டு போங்க"
"மேம்! யார்கிட்ட பர்மிஷன் வாங்கனும்"
"நீங்க யார்கிட்ட பர்மிஷன் கேட்டாலும் தரமாட்டாங்க. இப்போ பசங்களுக்கு எக்ஸாம் போய்ட்டு இருக்கு அதனால் ஈவ்னிங் வந்து கூட்டிட்டு போங்க"
"பேரன்ட்ஸ் கிட்ட எப்படி பேசணும்னு உங்களுக்குத் தெரியாதா?"
"நீங்க அவளோட அத்தை தான் பேரன்ட் இல்லை. அதே மாதிரி பிரின்சிபால் மகாலட்சுமி பற்றிச் சொல்லி இருக்கார். அவளோட பாதுகாப்பு உங்ககிட்ட சரியா கிடைக்கவில்லை என்பதால் தானே அவளை அவங்க பாட்டி வளர்க்கறாங்க. அவங்களை தவிர வேற யாரும் அவளுக்குக் கார்டியன் இல்லை. சோ! வெளியே கிளம்புங்க" ஆசிரியரின் குரலில் அத்தனை கடுமை இருக்க சுந்தரி அங்கே நின்ற மகாலட்சுமியை முறைத்து விட்டுச் சென்றாள். சுந்தரிக்கு மூக்கு மேல் கோபம் வந்தது. மகாலட்சுமி எதிரே நின்றிருந்த ஆசிரியரைப் பார்த்து அழகாகப் புன்னகைத்தாள்.
"தேங்க்ஸ் மிஸ்"
"நோ! தேங்க்ஸ் மகா உட்காரு" மெல்லிய குரலில் அவள் கன்னத்தைத் தட்டிவிட்டு முன்னே சென்று நின்றாள்.
"ப்ரண்ட்! மிஸ் என்னைக் காப்பாத்திட்டாங்கா"
"மிஸ் காப்பாற்றவில்லை நான் தான் உன் கையைப் பிடிச்சு நகராமல் நிற்க வைத்தேன்"
"என்ன இருந்தாலும் அந்த அடங்காப் பிடாரி இங்கே இருந்து வெளியே போனதுக்கு மிஸ் கூடக் காரணம் தான். ஐ ரியலி லைக் இட்மேம். நோ மேம்! இன்னையிலிருந்து அவங்க என் தேவதை"
"கொடுமை கூடவே சுத்தறேன் என்னை விட்டு இப்போ வந்த மிஸ் தேவதையா?"
"ப்ரண்ட்! என்ன இருந்தாலும் யூ ஆர் மைப்பெஸ்ட் ப்ரண்ட்" மகாலட்சுமி சிரித்தபடி கூறினாள்.
"மேம்! உங்க நேம் என்ன?" முதல் வரிசையில் அமர்ந்து இருந்த குழந்தை கேட்க
"என்னோட நேம் தேவி"
"மேம்! சூப்பர் நேம்" மகாலட்சுமி எழுந்து புன்னகையோடு கூறினாள்.
"தேங்க்ஸ்"
"ப்ரண்ட்! மேம் நேம் தேவியா. இனி அவங்களுக்கு சேர்த்து மாங்கா பச்சடி எடுத்துட்டு வரலாம் சரியா"
"அப்போ! எனக்கு"
"ப்ரண்ட்! நம்மளை விட மேம் பெரியவங்க அவங்களுக்கு தான் பர்ஸ்ட்"
"நம்மளை விடவில்லை உன்னைவிடப் பெரியவங்க நான் உனக்காகச் சின்னப் பிள்ளையா மாறி இருக்கேன்"
"எனக்காகத் தானே! கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க அப்பறம் நான் பெரிய பொண்ணா மாறிடுவேன் அப்போ நீங்கக் காதில் குண்டு தோடு போட்டுக் கழுத்தில் மணி மாலை போட்டுப் பெரிய துண்டைக் கழுத்தில் போட்டு வேட்டி கட்டி, இஇஇ. என்று பல்லைக் காட்டிட்டே இருக்கலாம் சரியா. அப்போ உங்க கூட நானும் சிரிச்சுட்டே சுத்திட்டு இருப்பேன் ஓகேவா"
"டபுல் ஓகே"
"அப்போ இன்னைக்கு இரட்டை மாங்கா டிரிட் இருக்கு. நாம ஸ்கூல் விட்டுப் போகும்போது அந்த மாங்காவை அடிச்சு எடுத்துட்டு போய்ப் பாட்டி கையால் ஊறுகாய் செய்து சாப்பிடறோம் சரியா" மகாலட்சுமி ஆர்வத்தோடு சொல்லக் கண்ணனும் சரி என்று தலை அசைத்தான். ஆனால் பாவம் காலம் அவளுக்காக வைத்திருந்த பெரும் இழப்பை அறிந்திருக்காமல் போய் விட்டாள்.