வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தோகை வருடும் தாக மழையே - கதை திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் : 1

நீல நிற வானம் மஞ்சள் அள்ளி பூசிக்கொள்ளவே, அதை ரசித்து தன் குஞ்சுகளைக் காண இருப்பிடம் நோக்கி பறந்தன பறவைகள்.

பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசேரென இருக்கும் நெற்பயிர்கள், மரக்கிளை ஊஞ்சலில் மகிழ்ந்தாடும் குழந்தைகள், மாடுகளைப் பற்றிக் கொண்டு வீடு நோக்கி பயணிக்கும் பெரியவர்கள், சாணி மொழுகி இட்ட கோலத்தை வாசல் தெளிக்கும் பெண்மணிகள், திண்ணையில் அமர்ந்து உரலில் வெத்தலை இடிக்கும் கிழவிகள், இடுப்பில் தண்ணீர் குடம் ஏந்தி அன்னநடை போடும் பெண்களை சீண்டும் ஆடவர்கள். அதனைக் கண்டு தலை தாழ்த்தி வெட்கப்படும் மங்கை என்று அந்த கிராமமே மைமல் நேரம் பொலிவோடு காட்சியளித்தது.

சங்கரன்கோவில் ஊராட்சியில் உள்ள மாங்குடி தான் இந்த கிராமத்தின் பெயர். அழகுக்கும், பசுமைக்கும் எந்தவித பஞ்சமும் இல்லாமல் இருந்தாலும், வன்மம் மட்டும் தீராத ஒன்றான ஊர்.

வன்மம் யாரின் மீது ?

பிறந்த குழந்தைகள் முதல் இறக்கப் போகும் முதியவர்கள் வரை அனைவரும் பயத்தால் வணங்கக் கூடிய ஒருவர் அந்த ஊரில் வசிக்கும் உலகநாதன். அவரின் மீது தான் அத்தனை பேரின் ஒட்டு மொத்த வன்மமும் தீராது நிலைத்திருக்கும்.

வன்மம் இருந்து என்ன பயன் ? பணபலம் மட்டுமல்லாது ஆள்பலமும் அவரிடம் இருக்கவே பணிந்துப் போக வேண்டிய கட்டாயம். அப்படி மட்டும் செய்யா விட்டால் சொந்த ஊராக இருந்தாலும் இருக்க முடியாது. உலகநாதனுக்கு அந்த ஊரே கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும்.

மாலை நேரம் ஊரின் மையப்பகுதியில் கட்டிட வேலை நடந்துக் கொண்டிருந்த கோவிலுக்கு முன்னே கருப்பு நிறக் கார் வந்து நின்றது.

அந்த காரினைக் கண்டதுமே வேலை முடிந்து கிளம்பத் துடித்த அனைவரும் இரு கரம் குவித்து வணங்கி நின்றனர். ஆண்களோ தலையில் கட்டிய துண்டினை வேகமோடு எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டனர்.

அதிலிருந்து வெள்ளை வேஷ்டி சட்டையும் காலில் பழுப்பு நிற லெதர் செருப்பும் அணிந்து இறங்கினார் அந்த ஊரின் ஊராட்சி மன்ற தலைவரான உலகநாதன்.

“வணக்கம் ஐயா ! “ முன்னே வந்து மேஸ்திரி பணிந்து வணங்க,

“என்ன துரைராஜ் கோவில் வேலை எல்லாம் எப்படி போகுது. மணி ஐஞ்சு தானே ஆகுது அதுக்குள்ள கிளம்புற மாதிரி இருக்கு “

“ஐயா, காலையில வெள்ளன வந்தாச்சு அதான். வேலை எல்லாம் நல்லா தான் போகுது. தைக்குள்ள முடிச்சிரலாம். “

“அதுக்கு மேல மட்டும் ஒரு நாள் ஆகட்டும் அப்போ இருக்கு உனக்கு. ஆமா உன்னை கருங்கல் வச்சி தானே கட்டச் சொன்னேன். அது என்ன செங்கலைக் கொண்டு வந்து வச்சிருக்கே ? எப்போ வந்தது இந்த லோடு ? எங்க இருந்து வந்தது ? “ என்று கேள்விகளாக அடுக்க, பாதி முடிந்த தருவாயில் இருந்த கோவிலில் முன்னே வந்து நின்றார்.

வேகமாய் ஒருவன் இருக்கையைக் கொண்டு வந்துப் போட, உலகநாதனோடு உடன் வந்த கணக்குப்பிள்ளை கையில் இருந்த பையிலிருந்து ஒரு நோட்டினை எடுத்தார்.

“ஐயா, இந்த செங்கல் தண்ணீ தொட்டி கட்ட வந்தது. இன்னைக்கு தான் வந்திருக்கு. இந்தாங்க அதோட பில் “ என்க, அருகிலிருந்த கணக்குப்பிள்ளை அதனை வாங்கிக் கொண்டார்.

இன்னும் கட்டிட வடிவைமைப்பு, வர்ணம் பூசுவது பற்றி உலகநாதன் பேசியவாறு இருக்க, நேரம் தான் சென்றது. கிட்டதட்ட அரைமணி நேரம் சென்றிருக்க, சுற்றி இருந்தவர்களுக்கு தான் உள்ளுக்குள் கடுப்பும், எரிச்சலும்.

பிள்ளைகள் தங்களை தேடுவார்கள் என்று துடிக்கும் மங்கையர்கள், வாயில்லா ஜீவன்களுக்கு இரையை எடுக்கச் செல்ல நினைக்கும் ஆண்கள், இன்னும் சிலர் சம்பளம் கொடுத்ததும் டாஸ்மார்க் நோக்கி செல்லத் துடிக்க, இப்படி அனைவரையும் வேணுமென்றே காக்க வைத்திருந்தார் உலகநாதன்.

“என்னக்கா இவரு சம்பளம் தானே கொடுக்க வந்தாரு. அதை கொடுத்திட்டு போக வேண்டியது தானே ? இப்படி வெட்டியா உட்கார்ந்து பேசிட்டு இருக்காரு. இந்த நேரம் வீட்டுக்கே போயிருக்கலாம் “ என்று ஒரு பெண் அருகிலிருந்தவளிடம் கூற,

“அதானேடி, ஆறு மணி பஸ் வேற போயிரும். இதை விட்டா எட்டு மணிக்கு தான் பஸ். நடந்து தான் போகணும் “ என்று அவருமே பதிலுக்கு புலம்பினார்.

அங்கிருந்த ஒருவன் உலகநாதனின் முன்னே வந்து சற்று தலை குனிந்து, “ஐயா, சம்பளம் கொடுத்தா நாங்க கிளம்பிருவோம் “ என்க,

“ஏன் ! உன்னால காத்துக்கிட்டு இருக்க முடியாதோ ? அப்படி என்னலே போய் புடுங்கப் போறே ? ஒழுங்கா ஓரமா நில்லு போ “

“அப்படியெல்லாம் இல்லை ஐயா, மத்த நாள்லா இருந்தா இருந்து வாங்கிட்டு போவேன். என் பொண்ணை ராத்திரி ஹாஸ்பித்திரி கூட்டிட்டுப் போகணும் அதான் ஐயா !”

“உன் இஷ்ட மயிருக்கு எல்லாம் தர முடியாது. வேணும்னா வாங்கிட்டு போ, இல்லையா கிளம்பு “

“என்னய்யா இப்படி சொல்லுறீங்க ? இதை வச்சி தான் பொண்ணுக்கு வைத்தியம் பார்க்கணும். உடம்பு தேய, வியர்வை சிந்தி நான் வேலை பார்த்த காசை தானே ஐயா கேட்டேன் “ என்று சற்று நிமிர்ந்து குரல் உயரக் கூறவே,

‘இன்னைக்கு சங்கையாக்கு சங்கு தான். ஆழம் தெரிஞ்சி கால்லை விட்டுட்டுடானே ‘ அங்கிருந்தவர்கள் நினைத்துக் கொண்டனர்.

“என்ன தைரியம் இருந்தா என் முன்னால குரலை உயர்த்தி பேசுவே ? உன்னை “ சீறியவாறு முன்னிருந்தவனின் செவியை பதம் பார்க்க, அவனோ தடுமாறி கீழே விழுந்தான்.

வேகமாய் கணக்குப்பிள்ளையோ, “ஐயா ! வேண்டாம் விடுங்க. பிள்ளை குட்டிக்காரன் “ என்று அவரின் பக்கவாட்டில் வந்து தொடாது தடுத்து நின்றார்.

விரல் என்ன மூச்சு காற்று கூட அவரின் அனுமதி வாங்கி தான் தொட வேண்டும். அப்படியிருக்க முன்னொருவன் நின்று வாய் திறந்து பேச விடுவாரா என்ன ? ஒரு அடிக்கே சக்தி மொத்தமும் இழந்து தரையில் விழுந்தவனை உடன் இருந்தவர்கள் தூக்கி நிறுத்தினர்.

அனைவரும் பயத்தோடு உலகநாதனைக் காண, “வரவு, செலவு எல்லாம் பார்த்திட்டு தான் சம்பளம் தருவேன். எவனாவது வந்தனாக்கோம் ஒரு ரூபாய் கூட கிடையாது பார்த்துக்கோங்கலே” மிரட்டி விட்டு இருக்கையில் அமர்ந்தார்.

‘ஊருல எவன் எவனுக்கோ எல்லாம் சாவு வருது. இவனுக்கு வருதா ? இவனெல்லாம் செத்தாலும் நிம்மதியா இருக்கவே கூடாது. கடவுளை வணங்குற இடத்துல வேலையைப் பார்த்திட்டு இவனை வணங்க வேண்டியதா இருக்கு. ஏதோ இவன் காசு மாறி வீராப்பு காட்டுறேன். ஊர்க்காசு கைக்குள்ள வச்சி எம்பூட்டு திருடிக்கிட்டு கிடைக்கான் படுபாவி ‘ என்று அங்கிருந்தவர்கள் தங்களின் மனதோடு புலம்பிக் கொண்டனர்.

இந்த எண்ணங்களை மட்டும் வெளிப்படையாக கூறினால் அவ்வளோ தான் இந்த நேரம் பரலோகம் தான்.

நேரம் சென்று செலவினைப் பார்த்து விட்டு பின்னரே அனைவருக்கும் சம்பளம் தர முடிவெடுத்தார். அவர் நினைத்தால் முதலிலே சம்பளத்தைக் கொடுத்து அனுப்பி விட்டு மேஸ்திரியை மட்டும் வைத்து வரவு, செலவு பார்த்திருக்கலாம். அப்படி மட்டும் செய்தால் அவர் உலகநாதனே இல்லாமல் போய்விடும் அல்லவா !

“வாங்க, வந்து எல்லாரும் சம்பளம் வாங்கிட்டுப் போங்க “ என்றதும், அனைவரும் வருசையில் வந்து நிற்க, ஒவ்வொருவரும் எத்தனை நாட்கள் வேலை செய்தார்கள் என்று கணக்குப்பிள்ளை பார்த்து பணத்தினை உலகநாதன் கையில் கொடுக்க அதனை வாங்கி கூலியாளிடம் கொடுத்தார்.

“நன்றி ஐயா !” ஏதோ அவரின் பணத்தை தானமாகக் கொடுத்தது போல் பணிந்து கூறியே வாங்கிச் சென்றனர்.

“இங்கே பாரு ஒழுங்கா இருந்தா வேலைக்கு வா. இல்லையா நாளையில இருந்து என் கண்ணுல படாதே ? “ என்று மிரட்டல் ஒன்றை வைத்து தான் சங்கையாவிற்கு பணத்தினைக் கொடுத்தார்.

அவரிடமிருந்து வாங்கி வீட்டுக்கு நடந்துச் சென்ற சிலரின் புலம்பல்கள் எல்லாம் உலகநாதனை அர்ச்சரித்து தான் கொண்டிருந்தது

“பாடையில போக ! ஒரு வாரம் சம்பளத்தை பிடிச்சி வைச்சே கொடுக்கான் “

“எல்லாம் அடுத்து நம்ம வேலைக்கு வர்றதுக்கு தான். முழு சம்பளம் கொடுத்தா நாளைக்கு வேலைக்கு வராம போயிட்டா அந்த நினைப்பு தான்டி "

“ஆமாக்கா, தெரியா தனாமா இவனைப் போய் இந்த ஊர்த் தலைவராக்கிட்டாங்க “

“அட நீ வேறடி. எல்லாரும் அதை செய்யுறேன் இதை செய்யுறேன் சொல்லி ஓட்டு வாங்குனா. இவன் மிரட்டி உசுருக்கு பயத்தைக் கொடுத்துலே ஓட்டு வாங்கி இந்த இடத்துக்கு வந்திருக்கான். அதுவும் காலங்காலமா அதுங்க குடும்பம் தானே தலைவரா இருக்கு. என்னைக்கு தான் இந்த ஊருக்கு விடிவு காலம் வரப் போகுதோ “ என்று புலம்பிக் கொண்டேச் சென்று விட்டனர்.

“எல்லாருக்கும் சம்பளம் கொடுத்தாச்சுல மேஸ்திரி. “

“கொடுத்துட்டோம் ஐயா !”


“இங்க பாரு நம்ம பண்ணையில கொஞ்சம் கட்டிட வேலை நடக்குது. அதுக்கு செங்கல் தேவைப்படும். நம்ம ஆளுங்க நைட் வந்து எடுத்துப்பாங்க. கண்டு கிடாதே சரியா ?”

“சரிங்க ஐயா ! நீங்க சொன்னது மாதிரியே ராத்திரி மத்தவங்க வராம பார்த்துக்குறேன். நீங்க எடுத்திட்டு போங்க “ என்க, அருகிலிருந்த கணக்குப்பிள்ளை கூட மனதோடு வசைபாடினார்.

பின் நேரமாவதை உணர்ந்து எழுந்துச் செல்ல காரின் அருகே வர, அந்த வழியாக பைக்கில் வந்துக் கொண்டிருந்த ஒருவர் சட்டென நிறுத்தி விட்டு இறங்கினார்.

“ஐயா !” என்க,

தன்னை அழைப்பது புரிந்து காரில் ஏறாது அவனைக் கண்டு, “என்ன தலையாரி காத்து இந்த பக்கம் வீசுது “ என்றார்.

“ஐயா, நம்ம ஊருக்கு இன்னும் ரெண்டு நாளுல புதுசா விஏஒ (கிராம நிர்வாக அலுவலர் ) வர்றாராம். அதுவும் வெளியூர் ஆளு. இன்னைக்கு தான் அறிக்கை வந்தது. அதான் உங்க கிட்ட சொல்லிட்டுப் போகலாம் வீட்டுக்குப் போனா, நீங்க இங்கன இருக்கீங்க ?”

“எவம்லே அது ?”

“இன்னும் அதை பத்தின விபரம் எல்லாம் தெரியல. வந்தா தான் தெரியும் “

“சரி வரட்டும் பார்த்துக்கலாம். நமக்கு ஒத்து வர்றானா பார்க்கலாம். இல்லையா முடிச்சிர வேண்டியது தான். காரை எடு போகலாம் “ எனக் கூறி அங்கிருந்து உலகநாதன் கிளம்பினார்.

அவர் விழிகளை விட்டு மறையும் வரை அப்படியே நின்ற தலையாரியின் மனமோ, ‘இவர் சொல்லிட்டுப் போறதை பார்த்தா இப்போ வர்றப் போறவனும் நிலைக்க மாட்டான் போலையே ! எல்லாம் கலிகாலம் ‘ எண்ணிக் கொண்டு அவரும் சென்றார்.

வீட்டுக்கு வந்த உலகநாதன் ஹாலில் இருந்த சோபாவில் அமர, கணவன் வந்ததை அறிந்து கையில் டீயோடு வந்தார் தமயந்தி.

“இந்தாங்க மாமா டீ “ என்க,

வாங்கிக் கொள்ள உடன் வந்த கணக்குப்பிள்ளையோ இன்னுமே நின்ற வாக்கில் தான் இருந்தார்.

உலகநாதனின் முன் அமர்வதற்கு கூட அனுமதி இருந்தால் மட்டுமே முடியும்.

மனைவி சென்று விட கொண்டு வந்த டீயை முழுவதும் குடித்து முடித்த பின்னே தான் மூளை வேலைச் செய்வது போல் முன்னே இருந்த கணக்குப்பிள்ளையைக் கண்டார்.

“இப்போ இந்த ஊருக்கு விஏஒ வேணும்ன்னு எவன் சொன்னான்லே. இத்தனை நாள் இல்லாம தானே இருந்தது ? முதல்ல இந்த ஊருல இல்லைன்னு எப்படி மேலிடத்துக்கு தெரிஞ்சது. எவனும் என்னை மீறி எதுவும் பண்ணுறான்னாலே “

“ஐயா ! உங்களை மீறி எதுவும் பண்ண முடியாது. யாருமே சொல்லலைனாலும் அவங்களுக்கு தெரிஞ்சிரும். அதுவுமில்லாம இப்போ ஒரு வருஷத்துக்கு மேல விஏஒ இல்லாம தானே இருக்கோம். அதுனால கூட இந்த ஊருக்கு வேணும்ன்னு நினைச்சிருக்கலாம் “

“என்னமோ போ ! பார்த்துக்கலாம். சரி நீ கிளம்பு. நாளைக்கு டவுனுக்கு யூனியன் ஆபிஸ் வர்ற போகணும் வெள்ளன வந்திரும்லே “ என்றதும், சரி எனக் கூறி அவர் அங்கிருந்துச் சென்றார்.

சரியாக வாசல் தாண்டுகையில் உள்ளே வெள்ளை சட்டையும், நீல நிற ஜீன்ஸ் பேண்ட்டும் போட்டு ஒருவன் வர்ற, “வணக்கம் தம்பி “ தலை குனிந்து கூறினார்.

“என்ன கணக்கு ! கையில வச்சிருக்குற பை வெயிட்டா தெரியுது. கத்தையா எதையும் உருவிட்டு போறையா ?” மீசையை முறுக்கிக் கொண்டே வந்தவன் கேட்க,

“ஐயோ ! தம்பி அப்படியெல்லாம் இல்லை. இந்தாங்க சோதிச்சி கூட பாருங்க “ என்று வேகமோடு பயத்தில் தன் கையில் இருந்த பையை நீட்டினார்.

“போய்யா ! போ. அப்படி மட்டும் பண்ணுனா நீரு இந்த நேரம் இருக்க மாட்டீருன்னு உமக்கே தெரியும்ல “ எனக் கூறி உள்ளே ஹாலில் அமர்ந்திருந்த தந்தையை நோக்கி வந்தான் தமிழ்ச்செல்வன்.

‘ஒவ்வொரு நாளும் நரகத்துல குப்பை கொட்டுற மாதிரியே அப்பனுக்கும், பிள்ளைக்கும் மத்தியில வாழ வேண்டியதா இருக்குப்பா ‘ பெருமூச்சு ஒன்றை விட்டு மனதில் புலம்பியே ஓடோடி விட்டார் கணக்குப்பிள்ளை.

“என்னலே ரைஸ்மில் பக்கம் இன்னைக்கு போகலைன்னு கேள்விப்பட்டேன் “ என்றதும், ஒரு நொடி மிரண்டு அதனை தனக்குள்ளே மறைத்தான்.

எதிரே இருந்த சோபாவில் அமர்ந்த படியே, “டவுனுல ஒரு வேலை இருந்ததுப்பா. நாளைக்கு கண்டிப்பா போயிறேன் ” என்க,

“சரி தாம்லே. சும்மா ஊர் சுத்தாம ஒழுங்கா வேலையைப் பார்க்குற வழியைப் பாரு “

“சரிப்பா. அப்பா அப்பறம் சொல்ல மறந்துட்டேன். சங்கரன்கோவில் அரிசிக்கடை மாரிமுத்து இன்னைக்கு வட்டி பணம் கொடுத்துட்டான். “

“அப்படியா ! அதென்னடா கணக்கு போனா மட்டும் இன்னைக்கு நாளைக்கு சொல்லுறான்னாம். நீ போனா உடனே கொடுத்துறான் “

“நம்ம கை பழக்கம் அப்படிப்பா “ என்றவாறு இறுகிய புஜம் கொண்ட கைகளை முறுக்கவே, அணிந்திருந்த காப்பிற்கு வாய் இருந்தால் கூட இந்த நொடி அழுது விடும்.

கொலுசொலி ஓசைக் கேட்டதும் தந்தை, மகன் இருவரும் வாசல் புறம் திரும்ப, தோகை விரித்தாடும் மயிலை போன்றே உள்ளே ஆடிக் கொண்டே வந்தாள் நந்தனா.

அவர்களை நோக்கி வந்தவளோ தந்தையின் அருகில் பொத்தென அமர, “என்னம்மா காலேஜ் படிப்பு எல்லாம் எப்படிப் போகுது ?” என்க,

“ஏதோ போகுதுப்பா. எனக்கு ஒரு ஸ்கூட்டி வேணும்ன்னு எத்தனை நாள்லா கேட்டுக்கிட்டு இருக்கேன். அண்ணன் கேட்டா மட்டும் உடனே வாங்கிக் கொடுக்குறீங்க ?”

“அதான் இந்த வருஷத்தோட படிப்பு முடியுதுலம்மா “

“படிப்பு முடிஞ்சா ஸ்கூட்டி ஓட்டக் கூடாதா என்ன ? பஸ்ல போக எவ்வளோ கஷ்டமா இருக்கு தெரியுமா ? கார்ல நம்ம டிரைவர் கூட போகுறதுக்கு நடந்தா போகலாம் போல, அப்படி இருக்கு “ புலம்பவே,

“சரிம்மா. சீக்கிரம் வாங்கிரலாம். போய் துணியை மாத்தி ஏதாவது சாப்பிடு. நீயும் போடா “ என்க, மகன் மாடியேற, கீழே இருந்த தன்னறைக்குச் சென்றாள் நந்தனா.

உலகநாதன் ஊராருக்கு எப்படியோ அதே போல் தான் மனைவிக்கு. தன்னிடம் பயந்தே இருக்க வேண்டுமென நினைப்பவர். ஆனால் பிள்ளைகள் இருவர் மட்டும் அதற்கு மாறாய் தந்தையைப் பின்பற்றியே வளர்ந்தவர். தமிழ்ச்செல்வனுக்கு தந்தையின் மீது பயம் இருந்தாலும் சற்று அவரிடம் உசாராக இருப்பவன். கல்லூரி முடித்தவனை வேலைக்குச் செல்ல விடாது தன் வேலைகளை கவனிக்க வைத்துக் கொண்டார். தந்தைக்கு தப்பாத மகனாக அவரின் விழிகளுக்கு மட்டும் இருந்தான்.

மகள் நந்தனா அழகோவிய மங்கை. காண்போர் அனைவரின் கண்களும் ஒரு நொடி அவளிடம் படிந்து மீளும் பேரழகு. இப்போது முதுகலை இறுதி வருடம் படித்துக் கொண்டிருக்க, வளர்த்தவர்களின் மீது அதீத பாசம் கொண்டவள். இதுநாள் வரை யாரிடமும் சுடுச்சொல் எப்படி இருக்கும் என்று கூட அறியாதவள்.


விஷம் கொண்ட தந்தையின் வாரிசான இந்த இரண்டு பிள்ளைகளின் வருங்காலம் எப்படி இருக்கும் ?


🙏 நன்றி 🙏


தங்களின் அபிப்பிராயங்களையும் வழங்கும்படி கேட்டு்கொள்கிறேன். எழுத்துப் பிழைகள் இருந்தால் அதை கருத்து திரியில் பதிவு செய்யவும்.


கருத்துகளை பகிர

 
Last edited:
Status
Not open for further replies.
Top