அத்தியாயம் மூன்று:
"சிந்தியா போய் நல்லா தலைக்கு தேய்ச்சு குளிச்சிட்டு இந்த புடவையை கட்டிக்கிட்டு வா.."என்று அவள் வாங்கி வைத்திருந்த சாதாரண நைலான் புடவையை அவளிடம் கொடுக்க, அதை கைகளில் வாங்கிய சிந்தியா தயக்கமாக சங்கீதாவை பார்த்தாள்.
"என்ன ஆச்சு ஏன் இப்படி பார்த்துகிட்டு இருக்க அப்ப உனக்கு புடவை கட்ட தெரியாதா?"
"ஆமாங்கண்ணி ஒரு ரெண்டு தடவை எனக்கு யாராவது கட்டிவிட்டு பழகி விட்டா நானே அடுத்தடுத்து கட்டிக்குவேன்.."
"ஏன் இத்தனை நாள் உங்க வீட்ல இருக்கும்போது உங்க அம்மாகிட்ட இதையெல்லாம் கத்துக்க வேண்டியது தானே? உனக்கு கல்யாணம் பண்ண போறாங்கன்னு நல்லா தெரியும் தானே அப்பவே உங்க அம்மாகிட்ட புடவை கட்டுவதற்கு சமைக்க பாத்திரம் கழுவ வீட்டு வேலை பார்க்க கத்துக்க வேண்டியது தானே!"என்று பட்டென சொல்ல, சிந்தியாவின் பூ முகம் வாடிப்போனது.
"இல்ல அண்ணி அம்மாவை எதுவும் குறை சொல்லாதீங்க அவங்க இதையெல்லாம் கத்துக்க சொல்லி சொன்னாங்க தான்.. நான்தான் அத்தை கிட்ட வந்து இங்க உள்ள பழக்க வழக்கம் எல்லாத்தையும் கத்துக்கிட்டு அதுக்கு தகுந்தார் போல என்னை மாத்திக்கலாம்னு விட்டுட்டேன்..தயவு செஞ்சு நான் தப்பு செஞ்சு இருந்தா மன்னிச்சிடுங்க ஒரே ஒரு தடவை மட்டும் கட்டி விடுங்க அண்ணி அப்புறம் நானே கட்டிக்கிறேன்.."என்று பாவமாக கேட்க, முகத்தை திருப்பிக் கொண்ட சங்கீதா "பிரியா உன் அண்ணன் பொண்டாட்டிக்கு நீயே புடவை கட்டி விடு இவளை தயார் பண்ணு நான் போய் சாந்தி முகூர்த்தத்துக்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் பண்றேன்.."என்று அவளை தங்கையிடம் ஒப்படைத்து விட்டு செல்ல, அவளுக்கு அந்த வீட்டில் தெரிந்தது எல்லாம் சங்கீதா ஒருத்தியை மட்டும் தான்.
அதனால் தான் மனதில் தயக்கம் இருந்த போதும் வெளிப்படையாக கேட்டு விட்டாள்.
இப்பொழுது அவள் தமக்கை வரவும், கண்களில் கண்ணீரே வந்து விட்டது.
'ஒழுங்கு மரியாதையா உன் வீட்ல இருக்கும்போது உங்க அம்மா எல்லா வேலையும் பார்க்க சொல்லி உன்னை எவ்வளவு தூரம் சொன்னாங்க அப்பவே இதையெல்லாம் தெரிஞ்சு வச்சிருந்தா இப்ப வந்து இங்க கண்ண கசக்கி கிட்டு இருக்க வேண்டிய அவசியம் இருக்குமா? எப்பவுமே அம்மா சொல்றதை கேட்டா தப்பா நடக்குமா?'என்று அவள் மனம் அவளை திட்ட, மனதின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது அமைதியாகிவிட்டாள்.
"கவலைப்படாதீங்க அண்ணி கல்யாணம் பண்ண புதுசுல எனக்கும் இந்த மாதிரி தான் புடவை கட்ட தெரியாம ரொம்ப கஷ்டப்பட்டேன்.. அதுக்கப்புறம் வீட்ல இருக்கும்போது நானே புடவை கட்டி கத்துக்கிட்டேன் அதே மாதிரி நீங்களும் கத்துக்கலாம்.."என்று தன்மையாக சொல்ல, பிரியா பேசிய வார்த்தைகள் ஓரளவு காயப்பட்ட சிந்தியா மனதை சமாதானப்படுத்தியது.
இவளும் தன்னை பற்றி ஏதாவது தவறாக பேசி விடுவாளோ! என்று பயந்து கொண்டு இருந்த சிந்தியா அவள் சாதாரணமாக பேசியிருந்ததாள் மனம் சமாதானம் அடைந்தாள்.
அதன் பிறகு அவளை தயார் செய்து முதலிரவு அறைக்கு அனுப்பி வைக்க, அதுவரை மற்றவற்றை யோசித்து கொண்டு இருந்த சிந்தியா கணவனோடு இருந்த அறைக்குள் தனியாக அனுப்பி வைக்கவும் மற்ற அனைத்தையும் மறந்து மனம் முழுவதும் அடுத்து நடக்கப் போவதை நினைத்து நடுங்க ஆரம்பித்தது.
ஒவ்வொரு பெண்ணுக்கும் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம் என்றால் அவள் திருமணம் அடுத்தபடியாக அவளுக்கு நடக்கும் கணவனுடனான முதல் தனிமை.
அந்த தனிமை அவளும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது தான்.
திருமணமானது முதல் அவளை சுற்றி அனைவரும் இருந்து கொண்டு இருந்ததால் கணவனை தனிமையில் சந்திக்க முடியவில்லை.
இப்பொழுது தங்கள் இருவருக்கும் இடையில் யாரும் வர முடியாது அல்லவா?
பால் சொம்பு கூட அல்லாது ஒரு சிறிய கிண்ணத்தில் பால் காய்ச்சி அதன் மீது ஒரு சிறிய டம்ளர் வைத்துக் கொடுத்திருந்தார்கள்.
அவள் இதுவரை பார்த்த நாடகங்கள் படங்களில் எல்லாம் நாயகி சொம்பில் தான் பால் கொண்டு செல்வார்கள்.
'ஒருவேளை நாம பார்த்தது எல்லாமே வெறும் கண் துடைப்பாக மட்டும் தான் இருக்குமோ? படத்துல டிவில காட்டுறது எல்லாம் நம்பிகிட்டு இருக்க முடியாது.. 'என்று மனசை சமாதானப்படுத்திக் கொண்டு, முதலிரவு அறைக்குள் கால்கள் தயங்க சிரமப்பட்டு உள்ளே நடந்து வந்தாள்.
அங்கு இவளது வருகைக்காக காத்துக் கொண்டிருந்த சுரேஷ் மனதிற்குள் முதல்முறையாக ஒரு பிடித்தமின்மை.
மற்ற பெண்களைப் போல் அவள் மனைவி சாதாரண உடல் வாகு கொண்டவள் அல்ல.
மிகவும் ஒல்லியான தோற்றம் கொண்டவள் அதுவும் புடவை கட்டியதால் அவள் தோற்றம் அப்படியே தெரிய, அவன் மனதிற்குள் ஒரு நெருடல் வந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் பக்கத்தில் வந்த மனைவியை அணைத்துக் கொள்ள அவன் அணைப்பிலிருந்து முதலில் விலகினாள்.
கேள்வியாக பார்த்த கணவனின் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாது,"இல்லை முதல்ல பால் குடிக்கணும் அப்புறம் உங்க கால்ல விழுக சொன்னாங்க நல்ல நேரம் நைட் 10 மணிக்கு மேல் தான் அதுவரை பேசிகிட்டு இருக்க சொன்னாங்க.."என்று எங்கே அவன் தன்னை தவறாக நினைத்து விடுவானோ என்று மனப்பாடம் செய்தது போல் ஒப்பிக்க அவள் சொன்ன விதத்தில் சின்ன புன்னகை அரும்பியது அவன் முகத்தில்.
"சரி வா இப்ப என் பக்கத்தில் உட்காரு.."என்று அவளை தன் பக்கத்தில் அமர வைத்துக் கொள்ள, கணவனுடனான முதல் நெருக்கம் அவளை என்னமோ செய்தது.
"சரி சொல்லு உனக்கு பிடிச்சது பிடிக்காத விஷயம் இது பற்றி கொஞ்ச நேரம் சொல்லு நேரம் போயிடும்.."
"இல்ல நீங்க முதல்ல உங்களுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காதுன்னு எல்லாத்தையும் சொல்லுங்க ஒரு மனைவியா நான் எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுக்கணும்..இப்பவே நீங்க எல்லாத்தையும் சொல்லிட்டா அதுக்கப்புறம் போக போக ஓரளவுக்கு நான் கத்துக்குறேன்.."
"இப்போதைக்கு எனக்கு என் பொண்டாட்டி மட்டும் தான் வேணும் அதை தவிர வேறு எதுவும் வேண்டாம்.."என்று அவள் மூக்கை பிடித்து ஆட்ட, அவன் சொன்னதில் பெண்ணவள் முகம் நாணத்தில் சிவந்து போனது.
"ஐயோ கடவுளே நான் இதைக் கேட்கல வேற ஏதாவது கொஞ்ச நேரம் பேசலாம்.."
"ஊஹூம் நான் இதைப் பற்றி மட்டும் தான் பேசுவேன் எனக்கு இதைப் பற்றி பேச தான் ரொம்ப பிடிச்சிருக்கு.."என்று சின்ன குழந்தை போல் சொல்ல, அவன் சொன்ன விதத்தில் அவள் மனம் குளிர்ந்து போனது.
அதன் பிறகு இருவரும் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது அவர்களுக்கே புரியாத விஷயம் தான்.
விடியற்காலை 4 மணிக்கு கண்விழித்த சிந்து தன் பக்கத்தில் குழந்தை போல் உறங்கிக் கொண்டிருந்த கணவனை கண்டதும் வெட்கத்தால் அவள் முகம் சிவந்து போனது.
விடியற்காலையில் புது பெண் கோலமிட வேண்டும் என்று இரவே சங்கீதா சொல்லி அனுப்பியதால் விடியற்காலை 4 மணிக்கு எழுந்து விட்டாள்.
"என்னங்க எந்திரிச்சு குளிங்க..உங்க தங்கச்சி இரண்டு பேரையும் காலையிலேயே எந்திரிச்சு குளிக்க சொன்னாங்க எந்திரிங்க.."என்று சுரேஷை எழுப்ப,"போடி இப்பதான் நான் மூணு மணிக்கு தூங்கினேன் அதுக்குள்ள எதுக்கு எழுப்பி விடுற? இப்ப நான் எந்திரிச்சு குளிச்சி என்ன பண்ண போறேன் போ எனக்கு தூக்கம் வருது.."என சிந்து இதழ்கள் புன்னகை சிந்தியது.
"என்னங்க என் செல்ல புருஷன் தானே நீங்க எங்கே எந்திரிச்சு குளிங்க.."என்று அவனை சிரமப்பட்டு எழுப்பி குளிக்க வைக்க மணி நான்கரை கடந்து விட்டது.
குளித்துவிட்டு மீண்டும் மனைவிடம் வர, அவளோ வேகமாக பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டாள்.
இதழ்களில் சின்ன புன்னகையுடன் குளித்து முடித்துவிட்டு வெளியில் வர, அங்கு அவள் கணவன் விட்ட தூக்கத்தை மறுபடியும் தொடர்ந்து கொண்டே இருந்தான்.
ஐந்து மணிக்கு வெளியில் கதவு தட்டும் சத்தம் கேட்க யார் என்று பார்த்தாள்.
"என்னத்தை இந்த நேரம் வந்து கதவை தட்டுறீங்க?"
"இல்லை சிந்தியா நானும் உன் மாமாவும் உன் கூட இருக்கனும்னு இங்க இருந்தோம் கீழ அவங்க எல்லாம் எந்திரிச்சிட்டாங்க.. கோலம் போட சொல்லி உன்னை எழுப்ப வந்தேன்..அதான் நீ எந்திரிச்சிட்டியா இல்லையான்னு பாத்துட்டு போகலாம்னு வந்தேன்.."என்று சங்கடத்துடன் சொல்ல,"இல்லத்த நான் எந்திரிச்சு குளிச்சு முடிச்சிட்டேன் இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்தில் கீழே வந்துடறேன் போங்க.."என்றவள் விடிய காலை என்பதால் நைட்டியை அணிந்து கொண்டு கீழே வர, பரிமளம் முகத்தை சுளித்துக்கொண்டார்.
அவர் அப்படி செய்ததும் அதுவரை சந்தோஷமாக இருந்த சிந்து மனம் வாடி போனது.
அதை எல்லாம் கண்டும் காணாதது போல் பிரியா ஏற்கனவே கூட்டி வைத்திருந்த வாசலில் அவளுக்கு தெரிந்த கோலம் ஒன்றை பெரிதாக போட்டுவிட்டு நிமிர, அவளை உள்ளே அழைத்து வந்த பிரியா தலையை பின்னால் தட்டி விட்டு "சரி போய் கொஞ்ச நேரம் தூங்குங்க அப்புறமா வரலாம்.."என்று அனுப்பி வைக்க, அவளை நன்றியுடன் பார்த்தபடி மேலே வந்து விட்டாள் சிந்தியா.
திருமணத்திற்கு முதல் நாள் முழுவதும் பெற்றோரை பிரிந்து விடப் போகும் சோகம், இரவு மணப்பெண் அழைப்பு என்று இரவு முழுவதும் தூங்க விடாது காலையில் 4:00 மணிக்கு முகூர்த்தம் என்பதால் இரண்டு மணிக்கு எழுப்பி விட்டிருக்க அத்தோடு தேவையில்லாத அலைச்சல் எல்லாம் சேர்ந்து நேற்று இரவும் தூங்க முடியாது உறக்கத்திற்கு கெஞ்சிய கண்களை சிரமப்பட்டு விழித்து எழுந்தவள் எப்போதடா மீண்டும் படுத்து தூங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்க, பிரியா அவளை மேலே சென்று படுக்க சொன்னதும் இதுதான் வாய்ப்பு என்று கணவன் பக்கத்தில் வந்து படுத்துக் கொள்ள, அவனும் அவள் வந்ததும் தூக்கம் கலைந்தவனாக அவள் பக்கத்தில் வர.."இங்க பாருங்க என்னால முடியாது கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கணும் மறுபடியும் குளிக்க முடியாது ப்ளீஸ்.."எனவும் அவள் நிலைமையை புரிந்து கொண்டவன் அவளை தொந்தரவு செய்ய மனம் வராமல் தன் கையணைப்பில் வைத்தபடி அவளோடு சேர்ந்து அவனும் உறங்கி போனான்.
"என்னங்க இது என்னதான் இருந்தாலும் உங்க வீட்டுக்கு முதன்முதலா பொண்ணு வீட்டுக்காரங்க வரும்போது மாப்பிள்ளையோட அப்பா நீங்க கூப்பிடுறது இல்லையா?"என்று விருந்துக்கு வந்த இடத்தில் தங்களை அழைக்கவில்லையே என சிந்தியாவின் பெரியப்பா ஆதங்கப்பட்ட,"இதுல என்னங்க இருக்கு நீங்க எல்லாரும் நம்ம குடும்பத்து ஆளுங்க தானே?? அதனால்தான் யாரையும் கூப்பிடவில்லை சரி இப்ப என்ன உங்க எல்லாரையும் வாங்கணும்னு கூப்பிடனும் அம்புட்டு தானே எல்லாரும் வாங்க.."என்று கடமைக்கு அழைத்து விட்டு வெளியில் சென்று விட,சிந்தியா சுரேஷ் இருவரும் கோவிலுக்கு சென்று இருந்ததால் அவளுக்கு அங்கு நடந்தது தெரியாமல் போய்விட்டது.
இருவரும் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வரும்போது தன் சொந்த பந்தங்கள் அனைவரும் தன் புகுந்த வீட்டில் இருப்பதை கண்டு குசியாகி போய்விட்டது சிந்தியாவுக்கு.
"அப்பா அம்மா பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மாமா அத்தை அண்ணன் அத்தான் அக்கா தங்கச்சி பாப்பா பாட்டி எல்லாரும் வாங்க வாங்க.."என்று தன் சொந்தங்கள் அனைவரையும் புதிதாக வந்திருந்த வீட்டில் கண்டதும் தன் புகுந்த வீட்டை மறந்து அவர்களோடு ஐக்கியமாகிவிட்டாள்.
அவர்களும் புகுந்த வீட்டில் தங்கள் பெண் எப்படி இருக்கிறாளோ? என்று கவலையோடு இருந்தவர்கள் சிந்தியா சந்தோசமாக அனைவரையும் வரவேற்க, அவர்கள் மனதில் இருந்த பாரம் வெகுவாக நீங்கி போனது.
பரிமளம் சங்கீதா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள சங்கீதா தான் பார்த்துக் கொள்வதாக கண்களை மூடி திறந்தாள்.
என்னதான் கணவன் முதல் நாளில் அவளிடம் கட்டளையாக வீட்டுக்கு வர வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றாலும் கணவனிடம் போனில் அழுது அப்படி இப்படி செய்து அன்று இரவு தன் பிறந்த வீட்டிலேயே தங்கி விட்டாள்.
அது என்னவோ பிறந்த வீட்டில் வளரும் ஒவ்வொரு பெண்ணும் புகுந்த வீட்டிற்கு செல்லும் பொழுது அந்த வீட்டில் தான் ராஜ்ஜியம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறான விஷயம் அல்ல தான்.
புகுந்த வீட்டில் அவர்கள் சென்று ராஜ்யம் செய்வது போல் பிறந்த வீட்டில் முன்பிருந்தது போல் அதே செல்வாக்குடன் ராஜியம் செய்ய வேண்டும் என்று பல பெண்கள் எதிர்பார்ப்பது தான் என்னவோ?
அவர்கள் மட்டும் புகுந்த வீட்டில் யார் தொல்லையும் இல்லாது சந்தோஷமாக தங்களது இஷ்டத்திற்கு இருக்க வேண்டும் அதுவே தங்கள் வீட்டிற்கு அண்ணன் மனைவியோ தங்கை மனைவியோ வந்தால் தங்கள் சொல் பேச்சு மட்டும் கேட்டு நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதெல்லாம் எப்படி சொல்வது??
அவற்றையெல்லாம் எந்த வகையில் சேர்த்துக் கொள்வது?
அதன் பிறகு விருந்தும் நல்லபடியாக நடந்து முடிக்க, சிந்தியா வீட்டினர்கள் அவளிடம் சொல்லி முடித்து விட்டு கிளம்ப ஏனோ முன்பு போல் இந்த முறை அவளுக்கு கண்ணீர் வடிக்க தோன்றவில்லை.
கணவன் பக்கத்தில் இருந்ததால் அவளுக்கு அதுவே பெரும் ஆறுதலாக தோன்ற தன் பிறந்த வீட்டினரை புன்னகையுடன் அனுப்பி வைக்க சிந்தியா வீட்டில் இருந்த அனைவருக்கும் அதுவே பெரும் மன நிம்மதியை கொடுத்தது.
அவர்கள் அந்த பக்கம் சென்றதும் பரிமளம் "டேய் சுரேஷ் உங்க அக்காவை கொண்டு போய் அவங்க வீட்ல விட்டுட்டு வா உங்க மாமா நேத்து வர சொன்னாரு ஆனா அவ தான் இன்னைக்கு விருந்துக்கு சமைக்க ஆள் வேணும்னு போகாம இருந்துட்டா அவங்க புருஷன் தனியா போனா ஏதாவது சொல்லுவாங்க நீ சொல்லி விட்டுட்டு வா.."என்றார்.
"என்னம்மா இது? இந்த புள்ள சிந்தியா விட்டு பக்கத்துலதான் இருக்கு அவங்க வீட்ல இருக்க எல்லாரும் இப்பதானே போனாங்க இந்த புள்ளையும் போக வேண்டியது தானே?"
"எனக்கு தெரியும்டா பொண்டாட்டி வந்த உடனே மாறிட்ட பாத்தியா அப்படியே? உன் பொண்டாட்டி உனக்கு சொல்லி கொடுத்தாளா? உனக்கு இப்படியெல்லாம் பேச தெரியாது!"என்று சேலையை வரிந்து கட்டிக்கொண்டு பரிமளம் வர, சிந்தியா புன்னகைக்கு அர்ப்ப ஆயுள் தான் போல.
அவர் வெடுக்கென கேட்டதும் அவள் கண்களில் தன்னால் கண்ணீர் வந்து விட்டது.
"மனுஷன் பிராணனை வாங்காதீங்க அம்மா பொண்டாட்டி பேச்சை கேட்டு நடக்கிற அளவுக்கு எனக்கு சுய புத்தி இன்னும் கெட்டு போகல வாய மூடுங்க இப்ப என்ன கொண்டு போய் விட்டுட்டு வரணும்னு அம்புட்டு தானே போய் தொலைகிறேன் ஒப்பாரி வச்சு ஊரை கூட்டாதீங்க.."என்று எரிச்சலோடு சொல்லிவிட்டு,தங்கையை அழைத்துக் கொண்டு தன் பைக்கில் சென்று விட்டான்.
செல்லும்பொழுது வாசல் அருகில் நின்று கொண்டிருந்த மனைவியிடம் சொல்லிவிட்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றாது செல்ல, ஏற்கனவே ரணம் அடைந்து போயிருந்த சிந்தியா மனம் தன் கணவனின் ஆறுதல் வார்த்தைகளுக்காக எதிர்பார்த்துக் காத்திருக்க, அவனோ அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்காது சென்று விட மேலும் மேலும் மனதளவில் மிகவும் காயப்பட்டு போனாள்.
"அம்மாடி மருமகளே அப்படியே நின்னுகிட்டு இருந்தா என்ன அர்த்தம்? நம்ம வீட்டு வேலையை நாமதான் பாக்கணும் இதுக்காக வெளியில் இருந்து வேலையாள் ஒருத்தியை கூட்டிக்கிட்டு வர முடியுமா? உங்க சொந்த பந்தம் வந்து தின்னுட்டு போனதை நம்ம தான் சுத்தப்படுத்தணும் வேலையை பார்க்கலாம் வா.."என்று அழைக்க, மனம் காயப்பட்டு போயிருந்தவள் அவர் அழைக்கவும் மறுக்கவும் முடியாது அவரோடு வேலை பார்க்க சென்றாள்.
"இங்க பாருமா விருந்துக்கு சமைத்து இடுப்பு ரொம்ப வலிக்குது இந்த பாத்திரம் எல்லாத்தையும் கழுவி வச்சுடு.. பிரியா நீ வீட்டைக் கூட்டி நல்லா கழுவி விடு ரொம்ப அசிங்கமா இருக்கு பாரு.. அம்மாடி மருமகளே பாத்திரம் எல்லாத்தையும் கழுவி முடிச்சிட்டு உன் துணி எல்லாத்தையும் துவைத்து காய போடு.."என்றவர் வெளியில் கதை அடிக்க சென்று விட்டார்.
அவர்களது இந்த புது அவதாரத்தில் திகைத்து நின்று கொண்டிருந்தாள் புது மருமகள்.
ஒவ்வொரு வீட்டிற்கும் வரும் பெண்கள் தங்கள் கனவுகளையும் ஆசைகளையும் சுமந்து கொண்டு தங்கள் புகுந்த வீட்டில் எப்படி எல்லாம் வாழலாம் என்று தான் வருகிறார்கள்..
ஆனால் திருமணத்திற்கு பிறகு தான் ஏன் தான் திருமணம் செய்தோம் என்ற நொந்து போகும் பல பெண்கள் இன்னும் இந்த சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது தான் நம்மால் மறுக்க முடியாத உண்மை.
சிந்தியா மட்டும் அதற்கு விதிவிலக்காக இருப்பாளா?