வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பனியில் உருகிய பகலவன்..! - 12

GG writers

Moderator
வண்டியைச் செலுத்திக் கொண்டிருக்கும் பொழுதுதான் "அவளிடம் நாம் ஏன் நமக்கு வேலை கிடைத்த விஷயத்தைச் சொல்ல வந்தோம்? நமக்கு அது சந்தோஷமான விஷயமாக இருந்தாலும்.. அவளுக்கு இது சந்தோஷம் தர வேண்டிய அவசியம் இல்லையே? அவளுக்கு இன்று காலை வரை நாம் யார் என்று தெரியாது. இப்பொழுதும் பெயரைத் தவிர பெரிதாக ஒன்றும் தெரியாது. அப்படி இருக்க... புதிதாய் பார்த்த முதல் நாளே அவளிடம் இத்தனை உரிமை எடுத்துக் கொண்டால் நம்மைப் பற்றி என்ன நினைப்பாள்?" என்று நினைத்தவன் மீண்டும் வீட்டிற்கு செல்ல நினைத்தால் மனம் ஒப்பவில்லை.

"நண்பர்களையாவது பார்க்க செல்லலாம்" என்று முடிவெடுத்தாலும் கைகால்கள் தன்னால் அவள் வீட்டை நோக்கி வாகனத்தைச் செலுத்தியது. முழுதும் மீண்டும் மீண்டும் அவளே வந்து ஆக்கிரமித்தாள் லக்ஷ்மனின் நினைவுகளை.

ஒரு வழியாய் நினைவுகளோடு போராடியபடி பிரகதீஸ்வரியின் வீட்டிற்கு வந்து பார்க்க... அவனது போதாத காலம் என்பதுபோல் வாசல் கதவு முடி இருந்தது.

"எங்க போயிட்டாங்க? திரும்பவும் அவளுக்கு உடம்பு சரியில்லாமல் என்னதும் போயிடுச்சோ?" என்று யோசித்தவன் "அக்கம் பக்கம் உள்ள யாரிடம் ஆவது கேட்கலாமா?" என்று பார்த்தான்.

ஆனால் அனைத்து வீடுகளும் ஆள் அரவம் இன்றி மூடப்பட்டிருக்க தொந்தரவு செய்ய விருப்பம் இல்லாதவன்...
"அப்படி போயிருந்தா அந்த பிச்சைக்காரர்கிட்ட கேட்டால் ஏதாவது தெரியும்" என்று எண்ணி அவர் காலையில் இருந்த இடத்தைத் தேடிச் செல்ல அங்கு அவரையும் காணவில்லை.

மூன்று முக்கு ரோட்டில் இறங்கி நாலாபுறமும் தேடிய அவன் எரிச்சலுடன் காருக்கு திரும்பி வந்தான்.

பின்னந்தலையைக் கோதி பல்வேறு விதமாக சிந்தித்த மனதை அடக்க இயலாமல் சோர்வுடன் கண்களை மூடி சீட்டில் சாய்ந்து அமர்ந்தான்.

"அவளைப் பார்த்தே ஆக வேண்டும்" என்று மனது அடம் பிடித்தது. அவளுக்கு ஏதாவது ஆகிவிட்டதோ என்று படபடத்தது. அவள் இல்லாத வீட்டை எண்ணி பார்க்கையில் தன் வாழ்வே வெறுமையாய் இருப்பது போல் தோன்றியது.

என்ன உணர்வு இது? "இன்று காலையில் சில மணி நேரங்களே சந்தித்த பெண்ணின் மீது இவ்வளவு உரிமையும் ஆசையும் வருமா?" என்று எண்ணியவன் எண்ணங்களைப் பின்னுக்கு தள்ளி சண்டையிட்ட அவள் முகமே வந்து நின்றது.

அவளைத் தொடுகையில் எழுந்த தன் உணர்வுகளை மீண்டும் எண்ணியவன் சிலித்தான்.

அவள் அமர்ந்திருந்த இடத்தைப் பார்த்தபடியே கண்களைத் திறந்த அவன் சீட்டை மெதுவாய் தொட்டுப் பார்த்தான். ஏனோ அந்த வெல்வெட்டை தொடுகையில் அவளையே தொட்ட உணர்வு அவனுக்கு.

தொட்ட இடம் எங்கும் முத்து பதித்தது போல் மயிற்கூச்செறிய ஆரம்பிக்க கையில் அகப்பட்டது வெல்வெட்டிற்கு இடையில் கிடந்த அந்த குட்டி செயின்.

அதை கையில் எடுத்து பார்த்தவன் "அது அவளுடையதாகதான் இருக்கும்" என்று எண்ணினான். ஏனெனில் சமீப நாட்களில் அவளைத் தவிர வேறு யாரையும் தன்னுடன் அவன் வண்டியில் ஏற்றவில்லை.

செயினை எடுத்து சுற்றும் முற்றும் பார்த்தவனுக்கு அது அவளுடையதுதான் என்ற உணர்வு மேலோங்க அவசர முத்தம் ஒன்றை செயினுக்கு பரிசளித்தான்.

"ஒருவேளை வீட்ட பூட்டிட்டு உள்ளே இருப்பாங்களோ? காலிங் பெல் இருந்ததா? ஐயாே! அவசரத்துல அதையும் பாக்கலையே" என்ற எண்ணம் தோன்ற செயினை முத்தமிட்டு பாக்கெட்டில் பத்திரப்படுத்தியவனுக்கு தன் செயலே வினோதமாய் தெரிந்தது.

நேற்று வரை இப்படி ஒருத்தியைத் தேடி தெருவாக அலைவான் என்றோ? தனிமையில் செயினுக்கு முத்தம் கொடுப்பான் என்றோ? யாராவது கூறி இருந்தால் அவர்களைப் பைத்தியம் என்று உரைத்திருப்பான்.

ஆனால் இன்று தன்னை மீறி ஆடவன் அவன் செய்த செயலில் வெட்கம்தான் வந்தது.

அந்த உணர்வு அவன் பறந்து கொண்டிருப்பது போல் ஒரு மாயையைத் தோற்றுவித்தது. இதழில் நேற்று வரை இல்லாத குறுஞ்சிரிப்பு ஒன்று குடி கொண்டது.

அவளைக் காண வேண்டும் என்ற தவிப்பு அதிகமாக.. மீண்டும் அவர்கள் வீட்டிற்கு விரைந்தான்.

அதற்குள் ஓராயிரம் முறை தன் பாக்கெட்டைத் தொட்டு பார்த்து விட்டான்.

அந்தச் செயினைப் பாக்கெட்டில் வைத்ததிலிருந்து அவள் அருகிலேயே இருப்பது போல் ஒரு குறுகுறுப்பு ஏற்பட்டது.

அவனுக்கு அது மிகவும் பிடித்திருக்க... அவ்வப்போது செயினை ஸ்பரிசித்துப் பார்த்துக் கொண்டான்.

என்னதான் முயன்று சாதாரணமாக இருக்க முயன்றாலும் அழுத்தமான இதழ்கள் இன்று சிறிது வளைந்து சிறு சிரிப்பைத் தத்தெடுத்துக் கொண்டிருந்தன.

மீண்டும் வீட்டு வாசலுக்கு வந்தவன் உள்புறமாய் வைக்கப்பட்டிருந்த காலிங் பெல்லை இரண்டு முறை அழுத்தி விட்டு கேட்டிலிருந்து துள்ளி குதித்து எத்தி எத்தி பார்த்தான்.

எதிர்வீட்டு மாமி அவன் எத்தி எத்தி பார்ப்பதை வினோதமாய் பார்க்க...
"ஆன்ட்டி இந்த வீட்ல உள்ளவங்க எல்லாம் எங்க?" என்று சத்தமிட்டு கேட்டான்.

அவரோ அவனே மேலிருந்து கீழாக பார்த்துவிட்டு சென்றார்.

சற்று முன்புதான் செடிகளுக்கு தண்ணீர் தெளித்த அடையாளம் தெரிய... .இப்பதான் எங்கேயும் போயிருக்காங்களோ?" என்று எண்ணியவன் சிறிது நேரம் காத்து நின்று விட்டு யாரும் வந்து கதவைத் திறக்காததும் சோர்ந்து போன முகத்துடன் வண்டியில் வந்து அமர்ந்தான்.

இதுவரை இருந்த சந்தோஷம் இருந்த இடம் தெரியாமல் வடிந்தது போல் இருந்தது.

"அவள் அண்ணனுக்கு கால் செய்து கேட்டால் என்ன?" என்று மூளை தந்தியடிக்க... அப்பொழுதுதான் "அவளது அலைபேசி எண்ணை வாங்காமல் மடத்தனம் செய்து விட்டோம்" என்ற நிதர்சனம் புரிய தன்னைத்தானே தலையில் அடித்துக் கொண்டான்.

அதேவேளை அவனது அலைபேசி ஒலிக்க... அட்டன் செய்து காதில் வைத்தான்.

"என்னடா மச்சான்... நீ கிளம்பிட்டேன்னு சொல்லி அம்மா கால் பண்ணாங்க. அதான் நான் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அரை மணி நேரம் ஆகியும் உன்ன காணோம். அதான் சம்மர் பார்க்குக்கு வந்துட்டேன் மச்சான். நீ வந்தேன்னா... வீட்ல வெயிட் பண்ணு. நான் இன்னும் பிப்டீன் மினிட்ஸ்ல வந்துடுவேன்" என்றான் அவன் நண்பன் தீபக்.

"ஓ... நான் வந்துட்டுதான் இருக்கேன்டா. வழியில ஒரு சின்ன வேலை. அதான் கொஞ்சம் லேட் ஆயிடுச்சி. அப்புறம்... மாப்ள... எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பெர்ஷனலா பேசணும்" என்றான்.

"சரிடா. வீட்ல அக்கா குழந்தைகளோட வந்து இருக்கா. சோ.. தனியா பேச முடியாது. நீ வேணா பார்க்குக்கு வரியா?" என்று கேட்க...
"சரிடா..." என்றவன் காரைப் பார்க்கை நோக்கி திருப்பினான்.

வாசலில் வருகையிலேயே தீபக் அவனுக்காக காத்து நிற்க... "என்னடா மச்சான் எப்படி இருக்க என்று அணைத்து கொள்ள..
"வேலை கிடைச்சிருச்சிடா" என்று கூறினான் லக்ஷ்மன்.

"நீ என்னடா மச்சான் இவ்ளோ கூலா சொல்ற? எவ்ளோ பெரிய விஷயம். ட்ரீட் வைடா. நம்ம பிரண்ட்ஸுக்கெல்லாம் சொல்றேன் எத்தனை வருஷமா காத்திருந்த ஜாப்?" என்று கேட்க..
"சந்தோஷமாதான்டா இருக்கு. ஆனா ஒரு மாதிரி இருக்கு" என்றான் அவன்.

"என்னடா உளர்ர? வேலையில ஏதாவது பிரச்சனையா? இல்ல உனக்கு இந்த வேலை பிடிக்கலையா? நீ கஷ்டப்பட்டு எக்ஸாம் எழுதி கிடைச்சதுதானடா" என்று படபடத்த வண்ணம் வினாக்களைத் தொடுத்தான் தீபக்.

அவன் கேள்வியில் நண்பனின் பிரச்சனை எதுவாயிருந்தாலும் தீர்த்து வைத்து விட வேண்டும் என்ற உத்வேகம்.

"அதுக்கு இல்லடா. இன்னைக்கு மதியம் ஆக்சிடெண்ட்டலா ஒரு இன்சிடென்ட் நடந்துச்சு" என்று நடந்தவற்றை பாதி கூறியும் கூறாமல் எடுத்துக் கூற அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்த தீபக்கோ? "கங்கிராஜுலேஷன்ஸ் மச்சான். அப்ப டபுள் ட்ரீட் இருக்கு. ஓம்மனசயும் ஒருத்தி களவாண்டுட்டு போயிருக்கான்னா அவ பெரிய ஆளாதான் இருப்பா" என்று கூறினான்.

"என்னடா மச்சான்? நீ வேற கடுப்பேத்துற? நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் நீ என்ன சொல்லிட்டு இருக்க?" என்றான் அவன் தன்னை மீறி சிரித்த படி.

"என்னடா சொல்றது? என் மச்சானுக்கு காதல் ஜுரம் வந்துருச்சி. அதனால இனி அப்பப்ப வெயில் மழைன்னு மாறி மாறி நம்ம கிளைமேட் நம்மள மாத்தி மாத்தி கிறங்கடிக்கிற மாதிரி சந்தோஷமும் துக்கமும் அப்பப்போ உன்கிட்ட வந்து போகும். ஆனா என்ன? எது எப்ப வரும்னு நாங்கதான் அல்லாட வேண்டியது இருக்கும்" என்று புலம்ப... அழகாய் வெட்கப்பட்டான் லக்ஷ்மன்.

"டேய் என்னடா இது? புதுசா வெட்கமெல்லாம் படுற? செமையா இருக்கு மச்சான். முகம் வேற தவுசண்ட் வாட்ஸ் பல்பு மாதிரி ஜொலிக்குதே" என்று தீபக் கலாய்க்க... மேலும் சிவந்தான் அவன்.

"போடா டேய்.. விளையாடாத. அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. நான் இன்னைக்குதான்டா அவள பாக்கவே செய்தேன். அதுக்குள்ள எப்படிடா? அது மட்டும் இல்லாம நான் ஆசைப்படுறேன்னு சொன்ன உடனே அள்ளி குடுத்துடுவாங்களா? முதல்ல அவ ஒத்துக்குவாளா மச்சான்? எனக்கு பிடிச்சிருக்குங்குறதுக்காக அவளுக்கு புடிச்சிருக்கணும்னு கட்டாயம் இல்லையே? இதுல வேற விருமாண்டி மாதிரி ஒரு அண்ணன் வேற எப்பவும் கூடவே இருக்கான்டா. அவனைப் பாத்தாலே எனக்கு கொலை நடுங்குது மச்சான். அவனைக் கண்டதுமே அப்பீட் ஆயிட்டேன். போன் நம்பர் கூட வாங்கல. தெரியுமா?" என்று அவன் உதடு பிதுக்க...

"மச்சான்... நீ ஆசைப்பட்டு கிடைக்காததா? உங்க அப்பாகிட்ட ஒரு வார்த்தை சொல்லு. அடுத்த நிமிஷம் காலடியில் வைத்து விடுவாரு" என்று கூற... லக்ஷ்மனின் முகம் நொடியில் இறுகியது.

"நல்ல நேரத்துல அந்த ஆளு பேச்சை எடுக்காதடா. கடுப்பாகுது" என்றான் லக்ஷ்மன்.

"சரிடா விடு. இப்ப என்னதான் பிரச்சனை உனக்கு? அவள விட்டுட்டு அவ்வளவு தூரம் போறது பிரச்சனையா? இல்ல என்னதான் பிரச்சனை?" நண்பன் பரவசத்தோடு கேட்க...

"இல்லடா... அவளைப் பார்த்து எனக்கு வேலை கிடைச்ச விஷயத்தைச் சொல்லணும்னு போனேன். ஆனா அவளைப் பாக்க முடியல. அதுதான் ஒரு மாதிரியா இருக்கு" என்று அவன் புலம்பி கொண்டிருந்த வேளை.. பார்க்கில் இருந்து பிரதீஷும் தாத்தாவும் ஆளுக்கு ஒரு கை பிடித்து வண்டியை தள்ளிக் கொண்டே வர... பிரகதீஸ்வரி வேடிக்கை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.

அவளைப் பார்த்தவன் முகம் பட்டென்று ஜொலிக்க... "என்னடா என்ன ஆச்சி? என்று கேட்டபடி திரும்பிப் பார்த்தான் தீபக்.

"டேய்... அவ தாண்டா வரா" என்று அவன் கையைக் காண்பிக்க வீழ்சேரில் இருந்தவளைப் பார்த்து அதிர்வாக "மச்சான்... நீ வண்டில வந்தான்னு சொன்னது.. இததானா?" என்று கேட்க...
"ஆமாடா" என்றவன் தன்னை மறந்து நண்பனை விட்டுவிட்டு தன்னிச்சையாய் அவர்கள் அருகே நடந்து சென்றிருந்தான்.

அவனைப் பார்க்க முடியவில்லை என்று மனம் சோம்பிபோயிருந்த பிரகதீஸ்வரியின் முகத்தில் மின்னல் அடித்தது. பௌர்ணமி நிலவாய் கண்கள் விரிய... அவனைக் கண்டவள் "ஏங்க.. நீங்க எங்க இங்க?" என்றாள் சத்தமாக.

எங்கே அவன் தன்னைப் பார்க்காமல் போய்விடுவானோ? என்ற ஆதங்கமும் அவசரமும் அவள் குரலில் அப்பட்டமாய் வெளிப்பட்டது.

"என்ன? தங்கச்சி தனியா பேசுறா?" என்பது போல் நிமிர்ந்து பார்த்தவனுக்கு சற்று தொலைவில் காண கிடைத்தான் லக்ஷ்மன்.

"ஹாய்... ஹலோ.. நீங்க இங்கதான் இருக்கீங்களா? டெய்லி வருவீங்களாே? நான் உங்கள தேடி வீட்டுக்கு போய் இருந்தேன். உங்கள காணோமா? அதான் பிரண்ட பாக்க வந்தேன்" என்று பேசிக் கொண்டே அவர்கள் அருகில் வந்தான் அவன்.

சற்று தொலைவில் "ஃப்ரெண்ட் " என்று கூறப்பட்டவன் இவர்களைப் பார்த்துக் கொண்டே அதிர்ந்து நின்றான்.
 
Top