வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பனியில் உருகிய பகலவன்.! -2

GG writers

Moderator
"கடவுளே... அவன் இவள திரும்பி கூட பாத்துரக்கூடாது. அப்பதான் நாங்க நிம்மதியா ஹோட்டல்ல போய் சாப்பிட முடியும்" என்று வேண்டுதல் வைத்துக் கொண்டு ஆங்காங்கே இருந்த தோழிகள் மூவரும் லதாவின் அருகில் எழுந்து வந்தனர்.

"அவளைப் பார்க்க விடாமல் செய்வதோடு தங்களையும் கலாய்த்து விடுவர் " என்று எண்ணி அங்கிருந்த ஆண்கள் சிலர் நடையைக் கட்டினர்.

ஆனால் அவனோ இன்னும் புத்தகத்திற்கு உள்ளேயே தலையை நுழைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

இவர்கள் வந்ததை அவன் உணரவே இல்லை.

வந்த தோழிகள் சும்மா இராமல் அங்கிருந்த ஒவ்வொருவரையும் பார்த்து பார்த்து ஏதேதோ பேசிச் சிரித்துக் கொள்ள ஒவ்வொருவராக அவ்விடத்தை விட்டு நகரத் துவங்கினர்.

கடைசியாக அவன் மட்டுமே இருப்பதைப் பார்த்த லதா "ஏய்... இன்னைக்கு தாண்டி ரொம்ப நேரமா இருக்குறான். இதுதான் சரியான டைம். நீங்க எல்லாம் போங்க. நான் அவன்கிட்ட கொஞ்சம் பேசிகிட்டு வரேன்" என்றாள்.

"டார்லு... அவன்கிட்ட போய் நீ எதுக்குடி பேச போற? நீ இருக்கிற அழகுக்கும் அந்தஸ்துக்கும் இதைவிட அழகனுங்க எல்லாம் க்யூல நிப்பானுங்களேடி" என்று வெண்ணிலா கூற...
"மூடிட்டு போறீங்களா இல்லையா?" என்று வாயில் வைத்து முணுமுணுத்தவள் கண்கள் அவள் கூற வந்ததைக் கூறின.

தோழியின் பார்வையைப் பார்த்தவர்கள் "இதற்கு மேல் பேசி அவள் கோபத்திற்கு ஆளாக வேண்டாம்" என்று எண்ணி மெதுவாய் அங்கிருந்து கிளம்பினர்.

"ஏண்டி ... ஒருவேளை பேசி என்னதும் கவுத்துருவாளோ அவன?" என்று திவ்யா கேட்க...

"க்கூக்கும்... நீ வேற அதுக்கு எல்லாம் சான்சே இல்லடி. அவன் இரும்பு துண்டை முழுங்குன மாக்கான் மாதிரி எப்பவுமே வெறப்பாதான் இருப்பான். யார்கிட்டயும் பேச மாட்டான்" என்றாள் அமலா.

"ஒருவேளை இவ அழகுல மயங்கி பேசிட்டா?" என்று வெண்ணிலா கேட்க...

"இத்தனை நாளா மயங்காத அழகுலயா இன்னைக்கு மயங்கிட போறான்? விடுடி.. பாத்துக்கலாம். எனக்கு தெரிஞ்ச வரைக்கும் யாரையோ அவன் சின்சியரா லவ் பண்றான்டி" என்றாள் அமலா.

"ஏய்... லவ் பண்ணுறதா இருந்தா அவன் எப்ப பாரு புக்குக்குள்ளயே எதுக்கு தலையை நொழச்சிகிட்டு இருக்க போறான்? போன்லல்ல நோண்டிட்டு இருப்பான்? இல்ல அட்லீஸ்ட் அவன் லவ்வர்கிட்ட கொஞ்ச நேரமாவது பேச மாட்டானா? இல்ல அவள்ட்ட இருந்து கால் கூட வராதா" என்று கேட்டாள் வெண்ணிலா.

"அட... ஆமா இல்ல? இத்தனை நாள்ல அவன் செல்போன் எடுத்து பேசினதே ரேர்" என்றாள் திவ்யா.

தங்களுக்குள் குழம்பிய தோழிகள் பேசிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்து சென்றிருக்க...
அவன் எதிரில் சென்று பதட்டத்தோடு நின்றாள் லதா.

அவன் இப்பொழுதும் நிமிர்ந்து பார்க்கவில்லை.
சிறிது நேரம் நின்று பார்த்தவள் அவன் இருந்த பெஞ்ச்லேயே சென்று அமர்ந்து அவனை ஓர கண்களால் பார்த்தாள் "தன்னை இப்பொழுதாவது பார்க்கிறானா?" என்று.

எந்த மாற்றமும் இல்லை அவனிடம். புத்தகத்தைப் பிடித்திருந்த விரல்கள் அவ்வப்போது ரசனையோடு புத்தகத்தில் தட்டியது.

இத்தனைக்கும் அவன் கையில் இருந்தது என்னவோ இராமாயண காவியம்தான்.

"இதுல இவன் என்னத்த போட்டு இத்தனை நாளா படிக்கிறான்? எப்படி படிச்சாலும் இவன் படிக்கிற படிப்புக்கு இதுக்குள்ள பத்து தடவைக்கு மேல படிச்சி முடிச்சி இருக்கலாமே?" என்று அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தவள் எண்ணங்கள் ஓடியது.

பொறுத்து பொறுத்து பார்த்தவள் இருட்ட துவங்கவும் சிறிதாக கனைத்தாள்.

தோழிகள் அவள் அமர்ந்திருந்திருக்கும் கோலத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்

அப்பொழுதும் அவனிடமிருந்து எந்த சலனமும் இல்லை. அவன் புத்தகத்தைப் பார்த்து சிரித்தபடி நிமிர.. அருகில் யாரோ அமர்ந்திருப்பது போல் தோன்றியது போலும்.

அப்பொழுதுதான் அருகில் இருந்தவளையும் நேரம் சற்று இருட்டியிருப்பதையும் உணர்ந்தவன் புத்தகத்தைப் பார்த்து நெடுமூச்சை இழுத்து விட்டுக் கொண்டு விருப்பமே இல்லாமல் மனைவியை பிரிபவன் போல் ஏகப் பெருமூச்சோடு புத்தகத்தை முடி வைத்துக் கொண்டு... தன்மேல் விழுந்திருந்த பனித்துளிகளைத் தட்டி விட்டு கிளம்பினான்.

"அருகில் தன்னையே ஒருத்தி பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கிறாளே?" என்ற எண்ணம் சிறிதளவும் அவனிடம் இல்லை.

அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் அவன் செல்ல துவங்க "ஹலோ... சார்" என்றால் அவள்.

திரும்பி ஒரு நொடி பார்த்தான் அவன்.

"ஒரு நிமிஷம்" என்றாள் இவள்.

"என்ன?" என்பது போல் ஒற்றை இமையைத் தூக்கினான் அவன்.

"என் பெயர் ஸ்ரீலதா. ஸ்ரீ எஸ்டேட் ஓனர் மகேந்திரனோட பொண்ணு" என்றாள்.

"அதுக்கு என்ன?" என்பது போல் இரு இமைகளையும் குறுக்கி கூர் விழிகளால் கோபமாக பார்த்தான் பெண் அவளை.

அவன் "என் நேரத்தை வீணாக்கி விட்டாய்" என்பது போல் அவள் கண்களை நேருக்கு நேராய் நோக்க.. படபடத்த விழிகளுடன் "சா.. சா...ரி" என்றவள் வார்த்தைகள் அதற்கு மேல் வரவில்லை. நெஞ்சு அடைப்பது போல் இருந்தது.

"தேவை இல்லாமல் மேக்கப் பண்ணிட்டு வந்து அடுத்தவங்க டைம எதுக்கு வேஸ்ட் பண்ற..." என்பது போல் தன் முகத்தை சுருக்கி அவள் முகத்தை ஒரு நொடி ஆராய்ச்சி பார்வை பார்த்தவன் சென்று விட்டான்.

இது இவ்வளவும் பேசுவதற்குள் அந்த குளிரிலும் வேர்த்து கொட்டியிருந்தது ஸ்ரீலதாவிற்கு.

"என்னடா இவன்? ஒரு வார்த்தை பேசினதுக்கே இந்த பார்வை பார்க்கிறான். உட்டா அடிச்சிருப்பான் போலையே" என்று உள்ளம் படபடத்தது.

அவன் பார்வை தன்னை துச்சமாக எண்ணிப் பார்த்ததை உணர்ந்து கொண்டவள் ஈகோ தூண்டப்பட்டிருந்தது.

"நான் யாரு? எவ்ளோ பெரிய பணக்காரருக்க மகா. என்னைப் போய் பிச்சைக்காரியை விட கேவலமா பாத்துட்டு போறான்" என்று எண்ணியவள்...
தோழிகள் வந்ததும் "ஏண்டி .. நான் அழகா இல்லையா?" என்றாள்.

"என்னடா இது அழகுக்கு வந்த சோதனை? பொசுக்குன்னு இப்படி கேட்டுட்ட? நாங்க மட்டும் பசங்களா இருந்துருந்தா இதுக்குள்ள உன்ன மடிக்கிறதுக்கு எத்தனை வேலை பார்த்து இருப்போம் தெரியுமா?
இந்த ஊர்லயே நீதான் நம்பர் ஒன் அழகி.
இல்லாட்டி இத்தனை பேரு வேலை வெட்டி எல்லாம் விட்டுட்டு உன் பின்னாடி சுத்துவாங்களா?
பாரு நாங்களும்தான் உன்கூட வறோம். ஒருத்தன் பாத்து ஒருத்தனாவது.. ஒரு நாளாவது ஒரு லவ் லெட்டர் கொண்டு தந்துர மாட்டானா? அட்லீஸ்ட் ஒரு டைரிமில்க் ஒன்னும் கிடையாது" என்றாள் திவ்யா.

"ஏன் தராம ? போன வாரம் கூட யாரோ உன்கிட்ட கிரீட்டிங் கார்டும் ரோஜா பூவும் தந்ததா கேள்விப்பட்டேன்" என்று கலாய்த்தாள் வெண்ணிலா.

"அடியே குவாட்டரு... உருட்டி விட்டுடுவேன் பாத்துக்க. அதுவும் அவளுக்கு குடுக்க சொல்லி தந்தது. எனக்கு இல்ல" என்றால் அவள்.

"நீதான் மாமா வேலை பாத்தியே மச்சி. அதுக்காக கூடவா உனக்கு சாக்லேட் தரல?" என்றாள் அமலா.

"அடியேய்... நான் எங்கடி மாமா வேலை பாத்தேன்? அவன் தந்தான். சரி.. பாவம் புள்ள பயப்படுதேன்னு ஹெல்ப் பண்றதுக்காக வாங்கிட்டு வந்தேன். அதுக்காக என்னை மாமாண்ணு சொல்லுவியா?" என்று தோழியை விரட்ட ஆரம்பித்தாள் திவ்யா.

பிளாஸில் வைத்திருந்த டீயை அவசரமாக எடுத்து குடித்தாள் லதா.

அதற்குள் வெண்ணிலா "என்னடி ஆச்சி? அவன்கிட்ட பேசுனியே.. விழுந்துட்டானா?" என்றாள் பதட்டத்தோடும் ஆர்வத்தோடும்.

"போங்கடி ... நீங்க வேற" எனச் சலித்துக் கொண்டாள் அவள்.

அடுத்த நொடியே தோழிகள் மூவரும் "ஹை... ஜாலி.. வா செல்லம் எங்களுக்கு ட்ரீட் வை" என்று குதிக்க முறைத்து பார்த்தாள் லதா.

"என்ன முறைக்கிற எதுவா இருந்தாலும் பேச்சு பேச்சுதான்டியோவ். இவனுங்களையெல்லாம் உன் பின்னாடி அலைய விட்டாப்ப நாங்க வாங்கி தந்தோம்ல்ல? ஆனா இவனதான் நீ மடக்க முடியலல்ல ? அப்ப நீதானே வாங்கி தரணும். இப்பவும் நீ தோல்விய ஒத்துக்காட்டு டெய்லி வாங்கி தரணும்" என்று கேட்க...

"சரி வந்து தொலைங்க. நான் என் தோல்விய ஒத்துக்கிறேன். அவனை என்னால மடக்க முடியல. ஆனா நான் என்ன செய்யப் போறேன் பாரு" என்று கூற...

"மச்சி... நீ இருக்கிற அழகுக்கு இவன்லாம் ஒரு ஆளா? வேற வேலைய பாரு" என்ற தோழிகள் அவளுடன் சிரித்து பேசியபடி சொல்ல மனதிற்குள் முடிவெடுத்துக் கொண்டவளோ காரில் அவர்களை அழைத்துச் சென்றாள் பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றிற்கு.

தோழிகள் வெஜ் நாண்வெஜ் என்று பாரபட்சம் இல்லாமல் கண்ணில் கண்டவற்றையும், தங்களுக்கு பிடித்தவற்றையும் ஆர்டர் செய்து கபளிகரம் செய்து கொண்டிருக்க... அவளுக்கு ஒன்றும் இறங்கவில்லை.

எண்ணம் முழுக்க அவனிடமே இருந்தது. "ஏன் அவனுக்கு நம்மள பிடிக்கல?" என்ற கேள்வி பெண்ணவளைப் பாடாய் படுத்தியது.

ஒரு வழியாய் தோழிகள் சாப்பிட்டு முடித்ததும் கடையைக் காலி செய்தவர்கள் கிளம்பும் நேரம் கல்லாவில் அமர்ந்திருந்தான் அவன்.

அவனைப் பார்த்தவள் விழிகள் தன்னால் விரிய உறைந்து போய் நின்றாள் ஸ்ரீலதா.

"லதா... என்ன கண்ணத் தொறந்து வச்சிட்டே கனவு காண்ற? பே பண்ணுடி" என்று தட்ட.. அவள் பெயரைக் கேட்டதும் நிமிர்ந்து பார்த்து விட்டு குனிந்து கொண்டான் அவன்.

தோழிகள் கூறவும்... பில்லை பே செய்தவள் "காசு வந்துருச்சா?" என்றாள் அவனிடம்.

"ஆம்" என்பது போல் தலையசைத்தான் அவன்.

"ஏன்? வாய் திறந்து சொல்ல மாட்டீங்களா" என்றாள் வெண்ணிலா.

அவளை முறைத்தபடி ஒரு பார்வை பார்த்த அவன் "காசு வந்துடுச்சு மேடம்" என்றான் அவளைப் பார்த்து கர்ண கொடூரமாக.

"எம்மா... இதுக்குன்னு நீ பேசாமலே இருந்து இருக்கலாம்" என்று எண்ணிய வெண்ணிலா ஆளுக்கு முன்பாக வெளியில் ஓடிவிட...

"உன்ன இவனுக்கு ஏற்கனவே தெரியுமோ?" என்றாள் திவ்யா.

"ஏண்டி ... இது இவன் கடையா ? இத்தனை நாளா நம்ம மிஸ் பண்ணிட்டோமே?" என்றாள் அமலா.

"ஒருவேளை இங்க வேலை பாக்குறானா இருக்கும்டி" என்றாள் கார் அருகே நின்ற வெண்ணிலா.

"சரி விடு. இனி தினமும் வரலாம்" என்றாள் ஸ்ரீலதா.

"தினமுமா ? இன்னைக்கு தின்னதுகே அறுவதாயிரம் ரூபாய்க்கு மேல பே பண்ணி இருக்கு. டெய்லி இங்க வந்தா யாரு செலவு பண்றது?" என்றாள் திவ்யா.

"ஏன்டி... அவளே கூட்டிட்டு வரேன்னு சொல்றா. உனக்கு என்னடி வந்துச்சு? வார ஸ்ரீதேவிய காலால உதைக்காம சும்மா வா.." என்றாள் அமலா.

"எல்லாம் சரிதான். முதல்ல அவனைப் பத்தி டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணி சொல்லுங்க. அப்பதான் டெய்லி வருவதை பற்றி யோசிக்க முடியும்" என்றாள் ஸ்ரீலதா.

"என்னம்மா? இப்படி பண்றிங்களேம்மா?" என்று அமலா நீட்டி முழக்க...
"சொன்னத செய்ங்கடி" என்று விட்டு காரில் சென்று அமர்ந்தாள் அவள்.

"இவ என்ன இப்படி சொல்லி போட்டா?" என்ற தோழிகள் சுற்றும் முற்றும் அந்த இடத்தை நோட்டமிட்டனர். பின்பு "கொஞ்சம் செலவாகும் காசு குடு" என்றாள் திவ்யா.

ஏன் எதற்கென்றெல்லாம் கேட்கவில்லை. உடனே பத்தாயிரம் ரூபாயை எடுத்து சீட்டில் வைத்தாள் லதா.

அதை எடுத்துக் கொண்டு சென்றவள் எதிரில் இருந்த துணி கடைக்குள் நுழைந்தனர்.
அங்கு தங்களுக்கு ஏற்றார் போல் தோழிகள் உடைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க... திவ்யா யாரோ ஒரு பணியாளரிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

லதாவோ காரில் அமர்ந்தபடி ஹோட்டலின் கண்ணாடி கதவு வழியே தொலைவில் தெரிந்த அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"இவன வேற எங்கேயாவது பார்த்திருக்கோமா?" என்று அவள் மூளை யோசித்துக் கொண்டிருந்தது.

சிறிது நேரம் கழித்து துணிகளோடு ஜாலியாக பேசி சிரித்தபடி தோழிகள் வர... தகவல் கிடைச்சுதா என்றாள் ஆவலோடு.

"ம்ம்... ம்ம்.. கிடைச்சிது. கிடச்சிது. இந்தா பாரு" என்றவர்கள் அலைபேசியைக் காண்பித்தனர்.

அவனது போட்டோ முதல் அவனது ஜாதகம் வரை அதிலிருந்து. "என்னடி இது?" என்றாள் அவள் அதிர்ந்து.

"ஏன்டி பாத்தா தெரியல? வண்டிய எடு" என்றனர்.

"இது எப்படி கிடைச்சுதுன்னு சொல்லுங்க" என்று அவள் ஒரே பிடியாய் நிற்க... அந்தா இருக்கு பாரு ஜோசியம் பாக்குற இடம். அங்க இருந்துதான் கிடைச்சிது" என்றாள் திவ்யா சற்று தொலைவில் இருந்த ஜோதிட நிலையத்தைக் கைகாட்டி.

"என்னடி உளர்ற? கேட்ட உடனே தந்துடுவாங்களா? அது எப்படி அவனோட டீடைல்ஸ் எல்லாம் அங்க இருக்கும்?" என்று அவள் கேள்வியாய் கேட்க..

"எம்மா தாயே அதெல்லாம் எதுவும் இல்ல. முதல்ல அவனைப் பத்தி எனக்கு தெரிஞ்ச பையன் ஒருத்தன் இந்த கடையில நின்னான். அவன்கிட்ட கேட்கலாம்ண்ணுதான் போனோம். பாத்தா அவன்தான் சொன்னான் 'அவருக்கு பொண்ணு தேடிட்டு இருக்காங்க. அவங்க அம்மா அங்க இருக்குற ஜோசிய கடையில அவரோட டீடைல்ஸ் எல்லாம் குடுத்து வச்சிருக்காங்க. என்ன வேணுமோ கேட்டு வாங்கிட்டு போங்கன்னு"என்று திவ்யா நிறுத்த...

"போயிட்டு எங்களுக்கு இந்த மாதிரி அந்த பையனோட டீட்டேல் வேணும்னு கேட்டோம். முதல்ல முடியாதுன்னு மறுத்துட்டாரு. 'என்னம்மா? இங்க நான் என்ன மாமா வேலையா பாத்துட்டு இருக்கேன்'னு அசிங்கமா திட்டி போட்டார். ஆனா கைநிறைய காச கண்ட உடனே அதுக்கும் தயார் ஆயிட்டாரு போல. உடனே அவன் போட்டோவ காமிச்சாரு. ஜாதகத்தை காமிச்சாரு அப்படியே ஸ்டில் எடுத்துட்டு வந்துட்டோம்" என்றாள் அமலா.

மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது அவளுக்கு. அவன் மனதை அறியாமல்.. தன்னை நிமிர்ந்து பார்க்காதவனைக் காலம் முழுவதும் தன்னை மட்டுமே பார்க்க வைக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தாள் அவள்.
 
அட ச்சைக் .....

எம்மா ரைட்டர் இந்த பிள்ளை தான் ஹீரோயின?????

அப்படி மட்டும் சொல்லிராதிங்க
 
அட ச்சைக் .....

எம்மா ரைட்டர் இந்த பிள்ளை தான் ஹீரோயின?????

அப்படி மட்டும் சொல்லிராதிங்க
S Sis
 
Top