வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பனியில் உருகிய பகலவன்..! - 20

GG writers

Moderator
மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்த ஸ்ரீலதா "என்னப்பா அம்மாவ காணோம்?" என்று எப்பொழுதுமே வீட்டிற்குள் வந்ததும் கண் முன் நிற்கும் கதவைப் போல உதயம் ஆகிவிடும் தாயைத் தேடினாள்.

ராஜேஸ்வரி தோழியின் வீட்டிற்கு சென்றிருப்பதாக சொல்லி சமாளித்து விட்டு அவளை ரெஸ்ட் எடுக்குமாறு கூறினார் மகேஸ்வரன்.

பெண் அவள் காதலனுடன் செலவழித்த பொன்னான நேரத்தைக் காட்சி படுத்தி மணப்பேழையில் பொக்கிஷமாக சேமித்து வைத்துக் கொண்டிருக்க... அவன் ஆளுமையை எண்ணி எண்ணி வியந்து கொண்டிருந்தாள்.

அதனாலோ என்னவோ வலி எதுவும் அவளுக்கு தெரிந்ததாக தெரியவில்லை. நேரம் சென்று கொண்டிருந்தது. லக்ஷ்மன் இன்னும் வீட்டிற்கு வந்திருக்கவில்லை.

தந்தையும் அவசர வேலை இருப்பதாய் கூறி வெளியேற தனிமையில் தன்னவனைப் பற்றி யோசிப்பதையே வேலையாக கொண்டிருந்த ஸ்ரீலதாவின் நினைவில் "உன் தம்பிக்கு சொல்லு" என்ற கம்பீரமான வார்த்தைகள் மீண்டும் மீண்டும் எதிரொலிக்க... லக்ஷ்மனின் வரவுக்காய் காத்திருந்தாள் ஸ்ரீலதா .


ஆனால் அவன்தான் வந்த பாடில்லை. அவனுக்காக காத்திருந்தவளும் மருந்தின் வீரியத்தில் தூங்கிப் போனாள்.

"பசுமதி என்ன கூற போகிறார்களோ?" என்று பதைப் பதைப்புடன் மகேஸ்வரன் தன் உதவியாளர்கள் சிலருடன் அவர்கள் வீட்டிற்கு செல்ல.. இன்று தாய் விடுமுறை எடுத்துக் கொள்ள கூறியிருந்ததால் ஹோட்டலில் விடுமுறை கேட்டுவிட்டு வீட்டிலேயே இருந்தான் பிரதீஷ்.

மகேஸ்வரன் வந்ததைப் பார்த்ததும் பிரகதீஸ்வரி கிச்சனில் சென்று ஒளிந்து கொள்ள... தாயும் மகனும் வந்தவரை வரவேற்று அமர வைத்தனர். உதவியாளர்கள் காரின் அருகிலேயே நின்றிருந்தனர்.

முதல் நாள் மகேஸ்வரன் வருகையில் யாராய் இருந்தால் என்ன அண்ணனுக்கு நல்ல வாழ்க்கை அமைந்தால் போதும். அண்ணன் கூறும் யாராயிருந்தாலும் திருமணம் செய்து கொள்வோம் என்று எண்ணியிருந்தாள் பிரகதீஸ்வரி. ஆனால் இந்த நிமிடம் அந்த எண்ணம் தற்போது அடியோடு மாறி இருந்தது.

லக்ஷ்மனை தவிர வேறொருவரை மணாளனாக ஏற்றுக்கொள்ள மனம் துணியவில்லை. எப்படியாவது இந்த திருமணம் நின்றுவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருந்தாள்.

மகேஸ்வரன் நேரடியாக திருமண பேச்சை எடுக்க... மகனின் முகம் பார்த்தார் பசுமதி.

அவன் சொல்லுங்க என்பது போல் தலையாட்ட... "எங்க பையன் என்னைக்குமே உங்க வீட்டோட மாப்பிள்ளையா வரமாட்டான். உங்க பொண்ணுதான் எங்க வீட்ல வந்து வாழ்ந்து ஆகணும். ஒருவேளை தேவைப்பட்டால் அவங்க ரெண்டு பேரும் தனிக் குடித்தனம் கூட போகட்டும். அத பத்தி பிரச்சனை இல்ல. ஆனா... உங்க வீட்ல இருந்து எந்த சொத்து பத்தோ? பணமாே? பொருளோ? வரதட்சணையோ? உங்க பொண்ணோட சேர்ந்து இந்த வீட்டுக்கு வரக்கூடாது. கல்யாணத்துக்கு பிறகும் வரக்கூடாது" என்று கூற...

"ஏங்க... என் பிள்ளைக்கு நான் ஆசைப்பட்டதை கூட செய்ய கூடாதா?" என்று பொங்கினார் மகேஸ்வரன்.

"என் மகனுக்கு அவன கட்டிக்க போற மனைவிக்கு என்ன வாங்கி கொடுக்கணும்னு நல்லாவே தெரியும். என் பையனோட வருமானத்து செலவு பண்ணுற மருமக இந்த வீட்டுக்கு போதும். கல்யாணம் பண்ணிக்கிட்டா பிறகு எனக்கு வசதி வாய்ப்பு இல்லைண்ணு சொல்லி டிவோர்ஸ் கேட்க கூடாது. அப்படியே கேட்டா கூட ... " என்றவர் தொடர முயல..

"தொடங்குறதுக்கு முன்னாடி எதுக்கு அபச குணமா பேசுறீங்க?" என்று மகேஸ்வரன் கோபமாக குறுக்கிட..

"ஏன் நீங்களும்தான டெய்லி நியூஸ் பேப்பர், டிவில எல்லாம் பாக்குறீங்க?! கல்யாண மேடையிலேயே எத்தனை பொண்ணுங்க புருஷனை வேண்டாம்ன்னு சொல்லிட்டு இறங்கி போகுதுங்க? இல்ல கல்யாணம் பண்ண ஒரு மாசத்திலேயே பிரியக் கூடியவங்களும் இருக்காங்க. செல்வச் செழிப்புல செல்லமா வளர்ந்த உங்க மக எங்க வீட்டுக்கு வந்து எப்படி வாழ்வான்னு எங்களால சொல்ல முடியாதுல்ல? இந்த மாதிரி பிரச்சனைகள் பியூச்சர்ல நடக்கக்கூடிய வாய்ப்பு நிறையவே இருக்கு. அதனால இப்பவே பேசி தீர்த்துட்டா பின்னாடி வருத்தப்பட தேவை இருக்காது. அதுக்காகதான்" என்று பசுமதி கூற... "இவ்வளவுதானா கண்டிஷன்? இல்ல இன்னும் இருக்கா?" என்றார் எரிச்சலுடன்.

"முழுசா கேளுங்க. மூணு வருஷம் கண்டிப்பா டிவோர்ஸ் கொடுக்க முடியாது. அந்த மூணு வருஷத்துல குழந்தை பிறந்ததுனா லீகலா பிரியும்போது குழந்தையைக் கண்டிப்பா எங்ககிட்ட கொடுத்துட்டு போறதா இருந்தா டிவோர்ஸ் வாங்கிட்டு போகலாம். இல்ல கோர்ட்ல கேஸ் இழுத்துக்கிட்டேதான் இருக்கும். நீங்க கோடிக் கணக்குல எங்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டியது இருக்கும். அப்புறம்... இவங்க லைப்ல வர பிரச்சனைகளும் சண்ட சச்சரவுகளும் எதுவும் என் பொண்ணோட வாழ்க்கையை எந்த விதத்திலயுமே பாதிக்கக் கூடாது. அதே மாதிரி என் பொண்ணோட வாழ்க்கையில வரக்கூடிய பிரச்சனைகள் எதுவும் பையனோட வாழ்க்கையை பாதிக்கக் கூடாது. எங்க சைடுல இருந்து அந்த மாதிரி எந்த பிரச்சனையும் உங்களுக்கு வராது. இதுக்கெல்லாம் சம்மதம்னா செல்லுங்க. வக்கீல் வச்சி லீகலா ரெடி பண்ண அக்ரிமெண்ட் ரெடியா இருக்கு. படிச்சு பாத்துட்டு உங்க வீட்ல உள்ள எல்லாருமே சைன் பண்ணி தாங்க. நாளைக்கே நீங்க சொன்ன மாதிரி நிச்சயதார்த்தத்தை வச்சுக்கலாம்.. இதுக்கு மேல நீங்க சொல்ல வேண்டியது ஏதாவது இருந்தா சொல்லுங்க" என்று கூற...

அவர்கள் கூறிய கண்டிஷனை கேட்டு எரிச்சலுற்றவர் "எனக்கு சம்மதம். ஆனா நீங்க இந்த வீட்ல இருந்து யாரும் என் வீடு தேடி உங்க பொண்ண பாக்க வரக்கூடாது. உங்க ஆஸ்தி அந்தஸ்து எதுவும் என் வீட்டு படி ஏறி வரக்கூடாது கல்யாணம் முடிஞ்சிட்டா நீங்க யாரோ?! அவ யாரோ?!" என்று கூற மகனைத் திரும்பிப் பார்த்தார் பசுமதி.

"சரி" என்பது போல் அவன் தலையாட்ட எங்களுக்கு பரிபூரண சம்மதம் என்றார் பசுமதி.

ஆனால் கிச்சனுக்குள் இருந்து ஹாலில் நடப்பதைக் கேட்டுக் கொண்டிருந்த பிரகதீஸ்வரிக்கு தன் இதயத்தை யாரோ தீயில் கருக்குவது போல் இருந்தது.

"வேண்டாம் சொல்லுமா. வேண்டாம் சொல்லுண்ணா. எனக்கு இவங்க யாரும் வேண்டாம். நான் வேற ஒருத்தரை விரும்புகிறேன்" என்று உள்ளம் குமுறிக் கொண்டிருந்தது. ஆனால் அண்ணனிடம் தான் கொடுத்த வாக்கை நம்பி திருமண பேச்சை பேசிக் கொண்டிருப்பதை கேட்டவளுக்கு ரத்தக்கண்ணீரே வந்தது.

அண்ணனை அழைத்து உண்மையைக் கூறி விடுவோமா என்று நாக்கு வரை வந்த வார்த்தைகள் இதற்கு முன் "நீங்க யார பாத்து சொல்றீங்களாே அவங்களுக்குதான் நான் கழுத்த நீட்டுவேன். அதுல எள்ளளவும் மாற்றம் இல்லை. நீ தைரியமா உனக்கு பிடிச்ச மாப்பிள்ளையை பாரு அண்ணா" என்று என்றே கொடுத்த வார்த்தைகளை நேரில் முன் கடித்த பந்தாய் நினைவு படுத்த இதயத்தில் யாரோ சம்பட்டியால் அடித்தது போல் வலித்தது.

நேற்று வரை வேண்டாம் என்று சொன்னவர்கள் இவ்வளவு எளிதாக சரி சொல்லுவார்கள் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை.

"அப்போ அக்ரீமெண்ட் தாங்க " என்றவர் வெளியே சென்று மகளிடம் தகவல்களைக் கூறினார்.

அவளோ? "அப்பா என்னால எல்லாம் அங்க எந்த பிரச்சனையும் வராது. அதனால நீங்க தைரியமா சைன் பண்ணி குடுங்க" என்றாள் காதல் மயக்கத்தில் இருந்த ஸ்ரீலதா.

மகளே கூறிய பிறகு என்ன தடை? விரைவாக வந்தவர் அக்ரிமெண்டைப் பெற்றுக் கொண்டு "வீட்டுல போய் சைன் வாங்கிட்டு வந்துடறேன்" என்று வெளியேறினார்.

"டீ குடிச்சிட்டு போங்க" என்ற பசுமதியிடம் "நிச்சயதார்த்தத்தை முடிச்சிட்டு விருந்தே சாப்பிடுறேன்" என்று கூறிவிட்டு சிரித்த முகத்தோடு வெளியேறினார்.

ஒரு கல்யாணத்தை முடிக்க எவ்வளவு ஆயாசப்பட வேண்டியது இருக்கு என்று தலையை சுற்றிக் கொண்டு வந்தது.

முதலில் தனது மனைவியிடம் சென்று கையெழுத்து போட கூற ஏன் எதற்கு என்று கேட்காமலே கையெழுத்திட்டாள் ராஜேஸ்வரி.

அவள் மனதில் "இந்த ஆளு நம்மள டைவர்ஸ் பண்ண போறாரு" போல என்று எண்ணினாள்.

அதைத் தொடர்ந்து மகளிடம் கையெழுத்து பெற்றவர் பார்க்கில் அமர்ந்திருந்த மகனிடம் கொண்டு நீட்ட..
அதை கிழித்து அறியும் அளவிற்கு கோபாக்கினியுடன் தகப்பனைப் பார்த்தான் லக்ஷ்மன்.

ஆனால் அதை கண்டு கொள்ளாத தந்தையோ?

"நீ எப்ப வேணாலும் டிவைஸ் பண்ணிக்கலாம். கல்யாணம் பண்ணிட்டு மறுநாளே கூட பண்ணிக்கோ. அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. இது என் பொண்ணுக்காக" என்று கூற...

"நீ எல்லாம் ஒரு அப்பனாய்யா?" என்பது போல கீழ்த்தரமாய் பார்த்தான் லக்ஷ்மன்.

ஆனால் அதற்கெல்லாம் அசருபவரா மகேஸ்வரன்? வீடியோ காலில் ராஜேஸ்வரியைக் காண்பித்து மிரட்டியே மகனிடமிருந்து கையெழுத்தை பெற்றார்.

ஒரு வழியாக இரவிற்குள் கையெழுத்தை வாங்கி வந்து அவர்களிடம் கொண்டு கொடுத்தவர் ஒரு காப்பியை தன்னிடமும் வைத்துக்கொண்டார்.

நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த பிரதீஷுக்கு சற்று குழப்பமாக இருந்தது.

டலக்ஷ்மன் என்னன்னா கல்யாணம் பண்ண முடியாதுன்னு சொன்னான். இந்த ஆளு என்னடான்னா அக்ரிமெண்ட்ல அவன் கையெழுத்தையே வாங்கி தந்திருக்காரு. என்ன நடக்குது? ஒருவேளை நம்ம தங்கச்சியதான் கல்யாணம் பண்ண போறதா லக்ஷ்மன்கிட்ட சொல்லலையோ? அவன் அம்மாவ பிடிச்சி வைத்திருக்கிறதா சொன்னானே? யாரு பிடிச்சி வச்சிருப்பா? அவன் சொன்னது உண்மைனா அக்ரீமெண்ட் எப்படி கையெழுத்து வந்தது?" என்று பல்வேறு கேள்விகள் அவன் மூளைக்குள் வரிசை கட்டி நிற்க யார் பேசுவது உண்மை என்று புரியாமல் குழம்பினான் பிரதீஷ்.

"பேசாம லக்ஷ்மனுக்கு கால் பண்ணி பேசிட்டா என்ன?" என்று தோன்றியது.

ஆனால் மறுநிமிடமே "இந்த கிறுக்கன் என்ன வேலை பார்த்து வச்சிருக்கான்னு தெரியாம அவன் மனசுலையும் ஆசைய வளத்துர கூடாதே" என்று எண்ணியவாறு முயற்சியை விடுவித்தான்.

மறுநாளே நிச்சயதார்த்தம் முடிவு செய்யப்பட அலைபேசியில் அழைத்து உறவுகளுக்கு அவசர அவசரமாக தகவல் கூறினர் இருபுறமும்.

அருகில் வந்து அமர்ந்த சகோதரியை பார்ப்பதை தவிர்த்து... நடப்பதை ஏதோ கேலிக்கூத்து நடப்பது போல் வேடிக்கை பார்த்தான் லக்ஷ்மன்.

பிரகதீஸ்வரியோ? தனக்கு இந்த திருமணம் வேண்டாம் என்று சொல்லவும் முடியாமல் அண்ணனுக்கு வரும் நல்ல சம்பந்தத்தை கெடுக்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளி ஏறும்பாய் தவித்துக் கொண்டிருந்தாள்.

அவள் முகம் பார்த்து பெண் அவள் மனதை புரிந்து கொண்ட பிரகதீஷ் "உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையா கண்ணு குட்டி. இல்லனா இப்பவே சொல்லு. உடனே கல்யாணத்தை நிறுத்திடலாம்" என்று பிரதீஷ் கேட்க...

"இல்லண்ணா எனக்கு சம்மதம்தான்" என்றவள் விழிகள் தன்னவனுக்காய் கலங்கின.

"அப்போ ஏன் அழற?" என்று கேட்டவன் அவள் விழிகளை துடைத்து விட்டவாறே "கல்யாணம் முடிஞ்ச பிறகு உனக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைனு அவரு சொன்னதை நெனச்சு அழுறியா?" என்று அவனே எடுத்துக் கொடுக்க...


"ஆமாண்ணா. அப்புறம் எப்படி நம்ம ஒருத்தர ஒருத்தர பாத்துக்கிறது? பேசிக்கிறது?" என்று கேட்க...

"இந்த ஆள் சொன்னா நடந்துடுமா? அதுக்கு மாப்பிள்ளை சொல்லணும் கண்ணுகுட்டி. அவரு நமக்கு ஸ்ட்ராங் சப்போட்டா இருப்பாரு. ரொம்ப நல்ல பையன். அது மட்டும் இல்லை நான் உன்னை பாக்கதான் வரக்கூடாது. மாப்பிள்ளைய பாக்க வரலாம் இல்ல? ஏன்னா மாப்பிள்ளையை மீட் பண்ணி ஆல்ரெடி நான் பேசிட்டேன். நாங்க பிரெண்ட்ஸ் ஆயிட்டோம்" என்று பெருமிதமாய் கூற...

"அண்ணே... பயமா இருக்குண்ணே" என்றாள்.

"பயப்படாத கண்ணு... உன் மனசுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்" என்று அண்ணன் ஆறுதலாக தலையை கோதி படுக்க வைத்து விட்டு சென்றான்.

தூக்கம் எங்கே வந்தது? கண்ணீர் தான் வற்றாத அணைப்போல் ஊற்றெடுக்க தூக்கம் எட்டாத கனியாகி விட்டது பிரகதீஸ்வரிக்கு.

எப்படியாவது எங்கிருந்தாவது திடீரென்று முளைத்து தன் கழுத்தில் தன்னவன் தாலி கட்டி விட மாட்டானா?
தனக்கு திருமணம் பேசிக் கொண்டிருக்கும் தகவலை அவனுக்கு எப்படி சொல்வது?
தனது திருமண நின்று விட்டால் அண்ணனின் திருமணம் நடக்குமா? ஐயோ இருவரில் ஒருவர் தானே மகிழ்ச்சியாக வாழ முடியும் போல் இருக்கிறது? என்று வெவ்வேறு விதமாய் யோசனைகள் வந்து அலைக்கழிக்க கண்ணீரை கடன் வாங்கியது போல் மழை மேகமாகி தலையணையைக் கண்ணீரால் நனைத்து கொண்டிருந்தாள் அவள்.

"நாளைய விடியல் விடியாமலே போய்விட்டால் நன்றாக இருக்குமே" என்று பெண் மனம் பேதமையோடு யோசித்தது.

அவள் நிலைமையில்தான் லக்ஷ்மனும் தூக்கம் தொலைத்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான்.

தாய்க்காக அழுவதா? இல்லை காதலுக்காக அழுவதா? என்று புரியாதவன் போல் இருவரையும் எண்ணி இரவை தொலைத்திருந்தான்.

மகேஸ்வரனாே?
இந்த அக்ரீமெண்ட்டுனால
பின்னால நமக்கோ? நம்ம மகளுக்கோ எதுவும் பிரச்சனை வந்து விரிசல் ஆகிவிடுமோ? என்ற பயம் ஆட்கொள்ள தன்னிடமிருந்த அக்ரீமெண்ட்டை மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்து அதில் தனக்கு எதிராக எந்த பிரச்சனையும் இல்லை என்று உறுதி செய்து கொண்டார்.

பசுமதியோ இதெல்லாம் சரிப்பட்டு வருமா? என்று யோசனையில் ஆழ்ந்திருந்தார்.

"அந்த பாதகத்தி வந்த பிறகு என்ன பிரச்சனை எல்லாம் பண்ண போறாளோ? அவளால என் பிள்ளைகளோட வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்கணும் ஆண்டவா. இரண்டு பிள்ளைகளும் சந்தோசமா நிம்மதியா வாழனும்" என்று இறைவனை பிரார்த்தித்துக் கொண்டிருந்தார் அவர்.

"இந்த கால் வேற இப்படி இருக்கே.. இதோட எப்படி நம்ம நாளைக்கு நடக்க முடியும்?" என்று ஸ்ரீலதாவிற்கு யோசனை வர காலையில் அவன் தூக்கி வந்த ஞாபகம் மயிலிறகாய் வருட வெட்கப் புன்னகை தன்னால் இதழில் வந்து ஒட்டியது.

"என்ன ஆனாலும் சரி நாளைக்கு நிச்சயதார்த்தம் நடக்கணும். அப்பதான் இன்னும் ஒரு வாரத்துல அவரோட வைஃய்பா அவர் பக்கத்துல இருக்க முடியும்" என்று கல்யாண கனவில் மிதந்து கொண்டிருந்தாள் அவள்.

நிச்சயதார்த்தத்திற்கான பணிகள் ஸ்ரீலதாவின் தந்தைக்கு சொந்தமான மண்டபத்தில் நள்ளிரவில் தடபுடலாய் நடைபெற்றுக் கொண்டிருக்க... ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இரவை கழித்தனர்.
 
Top